மீ விசுவநாதன்

அத்தியாயம் : நான்கு

தாத்தா பாட்டி உறவு

நன்றி:கே.வி. அன்னபூர்ணா
நன்றி:கே.வி. அன்னபூர்ணா

அவன் வாழ்ந்த சூழல் மிகவும் அன்பு மயமாக இருந்தது. அவன் , அவனுக்குத் தாய்வழித் தாத்தாவை “மாமாத் தாத்தா” என்று தான் அழைப்பான். பாட்டியை “மாமாம்மை”, அதாவது மாமாவின் அம்மா என்றும் , தந்தைவழித் தாத்தாவை , அவர் செங்கோட்டையில் வேலை செய்து வந்ததால் “செங்கோட்டைத் தாத்தா” என்றும், தந்தை வழிப் பாட்டியை “பெரியம்மா” என்றும் அழைப்பான். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் அவனுக்கு அவன் அப்பாவுடன் பிறந்த ஒரு தம்பி, அவரது ஒன்றுவிட்ட இரண்டு தம்பிகள், அவர்களது மூன்று சகோதரிகள் என்று அனைவருமே “பெரியம்மா” என்று அழைத்ததால் அவனும், அவனுக்கு அக்காவும் பாட்டியைப் “பெரியம்மா” என்றுதான் அழைத்து வந்தனர்.

அப்பாவின் கூட்டுக் குடும்ப வீட்டு எண்: 58- 57, வடக்கு ரதவீதியில் இன்றும் இருக்கிறது. இப்பொழுதும் அவன் அந்த ஊருக்குச் சென்று “தாமிரபரணி” நதியில் ஆனந்தமாகக் குளித்து விட்டுத் தான் வருகிறான். அவனுக்கு அந்த வீட்டில் இரண்டு தாத்தாக்கள், இரண்டு பாட்டிகள், மூன்று சித்தப்பாக்கள் என்று வீடே கல கல வென்று இருக்கும். அவனுடைய சின்னத் தாத்தா இராமலிங்கம் ஐயருக்கு அவனிடம் மிகுந்த பாசம் உண்டு.

அவனுக்கு நான்கு , ஐந்து வயது இருக்கும். அவனை சின்னத்தாதா தன் மடியில் வைத்துக் கொண்டு , அவர் சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு கவளம் எடுத்து அவன் வாயில் தருவார். ” உங்க எச்சில கொழந்தைக்குக் கொடுப்பாளா” என்று அவரது மனைவியும், அவனுக்குப் பாட்டியுமான “சித்தியம்மா” கேட்ப்பாள். “சரிதான் போடி நீ…..அவன் என் செல்லம்” என்று அவனை அணைத்துக் கொள்வார். அவனுக்கு மூத்த சகோதரி “பாலா”. அவள்தான் அந்த வீட்டின் முதல் குழந்தை ஆனதால் அனைவருக்குமே அவள் செல்லக் குட்டிதான். சின்னம்பிச் சித்தப்பா, பெரிய சித்தப்பா, ரமணிச் சித்தாப்பா என்று வீட்டில் அனைவருக்கும் அவள்தான் முதல் செல்லம். ஒன்று விட்ட சித்தப்பா, ஒன்று விட்ட அத்தை என்ற உணர்வே இல்லாமல் எல்லோருமே ஒருதாய்ப் பிள்ளைகளாக வளர்ந்ததால் கிடைத்த பலமான உறவு அது.

“ஆடிச்செவ்வாய்”

ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையையும் “ஆடிச்செவ்வாய்” என்று அந்த கிராமமே கொண்டாடும். ஆடி மாதக் காற்று சுகமாக வீசிக் கொண்டிருக்கும். கன்னடியன் கால்வாயில் தண்ணீர் “ஸ்படிகமாக” நடந்து கொண்டிருக்கும். உள்ளே ஆழத்தில் நீந்தி விளையாடும் மீன்கள் நம் கண்களுக்கு மிக அருகில் இருப்பது போல இருக்கும். வயல் வெளிகளில் பசுமை தாண்டவமாடும். அப்படியே சிவன்கோவில் வழியாகத் தாமிரபரணி ஆற்றுக்குச் செல்லும் வழியில், வயலுக்காகப் பாய்கின்ற ஓடைத் தண்ணீரும் , அதன் வரப்பில் மெத்து மெத்தென்றிருக்கும் பசும் புற்களின் அழகும், அதன் மீது மின்னிக் கொண்டிருக்கும் வெண்பனி முத்துக்களும், நடை பாதை ஒரத்தில் வரிசையாகத் தானாக வளர்ந்த தும்பைப்பூ பூத்திருக்கும் சிறிய செடிகளும், கால்களில் செல்லமாகக் குத்தும் நெருஞ்சி முட்ச்செடிகளும், வயலுக்குள் களைபறிக்கும் ஆண்களும், பெண்களும் பேசிக் கொள்ளும் ஊடல் மொழியும் , சில சமயங்களில் அவர்களது சில்லரைச் சண்டைகளின் ஓசைகளும், குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து சென்று கொண்டிருக்கும் மைனா, வால்குருவி, நாரை, கொக்கு, காக்கைகளின் மந்திர ஜாலக் குரல்களும், சிவன் கோவில் அரச மரத்தில் கூத்தடிக்கும் குரங்குகளின் “கிரீச்..கிரீச்” குரல்களும், மேற்கே ரயிவே பாலத்திற்கு அருகில் உள்ள “வடபத்திர காளிக்” கோவிலிலோ அல்லது வேறு எங்கிருந்தோ காற்றில் தவழ்ந்து வந்து காதில் நுழைகின்ற T.M.S. , சுசீலா , சுந்தராம்பாள் பாடல்களும் இன்றும் நினைவுகளுக்கு சுகமோ சுகந்தான்.

ஆடிச் செவ்வாய்க் கிழமைக்கு முதல் நாள் இரவில், சிறுமிகளும், பெண்ளும், எந்த வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று மஞ்சளை வாங்கிக் கொண்டு வந்து நன்றாக மணக்க மணக்க மெழுகு போல அரைத்து வைத்துக் கொள்வார்கள். அன்று மாலை ஏழு மணிக்குள்ளாக அந்த அரைத்த மஞ்சளைத் தங்கள் தோழிகளின் வீட்டிற்குச் சென்று கொடுத்து, அவர்களை அடுத்த நாள் காலையில் ஆத்தங்கரைக்கு வருமாறு அழைப்பார்கள்.

மறுநாள் காலையில், தங்களது தாயார் துணையுடன் ஆற்றங்கரைக்குச் சென்று குளித்து விட்டு “ஆடிச் செவ்வாய்க்காக” வாங்கப் பட்ட புதிய பாவாடை, சட்டைகளை அணிந்தும், ஆடிச் செவ்வாய்த் தலைச் செண்டு என்ற வட்ட வடிவில் உள்ள பூங்கொத்தினையும், மல்லிகை, கனகாம்பரம் போன்ற மலர்களை அணிந்தும், புதிய வளையல்கள் குலுங்கவும், மஞ்சள் பூசிய முகத்தில் அழகான வண்ணப் பொட்டுமாகச் சிறுமியர்கள், நடுவயதுப் பெண்கள் என்று வயதுக்கு ஏற்றார்ப் போல பத்து பத்து பேர்களாகக் கூடி நின்று கொள்வார்கள்.

அதன் பிறகு , அந்த கிராமத்தில் உள்ள எதேனும் ஒரு ஏழைச் சிறுமிக்கு மற்றவர்கள் எல்லோரும் தாங்கள் கொண்டு வந்த மஞ்சள், வளையல், வண்ண வண்ணப் பொட்டுகள், கொஞ்சம் தின்பண்டம் எல்லாம் தந்து அந்தக் குழந்தையின் தலையில் வயற்காட்டில் இருந்து கொண்டு வந்த ஒருபிடி இளங்கதிர்களை வைத்து இறைவனை நினைத்தும், ஆடி மாதச் சிறப்பினைப் பற்றியும் ஒரே குரலில் அழகாகப் பாடிக் கொண்டே வருவார்கள்..அது என்ன பாட்டுத் தெரியுமோ ?

“ஆடிச் செவ்வாய்த் தேடிக் குளி,
அரைச்ச மஞ்சளப் பூசிக் குளி,
அரையாத மஞ்சள எனக்குத் தா…
தொடுத்த பூவ நீ வச்சுக்கோ
தொடுக்காத பூவ எனக்குத் தா..
மாடப் புறா மஞ்சள் அரை
கோவில் குளத்தில் குளித்து வா
கோவிந்த ராயனை ஜபித்து வா “

இப்படிப் பாடிக் கொண்டே கன்னடியன் கால்வாய் ஆண் பிள்ளைகள் குளித்துக் கொண்டிருக்கும் படித்துறை பக்கம் வரும் பொழுது,

“ஆத்தங்கரைல குளிச்சவாளுக்கு
ஆயிரம் தோசை
வாய்க்கால்ல குளிச்சவாளுக்கு
வாரிக்கட்டைப் பூசை “

என்று உரத்த குரலில் பாடிச்செல்லும் அழகைக் காணக் கண்கள் கோடி இருந்தாலும் போதாது.

அதன் பிறகு அவரவர்கள் வீட்டில் ஆடிச்செவ்வாய்க் கென்றே செய்திருக்கும் பொங்கலையும், தாளகக் குழம்பு, வடகம் போன்ற தின்பண்டங்களையும் சிவன் கோவில் கன்னடியன் கால்வாய்ப் படித் துறைக்குக் கொண்டு வருவார்கள். அங்கு, அன்றைக்கு முக்கியமாகத் தலையில் பசுங்கதிர் வைத்தழைத்து வந்த பெண்ணிற்குத் தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த பொங்கல், தாளகக் குழம்பு, வடகம், பட்சணங்கள் என்று அவரவர்களுக்குத் தகுந்த அளவில் தந்து மகிழ்வார்கள். வாய்க்காலில் மீனுக்கும் உணவிடுவார்கள். இவை அனைத்தும் காலை எட்டு மணிக்குள் முடிந்து விடும். அதன் பிறகு அந்தச் சிறுமியர்களும், பெண்களும் பள்ளிக்கூடம் சென்று விடுவார்கள்.

ஆடிச் செவ்வாய்க்கு , அவன் அக்காவுக்கு சித்தப்பாக்களும் பாவாடை, சட்டை, இனிப்புகள் எல்லாம் வாங்கித் தருவார்கள்.

அன்று மாலை ஆறு மணிக்கு மேல், விளக்கு ஏற்றிய பிறகு, கிராமத்தில் ஏதேனும் ஒரு வீட்டில் அந்தப் பெண்ணை ஒரு நாற்காலியில் அமர வைத்து அனைவரும் பாடுவார்கள். இறைவனுக்கு சுண்டல் நிவேதனம் செய்து விட்டு, அதை விநியோகம் செய்வார்கள். அது ஆண் குழந்தைகளுக்கும் கிடைக்கும்.

அக்கா, இவைகளை எல்லாம் நன்றாக ரசித்துச் செய்வாள். அம்மாவுக்கும் எதையும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்ற கவனிப்பும், கண்டிப்பும் உண்டு. அவளது தோழிகளான கங்கா பாகீரதி, சாரதா, லெஷ்மண வாத்தியாராதுப் பாப்பா, திரிபுரசுந்தரி இன்னும் பலர் இந்த கோஷ்டியில் உண்டு. இந்தக் குழந்தைகளை எல்லாம் குஷிப் படுத்தி, ஒழுங்கு படுத்தக் கூடிய வராக, எல்லோராலும் அன்போடு “சிண்டாமாமி” என்றழைக்கப் பட்ட “வராக சீதாலட்சுமி” அம்மாள், 52, வடக்கு ரதவீதியில் இருந்தார்கள். அவரது கணவர் இராமலிங்க அண்ணாவி என்ற மிராசுதார். அவர்களுக்கு M.R.ஆதிவராகன், M.R.ராமநாராயணன் என்ற மகன்களும், சுப்பலக்ஷ்மி (சுப்பம்மா), பர்வதம், கோமதி என்ற மூண்று பெண்களும் இருந்தனர்.

அவனப்பாவுக்கு ஆதிவராகன் பள்ளி தோழர். சித்தப்பா கணபதி சுப்ரமணியத்திற்கு ராமநாராயணன் நெருங்கிய தோழர். அவனும், அவனுக்கு அக்காவும் அந்தக் குடும்பத்துக் குழந்தைகளைப் போலவே அவர்களை “சித்தப்பா” என்றும், அத்தை என்றும்தான் இன்றுவரை அழைத்து வருகின்றார்கள். அவர்களது மகன்களான சங்கர், ரகு, சுரேஷ் அனைவருமே அவனுக்கு மிக நெருக்க மான நண்பர்கள்தான். அவனை, அந்த நண்பர்களின் குழந்தைகள் “கண்ணன் சித்தப்பா, கண்ணன் பெரியப்பா” என்றே அழைக்கின்றனர்.

அப்படி ஒரு சினேக உறவை அந்த கிராமம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தது.

அவனுக்குத் தாய்வழித் தாத்தா “கணபதி லிங்கம் அப்பளம் டிப்போவில்” வரவு, செலவு கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை “கணக்கையர்” என்றுதான் அந்த டுண்டிவிநாயகர் தெருவில் அழைப்பார்கள். மிகவும் அமைதியான சுபாவம். அவனது சிறுவயதில் அவர்தான் அவனுக்குச் சின்னச் சின்ன சுலோகங்கள் கற்றுக் கொடுத்தார். மாலையில் அந்தத் தெருவில் அவன் வயதுத் தோழர்களான சுப்பாமணி (L .M. சுந்தரம் ஐயரின் மகன்) , ரங்கநாத வாத்தியாரின் மகன் இராமகிருஷ்ணன் என்ற கண்ணன் அகியோர்களுடந்தான் விளையாடுவான். சரியாக ஆறு மணிக்கு “விஸ்வம்…விளையாடினது போரும்..நமச்சிவாயா சொல்லணும்..” என்று அவன் கைகளை அன்போடு பிடித்துக் கொண்டு, பிள்ளையார் கோவிலுக்குப் பின்னல் ஓடுகிற வாய்க்காலில் அவனது கால்களையும், கைகளையும் நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்வார். அதன் பிறகு மாலை நேர மானதால் மேற்கு நோக்கி நிற்கவைத்து அவன் நெற்றியில் மூன்று முறையும், கைகளிலும், மார்பிலும், கழுத்துப் பகுதியிலும், இடுப்பின் இருபுறத்திலும் விபூதி இட்டு விட்டு, அவனிடம் “இங்க இந்தப் படில மேற்கப் பார்த்து கையக் கும்புட்டுண்டு இந்த சுலோகத்த நான் சொன்னப்பறம் மூணு தரம் நீ சொல்லு” என்று ,

“கஜானனம் பூத கணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் “

“குருப்ரும்மா குருர்விஷ்ணு குருத்தேவோ மகேஸ்வர:
குருசாஷ்ஷாத் பரம்ப்ரம்மா தஸ்மைஸ்ரீ குரவே நம : “

அவனுக்கு விபரம் தெரிந்த நாளில் அவன் மனதில் அந்தத் தாத்தா சுப்ரமணிய ஐயர்தான் ஆன்மிக விதையை அவன் மனதில் ஆழமாகப் பதிய வைத்தார்.

அவனுக்கு அம்மா அவனைச் செம்மைப் படுத்த, பள்ளிக் கூடம் அனுப்ப எண்ணினாள். அந்த நல்ல நாளும் வந்தது. அவனுக்குப் புதிய சட்டை, டிராயர் அப்பா வாங்கித் தந்தார். அவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அவனை வீட்டில் உள்ள பெரியவர்களுக் கெல்லாம் நமஸ்காரம் பண்ணச் சொன்னாள் அம்மா. அவனும் ரொம்ப ஆசையோடு அதைச் செய்தான். அனைவரும் அவனை ஆசீர்வதித்தார்கள். அம்மா அவனைக் கட்டிக் கொண்டாள்.

வீட்டுப் பெரியோர்களைக் கலந்து கொண்டு ஒரு நல்ல நாளில் கோடை விடு முறைக்குப் பிறகு 1960ம் வருடம் ஜூன் மாதம் அவனுக்கு அப்பா அவனை அன்போடு கையைப் பிடித்துக்கொண்டு மேல மாடத் தெரு, வடக்கு மாடத்தெரு வழியாக பஜனை மடம் ஸ்ரீ ராமரை வழிபட்டு, ஸ்ரீ லக்ஷ்மீபதி (ஆதிவாரகர்) கோவில் வாசலுக்கு வந்தார். அவனிடம் கைகூப்பி கும்பிட்டு நமஸ்காரம் செய்யச் சொன்னார். அவனும் அப்படிதான் செய்தான். பிறகு அவர் கோவில் வாசலில் பரந்து கிடக்கும் கருங்கல்லில் “மூல கருடரை” நினைத்துத் தேங்காய் வடல் போட்டார்…அப்படியே நேராக தெற்கு மாடத் தெரு முனையின் உள்ளே இருக்கின்ற “லக்ஷ்மீபதி நடுநிலைப் பள்ளியில்” முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக அவனை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்றார். சேர்த்தார். தந்தைக்குக் கடன் மகனைச் சான்றோனாக்குதல்.

அவனைப் பார்த்து,

“அம்பி …ஒன்னோடு பேர் என்ன ? என்றார் தலைமை ஆசிரியர்.

“விஸ்வநாதன்” என்றான் அவன்.

“நன்னாப் படிக்கணும்,….”

” அவன் தலையசைத்தான்”

அந்தத் தலைமை ஆசிரியர்தான் ஒழுக்கத்திறக்கும், கண்டிப்புக்கும் பெயர் பெற்ற
H. வேங்கட்ராமையர். அவனுக்கு அந்தத் தலைமை ஆசிரியரையும், பள்ளிக் கூடத்தையும்
மிகவும் பிடித்திருந்தது.

இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *