Tag: நாகேஸ்வரி அண்ணாமலை

  • மனிதருக்குள் இருக்கும் மனிதாபிமானம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மனவளர்ச்சிக் குறை உள்ளவர்களை (autistic people) எங்கு சந்தித்தாலும் என் மனதில் ஒரு உளைச்சல் ஏற்படும்.  உறவினர்களோடு அவர்கள் இருந்தாலும் அவர்களுடைய வாழ்நாள்வரை அவர்களை யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் உடனேயே மனதில் தோன்றும்.  பல மனநோய் நிறுவனங்களில் அங்குள்ளவர்களை அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் படிக்கும்போது வேதனை ஏற்படும்.  எல்லா வகையான ஒழுங்கு நடவடிக்கைகளும் உள்ள அமெரிக்காவிலேயே இவர்களைக் கவனித்துக்கொள்வதில்  அநியாயங்கள் நடந்துவருகின்றன என்றால் இந்தியாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  மனவளர்ச்சிக் குறை உள்ளவர்களைக் கவனித்துக்கொள்ள இந்தியாவிலும் நிறைய சமூக மனநோய் நிறுவனங்கள் தோன்றியிருந்தாலும் அங்கு ஒழுங்குமுறைகள் எல்லாம் சரியாக இல்லை.  அமெரிக்காவில்போல், குடும்பத்தவர் நிறையப் பணம் கொடுத்து அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை இந்தச் சமூக மனநோய் நிறுவனங்களிடம் விட்டுவிடும் வழக்கம் இன்னும் இந்தியாவில் வரவில்லை என்றே நினைக்கிறேன்.  மைசூரில் எங்களுக்கு வீட்டு வேலைகளில் உதவும் பெண்ணின் குடும்பத்தில் உள்ள இப்படிப்பட்ட ஒரு பையனைப் பற்றி அடிக்கடி நான் கவலைப்படுவதுண்டு.  இவனை யார் அவன் ஆயுள் உள்ளவரை கவனித்துக்கொள்வார்கள் என்ற கேள்வி எழும்போதெல்லாம் அதற்கு விடை கிடைப்பதில்லை.

    தனித்துவத்தை (individualism) மிக அதிகமாக வளரவிட்டுவிட்ட அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்களையே சரியாகக் கவனிக்காமல் இருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.  இப்படிப்பட்ட அமெரிக்காவில் சமீபதத்தில் பத்திரிக்கையில் வந்த மனவளர்ச்சி குன்றிய தன் தம்பியைப் பற்றியே சதாசர்வ காலமும் நினைத்துக்கொண்டு அவனுடைய நலத்திற்காகப் பாடுபடும் ஒரு பெண்ணின் கதை மனதை நெகிழவைத்தது.  உலகில் இன்னும் பாசம், பந்தம் போன்றவை இருக்கின்றன, சொந்த பந்தங்களைக் கவனித்துக்கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்று அறிந்தபோது ஏதோ ஒரு நிம்மதி மனதில் பிறந்தது.

    நியுயார்க் மியுசியம் ஒன்றில் பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்கும் காவலராக ஒரு பெண் வேலைபார்க்கிறார்.  இந்தப் பெண்ணுக்கு  சம்பளம் மணிக்கு பதினாறு டாலர்.  இவருக்கு வயது ஐம்பத்தாறு; இவருடைய தம்பிக்கு ஐம்பத்தி நான்கு.  இவருடைய தம்பிக்கு எழுதப் படிக்கத் தெரியாது.  தானாகச் சாலையைக் கடக்கக்கூட முடியாது.  மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஒரு இல்லத்தில் வசித்துவரும் இவரை இவருடைய தமக்கை அடிக்கடி சென்று பார்க்க விரும்புகிறார்.  ஆனால் இவரால் அதைச் செய்ய முடியவில்லை.  இவருடைய அலுவலகத்தில் மேல் பதவியில் இருப்பவர்கள் வேண்டுமானால் வேலை நேரத்திலேயே வெளியே போவதற்கு வசதி செய்துகொள்கிறார்கள்.  அவர்களால் வேலை நேரத்திலேயே டாக்டரிடம் போவதற்கும் உடல்நலமில்லாமல் இருக்கும் உறவினர்களைப் பார்ப்பதற்கும் தங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களைச் சந்திக்க பள்ளிகளுக்குப் போவதற்கும் முடியும்.  ஆனால் இவரைப் பொறுத்தவரை நினைத்த நேரத்தில் வேலையை விட்டு வெளியே போக முடியாது.  செவ்வாய் முதல் சனி வரை  காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை இவருக்குப் பணி நேரம். அந்தச் சமயத்தில் எங்கும் போக முடியாது.  வருடத்திற்கு இரண்டு வாரங்கள் சம்பளத்தோடு கூடிய விடுமுறை உண்டு.  ஆனால் அதை எப்போது எடுக்கலாம் என்பதை இவரால் தீர்மானிக்க முடியாது.

    இவருக்கென்று வருடத்தில் மொத்தம் ஐந்து நாட்கள் பர்சனல் விடுமுறை (personal leave)  உண்டு. இந்தியாவில் இதை ‘கேஷுவல் விடுமுறை’ என்பார்கள்.  அந்த ஐந்து நாட்களில் இவருக்கு இருக்கும் வியாதிகளான உயர் ரத்த அழுத்தம், ஆர்த்ரைட்டிஸ் போன்றவற்றிற்கு டாகடர்களைப் பார்ப்பதில் இரண்டு மூன்று நாட்கள் கழிந்துவிடும்.  இவருக்கு ஞாயிறு, திங்கள் விடுமுறை.  இவருடைய தம்பிக்கு திங்கட்கிழமைகளில் தான் இருக்கும் கட்டடத்தைச் சுத்தப்படுத்தும் வேலை இருக்கும்.  ஆக ஞாயிற்றுக்கிழமை ஒன்றுதான் இருவருக்கும் பொதுவான விடுமுறை நாள்.  அந்த நாளில் தம்பியைப் பார்க்கப் போனால்தான் உண்டு.

    கெடுபிடிகள் உள்ள வேலைக்கிடையேயும் அடிக்கடி இவர் தன் தம்பியைப் பற்றி நினைத்துக்கொள்வார்.  தம்பிக்கு இன்னும் அதிகம் செய்யவேண்டுமோ, தன்னால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று அடிக்கடி ஏங்குவார்.  இவருக்கென்று இப்போது தம்பியைத் தவிர குடும்பம் வேறு எதுவும் இல்லை.

    இவர்களுடைய தந்தை 1995-லும் தாய் 1998-லும் இறந்துவிட்டார்களாம்.  அவர்கள் உயிருடன் இருக்கும்போது அடிக்கடி ‘நீங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறுவார்களாம்.  இந்த அறிவுரையைத் தலைமேல் ஏற்று இவர் தன் தம்பியைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை – அவரை அடிக்கடி சென்று பார்ப்பது, அவரைக் கவனித்துக்கொள்பவர்களைச் சந்தித்துப் பேசுவது, அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பவர்களை நன்றாகச் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வது போன்றவை – ஏற்றிருக்கிறார்.

    தம்பிக்கு இதெல்லாம் புரியாவிட்டாலும், கடந்த 26 வருடங்களாக இல்லத்தில் வசிக்கும் இவரை அவருடைய அக்கா பார்க்க வரும்போதெல்லாம் இவருடைய முகம் பிரகாசிக்கும்.  அவருக்கு இருக்கும் ஒரே உறவு அவருடைய அக்காதான்.   அவ்வப்போது அவருடைய அக்கா இவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதுண்டு.  அப்படி தமக்கை அழைத்துச் செல்லும்போதெல்லாம் இல்லத்தில் உள்ளவர்கள் ‘எங்கு போகிறாய்?’ என்று கேட்டால் ‘எங்கள் வீட்டிற்குப் போகிறேன்’ என்று சொல்வாராம்.  அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி தங்கள் சொந்த வீட்டைத்தான் வீடு என்பார்கள்.  இவர் தமக்கையின் வீட்டை தன் சொந்த வீடு என்கிறார்.  அந்த அளவிற்குத் தமக்கையின் மீது இவருக்குப் பிடிப்பு இருக்கிறது.

    அமெரிக்காவில் சொந்தப் பெற்றோர்களையே பலரால் கவனித்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.  ஏனெனில் எல்லோரும் எப்போது வேலை செய்வதை நிறுத்தினாலும் 67 வயது முடிந்த பிறகுதான் மத்திய அரசு கொடுக்கும் பென்ஷன் கிடைக்கும்.  அதனால் கடைசிவரை – அதாவது 67 வயது முடியும் வரையாவது – வேலைபார்க்க வேண்டும்.  அதனால் பெற்றோர்களை வீட்டில் வைத்துக் கவனித்துக்கொள்வது மிகவும் கஷ்டம்.  பெரிய பணக்காரர்களைத் தவிர பலரால் கடைசிவரை உழைத்தால்தான் ரிடையர் ஆன பிறகு ஓரளவாவது வசதியாக வாழ்க்கையை ஓட்ட முடியும்.  இப்படிப்பட்ட அமெரிக்காவில் தன் தம்பியைக் கவனித்துக்கொள்ளும், அவனைப் பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் அந்த அக்காவின் கதை மனிதர்களிடம் இன்னும் மனிதாபிமானம் செத்துவிடவில்லை என்ற நம்பிக்கையைத் தருகிறது.

    Share
  • அமெரிக்காவில் காச நோய் பற்றிய பதைப்பு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஏப்ரல் 4-ஆம் தேதி இந்தியாவிலிருந்து அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகருக்கு விமானத்தில் ஒரு பெண் வந்து இறங்குகிறார்.  எல்லோரையும்போல் அவருக்கும் குடிபுகல் பகுதியில் வழக்கமான சோதனைகள் முடிந்து விமான நிலையத்தை விட்டுக் கிளம்புகிறார்.  காரில் இல்லினாய் மாநிலத்திலும் அதற்கு அருகில் இருக்கும் மாநிலங்களான டென்னஸி, மிசௌரி மாநிலங்களிலும் இருக்கும் தன் உறவினர்களின் இல்லங்களுக்குச் செல்கிறார்.  மே மாதம் பதினெட்டாம் தேதிவரை இம்மாதிரி இடங்களுக்குச் சென்றவருக்கு ஏதோ உபாதை ஏற்பட்டு இல்லினாய் மாநில மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகிறார்.  அப்போது அங்கு அவருக்கு நடந்த பல மருத்துவ சோதனைகளில் மருந்துகளுக்கு எளிதில் கட்டுப்படாத XDR-TB என்னும் ஒரு வகைக் காச நோய் இருப்பது தெரிய வருகிறது.  காச நோய் மட்டுமல்ல, இம்மாதிரி கிருமிகளால் பரவும் எந்த நோய் என்றாலும் அமெரிக்கா பதைபதைத்துவிடும்.  போன வருடம் எபோலா என்ற கொடிய உயிர்கொல்லி நோய் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அங்கிருந்து வரும் பயணிகள் மூலம் பரவுவதைத் தடுக்க அமெரிக்கா வெகுபாடு பட்டது.  இப்போது இந்தப் பெண் கொடிய வகை டி.பி.யைத் தனக்குள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் அது அமெரிக்காவில் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.  அந்தப் பெண்ணுக்குப் பரிசோதனைகள் செய்த மருத்துவர்கள் உடனேயே அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள்.  அந்த மருத்துவமனையிலேயே மற்ற நோயாளிகளிடமிருந்து தனிமைப்படுத்தபட்ட அந்தப் பெண் ஒரு சில தினங்களிலேயே மேரிலாந்து மாநிலத்திலுள்ள தேசிய உடல்நல நிறுவனத்திற்கு (National Institute of Health) மாற்றப்பட்டு அங்கும் தனிமைப்படுத்தப்பட்டார்.

    இவரை மற்ற எல்லாக் குடிமக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தி அவரிடமிருந்து வேறு யாருக்கும் வியாதி பரவுவதைத் தடுத்த பிறகு இதுவரை இவருக்கு அருகில் இருந்தவர்கள் யாருக்காவது இவரிடமிருந்து வியாதி பரவியிருக்கிறதா என்று கண்டறியப் பல முயற்சிகளைக் கையாண்டனர். முதலில் அவர் அமெரிக்காவிற்கு பயணம் செய்த விமானக் கம்பெனிக்குத் தெரிவித்து இந்தப் பெண்ணோடு பயணம் செய்த எல்லாப் பயணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தும்படி யோசனை கூறப்பட்டது.  பின் அவர் சந்தித்த உறவினர்கள், மனிதர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுரை கூறப்பட்டது.

    இந்தப் பெண்ணோடு விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு இந்த வியாதி வருவதற்குரிய வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றாலும் வருவதற்குரிய வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாதாம்.  தொத்து வியாதியால் பீடிக்கப்பட்டவர்களோடு நீண்ட தூரம் விமானத்தில் பிரயாணம் செய்தவர்களுக்கு வியாதி பரவியிருக்கிறதாம்.  அதனால்தான் அத்தனை பயணிகளையும் மருத்துவ சோதனைகளுக்கு உள்ளாக்குகிறார்களாம்.  இந்த வகைக் காச நோய், ஃப்ளூ, தட்டம்மை போன்ற வியாதிகளைப் போல் எளிதாக மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு இல்லையென்றாலும் அவரோடு நெருங்கிப் பழகிய உறவினர் போன்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு இருக்கிறதாம்.

    பொதுவாக அமெரிக்காவிலேயே தங்கிவிடுவதற்குரிய விசா வாங்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன் அவர்களுக்கு இம்மாதிரிக் கொடிய நோய்கள் இருக்கின்றனவா என்று அவரவர்கள் நாட்டிலேயே பரிசோதித்த பிறகுதான் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கிறார்கள்.  ஆனால் தினம் தினம் அமெரிக்காவிற்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு இம்மாதிரியான காச நோய் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்கு இயலாது.  ஏனெனில் இந்தப் பரிசோதனை நீண்ட நேரம் எடுக்கக் கூடியது.  இதை விமான நிலையத்தில் வைத்துப் பார்க்க முடியாது.

    காச நோயுள்ள பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தவர்களை சில மணி நேரங்களிலேயே தொடர்பு கொண்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தினார்கள்.  அதில் எத்தனை பேருக்கு வியாதி பரவியிருக்கலாம் என்ற விபரத்தை வெளியிடவில்லை.  இப்படி சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களை இன்னும் பத்து வாரங்களில் மறுபடியும் சோதிப்பார்களாம்.  ஏனெனில் முதலில் வியாதி இருப்பதற்குரிய  அறிகுறி இல்லையென்றாலும் பின்னால் வருவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

    கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்க தேசிய உடல்நல நிறுவனம் இம்மாதிரியான கடும் நோயாளிகள் இருபது பேரைக் குணப்படுத்தியிருக்கிறதாம்.  வியாதியின் அறிகுறிகள் வெளியே தெரியாமல் உள்ளேயே இருந்தாலும் அவர்களுக்கும் சிகிச்சை கொடுக்கிறார்களாம்.  வியாதி பலருக்குத் தொற்றுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை.

    இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பெண் மருத்துவமனையில் எல்லோரிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.  அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்சுகள் அனைவரும் கையுறைகள், முகமூடிகள், உடல் முழுவதையும் மூடிக்கொள்ளும் உடைகள், கண்களைப் பாதுகாக்கும் சாதனங்கள் ஆகியவற்றை அணிந்துகொள்ள வேண்டும்.  இத்தனை பாதுகாப்பிற்குப் பிறகும் இவர்கள் வருடத்திற்கு ஒரு முறை பரிசோதிக்கப்படுகிறார்கள்.

    இந்தப் பெண்ணை அவர் முழுவதுமாகக் குணமடைந்த பிறகே மருத்துவமனையிலிருந்து அனுப்புவார்கள்.  டி.பி.யை குணப்படுத்த நான்கு மருந்துகள் வேண்டுமாம்.  இந்த வகை காச நோயைக் குணப்படுத்த இன்னும் சில மருந்துகள் வேண்டும் என்பதோடு அதிக நாட்களும் எடுக்குமாம்.  இந்தப் பெண் பல மாதங்கள் வரை மருத்துவமனையில் இருக்க நேரிடலாமாம்.  இதற்கு எக்கச்சக்க செலவு ஆகலாம் என்கிறார்கள்.  ஆனால் இந்தப் பெண்ணிடம் எதையும் வசூலிக்க மாட்டார்களாம்.  இம்மாதிரியான நோயாளிகள் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அந்த நாட்டின் அரசிடமிருந்தும் எந்தப் பணமும் வசூலிப்பதில்லையாம்.  பொதுவாக மருத்துவச் செலவுகளுக்கு நிறையச் செலவாகும் அமெரிக்காவில் இந்த தேசிய உடல்நல நிறுவனத்தில் எல்லோருக்கும் மருத்துவ வசதி இலவசம்.  நாட்டில் வைரசுகள் பரவுவதைத் தடுக்க அமெரிக்கா எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் இவை.

    எப்போதுமே அமெரிக்கர்கள் வைரசுகள், பாக்டீரியாக்கள் தங்களிடம் வந்து சேர்ந்துவிடக் கூடாதென்று மிகவும் ஜாகிரதையாக இருப்பார்கள்.  சூப்பர்மார்க்கெட்டுகளில் கிருமி கொல்லி மருந்து தெளித்த காகித டவல்களை எல்லா இடங்களிலும் வைத்திருப்பார்கள்.  அங்கு வாங்கும் சாமான்களை ஒரு சிறிய வண்டியில் வைத்து எடுத்துச் சென்று கடைசியில் பணம் கட்டி எடுத்து வரலாம்.  அந்த வண்டிகளைத் தொடுவதற்கு முன் மேலே கூறிய டவல்களைக் கொண்டு அவற்றைச் சுத்தப்படுத்திவிட்டுத்தான் அந்த வண்டிகளைத் தொடுவார்கள்.  ஒரு முறை ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் ‘இந்தியாவில் நாங்கள் கையால் சாப்பிடுவோம்’ என்றபோது அந்தப் பெண்ணுக்கு அப்படியொரு ஆச்சரியம்.  ‘எதை எதையெல்லாமோ தொட்ட கையால் எப்படி உணவைத் தொட்டுச் சாப்பிடுவது?’ என்று அந்தப் பெண் கேட்டாள்.  ‘சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவிவிட்டால் போயிற்று’ என்று நான் சொன்னதை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை.  அலுவலகத்தில் யாருக்காவது தடுமன் பிடித்தால் ‘அது போகும்வரை தயவுசெய்து வேலைக்கு வராதீர்கள்’ என்பார்கள்.  தடுமன் பிடித்தவர்கள் மற்றவர்களுக்கு எளிதாக அதைக் கொடுத்துவிடுவார்கள் என்பதால் இப்படிக் கேட்டுக்கொள்வார்கள்.  அதிலும் கணினியில் வேலைபார்ப்பவர்கள் வீட்டிலிருந்துகொண்டும் வேலைபார்க்கலாம் என்பதால் இப்படி கேட்டுக்கொள்ள வசதியாக இருக்கிறது.

    அமெரிக்கர்கள் பிறந்ததிலிருந்தே இப்படி எல்லா விஷயத்திலும் கிருமிகள் பற்றி ஜாக்கிரதையாக இருப்பதால் அவர்களுக்கு நோய் தடுப்புச் சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது.  அதனால் இன்னும்  ஜாக்கிரதை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பிறகு தடுப்புச் சக்தி மேலும் குறைகிறது.  சிறு வயதில் குளத்துத் தண்ணீரைக் குடித்து வளர்ந்த எனக்கு நல்ல எதிர்ப்புச் சக்தி இருந்தது.  அமெரிக்கா வந்த பிறகு அது எவ்வளவோ குறைந்துவிட்டது.  தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக இயற்கையாகவே தங்களுக்கிருந்த எதிர்ப்புச் சக்தியை இழந்துவிட்டு இப்போது தங்களைக் கிருமிகளிடமிருந்து காத்துக்கொள்ள என்னென்னவோ செய்கிறார்கள்.  முதலிலேயே குழந்தைகளிடம் கொஞ்சம் வளர்ப்புச் சக்தியை வளர்த்திருக்கலாம்.

    Share
  • அமெரிக்காவில் பேன்

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    அமெரிக்காவில் இன்னும் பேன்களின் உபாதை இருக்கிறது என்று அறிந்து அதிசயப்பட்டேன்.  இந்தியாவில் பள்ளிப் பருவக் குழந்தைகளுக்குப் பேன் தொந்தரவு இருக்குமென்றும் அதன் பிறகு அவர்கள் கல்லூரியில் சேர்ந்த பிறகு இந்தத் தொந்தரவு தானே போய்விடும் என்றும் என் குழந்தைகளின் மூலம் அறிந்திருந்தேன்.

     images

    ஆனால் என்னைப் பொறுத்தவரை கல்லூரியிலும் பேன் தொந்தரவு என்னைப் பாடாயப் படுத்தியிருக்கிறது.  நான் கல்லூரியில் படிக்கும்போது விடுதியில் தங்கியிருந்தேன்.  மாணவிகளின் ஒழுக்கத்தில் மிகுந்த அக்கறை காட்டும் கல்லூரி என்று பெயர் வாங்கிய கல்லூரி.  மாணவிகளை விடுதிக்கு வெளியே ஆசிரியைகள் துணையில்லாமல் எங்கும் அனுப்ப மாட்டார்கள் என்பதால் இந்த மாணவிகளுக்குக் கல்யாணச் சந்தையில் கொஞ்சம் கூடுதல் மதிப்பு.  இதனால் பல பெற்றோர்கள் இந்தக் கல்லூரியில் தங்கள் பெண்களைச் சேர்க்க விரும்புவார்கள்!  மேலும் மாணவிகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்க அவர்களை நன்றாக உருத்தட்டப் பழக்கிவிடுவார்கள்.  இந்தக் காரணத்தாலும் பெற்றோர்கள் இந்தக் கல்லூரியை விரும்புவதுண்டு.  அமெரிக்கக் கிறிஸ்தவப் பெண் துறவிகளால் நடத்தப்பட்ட இந்தக் கல்லூரியில் விடுதிக்கான செலவு, உணவுக்கான செலவு என்று எக்கச்சக்கமாக வசூலிப்பார்கள்.  ஆனால் வசதிகள் மிகவும் குறைவு.  ஒரு அறையில் நான்கு பேர் தங்கியிருப்போம்.  அதில் ஒரு பெண்னுக்குத் தலையில் நிறைய பேன்கள் உண்டு.  அவள் தலையிலிருந்து என் தலைக்குப் பேன்கள் வேகமாக வந்துவிடும்.  சிலர் தலைமுடிக்குப் பேன்களை வசீகரிக்கும் சக்தி உண்டு என்பார்கள்.  என் தலைக்கு அது இருந்தது போலும்!  அதே அறையில் தங்கியிருந்த மற்ற இரண்டு மாணவிகளைவிட பேன் தொந்தரவால் நான்தான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.  அவளிடமிருந்து வெகு தூரம் தள்ளிப் படுப்பது (பத்தடிக்குப் பத்தடி அளவுள்ள அறையில் எவ்வளவுதான் தள்ளிப் போவது?) போன்ற எந்த உத்திகளும் கைகொடுக்கவில்லை.  விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போதெல்லாம் தலையைச் சுத்தம் செய்துகொண்டு போனாலும் விடுதிக்குச் சென்றதும் மறுபடி பேன் தொந்தரவு வந்துவிடும்.

    இந்தியாவில் என் மகள் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் சென்றதும் பேன்களை அவளை விட்டுப் போய்விட்டாலும் மேல்படிப்புப் படிக்க அமெரிக்கா வந்து இன்னும் மூன்று பெண்களோடு தனித்தனி அறைகளில் தங்கினாலும் பேன் தொந்தரவால் பாதிக்கப்பட்டாள்.  அவளுக்குத் தலையில் பேன்கள் வரக் காரணமாக இருந்த இன்னொரு பெண்ணின் கிராப் வைக்கப்பட்ட தலையில் இருக்கும் ஈறுகள் எல்லோர் கண்களுக்கும் நன்றாகவே தெரியும்.  எனினும் தலையைச் சுத்தம் செய்துகொள்ளும்படி அவளிடம் கூறுவதற்கு யாரும் முன்வரவில்லை.  பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதில் உடன்பாடு ஏற்படவே இல்லை.  அடுத்த வருடமே என் மகள் அறையை மாற்றிக்கொண்டாள்.

    பொதுவாகத் தலையைச் சுத்தமாக வைத்துக்கொள்பவர்களுக்குப் பேன்கள் தொந்தரவு இருக்காது என்று சொல்வார்கள்.  அமெரிக்காவில் இன்னும் பேன் தொந்தரவு இருக்கிறது என்பதால் அமெரிக்கக் குழந்தை மருத்துவர்கள் சங்கம் அவ்வப்போது பேன்களை ஒழிப்பதற்குரிய யோசனைகளை வெளியிட்டு வருகிறது.  பேன் தொந்தரவால் குழந்தைகளின் உடல்நலத்திற்குக் கெடுதல் எதுவும் வராவிட்டாலும், இந்தப் பேன்களால் வியாதி எதுவும் மற்றக் குழந்தைகளுக்குப் பரவும் அபாயம் எதுவும் இல்லையென்றாலும் தங்கள் குழந்தைகளின் தலையில் பேன்கள் இருந்தால் ஒருவித அருவருப்பு ஏற்படுவதால் பெற்றோர்கள் பேன்களைத் தங்கள் குழந்தைகளின் தலையிலிருந்து அகற்ற வேண்டும் என்று நிறைய முயற்சிகள் எடுக்கிறார்களாம்.  சிலர் தாங்களாக அதைச் செய்வதை விடுத்து பேன்களை அகற்றும் பயிற்சி பெற்றவர்களின் உதவியை நாடுகிறார்களாம்.  இவர்கள் ஒரு குழந்தைக்கு ஒரு முறை பேன்களைத் தலையிலிருந்து நீக்க இருநூறு டாலர் பணம் வசூலிக்கிறார்களாம்.  இப்போது நியூயார்க் போன்ற பெரிய நகரங்களில் இது ஒரு தொழிலாகவே வளர்ந்துவிட்டிருக்கிறதாம்.  குழந்தைகளின், பெரியவர்களின் தலைகளிலிருந்து பேன்களை அகற்றுவதற்கு அமெரிக்கா வருடத்திற்கு நூறு கோடி டாலர் – அதாவது ஆறாயிரத்து முன்னூறு கோடி ரூபாய் இன்றைய அந்நியச் செலாவணிக் கணக்குப்படி – செலவழிக்கிறதாம்!  பேன்களை அகற்றுவதற்குச் சந்தையில் கிடைக்கும் பல ஷாம்புகள் உட்பட பல வகையான மருந்துகளுக்காகும் செலவு, குழந்தை மருத்துவர்கள் பெற்றோருக்கு அறிவுரை வழங்கச் செலவழிக்கும் தொகை இதில் அடங்கும்.  அமெரிக்கா பணக்கார நாடல்லவா.  இப்படிப்பட்ட சிறிய விஷயங்களுக்கும் நிறையச் செலவழிக்கிறது.

    சிறு குழந்தைகளுக்கு வரும் பல வியாதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் மூலம் வியாதிகள் வருவதைத் தடுக்கலாம்.  ஆனால் பேன்களைத் தடுப்பது மிகவும் கஷ்டம்.  பேன்கள் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அவனோடு வாழ்ந்து வருகின்றன.  அவற்றை எளிதில் ஒழிக்க முடியாது.  அதனால் அமெரிக்கக் குழந்தைகள் மருத்துவர் சங்கம் பெற்றோர்களுக்கு யோசனைகள் வழங்கி வருகிறது.  குழந்தைகளின் தலைகள் அடிக்கடி ஒன்றுக்கொன்று உரசிக்கொள்வதால் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பேன்கள் பரவ சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றனவாம்.  அதனால் மற்றக் குழந்தைகளோடு தங்கள் சீப்புகள், தலைவாரப் பயன்படுத்தும் பிரஷ்கள் மற்றும் தொப்பிகளை மற்றக் குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று குழந்தைகளுக்குக் கூறுமாறும் அடிக்கடித் தங்கள் குழந்தைகளின் தலைகளைப் பேன்கள் இருக்கிறதா என்று பார்க்குமாறும் யோசனை கூறுகிறது.  அடிக்கடி இப்படிச் செய்வதால் பேன்களை ஆரம்பத்திலேயே ஒழிக்கும் வாய்ப்பும் மற்றவர்களுக்கு அவை பரவாமல் தடுக்கும் வாய்ப்பும் இருக்கிறதாகப் பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.

    பேன்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவர் தன் இரண்டு மகன்களுக்கும் அவர்கள் பள்ளியில் படிக்கும்போது பேன் தொந்தரவு இருந்ததாகவும் ஆனால் அவர்களுடைய பையன்கள் இந்தத் தொந்தரவிலிருந்து தப்பிவிட்டதாகவும் கூறுகிறார்.  சில தாய்மார்கள் குழந்தைகளின் தலையில் இருக்கும் பொடுகு, மணல் போன்றவற்றைப் பேன்கள் என்று எண்ணிவிடுகிறார்களாம்.  சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பேன்கள் வந்தால் மிகவும் அருவருப்பாக இருக்கும் என்பதால் பேன்கள் வருவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் விதமாக ட்ரீட்மெண்டை ஆரம்பித்துவிடுகிறார்களாம்.  அப்படி ஒருபோதும் செய்யக் கூடாது என்று குழந்தைகள் மருத்துவர் சங்கம்.வலியுறுத்துகிறதாம்.

    பல விஞ்ஞான முன்னேற்றங்களைக் கண்டுள்ள அமெரிக்காவால் கூட மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அவன் ரத்தத்தைச் சுரண்டி வாழும் (இருபத்து நாலு மணி நேரத்திற்கு மேல் மனிதனின் இரத்தத்தைக் குடிக்காமல் பேன்களால் உயிர் வாழ முடியாதாம்) பேன்களை இன்றுவரை ஒழிக்க முடியவில்லையே.

    படத்திற்கு நன்றி

    Share
  • உணவை வீணாக்காதீர்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சிறு வயதிலிருந்தே எங்கள் தந்தை எங்கள் அனைவரையும் உணவை வீணாக்காமல் இருப்பதற்கு நன்றாகப் பழக்கி இருக்கிறார்.  தட்டில் வைத்ததை முழுவதுமாகச் சாப்பிட்டுவிட வேண்டும் என்பார்.  இதற்கு நன்றாகப் பழகிப் போயிருந்த எனக்குக் கல்லூரி விடுதியில் சில மாணவிகள் தாறுமாறாக உணவை வீணாக்கும்போது மிகவும் எரிச்சலாகவும் வருத்தமாகவும் இருக்கும்.  அதிலும் இந்தியாவில் பலர் அவர்களுக்கு அடிப்படைத் தேவையான உணவு இல்லாமல் இருக்கும்போது இவர்கள் இப்படி உணவை வீணாக்குகிறார்களே என்று மிகவும் மனவேதனை ஏற்படும்.  அதிலும் பணம் படைத்த சில மாணவிகள் வேண்டுமென்றே உணவை வீணடிப்பதைப் பார்க்கும்போது இவர்களுக்குக் கடவுள் என்ன தண்டனை வழங்குவார் என்று எண்ணத் தோன்றும்.  என் சக மாணவி ஒருத்தி இவள் சிறு பிள்ளையாக இருக்கும்போது வீட்டில் இவள் தட்டில் எதையாவது மீதிவைத்தால், அவளுடைய தாய், ‘நீ இப்படிச் செய்தால் நீ இறந்து மேலுலகம் போன பிறகு நீ இப்போது தட்டில் வீணாக்குவதை எல்லாம் சேர்த்துவைத்து கடவுள் உன்னை அப்போது சாப்பிடச் சொல்லுவார்’ என்று கூறுவாராம்.  இதைக் கேட்டு இன்னும் சில பெற்றோர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று சந்தோஷமாக இருக்கும்.  தட்டில் உள்ள எல்லாவற்றையும் வழித்துச் சாப்பிட்டால் வசதியில்லாதவர்கள்தான் இப்படிச் செய்வார்கள் என்று இந்தியாவில் ஒரு தவறான எண்ணம் பல பேரிடம் உண்டு.  யார் என்ன நினைத்தாலும் சரி வீட்டிலும் வெளியிலும் நான் உணவை வீணாக்குவதே இல்லை.  இந்தப் பழக்கம் அப்பா நான் சிறு பிள்ளையாக இருந்தபோதே கற்றுக் கொடுத்ததால் எளிதில் என்னை விட்டுப் போகாது.

    எதையும் வீணாக்கும் அமெரிக்காவில் அவர்கள் உணவை வீணாக்குவதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  அமெரிக்காவில் உணவை வழித்துச் சாப்பிட்டால் வசதியற்றவர்கள் என்று யாரும் நினைப்பதில்லை.  இங்கு உணவிற்கா பஞ்சம்?  உணவு வகைகள் மிகவும் மலிவாகக் கிடைக்கின்றன.  யாரும் எளிதாக வயிறாரச் சாப்பிடலாம்.  Delicacies என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த (இவற்றையும் நான் சிறப்பான / சத்தான உணவுகள் என்று அழைக்க மாட்டேன்) உணவுகள் வேண்டுமானால் எல்லோருக்கும் கிடைக்காமல் இருக்கலாம்.   அமெரிக்காவில் வேறு காரணங்களுக்காக உணவை வீணடிப்பார்கள்.  என்னோடு வேலைபார்த்த ஒருவர் மதிய உணவை வெளியில் வாங்கிக்கொண்டு வருவார்.  பாதிக்கு மேல் குப்பையில் கொட்டுவார்.  ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால் ‘நிறையக் கொடுக்கிறார்கள்.  என்னால் அத்தனையையும் சாப்பிட முடியவில்லை’ என்பார்.  ‘அப்படியென்றால் வீட்டில் நீங்கள் தயாரித்ததைக் கொஞ்சமாகக் கொண்டுவரலாமே’ என்றால் அப்படியும் தன்னால் செய்ய முடியாது என்பார்.  ‘மீதியுள்ளதை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமே’ என்றால் அதையும் செய்ய முடியாது என்பதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுவார்.  ‘இந்தியாவில் எத்தனை பேர் உணவில்லாமல் வாடுகிறார்கள்’ என்றால் ‘நான் இங்கு உணவை வீணாக்காமல் இருந்தால் அவர்களுக்கு உணவு கிடைத்துவிடுமா என்ன?’ என்று குதர்க்கம் பேசுவார்.  அமெரிக்காவில் விளைவிப்பதில் எத்தனை சதவிகிதம் வீணாகிறது, உணவுப் பொருள்கள் விற்கும் கடைகளில் எத்தனை சதவிகிதம் வீணாகிறது, வீடுகளில் எத்தனை சதவிகிதம் வீணாகிறது என்று பல புள்ளிவிபரங்கள் கொடுப்பார்கள்.  ஆனால் உணவை வீணாக்கக் கூடாது என்ற ஞானோதயம் அமெரிக்காவில் எத்தனை பேருக்கு வந்திருக்கிறது என்று தெரியவில்லை.

     ana

    சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் செய்தித்தாளில் வந்த செய்தி என்னை மிகவும் வாட்டியது.  பால் உற்பத்தியாளர்கள் தங்களுடைய பாலுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை என்பதால் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, பாலைப் பெரிய சாலைகளில் கொட்டினார்களாம்.  இவர்களால் எப்படி இப்படிச் செய்ய முடிந்தது?  இப்போது மறுபடி ஈரோட்டிற்கு அருகில் ஐம்பது லிட்டர் பாலை சாலையில் கொட்டியிருக்கிறார்கள்.  அப்படிக் கொட்டிய பாலின் மேல் செருப்புக் கால்களோடு நின்றுகொண்டிருக்கிறார்கள்.  பாலில் மனிதனின் உடல்நலனுக்குத் தேவையான பல சத்துக்கள் இருக்கின்றன.  அதனால்தான் பாலை அமிர்தம் என்கிறோம்; அதை நமக்கு வழங்கும் மாடுகளை வணங்குகிறோம்.  நாம் மாடுகளுக்குக் கொடுக்கும் தீவனத்தை அவை பாலாக மாற்றி நமக்குக் கொடுக்கின்றன.  அதை இப்படி வீணாக்கலாமா?  பாலுக்குரிய விலையைக் கேட்பதற்கு இதைவிட வேறு வழியே அவர்களுக்குத் தெரியவில்லையா?  எத்தனை ஏழைகளுக்கு அதை இலவசமாகக் கொடுத்திருக்கலாம்.  அப்படிச் செய்திருந்தால் தங்கள் எதிர்ப்பைக் காட்டியது மாதிரி ஆகாதா?

    இன்னொரு இடத்தில் தக்காளிப் பழங்களுக்குத் தகுந்த விலை கிடைக்கவில்லையென்று அவற்றை வீதியில் கொட்டியிருக்கிறார்கள்.  இப்படி அவர்கள் கொட்டிய தக்காளியை ஏழைச் சிறுவர், சிறுமிகள் தரையிலிருந்து பொறுக்கியிருக்கிறார்கள்.  இது என்ன கொடுமை.  இப்படிச் செய்தால்தான் அவர்களால் தங்கள் கோபத்தைக் காட்டியிருக்க முடியுமா?  என் கவனத்திற்கு வந்தது இந்தியாவில் இந்த இரண்டு உதாரணங்கள் மட்டும்தான்.  இன்னும் இப்படி எத்தனை நடந்தனவோ?  நடக்கின்றனவோ?

    பாரீஸின் புறநகரைச் சேர்ந்த ஒரு முனிசிபல் கவுன்சிலர் இப்போது அங்கு உணவை வீணாக்குவதைத் தடைசெய்யும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து, நான்கே மாதங்களில் இரண்டு லட்சம் கையெழுத்துகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களை உணவை வீணாக்குவதைத் தடைசெய்யும் சட்டத்தை அங்கு இயற்றும்படி செய்திருக்கிறார்.  குறிப்பிட்ட தேதிக்குள் உபயோகித்தால் நல்லது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுகளை தேதி முடிந்தவுடன் குப்பையில் எறிந்து விடுவார்கள்.  ஏழைகள் அவற்றை குப்பையிலிருந்து எடுத்து உபயோகித்துவிடக் கூடாது என்பதற்காக அவற்றில் விஷம் கலந்து குப்பையில் கொட்டுவார்களாம்.  இதையெல்லாம் தடைசெய்ய வேண்டும் என்று கூறும் இவர் தான் கல்லூரியில் படிக்கும்போது குறைந்த பணத்தில் தேவையான உணவு வாங்க முடியாமல் பட்டினியில் இருந்ததையும் அந்தச் சமயங்களில் தன்னால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருந்ததையும் சுட்டிக்காட்டி யாரும் அப்படிப் பட்டினியால் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்ததாகக் கூறியிருக்கிறார்.

    இவருடைய இந்த முயற்சியை சிலர் விபரம் தெரியாத ஒருவர் செய்யும் முயற்சி என்றும் இந்த இலட்சிய முயற்சி என்றும் வெற்றி பெறப்போவதில்லை என்றும் கூறி இவரை எள்ளிநகையாடுகிறார்களாம்.  ‘பட்டினி கிடப்பது என்றால் என்ன என்று எனக்கு நன்றாகத் தெரியும்.  அப்படி யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காகவே நான் கவுன்சிலராக ஆனேன்’ என்று கூறும் இவர் செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் நடக்கப் போகும் உலக வறுமை ஒழிப்பு திட்டத்திலும் நவம்பரில் துருக்கியில் நடக்கப் போகும் பொருளாதார மாநாட்டிலும் டிசம்பரில் பாரீஸில் நடக்கப் போகும் சுற்றுச்சூழல் மாநாட்டிலும் தன் இயக்கத்தின் வேண்டுகோளை வைக்கப் போகிறாராம்.

    பிரான்சில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உணவை வீணாக்குவதைத் தடைசெய்யும் சட்டங்களைக் கொண்டுவருவது இவருடைய திட்டத்தின் முக்கிய இலக்கு.  இந்தியாவில் அமெரிக்காவில் வீணாக்கும் அளவிற்கு உணவை நாம் வீணாக்குவது இல்லை.  விருந்துகளிலோ ஓட்டல்களிலோ இலையில் வீணாக்கப்படுவதை சாப்பிடுவதற்கு முன்பு மனிதர்களே இருந்தார்கள்.  இப்போது அந்த அவலம் இந்தியாவில் இல்லை.  இன்றும் தெரு நாய்கள் அவற்றைச் சாப்பிட்டுவிடுகின்றன.  ஆனால் இந்தியாவில் வீணாகும் கொஞ்ச நஞ்ச உணவும் வீணாகாமல் பார்த்துக்கொள்வது நம் கடமையல்லவா?

    பாரீஸில் உணவு வீணாகுவதை தடுக்க முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் இவருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களைக் கூறுவோம்.  அவரைப் பின்பற்றி இந்தியாவிலும் நம்மால் முடிந்ததைச் செய்வோம்.

    Share
  • அம்மா அரியணை ஏறிவிட்டார்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புகளைப் பற்றிய வாதங்களும் பிரதிவாதங்களும் முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணி அம்மா அரியணை ஏறிவிட்டார்.  இனி தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் பிறந்துவிடும்!  இப்படி அம்மா திரும்ப வந்து, தான் அவர் விரும்பியபடி நடக்கவில்லையென்று தன் மீது குற்றம் சாட்டப்பட்டால் தன் கதி அதோகதிதான் என்று நன்றாகவே உணர்ந்திருந்த பன்னீர்செல்வம் (இனிமேல் இவர் தன்னை முன்னாள் தமிழக முதல்வர் என்று சொல்லிக்கொள்ளக் கூடப் பயப்படுவார் என்று நினைக்கிறேன்) இப்போது பெருத்த நிம்மதி அடைவார்.  இனி அம்மாவின் ஆணையைத் தலைமேல் தாங்கி அவர் சொல்வது போல் நடக்கலாம்.  தானாக எதையும் செய்து அதனால் பின்னால் அம்மாவின் கோபத்தில் மாட்டிக்கொள்வோமே என்று பயப்படத் தேவையில்லை.  அம்மா எப்படியும் திரும்பவந்துவிடுவார் என்று எதிர்பார்த்துச் செயல்பட்ட மற்ற மந்திரிகளும் அ.தி.மு.க. உறுப்பினர்களும் அவ்வாறே நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

    அரசு அதிகாரிகள் தங்களுக்குரிய லஞ்சத்தை நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து சதவிகிதமாகக் கூட்டிக் கேட்ட ‘அநியாய’த்தைப் பற்றி அரசு கட்டடங்களைக் கட்ட டெண்டெர் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் புகார் கொடுத்தார்கள்.  அப்போது அவர்கள் அம்மா இவ்வளவு சீக்கிரம் அரியணை ஏறுவார் என்று எதிர்பார்க்கவில்லை.  ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.  இனி அவர்கள் அரசு அதிகாரிகள் எத்தனை சதவிகிதம் லஞ்சம் கேட்டாலும் தயங்காமல் கொடுப்பார்கள்.  அது தவிர்க்க முடியாதது என்பதையும் உணர்ந்திருப்பார்கள்.  அம்மாவின் பொன்னாட்சி அல்லவா மீண்டும் மலர்ந்திருக்கிறது!

    அம்மாவின் பொன்னான ஆட்சியில் அவரைக் குறைகூறுபவர்களுக்குக் காவல்துறை என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்கலாம்.  அவர்களை யாரும் தட்டிக் கேட்கப் போவதில்லை.  வேண்டாத யார் மேலும் எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடலாம்.  நடப்பது அம்மாவின் ஆட்சி.  அம்மாவைத் தட்டிக் கேட்க யாருக்கும் தைரியம் வராது.

    அம்மாவும் அரசு ஊழியர்களும் யாரிடம் வேண்டுமானாலும் தைரியமாக லஞ்சம் கேட்கலாம்.  மதிப்புமிக்க நீதிபதியே லஞ்சம் வாங்குவது தவறில்லை என்று தீர்ப்பு வழங்கிவிட்டார்.  இனி அம்மாவின் அணுக்கத் தொண்டர்கள் யாரும் சட்டத்திற்குப் பயப்படத் தேவையில்லை.  அம்மாவை யாரும் எதிர்த்தால் அதைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக நிலைநாட்ட காவல்துறை அதிகாரிகள் எந்த உத்தியையும் கையாளலாம்.

    மாநிலங்களில் அராஜகம் நிலவினால் அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு படையை அனுப்பும்.  ஆனால் அம்மா மாநில முதல்வரின் அதிகாரத்தைக் காப்பார்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அங்கு சட்டம் ஒழுங்கு குலைந்தாலும் அம்மாவின் ஆட்சியில் எந்தத் தவறும் நடக்காது என்று மக்களுக்கு உறுதி அளிப்பதற்கு இருக்கவே இருக்கிறது மத்திய அரசு.  ஊழலை ஒழிப்பதாகச் சூளுரைத்துப் பதவிக்கு வந்து இப்போது ஊழல் மிகுந்த அரசை எப்படியும் ஆதரித்தே தீருவது என்று முடிவுகட்டிவிட்ட பி.ஜே.பி. அரசு மத்தியிலும் ஊழலில் ஊறிப்போன அ.தி.மு.க. அரசு தமிழ்நாட்டிலும் கோலோச்சும்வரை தமிழ்நாட்டில் ஊழல் புரிவோர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    அம்மா மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு விட்டதே என்று பலர் அப்போது தற்கொலை செய்துகொண்டார்கள்.  இனி தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணிக்கை குறைந்துவிடும்!   குற்றங்களிலிருந்து அம்மா புடம் போட்ட தங்கமாக வெளிவந்துவிட்டார்.  இனி தமிழ்நாட்டில் பொன்னான, நிலையான ஆட்சி அம்மாவின் தலைமையில் நடக்கும்.  தேனும் பாலும் ஓடும், அமைச்சர்களின், அதிகாரிகளின் வீடுகளில்.  லஞ்சம் கொடுத்துக் காரியங்களைச் சாதித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் லஞ்சம் பெற்றுக்கொள்ளக் காத்திருப்பவர்களுக்கும் இனி வரப் போகும் நாட்கள் பொன்னானவை.  அவர்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.  அம்மா பக்கம் சாய்வதா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது தெளிவான பதில் கிடைத்துவிட்டது.  அம்மா திரும்ப வருவாரா? அவரை விட்டு விலகலாமா என்று தயங்கியவர்களிடம் அம்மாவுக்கு ஆதரவாக இருந்து அவரோடு சேர்ந்து உங்கள் பைகளையும் நிரப்பிக்கொள்ளுங்கள் என்று கூறாமல் கூறிவிட்டார்கள் உயர்நீதி மன்ற நீதிபதியும் மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசும்.

    தமிழ்நாட்டில் ஊழல் புரிந்து பணம் பண்ணப்போகும் சமூகத்தின் அதிகாரவர்க்கத்தினருக்கு மட்டுமல்ல ஏழை எளியவர்களுக்கும் இனி பொன்னான காலம்தான்.  அம்மா உணவகங்கள் இன்னும் சில பொருள்களை குறைந்த விலைக்கு வழங்கலாம், ஏன் இலவசமாகக் கூடக் கொடுக்கலாம்.  அடுத்து என்ன இலவசமாகக் கொடுக்கலாம் என்பதிலேயே அம்மாவின் இருபத்தி நான்கு மணி நேரச் சிந்தனையும் இருக்கும்.  அம்மா இவர்களின் இதய தெய்வமல்லவா?  இவர்களின் இதயங்களின் தேவைகளை அறிந்து செயல்படுவார்.

    அம்மா போட்டியிடப் போகும் தொகுதியில் மற்ற கட்சிகளும் போட்டியிட வேண்டும் என்று அத்தொகுதி மக்கள் கேட்கிறார்களாம்.  அம்மாவின் கட்சி மட்டும் போட்டியிட்டால் அப்புறம் அவர்களுக்கு அம்மா கட்சி உட்பட எல்லாக் கட்சிகளிடமிருந்தும் எப்படிப் பணம் கிடைக்கும்?  தங்கள் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடந்தால் ஆயிரக் கணக்கில் பணம் கிடைக்குமே.  அவர்களும் அம்மாவைத் தேர்ந்தெடுக்கத் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.  ஜனநாயகமாவது மண்ணாங்கட்டியாவது!  யாருக்கு வேண்டும் ஜனநாயகம்?

    அம்மா ஆட்சிக்கு வந்துவிட்டார்.  இனித் தமிழ்நாட்டிற்குப் பொற்காலம்தான்!

    வளர்க ஊழல்!  வாழ்க தமிழகம்!!

    Share
  • எகிப்திய நீதிமன்றங்களும் இந்திய நீதிமன்றங்களும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    எகிப்தில் 1952 வரை மன்னராட்சி இருந்தது.  மன்னராட்சி என்றால் ஒரு மன்னர் இருந்தாலும் அவர் பிரிட்டனின் மேற்பார்வையில்தான் நாட்டை ஆண்டுவந்தார்.  பிரிட்டனை எதிர்த்துப் போராடி 1952-இல் எகிப்து சுதந்திரம் அடைந்தது.  இராணுவ ஜெனரல்களான முகம்மது நயிப், நாசர், சதாத், முபாரக் என்று பலர் ஜனாதிபதியாக எகிப்தை ஆண்டனர்.  1978-இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற முபாரக் 29 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதி பதவியில் அமர்ந்து பல விதமாகச் சொத்து சேர்த்துப் பின் தன் மூத்த மகனையே தனக்குப் பிறகு பதவியில் அமர்த்த முடிவுசெய்தார்.  அதுவரை அவரது ஆட்சியைச் சகித்துக்கொண்டிருந்த எகிப்து மக்கள் அவரை எதிர்த்துப் புரட்சி செய்தனர்.  2011 ஜனவரியில் ஆரம்பித்த இந்தப் புரட்சி மூலம் முபாரக் பதவியிலிருந்து இறக்கப்பட்டு ஒரு வழியாக எகிப்து மக்களுக்கு அவருடைய பிடியிலிருந்து விடுதலை கிடைத்தது.  இந்த மக்கள் புரட்சிக்கு இராணுவம் மிகவும் துணைபுரிந்தது.  மக்களை முபாரக்கின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதை விட முபாரக் தங்களுக்கு இசைவாக நடந்துகொள்ளவில்லை என்பதுதான் ராணுவம் மக்களின் இந்தப் புரட்சிக்கு உதவியதற்கு முக்கிய காரணம்.  ஆறு மாதங்கள் இராணுவம் முபாரக்கின் உதவி ஜனாதிபதியை பதவியில் அமர்த்திக்கொண்டு ஆட்சி நடத்தியது.  உலகத்தின் கண்களுக்கு எகிப்தில் ஜனநாயக அரசு நடக்கிறது என்று காட்டுவதற்காகத் தேர்தலை நடத்தினர் ராணுவ அதிகாரிகள்.  முஸ்லீம் பிரதர்ஹுடைச் சேர்ந்த மோர்ஸிக்கு நல்ல மெஜாரிட்டி கிடைத்து அவர் பதவிக்கு வருவார் என்று ராணுவம் நினைக்கவில்லை.  மேலும் மோர்ஸி ராணுவத்தின் அரசியல் தலையீட்டை ஒத்துக்கொள்ளவில்லை.  அதனால் அவரை ராணுவம் பதவியிலிருந்து இறக்கியதோடு அவர் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவருக்கு இப்போது மரண தண்டனையும் கொடுத்திருக்கிறது.

    எகிப்து நீதிமன்றங்கள் யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தகுந்த மாதிரியான தீர்ப்புகள் வழங்கி வருகின்றன.  முபாரக் பதவியில் இருந்தபோது அவர் சொல்வதைத்தான் கேட்டன.  அப்போது முபாரக்கால் மோர்ஸி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  முபாரக்கைப் பதவியிலிருந்து இறக்கி மோர்ஸி ஜனாதிபதி பதவி ஏற்றவுடன் மோர்ஸி அரசு அவரைக் குற்றவாளி என்று தீர்மானித்து நீதிமன்றத்தில் கூண்டுக்குள் வைத்து அவர் மீதுள்ள வழக்குகளை விசாரித்து அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.  அவர் பதவியில் இருந்தபோது அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அதே நீதிமன்றம் அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டதும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது.

    இப்போது மோர்ஸியை ராணுவம் பதவியிலிருந்து இறக்கி அவர் மீது பல குற்றங்களைச் சுமத்தி அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது.  எகிப்தில் யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்கள் சொல்படிதான் நீதிமன்றம் நடப்பதாகத் தெரிகிறது.  மோர்ஸி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை எகிப்து உண்மையான ஜனநாயக நாடு அல்ல.  முபாரக் தேர்தல் நடத்தினாலும் அவர்தான் 90 சதவிகிதத்திற்கு மேல் ஓட்டுக்கள் வாங்கி ஜெயித்துக்கொண்டிருந்தார்.  மோர்ஸிதான் முதல் முதலாக உருப்படியான தேர்தல் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவரை ராணுவம் தன் இழுப்புக்கு வளைக்க முயன்றது.  அதற்கு அவர் ஒத்துழைக்காததால் அவரைப் பதவியிலிருந்து இறக்கியதும் அல்லாமல் குற்றவாளியாக்கி தூக்குத் தனடனையும் கொடுத்திருக்கிறது.  எகிப்தாவது ராணுவத்தின் கீழ் செயல்படுகிறது.  இந்தியாவிலும் அல்லவா பதவியில் இருப்பவர்கள் சொல்வதன்படி நீதிமன்றம் நடக்கிறது.

    ஜெயலலிதா வழக்கில் சிறப்பு நீதிமன்றம் எல்லா ஆதாரங்களையும் சிறப்பாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியது.  உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது அரசியல் தலைவர்கள் தலையீட்டால் அந்தத் தீர்ப்பிற்கு நேர் எதிர்மாறான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது.  அரசு வழக்கறிஞருக்கு அவர் கருத்தை வெளியிட ஒரே நாள் ஒரு நாள் அவகாசம்தான் கொடுக்கப்பட்டது.  அதையும் எழுத்து மூலமாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் வழங்கப்பட்டது.  அப்படியும் அவருடைய எந்த வாதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.  இதில் வருமானம் பற்றிய கூட்டலில் தவறு வேறு.  இந்த அடிப்படையில் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உயர் நீதிமன்றம்.  அரசியல் தலையீடு இல்லாமல் யாரும் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்க முடியாது.  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும் மோதிதான் பதவியில் இருந்தார்.  ஆனால் இரண்டாவது தீர்ப்பு வந்தபோது தலைமை மாறவில்லை என்றாலும் நிலைமை மாறிவிட்டது.  இப்போது நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்ற, எதிர்க் கட்சிகளின் ஆதரவில்லாத சட்டங்களை, நிறைவேற்றுவதற்கு மோதிக்கு ஜெயலலிதாவின் உதவி தேவைப்படுகிறது.  மோதி பதவிக்கு வந்து சில மாதங்களிலேயே ‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘மோதி ஒரு சிறந்த அரசியல்வாதி;  நீதித்துறையில் தலையிடுவதே இல்லை’ என்று கூறினார்.  ஊழலை ஒழிப்பதாகக் கூறிப் பதவிக்கு வருபவர்கள் பின்னால் அரசியல் ஆதாயத்திற்காக  மகாஊழல் புரிந்தவர்களுக்குத் துணை போகிறார்கள்.  வருமானம் பற்றிய கூட்டலில் தவறு இருப்பதை வெகு எளிதாகக் காட்டி மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்டலாம்.  ஏனோ கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதில் தயக்கம் காட்டுகிறது.  இதிலும் அரசியல் .விளையாடுகிறது போலும்.

    எகிப்து போன்ற சர்வாதிகார அல்லது ராணுவ ஆட்சி நடக்கும் நாடுகளில் நீதிமன்றங்கள் தன்னிச்சையாகச் செயல்படாமல் அரசியல்வாதிகளின் ஆணையை ஏற்று நடக்கலாம்.  ஆனால் ஜனநாயக நாடாகத் தன்னைப் பறைசாற்றிக்கொள்ளும் இந்தியாவிலுமா நீதித்துறை இப்படி நடக்க வேண்டும்?

    இறைவனே!  இந்தியாவிற்கு விமோசனமே இல்லையா?  இருக்கிறது என்றால் எப்போது?

    Share
  • இந்திய ஜனநாயகம் பயணிக்க வேண்டிய தூரம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் இல்லினாய் மாநில ஆளுநராக இருந்தவர் ப்ளகோஜேவிச்.  இவர் தன்னோடு தொடர்புடைய பொது நிறுவனங்களுக்கும் தன் தேர்தல் நிதிக்கும் பணம் சம்பாதிக்கச் செய்த ஊழல்களுக்காகவும் தன் சொந்த நலன்களுக்காகச் செய்த ஊழல்களுக்காகவும் மத்திய அரசைச் சேர்ந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் இவரைக் கைதுசெய்து அவர் மீது சாட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆதாரங்கள் மூலம் நிரூபித்து அவருக்கு பதினான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்தார்.  ப்ளகோஜேவிச் எப்போதும் 4000 டாலர்கள் பெறுமான, பிரத்தியேகமாக அவருக்காகத் தைக்கப்பட்ட கோட்டு, சூட்டுகளையே அணிவார்.  2016-இல் ஜனநாயக் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய வாய்ப்புக்களைப் பெற்றிருந்தார்.  இப்படிப் பிரபலமாக இருந்தவர் சிறையில் கழிப்பறைகளை மணிக்கு 12 காசுகள் பெற்றுக்கொண்டு சுத்தம் செய்து வருகிறார்.  இவர் செய்த ஊழல்கள் என்ன?

    2002-இல் ப்ளகோஜேவிச் இல்லினாய் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அமெரிக்காவில் ஆளுநர் தேர்தலுக்கு முன் இரண்டு கட்சியிலும் ஆளுநர் தேர்தலில் பங்குகொள்ள விரும்புவோர் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கும் முதல்நிலைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.  முதல்நிலைத் தேர்தலில் வெற்றிபெற்ற இரண்டு கட்சி வேட்பாளர்களும் பின் ஆளுநர் தேர்தலில் போட்டியிடுவார்கள்.  இப்படிப் போட்டியிட்டு இல்லினாய் மாநில ஆளுநராகப் பதவியேற்றவர் ப்ளகோஜேவிச்.  ஆளுநரின் பதவிக் காலமான நான்கு ஆண்டுகள் முடியும் முன்பே இவர் மீது பலவிதக் குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்தன.  இருப்பினும் 2006-இல் மறுபடி ஆளுநர் தேர்தலில் வெற்றிபெற்றார்.  தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்கள் மூலம் பிறரோடு உறவாடும்போது லஞ்சம் கேட்டதால் மத்திய அரசின் புலனாய்வுத்துறை இவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கத் தொடங்கியது.  நீதிமன்றத்தின் அனுமதியோடு மத்திய அரசின் பப்ளிக் பிராசிக்யூட்டர் இவர் தொலைபேசியில் பேசும் பேச்சுக்களை ரகசியமாகப் பதிவுசெய்தார்.

    ப்ளகோஜேவிச் மாநில அரசின் பல துறைகளிலிருந்து எப்படிப் பணம் சம்பாதிக்கலாம் என்று தன் உதவியாளரோடு திட்டம் தீட்டியிருக்கிறார்.  தன் ஊழலை அம்பலப்படுத்த முயன்ற பத்திரிக்கைக்கு மாநில அரசு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க மறுத்திருக்கிறார்.  தேர்தல் நிதிக்காக 50,000 டாலர் பணம் எதிர்பார்த்து குழந்தைகள் மருத்துவமனைக்கு எட்டு மில்லியன் டாலர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

    இப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2008-இல் அமெரிக்க செனட்டில் இல்லினாய் மாநிலப் பிரதிநிதியாக, செனட்டராக இருந்தார்.  அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செனட்டர் பதவியை ராஜினாமாச் செய்தார்.  அந்தப் பதவிக்கு தேர்தல் வைக்காமலேயே இன்னொருவரை நியமிக்கும் உரிமை இல்லினாய் ஆளுநரான ப்ளகோஜேவிச்சிற்குக் கிடைத்தது.  அந்த உரிமையைப் பயன்படுத்தி அவர் தனக்கும் தன் மனைவிக்கும் ஆதாயம் தேட முயன்றார்.

    இந்த ஊழல்களுக்குத் தகுந்த சாட்சியங்கள் கிடைத்ததும் உடனேயே ப்ளகோஜேவிச்சையும் அவருடைய உதவியாளரையும் அவர்களுடைய வீடுகளிலேயே கைதுசெய்ய பப்ளிக் பிராசிக்யூட்டர் ஏற்பாடு செய்தார்.  சில மாதங்களிலேயே விசாரணை முடிந்து தீர்ப்பும் அளிக்கப்பட்டு ப்ளகோஜேவிச்சிற்கு பதினான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.  மேல்முறையீடு செய்யும் உரிமை இருந்தும் பிராசிக்யூட்டர் சேகரித்திருந்த ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் அதில் பயன் இல்லை என்று எண்ணி ப்ளகோஜேவிச் மேல்முறையீடு செய்யவில்லை.  அவர் செய்த, செய்யவிருந்த இந்தக் குற்றங்களுக்கே அவருக்கு பதினான்கு ஆண்டுகள் தண்டனை கிடைத்திருக்கிறது.  அவர் சிறையிலிருந்து வெளியே வரும்போது சிறையில் தலைக்குச் சாயம் பூசிக்கொள்ளும் வசதி இல்லாததால் தலை முழுவதும் வெளுத்துவிடும் என்று ஒரு பத்திரிக்கை கேலிசெய்திருக்கிறது.

    நியூயார்க் மாநில அரசியலில் முக்கிய அதிகாரம் வகிப்பவர்கள் அதன் மேலவைத் தலைவர், கீழவைத் தலைவர், ஆளுநர் ஆகியோர்.  இந்த மூன்று பேர்களில் முதல் இரண்டு பேர் மீது லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடக்கப் போகிறது.  இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட உடனேயே அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே அவர்களை விட்டு விலக ஆரம்பிக்கிறார்கள்.  மேலவைத் தலைவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்; கீழவைத் தலைவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.

    குற்றம் செய்த எவரையும் அமெரிக்க நீதித்துறை விட்டுவைக்காது.  இது அமெரிக்க ஜனநாயகம் செயல்படும் முறை.

    இந்தியாவில் ஒரு மாநில முதல்வர் தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும் என்றாலும் முதல்வர் பதவிக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்த அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  ஆனாலும் இவர்தான் கட்சியில் எல்லாம்.  அவர் வைத்ததுதான் சட்டம்.  தமிழ்நாட்டு முதல் மந்திரியாக அவருடைய கட்சி அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சியில் அவருடைய வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேகரித்தார் என்று ஒரு வழக்கு அவர் மேல் போடப்படுகிறது.  குற்றம் சாட்டப்பட்டவர் ஒவ்வொரு கட்டத்திலும் வாய்தா கேட்கிறார்.  மறுப்பு எதுவும் சொல்லாமல் நீதிபதியும் கொடுக்கிறார்.  ஒவ்வொரு கட்ட விசாரணைக்கும் ஏதாவது ஒரு மறுப்புத் தெரிவித்து வழக்கின் அந்தப் பகுதி உச்சநீதிமன்றம் வரைக்கும் கொண்டுசெல்லப்படுகிறது.  இப்படியே பதினெட்டு ஆண்டுகள் வழக்கு நடந்து கடைசியில் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது.  குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.  அவர் மேல்முறையீடு செய்கிறார்.  அதற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.  கீழ்நிலைக் கோர்ட்டில் தண்டிக்கப்பட்டவருக்கு அடுத்த மேல் கோர்ட்டில் விடுதலை கிடைக்கிறது.  வழக்கை விசாரித்த நீதிபதி பிராசிக்யூசன் தரப்பு வாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.  நீதிபதியே பிரதிவாதியின் வக்கீல் ஆகிவிட்டார்.  குற்றம் சாட்டப்பட்டவர் ஒரே ஒரு ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டு கோடி கோடியாகச் சம்பாதித்திருக்கிறார்.  இதற்கு ஆதாரம் காட்டவில்லை என்கிறார் நீதிபதி.  எந்தத் தொழிலும் இல்லாத பினாமி கம்பெனிகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வந்ததாக பிரதிவாதி சொல்வதை நீதிபதி ஒப்புக்கொள்கிறார்.  வளர்ப்பு மகன் திருமணத்தை அது கின்னஸ் புக்கில் இடம்பெறும் அளவிற்கு ஆடம்பரமாக நடத்தியிருக்கிறார்.  திருமணத்திற்கான கோடிக்கணக்கான செலவை பெண் வீட்டார் செய்திருப்பார்கள் என்று தானே நீதிபதி முடிவுசெய்துகொள்கிறார்.  வீட்டில் கோடி கோடியாகப் பெறும் தங்க, வைர நகைகளும் சேகரித்துவைத்திருக்கிறார் பிரதிவாதி.  வீட்டில் நான்கு பேர் சேர்ந்து வாழ்ந்ததனால் எல்லோருக்கும்சேர்த்து அத்தனை புடவைகளும் செருப்புகளும் நகைகளும் அதிகம் இல்லை என்கிறார் நீதிபதி.  பல கோடி பெறுமான எண்ணிலடங்கா பங்களாக்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்.   இவை கண்ணுள்ள எல்லாருக்கும் தெரியும்.  பங்களாக்கள் கட்டியதற்கும் தோட்டங்கள் வாங்கியதற்கும் ஆகியிருக்கக் கூடிய செலவு என்று நீதிபதி கணக்குப் போட்டிருப்பதைப் பார்த்தால் தமிழ்நாட்டில் ஆடம்பர பங்களாக்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கும் போலும் என்று யாரும் நினைக்கலாம்.  இவையெல்லாம் எங்கிருந்து வந்ததென்று நிரூபிக்கவில்லை என்பது நீதிபதியின் வாதம்.  இவையெல்லாம் அவர் அரசியலுக்கு வரும் முன்பே சம்பாதித்த பணம் என்றும் பின் கம்பெனிகளில் சம்பாதித்த பணம் என்றும் வாதாடிய குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கூறியதை அப்படியே ஒப்புக்கொண்டிருக்கிறார் நீதிபதி.  மேலும் பிரதிவாதி சார்பில் இப்படியெல்லாம் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறார் நீதிபதி.

    குற்றம் சாட்டப்பட்டவர் தவறாகத் தன் மீது சாட்டப்பட்ட குற்றத்திலிருந்து மீண்டு புடம் போட்ட தங்கமாக வந்திருப்பதாக மார் தட்டிக்கொள்கிறார்.  குற்றம் சாட்டப்பட்டவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை, அவருடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டது சரி என்று சாதிக்க ஒரு கூட்டம்.  அவருடைய வழக்கறிஞர்களின் வாதத்தை அடிப்படையாக வைத்து தீர்ப்புக் கூற ஒரு நீதிபதி.  குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கடவுளே துணைபுரிந்தார் என்று நம்பும் ஒரு கூட்டம்.  இப்படிப்பட்ட மக்கள் கூட்டங்களை இந்தியாவில் மட்டும்தான் பார்க்கலாம்.

    இந்திய ஜனநாயகம் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

    Share
  • அமெரிக்காவில் பாலுறவு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம்.  இளவயதுப் பெண் ஒருத்தி கூறுகிறாள்: நான் வாழ்க்கையில் நிறைய சாதிக்க விரும்புகிறேன்.  எனக்கு என்னென்னவோ செய்யத் திட்டங்கள் இருக்கின்றன.   என்னால் இப்போது பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது.  பிள்ளை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போடுவதற்கு நான் ஸ்கைலா (skyla) பொருத்திக்கொண்டுள்ளேன்.  நீங்களும் அது மாதிரி செய்துகொள்ளலாம்.  இதைப் பொருத்திக்கொண்டால் மூன்று வருஷங்களுக்கு கர்ப்பமாவதைத் தடைசெய்யலாம்.  வேண்டும்போது அதை எடுத்துவிட்டால் மறுபடி பிள்ளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம்.

    கர்ப்பப் பையில் இந்த சாதனத்தைப் பொருத்திக்கொண்டு பிள்ளை பெறுவதைத் தள்ளிப்போடும் யோசனை யாருக்கென்று நினைக்கிறீர்கள்?  திருமணம் செய்துகொண்ட  பெண்களுக்கும் காதலனோடு சேர்ந்துவாழும் பெண்களுக்கும்.  முக்கியமாக இரண்டாவதாகக் குறிப்பிட்டிருக்கும் பெண்களுக்கு.  விளம்பரத்தில் வரும் இந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை.  ஆயினும் காதல் தோழனோடு கணவன் மனைவிபோல் குடும்பம் நடத்தி வருகிறாள்.

    திருமணம் செய்துகொள்ளாத பெண்களுக்கும் கருத்தடை சாதனங்கள் பற்றி அமெரிக்காவில் விளம்பரம் கொடுக்கிறார்கள்.  இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நினைக்கும் பெண்களுக்குத்தான் இம்மாதிரியான விளம்பரங்கள் கொடுப்பார்கள்.  அமெரிக்காவில் பாலுறவு வைத்துக்கொள்ளும் வயது வந்தவுடனேயே ஆண்களும் பெண்களும் பாலுறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.  அதற்கு எந்தத் தடையும் விதிப்பதை விரும்புவதில்லை.  திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லையென்றாலும் தொடர்ந்து கணவன் மனைவியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது என்னும் ஒரு விதி மட்டும் பரவலாக இருக்கிறது.  அப்படியும் கீழ் மட்டத்தில் இருக்கும் சில பெண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளுவது தங்களுக்கு ஒரு அந்தஸ்தைக் கொடுப்பதாக எண்ணிப் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்களாம்.  பிள்ளை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்களுக்காக மேற்குறிப்பிட்ட சாதனம் சந்தைக்கு வந்திருக்கிறது.  ஏற்கனவே பல மாத்திரைகள் சந்தையில் இருக்கின்றன.  இது அவற்றைவிட உபயோகிக்க எளிது என்பதாலும் ஒரு முறை பொருத்திக்கொண்டால் மூன்று வருடங்களுக்குக் கவலை இல்லாமல் இருக்கலாம் என்பதாலும் இது மற்றக் கருத்தடைச் சாதனங்களைவிடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  இந்தியாவில் ஒரு சில அல்ட்ரா மாடர்ன் பேர்வழிகளைத் தவிர திருமணத்திற்கு முன்பே குடும்பம் நடத்தும் மனிதர்கள் இல்லை என்றே நினைக்கிறேன்.  அதனால் இப்படிப்பட்ட விளம்பரங்களும் திருமணமாகாத பெண்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    பத்திரிக்கையில் வந்த இன்னொரு செய்தி.  மனைவியை இழந்த ஒருவரும் கணவனை இழந்த ஒரு பெண்ணும் தங்கள் எழுபது வயதில் மாதாகோவிலில் சேர்ந்து பாட்டுப் பாடியபோது காதல் வலையில் விழுந்து திருமணம் செய்துகொள்ளுகிறார்கள்.  (இந்தியாவில் அறுபது வயது முடிந்தவுடனேயே வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதுவார்கள்.)  சில ஆண்டுகளுக்குப் பிறகு மனைவிக்கு ஞாபக மறதி வியாதி (Alzheimer’s) ஏற்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்.  மனைவியை எப்போது பார்க்கலாம், எங்கு கூட்டிச் செல்லலாம், என்ன மாதிரியான உறவு வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு முதியோர் இல்லத்தில் சில விதிகள் இருக்கின்றன.  மனைவிக்கு ஞாபகமறதி வியாதி இருப்பதால் உடலுறவு வைத்துக்கொள்ள மனைவியால் சம்மதம் கொடுக்க முடியாது என்பதால்  மனைவியோடு உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதும் எழுதப்படாத விதி. ஒரு முறை கணவர் மனைவியைப் பார்க்க வந்த இடத்தில் அவருக்கு மறுக்கப்பட்டிருந்த அந்த உரிமையை மனைவியின் சம்மதம் இல்லாமலேயே பயன்படுத்திக்கொண்டார் என்று மனைவியின் மகள் – இன்னொரு திருமணத்தில் பிறந்தவள் – மாற்றாந்தகப்பன் மீது வழக்குத் தொடர்ந்தார்.  கணவர் அவர்கள் வாழ்ந்துவந்த அயோவா மாநில சட்டமன்ற உறுப்பினர்.  வழக்குத் தொடரப்பட்டதும் அவர் பதவியைத் துறந்தார்.  வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது மனைவிக்கு அவ்வப்போது செக்ஸ் ஆசை வந்தபோது தான் அதை நிறைவேற்றிவைத்ததாகவும் அன்றும் அத்துமீறிப் போகாமல் நடந்துகொண்டதாகவும் தன் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.  வழக்கு நடந்தபோது தேவையான ஆதாரங்கள் இல்லாததால் அவர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.  ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் அவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைவாசம் கிடைத்திருக்கும்.  மனைவி சம்மதம் இல்லாமல் கணவன் அவளோடு உடலுறவு கொண்டால் கணவனுக்குப் பத்து வருடம் வரை சிறைவாசம் கொடுக்கலாம் என்பது சட்டம்.

    ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 92 வயது மனைவியையும் 94 வயது கணவனையும் (இவர்கள் முதியோர் இல்லத்தில் சந்தித்துக் காதல்கொண்டு திருமணம் செய்துகொண்டவர்கள்.  இருவருக்கும் அது எத்தனையாவது திருமணம் என்று கேட்காதீர்கள்) பேட்டி கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.  அதில் பேட்டி கண்டவர் அவர்கள் இருவரிடமும் உங்கள் ‘இருவரிடையே செக்ஸ் உண்டா?’ என்று கேட்டார்.  மனைவி ‘இது என்ன கேள்வி?’ என்று பதிலுக்குப் பேட்டி கண்டவரைக் கேட்கவில்லை.  கணவரைக் கேட்குமாறு பேட்டி கண்டவரிடம் கூறி கணவரின் பக்கம் கையைக் காட்டுகிறார்.

    அமெரிக்காவில் செக்ஸ் உட்பட எதற்கும் ரேஷன் கிடையாது.  எந்த வயதிலும், திருமணம் ஆகியிருக்கவில்லை என்றால் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்.  திருமணம் நடந்திருந்தால் மனைவிக்கோ கணவனுக்கோ துரோகம் செய்யக் கூடாது, அதாவது திருமணத்திற்கு வெளியே யாருடனும் உடலுறவு கொள்ளக் கூடாது.  திருமணம் ஆகியிருந்தாலும் மனைவியின் சம்மதம் இல்லாமல் அவளுடனேயே உடலுறவு கொள்வது தவறு மட்டுமல்ல, அதற்குத் தண்டனையும் உண்டு.

    என்ன சமூகம் இது?  புனிதமான உறவு என்று திரு.வி.க. போன்றவர்களால் கருதப்பட்ட இந்த உறவைக் கொச்சைப்படுத்திவிட்டார்களே!

    Share
  • மிருக வதை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததிலிருந்து தடாலடியாகப் பல சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கிறது.  தான் செய்ய விரும்பும் பல காரியங்களுக்கு மத்திய அரசில் போதிய பெரும்பான்மை இல்லாததால் அரசு ஆணையாகப் பிறப்பித்துக்கொண்டிருக்கிறது.  மாநிலங்களில் இப்போது பி.ஜே.பி. ஆட்சி நடத்தும் மஹாராஷ்ட்ரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் பசுக்களைக் கொல்வதை சட்டவிரோத செயலாக்கி அந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை என்றும் அறிவித்திருக்கிறார்கள்.  பசுக்கள் கிருஷ்ணனின் நண்பன் என்பதாலும் இந்து மதத்தில் பசுக்கள் புனிதமாகக் கருதப்படுவதாலும் பசுக்களைக் கொல்வது இந்து மதத்திற்கு விரோதமான செயல் என்று கருதிப் பசுக்களைக் கொல்வது பாவம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.  இந்தப் பசு வதைச் சட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்கள்.

    பசு மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் பசு வதையைத் தடுக்கும் இந்தச் சட்டத்தை வன்மையாகக் கண்டித்து தங்கள் சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாகக் கூறுகிறார்கள்.  பல பொருளாதார நிபுணர்கள் பல கலாச்சாரங்கள், மதங்கள், செல்வநிலைகள் இருக்கும் இந்தியாவில் எல்லோரும் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று சொல்வது சரியில்லை என்றும் இந்தியப் பொருளாதாரத்தையே இது பாதிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

    வேதங்களில் போற்றப்படுவதால் பசுக்களையும் இனப்பெருக்கத்திற்குத் தேவைப்படுவதால் எருதுகளையும் கொல்லக்கூடாது என்று பி.ஜே.பி. அரசு சட்டம் இயற்றியிருக்கிறதாம்.  இந்த இரண்டு பிராணிகளை மட்டும் மனிதன் வதைக்கு உள்ளாக்கக் கூடாது என்று கூறுபவர்கள் ஏன் மற்றப் பிராணிகளை விட்டுவிட்டார்கள்?  மாடுகளோடு நெருங்கிய தொடர்புடைய எருமைகளைக் கூட ஏன் மனிதன் வதைக்கக் கூடாது என்ற வர்க்கத்தில் சேர்க்கவில்லை?  அதோடு மற்ற மிருகங்கள் என்ன பாவம் செய்தன, அவற்றை மனிதன் வதைத்தால் அது தவறில்லை என்று ஏன் நினைக்கிறார்கள்?  வேதங்களில் மனிதர்கள் மாட்டிறைச்சி, குதிரை இறைச்சி ஆகியவற்றையும் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பது இன்னொரு விஷயம்.

    இவர்கள் கூறும் காரணங்கள் தவிர மற்ற எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன எந்த பிராணிகளையும் கொல்லக் கூடாது என்பதற்கு.  கொல்லாமையைப் பற்றித் திருவள்ளுவர் கூறியிருப்பதை இங்கு நினைவுகூருவோம்.

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

    கற்றறிந்தவர்கள் சொல்லும் வாழ்க்கை நெறிகளில்  இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்தும் மற்ற உயிர்களைக் கொல்லாமலும் உண்பதே சாலச் சிறந்தது.

    இதற்கு இன்னொரு வகையாகவும் அர்த்தம் கொள்ளலாம்.  பகுத்துண்டு என்று வள்ளுவர் சொல்வதை இயற்கையில் கிடைப்பதை நாம் பிராணிகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அர்த்தப்படுத்தலாம் என்றும் தோன்றுகிறது.

    தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது

    இன்னுயிர் நீக்கும் வினை.

    உன் உயிரை இழக்க நேர்ந்தாலும் மற்ற எந்த உயிரையும் எடுக்கும் காரியத்தைச் செய்யாதே.  இதை உன் உயிரைக் காக்கப் பிற உயிரைக் கொல்லாதே என்று சொல்வதாகவும் விளங்கிக்கொள்ளலாம்.

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

    எல்லா உயிரும் தொழும்.

    எந்த பிராணிகளையும் கொல்லாதவனை, பிராணி இறைச்சியை உண்ண மறுத்தவனையும் உலகத்து உயிர்கள் எல்லாம் கைகூப்பி வணங்கும் என்பது இதன் கருத்து.

    (தமிழ்ப் புலவர் திருவள்ளுவரை சுவீகரித்துக்கொண்ட பி.ஜே.பி. இந்தியா முழுவதும் அவரைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் போவதாகவும் அவர்தான் இந்தியாவுக்கே வழிகாட்டி என்றும் கூறியதெல்லாம் என்னவாயிற்று?  தமிழ்நாட்டில் ‘அம்மா’ புராணம் தவிர மற்ற எந்தப் புராணத்தைக் கொண்டும் தமிழ் மக்களை ஓட்டுப் போடவைக்க முடியாது என்று புரிந்துகொண்டார்கள் போலும்!)

    எல்லாக் காலத்திற்கும் எல்லா சமூகங்களுக்கும் பொருந்துகிற திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர், எல்லா உயிர்களையும் நேசிப்பவர் கூறுவதை நாம் எவ்வாறு புறக்கணிப்பது?

    என்னோடு எட்டாம் வகுப்பில் படித்த ஒரு கிறிஸ்தவப் பெண் பைபிளில் ‘அடித்துப் புசி’ என்று கூறியிருப்பதாகவும் இறைவன் படைப்பில் உள்ள எல்லா ஜீவன்களையும் மனிதன் தன் தேவைகளுக்கு உபயோகித்துக்கொள்ளலாம் என்று கூறியிருப்பதாவும் கூறியிருக்கிறாள்.  நிச்சயமாக அன்பின் வடிவான இயேசு இப்படிக் கூறியிருக்க மாட்டார்.  அவர் கூறியதாக பின்னால் வந்தவர்கள் கூறியதுதான் பைபிளில் இருக்கும் அத்தனை போதனைகளும்.

    திருவள்ளுவர் கூறியது இருக்கட்டும்.  பிராணிகளின் ஊனைச் சாப்பிடுபவர்கள் அது எப்படி தங்கள் சாப்பாட்டுத் தட்டிற்கு வந்தது என்று எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா?  அவர்கள் உண்ணும் ஊனுக்குரிய பிராணி வதைபட்டுத் தன் உயிரை இழக்கும்போது அது அவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை எப்போதாவது உணர்ந்ததுண்டா?  உங்கள் கைகளில் காய்கறி, பழங்கள் நறுக்கும் சிறிய கத்தி பட்டு காயம் ஏற்பட்டால் எவ்வளவு வலிக்கிறது?  ஒரு சின்ன காயத்திற்கே அத்தனை வலி ஏற்படுகிறதென்றால் பிராணிகளின் கழுத்தையே வெட்டினால் அவற்றிற்கு எவ்வளவு வேதனை உண்டாகும்?  ஒரு நண்பரிடம் பிராணிகளுக்கு அவற்றைக் கொல்லும்போது எவ்வளவு வலிக்கும் என்று கூறியபோது அவர் அவை உயிரோடு இருந்தால்தானே அந்த வேதனையை உணர்ந்து நினைப்பதற்கு என்று கேட்டார்.  அவை உடனேயே இறந்துவிடுகின்றன என்றே எடுத்துக்கொண்டாலும் கொல்லப்படும்போது அவை அந்த வேதனையை உணராமல் போவதற்கு சாத்தியமே இல்லை.

    தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே அவற்றைப் பறிக்கும்போது அவற்றுக்கு வேதனை ஏற்படுவதில்லை என்று எப்படிக் கூறுகிறீர்கள் என்பது ஒரு சாரார் வாதம்.  தாவரங்களைப் பறிக்கும்போது அவை இரத்தம் சிந்துவதில்லை, வேதனையால் துடிப்பதில்லை.  இந்த ஒரேயொரு காரணத்திற்காகவாவது பிராணிகளை வதைக்காமல், கொல்லாமல், தின்னாமல் இருக்க வேண்டியது மனிதனின் கடமை.

    சட்டம் இருக்கிறதோ இல்லையோ மனிதன் தானாக எப்போது மிருக வதையை நிறுத்தப் போகிறான்?

    Share
  • சநாதனத்தில் ஒரு நன்மை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சென்ற வாரம் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.  நியூயார்க்கிலிருந்து லண்டன் செல்லவிருந்த ஒரு பெண், விமானத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நடைபாதைக்கு அருகில் இருந்த சீட்டில் உட்கார்ந்தார்.  அவர் சீட்டில் நன்றாக செட்டில் ஆகி இருந்த வேளையில் இன்னொரு பயணி அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஜன்னலுக்கு அருகே இருந்த சீட்டிற்கு வந்தார்.  தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கப் போவது ஒரு பெண் என்று தெரிந்ததும் அந்தப் பெண் பக்கத்தில் தன்னால் உட்கார முடியாது என்றும் தன்னுடைய மதம் மனைவியல்லாத வெறொரு பெண்ணின் அருகில் உட்காருவதைத் தடை செய்கிறது என்றும் அதனால் தனக்கு இன்னொரு இடம் ஒதுக்கித் தருமாறும் விமானப் பணிப்பெண்ணைக் கேட்டாராம்.  அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் முதலில் எரிச்சல் அடைந்தாலும் எதற்கு வம்பு என்று எண்ணி வேறு இடத்திற்கு மாற்றிக்கொண்டு போகச் சம்மதித்திருக்கிறார்.

    இதே மாதிரி இன்னொரு தடவை நியூயார்க் வழியாக லாஸ் வேகஸிலிருந்து இஸ்ரேல் செல்லும் விமானப் பயணத்தின்போது ஒரு கணவனும் மனைவியும் பயணித்தார்கள்.  கணவனுக்கு நடைபாதைக்கு அருகில் இருந்த இருக்கையும் மனைவிக்கு நடு இருக்கையும் ஒதுக்கப்பட்டிருந்தன.  அதே வரிசையில் ஜன்னலுக்குப் பக்கத்து இருக்கை ஒரு யூதருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.  அவர் அவருக்கு அருகில் உட்காரப் போகும் தம்பதியை கணவனை நடு இருக்கைக்கும் மனைவியை நடைபாதைக்கு அருகில் இருக்கும் இருக்கைக்கும் மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டாராம்.  ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டாராம்.

    Reb_Moshe_Feinsteinஅமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லும் விமானப் பயணங்களின்போது இம்மாதிரி நிறைய சம்பவங்கள் நடக்கின்றனவாம்.  பெண்களின் அருகில் உட்கார மறுப்பவர்கள் சநாதன யூதர்கள்.  இவர்கள் தங்கள் மதம் சொல்லும் எந்த போதனையையும் கண்ணை மூடிக்கொண்டு கடைப்பிடிப்பவர்கள்.  இவர்களால் அடிக்கடி இந்தப் பயணங்களின்போது சில சச்சரவுகள், காலதாமதம் ஏற்படுகிறதாம்.  சநாதன யூதர்களின் மதத்தலைவர் ஒருவர் மீடியாக்களில் பெரிதுபடுத்தப்படும் அளவிற்கு இது இல்லையென்று கூறியிருக்கிறார்.  பல சநாதன யூதர்கள் மதத்தலைவர் மோஷே ஃபெயின்ஸ்டைன் கூறியிருப்பதைப் பின்பற்றுகிறார்களாம்.  சிறிது நேர பயணத்தின்போது யூத ஆண்கள் பெண்களின் அருகில் அமர்ந்து பயணிப்பது தவறு இல்லையென்றும் ஆனால் தவறுதலாகப் பெண்ணைத் தொடும் சந்தர்ப்பம் நேர்ந்துவிட்டால் அதில் இன்பம் காண்பது தவறு என்று சொல்லியிருக்கிறார்.  யாரோ ஒரு பெண் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்வதில் என்ன நேர்ந்துவிடப் போகிறது என்கிறார் ஒரு பயணி.

    சநாதன யூதர்கள் நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதால் அவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போகிறதாம்.  அவர்களில் நிறையப் பேர் விமானத்தில் பயணம் செய்வதால் விமான கம்பெனிகளுக்கு அவர்களால் நிறைய வருமானம் வருவதால் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தங்கள் கடமையாகிறது என்கின்றன விமானக் கம்பெனிகள்.

    இப்படி சநாதன யூதர்கள் மனைவியரல்லாத பெண்களின் அருகில் உட்கார்ந்து பயணம் செய்வதில்லை என்று அறிந்தபோது நான் பல தசாப்தங்களுக்கு முன் மைசூரிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பேருந்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் ஞாபகத்திர்கு வருகின்றன.  அப்போது தமிழ்நாட்டு ஆண்கள் எல்லாம் சநாதன யூதர்களைப் போல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

    ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளில் மைசூரிலிருந்து மதுரைக்கு நேரடி பஸ் கிடையாது.  கோயம்புத்தூர் போய்தான் மதுரைக்குப் போக வேண்டும்.  அப்போது மைசூர்-கோயம்புத்துர் பஸ்கள் சொகுசு பஸ்கள் இல்லை.  அதனால் ஒரு பக்கம் இரண்டு இருக்கைகளும் இன்னொரு பக்கம் மூன்று இருக்கைகளும் அவற்றில் உண்டு.  நான் என் மகள்கள் இருவரும் சிறு குழந்தைகளாக இருக்கும்போது அதில் பயணம் செய்வதில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன்.  என் மகள்கள் அரை டிக்கெட் எடுக்கும் வயதாக இருக்கும்போதே அவர்கள் இருவருக்கும் முழு டிக்கெட் வாங்குவேன்.  இதற்குக் காரணங்கள் இரண்டு.  ஒன்று வேறு ஆண் பயணிகள் எங்கள் சீட்டில் உட்கார்ந்து இடைஞ்சல் கொடுக்கக் கூடாது என்பது.  இரண்டாவது மூன்று பேர் சீட்டில் இடம் கொஞ்சம் தாராளமாக இருக்கும்.  குழந்தைகளுக்கும் முழு டிக்கெட் வாங்கினால் அந்த சீட் முழுவதையும் எடுத்துக்கொள்ளலாம்.  அப்படிப் பயணம் செய்யும்போது சில கிராமத்துப் பெண்கள் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பிரயாணம் செய்யக் கூடாதா என்று சண்டைக்கு வருவார்கள்.  நீண்ட தூரப் பயணம் எவ்வளவு களைப்படையச் செய்யும் என்பது அவர்களுக்குத் தெரியாது.  அவர்கள் இடையில் ஏறி இடையில் இறங்கிவிடுவார்கள்.  மேலும் குழந்தைகளுக்கு முழு டிக்கெட் வாங்கியிருக்கிறேன் என்று அவர்களிடம் விளக்க முடியாது.  ஏதோ நான் எல்லா சீட்டுகளையும் அடைத்துக்கொண்டு அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்பதுபோல் குறை சொல்லிக்கொண்டே வருவார்கள்.

    பின்னால் மதுரைக்கு மைசூரிலிருந்து நேரடி பஸ் விட ஆரம்பித்த பிறகு இன்னொரு விதமான கஷ்டம்.  பிள்ளைகள் இருவரும் பெரியவர்களான பிறகு தனியாகப் பயணம் செய்யும் தேவை ஏற்பட்டது.  இரண்டு பக்கமும் இரண்டிரண்டு சீட்டுகள் இருக்கும்.  ஆனால் பெண்களுக்கென்று தனி சீட்டுகள் ஒதுக்கி இருக்க மாட்டார்கள்.  எங்கு உட்கார்ந்தாலும் இன்னொருவர் அருகில்தான் உட்கார வேண்டும்.  அந்த இன்னொருவர் பெண்ணாக இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை.  ஆனால் ஆண் என்றால் பிரச்சினைதான்.  பத்து மணி நேர இரவுப் பயணத்தை எப்படித் தூங்கிவழிந்துகொண்டு ஒரு ஆணின் பக்கத்தில் கழிக்கப் போகிறோம் என்ற எண்ணமே தூக்கத்தைக் கெடுத்துவிடும்.  நடத்துனரிடம் சொல்லி ஒரு பெண்ணை அருகில் உட்கார வைக்குமாறு வேண்டுகோள் விடுப்பது அவ்வளவு எளிதல்ல.  எல்லா நடத்துனர்களும் உதவி செய்யும் மனப்பாங்கில் இருக்க மாட்டார்கள்.  அப்படியே உதவுபவர்களாக இருந்தாலும் பயணிகள் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.  அதிலும் குறிப்பாகக் கணவனோடு பயணம் செய்பவர்கள் கணவனை விட்டு வேறு இடத்திற்குப் போக விரும்ப மாட்டர்கள்.  இதற்கு மேல் முன் சீட்டிலும் பின் சீட்டிலும் இருக்கும் ஆண் பயணிகள் செய்யும் சில்மிஷங்கள் வேறு.

    ஒரு முறை ஒரு பயணத்தின்போது ஒரு ஆணின் பக்கத்தில்தான் எனக்கு இடம் கிடைத்தது.  அதே பஸ்ஸில் பயணித்த ஒருவர் தன் ஏழெட்டு வயது மகளோடு எனக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தார்.  நான் நடத்துனரிடம் ஒரு பெண் பயணியை அருகில் உட்காரவைக்க முடியுமா என்று கேட்டுக்கொண்டதையும் அவர் எனக்கு உதவுவதற்கு சிரத்தை காட்டாததையும் பார்த்துவிட்டுத் தன் மகளை என் அருகில் உட்காரும்படி கூறினார்.  அந்தக் குழந்தைக்குத் தந்தையை விட்டுத் தனியாக உட்கார மனமில்லை.  அப்படியும் அவர் வலுக்கட்டாயமாகக் குழந்தையை என் அருகில் உட்காரவைத்தார்.  அப்படி அவர் செய்தபோது அழ ஆரம்பித்த அந்தக் குழந்தை ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அழுது, அழுது அசந்துபோய் தூங்கிவிட்டது.  நான்      அந்தக் குழந்தைக்கு என்னென்னவோ விளையாட்டுக் காட்டிப் பார்த்தேன்.  ஒன்றுக்கும் அந்தக் குழந்தை மசியவில்லை.  எனக்கே அந்தக் குழந்தையை அதன் தந்தையிடம் அனுப்பிவிடுவோமா என்றிருந்தது.  குழந்தை தூங்க ஆரம்பித்ததும் இனித் தேவையில்லை என்று எண்ணி நானும் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தேன்.  அந்தத் தந்தையை இன்றளவும் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.

    இது பற்றிப் போக்குவரத்து அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன்.  ‘பக்கத்தில் பயணிக்கப் பெண் பயணி இல்லையென்றால் நான் இரண்டு டிக்கெட்கள் வேண்டுமானாலும் வாங்குகிறேன்’ என்று அவர்களிடம் சொல்லிப் பார்த்தேன்.  அதற்கும் அவர்கள் இணங்கவில்லை.  நான் கூறியவற்றிற்குப் பரிகாரமும் தேடவில்லை.  இந்தியாவில் தனியாக, அதுவும் இரவு நேரப் பேருந்துகளில், பயணம் செய்யும் பெண்கள் அரிது என்பதால் போலும்.

    இந்தச் சமயத்தில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது.  எங்கள் பாட்டி இறந்ததற்கு துக்கம் கேட்கவந்த உறவினர்களில் எங்கள் பாட்டியின் சகோதரரும், அவருடைய மனைவியும் இன்னும் இரு சகோதரர்களின் மனைவிமார்கள் இருவரும் அடங்குவர்.  இவர்கள் நால்வரும் காரில் வந்திருந்தனர்.  போகும்போது அதே ஊரைச் சேர்ந்த உறவுக்காரப் பெண் இன்னொருவரையும் (அந்தப் பெண் வயதான விதவை; வரும்போது பஸ்ஸில் வந்திருந்தார்.)  தங்களோடு அழைத்துச் சென்றனர்.  பெண்ணென்றாலும் அவரை என் பாட்டியின் தம்பியின் பக்கத்தில் முன் சீட்டில் உட்காரவைத்தனர்.  இவர் மேலே சொன்ன சநாதன யூதர் போல் நடந்திருந்தால் மனைவியைத் தன் பக்கத்தில் உட்காரும்படி வற்புறுத்தியிருப்பார்.  இந்தியாவிலும் பிற பெண்களை ஆண்கள் பக்கத்தில் உட்காரவைப்பதில்லை.  ஆயினும் அன்று ஏனோ அவருடைய மனைவியும் மற்றப் பெண்களும் அப்படி நடந்துகொண்டிருந்திருக்கிறார்கள்.  மனைவி வசதியாகப் பின் சீட்டில் வரட்டும் என்று நினைத்தும் இருக்கலாம். . முன் இருக்கைகளைவிட பின் இருக்கைகள் விபத்து நடந்தால் கொஞ்சம் பாதுகாப்பானவை என்றும் நினைத்திருக்கலாமோ என்னவோ.  முன்னால் உட்கார்ந்திருந்த என் பாட்டியின் தம்பி அந்தப் பெண்ணிடமிருந்து கூடியவரை தள்ளி உட்கார வேண்டும் என்று நினைத்து ஓட்டுனருக்கு மிக அருகில் உட்கார்ந்துகொண்டதாகக் கூறினார்கள்.  இதனால் ஓட்டுனருக்கு இடம் போதாமல் போய் அவர் ஸ்டியரிங்கைச் சரியாகக் கையாளாமல் எங்கள் வீட்டை விட்டுச் சென்ற பத்து மைல்களுக்குள்ளேயே ஒரு சிறு பாலத்தில் காரை மோதி அந்தக் காரில் பயணித்த மூன்று பேர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டு வெகு நாள் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.  அப்படி அடி வாங்கியவர்களுள் அந்த வயதான விதவைப் பெண்ணும் சேர்த்தி.

    இந்தியாவில் எல்லா ஆண்களும் சநாதன யூதர்கள் போல் பெண்கள் பக்கத்தில் பயணம் செய்வதில்லை என்று அடம் பிடித்திருந்தால் எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் எந்தப் பெண்ணிற்கும் ஏற்பட்டிருக்காது.

    அது போகட்டும்.  இன்னொரு சந்தேகம்.  பெண்கள் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்ய விரும்பாத சநாதன யூதர்கள் எல்லோரும் ஏகபத்தினி விரதர்களா?  யூதர்களில் இத்தனை ராமர்கள் இருக்கிறார்களா?   சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு யூதமதத் தலைவர் தான் காதலித்த இன்னொரு பெண்ணை மணந்துகொள்ள வேண்டி தன் மனைவியையே அடியாட்கள் வைத்துக் கொலைசெய்தது ஞாபகத்திற்கு வருகிறது.  மனைவி இருக்கும்போதுதான் மற்றப் பெண் பக்கத்தில் உட்காரக் கூடாது.  மனைவியைக் கொன்றுவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது தவறில்லையோ என்னவோ!

    Share
  • குழந்தைகள் இல்லாத வாழ்க்கை

    நாகேஸ்வரி அண்ணாமலை

     images

    சென்ற வாரம் நியுயார்க டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ‘குழந்தைகள் இல்லாத வாழ்க்கை’ (அமெரிக்காவில் இப்போது cancer-free, fat-free என்று சொல்வதுபோல் child-free என்ற ஒரு வார்த்தையையும் புதிதாக உருவாக்கியிருக்கிறார்கள்.)  என்ற ஒரு கட்டுரையைப் படித்தபோது இந்தியாவில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும் அதுவும் தம்பதிகள் திருமணம் செய்துகொண்டதும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்பதும் ஞாபகத்திற்கு வந்தன.  தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகுதான் அவர்கள் இருவரிடமும் எந்தக் குறையும் இல்லை என்று அறிந்து இரு தரப்புப் பெற்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.  தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் பெண்ணின் மேல்தான் பழி விழும்.  மருத்துவ ரீதியாகப் பெண்ணிற்குத்தான் நிவாரணம் தேடுவார்கள்.  இருவரையும் சோதித்துப் பார்ப்பதெல்லம் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறதோ என்னவோ சில தசாப்தங்களுக்கு முன்னால் கண்டிப்பாக இல்லை.

    எனக்குத் தெரிந்த ஒரு மாமியார் தன் மூத்த மருமகள் திருமணம் ஆகி ஆறு மாதங்கள்வரை கருத்தரிக்காமல் இருந்தபோது அவரைப் பலவாறாகத் துன்புறுத்திவிட்டார்.  கடைசிவரை அந்த மருமகளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இன்னொரு விஷயம்.  அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்த மருமகள்களையும் அந்த மாமியார் படுத்திய பாட்டைச் சொல்லி மாளாது.  திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்குளேயே அந்த டாக்டரைப் பார், இந்த டாக்டரைப் பார் என்று மருமகள்களை விரட்டிக்கொண்டிருப்பார்.  நல்ல வேளை மற்ற நான்கு மருமகள்களும் ஓரளவிற்கு சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொண்டார்கள்.  குழந்தைகள் இல்லாவிட்டால் உடனேயே மருமகளைத்தான் – அதுவும் மாமியார்கள் – குறைசொல்வார்கள்.  மருமகளிடம் குறை கண்டே ஆக வேண்டும் என்று அலையும் மாமியார்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளாத மருமகளைக் குறை கூறித் தீர்ப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அது அமைந்துவிடுகிறது.  வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரிதான்.

    கருத்தரித்த ஒரு பெண், குழந்தை பெற்றுக்கொள்ளப் பயப்பட்டதைப் பார்த்து என் பாட்டி, ‘இதில் பயப்பட என்ன இருக்கிறது?  உலகம் தோன்றியதிலிருந்து பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று கூறிவிட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த இன்னொன்றையும் கூறினார்.  ‘ரயிலிலோ பேருந்திலோ நாம் பயணம் செய்யும்போது நம் பக்கத்தில் இருப்பவர்கள் நம்மோடு உரையாடினால் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கேட்பார்களேயொழிய எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்க மாட்டார்கள்’ என்றார்.  சில தலைமுறைகளுக்கு முன்னால் நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொண்டார்கள்.  அப்போது பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிழைப்பதில்லை.  அதனாலும் நிறையப் பெற்றுக்கொண்டார்கள்.  மேலும் கருத்தடைச் சாதனங்களும் புழக்கத்தில் இல்லை.  இப்போது காலம் மாறிவிட்டது.  இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.

    எனக்குத் தெரிந்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்கள் இந்தியாவில் இல்லை.  (மனிதத் திமிங்கலங்கள் நிறைந்த இந்த உலகத்தில் என் குழந்தையை விட்டுச் செல்லவா என்று பயப்படும் தாய்மார்களும் இந்த உலகத்தில் இருக்கும் ஜனத்தொகை போதாதென்று இன்னொரு ஜீவனை இவ்வுலகிற்குக் கொண்டுவந்து ஜனத்தொகையை இன்னும் அதிகரிக்கவா என்று எண்ணும் தாய்மார்களும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.)   எங்கள் நண்பர் ஒருவர்தான், அவர் திருமணம் செய்துகொள்ளாமலே ஒரு பெண்ணோடு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தபோது, ‘நான் திருமணம் செய்துகொள்வது பற்றியோ குழந்தைகள் பெற்றுக்கொள்வது பற்றியோ ஒரு போதும் நினைக்காத அளவிற்கு விவேகி’ என்று தன்னைத்தானே பெருமையாகப் பேசிக்கொண்டார்.  இவரை விட்டுவிடுவோம்.  இவர் ஒரு அதிநவீனவாதி (ultra modern)!  எல்லா ஜீவராசிகளிடமும் (தாவரங்கள் உட்பட) தங்களுடைய மரபணுக்களை விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருப்பதாகச் சொல்லலாம்.  இயற்கையை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவதாக நினைப்பவர்கள்தான் இந்த உந்துதலைப் பொருட்படுத்தாமல் அல்லது புறக்கணிப்பவர்களாக இருப்பவர்கள்.  இயற்கையின் இந்த உந்துதலை இவர்களால் எப்படிப் புறக்கணிக்க முடிகிறது என்பது எனக்குப் புரியாத விஷயம்.  இப்போது இம்மாதிரியான, இயற்கையைப் புறக்கணிக்கும் போக்கு அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக அந்தக் கட்டுரை கூறுகிறது.

    அதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள்.  அமெரிக்காவிலும் சில தசாப்தங்களுக்கு முன்பு வரை நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொண்டனர்.  ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளில் கூட குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் என்ற வாசகங்களை மருத்துவரின் மேஜையின் மீது காணலாம்.  அதே காலகட்டத்தில் பெண்ணியக் கருத்துகள் தோன்றிப் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்கள் அல்ல, அவர்களுக்கு இன்னும் நிறைய காரியங்களைச் சாதிக்கச் சுதந்திரம் வேண்டும் என்ற கோஷம் எழுந்தது.  மேலும் பெண்கள் வேலைக்குப் போவதும் கூடியது.  வேலைக்குப் போகும் பெண்களால் வேலையில் கவனம் செலுத்துவதும் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதும் கடினமாயிற்று.  குழந்தைகளை வீட்டில் பராமரிப்பதற்கு இந்தியாவில் இருப்பது போல் பாட்டி, தாய், சித்தி, அத்தை என்று யாரும் இல்லை.  குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் தாதிகளிடம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்தால் அதற்கு நிறையப் பணம் வேண்டும்.  பெண்கள் நிறையச் சம்பாதித்தால் மட்டுமே அது சாத்தியம்.

    சமீபத்தில் வெளிவந்துள்ள “Selfish, Shallow and Self-Absorbed: Sixteen Writers on the Decision Not to Have Children” என்ற புத்தகத்தில் குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பதினாறு பிரபலங்கள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன.  மிகப் பெரிய நடிகரான ஜார்ஜ் க்லூனியும் ஒப்ராவும் இதில் அடங்குவர்.  டையர் என்னும் ஒருவர் தான் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருக்கும்போது, பத்து நிமிடங்களிலேயே அவருடைய ஆட்டம் தடைப்பட்டதாகவும் அதன் பிறகு அங்கு ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டதாகவும் குழந்தைகளைவிட அவர் அதிகமாக வெறுப்பது அந்தக் குழந்தைகளைக் கொண்டாடும் பெற்றோர்களைத்தான் என்றும் கூறியிருக்கிறார்.  குழந்தைகள் பெற்றோர்களைப் படாதபாடு படுத்துவதாகவும் இவர் குறை கூறியிருக்கிறார்.

    குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களிடையே நிறைய போட்டி ஏற்பட்டிருப்பதாகவும் அதில் தாங்களும் கலந்துகொள்ள விரும்பவில்லை என்றும் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.  இன்னும் சிலர் குழந்தைகளுக்கு நிறையப் பொருள்கள் வாங்க வேண்டியிருப்பதால் இயற்கை வளங்களை நிறைய வீணடிக்க வேண்டியிருப்பதால் குழந்தைகள் பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதாகவும் கூறுகிறார்கள்.  குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால் நிறைய வேலைகள் இருப்பதாகவும் தங்களுக்கென்று செலவழிக்க நேரம் கிடைப்பதில்லை என்பதும் சிலரது கவலை.

    இப்படி சிலர் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை விரும்பவில்லை என்றாலும் சநாதனக் கத்தோலிக்கர்களும் யூதர்களும் இன்னும் நிறையக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்..  சமீபத்தில் நியூயார்க்கில் எட்டுக் குழந்தைகளில் ஏழு குழந்தைகளை இழந்த குடும்பம் யூத ஐதீகத்தில் நம்பிக்கை வைத்திருந்த குடும்பம்.  கருத்தடைச் சாதனங்களை உபயோகிப்பது தடை செய்யப்பட்டிருப்பதும் கருக்கலைப்பு செய்துகொள்வது தடைசெய்யப்பட்டிருப்பதும் கத்தோலிக்கர்கள் நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்வற்கு காரணங்களாகக் கூறலாம்.  திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களும் அமெரிக்காவில் அதிகம்.  அந்தத் தாய்மார்களுக்கு ஒரு அந்தஸ்து கிடைப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது.

    குடும்பம் என்பது மாறிக்கொண்டுவருகிறது. கூட்டுக்குடும்பத்திலிருந்து தனிக்குடும்பம் வந்து இப்போது தனி நபரே குடும்பம் என்று மாறிக்கொண்டிருக்கிறது!

    Share
  • சோகத்தை மிஞ்சும் சடங்கு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஒவ்வொரு வார சனிக்கிழமையும் ஓய்வு நாளாக (Sabbath day) அனுசரிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் யூதர்களிடையே நியுயார்க்கிலுள்ள புருக்ளின் பகுதியில் ஒரு பெரிய சோக நிகழ்ச்சி மார்ச் மாதம் 21-ஆம் தேதி நடந்தது. சனிக்கிழமை யூதர்களுக்கு ஓய்வு தினமாதலால் அன்று தீயை மூட்டக் கூடாது என்பதால் வெள்ளி சூரிய அஸ்தமனத்திற்கு முன் அடுப்பை மூட்டி அன்று இரவு முழுவதும் உணவை சூடாக வைத்திருந்து மறு நாள் குடும்பத்தினருக்கு உணவளிக்கும் ஒரு பழக்கத்தை யூதர்கள் அனுசரிக்கிறார்கள். இப்படி இந்தப் பழக்கத்தை அனுசரிக்கும் ஒரு குடும்பத்தில் ஹாட் பிளேட்டில் ஏதோ கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து வீடு பூராவும் தீ பரவி அந்தக் குடும்பத்தின் எட்டுக் குழந்தைகளில் ஏழு பேரைப் பலிவாங்கியிருக்கிறது.

    இந்தச் சம்பவம் நடந்த பிறகு சநாதன யூதர்கள் வாழும் அந்த வட்டாரம் முழுவதும் மிகவும் கலங்கிப் போயிருக்கிறது. தங்களுக்கும் இந்தக் கதி வந்துவிடக் கூடாதென்பதற்காக பல வித எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாரா வாரம் வரும் இந்த சனிக்கிழமையை எப்படிச் சமாளிப்பதென்று திட்டம் தீட்டி வருகிறார்கள் அந்த வட்டார மக்கள். அந்த ஏரியாவில் உள்ள மின்சாதனங்கள் விற்கும் ஒரு கடையில் நெருப்புப் பிடித்தால் நெருப்பிலிருந்து வரும் புகையைக் கண்டுபிடிக்கும் (smoke detectors) கருவி அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதற்கு மேல் சேமிப்பு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட கடையில் இருந்ததைப் போன்று மூன்று மடங்கு கருவிகளும் விற்றுப்போய்விட்டன. யூதர்களுடைய கோவிலிருந்து இம்மாதிரியான நிறையக் கருவிகள் இனாமாகப் பலருக்கு வழங்கப்பட்டன.

    அந்த வட்டாரத்தில் வசிக்கும் ஒரு யூதர் தன் நான்கு குழந்தைகளுக்கும் வீட்டில் தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று விரிவான பயிற்சி கொடுத்ததோடு வீட்டில் ஆறு கயிற்று ஏணிகளையும் (குடும்பத்தவர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒன்று போலும்) ஜன்னல்கள் அருகே சுத்தியலையும் (ஜன்னலை உடைத்துத் தப்புவதற்கு) வைப்பதற்கு ஏற்பாடு செய்யப் போகிறாராம். தன் குழந்தைகளுக்கு எங்கு, எந்த மாதிரி தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும், எப்படித் தப்பிக்க வேண்டும் என்று பயிற்சிகள் கொடுக்கப் போகிறாராம். ஒன்பதிலிருந்து பதினைந்து வயதுள்ள அவர் குழந்தைகளுக்கு அவர் கொடுக்கப் போகும் பயிற்சியில் ‘அம்மாவுக்காகக் காத்திருக்காதீர்கள். அப்பாவுக்காகக் காத்திருக்காதீர்கள். முதல் முதலாக நீங்கள் செய்ய வேண்டியது வெளியே செல்வது’ என்ற போதனையும் இந்தப் பயிற்சிகளில் ஒன்று.

    பல யூதர்கள் தங்கள் வீடுகளில் உள்ள நெருப்பின் புகையைக் கண்டுபிடிக்கும் கருவி நன்றாக வேலை செய்கிறதா என்றும் கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் அவற்றைக் கடைக்கு எடுத்துச் சென்று கடைக்காரரிடம் பரிசோதித்துக்கொண்டு வர வேண்டும் என்றும் திட்டம் வைத்திருக்கிறார்கள். சிலருடையது மிகவும் பழையதாகிவிட்டதால் அவற்றுக்குப் பதில் புதியவைகளை வாங்கிவந்து மாட்டியிருக்கிறார்கள். தீயணைப்புக் கருவிகளையும் சிலர் வீட்டில் புதிதாக நிறுவியிருக்கிறார்கள். இன்னும் சிலர் வெள்ளியன்று சூரிய அஸ்தமனத்திற்குக் கொஞ்சம் முன்னால் அடுப்பு ‘ஆன்’ ஆகி அவர்கள் படுக்கப் போகும்வரை வேலைசெய்துவிட்டு தானாக ‘ஆஃப்’ ஆகி மறுபடி இவர்கள் சனிக்கிழமை காலையில் எழுந்ததும் தானாக ‘ஆன்’ ஆகி மறுபடி வேலைசெய்வதற்கு ஏற்ற மாதிரியான ஒரு கருவியை (timer) வாங்கி அவர்கள் அடுப்போடு பொருத்தப் போகிறார்கள்.

    ரஷ்யாவில் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டு மடிந்த அனுபவத்தையும் ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய யூதப்படுகொலையையும் யூதர்கள் சேர்ந்து அனுபவித்திருப்பதால் இப்போது இந்த மிகப் பெரிய சோக சம்பவமும் அந்த வட்டாரத்திலுள்ள யூதர்களை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு ஆறு வயதுக் குழந்தை இரவில் இடையிடையே எழுந்து அழுகிறதாம். ஏழு குழந்தைகளை இழந்த குடும்பத்திற்கு அருகே வசித்த ஒரு பெண் மிகவும் அதிர்ந்து போயிருக்கிறார். ‘இறைவன் ஏன் இப்படி அவர்களைச் சோதித்தார்?” என்று கேட்பதோடு, ’இது இறைவன் செயல். அதை ஏன் என்று கேட்க நான் யார்?’ என்றும் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறார்.

    இப்படி சோகத்தில் அமிழ்ந்து போயிருக்கும் இந்த யூதர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்கள் இந்த சோகத்தை எதிர்கொண்டு மறப்பதற்கு ஒரு மதத்லைவர் தலைமையில் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். இம்மாதிரியான சோக சம்பவங்களின்போது நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்திருப்பது ஒன்றுதான் நம் எல்லோருக்கும் பலத்தைக் கொடுப்பது என்று அவர் கூறியிருக்கிறார்.

    இந்த மாதிரி இன்னொரு சோகச் சம்பவம் நடந்துவிடக் கூடாதென்று பல முன்னேற்பாடுகளை இந்த யூதர்கள் செய்துவருகிறார்கள். ஆனால் ஒருவருக்காவது மூட நம்பிக்கையில் பிறந்த இந்த ஓய்வு நாள் பழக்கத்தை ஏன் விட்டொழிக்கக் கூடாது என்று கேட்கத் தோன்றவில்லை. அன்று சமைக்காமலே சாப்பிடக் கூடிய பழங்கள் போன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டு சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டிக்கலாம் என்று ஏன் ஒருவருமே நினைக்கவில்லை? கால மாற்றத்திற்கேற்பத் தங்களையும் தங்கள் சடங்குகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஏன் இந்த யூதர்கள் நினைக்கவில்லை?

    Share
  • மத நம்பிக்கை தந்த சோகம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நியூயார்க் நகரிலுள்ள ப்ருக்ளின் என்னும் பகுதியில் வசித்துவந்த ஒரு யூதக் குடும்பத்தின் ஏழு குழந்தைகள் ஒரே நேரத்தில் தீக்கிரையாகி இறந்திருக்கிறார்கள். யூதர்களுக்கு ஒவ்வொரு வார சனிக்கிழமையும் ஓய்வு நாள். வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை யூதர்கள் முழு ஓய்வெடுக்க வேண்டும் என்பது யூத மதத்தின் விதி. அன்று எந்த விதமான வேலையும் செய்யக் கூடாது. மின்சாரத்தில் இயங்கும் எந்தக் கருவியையும் உபயோகப்படுத்தக் கூடாது. அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்களில் வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை (24 மணி நேரம்) லிப்ட் கீழ் தளத்திற்கும் மேல் தளத்திற்கும் இடையே ஓடிக்கொண்டே இருக்குமாம். அங்கு வசிக்கும் யூதர்கள் லிப்டில் உள்ள பட்டனைத் தொட்டு அமுக்கி அதை இயக்கக் கூடாதாகையால் இந்த ஏற்பாடு. அவர்களுடைய தளத்திற்கு வரும்போது அதில் ஏறிக்கொள்வார்கள்; போக வேண்டிய தளத்தில் இறங்கிக்கொள்வார்கள். அதை யூதர்கள் அன்று இயக்குவதில்லை. அந்த லிப்ட் அந்த இருபத்து நாலு மணி நேரமும் மேலும் கீழும் போய்க்கொண்டிருப்பதோடு ஒவ்வொரு தளத்திலும் சிறிது நேரம் நின்று கதவைத் திறந்துவிட்டு, மறுபடி மூடிக்கொண்டு மறுபடி இயங்க ஆரம்பிக்கும்.

    புராதன நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கிற ஒவ்வொரு யூதரும் அன்று தொலைபேசியில் யாரோடும் பேசுவதில்லை. எந்தவித தீயையும் மூட்டுவதில்லை. இந்த மாதிரியான கட்டுப்பாடுகளோடு ஒவ்வொரு சனிக்கிழமையும் வாழ்ந்துவந்த ஒரு சநாதன யூதக் குடும்பம்தான் மேலே சொன்ன ஏழு குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பம். சனிக்கிழமை முழுவதும் மின் அடுப்பை மூட்டிச் (அதாவது அதிலுள்ள பட்டன்களை இயக்கி) சமைக்க முடியாததால் நிறைய உணவு சமைத்து அதை எப்போதும் சூடாக வைத்திருக்கும் ஹாட் பிளேட் (hot plate) என்னும் அடுப்பில் வைத்துவிட்டு அன்று இரவு தாய் உறங்கச் சென்றிருக்கிறார். இந்த சாதனத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு அதில் தீப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தாயும் அவருடைய எட்டுக் குழந்தைகளும் மேல் மாடி அறையில் தூங்கிகொண்டிருந்திருக்கிறார்கள். தந்தை மட்டும் மத சம்பந்த வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருக்கிறார்.

    பற்றி எரிந்த தீ தூங்கிக்கொண்டிருந்தவர்களில் யாரும் எழுந்திருக்கும் முன் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குத் தாவியிருக்கிறது. தாயும் இரண்டாவது மகளும் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே குதித்திருக்கிறார்கள். மற்ற ஏழு குழந்தைகளும் விழித்தெழுந்து உதவி கேட்டுக் கதறிய சில நிமிடங்களிலேயே தீ அவர்கள் அனைவரையும் காவுகொண்டுவிட்டது. ஜன்னல் வழியே வெளியே குதித்த தாயும் மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். செல்போனை அன்று இயக்க மாட்டார் என்பதால் தனது ஏழு குழந்தைகளை இழந்த தந்தைக்கு பல மணி நேரம் கழிந்த பின்னரே செய்தி கிடைத்திருக்கிறது. அப்போது அவர் ஒரு யூதக்கோவிலில் இருந்திருக்கிறார். காவல் துறையினர் அவருடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரிடம் செய்தி சொல்ல அத்தனை நேரம் பிடித்திருக்கிறது. இறந்துபோன ஏழு குழந்தைகளில் நான்கு பையன்கள், மூன்று பெண்கள். இந்த எட்டுக் குழந்தைகளும் 16-லிருந்து 5-வரை வயதுடையவர்கள்.

    இந்தத் தாய் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின் இஸ்ரேலில் குடியேறியிருக்கிறார். அங்கு அந்தத் தம்பதிகளுக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்த பிறகு ஒட்டு மொத்தக் குடும்பமும் பதினெட்டு மாதங்களுக்கு முன் அமெரிக்காவுக்குக் குடியேறியிருக்கிறது. (இஸ்ரேலிய யூதர்கள் அனைவருக்கும் எளிதாக அமெரிக்காவுக்குக் குடிபெயர அமெரிக்கா விசா கொடுக்கிறது. அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் எந்தக் கோடியில் பிறந்த யூதருக்கும் இஸ்ரேலில் குடியேற எளிதாக அனுமதி கிடைக்கும்.) தந்தை இஸ்ரேலில் என்ன செய்தார், அமெரிக்காவில் என்ன செய்யத் திட்டம் வைத்திருந்தார் என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் புதிய நம்பிக்கைகளோடு தன் குழந்தைகள் இருந்ததாகத் தந்தை குழந்தைகளுக்கான இரங்கல் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

    இறந்த ஏழு குழந்தைகளின் உடல்களையும் புனித பூமியான ஜெருசலேமுக்குக் கொண்டுபோய் அங்கு நல்லடக்கம் செய்திருக்கிறார்கள். மதத்தின் பாரம்பரியக் கொள்கைகளில் நம்பிக்கையுடைய யூதர்கள் தாங்கள் இறந்த பிறகு தங்களுடைய உடல்கள் ஜெருசலேமில் புதைக்கப்பட்டால்தான் தங்களுடைய கடவுள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பூமிக்கு வரும்போது தங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நம்புகிறார்கள். இப்படித்தான் இந்தத் தந்தையும் நம்புவதால் அவருடைய குழந்தைகளின் உடல்கள் ஜெருசலேமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஈமச் சடங்குகளின் போது பேசிய தந்தை ‘இறைவன் கொடுத்ததை அவரே எடுத்துக்கொண்டுவிட்டார்’ என்று பேசியிருக்கிறார். இன்னொரு மதத் தலைவர் ‘இது கடவுளின் தீ’ என்று கூறியிருக்கிறார்.

    யூத மதத்தில் மட்டுமல்ல, எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட நிறைய மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒரு மூட நம்பிக்கையே இந்தக் குடும்பத்தின் மிகப் பெரிய சோகத்திற்கு ஆதாரமாக அமைந்துவிட்டதே என்பதை நினைக்கும்போது இம்மாதிரியான பாரம்பரிய மத நம்பிக்கைகள் உடையவர்கள் எப்போதுமே மாறப் போவதில்லையா என்ற ஆதங்கம்தான் உண்டாகிறது. மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாங்களும் தங்கள் மதமும் தோன்றியதாகக் கூறிக்கொள்ளும் யூதர்கள் தங்கள் மூதாதையர் என்ன செய்தார்களோ அதை அப்படியே பின்பற்ற வேண்டுமா? ஒவ்வொரு வார சனியன்றும் ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் இந்த விதியின் அடிப்படை. பூமியை ஆறு நாட்களில் படைத்த இறைவன் சனிக்கிழமை ஓய்வெடுத்தாராம். அதைப்போல் யூதர்களும் அன்று முழு ஓய்வு எடுக்க வேண்டுமாம். அதை லிப்டை இயக்காமலும் மின் அடுப்பை உபயோகிக்காமலும் இருப்பதன் மூலம்தான் கடைப்பிடிக்க வேண்டுமா? அவர்கள் மூதாதையர் காலத்திற்கும் இவர்கள் காலத்திற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கின்றன. காலத்திற்குத் தகுந்தவாறு மாறிக்கொண்டு வேறு வகையில் சனிக்கிழமை விரதத்தை அனுசரிக்கலாமே.

    Share
  • சாப்பிடுபவர்கள் பலவிதம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    images (2)

    இந்தியாவில் நான் வளர்ந்துவரும்போது ‘எனக்குச் சாப்பிடப் பிடிக்கும் என்று சொல்பவர்கள் யாரையும் சந்தித்ததில்லை. நிறையச் சாப்பிடுகிறார்கள் என்று நினைப்பவர்களை மற்றவர்கள் வேண்டுமானால் – அவர்கள் நிறையச் சாப்பிடுகிறார்களோ என்னவோ மற்றவர்கள் அப்படி நினைத்துக்கொண்டால் – கொஞ்சம் இளக்காரமாகக் குறிப்பிடுவார்கள். இந்தியாவில் யாரையும் ‘சாப்பாட்டு ராமன்’ என்று எளிதில் கூறிவிடுவார்கள்.

    ஒரு முறை நான் பதின்ம வயதினளாக இருந்தபோது நெருங்கிய உறவினர் வீட்டிற்குக் கிருகப்பிரவேச (அப்போது புதுமனை புகுவிழா என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள்) வைபவத்திற்குச் சென்றிருந்தோம். விசேஷம் முடிந்துவிட்டாலும் நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷம் என்பதால் அன்று இரவு அவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டு மறு நாள் எங்கள் ஊருக்குத் திரும்புவதாக ஏற்பாடு. கிருகப் பிரவேசத்திற்குச் சமைத்த சாப்பாடு நிறைய மிஞ்சிவிட்டது. வீட்டுச் சொந்தக்கார அம்மாள் மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி அதைப் ‘பழைய சாதமாக’வும் மிஞ்சிய சாம்பார், ரசம் மற்றும் பொரியல்களை ‘சுண்டக் குழம்பாகவும்’ மாற்றிவிட்டார். மறு நாள் பெண் விருந்தினர்களுக்கு அதைக் காலை உணவாகக் கொடுப்பது என்று முடிவாகியது. (இந்தியாவில் ஏழைகளுக்கா பஞ்சம். மிஞ்சிய உணவைக் கொடுப்பதற்கு எத்தனையோ பேர் கிடைத்திருப்பார்கள். ஏன் அப்படிச் செய்யவில்லை என்று தெரியவில்லை.) விருந்தினர்களில் கூட ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு விதமாக நடத்தியிருக்கிறார்கள். ஆண் விருந்தினர்களை வீட்டுச் சொந்தக்காரர் காலை உணவிற்கு ஓட்டலுக்குக் கூட்டிப் போவதாக ஏற்பாடு. அப்படிச் சென்ற உறவினர்களில் ஒருவரைப் பற்றி என் தந்தையிடம் வீட்டுச் சொந்தக்காரர் ‘இவன் நிறையச் சாப்பிடுவான். அதிலும் ஓட்டல் பலகாரங்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும்’ என்றாராம். அந்த உறவினருக்கு நிறையச் செலவழிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு என் தந்தைக்கு மனதில் பெரிய சுமையை ஏற்றியதுபோல் இருந்திருக்கும் போலும். அதை ஆற்றிக்கொள்ள என்னிடம் சொன்னார். எனக்கும் அதைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருந்தது. நிறையச் சாப்பிடுவதாகச் சொன்ன அந்த உறவினர் வசதியில்லாதவர். பிறர் வாங்கிக் கொடுத்தால் நன்றாகச் சாப்பிடுவார் போலும். அது உண்மையாகவே இருந்தாலும் அந்தப் பணக்கார உறவினர் – கிருகப்பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர் – அதைக் குறையாகச் சொல்லலாமா? தன் வீட்டு விசேஷத்திற்கு அத்தனை செலவு செய்திருந்தார். இன்றளவும் நான் இதை மறக்கவில்லை. வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

    அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று நான் யாரையும் எப்போதும் விமர்சித்ததில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினர் நான் சமைத்ததை ரசித்துச் சாப்பிட்டால் மனதிற்கு நன்றாக இருக்கும். நான் சமைப்பது அவர்களுக்குப் பிடிக்கிறது என்றால் மறுபடி அவர்களை வீட்டிற்கு விருந்திற்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உண்டாகும். என் கணவர் மத்திய அரசின் அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்தபோது அவருடன் வேலை பார்த்தவர்களில் யார் வீட்டிற்காவது விருந்திற்குப் போவோம் அல்லது யாரையாவது வீட்டிற்கு அழைப்போம். யார் வீட்டிற்குப் போனாலும் எனக்குப் பிடித்த உணவாக இருந்தால் எல்லோருக்கும் தேவையான அளவு இருந்தால் எந்த ‘பிகு’வும் பண்ணாமல் நன்றாகச் சாப்பிடுவேன். நிறையச் சாப்பிடுகிறார்கள் என்று விருந்திற்கு அழைத்தவர்களோ விருந்திற்கு வந்த மற்றவர்களோ நினைப்பார்களே என்று நினைப்பதில்லை.

    என் கணவரோடு வேலைபார்த்த ஒரு பெண் எனக்கு நல்ல தோழி. அவருடைய கணவர் வேறு ஊரில் வேலைபார்த்தார். அவர் தனியாக இருந்ததால் அடிக்கடி என்னை அவர் வீட்டிற்குக் கூப்பிடுவார். நானும் என் மகள்களும் போவோம். அவருக்குப் பொதுவாகச் சமைக்கவே பிடிக்காது. ஆனால் நாங்கள் போகும்போதெல்லாம் ஏதாவது எங்களுக்காகச் சமைப்பார். நாங்கள் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு வருவோம். ஆனால் அவர் நிறையச் சாப்பிடுவதில்லை. எப்போதாவது என் கணவர் உடன் வந்தால் நாங்கள் மட்டும் போகும்போது சாப்பிடுவதைவிடக் குறைவாகவே சாப்பிடுவார். என் கணவரின் அலுவலகத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‘pot luck’ விருந்து நடத்துவோம். எல்லோரும் அவரவர் வீட்டிலிருந்து சமைத்த உணவைக் கொண்டுவர வேண்டும். பின் எல்லோரும் எல்லார் உணவுகளையும் உண்டு மகிழ்வோம். அந்த விருந்தில் மேலே குறிப்பிட்ட என் தோழி கடைசியாக இனிப்பிற்காக வைத்திருக்கும் சிறிய தட்டில் உணவுகளைக் கொஞ்சமாக எடுத்துக்கொள்வார். மறு முறை போய் ஏதாவது பிடித்திருந்தாலும் அதை எடுத்துச் சாப்பிடுவது என்பது கிடையாது. பலர் முன்னிலையில் தான் மிகவும் கொஞ்சமாகச் சாப்பிடுபவர் என்று காட்டிக்கொள்வதுபோல் எனக்குத் தோன்றும். இவர் தனியாகத் தன் வீட்டில் இருக்கும்போது உண்ணும் உணவின் அளவுதான் இவர் நார்மலாகச் சாப்பிடும் அளவு என்று நினைக்கிறேன்.

    இந்த ‘pot luck’ விருந்தை என் கணவரின் அலுவலகத்தில் முதலில் ஏற்பாடு செய்ததே நானும் என் கணவரும்தான். (அமெரிக்காவில் ஐந்து வருடங்கள் வாழ்ந்து கற்றுக்கொண்ட பழக்கங்களில் ஒன்று.) அன்று அலுவலகத்தின் இயக்குனர் முதல் தோட்டவேலை செய்பவர்கள் வரை அனைவரும் அன்று சமம். எல்லோரும் வரிசையில் நின்று மேஜை மேல் பரப்பப்பட்டிருக்கும் உணவுகளில் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு சாப்பிடலாம். இந்த உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் சிலர் ‘கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் முதலில் வந்து எடுத்துக்கொள்கிறார்களே’ என்பார்கள். அவர்களும் ஒரு நாள் நன்றாகச் சாப்பிடட்டும் என்பதற்காகத்தானே இந்த விருந்தையே ஏற்பாடு செய்தது என்பதைப் பலர் புரிந்துகொள்வதில்லை.

    அமெரிக்காவில்தான் நான் முதல் முதலாக எனக்குச் சாப்பிடப் பிடிக்கும் (‘I love to eat’) என்ற வார்த்தைகளைக் கேட்டேன். அமெரிக்காவில் உணவு அபரிமிதமாகக் கிடைப்பதும் எல்லோரும் வேண்டிய அளவு சாப்பிடலாம் என்பதும் (அமெரிக்காவிலும் சிலர் பசியோடு படுக்கப் போகிறார்கள் என்கிறார்கள். எனக்கு ஒருபோதும் இது எப்படி என்று புரிந்ததில்லை.) காரணங்களாக இருக்கலாம். இந்தியாவில் ‘எனக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சாப்பிடப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நான் சந்தித்ததில்லை. நண்பர்கள் வீட்டிற்கோ உறவினர்கள் வீட்டிற்கோ விருந்திற்குப் போனால் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத அயிட்டங்களையும் சமைத்தவர்களுக்கு நன்றாக இருக்கும் என்பதால் சாப்பிட்டுவைப்பேன். அமெரிக்கர்கள் அப்படியில்லை. பிடிக்கவில்லை என்றால் அப்படியே வைத்துவிடுவார்கள். உணவு உட்பட எதையும் வீணாக்கும் பழக்கம் அமெரிக்கர்களிடம் அதிகம் இருப்பதால் இப்படிச் செய்கிறார்கள் போலும்.

    ஒரு முறை ஒரு அமெரிக்கத் தோழி என்னை ஒரு பீட்ஸா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். பீட்ஸாவை ஆறு துண்டுகளாகக் கொடுக்கும்படி சர்வரிடம் கூறினார். எனக்கு மூன்று, அவருக்கு மூன்று. எனக்கு பீட்ஸா பிடிக்கும் என்பதாலும் என் பற்கள் ஆரோக்கியமாக இருந்ததாலும் விரைவாகச் சாப்பிட்டேன். அவருக்கோ செயற்கைப் பற்கள். அதனால் பீட்ஸாவை மென்று தின்பதற்கு அதிக நேரம் எடுத்தார். ‘நீங்கள் நன்றாகச் சாப்பிடுகிறீர்கள்’ (You are a good eater) என்று எனக்கு நற்சான்று வழங்கினார். கூடவே ‘நான் இதைப் பாராட்டாகத்தான் சொல்கிறேன்’ என்றும் சொல்லிக்கொண்டார். நான் இந்தியன் என்பதால் தவறாக எடுத்துக்கொள்வேனோ என்று நினைத்திருக்கலாம்.

    அமெரிக்காவில் ஒரு இடத்தில் கூடுபவர்களிடையே உணவைப் பரிமாறிக்கொள்வது அவ்வளவாகக் கிடையாது. இந்தியாவில் என் மகள்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது அவர்களுடைய பள்ளித் தோழிகளுக்கு என் சமையல் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவர்களோடு பகிர்ந்துகொள்வதற்காகவே என் மகள்களுடைய லஞ்ச் பாக்ஸில் அவர்களுடைய தேவைக்கு மேலேயே கொடுத்துவிடுவதுண்டு. அமெரிக்காவில் அப்படிக் கொடுப்பவர்களும் இல்லை; அதைப் பெற்றுக்கொள்பவர்களும் இல்லை.

    இந்தியாவில் தின்பண்டங்கள் விற்கும் கடைகள் போன்ற பேக்கரிகளுக்கு முன்னால் நிறையத் தெருநாய்கள் நின்றுகொண்டிருக்கும். பேக்கரிக்கு வருபவர்கள் அவற்றைக் கொஞ்சம் கூட கண்டுகொள்வதில்லை. நாய்களை விடுங்கள். அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கே இவர்கள் எதுவும் கொடுப்பதில்லை. மற்றவர்கள் சாப்பிடும்போது அதை ஏக்கமாகப் பார்க்கும் ஏழைகள் இந்தியாவில் அதிகம். அமெரிக்காவில் அப்படி ஒரு வகை ஜனங்கள் இல்லாதது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். Junk food என்னும் மலிவான உணவை உண்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பசிக்கும்போது சாப்பாட்டிற்குப் பிறர் கையை எதிர்பார்ப்பவர்கள் இல்லை.

    அமெரிக்கா வந்தபிறகு என் மகள் மற்றும் மூன்று மாணவிகளோடு ஒரே அறையில் சேர்ந்து வாழ்ந்துகொண்டு படித்துக்கொண்டிருந்தபோது எல்லாரும் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற பாடத்தை அவர்கள் பெற்றோர் கற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை. ‘இவ்வளவு இருக்கிறது. அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்ற எண்ணம் இருப்பதில்லை. கூட்டுக் குடும்பங்களிலும் இப்படிப் பகிர்ந்து உண்ணாமை சிலரிடம் இருக்கும். முதலில் சாப்பிடுபவர்கள் வேண்டிய அளவு சாப்பிட்டுப் பின்னால் வருபவர்களுக்குக் குறைவாக வைத்துவிடுவார்கள். குழந்தைகள் வளர்ந்து வரும்போதே பெற்றோர்கள் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

    உணவைத் தானே உண்பதிலும் பகிர்ந்து உண்பதிலும் இப்படிப் பல வகை.

    Share
  • தனி நபர் துதியின் எல்லை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் தமிழக அரசின் முதல்வர் – ஜெயலலிதாவின் ஆதரவாளர்களால் என்றென்றும் தமிழக மக்களின் முதல்வர் என்று அழைக்கப்படுபவர் – ஜெயலலிதா அதை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தற்போது அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து வழக்கிலிருந்து அவர் விடுதலை பெற வேண்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரார்த்தனைகள் அ.தி.மு.க.வினரால் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை மேயர் 1008 ஓமகுண்டங்களை வளர்த்து 1008 பிராமணர்களை வைத்துப் பூஜைகள் நடத்தியிருக்கிறார். இவையும், குறிப்பாக ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், அவரது விடுதலைக்காகச் செய்யப்பட்ட வழிபாடுகளாகத்தான் இருந்தன. அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை தங்கள் தெய்வமாகவே கொண்டாடட்டும்; அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கட்டும்; அந்தத் தெய்வத்தை யாரும் தண்டிக்க முடியாது என்று நினைக்கும் அறிவிலிகளாக இருந்துவிட்டுப் போகட்டும். அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.

    ஆனால் இப்போது அவர் வழக்கிலிருந்து விடுதலை பெற தமிழக அரசின் அறநிலையத் துறை ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் பற்றிய தகவல்கள்தான் இவர்கள் செய்யும் செயல்களின் அறியாமையால் வேதனையையும் தமிழக மக்களின் வரிப் பணத்தை இப்படி செலவழித்து தமிழக அரசின் கஜானாவைக் காலிபண்ணுகிறார்களே என்பதால் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.

    அறநிலையத் துறை வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ள செய்திகள்: தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 32,000-க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் உள்ளனவாம். இதில் பல பெரிய கோவில்கள்; மற்றவை சிறியவை. இவற்றில் இருந்து தினமும் ஐந்து கோவில்களில் வழிபாடு நடத்தப்பட்டு அதன் பிறகு அந்த பிரசாதங்கள் அந்தந்த கோவில் ஊழியர்களால் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஒப்படைக்கப்படுகின்றனவாம். காலை பத்து மணிக்கு பார்த்தசாரதி கோவிலை வந்தடையும் இந்தப் பிரசாதங்களை பார்த்தசாரதி கோவில் அதிகாரி ஒருவர் ஜெயலலிதாவின் வீட்டில் சமர்ப்பித்துவிடுவாராம். கடந்த மூன்று மாதங்களாக நாள் தவறாமல் இப்பணி நடந்து வருகிறதாம். ஒவ்வொரு கோவிலிலிருந்தும் அந்தக் கோவில் ஊழியர்கள் பிரசாதத்தை பார்த்தசாரதி கோவிலுக்கு எடுத்து வரும் செலவை அறநிலையத் துறையே ஏற்றுக்கொள்கிறதாம். என்றைக்கு எந்தெந்த கோவிலிலிருந்து பிரசாதம் வர வேண்டும் என்பதையும் அறநிலையத் துணை ஆணையர்களே முடிவுசெய்கிறார்களாம்.

    இப்படிப் பூஜை நடத்துபவர்களும் பரிகாரம் செய்பவர்களும் இறைவன் இளிச்சவாயன் என்று நினைக்கிறார்கள் போலும். தவறு செய்தவர்களை அவர்கள் தவறு செய்தவர்கள்தானா, அந்தத் தவற்றுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா என்று நீதிமன்றம் பரிசீலித்துக்கொண்டிருக்கும்போது இடையில் புகுந்து, குற்றம்சாட்டப்பட்டவர் தவறு செய்யவில்லை என்று இவர்கள் நினைப்பதால் அவரை விடுவிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுபவர்கள் இறைவனை இளிச்சவாயன் என்று நினைக்காமல் வேறு என்ன நினைக்கிறார்கள்?

    இறைவனை இளிச்சவாயன் என்று அம்மாவின் பக்தர்கள் நினைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இவர்கள் தமிழக அரசின் அறநிலையத் துறையிலிருந்து இந்த பூஜைகளுக்கும் பரிகாரங்களுக்கும் பணம் செலவழிப்பது சட்டப்படி சரியில்லை என்பதை இதுவரை யாரும் உணரவில்லையா? முதலாவதாக, மதச்சார்பற்ற ஒரு அரசின் பணத்தை ஒரு மதத்தின் – அதாவது இந்து மதத்தின் – செயல்களுக்கு மட்டுமே செலவிடுவது சட்டப்படி குற்றம். இரண்டாவதாக, தனி மனிதர் நன்மைக்காக ஒருவருக்கு அரசு பொதுப் பணத்தைச் செலவிடுவதும் குற்றம். மூன்றாவதாக, கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு மேல்நீதிமன்றத்தில் இன்னும் அக்குற்றத்திலிருந்து விடுவிக்கப்படாதவருக்குப் பூஜைகள் செய்வதற்கு அரசு பணத்தைச் செலவிடுவதும் குற்றம்.

    இப்படிக் குற்றங்கள் புரிந்துவரும் தமிழக அரசின் அறநிலையத் துறையின் செயல்களைத் தடுக்க யாருமே முன்வரவில்லையா? இதுதான் தமிழகத்தில் ஜனநாயகம் செயல்படும் முறையா? தமிழக மக்கள் இவ்வளவு அறிவிலிகளா? தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.

    பி.கு. இது கட்டுரையாளர் நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. வல்லமையின் கருத்து அல்ல  – ஆசிரியர்

    Share