மனிதருக்குள் இருக்கும் மனிதாபிமானம்

0

நாகேஸ்வரி அண்ணாமலை

மனவளர்ச்சிக் குறை உள்ளவர்களை (autistic people) எங்கு சந்தித்தாலும் என் மனதில் ஒரு உளைச்சல் ஏற்படும்.  உறவினர்களோடு அவர்கள் இருந்தாலும் அவர்களுடைய வாழ்நாள்வரை அவர்களை யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் உடனேயே மனதில் தோன்றும்.  பல மனநோய் நிறுவனங்களில் அங்குள்ளவர்களை அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் படிக்கும்போது வேதனை ஏற்படும்.  எல்லா வகையான ஒழுங்கு நடவடிக்கைகளும் உள்ள அமெரிக்காவிலேயே இவர்களைக் கவனித்துக்கொள்வதில்  அநியாயங்கள் நடந்துவருகின்றன என்றால் இந்தியாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  மனவளர்ச்சிக் குறை உள்ளவர்களைக் கவனித்துக்கொள்ள இந்தியாவிலும் நிறைய சமூக மனநோய் நிறுவனங்கள் தோன்றியிருந்தாலும் அங்கு ஒழுங்குமுறைகள் எல்லாம் சரியாக இல்லை.  அமெரிக்காவில்போல், குடும்பத்தவர் நிறையப் பணம் கொடுத்து அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை இந்தச் சமூக மனநோய் நிறுவனங்களிடம் விட்டுவிடும் வழக்கம் இன்னும் இந்தியாவில் வரவில்லை என்றே நினைக்கிறேன்.  மைசூரில் எங்களுக்கு வீட்டு வேலைகளில் உதவும் பெண்ணின் குடும்பத்தில் உள்ள இப்படிப்பட்ட ஒரு பையனைப் பற்றி அடிக்கடி நான் கவலைப்படுவதுண்டு.  இவனை யார் அவன் ஆயுள் உள்ளவரை கவனித்துக்கொள்வார்கள் என்ற கேள்வி எழும்போதெல்லாம் அதற்கு விடை கிடைப்பதில்லை.

தனித்துவத்தை (individualism) மிக அதிகமாக வளரவிட்டுவிட்ட அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்களையே சரியாகக் கவனிக்காமல் இருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.  இப்படிப்பட்ட அமெரிக்காவில் சமீபதத்தில் பத்திரிக்கையில் வந்த மனவளர்ச்சி குன்றிய தன் தம்பியைப் பற்றியே சதாசர்வ காலமும் நினைத்துக்கொண்டு அவனுடைய நலத்திற்காகப் பாடுபடும் ஒரு பெண்ணின் கதை மனதை நெகிழவைத்தது.  உலகில் இன்னும் பாசம், பந்தம் போன்றவை இருக்கின்றன, சொந்த பந்தங்களைக் கவனித்துக்கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்று அறிந்தபோது ஏதோ ஒரு நிம்மதி மனதில் பிறந்தது.

நியுயார்க் மியுசியம் ஒன்றில் பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்கும் காவலராக ஒரு பெண் வேலைபார்க்கிறார்.  இந்தப் பெண்ணுக்கு  சம்பளம் மணிக்கு பதினாறு டாலர்.  இவருக்கு வயது ஐம்பத்தாறு; இவருடைய தம்பிக்கு ஐம்பத்தி நான்கு.  இவருடைய தம்பிக்கு எழுதப் படிக்கத் தெரியாது.  தானாகச் சாலையைக் கடக்கக்கூட முடியாது.  மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஒரு இல்லத்தில் வசித்துவரும் இவரை இவருடைய தமக்கை அடிக்கடி சென்று பார்க்க விரும்புகிறார்.  ஆனால் இவரால் அதைச் செய்ய முடியவில்லை.  இவருடைய அலுவலகத்தில் மேல் பதவியில் இருப்பவர்கள் வேண்டுமானால் வேலை நேரத்திலேயே வெளியே போவதற்கு வசதி செய்துகொள்கிறார்கள்.  அவர்களால் வேலை நேரத்திலேயே டாக்டரிடம் போவதற்கும் உடல்நலமில்லாமல் இருக்கும் உறவினர்களைப் பார்ப்பதற்கும் தங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களைச் சந்திக்க பள்ளிகளுக்குப் போவதற்கும் முடியும்.  ஆனால் இவரைப் பொறுத்தவரை நினைத்த நேரத்தில் வேலையை விட்டு வெளியே போக முடியாது.  செவ்வாய் முதல் சனி வரை  காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை இவருக்குப் பணி நேரம். அந்தச் சமயத்தில் எங்கும் போக முடியாது.  வருடத்திற்கு இரண்டு வாரங்கள் சம்பளத்தோடு கூடிய விடுமுறை உண்டு.  ஆனால் அதை எப்போது எடுக்கலாம் என்பதை இவரால் தீர்மானிக்க முடியாது.

இவருக்கென்று வருடத்தில் மொத்தம் ஐந்து நாட்கள் பர்சனல் விடுமுறை (personal leave)  உண்டு. இந்தியாவில் இதை ‘கேஷுவல் விடுமுறை’ என்பார்கள்.  அந்த ஐந்து நாட்களில் இவருக்கு இருக்கும் வியாதிகளான உயர் ரத்த அழுத்தம், ஆர்த்ரைட்டிஸ் போன்றவற்றிற்கு டாகடர்களைப் பார்ப்பதில் இரண்டு மூன்று நாட்கள் கழிந்துவிடும்.  இவருக்கு ஞாயிறு, திங்கள் விடுமுறை.  இவருடைய தம்பிக்கு திங்கட்கிழமைகளில் தான் இருக்கும் கட்டடத்தைச் சுத்தப்படுத்தும் வேலை இருக்கும்.  ஆக ஞாயிற்றுக்கிழமை ஒன்றுதான் இருவருக்கும் பொதுவான விடுமுறை நாள்.  அந்த நாளில் தம்பியைப் பார்க்கப் போனால்தான் உண்டு.

கெடுபிடிகள் உள்ள வேலைக்கிடையேயும் அடிக்கடி இவர் தன் தம்பியைப் பற்றி நினைத்துக்கொள்வார்.  தம்பிக்கு இன்னும் அதிகம் செய்யவேண்டுமோ, தன்னால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று அடிக்கடி ஏங்குவார்.  இவருக்கென்று இப்போது தம்பியைத் தவிர குடும்பம் வேறு எதுவும் இல்லை.

இவர்களுடைய தந்தை 1995-லும் தாய் 1998-லும் இறந்துவிட்டார்களாம்.  அவர்கள் உயிருடன் இருக்கும்போது அடிக்கடி ‘நீங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறுவார்களாம்.  இந்த அறிவுரையைத் தலைமேல் ஏற்று இவர் தன் தம்பியைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை – அவரை அடிக்கடி சென்று பார்ப்பது, அவரைக் கவனித்துக்கொள்பவர்களைச் சந்தித்துப் பேசுவது, அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பவர்களை நன்றாகச் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வது போன்றவை – ஏற்றிருக்கிறார்.

தம்பிக்கு இதெல்லாம் புரியாவிட்டாலும், கடந்த 26 வருடங்களாக இல்லத்தில் வசிக்கும் இவரை அவருடைய அக்கா பார்க்க வரும்போதெல்லாம் இவருடைய முகம் பிரகாசிக்கும்.  அவருக்கு இருக்கும் ஒரே உறவு அவருடைய அக்காதான்.   அவ்வப்போது அவருடைய அக்கா இவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதுண்டு.  அப்படி தமக்கை அழைத்துச் செல்லும்போதெல்லாம் இல்லத்தில் உள்ளவர்கள் ‘எங்கு போகிறாய்?’ என்று கேட்டால் ‘எங்கள் வீட்டிற்குப் போகிறேன்’ என்று சொல்வாராம்.  அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி தங்கள் சொந்த வீட்டைத்தான் வீடு என்பார்கள்.  இவர் தமக்கையின் வீட்டை தன் சொந்த வீடு என்கிறார்.  அந்த அளவிற்குத் தமக்கையின் மீது இவருக்குப் பிடிப்பு இருக்கிறது.

அமெரிக்காவில் சொந்தப் பெற்றோர்களையே பலரால் கவனித்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.  ஏனெனில் எல்லோரும் எப்போது வேலை செய்வதை நிறுத்தினாலும் 67 வயது முடிந்த பிறகுதான் மத்திய அரசு கொடுக்கும் பென்ஷன் கிடைக்கும்.  அதனால் கடைசிவரை – அதாவது 67 வயது முடியும் வரையாவது – வேலைபார்க்க வேண்டும்.  அதனால் பெற்றோர்களை வீட்டில் வைத்துக் கவனித்துக்கொள்வது மிகவும் கஷ்டம்.  பெரிய பணக்காரர்களைத் தவிர பலரால் கடைசிவரை உழைத்தால்தான் ரிடையர் ஆன பிறகு ஓரளவாவது வசதியாக வாழ்க்கையை ஓட்ட முடியும்.  இப்படிப்பட்ட அமெரிக்காவில் தன் தம்பியைக் கவனித்துக்கொள்ளும், அவனைப் பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் அந்த அக்காவின் கதை மனிதர்களிடம் இன்னும் மனிதாபிமானம் செத்துவிடவில்லை என்ற நம்பிக்கையைத் தருகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *