இந்திய அரசியலில் தனி நபர் துதி
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்கா என்ற நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து அங்கு இரண்டே இரண்டு அரசியல் கட்சிகள்தான். அமெரிக்க அரசியல் முறை முன்னூறு ஆண்டுகளாகக் காலத்தை வென்று இன்னும் அதே வ்லுவோடு விளங்கிவருவதால் அது ஒரு சிறந்த அரசியல் அமைப்பு என்று கொள்ளலாம். அரசியல் அமைப்பு மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் அன்றிலிருந்து இன்றுவரை இரண்டுதான். அந்த இரண்டு கட்சிகளுக்கும் தலைவர்கள் உண்டு. ஆனால் அவர்கள்தான் ஜனாதிபதியாக வருவார்கள் என்ற கட்டாயமில்லை. சொல்லப் போனால் கட்சித் தலைவர் யாரும் ஜனாதிபதியாக வந்ததாக ஞாபகம் இல்லை. அதற்கு மேலாக அவர்கள் சொல்வதைத்தான் கட்சியைச் சேர்ந்தவர்கள் கேட்க வேண்டுமென்பதில்லை. ஜனநாயகக் கட்சியில் பெரும்பாலோர் இடதுசாரிக் கொள்கை உடையவர்களாவும் குடியரசுக் கட்சியில் உள்ளவர்கள் வலதுசாரிக் கொள்கை உடையவக்ர்ளாகவும் இருப்பார்கள் என்பது சாதாரணக் கணிப்பு. ஆனால் அவர்கள் எல்லோரும் எல்லா விஷயத்திலும் இடதுசாரிகளாகவும் வலதுசாரிகளாகவும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பிரச்சினை என்று வந்துவிட்டால் எல்லா ஜனநாயக்க் கட்சிக்காரர்களும் ஒரே மாதிரியாக ஓட்டுப் போடுவார்கள் என்று சொல்ல முடியாது. இரண்டு சபைகளிலும் ஏதாவது ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் தங்கள் தங்கள் தனிப்பட்ட கொள்கைக்கேற்ப இரண்டு கட்சிக்காரர்களும் ஓட்டுப் போடுவார்கள்.
கட்சித் தலைவர் சொல்வதையோ ஜனாதிபதி சொல்வதையோ கேட்டு நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஜனாதிபதி தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் செய்யும் எதையும் ‘ஆஹா, ஓஹோ’ என்ரு புகழ வேண்டியதில்லை. அமெரிக்க ராணுவத்தின் ஒரு சிறப்புப் பிரிவு ஜனாதிபதி ஒபாமாவின் கட்டளையை மேற்கொண்டு வெகு காலமாக அமெரிக்கா தேடிக்கொண்டிருந்த ஒசாமா பின் லேடனை அவன் இருக்கும் இடத்திலேயே சூழ்ந்துகொண்டு கொன்றதை அவர் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் யாரும் பெரிதாகப் பேசவில்லை. ஒபாமாவைத் தலையில் வைத்துக்கொண்டு யாரும் புகழ் மாரி பொழியவில்லை.
இந்தியாவில் எல்லாம் இதற்கு நேர் மாறாக இருக்கிறது. தேசிய அளவில் உள்ள கட்சிகளானாலும் சரி மாநில அளவில் உள்ள கட்சிகளானாலும் சரி கட்சித் தலைவர் சொல்வதை எல்லோரும் கேட்டாக வேண்டும். காங்கிரஸைப் பொறுத்தவரை சோனியா காந்தி சொல்வதுதான் எல்லோருக்கும் வேதவாக்கு. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுமாசமாகத் தோல்வியுற்றாலும் இன்னும் சோனியாவின் அறிவுரைகளைத்தான் கேட்க நினைக்கிறார்கள். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதிலும் அவரை சோனியா பின்னால் இருந்து ஆட்டி வைத்தார் என்பதோ தன் மகன் ராகுலை அடுத்த பிரதமராக்க முயன்றார் என்பதோ காங்கிரஸின் படுதோல்விக்குக் காரணம் என்று சொல்ல எந்தக் காங்கிரஸ் தலைவர்களும் முன்வரவில்லை. காங்கிரஸ் தோல்விக்கு யார் காரணம் அல்லது எது காரணம் என்று ஆராய அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவர் ஏ.கே. அந்தோணி காங்கிரஸ் வேட்பாளர்கள் உற்சாகமாகத் தேர்தலில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் மோதியின் தீவிரத் தேர்தல் பிரச்சாரமும்தான் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். காங்கிரஸின் தோல்வியில் ராகுலின் பங்கு என்ன என்று கேட்டபோது ராகுலுக்கும் காங்கிரஸின் தோல்விக்கும் எந்த சம்பந்தமும் என்று கூறியிருக்கிறார். இவர் கூட இப்படிப் பேசுவதற்கு நம் அரசியல் கலாச்சாரம்தான் காரணம்.
மோதி பதவிக்கு வந்த பிறகு அவர் மட்டுமல்ல அவருடைய கட்சிக்காரர்களும் எல்லாமே அவர்தான் என்பது போல் நடந்துகொள்கிறார்கள். அவரை அதிகமாகப் புகழ்வதும் அவருடைய ஆணைகளைத் தலைமே தாங்கி நடப்பதுவும் அவருடைய கட்சிக்காரர்களின் செயலாக இருக்கிறது. அவர் செய்யும் எல்லா முடிவுகளுமே சரியான முடிவுகள் போல் பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டுக் கட்சிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தி.மு.க. கட்சியில் தலைவர் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் எது பற்றியும் எந்த விதக் கருத்தும் இருப்பதாகத் தெரியவில்லை அடுத்து அ.தி.மு.க. நேற்று மதுரையில் நடந்த முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரித்ததில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டாட திண்டுக்கல். உட்பட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த் விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த் விழாவில் எல்லாம் அம்மா மயம். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பார்கள். அது போல் இந்த மாநாட்டில் அம்மாவைத் தெய்வமாகவே ஆக்கி எல்லாப் புகழையும் அவருக்கே காணிக்கை ஆக்கினார்கள்.
இது என்ன தனி மனித துதி? இதுதான் இந்திய ஜனநாயகமா? என் தாய்த்திருநாடே உன்னை யார் இந்த ஆட்டுமந்தைக் கலாச்சாரத்திலிருந்து காப்பாற்றப் போகிறார்கள்?
