திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் – 16
க. பாலசுப்பிரமணியன்
பற்றற்ற நிலை
ஐம்புலன்களையும் அதன் தேடல்களால் ஏற்படும் ஆசைகளையும், இவை அத்தனையையும் ஆட்டுவிக்கும் “நான்” என்ற அகந்தையையும் அடக்கி அவற்றிலிருந்து நாம் விடுபட்டால்தான் இறைவனின் அருளை பூரணமாகப் பெறத் தகுதி உள்ளவர்களாக இருப்போம். ஆனால் இது அவ்வளவு சுலபத்தில் நடக்கக் கூடிய காரியமா? எண்ணம் ஒரு பக்கம், சிந்தனை ஒரு பக்கம், செயல் ஒரு பக்கம் என நம்முடைய வாழ்க்கைப் பயணம் நடந்து கொண்டு இருக்கும் பொழுது இந்த இலக்கை நோக்கி எவ்வாறு செல்ல முடியும்?
இந்த நிலையை விளக்கும் வண்ணம் பட்டினத்தார் மிக அழகாகச் சொல்லுகின்றார் :
கை ஒன்று செய்ய விழி ஒன்று நாடக்
கருத்தொன்று எண்ணப்
பொய் ஒன்று வஞ்சக நாஒன்று பேசப்
புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று
கேட்க விரும்புமியான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்
வாய்வினை தீர்த்தவனே.
இந்தத் துயரம் நல்ல அறிவு உள்ளவர்களுக்கும் சான்றோர்களுக்கும் கூட இருக்கின்றது. என்னதான் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் சரி, வேதங்களை நல்ல முறையில் கற்று அறிந்திருந்தாலும் சரி, மனம் பற்றற்ற நிலையை அடையும் வரை இறைதத்துவத்தின் உண்மை விளங்காது. இதை வலியுறுத்தும் வகையில் திருமூலர் எழுத்திய பாடல் இதோ:
வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்தமாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே
வேட்கையை விடுதல் என்பது மிகக் கடினமான காரியம். ஏதோ ஒரு மந்திரக் கோலை ஆட்டுவதால் அது நம்மிடமிருந்து விலகிவிடும் என்பது இல்லை. இதற்க்கு தொடர்ந்த ஒருமித்த மனத்துடன் கூடிய பயிற்சி தேவை.
மண்ணாசை பட்டனே மண்ணுண்டு போட்டதடா
பொன்னாசை பெண்ணாசை போகேனே யென்குதே
என பட்டினத்தார் தனது உள்ள நிலையை வெளிப்படுத்துகிறார்.
மாணிக்க வாசகரோ மக்க்களிடம் இந்த உலகப் பற்றை நீக்கி பற்றில்லான் பாதத்தில் பற்று வைக்க அழைக்கின்றார் :
“பற்றங்கலை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் “
மாணிக்க வாசகரின் பற்றற்ற நிலையை திருமூலர் தனக்கே உரிய பாணியில் எடுத்து விளக்குகின்றார்
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றற் றவரகற்றுக் கருதிய கண்ணுதல்
கற்றற் றவர்சுற்றி நின்ற என் சோதியைப்
பெற்றற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.
இதையே வள்ளுவரோ இரண்டே அடிகளில் சுருக்கமாகவும் தெளிவாகவும் முன்வைத்துள்ளார்
வேண்டுதல் வேண்டாமை இலான் தாள்சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
(தொடரும் )