இந்த வார வல்லமையாளர்!
அக்டோபர் 6, 2014
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு இந்திராணி அவர்கள்
பொதுவாக, ஒரு மேம்போக்கான கோணத்தில் அணுகுவோமானால் ஆன்மிகம் என்ற அடிப்படையில் நவராத்திரி கொலு கொண்டாடப்படுகிறது என்பதை யாவரும் அறிவோம். இருப்பினும் இக்கொலுவிற்குப் பற்பல பரிமாணங்கள் உண்டு. பொம்மைகள் செய்பவர்களின் வாழ்வாதாரத்தில் தொடங்கி பொருளாதார அடிப்படையில் விழாவினை முன்னிட்டு நாட்டின் செல்வ வளம் பரவுதலை ஊக்குவிக்கும் செயலாக இவ்விழா அமையும் என்பதும், கலைகளின் வளர்சிக்குத் தூண்டுகோலாக அமைவதற்காகவும், இளையதலைமுறைக்கு நாட்டின் காலாச்சார பின்னணியை கொண்டுசெல்லும் முயற்சியாகவும் பலவகைகளின் நாம் நவராத்திரி கொலுவினைப் போற்றலாம். அதற்கும் மேலாக மேலும் சில பரிமாணங்களை அறிமுகப்படுத்துகிறார் இவ்வார வல்லமையாளர் இந்திராணி. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொலுவைப்பதுடன் அத்துடன் கல்வி, தொண்டு ஆகியவற்றையும் இணைத்து புதுமை செய்திருக்கும் இந்திராணி அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்து பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் 74 அகவையை நெருங்கிய இந்திராணி அவர்களுக்கு சிறு வயது முதலே கொலுவைப்பதில் அதிக ஆர்வம் உண்டு. பெரும்பாலோர் புராணக்கதைகள், தசாவதார பொம்மைகள் என்பதுடன் கொலு வைக்கும் நிலையில் இருக்கும் பொழுது, பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏதேனும் ஒரு கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு கொலு அமைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர் இந்திராணி. பொங்கல்,விவசாயம்,கிராம திருவிழா என்பது போன்ற பல பின்னணிகளில் தனது கற்பனையைக் கட்டவிழ்த்து கொலுவைத்தவர். மிகவும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய கொலுக்களில் ஒன்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இருபது அம்சத் திட்டத்தை விவரிக்கும் இவரது கொலுவாகும். இதன் சிறப்பைக் கண்டவர்கள், இது பள்ளிச்சிறார்களுக்கு நல்ல தகவலைக் கொடுக்கும் கொலு எனக் கருதி மேலும் சிலநாட்களுக்கு கொலுவை நடத்த கோரிக்கை வைத்துள்ளார்கள் என்ற செய்தி அக்கொலுவின் சிறப்பைக் காட்டும்.
கடந்த சில ஆண்டுகளாக இவர் சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு குப்பைகளாக நாம் எறிந்துவிடும் காகிதக் கோப்பைகள், மருந்து புட்டிகள், தினசரித்தாள்கள், கெட்டியான அட்டைகளைக் கொண்ட வாழ்த்து அட்டைகள், அழைப்பிதழ்கள், பரிசு பொருட்களைச் சுற்றப் பயன்படும் காகிதங்கள், அட்டைப்பெட்டிகள் போன்றவற்றை மறுசுழற்சி செய்யும் வகையில் அவற்றில் பொம்மைகள் செய்கிறார்.
ஆண்டின் துவக்கத்திலேயே திட்டமிட்டு பொருட்களை சேகரித்து, ஒரு நாளில் ஆறுமணி நேரமாவது செலவழித்து அவற்றைக்கொண்டு தோரணங்கள், துளசிமாடங்கள், நாட்டியப் பெண்கள், பூந்தொட்டிகள் என்று பலப்பலவகையில் பொம்மைகள் செய்கிறார். இவரது கைத்திறமையால் குப்பைகள் கருவூலமாக மாறுகின்றன என்று சொல்வோமானால் மிகைபடுத்துதல் கிடையாது. சுற்றுச்சுழலுக்கு வலு சேர்க்கும் விதத்தில் வடிவமையக்கப்படும் இந்தப் பொம்மைகளை வியக்கவைக்கும் வகையில் தொண்டு செய்யும் நோக்கிலும் பயன்படுத்துகிறார். இந்த பொம்மைகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஏழை மாணவியர் கல்விக்காக வழங்கி உதவியும் செய்து வருகிறார்.
தொன்றுதொட்டு வரும் விழாவில் சுற்றுச்சுழலுக்கு வலு சேர்க்கும் விதத்தில் குப்பைகளின் மறுசுழற்சி, மாணவியரின் கல்விக்கு பொருளுதவித் தொண்டு எனப் புதிய உயரத்திற்கு கொலுவை உயர்த்திய வல்லமையாளர் இந்திராணி அவர்களுக்கு வல்லமை குழுவினர் பாராட்டுகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவலும் படங்களும் வழங்கியவர்: தினமலர் செய்தியாளர் – எல்.முருகராஜ்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1074201
இந்திராணி அம்மையாரைப் பாராட்டவும், பொம்மைகள் பற்றிய தவலறிய தொடர்பு கொள்ளவும் அவருடைய தொலைபேசி எண்: 9940146233.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம்https://www.vallamai.com/?p=43179 ]