— நாகேஸ்வரி அண்ணாமலை

Modi_Obama__newsnextbd2005-இலிருந்து மனித உரிமைகளை மீறிய குற்றத்திற்காக அமெரிக்காவிற்கு வருவதற்கு மோடிக்கு விசா கொடுக்க அமெரிக்கா மறுத்துக்கொண்டிருந்தது. அவர் இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயித்து இந்தியப் பிரதமர் ஆகிவிடும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிய வந்ததும் ‘எல்லோரையும் போல் மோடியும் அமெரிக்காவுக்கு வருவதற்கு விண்ணப்பித்தால் அமெரிக்கா அதைப் பரிசீலனை செய்யும்’ என்று கூறியது. மோடியின் வெற்றி வாய்ப்புகள் கூடக் கூட மோடியோடு ஒத்துழைக்கத் தயார் என்று அமெரிக்கா கூறத் தொடங்கியது. தேர்தல் முடிவுகள் வந்ததும் மோடியை முதலில் வாழ்த்திய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இல்லையென்றாலும் மறு நாளே ஜனாதிபதி ஒபாமா மோடியை போனில் நேரில் அழைத்து வாழ்த்துக் கூறினார். அதோடு மோடியோடு சேர்ந்து இந்திய-அமெரிக்க நல்லுறவுக்குப் பாடுபடப் போவதாக வாக்களித்தார். இது போதாதென்று வெளியுறவு அமைச்சர் கெரி அமெரிக்காவுக்கு வருவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். கெரிக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்றும், மோடி எப்போது அமெரிக்கா வர முடியும் என்றும் கேட்டிருக்கிறார். அமெரிக்கா வருவதற்கு மோடி தேதி கொடுக்கும் முன் அவரே வந்து மோடியைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார் போலும்!

இந்தியாவுக்கு உலக வல்லரசு நாடான அமெரிக்கா தேவை; அதே சமயம் அமெரிக்காவுக்கும் இந்தியா தேவை. ஆசியாவில் வலிமை பெற்றுவரும் சீனாவை கட்டுக்குள் வைக்க இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்குத் தேவைப்படலாம். இருந்தாலும் ஏன் இப்படி அவசரப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. 2002-இல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு நடந்த மாபாதகத்தை மோடி கண்டும் காணாதது போல் இருந்ததற்கு மனித உரிமைகளை மீறிய குற்றத்தை மோடி மீது சுமத்திய அமெரிக்கா இப்போது எந்தக் காரணத்தால் அவரை விழுந்து விழுந்து வரவேற்கிறது? அவர் செய்ததாக அமெரிக்கா அவர் மீது சுமத்திய குற்றங்கள் எல்லாம் என்னவாயிற்று? இந்தியாவில் மோடி மீது பல விசாரணைகள் நடந்து சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் அவர் நிரபராதி என்று தீர்மானிக்கப்பட்ட பிறகும் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்தது. அவர் இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் செய்ததாக அமெரிக்கா சாட்டிய குற்றங்கள் எல்லாம் இல்லையென்றாகி விடுமா?

மோடி என்ற மோடி வித்தைக்காரர் தன்னுடைய இந்துத்துவ கொள்கைகளை எல்லாம் மூடிமறைத்துவிட்டு ‘வளர்ச்சியின்’ மூலம் இந்தியாவை இந்திரபுரியாக மாற்றிவிடுவேன் என்று கூறுவதை அப்பாவி இந்திய மக்கள்தான் அப்படியே நம்பி அவருக்குப் பெரும்பான்மை அளித்திருக்கிறார்கள். காங்கிரஸுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பி.ஜே.பி.க்கு இப்படி ஒரு பெரும்பான்மை கொடுக்க வேண்டுமா? பெரும்பான்மை கிடைத்துவிட்டதால் பி.ஜே.பி.யும் (மோடியும்) தங்கள் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள் இந்திய மக்கள்.

மக்கள் மட்டுமல்ல, அவரை எப்படி எப்படியோ விமர்சித்த இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அவரை இப்போது புகழ்ந்து தள்ளுகிறார்கள். அவர் பின்னால் போகத் தயாராக இருக்கிறார்கள். அவர் நிழலில் வெயில்காய நினைக்கிறார்கள். இதெல்லாம் எதற்கு? அரசியல் ஆதாயத்தை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவா?

இலங்கைத் தமிழர்களைக் கொன்றுகுவித்த இலங்கைப் பிரதமர் இராஜபக்சேயை மோடி தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் தமிழ் நாட்டுத் திராவிடக் கட்சிகள் திணறுவதைப் பார்த்தால் இவர்கள் மீது பரிதாபமாக இருக்கிறது. இந்தியாவை ஒரு இந்து நாடாக மோடி மாற்ற முயற்சித்தால் அப்போதும் இவர்கள் வாய்பொத்தி நிற்கத்தான் போகிறார்களா? பெரியார் படத்தையும் தங்கள் கட்சி விளம்பரங்களில் சேர்த்துக்கொள்ளும் இவர்கள் பெரியார் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த அவலம் நடப்பதற்கு யார் காரணம்? மோடி என்ற மோடி வித்தைக்காரரா? அல்லது நாட்டு மக்களின் நலன்களாவது, சுண்டைக்காயாவது, எங்களுக்கு எங்கள் நலன்கள்தான் முக்கியம் என்ற அளவிற்கு இறங்கிவிட்ட இந்த சுயநல அரசியல்வாதிகளா? இறைவா, இந்த அப்பாவி இந்திய மக்களை இந்த அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்று.

படம் உதவி: http://newsnextbd.com/obama-congratulates-modi/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மோடி என்ற மோடி வித்தைக்காரர்

  1. Sorry Madam, I do not completely agree with you. We need to wait and see for his performance. There is a part called AAP, but why people did not chose them. Just because you wanted to write something different, please do not quote upto the level of referring him as magician. People are frustrated because of previous governments in India. sorry if I have used little harsh words but that is not my intention. Please write your review after 100 days. Thank you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.