Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

ஏன் இந்த பாரபட்சம்?

— நாகேஸ்வரி அண்ணாமலை.

மே மாதம் 16-ஆம் தேதி லோக்சபா தேர்தல்களுக்கான முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்தன.  அமெரிக்காவில் இரவு வெகுநேரமாகிவிட்டதால் படுக்கச் சென்றுவிட்டோம்.  மறு நாள் காலையில் முடிவுகள் வெளிவந்து பா.ஜ.க. தனிப்பெருன்பான்மை பெற்றதாக அறிந்தோம்.  அன்று சாயங்காலம் முஸ்லீம் நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவர், ‘காலை ஐந்து மணிக்கு எழுந்து என்னுடைய ஐபோனில் தேர்தல் முடிவுகளைப் பார்த்தேன்.  பா.ஜ.க.வுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைத்ததை அறிந்து மிகவும் அசந்துவிட்டேன்.  படுக்கையை விட்டு எழுந்திருக்கவே விரும்பவில்லை’ என்றார்.  இந்தியாவில் இருக்கும் உறவினர்களை போனில் அழைத்துப் பேசினாராம்.  அவர்கள், ‘நீங்கள் அங்கு இருக்கிறீர்கள்.  உங்களுக்குக் கவலை இல்லை.  இந்தியாவில் இருக்கும் எங்களைப் போன்றோருக்குத்தான் கஷ்டம்’ என்றார்களாம்.  கோபாலகிருஷ்ண காந்தி எழுதியது போல் 69 சதவிகித இந்தியர்கள் மோடியின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை; அதனால் பா.ஜ.க.வுக்கு ஒட்டுப் போடவில்லை.

இவர்கள் எல்லாரும் பயந்தபடியே மோடி ஆரம்பத்திலேயே நடந்துகொள்கிறாரோ என்று பயமாக இருக்கிறது.  முஸ்லீம்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ஈத் பண்டிகையன்று இந்திய முஸ்லீம்கள் அனைவரையும் மனமார வாழ்த்தி முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் மற்றும் மதத் தலைவர்களுக்கும் பிரதம மந்திரி விருந்து கொடுக்கும் பழக்கம் நெடுநாளாக இருந்து வருகிறது.  பா.ஜ.க.வைச் சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட இந்த வழக்கம் பின்பற்றப்பட்டது.  பதவி ஏற்ற புதிதிலேயே ஏன் இந்த வழக்கத்தை மோடி கைவிட்டார் என்று தெரியவில்லை.  அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களும் அவருடைய ஆதரவாளர்களும் அவர் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் முஸ்லீம்களை வாழ்த்தத் தவறவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.  டி.வி.யிலோ ரேடியோவிலோ அல்லது பத்திரிக்கை மூலமோ அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்குச் சமமாகுமா இது?

modi-offers-2-500-kg-of-sandalwoodஈத்தின் மறுநாளே நேபாளத்திற்குச் சென்ற மோடி அங்குள்ள பழமையான இந்துக் கோவில் ஒன்றிற்கு 2,500 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகளும் 2,400 கிலோ எடையுள்ள நெய்யும் அன்பளிப்பாக அளித்திருக்கிறார்.  இவை இரண்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?  முப்பது கோடி ரூபாய்.  இந்தப் பணம் எங்கிருந்து வந்தது?  அவ்வளவும் இந்திய மக்களின் வரிப் பணம்.

மோடி காவி உடை தரித்து ருத்திராட்ச மாலை அணிந்து கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.  மேலும் தன்னோடு அதிகாரிகள் யாரையும் அழைத்துச் செல்லவில்லையாம்.  மோடி ஒரு பெரிய இந்து மத பக்திமானாக இருக்கலாம்.  அதற்காக இந்தியாவின் பிரதம மந்திரியாகச் சென்றபோது ஒரு தனி மனிதன் செல்லும்போது நடந்துகொள்வது போல் நடந்துகொள்ளவேண்டுமா?  அப்படித் தனி மனிதனாகச் சென்றால் இந்திய அரசின் நன்கொடை எதற்கு?  இந்திய மக்கள் அனைவரின் நலன்களையும் பேண வேண்டிய இந்தியப் பிரதமர் இந்திய முஸ்லீம்களை பெயருக்கு வாழ்த்திவிட்டு வெளிநாட்டில் இருக்கும் ஒரு இந்துக் கோவிலுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரிவழங்கியிருப்பது எல்லோர் கண்களையும் உறுத்துகிறதே.

அவருடைய ஆதரவாளர்கள் சிலர் முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை போவதற்கு இந்திய அரசு எவ்வளவு பணம் செலவழிக்கிறது என்று கணக்குக் கொடுக்கிறார்கள்.  அதுவும் இதுவும் ஒன்றா?  இவர்கள் இந்தியக் குடிமக்கள்.  இவர்களுக்குத் தங்கள் புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட இந்திய அரசு பணம் கொடுத்து உதவக் கடமைப்பட்டிருக்கிறது.  இன்னொரு நாட்டின் கோவிலுக்கு –  அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கூட இல்லை – முப்பது கோடி ரூபாய் வழங்கியிருப்பது எந்த நியாயத்தில் சேர்த்தி?

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த சிவசேனாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் அங்கு தயாரித்த உணவு நன்றாக இல்லை என்று புகார் செய்து அங்கிருந்த சமையல் ஊழியர் வாயில் அந்த உணவை வலுக்கட்டாயமாகத் திணித்திருக்கிறார்கள்.  அவர் ஒரு முஸ்லீம்; நோன்பு இருந்துவந்தார்.  அவரை இப்படித் துன்புறுத்தலாமா?  இதைப் பற்றி பிரதமர் மோடி எதுவும் சொல்லவில்லை.  இந்த நிகழ்ச்சியைக் கண்டித்து அவர் ஏதாவது சொல்லியிருந்தாலல்லவா இனி இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடக்காமல் இருக்கும்.

ஏற்கனவே கிறிஸ்தவர்களாகவும் முஸ்லீம்களாகவும் இருக்கும் இந்தியர்களை பா.ஜ.க. மகளிர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் திரும்பவும் இந்து மதத்திற்குக் கொண்டுவரப் போகிறார்களாம்.  ஏன் இந்த வேண்டாத வேலை?  பல தலைமுறைகளுக்கு முன்பே இவர்கள் மதம் மாறியவர்கள்.  அப்போது ஒரு வேளை அவர்களில் சிலர் இஷ்டத்திற்கு மாறாக மதம் மாற்றப்பட்டிருக்கலாம்.  ஆனால் பல தலைமுறைகளாக அவர்கள் இந்த மதங்களைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.  அவர்களை இப்போது மறுபடி மதம் மாறச் சொல்வது சரியா?  அப்போது நடந்த அநியாயத்தை மறுபடி நடத்த வேண்டுமா?  அவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்காக இப்போது நாமும் செய்ய வேண்டுமா?

மோடி அவர்களே, இந்திய முஸ்லீம்களைப் புறக்கணித்துவிட்டு  நேபாளத்தில் உள்ள ஒரு இந்துக் கோவிலை இவ்வளவு தூரம் ஆதரிப்பது சரியில்லை என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?  தாங்கள் புறக்கணிக்கப்படுவோம் என்று பயந்த முஸ்லீம்கள் நினைத்தது சரிதான் என்பது போல் நடந்து கொள்ளலாமா?  ‘நீங்கள் பயந்தது போல் எல்லாம் நடக்காது.  நான் இந்தியப் பிரதம மந்திரி என்ற முறையில் எல்லோரின் நண்பன்’ என்று காட்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டாமா?

படம் உதவிக்கு நன்றி: http://www.business-standard.com/photo-gallery/current-affairs/modi-s-nepal-visit-1087.htm

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (2)

 1. Avatar

  எதிர்பார்து ஏமாறும் போது தான் வருத்தங்கள் அதிகம் வரும். கட்டுரையில் சொல்லி உள்ளது போல் இந்திய முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டு அச்சப்பட்டே இருக்கிறார்கள் மோடியின் ஆட்சியில்.

  குஜராத்தை முன் மாதிரியாகக்கொண்டு இந்நியாவை உருவாக்க போகிறார்  பிரதமர் மோடி என அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். சொன்னது போலவே 13 வருடமாக  குஜராத் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து சொல்லாதவர் இந்த ஆண்டு இந்திய முஸ்லீம்களுக்கு சொல்லவில்லை. 

  தேர்தல் முடிவுகள் வெளியான அதே மே 16 அன்று குஜராத் கலவரம் காரணமாகசிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 முஸ்லீம் கைதிகளை அ ர்கள் அப்பாவிகள் என்று கூறி டில்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பட்நாயக், கோபால கவுடாஇருவரும் அவர்களை விடுதலை செய்தனர். இந்த முக்கியமான தீர்ப்பு தேர்தல் முடிவு செய்திகளாலும் பிற கடசிகளின் தோல்வி நிலையாலும் யாராலும் கண்டு கொள்ளப்படாமல் சாதாரண செய்தி போல் கடந்து போனது.

  குஜராத் கலவரம் யாவரும் அறிந்ததே.  அங்கு மத சார்புக்கு உட்பட்டு குஜராத் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய பயங்கரவாத குற்றங்கள் அனைத்திற்கும் அடிக்கொள்ளியாக இருந்நது மோடி அவர்களுக்கு இந்த மத சார்பு தான்.அதற்கு அதே மதசார்பான அத்தனை ஊடகங்களும் பக்கபலம் தந்தன.

  இந்திய முஸ்லீம்களுக்கு என்று இல்லாமல் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அவர் சார்ந்த கட்சியின் சார்பாக தேர்தலில் நின்ற அத்தனை முஸ்லீம் வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இந்த முஸ்லீம் வேட்பாளர்கள் நின்ற தொகுதியில் மட்டும் மோடி அலை வீசவில்லையா.அல்லது தோற்கடித்துவிட்டார்களா.

  இப்போது இந்திய பெரு நகரங்களில் பள்ளிவாசல் மைக்கில் பாங்கு சொல்லக்கூடாது சத்தம் வெளியில் கேட்ககூடாது என வாய் மொழி உத்தரவு போடுகிறார்கள். இந்த இடத்தில் சிங்கப்பூரைப்பற்றி ஒரு தகவல் சொல்கிறேன்.

  பல ஆண்டுகளுக்கு முன்பு சிங்கை பிரதமர் லீ குவீன் யூ விடம் சீன சங்கங்கள் ஒன்று சேர்ந்து அதிகாலை 5 மணிக்கெல்லாம் பள்ளி வாசல்களில் சத்தம் போட்டு பாங்கு சொல்லி தூக்கம் கலைக்கிறார்கள் ஆகவே மைக்கில் பாங்கு சொல்வதற்கு தடை போடுங்கள் என்றனர். லீ குவானும் சீனர் தான். அதை ஏற்காத லீ குவான் அதிகாலை 5மணிக்கு மேலும் தூங்குபவன் சிங்கை குடிமகனாக இருக்க தகுதியில்லாதவன் அவன் இந்த நாட்டை விட்டு வெளியைறிவிடலாம் என்றார். அதனால் தான் அவர் பெயர் இன்றும் வாழ்கிறது.

  மோடி அவர்கள் தான் சார்ந்த கட்சிக்கு அதன் கொள்கைகளை பிரபலப்படுத்தி அந்த கட்சிக்கு நல்ல தலைவராக இருக்கட்டும். அதை நாட்டின் பிரதமராக இருந்துக் கொண்டு செய்ய வேண்டாம். சீக்கியர், கிருஸ்துவர், முஸ்லீம் போன்ற சிறு பான்மை இனத்தவரின் அச்சம் விலக்கி அவர்களையும் இணனத்துக்கொண்டு நல்ல நிர்வாகி என பெயர் எடுத்த மோடி அவர்கள்  நல்ல வலிமையான பாரதத்தை உருவாக்கி மத சார்பற்ற மா மனிதன் என பெயர் பெறட்டும்.

 2. Avatar

  அருமையான க‌ருத்துக்கள்… கட்டுரையாளர் பாரபட்சமின்றி, மிகவும் நேர்மையாக கட்டுரை வரைந்திருக்கின்றார். சகோதரர் அமீர் சுட்டியதும் மிகச் சரியே!.. நாட்டின் பிரதமர், அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லுதல் அவசியம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க