Tag: எம். ஜெயராம சர்மா

  • ஆனந்த சுதந்திரம் !

     

                     (  எம் .  ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

     

    ஆன்மீகக் கொள்கைதனை அரவணைக்கும் பாரதமே

    அஹிம்சையினை உள்ளுணர்வாய் ஆக்கிநிற்கும் பாரதமே

    அகிலத்தில் பலநிலையில் வளர்ந்துவரும் பாரதமே

    ஆனந்த சுதந்திரத்தை அமுதமெனக் காத்திடுவாய் !

     

    பலபேரின் கண்ணீரால் எழுச்சிபெற்ற பாரதமே

    பலபிரிவு மக்களையும் இணைத்துநிற்கும் பாரதமே

    நிலம்மீது பலசண்டை நிகழாமல் இருப்பதற்காய்

    பலநீதி இலக்கியங்கள் படைத்தளித்தாய் உலகினுக்கே !

     

    சர்வவுமே இறைவனென சாற்றிநிற்கும் பாரதமே

    சமத்துவத்தை நிலைநிறுத்த தானுழைக்கும் பாரதமே

    இவ்வுலகை இரட்சிக்க ஞானிகளை ஈந்தளித்தாய்

    இவ்வுலக மாந்தரெலாம் இந்தியாவை நோக்குகிறார் !

     

    வேதமொடு சாத்திரங்கள் வியந்துவிடும் இலக்கியங்கள்

    பாரதத்தாய் உலகினுக்கு ஈந்தளித்தாள் பொக்கிஷமாய்

    யார்வந்து போனாலும் நலம்விளைக்கும் எனும்நினைப்பை

    நாநிலத்துக் கீந்தளிக்கும் பாரதத்தாய் வாழியவே !

     

    புத்தர்காந்தி புனிதநபி புதுவெளிச்சம் யேசுபிரான்

    அத்தனைபேர் கொள்கைகளும் அடக்கிநிற்கும் பாரதமே

    உத்தமர்கள் பலபேர்கள் உன்மடியில் பிறந்தார்கள்

    உயர்வான சுதந்திரத்தை உயிர்ப்புடனே வைத்திடுவாய் !

     

    இமையம்முதல் குமரிவரை எல்லையினைக் கொண்டுள்ளாய்

    இயலாமை எனும்நினைப்பை இன்மையாக்க முனைகின்றாய்

    தவவலிமை மிக்கோரால் தான்வரங்கள் பெற்றுள்ளாய்

    தகைமைநிறை சுதந்திரத்தை தக்கபடி காத்திடுவாய் !

     

    சுதந்திரமாய் உலவுதற்குச் சுதந்திரத்தை விட்டிடுவோம்

    சுதந்திரத்தை யாவருமே சுவாசிக்கச் செய்துநிற்போம்

    சுதந்திரத்தை சுகமாக சுவையாக்க முனைந்திடுவோம்

    சுதந்திரத்தைக் குலைப்பார்க்குச் சுதந்திரத்தை உணர்த்திடுவோம் !

     

    ஆனந்த சுதந்திரத்தை அகமகிழக் கொண்டாட

    ஆனந்தப் பூங்காவை அமைத்திடுவோம் பாரதத்தில்

    ஆனந்தம் எனுமுணர்வை அனைவருமே பெற்றுவிட

    அன்புபாசம் நேசமொடு அஹிம்தனை அரவணைப்போம் !

     

    Share
  • வாழ்த்துக் கூறுவோம் !

     

         (  எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    ஹப்பி பேர்த்டே  என்றுபாடும்

    கால மதை மாற்றுவோம்

    கன்னித் தமிழில் பாட்டுப்பாடி

    கலகலப்பை ஊட்டு வோம்

    அம்மா பாலில் எமக்குதந்த

    அன்னைத் தமிழைப் பாடுவோம்

    அன்னியத்தை அணைத்து நிற்கும்

    அவலம் அதைப் போக்குவோம் !

     

    கேக்கை வெட்டி விளக்கணைக்கும்

    கேளிக்கையை விரட்டு வோம்

    நாக்கில் இனிமை சொட்டசொட்ட

    நல்ல தமிழைப் பாடுவோம்

    வீட்டில் உள்ள பெரியவரை

    வீழ்ந்து வணங்கி நின்றுமே

    வாழ்த்து வாங்கி ஆசிபெற்று

    வளமாய் தமிழில் பாடுவோம் !

     

    அப்பா அம்மா அருகணைத்து

    அக மகிழ்ந்து பாடுவோம்

    அக்கா அண்ணா தம்பியோடு

    அழகு தமிழில் பேசுவோம்

    பக்குவமாய் இனிப்பு வழங்கி

    பலரும் மகிழப் பாடியே

    செப்பமாகப் பிறந்த நாளை

    சிறப்பாய் செய்து மகிழுவோம் !

     

    ஆங்கிலத்தில் பாடும் பாட்டை

    அகத்தை விட்டு அகற்றுவோம்

    அன்னைத் தமிழில் வாழ்த்துப்பாடி

    அகம் மகிழச் செய்குவோம்

    இனிய பிறந்த நாளையென்றும்

    எங்கள் தமிழால் வாழ்த்துவோம்

    எங்கள் தமிழின் இனிமையெங்கும்

    பொங்க வாழ்த்துக் கூறுவோம் !

     

     

    வளங்கொழிக்க வானுயர வாழ்கவென்று வாழ்த்துவோம்

    உளம்மகிழ உணர்வுகொண்டு உயர்கவென்று வாழ்த்துவோம்

    கருணைகொண்டு கடவுளெம்மைக் காக்கவேண்டி வாழ்த்துவோம்

    கன்னித்தமிழ் கொண்டுநின்று பிறந்தநாளை வாழ்த்துவோம் !

     

    Share
  • தமிழால் வாழ்த்துவோம் !

     

    ( எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

     

     

    அறிவுநிறை தமிழ் கொழுந்தே

    ஆண்டாண்டு வாழியவே

    நிறைவுடைய வாழ்வு பெற்று

    நீண்டநாள் வாழியவே !

     

    கனிவுநிறை உள்ளம் கொண்டு

    காலமெல்லாம் வாழியவே

    கற்கண்டே கனி அமுதே

    களிப்புடனே வாழியவே !

     

    இனிமைநிறை வாழ்வு பெற்று

    ஏற்றமுடன் வாழியவே

    பருவமெலாம் வளம் பெற்று

    பாங்குடனே வாழியவே !

     

    முத்தமிழே முழு நிலவே

    சொத்தேநீ வாழியவே

    அர்த்தமுள்ள வாழ்வு வாழ

    அகமார வாழ்த்துகிறோம் !

     

    வசந்தம்நிறை வாழ்வு பெற்று

    வையகத்தில் வாழியவே

    வாழ்வெல்லாம் மகிழ்வு கொண்டு

    வாழ்ந்திடுக பல்லாண்டு !

     

    பிறந்தநாள் கொண்டாடும் வேளை இப்படி வாழ்த்தினால் இனிக்குமல்லவா

    வாழ்த்திப் பாருங்கள்

    வண்ணமாயிருக்கும்

     

    Share
  • அருமருந்தே காளியம்மா !

     

             ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

     

    எண்ணமெலாம் உன்னிடத்தில் எங்களது காளியம்மா

    மண்ணிலே நல்லவண்ணம் வாழுதற்குத் துணையானாய்

    ( எண்ணமெலாம் )

     

    கண்ணாலே உனைப்பார்த்தால் கவலையெல்லாம் தீருமம்மா

    கண்மணியே காளியம்மா காலடியைப் பற்றுகின்றோம்

    ( எண்ணமெல்லாம்)

     

    தீராத காதலுடன் தினமும்வரும் அடியவரை

    நோகாமல் காத்திடுவாய் நுண்ணறிவின் இருப்பிடமே

    ஆராதனை செய்து அனுதினமும் பாடுகின்றோம்

    நேராக எமைபார்த்து நின்னருளைத் தருவாய

     

    மருதமர நிழலினிலே வாழுகின்ற தாயேநீ

    உரிமையுடன் வருமடியார் உள்ளமதில் உறைந்திடம்மா

    வருவினைகள் எமையணுகா வகையினிலே காத்திடுவாய்

    அருமருந்தே காளியம்மா அனைவருமே தொழுகின்றோம்

     

    ( எண்ணமெலாம் )

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • முத்தமிழ் வித்தகர் !

    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

    unnamed (4)
    மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
    மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
    கட்டளகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
    களனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
    இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
    இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
    எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
    எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் !
    ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
    ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
    துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
    அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்தார் இமயமென !

    விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
    நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
    சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
    செல்லுமிட மெல்லாமே சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே !

    ஈழத்தில் பிறந்தாலும் இந்தியா அவர்வாழ்வின்
    கோலத்தை மாற்றியதால் குன்றேறி அவர்நின்றார்
    பண்டிதராயிருந்த அவர் பல்கலைக்கழகம் தன்னில்
    பலபேரின் பாராட்டால் பதவியிலே உயர்ந்துநின்றார் !

    பண்டிதரால் வெறுக்கப்பட்ட பாரதியார் படைப்புக்களை
    பண்டிதராய் இருந்தவரே பலபேரும் அறியச்செய்தார்
    பல்கலைக்கழம் தன்னில் பாரதிக்கு இடம்கொடுத்து
    பாடமாய் படிப்பித்தார் பண்பாளர் விபுலானந்தர் !
    பேராசிரிராய் பெருமையுடன் பணி ஆற்றி
    ஆராத காதலுடன் அவர்தமிழை வளர்த்தாரே
    தீராத பசியோடு தினமுமவர் தமிழ்கற்று
    யாருமே தொட்டிரா யாழ்தொட்டு நூல்செய்தார் !

    பலமொழிகள் தெரிந்தாலும் பற்றெல்லாம் தமிழ்மீது
    அவர்கொண்டு இருந்ததனால் அறிஞரெலாம் போற்றினரே
    இயலிசை நாடகத்துள் என்றுமவர் இணைந்ததனால்
    முத்தமிழ் வித்தகராய் எத்திக்கும் திகழ்ந்தாரே !

    துறவியாய் மாறினாலும் தமிழினைத் துறக்கவொண்ணா
    அறிவுசால் ஆசானாகி அருந்தமிழ் வளர்த்தே நின்றார்
    துறைபல கற்றுணர்ந்து தூயநற் பணிகள் ஆற்றி
    கறையிலா நெஞ்சங்கொண்டார் கருநிற அண்ணல்தாமும் !

    ஆசானாய் அதிபராகி அதியுயர் பதவிபெற்று
    மாசறு குணத்தனாக மாண்புறு மனத்தைப் பெற்று
    பாசமாம் வினையைப் போக்கும் பக்குவகுருவமாகி
    தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர் !

    Share
  • ஏற்றிடலே நன்று !

         (    எம் . ஜெயராமசர்மா …… மெல்பேண் ….. அவுஸ்திரேலியா   )

     

     

    தானியங்கள் பலவற்றை நாமுண்டு வந்தோம்

    நகரத்து உணவுகளை நாம் காணவில்லை

    ஊரெல்லாம் விவசாயம் உயிர்ப்புடனே அன்று

    ஒழுங்குடனே இருந்ததனை யாவருமே அறிவோம்

    காலமெனும் சக்கரமோ வேகமாய் சுழன்று

    கடுகதியாய் உணவெல்லாம் மாற்றமுறத் தொடங்கி

    நாமின்று வேண்டாத உணவுகளை உண்டு

    நலமிழந்து போவதற்கு ஆளாகி உள்ளோம் !

     

    கூழ்குடித்த காலமதில் குடல்நோய்கள் குறைவே

    கொக்கோகோலா குடித்தவர்க்கு வருநோய்கள் பலவே

    ஆழ்கிணறு நீரெடுத்து அருந்திநின்றோம் நன்றாய்

    அதனாலே ஆரோக்கியம் அமைந்திருந்த தன்று

    நீர்குடித்தோம் மோர்குடித்தோம் நிரம்பியது வயிறு

    பீர்குடித்து உடல்நலத்தைக் கெடுக்கின்றோம் இன்று

    ஊர்முழுக்க இப்போது மாறியே போச்சு

    உயிர்ப்புள்ள உணவுகளை உண்பாரும் குறைவே !

     

    வரகுதினை கம்புசோளம் மாட்டுணவாய் ஆச்சு

    மனிதவுண வெல்லாமே வரண்டு போகலாச்சு

    தினமுண்ட  எள்ளும்கூட சிதறியெங்கோ போச்சு

    பனைதந்த பலபொருளும் காட்சிப் பொருளாச்சு

    நின்றுகொண்டே  உண்டுவிட்டு ஓடிநிற்கும் பலபேர்

    கண்டதையும் கடையில்வாங்கி வாயினுள்ளே போட்டு

    மென்றிடாமல் விழுங்கிநின்று வேகமுடன் சென்று

    விலைகொடுத்து நோயையவர் வாங்குகிறார் நாளும் !

     

    பக்கற்றில் உணவுவகை பதம்பதமாய் இருக்கு

    பார்ப்பவர்கள் மனங்கவரும் கவர்ச்சியதில் இருக்கு

    காலைமாலை வேளைக்கென கலர்கலராய் இருக்கு

    கண்டவுடன் வாயூறும் காட்சியதில் இருக்கு

    சமையல்செய்ய விரும்பாத பலபேர்க்கும் இப்போ

    சரியான துணையாக இருக்குதந்த உணவு

    பணம்கொடுத்து வாங்கியதை பலபேரும் உண்டு

    பறிகொடுத்து நிற்கின்றார் பலநலத்தை இன்று !

     

    செயற்கையாய் தயாரிக்கும் உணவு வகையெல்லாம்

    செரிமானம் ஆகாமல் சிக்கலினைத் தருமே

    அதைவிரும்பி ஏற்பதற்கு அதையாக்கி விற்போர்

    அதிகபணம் செலவாக்கி விளம்பரங்கள் செய்வார்

    விளம்பரத்தால் மயங்கிநிற்கும் பலபேரும் ஆங்கே

    விரைந்துசென்று அதைவாங்கி வீட்டிலுண்டு மகிழ்வார்

    மகிழ்கின்றார் மகிழ்ச்சியது நிலைத்துவிடு முன்னே

    மருந்துதேடி அவரலைந்து மாட்டிடுவார் வகையாய் !

     

    மேல்நாட்டு உணவுவகை மெத்தவுமே வந்து

    மெய்யாக உடல்நலத்தை பொய்யாக்கி விட்டு

    நாளெல்லாம் பலநோய்கள் நமதுடலுள் செலுத்தி

    நம்பணத்தை வீணாக்கும் நடைமுறையில் இருக்கு

    பழையவுண வெல்லாமே உடல்நலத்தை நோக்கி

    பக்குவமாய் அமைந்தமையை பார்க்கின்ற போது

    நமதுணவை நாம்மறத்தல் நமைமறத்தல் அன்றோ

    இனிமேலும் நம்முணவை ஏற்றிடலே நன்று !

     

     

     

    Share
  • இயங்கிநிற்கும் பிரம்மா !

             ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    படைக்கின்ற பிரம்மாவை நாம்பார்த்த  தில்லை

    படைப்பதனை பார்த்துவிட்டு வியப்படைந்து நிற்போம்

    படைக்கின்ற பிரம்மாவும் அவர்படைப்பும் கண்முன்

    பார்க்கின்ற பாக்கியத்தைப் பார்மீது காண்போம் !

     

    எழுத்தாளர் இவ்வுலகின் இயங்கிநிற்கும் பிரம்மா

    எழுத்தாலே இவ்வுலகை அவர் ஆளுகின்றார்

    எழுத்தாலே எத்தனையோ எமக்களித்து நிற்கும்

    எழுத்தாளர் எல்லாமே இறைவனது வரமே !

     

    கல்லுக்குள் கலைநயத்தைக் காட்டுகிறான் சிற்பி

    சொல்லுக்குள் ஆயிரத்தைத் தீட்டுகிறான் எழுத்தன்

    நல்லவற்றைத் தீயவற்றை நாட்டுக்கு உரைக்கும்

    வல்லமையை எழுத்தாளன் வாங்கிவந்து உள்ளான் !

     

    வாழ்க்கையினை மாற்றுகின்ற எழுத்தாளர் தம்மை

    வானவரும் போற்றிடுவார் மனமார நாளும்

    வாழ்வினுக்கு ஏற்காமல் எழுதிநிற்பார் ஆகின்

    வாழ்க்கையிலே நரகமதை அடைந்திடுவார் விரைவில் !

     

    கம்பனெனும் எழுத்தாளன் கைபட்ட தமிழும்

    கவிகாள மேகமது கைபட்ட தமிழும்

    நம்ஐயன் வள்ளுவனார் நமக்களித்த தமிழும்

    நாளுமே எம்வாழ்வில் நல்லதுணை அன்றோ !

     

    சங்கத்தமிழ் எழுத்தாளர் சபையேறி நின்று

    இங்கிதமாய் எமக்களித்த இலக்கியதைப் பார்க்கின்

    எங்களது எழுத்தாளர் இவ்வுலகில் என்றும்

    இறவாத வரம்பெற்று வாழ்கிறார்  என்போம் !

     

    வாழுகின்ற வாழ்நாளை வசந்தமுள தாக்கி

    வருங்காலம் எம்வாழ்வில் விடிவு வருமென்று

    கூறுகின்ற துணிவுதரும் எழுத்தாலே எம்மை

    குதூகலத்தில் குளிக்கவைப்பர் எழுத்தாளர் அன்றோ !

     

    வறுமைதனில் இருந்தாலும் பொறுமையுடன் எழுதி

    வையகத்தார் மனங்களிலே மலர்ச்சிவர உதவி

    தலைநிமிர்ந்து நிற்கின்ற தன்மையினை உடைய

    தகவுடைய  எழுத்தாளர் தமைப்போற்றி நிற்போம் !

     

     

     

    Share
  • துணையெனவே கொண்டிடுவோம் !

      ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    ஆலயம் தொழுவது சாலவும் நன்று

    நூலகம் போவது யாவர்க்கும் நன்று

    ஆலயம் எங்கள் ஆணவம் போக்கும்

    நூலகம் எங்கள் அறிவினைக் கூட்டும் !

     

    சாதியும் பாராது சமயமும் பாராது

    பதவியும் நோக்காது பணத்தையும் பார்க்காது

    படிக்கின்ற மனமுடையார் பலருக்கும் வரவேற்பு

    பக்குவமாய் கிடைக்குமிடம் நூலகமொன்றேயாம் !

     

    நூல்வாங்க முடியாதார் நூலகத்தை நாடிடுவார்

    நூல்தெரிந்து படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்

    வாழ்வெல்லாம் படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்

    வளமெனவே அமைந்திருக்கும் நூலகத்தை வாழ்த்திடுவோம் !

     

    ஊருக்குள் நூலகம் ஒருகோவில் போலாகும்

    பாருக்குள் நூலகம் பலகோவில் போலாகும்

    வேருக்கு நீராக நூலகங்கள் இருப்பதனால்

    விருப்பமுடன் சென்றிடுவார் வேற்றுமைகள் இல்லாமல் !

     

    கோவில்களும் நூலகமும் நாட்டினுக்கு இலட்சணமே

    கோரமுடன் போர்வரினும் காக்கச்சட்டம் சொல்கிறது

    அதைமீறி சிலநாடு ஆணவத்தால் அழித்துநிற்பின்

    அறமென்னும் பெருநெருப்பு அவர்களையே அழித்துவிடும் !

     

    நூலகத்தைக் கோவிலுடன் ஒப்பிடவே அஞ்சுகிறார்

    குழப்பமெலாம் கோவிலிலே வருமென்றே எண்ணுகிறார்

    நூலகத்தைப் பயனாக்கி நுண்ணறிவு பெற்றுநின்றால்

    நூலகமே கோவிலெனும் நிலையெமக்கு வந்திடுமே !

     

    தாழ்வுமனப் பான்மையினை தான்போக்கி  நிற்பதற்கு

    நூலகத்தின் நூல்களெல்லாம் வாழ்நாளில் உதவிநிற்கும்

    வேலையெல்லாம் முடித்துவிட்டு விருப்பமுள்ள வேளைகளில்

    நாலுமணி நூலகத்தில் நாமிருந்தால் நன்மையன்றோ !

     

    கோவிலுக்கும் சென்றிடுவோம் குறையகற்ற வேண்டிடுவோம்

    நூலகத்தை வாழ்நாளின் துணையெனவே கொண்டிடுவோம்

    கற்பவற்றைக் கற்பதற்கு நூலகத்தைத் தேர்ந்தெடுப்போம்

    கற்றபடி கோவிலிலே கடவுளைநாம் தொழுதுநிற்போம் !

    Share
  • அரவணைப்பாய் ஆண்டவனே !

             ( எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    பாயிலே படுத்தாலும் பாடிடுவேன் ஆண்டவனே

    நோயென்னை வதைத்தாலும் உனைமறவேன் ஆண்டவனே

    நாள்முழுக்க வேதனையில் நரகமதைக் கண்டாலும்

    வாழ்நாளில் உன்நாமம் மறக்காமல் செபித்திடுவேன் !

     

    பரிசு பலபெற்றாலும் பட்டமெலாம் கிடைத்தாலும்

    உரிமையுடன் உன்நாமம் உரைத்துநிற்க நான்மறவேன்

    அருமருந்து உண்டாலும் அருகில்பலர் இருந்தாலும்

    ஆண்டவனே உன்துணையே அமிர்தமாய் அமையுமன்றோ !

     

    இன்பம்பல நான்கண்டேன் இனிமையுடன் வாழ்ந்திருந்தேன்

    இப்போது அவையாவும் எட்டியே நிற்கிறதே

    இல்லறமும் கசக்கிறது இனிமையெலாம் உறைக்கிறது

    என்றாலும் ஆண்டவனே நீமட்டும் இனிக்கின்றாய் !

     

    சுகமுடனே இருக்கையிலே சுற்றமெலாம் சூழ்ந்திருந்தார்

    சுகம்குறைந்து போகையிலே தூரரவர் நிற்கின்றார்

    சுகமனைத்தும் பெற்றுநின்றார் சுமையென்றே எண்ணுகிறார்

    சுமைதாங்கி ஆண்டவனே சுமையென நீயெண்ணாதே !

     

    பழம்பழுத்த மரமாகப் பயன்கொடுத்து நின்றிருந்தேன்

    பலபேரும் பயன்பெற்று பழமரத்தை நாடிநின்றார்

    பழம்கொடுத்த மரமிப்போ உரமிழந்து போனதனால்

    பறித்துண்ட பலபேரும் பாராமலே செல்லுகிறார் !

     

    ஆண்டவனே இவ்வுலகின் அதிசயத்தைப் பாராயோ

    அன்புபாச நேசமெல்லாம் ஆரிடம்நான் தேடுவதோ

    அரைக்கணமும் மறவாமல் உனைநினைக்கும் அடியேனை

    அல்லல்பட விட்டிடாமல் அரவணைப்பாய் ஆண்டவனே !

    Share
  • கந்தப்பெருமானே !

     

     

    எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     

     

    கலியுகத்தின் தெய்வமே – கந்தப்பெருமானே
    நிலைபெறவே வேண்டுறேன் – கந்தப்பெருமானே

    பவவினைகள் போக்கிடுவாய் – கந்தப்பெருமானே
    பாவிகளைக் காத்திடுவாய் – கந்தப்பெருமானே

    முத்தமிழாய் முகிழ்த்தவனே – கந்தப்பெருமானே
    சொத்தெனவே நிறைந்தவனே – கந்தப்பெருமானே
    சத்தியமாய் உள்ளவனே – கந்தப்பெருமானே
    சகலசெல்வம் ஆகியுள்ளாய் – கந்தப்பெருமானே

    நித்தமுனைப் பாடிநிற்க – கந்தப்பெருமானே
    நினதருளைத் தந்திடுவாய் – கந்தப்பெருமானே
    அத்தனையும் உன்னிடத்தில் – கந்தப்பெருமானே
    அடைக்கலமாய் அளித்திடுவேன் – கந்தப்பெருமானே !

    Share
  • நாட்டுக்குத் தேவை !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     

     
    ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு
    ஒற்றுமை அகன்றிடின்
    அனைவர்க்கும் தாழ்வு
    என்றிடும் வாக்கினை
    மனத்தினில் இருத்தி
    இணைந்திட நினைப்போம்
    ஏற்படும் உயர்வே !

    கூட்டுறவென்பது நாட்டுயர்வாகும்
    கூடிடும்போது கூடிடும்வலிமை
    நாடுகள் பிரிந்தால்
    நன்மைகள் உடையும்
    கேடெலாம் சூழ்ந்து
    நாடெலாம் குலையும்
    குலைவினைத் தடுத்திட
    கூட்டுறவதனை தலையெனக்கொண்டு
    நிலைபெறச் செய்வோம் !

    ஒருமித்து நின்றால்
    உன்னதம் விளையும்
    உடைந்துமே போனால்
    உயர்வெலாம் சரியும்
    கூடிடும் பொழுதில்
    குறையெலாம் அகலும்
    கூட்டுற வென்பது
    நாட்டுக்குத் தேவை !

    பொதுநலனை வளர்ப்பதற்கு
    புறப்பட்டு வந்த
    புத்தூக்கம் கூட்டுறவு
    புதுப்பாதை அன்றோ
    அதைவளர்க்க பலபேரும்
    ஆண்டாண்டு காலம்
    அயராது உழைத்ததனை
    அகம்நிறைத்து வைப்போம் !

    தனிமனித கூட்டுறவு
    சமுதாய கூட்டுறவு
    பொருள்விரியக் கூட்டுறவு
    போரகற்றக் கூட்டுறவு
    கூட்டுறவு எனும்கருத்து
    மொட்டாக இல்லாமல்
    மலர்ந்விடும் வேளைதனில்
    மாவிளைவைத் தந்துநிற்கும் !

    பலசபைகள் அமைக்கின்றார்
    பலசட்டம் தீட்டுகிறார்
    உலகசமாதனம் என்று
    உரத்தெல்லாம் உரைக்கின்றார்
    கலவரமோ நாடெல்லாம்
    கனத்ததீயாய் எழுகிறது
    கூட்டுறவை வளர்த்திருந்தால்
    குழப்பங்கள் வந்திராதே !

    ஆதிக்கம் ஆதிகாராம்
    ஆணவத்தால் உலகமெலாம்
    அழிவான பாதைசென்று
    ஆக்கமெலாம் இழக்கிறது
    கூட்டுறவு எனும்கருத்தை
    நாடெல்லாம் கடைப்பிடித்தால்
    ஆட்டிநிற்கும் ஆணவங்கள்
    அடியற்றுப் போகுமன்றோ !

    Share
  • காலமெலாம் வாழுகிறாய்

     

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் அவுஸ்த்திரேலியா 

    unnamed
    எங்கள்கவி கண்ணதாச
    என்றும்நீ வாழுகிறாய்
    தங்கநிகர் கவிதந்த
    தமிழ்க்கவியே நீதானே

    தங்கிநிற்கும் வகையினிலே
    தரமிக்க கவிதைதந்து
    எங்களுக்கு அளித்தவுன்னை
    எம்மிதயம் மறந்திடுமா

    பொங்கிவரும் கடலலைபோல்
    புதுப்புதிதாய் பாட்டெழுதி
    எங்கும்புகழ் பரப்பியதை
    எம்மிதயம் நினைக்கிறதே

    தங்கத் தமிழ்மகனே
    தரமான தமிழ்ப்புலவா
    எங்குநீ சென்றாலும்
    எல்லோரும் உனைமறவோம் !

    கவிச்சிங்கம் உனக்காக
    பலசங்கம் எழுந்துளது
    கவிபாடி கவிபாடி
    கவிஞரெலாம் போற்றுகிறார்

    புவிமுழுதும் உன்புகழோ
    பொலிந்தெங்கும் இருக்கிறது
    கவியரசே கண்ணதாச
    காலமெலாம் வாழுகிறாய் !

    நீபாடாப் பொருளில்லை
    நீயெடுக்கா உவமையில்லை
    தாய்த்தமிழே உன்னிடத்தில்
    சரண்புகுந்து இருந்திடுச்சே !

    களைப்பெமக்கு வந்தாலும்
    கவலையெமைச் சூழ்ந்தாலும்
    கண்ணதாசா உன்பாட்டே
    கைகொடுத்து நின்றதையா !

    வைத்தியர் முதற்கொண்டு
    நோயாளி யாவருக்கும்
    வரமாக உன்பாட்டே
    வாய்த்ததை நாம்மறக்கமாட்டோம் !

    அர்த்தமுள்ள கருத்துகளை
    அள்ளித்தந்த பெருங்கவியே
    ஆண்டாண்டாய் உன்புகழை
    அனவருமே போற்றிடுவோம் !

    Share
  • கடவுளுமே பொறுக்க மாட்டார் !

     

    எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    கண்விழித்து கண்விழித்து காலமெல்லாம் காவல்காத்து
    கடல்கடந்து உடல்வலிந்து காசுழைத்து வந்துநின்று
    கண்ணுக்குள் மணியாக கருணைமழை பொழிந்துநிற்பார்
    மண்மீது வரமெனவே வந்துதமைந்த பெற்றோரோ !

    பெற்றோரின் கனவெல்லாம் பெற்றபிள்ளை உயர்வினிலே
    கற்றவராய் நிற்கவேண்டி கடுமுழைப்பை ஈந்துநிற்பார்
    பட்டம்பெற்று பிள்ளைவந்து பக்கமதில் நிற்கையிலே
    பெற்றதிலும் அவர்மனது பெரிதாக மகிழ்ந்துநிற்கும் !

    ஆணென்றோ பெண்ணென்றோ அவரெண்ணி நிற்காமல்
    தாம்பெற்ற பிள்ளைகளை தானுயர்த்த மனந்துணிவார்
    எந்தவேலை பார்த்தாலும் எப்படியும் தம்பிள்ளை
    சொந்தக்காலில் நிற்பதற்கு சுகமனைத்தும் துறந்துநிற்பார் !

    பட்டினியாய் கிடந்தாலும் பலதுன்பம் பட்டாலும்
    மற்றவர்கள் பேசுவதை மனமேற்றிக் கொள்ளாமல்
    எப்படியும் தம்பிள்ளை ஏற்றமுற வேண்டுமென்று
    தப்பாமல் கோவில்சென்று தண்டனிட்டு வேண்டிநிற்பார் !

    விரதங்கள் பலவிருப்பார் வேண்டியதை விட்டிடுவார்
    குலதெய்வம் தனைவேண்டி கொடுத்திடுவார் தானமெலாம்
    நலமான வாழ்வுவர நாளுமவர் நினைத்திடுவார்
    குலையாத உறுதியுடன் கொண்டுநிற்பார் இலட்சியங்கள் !

    வேலைபெற்ற பிள்ளைக்கு விருப்பமுடன் மணஞ்செய்து
    நாலுபேரும் மதிக்கும்படி நல்லபடி பார்த்திடுவார்
    பேரப்பிள்ளை வந்துவிட்டால் பேரின்பம் பெற்றுநின்று
    ஊர்கூட்டி விழாவெடுத்து உவகையிலே மிதந்திடுவார் !

    வீடுவாங்கிக் கொடுத்திடுவார் வேறும்பல செய்தும்நிற்பார்
    நாடுவிட்டு நாடுபோனால் தாமும்போய் உதவிடுவார்
    நல்லதெல்லாம் தேடித்தேடி எல்லாமே கொடுத்திடுவார்
    எள்ளளவும் தமைப்பற்றி எண்ணார்கள் பெற்றோர்கள் !

    பிள்ளைகளும் வளர்ந்து பேரும்புகழ் பெற்றுநின்று
    தம்பிள்ளை வளர்ச்சியிலே தாம்கவனம் செலுத்திடுவார்
    தாம்வளர்ந்து நிற்பதற்கு தமைஈந்த பெற்றோரை
    ஓரக்கண்ணால் பார்ப்பதற்கும் ஒதுக்கிவிடார் நேரமதை !

    உழைத்துக் கழைத்து ஓய்வெடுக்க முடியாமல்
    தனித்து நிற்கப் பெற்றவரை தான்விடுவார் பிள்ளைகளும்
    கனவுபலகண்டு கண்விழித்துப் பார்த்த பெற்றோர்
    உணவுகூட இல்லாமல் ஒருபக்கம் ஒதுங்கிநிற்பார் !

    வளர்த்தகடா மார்மீது ஏறிநின்று உதைப்பதுபோல்
    வளர்த்துவிட்ட பிள்ளைகளால் பெற்றோரும் வாடிடுவார்
    உழைத்துவிட்ட உழைப்பெல்லாம் உறுஞ்சிவிட்ட பிள்ளைகளோ
    உயர்பதவி தனிலிருந்து உல்லாசம் அனுபவிப்பார் !

    வயதுவந்த காரணத்தால் வாய்திறக்க முடியாமல்
    மெளனமாய் அவரிருந்து வடித்திடுவார் கண்ணீரை
    ஆளாக்கி விட்டபெற்றோர் அரவணைப்பார் யாருமின்றி
    ஆண்டவனை வேண்டிநின்று அனுதினமும் அழுதுநிற்பார் !

    தமைவளர்த்த பெற்றோரைத் தாம்பார்க்க முடியாமல்
    முதியோர்கள் இல்லமதை முழுமனதாய் தேர்ந்தெடுத்து
    பெற்றெடுத்துப் பேர்கொடுத்த பெற்றோரை கொண்டுசென்று
    விட்டுவிட்டு வந்துநின்று விருந்துண்டு மகிழ்ந்துநிற்பார் !

    மிருகக்காட்சிச் சாலைக்கு மிருகம்பார்க்கச் செல்வதுபோல்
    வேளைவரும் போதுஅவர் விருப்பமின்றி போய்வருவார்
    அன்னைதந்தை தினமதனில் அவைநடுவே பேசிநிற்பார்
    அன்னைதந்தை நினைவைமட்டும் அவர்மனது மறந்துவிடும் !

    பெரும்பாலும் பிள்ளைகளால் பெற்றோர்கள் படும்துன்பம்
    பேசுகின்ற வேளையிலே பெருங்கோபம் எழுகிறது
    அரும்பாடு பட்டவர்கள் அனாதைபோல் ஆகும்நிலை
    அடிக்கடி நடப்பதினை அனைவருமே அறியவேண்டும் !

    முதுமையென்னும் காலமது எல்லோர்க்கும் வந்துநிற்கும்
    இளமையது என்னாளும் எம்முடனே இருந்திடாது
    தலைமீது எமைத்தாங்கி தம்முயிராய் எமைநினைத்த
    விலையில்லா பெற்றோரை விடுதிவிடல் முறையாமோ !

    விரதம் பலவிருந்து வேதனைகள் பலசுமந்து
    உரம்போட்டு எமைவளர்த்த உத்தமராம் பெற்றோரை
    அரம்போல அறுக்காமல் அருவருப்பாய் நோக்காமல்
    சிரந்தாழ்த்தி தொழுதெழுதால் சிறப்புடனே நாம்வாழ்வோம் !

    மண்மீது தெய்வமாய் வந்துநிற்கும் பெற்றோரை
    மடிமீது நாம்வைத்து வருடிவிடல் வேண்டாமா
    கண்ணுக்குள் எமைவைத்துக் காத்துநின்ற பெற்றோரை
    கண்கலங்க விட்டுவிட்டால் கடவுளுமே பொறுக்கமாட்டார் !

    பெற்றோரை அரவணைத்தால் பேரின்பம் பெற்றிடுவோம்
    கற்றதனால் ஆயபயன் பெற்றோரைப் பேணுவதே
    நற்பயனாய் அமைந்தவரே நம்முடைய பெற்றோர்கள்
    உற்றதுணை அவரென்றே பெற்றோரைக் காத்துநிற்போம் !

    Share
  • மல்லிகையின் ஜீவா வாழ்க !

     

    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    unnamed (1)

    தொண்ணூறு வயதினைத் தொட்டுநிற்கும் ஜீவாவே
    இன்னும்நீ வாழ்வதற்கு இறைவனிடம் வேண்டுகிறேன்
    உன்னுடைய ஊக்கத்தால் உரம்பெற்று வளர்ந்தவர்கள்
    உனைவாழ்த்தும் வாழ்த்தெல்லாம் உரமாக அமைந்திடட்டும் !

    யாழ்நகர வீதிகளில் நீநடந்த காட்சியெலாம்
    வாழ்நாளில் சாதனையாய் மல்லிகையாய் மலர்ந்ததுவே
    தாழ்வுதனை துணையாக்கி தலைநிமிர்ந்த உன்துணிவை
    நாள்முழுக்க நினைந்தபடி நான்வாழ்த்தி மகிழுகின்றேன் !

    பரிசுபல பெற்றாலும் பகட்டின்றி வாழ்ந்துநின்றாய்
    உரியவரை இனங்கண்டு உன்வழியில் இணைத்துநின்றாய்
    வறுமையிலும் செம்மையாய் வாழ்வதற்குக் கற்றுக்கொண்டாய்
    பொறுமையுடன் நீயிருந்து பொலிந்துவிட்டாய் படைப்புலகில் !

    நல்லதமிழ் ஏடுதந்த நாயகனே நீவாழ்க
    நல்லதமிழ் எடுத்தாண்ட வல்லவனே நீவாழ்க
    மல்லிகையாய் மணங்கொடுத்த மன்னவனே நீவாழ்க
    மல்லிகையின் ஜீவாவே வாழ்ந்திடுக பல்லாண்டு !

    Share
  • நெஞ்சமே ஏங்கிறது !

     

    எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    நிலம்பெயர்ந்து போனாலும்
    நினைவுமட்டும் மாறவில்லை
    மனமுழுக்க ஊர்நினைப்பே
    மெளனமாய் உறங்கிறது
    தலைநிறைய எண்ணெய்வைத்து
    தண்ணீரில் மூழ்கிநின்று
    குளங்கலக்கி நின்றதெல்லாம்
    மனம்முழுக்க வருகிறது !

    பக்கத்து வீட்டினிலே
    பந்தல்போட்டுக் கல்யாணம்
    படுஜேராய் நடக்கையிலே
    பாய்ந்துசென்று அமர்ந்திருந்து
    சுட்டுவைத்த பலகாரம்
    அத்தனையும் சுவைபார்த்து
    சுருட்டிக்கொண்டு ஓடிவரும்
    சுகமங்கே கிடைத்ததுவே !

    பழுத்தகுலை வாழைமரம்
    இருமருங்கும் சிரித்துநிற்கும்
    பழம்மீது எங்கவனம்
    விழுந்தபடி அங்கிருக்கும்
    வரவேற்கும் சாட்டினிலே
    வாழைக்குலை அருகணைந்து
    பழம்பறித்துப் பையில்போட்டு
    பாய்ந்திடுவோம் மறைவினுக்கு !

    அப்பம்சுடும் ஆச்சிவீட்டில்
    அதிகாலை நாமிருப்போம்
    துப்பரவு செய்வதற்கு
    துணிவுடனே முன்வருவோம்
    பிய்கின்ற அப்பமெலாம்
    ஆச்சிதரத் சம்மதிப்பார்
    பேசாமல் வாங்கியுண்டு
    பேரின்பம் பெற்றிடுவோம் !

    வாத்தியார் அடித்துவிட்டால்
    வசைபாட மாட்டோம்நாம்
    வாத்தியார் சைக்கிளுக்கு
    வைத்திடுவோம் நல்லஆப்பு
    வீட்டுக்குத் தெரிந்துவிட்டால்
    வெளுத்தெடுத்து விடுவார்கள்
    அடிகொடுத்த அப்பாவே
    அணைத்ததையும் நினைக்கின்றோம் !
    திருவிழா வந்துவிட்டால்
    பெருமகிழ்ச்சி வந்துவிடும்
    சின்னமேளம் பெரியமேளம்
    திருவிழாவைச் சிறப்பிக்கும்
    இரவெல்லாம் கோவிலிலே
    எத்தனையே கலைநிகழ்ச்சி
    எங்களுக்கு சொர்க்கமாய்
    இருந்ததைநாம் நினைக்கின்றோம் !
    மல்கோவா மாங்காயை
    மரமேறிப் பிடிங்கிநின்று
    மரத்தடியில் சுவைப்பதிலே
    மட்டற்ற சுவையெமக்கு
    மரமேறிப் பறிக்கையிலே
    மரக்காரன் வந்துவிட்டால்
    மாட்டிவிட்டு முழிப்பதனை
    மனமிப்போ நினைக்கிறது !

    கவலைபற்றிக் கவலையில்லை
    காசுபற்றிக் கவலையில்லை
    கல்விபற்றிக் கவலையில்லை
    கஞ்சத்தனம் எமக்குமில்லை
    கிடைக்கின்ற அத்தனையும்
    பெருமகிழ்ச்சி எனநினைத்தோம்
    நினைக்கின்ற போதுவிப்போ
    நெஞ்சமே ஏங்கிறது !

    Share