கவிஞர் ருத்ரா

“தி இந்து தமிழ்” நாளிதழில் (22/5/2015) நம் தமிழின் தொன்மையைக் குறிக்கும் செய்தி அடங்கிய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது.திரு.ஒய்.ஆண்டனி செல்வராஜ் என்பவர் அரிய தகவல்களுடன் புகைப்படத்தோடு அக்கட்டுரையை எழுதியிருக்கிறார்.

பழனி அருகில் கோடைக்கானல் மலைப்பகுதியில் “கோம்பைக்காடு” எனும் இடத்தில் சுமார் 4000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை நம் தொல் இயல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.பாறை ஓவிய ஆராய்ச்சியாளர்கள் திரு.நாராயணமூர்த்தி முனைவர் கன்னிமுத்து,வாஞ்சிநாதன் ஆகியோர் அப்பாறை ஓவியத்தின் நுட்பத்தை நன்கு விளக்கியுள்ளனர்.தொல் தமிழர்களின் வேட்டையாடும் மற்றும் போர் புரியும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக

“ஐந்து விரல் விரித்த நிலையில்”

ஒரு கையின் ஓவியமும் அருகில் ஒரு நீண்ட கோடும் அருகில் சூலம் போன்ற கருவியும் வரையப்பட்டிருப்பதாக (சிவப்பு நிறத்தில்) விவரித்திருக்கிறார்கள்.இது கி.மு 2000 ஆண்டுக்கு முன் உள்ள‌ தொன்மைக்காட்சி ஆகும்.இன்னும் கி.மு 4000 ஆண்டுகளுக்கு முன் மொஹஞ்ச தாரோ ஹரப்பா முத்திரைகளில் ஆழ்நிலை தவ நிலையில் உள்ள உருவம் பற்றிய குறிப்பு தமிழ் ஒலிப்பில் இருப்பதாக புதிர் அவிழ்ப்பு (டி சைஃபரிங்)செய்யப்பட்டிருக்கிறது.இயற்கையோடு சிவணிய(பொருந்திய)தமிழனே சிவண் ஆகி சிவன் ஆகி இருப்பானோ என்று நான் (என் சொந்த கருத்து)எண்ணுகிறேன்.அப்படியொரு தலவனே சிவன் ஆகியிருப்பான்.சிவண் என்ற சொல்லே திரிந்து சிரவண் ஆகி தாடி முடி சடையுடன் முனிவன் ஆகியிருக்கலாம். (புலி வேட்டையாடி புலித்தோலை அரைக்கசைத்து பாம்புகளை பழக்கி ஆபரணமாய் சூடிய சிவன்)

அதன் தொடர்ச்சியானபண்டைய தமிழ‌னின் தொல்லிய சிந்தனை வடிவங்கள் பிற்றை நாட்களில் சித்த வடிவங்கள் ஆகின. இங்கு நான் பெரிதும் கவரப்பெற்றது அந்த ஓவியங்கள் நம் தொல் தமிழ் இனத்தவரான பளிஞர்களால்(பளியர் அல்லது பழையர்) உருவாக்கப்பட்டிருக்கின்றன‌ என ஆய்வாளார்கள் கருதும் செய்தியே ஆகும்.

அத்தகைய பழைஞர் அல்லது பளிஞர் தலைவன் தன் காதலிக்கு “இரவுக்குறியாக”இந்த பாறை ஓவியத்தையே அடையாளமாகக்காட்டி களவு (காதல்)செய்ததாக விரித்த கற்பனையையே இங்கு “புழைபடு பெருங்கல்” என்ற தலைப்பில் சங்கநடைக்கவிதையாய் ஆக்கியிருக்கிறேன்.

மேலே குறிப்பிட்ட கட்டுரையாளர் அவர்களுக்கும் “தி இந்து தமிழ்” ஆசிரியருக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

புழைபடுப் பெருங்கல்
================================================

oolaisuvadi

எல்லே கனைகுரல் எரி சொரிந்தாங்கு
சூர்தரு கோட்டின் முப்பால் ஓவு
முகடு தோய் மன்ற முளி மள்ளல் நூரி
பழைய சான்ற பழைஞ காண்தி.
என் ஐம்பால் தோகை அணிகொள வருடி
அருள வந்து ஓம்பல் ஆற்றுதி.
கடுவிரல் ஐவிரல் அறை அறைந்தன்ன‌
நின்ற ஒண்குறி அளையுனள் ஆகி
வள்ளிய நிலனும் வன்கல் மன்றும்
வருத்தியும் உன் வெள்ளி தோன்றுபு
காணிய எதிர்க்கும் மெய் அழி விதிர்க்கும்.
பாறைக்கோட்டின் பனிநிறை குறியில்
நிலவும் கண்சாஅய் மடிகொளத்தோயும்
வானின் மங்கைக்கும் இடுகுறி இட்டு
யாங்கண் ஒளித்தனை?வருதி விழிமுன்.
புழைபடுப் பெருங்கல் பொள்ளும் உருவும்
தழைபடு நுண்ணிறத் திண்மைக்கவினும்
நுவலாநின்ற ஊழ்ப்பாடு ஊரே அறியும்.
என்னில் குழைத்த என் உயிர் வண்ணம்
நின்னை யூடி என்பு மீமிசை இன்னும் உள்ளில்
கூரிடும் குருதிச்சோறும் கூர்த்த கூறிடும்.
எற்றுக்கு பின் விசும்பு நீவு அணங்கு ஈண்டு
குறி ஓவு தழீஇ கொடுங்காட்சி மல்கும்?

==================================================

பொழிப்புரை

எல்லே கனைகுரல் எரி சொரிந்தாங்கு
சூர்தரு கோட்டின் முப்பால் ஓவு
முகடு தோய் மன்ற முளி மள்ளல் நூரி
பழைய சான்ற பழைஞ காண்தி.

குறிஞ்சிகாட்டில் இரவுக்குறி எனும் சந்திப்பு அடையாளத்தில் நின்று கொண்டு தவித்துக்கொண்டிருக்கும் தலைவியின் கூற்று இது.

காலைக்கதிரவனின் ஒளியில் அக்கதிர்களின் வெப்பம் மிகுந்த தீயே மழை பொழிவது போலவும் விளங்கும் அந்த மலைக்காட்டிலே அச்சம் தரும் கோடு போன்ற ஓவியம் மூன்று கவடுகளாய் (சூலம்) தெரியும்படி பாறைமேடுகள் நிறைந்த மலியின் தலவனே.உன் வலிமை இழைந்து பறைசாற்றி பகைவர்களை சிதறி ஓடச்செய்யும்.அத்தகைய பழமை சான்ற வேட்டைவீரத்தின் பழைஞர் தலைவனே என்னைக்காண விரைவாயாக‌

என் ஐம்பால் தோகை அணிகொள வருடி
அருள வந்து ஓம்பல் ஆற்றுதி.
கடுவிரல் ஐவிரல் அறை அறைந்தன்ன‌
நின்ற ஒண்குறி அளையுனள் ஆகி
வள்ளிய நிலனும் வன்கல் மன்றும்
வருத்தியும் உன் வெள்ளி தோன்றுபு.
காணிய எதிர்க்கும் மெய் அழி விதிர்க்கும்.

ஐவகையாய் அழகுபெற என் கூந்தல் வகிடு பிரித்து கிடக்கும் நிலையில் அன்புடன் வந்து அவற்றைக்கோதி காதலுடன் ஆறுதல் காத்து அருள்வாயாக.அதோ அந்த பாறையில் ஐந்து விரல்களைக் கொண்டு பளீரென அறைந்தாற்போல் தோன்றும் அந்த ஓவியத்தைக்குறியாக கொண்டு இங்கு நின்று அலைவுற்றுக்கொண்டிருக்கிறேன்.வள்ளிக்கிழங்கு நிலத்தில் வேரோடி நெருடல் செய்யும்.கடுமை மிக்க கற்களின் மலை மேடுகள் என்முன்னே எதிர்ப்படும்.இத்துயரங்களின் இடையே விடிவெள்ளி போல் தோன்றி நீ வருவாயாக.உன்னைக்கண்டு களிக்கும்வரை என் உடலின் அழகு நலன் சிதைவுற்று மெய் நடுங்குவதைகாண்.

பாறைக்கோட்டின் பனிநிறை குறியில்
நிலவும் கண்சாஅய் மடிகொளத்தோயும்
வானின் மங்கைக்கும் இடுகுறி இட்டு
யாங்கண் ஒளித்தனை?வருதி விழிமுன்.

பாறை ஓவியத்தின் கோடுகள் வெம்மை நிறைந்து தகித்தாலும் நம் காதல் சந்திப்புக்குறி காட்டுவதால் குளிர்ந்து அகம் களிக்கச் செய்கிறது.இதில் நிலவுகூட வந்து கண் உறங்கி உறவாடும் போல் இருக்கிறது.அதனால் இந்த வானம் என்ற அந்த பரந்த மங்கைக்கும் இந்த இரவுக்குறி காட்டினாயா என்ன? இவையெல்லாம் செய்து விட்டு நீ எங்கு ஒளிந்திருக்கிறாய்.உடனே என் கண் முன் வந்துவிடு.

புழைபடுப் பெருங்கல் பொள்ளும் உருவும்
தழைபடு நுண்ணிறத் திண்மைக்கவினும்
நுவலாநின்ற ஊழ்ப்பாடு ஊரே அறியும்.

பிளவு பட்ட மலையிடுக்குகளில் அகன்ற பாறையில் செதுக்கிய அல்லது கீறல் செய்த ஓவிய வடிவங்கள் நுட்பமான செய்திகள் அடங்கிய சில இலை தழைகளின் வண்ணங்கள் குழைத்து செய்யப்பட்டவை.அதனால் அவை காலத்தால் அழியாத உறுதியான‌ எழில்நலம் கொண்டவை.அவை பறை சாற்றும் தொன்மைச்சான்றுகள் பற்றி இந்த ஊரால் எப்போதும் அறியப்படும் தன்மையுடையன.

என்னில் குழைத்த என் உயிர் வண்ணம்
நின்னை யூடி என்பு மீமிசை இன்னும் உள்ளில்
கூரிடும் குருதிச்சோறும் கூர்த்த கூறிடும்.
எற்றுக்கு பின் விசும்பு நீவு அணங்கு ஈண்டு
குறி ஓவு தழீஇ கொடுங்காட்சி மல்கும்?

நீ என்னைக்குழைத்து என் உயிர்வண்ணம் பூசிய‌ ஓவியமாகத்தான் இதனைக்காண்கிறேன்.உன்னை ஊடுருவி எலும்புக்குள்ளும் உறைந்து அதற்கும் மேலாய் உன் உள்ளமும் புகுந்து பிளந்து இரத்தத்தின் சத்துக்குள்ளும் நிலைகொண்டு நங்கூரம் இட்டு உன் எண்ணக்கூறுகளில் விரவி நிற்பேன்.அப்படி இருக்க வானம் முழுதும் வட்டமிடும் இந்த பேய்த்தழுவல்கள் எப்படி இந்த குறியில் வந்து படர்ந்து நின்று கொடிய காட்சிகளை மருட்காட்சிகளாய் என் முன் காட்டி நிற்கும்? அவை ஒழிந்து மறையட்டும்.

================================================================================

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க