–நாகேஸ்வரி அண்ணாமலை.

getty imageகாஸா தீப்பற்றி எரிகிறது.  இஸ்ரேல் அரசு தொடர்ந்து குண்டுமழை பொழிகிறது.  இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க மோடி அரசு விரும்பவில்லை.  ஏதாவது ஒரு பக்கம் சாயப் போய் அதன் பலன்களை அனுபவிக்க இந்தியா தயாராகயில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.  என்னதான் இந்திய நலன்கள் பாதிக்கப்படும் என்றாலும் கண் முன்னே ஒரு அநியாயம் நடந்துகொண்டிருக்கும்போது அதைத் தட்டிக் கேட்காமல் இருப்பது இந்தியாவுக்கு அழகல்ல.

பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் தொடர்ந்து அநீதி இழைத்துக்கொண்டிருக்கிறது.  பாலஸ்தீனத்தில் பல நூறு ஆண்டுகளாக முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கி.பி. 132-இல் யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறிய பிறகு அங்கேயே தங்கிவிட்ட ஒரு சில யூதர்களும் தங்களுக்குள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவின் பல நாடுகளிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடியேற ஆரம்பித்த பிறகு இந்த நிலை மாறத் தொடங்கியது.  வெளியிலிருந்து யூதர்கள் வருவதை பாலஸ்தீனத்திலேயே வாழ்ந்த யூதர்களும் விரும்பவில்லை.  இருந்தாலும் அதுவரை இல்லாத, தங்களுடைய புண்ணிய பூமி என்று யூதர்கள் கருதிய பாலஸ்தீனத்தில் குடியேற வேண்டும் என்ற பல நாடுகளிலும் வாழ்ந்த யூதர்களின் வெறியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.  எத்தனையோ தடைகள் இருந்தும் அவற்றையெல்லாம் மீறி யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறிக்கொண்டிருந்தனர்.  அங்கேயே காலங்காலமாக வாழ்ந்துவந்த அரேபியர்களின் – இவர்களில் பாலஸ்தீன முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சேர்த்தி – நிலங்களை வாங்கி அங்கு விவசாயக் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர்.  அந்த நிலங்கள் திரும்பவும் பாலஸ்தீனர்களுக்கு விற்கபபடாமல் பார்த்துக்கொண்டனர்.  அந்த நிலங்களில் பாடுபட யூத வேலையாட்களையே நியமித்தனர்.  தங்களுடன் வெளியிலிருந்து கொண்டுவந்த பணபலத்தாலும் தொழில்நுட்பத்தாலும் தொழிற்சாலைகளை அமைத்துக்கொண்டனர்; கல்வி ஸ்தாபனங்களை ஏற்படுத்திக்கொண்டனர்.  மேலும் மேலும் பல யூதர்களை பாலஸ்தீனத்திற்குள் வரவழைத்து யூதர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டிருந்தனர்.  யூதர்களின் வரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை உணர்ந்த அரேபியர்களுக்கு யூதர்கள் மேல் கோபம் ஏற்பட்டது.  இது நியாயம்தானே?

அப்போது பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகையில் இருந்தது.  அங்கு வாழ்ந்துவந்த அரேபியர்களின் சம்மதத்தைப் பெறாமலே பிரிட்டன் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தனி நாடு அமைக்க உதவுவதாக ஒரு அறிக்கை மூலம் வாக்குறுதி அளித்தது.  அரேபியர்களின் அனுமதி இல்லாமலேயே பாலஸ்தீனத்திற்குள் தொடர்ந்து யூதர்கள் குடியேறியது அரேபியர்களுக்கு எதிரான முதல் அநீதி என்றால் பிரிட்டன் அங்கு தனி நாடு அமைக்க உதவுவதாக வாக்களித்தது இரண்டாவது அநீதி.  இந்த இரண்டு அநீதிகளையும் எதிர்த்துப் பாலஸ்தீனர்கள் போராடினாலும் பலன் எதுவும் கிடைக்கவில்லை.  யூதர்கள் தங்களுக்கு இழைத்துவரும் கொடுமைகளைக் கண்டிக்க அவர்களின் இடங்களை பாலஸ்தீனர்கள் தாக்கினால் யூதர்கள் தங்கள் பாதுகாப்புக்காக அமைத்துக்கொண்ட படைபலத்தால் அரேபியர்களைத் திருப்பித் தாக்கினர்.

இப்படி வெளியிலிருந்து வந்து குடியேறிய யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே சச்சரவுகள் நடந்துகொண்டிருக்கும்போதே இந்தச் சச்சரவுகளுக்குத் தீர்வு காணப் பாலஸ்தீனத்தை அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே பிரிப்பது என்று பிரிட்டன் செய்த முடிவு அரேபியர்களுக்கு எதிராகச் செய்த மூன்றாவது அநீதி.  மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனர்ளுக்குப் பாலஸ்தீனத்தின் பாதிக்கும் குறைவான பகுதியையும் வெளியிலிருந்து வந்த யூதர்களுக்கு பாலஸ்தீனத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியையும் கொடுப்பதாக ஐ.நா. முடிவு செய்தது பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட நான்காவது அநீதி.

தங்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட இடங்களை இஸ்ரேல் எனற் நாடாக அவசர அவசரமாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட யூதர்கள் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களையும் தங்கள் படைபலத்தால் பிடித்துக்கொண்டது ஐந்தாவது அநீதி.  இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் குடியிருப்புகளை நிறுவி அங்கு யூதர்களைக் குடியேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  அப்படி அங்கு குடியேற்றப்பட்டவர்கள் அவர்களுக்கு அருகில் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்குக் கொடுமைகள் இழைத்து வருகிறார்கள்.  இது ஆறாவது அநீதி.  இன்னும் பல அநீதிகளை இழைத்து வருகிறார்கள்.

உலக வல்லரசான அமெரிக்கா இஸ்ரேலுக்கு எல்லா வழிகளிலும் இந்த அநீதிகள் தொடர உதவி வருகிறது.  இத்தனை அநீதிகளையும் எதிர்த்துச் சில நாடுகள் பாலஸ்தீனர்களுக்கு உதவ முன்வந்தாலும் அவை எல்லாம் பலவீனமானவை.  அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது.  இதனால் ஆதரவற்ற அனாதைக் குழந்தை போல் இருக்கும் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களைத் தாக்க முயற்சிக்கிறார்கள்.  ஆனால் இஸ்ரேலோ பாலஸ்தீனர்கள் ஒரு அடி அடித்தால் திரும்பப் பத்து அடி கொடுக்கிறது.  இப்போது பாருங்கள்.  மூன்று யூதப் பையன்களைக் கடத்திக்கொண்டு போய்க் கொன்றவர்கள் ஹமாஸ் என்ற தீவிரவாதக் கட்சி என்று இஸ்ரேலாக முடிவுசெய்து காஸாவின் மேல் குண்டு மழை பொழிந்து 265 பாலஸ்தீனர்களைக் கொன்றிருக்கிறது; ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியிருக்கிறது.

பாலஸ்தீனர்களுக்கு எதிராக மேலே குறிப்பிட்ட அநீதிகளோடு இஸ்ரேல் தொடர்ந்து அநீதி இழைத்துக்கொண்டே போகிறது.  இதை ஏன் நம் இந்திய அரசு தட்டிக் கேட்கவில்லை?  1938-லேயே காந்திஜி தன் ஹரிஜன் பத்திரிக்கையில் யூதர்கள் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேறுவதைக் கண்டித்திருக்கிறார்.  அதன் பிறகு எத்தனையோ அநீதிகள் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கின்றன.  இதைக் கண்டிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு இல்லையா?  2002-இல் இந்துக்கள் முஸ்லீம்களை சித்திரவதை செய்வதைக் கண்டும் காணாதது போல் இருந்த மோடி இப்போதும் இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களாகிய முஸ்லீம்களைப் பல இன்னல்களுக்கு ஆளாக்குவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க விரும்புகிறாரா?  தவறு செய்யாதது மட்டுமல்ல, தவறைக் கண்டிக்காமல் இருந்து தவறுக்குத் துணைபோவதும் தவறல்லவா?  இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு அமைக்கப் போவதாகக் கூறும் ஒரு அரசு தார்மீகத்தின் அடிப்படை நியதியையே மீறலாமா?

பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளை விபரமாக அடையாளம் வெளியிடவிருக்கும் என்னுடைய நூலில் காணலாம்.

படம் உதவிக்கு நன்றி: Thomas Coex/Agence France-Presse/Getty Images

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *