இசைக்கவி ரமணன்

 

கதவு தொலைந்த கணம்

amma

நிறுத்திக்கொள்வோம்!
நீ சொன்ன வாசகங்களையும்
நான் சொன்ன வார்த்தைகளையும்

பொறுத்துக்கொள்வோம்!
நீ கண்ட பிழைகளையும்
நான் கண்ட குறைகளையும்

மறந்து போவோம்!
என் அத்து மீறல்களையும்
உன் அராஜகத்தையும்

எதற்கு நீ?
எதற்குத்தான் நான்?

என் தாய் நீ, உன் சேய் நான்
என்னும் ஒரே நினைப்பில்
என் விருப்பம், உன் விருப்பம்
என்னும் ஒரே நம்பிக்கையில்

காதல், கவிதையென,
காலமெல்லாம் காளியென்னும்
போதையில் வாழாமல்,
புலனைந்தும் செயல்படாமல்
சாதாரணன் போல்வாழச்
சகத்தில் எதற்கடி நான்?

ஆதார ஸ்ருதியாக
அடிநாதம் நீயாக
பேதமே இல்லாமல்
பெற்றுவரும் அனுபவத்தைச்
சேதாரமில்லாமல், உன்
சேவடியில் சேர்ப்பித்தல்
தவிர எனக்கென்றோர்
தவமுண்டோ? நானிதிலே
தறிகெட்டுப் போவதிலும்
தவறுண்டோ? வந்து
தழுவியென்னைக் காப்பதன்றிக்
கடமைதான் உனக்குண்டோ?

ஆடுவது தாயம், இதில்
அளப்பானேன் தர்மநியாயம்?
போடு! விழுகிறேன். மீண்டும்
போடு! எழுகிறேன்! சற்றே
ஆடுவதை நிறுத்தியென்னை
ஆடவிடு! அப்புறம் பார்!
பாடுவதும் வாடுவதும்
பரபரப்பதெல்லாமும்
கூடொன்றில் நுழைந்தால்
குடும்பம்போல் வந்தே தீரும்
ஏடுகள் படிப்பதாலோ
எவனேனும் சொல்வதாலோ, எந்தப்
பாடும் மாறாது
பராசக்தி விருப்பம்தான்
ஆடு நனைவதும்
ஓநாய் அழுவதும்!

வீழ்த்திச் சிரிக்கின்றாய்
வெட்கமின்றி; ஒருமுறை
வீழ்ந்துதான் பாரேன்!
வெற்றியென்பது
விளங்காது தோல்வியின்றி

சரிசரி
உனது கவிதை எனதே எனும்போது
எனது இன்பதுன்பம் உனதே அல்லவோ?
உனக்கும் எனக்கும்
ஊடாடும் சொந்தத்தில்
உரிமையே உறவன்றோ?
உறவென்று பிறிதுண்டோ?

வாடி வா!
வக்கணையின் ராணியே!
தேடியெனைப் பெற்றுவிட்டு, முகம்
திருப்பிக்கொண்டால்? நானென்ன
வாடி அழுவேனா? வாசலில் கெஞ்சுவேனா?

ஜாகேச்வரத்திலந்த
யோகத் தனிமையில் நீ
நோகாமல் படியேறி
வேகமாய் வந்தென்னைத்
தொட்டுத் தட்டியெழுப்பியதைக்
கண்ணுற்ற கணமே, உன்
குட்டுடைந்து போனதடி!
கொடியவினை தீர்ந்ததடி!

இன்னுமென்ன பம்மாத்து?
இறங்கிவா! ஏறி வா!
மின்னல்களைத் தேர்ந்தெடுத்து
மீட்டுவோம் வா!
நான்பாட நீயாட நீயாட நான்பாட
தேன்கூடும் தமிழின் தித்திப்பில் நாமொன்றாய்
நீயே நானாகவும் நானே நீயாகவும்
தீயே நீராகத் தெளிந்திருப்போம்! யாவர்க்கும்

தாயாய் விளங்கும்
தயவே! தமிழின்
தகவே வருக!
கதவு தொலைந்த
கணத்தில் இந்தக்
கவிதை நேர்ந்தது

26.090.2014 / வெள்ளி / 21.15 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *