வெளிநாட்டு வாழ்க்கை!

-துஷ்யந்தி, இலங்கை

வாசல் வரை வந்த
துன்பமெல்லாம் வழியனுப்ப
வான்பறவை மேலேறி
அயல்தேசம் காணப்
பணங்கட்டிப் படியேற
விடை கொடுக்கும் நிலையம்
விமான நிலையம்…!

புதிய தேசம் போனதும்
புதிரான மனிதர்கள்…
இவர் மொழிதனைப் பயின்று
குணந்தனை உணர்ந்து
கொடுத்திடும் தொழிலைக்
கண்விழித்துச் செய்திட
உறுதிகொண்டு நுழைபவன்
சாதிப்பது நிச்சயம்…!

அன்பான அன்னையின்
அரவணைப்பும் இல்லை
ஆசை மனைவியின்
தலைகோதலும் இல்லை
பெற்றெடுத்த மக்களின்
ஸ்பரிசமும் இல்லை
ஓடிவந்து உதவும் உயிர்
நண்பனும் இல்லை..!

அன்னமில்லை ஆகாரமில்லை
அன்புக்கு யாருமில்லை
பண்டிகைக் கொண்டாட்டமில்லை
விடுமுறை நாட்களில்லை
உணர்வுகள் அத்தனையும்
வெறுமையாய் மாற்றிக்கொண்டு
வேதனை நிலை வெளிக்காட்டாது
இயற்கையோடு இயந்திரமாய்
வெளிநாட்டில்  நாம்…!

பணமிருக்கும் நாட்டிலே
நல்ல மனதிற்கிடமில்லை
குணமிருக்கும் தாய்நாட்டில்
பணத்திற்கு வழியில்லை
வாழ்க்கையெனும் ஓடத்திலே
வந்தொட்டும் தடைகளாய்
வந்ததெல்லாம் ஏற்றுக்கொண்டு
வாழ்கின்றோம் மனிதர்களாய்…!!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *