கே.ரவி

கடவுள் நம்பிக்கை பற்றி கேட்டதற்குத் தர்க்கம் பற்றி ஒரு பேருரையாற்றிவிட்டுக் குரல் தழுதழுக்க ஒரு கவிதை சொல்லிப் போன பகுதியை முடித்து விட்டேனோ? தர்க்கத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா? உண்டு, இல்லை. இது என்னப்பா பதில்?

கவிஞர் கண்ணதாசனே பாடவில்லையா: “உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை”.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் தம் காவியத்தில் ஒரு புதுமை செய்தார். காவியத்தின் நுழைவாசலில் மட்டும் கடவுள் வாழ்த்துப் பாடி முடிக்காமல், காவியத்தின் ஒவ்வொரு காண்டத்துக்கும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடினார். பாரதி கம்பரை ஆழ்ந்து கற்றவன். அதனால் அவனும் ‘பாஞ்சாலி சபதம்’ காவியம் படைத்த போது, அதன் ஒவ்வொரு சருக்கத்துக்கும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் வைத்தான்.

கண்ணதாசனும் கம்பரை நன்கு கற்றுத் தோய்ந்தவர். கம்பர் பாடிய ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல்தான் கண்ணதாசனின் மேற்சொன்ன வரிகளுக்கு உள்ளூக்கம் தந்திருக்க முடியும். கம்பர் பாட்டைப் பார்ப்போம்:

ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்

அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்

இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்

நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

எப்படியோ தர்க்கத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு என்று தர்க்க ரீதியாக நிறுவி விட்டேன். சரிதானே?

தர்க்கத்தால் கடவுள் இருப்பை நிறுவவே முடியாது என்ற தீர்மானத்தைத் தர்க்கத்தால் நிறுவியவன் ஜெர்மானிய தத்துவ மேதை, இமானுவெல் கன்ட்.

கவிச்சக்கரவர்த்தியின் முதல் கடவுள் வாழ்த்துப் பாடலின் அர்த்தப் பொதிவு, இமானுவெல் கன்டைப் படித்துணர்ந்த பிறகே, எனக்கு மெல்லப் புரியத் தொடங்கியது:

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

kambarஅதாவது, இந்த உலகத்தை ஒருவன் படைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அது தானாகவே இருப்பது. தானே தோன்றி, விரிந்து, வளர்ந்து கொண்டிருக்கிறது. பிக்பேங் (Big Bang) எனப்படும் ஒரு புள்ளி வெடிப்பில் சிதறுண்டு, விரிந்து கொண்டே இருக்கும் புதிர் அது. இப்படியெல்லாம் விஞ்ஞானம் பேசுகிறது. அந்தப் பகுத்தறிவுக் குழந்தையின் மழலைப் பேச்சின்படி இந்த உலகெலாம் தாமே, அதாவது, படைத்தவன், காப்பவன் என்பதாக யாரும் தேவைப்படாமல் தாமே இருக்கின்றன என்று நம்மை நினைக்க வைக்கும் வகையில் இந்த உலகெலாம் ஆக்கி, அவை தாமாகவே விரிந்து வளரச் செய்து, அவற்றை நீக்கி, இப்படியாக ஓர் ஓயாத விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் அவர் தலைவர். இதைத்தானே கம்பன் சொல்கிறான்.

அப்பொழுது இவ்வளவுதான் புரிந்து கொண்டேன். ‘தாமுளவாக்கல்’ என்பதற்குள்ள வேறு பரிமாணங்கள் பற்றியும், ‘நிலைபெறுத்தலும்’ என்ற சொற்றொடரில் ‘று” என்ற வல்லின எழுத்து உள்ளது பற்றியும், ‘அலகிலா’ எந்ற சொல்லின் அடர்ந்த கருத்துச் செறிவு பற்றியும் அப்பொழுது நான் ஆய்வு செய்து பார்க்கவில்லை. அதை இங்கே இப்போது விவரிக்க இடமில்லை. அப்போது இந்த அளவாவது கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடலை எனக்குப் புரிய வைத்தவன் மேற்சொன்ன ஜெர்மானிய தத்துவ மேதைதான்.

ஒருநாள், மயிலை கபாலி கோயில் எதிரில் உள்ள ஒரு மண்டபத்தில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.A.sa கூர்மையான பார்வையோடும், கணீரென்ற குரலோடும் தாடிக்காரர் ஒருவர் அந்தச் சொற்பொழிவில் கம்பனின் மேற்சொன்ன கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றைப் பற்றி ஒன்றரை மணி நேரம் பேசினார். மெய்மறந்து அமர்ந்திருந்தேன். அப்போதுதான், இமானுவெல் கன்ட் எனக்குப் புரிய வைத்ததையும் கடந்த, ஆழ்ந்த பொருள் அந்தப் பாடலில் பொதிந்திருப்பதை உணர்ந்தேன். அந்தத் தாடிக்காரர்தான், ‘இலக்கியக் கலை’ என்ற அருமையான நூலின் மூலம் என் இலக்கிய ரசனையை நெறிப்படுத்திய மேதை அமரர் அ.ச. ஞானசம்பந்தம். அதற்குப் பிறகு இரண்டு முறை அவர் வீட்டுக்குச் சென்று கம்பராமாயணத்திலும், பெரியபுராணத்திலும் நான் சில விளக்கங்கள் கேட்ட போது நேரம் ஒதுக்கி அவர் அன்புடன் எனக்குப் பாடம் சொன்னதை என்னால் மறக்க முடியாது.

இவ்வளவுக்குப் பிறகும், அனுபவ ரீதியாகக் கடவுள் நம்பிக்கை என்னைப் பற்றவில்லை.

நான் 1981-ல் மதுரைக்குப் போய் ரமணனைச் சந்தித்தேன். அவனிடம் ‘ஸ்பரிசம்’ படத்துக்கு ஒரு காதல் பாடல் தரச் சொல்லிக் கேட்டேன். அவனும் தந்தான். அந்தப் பாடலைப் பிறகு, தீபன் சக்கரவர்த்தியும், எஸ்.பி.ஷைலஜாவும் பாட நான் இசையமைத்துப் பதிவு செய்து, அந்தப் பாடல் காட்சியும் படத்தில் இடம்பெற்றது. அந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

[அந்தப் பாடலை நீங்களும் கேட்டு மகிழச் சொடுக்கவும்:

http://www.inbaminge.com/t/s/Sparisam/Aayiram%20Malargal%20Paniyil.eng.html]

[எஸ்.வி.சேகரும், ஶ்ரீலட்சுமியும் ஆடிப்பாடும் காட்சியைக் கண்டும், பாடலைக் கேட்டும் மகிழச் சொடுக்கவும்: https://www.youtube.com/watch?v=ntAyp79sYVU]

ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து

ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து

பாவையென் மனதில் நுழைந்து தவழ்ந்து

மேனியில் ஆயிரம் மின்னலை வெள்ளம் அம்மோய் … ஸ்பரிசம்

 

மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ

கனவில் பவனி வரும் – கண்கள்

கார்த்திகை தீபங்களோ

காலக் கதவினை மெல்லத் திறந்து

கடந்த பாதையை மறந்து – இந்தக்

கணத்தில் நாம் பிறந்து வளர்ந்து

தவழ்ந்தோம் … ஸ்பரிசம்

 

வைரப் படைக்கெலாம் நடுவே நாம்

கைகள் இணைக்கலாம் நடக்கலாம்

தென்றல் திகைக்கலாம் அதற்குமேல்

தேவர் இருக்கலாம் அவர்க்கெல்லாம்

பாடல் கொடுக்கலாம்

இந்த்ரப் பதவி கிடைக்கலாம் உடனேநாம்

அதையும் மறுக்கலாம்

பறக்கலாம் சிரிக்கலாம் வா … ஸ்பரிசம்

 

இந்தப் பாடலைப் பாடிக் காட்டிவிட்டு, ரமணன் என்னிடம் மதுரை மீனாட்சி கோவிலுக்குப் போகலாமா, நான் வருவேனா என்று கேட்டான். நான் என்ன பதில் சொன்னேன் தெரியுமா?

” வந்தால் போச்சு. அந்தக் கோவிலில் நல்ல சிற்பக் கலையம்சம் மிக்க வேலைப்பாடுகள் உண்டாமே. பார்த்துவிட்டு வரலாம்.”

எப்படி இருக்கிறது என் பதில்? அதில் எவ்வளவு அலட்சியம்! ஆணவம் என்று கூடச் சொல்லலாமோ? நினைத்தாலே கூச்சத்தில் இப்பொழுது உடல் நடுங்குகிறது.

ஷோபனாவும், என் சகவாச தோஷத்தால் கிட்டத்தட்ட அந்த மனநிலையில் தான் இருந்தாள். ஆனால், அதில் அறிவின் ஆணவத்தைக் காட்டிலும், குழந்தைத் தனமான அறியாமையே தெரிகிறது. 1977-ல் அவள் ஓர் ஆங்கிலக் கவிதை எழுதியிருந்தாள்:

I wish there were a God somewhere

That I can bow and plead – Then

My tears will bring the Grace of care

They’ll die a death of need

 

Tear after tear, year after year

They’ve rolled and gone awaste – When

My fate evades a thought too dear

They die for me in haste

 

I do not ask of them to die

I know not that they come

But when they die I only sigh

“What fruitless martyrdom!”

 

I wish there were a God somewhere
That I can bow and plead
Then my tears would bring the Grace of care
They’ll die a death of need

என்

விருப்பமெல்லாம் எங்கேனும் – நான்

வணங்கி இறைஞ்ச ஒரு கடவுள்

இருக்க வேண்டும் என்பதே – இருந்தால்

பரிவின் கருணையை வரவழைத்துப்

பொழியும் கண்ணீர்த் துளிகளெல்லாம் – ஓர்

அவசியத்தாலே மறைந்துவிடும் – அந்த

மரணத்துக்கொரு பயனிருக்கும்

பிறகு கடவுள் நம்பிக்கை எப்படி என் நெஞ்சில் நுழைந்தது? அந்தக் கேள்விக்கு அடுத்த சந்திப்பில் பதில் சொல்கிறேன்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.