செப்டெம்பர் 29, 2014

இவ்வார வல்லமையாளர்கள்
வல்லமைமிகு  இஸ்ரோ அறிவியலாளர்கள்

mars news 4a

 

செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில் பங்கு பெற்று, சென்ற வாரம் (2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதியன்று) செவ்வாய்க் கோளின் சுற்று வட்டப் பாதையில் மங்கல்யான் முதல் முயற்சியிலேயே நிலைநிறுத்தப்பட்டிருப்பதற்குக் காரணமான இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அவர்களையும், அவர் தலைமையில் அரும்பணியாற்றியிருக்கும் அனைத்து இஸ்ரோ அறிவியலாளர்களையும் இவ்வார வல்லமையாளர்கள் எனப்  போற்றிப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

சென்ற வாரம் இந்திய வரலாற்றில் ஒரு மறக்க முடியாத வாரம், உலக அரங்கையே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் சாதனையை நிகழ்த்தினார்கள் நம் இஸ்ரோ அறிவியலாளர்கள். செவ்வாய்க் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள், அங்குள்ள கனிம வளம் ஆகியவற்றை  கூர்ந்தாய்வு செய்வதற்கான கருவிகளுடன்  ஆளில்லாத விண்கலமான மங்கல்யான், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2013 நவம்பர் 5ம் நாளன்று செலுத்தப்பட்டது. இந்த மங்கல்யான்    வெற்றிகரமாக முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கோளின் சுற்று வட்டப் பாதையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதியன்று  துல்லியமாக  நிலைநிறுத்தப்பட்டது. பல அயலகச் செய்தித்தாள்களும் சலிப்பின்றி மீண்டும் மீண்டும் தவறாமல் தங்கள் செய்திகளில்  குறிப்பிட்டது இந்தியாவின்  இந்த செவ்வாய் திட்ட விண்வெளிச் சாதனையை.

முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் இந்தியாவின் மங்கல்யான் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது  விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. இந்த அரிய சாதனையைப் புரிந்ததன் மூலம்  முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற  நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்குக் கிட்டியுள்ளது. “இச்செயல் பங்களூரில் இருந்து ஒரு கோல்ஃப் பந்தை லண்டனில் இருக்கும் ஒரு குழியில், அதுவும் முதல் வீச்சிலேயே விழச்செய்யும் அளவிற்குத் துல்லியமானது,” என்றும் ஒரு அறிவியலாளர் குறிப்பிட்டுள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்க மற்றும் ரஷ்ய அறிவியலாளர்களாலும் கூட  முதல் முயற்சியிலேயே இச்செயலில் வெற்றி பெற இயலவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இச்சாதனை இந்திய அறிவியலாளர்களின் தொழில்நுட்பத் திறனை உலகநாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற ஒரு குறிப்பிடத்தக்க செயலாக அமைந்ததுவிட்டது.

அத்துடன், செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதைக்குள் செயற்கைக்கோளை நிலை நிறுத்திய  நான்கு விண்வெளி நிறுவனங்களில் ஒன்று இந்தியாவின் இஸ்ரோ. இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளன.  ஆசிய நாடுகளில் முதன்முதலில் வெற்றிபெற்ற  நாடு இந்தியா என்பதும், சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்களை இம்முறை இந்திய ஆய்வாளர்கள் இந்தப் போட்டியில் விஞ்சிவிட்டார்கள் என்பதும் மற்றொரு சாதனை.

வரலாற்றிலேயே, உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம், உள்நாட்டிலேயே இந்திய அறிவியலாளர்களால்  உருவாக்கப்பட்டு செவ்வாயின் சுற்றுப் பாதையில்  மிகக் குறைந்த செலவில்  நிலைநிறுத்தப்பட்ட ஒரே செயற்கைக்கோளும்  மங்கல்யான்தான்.  திட்டசெலவின்  அடிப்படையில் உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் எனவும்  இது புகழ்பெற்றுள்ளது. இந்தச் சாதனையை,  ஹாலிவுட் படத்தயாரிப்பின் செலவினும் மிகக் குறைந்தது என்றும், இந்த மாதம் அமெரிக்க நாசா விண்வெளி நிலையம் அனுப்பிய துணைக்கோளான மேவன் (Maven) திட்டத்தின் பத்தில் ஒரு பங்கு செலவு இது என்பதையும் ஒப்பிடாது இச்செய்தியை அளிக்க எந்த செய்தி நிறுவனத்தினாலும் இயலவில்லை.

இந்த சாதனைகளுடன் உலக செய்தியாளர்களைக் கவர்ந்ததும்,  யாரும் எதிர்பாராத வகையில்  வியந்து போனதுமானது என்றால் அது இந்திய விண்வெளித்துறையில், செய்வாய் கோளின் மங்கல்யான் திட்டத்தில் பணிபுரிந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலான பெண் ஆய்வாளர்களும், பொறியியல் வல்லுனர்களும் பங்கு பெற்று இருப்பதேயாகும்.  இஸ்ரோ தனது வெற்றிகரமான வேளையைக்  கரவொலி எழுப்பிக் கொண்டாடியதைப்  படம் பிடித்த செய்தி நிறுவனங்கள் அவற்றை  வெளியிட்ட பொழுது, டுவிட்டர் சமூக வலைத்தளம் புதுவகையில் உற்சாகம் கொண்டது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் மகிழ்ச்சியுடன் தங்களுக்குள் கைகுலுக்கிப் பாராட்டிக்கொண்டும், வாழ்த்துகள்  தெரிவித்துக் கொண்டுமிருந்த பெண்களை, மலர் சூடிய கூந்தலுடனும் இந்தியக் கலாச்சார உடையுடனும் கொண்டாடிய அறிவியலாளர்களைக் கண்ட உலக ஊடகங்கள் அனைத்தும் எதிர்பாராத  வியப்பில் மூழ்கியது தெளிவாக விளங்கியது.

isro scientists

“இது போன்று பெண்களின் பங்களிப்பை நாசா படங்களில் பார்த்ததில்லையே”, “இந்தியாவின் மார்ஸ் திட்டத்தின் முகங்கள் இப்பெண்மணிகள், இவர்கள்தான் உண்மையான முன்மாதிரிகள்” என்ற செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. “கடைசியாக இத்தனை பெண்கள் விண்வெளி ஆய்வில் பங்கு பெற்றதை நாம் எப்பொழுது பார்த்திருக்கிறோம்?” என்று வியந்தார் எகிப்திய  ஊடகவியலார் மோனா எல்ட்டாஹவி (@monaeltahawy).

கார்டியன் , நியூஸ்வீக் , பி ஆர் ஐ , பி பி சி , நியூ யார்க் டைம்ஸ் என உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் யாவும் மங்கல்யான் வெற்றிச் செய்தியுடன் இந்தியப் பெண் அறிவியாலாளர்களின் படங்களைத்தான் வெளியிட்டன.

இஸ்ரோவின் சற்றொப்ப 14,000 பணியாளர்களில் 20% பெண்கள் என்பது ஒரு வியப்பான செய்தியாகப் பரவியது.  மினால் சம்பத், நந்தினி ஹரிநாத் போன்ற இஸ்ரோ அறிவியலாளர்களைப் பற்றி இந்தியர்கள் முன்னரே அறிந்தவர்கள்தான் என்றாலும், அவர்களும் இந்த அளவிற்கு  பெண் அறிவியலாளர்கள் கட்டுப்பாட்டறையில் பங்கு பெற்றிருந்திருக்கிறார்கள் என்பதை முதன் முதலாக அறிந்து வியந்ததை  டுவிட்டர் செய்திகள் காட்டின.

கீழே குறிப்பிட்ட படம் ஆயிரத்திற்கும் அதிகமுறை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

 

#Mangalyaan, #IndiaAtMars, #marsorbitormission, #MarsMission, #Isro  மற்றும்  #Martian முதன்மை செய்திப்  பரிமாற்றச் சொற்களாக டுவிட்டரில் உருவெடுத்தன. @MarsOrbiter முகவரியைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கைத் தொட்டது.

Behind every successful space mission lies a team of hard working and hardly sleeping scientists. These are the brains behind Mangalyaan:

ISRO Scientists/Engineers:
K Radhakrishnan: The Chairman of ISRO and Secretary in department of space.
M Annadurai: Programme Director of Mars Orbiter Mission.
S Ramakrishnan: Director of Vikram Sarabhai Space Centre and Member Launch Authorisation Board.
SK Shivakumar: Director of the Isro Satellite Centre.
P Kunhikrishnan: Director of the PSLV programme.
Chandradathan: Director of the Liquid Propulsion system.
AS Kiran Kumar: Director of the Satellite Application Centre.
MYS Prasad: Director of the Satish Dhawan Space Centre and Chairman of the Launch Authorisation Board.
S Arunan: The Project Director of Mars Orbiter Mission and was responsible for leading a team to build the spacecraft.
B Jayakumar: Associate Project Director of PSLV project.
MS Pannirselvam: The Chief General Manager of range operation director at Sriharikota Rocket port.
V Kesava Raju: Mission Director of Mars Orbiter Mission
V Koteswara Rao: ISRO scientific secretary
&
Their Team of Scientists and Engineers

 

செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் மங்கல்யான் இணைக்கப்படும் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தை ஒரு மாபெரும் இந்திய வரலாற்று நிகழ்ச்சியாக மாற்றி இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச் செய்த அறிவியலாளர்களை பாராட்டாத இந்தியர் இல்லை எனலாம். முன்னர் ஒருமுறையும்  தொடர்ந்து 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக சாதனையை செய்தவர்கள்தாம் நம்  இந்திய இஸ்ரோ அறிவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்க மற்றொரு செய்தி.  ரஷ்யாவை 8 தொடர் வெற்றிகரமான செயற்கைக் கோள் நிறுவிய நாடு என்ற இரண்டாம் இடத்திற்குத் தள்ளிய இந்திய விண்வெளி ஆய்வாளர்களின் சாதனைகளைக்  கண்டு இன்றைய உலகம் வியக்கிறது.

இதற்கும் மாறாக வளரும் நாட்டிற்கு விண்வெளி ஆராய்ச்சி தேவையா, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கலாமே  என்று முணுமுணுத்தவர்களை பொருட்படுத்தாது “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” என்ற மழலையர் பாடலையும்  கீழ்வருமாறு மாற்றியமைத்து பாடி இந்தியர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள்.

“Twinkle, twinkle, little star
World’s envious; we’re on mars!
Up above the world so high,
We’ve made it in a single try!”

செவ்வாயை அடைந்த இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டர் “Howdy @MarsCuriosity? Keep in touch. I’ll be around.” என்று அனுப்பிய டுவிட்டர் செய்தியையைத் தொடர்ந்து  “Namaste @MarsOrbiter” என்று நாசாவின் ‘மார்ஸ் கியுரியாசிட்டி’ தனது  டுவிட்டர்  செய்தி ஒன்றை  அனுப்பி வரவேற்க,   விண்வெளி வரலாற்றில் இந்தியாவின் சாதனையின் அடையாளமான இச்செய்திப் பரிமாறல், அதனைப்  பார்த்த அனைவரையும் பெருமிதம் கொள்ள வைத்தது.

கீழே சென்னையில் பள்ளி மாணவர்கள் இஸ்ரோ அறிவியலாளர்களைப்  பாராட்டிய படமொன்று.  இச்சிறார்கள் அனைவருக்கும் இஸ்ரோ அறிவியலாளர்கள் ஒரு சிறந்த முன்மாதிரி.

mars news 6

அறிவியல்  மற்றும்  தொழில்நுட்ப வளர்ச்சிகள்  ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் திறனுக்குச் சான்றுகள். இது இளைய தலைமுறையை அத்துறையில் ஈடுபட ஊக்குவிக்கும். அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் இந்தியர்கள் சாதித்துவிட்டோம், மென்மேலும் பல சாதனைகள் புரியப்போகிறோம் என்ற உறுதியான நம்பிக்கையையும் அவர்கள் மனதில் விதைத்த இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

ஜெய்ஹிந்த்

 

——————-

தகவல்களும் படங்களும் பெற்ற வலைத்தளங்கள் :
https://www.vallamai.com/?p=50937- ஆசியாவின் முதற் சாதனையாகச் செந்நிறக் கோளைச் சுற்றிவரும் இந்திய விண்ணுளவி மங்கல்யான் – சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா.
http://www.theguardian.com/science/2014/sep/24/india-mars-satellite-successfully-enters-orbit?CMP=ema_565
http://www.newsweek.com/how-india-achieved-cheapest-ever-interplanetary-mission-mars-273588
http://www.pri.org/stories/2014-09-26/women-are-face-indias-mars-mission-theyre-still-exception
http://www.bbc.com/news/world-asia-india-29357472
http://www.bbc.com/news/world-asia-india-29339555

http://www.bbc.com/news/world-asia-india-29357438
http://www.firstpost.com/india/live-meet-the-masterminds-behind-isros-mangalyaan-success-1726461.html

 

 

 

**************************************************************************************
வல்லமையாளர்களுக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

  1. ​தேமொழி,

    இந்திய விண்வெளிப் பயண  பொறியியல், விஞ்ஞான ஆடவர், மாதரை உன்னத முறையில் அவர்கள் 2014 இல் சாதித்த வரலாற்று முன்னோடிச் செவ்வாய்க் கோள்  மங்கல்யான் முதற் சுற்றுச் சாதனையை வடித்துப் பாராட்டியதைப் படித்துப் பெருமிதம் அடைகிறேன்.

    சி. ஜெயபாரதன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *