குற்றவாளி அரசியல்வாதிகளைப் பற்றி நீதிமன்றத்தின் ஆலோசனை

நாகேஸ்வரி அண்ணாமலை.

 

Supreme_Court_of_India_wikipedia

மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் செய்தி ஒன்று ஆகஸ்ட் 27 அன்று பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கிறது.  அந்தச் செய்தி இதுதான்.

‘குற்றப் பின்னணி உடையவர்களையும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களையும் அமைச்சர்களாக நியமிப்பதை பிரதமரும் மாநில முதல்வர்களும் தவிர்க்க வேண்டும்.  இதற்கான பொறுப்பு அவர்களுக்கு உண்டு’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குற்றப் பின்னணி உடையவர்களை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது.  அப்படி நியமித்தால் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த மனு தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு ‘பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது.  இந்த மனுவின் தீர்ப்பில்தான் உச்சநீதிமன்றம் அப்படிக் கூறியிருக்கிறது.

யாரை அமைச்சர்களாக நியமிப்பது, யாரை நியமிக்க முடியாது என்பது பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை என்றும் ஆனால் இது பற்றிய விஷயங்களில் அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.  அந்த ஆலோசனைதான் மேலே குறிப்பிட்ட தீர்ப்பு.

ஊழல் புரிபவர்களாகவும் மற்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதால் சமூக ஆர்வலர்கள் இதை எதிர்த்துக் குரல் எழுப்பினர்..  சட்டத்தை இயற்றுபவர்கள் சட்டத்தை மீறுபவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி மக்களின் பிரதிநிதிகள் ஆவார்கள் என்று அவர்கள் கேட்டார்கள்.  மேலும் சட்டத்தின் பாதுகாவலனாக இருப்பதாகப் பதவி ஏற்கும்போது உறுதி அளித்துவிட்டுப் பின் அவர்கள் சட்டத்தையே மீறுபவர்களாக இருந்தால் மக்களுக்கு எப்படி ஜனநாயகத்தில் நம்பிக்கை வரும் என்றும் அவர்கள் கேட்டார்கள்.  அவர்களுக்குச் சமாதானம் ஏற்படும் வகையில் இதற்கு ஒரு முடிவு காண நீதிமன்றங்கள் முயன்றன.  முதலில் குற்றம் புரிந்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது.  குற்றம் என்று நிரூபிக்கப்படும்வரை குற்றம் புரிந்ததாகக் கருதப்படுபவர் நிரபராதியே என்ற அடிப்படையில் இது இயற்றப்பட்டது.  ஆனால் நம் நீதிமன்றங்கள் ஒரு வழக்கைத் தீர்த்துவைக்கப் பல ஆண்டுகள் எடுப்பதால் கீழ்க் கோர்ட்டுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் மேல் முறையீடு நீதிமன்றங்களுக்கு அப்பீல் செய்துவிட்டு குற்றம்
புரிந்தவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்க வாய்ப்பு ஏற்பட்டது.  பல சமயங்களில் அவர்கள் வழக்குகள் கடைசியாகத் தீர்க்கப்படும்போது அவர்கள் ஆயுளே முடிந்துவிடலாம்.

இதைத் தவிர்க்க வேண்டி எந்தக் கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.  ஒரு கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கே பல ஆண்டுகள் ஆகும் என்பது இன்னொரு விஷயம்.  அதன்படிதான் லாலு போன்றவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுக் கொஞ்ச காலம் சிறைக்குச் சென்றார்கள்.  அவர்கள் மேல் முறையீடு செய்துவிட்டு சிறையிலிருந்து வெளிவந்து மறுபடி அரசியலில் பங்குகொள்கிறார்கள்.

இதிலும் ஒரு திருத்தம் வேண்டும் என்றுதான் இப்போது உச்சநீதிமன்றம் புதிய அறிவுரையை வழங்கியிருக்கிறது.  குற்றம் புரிந்தவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அது விசாரிக்கப்பட வேண்டிய ஒரு குற்றம் என்று ஒரு நீதிபதியால் ஏற்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் அப்போதே சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டார் என்று கொள்ள வேண்டும்.  மேலும் அவர் நிரபராதியாக இருக்கலாம் என்ற அனுமானத்தினால் மட்டுமே ஒருவர் குற்றம் புரியவில்லை என்று தீர்மானித்து அவரை சட்டம் இயற்றும் அமைச்சர் பதவிக்கு நியமிப்பது உசிதமல்ல என்றும் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரையைப் பிரதம மந்திரியும் மாநில முதல்வர்களும் ஏற்று நடப்பார்களா என்பது அடுத்த கேள்வி.  இப்போது மத்திய அமைச்சரவையிலும் மாநில அமைச்சரவைகளிலும் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலானவர்கள் ஏதோ ஒரு வகையான குற்றம் புரிந்தவர்களாகவோ ஊழலில் ஈடுபட்டவர்களாகவோ இருக்கிறார்களாம்.  இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போவதாகச் சொல்கிறார்கள்.  யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்று முடிவு சொல்ல உச்சநீதிமன்றத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு அதிகாரமும் கொடுக்கப்படவில்லையாம்.  இருப்பினும், சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் முடிந்த பிறகும் சாக்கடை அரசியலைச் சுத்தப்படுத்த முடியவில்லை என்றால் இந்தியாவின் ஜனநாயகம் என்னாவது என்று கேட்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.  யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும், யாரை நியமிக்கக்கூடாது என்னும் பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டிய கடமை நாட்டை ஆள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம் மந்திரிக்கும் முதலமைச்சர்களுக்கும் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள்.

எல்லாம் போகட்டும்.  குற்றம் புரிந்தவர்களே பிரதமராகவும் முதலமைச்சராகவும் இருந்துவிட்டால் என்ன செய்வது?   பிரதமர் மோதி விஷயத்தில் குஜராத் கலவரங்களில் அவருக்குப் பங்கு உண்டு என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்று கீழ் கோர்ட்டில் தீர்ப்பானாலும் இதை எதிர்த்து குஜராத் அரசு அப்பீல் செய்யவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.  ஆனால் கலவரத்தில் விதவையான ஸகியா ஜஃப்ரி என்ற பெண் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.  அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.  அதனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை மோதி மீதுள்ள குற்றச்சாட்டு இன்னும் விலக்கப்படவில்லை.  தமிழக முதல்வர் மீது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே குற்றத் தாக்கல் நீதிமன்றத்தில் பதிவாகி இப்போது வழக்கு முடியும் தறுவாயில் இருக்கிறது.  குற்றச் சாயலே இல்லாத அமைச்சர்களை நியமிக்கும் பொறுப்பு பிரதம மந்திரிக்கும் முதலமைச்சருக்கும் இருக்கிறது என்றால் குற்றவாளிகளாக இருக்கலாம் என்று நீதிமன்றங்களால் கருதப்பட்டு வழக்குகள் நடந்துவரும் இவர்களைப் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அறிவுரை என்ன?

இவர்களைத் தேர்ந்தெடுத்ததே மக்கள்தான்.  அவர்கள் சிந்திக்க வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “குற்றவாளி அரசியல்வாதிகளைப் பற்றி நீதிமன்றத்தின் ஆலோசனை

  1. கட்டுரையின் கடைசியில் கேட்ட கேள்விதான் பல சிந்தனைகளை தூண்டி விடுகிறது.

    குற்றம் நிருபிக்கவோ, அல்லது குற்றமற்றவர் என்பதை நிருபிக்கவோ நம் நாட்டில் வழக்கு மன்றம் எடுத்துக்கொள்ளும் காலம் 15,20 ஆண்டுகள் ஆகின்றன.ஆக குற்றம் சாட்டப்படடால் மட்டுமே குற்றவாளி ஆகிவிட முடியாது எனும் ஓட்டையின் கீழ் உண்மையில் குற்றமற்றவர்க்கும், குற்றவாளிக்குமாக இருவருக்கும் சாதகமாகவே சென்று விடுகிறது அந்த குறிப்பிட்ட காலங்கள்.

    குற்றச்சாட்டு உள்ளவர்களை தவிர்க வேண்டும் என ஆலோசனை சொல்லும் நீதி மன்றம். அந்த குற்றவாளி அல்லது ஒரு நிரபராதி மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நீதி மன்றத்துக்கு வரும்போது நீண்ட காலங்கள் கடத்தாமல் விரைவில் முடித்தால் ஒரு குற்றவாளி விரைந்து தண்டிக்கப்படுவார்,அல்லது ஒரு நிரபராதி விரைவில் விடுவிக்கப்படுவார். விரைவில் தீர்பு கிடைக்கும்போது மக்களிடம் ஒரு அச்சமும், ஒழுக்கமும் ஏற்படும். இதை நீதிமன்றம் செய்தாலே போதும். ஆட்சி,அதிகாரத்தில் இருப்பவர்களும், பொது காரியத்தில் இருக்கிறேன் என்று சொல்லி தவறு செய்பவர்களும் அன்றன்றே தண்டிக்கப்படுவார்கள்.அப்படி செய்யும் போது அரசன் அன்றே கொல்வான் , நீதி அரசனும் அப்படியே செய்வான் என அத்தனை நீதி மன்றங்களும் தங்களின் கொடிகளை பறக்கவிடலாம். குற்றம் உள்ளவரை தவிர்க்க வேண்டும் என ஆலோசனை கூறும் நீதி மன்றம் வழக்குகளை காலம் கடத்துவதை தவிர்க் வேண்டும் என ஆலோசனை கூறவே தயாராகிறான் ஒவ்வொரு சாமான்யனும்.

Leave a Reply

Your email address will not be published.