நாகேஸ்வரி அண்ணாமலை

நியூயார்க் நகரிலுள்ள ப்ருக்ளின் என்னும் பகுதியில் வசித்துவந்த ஒரு யூதக் குடும்பத்தின் ஏழு குழந்தைகள் ஒரே நேரத்தில் தீக்கிரையாகி இறந்திருக்கிறார்கள். யூதர்களுக்கு ஒவ்வொரு வார சனிக்கிழமையும் ஓய்வு நாள். வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை யூதர்கள் முழு ஓய்வெடுக்க வேண்டும் என்பது யூத மதத்தின் விதி. அன்று எந்த விதமான வேலையும் செய்யக் கூடாது. மின்சாரத்தில் இயங்கும் எந்தக் கருவியையும் உபயோகப்படுத்தக் கூடாது. அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்களில் வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை (24 மணி நேரம்) லிப்ட் கீழ் தளத்திற்கும் மேல் தளத்திற்கும் இடையே ஓடிக்கொண்டே இருக்குமாம். அங்கு வசிக்கும் யூதர்கள் லிப்டில் உள்ள பட்டனைத் தொட்டு அமுக்கி அதை இயக்கக் கூடாதாகையால் இந்த ஏற்பாடு. அவர்களுடைய தளத்திற்கு வரும்போது அதில் ஏறிக்கொள்வார்கள்; போக வேண்டிய தளத்தில் இறங்கிக்கொள்வார்கள். அதை யூதர்கள் அன்று இயக்குவதில்லை. அந்த லிப்ட் அந்த இருபத்து நாலு மணி நேரமும் மேலும் கீழும் போய்க்கொண்டிருப்பதோடு ஒவ்வொரு தளத்திலும் சிறிது நேரம் நின்று கதவைத் திறந்துவிட்டு, மறுபடி மூடிக்கொண்டு மறுபடி இயங்க ஆரம்பிக்கும்.

புராதன நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கிற ஒவ்வொரு யூதரும் அன்று தொலைபேசியில் யாரோடும் பேசுவதில்லை. எந்தவித தீயையும் மூட்டுவதில்லை. இந்த மாதிரியான கட்டுப்பாடுகளோடு ஒவ்வொரு சனிக்கிழமையும் வாழ்ந்துவந்த ஒரு சநாதன யூதக் குடும்பம்தான் மேலே சொன்ன ஏழு குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பம். சனிக்கிழமை முழுவதும் மின் அடுப்பை மூட்டிச் (அதாவது அதிலுள்ள பட்டன்களை இயக்கி) சமைக்க முடியாததால் நிறைய உணவு சமைத்து அதை எப்போதும் சூடாக வைத்திருக்கும் ஹாட் பிளேட் (hot plate) என்னும் அடுப்பில் வைத்துவிட்டு அன்று இரவு தாய் உறங்கச் சென்றிருக்கிறார். இந்த சாதனத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு அதில் தீப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தாயும் அவருடைய எட்டுக் குழந்தைகளும் மேல் மாடி அறையில் தூங்கிகொண்டிருந்திருக்கிறார்கள். தந்தை மட்டும் மத சம்பந்த வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருக்கிறார்.

பற்றி எரிந்த தீ தூங்கிக்கொண்டிருந்தவர்களில் யாரும் எழுந்திருக்கும் முன் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குத் தாவியிருக்கிறது. தாயும் இரண்டாவது மகளும் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே குதித்திருக்கிறார்கள். மற்ற ஏழு குழந்தைகளும் விழித்தெழுந்து உதவி கேட்டுக் கதறிய சில நிமிடங்களிலேயே தீ அவர்கள் அனைவரையும் காவுகொண்டுவிட்டது. ஜன்னல் வழியே வெளியே குதித்த தாயும் மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். செல்போனை அன்று இயக்க மாட்டார் என்பதால் தனது ஏழு குழந்தைகளை இழந்த தந்தைக்கு பல மணி நேரம் கழிந்த பின்னரே செய்தி கிடைத்திருக்கிறது. அப்போது அவர் ஒரு யூதக்கோவிலில் இருந்திருக்கிறார். காவல் துறையினர் அவருடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரிடம் செய்தி சொல்ல அத்தனை நேரம் பிடித்திருக்கிறது. இறந்துபோன ஏழு குழந்தைகளில் நான்கு பையன்கள், மூன்று பெண்கள். இந்த எட்டுக் குழந்தைகளும் 16-லிருந்து 5-வரை வயதுடையவர்கள்.

இந்தத் தாய் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின் இஸ்ரேலில் குடியேறியிருக்கிறார். அங்கு அந்தத் தம்பதிகளுக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்த பிறகு ஒட்டு மொத்தக் குடும்பமும் பதினெட்டு மாதங்களுக்கு முன் அமெரிக்காவுக்குக் குடியேறியிருக்கிறது. (இஸ்ரேலிய யூதர்கள் அனைவருக்கும் எளிதாக அமெரிக்காவுக்குக் குடிபெயர அமெரிக்கா விசா கொடுக்கிறது. அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் எந்தக் கோடியில் பிறந்த யூதருக்கும் இஸ்ரேலில் குடியேற எளிதாக அனுமதி கிடைக்கும்.) தந்தை இஸ்ரேலில் என்ன செய்தார், அமெரிக்காவில் என்ன செய்யத் திட்டம் வைத்திருந்தார் என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் புதிய நம்பிக்கைகளோடு தன் குழந்தைகள் இருந்ததாகத் தந்தை குழந்தைகளுக்கான இரங்கல் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

இறந்த ஏழு குழந்தைகளின் உடல்களையும் புனித பூமியான ஜெருசலேமுக்குக் கொண்டுபோய் அங்கு நல்லடக்கம் செய்திருக்கிறார்கள். மதத்தின் பாரம்பரியக் கொள்கைகளில் நம்பிக்கையுடைய யூதர்கள் தாங்கள் இறந்த பிறகு தங்களுடைய உடல்கள் ஜெருசலேமில் புதைக்கப்பட்டால்தான் தங்களுடைய கடவுள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பூமிக்கு வரும்போது தங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நம்புகிறார்கள். இப்படித்தான் இந்தத் தந்தையும் நம்புவதால் அவருடைய குழந்தைகளின் உடல்கள் ஜெருசலேமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஈமச் சடங்குகளின் போது பேசிய தந்தை ‘இறைவன் கொடுத்ததை அவரே எடுத்துக்கொண்டுவிட்டார்’ என்று பேசியிருக்கிறார். இன்னொரு மதத் தலைவர் ‘இது கடவுளின் தீ’ என்று கூறியிருக்கிறார்.

யூத மதத்தில் மட்டுமல்ல, எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட நிறைய மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒரு மூட நம்பிக்கையே இந்தக் குடும்பத்தின் மிகப் பெரிய சோகத்திற்கு ஆதாரமாக அமைந்துவிட்டதே என்பதை நினைக்கும்போது இம்மாதிரியான பாரம்பரிய மத நம்பிக்கைகள் உடையவர்கள் எப்போதுமே மாறப் போவதில்லையா என்ற ஆதங்கம்தான் உண்டாகிறது. மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாங்களும் தங்கள் மதமும் தோன்றியதாகக் கூறிக்கொள்ளும் யூதர்கள் தங்கள் மூதாதையர் என்ன செய்தார்களோ அதை அப்படியே பின்பற்ற வேண்டுமா? ஒவ்வொரு வார சனியன்றும் ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் இந்த விதியின் அடிப்படை. பூமியை ஆறு நாட்களில் படைத்த இறைவன் சனிக்கிழமை ஓய்வெடுத்தாராம். அதைப்போல் யூதர்களும் அன்று முழு ஓய்வு எடுக்க வேண்டுமாம். அதை லிப்டை இயக்காமலும் மின் அடுப்பை உபயோகிக்காமலும் இருப்பதன் மூலம்தான் கடைப்பிடிக்க வேண்டுமா? அவர்கள் மூதாதையர் காலத்திற்கும் இவர்கள் காலத்திற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கின்றன. காலத்திற்குத் தகுந்தவாறு மாறிக்கொண்டு வேறு வகையில் சனிக்கிழமை விரதத்தை அனுசரிக்கலாமே.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *