Tag: நாகேஸ்வரி அண்ணாமலை

  • பெரியார் என்ன செய்தார்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சென்ற வாரம் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பலருக்குப் பெரியாரைப் பற்றி நல்ல புரிதல் இல்லை போல் தெரிகிறது. முடிந்த அளவு பெரியாரைப் பற்றிய சரியான கணிப்பைக் கொடுக்க முனைந்ததின் விளைவே இந்தக் கட்டுரை. பெரியாரைப் பற்றி ஒன்றும் தெரியாத இளம்தலைமுறையினருக்கு ஒரு முன்னுரையாக அமையும்.

    பெரியார் என்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1879-இல் ஈரோட்டில் ஒரு பணக்கார வணிகரின் மகனாகப் பிறந்தார். அவருடைய சிறு வயதில் வைஷ்ணவப் புரோகிதர்கள் சிலர் அவர் வீட்டிற்கு வந்து சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லிவிட்டு அவருடைய தந்தையின் விருந்தோம்பலை அனுபவித்துவிட்டுச் சென்றனர். அப்போதிலிருந்து பெரியார் பிராமணர்களுக்கு ஏன் இத்தனை உபசாரம், ஏன் இத்தனை மதிப்பு என்று எண்ண ஆரம்பித்தார். அவர்கள் செய்தது அத்தனை பெரிய காரியமா என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போதே பிராமண எதிர்ப்பு அவர் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது. வயது வந்தபிறகு ஒரு முறை காசிக்குச் சென்றபோது பிராமணர்களுக்கு உணவளித்த இடத்தில் இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்ற காரணத்திற்காக இவருக்கு உணவு வழங்கப்படவில்லை. அன்றிலிருந்து சமூகத்தில் ஏன் பிராமணர்களுக்கு உயர்ந்த இடம் என்று ஆராய ஆரம்பித்தார்.

    பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கலந்துகொண்டார். சேரன்மாதேவியில் இருந்த குருகுலப்பள்ளியில் பிராமண மாணவர்களுக்கும் பிராமணரல்லாத மாணவர்களுக்கும் தனித்தனியாக உணவு பரிமாறப்பட்டதை எதிர்த்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பெரியார் பிராமணரல்லாத ஒருவரை ஆதரித்தார். ஆனால் காங்கிரஸில் இருந்த பல பிராமண வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரித்த பிராமணர் ஒருவர் வெற்றி பெற்றார். அப்போது காங்கிரஸில் பிராமணரல்லாதவர்களின் செல்வாக்கு ஒரு போதும் ஏற்படப் போவதில்லை என்று முடிவுசெய்து காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

    சமூகத்தில் மிகுந்த ஏற்றத்தாழ்வு இருப்பதையும் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதையும் உணர்ந்து எல்லோரும் சமம் என்ற உண்மையையும் எல்லோருக்கும் சுயமரியாதை வேண்டும் என்பதையும் தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார். ஆண்டாண்டு காலங்களாக சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை பிராமணர்கள் மட்டுமே படித்து இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே அவர்கள் தரகராக இருப்பதை எதிர்த்தார். மதத்தின் பெயரால் – கடவுளுக்கு மிக அருகில் பிராமணர்கள்தான் இருக்கிறார்கள் என்று பலரையும் எண்ணவைத்து – பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அதை மாற்ற முயன்றார். இதைத்தான் பிராமண எதிர்ப்பு என்று இன்றும் பலர் எண்ணுகின்றனர். மதத்தின் பெயரால் பிராமணர்கள் மக்களிடம் மூட நம்பிக்கைகளை வளர்த்ததால் இந்து மத எதிர்ப்பை ஆரம்பித்தார். மூட நம்பிக்கைகளில் ஒன்று பிராமணர்களுக்குத் தானம் செய்து தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் தேடலாம் என்பது. வாழ்க்கையில் எல்லா அட்டூழியங்களும் புரிந்துவிட்டு கோவிலில் காணிக்கை செலுத்தி இறைவனை ஏமாற்றிவிடலாம் என்பது இன்னொன்று.

    காலனீய காலத்தில் அரசுப் பதவிகளிலும் சட்டம், கணக்கு, மருத்துவம் போன்ற உயர் தொழில்களிலும் சிறுபான்மையராக இருந்த பிராமணர்களே ஆதிக்கம் செலுத்திய நிலை மாறி பெரும்பான்மையோருக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என்றும் நினைத்தார். ஜாதிகளில் ஏற்றத் தாழ்வு இருந்ததால் ஜாதி ஒழிப்பையும் தன் கொள்கைகளில் சேர்த்துக்கொண்டார். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று ஒரு பிராமணரே கூறியதைப் போல்தான் பெரியாரும் ஜாதிகளை ஒழிக்க முயன்றார். பெரியாரின் பிராமண எதிர்ப்பு, மத ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்பவை இப்படிப் பிறந்தவைதான்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும் என்பது பெரியாரின் கொள்கைகளில் ஒன்று. கீழ் ஜாதியைச் சேர்ந்தவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு அடிபணிய வேண்டியதில்லை. ஏனென்றால் எல்லோரும் பிறப்பில் சமம். மூடப் பழக்க வழக்கங்களை மக்கள் மனத்திலிருந்து அகற்றுவதற்கு மிகவும் முயன்றார்.

    எல்லோரும் சமம் என்று கூறியபோது பெண்களும் ஆண்களுக்குச் சமம் என்றார். விதவை மறுமணம், பெண்கல்வி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

    சமூகத்தில் ஒரு சாரார் தாழ்ந்த நிலையிலும் ஒரு சாரார் உயர்ந்த நிலையிலும் இருக்கும் அவலத்தை மாற்றிச் சமூக நீதி ஏற்பட்ட பிறகுதான் அரசியல் சுதந்திரம் வேண்டும் என்று நினைத்ததால்தான் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் முன் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார். ஏற்கனவே உயர்ந்த பதவிகளில் இருந்த பிராமணர்கள் பிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நீட்டித்துக்கொள்வார்கள் என்று பயந்துதான் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய நாளைத் துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்றார். இது சரியோ தவறோ; இது சமூக நீதிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டும். எப்போதுமே பிரிட்டிஷார் இந்தியர்களை ஆண்டுகொண்டிருக்க வேண்டும் என்பது அவர் நோக்கமல்ல.

    அரசியலில் ஈடுபட்டு பணம் நிறைய சம்பாதித்து அரசியல் அதிகாரத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்று அவர் ஒரு போதும் நினைக்கவில்லை. மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைய வேண்டும், பிராமண ஆதிக்கத்தையும் அதற்கு ஆதாரமாக உள்ள மதத்தையும் ஒழிக்க வேண்டும், ஜாதிகள் ஒழிய வேண்டும், சமூகத்தில் எல்லோருக்கும் சம உரிமைகள், சம வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பவையே பெரியாரின் கொள்கைகளின் அடிப்படை.

    Share
  • வெட்கக்கேடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    sc

    ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டங்கள் எல்லாம் ஓரளவு அடங்கிவிட்டதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் சகஜநிலை திரும்பியதாக பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் பல வகையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதைப் பார்த்துத் தமிழக மக்கள் இவ்வளவு அறிவிலிகளா என்ற கேள்வி எழுகிறது. அதுவும் தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவு இயக்கம் தமிழக மக்களிடம் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா என்று எண்ணும்போது மனதில் பெரிய ஆயாசம் ஏற்படுகிறது.

    பெரியார் பிராமண ஆதிக்கத்தை ஒழிக்கவும் எல்லோர் மனத்திலும் சுயமரியாதை எண்ணத்தை வளர்க்கவும் பக்குத்தறிவு இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு இன்று அர்த்தமே இல்லாமல் போயிற்று. அவர் மறுபடி பிறந்துவந்து தமிழ்நாட்டில் நடக்கும், அவர் போதனைகளுக்கு நேர் மாறாக நடக்கும் அராஜகச் செயல்களைக் கண்டிக்க மாடாரா என்ற ஏக்கம் பிறக்கிறது. அவருடைய பக்குத்தறிவு இயக்கத்தில் தோன்றிய கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மக்களை எவ்வளவு முட்டாள்கள் ஆக்கியிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் அவர் செய்ததெல்லாம் விழலுக்கு இறைத்த நீரா என்று மனம் பதறுகிறது.

    பிராமண ஆதிக்கத்தை ஒழிக்க அவர் எவ்வளவு பாடுபட்டார்? மனித இனத்தில் ஜாதிகளுக்கு இடமில்லை, பிறப்பில் எல்லோரும் சமம், கடவுளின் பெயரைச் சொல்லி பிராமணர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்வது, ‘உயர்ந்த ஜாதி’ மக்களின் கால்களில் ‘கீழ் ஜாதி’ மக்கள் விழுவது எவ்வளவு இழிவான செயல் போன்றவற்றை எவ்வளவு எதிர்த்தார்? இந்துக் கடவுள்கள் எல்லாம் மனிதனின் சிருஷ்டிகள்தான், அப்படிச் சிருஷ்டிக்கப்பட்ட கடவுள்களின் பெயரால் பிராமணர்கள் செய்த அட்டுழியங்கள், அவர்கள் தங்களை கடவுகளின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு மற்ற ஜாதிகளைச் சேர்ந்தவர்களை முட்டாளாக்கியது ஆகியவற்றை எல்லாம் பாமர மக்களுக்கு உணர்த்த என்னென்ன செய்தார்? விக்கிரக ஆராதனை கூடாது என்பதற்காக பிள்ளையார் சிலைகளைத் தெருவில் போட்டு உடைத்தார். இப்போது அவர் ஆரம்பித்த இயக்கத்திலிருந்து பிறந்த கட்சிகளின் உறுப்பினர்கள் செய்யும் காரியங்கள் அவர் போதனைகளுக்கு எந்த மதிப்பும் கொடுப்பதாகத் தெரியவில்லை. அவர் விக்கிரக ஆராதனை கூடாது என்றார். இவர்கள் மனிதர்களையே ஆராதனை செய்கிறார்கள். பெரியார் தெய்வங்களே மனிதனின் சிருஷ்டி என்றார். இவர்கள் மனிதர்களையே தெய்வமாக்கிவிட்டார்கள்.

    நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்ட ஜெயலலிதாவை தெய்வம் என்று கூறுகிறார்கள். தெய்வத்தைத் தண்டிக்க மனிதனால் முடியாது என்று போஸ்டர்கள் வேறு. தெய்வமே இல்லை என்று சொன்ன பெரியார் எங்கே, ஒரு சாதாரண மனிதப் பிறவியை அதிலும் ஊழலிலேயே ஊறிப்போன ஒரு அரசியல்வாதியை தெய்வம் என்ற ஸ்தானத்திற்கு உயர்த்திய இந்த அறிவிலிகள் எங்கே? பெரியார் பிள்ளையாரைப் போட்டு உடைத்தார். இந்த அறிவிலிகள் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் பால்குடம் எடுக்கிறார்கள். எதற்காக? நாட்டில் சுபிட்சம் நிலவ வேண்டும், மக்கள் எல்லாம் கல்வி அறிவு பெற வேண்டும், எல்லோரும் பிணியின்றி வாழ வேண்டும் என்ற நற்செயல்களுக்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றால் அதையாவது பொறுத்துக்கொள்ளலாம். இவர்கள் செய்வதோ சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் பல ஆவணங்களைப் பரிசீலித்துப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி என்று தீர்மானித்தவரைக் காப்பாற்ற. இறைவன் இருக்கிறான் என்று இவர்கள் நம்பினால் அவன் நல்லவர்களுக்கு நன்மை செய்வான், நல்லவர் அல்லாதவர்களைத் தண்டிப்பான் என்பதையும் நம்ப வேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட இறைவன் தவறு செய்த அவர்கள் ‘அம்மாவை’ எப்படி மன்னிப்பான்? எப்படி அவனிடம் அவர்களுடைய ‘அம்மாவை’ நீதிமன்றம் விடுவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? இவர்கள் செய்யும் யாகங்களையும் பூஜைகளையும் இறைவன் எப்படி ஏற்றுக்கொள்வான்?

    மக்களின் பக்குதறிவை வளர்க்கப் பெரியார் எவ்வளவு பாடுபட்டார்? இப்போது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பகுத்தறிவே இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். ‘கர்நாடகமே, காவிரியை வச்சுக்கோ, எங்கள் அம்மாவை எங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்ற போஸ்டர்கள். எங்கள் ‘அம்மாவை’ விடுவிக்காவிட்டால் தமிழகத்தில் வாழும் கன்னடியர்கள் எல்லோரையும் சிறை பிடிப்போம் என்று இன்னொரு போஸ்டர். ‘அம்மா’ சிறைவாசம் அனுபவிப்பதற்கும் கர்நாடகத்திற்கும் என்ன சம்பந்தம்? அ.தி.மு.க. தலைவர்களே இப்படி இருந்தால் தொண்டர்களைப் பற்றி என்ன சொல்ல? 75 பேர் தர்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் இவர்கள் அப்படித் தற்கொலை செய்துகொண்டார்களா?

    நான் போனவாரம் எழுதிய கட்டுரைக்கு வாசகர் ஒருவர் பதில் அளித்திருக்கிறார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் முடியும் வரை இரண்டு ஆண்டுகள் காத்திருந்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டுமாம்! நீதி யாருக்காக காத்திருக்கவேண்டும்? பதினெட்டு ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்ததே பெரிய தவறு. இப்போது எதற்காக இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருந்திருக்க வேண்டும் என்பது அவருக்கே வெளிச்சம். ஜெயலலிதாவிற்கு மாற்றுத் தலைமை தமிழ்நாட்டில் இல்லையாம்! உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவின் ஜாமீன் பற்றி முடிவெடுக்கும்வரை அவரைப் பற்றி எதுவுக் கூறக் கூடாதாம்! ஆங்கிலத்தில் எழுதுமளவிற்கு படித்த இவரைப் போன்றவர்களே இப்படி நினைக்கும்போது படிப்பறிவில்லாத, ஜனநாயகம் என்றால் என்ன, அதில் நீதிமன்றங்களின் பங்கு என்ன என்பது பற்றி எல்லாம் அரசியல் அறிவு ஒன்றுமே இல்லாத பாமர மக்களைப் பற்றி என்ன சொல்வது?

    பெரியாரின் எந்தக் கருத்தும் தமிழக மக்களின் மனத்தில் எந்த விதப் பாதிப்பையும் உண்டாக்கவில்லையா? எந்த விதமான பகுத்தறிவையும் கொடுக்கவில்லையா? பெரும்பான்மை மக்கள் இன்னும் அறியாமையில்தான் உழலுகிறார்களா? தமிழக மக்களின் இந்த அறியாமையைப் போக்கத் தலைவர்கள் யாரும் தோன்றவில்லையா? தோன்றியிருக்கும் சில தலைவர்களாலும் தமிழகத்தை மாற்ற முடியவில்லையா? என்னவென்று புரியவில்லை; நெஞ்சு பொறுக்கவில்லை, பாரதி பாடியதைப் போல.

    பி.கு. இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க கட்டுரை ஆசிரியர் திருமிகு நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. வல்லமை இதழுக்கும் இதன் கருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஆசிரியர் – வல்லமை இணைய இதழ்

    Share
  • இது என்ன ஜனநாயகம்?

    — நாகேஸ்வரி அண்ணாமலை.

    judgement dayமுதல் முதல் துகளக் பத்திரிக்கை தொடங்கப்பட்டபோது நாங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.  நண்பர்கள் பலர் அந்தப் பத்திரிக்கையைப் பற்றி நிறையப் புகழ்ந்து எழுதுவார்கள்.  எழுபதுகளில் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதுவும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டதாக ஞாபகம் இல்லை.  இந்து பத்திரிக்கை மட்டும்தான் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு வாரம் ஒரு முறை விமானம் மூலம் வந்துகொண்டிருந்தது.  சனி, ஞாயிறுகளில் நூலகத்திற்குப் போய் அதைப் படிப்பதுண்டு.  இந்தியா திரும்பிய பிறகே நாங்கள் துக்ளக் பத்திரிக்கை படிக்க ஆரம்பித்தோம்.  தமிழில் உள்ள ஒரே அரசியல் நையாண்டி (political satire) பத்திரிக்கையாக அது விளங்கியது.  அதனால் அதற்கு மத்திய வர்க்கத்தினரிடம் பெரிய மவுசு இருந்தது.

    இப்போது துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் ஜெயலலிதாவிற்கு ஆலோசகர். 2014 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த இந்தியப் பாராளுமன்றத் தேர்தல்களில் மோதிக்கு (இவர் பெயரை மோடி என்று தமிழில் ஆங்கில உச்சரிப்பின்படி ஏன் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை.  மோதி என்றுதான் குஜராத்தி உச்சரிப்புப்படி எழுத வேண்டும்.) ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு சாரார் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டபோது ஜெயலலிதா ‘மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம்.  லேடிக்குப் போடுங்கள்’ என்று தனக்கு ஓட்டுப் போடும்படி கேட்டுக்கொண்டார்.  இதனிடையில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் ‘மோடியும் வேண்டாம், லேடியும் வேண்டாம்.  டாடிக்குப் போடுங்கள்’ என்று தன் தந்தைக்குப் போடும்படி கேட்டுக்கொண்டார்.  மோடி, லேடி, டாடி சர்ச்சை நடந்துகொண்டிருக்கும்போது துக்ளக் ஆசிரியர் மோதியைப் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கும்படியும் அப்படி முடியாத பட்சத்தில் ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுக்கும்படியும் வாக்காளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஜெயலலிதாவைப் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அவருக்கு இந்திய அளவில் அரசியல் ஆதரவும் உலக அரசியல் அறிவும் இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தாரா என்று தெரியவில்லை.  இலவசங்களாகத் தமிழ்நாட்டில் அள்ளிக் கொடுத்த ஜெயலலிதா இந்தியாவின் பிரதமரானால் இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசங்களாகக் கொடுத்துக்கொண்டிருந்திருப்பாரா?  சமீபத்தில் வந்த ஒரு புள்ளிவிபரத்தின்படி தமிழகம் பொருளாதார ரீதியில் மற்ற மாநிலங்களை விட மிகவும் பின்னணியில் இருக்கிறது.  இலவசங்களாக அள்ளிக் கொடுத்துவிட்டுத் தமிழகத்தின் கஜானாவைக் காலிசெய்ததுபோல் இந்தியாவின் பொருளாதாரத்தையும் சீர்குலையச் செய்திருப்பார் என்பது துக்ளக் ஆசிரியருக்குத் தெரியவில்லையா?

    ஒரு நாட்டின் பிரதமர் என்றால் எத்தனை பொறுப்புகள்!  குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த ஜெயலலிதாவால் பல இன, மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்தியாவை ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்க முடியுமா?  முதலில் தேர்தல் பிரச்சாரத்தில் ‘நாற்பதும் நமதே.  நாடும் நமதே’ என்று கூறிக்கொண்டிருந்த ஜெயலலிதாவே அந்த மந்திரத்தை விட்டுவிட்டு ‘அத்தனை பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஜெயிப்போம்’ என்று சொல்ல ஆரம்பித்தார்.  ஜெயலலிதாவைப் பற்றி ஜெயலலிதாவுக்கே தெரிந்த அளவு கூட துக்ளக் ஆசிரியருக்குத் தெரியவில்லையா?  ஜெயலலிதாவே தனக்குப் பிரதமர் பதவி கிடைக்காது என்று முடிவுசெய்த பின்னும் துக்ளக் ஆசிரியர் அந்தப் பொறுப்பை ஜெயலலிதாவிடம் கொடுக்கும்படி மக்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.

    அவருக்கு நாற்பது இடங்களும் கிடைத்திருந்தாலும் பிரதமர் பதவி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.  இரண்டு தேசிய கட்சிகளுக்கும் மிகக் குறைந்த இடங்கள் கிடைத்து உதிரிக் கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஜெயலலிதாவைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.  (இது துக்ளக் ஆசிரியர் கற்பனையில் மட்டுமே நடக்கக் கூடியது)  இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்றிருக்கும் ஜெயலலிதா பிரதமராக இருந்திருந்தால் பிரதமர் பதவியை இழந்து தனக்கு வேண்டியவர் ஒருவரை பிரதம மந்திரியாக நியமித்திருப்பாரா?  அப்போது நாட்டின் தலைவிதி என்ன ஆகியிருக்கும்?

    சொத்துக் குவிப்பு சம்பந்தமான வழக்கு நடந்துவருவது துக்ளக் ஆசிரியருக்கு நன்றாகத் தெரியும்.  அதில் ஜெயலலிதாவின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தன்னுடைய பதவியை – முதல் மந்திரி பதவியானாலும் சரி, பிரதம மந்திரி பதவியானாலும் சரி – இழக்க நேரிடும் என்பதை அவர் உணரவில்லையா?  அதெல்லாம் போகட்டும்.  இப்போது வழக்கின் முடிவு பற்றி எதுவும் கூறாமல் ஏன் மௌனம் சாதிக்கிறார்?  பல அரசியல் தலைவர்கள் பல காரணங்களுக்காக வழக்கு பற்றி எதுவும் கூறாமல் மௌனம் சாதிக்கிறார்கள்.  இவர் மௌனம் சாதிப்பதன் காரணம் என்ன?  ஒரு பொறுப்புள்ள பத்திரிக்கை ஆசிரியராக, மக்கள் நலனில் அக்கறை செலுத்துபவராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட அவர் ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்குங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டது எவ்வளவு தவறு என்று உணர்ந்து தன் தவறுக்கு விளக்கம் தர வேண்டாமா?

    துக்ளக் ஆசிரியர் போன்ற ‘அறிவு ஜீவி’யே ஜெயலலிதாவின் ஊழல்களை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு அவரைப் பிரதமர் ஆக்குங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.  ஜனநாயகம் என்றால் என்ன, ஜனநாயக அரசு எப்படி செயல்படுகிறது என்பது பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாத படிப்பறிவு இல்லாத மக்கள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் திரும்பப் பெறும்படி தர்ணா பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.  நம் ஜனநாயகத்தைப் பற்றி என்ன சொல்வது?  சிலர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஜெயலலிதாவுக்கு இழைத்த கொடுமையாக எண்ணி உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.  இதற்கு மேல் சமூகத்துக்கு நற்செய்திகளைக் கொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் திரை உலகைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.  இவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்?  ஜெயலலிதா தவறே செய்யவில்லை என்கிறார்களா, அல்லது அவர் மக்களால் அமோகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவர் குற்றம் செய்தாலும் அவர் மீது வழக்கே போடக் கூடாது என்கிறார்களா, அல்லது அப்படி வழக்குப் போட்டாலும் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்கிறார்களா அல்லது அப்படி விசாரித்தாலும் தண்டனை எதுவும் கொடுக்கக்கூடாது என்கிறார்களா?  இவர்கள் என்னதான் வேண்டுகிறார்கள்?  இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும்வரை இந்தியாவை ஜனநாயக நாடு என்று எப்படி அழைக்க முடியும்?

    படங்கள் உதவி: இணைய செய்தித் தளங்கள்

    Share
  • ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

    நாகேஸ்வரி அண்ணாமலை.

     

    Long Live Gandhi

    இந்தியாவில் எதற்கெடுத்தாலும் பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடுவது வழக்கமாக இருக்கிறது.  சென்ற மாதம் கர்நாடகாவில் ஒரு எழுத்தாளர் மறைந்தபோது விடுமுறை அளிக்கப்பட்டது.  அவர் பெரிய சிந்தனைவாதி, பெரிய சமூக சீர்திருத்தவாதி, கன்னட மொழிக்கு என்னென்னவோ செய்திருக்கிறார் என்றெல்லாம் விடுமுறை கொடுத்ததற்குக் காரணங்களாகக் கூறப்பட்டன.  இருந்தாலும் பள்ளிகளையும் அரசு அலுவலகங்களையும் ஒரு நாள் அவை பணிபுரிவதை நிறுத்தும் அளவிற்கு அவர் பெரிய ஆளா என்பது சர்ச்சைக்குரிய விஷயம்.  அது போகட்டும்.  அரசியல் தலைவரோ அல்லது ‘பெரிய மனிதர்’ யாரோ இறந்துவிட்டால் அதைக் காரணமாகக் கொண்டு விடுமுறை விடுவதால் யாருக்கு லாபம்?  இறந்தவரின் போதனைகளையோ சிறப்புகளையோ அன்று நினைவுகூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தினாலாவது அதில் ஒரு அர்த்தம் உண்டு.  அன்று விடுமுறை கொடுப்பதால் பலர் சினிமாவுக்குப் போவார்கள்.  அல்லது வீட்டில் இருந்துகொண்டு தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்துவிடுவார்கள்.  இறந்தவர்களின் வழியில் நாமும் நடக்க வேண்டும் என்றோ அவர்கள் கூறிய அறிவுரைகளை அன்று சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்றோ யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

    இந்தியாவில் பல மதங்கள் இருப்பதால் எல்லா மதங்களின் முக்கிய பண்டிகைகளுக்கும் விடுமுறை கொடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு.  இந்துக்கள் மாதத்திற்கு ஒரு  பண்டிகை கொண்டாடுகிறார்கள்.  சிறுபான்மை மதங்கள் தங்களுக்குரிய முக்கியமான நாட்களைக் கொண்டாடுகிறார்கள்.  இதனால் சில வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (restricted holidays)  கொடுக்க வேண்டிய அவசியம்.  இதற்கு மேல் தேசிய விடுமுறை நாட்கள் வேறு.  இந்தத் தேசிய விடுமுறை இந்தியக் குடிமக்கள் எல்லோருக்கும் பொது.  தனியார் துறைகளில் வேலை பார்ப்பவரையும் சேர்த்து எல்லோருக்கும் அன்று விடுமுறை. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் விடுமுறை இல்லை.   மொத்தத்தில் பதினைந்து விடுமுறை நாட்கள், அதற்கு மேல் வரையறுக்கப்பட்ட விடுமுறைகள் இரண்டு என எல்லோருக்கும் பதினேழு விடுமுறை நாட்கள் கிடைத்துவிடுகின்றன.

    அமெரிக்காவில் இதற்கு நேர் எதிர்.  சுதந்திர தினம், நன்றி தெரிவிக்கும் பண்டிகை, கிறிஸ்துமஸ், தொழிலாளர் தினம், போரில் இறந்த வீரர்கள் தினம் என்று ஐந்தே தேசிய விடுமுறை நாட்கள்கள்தான்.  கிறிஸ்தவர்களின் மிக முக்கிய தினமான ஈஸ்டருக்குக் கூட விடுமுறை கிடையாது.  குளிர் காலத்தில் எவ்வளவு குளிர்ந்தாலும் விடுமுறை கிடையாது.  பனி அளவுக்கு மேல் பெய்து வாகனங்கள் சாலைகளில் ஓட முடியாது என்றால்தான் விடுமுறை கொடுப்பார்கள்.  கல்வி நிறுவனங்களை அதிகப்படியாக ஒரு நாள் மூடினால்கூட கல்வி பாதிக்கப்படுமாம்; தொழில் நிறுவனங்களை ஒரு நாள் மூடினால் உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடுமாம்.  உலகில் எல்லாவற்றிலும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பும் அமெரிக்காவின் கொள்கை இது.

    இந்தியாவில் சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் மாணவர்களைக் கல்வி நிறுவனங்களுக்கு வரச்செய்து தேசியக் கொடியை ஏற்றி சில உபதேசங்களை அளிப்பார்கள்.  காந்திஜி பிறந்த நாளன்று அதுவும் கிடையாது.  சில மணி நேரங்களாவது மாணவர்களைக் கல்வி நிறுவனங்களுக்கு வரச்செய்து அவருடைய போதனைகளைப் போதிக்கலாம்.  1948-லேயே மறைந்துவிட்ட காந்திஜியை இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தியக் குடிமக்கள் நினைவு வைத்திருப்பார்கள் என்று நினைத்து நான் ஆயாசப்பட்டதுண்டு.

    இந்தியக் குடிமக்கள் காந்திஜியை சீக்கிரமே மறப்பதற்குரிய ஒரு காரியத்தை இந்திய அரசு இப்போது செய்யப் போகிறது.  அன்று மத்திய அரசு அலுவலர்களுக்கு விடுமுறை இல்லையாம்.  விடுமுறை இல்லை என்பது பெரிய விஷயமல்ல.  ஆனால் அவருடைய பிறந்த நாளை இந்தியாவைச் சுத்தப்படுத்தும் நாளாக அனுசரிக்கப் போகிறார்களாம்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.  காந்திஜியை கௌரவிப்பதாக ஜாலம் காட்டி அந்த நாளை நாட்டைச் சுத்தப்படுத்தும் நாளாக மாற்றப் போகிறார்கள்.  நாளடைவில் காந்திஜியை மறப்பதற்கு இது மறைமுகமான வழி.  பாழ்பட்ட இந்தியாவைச் சுத்தப்படுத்தும் பணியை ஆரம்பித்தவர் என்ற பெருமையைத் தட்டிக்கொள்ளலாம்; அந்த பிம்பத்தை தனக்கு உருவாக்கிக்கொள்ளலாம் என்பது மோதியின் ஆசை.  காந்திஜி மனச் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்; மத, ஜாதி துவேஷம் என்னும் அழுக்கை மனதிலிருந்து அகற்றவேண்டும் என்று நாளெல்லாம் சொன்னார்.  தேசத் தந்தையைக் கொலைசெய்த ஆர். எஸ். எஸ். கட்சியிலிருந்து தோன்றிய மோதிக்கு காந்திஜியின் கொள்கை மேல் என்ன பற்று இருக்க முடியும்?  ஒரு சில இந்தியராவது நினைவு வைத்திருக்கும் காந்திஜியை வரும் தலைமுறையினர் முழுவதுமாக மறந்துவிடுவதற்கு மோதியின் அரசைத் தவிர வேறு யாருக்கு இவ்வளவு அருமையான யோசனை தோன்றும்!  இனி பாடப் புத்தகத்திலிருந்து தேசத் தந்தை மெதுவாக நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    படம் உதவிக்கு நன்றி:
    http://news.oneindia.in/india/modi-shocker-no-holiday-this-oct-2-gandhi-jayanti-cleanliness-pledge-1529705.html
    http://news.oneindia.in/india/take-cleanliness-drive-residential-areas-govt-employees-1530084.html

    Share
  • லவ் ஜிஹாத்

    — நாகேஸ்வரி அண்ணாமலை.

    srk and guriசமீப காலமாக இந்துத்துவ அரசியலைச் சேர்ந்தவர்கள் ஒரு புதிய வார்த்தையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அது Love ‘Jihad’. தமிழில் இதைக் காதல் வழி மதமாற்றம் எனலாம். முஸ்லீம் பையன்கள் இந்துப் பெண்களை  காதல் ஆசைகாட்டிக் கடத்திக்கொண்டு போய்த் திருமணம் செய்துகொண்டு அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிவிடுகிறார்களாம். மதம் மாற்றுவதே இவர்களுடைய காதலின் நோக்கம் என்பது இந்துத்துவப் பிரச்சாரம்.  இதை எதிர்த்து ஆதரவு திரட்ட இதற்கு Love ‘Jihad’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.  ‘காதல் வழிப் புனிதப் போர்’ என்பது இதன் அர்த்தம். இந்தக் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில்  இந்தியாவின் மிகப் பெரிய மசூதியின் தலைவர் இப்படிப்பட்ட மத மாற்றங்களை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாது என்றும் அப்படி மதம் மாற்றப்பட்டவர்கள் இஸ்லாமியர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

    இந்துப் பெண்களை கட்டாயமாகத் திருமணம் செய்துகொண்டு அவர்களை மதம் மாற்றி முஸ்லீம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.  இப்படிச் செய்வதன் மூலம் இந்தியாவின் ஜனத்தொகையில் முஸ்லீம்களின் சதவிகிதத்தை எத்தனை சதவிகிதம் கூட்டிவிட முடியும் என்று இந்துத்துவவாதிகள்  நினைக்கிறார்கள்?  பதின்மூன்று சதவிகிதமாக இருக்கும் முஸ்லீம்களை பெரும்பானமையர்களாக ஆக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்களா?  மேலே கூறிய இஸ்லாம் தலைவர் கூறியது போல் இவர்கள் முஸ்லீம்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் முஸ்லீம்களின் எண்ணிக்கை எந்த விதத்திலும் உயரப் போவதில்லை.  இவர் இப்படிக் கூறிய பிறகாவது இந்துத்துவவாதிகள் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்துவார்களா?

    அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் திருமணம் நடந்தால்தான் என்ன?  இப்படிப்பட்ட திருமணங்கள் இந்துத்துவவாதிகள் சொல்வதுபோல் கட்டாயத் திருமணங்களோ ஏமாற்றுத் திருமணங்களோ அல்ல.  சம்பந்தப்பட்ட இருவரும் மனம் ஒன்றுபட்டுச் செய்துகொள்ளும் திருமணம். செய்துகொண்டால் இதில் தவறென்ன?

    ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் யூதர்களோடு யாரும் கலப்புத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று ஹிட்லர் ஆணை பிறப்பித்ததாகக் கூறுவார்கள்.  ஹிட்லரைப் பொறுத்தவரை ஆரிய இனம் உயர்ந்த இனம்; யூத இனம் தாழ்ந்த இனம்; இரண்டிற்கும் இடையில் எந்தத் திருமணத் தொடர்பும் கூடாது; குழந்தைகள் பிறக்கக் கூடாது என்று நினைத்தான்.  இன்று எத்தனை பேர் ஹிட்லர் நினைத்தது சரி என்று நினைக்கிறார்கள்?  இந்துத்துவவாதிகள் தாங்கள் செய்வது சரி என்று நினைக்கிறார்களா?

    மதக் கலப்புத் திருமணம் சரி இல்லை என்று நினைப்தைப்போல் வேறு வேறு ஜாதிகளைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்வது தவறு என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.  தேர்தலில் பிஜேபியுடன் கூட்டுச்சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் இப்படி நினைப்பவர்.  தலித் ஜாதியைச் சேர்ந்த ஆண் வன்னிய ஜாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார் இந்த அரசியல் தலைவர்.  இவரைப் போன்றவர்கள் இருக்கும்வரை இந்தியச் சமூகம் உருப்படுமா?

    யூதர்கள் தாங்கள் எப்போதும் தாங்கள் உயர்ந்த இனம், பிற இனத்தைச் சேர்ந்தவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்வது தவறு என்று நினைத்து அதன்படியே நடந்துவந்திருக்கிறார்கள்.  கி.பி. 132-இல் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறிப் பல இடங்களிலும் வாழ்ந்த இவர்கள் அந்தந்தச் சமூகங்களோடு ஒட்டவில்லை; தனித்தே வாழ்ந்திருக்கிறார்கள்.  இவர்களுடைய இந்தச் செயலே யூத எதிர்ப்பு எழுந்ததற்கு முக்கிய காரணம் எனலாம்.  இப்போது அமெரிக்காவில் குடியேறிய யூதர்களில் ஒரு சிலர் வேறு மதத்தினரை திருமணம்செய்துகொள்கிறார்கள்.  அமெரிக்காவை ஒரு ‘melting pot’ என்பார்கள்.  அங்கு குடியேறியவர்கள் எல்லோரும் நாளடைவில் எல்லா வகையிலும் ஒன்றுசேர்ந்துவிடுவார்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.  அமெரிக்காவில் குடியேறிய யூதர்கள் மற்ற இனத்தவர்களைத் திருமணம் செய்துகொண்டிருப்பதற்கு அமெரிக்காவின் இந்தத் இயல்பு ஒரு காரணம்.  இதை உணராத அல்லது உணர்ந்தும் ஒப்புக்கொள்ளாத ஒரு அகமெரிக்க யூத மதத்தலைவர் இப்படித் திருமணம் செய்துகொண்டவர்கள் அதல பாதாளத்தில் விழுந்துவிட்டவர்கள் என்று வர்ணித்திருக்கிறார்.  இது எப்படிப்பட்ட மடத்தனம்!

    வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள் தொழில்தொடர்பாலும் மற்ற வழிகளாலும் சுருங்கி வரும்போது பல இன, மத, ஜாதி மக்கள் மட்டும் தனித்தனியே வாழ வேண்டும் என்று நினைப்பதை என்னவென்று சொல்வது?  உலக ஒற்றுமைக்கும் உலக அமைதிக்கும் இவர்கள் இடையூறாக இருக்கிறார்கள் என்று சொன்னால் அதில் தவறேதும் இல்லை.  இவர்கள் மனித இனத்தின் புல்லுருவிகள்.  இவர்கள் களையப்பட வேண்டும்.

     

     

     

    படம் உதவி: http://everywoods.blogspot.com/2012/10/shahrukh-khan-and-gauri-khan-celebrate.html

    Share
  • லஞ்சம், ஊழல் ஒழியுமா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    180px-Logo_Court_Hammer_Logo‘இந்து’ ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் அந்தப் பத்திரிக்கையில் வந்த சில செய்திகளை அதே தேதியில் மீண்டும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. லஞ்சத்தையும் ஊழலையும் கிரிமினல் குற்றங்களையும் அரசு ஊழியர்களிடமிருந்து ஒழிக்க 1964 செப்டம்பரில் மத்திய அரசு புதுச் சட்டங்களை இயற்றத் தீர்மானித்ததாக செப்டம்பர் 5, 1964-ஆம் தேதியிட்ட ஐம்பது வருஷங்களுக்கு முந்தைய ‘இந்து’வில் வந்த செய்தியை செப்டம்பர் 5, 2014 தேதியிட்ட இந்து வெளியிட்டிருக்கிறது. அவை என்னென்ன சட்டங்கள் தெரியுமா? பிரிட்டிஷ் அரசு காலத்திலேயே 1944-இல் இயற்றிய இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code), ஊழல் தடுப்புச் சட்டம் (The Code of Criminal Procedure), 1952-இல் இந்திய அரசு இயற்றிய குற்றத் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act and Criminal Law Amendment Act) என்று இன்னும் சில சட்டங்களில் இந்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. சுதந்திரம் அடைந்து பதினேழு வருஷங்களுக்குப் பின், இந்தச் சட்டங்கள் வலுவற்று இருந்ததால் அவற்றைத் திருத்தி எழுதி வலுவுள்ளதாக மாற்ற அப்போதிருந்த அரசு முயன்றிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களையும் அரசு ஊழியர்களோடு சேர்த்து இந்தச் சட்டங்களின் கீழ் கொண்டுவந்தது முக்கியமான திருத்தம்.

    பிரிட்டிஷாரை வெளியேற்றி நாட்டுக்குச் சுதந்திரம் பெற எத்தனையோ பேர் சுதந்திரப் போரில் குதித்தார்கள். சுயநலம் எதுவுமில்லாமல் மிகத் தீவிரமாகப் போரில் கலந்துகொண்டார்கள். அப்படிக் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் சுதந்திர இந்திய அரசில் பங்கேற்றபோது ஊழல் செய்ய முற்பட்டார்கள். சுதந்திரப் போரில் தீவிரமாகப் பங்கேற்காதவர்களும் அரசில் நிறைய ஊழல்செய்ய ஆரம்பித்தர்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இயற்றப்பட்ட சட்டங்கள் ஊழல்களையும் லஞ்சத்தையும் ஒழிக்கப் போதவில்லை என்பதால் மறுபடி அவற்றைத் திருத்தி அமைக்க அரசு முற்பட்டது.

    அறுபதுகளில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துகொண்டிருந்தது. அப்போது அங்கொருவர், இங்கொருவர் என்று ஒரு சிலர் ஊழல் புரிந்தார்கள்; லஞ்சம் வாங்கினார்கள்; குற்றங்களில் ஈடுபட்டார்கள். அதன் பிறகு நிறைய மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளும் ஆட்சியைப் பிடித்தன. அது ஒன்றே காரணம் இல்லையென்றாலும் அதுவும் ஊழல் அதிகரிக்க வழிகோலியது.

    அப்போது இத்தனை தனியார் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இவற்றை ஆரம்பிக்க, நடத்த, மாணவ, மாண்விகளைச் சேர்க்க என்று இப்போது லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சாதாரணமாக நடைபெறுகிறது. ஆசிரியர்கள் பணம் பெற்றுக்கொண்டு தேர்வுகளில் மதிப்பெண்கள் கொடுப்பது போன்ற செயல்கள் அப்போது நடந்திருக்கலாம். ஆனாலும் இப்போது போல் அவை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் புகுமுக வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அட்மிஷன் கொடுப்பது அன்று சரியாகப் பின்பற்றப்படவில்லை. என்னோடு படித்த ஒரு பெண், ‘தேவையான அளவு மதிப்பெண்கள் (minimum) வாங்கிவிடு. அதன் பிறகு மருத்துவக் கல்லூரியில் உனக்கு அட்மிஷன் வாங்குவது என் பொறுப்பு’ என்று தன் தந்தை கூறியதாகப் பெருமையாகக் கூறிக்கொள்வாள். ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ‘என் மகளுக்கே அட்மிஷன் கொடுக்கவில்லை. நான் சம்பந்தப்பட்டவர்களைக் கூப்பிட்டுக் கூறிய பிறகுதான் கொடுத்தார்கள்’ என்றார். இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அவை அரிதாகத்தான் நடந்தன. அன்று நிறையப் பணப் புழக்கம் இல்லை.

    மத்திய, மாநில அமைச்சர்களும் நண்பர்களுக்கு, வேண்டியவர்களுக்குச் சில சலுகைகள் கொடுத்தார்களே தவிர இப்போதுபோல் பணம் பெற்றுக்கொள்ளவில்லை. உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு சலுகைகள் செய்து கொடுப்பது (Nepotism) எந்த நாட்டிலும் இல்லாமல் இருக்காது. புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இது இருந்தது பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பல சட்டங்கள் இயற்றி ஐம்பது ஆண்டுகள் ஆன பிறகும் ஊழலும் லஞ்சமும் பல மடங்கு பெருகிப் பேயாட்டம் போடுவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை. ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் இவற்றை ஒழிக்காதது மட்டுமல்ல, இவை பல மடங்கு பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன்?

    இடையில் எழுபதுகளில் ஜனதா கட்சியும், தொண்ணூறுகளில் பா.ஜ.க.வும் மற்ற கட்சிகளோடு சில ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அமைத்ததைத் தவிர சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ்தான் மத்தியில் ஆட்சிபுரிந்து வந்திருக்கிறது. ஊழலும் லஞ்சமும் ஒழிக்கப்படாமல் போனதற்கு காங்கிரஸ் மட்டும்தான் காரணமா? இடையில் மாற்று ஆட்சி அமைத்த மற்றக் கட்சிகளும் ஒன்றும் செய்யவில்லையே.

    rti-new

    தொண்ணூறுகளில் என் தந்தை இறந்த பிறகு அவருடைய பிறப்புச் சான்றிதழ் பெற தாலுக்கா அலுவலகத்திற்கு நான் பல முறை சென்றேன்; அங்கு வேலைபார்க்கும் பலரின் கேலிக்கு உள்ளானேன். இப்போது பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை கணினி மூலமே பெற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். ஊழல் ஒழிய இது ஒரு படி. நிர்வாகம் கணினி மூலம் வெளிப்படையானால் (transparent) அலுவலர்களின் பை நிறைவதைக் குறைக்கலாம். தகவல் பெறும் உரிமை என்னும் சட்டம் நிர்வாகத்தை வெளிப்படையாக்க உதவும். இவற்றாலெல்லாம் லஞ்சம், ஊழல் ஒழியலாம் என்னும் நம்பிக்கையை மக்கள் மனதில் வளர்க்கலாமா என்று தெரியவில்லை.

    Share
  • குற்றவாளி அரசியல்வாதிகளைப் பற்றி நீதிமன்றத்தின் ஆலோசனை

    நாகேஸ்வரி அண்ணாமலை.

     

    Supreme_Court_of_India_wikipedia

    மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் செய்தி ஒன்று ஆகஸ்ட் 27 அன்று பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கிறது.  அந்தச் செய்தி இதுதான்.

    ‘குற்றப் பின்னணி உடையவர்களையும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களையும் அமைச்சர்களாக நியமிப்பதை பிரதமரும் மாநில முதல்வர்களும் தவிர்க்க வேண்டும்.  இதற்கான பொறுப்பு அவர்களுக்கு உண்டு’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    குற்றப் பின்னணி உடையவர்களை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது.  அப்படி நியமித்தால் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த மனு தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு ‘பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது.  இந்த மனுவின் தீர்ப்பில்தான் உச்சநீதிமன்றம் அப்படிக் கூறியிருக்கிறது.

    யாரை அமைச்சர்களாக நியமிப்பது, யாரை நியமிக்க முடியாது என்பது பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை என்றும் ஆனால் இது பற்றிய விஷயங்களில் அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.  அந்த ஆலோசனைதான் மேலே குறிப்பிட்ட தீர்ப்பு.

    ஊழல் புரிபவர்களாகவும் மற்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதால் சமூக ஆர்வலர்கள் இதை எதிர்த்துக் குரல் எழுப்பினர்..  சட்டத்தை இயற்றுபவர்கள் சட்டத்தை மீறுபவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி மக்களின் பிரதிநிதிகள் ஆவார்கள் என்று அவர்கள் கேட்டார்கள்.  மேலும் சட்டத்தின் பாதுகாவலனாக இருப்பதாகப் பதவி ஏற்கும்போது உறுதி அளித்துவிட்டுப் பின் அவர்கள் சட்டத்தையே மீறுபவர்களாக இருந்தால் மக்களுக்கு எப்படி ஜனநாயகத்தில் நம்பிக்கை வரும் என்றும் அவர்கள் கேட்டார்கள்.  அவர்களுக்குச் சமாதானம் ஏற்படும் வகையில் இதற்கு ஒரு முடிவு காண நீதிமன்றங்கள் முயன்றன.  முதலில் குற்றம் புரிந்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது.  குற்றம் என்று நிரூபிக்கப்படும்வரை குற்றம் புரிந்ததாகக் கருதப்படுபவர் நிரபராதியே என்ற அடிப்படையில் இது இயற்றப்பட்டது.  ஆனால் நம் நீதிமன்றங்கள் ஒரு வழக்கைத் தீர்த்துவைக்கப் பல ஆண்டுகள் எடுப்பதால் கீழ்க் கோர்ட்டுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் மேல் முறையீடு நீதிமன்றங்களுக்கு அப்பீல் செய்துவிட்டு குற்றம்
    புரிந்தவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்க வாய்ப்பு ஏற்பட்டது.  பல சமயங்களில் அவர்கள் வழக்குகள் கடைசியாகத் தீர்க்கப்படும்போது அவர்கள் ஆயுளே முடிந்துவிடலாம்.

    இதைத் தவிர்க்க வேண்டி எந்தக் கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.  ஒரு கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கே பல ஆண்டுகள் ஆகும் என்பது இன்னொரு விஷயம்.  அதன்படிதான் லாலு போன்றவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுக் கொஞ்ச காலம் சிறைக்குச் சென்றார்கள்.  அவர்கள் மேல் முறையீடு செய்துவிட்டு சிறையிலிருந்து வெளிவந்து மறுபடி அரசியலில் பங்குகொள்கிறார்கள்.

    இதிலும் ஒரு திருத்தம் வேண்டும் என்றுதான் இப்போது உச்சநீதிமன்றம் புதிய அறிவுரையை வழங்கியிருக்கிறது.  குற்றம் புரிந்தவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அது விசாரிக்கப்பட வேண்டிய ஒரு குற்றம் என்று ஒரு நீதிபதியால் ஏற்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் அப்போதே சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டார் என்று கொள்ள வேண்டும்.  மேலும் அவர் நிரபராதியாக இருக்கலாம் என்ற அனுமானத்தினால் மட்டுமே ஒருவர் குற்றம் புரியவில்லை என்று தீர்மானித்து அவரை சட்டம் இயற்றும் அமைச்சர் பதவிக்கு நியமிப்பது உசிதமல்ல என்றும் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.

    உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரையைப் பிரதம மந்திரியும் மாநில முதல்வர்களும் ஏற்று நடப்பார்களா என்பது அடுத்த கேள்வி.  இப்போது மத்திய அமைச்சரவையிலும் மாநில அமைச்சரவைகளிலும் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலானவர்கள் ஏதோ ஒரு வகையான குற்றம் புரிந்தவர்களாகவோ ஊழலில் ஈடுபட்டவர்களாகவோ இருக்கிறார்களாம்.  இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போவதாகச் சொல்கிறார்கள்.  யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்று முடிவு சொல்ல உச்சநீதிமன்றத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு அதிகாரமும் கொடுக்கப்படவில்லையாம்.  இருப்பினும், சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் முடிந்த பிறகும் சாக்கடை அரசியலைச் சுத்தப்படுத்த முடியவில்லை என்றால் இந்தியாவின் ஜனநாயகம் என்னாவது என்று கேட்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.  யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும், யாரை நியமிக்கக்கூடாது என்னும் பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டிய கடமை நாட்டை ஆள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம் மந்திரிக்கும் முதலமைச்சர்களுக்கும் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள்.

    எல்லாம் போகட்டும்.  குற்றம் புரிந்தவர்களே பிரதமராகவும் முதலமைச்சராகவும் இருந்துவிட்டால் என்ன செய்வது?   பிரதமர் மோதி விஷயத்தில் குஜராத் கலவரங்களில் அவருக்குப் பங்கு உண்டு என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்று கீழ் கோர்ட்டில் தீர்ப்பானாலும் இதை எதிர்த்து குஜராத் அரசு அப்பீல் செய்யவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.  ஆனால் கலவரத்தில் விதவையான ஸகியா ஜஃப்ரி என்ற பெண் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.  அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.  அதனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை மோதி மீதுள்ள குற்றச்சாட்டு இன்னும் விலக்கப்படவில்லை.  தமிழக முதல்வர் மீது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே குற்றத் தாக்கல் நீதிமன்றத்தில் பதிவாகி இப்போது வழக்கு முடியும் தறுவாயில் இருக்கிறது.  குற்றச் சாயலே இல்லாத அமைச்சர்களை நியமிக்கும் பொறுப்பு பிரதம மந்திரிக்கும் முதலமைச்சருக்கும் இருக்கிறது என்றால் குற்றவாளிகளாக இருக்கலாம் என்று நீதிமன்றங்களால் கருதப்பட்டு வழக்குகள் நடந்துவரும் இவர்களைப் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அறிவுரை என்ன?

    இவர்களைத் தேர்ந்தெடுத்ததே மக்கள்தான்.  அவர்கள் சிந்திக்க வேண்டும்.

    Share
  • இந்திய அரசியலில் தனி நபர் துதி

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கா என்ற நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து அங்கு இரண்டே இரண்டு அரசியல் கட்சிகள்தான். அமெரிக்க அரசியல் முறை முன்னூறு ஆண்டுகளாகக் காலத்தை வென்று இன்னும் அதே வ்லுவோடு விளங்கிவருவதால் அது ஒரு சிறந்த அரசியல் அமைப்பு என்று கொள்ளலாம். அரசியல் அமைப்பு மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் அன்றிலிருந்து இன்றுவரை இரண்டுதான். அந்த இரண்டு கட்சிகளுக்கும் தலைவர்கள் உண்டு. ஆனால் அவர்கள்தான் ஜனாதிபதியாக வருவார்கள் என்ற கட்டாயமில்லை. சொல்லப் போனால் கட்சித் தலைவர் யாரும் ஜனாதிபதியாக வந்ததாக ஞாபகம் இல்லை. அதற்கு மேலாக அவர்கள் சொல்வதைத்தான் கட்சியைச் சேர்ந்தவர்கள் கேட்க வேண்டுமென்பதில்லை. ஜனநாயகக் கட்சியில் பெரும்பாலோர் இடதுசாரிக் கொள்கை உடையவர்களாவும் குடியரசுக் கட்சியில் உள்ளவர்கள் வலதுசாரிக் கொள்கை உடையவக்ர்ளாகவும் இருப்பார்கள் என்பது சாதாரணக் கணிப்பு. ஆனால் அவர்கள் எல்லோரும் எல்லா விஷயத்திலும் இடதுசாரிகளாகவும் வலதுசாரிகளாகவும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பிரச்சினை என்று வந்துவிட்டால் எல்லா ஜனநாயக்க் கட்சிக்காரர்களும் ஒரே மாதிரியாக ஓட்டுப் போடுவார்கள் என்று சொல்ல முடியாது. இரண்டு சபைகளிலும் ஏதாவது ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் தங்கள் தங்கள் தனிப்பட்ட கொள்கைக்கேற்ப இரண்டு கட்சிக்காரர்களும் ஓட்டுப் போடுவார்கள்.

    கட்சித் தலைவர் சொல்வதையோ ஜனாதிபதி சொல்வதையோ கேட்டு நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஜனாதிபதி தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் செய்யும் எதையும் ‘ஆஹா, ஓஹோ’ என்ரு புகழ வேண்டியதில்லை. அமெரிக்க ராணுவத்தின் ஒரு சிறப்புப் பிரிவு ஜனாதிபதி ஒபாமாவின் கட்டளையை மேற்கொண்டு வெகு காலமாக அமெரிக்கா தேடிக்கொண்டிருந்த ஒசாமா பின் லேடனை அவன் இருக்கும் இடத்திலேயே சூழ்ந்துகொண்டு கொன்றதை அவர் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் யாரும் பெரிதாகப் பேசவில்லை. ஒபாமாவைத் தலையில் வைத்துக்கொண்டு யாரும் புகழ் மாரி பொழியவில்லை.

    இந்தியாவில் எல்லாம் இதற்கு நேர் மாறாக இருக்கிறது. தேசிய அளவில் உள்ள கட்சிகளானாலும் சரி மாநில அளவில் உள்ள கட்சிகளானாலும் சரி கட்சித் தலைவர் சொல்வதை எல்லோரும் கேட்டாக வேண்டும். காங்கிரஸைப் பொறுத்தவரை சோனியா காந்தி சொல்வதுதான் எல்லோருக்கும் வேதவாக்கு. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுமாசமாகத் தோல்வியுற்றாலும் இன்னும் சோனியாவின் அறிவுரைகளைத்தான் கேட்க நினைக்கிறார்கள். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதிலும் அவரை சோனியா பின்னால் இருந்து ஆட்டி வைத்தார் என்பதோ தன் மகன் ராகுலை அடுத்த பிரதமராக்க முயன்றார் என்பதோ காங்கிரஸின் படுதோல்விக்குக் காரணம் என்று சொல்ல எந்தக் காங்கிரஸ் தலைவர்களும் முன்வரவில்லை. காங்கிரஸ் தோல்விக்கு யார் காரணம் அல்லது எது காரணம் என்று ஆராய அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவர் ஏ.கே. அந்தோணி காங்கிரஸ் வேட்பாளர்கள் உற்சாகமாகத் தேர்தலில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் மோதியின் தீவிரத் தேர்தல் பிரச்சாரமும்தான் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். காங்கிரஸின் தோல்வியில் ராகுலின் பங்கு என்ன என்று கேட்டபோது ராகுலுக்கும் காங்கிரஸின் தோல்விக்கும் எந்த சம்பந்தமும் என்று கூறியிருக்கிறார். இவர் கூட இப்படிப் பேசுவதற்கு நம் அரசியல் கலாச்சாரம்தான் காரணம்.

    மோதி பதவிக்கு வந்த பிறகு அவர் மட்டுமல்ல அவருடைய கட்சிக்காரர்களும் எல்லாமே அவர்தான் என்பது போல் நடந்துகொள்கிறார்கள். அவரை அதிகமாகப் புகழ்வதும் அவருடைய ஆணைகளைத் தலைமே தாங்கி நடப்பதுவும் அவருடைய கட்சிக்காரர்களின் செயலாக இருக்கிறது. அவர் செய்யும் எல்லா முடிவுகளுமே சரியான முடிவுகள் போல் பேசுகிறார்கள்.

    தமிழ்நாட்டுக் கட்சிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தி.மு.க. கட்சியில் தலைவர் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் எது பற்றியும் எந்த விதக் கருத்தும் இருப்பதாகத் தெரியவில்லை அடுத்து அ.தி.மு.க. நேற்று மதுரையில் நடந்த முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரித்ததில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டாட திண்டுக்கல். உட்பட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த் விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த் விழாவில் எல்லாம் அம்மா மயம். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பார்கள். அது போல் இந்த மாநாட்டில் அம்மாவைத் தெய்வமாகவே ஆக்கி எல்லாப் புகழையும் அவருக்கே காணிக்கை ஆக்கினார்கள்.

    இது என்ன தனி மனித துதி? இதுதான் இந்திய ஜனநாயகமா? என் தாய்த்திருநாடே உன்னை யார் இந்த ஆட்டுமந்தைக் கலாச்சாரத்திலிருந்து காப்பாற்றப் போகிறார்கள்?

    Share
  • ஏன் இந்த பாரபட்சம்?

    — நாகேஸ்வரி அண்ணாமலை.

    மே மாதம் 16-ஆம் தேதி லோக்சபா தேர்தல்களுக்கான முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்தன.  அமெரிக்காவில் இரவு வெகுநேரமாகிவிட்டதால் படுக்கச் சென்றுவிட்டோம்.  மறு நாள் காலையில் முடிவுகள் வெளிவந்து பா.ஜ.க. தனிப்பெருன்பான்மை பெற்றதாக அறிந்தோம்.  அன்று சாயங்காலம் முஸ்லீம் நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவர், ‘காலை ஐந்து மணிக்கு எழுந்து என்னுடைய ஐபோனில் தேர்தல் முடிவுகளைப் பார்த்தேன்.  பா.ஜ.க.வுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைத்ததை அறிந்து மிகவும் அசந்துவிட்டேன்.  படுக்கையை விட்டு எழுந்திருக்கவே விரும்பவில்லை’ என்றார்.  இந்தியாவில் இருக்கும் உறவினர்களை போனில் அழைத்துப் பேசினாராம்.  அவர்கள், ‘நீங்கள் அங்கு இருக்கிறீர்கள்.  உங்களுக்குக் கவலை இல்லை.  இந்தியாவில் இருக்கும் எங்களைப் போன்றோருக்குத்தான் கஷ்டம்’ என்றார்களாம்.  கோபாலகிருஷ்ண காந்தி எழுதியது போல் 69 சதவிகித இந்தியர்கள் மோடியின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை; அதனால் பா.ஜ.க.வுக்கு ஒட்டுப் போடவில்லை.

    இவர்கள் எல்லாரும் பயந்தபடியே மோடி ஆரம்பத்திலேயே நடந்துகொள்கிறாரோ என்று பயமாக இருக்கிறது.  முஸ்லீம்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ஈத் பண்டிகையன்று இந்திய முஸ்லீம்கள் அனைவரையும் மனமார வாழ்த்தி முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் மற்றும் மதத் தலைவர்களுக்கும் பிரதம மந்திரி விருந்து கொடுக்கும் பழக்கம் நெடுநாளாக இருந்து வருகிறது.  பா.ஜ.க.வைச் சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட இந்த வழக்கம் பின்பற்றப்பட்டது.  பதவி ஏற்ற புதிதிலேயே ஏன் இந்த வழக்கத்தை மோடி கைவிட்டார் என்று தெரியவில்லை.  அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களும் அவருடைய ஆதரவாளர்களும் அவர் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் முஸ்லீம்களை வாழ்த்தத் தவறவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.  டி.வி.யிலோ ரேடியோவிலோ அல்லது பத்திரிக்கை மூலமோ அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்குச் சமமாகுமா இது?

    modi-offers-2-500-kg-of-sandalwoodஈத்தின் மறுநாளே நேபாளத்திற்குச் சென்ற மோடி அங்குள்ள பழமையான இந்துக் கோவில் ஒன்றிற்கு 2,500 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகளும் 2,400 கிலோ எடையுள்ள நெய்யும் அன்பளிப்பாக அளித்திருக்கிறார்.  இவை இரண்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?  முப்பது கோடி ரூபாய்.  இந்தப் பணம் எங்கிருந்து வந்தது?  அவ்வளவும் இந்திய மக்களின் வரிப் பணம்.

    மோடி காவி உடை தரித்து ருத்திராட்ச மாலை அணிந்து கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.  மேலும் தன்னோடு அதிகாரிகள் யாரையும் அழைத்துச் செல்லவில்லையாம்.  மோடி ஒரு பெரிய இந்து மத பக்திமானாக இருக்கலாம்.  அதற்காக இந்தியாவின் பிரதம மந்திரியாகச் சென்றபோது ஒரு தனி மனிதன் செல்லும்போது நடந்துகொள்வது போல் நடந்துகொள்ளவேண்டுமா?  அப்படித் தனி மனிதனாகச் சென்றால் இந்திய அரசின் நன்கொடை எதற்கு?  இந்திய மக்கள் அனைவரின் நலன்களையும் பேண வேண்டிய இந்தியப் பிரதமர் இந்திய முஸ்லீம்களை பெயருக்கு வாழ்த்திவிட்டு வெளிநாட்டில் இருக்கும் ஒரு இந்துக் கோவிலுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரிவழங்கியிருப்பது எல்லோர் கண்களையும் உறுத்துகிறதே.

    அவருடைய ஆதரவாளர்கள் சிலர் முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை போவதற்கு இந்திய அரசு எவ்வளவு பணம் செலவழிக்கிறது என்று கணக்குக் கொடுக்கிறார்கள்.  அதுவும் இதுவும் ஒன்றா?  இவர்கள் இந்தியக் குடிமக்கள்.  இவர்களுக்குத் தங்கள் புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட இந்திய அரசு பணம் கொடுத்து உதவக் கடமைப்பட்டிருக்கிறது.  இன்னொரு நாட்டின் கோவிலுக்கு –  அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கூட இல்லை – முப்பது கோடி ரூபாய் வழங்கியிருப்பது எந்த நியாயத்தில் சேர்த்தி?

    மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த சிவசேனாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் அங்கு தயாரித்த உணவு நன்றாக இல்லை என்று புகார் செய்து அங்கிருந்த சமையல் ஊழியர் வாயில் அந்த உணவை வலுக்கட்டாயமாகத் திணித்திருக்கிறார்கள்.  அவர் ஒரு முஸ்லீம்; நோன்பு இருந்துவந்தார்.  அவரை இப்படித் துன்புறுத்தலாமா?  இதைப் பற்றி பிரதமர் மோடி எதுவும் சொல்லவில்லை.  இந்த நிகழ்ச்சியைக் கண்டித்து அவர் ஏதாவது சொல்லியிருந்தாலல்லவா இனி இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடக்காமல் இருக்கும்.

    ஏற்கனவே கிறிஸ்தவர்களாகவும் முஸ்லீம்களாகவும் இருக்கும் இந்தியர்களை பா.ஜ.க. மகளிர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் திரும்பவும் இந்து மதத்திற்குக் கொண்டுவரப் போகிறார்களாம்.  ஏன் இந்த வேண்டாத வேலை?  பல தலைமுறைகளுக்கு முன்பே இவர்கள் மதம் மாறியவர்கள்.  அப்போது ஒரு வேளை அவர்களில் சிலர் இஷ்டத்திற்கு மாறாக மதம் மாற்றப்பட்டிருக்கலாம்.  ஆனால் பல தலைமுறைகளாக அவர்கள் இந்த மதங்களைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.  அவர்களை இப்போது மறுபடி மதம் மாறச் சொல்வது சரியா?  அப்போது நடந்த அநியாயத்தை மறுபடி நடத்த வேண்டுமா?  அவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்காக இப்போது நாமும் செய்ய வேண்டுமா?

    மோடி அவர்களே, இந்திய முஸ்லீம்களைப் புறக்கணித்துவிட்டு  நேபாளத்தில் உள்ள ஒரு இந்துக் கோவிலை இவ்வளவு தூரம் ஆதரிப்பது சரியில்லை என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?  தாங்கள் புறக்கணிக்கப்படுவோம் என்று பயந்த முஸ்லீம்கள் நினைத்தது சரிதான் என்பது போல் நடந்து கொள்ளலாமா?  ‘நீங்கள் பயந்தது போல் எல்லாம் நடக்காது.  நான் இந்தியப் பிரதம மந்திரி என்ற முறையில் எல்லோரின் நண்பன்’ என்று காட்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டாமா?

    படம் உதவிக்கு நன்றி: http://www.business-standard.com/photo-gallery/current-affairs/modi-s-nepal-visit-1087.htm

    Share
  • முஸ்லீம்கள் கவனிப்பார்களா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினோராம தேதி பின் லாடன் அமெரிக்க வர்த்தகக் கட்டடங்களை விமானங்கள் மூலம் தகர்த்தெறிந்த சம்பவத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் முஸ்லீம்கள் பற்றி ஒரு எதிர்மறையான படிமம் ஏற்பட்டிருக்கிறது.  இதற்கு முன்னும் முஸ்லீம்கள் பற்றி தவறான எண்ணம் பலரிடையே இருந்தாலும் இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு அது வெகுவாக வலுப்பெற்றிருக்கிறது.  சௌதி அரேபியாவில் அமெரிக்கப் படை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது பின் லாடனுக்கு அமெரிக்காவின் மேல் ஏற்பட்ட கோபத்திற்கு முதல் காரணம்.  பின் லாடனின் கோபம் நியாயமானதுதான் என்று நினைத்து வேறு சிலரும் அவன் செய்த செயல்களில் அவனுக்குத் துணைபுரிந்தனர்.

    ஒரு சிலர் செய்த சில கொடிய செயல்களுக்காக உலகம் முழுவதும், குறிப்பாக மேலைநாடுகள், முஸ்லீம்கள் மீது வெறுப்பைக் கொட்டி அவர்களுக்குப் பயங்கரவாதிகள் என்ற பட்டத்தையும் சூட்டின.  உலகில் மோதல்கள் எங்கு நடந்தாலும் அவற்றில் முஸ்லீம்கள் கலந்துகொண்டிருந்தால் தவறு அவர்கள் மீதுதான் என்பது போன்ற படிமத்தை மீடியாக்கள் ஏற்படுத்தின.

    இந்தியாவிலும் சுதந்திரத்திற்குப் பிறகு நிறைய இந்து-முஸ்லீம் கலவரங்கள் ஏற்பட்டன.  இந்துக்கள் பெரும்பான்மையராக இருந்ததினால் கலவரங்களுக்குக் காரணம் முஸ்லீம்கள்தான் என்பது போல் பேசப்பட்டது.  இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் பிரிட்டனால் உருவாக்கப்பட்டபோது முஸ்லீம்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்குக் குடிபெயர வேண்டும் என்று கூட சில இந்தியர்கள் விரும்பினர்.  இந்தியாவின்மீது முஸ்லீம்களுக்குள்ள நாட்டுப்பற்றையும்  சிலர் சந்தேகித்தனர்.

    காந்திஜியின் கொள்கைகளை அப்படியே பின்பற்றும் எங்கள் அபிமானத்திற்குரிய பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு கன்னட எழுத்தாளரே ஒரு முறை அவரிடம் நான் ஆட்டோவில் சாதாரணமாகப் போவதில்லை என்று கூறியபோது, ‘முஸ்லீம் அல்லாத ஒரு ஓட்டுநரின் ஆட்டோவில் போவதில் அவ்வளவு பயம் இல்லை’ என்றார்.  அதுவரை நான் அவர் மீது வைத்திருந்த என் மதிப்புக் கொஞ்சம் குறைந்தது என்று கூறலாம்.

    மெத்தப் படித்த சட்ட வல்லுனரான ஒரு வழக்கறிஞர் வீடு கட்ட நிலம் வாங்கும்போது பக்கத்து நிலத்துக்குச் சொந்தக்காரர் ஒரு முஸ்லீம் அல்ல என்பதை உறுதி செய்துகொண்டு வாங்குங்கள் என்று எங்களுக்கு அறிவுரை கூறினார்.

    சில நாட்களுக்கு முன் இன்னொரு நண்பரோடு (இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்) பேசிக்கொண்டிருந்தபோது காஸாவில் இஸ்ரேல் இப்படிப்பட்ட கொடுமைகள் புரிந்துவருகிறதே என்று ஆதங்கப்பட்டேன்.  எனக்கு ஆறுதலாக அவர் ஏதாவது கூறுவார் என்று நான் எதிர்பார்த்ததற்கு மாறாக ‘இஸ்ரேல் அரேபியர்களை அப்படி அடக்கிவைக்கத்தான் வேண்டும்’ என்றார்.  இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை பற்றி முழுவதும் புரியாமல் இவர் பேசுகிறார் என்பதோடு முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், அவர்கள் மற்றவர்கள் கண்காணிப்பில்தான் இருக்க வேண்டும் என்பது போல் பேசுகிறாரே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.

    இப்போது இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவோடு காஸாவைத் தரைமட்டமாக்கிக்- கொண்டிருக்கிறது.  இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹு என்ற ஈவு, இரக்கமற்ற பயங்கரவாதி வெஸ்ட் பேங்கையும் தாக்குவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்.  பாலஸ்தீனத்திலிருந்த பாதிப் பேரை யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வந்திருக்கின்றனர்.  இப்போது எல்லாப் பாலஸ்தீனர்களையும் வெளியேற்றுவதோடு மிஞ்சியிருப்பவர்களைக் கொன்றுகுவிக்கவும் நேத்தன்யாஹு திட்டமிட்டிருப்பது போல் தெரிகிறது.  இந்த மனிதப் படுகொலையை நிறுத்த ஐ.நா. என்னவோ செய்துகொண்டிருக்கிறது.  அதை எல்லாம் இஸ்ரேல் சட்டைசெய்வதாகத் தெரியவில்லை.  அமெரிக்கா இஸ்ரேலின் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டுவருவதின் மூலம்தான் இஸ்ரேலின் வன்கொலையை நிறுத்த முடியும்.  ஈரானின் மீதோ சிரியாவின் மீதோ தடைகள் கொண்டுவர வேகமாக முன்வரும் அமெரிக்கா இஸ்ரேலின் மீது ஏன் அப்படிப்பட்ட தடைகளைக் கொண்டுவரவில்லை?  ஏனென்றால் ஈரானும் சிரியாவும் இஸ்லாம் நாடுகள்.

    வல்லமையில் நான் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தது பற்றி எழுதிக்கொண்டிருந்தபோது வாசகர் ஒருவர் ‘நீங்கள் முஸ்லீம்களுக்கு ஆதரவாகப் பேசுகிறீர்கள்’ என்று என் மேல் குற்றம் சுமத்தினார்.  நான் பதிலுக்கு, ‘ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?  நான சரித்திர நிகழவுகள் எதையாவது திரித்துக் கூறியிருக்கிறேனா என்று கூறுங்கள்’ என்றேன்.  அவரிடமிருந்து பதிலே இல்லை.

    உலகம் முழுவதும் முஸ்லீம்கள் மீது ஒரு எதிர்மறையான படிமம் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் முஸ்லீம்கள் ஏன் இன்னும் குரானில் கூறியிருப்பதாகச் சொல்லிக்கொண்டு பழமைவாதத்தை விட மறுக்கிறார்கள்?  சமீபத்தில் சிரியாவில் தவறாக நடந்துகொண்டதற்காக  ஒரு ஆணுடன் தகாத உறவு வைத்திருந்ததாகச் சொல்லி ஒரு திருமணமான பெண்ணை கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.  எவ்வளவு பெரிய மிருகத்தனம்!  அவள் செய்தது தவறே என்றாலும் இப்படித் தண்டனை கொடுக்க வேண்டுமா? இறக்கும் வரை அவளைக் கல்லால் அடித்தபோது அவள் எத்தனை வேதனை அனுபவித்திருக்க வேண்டும்?

    அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துகிறார்கள்.  அவர்கள் இறக்கும்போது அவர்களுக்கு எவ்வளவு வேதனை குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவு குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறார்கள்.  அவர்களால் இம்சிக்கப்பட்டவர்கள், கொலைசெய்யப்பட்டவர்கள் எத்தனை துன்பத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகி இருந்தாலும் தண்டனை பெற்றவர்கள் அதே வேதனையையும் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று அமெரிக்க நீதி நினைப்பதில்லை.  அவர்கள் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டியவர்கள்தான், ஆனால் அதற்காக அவர்கள் வேதனை அனுபவித்து இறக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறது அமெரிக்க நீதி.  இதுவல்லவா மனித இனம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதற்கு அடையாளம்.

    ஒரு முறை அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது குற்றவாளிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டபோது அது சரியாக வேலைசெய்யாமல் அவன் ஐம்பது நிமிடங்கள் வலியால் துடித்து இறந்த சம்பவம் அமெரிக்காவில் பெரிய விவாதங்களை எழுப்பியது.  இனி ஒரு போதும் இப்படி நடக்கவிடக் கூடாது என்று பலர் குரல் எழுப்பினார்கள்.  இப்படி மனித இனம் ‘வளர்ச்சி’ அடைந்துகொண்டிருக்கும்போது உயிர் போகும் வரை கல்லால் அடிப்பதையே ஒரு பெண்ணுக்குத் தணடனையாக வழங்கவேண்டுமா?

    ரம்ஜான் நோன்பின்போது ஒருவன் தாகம் தாங்க முடியாமல் தண்ணீரைக் குடித்ததற்காக அவனுக்குச் சவுக்கடி வழங்கப்பட்டிருக்கிறது ஈரானில்.  இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செய்கைகளில் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் சமூகங்கள் ஈடுபடலாமா?  அவன் நோன்பைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன்தானே நரகத்திற்குப் போவான்?  அதைப் பற்றி ஏன் சமூகம் கவலைப்பட வேண்டும்?  மேலும் இப்படி நோன்பு மூலம்தான் இறைவனை அடையலாம் என்ற மூட நம்பிக்கையை இன்னுமா வைத்திருக்க வேண்டும்?  பிற உயிர்கள் மீது அன்பு செலுத்துபவர்களை இறைவன் எப்போதும் தன் பக்கம் சேர்த்துக்கொள்வான் என்பதை இந்தக் காலத்தில் கூட ஒரு சமூகம் உணரவில்லையா?

    உலகம் முழுவதும் வாழும் முஸ்லீம்களே, உலகத்தில் உங்கள் படிமத்தை உயர்த்திக்கொள்வதற்கு இது போன்ற  செயல்களை விட்டு நீங்கள் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து உணருங்கள்.

    Share
  • மோடி அரசு என்ன செய்கிறது?

    –நாகேஸ்வரி அண்ணாமலை.

    getty imageகாஸா தீப்பற்றி எரிகிறது.  இஸ்ரேல் அரசு தொடர்ந்து குண்டுமழை பொழிகிறது.  இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க மோடி அரசு விரும்பவில்லை.  ஏதாவது ஒரு பக்கம் சாயப் போய் அதன் பலன்களை அனுபவிக்க இந்தியா தயாராகயில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.  என்னதான் இந்திய நலன்கள் பாதிக்கப்படும் என்றாலும் கண் முன்னே ஒரு அநியாயம் நடந்துகொண்டிருக்கும்போது அதைத் தட்டிக் கேட்காமல் இருப்பது இந்தியாவுக்கு அழகல்ல.

    பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் தொடர்ந்து அநீதி இழைத்துக்கொண்டிருக்கிறது.  பாலஸ்தீனத்தில் பல நூறு ஆண்டுகளாக முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கி.பி. 132-இல் யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறிய பிறகு அங்கேயே தங்கிவிட்ட ஒரு சில யூதர்களும் தங்களுக்குள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவின் பல நாடுகளிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடியேற ஆரம்பித்த பிறகு இந்த நிலை மாறத் தொடங்கியது.  வெளியிலிருந்து யூதர்கள் வருவதை பாலஸ்தீனத்திலேயே வாழ்ந்த யூதர்களும் விரும்பவில்லை.  இருந்தாலும் அதுவரை இல்லாத, தங்களுடைய புண்ணிய பூமி என்று யூதர்கள் கருதிய பாலஸ்தீனத்தில் குடியேற வேண்டும் என்ற பல நாடுகளிலும் வாழ்ந்த யூதர்களின் வெறியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.  எத்தனையோ தடைகள் இருந்தும் அவற்றையெல்லாம் மீறி யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறிக்கொண்டிருந்தனர்.  அங்கேயே காலங்காலமாக வாழ்ந்துவந்த அரேபியர்களின் – இவர்களில் பாலஸ்தீன முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சேர்த்தி – நிலங்களை வாங்கி அங்கு விவசாயக் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர்.  அந்த நிலங்கள் திரும்பவும் பாலஸ்தீனர்களுக்கு விற்கபபடாமல் பார்த்துக்கொண்டனர்.  அந்த நிலங்களில் பாடுபட யூத வேலையாட்களையே நியமித்தனர்.  தங்களுடன் வெளியிலிருந்து கொண்டுவந்த பணபலத்தாலும் தொழில்நுட்பத்தாலும் தொழிற்சாலைகளை அமைத்துக்கொண்டனர்; கல்வி ஸ்தாபனங்களை ஏற்படுத்திக்கொண்டனர்.  மேலும் மேலும் பல யூதர்களை பாலஸ்தீனத்திற்குள் வரவழைத்து யூதர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டிருந்தனர்.  யூதர்களின் வரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை உணர்ந்த அரேபியர்களுக்கு யூதர்கள் மேல் கோபம் ஏற்பட்டது.  இது நியாயம்தானே?

    அப்போது பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகையில் இருந்தது.  அங்கு வாழ்ந்துவந்த அரேபியர்களின் சம்மதத்தைப் பெறாமலே பிரிட்டன் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தனி நாடு அமைக்க உதவுவதாக ஒரு அறிக்கை மூலம் வாக்குறுதி அளித்தது.  அரேபியர்களின் அனுமதி இல்லாமலேயே பாலஸ்தீனத்திற்குள் தொடர்ந்து யூதர்கள் குடியேறியது அரேபியர்களுக்கு எதிரான முதல் அநீதி என்றால் பிரிட்டன் அங்கு தனி நாடு அமைக்க உதவுவதாக வாக்களித்தது இரண்டாவது அநீதி.  இந்த இரண்டு அநீதிகளையும் எதிர்த்துப் பாலஸ்தீனர்கள் போராடினாலும் பலன் எதுவும் கிடைக்கவில்லை.  யூதர்கள் தங்களுக்கு இழைத்துவரும் கொடுமைகளைக் கண்டிக்க அவர்களின் இடங்களை பாலஸ்தீனர்கள் தாக்கினால் யூதர்கள் தங்கள் பாதுகாப்புக்காக அமைத்துக்கொண்ட படைபலத்தால் அரேபியர்களைத் திருப்பித் தாக்கினர்.

    இப்படி வெளியிலிருந்து வந்து குடியேறிய யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே சச்சரவுகள் நடந்துகொண்டிருக்கும்போதே இந்தச் சச்சரவுகளுக்குத் தீர்வு காணப் பாலஸ்தீனத்தை அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே பிரிப்பது என்று பிரிட்டன் செய்த முடிவு அரேபியர்களுக்கு எதிராகச் செய்த மூன்றாவது அநீதி.  மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனர்ளுக்குப் பாலஸ்தீனத்தின் பாதிக்கும் குறைவான பகுதியையும் வெளியிலிருந்து வந்த யூதர்களுக்கு பாலஸ்தீனத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியையும் கொடுப்பதாக ஐ.நா. முடிவு செய்தது பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட நான்காவது அநீதி.

    தங்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட இடங்களை இஸ்ரேல் எனற் நாடாக அவசர அவசரமாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட யூதர்கள் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களையும் தங்கள் படைபலத்தால் பிடித்துக்கொண்டது ஐந்தாவது அநீதி.  இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் குடியிருப்புகளை நிறுவி அங்கு யூதர்களைக் குடியேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  அப்படி அங்கு குடியேற்றப்பட்டவர்கள் அவர்களுக்கு அருகில் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்குக் கொடுமைகள் இழைத்து வருகிறார்கள்.  இது ஆறாவது அநீதி.  இன்னும் பல அநீதிகளை இழைத்து வருகிறார்கள்.

    உலக வல்லரசான அமெரிக்கா இஸ்ரேலுக்கு எல்லா வழிகளிலும் இந்த அநீதிகள் தொடர உதவி வருகிறது.  இத்தனை அநீதிகளையும் எதிர்த்துச் சில நாடுகள் பாலஸ்தீனர்களுக்கு உதவ முன்வந்தாலும் அவை எல்லாம் பலவீனமானவை.  அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது.  இதனால் ஆதரவற்ற அனாதைக் குழந்தை போல் இருக்கும் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களைத் தாக்க முயற்சிக்கிறார்கள்.  ஆனால் இஸ்ரேலோ பாலஸ்தீனர்கள் ஒரு அடி அடித்தால் திரும்பப் பத்து அடி கொடுக்கிறது.  இப்போது பாருங்கள்.  மூன்று யூதப் பையன்களைக் கடத்திக்கொண்டு போய்க் கொன்றவர்கள் ஹமாஸ் என்ற தீவிரவாதக் கட்சி என்று இஸ்ரேலாக முடிவுசெய்து காஸாவின் மேல் குண்டு மழை பொழிந்து 265 பாலஸ்தீனர்களைக் கொன்றிருக்கிறது; ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியிருக்கிறது.

    பாலஸ்தீனர்களுக்கு எதிராக மேலே குறிப்பிட்ட அநீதிகளோடு இஸ்ரேல் தொடர்ந்து அநீதி இழைத்துக்கொண்டே போகிறது.  இதை ஏன் நம் இந்திய அரசு தட்டிக் கேட்கவில்லை?  1938-லேயே காந்திஜி தன் ஹரிஜன் பத்திரிக்கையில் யூதர்கள் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேறுவதைக் கண்டித்திருக்கிறார்.  அதன் பிறகு எத்தனையோ அநீதிகள் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கின்றன.  இதைக் கண்டிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு இல்லையா?  2002-இல் இந்துக்கள் முஸ்லீம்களை சித்திரவதை செய்வதைக் கண்டும் காணாதது போல் இருந்த மோடி இப்போதும் இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களாகிய முஸ்லீம்களைப் பல இன்னல்களுக்கு ஆளாக்குவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க விரும்புகிறாரா?  தவறு செய்யாதது மட்டுமல்ல, தவறைக் கண்டிக்காமல் இருந்து தவறுக்குத் துணைபோவதும் தவறல்லவா?  இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு அமைக்கப் போவதாகக் கூறும் ஒரு அரசு தார்மீகத்தின் அடிப்படை நியதியையே மீறலாமா?

    பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளை விபரமாக அடையாளம் வெளியிடவிருக்கும் என்னுடைய நூலில் காணலாம்.

    படம் உதவிக்கு நன்றி: Thomas Coex/Agence France-Presse/Getty Images

    Share
  • இதுவல்லவோ ஒரு மதத் தலைவருக்கு அழகு!

     — நாகேஸ்வரி அண்ணாமலை

    இதுவல்லவோ ஒரு மதத் தலைவருக்கு அழகு!

     

    பல நாட்களுக்குப் பிறகு மனதை வருடிக் கொடுக்கும் மிக நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது.  போப் ஃப்ரான்ஸிஸ் மத்திய கிழக்கிற்கு வந்து எல்லா மதத்தினருக்கும் இணக்கமான பேச்சுக்களாகப் பேசி தீராத பிரச்சினையான இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய நல்லுரைகளை வழங்கியிருக்கிறார்.  நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்ற பாணியில் தன் கருத்துக்களைக் கூறிவருகிறார்.  இதுவல்லவோ ஒரு மதத் தலைவருக்கு அழகு!

    அதுவும் இவருக்கு முந்தைய போப் பெனெடிக்ட் ஒரு முறை அவர் ஆற்றிய உரையில் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முஸ்லீம் அரசர் ஏதோ சொல்லியதாகக் கூறப் போய் உலகம் முழுவதும் – அப்போது எப்போதையும் விட முஸ்லீம் எதிர்ப்பு அதிகமாக இருந்தது – கொந்தளித்தது.  ஒரு மதத் தலைவர் சர்ச்சையை ஏற்படுத்தும் சொற்களைக் கூறலாமா என்று நான் ஆயாசப்பட்டிருக்கிறேன்.  உலகில் உள்ள மக்களிடையே நட்பும் நல்லெண்ணமும் நிலவப் பாடுபடுவதுதான் மதத் தலைவர்களின் தலையாய கடமை என்றால் போப் ஃப்ரான்ஸிஸ் இந்த இலக்கணத்திற்கு மிகவும் பொருத்தமானவர்.

    இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று முழக்கமிடும் ஒரு கோஷ்டியோடு நெருக்கமுள்ள ஒரு அரசியல் தலைவர் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறாரே என்று பயப்படும்படியாகத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கும் இந்த நேரத்தில் எல்லா மதங்களையும் இணைக்கும் விதத்தில் பேசிவரும் ஒரு மதத் தலைவரின் செயல்கள் உலகம் உய்ய இன்னும் வாய்ப்பிருக்கிறது என்பதை நினைத்து மனதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.

    இஸ்ரேலுக்கு இதுவரை வந்த போப்கள் சாதாரணமாக வாடிகனிலிருந்து நேரடியாக இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவிற்கு வருவார்கள்.  இவர் அதில் ஒரு மாற்றம் செய்தார்.  நேரே ஜோர்டான் வழியாகப் பாலஸ்தீனப் பகுதியில் உள்ள பெத்லஹேமுக்குச் சென்றார். தன் நாட்டு ஜனத்தொகையில் பாதிக்கு மேலாகப் பாலஸ்தீன அகதிகளையும் சமீபத்தில் உள்நாட்டுப் போரின் விளைவாக சிரியாவிலிருந்து வந்திருக்கும் ஆறு லட்சம் அகதிகளையும் வரவேற்றிருக்கும் ஜோர்டானைப் புகழ்ந்ததோடு உலகின் மற்ற நாடுகளும் இதில் ஜோர்டானுக்கு உதவ வேண்டும் என்று அறிவுரையும் கூறினார்.  சிரியாவில் அமைதி ஏற்பட எல்லோரும் பாடுபட வேண்டும் என்றும் ஆயுதங்கள் மூலம் அமைதியை வாங்க முடியாது என்றும் அமைதி எல்லோரும் ஒத்துழைத்துப் பெற வேண்டிய ஒன்று என்றும் கூறினார்.

    இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் வெஸ்ட் பேங்கிற்குப் போகும் முதல் போப் இவர்தான்.  2012-இல் ஐ.நா. சபை பாலஸ்தீன அத்தாரிட்டிக்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்து (non-member observer status) கொடுத்திருப்பதை ஆதரிக்கும் முகமாக போப் ஜோர்டானுக்குச் சென்று, பின் அங்கிருந்து பெத்லஹேமிற்குச் சென்றார்.  பெத்லஹேமில் இயேசு பிறந்த இடத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும் அகதிகள் முகாமில் வசிப்பவர்களோடு மதிய உணவு அருந்தினார்.  பக்கத்தில் இருக்கும், 1948-இல் நடந்த இஸ்ரேல்-அரபு போரில் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட, சுமார் 12,000 அகதிகளும் அவர்களின் சந்ததிகளும் வாழும் அகதிகள் முகாமிலிருந்து வந்திருந்த சிறுவர்களின் பாடலைக் கேட்டார்.  இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இவர்கள் படும் கஷ்டங்களைக் கேட்டறிந்தார்.

    பெத்லஹேமிலிருந்து வாடிகன் திரும்பிய போப் பலர் கொடுத்த பரிசுகளைத் தன்னோடு கொண்டுவந்தார்.  அதில் விலை மதிக்க முடியாதது அகதிகள் முகாமில் இருக்கும் பெத்லஹேம் சிறுவர்கள் இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த ஒரு அடையாள அட்டை.  அதில் குடும்பத்தின் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருப்பவர் இயேசு.  குடும்பத்தின் அங்கத்தினர்கள் யார் யார் தெரியுமா?  காந்திஜி, நெல்சன் மண்டேலா, யாசர் அராபத், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர்.  இயேசு வெஸ்ட் பேங்கிலிருந்து இஸ்ரேலுக்குப் போக விரும்பினால் அவர் கூட ஒரு அடையாள அட்டை இல்லாமல் போக முடியாது என்பதையும் அதனால் அவர்கள் படும் துன்பங்களையும் எவ்வளவு அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் இந்தச் சிறுவர்கள்!  (இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும் வெஸ்ட் பேங்கில் வாழும் பாலஸ்தீனர்கள் வேலைக்காகவோ, தங்கள் நிலங்ளில் உழைப்பதற்காகவோ, ஜெருசலேமில் உள்ள தங்கள் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போவதற்காகவோ இஸ்ரேலுக்குள் போவதற்கு இந்த அடையாளச் சீட்டுகள் வேண்டும்).

    Mideast Popeபெத்லஹேமிலிருந்து ஜெருசலேம் போகும் வழியில் யாரும் எதிர்பாராத விதமாகத் திடீரென்று தான் சென்றுகொண்டிருந்த வாகனத்திலிருந்து இறங்கி, இஸ்ரேல் வெஸ்ட் பேங்கில் யூதர்களைக் குடியேற்ற அமைத்திருக்கும் குடியிருப்புகளை உள்ளடக்கிப் பாலஸ்தீன தற்கொலைப் போராளிகள் இஸ்ரேலுக்குள் வருவதைத் தடுக்கக் கட்டியிருக்கும், பிரமாண்ட கான்கிரீட் சுவரில் ‘போப் அவர்களே, நியாயத்தைப் பற்றிப் பேச எங்களுக்கு யாராவது தேவை’ என்று பெயின்டால் எழுதப்பட்டிருந்த இடத்தில் சுவரில் தலையை வைத்து சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். பாலஸ்தீனர்கள் தினம் தினம் இல்ரேலுக்குப் போய்வருவதில் உள்ள கஷ்டங்களைக் கேட்டறிந்தார்.  இவர் கிறிஸ்தவ மதத்தினராயினும் பாலஸ்தீன முஸ்லீம் அகதிகள் படும் கஷ்டங்களைக் கேட்டு உணர்ந்து அவர்களுக்காக இஸ்ரேல் அரசிடம் நியாயம் கிடைக்க வேண்டியிருக்கிறார்.  அது மட்டுமல்ல முதல் முதலாக போப்பின் இணையதளத்தில் (web site) பாலஸ்தீனர்கள் வாழும் பகுதி ‘பாலஸ்தீன நாடு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இது பாலஸ்தீனர்களுக்கு புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது.

    சாலை வழியாக பெத்லஹேமிலிருந்து ஜெருசலேம் சென்றால் அரை மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.  ஆனால் போப் இஸ்ரேலியர்களைத் திருப்திப்படுத்த முதலில் டெல் அவிவ் சென்றார்.  அங்கிருந்து தன் பயணத்தைத் தொடர்ந்து ஜெருசலேம் சென்றார்.  போப் கான்கிரீட் தடுப்புச் சுவரில் தன் தலையை வைத்துப் பிரார்த்தனை செய்ததை அறிந்த இஸ்ரேல் அரசு உடனேயே தாங்களும் கஷ்டப்பட்டதாகப் போப்பிற்குத் தெரிவிக்க விரும்பி ஸயனிஸம் (யூதர்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்று முயன்று அதில் வெற்றி கண்ட இயக்கம்) தோன்றியதற்கு முக்கிய காரணமாக இருந்த தியோடர் ஹெர்ஸல் என்பவரின் கல்லறைக்குச் சென்று அங்கு மலர் வளையம் வைக்க ஏற்பாடு செய்தனர்.  இப்படி யூதர் ஒருவரின் கல்லறைகுச் சென்று மலர் வளையம் வைத்த முதல் போப் ஃபிரான்ஸிஸ்தான்.  இதே ஹெர்ஸல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், அதாவது நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ரோமில் அப்போதிருந்த போப்பைச் சந்தித்து தனி நாடு நிறுவப் பாடுபடும் அவருடைய முயற்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டபோது அந்த வேண்டுகோளை போப் நிராகரித்துவிட்டார்.  அதனால் இப்போது ஹெர்ஸல் கல்லறைக்கு போப் சென்றது யூதர்களுக்குப் பெரிய ஆதரவின் அடையாளமாகத் தெரிகிறது.  மேலும் யூதர்களின் பெயர்பெற்ற டேவிட் அரசரின் கல்லறை இருக்கும் இடம் என்று யூதர்களாலும் இயேசு கடைசியாகத் தன் சீடர்களோடு இரவு விருந்தை உண்டதாகக் கிறிஸ்தவர்களாலும் உரிமை கொண்டாடப்படும் ஸயன் மலைக்குன்றில் போப் பிரார்த்தனை நடத்தினார்.

    2000-த்தில் இரண்டாவது ஜான் பால் (John Paul II) முதல் முதலாக யூதர்களின் புண்ணிய இடமான மேற்குச் சுவருக்குப் போனபோது அவர் பெயரில் இஸ்ரேல் தபால்தலை வெளியிட்டது.  இப்போது போப் ஃப்ரான்ஸிஸ் கான்கிரீட் சுவரில் தலைவைத்துப் பிரார்த்தனை செய்ததற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் பொருட்டு அவர் பெயரில் தபால்தலை வெளியிடப் போவதாக பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் போப்பிடம் கூறினாராம்.

    சாதாரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்யும் போப்கள் அங்குள்ள நிலவரம் பற்றி எதுவும் வெளிப்படையாகச் சொல்வதில்லை.  ‘சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுப்பானேன்’ என்றுதான் அவர்கள் நினைப்பார்கள்.  ஆனால் போப் ஃப்ரான்ஸிஸ் அப்படியல்ல.  உலகில் சமத்துவமின்மை நிலவுவதைக் கண்டிக்கும் இவர் மத்திய கிழக்கிலும் அமைதி நிலவ வேண்டும், அப்படி ஏற்படும் அமைதி பாலஸ்தீனர்களுக்கு நியாயமான தீர்வு கிடைத்த பிறகு ஏற்படும் அமைதியாக இருக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

    போப் ஃப்ரான்ஸிஸ் எல்லா மதத்தினரையும் சந்தித்திருக்கிறார்.  ஜோர்டானுக்குச் சென்று அங்குள்ள முஸ்லீம் அரசரைப் புகழ்ந்திருக்கிறார்.  இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்ற இடமான செப்பல்கர் (Sepulcher) கோவிலில் பிரார்த்தனை புரிந்திருக்கிறார்.  யூதர்களின் புண்ணிய தலமான மேற்குச் சுவரில் தலையை வைத்துப் பிரார்த்தனை செய்திருக்கிறார்.  எந்த மதத்தையும் குறைத்துப் பேசவில்லை.  மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட வேண்டிய அவசியத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுதுரைத்திருக்கிறார்.

    எல்லா இடங்களிலும் போப் ஃப்ரான்ஸிஸ் பிரர்த்தனை செய்திருக்கிறார்.  இதற்கு மேலும் இஸ்ரேல் ஜனாதிபதி பெரெஸையும் பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸையும் வாடிகனில் உள்ள தன் அப்பார்ட்மென்டிற்கு பிரார்த்தனை செய்ய அழைத்திருக்கிறார்.  (போப்பிற்குரிய பெரிய பங்களாவில் இவர் வசிக்கவில்லை.  எளிய வாழ்க்கை நடத்தும் இவர் ஒரு அப்பார்ட்மென்டில்தான் வசிக்கிறார்.  பிரார்த்தனை மூலம் எதையும் சாதிக்கலாம் என்று நம்புகிறார்.  இந்தப் பிரார்த்தனை சமாதானப் பேச்சு போன்றதல்ல; இதனால் பெரிய விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்று பத்திரிக்கையாளர்களும் சில தலைவர்களும் கூறினாலும் சம்பந்தப்பட்டவர்கள் மனதில் இது ஒரு ஆக்கமுறையான (positive effect) எண்ணத்தைத் தோற்றுவிக்கும் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்.

    இந்துத்துவம் என்று பேயாக அலையும் ஆர்.எஸ்.எஸ். கட்சியைச் சேர்ந்த, புதிதாகப் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் மோடியின் மூலம் இந்தியா முழுவதும் இந்துத்துவத்தைப் பரப்பிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் போப் ஃப்ரான்ஸிஸைப் பின்பற்றுவார்களாக.

    பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீஃப் வேறு இடத்தில் வசிக்கும் தன் தாயை அடிக்கடி சென்று பார்த்து வருவாராம்.  தாயின் மேல் அவ்வளவு பாசமாம்.  மோடியின் தாயார் மோடிக்கு இனிப்பு வழங்குவதைப் பார்த்து நெகிழ்ந்து போனாராம்.  இவர்கள் இருவரும் போப் ஃப்ரான்ஸிஸின் செய்கைகளைக் கண்டு நெகிழ்ந்து போனால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பகைமையே ஏற்படாது.

     
     
     
     
    படம் உதவி:

    http://thinkprogress.org/world/2014/05/29/3442219/pope-francis-middle-east-prayer-summit-is-more-about-religion-less-about-politics/
    http://thinkprogress.org/wp-content/uploads/2014/05/AP661693373459.jpg

    Share
  • மோடி என்ற மோடி வித்தைக்காரர்

     

    — நாகேஸ்வரி அண்ணாமலை

    Modi_Obama__newsnextbd2005-இலிருந்து மனித உரிமைகளை மீறிய குற்றத்திற்காக அமெரிக்காவிற்கு வருவதற்கு மோடிக்கு விசா கொடுக்க அமெரிக்கா மறுத்துக்கொண்டிருந்தது. அவர் இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயித்து இந்தியப் பிரதமர் ஆகிவிடும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிய வந்ததும் ‘எல்லோரையும் போல் மோடியும் அமெரிக்காவுக்கு வருவதற்கு விண்ணப்பித்தால் அமெரிக்கா அதைப் பரிசீலனை செய்யும்’ என்று கூறியது. மோடியின் வெற்றி வாய்ப்புகள் கூடக் கூட மோடியோடு ஒத்துழைக்கத் தயார் என்று அமெரிக்கா கூறத் தொடங்கியது. தேர்தல் முடிவுகள் வந்ததும் மோடியை முதலில் வாழ்த்திய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இல்லையென்றாலும் மறு நாளே ஜனாதிபதி ஒபாமா மோடியை போனில் நேரில் அழைத்து வாழ்த்துக் கூறினார். அதோடு மோடியோடு சேர்ந்து இந்திய-அமெரிக்க நல்லுறவுக்குப் பாடுபடப் போவதாக வாக்களித்தார். இது போதாதென்று வெளியுறவு அமைச்சர் கெரி அமெரிக்காவுக்கு வருவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். கெரிக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்றும், மோடி எப்போது அமெரிக்கா வர முடியும் என்றும் கேட்டிருக்கிறார். அமெரிக்கா வருவதற்கு மோடி தேதி கொடுக்கும் முன் அவரே வந்து மோடியைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார் போலும்!

    இந்தியாவுக்கு உலக வல்லரசு நாடான அமெரிக்கா தேவை; அதே சமயம் அமெரிக்காவுக்கும் இந்தியா தேவை. ஆசியாவில் வலிமை பெற்றுவரும் சீனாவை கட்டுக்குள் வைக்க இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்குத் தேவைப்படலாம். இருந்தாலும் ஏன் இப்படி அவசரப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. 2002-இல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு நடந்த மாபாதகத்தை மோடி கண்டும் காணாதது போல் இருந்ததற்கு மனித உரிமைகளை மீறிய குற்றத்தை மோடி மீது சுமத்திய அமெரிக்கா இப்போது எந்தக் காரணத்தால் அவரை விழுந்து விழுந்து வரவேற்கிறது? அவர் செய்ததாக அமெரிக்கா அவர் மீது சுமத்திய குற்றங்கள் எல்லாம் என்னவாயிற்று? இந்தியாவில் மோடி மீது பல விசாரணைகள் நடந்து சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் அவர் நிரபராதி என்று தீர்மானிக்கப்பட்ட பிறகும் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்தது. அவர் இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் செய்ததாக அமெரிக்கா சாட்டிய குற்றங்கள் எல்லாம் இல்லையென்றாகி விடுமா?

    மோடி என்ற மோடி வித்தைக்காரர் தன்னுடைய இந்துத்துவ கொள்கைகளை எல்லாம் மூடிமறைத்துவிட்டு ‘வளர்ச்சியின்’ மூலம் இந்தியாவை இந்திரபுரியாக மாற்றிவிடுவேன் என்று கூறுவதை அப்பாவி இந்திய மக்கள்தான் அப்படியே நம்பி அவருக்குப் பெரும்பான்மை அளித்திருக்கிறார்கள். காங்கிரஸுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பி.ஜே.பி.க்கு இப்படி ஒரு பெரும்பான்மை கொடுக்க வேண்டுமா? பெரும்பான்மை கிடைத்துவிட்டதால் பி.ஜே.பி.யும் (மோடியும்) தங்கள் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள் இந்திய மக்கள்.

    மக்கள் மட்டுமல்ல, அவரை எப்படி எப்படியோ விமர்சித்த இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அவரை இப்போது புகழ்ந்து தள்ளுகிறார்கள். அவர் பின்னால் போகத் தயாராக இருக்கிறார்கள். அவர் நிழலில் வெயில்காய நினைக்கிறார்கள். இதெல்லாம் எதற்கு? அரசியல் ஆதாயத்தை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவா?

    இலங்கைத் தமிழர்களைக் கொன்றுகுவித்த இலங்கைப் பிரதமர் இராஜபக்சேயை மோடி தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் தமிழ் நாட்டுத் திராவிடக் கட்சிகள் திணறுவதைப் பார்த்தால் இவர்கள் மீது பரிதாபமாக இருக்கிறது. இந்தியாவை ஒரு இந்து நாடாக மோடி மாற்ற முயற்சித்தால் அப்போதும் இவர்கள் வாய்பொத்தி நிற்கத்தான் போகிறார்களா? பெரியார் படத்தையும் தங்கள் கட்சி விளம்பரங்களில் சேர்த்துக்கொள்ளும் இவர்கள் பெரியார் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த அவலம் நடப்பதற்கு யார் காரணம்? மோடி என்ற மோடி வித்தைக்காரரா? அல்லது நாட்டு மக்களின் நலன்களாவது, சுண்டைக்காயாவது, எங்களுக்கு எங்கள் நலன்கள்தான் முக்கியம் என்ற அளவிற்கு இறங்கிவிட்ட இந்த சுயநல அரசியல்வாதிகளா? இறைவா, இந்த அப்பாவி இந்திய மக்களை இந்த அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்று.

    படம் உதவி: http://newsnextbd.com/obama-congratulates-modi/

    Share
  • மோடியின் வெற்றி!!!

     

    — நாகேஸ்வரி அண்ணாமலை

     

    Lok Sabha elections 2014 resultsதேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன. பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. பா.ஜ.க. தலைவர் அத்வானி கூறியுள்ளது போல் பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸின் ஊழல்களும் சோனியா-ராகுல் தலைமையில் நடந்த குடும்ப ஆட்சியும் நாட்டின் பொருளாதார மந்தமும் பா.ஜ.க. வெற்றிக்குக் காரணம் என்றே வைத்துக்கொள்வோம். விபரம் போதாத தன் மகனைத் தலைமைப் பீடத்தில் அமர்த்த முயன்ற சோனியாவைப் பதவியிலிருந்து இறக்கிய இந்தத் தேர்தலின் முடிவை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும் மோடியின் வெற்றி இந்தியாவில் என்னென்ன விபரீதங்களை விளைவிக்குமோ என்பதை நினைக்கும்போது பயம் ஏற்படத்தான் செய்கிறது.

    சில நாட்களுக்கு முன் பத்திரிக்கையில் வந்த செய்தியின்படி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் நரேந்திர மோடி பிரதமராக வந்துவிடுவார் என்று நம்பி அவருக்கு மிகுந்த ஆதரவு அளிக்கத் தயாராகி வருகிறார்களாம். மோடிக்கும் அவருடைய சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸில் அபார ஈடுபாடு உண்டு. அவருடைய இந்த ஈடுபாட்டை முழுவதுமாகப் பயன்படுத்தி நாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக இந்திய முஸ்லீம்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகளை நீக்கும் சட்டங்களையும் காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து அளிக்கும் சட்டத்தையும் அரசியல் சாசனத்திலிருந்து நீக்குவதோடு பாடப் புத்தகங்களில் இந்துக் கடவுள்களைப் பற்றி அவர்கள் நினைப்பதற்கு மாறாகக் கூறப்பட்டிருக்கும் விஷயங்களையும் முஸ்லீம் அரசர் அக்பரை அதிகமாகப் புகழ்ந்திருக்கும் பகுதிகளையும் மாற்றி எழுதுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி அதற்காகத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

    saiaustralia.orgஅரசியல் அதிகாரம் அவர்களுக்கு முக்கியம் அல்லவென்றும் இந்தியக் கலாச்சாரம்தான் உலகிலேயே சிறந்த கலாச்சாரம் என்றும் ஆரிய இனம்தான் மனித இனங்களிலேயே பெரிய இனம் என்றும் அகில உலகத்தையும் ஆரிய கலாச்சாரத்திற்கு மாற்றுவதே தங்கள் இலக்கு என்ரும் ஆர்.எஸ்.எஸ்சைச் சேர்ந்த ஒரு தலைவர் பேசியிருக்கிறார். இந்த இலக்குகளை அடைய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மோடி உதவுவார் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சமீபத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமெரிக்கப் பேராசிரியர் வெண்டி டோனிகெரின் (Wendy Doniger) புத்தகத்தை (The Hindus: An Alternative History) மேலைநாடுகளின் அச்சகங்களிலிருந்தும் தடைசெய்யப் போகிறார்களாம்! என்ன மடமை! எல்லாவற்றுக்கும் மேலாக ராமஜென்ம பூமியில் ராமர் கோவிலைக் கட்டியே தீரப் போகிறார்களாம்.

    பா.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆர்.எஸ்.எஸ். செய்ய விரும்புவதை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததின் மூலம் சாதித்துக்கொள்ளலாம் என்று ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பே ஆர்.எஸ்.எஸ். செய்ய விரும்புவதை பா.ஜ.க. செய்யப் போவதாக தேர்தல் அறிக்கையில் கூறினால் தங்கள் வெற்றி வாய்ப்பு குறையலாம் என்று நினைத்த பா.ஜ.க. தலைவர்கள் அந்த மாதிரி விஷயங்களை ஒரு மூலையில் சேர்த்தார்களாம்.

    மோடி தன் தேர்தல் பிரச்சாரங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. குஜராத்தை எப்படி பொருளாதாரத்தில் முன்னேற்றினார் என்றும் அது மாதிரி இந்தியாவையும் முன்னேற்றிவிடுவார் என்றும் அதற்குரிய தன்னுடைய திட்டங்கள் பற்றியும் மட்டும் கூறியதோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் போகப் போக இந்திய நாட்டை ஒரு இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற இவருடைய உள்நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்களை நிறைவேற்றத் தயங்க மாட்டர் என்று சிலர் பயப்படுக்கிறார்கள். அதிலும் இப்போது பா.ஜக.வுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்திருப்பதால் மோடியால் ஆர்.எஸ்.எஸ்ஸின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்.

    மோடி தேர்தல் பிரச்சாரங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகில் வளர்ந்துவிட்ட நாடுகளுக்குச் சமமாக உயர்த்தப் போவதாக வாக்களித்திருக்கிறார். அப்படி அவர் முயன்று பொருளாதாரம் முன்னேற்றம் கண்டாலும் அமெரிக்காவில் போல் ஏழை பணக்காரர்களுக்கு இடையே பெரிய பிளவு ஏற்பட்டு சமூகத்தில் சமத்துவமின்மை தோன்றலாம். இதுவும் சமூகத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கலாம். ஆனால் இதை விடப் பெரிய ஆபத்து அவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்களை நிறைவேற்றினால் ஏற்படலாம். பெரும்பான்மை இந்துக்கள் வாழும் நாடு என்றாலும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற, பல இனங்கள் வாழும், பல மொழிகள் பேசப்படும், பல கலாச்சாரங்கள் நிறைந்த நாடு என்ற நற்பெயரை இழக்க நேரிடலாம். இந்த நிலை இந்தியாவுக்கு ஏற்படாமல் காக்கும் பொறுப்பு மோடிக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் அதற்கேற்றாற் போல் நாட்டை நடத்திச் செல்வார் என்று நம்புவோம்.

    படம் உதவி:  http://victoria.saiaustralia.org.au/bulletin/samadhi-13.pdf, http://victoria.saiaustralia.org.au/

    Share
  • இன்னுமா இன துவேஷம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் ஆப்பிரிக்காவிலிருந்து அப்பாவி ஆப்பிரிக்கர்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாகக் கூடிவந்து அடிமைகளாக்கி ஆடு, மாடுகள் போல் நடத்தி அவர்கள் உழைப்பை உறிஞ்சி நாட்டை வளப்படுத்தியதெல்லாம் ரொம்ப, ரொம்பப் பழங்கதை என்று நினைத்திருந்தோம்.  இப்போது இன்னும் சில அமெரிக்கர்களுக்கு ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் மேல் வன்மம் இருக்கும் போலும் என்று நினைப்பதற்கு ஏதுவாக அவர்களைப் பற்றி ஒரு பெரிய கால்நடைப் பண்ணையின் அதிபர் கூறியிருக்கிறார்.  இவர் யார் என்று நினைக்கிறீர்கள்?  அரசுக்குச் சொந்தமான நிலத்தில் தன் ஐநூறு கால்நடைகளை மேயவிட்டுக்கொண்டிருக்கிறார்.  அதைத்தட்டிக் கேட்ட அரசு ஊழியர்களோடு சண்டை போட்டு வருகிறார்.

    பதினான்கு குழந்தைகளுக்குத் தந்தையான இந்தப் பண்ணை அதிபர் நெவாடாவில் ஒரு பெரிய பண்ணைக்குச் சொந்தக்காரர்.  நெவாடா மாநிலத்தில் உள்ள மொத்த பண்ணைகளின் எண்ணிக்கை 3000. இவற்றின் பரப்பளவு 63,00,000 ஏக்கர்கள்.  ஒவ்வொன்றின் சராசரி அளவு 2100 ஏக்கர்கள்.  இவருடைய மூதாதையர்கள் 1870-களில் இந்தப் பண்ணையை ஆரம்பித்திருக்கிறார்கள்.  இத்தனை பெரிய பண்ணைக்குச் சொந்தக்காரர் தன்னுடைய பண்ணை மாடுகளை அரசுக்குச் சொந்தமான இடத்தில் மேயவிட்டிருக்கிறார்.  அரசு நிலத்தில் உள்ள, அழிந்துவரும் காட்டு ஆமைகளைக் காப்பாற்றுவதற்காக கால்நடைகள் மேயும் நிலத்தைச் சுருக்கிக்கொள்ளுமாறு அரசு நில மேலாண்மைத் துறை இவரைக் கேட்டுக்கொண்டபோது அரசு நிலத்தை கால்நடைகள் மேய்ச்சலுக்காக உபயோகிப்பதற்காக அரசுக்குச் செலுத்திவந்த பணத்தை நிறுத்திவிட்டார்.  இப்போது இவர் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை பத்து லட்சம் டாலர்கள்.

    அரசுத் துறை அதிகாரிகள் இவர் பண்ணைக்கு வந்தபோது இவருடைய ஆதரவாளர்கள் பலர் துப்பாக்கிகளோடு இவருக்கு ஆதரவு தர வந்திருந்தனர்.  அரசு அதிகாரிகள் எதற்கு வீண் வம்பு என்று திரும்பிச் சென்றுவிட்டார்கள்.  அரசு ஆணை மூலமும் நீதிமன்றங்கள் மூலமும் இந்தப் பண்ணைக்காரரை வழிக்குக் கொண்டுவர முடிவுசெய்தனர்.

    இந்தப் பண்ணைக்காரருக்கு ஆயிரக் கணக்கில் ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.  இவர்கள் எல்லோருக்கும் மத்திய அரசு தங்கள் உரிமைகளில் அதிகமாகத் தலையிடுவதாக குறை உண்டு.  இப்போது நில மேலாண்மைத் துறை இந்தப் பண்ணையாரிடம் வரம்புக்கு மேல் நடந்துகொள்வதாக நினைத்து இவருக்கு ஆதரவு தருகின்றனர்.  பல மாநிலங்களிலிருந்து பலர் இவருக்கு ஆதரவு தர வந்திருக்கிறார்கள்.

    இவர் வாரம் ஒரு முறை கூட்டம் நடத்தி எப்படி மத்திய அரசு வரம்பு மீறி மக்களிடம் நடந்துகொள்கிறது என்று கூறி வருகிறாராம்.  அந்தக் கட்டத்தில் அமெரிக்கக் கருப்பர்களுக்கு மத்திய அரசு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுத்ததன் மூலம் அவர்களுடைய வாழ்வு அப்படி ஒன்றும் மேம்பாடு அடைந்திருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.  அவர்களை நீக்ரோ என்ற பெயரிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.  இப்போது கருப்பர்களை இப்படி யாரும் நீக்ரோ என்று அழைப்பதில்லை.  அவர்கள் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்குச் செய்வதற்கு ஏதாவது வேலை இருந்ததாம்.  பெண்கள் கருச்சிதைவு செய்துகொள்ளவில்லையாம்.  அவர்களுடைய இளைஞர்கள் சிறைக்குப் போகவில்லையாம்.  இப்போது கருப்பர்களில் நிறைய இளைஞர்கள் குற்றம் புரிந்துவிட்டு சிறையில் இருக்கிறார்களாம்.  இந்தக் குடும்பங்கள் அரசின் நலத்திட்டங்களின் மூலம் வரும் பணத்தில் வாழ்ந்துகொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்களாம்.  இப்படிப் பேசுவதற்கு இவருக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்.

    2016-இல் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்புள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனெட்டர் ரேண்ட் பால் இவருடைய மத்திய அரசின் தலையீடு பற்றிய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியிருக்கிறார்.  இவர் மத்திய அரசின் தலையீடு பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.  குடிமக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீடு மிகக் குறைந்த அளவே இருக்க வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவர் ரேண்ட் பால்.  ஆனால் நல்ல வேளையாக கருப்பர்கள் அடிமைகளாக இருந்தபோது இப்போது இருப்பதை விட நன்றாக இருந்தார்கள் என்ற பண்ணைக்காரரின் கருத்தை ஒப்புக்கொள்ளாதது மட்டுமின்றி தான் அதை தீவிரமாக மறுப்பதாகக் கூறியிருக்கிறார்.  இந்தப் பண்ணையாரைப் பற்றி அடிக்கடி செய்தி வெளியிடும் ஃபாக்ஸ் செய்தி நிறுவனமும் பண்ணையார் சொன்னது தங்களுக்கு ஒப்பவில்லை என்று கூறியிருக்கிறது.  குடியரசுக் கட்சியின் தலைமையகமும் பண்ணைக்காரர் சொன்னது நூறு சதவிகிதம் தவறு, கருப்பர்களைப் புண்படுத்தக் கூடியது என்று கூறியிருக்கிறது.  செனட்டில் பெரும்பான்மை கட்சித் தலைவரான ரீட் இவரையும் இவரது ஆதரவாளர்களையும் உள்நாட்டுப் பயங்கரவாதிகள் என்று வர்ணித்திருக்கிறார்.

    இத்தனை பேர் இவரை விமர்சித்தும் கண்டித்தும் இருக்கும் நிலையிலும் இவருக்கு எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இருப்பதாகத் தெரியவில்லை.  கருப்பர்கள் பற்றிச் சொன்னதை திரும்பக் கூறியிருக்கிறார்.  அமெரிக்காவில் பேச்சுரிமை இந்த அளவிற்குஇருக்கிறது.

    இந்தப் பண்ணைக்காரரிடம் முன்பொரு முறை மோத வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான ஒரு அரசு அதிகாரி, இப்போது அரசு அதிகாரிகள் இந்தப் பண்ணைக்காரர் விஷயத்தில் பின்வாங்கியதைக் கண்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.  “இந்தப் பண்ணைக்காரர் தனக்கு நாட்டுப்பற்று உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்.  அமெரிக்காவை நேசிப்பவர் என்கிறார்.  ஆனால் அதே சமயம் மத்திய அரசின் சட்டங்களை மதிக்க மாட்டேன் என்கிறார்.  இவரை இப்படியே விட்டுவிட்டால் இவரைப் பார்த்து மற்றவர்களும் ‘அவர் சட்டத்தை மதிக்காதபோது நாங்கள் மட்டும் ஏன்  மதிக்க வேண்டும்’ என்று கேட்க மாட்டார்களா?” என்கிறார்.

    சில வாரங்களுக்கு முன்னால் வெள்ளை இன உயர்வுவாதிகள் (White supremacists) கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வெள்ளையன் யூதர்களின் முதியோர் இல்லத்தின் அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று அப்பாவிகள் – யூதரல்லதோர் – கொல்லப்பட்டனர்.  கருப்பர்களின் மேலும் இவனுக்கு வெறுப்பு அதிகம்.

    அமெரிக்காவில் ஒரு இனத்தையோ அல்லது ஒரு மதத்தினரையோ குறிவைத்துத் தாக்குவதை வெறிப்பினால் விளையும் குற்றம் (hate crimes)  என்கிறார்கள்.  2000-ஆம் ஆண்டில் 936-ஆக இருந்த இம்மாதிரியான குற்றங்கள் இப்போது 50 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறதாம்.  ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு கருப்பர்களுக்கு எதிரான இம்மாதிரியான குற்றங்கள் கூடியிருக்கின்றனவாம்.  வெள்ளை இனம்தான் உயர்ந்தது, அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்தான் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை உடையவர்கள் பலர் அமெரிக்காவில் இன்னும் இருக்கிறார்கள்.  சமீப காலத்தில் அமெரிக்காவில் குடியேறியவர்களை விட்டுவிடுங்கள்.  முன்னூறு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்துவரும், அதில் பாதி நாட்கள் அடிமைகளாக வாழ்ந்த, அதன் பிறகும் வெள்ளையர்களோடு சம குடிமையுரிமைகள் இல்லாமல் வாழ்ந்த, இந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பான்மை வகித்த கருப்பர்களைப் பற்றி அவர்கள் அடிமைகளாக வாழ்ந்தபோது இப்போது இருப்பதை விட சந்தோஷமாக இருந்தார்கள் என்று சொல்வதற்கு எப்படிப்பட்ட அரக்க குணம் வேண்டும்.  உலக நாடுகளிலேயே பல விதங்களில் சிறந்து விளங்கும் அமெரிக்காவுக்கு இது பெரிய வெட்கக்கேடு.

    Share