Blog

  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8

    தேமொழி

     

    புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது
           பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
    கள்ளால் மயங்குவது போலே – அதைக்
           கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.       

    தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
    தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.

    கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை
    -பாரதியார்

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7>>

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் 9

    திவாகர்

    தமிழிலே பல நகைச்சுவை கதைகள் ஆதியிலிருந்தே உண்டு. மகாகவி பாரதி நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பது அவர் கவிதைகளிலே மிகச் சிறந்த இடத்தைப் பெற்ற குயில் பாட்டு ஒன்றினைப் படித்தாலே போதும். மனிதன் ஒருவனே நகைச்சுவையை ரசிக்கத் தெரிந்தவன், அதை உணர்ந்து வெளிக்காட்டி சிரிக்கத் தெரிந்தவன். காந்தியடிகள் வாழ்க்கையில் நகைச்சுவைக்கு மிகப் பிரதானம் உள்ளது. கடுமையான எண்ணம் கொண்ட எதிரிகளைக் கூட உண்மையான புன்னகையோடு எதிர்கொண்டால் அவனை இம்சிக்காமலே வெற்றி கொள்ளமுடியும் என்பார்.. அஹிம்சாவாதியல்லவா.. அதே போல பக்தியால் நாம் மனமுருகிப்பாடும் தேவாரத்தில் கூட அப்பர் பெருமான்  ”வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட்டேனே (உள்ளத்திலேயே நீ இருக்க வெளியே எல்லாம் உன்னைத் தேடுவது கண்டு எனக்குள்ளே வெட்கப்பட்டு விலா எலும்பு விரிய சிரித்தேன்) என்று  கூட சிரிப்பதில் உள்ள சுகத்தைப் பாடுவார். எத்தனை சீரியஸான ஆசாமியையும் நல்லதொரு நகைச்சுவை கொண்டு சிரிக்க வைக்கமுடியும் அப்படி சிரிக்கவில்லையென்றால் அவன் மனிதப் பிறவியே அல்ல. சிரிப்பினால் ஆயுள் பெருகும். மனம் விட்டு சிரிக்க சிரிக்க உடலிலிருந்து கெட்ட வாயுக்கள் வெளியே வருகின்றன.

    எல்லா எழுத்தாளர்களுமே முடிந்தவரை நகைச்சுவையை தம் எழுத்தில் காண்பிக்கதான் வேண்டும். அப்படிக் காண்பிக்கத்தான் செய்கிறார்கள். எளிய நகைச்சுவையின் ருசியே ஒரு தனி விருந்து. அதை அனுபவித்துப் படிப்பதே ஒரு சுகம்.

    கல்கியின் கதைகளில் மிகப் பெரிய புகழ் பெற்ற பொன்னியின் செல்வனில் கூட அந்தக் கதாநாயகனான அருள்மொழிவர்மனை விட வந்தியத் தேவனும், ஆழ்வார்க்கடியானும் அதிகம் பேசப்படுகிறார்கள். காரணம் நகைச்சுவையோடு அந்தப் பாத்திரங்களை வாசகர் நெஞ்சங்களை நிரப்பியதுதான். அப்படித்தான் சுஜாதாவின் புகழ்பெற்ற ‘கணேஷ்-வசந்தில்’ வசந்த் மூலம் படைக்கபபட்டிருக்கும் நகைச்சுவை மட்டும் இல்லாவிட்டால் இரு பாத்திரங்களுக்குமே ஒரு மிகப் பெரிய ரசனை கிடைத்திருக்காதுதான். ஆனால் சென்ற நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை நாயகன் யாரென்றால் அது நிச்சயமாக தேவனின் ‘சாம்பு’தான்.

    சாம்பு பாத்திரம் படைக்கப்பட்ட காலத்தைப் பற்றி முதலில் சொல்லவேண்டும். இரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடைபெற்ற 1942 ஆம் ஆண்டில் தேவன் ‘துப்பறியும் சாம்பு’ எழுதினார். அந்தக் கால கட்டத்தில் தேசத்தில் உலக மகா யுத்த பயமும், பிரிட்டிஷாரின் மீதான கோபமும், யுத்தகாலமாதலால் அத்தியாவசியப் பொருட்கள் பஞ்சமும், இந்த யுத்தத்தைக் காரணம் காட்டி அரசாங்கத்தின் அச்சுறுத்தலும் இதற்கும் மேல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்டமான ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்துடன் விதேசப் பொருட்களையும் பகிஷ்கரித்த நாட்கள் அவை. நிச்சயமாக சாதாரண பொதுமக்கள் நிம்மதியில்லாமல் வாழ்ந்த நாட்களாக அந்தக் கால கட்டத்தை நாம் காட்டலாம். இரண்டாம் உலக யுத்தத்தில் இங்கிலாந்து பல தோல்விகளை சந்தித்த காலமாதலாலும், உலகத்தின் தலைநகரமாகக் கருதப்பட்ட லண்டன் மாநகரமே அபாயக் கட்டத்தில் இருந்ததாலும் பிரிட்டிஷார் பாரதமக்கள் மீது எவ்வித தயாதாட்சண்ணியமும் காண்பிக்காத சிரமமான நாட்கள் என்றே சொல்லவேண்டும். யுத்தத்தில் பாரதம் நேரடியாக அவ்வளவாக பாதிக்கப் படவில்லையே தவிர, யுத்தகால கஷ்டங்கள் என்னென்ன உண்டோ அனைத்திலும் தேசம் முழுவதும் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தது என்றுதான் தெரியவருகிறது. இப்படிப்பட்ட விசித்திரமான சூழ்நிலையில்தான் தேவனின் மூளையில் சாம்பு தோன்றினான். துப்பறியும் சாம்பு எனும் பெயரில் ஆனந்த விகடனில் தொடராக எழுதவும் ஆரம்பித்தார். பின்னாளில் அந்த கதை பெரும் புகழ் அடையப் போகிறது. அந்த சாம்பு தமிழர்களின் ஹாஸ்ய உணர்ச்சியில் திக்கு முக்காடி மிகப் பெரிய நாயகனாய் வலம் வரப் போகிறான் என்பதை தேவன் அன்று உணர்ந்திருப்பாரோ என்னவோ..

    இதில் விசேஷம் என்னவென்றால் தேவனால் தோற்றுவிக்கப்பட்ட தலைசிறந்த நகைச்சுவைக் கதையின் நாயகனான ‘துப்பறியும் சாம்புவுக்கு’ தெரியாத கலை ஒன்று உண்டு என்றால் அது ‘துப்பறிவதுதான்’. தேவன் துப்பறியும் சாம்புவை எப்படி அறிமுகம் செய்கிறார் – சற்று படியுங்களேன்.

    ‘நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாகவே இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்’ என்று யாரோ -முட்டாள்தனமாக அல்ல- சொல்லிவைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகி இருந்தது. அவனை எல்லோரும் பார்த்த மாத்திரத்தில் ‘முட்டாள்’ என்றார்கள்.

    ‘விளாம்பழம்’ பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாக காதுகளை முன்புறம் வளைத்துக்கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரி காதுகள்… கண்கள் ஒருமாதிரி அரைத்தூக்கத்தைத் தேக்கிகொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை.. ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளை சேர்த்துகொள்ளுங்கள்.. இதோ சாம்பு பிரத்தியட்சமாகிவிட்டான்..”

    தேவன் இப்படித்தான் ஒரு கதாநாயகனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.. பின்னாளில் இதே தொடரில் போகப் போக மிகப் பிரபலமாகி தன் ஆடை அலங்காரங்களை சற்று மாடர்னாக சாம்பு மாற்றிகொண்டாலும் அவன் முட்டாள்தனம் மட்டும் அவனோடு அப்படியே ஒட்டிகொண்டுவிட்டதை தேவன் அழகாக விவரிப்பார் கதை முழுதும். ஏனெனில் சாம்புவின் முட்டாள்தனம்தான் அவன் பலம். அவன் புத்திசாலியாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு அவன் ஈடுபடும் காரியங்கள் அனைத்தும் அவனுக்கு மாபெரும் தோல்வியை – அவன் ஒருவன் மட்டுமே அறியும் விதத்தில் – அடைவதையும் ஆனால் அதிர்ஷ்ட தேவதை அவனை அணைத்துக் கொண்டு வெற்றியின் உச்சியை அடைவதையும் மிக அழகாக விவரித்திருப்பார் தேவன்.

    துப்பறியும் சாம்பு வின் சித்திரமே விசித்திரம். தேவனின் பல கதை, கட்டுரைத் தொடர்களுக்குச் சித்திரங்கள் வரைந்தவர் ராஜு. ‘துப்பறியும் சாம்பு’வின் சித்திரத்துக்கு உயிரூட்டியவர் அவரே. பிறகு, விகடனில், தேவனின் மறைவுக்குப் பின், 1958 ஆம் ஆண்டில்‘சாம்பு’ ஒரு சித்திரத் தொடராக வந்தபோது ‘கோபுலு’ படங்கள் வரைந்தார் (நன்றி, பேராசிரியர் பசுபதியின் வலைப்பூ).மேலும் திரு பசுபதி எழுதுகையில் இப்படிச் சொல்கிறார்.

    தேவனின் ’துப்பறியும் சாம்பு’ தமிழ் நகைச்சுவை இலக்கியத்தில் தனித்தன்மையுடன் விளங்கும் ஒரு சிறுகதைத் தொடர். ஆகஸ்ட், 30, 1942 -இல் “ஆனந்த விகடனில்” தொடங்கிய அந்தத் தொடரைப் பற்றிய சில சுவையான தகவல்களைத் ‘தம்பி’ ஸ்ரீநிவாசன் தருகிறார்:

    “ சாம்புவை வைத்து முதலில் ஒன்பதே கதைகளை ‘தேவன்’ எழுதினார். பின்பு வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க, மேலும் ஒன்பது கதைகளை எழுதினார். ஆனால், பொதுமக்கள் சாம்புவை அதிகமாக எதிர்பார்க்கவே திரும்பவும் இருமுறை சாம்பு கதைகளைத் தொடர்ந்தார். மொத்தம் 50 சாம்பு கதைகள் வெளிவந்துள்ளன. சாம்பு கதைகள் எழுது முன்பு “கோபாலன் கவனிக்கிறார்’ என்ற ஒரு சிறு துப்பறியும் தொடரையும் எழுதினார்” (https://groups.google.com/forum/?fromgroups=#!topic/yappulagam/Dqqb2UWCkag)

    பின்னாட்களில் எஸ்.எஸ். வாசனின் ஜெமினி நிறுவனம் எடுத்த  ’மோட்டார் சுந்தரம் பிள்ளை’ எனும் திரைப்படத்தில் சாம்புவின் ஆக்கம் பயன்படுத்தப்பட்டது. சாம்பு கதைகளில் வந்த நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தாமல் சாம்புவின் டெக்னிக் மட்டும், (அதாவது சாம்புவின் முட்டாள்தனம், அப்பாவித்தனம், அதிர்ஷ்டம் இந்த மூன்றும் கலந்த கலவை) பயன்படுத்தப்பட்டது. படத்தில் கதாநாயகனாக நடித்த சிவாஜியின் மருமானாக வரும் நாகேஷ் அந்தப் பாத்திரத்தில் மிக இயற்கையாக நடித்தார். அதற்கு அவர் உடல் வாகு கூட பயன்பட்டது என்றே நினைக்கிறேன். தேவன் தன் கடைமூச்சு வரை விகடனில் பணியாற்றியதால் அவருடன் அவர் பாத்திரப்படைப்புகளும் சேர்ந்து ஜெமினி நிறுவனத்தாருக்கு சொந்தமாகப் பட்டதோ என்னவோ தேவன் கதையோ சாம்புவோ இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டதாக டைட்டிலில் காண்பிக்கவில்லை. (கோமதியின் காதலன்’ படத்தில் மிக அழகாக ‘கதை – தேவன் – ஆனந்தவிகடன்’ என்று பிராண்ட் கொடுத்து டி.ஆர். ராமச்சந்திரன் டைட்டில் போட்டிருந்தார் என்பதையும் நினைவில் கொள்க.) ஆனால் மோட்டார் சுந்தரம் பிள்ளையில் தேவன் பெயர் இல்லாவிட்டால் என்ன, அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளிவந்த அத்தனை பேரும் நாகேஷ் வடிவில் மறுபடியும் தேவனின் ‘சாம்பு’ வைப் பார்த்த திருப்தியை அடைந்தார்கள் என்றே பேசப்பட்டதும் உண்டு.

    தேவன் உயிருடன் இருக்கும் காலத்திலேயே அவரே சாம்பு நாடகத்துக்கான வசனத்தையும் எழுதி இருக்கிறார். அவர் காலத்திலேயே சாம்பு நாடகமும் பலமுறை மேடையேற்றப்பட்டது. என்.எஸ் நடராஜன் என்கிற தேவனின் நண்பர் சாம்பு வேஷம் போட்டதாலேயே சாம்பு என்.எஸ். நடராஜன் என்று அறியப்பட்டதாக பேராசிரியர் பசுபதி எழுதியிருக்கிறார். (இவருடைய நாடக போஸ்டர் ஒன்று 1962 இல் வெளியானது, படமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது). தேவன் கைப்பட எழுதிய  நாடகமாக்கப்பட்ட ஆக்கத்தைக் கூட பேராசிரியர் பசுபதி தன் வலைப்பூவில் பதிப்பித்துள்ளார். சாம்பு பின்னாளில் தூரதர்ஷனில் தொடராக வந்தது. காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாக நடித்தார். மேலும் பல நாடகக்குழுக்கள் சாம்புவைப் பயன்படுத்திக் கொண்டன.

    துப்பறியும் சாம்புவில் சென்னையின் முக்கியமான இடமான மாம்பலம் வெகுவாகப் பேசப்பட்டது. திருநீர்மலை, பாரீஸ்கார்னர், (டவுன்) எழும்பூர், செண்ட்ரல் போன்ற இடங்களைப் பற்றிய வர்ணனை அவ்வப்போது வரும். கும்பகோணம் சற்று பிராபல்யம் பெற்றது என்றும் சொல்லலாம். சாம்புவின் கீர்த்தி மேலும் பெருக பெருக பெங்களூர், பம்பாய், லண்டன் போன்ற நகரங்களுக்கும் சாம்புவை அனுப்பி அந்தந்த நகரங்களின் அப்போதைய நிலையையும் நமக்கு அறிமுகம் செய்தார். 1940 களில் இந்த இடங்கள் எப்படி இருந்தன என்பதும் நாம் அறிய உதவுகின்றன.

    சாம்புவின் கதைகள் மூலம் மிக வேகமாக மக்கள் மனதில் பதிந்த இன்னொரு பாத்திரம் இன்ஸ்பெக்டர் கோபாலன். பாவம்! இவரைப் பொருத்தமட்டில், பார்வைக்கு முட்டாள் போல தெரிந்தாலும் சாம்புவைப் போல ஒரு உயர்ந்த, திறமை மிக்க துப்பறிபவர் இந்த உலகத்துலேயே கிடையாது என்ற எண்ணம் உண்டு என்பதால் அதிகாரபூர்வ மற்றும் அதிகாரபூர்வமில்லாத ரகசிய வழக்குகளிலெல்லாம் சாம்புவை சிக்க வைத்து சாம்பு ஒன்றும் புரியாமல் வேடிக்கைப் பார்த்து ஏதோ செய்து தொலைக்க அதுவே கடைசியில் வெற்றியில் கொண்டுவிட, ஒவ்வொரு நிகழ்ச்சியும் அலுப்பு தட்டாமல் கொண்டு செல்லும் தேவனின் எழுத்துத் திறமையை எவ்வளவுதான் மெச்சினாலும் தகும்.

    தேவன் எப்படி சாம்பு பாத்திரத்தைப் படைத்தாரோ அதற்கு நேர் மாறாக கும்பகோணத்து வேம்புவை சிருஷ்டி செய்து, அவளை சாம்புவின் மனைவியாக்கி, அந்த மனைவிக்கு உண்மையான முட்டாள் சாம்புவை புரிய வைத்து அவள் மூலம் ஏகப்பட்ட கிண்டல்களும் அதே சமயம் சிருங்காரக் கொஞ்சல்களுக்கும் குறையில்லாமல், பஞ்சமில்லாமல் வாசகர்களுக்கு விருந்து படைத்தார். பின்னர் சாம்புவுடன் அவனுக்குப் பிறந்த சுந்துவும் சேர்ந்துகொண்டு அவனறியாமல் அவன் வழக்குக்கு உதவுவதையும் தேவன் விவரிப்பார். அதே சமயம் சமூகத்தின் பல அங்கங்களில் கதையை நகர்த்தி, சமூகங்களில் பரவலாகத் தெரிகின்ற அந்தக் கால நிக்ழ்வுகளை ஒவ்வொரு கதையிலும் வாசகருக்கு தன் பாணியில் தேவன் அறிமுகப்படுத்துவார். ஒவ்வொருவரின் உண்மை சுபாவம் அல்லது இயல்பினை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டும்போது நகைச்சுவையை அவர் எந்த அளவுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தி உள்ளார் என்கிற விவரம் புரியும்.

    இந்த சாம்பு-வேம்பு கலாட்டா இருக்கும் ஒரு கதையைத்தான் பார்ப்போமே

    ‘படங்களுக்கு நன்றி: பேராசிரியர் பசுபதி”, கனடா.

    Share
  • நிறைகுடம்

    பழமைபேசி

    செம்மாந்து போயிருந்தேன். என்றுமில்லாதபடிக்கு அன்றைய நாளில் மண்ணின் மீதிருக்கும் பாசம் பொத்துக் கொண்டு வழிந்தோடியது. வெளியுலகமே அறியாத உள்ளோங்கிய கிராமத்தில் மக்களொடு மக்களாய், மண்ணோடும் மண்ணடி வேரோடும், நாகரிகம் என்பதையெல்லாம் சட்டை செய்யாமல் ஓடித் திரிந்தவன். பதினாறு ஆண்டுகளாய் புலம் பெயர்ந்த மண்ணில் தட்டுத்தடுமாறி முட்டி மோதித் திரிகிறேன். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனத் திரிய முற்பட்டாலும் போகவிட்டுச் சுண்டி இழுக்கிறது மண் வாசம்.

    ஆறு மணிக்குத்தான் வரச் சொல்லி இருந்தார்கள். எங்கோ கத்திய கிடாயின் குரல் கேட்டுக் கிடைகொள்ளாமல் இருக்கும் பால் வற்றிய ஆடு போலத்தான் எனக்கும் கிடை கொள்ளவில்லை. மனையாளையும் குழைந்தைகளையும் பிந்திச் சில நேரம் கழித்து வாருங்கள் எனச் சொல்லிவிட்டு, அடுத்த இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த மேரியாட் வளாகத்திற்கு ஏகினேன்.

    முன்கூட்டிச் சென்றமைக்குப் பல காரணங்கள். ஆயினும் இது முதன்மையானது. நான் ஊரிலிருந்து புறப்படுமுன்னமே அறிவுறுத்தப்பட்டு இருந்தேன். ”ஐயா அவர்கள் வருகிறார்கள். நான் உடனிருந்து எல்லாப் பணிவிடையும் செய்யக் கடமைப்பட்டவள். ஆனால் என்னால் வர இயலாது. ஆகவே நீங்கள் அது குறித்துக் கடமையாற்ற வேண்டும்!” என அன்புத் தமிழுள்ளம் ஒன்று எம்மைப் பணித்திருந்தது.

    வளாகத்தில் நுழைகையில், யாதோ ஒரு திருமண விழாப் பந்தலுக்குள் நுழைவதாயும் உற்றார் உறவினர் இருக்க வளாகத்தைச் சுற்றிலும் எஞ்சோண்டுப் பிள்ளைகளோடு ஓடித்திரியலாமெனும் புளகாங்கித வேட்கைத் துள்ளலுடனும் மனம் ஆர்ப்பரித்தது.

    முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழா, இது ஒரு தமிழ் விழா என்கிற வகையில் விழா ஏற்பாடுகளுக்கும் எம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டுமெனக் கருதி வருவோரை வரவேற்பதற்கான முகாமையில் போய்ச் சேர்ந்து கொண்டேன். அங்கே கட்டுக் கட்டாய் விழா மலர்கள். அதிலொன்றை எடுத்துப் பார்த்து இன்பமுற்றுக் கொண்டிருந்தேன். அதற்கொரு காரணமும் உண்டு. விழா மலருக்காகப் பணி புரிந்தவர்களுள் நானும் ஒருவன். மலரில் இடம் பெற்றிருந்த படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்தேன். ஓரிருவர் வந்து மலர் நன்றாக வந்திருப்பதாய்ச் சொல்லிப் பாராட்டினார்கள். தலைதாழ்ந்து பணிவோடு நன்றி அறிதலைப் பணித்தேன்.

    ஐயா அவர்களும் எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களும் உள்நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கண்டதும், இருந்ததை இருந்தபடியே கிடத்தி விட்டு ஓடோடிச் சென்று எம் வணக்கத்தை உரித்தாக்கினேன். அமைதியான பாங்கும், அதிர்வற்ற குரலும் எம்மை நிலைகுலையச் செய்தன. அரசியல்வாதி என்றாலே உரத்துப் பேசுவதும், அதிர்வை வெளிப்படுத்துவதும், மேட்டிமையைப் பகர்வதும் என்றில்லாமல் அப்படியானதொரு கள்ளங்கபடமற்ற சிரிப்போடு உள்ளே வந்து கொண்டிருந்தார்.

    ஓடிச் சென்று இருக்கைகளைப் பறித்துக் கொண்டு வந்து முன்பக்கமாகவே இட்டு அமரும்படி வேண்டினேன். அந்தச் செய்கையை அவர் அவ்வளவாக இரசித்திருக்கவில்லை. ”இதெல்லாம் என்ன பழக்கம்? நானே எடுத்துக்குவனே??”, மெய்முழுதும் கூசியது எனக்கு. போ என்றவுடன் போய்விடுமா தொட்டிற்பழக்கம்?!

    குடிக்கத் தண்ணீர் கொடுத்து விழாவினுடைய சிறப்பு விருந்தினருக்குக் கொடுத்துச் சேர வேண்டிய நுழைவுச் சீட்டுகள், குறிப்பேடுகள், விழா மலர் உள்ளிட்ட புரவுப்பை(souvenir)யை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தோம். இன்முகத்தோடு வாங்கி வைத்துக் கொண்டு, உள்ளீடுகளை எல்லாம் ஆய்ந்தபடி ஒவ்வொன்றும் எதற்கு உரிய சீட்டுகள் போன்ற தகவலைக் கேட்டறிந்து கொண்டார்.

    தமிழ்விழாவுக்கு வரும் முதன்மை விருந்தினர்களை வரவேற்று,  அவர்கள் தங்கியிருக்கும் வரையிலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கும் நேரப்பராமரிப்பினைப் பேணுவதற்கும் ஓம்புநர்களை நியமிப்பது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மரபாகும். அதன்படி, நானே அவருக்கான ஓம்படையாளனாக இருப்பது என்றும், அது எமக்குக் கிட்டிய வாழ்நாள்ப் பேறும் என்றும் எண்ணிக் கொண்டேன்.

    வரவேற்பு நிகழ்ச்சியின் போது தமிழிசை நிகழ்ச்சி இடம் பெற்றது. தனக்கு எப்போதுமே தமிழிசையின்பால் நாட்டம் உண்டென்று சொன்னவர், நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே சென்று அமர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட ஐம்பது சிறார்கள் தமிழிசையை இசைத்தார்கள். பாடிய குழந்தைகளை எல்லாம் பாராட்டி ஊக்கமூட்டி எழுச்சியூட்டினார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எனது மகளையும் அவர் வாழ்த்தியதில் நானும் என் மனைவியும் மிகுந்த இன்பம் கொண்டோம்.

    வரவேற்பு நிகழ்ச்சியின் போது கூட்டநெரிசலும் இரைச்சலும் வெகுவாக இருந்தது. அது கண்டு இவர் என்ன நினைப்பாரோவென மனக்கிலேசம் கொண்டிருந்தேன் நான். ஆனால் அவர் அதைக் கண்டு பெரிதும் உவகையுற்றார். ஊரு விட்டு ஊரு வந்து, அதுவும் அமெரிக்காவில் இவ்வளவு தமிழர்களா? “நம்மூருக் கோயில் திருவிழா மாதிரி இருக்கு. நான் ஊர்லயே இந்த மாதிரிப் பார்த்து நாளாச்சு” எனச் சொல்லி மக்களோடு மக்களாகத் தன்னையும் இணைத்துக் கொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது.

    பணிவுக்கு இலக்கணம் ஐயாதான். அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகரிக்கிறது என்றால் அதற்கென்று ஒரு விலை இருக்கத்தானே செய்யும்? தமிழ்விழாவுக்கு இவரை அழைப்பது என்ற பேச்சு மேலெழுந்தவுடனேயே பெரும்பாலானோர் சொன்னது இதுதான். “அவ்ளோ பெரிய கம்யூனிஸ்டுக்கு விசா கிடைக்குமா? அதுவும் அமெரிக்க விசா?! வாய்ப்பே இல்லை!!” என்றார்கள். ஆனால் நடந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

    ஐயா அவர்களுடைய உள்புகலுக்கான விண்ணப்பம், மற்ற விருந்தினர்களுடைய விண்ணப்பத்தினொடு மற்றொன்றாக முகவர் ஒருவரின் வழியாக அமெரிக்கத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. தூதரகத்தின் மூத்த செயலாளரும் தூதரகத்தில் பணியாற்றும் பொருளாதார நிபுணருமாக இருவரும் ஐயா அவர்களின் வீட்டுக்கே வருகை தந்து, உள்புகலுக்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து உரிய மரியாதையையும் சிறப்பையும் அளித்துச் சென்றார்கள்.

    தமிழ்விழாவின் முதல்நாள் நிகழ்ச்சி காலை எட்டு முப்பது மணிக்குத் துவங்கும் என குறிப்பேட்டில் இருப்பதைப் பார்த்துக் கொண்டு, எட்டு மணிக்கெல்லாம் தான் தங்கியிருந்த விடுதியின் முன்றலுக்கு வந்து விட்டார். ஐயா, நிகழ்ச்சி துவங்க நேரம் பிடிக்கும்; ஆகவே கொஞ்சம் தாழச் செல்லலாம் என்றதற்கு மறுத்து விட்டார். “அதனாலென்ன? போயி சனங்களை வேடிக்கை பார்த்திட்டு இருக்கலாம். நாம போயிறலாம்!” என்று வற்புறுத்தியபடியே இருந்தார். பிறகு தனியொரு வண்டியில் கவனகர் கலை.செழியன், திருமிகு கலைச்செல்வன், முனைவர்.பொன்னவைக்கோ முதலியோருடன் விழா வளாகம் சென்றடைந்தோம்.

    முழுநாள் விழாவாக நடந்த அந்த இரு நாட்களிலும், முழு நேரமும் அவையிலேயே இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க விரும்பினார். இணை அரங்குகளாகப் பல நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் ஒரு சிலவற்றுக்கு ஐயாவையும் அழைத்திருந்தனர். பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களை விட்டுப் பிரிய அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை என்பது அவரது முகக்குறிப்பிலிருந்து அறிந்து கொண்டேன். அமெரிக்காவில் இடம் பெற்ற கலை, இலக்கிய நிகழ்ச்சிகளின் மீது அளப்பரிய நாட்டம் கொண்டவரானார். பல்லூடகத் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுத் தாம் மிகுந்த வியப்புற்றதாகவும், இதை எப்படி வடிவமைக்கிறீர்கள் என்றும் பெருவிருப்போடு கேட்டுத் தெரிந்து கொண்டார்.

    எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களது கவனகக்கலை நிகழ்ச்சியின் போது, ஐயாவை இணையரங்கில் இடம் பெற்ற நிகழ்ச்சியொன்றுக்கு சிறப்பாளராக வரச் சொல்லி விழா அமைப்பாளர் அழைத்தார். ஐயா அவர்கள் தயங்கித் தயங்கி வேண்டினார். ஒரு நூற்றாண்டு போற்றும் மாமனிதர் தயங்கி வேண்டுவதைப் பார்க்கும் போது எனக்குக் கண்கள் பொங்கி வழிந்தது. “ஊர்லிருந்து எங்கூடவே வந்தாரு. கூடவே இருக்காரு. ஆசையா என்னோட நிகழ்ச்சியப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க ஐயான்னு சொல்லிட்டுப் போயிருக்காரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். இந்த நேரத்துல கூப்பிடுறீங்களே?”, மனிதர் ஒருவருக்குக் கொடுத்த வாக்கின்பால் கொண்ட பற்றினால் அல்லாடினார்.

    நண்பகல் இடைவேளையின் போது உண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று, முக்கிய விருந்தினர் என்பதால் வரிசையில் நிற்க வேண்டாமேயெனக் கருதினேன். மனிதர் விட்டுக் கொடுத்தாரில்லை. ஐயா, உங்களால் வேண்டுமானால் நிற்கலாம். காலையிலிருந்து இங்குமங்கும் ஓடித்திரியும் என்னால் இயலாது எனச் சொல்லவுமே என்னுடன் வர ஒப்புக்கொண்டார். காரம், இனிப்பு ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார். அதே வேளையில் தனக்கு வேண்டுமென்பதைக் கேட்டு வாங்கி உண்டார்.

    சாதிக்கொடுமைகளைக்கு எதிராக மக்களோடு மக்களாகச் சேர்ந்து போராடியவரின் தமிழ்ப்பற்றினை நாடறியாது. அவர் ஒரு பெரிய எழுத்தாளர். இலக்கியநயம் கொண்டவர். பல நூல்களை எழுதியவர். தமிழ்விழாவில் இடம் பெற்ற கவியரங்க நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் என்னை அரங்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்தார். அதைப் போலவே கவியரங்கத்தை மிகவும் நெகிழ்ச்சியோடு கண்டு களித்தார். உடனமர்ந்திருந்தவர்களிடம் உடனுக்குடனே தனது விமர்சனத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார். கவியரங்கம் முடிந்தவுடனே, கனடாவில் இருந்து வந்திருக்கும் கவிஞர் புகாரியைச் சந்திக்க வேண்டுமெனக் கோரினார். அதன்படியே அவரையும் கண்டு, அவர் வாசித்த கவிதையை வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். கூடவே தமிழ்நாட்டு இதழொன்றிலும் அதை இடம் பெறச் செய்வதற்கான ஒப்புதலையும் கவிஞரிடம் கேட்டுப் பெற்றார் ஐயா.

    மாநாட்டில், சாதியொழிப்பு குறித்தும், தமிழ்மக்களின் மேன்மை குறித்தும் ஆய்ந்தெடுத்த மேன்மையான உரையொன்றை அவர் வழங்கினார். வந்திருந்தவர்களுள் கணிசமானவர்களைத் தவிர மற்றவர்கள் அவர்தம் பேச்சைக் கேட்டுப் பயன்கொள்ளத் தவறிவிட்டனர் என்பது மிகவும் ஏமாற்றத்துக்குரிய ஒன்றாகும். வேடிக்கையில் மூழ்கியவர்களுக்கு அவரது பேச்சின் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. தனியரங்குகளில் அவர் ஆற்றிய உரைகளுக்குப் பெருமளவில் வரவேற்புக் கிட்டியது.

    ஐயா அவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் தொடர்ந்து வந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். சாதிக் கொடுமைகளுக்கெதிராகவும், ஆதிக்க மனப்பான்மைக்கெதிராகவும் போராடி பல இன்னல்களை நேர்கொண்டு குடும்ப உறுப்பினர்களை விட்டுத் தவித்துத் தான் ஈந்தவற்றை ஒரு கணமேனும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. தன்னை மிகவும் அடக்கத்தோடும் கூடியிருந்த மக்களுள் தன்னையும் ஒருவனாக இருக்குமாறும் இருந்து கொண்டார். அவரது போக்கே அப்படிப்பட்ட இயல்பான ஒன்றாக இருந்தது.

    மாணவர்களுக்கான தமிழ்ப்போட்டியில் பங்கு பெற்று கூடுதலாகப் பரிசுகளை வென்ற என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு பெரிதும் வியந்தார். அமெரிக்காவுல இருந்துட்டு கோயமுத்தூர்ல இருக்குற மாதிரியே இருக்குறீங்க என்று சொல்லி அவளை உச்சி முகர்ந்தார். எனக்கு தலைகால்ப் புரியாத உள்ளக்குளிர்மை.

    தமிழன் தமிழச்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவி யாழினி அவர்களது சிலம்பாட்டத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். விழாவில் எத்தனை எத்தனையோ மனிதர்களை அவர் சந்தித்துப் பேசினார். ஆனாலும் தாம் சந்தித்த ஒருவரை மறுமுறை பார்க்கும் போது, அவர்தம் பெயர் சொல்லியே விளித்தார். எண்பத்து எட்டு வயது மனிதரின் நினைவாற்றல் கண்டு அதிர்ந்து போனேன்.

    நான்காம் நாள் காலையில் மிகவும் வருத்தப்பட்டுப் பேசினார். இதுக்குள்ள விழா முடிஞ்சி போச்சா? வந்தவங்க எல்லாரும் திரும்பவும் அவங்கவங்க ஊர்களுக்குப் போயிட்டாங்களா?? சிறு குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு வினவினார். அவர் முகம் பார்த்து எனக்கு வந்துவிட்டது பசலை எனப்படுகிற பிரிவுநோய்.

    இரவில் சரியாகத் தூக்கம் வரவில்லையாதலால் விழா மலர் முழுக்கப் படித்து விட்டேன். இப்போது இரண்டாம் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது எனச் சொல்லி, அதிலிருக்கும் கட்டுரைகள் குறித்து அளவளாவத் துவங்கி, அடியேன்தான் மலரின் ஆசிரியர் என்ற முறையில் என்னிடம் அவர் சில கேள்விகளைக் கேட்கவே, அவை குறித்து எதுவும் நினைவில் இல்லாமையால் குற்ற உணர்வோடு அல்லலுற்றேன். அவரது நினைவாற்றலுக்கு முன்னால், இருக்கும் இரு கால்களை நான்காக்கி அவற்றுள் உள்ள பின்னாங்கால்கள் பிடரியில்படத் திரும்பி ஓட வேண்டும் போல இருந்தது.  மலரின் படைப்புகளைப் பல முறை வாசித்துப் பிழை திருத்தியவன் நான். எனினும் அவர் வினவும் வினாக்களுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. . மனிதர் ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.

    அவருடன் இருந்த அந்த நான்கு நாட்களும் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டி இருந்தது. எளிய மனிதனின் ஓம்புதலுக்குரிய எல்லைக் கோட்டுக்கும் வெளியே செல்லாமல், அதே வேளையில் ஒரு வாழும் வரலாற்றுக்கு ஆற்ற வேண்டிய பணிவிடைகள், சிறப்புகள் செய்தாக வேண்டுமென்பது மிகக் கடினமான ஒன்றாகும்.அதைத்தான் நான் அங்கு செய்து கொண்டிருந்தேன்.

    மக்களுக்காய்ச் சிறைக்கொட்டடியில் வாழ்ந்த மனிதருக்கு இந்த மக்கள் மேல்தான் எவ்வளவு அன்பும் அக்கறையும்? ”ஊருக்குத் திரும்பி வந்த வழி நெடுகிலும் அந்தத் தாத்தா மட்டும் ஏன் ஸ்பெசல்? எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு. நம்ம வீட்டுக்கு எப்ப வருவாரு??”, மகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவருடைய தனிப்பட்ட தகவலோ, தொடர்பு எண்ணோ எதையும் கேட்டுப் பெற விரும்பவில்லை நான். தவறு செய்து விட்டேனோ என மனமும் சஞ்சலத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தது அந்த வாரம் முழுமைக்கும்.

    “பழமைபேசி, நான் நல்லகண்ணு பேசுறன். இப்ப நான் அட்லாண்டா போய்ட்டு இருக்குறேன். நாளைக்கு ஊருக்குக் கிளம்புறேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பலாம்னு கூப்பிட்டேன். இந்த ரெண்டு மூனு நாளா, உங்க ஊர்ப்பழமை புத்தகம்தான் படிச்சிட்டு இருக்குறன். இப்ப மூனாவது வாட்டி படிச்சிட்டு இருக்குறன். கொங்குநாட்டைக் கொண்டாந்து அப்படியே கண்ணுல நிறுத்திட்டீங்க. நல்லா இருக்கு!!”, அவர் அறிந்திருக்க மாட்டார்; மறுபக்கத்தில் அலைபேசியைப் பிடித்துக் கொண்டிருப்பவனின் விழிகள் சொரிந்து கொண்டிருக்கின்றன என்பது.

    Share
  • திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன?

    தேமொழி

    உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவும் இயற்கையில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  அரளிச்செடி ஆலமரம் போல உயரமாக வளருவதில்லை. பூனையும் யானையின் அளவுக்குப் பெரியதாக வளருவதில்லை.  இதன் காரணத்தை சிறு வயதிலேயே நாம் அறிந்து கொள்ள விரும்பியிருப்போம்.  நம் பெற்றோரை நாம் கேட்டு நச்சரித்த கேள்விகளில் இது ஒன்றாகவும் இருக்கலாம்.

    ஆன்மீக வழியில் வாழ்க்கையைப் பார்ப்பவர்களுக்கு இக்கேள்விக்கு விடை சுலபம். இதற்குக் காரணம் இறவைனின் விருப்பம், இறைவன் படைத்தபடி உலகம் இயங்குகிறது, அதில் வாழும் உயிரினங்களும் இயங்குகின்றன என்று விளக்குவார்கள். ஆனால் அறிவியல் அறிஞர்கள் இதற்கும் மேலான விளக்கத்தைத் தேடி ஆராய்வார்கள், இந்த ஆர்வம் அவர்கள் இயல்பு. உயிரியல் (biology), சூழலியல் (ecology),  பரிணாமம் (evolution) போன்ற துறைகளின் அறிவியல் அறிஞர்கள் உயிரினங்களின் வளர்ச்சியின் அளவு, விலங்கினங்களின் கூட்டத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை என இவையாவற்றையும் ஆராய்ந்து அவற்றை விளக்கும் கோட்பாடுகளை உருவாக்குவார்கள். மேலும் அதிக அறிவியல் தகவல்கள் தெரியத் தெரிய, விளக்கம் தரும் இக்கோட்பாடுகளும் இவர்களால் மாற்றியமைக்கப் படும். ஆனால் காரணம் அறிய விரும்பும் ஆராய்ச்சி மட்டும் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.

    அந்நாள் அறிவியல் அறிஞர் ‘சார்லஸ் டார்வின்’ (Charles Darwin), தற்கால அறிவியல் அறிஞர்களான ‘டெட் கேஸ்’ (Ted Case), ‘ஜான் டைலெர் போனெர்’ (John Tyler Bonner) போன்றவர்கள் உயிரினங்களின் வளர்ச்சி பற்றி  ஆராயந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.  ஒரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவை நிர்ணயிப்பது எது என்பதைத் தெரிந்து கொள்ள உலகிலேயே மிகப் பெரிய உயிரினமான நீலத்திங்கிலம் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டு அதன் மூலம் இக்கேள்விக்கு விடை காண முயல்வோம்.

     

    புவியினை வாழுமிடமாகக் கொண்ட உயிரினங்களில், அதாவது இதுவரை புவியின் வரலாற்றில் தோன்றி அழிந்த மற்றும் இன்றும் வாழும் உயிரினங்களைக் கணக்கில் கொண்டால், திமிங்கிலங்கள் தான் அளவில் பெரியவை.  உலகின் மிகப் பெரிய விலங்கினங்களைப் பட்டியலிட்டால், பட்டியலில் தரவரிசைப்படி வரும் முதல் பத்து விலங்குகளுமே வெவ்வேறு வகையான திமிங்கிலங்கள்தான். நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கான யானையைவிடப் பலமடங்குப் பெரியவை திமிங்கிலங்கள். இந்த திமிங்கிலங்களிலும் நீலத்திமிங்கிலமே மிகப் பெரியது.

    பெருங்கடல்களில் வாழும் நீர்வாழ் விலங்கான திமிங்கிலம் முன்னொரு காலத்தில் நிலத்தில் வாழ்ந்ததாகவும், ஏதோ சில சுற்றுச்சூழல் காரணங்களினால் கடலுக்கு இடம் பெயர்ந்ததாகவும், அத்துடன் பரிணாம வளர்ச்சியின் காரணமாக நீரில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளைப் பெற்றிருப்பதாகவும் அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். எனவே குட்டியீன்று பாலூட்டும் பாலூட்டி வகையான திமிங்கிலங்களின் தோற்றம் நீர்வாழ்கைக் கேற்ற தகவமைப்புகளைப் பெற்று மீன்கள் போன்று தோன்றுகின்றன. ஆனால் மீன் போன்ற தோற்றமளித்தாலும் திமிங்கிலங்கள் மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல.

    மற்ற பாலூட்டிகளைப் போலவே உடல் உறுப்புகள் கொண்டவை நீலத்திமிங்கிலங்கள். இதய அமைப்பு, நுரையீரல்கள் வழி சுவாசிப்பது என யாவும் பாலூட்டிகள் போன்றே இவற்றிற்கு அமைந்திருக்கிறது.  மீன்களைப்போல செவுள்களால்  நீலத்திமிங்கிலங்கள் சுவாசிப்பதில்லை.   நீலத்திமிங்கிலங்கள் தலையில் உள்ள துவாரங்கள் வழியே காற்றை உள்ளிழுத்து சேமித்து வைத்துக்கொள்ளும். உணவிற்காகக் கடலின் ஆழம் வரை சென்றாலும் 20 நிமிடங்கள் வரை கூட நீலத்திமிங்கிலங்களால் தாக்குப் பிடிக்க முடியும்.  மீண்டும் காற்றை வெளியேற்ற நீர்பரப்பிற்கு வந்து துவாரங்கள் வழியே கற்றை வெளியேற்றும் பொழுது 30 அடிகள் உயரம் வரை ஒரு நீர் ஊற்றுபோல நீரைப் பீய்ச்சி அடிக்கும்.

    இந்த நீலத்திமிங்கிலங்கள் (Balaenoptera musculus, விலங்கியல் இனப் பெயர்), பாலூட்டிகள் வகுப்பு (Class: Mammalia), கடற்பாலூட்டி வரிசை (Order: Cetacea) என வகைப்படுத்தப் படுகிறது. நீலத்திமிங்கிலம் ஒரு ஊனுண்ணி/விலங்குண்ணி (carnivore). இது உண்பது ஓரிரு சென்டிமீட்டர் நீளம் அளவேயுள்ள கூனிப்பொடி (Krill) என்னும் அளவில் மிகச் சிறிய இறால் வகை கணுக்காலி (tiny Crustaceans, a group of Arthropods). சராசரியாக 90 ஆண்டுகள் வரை உயிர்வாழும் ஒரு நீலத்திமிங்கிலத்தின் நீளம் ஏறத்தாழ 100 அடிகள் (up to 33 meters in length). இதன் உடல் எடையோ 200 டன்கள் வரை இருக்கும்.  அதாவது ஒரு நீலத்திமிங்கிலத்தின் எடை 40 யானைகளின் மொத்த உடல் எடைக்குச் சமம். இரு மிகப் பெரிய டயனோசாரின் உடல் எடைக்குச் சமம். மனித உடலின் நீளத்துடனும், யானையின் உடல் எடையுடனும் ஒப்பிடப்பட்ட படங்கள் விளக்கத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது.

    நீலத்திமிங்கிலத்தின் நாக்கின் பரப்பளவு 50  பேர் அமரும் அளவு பெரியது. அதன் நாக்கின் எடை ஒரு யானையின் எடையளவு ஆகும். அதன் இதயத்தின் அளவு ஒரு சிறிய ஊர்தியின் (car) அளவும், அதன் குருதி நாளங்கள் ஒருசிறிய மனிதன் அதன் வழியே நீந்திச் செல்லும் அளவு பெரியவை. ஆனால் அதன் உணவுக்குழாய் (oesophagus) மிகவும் சிறியது. ஒரு சிறிய ரொட்டித் துண்டும் அதன்வழியாகச் செல்லமுடியாமல் சிக்கிக் கொள்ளும் அளவு சிறியது.  நீலத்திமிங்கிலத்தின் வாய் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனால் பெரிய விலங்குகளை உண்ண முடியாது. உருவில் மிகச்சிறிய கூனிப்பொடி இறால்களையும், அதே அளவுள்ள மிகச் சிறிய மீன்களை மட்டுமே உண்ணமுடியும்.  ஆனால் இக்குறையைத் தீர்க்கும் வண்ணம் அதன் உணவு உண்ணும் முறை தகவமைந்துள்ளது.

     

    நீலத்திமிங்கிலம் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன?
    நீலத்திமிங்கிலம் உணவு உண்ணும் முறை பெரிதும் வேறுபட்டது.  இதன் வாயில் ஒரு மீட்டர் அகலமுள்ள பலீன் தகடுகள் (baleen plates) 30 இருக்கிறது.  இவை சீப்பு போன்ற உருவத்தில் பல சிறிய இழைகளைக் கொண்டிருக்கும்.  இதன் உணவான கூனிப்பொடி இறால்கள் கூட்டம் கூட்டமாக கடலில் நீந்தும்.  இக்கூட்டத்தை நெருங்கியதும் நீலத்திமிங்கிலம் வாயை மிக அகலமாகத் திறந்து நீருடன் கூனிப்பொடி இறால்களை விழுங்கும் (lunge feeding behavior).  இவ்வாறு விழுங்கும் உணவும் நீரும் நீலத்திமிங்கிலத்தின் உடல் எடையைவிட 125% அதிகமாக இருக்கும்.  இவ்வாறு விழுங்குவதற்கு ஏதுவாக அதன் வாயும் கீழ்தாடையும் மிக அகலமாகத் திறக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பிறகு விழுங்கிய நீரை பலீன் தகடுகள் வழியாகத் துப்பும். நாவை மேல்நோக்கி அழுத்தி நீரை வெளியேற்றும்.  அப்பொழுது பலீன் தகடுகளின் இழைகளால் கூனிப்பொடி இறால்கள் சலிக்கப் பட்டு அதன் வாய்க்குள் சிக்கி விடும்.  இவற்றை அப்படியே நீலத்திமிங்கிலம் விழுங்கி விடும்.

    ஒரு நாளைக்கு 40 மில்லியன்கள் கூனிப்பொடி இறால்களை (4 டன்கள் எடை வரை) நீலத்திமிங்கிலம் உணவாக உண்ணும், அதனால் அது பெறும் சக்தியின் அளவு 480,000 கலோரிகள். நீலத்திமிங்கிலத்தின் உணவான கூனிப்பொடிகளின் தொகையும் உலகில் மிக மிக அதிகம். கூனிப்பொடிகளின் உருவ அளவும் அதிகத் தொகையும்; அது போலவே நீலத்திமிங்கிலத்தின் வாயும் உணவு உண்ணும் முறையும் ஒன்றுக்கொன்று மிகவும் பொருந்தியுள்ளது. நீலத்திமிங்கிலங்களின் உணவாவதற்கே கூனிப்பொடிகள் பிறந்தது போலவும், அவற்றை உண்ணவே நீலத்திமிங்கிலங்கள் பிறந்தது போலவும் இயற்கையில் அமைந்திருக்கிறது.  இந்த சாதகமான உணவு சூழ்நிலை நீலத்திமிங்கிலம் அதிகம் உண்டு மிகப் பெரிய அளவாக வளர பரிணாம வளர்ச்சிப்படி ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

    மற்றொரு காரணம் அது வாழும் நீர்நிலை செய்யும் உதவி.  நிலத்தில் வாழும் உயிரினங்கள் பெரிதானால்,  அந்த உடலுக்கேற்ற அதிக எடை புவியீர்ப்பு விசையினால் புவி நோக்கி இழுக்கப்பட்டு சிரமம் கொடுக்கும்.  அதற்குத் தீர்வாகப் பெரிய விலங்குகள் உடல் எடையைத் தாங்கும் பருத்த கால்களைக் கொண்டிருக்கும், காட்டாக யானையைக் கொள்ளலாம்.

    நிலவாழ் உயிரனங்களுக்கு இருக்கும் புவியீர்ப்புத் தாக்கம் நீர்வாழும் உயிரினங்களுக்கு இல்லை.  மாறாக நீரின் மேல்நோக்கு விசை (buoyancy) நீர்வாழ் விலங்குகளுக்கு நீரில் மிதக்க உதவுகிறது. ஆர்கிமிடீஸ் கொள்கை விளக்கும் நீரின் இப்பண்பினால் பெறப்படும் உதவியால் சக்தி விரயமாவது குறைகிறது. இதுபோல வாழும்  நீர்நிலையின் சூழல் வழங்கும் உதவி, அதிக உணவு வளம், அதை உண்ணும் உடலின் தகவமைப்பு ஆகியவை நீலத்திமிங்கிலங்கள் உருவில் பெரியவையாக வளர உதவியிருக்கிறது. அடுத்து நமக்கு நியாயமாக எழ வேண்டிய கேள்வி, அவ்வாறானால் நீலத்திமிங்கிலங்கள் இதற்கும் மேலும் ஏன் பெரிதாக வளரக்கூடாது என்பது.

    உயிரினத்தின் உருவம் பெரிதாகப் பெரிதாக,  அதன் வளர்ச்சிக்கேற்ப வளர்சிதை மாற்றத் தேவைகள் அதிகரிக்கும். அதனால் உடலினைப் பராமரிப்பதற்கும் அதிக சக்தி தேவைப்படும்.  அதற்கு வேண்டிய சக்தியைப் பெற அதிகம் உண்ண வேண்டியிருக்கும். இவ்வாறு உணவைத் தேடி உண்டு, செரிமானம் செய்து சக்தி பெறுவதற்கும் அந்த உயிரினம் சக்தியை விரயம் செய்ய வேண்டி இருக்கிறது. நீலத்திமிங்கிலம் நிலையாக ஒரிடத்தில் நிலைத்து இருந்து உணவு உண்ணுவதற்கு 15 மடங்கு அதிக சக்தி செலவழிக்கப் படுகிறது.  இது நீந்துவதற்குத் தேவையான சக்தியை விடவும் 5 மடங்கு அதிகம்.

    வணிகத்தில் முதல் போட்டு வியாபாரம் செய்து லாபம் பார்ப்பது போன்ற செயலை இந்த உணவு தேடும் முயற்சிக்கு ஒப்பிடலாம். இவ்வாறு உணவின் மூலம் பெறப்படும் சக்தி (வரவு), அந்த சக்தியைப் பெற செலவழித்த சக்தியையும் அத்துடன் உடலைப் பராமரிக்க செலவிடப்படும் வளர்சிதை மாற்றதிற்கு தேவையான சக்தியையும் (செலவு) விட அதிகமாக இருந்தாலே இந்த உணவு வேட்டை லாபம் தரும் செயலாக இருக்கும். உபரியாக கிடைக்கும் சக்தி உடலை மேலும் வளர்க்க உதவும். இதற்கு உதவும் வகையில் உயிரினம் உண்ணும் உணவும் தகுந்த அளவு கிடைக்க வேண்டும்.

    ‘ஜான் டைலெர் போனெர்’ என்னும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர் ஒரு உயிரினத்தின் வளர்ச்சியை நிர்ணயிப்பதன் முக்கிய உயிரியல் காரணிகள் எனக் குறிப்பிடுபவை (1) உயிரினத்தின் திறன், (2) உடலின் புறப் பரப்பளவு, (3) உடலின் கட்டமைப்பு, (4) வளர்சிதை மாற்றத்தின் அளவு, மற்றும் (5) உயிரினத்தின் எண்ணிக்கையின் தொகை (five important biological features: strength, surface area, complexity, rate of metabolism, and organism abundance). அறிவியல் அறிஞர்கள் இந்தக் காரணிகளை ஒரு கணித சமன்பாடு/வாய்ப்பாடாக உருவாக்கிய  பின்பு, ஒரு உயிரினத்தின் தகவல்களை அதில் பொருத்தி கணக்கிடுவார்கள். கணித மதிப்பீடுபடி அந்த உயிரினத்தின் வளர்ச்சி அதன் சூழ்நிலைக்கேற்ற வாழ்க்கைத் தகவமைப்பு படி, அதற்கு சாதகமான முறையில் எந்த அளவு வளர்ச்சி அடைய முடியும் என்பது இதனால் தெரிய வரும்.

    இவ்வாறு நீலத்திமிங்கிலத்தினைப் பற்றிய தகவல்களைக் கொண்டு மதிப்பிட்ட பொழுது, அது தேவைகளை சமாளித்து வெற்றிகரமான வாழ்க்கை வாழ 33 மீட்டர் வரை வளர முடியும் எனத் தெரிந்தது.  இதுவரை காணப்பட்ட நீலத்திமிங்கிலங்களின் சராசரி நீளமும் ஏறத்தாழ இதே அளவுதான்.  இதிலிருந்து நீலத்திமிங்கிலத்தின் உணவு வகை, அதன் சூழ்நிலை காரணிகள் நிர்ணயித்தபடி நீலத்திமிங்கிலங்கள் இதற்கும் மேல் வளர வாய்ப்பில்லை என்பதை இயற்கை நிர்ணயித்துள்ளது தெரிய வருகிறது.

     

    சிந்தனைக்கு: ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எதற்காக? போன்ற கேள்விகளைக் கேட்கும் ஆர்வமுள்ள குழந்தைகளின் மனநிலையை வளர்ந்த பின்பு பலர் கைவிட்டு விடுகிறோம்.  ஆனால் இது போன்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குக் காரணம்.   இவ்வாறு ஆர்வத்தில் ஆராய்ந்து தாங்கள் கண்டறிந்து சொல்லப்படும் உண்மைகள், சமுதாயத்தில் காலம் காலமாக நம்பப்பட்ட கொள்கைகளுக்கு மாறாக இருந்தால், அவற்றைச் சொல்லுபவர்கள் அனுபவிக்கும் இன்னல்களும் ஏராளம். எடுத்துக் காட்டாக, நவீன அறிவியலின் தந்தை என ஐன்ஸ்டினால் புகழப்பட்டவர் வானியல் மேதை கலிலியோ, இவர் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதை வலியுறுத்தியதற்காகக் கிறிஸ்துவ மதக் குருமார்களால் கண்டிக்கப் பட்டார். முதுமையிலும் வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைக்கப் பட்டுத் தண்டிக்கப்பட்டார். அறிவியல் முன்னேற்றம் அடைந்த இக்காலத்திலும், முதன் முதல் நிலவில் காலடி எடுத்து வைத்த  நாடான அமெரிக்காவின் சில பள்ளிகளில் டார்வினின் ‘இயற்கைத் தேர்வு நியதி’யைக் (Theory of Natural Selection) கற்பிக்கத் தடைகள் போடப்படுகின்றன.  இது போன்ற ‘மதத் துரோகம்!’ என்று கூறி தடைகள் போடும் குறுகிய மனப்பான்மை மனித அறிவு வளர்ச்சிக்கு உதவாது என்பதை மக்கள் உணர்வது மனித குல மேம்பாட்டிற்கு வழி வகுக்கும்.

     

    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
    [குறள் 396]

    Content References:
    Blue whale
    http://en.wikipedia.org/wiki/Blue_whale
    http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/

    National Geographic Explorer : Kingdom of the Blue Whale
    http://channel.nationalgeographic.com/channel/videos/kingdom-of-the-blue-whale/
    http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/

    Why are blue whales so enormous?
    http://ed.ted.com/lessons/why-are-blue-whales-so-enormous-asha-de-vos

    John Tyler Bonner, Why Size Matters: From Bacteria to Blue Whales, 2011, Princeton University Press; Reprint edition
    http://books.google.com/books/about/Why_Size_Matters.html?id=pNIkFBA0kdAC

    Ted J. Case, 1979, Optimal body size and an animal’s diet, Acta Biotheoretica, Volume 28, Issue 1, pp 54-69
    http://link.springer.com/article/10.1007%2FBF00054680?LI=true

    Pictures Source:
    http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/004/cache/blue-whale_477_600x450.jpg
    http://animals.nationalgeographic.com/animals/blue-whale-interactive/
    http://channel.nationalgeographic.com/channel/content/kingdom-of-the-blue-whale-3302/blue-whale-facts/#/compare/length
    http://channel.nationalgeographic.com/channel/content/kingdom-of-the-blue-whale-3302/blue-whale-facts/#/compare/weight
    http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/006/cache/krill_601_600x450.jpg
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Buoyancy.svg/301px-Buoyancy.svg.png

     

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (4)

    பவள சங்கரி

    எல்லோரும் நல்லவரே!

    சக மனிதர்களை பாரபட்சமின்றி நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எவரையும், எக்காரணம் கொண்டும் வெறுத்தல் ஆகாது. அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியும், தோல்வி அச்சமும் கொண்டவர்களே அடுத்தவரை வெறுத்துப் புறக்கணிக்க எண்ணுகின்றனர். ஒருவரை வெறுக்கும்போது, நம் மனதில் அவரைப் பற்றி அடிக்கடி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுவதோடு, அவரால் நமக்கு பெரும் தீங்கு விளையப் போவதாகவும், அவர் நமக்கு பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் எண்ணி தேவையில்லாமல் சுய பச்சாதாபம் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த சுய பச்சாதாபம் என்பது நம் வெற்றியின் முக்கியமான ஒரு எதிரி எனலாம். தன்னம்பிக்கையை முற்றிலும் குலைக்கக்கூடியது. அது  மட்டுமல்லாமல் இந்த வெறுப்புணர்ச்சி, அதிகம் கோபம் கொள்ளுதல், பழி வாங்குதல், போன்ற செயல்களில் ஈடுபட்டு கால விரயம் ஏற்படச்செய்கிறது. அத்துடன் மனக்கவ்லை கொள்ளச்செய்து ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும்.

    நம்மை அடுத்தவர் வெறுக்கிறார் என்ற ஐயமும் கூட பலவிதமான கற்பனைக் குழப்பத்தை ஏற்படுத்தி நம்மைச் செயலிழக்கக் செய்யக்கூடும். பலர் தங்கள் மனதில் உள்ள வெறுப்பைக் காட்டாமலே சம்பந்தப்பட்டவரிடம் நைச்சியமாகப் பேசி தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள முற்படுவார்கள். ஆயினும் ஏதோ ஒரு சிறு செயலில் தன்னையறியாமல் அது வெளிப்பட்டுவிடும். அப்படி ஒருவரை கண்டுகொள்ள நேர்ந்தால் இயன்றவரை அவர் மனம் புண்படாதவாறு அவரைவிட்டு விலகிவிடுதலே சிறந்த தீர்வாகும். இப்படிச் செய்வதால் தேவையற்ற மன உளைச்சலிலிருந்து தப்பிக்கலாம்.

    மறதி என்பது மனப்புண் ஆற்றுமோர்  சிறந்த மருந்து!

    நம் மனதைப் பாதித்த சம்பவங்களை முற்றிலும் மறக்க முயற்சிப்பதே அதன் தொல்லையிலிருந்து விடுபடும் உபாயம். இது சற்று கடினமான செயல்தான் என்றாலும் சில அற்ப விசயங்களுக்காக நம் பொன்னான நேரத்தை விரயமாக்குவது தேவையற்றது. சில ஆண்டுகளுக்கு முன் நமக்கு நடந்த ஒருசில சம்பவங்கள் அன்று நம்மை பெரிதும் பாதித்திருக்கக்கூடும். வாழ்நாளில் என்றுமே அதை மறக்க முடியாத ஒன்று என்றுகூட எண்ணியிருப்போம். ஆனால் இன்று அதை நினைக்கும் போது அது திரை மறைவில் நிழலாடும் ஓவியம் போன்றே தோன்றும். அதையும் கட்டாயமாக நினைவில் கொண்டு வந்தால்தான் பிடிபடும். எப்படியும் காலம் ஒரு நாள் அதை மறக்கச் செய்யப்போகிறது என்று உறுதியாக தெரியும் போது அப்படிப்பட்ட ஒன்றிற்காக மனதை வருத்திக் கொள்வதைவிட அதிலிருந்து விடுபட்டு அதனை முற்றிலும் மறக்க முயற்சிப்பதே சிறந்தது அல்லவா.. நல்ல ஆக்கப்பூர்வமான சிந்தைகளை உரமிட்டு வளர்ப்பது போல தேவையற்ற நினைவுகளை புறந்தள்ளி அதனை முற்றிலும் நம் நினைவுகளிலிருந்து அகற்றி விடுதலே வெற்றிக்கான அடுத்தபடியை நெருங்கும் வழி அல்லவா.

    தொடருவோம்

    படத்திற்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…. (47)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    மிகவும் அதிகமாக பேசப்பட்ட, பேசப்படுகின்ற ஒரு கணிப்பீடு இலண்டனின் ஜனத்தொகை பற்றிய கணக்கீடு ஆகும். சமீபத்திய இங்கிலாந்து அரசு நடத்திய ஜனத்தொகை கணிப்பீட்டின் லண்டன் பற்றிய கணிப்பீடு ஒரு தொகுதி மக்களிடையே கொஞ்சம் அச்சத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது என்று கூடச் சொல்லலாம்.

    அது என்ன என்கிறீர்களா?

    லண்டன் வெள்ளை இணத்தவரின் எண்னிக்கை என்றுமில்லாதவாறு குறைந்திருக்கிறது என்கிறது இப்புதிய ஜனத்தொகை கணிப்பீடு. ஆமாம் லண்டனிலுள்ள வெள்ளை இனத்தவரின் எண்ணிக்கை 620000 த்தால் குறைந்துள்ளதாம்.

    இது ஏறக்குறைய ஸ்கொட்லாந்தின் நகரமான கிளாஸ்கோவின் மொத்த ஜனத்தொகையே அந்நகரத்தை விட்டுக் குடிபெயர்ந்ததிற்குச் சமனாகும் என்கிறது இவ்வறிக்கை.

    லண்டனின் மொத்த ஜனத்தொகையில் முதன்முரையாக வெள்லை இனத்தவரின் எண்ணிக்கை ஆக 45% ஆகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

    ஆ ! அடடா? அப்படி என்னதான் நடந்து விட்டது இந்த வெள்லை இனத்தவருக்கு ? என்ன நாங்கள் புலம் பெயர்ந்து வந்து அவர்களையே அவர்களது புலத்திலிருந்து பெயர்த்து விட்டோமா?

    ரொம்பக் குழப்பமாயிருக்கிறதே !

    இவ்வறிக்கையை பல அரசியல் கட்ச்சிகள் தமது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தத் தவர மாட்டார்கள். குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் இனத்துவேஷக் கட்சியாகக் கருதப்படும் தேசிய முன்னனிக் கட்சியான “பிரித்தானியத் தேசியக் கட்சி” பார்த்தீர்களா சொன்னோமே கேட்டீர்களா ? அந்நிய நாட்டுக்காரரை அளவு கணக்கில்லாமல் இங்கு குடியேற விட்டதால் வந்த விளைவைப் பார்த்தீர்களா ? அடித்து, அடித்துச் சொன்னோமே , குடிமூழ்கி விட்டதே ! என்று ஒரேயடியாகக் கூப்பாடு போடத் தொடங்கி விடுவார்கள்.

    ஏன் பழமைவாதக் கட்ச்சியான கன்சர்வேடிவ் கட்ச்சி கூட தமது குடிவரவுக் கொள்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்கு ஆதரவாக இவ்வறிக்கையை உபயோகிக்கத் தயங்க மாட்டார்கள்.

    கொஞ்சம் இனத்துவேஷம் கொண்டவர்களோ க்ட்ட்கவே வேண்டாம் போங்கள் …….

    ஆனால் ஒரு அரசியல் விமர்சகரான மார்க் ஈஸ்டன் என்பவர் இவ்வரிகையைப் பார்க்கும் விதமே வித்தியாசப்படுகிறது. லண்டனில் வெள்ளை இனத்தவர்களின் எண்னிக்கை குறைவதற்கும் வெளிநாட்டுக்காரர் இங்கிலாந்திற்கு வருவதற்கும் பெரிய தொடர்பொன்றுமில்லை அதௌதான் இதற்குக் காரணமுமில்லை என்கிறார்.

    அது தவ்ர வெள்ளை இனத்தவர் லண்டனை விட்டு வெளியேறியதற்குக் காரணம் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது என்று ஒரு முன்னேற்ரமான காரணத்தை முன்வைக்கிறார்.

    அதாவது வெள்ளை இனத்து மக்கள் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கும் போது லண்டனையும் அதைச்சுற்றியும் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் அவர்களது வாழ்க்கைத்தரம் பெரும்பான்மையாக மேல்வர்க்கமாக மாறியவுடன் இயற்கைச் சூழல் நிறைந்த அதிக விலைகூடிய இடங்களில் வீடுகளை வாங்கி அங்கு குடிபெயர்ந்து விட்டார்கள் என்கிறார்.

    அதுமட்டுமின்றி அந்நியநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தான் பொருளாதாரக் கஷ்டத்தில் இருப்பதால் வேலைவாய்ப்பு அதிகமுள்ள லண்டனைச் சுற்றி வாழ்வதனால் அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்கிறார். அது மட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களும் லண்டனில் அதிகமாக படிப்பதனால் அவர்களது தொகையும் கணக்கிடப்பட்டுள்ளது என்கிரார்.

    ஒரே அரிக்கை வித்தியாசமான கோணங்களுக்கூடாக பார்க்கப்படும் போது வித்தியாசமான வியூகங்களைத் தருகிறது. ஆனால் அது எத்தனை பேருடைய வாழ்க்கையச் சிலசமயங்களில் திசை திருப்பி விடுகிறது இல்லையா?

    அப்பாடா ! ஒரு வழியாக இங்கிலாந்தின் குடிவரவுக்காரர்களாகிய நாங்கள் காப்பாற்றப்பட்டு விட்டோமா?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    27.02.2013

    Share
  • பூக்களுதிர் காலம்

     

    வருணன்

    நீண்டு நெளிந்து செல்லும்
    குருதிப் புனலில் குளித்தெழுகிறது
    இத்தரணி
    பூக்கள் நிறைந்த வனத்தில்
    ஒவ்வொரு அநியாயத்திற்கும்
    ஒவ்வொரு வஞ்சனைக்கும்
    ஒவ்வொரு குரோதத்திற்கும்
    ஒவ்வொரு காழ்ப்புக்கும்
    ஒவ்வொரு துரோகத்துக்கும்- சிந்தும்
    ஒவ்வொரு அப்பாவியின் துளி இரத்ததிற்கும்
    ஒவ்வொரு பாவத்திற்கும்- வடிக்கும்
    ஒவ்வொரு துளி ஏழையின் கண்ணீருக்கும்
    ஒன்றென்ற கணக்கில் உதிரத் துவங்கின.
    மெல்லத் துவங்கியது தரணியின்
    பூக்களுதிர் காலம்
    உதிர்ந்து கருகிய பூக்களின் சாம்பலுக்கிடையே
    முட்டித் துளிர்த்தது
    நட்பெனும் ஒரு பூ
    வையம் பூக்களின் காடானது
    மீண்டும்.

     

    படத்துக்கு நன்றி: http://www.webdesignhot.com/wp-content/uploads/2013/02/Abstract-Tree-with-Flower-Patterns.jpg

     

    Share
  • பயன் என்ன ? – சத்தியமணி

    பார்வை முன்னால் நடக்கும் கொடுமை
    பாராதிருப்பதில் பயன் என்ன ?
    சால்வை மூடிட வலம்வர கொடியோர்
    சாடாதிருப்பதில் பயன் என்ன?
    வேர்வை சிந்திட உழைத்தார் வறுமை
    வீழாதிருப்பதில் பயன் என்ன?
    போர்வை போர்த்திட ஒளிந்தார் கோழை
    வாழ்க்கை நடத்திட பயன் என்ன?

    படிப்பை கொடுத்தோ சொத்தை சேர்த்தோ
    அடுத்த தலைமுறை வாழ்ந்திடவே
    சிறப்பை காட்டும் பெற்றோர் முயற்சி
    எடுத்த வழிமுறை வீணாமோ
    பாதி வஞ்சம் மீதி இலஞ்சம்
    வளர்ந்திட‌ சமைத்தார் தன்காலம் ?
    நீதி நேயம் நியாயம் தர்மம்
    அழித்திட கொடுத்தார் வருங்காலம் ??

    Share
  • வால்ட் விட்மன் வசனக் கவிதை -13

    என்னைப் பற்றிய பாடல் – 6

    (Song of Myself)

    (1819-1892)
    (
    புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++++++++++++++++

    இவை யாவும் மெய்யாய்

    எல்லா மனிதரின் சிந்தனைதான் !

    எல்லா காலங் களிலும்,

    எல்லா நாடுகளிலும் உதித்தவை தான் !

    எனது மூலப் படைப்புகள் அல்ல

    உன்னைச் சேரா தாயினும் அவை

    என்னைச் சேரா தாயினும்

    ஒன்றும் பயனில்லை !

    புதிரில்லை யாயினும், அவை

    புதிரை விடுவிக்கா திருப்பினும்

    மதிப்புறுவ தில்லை !

    அப்பால் இருப்பவை

    அருகில் இல்லை யாயினும் அவை

    பொருளற் றவை தான் !

    நிலம் எங்கு இருக்குமோ

    நீர் எங்குள்ளதோ அங்கெல்லாம்

    இந்தப் புல்லினம் முளைக்கும் !

    பூகோளத்தைக் குளிப்பாட்டி வைக்கும்

    பொதுக் காற்று இதுதான்

    சமமாகப் பரிமாறப் பட்டிருப்பது

    நமக்கெல்லாம்

    இந்த உணவு தான் !

    இயற்கையாய் எழும் பசிக்கு ஏற்றது !

    இந்தப் புலால் உணவுதான்

    நல்லவர், தீயவர் எல்லோ ருக்கும் !

    எல்லாரையும் சந்திக்க நான்

    முன்வருவேன் !

    ஒருவர் கூட இகழப் பட்டு

    ஒதுக்கப் படார் !

    வைப்பு மாது,

    குப்பை கூட்டுவோன், திருடன் கூட

    வரவேற்கப் படுவார் !

    உதடு தடித்த அடிமையும்

    உடலுறவு நோயாளியும்

    வரவேற்கப் படுவார் !

    அவருக்கும் பிறருக்கும் வேறுபா டிருப்பது

    தவறு தான் !

    இந்த நேரத்தில் சொல்லப் போவதை

    இரகசிய மாய்ச் சொல்வேன் !

    எல்லோ ருக்கும் சொல்வ தில்லை

    சொல்வது உனக்கு மட்டும் !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 27, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • எமனுடன் சண்டையிட்ட பால்காரி … !

    எமனுடன் சண்டையிட்ட பால்காரி … !


    சி. ஜெயபாரதன், கனடா



    பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில் சாய்ந்திருந்தாள். பத்து நிமிஷத்துக்கு முன்புதான் புருசனின் மூச்சு நின்று போனது. இப்போது என்ன செய்வ தென்று தெரியாமல் தடுமாறினாள். நீண்ட பெரு மூச்சை விட்டு பொன்னம்மா எழுந்தாள்! அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விழவில்லை. புருசன் முகத்தைப் பார்க்காமல் சுவறில் தொங்கிய ஒரு குழந்தையின் படத்தைப் பார்த்தாள். புன்முறுவல் பூத்த அந்தப் பாசமலர் அவள் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது! மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். உடனே திடுக்கிட்டு பரபரப்புடன் கதவைத் திறந்து கொண்டு வீதிக்கு ஓடினாள்.

    “போகாதீங்க, நில்லுங்க! நில்லுங்க!” என்று கூச்சலிட்டாள், பொன்னம்மா. எருமை மாட்டின் மீது ஏறிச் சவாரி செய்யப் போன எமதர்மன், உட்கார்ந்து கொண்டே பின்னால் திரும்பினான்.

    “சரித்திரம் மீள்கிறதா ? பின்னாலே வராதே பெண்ணே! உன் புருசன் உயிரைக் கொண்டு போறதுக்கு நான் மிகவும் வருந்துறேன்.”

    “நானே வருந்த வில்லை! நீங்க ஏன் வருத்தப் படணும் ? உங்க வேலைய நீங்க செய்றீங்க. என்னை பெண்ணேன்னு சொல்லாம, பொன்னம்மான்னு கூப்பிடுங்க!”

    “பொன்னம்மா, பேசாமல் போயிடு! என் பின்னாலே வராதே சாவித்திரி மாதிரி! நான் முதல் தரம்தான் ஏமாந்தேன். இரண்டாம் தடவை தப்பு பண்ணப் போறதில்லே! உன் புருஷன் உயிரை மட்டும் கேட்காதே.”

    “என் புருசன் உயிரைக் கேட்க நான் வர வில்ல. அது போறதுதான் நல்லது! எமராசா, நான் ஒன்னும் சாவித்திரி இல்லே ! சாதாரண மனுசிதான்.”

    “அட ஆச்சரிய மாயிருக்கே! ஏம்மா! நீ கண்ணகி பிறந்த நாட்டுக்காரி! கல்லானானும் கணவன், புல்லானாலும் புருசன் என்று கும்பிட குலமாச்சே! காலம் மாறிப் போச்சு! நீ பெண்ணல்ல என்னு சொன்னது இப்போதான் ஞாபகம் வருது!”

    “கண்ணகி எங்க குல தெய்வம் மாதிரி! ஆனா என் புருசன் குலத் துரோகி! நான் வாழ்றதிலே புண்ணிய மில்ல, எம ராசா!”

    “பொன்னம்மா! என்ன கவலை உனக்கு ? பால் வியாபாரத்திலே உனக்கு பண நொடிப்பா ?”

    “எம ராசா! கையெடுத்துக் கும்பிடறேன். ஒரேதா என் உயிரையும் கொண்டு போயிருங்கோ!”

    “நீ செத்துப் போக இன்னும் நாற்பது வருச மிருக்கே, நான் எப்படி உன் உயிரைக் கொண்டு போறது ? அது பெரிய தப்பாச்சே.”

    “தனியா எப்படி நாப்பது வருசம் வாழ்றது, எம ராசா! புருசன் இல்லாம, பிள்ளை, குட்டி இல்லாம ?”

    “இந்தா வந்துட்டயே! இது பழைய சாவித்திரி உத்தி! முதல்லே பிள்ளை வேணும் என்பே! பிள்ளைக் கொடுத்தா, எப்படிப் பிள்ளை பிறக்கும், புருசன் இல்லாம என்னு, புருசன் உயிரையும் வாங்கத் தந்திரம் பண்ணுவே!”

    “இத்தன நாளாய் என் புருசன்தான் என் உயிரை வாங்கிக் கிட்டிருந்தான்! எமலோகம் போற என் புருசன் உயிரை நீங்க தந்தாலும், நான் திரும்ப அங்கே அனுப்பிடுவேன்! அவனும் வேணாம்! அவன் கொடுக்கிற பிள்ளையும் வேணாம்!”

    “கதை வேற மாதிரிலே போவுது! புரியலையே பொன்னம்மா! குழப்புறயே!”

    “எம ராசா! பெண்ணுக்கு உத்தம புருசன் ஒருத்தன்தான் வேணும்! ஆனா ஆம்பிளைக்கு அப்படி யில்லே. சில ஆம்பிளைக்கு மூனு பொம்பளை வேணு மின்னு ஆசை யிருக்கு! கண்ணைக் கவரும் ஆடகியோ, காதில் இனிக்கும் பாடகியோ ஒருத்தி! கட்டில்லே ராத்திரி பக்கத்திலே படுக்க செதுக்கின சிலை போல இன்னொருத்தி! அப்புறம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு, வீட்டுலே காத்து கிடக்க மூனாவது ஒருத்தி!”

    “பொன்னம்மா நீ என்ன சொல்றே ? புதிர் போடாமல் புரியும் படி பேசு.”

    “என் புருசன் ஊர்க் காளை மாடு மாதிரி! நாலாவது வீட்டு ரங்கம்மாவுக்கு ஒரு பிள்ளையை கொடுத்து, அது கழுதையாய் மண்ணுலே புரளுது! அவன் பிறந்த ஊர்லே குப்பம்மாவுக்கு இன்னோர் பிள்ளை கொடுத்து, அது கொண்டி மாடாய் ஊரைச் சுத்துது! இந்தா பாருங்கோ, என் புருசன் படுக்கிற கட்டிலிலே, நான் படுக்கிறதே இல்ல. அந்தப் பிள்ளைகளுக்கே அவன் அப்பனாக தொலையட்டும். என் பிள்ளைக்கு அவன் அப்பனா இருக்க வேணாம். அடுத்துப் பிறக்கிறது பன்றியாத்தான் இருக்கும்!”

    “அப்ப பிள்ளை வரத்தை எப்படிக் கொடுக்கிறது, சொல்லு ? ‘

    “. . . .மூனாவது குடிசையிலே வாழ்ற . . .  கார் டிரைவர் கந்தசாமி மேலே. எனக்கு ஒரு கண்ணு. கந்தசாமிக்கு என் மேலே. இரண்டு கண்ணு.”

    “இது தப்புத் தாளமாச்சே! புருசன் இருக்கும் போது அடுத்தவனை பார்க்கிறது அதர்ம மாச்சே!”

    “ஆமா! பொன்னம்மா வீட்டிலே இருக்கும் போது, என் புருசன் ரங்கம்மா கட்டில்லே ஒருநாளும், குப்பம்மா பாயிலே அடுத்த நாளும் படுக்கிறது என்னவாம் ?”

    “அதுவும் அதர்மம்தான்.”

    ‘அதைப் பெண்டாட்டி துரோகம் என்னு முதல்லே சொல்ல, ஆம்பிளை உங்க வாயிலே வரலையே!”

    “இரண்டும் தவறுதான். சரி நீயே போய் கந்தசாமியை கட்டிக்க வேண்டியதுதானே. நான் என்ன செய்யணும் ? ‘

    “எம ராசா! நான் கேட்க வந்தது, கந்தசாமிக்கு எப்படி ஆயிசு ? நீண்ட ஆயிசு தானே ?”

    “என் கிட்டே கந்தசாமியின் ஜாதகம் இல்லே. ஆயுள் கையேடும் இல்லே. எப்படி ஆயிசுக் கணக்கிடறது ?”

    “ஏதோ காலன், தூதன், சித்திர குப்தன் என்னு சொல்றாங்க, எங்கே போயிட்டாங்க அவுங்க ?”

    “இரு காலனைக் கேட்கிறேன். அவன் கிட்ட போர்டபிள் கம்பியூட்டர் ஒன்னு இருக்கு. சீக்கிரம் பார்த்துச் சொல்லிருவான்.”

    “சீக்கிரம் சொல்லுங்க எம ராசா! என் நெஞ்சி பக்பக்கென்னு அடிக்குது.”

    எமதர்மன் பெரு மூச்சு விட்டு ஆயுளைச் சொல்லத் தடுமாறினார். இரு கைகளையும் பிசைந்து கொண்டு மேலே நோக்கினார்.

    “என்னங்க எம ராசா, ஏன் வானத்தைப் பார்க்கிறீங்க ? ஆயுசு எப்படின்னு சொல்லுங்க ?  என் கண்ணைப் பார்த்துப் பேசுங்க.”

    “பொன்னம்மா! பார்த்ததுதான் பார்த்தையே, நீண்ட ஆயுசு ஆளாப் பார்த்துப் பிடிச்சிருக்கலாமே.”

    “என்ன சொல்றீங்க எம ராசா ? கந்தசாமி அற்ப ஆயுசா ?”

    “கண் கலங்காதே, பொன்னம்மா! கந்தசாமி வீட்டுக்கு . . .. நான் சீக்கிரம் . . . வருகிறதா யிருக்கு.”

    “அட கடவுளே! . இன்னும் எத்தனை வருசம் அவரு . .  ?”

    “கந்தனுக்கு அற்ப ஆயசுன்னு . . . காலன்கூடக் கண் கலங்குறான்.”

    “காலன் சரியாப் பார்த்துதான் சொன்னானா ? சில கம்பியூட்டர் சரியா வேலை செய்யாதாமே ? என் பிள்ளை கொஞ்ச நாள்தான் தகப்பனை பார்க்குமா ? எமதர்ம ராஜா, இது ஞாய மில்லே! அவருக்காவது நீண்ட ஆயுசைக் கொடு! உன் காலிலே விழுந்து கும்பிடுறேன்!”

    “என் காலிலே விழறேன்னு, எருமைக் காலைப் போய் கும்பிடறே! . . . அற்ப ஆயிசு கந்தசாமியை விட்டு, வேற ஆளைப் பாரு, பொன்னம்மா! அது தான் புத்திசாலிப் பெண் செய்யுற காரியம்.”

    “உத்தம ஆம்பளை கந்தசாமி போல எத்தனை பேர் இருக்கான் ? ஒழுக்கம் கெட்ட பயல்கள் தான் எங்க ஊரில அதிகம். ஆமா கந்தசாமிக்கு . .  எப்போ . .  ஆயுசு . . . முடியுது ? அதைச் சொல்லுங்க முதல்லே.”

    “அடேடே கந்தசாமிக்கு தம்பி இருக்கானாமே ! அவனுக்கு ஆயசு பலமா இருக்காம் ! 80 வயசு வரை தெரியுதாம். காதிலே காலன் ஏதோ முணுமுணுக்கிறான்.”

    “அந்த ஒட்டடைக் குச்சி பொன்னுலிங்கம் ஒரு குடிகாரப் பயல்! அவனை வச்சி துடைக்க என் வீட்லே ஒட்டடை கூட இல்லே! ராத்திரி ராத்திரி குடிச்சிபிட்டு வந்து பெண்டாட்டியை போட்டு அடிப்பான். காலையிலே நடு வீதியிலே தூங்கிக் கொண்டு கிடப்பான்! குடிக்கப் பண மில்லேனா என் மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையிலே வித்துட்டு, சாராயக் கடைக்கும் சர்க்காருக்கும் சம்பாரிச்சு கொடுப்பான்! எம ராசா! அயோக்கியப் பயலுக்கு அதிக வயசையும், உத்தம ஆம்பளைக்கு அற்ப ஆயுசையும் தலையிலே எழுதி வைக்கறீங்களே, இது என்ன ஞாயம் ? சொல்லுங்கோ அவருக்கு . . ஆயசு எதுவரை ?”

    “பொன்னம்மா! அற்ப ஆயுசு ஆளுங்க பூமியிலே இல்லாம போனால், எங்கள் ராஜியத்திலே பலருக்கு வேலை யில்லாம போயிரும் ! அப்புறம் என் பட்டாளங்கள் கறுப்புக் கொடியைத் தூக்கிட்டு அரண்மனைக்கு முன்னாலே ஆர்ப்பாட்டம் செய்து பட்டினி கிடப்பாங்க ! வேலை யில்லாத் திண்டாட்டம் எங்க துறையிலே மட்டும் வரக்கூடாது அம்மா !  வந்தால் என் உயிரை வாங்க வந்திடுவாங்க !”

    “அம்மான்னு சும்மா சொல்லாதீங்க !  நான் இன்னும் அம்மாவாகலே ! . . . சொல்லுங்க கந்தசாமிக்கு ஆயுசை ! என் மனசு துடிக்குது! சொல்லுங்க எம ராசா!”

    “உன்னைப் படைச்ச கடவுளே அதை மறைச்சு வச்சிருக்கான். அதை முன்னாலே நான் சொன்னா நீ மயக்கம் போட்டு விழுந்திடுவே. இல்லே திடீரென்னு உன் நெஞ்சு நின்னுட்டா, பிறகு என் மேலே புகார் வந்திடும். உன் உயிரை நான் எடுத்து போகவும் முடியாது.  இங்கே விட்டுட்டு போகவும் முடியாது. அது அப்புறம் அந்தரத்திலே பேயாய் அலையும்! உயிரை திருப்பி உடம்புல ஒட்ட வைக்கிற உத்தியும் எனக்கு தெரியாது! அது என் வேலை இல்லே. பிரம்மா படைப்பு வாரியத்தைச் சேர்ந்தது.”

    “சும்மா சொல்லுங்க எமராசா! நான் ஒன்னும் வெண்ணை யில்ல, உருகிப் போக. என் மனம் தேக்கு மரம் போல. . . என்ன கந்தசாமி இன்னும் அஞ்சி வருசம் இருப்பாரா ?”

    ‘உம் . . . அத்தன நீண்ட ஆயுள் இல்ல . . . அற்ப ஆய்சுக் கந்தனுக்கு.”

    “சரி அஞ்சில்லே. மூனு வருசமாவது அவர் . . . உயிரோட இருப்பாரா ?”

    “அதுவும் . . . இல்லே! . . . பொன்னம்மா! . . ஏன் கண்ணிலே கண்ணீர் குபுகுபுன்னு பொங்குது ?”

    “அப்படீங்களா ? . . பொன்னம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். சரி ஒரு வருடமாவது மனுசன் . . . உயிரோ டிருப்பாரா ?”

    “அதை நான் சொல்ல முடியாது, பொன்னம்மா! உனக்குப் பிள்ளை பிறந்து, கந்தன் கொஞ்ச காலம் இருப்பான்.”

    “எனக்குப் பிள்ளை பிறந்து, கந்தசாமி ஒரு வருசமாவது உயிரோடு இருக்கணும். அதுக்கு வரம் தருவீங்களா, எம ராசா ? உங்களைக் கெஞ்சி கேக்கிறேன்.”

    ‘அந்த வரத்தை நான் தர முடியும், பொன்னம்மா!”

    “நிச்சயமா சொல்றீங்களா எம ராசா ?”

    “ஆமாம்! உனக்கு பிள்ளை பிறந்து, கந்தன் ஒரு வருசம் உயிர் வாழறது உறுதி. அதுக்கு வரம் தருவதிலே எனக்கு எந்த ஆட்சேபணையு மில்லே! . . ஏன் பொன்னம்மா! . . நயாகரா மாதிரி கொட்டின கண்ணீ ரெல்லாம் . .  சினிமா ரீல் திருப்பி ஏறுற மாதிரி உன் கண்ணு மேலே ஏறுதே.”

    “என் வயிற்றுலே பசும் பாலை வார்த்திட்டாங்க எம ராசா! அந்த உத்தரவாதம் போதும் எனக்கு!”

    ஆனந்த கண்ணீர் இப்போது வடிய, பொன்னம்மா துள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள்.

    “என்ன சொல்றே பொன்னம்மா ?  நான் பசும்பாலை உன் வயிற்றில் வார்த்தேனா ?”

    “இப்போ எனக்கு பிள்ளை வேணாம் எம ராசா ! . . நான் அதைத் தள்ளிப் போடறேன்.  நீங்க நீண்ட நாள் வாழணும்.” என்று சிரித்துக் கொண்டு கதவை மூடினாள், பொன்னம்மா.

    எமனுக்கு மண்டையில் ஏறிப் புரிபட சிறிது நேரம் பிடித்தது.

    “அடி பாதகி ! ஏமாற்றி விட்டாயே ! இரண்டாம் தடவையும் நான் ஏமாந்துட்டேன்.  சாவித்திரியை விட பால்காரி பலே கைக்காரி !”  கோபத்தில் கீரிடத்தைத் தூக்கி விட்டெறிந்து தலையில் நாலடி அடித்துக் கொண்டான்.

    எருமை வாகனத்தை வேகமாய் முடுக்கினான், எம ராஜன்.  திடீரென்று பின்னால் மறுபடியும் குரல் எழுந்தது.

    “போகாதீங்க! நில்லுங்க! நில்லுங்க!” என்று அலறிக் கொண்டு மறுபடியும் பொன்னம்மா ஓடி வந்தாள். பின்னால் திரும்பிய எமனுக்குக் கண்கள் இரண்டும் சிவந்து கோபக் கனல் பறந்தது.  பற்களை நறநற வென்று கடித்தான். கைகளைத் தூக்கி ஆங்காரத்துடன் திரும்பினான்.

    “இன்னும் ஏன் பின்னாலே வர்றே ! போதும் உன் உபத்திரம் ! போ! போ! போ! ஒழிஞ்சு போ.  எதுவும் உனக்கினித் தர மாட்டேன் !”

    “என் வயிற்றிலே மண்ணைப் போட்டு போறீங்களே, எம ராசா! நான் முக்கியமானதை விட்டிட்டேனே !”

    “புரியும்படி சொல்லித் தொலை!”

    “எம ராசா ! இது அநியாயம் ! திருடுன்னு எங்க ஊரிலே சொல்லுவாங்க ! நீங்க ஏறிப் போறது, என் எருமை மாடு ! தினம் எனக்குப் பால் கறக்கிற எருமை ! பால் எருமைக்கும் எருமைக் கடாவுக்கும் வித்தியாசம் தெரியாம, என் மாட்டை பத்திட்டு போறது சரியா ? மாட்டைப் பிடிக்க வந்தவ, புருசன் கிடைச்ச சந்தோசத்திலே அதை மறந்துட்டேன் !  புருசனைக் கொடுத்ததுக்கு எருமை வெகுமதியா ?”

    எம ராஜனின் சினம் பட்டெனத் தணிந்தது !  எருமையை விட்டுக் கீழ் இறங்கிப் பார்த்தான் !  எருமை மாடு எமனைப் பார்த்து முறைத்தது !

    “அட ஆமா, பால் எருமைதான் இது ! முதல்லே அதைச் சொல்லி யிருக்கலாமே ! . .  அதானே பார்த்தேன் ! தெற்கு நோக்கிப் போறதுக்கு பதிலா வடக்கிலே போவுதே, ஏன் என்று எனக்கு தெரிய வில்ல ! . . எங்கே என் மாட்டைக் காணோமே ?”

    “புல்லுத் தின்ன போயிருக்கும், எம ராசா! . . காலையிலே அது வயித்துக்கு ஏதாவது போட்டீங்களா ? . . எருமை மாட்டிலே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியலையே, நீங்க எடுத்துட்டுப் போற உயிர்கள் எல்லாம் சரியானதா ? . .  அட ஆண்டவா ! . .  எம ராசனுக்கும் வயசாகுதில்லே ! கண்ணு மிரளுது ! . . எம ராசா! மாடு தேடிறதுக்கு முந்தி முதல்லே ஒரு கண்ணாடி வாங்கி மாட்டிக்கங்க ! எருமை மாறாட்டம் மாதிரி, ஆள் மாறாட்டம் ஆனா என்ன ஆகுறது ?”

    பொன்னம்மா மாட்டை தட்டிக் கொண்டு கொட்டத்துக்குள் நுழைந்தாள்.  உதட்டைக் கடித்துக் கொண்டு திருதிரு வென்று விழித்த எமன், கீழே கிடந்த கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டு, வேகமாக வாகனத்தை தேடி நடந்தான்.

    ++++++++++++++

    S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 19, 2008)] (Revised R-1)

    Share
  • முக்கோணக் கிளிகள்

    சி. ஜெயபாரதன், கனடா

    [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர் தமது புதிய உறவைத் தம்தம் கோணங்களில் திருப்பப் பார்க்கிறார்கள். பிற கோணங்களைப் புறக்கணித்து நேர் கோணப் பாதையில் மலை ஏறும் போது, முள்ளும் கல்லும் குத்தும்! எதிர்த்துப் பனிப்புயல் அடிக்கும்! முடிவில் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் போது தாக்கும் இமாலயத் தடைகளைத் தாங்க முடியுமா? ஒரு சிக்கல் அவிழ்ந்தால் அதன் வயிற்றிலிருந்து இன்னொரு சிக்கல் பிறக்கிறது!]

    காயிலே இனிப்ப தென்ன! கனியானால் புளிப்ப தென்ன!

    தட்டிய கதவைத் திறந்த புனிதா அதிர்ச்சி அடைந்து கண்ணிமை கொட்டாமல் சிலையாய் நின்றாள். வாசற் படியில் மகள் சித்ராவுடன் இணையாக நின்ற கவர்ச்சியான வாலிபனைக் கண்டதும், அவள் நெஞ்சில் குப்பென ஓர் ஊற்று பொங்கி எழுந்தது! அவன் கண்ணொளி பட்டதும் வெற்றிடமாய் சப்பிக் கிடந்த அவள் இதயம் உப்பி விரிந்தது!

    “அம்மா இவர்தான் மிஸ்டர் குருநாதன்! புதிதாகக் கல்லூரியில் சேர்ந்துள்ள எங்க மாத்ஸ் லெக்சரர். நமது மாடி வீட்டுக் காலி அறையில் தங்க விரும்புகிறார். முழுப் பெயர் சிவ குருநாதன், எங்க குரு!” உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் சமாளித்துக் கொண்டு பேசினாள் புனிதா, “நான் கொடுத்த விளம்பரத்தில் கல்லூரிப் பெண்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும் என்று அழுத்தமாகச் சொல்லி யிருக்கேனே”.

    “நான்தான் அவரை அழைத்து வந்தேன், அம்மா. விளம்பரத்தைப் படித்த பிறகு அவருக்கும் இஷ்ட மில்லைதான்”

    “மாடி அறையில் ஆடவர் குடி வருவதை நான் விரும்பவில்லை. சித்ரா! உள்ளே வா! சொல்றேன்” சித்ரா உள்ளே சென்றதும் கதவை மூடிப் புனிதா ஏதோ மராட்டிய மொழியில் அவளுடன் பேசுவது சிவாவின் காதில் மெதுவாக விழுந்தது. பதினைந்து நிமிடங்கள் கழித்து, கதவு திறந்தது. சித்ரா மட்டும் தொங்கிய முகத்துடன் வெளியே வந்தாள்.

    “வெரி ஸாரி ஸார்! எங்கம்மாவுக்கு விருப்பம் இல்லை. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்”

    “நான் மராட்டிக்காரன் இல்லை என்பது காரணமாக இருக்கலாம்”

    “அப்படி ஒன்றும் இல்லை”

    “ஒரு வருடம் தராவிட்டாலும், ஆறு மாதமாவது தங்கலாமா”

    “அம்மா ஆறு மாதத்துக்கு அவர் தங்கட்டுமே” என்று தாயிடம் கனிந்து கேட்டாள் சித்ரா.

    “ஒரு வருடத்துக்கு குறைஞ்சி வாடகைக்கு விடுவதாய் இல்லை. அதுவும் ஆண்களுக்கு கொடுப்பதாய் இல்லை” என்று உள்ளே இருந்து புனிதாவின் குரல் வந்தது.

    “மூன்று மாதங்களுக்குத் தங்க விடுங்கள். அதற்குள் வேறு இடம் பார்த்துக் கொள்கிறேன்”

    “இது பெண்களுக்குத் தரப்படும் ரூம்! ஆண்களை வைப்பதாக இல்லை” என்று அழுத்தமாகப் பேசினாள், புனிதா.

    “ஒரு மாதமாவது கொடுங்களேன். அதற்குள் வேறு ஒரு இடத்தைப் பார்த்துக் கொள்கிறேன். வேண்டுமானால் உங்களுக்கு ஓய்வு நேரத்தில் என்னால் முடிந்த வேலையைச் செய்து கொடுக்கிறேன்” என்று சிவா அவர்களைப் பரிதாபமாக நோக்கினான். புனிதாவிடமிருந்து உடனே பதில் வராமல் சற்று அமைதி நிலவியது.

    “எங்களுக்கு ஆடவர் உதவி எதுவும் தேவையில்லை!”

    “அம்மா நான் டியூஷனுக்கு வெளியே போக வேண்டியதில்லை, ஸார் எனக்கு கணக்கு, பிசிக்ஸ் சொல்லிக் கொடுத்தால்”

    “நான் பணம் வாங்காமலே சித்ராவுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்”

    “அம்மா நமக்கு டியூஷன் பணம் மிச்சம், குரு நம்ம மாடியிலே வாடகைக்கு வந்தால்”

    “சித்ரா! உனக்கு யாரும் இலவசமா சொல்லித் தர வேண்டாம்” … போட்டாள் ஒரு போடு, புனிதா.

    “அப்போ சரி! குருவுக்கு டியூஷன் பணத்தைக் கொடுத்திடலாம். ஆனால் ஒரு மாதத்திலே நான் என்ன கணக்கைக் கற்றுக் கொள்வது? அல்ஜீப்ராவுக்கே மூணு மாசம் ஆகும்! அப்புறம் ஜியாமெட்ரி இருக்கு. அனலிடிகல் ஜியாமெட்ரி இருக்கு. அப்புறம் பிசிக்ஸ் படிக்க வேணும்! ஒரு வருசத்துக்கும் குறைஞ்சா அரை குறையாகத்தான் என் டியூஷன் முடியும்”

    “நான் அதுக்கு இப்போ பதில் தர முடியாது. கல்லூரி மீட்டிங் போக நேரமாச்சு! யோசித்து இரண்டு நாளிலே சொல்றேன்” என்று கூறி புனிதா உள்ளே போய் விட்டாள்.

    சித்ரா சிவாவைக் கண்டு புன்னகை புரிந்தாள். அழகிய அவளது மீன் விழிகள் இன்னும் விரிந்தன.

    கதவுக்குப் பின்னால் மறைந்த புனிதாவின் பேச்சில் காரம் இருந்தாலும், அவளது குரல் இனிமை சிவாவைப் பாகாய் உருக்கியது.

    “சித்ரா! நீ சாமர்த்தியக்காரி. உன் அம்மாவை மடக்கிப் போட்டு விட்டாயே. நன்றி சித்ரா நன்றி! நான் வருகிறேன் என்று நடக்க ஆரம்பித்தான்.

    “குருவே! ஹோட்டல் அறையில் தூங்கி விழாமல், சற்று தியானம் செய்யுங்க, மாடி அறை கிடைக்க வேணும் என்று. அம்மா மனதை மாத்துவது மிகக் கஷ்டம். இன்னும் நாற்பத்தி எட்டு மணி நேரம்! எண்ணிக் கொண்டே இருங்க” என்று சிரித்துக் கொண்டு கதவைச் சாத்தினாள், சித்ரா.

    ஞான ஒளி வீசுதடி, மோன விழிச் சுடர்முகத்தில்!

    கோயமுத்தூர் எஞ்சனியரிங் கல்லூரியில் இடம் கிடைத்து முதலாண்டு சேர்ந்த சித்ரா, மாத்ஸ் லெக்சரர் சிவநாதனை வகுப்பில் அன்று காலையில்தான் சந்தித்தாள். அப்போது சிவாவுக்கு தங்க அறை இல்லாதது, தன் வீட்டு மாடி காலியாக இருப்பது இரண்டையும் ஒன்றாய் இணைக்க ஒரு கணிதச் சமன்பாடு போட்டுப் பார்த்தாள். அன்று கணக்கு வகுப்பைத் தொடங்கிய சிவநாதன் பள்ளியில் போதித்த பழைய ஜியாமெட்ரியில் முக்கோணத்தின் பண்புகளை மாணவருக்கு நினைவூட்டினான். பித்த கோரஸ் தேற்றத்தை விளக்க வரும் போது அவன் கூறியதை சித்ரா மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தாள். முக்கோணத்தில் ஒரு கோணம்தான் நேர்கோணமாக இருக்க முடியும்! கணக்கில் அவள் ஒன்றும் பலவீனமானவள் அல்ல! கடைசி நேரத்தில் எப்படியாவது உருட்டிப் புரட்டி அறுபது மார்க்கு வாங்கி விடுவாள்! எப்படியோ படித்து, எப்படியோ தேர்ச்சி பெற்று, எப்படியோ இடம் வாங்கி, அவள் இப்போது எஞ்சனியரிங் கல்லூரி முதலாண்டு மாணவி என்ற பெருமிதத்தில் இருந்தாள்!

    பதினெட்டு வயது பொங்கித் ததும்பும் சித்ரா ஊர்வசியா அல்லது மேனகாவா? இரண்டில் ஒருத்தி. முதல் நாளே சிவநாதனின் நடை, உடை, பாவனை அனைத்தும் சித்ராவை மயக்கி விட்டன! சித்ராவுக்குப் பேசும் விழிகள்! அவள் தாய் புனிதாவுக்குப் பேசா விழிகள்! பேசும் விழிகளை விடப் பேசாத விழிகளே சிவாவுக்குக் காவியங்களைக் கூறின! புனிதாவையும், சித்ராவையும் அருகே நிற்க வைத்துப் பார்த்தால் தாய், மகள் மாதிரி தெரியாது. இருவரையும் அக்காள், தங்கை என்றுதான் சொல்ல வேண்டும்!

    சித்ராவின் தாய் புனிதவதி நாற்பது வயதைத் தாண்டி விட்டவள்! இருபது வயது வனிதா மணிபோல் புனிதா இருந்தாள்! சித்ராவை விட எடுப்பாகவும், உடல் கட்டு குலையாமல் செதுக்கி வைத்த சிலை போல இருந்தாள். அவளது கணவர் காப்டன் ஆனந்த் குல்கர்னி இறந்து பத்தாண்டுகள் ஓடி விட்டன! ராணுவ அதிகாரியாக ஜம்மு காஷ்மீரில் சில வருடங்கள் பணி புரிந்தவர். கடைசியில் காஷ்மீர் மூர்க்கர்களின் தாக்குதலில் உயிரைப் பலி கொடுத்தவர். கோயமுத்தூர் ராணுப் பயிற்சி முகாமில் மூன்று வருடங்கள் ஆனந்த் குல்கர்னி அதிபதியாக இருந்தவர். கணவனை இழந்த புனிதா இப்போது தனிமையில் மகளுடன் வாழும் தனிமரம்!

    பூனேயில் மராட்டியக் குடும்பத்தில் பிறந்த அவர்கள் கோவையில் இருபது ஆண்டுகளாக இருந்ததால் மூவருக்கும் நன்றாகத் தமிழ் பேசவும், எழுதவும் தெரியும். அதிலும் சித்ரா கோவையிலே பிறந்தவள். வீட்டில் மராட்டிய மொழி பேசினாலும் அவளுக்குத் தமிழ்தான் நன்கு எழுதப் பேசத் தெரியும். புனிதா எம்.ஏ. பட்டதாரி. நாகரீக மராட்டியக் குடும்பத்திலே பிறந்த புனிதா, கணவனை இழந்த பின்னும் நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டாள்! கூந்தலில் பூ வைத்துக் கொண்டாள்! வண்ணச் சேலைகளைக் கட்டிக் கெண்டாள்! கணவனை இழந்தவள் என்று புனிதா வெளியில் விளம்பரம் செய்து கொள்வதில்லை! கோவை நிர்மலா பெண்டிர் கல்லூரியில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையாக புனிதா வேலை பார்த்து வந்தாள். கல்லூரியில் பாதிப்பகல் கழிந்து விடுவதால், அவளைத் தனிமை கொடுமைப் படுத்துவது மீதிப் பாதி இரவு நேரம்தான்!

    சிவநாதன் நாற்பது வயதை எட்டியவன்! தங்கையின் திருமணம் தள்ளிக் கொண்டே போனதால், தனிமையில் அவன் வயதும் ஏறிக் கொண்டே போனது! தன் வயது ஏறுவதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை! ஆனால் மணமாகாமல் தங்கையின் வயது ஏறுவதை அவனால் தாங்க முடிய வில்லை! மதுரைக் கல்லூரியில் பற்றாத குறைந்த சம்பளத்தில் பத்தாண்டுகள் கணக்குச் சொல்லிக் கொடுத்தான். அந்த வருடம்தான் கணக்கு லெக்சரர் வேலை கிடைத்து, கூடிய சம்பளத்தில் கோவை எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அவனும் தங்கையும் இரண்டே நபர்கள். தகப்பனார் காந்தியின் விடுதலைப் போராட்டத்தில் கலந்து இரண்டு வருடம் பெல்லாரி சிறையில் கிடந்தவர். இப்போது தியாகிகள் பென்ஷசன் பெற்று ஓய்வில் இருக்கிறார்! தாய் இருக்கிறாள். சிவாதான் குடும்ப கோபுரத்தைத் தாங்கும் தூண்! பணம் சேர்த்து தங்கையின் கல்யாணத்தை முடித்து வைக்க வேண்டியது அவன் கடமை! ஹோட்டல் அறையில் தங்கி தினமும் அவனது சேமிப்புப் பணம் கரைந்து போவதை எண்ணி சிவநாதன் கவலை அடைந்தான்! குறைந்த வாடகையில் அறை எடுத்து எப்போது ஹோட்டலை விட்டு ஓடுவது என்று சிவா அலை மோதிக் கொண்டிருந்தான். வசதியாக சித்ரா, அவனை அன்று மாலை தன் அம்மாவிடம் இழுத்துச் சென்றாள்.

    இனம் தெரியவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்!

    அன்று காலை முதல் பீரியட் கணக்கு வகுப்பில் ஏகப்பட்ட கலவரம். அப்போது தென்னக மாநிலங்கள் தனியாகப் பிரியாத காலம் அது! நூறு பேர் கொண்ட முதல் வகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழி மாணவர்களும் கலந்திருந்தனர். அவர்களில் பெண்கள் மட்டும் பத்துப் பேர். முதல் வகுப்பு மலையாள மாணவர்களுக்கு சிவநாதனை ஏனோ பிடிக்கவில்லை! பின் பெஞ்சிகளில் அமர்ந்த மலையாளிகள் பலர் கணக்குப் பாடத்தில் கவனம் செலுத்தாமல் வேண்டு மென்றே கலாட்டா செய்தனர். பொறுமையையிழந்த சிவா, கணக்குப் போதிப்பதை நிறுத்தி, இராமாயணத்தைப் பற்றி ஆங்கிலத்திலே உரையாட ஆரம்பித்தார்.

    “கவியோகி வால்மீகி தான் எழுதிய இராம காவியத்தில் தென் கோடியில் வாழ்பவரை வானரங்களாய் காட்டியிருக்கிறார்! நான் அதை நம்புவதில்லை! வடக்கே அயோத்தியா புரியில் நாகரீக மனிதர் வாழும் சமயத்தில், தெற்கே மட்டும் எப்படி வானரங்கள் வாழ்ந்தன? வால்மீகி சொல்லியிருப்பது டார்வின் நியதிக்கு முரணாக இருக்கிறது! இதுவரை நம்பாத நான் வால்மீகி சொல்லி யிருப்பது உண்மை என இப்போது நம்புகிறேன்” என்று சிவா சொல்லி முடித்த போது, வகுப்பில் சிரிப்பு வெடிகள் வெடித்தன! மலையாள மாணவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது! சிவா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் ஒன்றும் நடக்க வில்லை! உடனே அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியேறினர்! பிறகு வகுப்பில் கணக்குப் பாடம் ஒழுங்காக நடந்து முடிந்தது.

    சிவா வெளியே வந்ததும் காத்துக் கொண்டிருந்த சித்ரா புன்னகை மலர, “கணக்கு வகுப்பில் அனுமார் கதையைச் சொல்லி எல்லாரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து விட்டீர்களே! ஸார் உங்களுக்காக மாடி அறைக் காத்துக் கொண்டிருக்கு! இன்று மாலை வரலாம். சிவப்புக் கம்பளம் விரிக்கவா? அல்லது பச்சைக் கம்பளம் விரிக்கவா? அறையில் ஏர் கன்டிஷன் இல்லை. வேண்டுமானால் மாட்டித் தருகிறோம். ஆனால் வீட்டு டியூஷனில் ராமர் கதா காலட்சேபத்தை ஆரம்பித்து விடாதீர்கள்” என்று நக்கல் புரிந்தாள்.

    “உங்க அம்மா ஒரு மாதத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்களா?”

    “ஒரு மாதமா? இல்லை. ஆறு மாதங்கள் வாங்கி விட்டேன், அம்மாவிடம் சண்டை போட்டு! எனக்கு மட்டும் நன்றி சொல்லுங்கள், முதலில்” என்றாள்.

    “உனக்கு நூறு நன்றி! உன் அம்மாவுக்குக் கோடி நன்றி”

    “எனக்கு ஒரு நன்றி போதும்! அம்மாவின் நன்றியை என்வழியாக அனுப்பாமல், நேராகச் சொல்லிக் கொள்ளுங்க” என்று கூறி விட்டு அடுத்து கெமிஸ்டிரி கூடத்துக்குள் நுழைந்தாள். சிவா அடுத்த கணக்கு வகுப்புக்கு நேரமாகவே சென்றான்.

    பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளி முகத்தாள்!

    அன்று மாலை சிவா, சித்ரா வீட்டு முன் அறையில் வந்து அமர்ந்தான். சுவரில் ஜனாதிபதி பதக்கத்தை அளிக்கும் ஒரு பெரிய படம் தொங்கியது! கம்பீரமான தோற்றமுடன் இராணுவ உடையில் நின்றார், ஆனந்த் குல்கர்னி. சித்ரா சிவாவுக்கு மாடி அறைகளைக் காட்டி விட்டு, அம்மாவிடம் கீழே அழைத்து வந்தாள். புனிதா சிறிது கடுமையான முகத்துடன் சிவாவை வரவேற்றாள். காபி கொண்டு வந்த சித்ராவுக்கு சிவா நன்றி சொன்னதும், வாடகையைப் பற்றி புனிதா பேச ஆரம்பித்தாள். அறைக்கு மாத வாடகை 400 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்பணம் தர வேண்டும். ஆக முதலில் 1200 ரூபாய் வேண்டும். ஆறு மாதத்திற்குள் அவன் வேறோரு இடம் பார்த்து அறையைக் காலி செய்ய வேண்டும்.

    கல்லூரி நாட்களில் மாலை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் சித்ராவுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தால் மாதம் 100 ரூபாய் தருவதாகச் சொன்னாள். சிவா உடனே ஒப்புக் கொண்டான். ஆனால் முன்பணமும், முதல் மாத வாடகையும் தற்போது தன்னால் தர இயலா தென்றும், முதல் மாதச் சம்பளம் கையில் கிடைத்ததும், சேர்த்துத் தருவதாக சிவா சற்று பரிதாபமாகக் கூறினான். அதற்குப் புனிதா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அவனது நிலை புனிதாவுக்குப் புரிந்தது. ஹோட்டல்காரன் பணமில்லாத சிவாவை ஒருநாள் கூடத் தங்க விடமாட்டான்! கனிவாக சிவாவைப் பார்த்தாள், புனிதா. அவளது பாசமலர்க் கண்களில் சிவாவின் இதயம் சிக்கிக் கொண்டது. சிவா புறப்பட எழுந்தான்.

    “சில நிபந்தனைகள், மிஸ்டர் சிவா! மாடி அறையில் எந்தக் கேளிக்கைப் பார்டிக்கும் அனுமதியில்லை! குடிச்சுக் கூத்தடிக்க அனுமதியில்லை! புகை பிடிக்க அனுமதி இல்லை! உங்க பெற்றோர், உறவினர் வரலாம். குடிப் பழக்கம் இருக்கும் நண்பர்களை இங்கு அழைத்து வர வேண்டாம்! இரவில் பின் வழியாக மாடியில் ஏறிச் செல்லும் போதும், இறங்கும் போதும் சத்தமோ சந்தடியோ உண்டாக்கி வீட்டில் தூங்குபவரை எழுப்பி விடக் கூடாது”

    “நான் குடிப்பதில்லை” என்றான் சிவா. நிபந்தனைகளுக்கு உடன்படாக சிவா தலையை ஆட்டினான். பிறகு தன் பெட்டி, படுகையைக் கொண்டு வர ஆட்டோ ரிக் ஷாவைத் தேடிச் சென்றான். போகும் போது புனிதாவின் மிடுக்கான கண்களும், எடுப்பான தோற்றமும் சிவாவின் நெஞ்சையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன!

    கண்ணில் தெரியுதொரு தோற்றம், அதை
    வண்ணப் படமெடுக்கும் நெஞ்சம்!

    அன்று தீபாவளி. கல்லூரியில் கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் மதுரைக்குச் சென்று வர சிவா விரும்பவில்லை. காலையில் புத்தாடை கட்டி இனிப்புப் பலகாரம் தின்ன அமரும் போது, மாடியில் நடமாடும் காலடிச் சத்தம் கேட்கவே, சிவாவை அழைத்து வரும்படி புனிதா சித்ராவை அனுப்பினாள். கீழே வந்த சிவா புத்தாடை புனைந்து, பூவும் பொட்டும் இட்டுப் புது மணப்பெண் போல் காட்சி அளித்த புனிதாவைக் கண்டதும் அவளது அழகில் மயங்கினான். அவன் நெஞ்சில் கனல் பற்றி இதயத் துடிப்பு அதிகமானது! இளமை பொங்கும் சித்ராவும் அழகாய் அணிந்து அன்று பூத்த மலர் போல் தோன்றினாள். அவளது வாலைமீன் கண்கள் சிவாவைக் கவர வலை விரித்தன! அவள் தன் அழகிய சிரிப்பிலே அவனை மயக்கினாள். சிவாவின் கண்கள் சித்ராவின் சிலந்தி வலையிலிருந்து தப்பி, புனிதா விரிக்காத வலையில் சிக்கிக் கொண்டன!

    புனிதா புன்னகை மலர சிவாவை நாற்காலியில் அமரச் சொன்னாள். கைப் பொன் வளையல்கள் ஆட தாமரை அரும்புகள் போன்ற பளிங்கு விரல்கள் பலகாரங்களைப் பரிமாறும் அழகைச் சிவா ரசித்தான்! தின்னும் பலகாரங்களின் சுவையை ரசிக்காது சித்ராவின் கண்ணிமைகள் சிவாவின் முகத்தைப் பார்த்தும், பார்க்காமலும் விட்டு விட்டுப் படமெடுத்துக் கொண்டிருந்தன! புனிதா தயாரித்த தீபாவளிப் பலகாரங்கள் எல்லாம் சுவையாய் இருந்தன. அதைவிடப் புனிதாவின் குரல் சிவாவின் காதில் தேனாய் இனித்தது! வருடத்தில் தீபாவளி இப்படி ஒரு தடவைதான் வர வேண்டுமா என்று சிவாவின் மனம் கேட்டது! தேவலோக ரம்பை போன்ற புனிதா அன்று அன்புடன் தீபாவளித் தின்பண்டங்களைப் பரிமாற அவன் கொடுத்து வைத்தவன்! பல முறைத் தடுமாறி நன்றி சொல்லி சிவா இதயத்தை அவர்களிடம் விட்டு விட்டு மாடிக்குச் சென்றான். சித்ரா, புனிதா இருவரும் அவர்களது இதயத்தை அவன் பறித்துச் செல்ல சிலையாய் நின்றனர்!

    தோயும் மது நீ எனக்கு! தும்பியடி நான் உனக்கு!

    நாட்கள் சென்றன! டியூஷன் பாடங்கள் தினமும் நடந்தன! சித்ரா தினமும் டியூஷனில் கற்றுக் கொள்வது குறைவு! தனக்கு நன்றாகத் தெரிந்த விபரங்களையும் தனக்குத் தெரியாதது போல் திருப்பித் திருப்பி கேள்வி கேட்டு சித்ரா காலத்தைக் கடத்தினாள்! அவன் கவனத்தை கவர்ந்தாள்! தினமும் தரிசனம் தந்து சிவா தன்னையே நினைக்கும்படி செய்ய பல உபாயங்களைக் கையாண்டாள். நெருங்கி ஒட்டிக் கொள்ளத் துடிக்கும் சித்ராவை வெட்டி விட முடியாமல் தன்னைக் கட்டுப்படுத்த சிவா மிகவும் சிரமப் பட்டான்! காந்தக் கனல் வீசும் அவளது வாலிப மேனியைப் பற்றிக் கொள்ள எழும் இச்சையைக் கட்டுப் படுத்த சிவாவின் மனம் படாத பாடு பட்டது! என்னதான் கற்றாலும், எதற்குத்தான் கட்டுப் பட்டாலும் ஐம்புலன்கள் ஆட்சி செய்யும் தோல் போர்த்திய உடம்பு வேறு! அகத்தே உறங்கிக் கிடக்கும் உள்ளம் வேறுதான்! உடற்பசி வேறு! உள்ளப்பசி வேறு! உடல் வேண்டுவதை உள்ளம் தடுக்கும்! உள்ளம் வேண்டியதை உடல் தடுக்கும்! உடலும், உள்ளமும் ஒன்றுக்கொன்று பகையாளி! கண்ணிருந்தும் உடல் குருடானது! கண்ணில்லா உள்ளம் ஒளி கொண்டது! சித்ராவை அணைத்துக் கொள்ள உடல் விரைந்தது! ஆனால் சிவாவுக்கு உள்ளம் தடை உத்தரவு போட்டது!

    அன்று சித்ராவுக்குப் புரியாத பிஸிக்ஸ் கணக்குளைச் சொல்லிக் கொடுக்க தியரியை விளக்கப் போய் இரவு பத்து மணி ஆகிவிட்டது! சாப்பிடும் ஹோட்டலில் இரவு ஒன்பது மணிக்கு மேல் உணவு கிடைக்காது! சித்ரா மட்டும் சாப்பிட உட்கார்ந்தவள், அம்மாவைக் கெஞ்சினாள்! “அம்மா! என்னால் இன்றைக்கு அவரது இரவுச் சாப்பாடு போச்சு! நம் வீட்டில் சாப்பிட அழைக்கலாமா” என்று கேட்டாள் சித்ரா. தாயும் சம்மதம் தரவே, சித்ரா ஓடிப் போய் சிவாவை அழைத்து வந்தாள். நாற்காலியில் அமரச் சொல்லி அவனைச் சிரித்த முகத்துடன் வரவேற்றாள், புனிதா. மேஜை மேல் பாதிப் பக்கங்கள் திறந்தபடிக் கிடந்த வி.ஸ. காண்டேகரின் நாவல் “கிரௌஞ்ச வதம்” அவன் கவனத்தைக் கவர்ந்தது. தள்ளி உட்கார்ந்த சிவாவை, அம்மா பரிமாற வசதியாக இருக்கும் என்று பக்கத்தில் அமரச் சொன்னாள் சித்ரா. அவன் கேளாமல் போகவே சித்ரா போய் அவன் அருகில் உட்கார்ந்தாள். இடது புறத்தில் சித்ரா! வலது புறத்தில் நின்று, தட்டில் பரிமாறியவள் புனிதா! இரண்டு அணங்குகளின் கவர்ச்சியான மேனியில் எழுந்த காந்த மண்டலத்தில் அகப்பட்டுக் கொண்டு இருபுறமும் சிவா ஈர்க்கப் பட்டுத் திண்டாடினான்!

    “காண்டேகரின் கிரௌஞ்ச வதம் நாவலை நான் படித்திருக்கிறேன். உணர்ச்சி பொங்கும் உயர்ந்த நாவல்! அவர் உன்னதக் காவியப் படைப்பாளர்” என்று மௌனத்தைக் கலைத்தான் சிவா.

    “ஏற்கனவே “கிரௌஞ்ச வதம்” நாவலை நான் மராட்டியில் படித்ததுதான்! இப்போது அந்த நாவலைத் தமிழில் சுவைக்கிறேன். அழகிய தமிழ் நடையில் கா.ஸ்ரீ.ஸ்ரீ காண்டேகரின் மனத்தை அப்படியே எடுத்துக் காட்டியிருக்கிறார்” என்று தனது தமிழ்ப் பற்றைக் காட்டினாள் புனிதா.

    “பாவம்! கடைசிக் காலத்தில் மராட்டியக் காவிய மேதை காண்டேகரின் கண்கள் ஒளியிழந்து குருடாகிப் போயின”

    “ஆங்கிலக் கவி மேதை ஜான் மில்டன் போல” என்றாள் புனிதா.
    “உயர்ந்த மேதைகளுக்கு ஒன்று ஆயுள் குறுகிப் போவுது! அல்லது கண்கள் குருடாகிப் போவுது!”
    அப்போது புனிதாவின் எழிற் கண்கள் வீசிய ஒளிவீச்சு சிவாவின் நெஞ்சில் மின்னலைப் பாய்ச்சின! அந்த மின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவன் விழிப்படைய சில கணங்கள் எடுத்தன!

    சப்பாத்தி, குருமா, பருப்புக் குழம்பு, அப்பளத்துடன் மராட்டிய முறையில் தயாரித்த உணவு சிவாவுக்கு அமுதமாய் இருந்தது! அதை விட அவளது கனிவுக்குரல் இனித்தது! இனிதாக அவள் பேசுவதைத் திரும்பத் திரும்ப கேட்க வேணும் போல அவனுக்கு ஆசை எழுந்தது. அத்தனை அன்புடன் அவனை யாரும் இதுவரை உபசரித்ததில்லை.

    அன்றைய தினத்தில் நடந்த சிவாவின் முதல் விருந்து புது விதமான உணர்ச்சிகளை மூவரிடமும் எழுப்பியது! சிவாவை வீட்டுக்கு வந்த மருமகனாக எண்ணிச் சித்ரா கற்பனைக் கனவில் மிதந்தாள்! பத்தாண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் புருசனுக்கு உணவு பரிமாறிய நினைவு புனிதாவுக்கு வந்தது! கண்ணான கணவனுக்குத் தனது கையால் உணவு பரிமாறுவது போல் எண்ணிப் புனிதா மனதில் இன்புற்றாள்! சிவாவுக்கு வயிறு மட்டும் நிறைந்தது. ஆனால் இதயம் காலியாகிப் பசி உண்டானது! அவனது உள்ளம் புனிதா ஒருத்தியை மையமாக வைத்து அவளையே சுற்றிச் சுற்றி வந்தது!

    சாப்பிட்டதும் நன்றி கூற வந்த சிவா, தான் இரண்டு மாத வாடகை தர முடியாமல் போனதற்குப் புனிதாவிடம் வருத்தம் தெரிவித்தான். அவன் கையில் பணம் சேர்ந்தாலும், சேர்ந்த பணத்தை விட செலவுப் பணம் அதிகமானது! தகப்பனாரின் கடிதம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வந்துவிடும். மாதம் ஒரு முறை மொத்தமாக அனுப்பினாலும், அவருக்குத் தொகை பற்றவில்லை. தங்கை திருமணச் சீட்டுக்குச் செலுத்தும் பணம்! மின்சார வாரியத்துக்குப் பணம்! அரிசி, பருப்பு காய்கறிகளுக்குப் பணம்! பால் வாங்க தனியாகப் பணம்! சிவா கல்லூரிக்குக் கடன் வாங்கிப் படித்ததுக்கு மாதா மாதம் பணம் அடைப்பு! அதனால் பெரிய பணமுடை உண்டாகிக் கடைசி இரண்டு மாத வாடகை புனிதாவுக்குத் தர முடியாமல் போனது!

    தங்கையின் திருமணத்துக்குச் சீட்டுப் பணம் செலுத்துவது, தன் படிப்புக் கடனை அடைப்பது, நோய்வாய்ப் பட்ட தந்தையின் மருந்துக்குத் தருவது, அத்துடன் வீட்டுச் செலவுக்கு அனுப்புவது இவைகளுக்கே தன் வருவாய் பற்றாமல் போவதைப் புனிதாவிடம் இப்போது சொல்லி விடுவதுதான் நல்லது என்று நினைத்து தனது பண முடையை விபரமாகக் கூறினான். கண்ணிமைகள் கொட்டாது கூர்ந்து கேட்ட புனிதாவுக்கு என்ன சொல்வ தென்றே தெரியாமல் பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

    தன்னால் வாடகை தர முடியாமல் போவதால், ஆறு மாதத் தவணைக்கும் முன்பாகவே தான் அறையைக் காலி செய்வதாய் வருத்தமுடன் கூறினான் சிவா!

    “என் டியூஷன் என்ன ஆவது? பாதியிலே விட்டு விட்டுப் போவது சரியா” என்று அலறினாள் சித்ரா. புனிதா பெருந்தன்மையுடன் பேசினாள்.

    “மிஸ்டர் சிவா! திடீரென்று எங்கும் போக வேண்டாம்! பணம் மிஞ்சும் போது கொடுக்கலாம். போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். கல்லூரியிலிருந்து வந்ததும் மாலையில் பேசிக் கொள்ளலாம்” என்று கனிவாகப் பேசி சிவாவை அனுப்பி வைத்தாள். சித்ராவின் முகத்தில் முழு நிலவு தென்பட்டது. புனிதாவுக்கு நன்றி கூறி அவள் முகத்தை நெஞ்சில் படமெடுத்துக் கொண்டு, பெரு மூச்சுடன் மாடிக்குச் சென்றான், சிவா.

    தூண்டிற் புழுவினைப் போல், எரியும் சுடர் விளக்கினைப் போல்
    நீண்ட பொழுதாக எந்தன் நெஞ்சம் துடித்தடி!

    அன்று மூன்று பேருக்கும் தூக்கம் இல்லை! ஒவ்வொருவருக்கும் ஒருவித ஏக்கம்! சிவாவுக்கு வாடகைப் பணம் தர முடியவில்லையே என்னும் குற்றமுள்ள நெஞ்சு! புனிதாவின் அன்ன மிட்ட கைகள், புன்னகை தழுவிய முகம், கனிவு பொங்கும் இனிய குரல் அனைத்தும் கனவாகப் போகுமா என்ற பயம்! படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான்! இதயத்தைக் கவர்ந்த ஒருத்தியை விட்டு விட்டு அவனால் போக முடியுமா? வாடகை தர முடியாத சிவாவை இன்னும் மாடி அறையில் தங்க அனுமதித்த, புனிதாவுக்கு சிவா என்ன கைம்மாறு செய்யப் போகிறான்?

    புனிதாவுக்கும் அன்று உறக்கம் வரவில்லை. பத்தாண்டுகளாக கணவன் காஷ்மீரில் மரணமடைந்த பின் ஆடவர் வாடையே இல்லாமல் தனியாகக் காலம் கழித்தவள் புனிதா. இப்போது பாலை வனத்தில் கண்ட பசுஞ் சோலையாக சிவா அவளது தலை வாசலில் கால் வைத்தான். தங்கையின் திருமணத்துக்கு அவன் பணம் சேர்ப்பதும், குடும்பமே கண்ணாக அவன் உழைப்பதும் புனிதாவுக்கு அவன் மேல் பற்றையும், கவர்ச்சியையும் உண்டாக்கியது. அவன் வாடகை தராமல் பணம் தாமதமாகி விட்டாலும் பரவாயில்லை. அறையை விட்டு அவன் போய் விட்டால், அவளது நெஞ்சில் ஒரு பெரும் குழி உண்டாகி விடும் என்று அஞ்சினாள். கல்லூரியிலிருந்து மாலையில் சிவா வீடு திரும்பி மாடியில் நடக்கும் ஓசையைக் கேட்கும் போதெல்லாம் அவளது இதயத்தில் ஏதோ ஒரு துடிப்பும், அதைத் தொடர்ந்து ஒரு கனலும் எழுந்தது. கல்லூரியில் அவள் பீ.ஏ. வகுப்பில் ஷேக்ஸ்பியரின் நாடகம் “அண்டணி & கியோபாட்ரா” நடத்தும் போது, சிவா அண்டணியாகவும் தான் கிளியோபாத்ராவாகவும் எண்ணிக் கற்பனை செய்து கொள்வாள்! அவனையே இராப்பகலாக நினைக்கும் அவள் மனம் அவன் போய் விட்டால் என்ன பாடு படும்?

    சித்ராவும் தூங்க வில்லை! முந்திய நாள் அவனுக்குத் தெரியாமல் அறையில் எடுத்த அவன் படத்தை பார்த்துப் படுக்கையில் ரசித்துக் கொண்டிருந்தாள். கல்லூரி வகுப்பில் சந்தித்த முதல் நாளே, சித்ரா மயங்கி, தன் இதயத்தை சிவாவிடம் பறி கொடுத்தாள்! அப்புறம் சாமர்த்தியமாகத் தன் வீட்டு மாடி அறையில் அவனை அடைத்து விட ஒரு வாய்ப்புக் கிடைத்தது! கணிதப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்க வைத்துத் தினமும் அவனைத் தரிசிக்க, சித்ரா வழி வகுத்து அதிலும் அவளுக்குப் பூரண வெற்றி!

    அன்று சனிக்கிழமை! முகத்தைக் கழுவி விட்டுத் துண்டில் மூடித் துடைத்து கொண்டு கண்ணாடி முன் நின்ற சிவா தன் தோள் மீது மெத்தென்ற ஒரு கரம் பட்டதும் திடுக்கிட்டான்! கவர்ச்சி பொங்க சிரித்துக் கொண்டு பின்னால் நின்றவள் சித்ரா! சிவாவின் இதயம் ஆடியது! மெதுவாக அவளது கைகளை விலக்கினான்! சித்ரா மறுபடியும் அவனது தோளில் கையை வைத்தாள்! சிவநாதனுக்குப் கோபம் வந்தது!

    “சித்ரா! இது தப்பு! நீ என்னைத் தொடுவது தகாத செயல்” என்று அலறினான்.

    “நீங்க என்ன கீழ் ஜாதியா? இதிலே என்ன தப்பு இருக்கு?”

    “நீ வயசுப் பெண். என்னை நீ தொடக் கூடாது! நான் எந்த ஜாதியா இருந்தா என்ன? உங்க அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? என்னை வெளியே துரத்திடுவாங்க”

    “துரத்த மாட்டாங்க! என்ன ஆகும் தெரியுமா? எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகும்! எங்க அம்மாவுக்கு அவ்வளவு பயமா?”

    “இப்போ உன்னைக் கண்டால்தான் எனக்குப் பயமாயிருக்கு! பிளீஸ் கையை எடு”

    “நான் உங்களைத் தொடுவது தப்புன்னு என் கையை உதறித் தள்ளினால் என் கையைப் பிடிச்சு இழுத்தீங்க நான் அம்மாவிடம் புகார் செய்வேன்! அப்போ என்ன செய்வீங்க?” என்று அவனை மடக்கினாள். சிவாவுக்குத் தர்ம சங்கடமாய்ப் போனது!

    “அப்படி உன் அம்மாவிடம் நீ பொய் சொல்வாயா? எதற்காக இங்கு வந்தாய்? இன்று டியூஷன் கூட இல்லை”

    “சினிமாவுக்குக் கிளம்பினேன். உங்களுடன் போகலாம் என்று அழைக்கத்தான் வந்தேன்”.

    “நான் சினிமாவுக்குப் போவதில்லை. அப்படிப் போனாலும், உன்னுடன் போவதாக இல்லை”

    “இப்போ நான் தீண்டத் தகாதவளாக ஆயிவிட்டேனா? நான் பணம் தருகிறேன், சினிமாவுக்கு”

    “சித்ரா, உன் பணத்தில் நான் சினிமா பார்க்க விரும்பவில்லை”

    “நீங்க இந்தப் பணத்தை எனக்குத் திரும்பித் தர வேண்டாம்”

    “நான் உன்னுடைய கிளாஸ் லெக்சரர். வாலிபப் பெண் உன்னுடன் நான் படம் பார்க்கப் போவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?”

    “பாய் பிரண்டு என்னு நினைப்பாங்க! வீட்டிலே நீங்க லெக்சரர் இல்லே! அந்தப் பட்டமெல்லாம் கல்லூரியிலே!”

    “நான் உனது பாய் பிரண்டு இல்லே! சினிமா தியேட்டரில் நம்ம கல்லூரிப் பசங்கள் வருவாங்க”

    “நம்ம இரண்டு பேரையும் ஒன்னாக் காட்டுறதுக்குத்தானே படத்துக்குப் போலாம் என்கிறேன்”

    “அந்தக் காட்சியைக் காண எனக்கே பிடிக்கலே”

    “வரப் போறீங்களா? இல்லையா? எங்க வீட்டு விருந்தாளி நீங்க! தெருவிலே போற அன்னியன் இல்லே!” சித்ராவின் குரலில் அதிகாரம் தொனித்தது.

    “உன்னோடு சினிமாவுக்கு அவர் வர மாட்டார்! நீ மட்டும் போ!” என்ற குரல் கேட்டு சிவா நடுங்கினான்.

    கண்களில் கனல் பறக்க மாடிக்கு வந்த புனிதாவைக் கண்டு சிவாவுக்குத் தலை சுற்றியது. சித்ரா ஒன்றும் பேசாமல் தடதட வெனப் படியில் இறங்கி ஓடினாள். சிவாவின் கண்கள் தரையை நோக்கப் பேசினான்.

    “மன்னிக்க வேணும் மேடம். உங்களிடம் என்ன சொல்றதின்னு எனக்குத் தெரியலே!”

    “எல்லா வாதங்களையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நான் தோட்டத்தில் இருந்தது சித்ராவுக்குத் தெரியாது. நீங்க வருத்தப் பட இதிலே ஒண்ணும் இல்லே!” புனிதா நாற்காலியில் பெரு மூச்சுடன் அமர்ந்தாள்.

    “நான்தான் சித்ராவுக்காக வருத்தப் படுறேன். என் கணவர் காஷ்மீர் கலவரத்தில் இறந்த போது, சித்ராவுக்கு வயது ஆறு! போன அப்பா திரும்பாமல் போகவே அவள் மனதில் எழுந்த துடிப்பு இன்னும் இருக்கு! தந்தையை இழந்து போனதால் அவளுக்கு ஆடவர் மீது வாஞ்சை அதிகம்”

    “நான்தான் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடினேன்!” என்றான் சிவா.

    நீயே எனக்கு என்றும் நிகரானவள்!

    சித்ரா தனியாகச் சினிமாவுக்குப் போய் விட்டாள். சிறிது நேரம் மௌனமாய் இருந்து, புனிதா சிவாவை சாப்பிடக் கீழே அழைத்துச் சென்றாள். சாப்பிட்டுக் கொண்டே புனிதா பேசினாள்.

    “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க. எங்கே பிறந்தது, எங்கே படித்தது, பெற்றோர்கள் என்ன செய்கிறாங்க இதெல்லாம் தெரிஞ்சு கொள்ள விருப்பம்”

    “பிறந்தது மதுரையில். எம்.எஸ்சி. சயன்ஸ் பட்டம் பெற்றது, மதுரைக் கல்லூரியில். பெற்றோர்கள் இருவரும் அங்குதான் சொந்த வீட்டில் இருக்காங்க. காந்தியைப் பின்பற்றி அப்பா 1942 இல் சிறை சென்று, இப்போ தியாகிகள் பென்ஷன் பெற்று ஓய்வில் இருக்கார். அப்பாவுக்கு எழுபது வயது. அம்மாவுக்கு அறுபத்தி ஐந்தைத் தாண்டி விட்டது. நானும் தங்கையும் இரண்டே பேர்கள்தான்”

    “உங்க அப்பா சுதந்திரக்குப் போராடிய ஒரு தியாகின்னு பெருமைப் படுறேன். நீங்க ஏன் எஞ்சினியரிங் கல்லூரிக்குப் போகலே?”

    “அப்பாவாலே சப்போர்ட் பண்ண முடிய வில்லை. எனக்கும் ஆசைதான். என்ன செய்வது? எம்.எஸ்சி. முடிச்சு வேலைக்குப் போய் சம்பாதிக்கும்படி அப்பாவின் உத்தரவு”

    “உங்களுக்குக் கணிதத்திலே எப்படி ஆர்வம் அதிகமாச்சு?”

    “மதுரைக் கல்லூரி பிராமணர் நடத்தும் கல்லூரி. மாத்ஸ் பரீட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கிய சில மாணவரில் பிராமணர் அல்லாதவன் நான் ஒருவன் மட்டுமே. வைஸ் பிரின்சிபால் சுப்ரமணிய ஐயர் தனியாக என்னை அவரது ஆபீஸ¤க்கு அழைத்துச் சென்று முதுகில் தட்டிக் கொடுத்து, கணக்கில் நூற்றுக்கு நூறு நான் வாங்கியதற்குத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்”

    “கணித மேதை ராமானுஜனுக்கு அடுத்த படியா?”

    “ராமானுஜன் தெய்வ அருள் பெற்ற ஞானச் சிறுவன்! நான் அவரது கால் தூசிக்குச் சமம்! ஏழு வயதிலேயே அவரது கணித ஞானம் பளிச்சென வெளிப்பட்டது! பன்னிரெண்டு வயதில் கடினமான லோனியின் டிரிகினாமெற்றியைக் கரைத்துக் குடித்தார். பாவம் அந்த கணிதச் சுடர் முப்பத்தி ரெண்டு வயசிலே காச நோயில் அணைந்து போனது! ….. உங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்க” என்றான் சிவா.

    “பூனேயில்தான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, விவாகம் புரிந்து கொண்டது எல்லாம். எம்.ஏ. லிட்ரேச்சர் பட்டம் வாங்கியது பூனே யுனிவர்ஸிட்டியில். என் பெற்றோரும், கல்யாணமான தங்கையும் அங்கே இருக்கிறார்கள். ஆனந்த், என் கணவர் மிலிடரி கல்லூரியில் படித்து எஞ்சினியரானவர். திருமணம் ஆனதுமே, ஆனந்துக்கு முதல் பணி கோவை ராணுவ பயிற்சி முகாமில் கிடைத்தது. சித்ரா பிறந்தது, இந்தக் கோயமுத்தூரில்தான். காஷ்மீருக்கு மூணு மாசம், ஆறு மாத விஷேச டியூட்டி அடிக்கடி ஆனந்துக்கு வரும். அதில் ஒரு முறைப் பங்கு கொள்ளப் போனவர் திரும்பி ….வரவில்லை” புனிதாவின் தொண்டை சட்டென அடைத்துக் கொண்டது. கண்கள் இரண்டும் மூடின. கண்ணீர் மடை திறந்தது.

    சற்று அங்கு மௌனம் நிலவியது. கண்களைச் சேலையில் துடைத்துக் கொண்டாள், புனிதா.

    “தமிழில் எப்படி அழகாக உங்களால் பேச முடிகிறது?” என்று கேட்டான் சிவா.

    “நானும் ஆனந்தும் மாலை வேளைகளில் தனியாகத் தமிழ் கற்றோம். கோவை ராணுவப் பயிற்சி முகாமல் இருப்பவர் அநேகர் தமிழ்ப் படையாட்கள். தமிழ் தெரியாமல் அவர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது? கணவர் தமிழ் படிக்கும் போது, நானும் சேர்ந்து கொண்டேன். சித்ரா படித்தே தமிழ்ப் பள்ளியில்தான். உங்களுக்கு யார் எழுதிய புத்தகங்கள் பிடிக்கும்?” என்று கேட்டாள் புனிதா

    “தமிழில் பாரதியாரின் பாக்கள், டாக்டர் மு.வரதராசனார், அகிலன், பார்த்தசாரதி, காண்டேகர் நாவல்கள் என்னைக் கவர்ந்தவை. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஸாவின் நாடகங்கள், ஸோமர்செட் மாகம், பேர்ல் எஸ் பெக், டால்ஸ்டாய் நாவல்கள், எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். உங்களுக்கு யாரெல்லாம் பிடிக்கும்?”

    “எனக்கும் உங்களைப் போல் பேர்ல் எஸ். பெக், டெயிலர் கால்டுவெல் மற்றும் பெர்னாட்ஸா, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பிடிக்கும். எங்க நிர்மாலா கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டு விழாவிலும் நான் டைரக் செய்யும் நாடகங்கள் அவை. தமிழ் எளிய மொழி! இனிய மொழி! ஒற்றை வரி ஒளவையாரைப் போல, இரட்டை வரி திருக்குறளைப் போல, நால்வரி நாலடியாரைப் போல ஒழுக்க நெறிகள் மராட்டியில் இல்லை! தெள்ளு தமிழில் இனிமையாக ஆண்டாள் எழுதிய திருப்பாவை போல மராட்டியில் எவரும் எழுதவில்லை!”

    சற்று மௌனம் நிலவியது. சிவா எதிர்பார்க்காத போது புனிதா சட்டென ஒரு கேள்வியை வீசி, அவனைத் திடுக்கிடச் செய்து, அவனது கண்களை நோக்கினாள்.

    வெண்ணிலவு நீ எனக்கு! வீசும் ஒளி நான் உனக்கு!

    “ஒரு மராட்டியப் பெண்ணை விவாகம் செய்து கொள்ள .. உங்க அம்மா, அப்பா ஒப்புக் கொள்வார்களா?” … சிவா பதில் கூற முடியாது நெஞ்சடைத்துக் குரல் விக்கிக் கொண்டது.

    “என் அப்பாவும், அம்மாவும் சம்மதம் தர மாட்டார்கள். சுற்றத்தாரின் அவதூறான பேச்சுக்கு அவர்கள் அஞ்சுவார்கள். இந்த விவாகத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!” என்று சிவா சொல்லியதும் புனிதாவின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன.

    “ஆனால் நான் முழு மனதாய் மணம் செய்து கொள்வேன்” என்று சிவா தொடர்ந்ததும் புனிதாவின் முகத்தில் ஒளி பெருகியது.

    “உங்க பெற்றோர் ஒத்துக் கொள்வார்களா?” என்று கேட்டான் சிவா.

    “மனப்பூர்வமாய் ஆசீர்வதிப்பாங்க. இதற்கு முன்பு இப்படி நான் இருமுறை முயன்று திருமணம் நின்று போயிருக்கு” புனிதாவின் கண்களில் ஈரத் துளிகள் மிதந்தன.

    “அந்தத் தோல்வி உங்களை வருத்துது! ஆனால் எனக்கு எல்லையில்லா ஆனந்தம் அளிக்குது! புனிதாவின் கைகளை நான் பற்றிக் கொள்ள வேணுமென விதி எழுதி யிருந்தால், யார் அதை மாற்ற முடியும்?” என்று சிவா சொல்லியதும் புனிதா மனம் விட்டுச் சிரித்தாள். அப்போது ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தன!

    “நான் கணவனை இழந்தவள் என்று என்மேல் வெறுப்பு இல்லையா?”

    “இல்லை. நீங்க மறுமணம் புரிய விரும்புவது, எனக்கு ஊக்கம் அளிக்குது! முதல் நாள் பார்த்த போதே, என் மனம் உங்களை நாடியது. அப்போது நீங்க யார் என்றோ, உங்க தனியான வாழ்க்கை பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் ரூம் ஆண்களுக்கில்லை என்று என்னை விரட்டிய அன்றைய தினமே, என் நெஞ்சில் உங்கள் உருவம் பதிந்து விட்டது. என்னை நீங்க விரட்ட விரட்ட, ஏனோ என் மனம் உங்களைத்தான் விரும்பியது! அன்று திரும்பிப் போகவே மனமில்லை, எனக்கு! போகப் போக என் இதயம் உங்க வசப்பட்டு உறுதியாகி, எப்படி இதைக் கேட்பது என்று தெரியாமல் அலை மோதினேன்”.

    அப்போது புனிதாவின் கண்களில் நீரருவி பொங்கியது.

    “எனக்குப் பதினெட்டு வயது வயசுக் குமரிப் பெண்ணிருப்பது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?”

    “மனக் கஷ்டம் இருக்கு. ஆனால் சித்ரா, உங்க அருமை மகள்! இன்னும் சில வருசங்களில் அவள் கல்யாணமாகிப் போய் விடுவாள். சித்ரா நம் இல்வாழ்வுக்கு இடராகத் தோணவில்லை! அந்த மனத்தாங்கலை நான் தாங்கிக் கொள்ள முடியும்”.

    “சித்ரா இப்போ என்னுடன் இந்த வீட்டில் இருப்பது உங்களுக்கு எப்படி தோணுது?”

    “அவளுக்கு என்மேல் விரும்பம் இருக்கு. நம்ம விவாகத்தால் சிக்கல் ஏற்படலாம்! முதலில் நம் விவாகத்துக்கு சித்ரா ஒப்புக் கொள்வாளா?”

    “அவள் ஒப்புக் கொள்ள மாட்டாள்! அது போகட்டும், சித்ராவை நீங்க விரும்புகிறீர்களா?”

    “சித்ரா மீது எனக்கு விருப்பம் இல்லை! எந்த விதத்திலும் அவள் எனக்குப் பொருத்தம் இல்லை”

    “சித்ரா நமது விவாகத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆனால் அவள் மராட்டிய வாலிபன் ஒருவனை மணம் புரிய வேண்டுமென நினைக்கிறேன். அவள் மனதில் எந்த நிழல் ஆடுகிறதோ?”

    “எனக்கு இந்த விவாகத்தில் முழு விருப்பம். கொஞ்சம் அவகாசம் கொடுங்க. தங்கையின் திருமணம் முடிஞ்சதும் என் பெற்றோரிடம் இதைப் பற்றி நான் பேச வேண்டும்”

    “உங்கள் தங்கையை பற்றிச் சில விபரம் அறிந்து கொள்ள ஆவல். என்ன படித்திருக்கிறாள்?”

    “ஹைஸ்கூல் முடித்து விட்டு, மதுரைத் தபால் ஆபீஸில் சாதாரண வேலை செய்து வருகிறாள். வயது முப்பதைக் கடந்து விட்டது. உணவைக் கட்டுப் படுத்தி உடல் பெருக்காமல் பார்த்துக் கொள்கிறாள். கடந்த பத்து வருசங்களாக தங்கை கல்யாணத்தை முடிக்க முடியாது, இன்னும் தள்ளிக் கொண்டே போவுது.

    பானமடி நீ எனக்கு! பாண்டமடி நான் உனக்கு!

    புனிதாவின் சிந்தனையில் சற்று ஆழ்ந்தாள்.

    “உங்களுக்கு கொஞ்சப் பண உதவி செய்யலாம் என நினைக்கிறேன், நீங்க ஏத்துக் கொண்டால்”

    “வாடகை தர முடியாத நான் எப்படி உங்களிடம் இன்னும் கடன் வாங்குவது?

    “என் கணவர் இறந்த பிறகு, ஆயுள் இன்சூரன்ஸ் தொகை பெரு மளவில் கிடைத்தது. பூனேயில் இருந்த அவருடைய பூர்வீக வீட்டை விற்று இன்னும் சேமிப்பு உயர்ந்தது. கல்லூரிச் சம்பளப் பணமே மாதா மாதம் எனக்கு மிஞ்சுகிறது. சித்ராவின் திருமணத்துக்கு வேண்டிய பொன்னும் பொருளும் நிறைவாகவே இருக்கிறது”

    “பேர் மட்டும் தெரிந்த என்னை நம்பி பெரிய தொகையைத் தர எப்படி முடிவு செய்தீங்க? எதற்காக உதவி செய்றீங்க?” புனிதா பதில் சொல்ல முடியாமல் சற்று திண்டாடினாள். சொல்ல நினைத்தது மனதுக் குள்ளே சிக்கிக் கொண்டது. புனிதாவின் கண்கள் சிவநாதனின் கண்களை நோக்கின! சிவநாதனின் கண்கள் புனிதாவின் இதயத்தை ஊடுறுவின.

    “என்னிடம் சும்மா இருக்கும் பணம் உங்கள் தங்கைக்கு வாழ்வளிக்க உதவட்டும் என்று நினைத்தேன்”

    “நான் எப்படி இந்தக் கடனை அடைப்பது? எப்படி வட்டி கொடுப்பது?”

    “இந்தப் பணத்துக்கு நான் வட்டி வாங்கவும் விரும்ப வில்லை. முதல் வாங்கவும் விரும்பவில்லை” சிவநாதன் திடுக்கிட்டு அதிர்ச்சி அடைந்தான்.

    “நீங்க என்ன சொல்றீங்க?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.

    “தயவு செய்து நான் தரும் பணத்தை வரதட்சணையாய் எண்ண வேண்டாம். நம் விவாகம் நடக்காமல் போனாலும், உங்க தங்கையின் திருமணத்துக்குத் தருகிறேன்” அதிர்ச்சி அடைந்த சிவாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் அரும்பின.

    “இந்த உதவியை நான் மறக்க முடியாது, மிஸ் புனிதா?” எழுந்து போகக் கிளம்பினான் சிவா.
    புனிதா முகமலர, “இனிமேல் நீங்க மாடி அறைக்கு வாடகை தர வேண்டாம்! வெளியே ஹோட்டலுக்குப் போக வேண்டாம். எங்க வீட்டிலே தினம் சாப்பிடலாம். சொல்ல மறந்து விட்டேன் சிவா. என்னை மேடம் என்றோ, மிஸ். புனிதா வென்றோ அழைக்க வேண்டாம்” என்று அழுத்திச் சொன்னாள்.

    வண்ண மயில் நீ எனக்கு! வானமழை நான் உனக்கு!

    சிவநாதனின் தங்கை திருமணம் சிறப்பாக, சிக்கனமாக மதுரையில் நடந்தேறியது. புனிதா குல்கர்னியும், சித்ராவும் திருமண விழாவுக்கு வந்தது சிவாவுக்கு மன மகிழ்ச்சியையும், திருப்தியையும் தந்தது. கல்யாணக் கூட்டத்தில், பால் போன்ற மராட்டிய பளிங்குச் சிலைகள் இரண்டு அத்தனை பேர் கண்களையும் கவனத்தையும் கவர்ந்தன! சித்ராவையும், புனிதாவையும் சிவா தனது தாய், தந்தையார் மற்றும் திருமணத் தம்பதிகள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். குறிப்பாகப் பெற்றோர், தங்கைக்கு மட்டும் அவர்கள் யாரென்று விளக்கமாகக் கூறினான். பெருந்தன்மையாக புனிதா கல்யாணத்துக்குப் பண உதவி செய்ததை அவர்களது காதில் மெல்லக் கூறினான். மூவரும் அன்பு மிகுந்து புனிதாவுக்கு நன்றி கூறினார்கள்.

    சித்ரா வான மேகங்களில் மிதந்தாள். சிவாவின் தங்கையோடு மிகவும் ஒட்டிப் பழகினாள். அவளது கல்யாணத்துக்கு ஒரு தடை நீங்கி வழி திறந்ததாக ஆனந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டாள். சித்ராவை விட பெரு மகிழ்ச்சியில் இருந்தவள் புனிதா. திருமணம் ஆன பிறகும் அவள் தனிமையில் வாடிய நாட்களே அதிகம். கணவனுடன் அவள் ஆனந்தமாய்க் களித்த நாட்கள் மிகக் கொஞ்சம். இருபத்தியோர் வயதிலே கல்யாணமாகி கணவருடன் ஒன்பது வருசங்கள் வாழ்ந்தாலும் பாதிக் காலம் பாதுகாப்பு ராணுவ அதிகாரியாய்க் காஷ்மீருக்கு பயணம் போய்விடுவார். அவள் சிவாவோடு எதிர்காலத்தில் வாழப் போவதாய்க் காணும் காட்சி மெய்யாக நிகழுமா அல்லது கனவாய்ப் பழங் கதையாய்ப் போகுமா என்பது இன்னும் நிச்சயமில்லை!

    நினைப்ப தெல்லாம் நடப்பதில்லை! நடப்பதெல்லாம் நினைப்பதில்லை!

    அன்று மாலை நிர்மலாக் கல்லூரில் வருடாந்திர விழாவில் பங்கு கொள்ள புனிதா சென்று விட்டாள். ஆங்கில நாடகம் ஒன்றை இயக்கி அரங்கேற்ற வேண்டிய பொறுப்பு அவள் மீது விழுந்தது. சித்ராவும், சிவாவும் நாடகத்தைக் காண 9 மணிக்கு வருவதாய்ப் புனிதாவிடம் சொல்லியிருந்தார்கள். அவளது நாடகமே கடைசி நிகழ்ச்சியாக இருந்தது. சித்ரா மாடிக்குச் சென்று சிவாவைப் பார்க்கச் சென்றாள். சோபாவில் அமர்ந்த சிவாவிடம் அவள் ஒட்டி அமர்ந்து அவனது தலை மயிரைக் கோதி விட்டாள். சற்று தள்ளி அமர்ந்த சிவாவை மறுபடியும் நெருங்கி உட்கார்ந்தாள். சோபாவின் முனைக்குப் போகவே சிவா எழுந்து நின்றான்! உடனே சித்ரா அவன் கையைப் பற்றி இழுத்து சோபாவில் உட்கார வைத்து உரசிக் கொண்டு அமர்ந்தாள். அவன் முகத்தை அவளது மலர்க் கரங்களால் தடவினாள்!

    “இந்த முகத்தை இப்படித் தடவ வேண்டுமென, நான் எத்தனை நாள் காத்திருக்கேன்” சித்ராவின் மொட்டு விழிகள் சிவாவின் மூடும் விழிகளை விழுங்கிவிட விரிந்து மலர்ந்தன! சிவாவுக்கு தர்ம சங்கடமானது.

    “நாம் உன் அம்மாவின் நாடகத்தைப் பார்க்க நிர்மலாக் கல்லூரிக்குப் போகணும்”

    “நம்ம நிஜ நாடகம் இங்கு நடக்கும் போது, அம்மாவின் நாடகத்தை அங்கு போய்ப் பார்க்கணுமா? இப்படி நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமா? ஏன் பயந்து நடுங்குறீங்க? உங்க தங்கையின் கல்யாணம் முடிஞ்சி நமக்குக் காலம் வந்தாச்சி. கதவும் திறந்தாச்சி! இனிமேல் நம்ம கல்யாணத்தைப் பத்தி நாம் பேச வேண்டும்! நானே அம்மாவிடம் சொல்றதா இருக்கேன். எங்க அம்மாவிடம் என்னைக் கேட்க உங்களுக்கு தைரியம் உண்டா?”

    “சித்ரா! உனக்கும் எனக்கும் கல்யாணம் என்று கனவு காணாதே! அது நடக்காத கல்யாணம். குமரிப் பெண் நீ. பாதி ஆயுளைக் கடந்தவன் நான். உன்னை விட இரு மடங்கு வயது எனக்கு”.

    “போதும் உபதேசம். ஒருவரை நேசித்து அவரையே மணக்க நான் விரும்புறேன். எனக்கு உங்க வயதைப் பற்றிக் கவலை இல்லை”

    “மோகம் உன் கண்களைக் குருடாக்குது! என் வயதைப் பற்றி இப்போது நீ கவலைப்பட மாட்டாய். எண்பது வயதுக் கிழவனாய்க் கூன் விழுந்து குருடனாய் நான் நொண்டும் போது, நீ நாற்பது வயது வாலிப மங்கையாய் உறவை நாடுவாய்! அப்போ என் எலும்பு கூட்டைப் பார்த்து வேதனைப் படுவாய். வீட்டில் கிடைக்காத இன்பத்தைத் தேடி நீ…. வெளியே கூடப் போவாய்”

    “சீ என்ன ஆபாசப் பேச்சு இது? நம்மிருவருக்கும் ஜோடிப் பொருத்தம் இருக்கு”.

    “ஆனால் நமக்கு இனப் பொருத்தம் இல்லை! மனப் பொருத்தம் இல்லை!”

    “பூனேயில் பிறந்தாலும் தமிழ் நாட்டிலே பதினைந்து வருசமா இருக்கோம். எனக்கு மராட்டியன், தமிழன் என்றெல்லாம் இன வேறுபாடு கிடையாது. மராட்டியன் தமிழனை விட உயர்ந்தவனும் இல்லே! தமிழன் மராட்டியனை விட எந்த விதத்தில் தாழ்ந்தவனும் இல்லே! இரண்டு பேரும் ஒரு தாய் ஒரு தந்தைக்குப் பிறந்தவரே”.

    “உன்னை எனக்குப் பிடிக்கவில்லை!” என்றான், சிவா.

    “பொய் சொல்றீங்க! எனக்கு என்ன குறைச்சல்? அழகில்லையா? அறிவில்லையா? அந்தஸ்தில்லையா?”

    “நீ அழகிதான்! அறிவாளிதான்! நல்ல குடும்பத்தில் பிறந்தவள்தான்! ஆனால் இதயத்தில் கள்ளும், முள்ளும் உள்ளன! நெஞ்சி இருக்கு! ஆனால் உள்ளம் இல்லை! மூளை இருக்கு! ஆனால் முதிர்ச்சியில்லை! மணக்கப் போகும் பெண்ணை, நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்”

    “யார் அந்த அதிர்ஷ்டக்காரி? அன்று கல்லூரியில் சிரித்துச் சிரித்துப் பேசினாளே, அந்த பைனல் இயர் பியூட்டி மஞ்சுளாவா?”

    “இல்லை. உனக்குத் தெரிந்த ஒரு மாது”

    “யார் அந்த மாது? என் கிளாஸ்மேட் மேனகாவா?”

    “உன் அம்மா என்று சொன்னால் உனக்கு மயக்கம் வருமா?”

    “சீ என் அம்மாவா? அம்மாவையா விவாகம் செய்யப் போறீங்க? ஏற்கனவே திருமணமாகிய ஒருத்தியா உங்க மணப்பெண்? பதினெட்டு வயசுக் குமரிப் பெண்ணை மகளாகக் கொண்ட ஒரு தாயா உங்க மணப்பெண்? கணவனை இழந்த ஓர் அபாக்கியவதியா உங்க வருங்கால மனைவி?”
    “ஆம் அந்தப் புனிதவதிதான் என் வருங்கால மனைவி”

    “என் தந்தையின் இடத்தை நீங்க நிரப்ப முடியாது. கணவனாய்க் கருதிய ஒருவரை என் உள்ளம் ஒருபோதும் தந்தையாக ஏற்றுக் கொள்ளாது. தெரியுமா! ஏற்கனவே இது போல் அம்மா முயன்று, இரண்டு தரம் நிச்சயமாகிக் கடைசியில் திருமணம் நின்று போயிருக்கு”

    “எனக்கும்தான் நிச்சயமாகி கல்யாணம் நின்னு போயிருக்கு”

    “நான் இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன். வாலிபக் குமரி நான் காத்திருக்கும் போது, வயதான விதவையை நீங்க நாடுவது முட்டாள்தனம்”

    “பெற்ற தாயை விதவை என்று கேலி செய்கிறாயே”

    “பெற்ற தாயானாலும் விதவை, விதவைதான்! அப்பா இறந்து போனதை எப்படி மறைக்க முடியும்? நான் விதவை என்று சொல்லா விட்டாலும், உங்க அப்பா சொல்வார்! உங்க அம்மா சொல்வாள்! உங்க தங்கை சொல்வாள்! உங்க ஊரார், உற்றார் எல்லாரும் சொல்வார்! அப்படிப் பழிப்பதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?”

    “தாங்கிக் கொள்ள முடியும். நான் உன் தாயை மணக்க வாக்குக் கொடுத்து விட்டேன்”

    “தாயை மணந்து, மகளைப் பிரிக்க முடிவு செய்து விட்டீங்க! உண்ட வீட்டுக்கு இரண்டகமா?”

    “நான் அப்படி வஞ்சகம் செய்ய நினைக்கவில்லை!”

    “தம்பதிகளாய் என் தாயும், என்னைக் கவர்ந்தவனும் அடுத்த அறையில் ஒன்றாய் இருப்பதை எப்படி என்னால் தாங்கிக் கொள்ள முடியும்?”

    “தாங்கிக் கொள்ள முடியாதுதான். தனியாக இருக்கும் உன் தாய் மறுபடியும் குடும்ப மாதாய் வாழப் போவதில் உனக்கு அக்கறை இல்லையா?”

    “அக்கறை இருக்கு. ஆனால் நீங்க அம்மாவுக்குச் சொந்தம் இல்லே! எனக்குத்தான் சொந்தம்! முதலில் உங்களைக் கண்டு பிடித்தவளே நான்தான்! என் தாய் உங்களைக் களவாடி விட்டாள்!”

    “இல்லை! பார்த்த முதல் நாளே நான்தான் புனிதாவை நாடியவன்! போகப் போக புனிதாவுக்கும் என்னைப் பிடித்து விட்டது!”

    “ஒரு பெரிய கைம்மாறை எதிர்பார்த்துத்தான், உங்க தங்கை திருமணத்துக்கு அம்மா பண முடிப்பைக் கொடுத்தது கூட உங்களுக்குத் தெரியவில்லையா?”

    “பண முடிப்பைத் தருவதற்கு முன்பே, எனக்கு புனிதா மேல் விருப்பம் இருந்தது. பண முடிப்பைத் தராமல் போயிருந்தாலும், புனிதாவை மணக்கத் தயாராக இருந்தேன்”

    அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு, சித்ரா வாயடங்கிப் போனாள். புனிதா விரைவாக மாடிக்கு ஏறி வந்தாள்.

    “நீங்க இரண்டு பேரும் போடுற சத்தம் வீதியிலே கேட்குது. என்ன ஆச்சு? ஏன் சண்டை போடுறீங்க?”

    “அம்மா! இவர் இந்த வீட்டுலே இனிமேல் இருந்தால் நான் கண்ணியமா வாழ முடியாது. வாடகை ஒப்பந்தத்தை முறிச்சி, இவரை வெளியே அனுப்புங்க. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வஞ்சக மனிதர் இவர். இவர் இன்னும் இங்கே இருந்தா, நான் நிம்மதியா வாழ முடியாது”

    “சித்ரா! ஏன் அப்படிச் சொல்றே? என்னாச்சு?”

    “அம்மா! இவர் ஒழுக்கம் கெட்ட மனிதர். இவரை நம்ம வீட்டறையில் வச்சதே தப்பு. முன்பே எனக்கு இவரைப் பத்தி தெரியாம போச்சு!”.

    “என்ன நடந்ததென்னு சொல்லு, சித்ரா” புனிதாவின் உடம்பு நடுங்கியது!

    “என்னைத் தொடக்கூடாத இடத்தில் தொட்டு வசப்படுத்த வந்தார்.” சிவாவின் நெஞ்சில் சம்மட்டி அடி விழுந்தது!

    புனிதா பேரதிர்ச்சி அடைந்தாள்! சிவாவின் தலை சுற்றியது! புனிதா தடதட வென்று படிகளில் இறங்கிக் கீழே தன் அறைக்கு ஓடினாள். படுக்கைக் கீழே ஓடிக் கொண்டிருந்த டேப் ரெக்காடரை நிறுத்தி, ரிவைண்டு செய்து, மாடியில் நடந்த உரையாடல்களை எல்லாம் துடிப்போடு கேட்டாள். அவளுக்கு உண்மை தெரிந்தது.

    தாயும் மகளும் மராட்டிய மொழியில் நள்ளிரவு வரைச் சண்டை போட்ட சத்தம் மட்டும் சிவாவுக்குக் கேட்டது. பிறகு சட்டென எல்லாம் அடங்கி விட்டது. அன்று இரவு மூவரும் தூங்கவே இல்லை.

    காயிலே புளிப்ப தென்ன! கனியானால் இனிப்ப தென்ன!

    மறுநாள் காலையில் சாப்பிட வந்த சிவா புனிதாவை அடுப்பறையில் சந்தித்தான். அவன் புனிதாவின் கண்களை நேராகக் காண முடியவில்லை.

    “மிஸ் புனிதா! நான் இனியும் இந்த வீட்டு மாடியில் குடியிருப்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. என்னால் உங்கள் இருவருக்கும் பகைமை உண்டாகி விட்டது! இந்த வீட்டில் எப்போது என்ன நடக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. தாயும் மகளும் சண்டையிடுவதை என்னால் தாங்க முடியாது! வேறொரு இடத்துக்கு போவதாக முடிவு செய்து விட்டேன்”

    “நீங்க எதற்காக வேறிடம் பார்க்கணும்? எங்கும் போக வேண்டாம். நேற்று மாடியில் என்ன பேச்சுக்கள் நடந்தன என்பதெல்லாம் எனக்குத் தெரியும். உங்களை இழந்து என்னால் இனி வாழ முடியாது. மன்னிக்க வேணும் என்னை. உங்களுக்கும் சித்ராவுக்கும் தெரியாமல், மாடி உரையாடல்களை எல்லாம், கீழே என் அறைப் டேப் ரெக்காடரில் பதிவு செய்து வந்தேன். நான் அப்படிச் செய்தது தப்புதான். முன்னும் பின்னும் தெரியாத ஆண் லெக்சரரை சித்ரா வாடகை அறைக்கு அழைத்து வந்தது, முதல் காரணம். மாடி அறையில் ஒரு வாலிபர் வசிக்க, வயசுப் பெண் வீட்டில் வாழ்ந்து கொண்டு வருவது அடுத்த காரணம். கல்லூரியில் சித்ராவுக்கு லெக்சரராக இருந்து, வீட்டில் அவளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தது மூன்றாவது காரணம். பஞ்சையும், நெருப்பையும் எப்படி நாள் முழுவதும் கண்காணித்து வருவது? நாம் மூவரும் கல்லூரிக்குத் தினம் போய் வந்தாலும், மூவரும் வீடு திரும்பும் நேரம் வேறாவது அடுத்த காரணம். முற்றிலும் அன்னியன் நீங்கள்! சித்ரா பருவ மொட்டு விடும் புதிய பறவை!”

    “மிஸ் புனிதா! தாயான நீங்க டேப் ரெக்காடரில் பதிவு செய்ததைத் தப்பென்று நான் சொல்ல மாட்டேன்”

    “போன ஒரு சமயம் நடந்த சினிமா சண்டையில் உங்க உத்தம குணத்தைக் கண்டேன். நேற்றைய உரையாடல்களைக் கேட்ட பின்பு, பெண்களிடம் ஒழுக்கமுள்ள இப்படிப்பட்ட ஓர் ஆடவனைக் கணவனாக ஏற்கப் போகிறோம் எனப் பேரானந்தம் அடைந்தேன். நான் பண்ணியது சரியோ, தப்போ உண்மையில் இந்த டேப் ரெக்காடர்தான் ஓர் உத்தமனைக் கண்டு பிடித்துத் தந்தது. இல்லா விட்டால் சித்ரா குற்றச் சாட்டை நம்பி, ஒரு அப்பாவி மனிதனை வீட்டை விட்டுத் துரத்தி இருப்பேன்!”

    “மிஸ் புனிதா, உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது?”

    “மாடியில் நீங்க பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டுவது, கீழே என் காதில் விழுந்தது. நீங்க பயப்படாமல் நிம்மதியாக மாடியில் தங்கலாம்…… முதலில் உட்கார்ந்து இந்த காபியைக் குடியுங்க, இட்லி தயாராகிறது” என்று குழைந்தாள், புனிதா. அப்போது உள்ளே நுழைந்தாள் சித்ரா.

    “அம்மா! வீட்டை விட்டு இவரை நான் போகச் சொல்லும் போது, நீங்க காபி கொடுத்து உபசரிப்பதா?”

    “சித்ரா! வாயை மூடு! சிவா மாடியைக் காலி செய்ய வேண்டியதில்லை. அவர் இந்த வீட்டில்தான் நிரந்தரமாகத் தங்கப் போகிறார்”

    “சிவா சொன்ன தெல்லாம் உண்மைதானா? அம்மா வாலிபக் குமரி நான் வீட்டில் இருக்கும் போது, இந்த வயசிலே இன்னொரு விவாகம் நீங்க செய்யப் போறீங்களா?”

    “ஆம் சித்ரா. நாற்பது வயதில் நான் மூப்பு அடையவில்லை. நான் இரண்டாம் விவாகம் செய்யப் போறது உண்மை”

    “அம்மா! அவரை நான் திருமணம் செய்ய விரும்புறேன். நீங்க எனக்குப் போட்டியாக வருவது சரியா! கல்லூரியில் அவரை முதலில் சந்தித்த போதே நான் செய்த முடிவு அது”

    “சித்ரா! நீ ஒரு மராட்டிய வாலிபனை மணம் புரிவதையே நான் விரும்புறேன். நீ சின்னஞ் சிறியவள். உன் வயதை விட சிவாவின் வயசு இரண்டு மடங்கு! வயதுப் பொருத்தம் இல்லாததால் மனப் பொருத்தம் ஏற்படாது. உன் வயசுக்குத் தகுந்த வாலிபனை நீ மணம் புரிவதுதான் ஏற்றது”.

    “வீட்டில் நான் இருக்கும் போது, நீங்க இவருடன் வாழ விரும்புவது சரியா? இவரை மணம் புரியக் கனவு கண்ட பின் அப்பா இடத்தில் அமர்த்திப் பார்க்க என்னால் முடிய வில்லை!”

    “சித்ரா! உன் மனப் போராட்டம் எனக்குப் புரியுது. உனக்குத் திருமணம் ஆகும் நேரம் இன்னும் வரவில்லை. அதுவரை வாழாமல் நான் தனிமையில் சாக வேண்டுமா? வாழ விரும்புறேன் நான். உனது திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. நீ சிவாவை மறந்து விடு”

    “உங்க லாஜிக் எனக்குப் புரியவில்லை. உங்க இரண்டு பேரையும் சேர்த்துப் பார்க்க என்னால் முடியாது” என்று கூறி அழுகையுடன் வெளியே போய் விட்டாள், சித்ரா.

    முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாய் இருக்க முடியும்!

    சற்று மௌனமாக இருந்த பிறகு புனிதா சிவாவிடம் பேச ஆரம்பித்தாள்.

    “சித்ராவை உடன்படச் செய்வது சிரமான காரியம்தான். அதைக் கையாளுவது என் பொறுப்பு. உங்க அப்பா, அம்மாவை எப்படிக் கையாளப் போறீங்க” என்று புனிதா கேட்டாள். சிவா பையிலிருந்து தன் தந்தை கடிதத்தையும், தான் அதற்கு எழுதிய பதில் கடிதத்தின் நகலையும் படிக்க அவளிடம் கொடுத்தான்.

    சிரஞ்சீவிச் செல்வன் சிவகுருநாதனுக்கு,

    தங்கையின் திருமணத்துக்குப் பிறகு இப்படி ஒரு புரட்சி செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மராட்டியம்மா பண முடிப்பை நமக்குத் தந்ததே ஒரு பெரு வெகுமதியைத் தனக்கு நாடித்தான் என்பது எங்களுக்குத் தெரியாமல் போனது. நாற்பது வயதுவரைப் பொறுத்து, நாங்கள் கொண்டு வந்த நல்ல பெண்களை எல்லாம் உதறித் தள்ளி, போயும் போயும் வாலிப பெண்ணிருக்கும் ஒரு விதவைத் தாயை, நீ விவாகம் செய்ய விரும்புவது கேலிக் கூத்தாக தெரிகிறது. மேலும் அது எங்களுக்கு அவமானமாகவும் இருக்கிறது.

    இந்தத் திருமணம் நடந்தால் நானும் உன் அம்மாவும் அதில் பங்கு கொள்ள மாட்டோம். எங்களுக்கு கல்யாண அழைப்பிதழ் அனுப்ப வேண்டாம். ஆசீர்வாதத்தை வேண்டி நீங்கள் இந்த வீட்டு வாசலில் கால் எடுத்து வைப்பதையும் நாங்கள் விரும்பவில்லை. அது போல் நாங்களும் அங்கு வந்து உங்கள் இருவரது முகத்தில் விழிக்கப் போவதில்லை.

    தங்கை திருமணம் முடியப் பணம் கொடுத்து உதவிய மராட்டியம்மாவுக்கு எங்கள் உளங்கனிந்த நன்றி.

    அன்பு மறவாத அப்பா,
    வேலுச்சாமி

    கடிதத்தைப் படித்த புனிதாவின் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.

    “உங்க அப்பா நல்ல மனதுடையவர். ஊருக்கும், உற்றாருக்கும் அவர் பயப்படுவது எனக்குப் புரிகிறது. நான் செய்த பண உதவிக்கு அவர் நன்றி தெரிவிப்பது, என் உள்ளத்தைத் தொடுகிறது. அடுத்து அவன் எழுதிய பதிலைப் படிக்கத் தொடங்கினாள்.

    அன்புள்ள அப்பாவுக்கு,

    வணக்கமுடன் சிவா எழுதியது. மிஸ். புனிதாவின் கனிவான அன்பும், மேலான பண்பும் முதல் சந்திப்பிலே என்னைக் கவர்ந்து விட்டது உண்மைதான்! பண முடிப்பு தருவதற்கு முன்பே நாளுக்கு நாள் புனிதாவின் மேல் பற்றும் நாட்டமும் எனக்கு மிகுந்தது. எப்படி என் விருப்பத்தை மிஸ். புனிதாவிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் திண்டாடி இருக்கிறேன்! அதற்கு ஒரு நல்ல வழி பிறந்தது. இப்படிப் பட்ட மாதர் குல மாணிக்கம் எனக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே!

    எங்கள் இருவரது விவாகத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதே எங்கள் மனமார்ந்த ஆசை. உங்கள் இருவரது அன்பான ஆசிகள் எங்கள் இல்வாழ்வுக்கு ஆணிவேர் போன்றது.

    உங்கள் நலம் நாடும்,
    சிவகுரு நாதன்.

    “உங்க பதிலை படித்த பிறகு எனக்கு அச்சம் குறைந்து ஊக்கம் அதிகமாகுது”

    “இந்த வரவேற்பை நான் எதிர்பார்த்ததுதான்! வருத்தமாகத்தான் இருக்கிறது! யாரும் பின்பற்றாத புதுப் பாதையில் போகும் போது, முள்ளும், கல்லும் குத்தும். தாங்கிக் கொள்ள வேண்டியதுதான். இந்த எதிர்ப்புக்குப் பரிகாரம் நாம் திருமணம் செய்து கொள்வதே! அவர்கள் வாழப் போவது இன்னும் கொஞ்ச காலம்! அதற்காக நமது நீண்ட பயணத்தை நிறுத்த வேண்டாம்! அலைகளுக்குப் பயந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது! அஞ்சிக் கொண்டு கரையிலே வாழ்நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கலாம்! நமது தனிமையின் கொடுமை நீங்கட்டும்! இந்த நல்ல காரியத்தைச் செய்ய என் மனம் துடிக்குது!”

    “துணிச்சலான ஆண்பிள்ளை நீங்க! நோய்வாய்ப் பட்ட பெற்றோர்களை எப்படி கண்காணிக்கப் போறீங்க?”

    “தங்கை இருக்கிறாள். நான் பணத்தை அனுப்பி அவள் மூலமாகக் கவனித்துக் கொள்வேன்”.

    “சித்ராவின் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை எனக்கு”

    “எளிய முறையில் நாம் பதிவுத் திருமணம் செய்து கொள்ளுவோமா”

    “அதைத்தான் நானும் விரும்புகிறேன்” என்றாள் புனிதா.

    “நாம் தேதியைக் குறித்ததும், அப்பாவுக்கு அடுத்த கடிதம் போடுறேன்” என்று கூறி எழுந்து சென்றான் சிவா.

    பூணும் அணி நீ எனக்கு! புது வயிரம் நான் உனக்கு!

    அடுத்த பத்து தினங்களில் கோயமுத்தூர் பதிவுத் திருமண செயலகத்தில் புனிதா குல்கர்னி, சிவகுருநாதன் இருவரும் தம்பதிகள் ஆனார்கள். பதிவுப் புத்தகத்தில் எழுதும் போது புனிதா குல்கர்னி சிவகுருநாதன் என்று கையெழுத்திட்டாள் புனிதா. அங்கே வருகை தந்தவரை எண்ணி விடலாம். சிவாவின் தங்கை, தங்கையின் கணவர் இருவர் மட்டும் சிவா வழியில் வந்தனர். புனிதா வழியில் வருவதாக இருந்த சித்ரா வரவில்லை. புனிதாவின் பெற்றோர் ஆசிகள் மட்டும் தந்தியில் வந்தது. புனிதாவின் தங்கை வர வில்லை. நிர்மலாக் கல்லூரியின் பிரின்சிபால் உஷா நாயர், மற்றும் சில ஆசிரியைகள் வந்திருந்தனர். மகளை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்திருந்த புனிதா அவள் வராமல் போகவே, மிக்க ஏமாற்றமும், வருத்தமும் அடைந்தாள்.

    தம்பதிகளாய் கதவைத் திறந்து வீட்டுக்குள் இருவரும் நுழைந்ததும் சிவாவின் கண்களில் பட்டது, முன் அறையில் பளிச்செனத் தொங்கிய காப்டன் ஆனந்த் குல்கர்னியின் படம் நீக்கப் பட்டு, அந்த இடத்தில் ரவிவர்மாவின் கலைமகள், திருமகள் ஓவியங்கள் அலங்கரித்தன! புனிதாவின் கண்ணில் பட்டவை, தரையில் கிடந்த இரண்டு கடிதங்கள்! ஒரு கடிதம் புனிதாவுக்கு. அடுத்து ஒரு கடிதம் சிவாவுக்கு. இருவரும் உடனே வேகமாக உறையைக் கிழித்துப் படித்தார்கள்.

    அன்புள்ள அம்மா,

    நான் முட்டாள்தனமாக கண் காணாத ஓர் இடத்துக்கு ஓடிப் போக வில்லை. பூனேயில் இருக்கும் சித்தி வீட்டுக்குப் போகிறேன். சில வருசங்கள் தங்கி அங்கிருந்து என் படிப்பைத் தொடர்வேன்.

    உங்கள் இரண்டாம் கல்யாணத்தில் முன்னின்று பங்கு கொள்ள என் மனம் இடம் தரவில்லை. அப்பா இருந்த இடத்தை, நான் விரும்பிய ஒருவர் எடுத்துக் கொள்வதை என் மனம் ஒப்ப வில்லை. நீங்கள் இருவரும் உண்டாக்கிய இந்த ஆறாப் புண் எப்போது ஆறுமோ எனக்குத் தெரியாது. என்றாவது ஒரு நாள் புண் ஆறினால், அன்று உங்களைக் காண வருவேன். சில வருசங்களுக்கு உங்கள் இருவரது முகத்திலும், நான் விழிக்கப் போவதில்லை.

    பிரளயம் ஏற்பட்ட பிறகு அந்த வீட்டில் யாராவது இருவர்தான் வாழலாம்! நாம் மூவரும் இனிமேல் அங்கு நிம்மதியாக வசிக்க முடியாது!

    அன்பு மகள்,
    சித்ரா

    அன்புணராத குருவே,

    உங்களைப் பற்றி அம்மாவிடம் அசிங்கமாகப் பேசி அவமானப் படுத்தியதுக்கு மன்னிக்கவும். அப்படி எல்லாம் அவதூறாய்ப் பேசி அம்மாவிடமிருந்து உங்களைப் பிரித்து விடலாம் என்று நான் முயன்றது பலிக்காமல் போனது. நீங்களும் நானும் இணைந்து வாழும் பாக்கியத்தை என் தாய் பறித்துக் கொண்டாள் என்பதை என்னால் தாங்க முடிய வில்லை. ஆண்களில் உயர்ந்த ரகம் நீங்கள். உண்மையாக என் அம்மா ஓர் அதிர்ஷ்டசாலி.

    அபாக்கியவதி,
    சித்ரா

    பாயும் ஒளி நீ எனக்கு! பார்க்கும் விழி நான் உனக்கு!

    கடிதத்தைப் படித்ததும் புனிதாவின் கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டு வந்தது. அவளது உள்ளத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு நிறைவு உதய மானது. புனிதா சிவாவின் அருகில் நெருங்கி வந்தாள்.

    “கண்ணே! உன் வாழ்வில் ஒரு கதவு மூடி, இன்னொரு கதவு திறந்திருக்கிறது! ஒரு உறவு கிடைத்து, இன்னொரு உறவு பிரிந்து போகிறது! கடவுள் நமக்கு ஒன்றைக் கொடுக்கும் போது, இன்னொன்றை ஏனோ எடுத்துக் கொள்கிறார்! ஆகவே ஒன்றை நாம் அடைந்தால், இன்னொன்றை இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும்! புனிதா! நமது புதிய உறவைப் பிரிக்கப் பிரச்சனைகள் கிளம்புகின்றன! நாமிருவரும் இப்போதான் இணைந்து போராட வேணும்” என்று சொல்லிக் கொண்டே புனிதாவின் கண்ணீரைத் துடைத்து அவளைத் தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான் சிவா.

    ++++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) [Dec 3, 2008]
    Share
  • ஆதிரையின் தீர்மானம்

    மேகலா இராமமூர்த்தி

    பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஆதிரை தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அது நேரம் காலை 8:30 எனக் காட்டியது. “என்ன இது? எப்போதும் 8:25-க்கே வர்ற பஸ்ஸை இன்னும் காணலையே…? காலேஜ் போக லேட்டாயிடும் போலருக்கே….ப்ரொஃபசரே லேட்டாப் போனா ஸ்டூடெண்ட்ஸ்  என்ன நினைப்பாங்க” என்று யோசித்தவாறே நின்றிருந்தாள். நல்ல வேளை! அவளுடைய பொறுமையை மேலும் சோதிக்காமல் அந்தப் பேருந்து வந்து சேர்ந்தது. அவள் விரும்பியபடி ஜன்னலோர இருக்கையே கிடைத்ததால் மகிழ்ச்சியோடு அங்கு சென்று அமர்ந்தாள். சில்லென்ற குளிர்ந்தகாற்று அவள் முகத்தைத் தாக்கி அவளுடைய சுருண்ட கூந்தலை அலைபாய வைத்தது.

    கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்தாள். காலையில் கல்லூரிக்குக் கிளம்பும்முன் தன் தாய் சொன்ன வார்த்தைகள் அவள் காதில் திரும்பவும் ஒலித்தன. “அம்மா….ஆதிரை! இன்னிக்கு மத்தியானம் மூணு மணிக்கு ஒன்னப் பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க..அதனால அரை நாள் லீவு சொல்லிட்டு, மதியம் ஒண்ணு, ஒண்ணரை மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடும்மா…ப்ளீஸ்..!, இன்னைக்கு ஒரு நாள் முழுசா லீவு போடுன்னு சொல்றேன் கேக்க மாட்டேங்கறே” என்றாள். மேலும் தொடர்ந்து,”ம்…ம்…! இந்த எடமாவது அமைஞ்சாத் தேவலை..எத்தன நாளைக்கு பொம்பளப் புள்ளைய வீட்டுல வெச்சுக்கறது…” என்று பேசிக் கொண்டே போனாள். தன் தாயின் பேச்சுக்கள் ஒன்றுமே ஆதிரைக்குப் பிடிக்கவில்லை என்றாலும் தான் ஏதாவது சொன்னால் தாயின் மனம் புண்படும் எனக்கருதி அமைதி காத்தாள்.

    ”பாப்பா..! டிக்கெட் இந்தாம்மா! ஏதோ பலமான யோசனையில இருக்கற மாதிரி தெரியுது” என்றபடி பேருந்தின் நடத்துநர் அவள் கையில் டிக்கெட்டைத் திணித்தார். தினமும் இதே பேருந்தில் செல்வதனால் அதில் வேலைசெய்யும் நடத்துநர்கள் அனைவருமே ஆதிரைக்கு அறிமுகமானவர்கள் தாம். நடத்துநரின் கேள்விக்குப் புன்னகையையே பதிலாகத் தந்துவிட்டு டிக்கெட்டிற்கான பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு டிக்கெட்டைப் கைப்பையில் பத்திரப்படுத்தினாள் ஆதிரை.

    சம்பவங்களைத் தொடர்வதற்கு முன் கதாநாயகியைப் பற்றி வாசகர்களுக்கு ஓர் சிறிய அறிமுகம்.

    நம் கதையின் நாயகி, மார்கழி மாதம் நிறைந்த பௌர்ணமித் திதியில் வரும் திருவாதிரைத் திருநாளில் அவதரித்ததால்……ஸாரி..பிறந்ததினால் அவளுக்கு  ஆதிரை என்று பெயரிட்டு அன்பும், அறிவும் ஊட்டி வளர்த்து வந்தனர் அவள் பெற்றோர். அழகிய முகவெட்டும், துறுதுறுவென்ற கண்களும், நீண்ட, சுருண்ட கார்கூந்தலும், அளவான உயரமும், அதிக வெளுப்போ, கருப்போ இல்லாத மாந்தளிர் வண்ணமும் கொண்ட அவளை அழகியாக ஒப்புக்கொள்வதில் யாருக்கும் தயக்கம் இருக்காது.

    மிகச் சிறந்த தமிழறிஞராகிய அவள் தந்தை ’எழிலரசன்’ அவளுக்குச் சிறுவயதிலேயே தொல்காப்பியம், திருக்குறள், பகுத்தறிவுச் சிந்தனைகள் எனப் பலவற்றையும் ஊட்டி அவளின் அறிவை வளப்படுத்தி ’அழகிருக்கும் இடத்தில் அறிவிருக்காது’ என்ற பொதுவான கருத்தைப் பொய்யாக்கினார். இவ்வாறு ஆதிரை நாளொரு விளையாட்டும் பொழுதொரு குதூகலமுமாகத் தன் பள்ளிப் பருவத்தை இன்பமாய்க் கழித்தாள். கல்லூரிப் பருவமும் களிப்புடனேதான் சென்றது.

    கணினி அறிவியல் படித்தால் தான் எதிர்காலம் என்ற மாயை எழுந்த காரணத்தால் அவளும் கணினியிலேயே உயர்கல்வி பயின்றாள். இதோ… இப்போது ஓர் தனியார்க் கல்லூரியில் கணிப்பொறித்துறையில் விரிவுரையாளராய்ப் பணியாற்றுகின்றாள்.

    நடிகர் வடிவேலு சொல்வதுபோல் “எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டிருந்திச்சு” ஆதிரைக்குக் திருமணப் பருவம் வரும்வரை. இப்போதோ….வீட்டில் ஆதிரையின் தாய் எப்போது பார்த்தாலும் தன் மகளின் திருமணத்தைப் பற்றியே பேசுகின்றாள். இவள் வயதொத்த பெண்களில் யாருக்காவது திருமணம் என்று வீட்டிற்குப் பத்திரிகை வந்துவிட்டால் போதும்….தன் மகளுக்கு இன்னும் திருமணம் கூடிவரவில்லையே எனப் புலம்ப ஆரம்பித்து விடுகின்றாள். ஆனால், இந்தப் புலம்பலையெல்லாம் ஆதிரை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

    திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு வரமா? சாபமா? என்று திருமணமாகித் தன் அடையாளத்தைத் தொலைத்த பல பெண்களைப் பார்க்கும்போதும் ஆதிரை எண்ணமிடுவாள். தன் தாய், தந்தையரும் தன்னை அருமையாக வளர்த்ததை மறந்து இப்போது வேறோர் வீட்டுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்களே என அவள் வருந்துவதுண்டு.

    எல்லாவற்றிற்கும் மேலாகக் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வரும் ‘பெண்பார்க்கும் படலங்கள்’ ஆதிரையின் பொறுமைக்குப் பெரும் சோதனையாகவே இருந்துவருகின்றன. இதுவரை இரண்டு இடங்களிலிருந்து வந்து ஆதிரையைப் பெண் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். சென்றவர்களிடமிருந்து இன்றுவரை எந்த ஒரு தகவலும் இல்லை.

    பெண்பார்க்க வந்துசென்ற இரு பையன்களுமே மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் தாம். முதலில் வந்த பையன் தன் தாய், தந்தை, சகோதரி சகிதம் பெண் பார்க்க வந்திருந்தான். வந்தவன் ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருந்தான். எல்லாக் கேள்விகளையும் அவன் தாயும், உடன் வந்திருந்த அவன் சகோதரியுமே கேட்டுக் கொண்டிருந்தார்கள் (இதுதான் பெண்ணுரிமையோ!). அவன் தந்தையும் வாய் திறக்கவில்லை.  நல்லவேளையாகச் சாப்பிடும்போது தந்தையும், மகனும் வாய் திறந்தார்கள். வந்தவர்கள் வீட்டை நன்றாகச் சுற்றிப் பார்த்தார்கள். எத்தனை கிரவுண்டு? எப்போது கட்டியது? என்று (வீட்டைப் பற்றிப்) பல உருப்படியான கேள்விகளைக் கேட்டு விடை தெரிந்து கொண்டார்கள் (ஏதோ வீட்டைத்தான் பார்க்க வந்தவர்கள் போல்!). வீட்டின் எளிமையான தோற்றமும், உயர்ந்த பதவியிலிருந்தாலும் வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் மட்டுமே அணிந்து கொண்டிருந்த ஆதிரையின் தந்தை எழிலரசனின் எளிமையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. இந்த வீட்டில் பெண் எடுத்தால் பெரிதாக ஒன்றும் கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டார்களோ என்னவோ!… ஊருக்குச் சென்றவுடன் உறவினர்களைக் கலந்துகொண்டு முடிவு சொல்கிறோம் என்று போனவர்கள் தான். இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை.

    அடுத்த மாதத்திலேயே இன்னும் ஒரு குடும்பம் வந்து ஆதிரையைப் பெண் பார்த்து விட்டுச் சென்றது. இந்த முறை மாப்பிள்ளைப் பையனையும் சேர்த்து ஏழெட்டு உருப்படிகள் வந்து இறங்கினர். வந்திருப்பது பெண் பார்ப்பதற்கா.. அல்லது கல்யாண வீட்டில் விருந்து சாப்பிடவா? என்று ஆதிரையின் பெற்றோர் மலைத்தனர். எனினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஆதிரையின் தாய் வழக்கம்போல அவர்களை நன்றாகவே உபசரித்தாள். இந்தப் பையனும் மென்பொருள் பொறியாளனாகவே பணியாற்றுவதாய் ஆதிரை அறிந்தாள். இவனும் ஆதிரையை ஓரக்கண்ணால் பார்ப்பதும், தலைகுனிவதுமாக இருந்தானே தவிர வேறொன்றும் பேசவில்லை; ஒரு முடிவுக்கும் வந்தவனாகவும் தெரியவில்லை. இந்த கேலிக்கூத்தையெல்லாம் பார்த்த ஆதிரைக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது. “ஏன்டா, பொண்ணப் பிடிச்சிருக்கா…இல்லையாங்கறத இப்பவே சொல்லேன்டா…ஏன் தலயக் குனிஞ்சுகிட்டு ஒக்காந்திருக்க…..கோழை” என்று தனக்குள் திட்டித் தீர்த்தாள்.

    இப்படிச் சமீபத்தில் நடந்த (அவளுக்குப் பிடித்தமில்லாத) நிகழ்ச்சிகள் பலவற்றை அவள் மனது பேருந்தில் அமர்ந்து கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தபோது ‘ரீப்ளே’ செய்து கொண்டிருந்தது. அப்போது யாரோ தன் தோளைத் தொடவும், ஆதிரை தன் நினைவலைகளிலிருந்து மீண்டு நனவுலகிற்கு வந்து, யாரென்று நிமிர்ந்து பார்த்தாள். மேடம் …நாம எறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்திடுச்சு…நீங்க எறங்கலியா?” என்று தன்னிடம் படிக்கும் மாணவி ஒருத்தி கேட்கவும் விரைவாகப் பேருந்தை விட்டு இறங்கிக் கல்லூரி நோக்கி நடந்தாள்.

    கல்லூரியில், ஸ்டாஃப் ரூமில் அமர்ந்து மாணவி ஒருத்தியின் வினாத்தாளைத் திருத்திக் கொண்டிருந்த ஆதிரை, தன் அலைபேசி சிணுங்குவதைக் கண்டு அதனை எடுத்துப் பார்த்தாள். அது தன் தாய்தான் என்பதனை அறிந்து….. பழைய புராணத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போகிறாளே என்ற சலிப்போடு, ”ஹலோ!” என்றாள். எதிர்முனையில் ஆதிரையின் தாய் பதட்டத்தோடு பேசினாள்”, அம்மாடி ஆதிரை.! இன்னைக்கு மாப்பிள்ள வீட்டுக்காரங்க ஏற்கனவே சொன்ன நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னாடியே நம்ம வீட்டுக்கு வராங்களாம். அப்படிப்பாத்தா.. மத்தியானம் ரெண்டு மணிக்கெல்லாம் நம்ம வீட்டுல இருப்பாங்க….இப்ப பாத்து நீ காலேஜ் பசங்களுக்கு டெஸ்ட் குடுக்கணும்னு சொல்லிட்டு அங்க போய் ஒக்காந்திருக்கியேம்மா? கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு? எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல. உடனே கெளம்பி வாம்மா. இப்பவே மணி 11:30 ஆகுது. ஒங்க அப்பாவுக்கும் ஃபோன் பண்ணிச் சொல்லியிருக்கேன். ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்குது, இருந்தாலும், அத கான்சல் பண்ணிட்டு ஒண்ணரை மணிக்கே வீட்டுக்கு வந்துடறேன்னு சொல்லிட்டார்…..” என்று பட படவெனப் பொரிந்து கொட்டினாள்.

    அம்மாவை நினைக்கையில் ஆதிரைக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்தப் ”பெண்பார்க்கும் படலங்களும்” அதனால் பெண் வீட்டார்க்கு ஏற்படும் மன உளைச்சலும், செலவுகளும் கொஞ்சமா…நஞ்சமா? இதனை ஏன் ஆண் பிள்ளையைப் பெற்றவர்கள் உணர்வதில்லை?

    என்னதான் சமதர்மம், சமநீதி என்று ’மைக்’ பிடித்துக்கொண்டு தொண்டை கிழியக் கத்தினாலும் நடைமுறையில் அவை சாத்தியம் இல்லாமலே போவதேன்? ஒரே செயலுக்கான அணுகுமுறையும், அளவுகோலும் ஆணுக்கொன்றாகவும், பெண்ணுக்கொன்றாகவும்தானே இன்றுவரை இருந்துவருகின்றது….என்று சிந்தனைவலை மீண்டும் மனத்தில் கூடுகட்ட ஆரம்பிக்க…அந்தச் சிந்தனையைக் கலைத்து, ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்று முடிவெடுத்து எழுந்தாள் ஆதிரை.

    அரை நாள் விடுப்புக் கடிதம் (leave letter) ஒன்றை எழுதிமுடித்து, பிரின்சிபால் இருக்கும் அறைக்குச் சென்று அவரிடம் நீட்டினாள். நல்ல வேளையாக அவரும் தேவையற்ற கேள்விகள் எதனையும் கேட்காமல் ஆதிரையைப் போக அனுமதித்தார். நல்ல சூடிகையான பெண் என்று அவளிடம் அவருக்குப் எப்போதும் பிரியம் உண்டு.

    மீண்டும் வீடு நோக்கிய தன் பேருந்துப் பயணத்தைத் தொடங்கிய ஆதிரை ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தவளாக பேருந்தை விட்டு இறங்கினாள். மாப்பிளை வீட்டாருக்கு இனியும் தன் தாய் ”சொஜ்ஜி, பஜ்ஜி உபசரணைகள்” செய்துகொண்டிருக்க வேண்டாம் என்று எண்ணமிட்டபடி வீடு நோக்கி நடந்தாள். ஆதிரை வாசல் கேட்டைத் திறக்கவும், அவள் தாய் அவளை நோக்கி விரைவாக வந்து, ”வாம்மா…! சீக்கிரம் சாப்பிட்டுட்டு ரெடியாயிடு, அவங்கல்லாம் வந்துடுவாங்க…லேட் பண்ணாதே” என்று கெஞ்சும் குரலில் கூறினாள்.

    தன் தாயின் முகம் வியர்த்திருப்பதைப் பார்த்த ஆதிரை, அம்மா வழக்கம் போல மாப்பிள்ளை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய டிபன் உபசாரங்களுக்காகத்தான் இப்படி வியர்க்க விறுவிறுக்க உழைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதையறிந்து, ”சரிம்மா, இதோ சாப்பிடறேன்” என்று சொல்லி உடனே போய்ச் சாப்பிட உட்கார்ந்தாள். ”இந்தா…இந்த கேசரி எப்படியிருக்குன்னு கொஞ்சம் டேஸ்ட் பாத்துச்சொல்லு!” என்ற தாயின் வேண்டுகோளை நிராகரித்து…..”எல்லாம் நல்லாத்தான் செஞ்சிருப்பீங்கம்மா…உங்க சமையல் திறமையப் பத்தி இனிமேதான் நான் புதுசாத் தெரிஞ்சுக்கணுமா என்ன?” என்று கேட்டுவிட்டு, “நம்ம வீட்டுக் கேசரி ருசிக்காக யாரும் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறதில்ல… அவங்களோட எதிர்பார்ப்பு என்னங்கறது அவங்களுக்குத் தானே தெரியும்” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டு உணவினை உண்டு முடித்தாள்.

    வழக்கம்போல் தன்னை மிகவும் எளிமையாகவே அலங்கரித்துக் கொண்ட ஆதிரை கண்ணாடிமுன் போய் நின்றாள். அப்போது அவள் மனதிற்குள்ளிருந்து ஒரு குரல்.. ”ஆதிரை! இப்படிப் ’பெண்பார்க்கும் படலத்திற்காக’ நீ அரிதாரம் பூசிக்கொள்வதும், அன்ன நடை நடப்பதும் இதுவே கடைசி முறையாயிருக்கட்டும்” என்று ஒலித்து மறைந்தது.

    பிற்பகல் மணி 2:30. மாப்பிள்ளை வீட்டார் இன்னும் வரவில்லையே என்று ஆதிரையின் தந்தை வாசலுக்குச் செல்வதும் உள்ளே வருவதுமாக இருந்தார். வீட்டில் எல்லாருடைய இதயங்களும் ஏதோ ஓர் பரபரப்பினாலும், சிறிது பயத்தினாலும் வழக்கத்தை விடச் சற்று வேகமாகவே துடித்தன. நல்லவேளை….அதற்கு மேலும் தாமதம் செய்யாமல் 2:45 மணி வாக்கில் மாப்பிள்ளை வீட்டார் வீட்டினுள் நுழைந்தனர்.

    தன் தாயும் தந்தையும் அவர்களை விழுந்து விழுந்து உபசரிப்பதும், தங்கள் தாமதத்திற்குத் தாங்கள் வந்த பேருந்துதான் காரணம் என்று வந்தவர்கள் கூறிக்கொண்டிருந்ததும் தனியறையில் அமர்ந்திருந்த ஆதிரையின் காதிலும் விழவே செய்தது.

    சம்பிரதாயமான உரையாடல்கள் முடிந்தபின் ஆதிரையின் தாய் அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்து ஆதிரையை பார்த்து “வாம்மா! அவங்கல்லாம் உன்னப் பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்றாள். இப்போது ஆதிரைக்கும் சற்று பதட்டமாகத்தான் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே வந்து மாப்பிள்ளை வீட்டாரை நிமிர்ந்து பார்த்து ஓர் செயற்கைப் புன்னகை உதிர்த்தாள்.

    மாப்பிள்ளைப் பையனின் அம்மா ஆதிரையை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து, ”வாம்மா…வந்து என் பக்கத்துல ஒக்காரு” என்று அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டாள். விலையுயர்ந்த பட்டுப் புடைவையும், முழங்கை வரையில் குலுங்கிய தங்க வளையல்களும், கழுத்தில் ஜொலித்த கல் நெக்லஸுமாகத் தன்னை ஓர் மணமகள்போல் அலங்கரித்துக் கொண்டுவந்திருந்தாள் பையனின் அம்மா. அரக்கு நிற க்ரேப் சில்க் புடைவையும், கழுத்தில் ஒரே ஒரு சங்கிலியும் அணிந்திருந்த ஆதிரையைக் கண்டதும் அவள் முகத்தில் அவ்வளவாக மலர்ச்சியில்லாததை ஆதிரை கவனிக்கத் தவறவில்லை.

    அந்த அம்மாள் பின்பு மெதுவாக ஆதிரையைப் பார்த்து “எங்கம்மா வேல செய்யற? என்ன சம்பளம்?” என்று கேள்விகளை ஒவ்வொன்றாக வீசினாள். ஆதிரையும் எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டு வந்தாள். பின்பு தன்னுடைய தாய்”, பையன் எந்தக் கம்பனியில (company) வேலை செய்யறார்?” என்று கேட்ட கேள்விக்குப் பையனின் தாயே பதில் சொல்லத் தொடங்கினாள். இன்று பெண்பார்க்க வந்திருக்கும் பையனும் ஒன்றுமே பேசவில்லை. சொல்லிவைத்தாற்போல் இதுவரைத் தன்னைப் பெண்பார்க்க வந்த பையன்களில் ஒருவர் கூடப் பேசாததும், அவர்களின் தாய்மார்களே பேசிக் கொண்டிருந்ததும் ஆதிரைக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒருங்கே அளித்தன.

    “இப்படியே போய்க்கொண்டிருந்தால் பெண்ணும், பையனும் ஒருவர் மனதை மற்றொருவர் அறிவதுதான் எப்படி?” என்று ஆதிரை எண்ணிக்கொண்டிருந்த வேளையில், “சரி! அப்ப நாங்க கெளம்பறோம்….சீக்கிரத்தில ஃபோன்ல தகவல் சொல்றோம்”….என்று பையன் வீட்டார் எழவும்….ஆதிரையும் எழுந்தாள். ”கொஞ்சம் இருங்க…..நீங்க என்னைப் பிடிச்சிருக்கா…இல்லையான்னு ஒரு முடிவும் சொல்லாமலே கெளம்பறீங்களே…?” எனக் கேட்டாள். பையன் வீட்டார் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் விழித்தனர். ஆதிரையின் தாய் உடனே கோபமாக ஆதிரையைப் பார்த்து, ”ஏய்..ஆதிரை என்ன இது அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி…அவங்கதான் ஊருக்குப் போனப்பறம் சொல்றோங்கறாங்கல்ல…பேசாம இரு” என்று அதட்டவும், ஆதிரை சற்று ஆவேசமானாள். ”ஊருக்குப் போய் முடிவு சொல்றதுக்கு இதுல என்னம்மா இருக்கு? பெண்ணை இவங்களும் இவங்க பையனும் பாத்தாச்சு…. பிடிச்சிருக்கா.. இல்லையாங்கறத இப்பவே சொல்ல என்னத் தயக்கம்?” என்று கேட்டுவிட்டுப் பையனைப் பார்த்தாள். அவன் பேந்தப் பேந்த விழித்தபடி ஆதிரையைப் பார்க்க, ஆதிரை நேரடியாகவே அவனைக் கேட்டாள். ”உங்க அம்மா, அப்பா இங்கேயே சொல்ல யோசிக்கிறாங்க போலிருக்கு. நாம இந்தத் தலைமுறை….எல்லா விஷயத்திலேயும் நம்மள மாத்திகிட்டு வர்றோம்….அப்புறம் பெண் பார்க்கும் விஷயத்தில் மட்டும் ஏன் பழைய பஞ்சாங்கமா இருக்கணும்..? உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா….பிடிக்கலையா…? எதுவானாலும் சரி…..உங்க முடிவை இப்பவே சொல்லிடுங்க… வீணா நாளக் கடத்துவானேன்?” என்று அதிரடியாய்க் கேட்க அவன் இவற்றையெல்லாம் எதிர்பார்க்காதவனாய் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தன் தாயின் முகத்தையும், தந்தையின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அவர்களும் இப்படி ஓர் சூழ்நிலையை இதுவரை சந்திக்காத காரணத்தால் சிலையாய் நின்றனர்.

    ஆதிரை தொடர்ந்தாள்….”பெண் பிடிச்சிருக்கா.. இல்லையாங்கறதக் கூடத் தானா சொல்லத் தெரியாம…அதுக்குக்கூட அம்மாவையும், அப்பாவையும் கேக்கற உங்க பையன், எந்த விஷயத்திலும் சொந்தமா முடிவெடுக்கற சக்தியோ, திறமையோ இல்லாதவராத்தான் இருக்கணும். பெண் பாக்க வந்தா சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் ஒருத்தரோடு ஒருத்தர் பேசவும், தங்கள் முடிவைச் சுதந்திரமாச் சொல்லவும் அனுமதிங்க. இனிமேலாவது… பெண் பாக்கப் போற இடத்தில உங்க விருப்பத்தையும், முடிவையும் உடனே சொல்லிப் பெண் வீட்டுக்காரங்களுக்கு ஏற்படற வீணான மன உளைச்சலைத் தவிர்க்கப் பாருங்க…” என்று பேசி முடித்தாள். அவர்கள் பதில் பேசாமல் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு வெளியேறினர்.

    ஆதிரையை எரிப்பது போல் பார்த்தாள் அவள் தாய். ”உனக்கு என்னாச்சு இன்னிக்கு? ஏன் இவ்வளவு அநாகரிகமா நடந்துகிட்டே?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள். ”எதும்மா அநாகரிகம்…? நாகரிகம் எதுன்னு சுட்டிக்காட்டுறதுக்குப் பேரா அநாகரிகம்?” என்று கேட்ட ஆதிரைக்கு இப்போது அவளுடைய அப்பா ஆதரவுக்கரம் நீட்டினார். “ஆதிரை நீ கேட்டதுல எந்த தப்பும் இல்லம்மா. அறிமுகம் இல்லாதவங்க முன்னால ஒரு அலங்கார பொம்மை மாதிரி வந்து நிக்கறதுன்னா.. அது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு சங்கடமான விஷயங்கறது எனக்கு நல்லாப் புரியுதும்மா. அதுலயும் மாட்டோட பல்லப் புடிச்சுப் பாக்கற மாதிரிப் பாத்துட்டு, ஒரு முடிவும் சொல்லாமப் போறதுங்கறது நாகரிகம் இல்லாத நடைமுறையாத்தான் இருந்துட்டு வருது” என்றார்.

    புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி போலச் சிறிது நேரத்திற்குப் பின் ஆதிரையின் வீட்டில் இயல்புநிலை மெல்ல மெல்லத் திரும்பிக் கொண்டிருந்தது.

    தன் அறைக்குச் சென்று தான் வழக்கமாகச் செய்யும் கணினி சம்பந்தமான வேலைகளில் மூழ்கிய ஆதிரை, திடீரென்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள். ”அம்மா..அப்பா ரெண்டு பேரும் இங்க உடனே வாங்க” என்று உற்சாகக் குரல் கொடுத்த அவளைக் காணும் ஆவலில் அவளின் தாயும், தந்தையும் அவள் அறைக்கு விரைந்து வந்தனர். ஆதிரை அவர்களைக் கண்டதும்…..”அம்மா..!, நான் போன வாரம், சென்னையில இருக்கற ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நடந்த இண்டர்வியூக்குப் போயிட்டு வந்தேன் இல்லையா? அடுத்த வாரமே வேலையில சேரச் சொல்லி அவங்ககிட்டேயிருந்து எனக்கு அப்பாயின்ட்மென்ட் லெட்டர் (appointment letter) வந்திருக்கு” என்றாள். அவள் கண்களில் ஓர் ஒளி தெரிந்தது. சமீபத்தில் அவ்வளவு உற்சாகத்தோடு தன் மகளைக் கண்டிராத ஆதிரையின் தாய் அவள் முகத்தையே மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க, ”அம்மா! எனக்குக் கொஞ்சம் கேசரி கொண்டுவாங்க.. உடனே சாப்பிடணும்போல இருக்கு” என்றாள் ஆதிரை.

     

     

     

     

     

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் 8

    திவாகர்

    நீதிபதியின் வலது புறத்தில் நகர ஷெரீஃப் அமர்ந்திருந்தார். அவர் அணிந்திருந்த அலங்காரமான அணி எல்லோர் கவனத்தையும் கவர்ந்திருந்தது. நீதிபதியின் இடதுபுறத்தில் போடப்பட்டிருந்த இரண்டு பெஞ்சுகளில் ஒருவர் பின் ஒருவராக ஒன்பது பேர் உட்கார்ந்திருந்தார்கள். இந்த ஒன்பது பேரும் ஸ்பெஷல் ஜூரர்கள். பொதுமக்களிடமிருந்து நீதி வழங்குவதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வெவ்வேறு வாழ்க்கைத் துறையில் ஈடுபட்டவர்களாகையால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருந்தனர்.


    இவர்களுக்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நீதிபதிக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்தவர் மிஸ்டர் ஸஹஸ்ரநாமம்.. அவர் பிரபலமோட்டார் கம்பெனியில் மேனேஜர். இதற்கு முன்பு இவர் ஜூரராக இருந்து கோர்ட் அனுபவமுள்ளவராகையால் இவரை ’ஃபோர்மென்’ ஆக தேர்ந்தெடுத்தார்கள். அநேகமாக முன்புறம் வழுக்கை விழுந்திருந்தது போல தலை. முகம் மிகவும் பருத்திருந்ததால் கழுத்து இருக்கும் இடம் தேடவேண்டியிருந்தது. ’என்னடா இப்படிப் பிடித்துப் போட்டுவிட்டார்களே, மூன்று நாளோ நான்கு நாளோ தெரியவில்லையே, ஆபீஸில் உட்கார்ந்தபடி அலுங்காமல் நலுங்காமல் போவதை விட்டு இது எதற்கு? என ஆயாசப்படுபவர் போல காணப்பட்டார்.

    அடுத்தபடி உட்கார்ந்தவர் ஒற்றைநாடி ரங்கநாத முதலியார் ஆவார். உள்ளூர் பேங்க் ஒன்றில் அக்கௌண்டண்ட் வேலை.. ஜட்ஜைப் பார்ப்பதும், ஷெரீஃபைப் பார்ப்பதும் மறுபடி ஜட்ஜைப் பார்ப்பதுமாகப் பொழுதைப் போக்கினார். வீட்டுக்கு மாப்பிள்ளை ஒருவார கால லீவில் வந்திருக்கும்போது அவனுடன் பேசமுடியாமல் இப்படி செய்துவிட்டார்களே என்ற  தாபம் ஒருபக்கம்; மாப்பிள்ளை எதிரில் தனக்கு இப்படி ஒரு பெரிய பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று கௌரவமாக சொல்லிக்கொள்ளலாம் என்ற சபலம் ஒருபுறம், இதில் எது விசேஷம் என்று காணமுடியாத தத்தளிப்பு அடிக்கடி ஏற்பட்டது.

    மூன்றாவது ஆசாமி கொக்கு போல நாசியுடன் அடிக்கடி கனைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். புரபசர் சிவசாம்பனை நகரக் கல்லூரியில் கணித புரபசர் என்பதாக பலர் அறிவார்கள். இந்த கேஸ் என்ன் பிரமாதம்? எக்ஸ் ப்ளஸ் ஒய் இண்ட்டு எக்ஸ் மைனஸ் ஒய் இஸிகோல்டு என்கிற மாதிரி ஊதியெறிந்துவிட வேண்டியதுதானே..என்கிற பாவத்தில் அவர் காத்துக் கொண்டிருந்ததாகப் பட்டது.

    அவருக்கு அடுத்தாற்போல் சுமார் ஆறடி உயர நிஜார் அணிந்த ஓர் ஆசாமி உட்கார்ந்திருந்தார். அவர் கோர்ட் பூராவையுமே கண்ணோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். முன் பெஞ்சில் உட்கார்ந்திருந்த இளம் வக்கீல்களை பார்ப்பதும், வாயின் இடதுபக்கத்தால் புன்னகை செய்து அவர்களைத் தாம் தெரிந்துகொண்டதாக மட்டுமே பாவனை செய்தார். இன்சூரன்ஸ் கம்பெனி செல்வரங்கத்தின் பிணைப்பில் அவர்களில் அநேகர் அகப்பட்டுக்கொண்ட பேர்., மிகுதியுள்ளவர் இனி தப்பமுடியாது என கவலை கொண்டால் ஆச்சரியமில்லை  பேச்சிலே அவ்வளவு வாசாகலகமாக இருப்பவர் ஒரு புள்ளியை குறி வைத்தார் என்றால் மடக்குவதில் தவறியது என்பது இவர் அகராதியில் இல்லை. இப்போது இவர் இந்த புதிய சூழ்நிலையை ரசித்தார், விரும்பினார், இதன் மூலம் தம் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ள இடம் செய்து கொண்டார் என்று முடிவு செய்வதும் தவறாகாது.

    பின் பெஞ்சியில் முதலில் அமர்ந்தவர் ஒரு ஆடிட்டர். பெயர் ஜோசப் ஞானமுத்து, பிரபலமானவர்,’ ஜூரர் என்று அழைத்துவிட்டார்கள், எதிர்த்துப் பேச வாயில்லை, உட்கார்ந்து விட்டுப்போவோம்’ என்ற ஒரு விரக்தியுடன் உட்கார்ந்து விட்டார். அடுத்தாற்போல ஆறாவது பேர்வழி ஹோட்டல் முதலாளி. அவருக்கு அங்கே இருந்தாலும் இங்கே இருந்தாலும் லட்சியமில்லை. மச்சினன் பயல் பெட்டியடியில் உட்கார்ந்து கொள்வான், கவலையில்லை. அதுவும் வியாபாரம் பத்து மணிக்கு ஓய்ந்து மறுபடி ஐந்து மணிக்குதான் ஆரம்பிக்கிறது. இங்கே தமாஷாக பொழுதைப் போக்கலாம். அவருக்கு ஒரே ஒரு குறை காலடியில் ஒரு திண்டு, தலையணை போட்டிருக்கப்படாதா என்பதுதான்.

    ஏழாவதாக உட்கார்ந்திருப்பவர் ராமநாத சாஸ்திரி. பி.ஏ படித்து ஊரில் நிலபுலன்களைப் பார்ப்பதோடு இங்கே ஆயில்மேன் பிஸிநஸ் வைத்திருக்கிறார். மதாசாரங்களில் ஊறி காலை மாலையில் பூஜை புனஸ்காரங்களை ஒரு காரியமாகச் செய்பவர் நெற்றியில் சந்தனமும் குங்குமமும் இவர் பக்தியின் சின்னங்கள்.  கோயிலைப் பார்த்தால் கை கூப்பாமல் போகிறவர்களை தூக்கில் கொண்டு போய் போடவேண்டும் என்பது இவர் அபிப்ராயம்.

    எட்டாவதாக உட்கார்ந்திருந்த முத்தையா பிள்ளை வாழ்க்கையில் பல துறைகளில் வேலை பார்த்தவர். அவர் பேசாத விஷ்யம் இல்லை. கமிஷன் ஏஜெண்டாக வேலை பார்ப்பவர். வீடு கட்டும் காண்ட்ராக்டுகளை எடுத்துக் கொண்டு கொள்ளை கொள்ளையாகக் குவித்தவர். அரசியல் விஷயங்களைத் தெரிந்ததோடு பிரபலங்களோடு பழகியவர்.

    கடைசியாக ஒரு பெஞ்ச் ஓரமாக உட்கார்ந்து கொண்டு எல்லாரையும் விழுங்கிவிடுவதாக பார்த்துக் கொண்டிருப்பவர் ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் பெயர் கௌரிசங்கர். அதைவிட அவருடைய புனைப் பெயர் ‘மண்டலி’ என்பது அதிக பிரபலம். தினம் ஒரு துப்பறியும் கதை படித்துக்கொண்டிருப்பவர். அவர் எழுத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து கொலையும் கொள்ளையும் மர்மமும்தான். அநேகப் புத்தகங்கள் படித்து இதுவரை மானசலோகத்தில் சஞ்சரித்தவர் இன்று கண்ணெதிரேயே ஒரு கேஸ் விசாரணையை பார்க்க நேர்ந்ததில் அவர் சொர்க்கப்பிராப்தியே அடைந்துவிட்டது போல ஆனந்தம் கொண்டிருந்தார். இந்த அனுபவத்தை வைத்து ஒரு இருபைத்தைந்து வாரம் போகும் ஒரு அபூர்வமான கதை எழுதிவிடுவேனே என்று மனைவியிடம் மார் தட்டி வந்திருந்தார்.

    இதற்கு முன்பு கிரிமினல் கோர்ட்டின் உட்புறத்தை அவர் பார்த்ததே இல்லை. ‘எத்தனை அழகு, என்ன பந்தா, எத்தனை கருக்கு’ என்று வியந்தே போனார். நியாயப்படி, சட்டப்படி நடப்பதென்பார்களே அது இங்கேயல்லவா இருக்கின்றன. புத்திசாலிகள் சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சிங்கங்கள், மனதில் குரோதம் இல்லாதவர்கள் ஒன்று கூடி ஒரு ஆள் தண்டனை அடையலாமா கூடாதா என்பதைக் கண்டுபிடித்து முடிவு சொல்வது எவ்வளவு அற்புதம்! எப்பேர்ப்பட்ட தர்மம்’ என்று திறந்த வாய் மூடாமல் இருந்தார்.

    ஜஸ்டிஸ் ஜகன்னாதன் கதை ஆரம்பம்தான் மேலே கொடுத்திருப்பது. தேவன் கதைகளிலிருந்து இது முதலில் வித்தியாசப்படுவது பெயர்த் தலைப்பிலே. ஏனென்றால் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்ற புதினத்தில் தலைப்பிட்ட பாத்திரம் இந்தக் கதையின் நாயகன் இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.. இதனால் வேறு யார்தான் நாயகன் என்றால் இக் கதையைப் படித்தவர் எந்த ஒரு பாத்திரத்தையும் நாயகனாகவே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கதைப்படி பேருக்கு நாயகன் வரதராஜபிள்ளை என்றாலும் அந்த பாத்திரம் கூட கதை முழுக்க வரும் கதாநாயகப்பாத்திரம் இல்லைதான். அதே போல வரதராஜபிள்ளையின் மனைவி ஜெயலக்ஷ்மியைக் கூட கதாநாயகியாக அவ்வளவாகக் காண முடியாது என்றுதான் படுகிறது. என்னைக் கேட்டால் இந்தக் கதைக்கு நாயகன்-நாயகி இந்தக் கதையைப் படைத்த தேவன் மட்டுமே என்றுதான் சொல்வேன். இத்தனைக்கும் கதை என்ன?

    பெரிய செல்வந்தரானவரும் மூன்று மனைவிக்காரருமான (முதல் மனைவிக்கு சந்தானம் கிடையாது என்பதால் இரண்டாவது மனைவி வர, அவள் மூன்று மக்கள் செல்வங்களைக் கொடுத்து விட்டு இறந்து போனதால் துக்கம் தாளாமல் போக மூன்றாவது மனைவி தேவைப்பட்டதாம்) தியாகராயப் பிள்ளை, நோய்வாய்ப்பட்டாலும் சீரடைந்து தன்னுடைய பெரிய பெண்ணின் கணவனான வரதராஜ பிள்ளையின் வீட்டில் அவன் மேற்பார்வையில் ஹாயாக இருந்து வரும் ஓர் இரவில் அகஸ்மாத்தாக மடிந்து போகிறார். அந்த இரவு வேளையில்  அவரை விஷம் வைத்து மாப்பிள்ளை வரதராஜபிள்ளையே தன் மாமனாரை சொத்துக்காக ஆசைப்பட்டு கொன்றுவிட்டதாக போலீஸ், அவர்களுக்குக் கிடைத்த சாட்சியங்களின் பேரில் கைது செய்து கிரிமினல் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். வரதராஜபிள்ளை தான் அந்த இரவில் அங்கு இல்லவே இல்லை என்று சாதித்தாலும், வேறு பல பலமான சாட்சியங்கள் அவனைக் குற்றவாளியாக கூண்டில் நிற்கவைத்து விடுகின்றன. அவன் மனைவி ஜயலக்ஷ்மியும், அவனுடைய வக்கீல் ஈஸ்வரன் மட்டுமே அவன் பக்கம் நிற்க, கோர்ட்டில் இந்த வழக்கு ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்கிற நீதிபதியின் முன்பும் ஒன்பது ஜூரர்களின் முன்பும் விசாரணைக்கு வருகிறது. மிகவும் பிராபல்யமான ’கிரவுன்’ பிராஸிகியூஷன் கருணாகரன் இந்த கேஸை போலீஸ் சார்பாக நடத்த, அவரை எதிர்த்து எல்லோரும் மதிக்கும் வக்கீலான ஈஸ்வரன் டிபன்ஸ் தரப்பு வக்கீலாக ஆஜராகிறார். கிரவுன் என்றால் ராஜாங்கத்து சார்பாக என்பதாக பொருள் கொள்ளவேண்டும். பிரிட்டிஷ் சட்டம் இல்லையா, எல்லாமே ராஜாவின் ஆணைப்படிதான்.

    இந்தக் கதை ஆனந்த விகடனில் 1953-54 இல் தொடராக வந்தது. அந்தக் கால கட்டத்தில் நீதிபதிக்கு உதவி செய்யவும் முடிவுகள் தீர ஆராய்ந்து சரியான தீர்ப்பு சொல்லவும் ஒன்பது பேர் கொண்ட ஜூரர் ஸிஸ்டம் ஒன்று இருந்தது. இங்கு ஜூரர்களின் மெஜாரிடி முடிவின் படி நீதிபதியின் தீர்ப்பு இருக்கும். கிட்டதட்ட இப்போது இருக்கும் பெஞ்ச் அல்லது மல்டி-ஜட்ஜ் சிஸ்டத்தைப் போல என்று வைத்துக் கொள்ளலாம். இந்த ஜூரர் சிஸ்டம் இன்னமும் வெளிநாடுகளில், அதுவும் அமெரிக்க நாடுகளில் வலுவாக உள்ளது. நகர ஷெரிஃப் இப்படிப்பட்ட கிரிமினல் குற்ற கேஸ்களில் ஏறத்தாழ நடுநாயகமாக அமர்ந்திருப்பது ஒரு அலங்காரத்துக்கு மட்டுமே தவிர அவருக்கு நீதி அளிப்பதில் எந்தவித உரிமையும் கிடையாது. அவர் ஒரு அதிகாரம் இல்லாத சூபர்வைஸர் என்று கொள்ளலாமோ என்னவோ. (சென்னை மாநகருக்கு ஷெரீப் என்றொரு பதவி இருந்தது . அப்போது மாநகர மேயருக்கு அடுத்த முக்கியத்துவம் கொண்ட பதவி இது. அரசாங்கத்தால் வழங்கப்படும் நியமனப் பதவி. அரசியல் சார்பற்ற இந்தப் பதவியில் இருப்பவர்கள் நகரின் பல நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகிப்பார்கள். நகருக்கு வரும் முக்கியப் பிரமுகர்களை வரவேற்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.  பெரிய வழக்குகளை அவர்கள் முன்னிலையில் நடத்துவது கோர்ட்டுகளில் ஒரு வழக்கம்)

    ஜூரர்கள் என்பவர்களை சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவில் நல்ல அந்தஸ்து மரியாதை உள்ளவராக இருப்பவர்களாகப் பார்த்து அமர்த்துவது வழக்கம். அத்தகைய ஜூரர்களைப் பற்றிதான் தேவன் முதன் முதலில் நகைச்சுவையாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

    இது கொலைக் குற்றம் எனப்தால், எப்போதுமே இதைப் போன்ற கதைகளில் ஒரு த்ரில் அல்லது சஸ்பென்ஸ் இருக்கும். சாதாரணமாக துப்பறியும் புதினங்கள் எழுதுபவர்கள் ஒரு கொலை எப்படி நடந்தது என்பதை போலீஸ் மூலமோ அல்லது ஒரு துப்பறியும் சிங்கம் மூலமாகவோ மிகவும் தீர ஆராய்ந்து, கஷ்டப்பட்டு, ஒவ்வொரு இடமாக நாய் போல அலைந்து திரிந்து, அடிபட்டு, உதைபட்டு, கடைசியில் இவர்தான் கொலை செய்தார் என்று முடிவு செய்து கதைக்கு ஒரு முடிவையும், வாசகருக்கு அப்பாடி என்கிற திருப்தியையும் கொடுத்து விடுவார்கள். கடைசியில் குற்றவாளி பிடிபட்டான் என்று தெரியுமே தவிர அவன் கோர்ட்டில் மிக எளிதாக பெயிலில் வெளியே வரமுடியும், வந்து பின்னர் தான் பிடிபட்ட காரணங்களை எல்லாம் தவிர்க்கப் பாடுபடமுடியும், சாட்சியங்கள் வீணாகிப்போனால் ஜாலியாக பழையபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமுடியும் என்றெல்லாம் நமக்குக் காண்பிக்கமாட்டார்கள்.

    ஆனால் ஜஸ்டிஸ் ஜகன்னாதனில் இப்படிப்பட்ட கதையாக இது ஆரம்பிக்கப்படவில்லை.. துப்பறியும் கதைகளின் இரண்டாம் பாகம் போல, குற்றவாளி பிடிபட்டு அவன் வழக்கில் எப்படி குற்றம் செய்திருக்கலாம் என்பதாக நிரூபிக்கிறார்கள் என்று காண்பிக்கப்படுவதால், இந்தக் கதையில் நவரசங்களும் கலந்தே இருக்கின்றன. ஒருநாள் வரதராஜபிள்ளை குற்றம் செய்துவிட்டார் என்பதை சந்தேகமுற கருணாகரன் (பிராஸிக்யூஷன் வக்கீல்) நிரூபித்து விட, அதுதான் நிஜம் என்றே ஜூரர்களும் அசைபோட ஆரம்பித்தாரென்றால் அடுத்தநாள் டிஃபென்ஸ் தரப்பு வக்கீல் ஈஸ்வரன் அரசாங்கத் தரப்பில் காண்பிக்கப்பட்ட சாட்சியங்களில் ஏகப்பட்ட ஓட்டைகளைக் காண்பிக்க, ‘ச்சே’ இந்த வரதராஜ பிள்ளையாவது, குற்றம் செய்வதாவது..” என்று ஜூரர்களோடு சேர்ந்து நாமும் பரிதாபப்படும் நிலைக்கு கொண்டுசெல்வார் தேவன்.

    1954 இல் எழுதப்பட்ட இந்தக் கதையின் ஆங்கிலப் பதிப்பு 2004 இல் அதாவது ஐம்பது ஆண்டுகள் கழித்து லக்ஷ்மி வெங்கட்ரமணன் அவர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது (2004 ஆம் ஆண்டில் ஹிந்து நாளிதழில் வந்த அதற்கான படம் இங்கே இருக்கிறது). ஆங்கிலத்தில் இதைப் போன்ற கதைகள் ஏராளம்தான். ஒப்புக் கொள்ளவேண்டும்தான். அதே சமயத்தில் ஆங்கிலம் என்பதை உலகம் பரவிய, அதிகமாகப் பேசப்படுகின்ற, படிக்கப்படுகின்ற மொழியாகவே கடந்த நூறு ஆண்டுகளில் செய்துவிட்ட பிறகு ஆங்கிலத்தில் இதைப் போன்ற கதைகள் எத்தனை வந்தாலும் ரசிப்பதற்கு வாசகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் தமிழ் என்று வரும்போது இருக்கும் ஆறு கோடிப் பேரில் குறைந்தபட்சம் ஆறில் ஒரு பங்கு கூட (ஒரு கோடி) கூட வாசிப்பதில் விருப்பம் காண்பிப்பது கிடையாது என்பதை தமிழ் அறிஞர்கள் சமீபத்திய செம்மொழி மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்தார்கள். படிப்பு முன்னேறிய இப்போதைய காலகட்டத்திலேயே நிலைமை இப்படி என்றால் படிப்பில் வீழ்ந்திருந்த அந்த 1950 களில் இப்படி ஒரு கதைக்களம் வைத்து எழுதி வெற்றி பெற்றால் அது படைப்பாளியின் மிகப் பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும்.

    இதைப் படித்தவர் பலபேர் தேவன் அந்த நாட்களில் கோர்ட் நிகழ்ச்சிகளை அடிக்கடிப் பார்த்திருக்க வேண்டும் என்றே எழுதினர். மேடையில் பேசவும் செய்தனர். அத்தனை துல்லியமாக கோர்ட் நடவடிக்கைகளை எழுதியதோடு வாசகர்களுக்கு அங்கே இடையிடையே நடக்கும் ஹாஸ்யபூர்வ நிகழ்ச்சிகளை தம் பாணியில் கொடுத்திருப்பார் தேவன்.

    இப்படி ஒருநாள் மிக முக்கிய சாட்சியை ஜூரர்கள் முன் வைக்கப்பட்டு கிரவுன் ப்ராஸிக்யூட்டர் கருணாகரன் வெகு பரபரப்பாக வாதித்துக் கொண்டிருக்கிறார். கோர்ட் முழுவதுவமே ஒரே ஸீரியஸ். நீதிபதி முதற்கொண்டு பார்வையாளர் வரை எல்லோருமே உன்னிப்பாக வாதத்தைக் கவனித்துக்கொண்டு வருகிறார்கள்.

    அப்போது ஜூரர்களில் ஒருவர், முத்தையா பிள்ளை மிக மெதுவான குரலில் பக்கத்தில் உள்ள இன்னொரு ஜூரரிடம் பேசுகிறார்.

    “பிடிச்சுகிச்சு”

    அந்த இன்னொரு ஜூரர், முத்தையா ஏதோ முக்கியமான பாயிண்டைப் பிடித்துவிட்டார் போலும் என்ற ஆவலினாலோ அல்லது பொறாமையாலோ அவரைத் திருப்பி கேட்பார்.

    “என்ன பிடிச்சுகிச்சு?”

    மிகவும் இயல்பாகவும் அதே மெல்லிய தொனியில் முத்தையா பதில் சொல்லுவார்.

    “நேத்து ராத்திரி… மொட்டை மாடில படுத்தேனா?… ஒரே பனியா?… அதான் பிடிச்சுகிச்சு..” என சொல்லிவிட்டு மூக்கையும் உறிஞ்சுவார்.

    சளி பிடித்துவிட்டதாம் அவருக்கு. பிடிக்கட்டும். ஆனால் அதை சொல்வதற்கும் நேரம் காலம் உண்டல்லவா? இப்படி கோர்ட்டில் முக்கியமான கட்டத்தில் வாதத்தை கேளாமல் தனக்கு மனதில் தோன்றியதை உடனடியாக பக்கத்து நபரிடம் சொல்லியே தீரவேண்டுமென்ற ஒரு உணர்ச்சி…

    இந்த ஆவல் உணர்ச்சியை நிறைய பேரிடம் இப்போதும் பார்க்கலாம். தேவனுக்கு மற்றவர்களை மிக மிக உன்னிப்பாக கவனிக்கும் குணம் உண்டு என்பது ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

    கோர்ட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட ஜஸ்டிஸ் ஜகன்னாதனைப் போன்ற இன்னொரு கதைதான் ராஜத்தின் மனோரதம். ‘வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்’ என்று சொல்வார்கள் இல்லையா.. இந்த வீடு கட்டும் படலத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதிலுள்ள கஷ்டங்களை நகைச்சுவை எள்ளளவும் குறையாமல் தேவன் எழுதிய புத்தகம்தான் ராஜத்தின் மனோரதம். கதாநாயகியான மனைவி ராஜம் எப்படியாவது ஒரு சொந்த வீடு வேண்டாமோ என நச்சரித்துக் கொண்டே இருக்க, அவள் கனவை நனவாக்குவதற்காக சொந்த வீடு கட்டினால்தான் என்ன என்று இறங்கிவிடும் நாயகன். அடித்தளம் போடுவதிலிருந்து முழு வீடு கட்டும் வரை ஏற்படும் சிரமங்கள், அதிலும் மேஸ்திரி முதற்கொண்டு ஒவ்வொரு வேலையாட்களிடமும் இந்த வீடு கட்டுபவர் படும் கஷ்டமும் இந்த சிமெண்ட் போன்ற வஸ்துக்களை வாங்குவதில் உள்ள சிரமங்களும் முக்கியமாக இன்றைய அடுக்கு மாடி குடியிருப்போர் படிக்கவேண்டும். படிக்கப் படிக்க சுவையான ஒரு புத்தகம்தான் ’ராஜத்தின் மனோரதம்’.

    ஆனால் இவைகள் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் விதத்தில் தேவனின் ‘சாம்பு’ ஒரு மிகப் பெரிய புகழை தேவனுக்கு அள்ளித் தந்தது. தேவன் புத்தகங்கள் என்றால் சாம்புதானே என இன்றைய தலைமுறையினரும் வெகுவாக அறியக்கூடிய அளவுக்கு புகழ் பெற்ற அந்த துப்பறியும் சாம்புவை நாம் துப்பு துலக்குவோம்.

    தொடர்ந்து வரும்

    Share
  • தடையைத் தகர்த்தெறிந்த தன்னம்பிக்கை!

    பவள சங்கரி

    உழைக்கும் கரங்கள்!

    சென்னை அண்ணாநகர் பக்கம் செல்பவர்கள் காலை எட்டு மணி தொடங்கி மாலை ஆறு மணி வரை ஒரு 58 வயது பெண்மணி, முகம் நிறைய மஞ்சளுடன், புன்னகையும், நெற்றி நிறைய குங்குமமும் கண்கள் நிறைய கனிவும், உள்ளம் நிறைய அமைதியும் அணிந்து கொண்டு தலையில் பெரும் சலவைத் துணி சுமையுடன் நடமாடிக் கொண்டிருப்பதைக காணலாம். இவர் பெயர் நாகம்மா. தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் கையில் இருந்தால் எத்தகைய தடையையும் முறியடித்து வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்தான் இந்த நாகம்மா.. ஆம். தன்னுடைய 14 வயதில் அடிக்கடி உடல் நலிவுற்று அரசு மருத்துவமனையில் பலமுறை தங்கி மருத்துவம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. படிப்பும் பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்திருக்கிறது. பல பரிசோதனைகளுக்குப் பிறகு, நாகம்மாவிற்கு இருதயத்தில் ஓட்டை இருப்பதாகவும், அவர் கடுமையான பணிகளோ, அல்லது திருமண வாழ்க்கையையோ மேற்கொண்டால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் முடங்கிப்போய் விடவில்லை நாகம்மா. தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொண்டுதான் இருந்திருக்கிறார். இவர்  சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் அதற்குரிய தன்னால் ஆன சின்னச் சின்ன உதவிகளைச் செய்து கொண்டிருந்திருக்கிறார். விதியின்  விளையாட்டு அதோடு நிற்காமல்  தன்னுடைய 17 வது வயதில் பெற்றோரையும் ஒருவர் பின் ஒருவராக இழக்கச் செய்துவிட்டது.. உடன் பிறந்த ஒரே சகோதரியும் திருமணம் செய்து கணவன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இளம் வயதில் தனித்து விடப்பட்ட இந்தப் பெண்ணின் பாதுகாப்பற்ற சூழலை மனதிற்கொண்டு வேறு வழியின்றி, மருத்துவரின் ஆலோசனையையும் மீறி, தம் அன்புத் தங்கையை தம் கணவருக்கே மறுமணம் செய்து வைத்துள்ளார், இவருடைய அன்புச் சகோதரி. அந்த பாச தீபத்தின் தியாகத்தினால் நாகம்மா அன்று முதல் தன் சகோதரியுடனேயே, அவருடைய வாழ்க்கையையும் பங்கு போட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

    துரத்தி வந்த நோயைக்கூட இவருடைய தன்னம்பிக்கை என்ற உறுதியான மனம் விரட்டியடித்திருக்கிறது என்பதை அறிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருதய நோய் காரணமாக அடிக்கடி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனாலும் தன்னுடைய கடமைகளை மட்டும் எந்த காரணம் கொண்டும் தவிர்க்க நினைக்கவில்லை இவர். ஹோமியோபதி மருத்துவமும் பார்த்துக் கொள்ள ஆரம்பித்த வேளையில்தான், திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளிலேயே குழந்தைப்பேறும் பெற்றிருக்கிறார். இருதயத்தில் இருந்த பிரச்சனையுடன், மருத்துவர்கள் குழந்தை வேண்டாம் என்று கூறியும், தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் உறுதியாக வைத்துக் கொண்டு பலப்பல சிரமங்களுக்கிடையே, மருத்துவ மனையிலேயே முழுவதும் தங்கி, நல்லபடியாக அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தும் வந்துவிட்டார். சகோதரியின் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்ற இரு குழந்தைகளுடன் நாகம்மாவின் பெண் குழந்தையும் ஆரோக்கியமும், நல்ல அறிவுமாக வளர்ந்து கொண்டு வந்திருக்கிறது.

    மகன் பட்டயப் படிப்பு படித்துவிட்டு குடும்பத் தொழிலான சலவைத் தொழிலையே செய்ய விரும்ப, மகள்கள் இருவரையும், பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்துள்ளனர். மிகச் சிரம்ப்பட்டே தம் மகள்களை படிக்க வைத்ததாகக் கூறும் நாகம்மா,. தன் மூத்த சகோதரியின் குழந்தைகளுக்கும், தன் குழந்தைக்கும் எந்தவிதமான வேறுபாடும் இன்றுவரை பார்த்திராதது மட்டுமே இவருடைய அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு காரணமில்லை. தங்கள் மகள்களை நன்கு படிக்க வைத்து, இன்று அவர்கள் நல்ல நிலையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தும் அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் இன்றுவரை உழைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே அது மட்டுமே நிம்மதியை தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் சத்தியம். அக்காவிற்கு முதுமையினால் இயலாமை ஏற்பட்டுள்ள நிலையில் அவரை நல்ல ஓய்வான சூழலில் கவனித்துக் கொண்டும், 70 அகவையைத் தொடும் தம் கணவருடன் இன்றும் சலிக்காமல் உழைத்துக் கொண்டுமிருக்கிறார், இந்த மங்கை. மகள்களுக்கு திருப்தியாக சீர் செய்து திருமணம் செய்து கொடுத்துள்ளதையும் பெருமை பொங்கக் கூறுகிறார். தம் மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது , வாடிக்கையாளர் ஒருவரின் மூலமாக திரைப்பட நடிகை ரேவதி இது போன்று சிரமத்தில் படிப்பவர்களுக்கு உதவி செய்வதாக கேள்விப்பட்டு, அவரை அணுகியபோது ரூபாய் 5000 உதவித் தொகை கொடுத்தது தன் மகளின் கல்விக்கு பயனுள்ள வகையில் அமைந்தது என்பதையும் நினைவுகூர்கிறார். அக்காவின் மகனுக்கும் திருமணம் செய்து வைத்து அவரும் மனைவி குழந்தையுடன், தனி வீட்டில் குடித்தனம் நடத்த, இன்று தாங்கள் மூவரும் அமைதியாக, முதுமை பயமோ, இறுதி நாட்களின் தேவைகளோ என்ற எந்த அச்சமுமின்றி நிம்மதியாக பொழுது போய்க் கொண்டிருக்கிறது என்கிறார் புன்னகையுடன்.

    நான்கு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் ஓயாமல் சுமையுடன் படி ஏறிச் செல்லும்போது சிரமம் இல்லையா என்றால், அதற்கும் அழகாக சிரித்துக் கொண்டே, “சிரமம் இருக்கத்தான் செய்யும். அதைப்பார்த்தால் பொழப்பு நடக்குமா… முடிந்தவரை அப்படியே ஓடிக்கினேதான் இருக்கணும்” என்கிறார்.

    இருதயத்தில் இருந்த கோளாறு என்ன ஆனது? என்று வினவியபோது, “யாருக்குத் தெரியும், ரொம்ப நாளா ஆஸ்பத்திரிக்கே போவலை.. இப்ப ஹோமியோபதிதான் பார்த்துக்கிணு இருக்கேன். கடவுள் புண்ணியத்துல எந்தப் பிரச்சனையும் இல்ல..அப்பப்ப முடியாமப் போனா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாக்கா சரியாப்பூடுது.. என்னாங்க எல்லா கடமையும் முடிச்சாச்சு, இனிமே வாழற ஒவ்வொரு நாளும் போனசுதானே.. அதான் எதைப்பத்தியும் கவலைப் படறதே  இல்லைங்க…” என்கிறார் பூரிப்புடன்.

    வயதாகிவிட்டபடியால் பொட்டி தூக்கி தேய்க்க சிரமமாக இருப்பதால், இன்று கூலிக்கு ஆள் போட்டுக்கொண்டு தொழிலை கவனித்துக் கொள்வதாகச் சொல்லும் இவர்களின் வருமானம் நாளொன்றுக்கு சராசரியாக 1000 ரூபாயாம். அந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பாலானவர்களுடன், பாசமும், நேசமும் கொண்டு குடும்பத்தினர் போலவே பழகிவரும் நாகம்மாவைப் பார்க்கும் வேளையில், இவருடைய தன்னம்பிக்கை, இருதய நோயின் தீவிரத்தைக்க்கூட கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    இனிமேலாவது சற்று ஓய்வெடுக்கலாமே என்று கேட்டபோது, “இப்ப இன்னா  58 தானே ஆவுது, ஓய்வெடுக்குற வயசா இது..? இன்னும் காலம் அதுக்கு நிறைய இருக்கே..” என்கிறார் சர்வ சாதாரணமாக. 70 வயது கணவர் இன்றும் அதே குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பணிக்கு வந்து இயன்றவரை உழைப்பதைக் காணும் மனைவிக்கும் இது போன்ற எண்ணம் தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!

    Share
  • பணவிடை

    மிசிசிப்பி ஆற்றைக் கடந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். அதுகுறித்த மகிழ்ச்சி எப்போதும் உண்டு எனக்கு. நாளொரு வண்ணம் பொழுதொரு மேனி. நேற்று செங்காவி நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இன்று இளநீலங் கொண்டு சலசலச் சிரிப்போடு போய்க் கொண்டிருக்கிறது.

    மிசிசிப்பியை நான் ஒரு கனவு தேவதையாகவும் எட்ட நின்று பார்த்துப் பரவசங்கொள்ளும் தீண்டமுடியாப் பேரழகியாகவும்தான் ஆராதித்து வருகிறேன். சிலிர்த்துக் குலுங்கி நாணம் சிந்த ஒயிலாடும் பெருநதியைப் பார்த்து இரசிக்காதவன் இருந்தென்ன? வாழ்ந்தென்ன??

    தேநீர் குடித்த கையோடு எதையாவது வாயில் போட்டு நாச்சுவையைக் கொல்வானேன்? டீ குடித்த மறுநொடியே கம்பர்கட் தின்பான் முண்டாபனியன் முருகேசன். எழவு, அதற்கு அதைக் குடிக்காமலே இருந்திருக்கலாமே?? டீ குடித்தால், நாவில் எஞ்சியிருக்கும் சுவை தீருமுட்டும் அனுபவிக்க வேண்டும். அடிக்கரும்பின் இனிப்பு, நெல்லியின் பின்சுவை, டீயின் நாச்சுவை, புணர்தலின் ஈற்றின்பம் என எதிலும் அந்த இறுதிக்கணங்கள் அலாதியானவை.

    கடந்த வந்த பின்னரும் ஒரு அரை மணி நேரத்துக்காவது நெஞ்சில் படர்ந்து கொண்டிருக்கும் மிசிசிப்பி ஆற்றின் எழில் வனப்பு. இன்றைக்கு அந்த அசைபோடலைக் கொன்றழித்து விட்டான் பீட்டர்சன்.

    எதையாவது முனைப்பாகச் செய்து கொண்டிருக்கையில், “ரொய்ங்க்” என்று காதில் புகுந்து இம்சித்துவிட்டுப் போகும் கொசு. எனக்கு மிகவும் எரிச்சலூட்டக் கூடியது உண்டென்றால் அது இதுதான்.

    மிசிசிப்பியின் வனப்பின் மிதப்பில் வந்து கொண்டிருந்தவனை அலைபேசியில் அழைத்து, ஆப்பிரிக்க அமெரிக்க ஆங்கிலத்தில் “ரொய்ங்க்” அடித்து விட்டிருக்கிறான் பீட்டர்சன். அலைபேசியைக் கண்டுபிடித்தவன் இரசனை இல்லாத வெற்றுமானிடனாய்த்தான் இருந்திருக்க முடியும். அண்டிய அந்தப் பீடைக்கு மாதாமாதம் சுளையாக நூற்றுப்பத்து டாலர்கள் அழுது தொலைக்க வேண்டி இருக்கிறது. மிசிசிப்பி ஆற்றிலேயே அதையும் விட்டெறிந்து விடலாம். ஆனால் மணிக்கொருதரம் அழைத்துத் திட்டாமல் அவளால் இருக்க முடியாது. தார்க்குச்சியால் விட்டு விட்டுக் குத்து வாங்குவதற்கென்றே சபிக்கப்பட்டவர்கள் கணவன்கள். அதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. எனவேதான் இந்த அலைபேசியையும் கூடவே வைத்துச் சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.

    ஒன்றும் புரியவில்லை. எனது அறையில் ஆறாயிரம் டாலர்கள் பணம் வைத்திருக்கிறானாம். அதிலிருந்து, மாதம் ஒன்றுக்கு முந்நூறு வீதம் மால்டோவாவுக்கு நான் அனுப்பி வைக்க வேண்டுமாம். இதென்ன பெரிய வில்லங்கமாக இருக்கிறது? நான் எதற்காக இதைச் செய்ய வேண்டும்??

    முதலில் எதிர்ப்பட்டவள் டீனா. தரக்கட்டுப்பாட்டு மேலாளர். முகம் கோணி, மூக்கு உறிஞ்சி, கழுத்துச் சிவந்து நான் பார்த்ததில்லை. முறுவலிப்பை வாழ்நாள் குத்தகைக்கு எடுத்திருக்கிறவள் இவள். அவள் பேசுகிறாளோ இல்லையோ, அவளுடைய குதிரைவால் சடை ஆடியாடிப் பேசும். இடைக்கிடை சிரிக்கத் தவறுவதும் இல்லை. அவ்வப்போது அலுங்கும் ஒத்த வயதுடைய அவ்விரு முலாம்பழக் கொங்கைகளைப் பார்க்க உள்மனச்சிறுவன் வேட்கையுறுவதும் உண்டு.

    ”டியர் ஹனீ! உனக்கு விசயந் தெரியுமா?”, எதோ மணமுறிவு பெற்றுக் கொண்டு போனவன் மீண்டும் தன்னிடமே வந்து விட்டதைப் போன்ற தொனியில் மிகவும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கிறாள்.

    “என்ன? நான் இப்பத்தான உள்ள வர்றேன்?! என்ன விசயம்??”

    “பீட்டர்சன் வேலையிலிருந்து நின்னுட்டானாம்! இப்பத்தான் சொல்லிட்டுக் கிளம்பினான்!”

    ”அடப்பாவி! அவன் என்கிட்ட இந்த விபரத்தைச் சொல்லவே இல்லை. இப்பத்தானே அலுவலக எண்ணிலிருந்து என்னை அழைச்சிப் பேசினான். நான் கார் ஓட்டிட்டு இருந்ததால, சரியாக் கவனிச்சுக் கேட்க முடியலை! இரு டீனா, நான் என்னோட அறைக்குப் போயிட்டு வர்றேன்!”

    மால்டோவா நாட்டில் இருக்கும் முகவரி ஒன்றை ஒட்டுநறுக்கில் எழுதி, அதை என் கணினித் திரையின் மீது ஒட்டி வைத்திருக்கிறான். சொன்னபடியே பணத்தையும் வைத்துவிட்டுப் போயிருக்கிறான். என்ன இவன்? தொடர்பு எண் கூடக் கொடுக்காமல் போயிருக்கிறான்.

    பீட்டர்சன். அவனின்றி எங்கள் அலுவலகத்திலிருக்கும் வீணாய்ப்போன அட்மின் ஆண்ட்டி கெல்லியின் பிரிண்ட்டர் கூட வேலை செய்யாதே? எது ஒன்றுக்கும் அவனை நாடித்தான் வெகுபேருடைய வேலை நகர்ந்து கொண்டிருக்கிறது இவ்வளவு காலமும். ஓடியோடி உழைப்பானவன். அலுவலகப் பணிகள் என்றில்லை. தனிப்பட்ட வேலைகள் சொன்னாலும் அதையொரு பேறாக எண்ணிச் செய்வான். ஒட்டு மொத்த அலுவலகத்துக்கும் அவனைப் பிடிக்கும். அவனை வீழ்த்த எண்ணிய முதிர் கன்னிகளும் உண்டு இங்கு. ஆண்மையும் சொக்குத்தன்மையும் சரிக்கு சரியாகக் கலந்த புதிர் மைந்தன் அவன்.

    மெம்ஃபிசு நகரத்தில் வசிக்கிறான். அப்பாவும் அம்மாவும் அமெரிக்காவில் இன்னமும் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆனால் இன்னார்தான் தன்னுடைய அம்மா அப்பாவென அவனுக்குத் தெரியாது.

    என்னைப் பெற்ற அம்மாவுக்கே என்னுடைய அப்பன் யாரென்று தெரிந்திருக்கவில்லை என்று தன் பாட்டி சொல்லியிருக்கிறாளென வெகுசாதாரணமாகச் சொல்வான். எதையும் நினைத்துக் கொஞ்சம் கூட அகங்கலாய்த்ததே இல்லை. எப்போதும் எழுச்சியாகவும் குதூகலமாகவுமே இருக்கப் பழக்கப்பட்டவன்.

    இரண்டு வயதுச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்த இலையுதிர்காலப் பொழுதொன்றில், ”நீ என் அம்மாவுக்குப் பிள்ளையாயிரு. ஏனென்றால் நம்மிருவருடைய அப்பாவும் ஒருவராகவே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது!” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள் அம்மா. போனவள் தன்போக்கில் நினைத்தவர்களோடு வாழத்துவங்கி விட்டாள் என்பதும் பாட்டி சொல்லித்தான் தெரியும் பீட்டர்சனுக்கு.

    பள்ளிக்கூடம் செல்வதெல்லாம் வேண்டாத வேலையென நினைக்கும் வளவு ஒன்றில் வளர்ந்தவனுக்கு ஆறுதலாக இருப்பது அவனுடைய சோசியல் செக்யூரிட்டி எண்ணும் பிறந்தநாள் சான்றிதழும்தான். அவைதான் என்னுடைய மாபெரும் சொத்து என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான்.

    பாட்டி கல்லறை கண்ட பின், அவளது இறுதிக் காரியங்களைச் செய்தவர்களுக்கே அந்த சோளக்கொல்லை வீட்டையும் விட்டுக் கொடுத்தான். விட்டுக் கொடுத்த சில நாட்களில், குடிபெயர்பவர்களுக்கான இடமாற்றுச் சேவை நிறுவனத்தில் பாரந்தூக்கும் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தான் பீட்டர்சன்.

    எந்த வனத்திற்குச் சென்றாலும் குயிலோடு குயிலும் காகத்தோடு காகமும்தான் சேருகிறது. ஏரோ வேன்லைன் நிறுவனத்தின் வேலையிடத்தில் இவனைப் போலவே இன்னொருவனும். அவனது நிலையின் காரணமாய் எழுந்த கழிவிரக்கமே பீட்டர்சனையும் அவனையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சேர்ந்திருக்கக் கூடும். அவன் பெயர் லேபான். அவனுடைய மரபணுக்கள் க்யூபா நாட்டு மாந்தப் பண்புகளைக் கொண்டதாய் இருக்கக் கூடும்.

    சிறுவர் சிறைக்கு லேபான் எப்படி வந்து சேர்ந்தான் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. நினைவு தெரிந்த நாளிலிருந்தே சிகாகோ சிறைதான் அவனுக்குத் தாய்வீடு. இன்ன தேதியில் பிறந்தோம், இன்னாருக்குப் பிறந்தோம் என்ற எதுவும் தனக்கு இல்லாததே தன்னுடைய சுதந்திரத்திற்கான முகாந்திரம் என நினைப்பவன் லேபான்.

    எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடியவன். ஏரோ வேன்லைன் நிறுவனத்திற்குக் கூட அன்றைய கைச்செலவுக்காகத்தான் பாரந்தூக்க வந்திருந்தான். வந்த இடத்தில் பீட்டர்சனிடம் அகப்பட்டு விட்டான்.

    இருவருமாகச் சேர்ந்தே இருந்தார்கள். வேன்லைன் நிறுவன வண்டிகளில் ஊர் ஊராகப் போவதும் வருவதுமாய் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். சிகாகோவின் புறநகர்ப்பகுதியான ஷாம்பர்க்கில் உள்ள ஒரு வீட்டில் சாமான்களை இறக்கிவிட்டு அட்லாண்டா புறப்பட்டுப் போனார்கள். போகும் வழியில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்து விட்டது.

    நடப்பதெல்லாம் சொல்லிவிட்டா நடக்கிறது? அது அது  அதனதன்பாட்டில் நடந்து கொண்டுதானிருக்கிறது. தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வண்டிக்குள்ளேயே தூங்கலாமென்றான் பீட்டர்சன். சரி வராது; சிறுவிடுதிக்குத்தான் போயாக வேண்டுமென்றான் லேபான். விட்டுக் கொடுத்துப் போவதெனக்கருதி ஒத்துக்கொண்டான் பீட்டர்சன்.

    நீ வண்டியிலேயே இரு; நான் அறையிருக்கிறதாவெனக் கேட்டு வருகிறேன் எனச் சொல்லி விடுதிக்குப் போனான் பீட்டர்சன். அங்குதான் அவள் அழுது கொண்டிருந்தாள். காற்றுநகரம் என அழைக்கப்படும் சிகாகோ நகரின் வளிமண்டலத்தில் குளிர்காற்று  வளைத்தடித்துக் கொண்டிருக்கிறது. சரியானதொரு உடுப்பில்லாமல் அங்கே அழுது கொண்டிருந்தாள் அவள். இவனைக் கண்டதும் ஓட முடியாமல் ஓடி வருகிறாள்.

    ரோட்டோரப்பட்சியும் அல்ல. கண் கிரங்கப் பார்த்து, முலை காட்டி, தொடை வெட்டியபடி அவர்கள் அணுகும் விதமே தனியாக இருக்கும். ஆனால் இவள் அப்படிக் காட்சியளிக்கவில்லை. இவளை லேபான் பார்த்தால் அனுபவிக்கத் துடிப்பான். திரும்பிப் போய் விடுவது என்ற எண்ணத்தில் திரும்பிச் செல்லத் துவங்கினான்.

    ஓக் மரத்திலிருந்து பறந்து வந்த பனித்தூவல் இவனது முகத்தில் ’பளிச்’ என்று இறங்கியது. விதி யாரை விட்டது? அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டு தலைநிமிர்கையில், வந்து நின்றிருந்தாள் அவள்.

    கண்கள் சிவந்திருந்தன. பனிக்காற்றில் முகமும் கழுத்தும் கைகளும் உலர்ந்து வற்றிய செவ்வாழைத் தண்டு போல இருந்தது. அந்த அலங்கோலத்திலும் தேவதை போல இருந்தாள். சித்திரம் போல அசையாது அப்படியே நிற்கிறாள். பேசுவதற்கு அவளால் முடியவில்லை. அப்படியே நிலைகுலைந்து கீழே இருந்த பனிக்களிம்புச் சகதியில் ’தொத்’தென விழுந்தாள்.

    அலாக்காகத் தூக்கியபடி தான் ஓட்டிக் கொண்டு வந்த வண்டிக்கே வந்தான் பீட்டர்சன். லேபானுக்கு வியப்பாய் இருந்தது. பீட்டர்சன் அவ்வளவு சுலுவாக இந்த வேலையில் இறங்கமாட்டான் என்பது அவனுக்குத் தெரியும்.

    உள்ளே அவளைக் கிடத்தியதும்தான் லேபானுக்கு நிலைமை புரிந்தது. தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொண்டு அவள் முகத்தில் தெளித்தான் லேபான். இரு கைகளைப் பற்றித் தோய்த்து வெப்பமூட்டினான் பீட்டர்சன்.

    கொஞ்சம் கொஞ்சமாக சீர்நிலைக்கு வந்தாள் வெண்முத்துச் சிங்காரி. சாப்பிடுவதற்கு உருளைக்கிழங்கு நொறுவலைக் கொடுத்தான் லேபான். கீழிறங்கிப் போய் சூடாக மோக்கா வாங்கி வந்தான் பீட்டர்சன்.

    வாய்ப்பே இல்லாத முகம். முகட்டு மேட்டில் பொதிந்திருக்கும் பனி போன்ற உடல். வாளிப்பாய் இருக்கிறது இருக்க வேண்டிய எல்லாமும். அதரங்கள் கோவைப்பழத்தை தோற்கடித்து அவமானப்படுத்தின. மைபூசாமல் வதங்கிய இந்த நிலையிலும் வசீகரிக்கிறது கண்கள். என்ன பேசினாலும் எதோ ஒரு சொல்தான் ஆங்கிலத்தில் வருகிறது. இனியும் இங்கிருக்க வேண்டாமென நினைத்து வண்டியைக் கிளப்பினார்கள் இருவருமாகச் சேர்ந்து.

    பத்து மைல்கள் தள்ளிப் போய் சிற்றுண்டிச் சாலையொன்றுக்கு அவளையும் அழைத்துப் போனார்கள். சிறுகச் சிறுக உண்டு பசியாற்றினாள் அவள். அவள் உண்பதை இவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்தார்கள். அவளைக் கண்களால் தின்றே பசியாற்றிக் கொண்டார்கள் இருவரும்.

    பல மணித்தியால விருந்தோம்பலுக்குப் பின்னால் அவளுக்கான பின்புலமும் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெரியலாயிற்று. அவளொரு மோல்டோவாப் பைங்கிளி. பெயர் ஷெல்ஃபியா. மோல்டோவா நாட்டில் இருக்கிற கோசேனி எனும் சிற்றூரைச் சார்ந்தவள். வீட்டில் இவள்தான் மூத்தவள். இவளுக்கு ஐந்து தங்கைகளும் ஒரு தம்பியும்.

    நான்கு மாத டூரிஸ்ட் விசாவில் கனடாவிற்கு முகவர் ஒருவனது ஏற்பாட்டின் பேரில் முலையாட வந்திருக்கிறாள். முலையாடுவது என்பது ஒரு பேருக்குத்தான். மற்றபடி உரிந்த கோழியாய் நாடக நாட்டியம், கொக்கோகக் கலைகள் எல்லாமும் மேற்கொண்டு களிப்பூட்ட வேண்டும்.

    சரக்கு வண்டியொன்றிலேற்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டு இவளைக் கைகழுவி விட்டான் அழைத்து வந்தவன். நான்கு மாத வருமானம், கடவுச்சீட்டு முதலான எல்லா உடைமைகளையும் இழந்தபடி இப்போது இவர்களிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறாள் ஷெல்ஃபியா.

    அவளை ஓரிடத்தில் எங்காவது தங்க வைக்க வேண்டும். அவர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் மெம்ஃபிசுக்கே வந்தான் பீட்டர்சன். தேவாலயப் பெரியவர் ஒருவரின் உதவியின் பேரில் வாடகைக்கு வீடு பிடித்துத் தங்கினர் மூவரும். இதில் பீட்டர்சனுக்கு மட்டுமே வேலை தேடத் தேவையான சோசியல் செக்யூரிட்டி எண், பிறந்தநாள் சான்றிதழ் இருக்கிறது. மற்ற இருவருமே, சட்டத்துக்குப் புறம்பாகத்தான் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

    உள்ளூர் வேலை தேடித் திரியும் போதுதான், துப்புரவுப் பணியாளர் வேலைக்காக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தான் பீட்டர்சன்.

    பெண் என்பவள் வாழ்க்கையில் வந்து விட்டால் எல்லாமும் நிகழ்கிறது.

    கடந்த நான்காண்டுகளாக எங்களில் ஒருவனாகத்தான் இருந்து வருகிறான் பீட்டர்சன். மிகவும் நேர்மையானவன். மதிய உணவு இடைவேளைகளில் எங்களுக்கு உணவுப் பண்டங்கள் வாங்கி வருவான். எங்கள் கார்களுக்கு ஏதேனும் பராமரிப்பு வேலையிருப்பின், அவனிடமே கொடுத்தனுப்பிச் செய்து கொள்வோம். விடுமுறை நாட்களில் தத்தம் வீட்டு வேலைகளுக்கும் கூட வேண்டிய உதவியை அவனிடமிருந்து வெகு இயல்பாகக் கேட்டுப் பெறுவோம் நாங்கள்.

    பீட்டர்சன் எங்கள் அலுவலகத்தில் வேலைபார்க்க, லேபான் அவனது பாணியில் சிறுதொண்டு வேலைகளைச் செய்து கைக்காசு பார்த்து வந்தான். பெரிய பெரிய கிடங்குகளுக்கு பாரந்தூக்கும் வேலைக்குப் போவான்.  பாரந்தூக்கி வேலை பார்த்து வரும் வருமானத்தைக் காட்டிலும் களவாடிக் கொண்டு வரும் பொருட்களை விற்றுப் பெரும் பணம் பார்த்து விடுவான். அவ்வப்போது சிறையிலும் அடைபட்டுக் கொள்வான். இப்படியாக வெளியே வருவதும், உள்ளே செல்வதுமாய் இருப்பான் லேபான்.

    லேபான் கொண்டு வரும் பொருட்களை ஈபே இணையதளத்தினூடாக விற்றுக் காசாக்குவது ஷெல்ஃபியாவின் வேலை. எல்லாவற்றுக்கும் ஆதாரம் பீட்டர்சனின் சோசியல் செக்யூரிட்டி எண்தான். அது இல்லாவிட்டால், வங்கிக் கணக்கு, கடனட்டை என எதுவும் வைத்திருக்க முடியாது இவர்களால்.

    பீட்டர்சன் வெளிப்படையாகவே சொல்வான். ”இனி எங்களால் ஷெல்ஃபியை விட்டு இருக்க முடியாது. நானும் லேபானும் அவளைப் பகிர்ந்து கொள்கிறோம். அவளும் எங்கள் இருவரையும் முழுமையாக நேசிக்கிறாள். எங்களது எதிர்காலமே அவள்தான் இனி!” என வெள்ளை மனத்தோடும் புளகாங்கிதத்தோடும் சொல்வான். நான்கு, ஐந்து முறையாவது என்னிடம் சொல்லியிருப்பான். இணங்கிய ஒன்றிப்பு ஈடேறுகிற இடத்தில் வக்கிரத்துக்கும் விரசத்துக்கும் வன்முறைக்கும் இடமில்லை.

    மெம்ஃபிசு நகரில் மிசிசிப்பி பேராறு ஓடுகிறது. அவ்வப்போது பனி பெய்கிறது. பூமி எல்லாரையும் போல இவர்களையும் அரவணைக்கிறது. வானம் வாழ்த்துகிறது. சரியான கல்வி கிடையாது. ஆனாலும் அவர்களுக்குள்ளான புரிதல் உண்டு. ஷெல்ஃபியின் குடும்பத்தாருக்கு அவள் மாதாமாதம் பணம் அனுப்பி வைக்கிறாள். இந்த ஆடவர் இருவரே அவளுக்கான தேவதூதன்கள்.

    மோல்டோவாவை விட்டுக் கிளம்பு முன்னர் குலதேவதையிடம் வேண்டச் சென்றாளாம் ஷெல்ஃபி. அப்போது அவர்களது குலவழக்கப்படி முட்டைக்கோசு ஒன்றை எடுத்து கோவில் தளத்தில் உருட்டியிருக்கிறாள். வலது புறமாகச் சென்றால் வாழ்வில் ஏற்றம் என்பது மரபாம். எனக்கும் வலதுபுறமாகத்தான் உருண்டோடியது. அது போலவே எனக்கு நல்லதே நடந்திருக்கிறது எனச் சொல்லி மகிழ்வாளாம் அவள்.

    கொஞ்சநாட்களாகவே அவ்வப்போது உடம்புக்கு சரியில்லாமல் வருகிறதாம் அவளுக்கு. கடை மருந்துகளைக் கொடுத்தே சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களிடம் அவ்வப்போது சொல்வான். ஆனால் இப்படியொரு ஏற்பாட்டினைச் செய்திருப்பதாகக் கடைசிவரை சொல்லவே இல்லை.

    பீட்டர்சனுக்கு சிறையிலிருந்த அனுபவம் உண்டு. அப்போது நண்பனானவன்தான் கார்லோசு. இவனொரு மெக்சிகன். கருந்துவக்கு, தூள், மெர்சுவானாத்தழை போன்றவற்றின் ஏகபோக முகவர் இவன். இவனுக்கான கட்டமைப்பு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா என எல்லை தாண்டியதாகும்.

    அமெரிக்காவில் துப்பாக்கி(துவக்கு) வாங்குவதென்பது கடைவீதிக்குப் போய் செருப்பு வாங்குவதற்கு ஒப்பானதாகும். கடைச்செருப்பு வாங்க வேண்டுமென்றால் கூடுதலாகச் செலவு ஆகும். கார்லோசு போன்ற ஆட்களைப் பிடித்தால் மலிவான விலையில் தெருச்செருப்பு வாங்கலாம். ஐந்து டாலரிலிருந்து ஐயாயிரம் டாலர்கள் வரையிலுமான இந்த கள்ளச்செருப்புகளை வகைவகையாக வாங்கிக் கொள்ளலாம். வாங்கி வைத்துக் கொண்டு, இவனை அவன் தீர்த்துக் கட்டலாம். அவனை இவன் தீர்த்துக் கட்டலாம். தூள் பாவிப்பதில் பாடசாலைகளுக்குத்தான் முதலிடமாம். மாணவர்கள் படிப்பதற்குப் போகிறார்களா, தூளுறிஞ்சி சொக்குசொகம் காணப் போகிறார்களா தெரியவில்லை. தூள் விற்பவர்கள் பிஎம்டபுள்யூ, லெக்சசு, பென்சு  போன்ற உயர்தரக் கார்களில்தான் வந்து போகிறார்கள். மர்சுவானாத் தழைக்கு சில மாகாணங்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டன. மற்ற மாகாணங்களுக்கு, மெக்சிகோ இருக்க கவலையேன்? கார்லோசுகளும், மார்ட்டினெசுகளும் வேண்டிய அளவு கொண்டு வந்து கொடுப்பார்கள். பீடி போல ஊதித்தள்ளலாம். பிஸ்கெட், பாண் போன்ற பண்டங்களிலும் போட்டு உண்ணலாம். உலகத்தை மறந்து உல்லாசமாய் இருக்கலாம். அதே உல்லாசத்தோடு பரலோகத்துக்கும் கதியாய்ச் சென்று சேரலாம்.

    கார்லோசின் உதவியோடு மெக்சிகோவுக்குச் சென்றுவிட்டால், ஷெல்ஃபிக்கான மருத்துவம் பெறுவதில் எவ்விதச் சிக்கலும் இல்லையாம். அதுதான் ஹூசுடன் அருகிலிருக்கும் நுவலார்டோ காட்டுவழிச் சிறுபாதையினூடாக மெக்சிகோவுக்குச் சென்று விட்டார்கள். குழந்தைப் பிறப்புக்கான பேறு கால மருத்துவத்திற்காகக் கூட ஷெல்ஃபியை அவர்கள் அழைத்துச் சென்றிருக்கக் கூடுமென்கிறான் நெட்டைக்கொக்கு ஜான் லொஷன்ஸ்கி.

    பீட்டர்சன் எங்கள் அலுவலகத்தை விட்டுச் சென்ற பின்னர், இங்கு எல்லாமே தலைகீழாக மாறிப்போய் விட்டது. எனினும், அவன் சொன்னபடியே  மால்டோவா முகவரிக்கு வெஸ்டர்ன்யூனியன் மூலமாக பணவிடை(money order) அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த மாதம் இன்னும் அனுப்பவில்லை.

    நாங்கள் வேலைபார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தைப் பிறிதொரு நிறுவனம் விலைக்கு வாங்கிக் கொண்டபடியால், நிறுவனத்தின் மெம்ஃபிசு நகர அலுவலகம் மூடப்பட்டு விட்டது. பெரும்பாலானோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். நாங்கள் மிகச் சொற்பமானோர் மட்டுமே வேறு வேறு அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டு பணியில் இருக்கிறோம்.

    இனி நான் பீட்டர்சனைச் சந்திப்பேனா தெரியாது. அவன் குறித்த எந்தத் தகவலும் என்னிடத்தில் இல்லை. என்னைப்பற்றிய தகவலும் அவனிடத்தில் இருக்குமா என்பது ஐயத்திற்குரியதே. உயிர்த்த நொடியிலேயே சாவுக்கான பயணமும் துவங்கி விடுகிறது. அத்தகைய பயணத்தில் பலரைச் சந்திக்கிறோம். அதற்கான நேரம் வரும் போது பயணத்தின் இடையிலேயே அவரவரிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள நேரிடுகிறது.

    ஊரே அடங்கி விட்டது. உறைபனியின் கனம் தாங்காமல் ஒடிந்து சாளர ஆடியின் மீது விழும் மரக்கிளையின் உராய்வொலி  அதிர்ந்து கேட்கிறது. கோலியர்வில் குளத்தில் கனடியக்கீச்சுகளின் சத்தம் அவ்வப்போது. இவ்வளவு பெரிய பேராறு, மிசிசிப்பி பக்கதிலேயே ஓடுகிறது. ஆனாலும் அதற்கான அறிகுறி ஏதுமில்லை.

    சத்தமின்றி கள்ளப்பூனை போல அடுத்திருக்கும் அறைக்குப் போனேன். குழந்தைகள் நன்றாய்த் தூங்குகிறார்கள். மீண்டும் வந்து படுக்கையில் மிகக் கவனத்துடன் படுத்தேன். அவள் கண் விழித்தால் அவ்வளவுதான். ஏன் இன்னமும் தூங்காமல் உயிரை வாங்குகிறீர்கள் எனச் சாமியாடுவாள்.

    எழவு தூக்கமும் வரவே மாட்டேன் என்கிறது. மீண்டும் மீண்டும் அமேசான் நினைவே வந்து படுத்துகிறது. அதனால்தான் எனக்கு இப்படி நடக்கிறது. தீர்மானமாய் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். மால்டோவாவுக்கு இனியும் பணம் அனுப்பித்தான் வைக்க வேண்டுமா என நினைத்து அனுப்பாமல் இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. அருவருப்பாய் இருக்கிறது.  குற்றம்தான். அதுதான் அமேசானில் போட்ட காசு கரையத் துவங்கிவிட்டது. விடிந்ததும் அமேசான் பங்குகளை விற்றுவிட வேண்டும். மறுபக்கம் புரண்டு படுத்தால், கை உளைகிறது.

    வெஸ்டர்ன் யூனியன் கடை இருப்பது கேஷ் ஸ்டேசனில்தான். அது இரவிலும் திறந்திருக்கும். இந்த மாதம், அடுத்த மாதம், இரண்டு தவணைகளையும் கட்டிவிட்டு வந்தாலென்ன? கேள்விகள் மனத்தையும் மண்டையையும் குடைந்தெடுக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோர்டோவா கேஷ் ஸ்டேசனில் நடந்த துப்பாக்கி விளையாட்டுக்கு நான்கு காவு விழுந்ததாம். ஆடு காவு கொடுத்தலையும், கோழி காவு கொடுத்தலையும் மனிதன் இரசிக்கிறான். மனித காவுகளை யார் இரசிக்கிறார்கள்? மிகவும் முக்கியம். கண்ட கண்ட கேள்விகள் சுயம்புகளாக வந்து துளைத்துப் படுத்துகின்றன. கைச்செலவுக்குக் காசு இல்லாத நேரத்தில் வந்து, பரிகாரம் பனிரெண்டு செய்யணும் என்பானாம் சாமக்கோடாங்கி.

    விருட்டென்று எழுந்து வெளியே வந்தாள்.

    ”என்ன இது? இந்த நேரத்துல எங்க போறீங்க??”

    “வயிறு ரொம்ப வலிக்குது. வயிறு கட்டிகிச்சு போலத் தெரியுது.  வால்கீரீன்சுல மலமிளக்கி, அதான் அந்த கிளிசரின் ஸ்டிக்ஸ் வாங்கிட்டு வரலாம்னு”

    “இந்த நேரத்துலயா? அதெல்லாம் வேண்டாம். டீ போட்டுக் குடுக்குறேன்.  சித்த நேரத்துல வந்திடும்!”

    “இல்ல; போய் வாங்கிட்டே வந்துடுறேன். ப்ளீஸ்டா கண்ணம்மா!!”

    பனித்தூவல் அறவே நின்றிருந்தது. வானம் யாருக்கும் வஞ்சனை செய்வதில்லை. தன் எல்லைகளை முழுக்கத் திறந்தே விட்டிருக்கிறது. யாரிடமும் கட்டணமேதும் வாங்காமல் அதன் போக்கில் வீசிக்கொண்டிருந்தது காற்று. தன்னுள் இருக்கும் மினுமினுப்புகளை மின்னித் தீர்ப்பதில் யார் முதல் என்பதில் போட்டி போட்டிக் கொண்டிருந்தன சகல விண்மீன்களும். இப்போது கேட்கிறது ஓய்வில்லா மிசிசிப்பியின் மெல்லொலி. நெஞ்சு நிமிர்த்தி சட்டைப்பைக்குள் கையை விட்டுத் துழாவியெடுத்துப் பார்க்கிறேன். இளக்காரக் குறும்புடன் செல்லமாய்ச் சிரிக்கிறது மால்டோவா நாட்டின் கோசேனி.

     

    Share