இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(145)

சக்தி சக்திதாசன்.

 

அன்பினியவர்களே!
இனிய வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

சில வருடங்களுக்கு முன்னால் நடந்து முடிந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளையே மறந்து ஓடிவிடும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையின் சிக்கல்கள் பல கோணத்தில் நம்மைச் சூழ்ந்து கொண்டு இருக்கின்றன. அடுத்தவேளை உணவுக்காக அல்லல் படும் சமூகங்களை இப்போதும் அகிலத்தில் காண்கிறோம்.

ஆனால் ஒருநாடு தன் சுயத்தை இழந்து விடாதிருப்பது எப்படி? அது தன் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி?

இக்கேள்விகளுக்கான விடை இங்கிலாந்தில் நடைபெறும் பல நிகழ்வுகளில் கண்கூடு. தமது கலாச்சார அடையாளங்களைப் பேணுவதை இந்நாட்டு மக்கள் மிகவும் முக்கியமானதொன்றாகக் கருதுகிறார்கள்.

மக்களின் பெரும்பான்மையான அபிலாஷைகளை உள்வாங்கிக் கொள்ளும் அரசாங்கங்களும் இத்தகைய கலாச்சார அடையாளங்களை, காலாச்சார விழுமியங்களைப் பேணுவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தொகையை ஒதுக்குகிறார்கள்.

சரித்திரத்தை ஒதுக்கி விட்டு மனிதர்களால் வாழ்ந்து முடிந்து விட முடியாது அச்சரித்திரம் ஏதாவது ஒரு சந்தியில் அவர்களின் முன்னே வந்து அவர்களிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்.

சரி எனது இந்த மடலின் பின்னனியைப் பார்ப்போமா?

richardIII-v4வட இங்கிலாந்தில் உள்ள “லெஸ்டர் (Leicester)” எனும் இடத்தில் ஒரு கார் பார்க் அமைப்பதற்காக நிலத்தைத் தோண்டினர்கள்.

அப்போது அங்கே ஒரு மனித எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்டது. என்னே ஆச்சரியம் அது இங்கிலாந்தை ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாண்ட மன்னன் ரிச்சார்ட் 3 இனுடைய எலும்புக்கூடு என்று அறியப்பட்டது.

தொடர்ந்து அவ்வெலும்புக்கூட்டை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனும் கோஷம் எழுந்தது.

எங்கே அடக்கம் பண்ணுவது என்பதை தீர்மானிக்கும் இழுபறி ஐகோர்ட் வரை சென்று லெஸ்டர் சர்ச்சில் அடக்கம் பண்ணுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

சரி யார் இந்த ரிச்சார்ட் 3 ?

Richard the thirdரிச்சார்ட் இங்கிலாந்தின் வட பகுதியில் உள்ள ” போதரிங்கே கோட்டையில் ” 1452ம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் திகதி பிறந்தார். இந்த இடம் லெஸ்டரிலிருந்து சுமார் 30 மைல் தூரத்திலுள்ளது.

ரிச்சார்ட்டும் அவரது அண்ணன் எட்வேர்டும் , எட்வேர்ட் 3 எனும் மாபெரும் மன்னனின் கொள்ளுப் பேரன்களாவார்கள்.

இராஜ வரிசையின் பிரகாரம் ரிச்சார்ட்டின் அண்ணன் எட்வேர்ட் மன்னனாக 1461ம் ஆண்டிலிருந்து 1483 ம் ஆண்டு மரணமடையும் வரையில் அரசாண்டார்.

அவரின் மரணத்தின் பின்னர் எட்வேர்ட்டின் 12 வயது மகன் தனது சித்தப்பா ரிச்சார்ட்டின் பாதுகாப்போடு முசடிசூட்டி அரசாண்டான்.

அவனும், அவனது சகோதரனும் லண்டன் டவர் என்றழைக்கப்படும் கோட்டைக்கு இடம் பெயர்ந்தார்கள். தற்போது அது அந்நாளைய அரசர்கள் தமது அரசியல் கைதிகளை சிறைவைக்கும் இடமாகத்தான் அறியப்பட்டாலும் அப்போது அது ஒரு ராஜமாளிகையாகவே இருந்தது.

அப்பன்னிரண்டு வயது மன்னனின் பெற்றோரின் திருமணம் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்கப்பட்டதும், இராஜ வரிசையின் படி மறைந்த எட்வேர்ட் மன்னனின் தம்பியாகிய ரிச்சார்ட் முடிசூடிக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அப்பன்னிரண்டு வயதுப் பையனினதும் அவனது சகோதரினதும் நடமாட்டமே அற்றுப் போனது. அப்போதைய கூற்றுக்களின்படி எங்கே தனது இராஜபதவிக்கு போட்டியாக வந்து விடுவார்களோ என்று மன்னன் ரிச்சார்ட் அவர்களைக் கொலை செய்து விட்டான் எனும் வதந்தியே நிலவுகிறது.

1483ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு புரட்சியை அடக்கிய ரிச்சார்ட் இரண்டு வருடங்களின் பின்னர் “போஸ்வேர்த்” எனும் இடத்திற்கு வந்தான்.

அங்கே அவனது கொள்ளுத் தாத்தாவழியில் இராஜ உரிமை கோரும் மற்றொரு “டியுடோர்” மன்னனுடன் போரிட்டு 1485ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் திகதி மரணமடைந்தான்.

அப்போது அவ்விடத்திலிருந்து அவனது உடல் லெஸ்டருக்கு கொண்டுவரப்பட்டு அங்கே புதைக்கப்பட்டது.

அந்த உடலின் எலும்புக்கூடு தான் சுமார் 500 வருடங்களின் பின்னர் இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை ஆண்ட மன்னர்களில் ரிச்சார்ட் என்பவனுக்கு ஒரு கொடூரமான மன்னன் எனும் பெயர் உண்டு ஏனெனில் தனது அரசாட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பாரபட்சம் இன்றிப் பல கொலைகளைப் புரிந்துள்ளான்.

இப்போது அம்மன்னனினது எலும்புக்கூட்டை எடுத்து ஒரு மன்னனுக்குரிய சகல மரியாதைகளுடனும் லெஸ்டர் சார்ச்சில் மார்ச் 26ம் திகதி அடக்கம் செய்துள்ளார்கள்.

நான்கு நாட்கள் காட்சிக்காக வைக்கப்பட்ட இம்மன்னனினது எலும்புக்கூடு அடங்கிய பெட்டியைப் பார்த்து தமது மரியாதையைச் செலுத்துவதற்காக பல்லாயிரக் கணக்கான மக்கள் வரிசையில் மணிக்கணக்காக நின்றார்கள்.

இவரை அடக்கம் பண்ணுவதற்கான பெட்டியை கனடாவைச் சேர்ந்த இம்மன்னனின் பரம்பரையில் வந்த ஒரு தச்சுத் தொழிலை மேற்கொள்பவர் உருவாக்கியது குறிப்பிடத் தக்கது.

இம்மன்னனின் உடலுக்கு மரியாதை செலுத்தும் முகமாக தற்போதைய இங்கிலாந்து ராணியின் கடைசி மைந்தன் அங்கு சென்றிருந்தார்.

கொடூரமான மன்னன் என்று பெயரெடுத்திருந்தவருக்கு ஏன் இத்தனை கெளரவம் எனும் வாதம் ஒருபக்கத்தில் இருந்து ஒலிக்க, அவனது கொடூரமான செயல்கள் அக்காலகட்டத்தில் மற்றைய மன்னர்களினாலும் கடைப்பிடிக்கப்பட்டதே ஆகவே அவருக்குரிய கெள்ரவத்தைக் கொடுப்பது தவறாகது எனும் வாதம் மறுபக்கத்தில் ஒலிக்கிறது.

என்ன இருந்தாலும் தற்போதைய எலிசபெத் மகராணியாரின் குடும்பம் பங்கு பற்றியிருக்க வேண்டுமா? எனும் கேள்வியும் ஆங்காங்கே ஒலிக்கிறது.

ஒன்று மட்டும் உண்மை, காலங்கள் எத்தனை கசந்தாலும் தமது நாட்டின் சரித்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்நாட்டு மக்களினது பண்பு பாராட்டப் படவேண்டிய ஒன்றே!

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க