நாட்டுக்குத் தேவை !

எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

 

 
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு
ஒற்றுமை அகன்றிடின்
அனைவர்க்கும் தாழ்வு
என்றிடும் வாக்கினை
மனத்தினில் இருத்தி
இணைந்திட நினைப்போம்
ஏற்படும் உயர்வே !

கூட்டுறவென்பது நாட்டுயர்வாகும்
கூடிடும்போது கூடிடும்வலிமை
நாடுகள் பிரிந்தால்
நன்மைகள் உடையும்
கேடெலாம் சூழ்ந்து
நாடெலாம் குலையும்
குலைவினைத் தடுத்திட
கூட்டுறவதனை தலையெனக்கொண்டு
நிலைபெறச் செய்வோம் !

ஒருமித்து நின்றால்
உன்னதம் விளையும்
உடைந்துமே போனால்
உயர்வெலாம் சரியும்
கூடிடும் பொழுதில்
குறையெலாம் அகலும்
கூட்டுற வென்பது
நாட்டுக்குத் தேவை !

பொதுநலனை வளர்ப்பதற்கு
புறப்பட்டு வந்த
புத்தூக்கம் கூட்டுறவு
புதுப்பாதை அன்றோ
அதைவளர்க்க பலபேரும்
ஆண்டாண்டு காலம்
அயராது உழைத்ததனை
அகம்நிறைத்து வைப்போம் !

தனிமனித கூட்டுறவு
சமுதாய கூட்டுறவு
பொருள்விரியக் கூட்டுறவு
போரகற்றக் கூட்டுறவு
கூட்டுறவு எனும்கருத்து
மொட்டாக இல்லாமல்
மலர்ந்விடும் வேளைதனில்
மாவிளைவைத் தந்துநிற்கும் !

பலசபைகள் அமைக்கின்றார்
பலசட்டம் தீட்டுகிறார்
உலகசமாதனம் என்று
உரத்தெல்லாம் உரைக்கின்றார்
கலவரமோ நாடெல்லாம்
கனத்ததீயாய் எழுகிறது
கூட்டுறவை வளர்த்திருந்தால்
குழப்பங்கள் வந்திராதே !

ஆதிக்கம் ஆதிகாராம்
ஆணவத்தால் உலகமெலாம்
அழிவான பாதைசென்று
ஆக்கமெலாம் இழக்கிறது
கூட்டுறவு எனும்கருத்தை
நாடெல்லாம் கடைப்பிடித்தால்
ஆட்டிநிற்கும் ஆணவங்கள்
அடியற்றுப் போகுமன்றோ !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.