அரவணைப்பாய் ஆண்டவனே !

         ( எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

 

பாயிலே படுத்தாலும் பாடிடுவேன் ஆண்டவனே

நோயென்னை வதைத்தாலும் உனைமறவேன் ஆண்டவனே

நாள்முழுக்க வேதனையில் நரகமதைக் கண்டாலும்

வாழ்நாளில் உன்நாமம் மறக்காமல் செபித்திடுவேன் !

 

பரிசு பலபெற்றாலும் பட்டமெலாம் கிடைத்தாலும்

உரிமையுடன் உன்நாமம் உரைத்துநிற்க நான்மறவேன்

அருமருந்து உண்டாலும் அருகில்பலர் இருந்தாலும்

ஆண்டவனே உன்துணையே அமிர்தமாய் அமையுமன்றோ !

 

இன்பம்பல நான்கண்டேன் இனிமையுடன் வாழ்ந்திருந்தேன்

இப்போது அவையாவும் எட்டியே நிற்கிறதே

இல்லறமும் கசக்கிறது இனிமையெலாம் உறைக்கிறது

என்றாலும் ஆண்டவனே நீமட்டும் இனிக்கின்றாய் !

 

சுகமுடனே இருக்கையிலே சுற்றமெலாம் சூழ்ந்திருந்தார்

சுகம்குறைந்து போகையிலே தூரரவர் நிற்கின்றார்

சுகமனைத்தும் பெற்றுநின்றார் சுமையென்றே எண்ணுகிறார்

சுமைதாங்கி ஆண்டவனே சுமையென நீயெண்ணாதே !

 

பழம்பழுத்த மரமாகப் பயன்கொடுத்து நின்றிருந்தேன்

பலபேரும் பயன்பெற்று பழமரத்தை நாடிநின்றார்

பழம்கொடுத்த மரமிப்போ உரமிழந்து போனதனால்

பறித்துண்ட பலபேரும் பாராமலே செல்லுகிறார் !

 

ஆண்டவனே இவ்வுலகின் அதிசயத்தைப் பாராயோ

அன்புபாச நேசமெல்லாம் ஆரிடம்நான் தேடுவதோ

அரைக்கணமும் மறவாமல் உனைநினைக்கும் அடியேனை

அல்லல்பட விட்டிடாமல் அரவணைப்பாய் ஆண்டவனே !

About ஜெயராமசர்மா

பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. "முதற்படி" என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர். தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார். பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க