இந்திய ஜனநாயகம் பயணிக்க வேண்டிய தூரம்

0

நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்காவில் இல்லினாய் மாநில ஆளுநராக இருந்தவர் ப்ளகோஜேவிச்.  இவர் தன்னோடு தொடர்புடைய பொது நிறுவனங்களுக்கும் தன் தேர்தல் நிதிக்கும் பணம் சம்பாதிக்கச் செய்த ஊழல்களுக்காகவும் தன் சொந்த நலன்களுக்காகச் செய்த ஊழல்களுக்காகவும் மத்திய அரசைச் சேர்ந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் இவரைக் கைதுசெய்து அவர் மீது சாட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆதாரங்கள் மூலம் நிரூபித்து அவருக்கு பதினான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்தார்.  ப்ளகோஜேவிச் எப்போதும் 4000 டாலர்கள் பெறுமான, பிரத்தியேகமாக அவருக்காகத் தைக்கப்பட்ட கோட்டு, சூட்டுகளையே அணிவார்.  2016-இல் ஜனநாயக் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய வாய்ப்புக்களைப் பெற்றிருந்தார்.  இப்படிப் பிரபலமாக இருந்தவர் சிறையில் கழிப்பறைகளை மணிக்கு 12 காசுகள் பெற்றுக்கொண்டு சுத்தம் செய்து வருகிறார்.  இவர் செய்த ஊழல்கள் என்ன?

2002-இல் ப்ளகோஜேவிச் இல்லினாய் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அமெரிக்காவில் ஆளுநர் தேர்தலுக்கு முன் இரண்டு கட்சியிலும் ஆளுநர் தேர்தலில் பங்குகொள்ள விரும்புவோர் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கும் முதல்நிலைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.  முதல்நிலைத் தேர்தலில் வெற்றிபெற்ற இரண்டு கட்சி வேட்பாளர்களும் பின் ஆளுநர் தேர்தலில் போட்டியிடுவார்கள்.  இப்படிப் போட்டியிட்டு இல்லினாய் மாநில ஆளுநராகப் பதவியேற்றவர் ப்ளகோஜேவிச்.  ஆளுநரின் பதவிக் காலமான நான்கு ஆண்டுகள் முடியும் முன்பே இவர் மீது பலவிதக் குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்தன.  இருப்பினும் 2006-இல் மறுபடி ஆளுநர் தேர்தலில் வெற்றிபெற்றார்.  தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்கள் மூலம் பிறரோடு உறவாடும்போது லஞ்சம் கேட்டதால் மத்திய அரசின் புலனாய்வுத்துறை இவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கத் தொடங்கியது.  நீதிமன்றத்தின் அனுமதியோடு மத்திய அரசின் பப்ளிக் பிராசிக்யூட்டர் இவர் தொலைபேசியில் பேசும் பேச்சுக்களை ரகசியமாகப் பதிவுசெய்தார்.

ப்ளகோஜேவிச் மாநில அரசின் பல துறைகளிலிருந்து எப்படிப் பணம் சம்பாதிக்கலாம் என்று தன் உதவியாளரோடு திட்டம் தீட்டியிருக்கிறார்.  தன் ஊழலை அம்பலப்படுத்த முயன்ற பத்திரிக்கைக்கு மாநில அரசு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க மறுத்திருக்கிறார்.  தேர்தல் நிதிக்காக 50,000 டாலர் பணம் எதிர்பார்த்து குழந்தைகள் மருத்துவமனைக்கு எட்டு மில்லியன் டாலர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

இப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2008-இல் அமெரிக்க செனட்டில் இல்லினாய் மாநிலப் பிரதிநிதியாக, செனட்டராக இருந்தார்.  அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செனட்டர் பதவியை ராஜினாமாச் செய்தார்.  அந்தப் பதவிக்கு தேர்தல் வைக்காமலேயே இன்னொருவரை நியமிக்கும் உரிமை இல்லினாய் ஆளுநரான ப்ளகோஜேவிச்சிற்குக் கிடைத்தது.  அந்த உரிமையைப் பயன்படுத்தி அவர் தனக்கும் தன் மனைவிக்கும் ஆதாயம் தேட முயன்றார்.

இந்த ஊழல்களுக்குத் தகுந்த சாட்சியங்கள் கிடைத்ததும் உடனேயே ப்ளகோஜேவிச்சையும் அவருடைய உதவியாளரையும் அவர்களுடைய வீடுகளிலேயே கைதுசெய்ய பப்ளிக் பிராசிக்யூட்டர் ஏற்பாடு செய்தார்.  சில மாதங்களிலேயே விசாரணை முடிந்து தீர்ப்பும் அளிக்கப்பட்டு ப்ளகோஜேவிச்சிற்கு பதினான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.  மேல்முறையீடு செய்யும் உரிமை இருந்தும் பிராசிக்யூட்டர் சேகரித்திருந்த ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் அதில் பயன் இல்லை என்று எண்ணி ப்ளகோஜேவிச் மேல்முறையீடு செய்யவில்லை.  அவர் செய்த, செய்யவிருந்த இந்தக் குற்றங்களுக்கே அவருக்கு பதினான்கு ஆண்டுகள் தண்டனை கிடைத்திருக்கிறது.  அவர் சிறையிலிருந்து வெளியே வரும்போது சிறையில் தலைக்குச் சாயம் பூசிக்கொள்ளும் வசதி இல்லாததால் தலை முழுவதும் வெளுத்துவிடும் என்று ஒரு பத்திரிக்கை கேலிசெய்திருக்கிறது.

நியூயார்க் மாநில அரசியலில் முக்கிய அதிகாரம் வகிப்பவர்கள் அதன் மேலவைத் தலைவர், கீழவைத் தலைவர், ஆளுநர் ஆகியோர்.  இந்த மூன்று பேர்களில் முதல் இரண்டு பேர் மீது லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடக்கப் போகிறது.  இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட உடனேயே அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே அவர்களை விட்டு விலக ஆரம்பிக்கிறார்கள்.  மேலவைத் தலைவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்; கீழவைத் தலைவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.

குற்றம் செய்த எவரையும் அமெரிக்க நீதித்துறை விட்டுவைக்காது.  இது அமெரிக்க ஜனநாயகம் செயல்படும் முறை.

இந்தியாவில் ஒரு மாநில முதல்வர் தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும் என்றாலும் முதல்வர் பதவிக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்த அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  ஆனாலும் இவர்தான் கட்சியில் எல்லாம்.  அவர் வைத்ததுதான் சட்டம்.  தமிழ்நாட்டு முதல் மந்திரியாக அவருடைய கட்சி அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சியில் அவருடைய வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேகரித்தார் என்று ஒரு வழக்கு அவர் மேல் போடப்படுகிறது.  குற்றம் சாட்டப்பட்டவர் ஒவ்வொரு கட்டத்திலும் வாய்தா கேட்கிறார்.  மறுப்பு எதுவும் சொல்லாமல் நீதிபதியும் கொடுக்கிறார்.  ஒவ்வொரு கட்ட விசாரணைக்கும் ஏதாவது ஒரு மறுப்புத் தெரிவித்து வழக்கின் அந்தப் பகுதி உச்சநீதிமன்றம் வரைக்கும் கொண்டுசெல்லப்படுகிறது.  இப்படியே பதினெட்டு ஆண்டுகள் வழக்கு நடந்து கடைசியில் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது.  குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.  அவர் மேல்முறையீடு செய்கிறார்.  அதற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.  கீழ்நிலைக் கோர்ட்டில் தண்டிக்கப்பட்டவருக்கு அடுத்த மேல் கோர்ட்டில் விடுதலை கிடைக்கிறது.  வழக்கை விசாரித்த நீதிபதி பிராசிக்யூசன் தரப்பு வாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.  நீதிபதியே பிரதிவாதியின் வக்கீல் ஆகிவிட்டார்.  குற்றம் சாட்டப்பட்டவர் ஒரே ஒரு ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டு கோடி கோடியாகச் சம்பாதித்திருக்கிறார்.  இதற்கு ஆதாரம் காட்டவில்லை என்கிறார் நீதிபதி.  எந்தத் தொழிலும் இல்லாத பினாமி கம்பெனிகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வந்ததாக பிரதிவாதி சொல்வதை நீதிபதி ஒப்புக்கொள்கிறார்.  வளர்ப்பு மகன் திருமணத்தை அது கின்னஸ் புக்கில் இடம்பெறும் அளவிற்கு ஆடம்பரமாக நடத்தியிருக்கிறார்.  திருமணத்திற்கான கோடிக்கணக்கான செலவை பெண் வீட்டார் செய்திருப்பார்கள் என்று தானே நீதிபதி முடிவுசெய்துகொள்கிறார்.  வீட்டில் கோடி கோடியாகப் பெறும் தங்க, வைர நகைகளும் சேகரித்துவைத்திருக்கிறார் பிரதிவாதி.  வீட்டில் நான்கு பேர் சேர்ந்து வாழ்ந்ததனால் எல்லோருக்கும்சேர்த்து அத்தனை புடவைகளும் செருப்புகளும் நகைகளும் அதிகம் இல்லை என்கிறார் நீதிபதி.  பல கோடி பெறுமான எண்ணிலடங்கா பங்களாக்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்.   இவை கண்ணுள்ள எல்லாருக்கும் தெரியும்.  பங்களாக்கள் கட்டியதற்கும் தோட்டங்கள் வாங்கியதற்கும் ஆகியிருக்கக் கூடிய செலவு என்று நீதிபதி கணக்குப் போட்டிருப்பதைப் பார்த்தால் தமிழ்நாட்டில் ஆடம்பர பங்களாக்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கும் போலும் என்று யாரும் நினைக்கலாம்.  இவையெல்லாம் எங்கிருந்து வந்ததென்று நிரூபிக்கவில்லை என்பது நீதிபதியின் வாதம்.  இவையெல்லாம் அவர் அரசியலுக்கு வரும் முன்பே சம்பாதித்த பணம் என்றும் பின் கம்பெனிகளில் சம்பாதித்த பணம் என்றும் வாதாடிய குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கூறியதை அப்படியே ஒப்புக்கொண்டிருக்கிறார் நீதிபதி.  மேலும் பிரதிவாதி சார்பில் இப்படியெல்லாம் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறார் நீதிபதி.

குற்றம் சாட்டப்பட்டவர் தவறாகத் தன் மீது சாட்டப்பட்ட குற்றத்திலிருந்து மீண்டு புடம் போட்ட தங்கமாக வந்திருப்பதாக மார் தட்டிக்கொள்கிறார்.  குற்றம் சாட்டப்பட்டவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை, அவருடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டது சரி என்று சாதிக்க ஒரு கூட்டம்.  அவருடைய வழக்கறிஞர்களின் வாதத்தை அடிப்படையாக வைத்து தீர்ப்புக் கூற ஒரு நீதிபதி.  குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கடவுளே துணைபுரிந்தார் என்று நம்பும் ஒரு கூட்டம்.  இப்படிப்பட்ட மக்கள் கூட்டங்களை இந்தியாவில் மட்டும்தான் பார்க்கலாம்.

இந்திய ஜனநாயகம் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *