கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான சவால்கள்

எஸ் வி வேணுகோபாலன்

சென்னையின் கல்வி வளாகங்களில் அந்த இடம் எப்போதுமே பசுமைச் சூழல் நிரம்பியதாக இருக்கும். ஒரு பத்தாண்டுக்குமுன்பு அங்கே குடியிருந்த உயர் நிர்வாகி ஒருவருக்கு திடீரென்று ஒரு சத்தம் ஆகவில்லை. மிகப் பெரிய சிந்தனையாளரைத் தூங்கவிடாத சக்திகளை அவரால் எப்படி மன்னிக்க முடியும்?. மறுநாள் நரிக்குறவர்களை வரவழைத்து அந்த சத்தத்தை அவர்களது வெடி சத்தத்தால் முடித்து வைக்க வேண்டினார். சுட்டு வீழ்த்தப்பட்ட சிட்டுக் குருவிகளை அந்தப் பாமர மனிதர்கள் மூட்டை மூட்டையாகச் சுமந்து கொண்டு வெளியேறினர்.

பேரா. வசந்தா கந்தசாமி அவர்களை பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி இதழுக்காக நேர்காணல் செய்கையில், அவரது கணவர் சொன்ன தகவல் இது. ஐ ஐ டி வளாகத்தில் பறவைகளின் அற்புதமான மொழியைக் கேட்கப் பிடிக்காத மேதாவி ஒருவர் இருந்தார் என்பதும், தனக்கு ஒவ்வாத ஒலிகளை எழுப்பிய பாவத்திற்காக சிறகடித்த பறவைகளை அவர் சிதறடிக்கவும் தயங்கவில்லை என்பது எத்தனை வேதனையான செய்தி.

இதோ, ஐ ஐ டி மீண்டும் செய்திகளில் வந்திருக்கிறது. அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்திருக்கின்றது ஐ ஐ டி நிர்வாகம். பிரதமரை விமர்சித்தார்களாம், அடடா, ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா….இந்து மதத்திற்கு எதிராக துண்டறிக்கை வெளியிட்டார்களாம். ஓஹோ, இது இந்து நாடு என்ற முடிவுக்கு வந்து விட்டு, அதை சர்வாதிகார அமைப்பாகவும் அறிவிக்கத் துடிக்கின்றனரா…யாரோ மத்திய அரசுக்கு புகார் எழுதிப் போட்டனராம். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு ஐ ஐ டி நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. அடுத்த நிமிடம், இந்த அமைப்பையே தடை செய்துவிட்டது விசுவாசமிக்க நிர்வாகம்.

மத்திய ஆட்சியாளர்களின் அதிகார வெறி, தத்துவார்த்தத் திமிர் மீண்டுமொரு முறை அராஜகத்தின் உச்சத்தைத் தொடுகிறது. இதை சாதாரண நிகழ்வாக, ஒரு நிறுவனத்தின் உள்ளரங்க விஷயமாக, ஏதோ புரிதலில் உள்ள சிக்கலாக மட்டும் பார்த்துவிட்டுப் போக முடியாது. ஏனெனில், அரசின் அத்துமீறிய இந்தத் தலையீட்டை எதிர்த்துப் பேசுபவர்களை சங் பரிவார பக்கத்திலிருந்து பாய்ந்து வந்து குதறுவோர் எழுப்பும் கேள்விகள், பிரச்சனை இதோடு முடியாது என்று தெரிவிக்கின்றன.

படிக்க வந்த இடத்தில் அதென்ன அரசியல் என்று ஓர் அறிவுஜீவி, இணையதளத்தில் அப்பாவி போல் எழுதுகிறார். அம்பேத்கர் பெரியார் வட்டத்தின் சுவர் அறிக்கையை கேள்விக்கு உட்படுத்துகின்றவர்கள் அதன் உள்ளே எழுதப்பட்டிருக்கும் செய்திக்கு பதில் சொல்லத் தயாராயில்லை.

ஐ ஐ டி நிறுவனத்தில் இயங்கும் துறைகளின் பெயர்களை இந்தியில் மாற்றி எழுதுகின்றனர். எழுதிவிட்டுப் போகட்டும். அதில் படியும் சமஸ்கிருத சாயலை, அது பிரதிபலிக்கும் அவர்களது வேத காலத்து அறிவியல் தடாலடியை மாணவர்கள் விமர்சித்துள்ளனர். நரேந்திர மோடியின் அரசியல் பொருளாதார பண்பாட்டுக் கொள்கைகளை மாணவர்கள் விவாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது? அரசியல் பேசாதே என்கிறது இந்துத்வா கும்பல். அம்பேத்கர், பெரியார் என்ற பெயர்களைக் கேட்கவே கூசுகிறது அதன் காது.

இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல் அறிக்கை பரிந்துரைகளுக்கு எதிராக, தலைநகர் தில்லியில் மருத்துவ மாணவர்களைப் போராட்டத்தில் இறங்கவைத்து அவர்களைத் தவறான முறையில் வழி நடத்திய இந்த பாசிச கும்பலுக்கு, மாணவர்களுக்கு எதற்கு அரசியல் என்று அப்போது சொல்லத் தெரியவில்லையா?

கல்வி வளாகங்களில் சாதிய, மத வெறி முழக்கங்களை எழுப்பி வன்முறையைத் தூண்டும் வித்யார்த்தி பரிஷத் அமைப்பை அழைத்து உங்களுக்கு ஏனிந்த அரசியல் என்று சொல்லத் தெரியவில்லையா?

உலகில் எங்கெல்லாம் நவீன தாராளமய கொள்கைகள் நடைமுறைக்கு வருகிறதோ, அதன் தாக்குதல்கள் மெல்ல மெல்ல பல்வேறு பகுதியினரை அலைக்கழிக்கத் தொடங்குகிறதோ அங்கெல்லாம் ஏதேனும் ஒரு வடிவில் மக்களைக் கூறுபோடும் சக்திகள் வேகம் பெறுவதை அண்மைக்கால உலக நடப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. ஜனநாயக உரிமைகள் நுட்பமான முறையில் மறுக்கப்படுவதும், ஒரு சாரார் அதை நியாயப்படுத்துவதும், ஏற்றத் தாழ்வுகளின் இடைவெளி பெரிதாக பெரிதாக பரஸ்பர மோதல்களை உருவாக்குவதும் இப்போது இங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஓராண்டை எடை போட்டுக் கொண்டிருப்போர் பலரும், அரசின் கீழ் இயங்கும் கல்வி, ஆராய்ச்சி, பண்பாட்டு வெளி தொடர்பான பல்வேறு அமைப்புகளின் தலைமைப் பொறுப்புக்கு சங் பரிவாரத்தின் தீவிர கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டுவதில்லை. இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனத்திற்கு மிக மோசமான பிற்போக்குக் கருத்தியலை ஓயாது எழுதியும் பேசியும் வந்த ஆர் எஸ் எஸ் விசுவாசி ஒய்.சுதர்சன ராவ் என்பவரை மோடி அரசு நியமித்தது. திரைத் தணிக்கைக் குழுவைத் தங்களுக்கு வசதிப்பட்டவர்களைக் கொண்டு நிரப்பிவிட்டது. இந்த ஆக்டோபஸ் இப்படியே ஒவ்வோர் அமைப்பிலும் தனது ஆதிக்கக் கரங்களை செலுத்திப் பற்றிக் கொண்டுவருகிறது.

இன்னொரு புறம், நவீன தாராளமயத்தின் தலைமை உபாசகர்களாகத் தங்களை நியமித்துக் கொண்டிருக்கும் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தேசத்தின் சொத்துக்களை பன்னாட்டு நிதி மூலதனத்தின் பசிக்குத் திறந்து கொடுக்க ஆவன செய்வதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. வங்கிகள், காப்பீட்டுத் துறை ஒன்றும் மிஞ்சாதபடி அந்நிய ஏகபோக நிறுவனங்களின் தேவையை நிறைவேற்ற ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நல சட்டங்கள் உள்ளிட்டு பலவற்றிலும் திருத்தங்கள் கொண்டுவந்து உழைப்பாளி மக்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே மக்களுக்கு இந்தக் காட்சிகளின் கோரம் புரிபட்டுவிடக் கூடாதென்று திசை திருப்பல் நாடகங்களையும், புதிய புதிய பிரச்சனைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சாதிய சக்திகளோடு கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் பா ஜ க, ஏற்கெனவே பெருமாள் முருகன் நாவல் விஷயத்தில் குறுக்கிட்டது. வாய்ப்புள்ள ஒவ்வோர் இடத்திலும் தனது அதிகாரத் தொண்டையைக் கனைத்துக் காட்டுகிறது. மாற்று சிந்தனைகள், சுதந்திர எண்ணங்கள், மாற்றுக் கொள்கைகள் என்று இளைய தலைமுறை தயாராகிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக உள்ளது. அதனால்தான், இடதுசாரி கருத்தியல், முற்போக்கு முழக்கம் இவை எதையும் பாசிச சக்திகளால் செரித்துக் கொள்ள இயலவில்லை.

இளைய தலைமுறையினரிடமும் மதவெறி நஞ்சை ஊட்டிக் கொண்டிருக்கும் இந்த ஃபாசிச கும்பலுக்கு, தத்துவார்த்த அடிப்படையில் விளக்கங்கள் சொல்ல இயலாதபோது கருத்துரிமைக்கே வேட்டு வைக்கும் அளவு ஆத்திரம் மூள்கிறது. அதிகாரம் கையில் இருக்கும் ஆணவம் அவர்களது அராஜகத்தை மேலும் கூர் தீட்டிக் கொடுக்கிறது.

விவேகானந்தரை நேர்காணல் செய்த பிராம்மணர் ஒருவர், அசைவ உணவு புசிப்பது பற்றிக் கேட்கிறார். எந்த உணவைத் தின்றால் வலு ஏற்படுமோ அதைச் சாப்பிடுங்கள் என்றுதான் இளைஞர்களுக்குச் சொல்கிறேன் என்று பதில் சொன்னார் விவேகானந்தர். ஆனால், மாட்டுக் கறியை வைத்து மதவெறி அரசியலை நடத்துகிறது சங் பரிவாரம். விவேகானந்தர் சொன்ன எத்தனையோ கருத்துக்களைப் புறம்தள்ளும் இந்தக் கும்பல், அவரை முன்வைத்தே தேசம் முழுமையும் ஊர்திகளை அனுப்புவது, கண்காட்சி நடத்துவது, கல்லூரி வளாகங்களை காவி மயமாக்குவது போன்றவற்றை ஓயாது செய்து கொண்டிருக்கிறது. ஆனால், அறிவார்ந்த விவாதங்களை உருவாக்கும் ஒரு வாசக வட்டத்தைக் கண்டு மிரள்கிறது காவிக் கும்பல்.

வளர்ச்சி, வளர்ச்சி என்று எழுப்பப்படும் வெற்று ஆரவாரங்களுக்கிடையே மறைக்கப்படும் தேசத்தின் அதிர்ச்சியான பட்டினிக் குறியீட்டு எண்ணை, கீழிறங்கிக் கொண்டிருக்கும் மனித வளர்ச்சி அளவீட்டு இலக்கத்தை, உலக நாடுகள் வரிசையில் ஊழலில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நம் வரிசை எண்ணை தொழில்நுட்ப வளாகத்திற்குள் விவாதிக்காமல் வேறெங்கு பேச?

ஐ ஐ டி வளாகத்திற்குள் பேசத் தகாத விஷயங்களைப் பேசியதால்தான் தடை செய்திருக்கின்றனர் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வாசிப்பு வட்டத்தில் என்ன தகாத விஷயம் விவாதிக்கப்பட்டது என்பதைக் கடைசிவரையில் சொல்ல முடியவில்லை. ஆட்சியை விமர்சிக்க உரிமை கிடையாது என்று பேசும் இவர்கள், அயல்நாட்டுப் பயணத்தில் எதிர்க்கட்சிகளை மட்டம் தட்டிப் பேசும் பிரதமரை, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இத்தனை ஆண்டுகளாக அவமானத்தோடு வாழ்ந்தார்கள் என்று மிகவும் கீழ்த்தரமான கருத்தை வெளியிட்ட நரேந்திர மோடியை என்ன செய்யலாம் என்று சொல்வார்களா?

அறிவை விரிவு செய், அகண்டமாக்கு என்றார் பாவேந்தர். எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்து என்றனர் மேதைகள். அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவது, அதன்மூலம் அதிகாரத்தை உண்மைவயமாக்குவதும், உண்மையை அதிகாரமிக்கதாக ஆக்குவதுமே ஜனநாயகத்தின் உட்பொருள் என்றனர் சமூக விஞ்ஞானிகள்.

சுதந்திர போராட்டத்தின் ஆவேச முழக்கங்களை எழுப்புகையில் புச்சலபள்ளி சுந்தரையா, ஒரு கல்லூரி மாணவர்தான். அண்ணாமலை பல்கலையில் இருந்தபடிதான் கே முத்தையாவும், ஆர் உமாநாத்தும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். விடுதலை வீரர் என் சங்கரய்யா அவர்களது மாணவப் பருவத்து தேச பக்த ஆவேசத் துணிச்சலின் பதிவு, இன்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரிக் கோப்புகளில் வாழ்கிறது.

மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் குரல்களும், பழமைவாதப் புரட்டுக்களை சவாலுக்கு அழைக்கும் குரல்களும் கலகக் குரல்களாகவே இருக்கும் என்பதில் அய்யமில்லை. தேடலில் இருப்போரை ஊக்குவிக்காத கல்வி, உருப்படியான எதிர்காலத் தலைமுறையைத் தரப்போவதுமில்லை. காற்றும், வெளிச்சமும் நுழையாத வகுப்பறைகள் இருண்ட காலத்தையே எதிரொலிக்கும்.

பறவைகளின் சுதந்திரத் திரிதலை, உற்சாகக் கொண்டாட்ட ஒலிகளை நாராசம் என்று நினைத்து அவற்றைச் சுட்டுப் பொசுக்கும் அதே வேலையை இன்றைய ஐ ஐ டி நிர்வாகமும் செய்யத் துணிகிறது. மத்தியில் உள்ள சகிப்புத் தன்மை அற்ற ஜனநாயக உணர்வற்ற ஆட்சி அப்படி செய்யத் தூண்டுகிறது. இந்த முறை குருவிகள் வெளியேறாது. மேலும் கூட்டம் கூட்டமாய் வட்டமிட்டுப் பறக்கும். குறிபார்க்கும் துப்பாக்கிகளை அவை தமது வலிமையால் கீழே வைத்துவிடச் செய்யும். வளாகத்தின் கருத்துச் சுதந்திர வெளியைத் தற்காத்து விரிவடைய வைக்கும் போராட்டத்தில் அவை நிச்சயம் வெற்றி பெறும்.

***************

நன்றி: தீக்கதிர் (ஜூன் 3)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க