— நாகேஸ்வரி அண்ணாமலை.

judgement dayமுதல் முதல் துகளக் பத்திரிக்கை தொடங்கப்பட்டபோது நாங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.  நண்பர்கள் பலர் அந்தப் பத்திரிக்கையைப் பற்றி நிறையப் புகழ்ந்து எழுதுவார்கள்.  எழுபதுகளில் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதுவும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டதாக ஞாபகம் இல்லை.  இந்து பத்திரிக்கை மட்டும்தான் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு வாரம் ஒரு முறை விமானம் மூலம் வந்துகொண்டிருந்தது.  சனி, ஞாயிறுகளில் நூலகத்திற்குப் போய் அதைப் படிப்பதுண்டு.  இந்தியா திரும்பிய பிறகே நாங்கள் துக்ளக் பத்திரிக்கை படிக்க ஆரம்பித்தோம்.  தமிழில் உள்ள ஒரே அரசியல் நையாண்டி (political satire) பத்திரிக்கையாக அது விளங்கியது.  அதனால் அதற்கு மத்திய வர்க்கத்தினரிடம் பெரிய மவுசு இருந்தது.

இப்போது துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் ஜெயலலிதாவிற்கு ஆலோசகர். 2014 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த இந்தியப் பாராளுமன்றத் தேர்தல்களில் மோதிக்கு (இவர் பெயரை மோடி என்று தமிழில் ஆங்கில உச்சரிப்பின்படி ஏன் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை.  மோதி என்றுதான் குஜராத்தி உச்சரிப்புப்படி எழுத வேண்டும்.) ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு சாரார் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டபோது ஜெயலலிதா ‘மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம்.  லேடிக்குப் போடுங்கள்’ என்று தனக்கு ஓட்டுப் போடும்படி கேட்டுக்கொண்டார்.  இதனிடையில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் ‘மோடியும் வேண்டாம், லேடியும் வேண்டாம்.  டாடிக்குப் போடுங்கள்’ என்று தன் தந்தைக்குப் போடும்படி கேட்டுக்கொண்டார்.  மோடி, லேடி, டாடி சர்ச்சை நடந்துகொண்டிருக்கும்போது துக்ளக் ஆசிரியர் மோதியைப் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கும்படியும் அப்படி முடியாத பட்சத்தில் ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுக்கும்படியும் வாக்காளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஜெயலலிதாவைப் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அவருக்கு இந்திய அளவில் அரசியல் ஆதரவும் உலக அரசியல் அறிவும் இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தாரா என்று தெரியவில்லை.  இலவசங்களாகத் தமிழ்நாட்டில் அள்ளிக் கொடுத்த ஜெயலலிதா இந்தியாவின் பிரதமரானால் இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசங்களாகக் கொடுத்துக்கொண்டிருந்திருப்பாரா?  சமீபத்தில் வந்த ஒரு புள்ளிவிபரத்தின்படி தமிழகம் பொருளாதார ரீதியில் மற்ற மாநிலங்களை விட மிகவும் பின்னணியில் இருக்கிறது.  இலவசங்களாக அள்ளிக் கொடுத்துவிட்டுத் தமிழகத்தின் கஜானாவைக் காலிசெய்ததுபோல் இந்தியாவின் பொருளாதாரத்தையும் சீர்குலையச் செய்திருப்பார் என்பது துக்ளக் ஆசிரியருக்குத் தெரியவில்லையா?

ஒரு நாட்டின் பிரதமர் என்றால் எத்தனை பொறுப்புகள்!  குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த ஜெயலலிதாவால் பல இன, மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்தியாவை ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்க முடியுமா?  முதலில் தேர்தல் பிரச்சாரத்தில் ‘நாற்பதும் நமதே.  நாடும் நமதே’ என்று கூறிக்கொண்டிருந்த ஜெயலலிதாவே அந்த மந்திரத்தை விட்டுவிட்டு ‘அத்தனை பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஜெயிப்போம்’ என்று சொல்ல ஆரம்பித்தார்.  ஜெயலலிதாவைப் பற்றி ஜெயலலிதாவுக்கே தெரிந்த அளவு கூட துக்ளக் ஆசிரியருக்குத் தெரியவில்லையா?  ஜெயலலிதாவே தனக்குப் பிரதமர் பதவி கிடைக்காது என்று முடிவுசெய்த பின்னும் துக்ளக் ஆசிரியர் அந்தப் பொறுப்பை ஜெயலலிதாவிடம் கொடுக்கும்படி மக்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.

அவருக்கு நாற்பது இடங்களும் கிடைத்திருந்தாலும் பிரதமர் பதவி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.  இரண்டு தேசிய கட்சிகளுக்கும் மிகக் குறைந்த இடங்கள் கிடைத்து உதிரிக் கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஜெயலலிதாவைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.  (இது துக்ளக் ஆசிரியர் கற்பனையில் மட்டுமே நடக்கக் கூடியது)  இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்றிருக்கும் ஜெயலலிதா பிரதமராக இருந்திருந்தால் பிரதமர் பதவியை இழந்து தனக்கு வேண்டியவர் ஒருவரை பிரதம மந்திரியாக நியமித்திருப்பாரா?  அப்போது நாட்டின் தலைவிதி என்ன ஆகியிருக்கும்?

சொத்துக் குவிப்பு சம்பந்தமான வழக்கு நடந்துவருவது துக்ளக் ஆசிரியருக்கு நன்றாகத் தெரியும்.  அதில் ஜெயலலிதாவின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தன்னுடைய பதவியை – முதல் மந்திரி பதவியானாலும் சரி, பிரதம மந்திரி பதவியானாலும் சரி – இழக்க நேரிடும் என்பதை அவர் உணரவில்லையா?  அதெல்லாம் போகட்டும்.  இப்போது வழக்கின் முடிவு பற்றி எதுவும் கூறாமல் ஏன் மௌனம் சாதிக்கிறார்?  பல அரசியல் தலைவர்கள் பல காரணங்களுக்காக வழக்கு பற்றி எதுவும் கூறாமல் மௌனம் சாதிக்கிறார்கள்.  இவர் மௌனம் சாதிப்பதன் காரணம் என்ன?  ஒரு பொறுப்புள்ள பத்திரிக்கை ஆசிரியராக, மக்கள் நலனில் அக்கறை செலுத்துபவராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட அவர் ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்குங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டது எவ்வளவு தவறு என்று உணர்ந்து தன் தவறுக்கு விளக்கம் தர வேண்டாமா?

துக்ளக் ஆசிரியர் போன்ற ‘அறிவு ஜீவி’யே ஜெயலலிதாவின் ஊழல்களை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு அவரைப் பிரதமர் ஆக்குங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.  ஜனநாயகம் என்றால் என்ன, ஜனநாயக அரசு எப்படி செயல்படுகிறது என்பது பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாத படிப்பறிவு இல்லாத மக்கள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் திரும்பப் பெறும்படி தர்ணா பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.  நம் ஜனநாயகத்தைப் பற்றி என்ன சொல்வது?  சிலர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஜெயலலிதாவுக்கு இழைத்த கொடுமையாக எண்ணி உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.  இதற்கு மேல் சமூகத்துக்கு நற்செய்திகளைக் கொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் திரை உலகைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.  இவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்?  ஜெயலலிதா தவறே செய்யவில்லை என்கிறார்களா, அல்லது அவர் மக்களால் அமோகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவர் குற்றம் செய்தாலும் அவர் மீது வழக்கே போடக் கூடாது என்கிறார்களா, அல்லது அப்படி வழக்குப் போட்டாலும் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்கிறார்களா அல்லது அப்படி விசாரித்தாலும் தண்டனை எதுவும் கொடுக்கக்கூடாது என்கிறார்களா?  இவர்கள் என்னதான் வேண்டுகிறார்கள்?  இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும்வரை இந்தியாவை ஜனநாயக நாடு என்று எப்படி அழைக்க முடியும்?

படங்கள் உதவி: இணைய செய்தித் தளங்கள்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இது என்ன ஜனநாயகம்?

  1. No alternative to jayalalitha. The way in  which she has been convicted raises many questions as being published in newspapers. We cannot condemn if the stir/bundh whatever it be, are conducted in a peaceful way. At the least, she could have been convicted after the end of their term. I read the extract of arguments of Mr Kumar advocate of Jayalalitha.  While we are expected not to comment on the judgement, we can very well expect that there should be no adverse remarks against Jayalalitha, particularly when the case is yet to be taken up by supreme court.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *