-செண்பக ஜெகதீசன்

ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு. (திருக்குறள் – 215: ஒப்புரவறிதல்)

புதுக் கவிதையில்…

குளம்நிறை நீரும்
குறைவின்றி உதவும் பலர்க்கும்,                  Pond
குடிப்பதற்கே.

பிறர்க்குதவும் பேரறிவாளன்
பெற்ற பெருஞ்செல்வமும்
பேருதவியாயிருக்கும்
பலருக்கும் – குளத்துநீர் போல…!

குறும்பாவில்…

உதவிடும் குணமுடையோன் செல்வம்,
குடிநீர் நிறைந்த
குளம் போன்றதே…!

மரபுக் கவிதையில்…

குடிநீர் குளத்தில் நிறைந்திருந்தால்
குடித்துப் பலரும் பயன்பெறுவர்,
அடுத்து வந்திடும் மாந்தரவர்
அல்லல் அகற்றிட மனம்போலக்
கொடுத்தே உதவிடும் உளமுடைய
கொள்கை யாளர் கைப்பொருளும்,
எடுத்துக் குடிக்கும் நீர்நிறைந்தே
எல்லார்க் குதவும் குளமாமே…!

லிமரைக்கூ…

பலர்க்கும் உதவியாயிருக்கும் குடிநீருடன் குளம்,
இதற்கு ஒப்பாரே
பணமுடையோர், கொண்டிருந்தால் பிறர்க்குதவும் உளம்…!

கிராமிய பாணியில்…

கொளத்தப்பாரு கொளத்தப்பாரு
நல்லதண்ணி கொளத்தப்பாரு,
நமக்கு ஒதவும் கொளத்தப்பாரு…

தண்ணி நெறஞ்ச கொளத்தப்பாரு
தாகந் தீக்கும் கொளத்தப்பாரு
தாயா ஒதவுங் கொளத்தப்பாரு…

கொளம் நெறஞ்ச தண்ணிபோல
கொணம் நெறஞ்ச மனுசன்பணம்
கெடச்சிடுமே எல்லாருக்கும்
ஒதவிடுமே ஊருக்கெல்லாம்!

கொளத்தப்பாரு கொளத்தப்பாரு
மனுசன்
கொணத்தப்பாரு கொணத்தப்பாரு…!   

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குறளின் கதிர்களாய்…(34)

  1. புதுக்கவிதையும், லிமரக்கூவும் அழகாய் சொல்கிறது இந்த வாரம்.

  2. குறளின் கதிர்களுக்குத் தொடர்ந்து கருத்துரை வழங்கிச்
    சிறப்பித்துவரும் நண்பர் அமீர் அவர்களுக்கு
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *