குழந்தைகள் இல்லாத வாழ்க்கை
நாகேஸ்வரி அண்ணாமலை
சென்ற வாரம் நியுயார்க டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ‘குழந்தைகள் இல்லாத வாழ்க்கை’ (அமெரிக்காவில் இப்போது cancer-free, fat-free என்று சொல்வதுபோல் child-free என்ற ஒரு வார்த்தையையும் புதிதாக உருவாக்கியிருக்கிறார்கள்.) என்ற ஒரு கட்டுரையைப் படித்தபோது இந்தியாவில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும் அதுவும் தம்பதிகள் திருமணம் செய்துகொண்டதும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்பதும் ஞாபகத்திற்கு வந்தன. தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகுதான் அவர்கள் இருவரிடமும் எந்தக் குறையும் இல்லை என்று அறிந்து இரு தரப்புப் பெற்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் பெண்ணின் மேல்தான் பழி விழும். மருத்துவ ரீதியாகப் பெண்ணிற்குத்தான் நிவாரணம் தேடுவார்கள். இருவரையும் சோதித்துப் பார்ப்பதெல்லம் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறதோ என்னவோ சில தசாப்தங்களுக்கு முன்னால் கண்டிப்பாக இல்லை.
எனக்குத் தெரிந்த ஒரு மாமியார் தன் மூத்த மருமகள் திருமணம் ஆகி ஆறு மாதங்கள்வரை கருத்தரிக்காமல் இருந்தபோது அவரைப் பலவாறாகத் துன்புறுத்திவிட்டார். கடைசிவரை அந்த மருமகளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இன்னொரு விஷயம். அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்த மருமகள்களையும் அந்த மாமியார் படுத்திய பாட்டைச் சொல்லி மாளாது. திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்குளேயே அந்த டாக்டரைப் பார், இந்த டாக்டரைப் பார் என்று மருமகள்களை விரட்டிக்கொண்டிருப்பார். நல்ல வேளை மற்ற நான்கு மருமகள்களும் ஓரளவிற்கு சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொண்டார்கள். குழந்தைகள் இல்லாவிட்டால் உடனேயே மருமகளைத்தான் – அதுவும் மாமியார்கள் – குறைசொல்வார்கள். மருமகளிடம் குறை கண்டே ஆக வேண்டும் என்று அலையும் மாமியார்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளாத மருமகளைக் குறை கூறித் தீர்ப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அது அமைந்துவிடுகிறது. வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரிதான்.
கருத்தரித்த ஒரு பெண், குழந்தை பெற்றுக்கொள்ளப் பயப்பட்டதைப் பார்த்து என் பாட்டி, ‘இதில் பயப்பட என்ன இருக்கிறது? உலகம் தோன்றியதிலிருந்து பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று கூறிவிட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த இன்னொன்றையும் கூறினார். ‘ரயிலிலோ பேருந்திலோ நாம் பயணம் செய்யும்போது நம் பக்கத்தில் இருப்பவர்கள் நம்மோடு உரையாடினால் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கேட்பார்களேயொழிய எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்க மாட்டார்கள்’ என்றார். சில தலைமுறைகளுக்கு முன்னால் நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொண்டார்கள். அப்போது பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிழைப்பதில்லை. அதனாலும் நிறையப் பெற்றுக்கொண்டார்கள். மேலும் கருத்தடைச் சாதனங்களும் புழக்கத்தில் இல்லை. இப்போது காலம் மாறிவிட்டது. இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.
எனக்குத் தெரிந்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்கள் இந்தியாவில் இல்லை. (மனிதத் திமிங்கலங்கள் நிறைந்த இந்த உலகத்தில் என் குழந்தையை விட்டுச் செல்லவா என்று பயப்படும் தாய்மார்களும் இந்த உலகத்தில் இருக்கும் ஜனத்தொகை போதாதென்று இன்னொரு ஜீவனை இவ்வுலகிற்குக் கொண்டுவந்து ஜனத்தொகையை இன்னும் அதிகரிக்கவா என்று எண்ணும் தாய்மார்களும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.) எங்கள் நண்பர் ஒருவர்தான், அவர் திருமணம் செய்துகொள்ளாமலே ஒரு பெண்ணோடு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தபோது, ‘நான் திருமணம் செய்துகொள்வது பற்றியோ குழந்தைகள் பெற்றுக்கொள்வது பற்றியோ ஒரு போதும் நினைக்காத அளவிற்கு விவேகி’ என்று தன்னைத்தானே பெருமையாகப் பேசிக்கொண்டார். இவரை விட்டுவிடுவோம். இவர் ஒரு அதிநவீனவாதி (ultra modern)! எல்லா ஜீவராசிகளிடமும் (தாவரங்கள் உட்பட) தங்களுடைய மரபணுக்களை விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருப்பதாகச் சொல்லலாம். இயற்கையை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவதாக நினைப்பவர்கள்தான் இந்த உந்துதலைப் பொருட்படுத்தாமல் அல்லது புறக்கணிப்பவர்களாக இருப்பவர்கள். இயற்கையின் இந்த உந்துதலை இவர்களால் எப்படிப் புறக்கணிக்க முடிகிறது என்பது எனக்குப் புரியாத விஷயம். இப்போது இம்மாதிரியான, இயற்கையைப் புறக்கணிக்கும் போக்கு அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக அந்தக் கட்டுரை கூறுகிறது.
அதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள். அமெரிக்காவிலும் சில தசாப்தங்களுக்கு முன்பு வரை நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளில் கூட குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் என்ற வாசகங்களை மருத்துவரின் மேஜையின் மீது காணலாம். அதே காலகட்டத்தில் பெண்ணியக் கருத்துகள் தோன்றிப் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்கள் அல்ல, அவர்களுக்கு இன்னும் நிறைய காரியங்களைச் சாதிக்கச் சுதந்திரம் வேண்டும் என்ற கோஷம் எழுந்தது. மேலும் பெண்கள் வேலைக்குப் போவதும் கூடியது. வேலைக்குப் போகும் பெண்களால் வேலையில் கவனம் செலுத்துவதும் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதும் கடினமாயிற்று. குழந்தைகளை வீட்டில் பராமரிப்பதற்கு இந்தியாவில் இருப்பது போல் பாட்டி, தாய், சித்தி, அத்தை என்று யாரும் இல்லை. குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் தாதிகளிடம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்தால் அதற்கு நிறையப் பணம் வேண்டும். பெண்கள் நிறையச் சம்பாதித்தால் மட்டுமே அது சாத்தியம்.
சமீபத்தில் வெளிவந்துள்ள “Selfish, Shallow and Self-Absorbed: Sixteen Writers on the Decision Not to Have Children” என்ற புத்தகத்தில் குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பதினாறு பிரபலங்கள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன. மிகப் பெரிய நடிகரான ஜார்ஜ் க்லூனியும் ஒப்ராவும் இதில் அடங்குவர். டையர் என்னும் ஒருவர் தான் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருக்கும்போது, பத்து நிமிடங்களிலேயே அவருடைய ஆட்டம் தடைப்பட்டதாகவும் அதன் பிறகு அங்கு ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டதாகவும் குழந்தைகளைவிட அவர் அதிகமாக வெறுப்பது அந்தக் குழந்தைகளைக் கொண்டாடும் பெற்றோர்களைத்தான் என்றும் கூறியிருக்கிறார். குழந்தைகள் பெற்றோர்களைப் படாதபாடு படுத்துவதாகவும் இவர் குறை கூறியிருக்கிறார்.
குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களிடையே நிறைய போட்டி ஏற்பட்டிருப்பதாகவும் அதில் தாங்களும் கலந்துகொள்ள விரும்பவில்லை என்றும் சிலர் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சிலர் குழந்தைகளுக்கு நிறையப் பொருள்கள் வாங்க வேண்டியிருப்பதால் இயற்கை வளங்களை நிறைய வீணடிக்க வேண்டியிருப்பதால் குழந்தைகள் பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதாகவும் கூறுகிறார்கள். குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால் நிறைய வேலைகள் இருப்பதாகவும் தங்களுக்கென்று செலவழிக்க நேரம் கிடைப்பதில்லை என்பதும் சிலரது கவலை.
இப்படி சிலர் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை விரும்பவில்லை என்றாலும் சநாதனக் கத்தோலிக்கர்களும் யூதர்களும் இன்னும் நிறையக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.. சமீபத்தில் நியூயார்க்கில் எட்டுக் குழந்தைகளில் ஏழு குழந்தைகளை இழந்த குடும்பம் யூத ஐதீகத்தில் நம்பிக்கை வைத்திருந்த குடும்பம். கருத்தடைச் சாதனங்களை உபயோகிப்பது தடை செய்யப்பட்டிருப்பதும் கருக்கலைப்பு செய்துகொள்வது தடைசெய்யப்பட்டிருப்பதும் கத்தோலிக்கர்கள் நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்வற்கு காரணங்களாகக் கூறலாம். திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களும் அமெரிக்காவில் அதிகம். அந்தத் தாய்மார்களுக்கு ஒரு அந்தஸ்து கிடைப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது.
குடும்பம் என்பது மாறிக்கொண்டுவருகிறது. கூட்டுக்குடும்பத்திலிருந்து தனிக்குடும்பம் வந்து இப்போது தனி நபரே குடும்பம் என்று மாறிக்கொண்டிருக்கிறது!


உயர்திரு நாகேஸ்வரி அவர்களே,
விறுவிறுப்பாக எழுதி உள்ளீர்கள். கடைசியில் இக்கட்டுரையின் கருத்து என்ன என்று அறிய இயலவில்லை. ஒரு செய்திக்கட்டுரையைப் படிப்பதுபோல உள்ளது. அதுதான் இக்கட்டுரையின் இலக்கு என்றால் இந்தப் பின்னூட்டைத்தைப் பொருட்படுத்தாதீர்கள்.