நாகேஸ்வரி அண்ணாமலை

சிறு வயதிலிருந்தே எங்கள் தந்தை எங்கள் அனைவரையும் உணவை வீணாக்காமல் இருப்பதற்கு நன்றாகப் பழக்கி இருக்கிறார்.  தட்டில் வைத்ததை முழுவதுமாகச் சாப்பிட்டுவிட வேண்டும் என்பார்.  இதற்கு நன்றாகப் பழகிப் போயிருந்த எனக்குக் கல்லூரி விடுதியில் சில மாணவிகள் தாறுமாறாக உணவை வீணாக்கும்போது மிகவும் எரிச்சலாகவும் வருத்தமாகவும் இருக்கும்.  அதிலும் இந்தியாவில் பலர் அவர்களுக்கு அடிப்படைத் தேவையான உணவு இல்லாமல் இருக்கும்போது இவர்கள் இப்படி உணவை வீணாக்குகிறார்களே என்று மிகவும் மனவேதனை ஏற்படும்.  அதிலும் பணம் படைத்த சில மாணவிகள் வேண்டுமென்றே உணவை வீணடிப்பதைப் பார்க்கும்போது இவர்களுக்குக் கடவுள் என்ன தண்டனை வழங்குவார் என்று எண்ணத் தோன்றும்.  என் சக மாணவி ஒருத்தி இவள் சிறு பிள்ளையாக இருக்கும்போது வீட்டில் இவள் தட்டில் எதையாவது மீதிவைத்தால், அவளுடைய தாய், ‘நீ இப்படிச் செய்தால் நீ இறந்து மேலுலகம் போன பிறகு நீ இப்போது தட்டில் வீணாக்குவதை எல்லாம் சேர்த்துவைத்து கடவுள் உன்னை அப்போது சாப்பிடச் சொல்லுவார்’ என்று கூறுவாராம்.  இதைக் கேட்டு இன்னும் சில பெற்றோர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று சந்தோஷமாக இருக்கும்.  தட்டில் உள்ள எல்லாவற்றையும் வழித்துச் சாப்பிட்டால் வசதியில்லாதவர்கள்தான் இப்படிச் செய்வார்கள் என்று இந்தியாவில் ஒரு தவறான எண்ணம் பல பேரிடம் உண்டு.  யார் என்ன நினைத்தாலும் சரி வீட்டிலும் வெளியிலும் நான் உணவை வீணாக்குவதே இல்லை.  இந்தப் பழக்கம் அப்பா நான் சிறு பிள்ளையாக இருந்தபோதே கற்றுக் கொடுத்ததால் எளிதில் என்னை விட்டுப் போகாது.

எதையும் வீணாக்கும் அமெரிக்காவில் அவர்கள் உணவை வீணாக்குவதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  அமெரிக்காவில் உணவை வழித்துச் சாப்பிட்டால் வசதியற்றவர்கள் என்று யாரும் நினைப்பதில்லை.  இங்கு உணவிற்கா பஞ்சம்?  உணவு வகைகள் மிகவும் மலிவாகக் கிடைக்கின்றன.  யாரும் எளிதாக வயிறாரச் சாப்பிடலாம்.  Delicacies என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த (இவற்றையும் நான் சிறப்பான / சத்தான உணவுகள் என்று அழைக்க மாட்டேன்) உணவுகள் வேண்டுமானால் எல்லோருக்கும் கிடைக்காமல் இருக்கலாம்.   அமெரிக்காவில் வேறு காரணங்களுக்காக உணவை வீணடிப்பார்கள்.  என்னோடு வேலைபார்த்த ஒருவர் மதிய உணவை வெளியில் வாங்கிக்கொண்டு வருவார்.  பாதிக்கு மேல் குப்பையில் கொட்டுவார்.  ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால் ‘நிறையக் கொடுக்கிறார்கள்.  என்னால் அத்தனையையும் சாப்பிட முடியவில்லை’ என்பார்.  ‘அப்படியென்றால் வீட்டில் நீங்கள் தயாரித்ததைக் கொஞ்சமாகக் கொண்டுவரலாமே’ என்றால் அப்படியும் தன்னால் செய்ய முடியாது என்பார்.  ‘மீதியுள்ளதை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமே’ என்றால் அதையும் செய்ய முடியாது என்பதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுவார்.  ‘இந்தியாவில் எத்தனை பேர் உணவில்லாமல் வாடுகிறார்கள்’ என்றால் ‘நான் இங்கு உணவை வீணாக்காமல் இருந்தால் அவர்களுக்கு உணவு கிடைத்துவிடுமா என்ன?’ என்று குதர்க்கம் பேசுவார்.  அமெரிக்காவில் விளைவிப்பதில் எத்தனை சதவிகிதம் வீணாகிறது, உணவுப் பொருள்கள் விற்கும் கடைகளில் எத்தனை சதவிகிதம் வீணாகிறது, வீடுகளில் எத்தனை சதவிகிதம் வீணாகிறது என்று பல புள்ளிவிபரங்கள் கொடுப்பார்கள்.  ஆனால் உணவை வீணாக்கக் கூடாது என்ற ஞானோதயம் அமெரிக்காவில் எத்தனை பேருக்கு வந்திருக்கிறது என்று தெரியவில்லை.

 ana

சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் செய்தித்தாளில் வந்த செய்தி என்னை மிகவும் வாட்டியது.  பால் உற்பத்தியாளர்கள் தங்களுடைய பாலுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை என்பதால் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, பாலைப் பெரிய சாலைகளில் கொட்டினார்களாம்.  இவர்களால் எப்படி இப்படிச் செய்ய முடிந்தது?  இப்போது மறுபடி ஈரோட்டிற்கு அருகில் ஐம்பது லிட்டர் பாலை சாலையில் கொட்டியிருக்கிறார்கள்.  அப்படிக் கொட்டிய பாலின் மேல் செருப்புக் கால்களோடு நின்றுகொண்டிருக்கிறார்கள்.  பாலில் மனிதனின் உடல்நலனுக்குத் தேவையான பல சத்துக்கள் இருக்கின்றன.  அதனால்தான் பாலை அமிர்தம் என்கிறோம்; அதை நமக்கு வழங்கும் மாடுகளை வணங்குகிறோம்.  நாம் மாடுகளுக்குக் கொடுக்கும் தீவனத்தை அவை பாலாக மாற்றி நமக்குக் கொடுக்கின்றன.  அதை இப்படி வீணாக்கலாமா?  பாலுக்குரிய விலையைக் கேட்பதற்கு இதைவிட வேறு வழியே அவர்களுக்குத் தெரியவில்லையா?  எத்தனை ஏழைகளுக்கு அதை இலவசமாகக் கொடுத்திருக்கலாம்.  அப்படிச் செய்திருந்தால் தங்கள் எதிர்ப்பைக் காட்டியது மாதிரி ஆகாதா?

இன்னொரு இடத்தில் தக்காளிப் பழங்களுக்குத் தகுந்த விலை கிடைக்கவில்லையென்று அவற்றை வீதியில் கொட்டியிருக்கிறார்கள்.  இப்படி அவர்கள் கொட்டிய தக்காளியை ஏழைச் சிறுவர், சிறுமிகள் தரையிலிருந்து பொறுக்கியிருக்கிறார்கள்.  இது என்ன கொடுமை.  இப்படிச் செய்தால்தான் அவர்களால் தங்கள் கோபத்தைக் காட்டியிருக்க முடியுமா?  என் கவனத்திற்கு வந்தது இந்தியாவில் இந்த இரண்டு உதாரணங்கள் மட்டும்தான்.  இன்னும் இப்படி எத்தனை நடந்தனவோ?  நடக்கின்றனவோ?

பாரீஸின் புறநகரைச் சேர்ந்த ஒரு முனிசிபல் கவுன்சிலர் இப்போது அங்கு உணவை வீணாக்குவதைத் தடைசெய்யும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து, நான்கே மாதங்களில் இரண்டு லட்சம் கையெழுத்துகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களை உணவை வீணாக்குவதைத் தடைசெய்யும் சட்டத்தை அங்கு இயற்றும்படி செய்திருக்கிறார்.  குறிப்பிட்ட தேதிக்குள் உபயோகித்தால் நல்லது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுகளை தேதி முடிந்தவுடன் குப்பையில் எறிந்து விடுவார்கள்.  ஏழைகள் அவற்றை குப்பையிலிருந்து எடுத்து உபயோகித்துவிடக் கூடாது என்பதற்காக அவற்றில் விஷம் கலந்து குப்பையில் கொட்டுவார்களாம்.  இதையெல்லாம் தடைசெய்ய வேண்டும் என்று கூறும் இவர் தான் கல்லூரியில் படிக்கும்போது குறைந்த பணத்தில் தேவையான உணவு வாங்க முடியாமல் பட்டினியில் இருந்ததையும் அந்தச் சமயங்களில் தன்னால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருந்ததையும் சுட்டிக்காட்டி யாரும் அப்படிப் பட்டினியால் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்ததாகக் கூறியிருக்கிறார்.

இவருடைய இந்த முயற்சியை சிலர் விபரம் தெரியாத ஒருவர் செய்யும் முயற்சி என்றும் இந்த இலட்சிய முயற்சி என்றும் வெற்றி பெறப்போவதில்லை என்றும் கூறி இவரை எள்ளிநகையாடுகிறார்களாம்.  ‘பட்டினி கிடப்பது என்றால் என்ன என்று எனக்கு நன்றாகத் தெரியும்.  அப்படி யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காகவே நான் கவுன்சிலராக ஆனேன்’ என்று கூறும் இவர் செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் நடக்கப் போகும் உலக வறுமை ஒழிப்பு திட்டத்திலும் நவம்பரில் துருக்கியில் நடக்கப் போகும் பொருளாதார மாநாட்டிலும் டிசம்பரில் பாரீஸில் நடக்கப் போகும் சுற்றுச்சூழல் மாநாட்டிலும் தன் இயக்கத்தின் வேண்டுகோளை வைக்கப் போகிறாராம்.

பிரான்சில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உணவை வீணாக்குவதைத் தடைசெய்யும் சட்டங்களைக் கொண்டுவருவது இவருடைய திட்டத்தின் முக்கிய இலக்கு.  இந்தியாவில் அமெரிக்காவில் வீணாக்கும் அளவிற்கு உணவை நாம் வீணாக்குவது இல்லை.  விருந்துகளிலோ ஓட்டல்களிலோ இலையில் வீணாக்கப்படுவதை சாப்பிடுவதற்கு முன்பு மனிதர்களே இருந்தார்கள்.  இப்போது அந்த அவலம் இந்தியாவில் இல்லை.  இன்றும் தெரு நாய்கள் அவற்றைச் சாப்பிட்டுவிடுகின்றன.  ஆனால் இந்தியாவில் வீணாகும் கொஞ்ச நஞ்ச உணவும் வீணாகாமல் பார்த்துக்கொள்வது நம் கடமையல்லவா?

பாரீஸில் உணவு வீணாகுவதை தடுக்க முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் இவருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களைக் கூறுவோம்.  அவரைப் பின்பற்றி இந்தியாவிலும் நம்மால் முடிந்ததைச் செய்வோம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க