நாகேஸ்வரி அண்ணாமலை

images (2)

இந்தியாவில் நான் வளர்ந்துவரும்போது ‘எனக்குச் சாப்பிடப் பிடிக்கும் என்று சொல்பவர்கள் யாரையும் சந்தித்ததில்லை. நிறையச் சாப்பிடுகிறார்கள் என்று நினைப்பவர்களை மற்றவர்கள் வேண்டுமானால் – அவர்கள் நிறையச் சாப்பிடுகிறார்களோ என்னவோ மற்றவர்கள் அப்படி நினைத்துக்கொண்டால் – கொஞ்சம் இளக்காரமாகக் குறிப்பிடுவார்கள். இந்தியாவில் யாரையும் ‘சாப்பாட்டு ராமன்’ என்று எளிதில் கூறிவிடுவார்கள்.

ஒரு முறை நான் பதின்ம வயதினளாக இருந்தபோது நெருங்கிய உறவினர் வீட்டிற்குக் கிருகப்பிரவேச (அப்போது புதுமனை புகுவிழா என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள்) வைபவத்திற்குச் சென்றிருந்தோம். விசேஷம் முடிந்துவிட்டாலும் நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷம் என்பதால் அன்று இரவு அவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டு மறு நாள் எங்கள் ஊருக்குத் திரும்புவதாக ஏற்பாடு. கிருகப் பிரவேசத்திற்குச் சமைத்த சாப்பாடு நிறைய மிஞ்சிவிட்டது. வீட்டுச் சொந்தக்கார அம்மாள் மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி அதைப் ‘பழைய சாதமாக’வும் மிஞ்சிய சாம்பார், ரசம் மற்றும் பொரியல்களை ‘சுண்டக் குழம்பாகவும்’ மாற்றிவிட்டார். மறு நாள் பெண் விருந்தினர்களுக்கு அதைக் காலை உணவாகக் கொடுப்பது என்று முடிவாகியது. (இந்தியாவில் ஏழைகளுக்கா பஞ்சம். மிஞ்சிய உணவைக் கொடுப்பதற்கு எத்தனையோ பேர் கிடைத்திருப்பார்கள். ஏன் அப்படிச் செய்யவில்லை என்று தெரியவில்லை.) விருந்தினர்களில் கூட ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு விதமாக நடத்தியிருக்கிறார்கள். ஆண் விருந்தினர்களை வீட்டுச் சொந்தக்காரர் காலை உணவிற்கு ஓட்டலுக்குக் கூட்டிப் போவதாக ஏற்பாடு. அப்படிச் சென்ற உறவினர்களில் ஒருவரைப் பற்றி என் தந்தையிடம் வீட்டுச் சொந்தக்காரர் ‘இவன் நிறையச் சாப்பிடுவான். அதிலும் ஓட்டல் பலகாரங்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும்’ என்றாராம். அந்த உறவினருக்கு நிறையச் செலவழிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு என் தந்தைக்கு மனதில் பெரிய சுமையை ஏற்றியதுபோல் இருந்திருக்கும் போலும். அதை ஆற்றிக்கொள்ள என்னிடம் சொன்னார். எனக்கும் அதைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருந்தது. நிறையச் சாப்பிடுவதாகச் சொன்ன அந்த உறவினர் வசதியில்லாதவர். பிறர் வாங்கிக் கொடுத்தால் நன்றாகச் சாப்பிடுவார் போலும். அது உண்மையாகவே இருந்தாலும் அந்தப் பணக்கார உறவினர் – கிருகப்பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர் – அதைக் குறையாகச் சொல்லலாமா? தன் வீட்டு விசேஷத்திற்கு அத்தனை செலவு செய்திருந்தார். இன்றளவும் நான் இதை மறக்கவில்லை. வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று நான் யாரையும் எப்போதும் விமர்சித்ததில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினர் நான் சமைத்ததை ரசித்துச் சாப்பிட்டால் மனதிற்கு நன்றாக இருக்கும். நான் சமைப்பது அவர்களுக்குப் பிடிக்கிறது என்றால் மறுபடி அவர்களை வீட்டிற்கு விருந்திற்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உண்டாகும். என் கணவர் மத்திய அரசின் அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்தபோது அவருடன் வேலை பார்த்தவர்களில் யார் வீட்டிற்காவது விருந்திற்குப் போவோம் அல்லது யாரையாவது வீட்டிற்கு அழைப்போம். யார் வீட்டிற்குப் போனாலும் எனக்குப் பிடித்த உணவாக இருந்தால் எல்லோருக்கும் தேவையான அளவு இருந்தால் எந்த ‘பிகு’வும் பண்ணாமல் நன்றாகச் சாப்பிடுவேன். நிறையச் சாப்பிடுகிறார்கள் என்று விருந்திற்கு அழைத்தவர்களோ விருந்திற்கு வந்த மற்றவர்களோ நினைப்பார்களே என்று நினைப்பதில்லை.

என் கணவரோடு வேலைபார்த்த ஒரு பெண் எனக்கு நல்ல தோழி. அவருடைய கணவர் வேறு ஊரில் வேலைபார்த்தார். அவர் தனியாக இருந்ததால் அடிக்கடி என்னை அவர் வீட்டிற்குக் கூப்பிடுவார். நானும் என் மகள்களும் போவோம். அவருக்குப் பொதுவாகச் சமைக்கவே பிடிக்காது. ஆனால் நாங்கள் போகும்போதெல்லாம் ஏதாவது எங்களுக்காகச் சமைப்பார். நாங்கள் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு வருவோம். ஆனால் அவர் நிறையச் சாப்பிடுவதில்லை. எப்போதாவது என் கணவர் உடன் வந்தால் நாங்கள் மட்டும் போகும்போது சாப்பிடுவதைவிடக் குறைவாகவே சாப்பிடுவார். என் கணவரின் அலுவலகத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‘pot luck’ விருந்து நடத்துவோம். எல்லோரும் அவரவர் வீட்டிலிருந்து சமைத்த உணவைக் கொண்டுவர வேண்டும். பின் எல்லோரும் எல்லார் உணவுகளையும் உண்டு மகிழ்வோம். அந்த விருந்தில் மேலே குறிப்பிட்ட என் தோழி கடைசியாக இனிப்பிற்காக வைத்திருக்கும் சிறிய தட்டில் உணவுகளைக் கொஞ்சமாக எடுத்துக்கொள்வார். மறு முறை போய் ஏதாவது பிடித்திருந்தாலும் அதை எடுத்துச் சாப்பிடுவது என்பது கிடையாது. பலர் முன்னிலையில் தான் மிகவும் கொஞ்சமாகச் சாப்பிடுபவர் என்று காட்டிக்கொள்வதுபோல் எனக்குத் தோன்றும். இவர் தனியாகத் தன் வீட்டில் இருக்கும்போது உண்ணும் உணவின் அளவுதான் இவர் நார்மலாகச் சாப்பிடும் அளவு என்று நினைக்கிறேன்.

இந்த ‘pot luck’ விருந்தை என் கணவரின் அலுவலகத்தில் முதலில் ஏற்பாடு செய்ததே நானும் என் கணவரும்தான். (அமெரிக்காவில் ஐந்து வருடங்கள் வாழ்ந்து கற்றுக்கொண்ட பழக்கங்களில் ஒன்று.) அன்று அலுவலகத்தின் இயக்குனர் முதல் தோட்டவேலை செய்பவர்கள் வரை அனைவரும் அன்று சமம். எல்லோரும் வரிசையில் நின்று மேஜை மேல் பரப்பப்பட்டிருக்கும் உணவுகளில் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு சாப்பிடலாம். இந்த உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் சிலர் ‘கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் முதலில் வந்து எடுத்துக்கொள்கிறார்களே’ என்பார்கள். அவர்களும் ஒரு நாள் நன்றாகச் சாப்பிடட்டும் என்பதற்காகத்தானே இந்த விருந்தையே ஏற்பாடு செய்தது என்பதைப் பலர் புரிந்துகொள்வதில்லை.

அமெரிக்காவில்தான் நான் முதல் முதலாக எனக்குச் சாப்பிடப் பிடிக்கும் (‘I love to eat’) என்ற வார்த்தைகளைக் கேட்டேன். அமெரிக்காவில் உணவு அபரிமிதமாகக் கிடைப்பதும் எல்லோரும் வேண்டிய அளவு சாப்பிடலாம் என்பதும் (அமெரிக்காவிலும் சிலர் பசியோடு படுக்கப் போகிறார்கள் என்கிறார்கள். எனக்கு ஒருபோதும் இது எப்படி என்று புரிந்ததில்லை.) காரணங்களாக இருக்கலாம். இந்தியாவில் ‘எனக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சாப்பிடப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நான் சந்தித்ததில்லை. நண்பர்கள் வீட்டிற்கோ உறவினர்கள் வீட்டிற்கோ விருந்திற்குப் போனால் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத அயிட்டங்களையும் சமைத்தவர்களுக்கு நன்றாக இருக்கும் என்பதால் சாப்பிட்டுவைப்பேன். அமெரிக்கர்கள் அப்படியில்லை. பிடிக்கவில்லை என்றால் அப்படியே வைத்துவிடுவார்கள். உணவு உட்பட எதையும் வீணாக்கும் பழக்கம் அமெரிக்கர்களிடம் அதிகம் இருப்பதால் இப்படிச் செய்கிறார்கள் போலும்.

ஒரு முறை ஒரு அமெரிக்கத் தோழி என்னை ஒரு பீட்ஸா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். பீட்ஸாவை ஆறு துண்டுகளாகக் கொடுக்கும்படி சர்வரிடம் கூறினார். எனக்கு மூன்று, அவருக்கு மூன்று. எனக்கு பீட்ஸா பிடிக்கும் என்பதாலும் என் பற்கள் ஆரோக்கியமாக இருந்ததாலும் விரைவாகச் சாப்பிட்டேன். அவருக்கோ செயற்கைப் பற்கள். அதனால் பீட்ஸாவை மென்று தின்பதற்கு அதிக நேரம் எடுத்தார். ‘நீங்கள் நன்றாகச் சாப்பிடுகிறீர்கள்’ (You are a good eater) என்று எனக்கு நற்சான்று வழங்கினார். கூடவே ‘நான் இதைப் பாராட்டாகத்தான் சொல்கிறேன்’ என்றும் சொல்லிக்கொண்டார். நான் இந்தியன் என்பதால் தவறாக எடுத்துக்கொள்வேனோ என்று நினைத்திருக்கலாம்.

அமெரிக்காவில் ஒரு இடத்தில் கூடுபவர்களிடையே உணவைப் பரிமாறிக்கொள்வது அவ்வளவாகக் கிடையாது. இந்தியாவில் என் மகள்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது அவர்களுடைய பள்ளித் தோழிகளுக்கு என் சமையல் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவர்களோடு பகிர்ந்துகொள்வதற்காகவே என் மகள்களுடைய லஞ்ச் பாக்ஸில் அவர்களுடைய தேவைக்கு மேலேயே கொடுத்துவிடுவதுண்டு. அமெரிக்காவில் அப்படிக் கொடுப்பவர்களும் இல்லை; அதைப் பெற்றுக்கொள்பவர்களும் இல்லை.

இந்தியாவில் தின்பண்டங்கள் விற்கும் கடைகள் போன்ற பேக்கரிகளுக்கு முன்னால் நிறையத் தெருநாய்கள் நின்றுகொண்டிருக்கும். பேக்கரிக்கு வருபவர்கள் அவற்றைக் கொஞ்சம் கூட கண்டுகொள்வதில்லை. நாய்களை விடுங்கள். அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கே இவர்கள் எதுவும் கொடுப்பதில்லை. மற்றவர்கள் சாப்பிடும்போது அதை ஏக்கமாகப் பார்க்கும் ஏழைகள் இந்தியாவில் அதிகம். அமெரிக்காவில் அப்படி ஒரு வகை ஜனங்கள் இல்லாதது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். Junk food என்னும் மலிவான உணவை உண்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பசிக்கும்போது சாப்பாட்டிற்குப் பிறர் கையை எதிர்பார்ப்பவர்கள் இல்லை.

அமெரிக்கா வந்தபிறகு என் மகள் மற்றும் மூன்று மாணவிகளோடு ஒரே அறையில் சேர்ந்து வாழ்ந்துகொண்டு படித்துக்கொண்டிருந்தபோது எல்லாரும் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற பாடத்தை அவர்கள் பெற்றோர் கற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை. ‘இவ்வளவு இருக்கிறது. அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்ற எண்ணம் இருப்பதில்லை. கூட்டுக் குடும்பங்களிலும் இப்படிப் பகிர்ந்து உண்ணாமை சிலரிடம் இருக்கும். முதலில் சாப்பிடுபவர்கள் வேண்டிய அளவு சாப்பிட்டுப் பின்னால் வருபவர்களுக்குக் குறைவாக வைத்துவிடுவார்கள். குழந்தைகள் வளர்ந்து வரும்போதே பெற்றோர்கள் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

உணவைத் தானே உண்பதிலும் பகிர்ந்து உண்பதிலும் இப்படிப் பல வகை.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சாப்பிடுபவர்கள் பலவிதம்

  1. நான் மிகவும் இரசித்துப் படித்த கட்டுரை,  நாகேஸ்வரி அம்மா!  நீங்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் வெவ்வேறு விதமாக உணவு படைப்பார்கள் என்றும், உங்கள் தந்தையின் ஏழை நண்பர் ஒருவரை புதுமனை புகு விழாவுக்கழைத்தவர் ஏளனம் செய்ததையும் படிக்கும்போது என் நெஞ்சம் அடைத்தது, கனத்தது.  உணவளிப்பதில் பாரபட்சமும், விருந்துக்கழைத்துவிட்டு, ஏன் வருகிறார் என்று சொல்வதும் என்றுதான் நீங்குமோ?  இன்றும் இதை நான் இந்தியா செல்லும்போது சில இடங்களில் பார்க்கிறேன்.

    இப்படிப்பட்ட கட்டுரைகளைத் தங்களிடமிருந்து தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *