Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 49

–சு. கோதண்டராமன்.

 

வேதம் அபௌருஷேயமா?

619px-Rigveda_MS2097

 

வேதம் அபௌருஷேயம் (மனிதரால் இயற்றப்படாதது) என்பது ஒரு நம்பிக்கை. வேத மந்திரங்களின் பொருளை ஒரு முறையாவது படித்துப் பார்த்தவர்கள் அது மனிதரால்தான் இயற்றப்பட்டது என்பதை ஒப்புக் கொள்வார்கள். “ப்ரஹ்ம அகாரி”- “நான் இந்த பிரார்த்தனையை இயற்றியிருக்கிறேன்” என்ற தொடர் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. (உதாரணம் 4.6.11, 4.16.20, 21) எனவே வேதம் ரிஷிகளால் இயற்றப்பட்டதுதான்.

ஆனால் வேதம் அபௌருஷேயம் என்பதை மூட நம்பிக்கை என்றும் சொல்ல முடியாது. வேதப் பாடல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்று முன் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சில பாடல்கள் சாதாரணப் புலமை நிலையில் பாடப்பட்டவை. சில அருள் நிலையில் பாடப்பட்டவை. மேலும் சில பேரருள் நிலையில் பாடப்பட்டவை. சில, தன்னையே பரம்பொருளாக உணரும் அத்வைத நிலையில் பாடப்படவை.

உதாரணமாக, ஆபோஹிஷ்டா மயோபுவ: என்ற மந்திரத்தைப் பார்ப்போம். 10.9.1 முதல் பாடலில், தண்ணீரே மகிழ்ச்சி தருகிறீர்கள் என்று கூறும்போது ரிஷி சாதாரணப் புலமை நிலையில் இருக்கிறார். தாய் போல என்னை நேசிக்கிறீர்கள். பாவத்தைப் போக்கி எனக்குக் குழந்தைப் பேற்றை அளிக்கும் உங்களிடம் நாங்கள் விரைந்து வருகிறோம். தெய்விகமான தண்ணீர் எங்களது வழிபாட்டுக்கும் குடிப்பதற்கும் இனியதாக இருக்கட்டும் எங்களைச் சுற்றி ஓடட்டும், நலம் தரட்டும். விலை மதிப்புள்ள பொருட்களின் ராணியே, மனிதரைக் கட்டுப்படுத்துபவர்களே, எங்களுக்கு மருந்துகள் தருக….. என்று இவ்வாறு பேசும்போது அவர் நீரைத் தெய்வமாகக் கருதுகிறார். இது அருள் நிலை.

தண்ணீர் எப்படி மனிதர்களை நேசிக்கும், அது எப்படி மனிதரைக் கட்டுப்படுத்தும் என்று கேட்கும் பகுத்தறிவு வாதிகளால் இந்த அருள் நிலை வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது.

அருட்செல்வம் மிகுந்த தண்ணீரே, எல்லாச் செல்வங்களும் உங்கள் கையில். நற்செயல்களும் அமரத்துவமும் கொண்டு தருபவர்கள் நீங்களே (10.30.12) என்று சொல்லும்போது அவர்கள் நீரை அமரத்துவம் அளிக்க வல்ல பரம்பொருளாகவே கருதுகிறார்கள்.

இதற்கு மேற்பட்டதான நான்காவது நிலையில், காற்றும் புனலும் கடலுமே நான் என்று கூறிய பாரதி போலத் தன்னை எல்லாவற்றுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் ரிஷி. நானே அக்னி, நானே ஹவிஸ் என்று கூறும் 3.26.7 போன்ற பாடல்களும் சில வேதத்தில் உண்டு.

இத்தகைய அருள் நிலைகளில் தோன்றிய பாடல்களைத் தெய்வ அருளால் தோன்றிய பாடல்கள் என்று கூறுவது உபசார வழக்கு. நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகனின் வார்த்தை அன்றி நான் உரைக்கும் வார்த்தை அல்ல என்று வள்ளலார் கூறுவதை ஒப்பிட்டுப் பார்க்க.

மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி என்று பாரதி கூறியதையும் நோக்குக.

இத்தகைய அருட்கவிகள் கோடியில் ஒருவர் எப்பொழுதாவது தானே பிறப்பர். எனவே அவர்களது கவிதைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல விரும்பிய மக்களால் இவை மனப்பாடம் செய்யப்பட்டன. சிலர் எழுதியும் வைத்திருக்கலாம்.

காலப்போக்கில் இவற்றில் பாடபேதங்கள் தோன்றின. காரணம் மனிதர்களின் இயல்பான மறதி தான். ஏதோ ஒரு எழுத்தோ, சொல்லோ மறந்துவிட்டால் அதை வேறு ஒன்றைக் கொண்டு நிரப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பர் என்று தெரிகிறது. உதாரணமாக, கீழ்க் கண்டவற்றை ஒப்பிடுக.
ஸோமானம் ஸ்வரணம் க்ருணுஹி ப்ரஹ்மணஸ்பதே கக்ஷீவந்தம் ய: ஔஷிஜ: ரிக் 1.18.1
ஸோமானம் ஸ்வரணம் க்ருணுஹி ப்ரஹ்மணஸ்பதே கக்ஷீவந்தம் ய: ஔஷிஜம் தைத்திரீய ஸம்ஹிதை 1.5.6
கடைசியில் விசர்க்கத்திற்குப் பதிலாக ‘ம்’ வருகிறது.

கீழ்க் கண்டதையும் ஒப்பிடுக.
உத்வயம் தமஸஸ்பரி ஜ்யோதி: பச்யந்த: உத்தரம் தேவம் தேவத்ரா ஸூர்யமகன்ம ஜ்யோதிருத்தமம் – ரிக் 1.50.10
உத்வயம் தமஸஸ்பரி பச்யந்த: ஜ்யோதி: உத்தரம் தேவம் தேவத்ரா ஸூர்யமகன்ம ஜ்யோதிருத்தமம் – தை.ஸம் 4.1.7
இதில் இரு வார்த்தைகள் முன் பின்னாக இடம் மாறியுள்ளன.

இந்த மாற்றங்கள் வேண்டுமென்று செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. கவனக் குறைவால் ஏற்பட்டதாகத் தான் தெரிகிறது. இது போன்று நிறைய உள்ளன.

தான் குருவிடமிருந்து கற்றுக் கொண்டதோடு கூட தன் சொந்தக் கவிதைகளையும் சேர்த்துத் தன் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வழக்கமும் சிலருக்கு இருந்திருக்கும். நாளடைவில் இத்தகைய பாடபேதங்கள் அளவில் பெருகிய நிலையில் அவரவரும் தத்தம் பாடமே உண்மையான பாடம் என்று வாதிட்டிருப்பர். எதையும் தள்ள முடியாது. அந்த நிலையில் தான் பாடபேதங்களைப் பிரித்துத் தனிப் பெயரிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ரிக் வேதத்தின் சுருங்கிய வடிவம் தான் என்ற போதிலும் பல பாட பேதங்கள் இருந்ததால் சாம வேதம் தனி வேதமாகப் பெயரிடப்பட்டது. வேள்விக்கான மந்திரங்களும் உரைநடைப் பகுதிகளும் கலந்த பாடபேதம் யஜுர்வேதமாகப் பெயரிடப்பட்டது. இதை ஒரு தனி மனிதர் செய்திருந்தால் அது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்குமா என்பதும் நாடு முழுவதும் பரவி இருக்குமா என்பதும் சந்தேகமே. நாடு முழுவதும் உள்ள அறிஞர்கள் ஒன்று கூடி இதைச் செய்திருக்க வேண்டும். அந்தக் குழுவின் தலைவராக வியாசர் இருந்திருப்பார்.

இனி மேலும் இத்தகைய பாடபேதங்கள் ஏற்படக் கூடாது என்ற எண்ணம் அந்த அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்காகத் தான் ஸ்வர முறையையும் க்ரமம், பதம், ஜடா, கனம் போன்ற பாட முறைகளையும் ஏற்படுத்தி வார்த்தைகள் இடம் மாறாதபடியும் உரு மாறாதபடியும் ஏற்பாடு செய்தனர். வேதத்தை எழுதிப் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் அப்பொழுது தான் ஏற்பட்டிருக்க வேண்டும். வேதம் ஈச்வரனின் மூச்சுக் காற்று என்ற நம்பிக்கையையும் அப்பொழுது அவர்கள் பரப்பி இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை தான் வேதங்களை உரு மாறாமல் இன்று வரை காப்பாற்றி வந்திருக்கிறது. வேதக் கல்வி சிரத்தையுடன் கற்பிக்கப்பட்டதற்கும் அதுவே காரணமாக அமைந்து. வேதக் கல்வி தந்த சிரத்தை காரணமாக, பாரத சமுதாயம் பல துறைகளில் முன்னேற்றம் கண்டது.

இந்தக் கட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கு முன்னே வேதத்தில் ஏற்பட்ட இடைச் செருகல்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் விட்டிருக்க வேண்டும். அதனால் தான் வேதத்தின் சில பகுதிகள் மையக் கருத்துக்கு மாறான வகையில் செல்கின்றன. பிற்காலத்தில் வேத இலக்கியம், தர்ம சாஸ்திரம், புராணம் என்ற பெயரில் எழுந்த இலக்கியங்களில் சில இந்த மையக் கருத்துக்கு மாறானதாகச் செல்கின்றன. பாரதி அவற்றைத் தான் பொய் வேதங்கள் என்கிறார்.

வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்களும் –
அவள்புனைந் தாள்; …… பாரதி

 

 

 

 

 

படம் உதவி – விக்கிபீடியா:  http://commons.wikimedia.org/wiki/File:Rigveda_MS2097.jpg

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க