இசைக்கவி ரமணன்

காப்பு

ஈச்சனாரி விநாயகர்

எதிர்கொண் டழைக்கும் விநாயகா! ரெட்டைப்
புதிர்சூழ வீற்றசிங் காரா! சதிராடும்
காபாலி நாயகியைக் கற்பகத்தை நாவார
நான்பாடச் செய்வீர் நலம்

images (10)

ஜென்மஜென் மங்களாய்க் கன்மக் கந்தைகளை
என் தோளில் நான்சுமந்தே
என்னை நானே தாங்க இயலாத கேலியாய்
எத்தனை யுகம் போனதோ!
நன்மையாவும் பருகி புன்மையாவும் பழகி
நான்கண்ட அனுபவங்கள்
நின்றன நின்றன நின்றவற் றின்நடுவில்
நெளிகிறேன் நதியாக நான்
அன்றுகதை நாணமெனில் சென்றகதை பாடமெனில்
இன்றுகதை ஒன்றுமிலையே
என்றுமுள பேருண்மை நின்றுவிளை யாடவே
எதிர்வந்த மயிலை உமையே! (1)

சித்தமென் றொன்றுண்டு செதில்செதில்கள் செதில்களாய்ச்
சித்திரம் படிவதுண்டு
சத்தமில் லாமல்நீ சரிநடுவில் அரிவாயே
சரியான வாளைக்கொண்டு!
மொத்தமலி னங்களும் மூண்டுமேல் வரும்போது
மூச்சே திகைப்பதுண்டு
சுத்தமே அண்டா அசுத்தனே நானா?
சொல்லியழ யாரிங்குண்டு?
மொத்தத்தை யும்சின்ன முத்தத்தி னால்மாற்றி
முறுவலால் கொல்லும் தாயே!
சத்தத்தின் நடுவிலே சாந்திசுக மாய்நின்ற
சத்யமே! மயிலை உமையே! (2)

கண்ணும் திறக்காத காலத்தில் உன்னழகுக்
காலடியில் நான்வளர்ந்தேன்
எண்ணத்தில், இளம்பிள்ளை இதயத்தில் உன்கோலம்
எப்போதும் ஏந்திநின்றேன்
மண்ணைப் பிசைந்தாளும் மழைபோல இவ்வாழ்க்கை
மனதைப் பிசைந்தயர்ந்தேன்
கண்ணுன்னைக் காணுமோ காணாமல் மூடுமோ
கண்ணீரில் உயிர்கரைந்தேன்
உண்மையில் உனக்கெந்தன் ஒருநினைவு வந்ததால்
ஓடிவந் தேன் மீண்டுமே!
பெண்மையின் வண்ணமே! பேசிடும் வடிவமே!
பெருமயிலை ஆளும் உமையே! (3)

வெகுதொலைவில் சென்றவள் விரலருகில் நிற்கிறாய்
வேறென்ன நான்கேட்பது?
தகுதியில்லாத எனைச் சந்நிதியில் சேர்ப்பித்த
கருணையோ அவள்செய்தது
மிகவிளைய காலமும் மீண்டது, மனமுன்முன்
மின்னலின் யாழானது
நகைசெய்த படிநீயும் நாடாளும் தெருவிலே
நாளெலாம் கால்சென்றது
மிகையின்றிச் சொல்லவா? மிச்சமில் லாமலெனை
மிஞ்சவத் தாயென் தாயே!
அகமெங்கும் சுகமான தமிழ்கொண்டு நான்பாடத்
தலையாட்டும் மயிலை உமையே! (4)

images (9)

மயிலையொரு கயிலையென மார்நெகிழ குருநாதர்
மயிலையில் அமர்ந்து சொன்னார்
மயிலான உன்முன்பு மனம்நிற்கும், பயிலாத
மறைகூடும் என்று சொன்னார்
ஒயிலாடும் உன்னருகில் உருவேற்றிக் குங்குமம்
ஒருவிரலில் நெற்றி வைத்தார்
கயிலையொரு மயிலையெனும் காட்சியை நெஞ்சுக்குள்
காட்டாமல் காட்டிவைத்தார்
பயில்வதெல் லாமழகு பருகிடும் வித்தைதான்
பாமரனுக் கருளும் தாயே!
கயிறெரிந் தேபோன கதையாக ஆக்கினாய்
கயிலையின் மயிலை உமையே! (5)

மனம்விட்டுக் கயல்துள்ளும் மயிலைக் குளம்சுற்றும்
மாடத் தெருக்கள் சுற்றி
தினம்புதிது புதிதாக விதம்காட்டும் பூக்களும்
தினம்கூடும் காய்கனிகளும்
இனமெனில் மனித இனம் இடமெனில் மயிலையென
இதயத்தில் கர்வம்பொங்க
உனையெண்ணி வேறேதும் ஒருதுளியும் எண்ணாமல்
ஓர்வாழ்வு நான் வாழ்கிறேன்
தினமுன்னைப் பார்த்தேங்கும் பிள்ளையை நீயும்தான்
தினம்பார்க்க வேண்டும் அம்மே!
மனம்பிரிய முடியாத மயிலையில் எனைக்கூட்டி
மழைபொழியும் மயிலை உமையே! (6)

கற்பகம் என்பதெது? கால்களா? கண்களா?
கனிவாயின் கள்ள நகையா?
விற்புருவ மா?மலர் வேய்ந்த உடையா?மறை
வேதத் திருச்செவிகளா?
சொற்பொருளும் எட்டாத காபாலி பாகமா?
சொல்லித் தீரா மோகமா?
அற்புதம் தடுமாறும் ஆனந்தமா? இல்லை
அதைமிஞ்சும் அமைதிதானா?
பொற்பதம் தொட்டுநான் பூரித் தெழுந்தகணம்
போராடும் கேள்வியிலையே!
கற்பிக்க முடியாத கருணையே உருவான
கற்பகம் மயிலை உமையே! (7)

Tamil-daily-news-paper_32554262877

கூடிவரும் கார்மேகம் தேடிவரும், உன்னழகு
கோபுரக் கலசம் முட்டும், நீ
ஆடிவிளை யாடியவோர் அழகான முத்ததனில்
அன்றுநில வாய்க்கொஞ்சிடும்
பாடிவரும் குயிலோடு பவளவாய்க் கிள்ளைகள்
பந்திபோட் டுப்பாடிடும்
ஓடிவரும் பிள்ளைகள் உன்வாயி லில்நின்று
ஓவென்று கத்திமகிழும்
ஈடிணையு மில்லாமல் என்னுயிரை மொத்தமாய்
ஏந்தியெழில் பார்க்கும் தாயே!
நாடிவரும் எவருக்கும் நலமே வழங்கிடும்
நன்மயிலை வாழும் உமையே! (8)

சாம்பவீ! என்வினையைச் சாம்பலாய் ஆக்கினாய்
சடுதியில் காடெரித்தாய்
சாம்பலே மேனியாய்க் காபாலி சங்கரன்
சந்நிதியின் அருகில் நின்றாய்
சாம்பலைத் தமிழினால் கன்னியாய் உயிர்ப்பித்த
சம்பந்தன் சாட்சியானாய்
சாம்பலாய்ப் போன என் வாழ்விலே நீவந்து
தளிராக முறுவலித்தாய்
தேம்பியழும் குழந்தைக்குத் தேடிமுலைப் பால்தந்த
தெய்வத்தை மிஞ்சும் தாயே!
பூம்பாவ டைகட்டிப் புவனத்தை ஆள்கின்ற
பொன்மயிலை வாழும் உமையே! (9)

Tamil-Daily-News-Paper_32297480107

எங்கேது வங்கியதோ அங்கேயே முடிவதுதான்
இவ்வாழ்வின் அழகல்லவா?
இங்கிருந் தெங்கெங்கி லோதிரிந்தே சேர்ந்த
திறுதியில் இங்கல்லவா?
இங்கெனைக் குடிவைத்த இதயங்களைத் தாயே
எப்போதும் காக்கவேண்டும்
மங்கலம் வைபவம் மணமுள்ள புகழவரின்
மனையெங்கும் ஓங்கவேண்டும்
இங்குன்னை நீங்காமல் இனியெங்கும் சுற்றாமல்
இணையடியில் ஏந்து தாயே!
தங்கத்தின் தங்கமே! கற்பகத் தருவே! நிதம்
தழைத்தோங்கும் மயிலை உமையே! (10)

27.09.2014 / சனிக்கிழமை / 20.33

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.