ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
— நாகேஸ்வரி அண்ணாமலை.
இந்தியாவில் எதற்கெடுத்தாலும் பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடுவது வழக்கமாக இருக்கிறது. சென்ற மாதம் கர்நாடகாவில் ஒரு எழுத்தாளர் மறைந்தபோது விடுமுறை அளிக்கப்பட்டது. அவர் பெரிய சிந்தனைவாதி, பெரிய சமூக சீர்திருத்தவாதி, கன்னட மொழிக்கு என்னென்னவோ செய்திருக்கிறார் என்றெல்லாம் விடுமுறை கொடுத்ததற்குக் காரணங்களாகக் கூறப்பட்டன. இருந்தாலும் பள்ளிகளையும் அரசு அலுவலகங்களையும் ஒரு நாள் அவை பணிபுரிவதை நிறுத்தும் அளவிற்கு அவர் பெரிய ஆளா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். அது போகட்டும். அரசியல் தலைவரோ அல்லது ‘பெரிய மனிதர்’ யாரோ இறந்துவிட்டால் அதைக் காரணமாகக் கொண்டு விடுமுறை விடுவதால் யாருக்கு லாபம்? இறந்தவரின் போதனைகளையோ சிறப்புகளையோ அன்று நினைவுகூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தினாலாவது அதில் ஒரு அர்த்தம் உண்டு. அன்று விடுமுறை கொடுப்பதால் பலர் சினிமாவுக்குப் போவார்கள். அல்லது வீட்டில் இருந்துகொண்டு தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்துவிடுவார்கள். இறந்தவர்களின் வழியில் நாமும் நடக்க வேண்டும் என்றோ அவர்கள் கூறிய அறிவுரைகளை அன்று சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்றோ யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
இந்தியாவில் பல மதங்கள் இருப்பதால் எல்லா மதங்களின் முக்கிய பண்டிகைகளுக்கும் விடுமுறை கொடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு. இந்துக்கள் மாதத்திற்கு ஒரு பண்டிகை கொண்டாடுகிறார்கள். சிறுபான்மை மதங்கள் தங்களுக்குரிய முக்கியமான நாட்களைக் கொண்டாடுகிறார்கள். இதனால் சில வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (restricted holidays) கொடுக்க வேண்டிய அவசியம். இதற்கு மேல் தேசிய விடுமுறை நாட்கள் வேறு. இந்தத் தேசிய விடுமுறை இந்தியக் குடிமக்கள் எல்லோருக்கும் பொது. தனியார் துறைகளில் வேலை பார்ப்பவரையும் சேர்த்து எல்லோருக்கும் அன்று விடுமுறை. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் விடுமுறை இல்லை. மொத்தத்தில் பதினைந்து விடுமுறை நாட்கள், அதற்கு மேல் வரையறுக்கப்பட்ட விடுமுறைகள் இரண்டு என எல்லோருக்கும் பதினேழு விடுமுறை நாட்கள் கிடைத்துவிடுகின்றன.
அமெரிக்காவில் இதற்கு நேர் எதிர். சுதந்திர தினம், நன்றி தெரிவிக்கும் பண்டிகை, கிறிஸ்துமஸ், தொழிலாளர் தினம், போரில் இறந்த வீரர்கள் தினம் என்று ஐந்தே தேசிய விடுமுறை நாட்கள்கள்தான். கிறிஸ்தவர்களின் மிக முக்கிய தினமான ஈஸ்டருக்குக் கூட விடுமுறை கிடையாது. குளிர் காலத்தில் எவ்வளவு குளிர்ந்தாலும் விடுமுறை கிடையாது. பனி அளவுக்கு மேல் பெய்து வாகனங்கள் சாலைகளில் ஓட முடியாது என்றால்தான் விடுமுறை கொடுப்பார்கள். கல்வி நிறுவனங்களை அதிகப்படியாக ஒரு நாள் மூடினால்கூட கல்வி பாதிக்கப்படுமாம்; தொழில் நிறுவனங்களை ஒரு நாள் மூடினால் உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடுமாம். உலகில் எல்லாவற்றிலும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பும் அமெரிக்காவின் கொள்கை இது.
இந்தியாவில் சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் மாணவர்களைக் கல்வி நிறுவனங்களுக்கு வரச்செய்து தேசியக் கொடியை ஏற்றி சில உபதேசங்களை அளிப்பார்கள். காந்திஜி பிறந்த நாளன்று அதுவும் கிடையாது. சில மணி நேரங்களாவது மாணவர்களைக் கல்வி நிறுவனங்களுக்கு வரச்செய்து அவருடைய போதனைகளைப் போதிக்கலாம். 1948-லேயே மறைந்துவிட்ட காந்திஜியை இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தியக் குடிமக்கள் நினைவு வைத்திருப்பார்கள் என்று நினைத்து நான் ஆயாசப்பட்டதுண்டு.
இந்தியக் குடிமக்கள் காந்திஜியை சீக்கிரமே மறப்பதற்குரிய ஒரு காரியத்தை இந்திய அரசு இப்போது செய்யப் போகிறது. அன்று மத்திய அரசு அலுவலர்களுக்கு விடுமுறை இல்லையாம். விடுமுறை இல்லை என்பது பெரிய விஷயமல்ல. ஆனால் அவருடைய பிறந்த நாளை இந்தியாவைச் சுத்தப்படுத்தும் நாளாக அனுசரிக்கப் போகிறார்களாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். காந்திஜியை கௌரவிப்பதாக ஜாலம் காட்டி அந்த நாளை நாட்டைச் சுத்தப்படுத்தும் நாளாக மாற்றப் போகிறார்கள். நாளடைவில் காந்திஜியை மறப்பதற்கு இது மறைமுகமான வழி. பாழ்பட்ட இந்தியாவைச் சுத்தப்படுத்தும் பணியை ஆரம்பித்தவர் என்ற பெருமையைத் தட்டிக்கொள்ளலாம்; அந்த பிம்பத்தை தனக்கு உருவாக்கிக்கொள்ளலாம் என்பது மோதியின் ஆசை. காந்திஜி மனச் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்; மத, ஜாதி துவேஷம் என்னும் அழுக்கை மனதிலிருந்து அகற்றவேண்டும் என்று நாளெல்லாம் சொன்னார். தேசத் தந்தையைக் கொலைசெய்த ஆர். எஸ். எஸ். கட்சியிலிருந்து தோன்றிய மோதிக்கு காந்திஜியின் கொள்கை மேல் என்ன பற்று இருக்க முடியும்? ஒரு சில இந்தியராவது நினைவு வைத்திருக்கும் காந்திஜியை வரும் தலைமுறையினர் முழுவதுமாக மறந்துவிடுவதற்கு மோதியின் அரசைத் தவிர வேறு யாருக்கு இவ்வளவு அருமையான யோசனை தோன்றும்! இனி பாடப் புத்தகத்திலிருந்து தேசத் தந்தை மெதுவாக நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
படம் உதவிக்கு நன்றி:
http://news.oneindia.in/india/modi-shocker-no-holiday-this-oct-2-gandhi-jayanti-cleanliness-pledge-1529705.html
http://news.oneindia.in/india/take-cleanliness-drive-residential-areas-govt-employees-1530084.html