திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன?

4

தேமொழி

உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவும் இயற்கையில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  அரளிச்செடி ஆலமரம் போல உயரமாக வளருவதில்லை. பூனையும் யானையின் அளவுக்குப் பெரியதாக வளருவதில்லை.  இதன் காரணத்தை சிறு வயதிலேயே நாம் அறிந்து கொள்ள விரும்பியிருப்போம்.  நம் பெற்றோரை நாம் கேட்டு நச்சரித்த கேள்விகளில் இது ஒன்றாகவும் இருக்கலாம்.

ஆன்மீக வழியில் வாழ்க்கையைப் பார்ப்பவர்களுக்கு இக்கேள்விக்கு விடை சுலபம். இதற்குக் காரணம் இறவைனின் விருப்பம், இறைவன் படைத்தபடி உலகம் இயங்குகிறது, அதில் வாழும் உயிரினங்களும் இயங்குகின்றன என்று விளக்குவார்கள். ஆனால் அறிவியல் அறிஞர்கள் இதற்கும் மேலான விளக்கத்தைத் தேடி ஆராய்வார்கள், இந்த ஆர்வம் அவர்கள் இயல்பு. உயிரியல் (biology), சூழலியல் (ecology),  பரிணாமம் (evolution) போன்ற துறைகளின் அறிவியல் அறிஞர்கள் உயிரினங்களின் வளர்ச்சியின் அளவு, விலங்கினங்களின் கூட்டத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை என இவையாவற்றையும் ஆராய்ந்து அவற்றை விளக்கும் கோட்பாடுகளை உருவாக்குவார்கள். மேலும் அதிக அறிவியல் தகவல்கள் தெரியத் தெரிய, விளக்கம் தரும் இக்கோட்பாடுகளும் இவர்களால் மாற்றியமைக்கப் படும். ஆனால் காரணம் அறிய விரும்பும் ஆராய்ச்சி மட்டும் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.

அந்நாள் அறிவியல் அறிஞர் ‘சார்லஸ் டார்வின்’ (Charles Darwin), தற்கால அறிவியல் அறிஞர்களான ‘டெட் கேஸ்’ (Ted Case), ‘ஜான் டைலெர் போனெர்’ (John Tyler Bonner) போன்றவர்கள் உயிரினங்களின் வளர்ச்சி பற்றி  ஆராயந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.  ஒரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவை நிர்ணயிப்பது எது என்பதைத் தெரிந்து கொள்ள உலகிலேயே மிகப் பெரிய உயிரினமான நீலத்திங்கிலம் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டு அதன் மூலம் இக்கேள்விக்கு விடை காண முயல்வோம்.

 

புவியினை வாழுமிடமாகக் கொண்ட உயிரினங்களில், அதாவது இதுவரை புவியின் வரலாற்றில் தோன்றி அழிந்த மற்றும் இன்றும் வாழும் உயிரினங்களைக் கணக்கில் கொண்டால், திமிங்கிலங்கள் தான் அளவில் பெரியவை.  உலகின் மிகப் பெரிய விலங்கினங்களைப் பட்டியலிட்டால், பட்டியலில் தரவரிசைப்படி வரும் முதல் பத்து விலங்குகளுமே வெவ்வேறு வகையான திமிங்கிலங்கள்தான். நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கான யானையைவிடப் பலமடங்குப் பெரியவை திமிங்கிலங்கள். இந்த திமிங்கிலங்களிலும் நீலத்திமிங்கிலமே மிகப் பெரியது.

பெருங்கடல்களில் வாழும் நீர்வாழ் விலங்கான திமிங்கிலம் முன்னொரு காலத்தில் நிலத்தில் வாழ்ந்ததாகவும், ஏதோ சில சுற்றுச்சூழல் காரணங்களினால் கடலுக்கு இடம் பெயர்ந்ததாகவும், அத்துடன் பரிணாம வளர்ச்சியின் காரணமாக நீரில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளைப் பெற்றிருப்பதாகவும் அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். எனவே குட்டியீன்று பாலூட்டும் பாலூட்டி வகையான திமிங்கிலங்களின் தோற்றம் நீர்வாழ்கைக் கேற்ற தகவமைப்புகளைப் பெற்று மீன்கள் போன்று தோன்றுகின்றன. ஆனால் மீன் போன்ற தோற்றமளித்தாலும் திமிங்கிலங்கள் மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல.

மற்ற பாலூட்டிகளைப் போலவே உடல் உறுப்புகள் கொண்டவை நீலத்திமிங்கிலங்கள். இதய அமைப்பு, நுரையீரல்கள் வழி சுவாசிப்பது என யாவும் பாலூட்டிகள் போன்றே இவற்றிற்கு அமைந்திருக்கிறது.  மீன்களைப்போல செவுள்களால்  நீலத்திமிங்கிலங்கள் சுவாசிப்பதில்லை.   நீலத்திமிங்கிலங்கள் தலையில் உள்ள துவாரங்கள் வழியே காற்றை உள்ளிழுத்து சேமித்து வைத்துக்கொள்ளும். உணவிற்காகக் கடலின் ஆழம் வரை சென்றாலும் 20 நிமிடங்கள் வரை கூட நீலத்திமிங்கிலங்களால் தாக்குப் பிடிக்க முடியும்.  மீண்டும் காற்றை வெளியேற்ற நீர்பரப்பிற்கு வந்து துவாரங்கள் வழியே கற்றை வெளியேற்றும் பொழுது 30 அடிகள் உயரம் வரை ஒரு நீர் ஊற்றுபோல நீரைப் பீய்ச்சி அடிக்கும்.

இந்த நீலத்திமிங்கிலங்கள் (Balaenoptera musculus, விலங்கியல் இனப் பெயர்), பாலூட்டிகள் வகுப்பு (Class: Mammalia), கடற்பாலூட்டி வரிசை (Order: Cetacea) என வகைப்படுத்தப் படுகிறது. நீலத்திமிங்கிலம் ஒரு ஊனுண்ணி/விலங்குண்ணி (carnivore). இது உண்பது ஓரிரு சென்டிமீட்டர் நீளம் அளவேயுள்ள கூனிப்பொடி (Krill) என்னும் அளவில் மிகச் சிறிய இறால் வகை கணுக்காலி (tiny Crustaceans, a group of Arthropods). சராசரியாக 90 ஆண்டுகள் வரை உயிர்வாழும் ஒரு நீலத்திமிங்கிலத்தின் நீளம் ஏறத்தாழ 100 அடிகள் (up to 33 meters in length). இதன் உடல் எடையோ 200 டன்கள் வரை இருக்கும்.  அதாவது ஒரு நீலத்திமிங்கிலத்தின் எடை 40 யானைகளின் மொத்த உடல் எடைக்குச் சமம். இரு மிகப் பெரிய டயனோசாரின் உடல் எடைக்குச் சமம். மனித உடலின் நீளத்துடனும், யானையின் உடல் எடையுடனும் ஒப்பிடப்பட்ட படங்கள் விளக்கத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது.

நீலத்திமிங்கிலத்தின் நாக்கின் பரப்பளவு 50  பேர் அமரும் அளவு பெரியது. அதன் நாக்கின் எடை ஒரு யானையின் எடையளவு ஆகும். அதன் இதயத்தின் அளவு ஒரு சிறிய ஊர்தியின் (car) அளவும், அதன் குருதி நாளங்கள் ஒருசிறிய மனிதன் அதன் வழியே நீந்திச் செல்லும் அளவு பெரியவை. ஆனால் அதன் உணவுக்குழாய் (oesophagus) மிகவும் சிறியது. ஒரு சிறிய ரொட்டித் துண்டும் அதன்வழியாகச் செல்லமுடியாமல் சிக்கிக் கொள்ளும் அளவு சிறியது.  நீலத்திமிங்கிலத்தின் வாய் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனால் பெரிய விலங்குகளை உண்ண முடியாது. உருவில் மிகச்சிறிய கூனிப்பொடி இறால்களையும், அதே அளவுள்ள மிகச் சிறிய மீன்களை மட்டுமே உண்ணமுடியும்.  ஆனால் இக்குறையைத் தீர்க்கும் வண்ணம் அதன் உணவு உண்ணும் முறை தகவமைந்துள்ளது.

 

நீலத்திமிங்கிலம் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன?
நீலத்திமிங்கிலம் உணவு உண்ணும் முறை பெரிதும் வேறுபட்டது.  இதன் வாயில் ஒரு மீட்டர் அகலமுள்ள பலீன் தகடுகள் (baleen plates) 30 இருக்கிறது.  இவை சீப்பு போன்ற உருவத்தில் பல சிறிய இழைகளைக் கொண்டிருக்கும்.  இதன் உணவான கூனிப்பொடி இறால்கள் கூட்டம் கூட்டமாக கடலில் நீந்தும்.  இக்கூட்டத்தை நெருங்கியதும் நீலத்திமிங்கிலம் வாயை மிக அகலமாகத் திறந்து நீருடன் கூனிப்பொடி இறால்களை விழுங்கும் (lunge feeding behavior).  இவ்வாறு விழுங்கும் உணவும் நீரும் நீலத்திமிங்கிலத்தின் உடல் எடையைவிட 125% அதிகமாக இருக்கும்.  இவ்வாறு விழுங்குவதற்கு ஏதுவாக அதன் வாயும் கீழ்தாடையும் மிக அகலமாகத் திறக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பிறகு விழுங்கிய நீரை பலீன் தகடுகள் வழியாகத் துப்பும். நாவை மேல்நோக்கி அழுத்தி நீரை வெளியேற்றும்.  அப்பொழுது பலீன் தகடுகளின் இழைகளால் கூனிப்பொடி இறால்கள் சலிக்கப் பட்டு அதன் வாய்க்குள் சிக்கி விடும்.  இவற்றை அப்படியே நீலத்திமிங்கிலம் விழுங்கி விடும்.

ஒரு நாளைக்கு 40 மில்லியன்கள் கூனிப்பொடி இறால்களை (4 டன்கள் எடை வரை) நீலத்திமிங்கிலம் உணவாக உண்ணும், அதனால் அது பெறும் சக்தியின் அளவு 480,000 கலோரிகள். நீலத்திமிங்கிலத்தின் உணவான கூனிப்பொடிகளின் தொகையும் உலகில் மிக மிக அதிகம். கூனிப்பொடிகளின் உருவ அளவும் அதிகத் தொகையும்; அது போலவே நீலத்திமிங்கிலத்தின் வாயும் உணவு உண்ணும் முறையும் ஒன்றுக்கொன்று மிகவும் பொருந்தியுள்ளது. நீலத்திமிங்கிலங்களின் உணவாவதற்கே கூனிப்பொடிகள் பிறந்தது போலவும், அவற்றை உண்ணவே நீலத்திமிங்கிலங்கள் பிறந்தது போலவும் இயற்கையில் அமைந்திருக்கிறது.  இந்த சாதகமான உணவு சூழ்நிலை நீலத்திமிங்கிலம் அதிகம் உண்டு மிகப் பெரிய அளவாக வளர பரிணாம வளர்ச்சிப்படி ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

மற்றொரு காரணம் அது வாழும் நீர்நிலை செய்யும் உதவி.  நிலத்தில் வாழும் உயிரினங்கள் பெரிதானால்,  அந்த உடலுக்கேற்ற அதிக எடை புவியீர்ப்பு விசையினால் புவி நோக்கி இழுக்கப்பட்டு சிரமம் கொடுக்கும்.  அதற்குத் தீர்வாகப் பெரிய விலங்குகள் உடல் எடையைத் தாங்கும் பருத்த கால்களைக் கொண்டிருக்கும், காட்டாக யானையைக் கொள்ளலாம்.

நிலவாழ் உயிரனங்களுக்கு இருக்கும் புவியீர்ப்புத் தாக்கம் நீர்வாழும் உயிரினங்களுக்கு இல்லை.  மாறாக நீரின் மேல்நோக்கு விசை (buoyancy) நீர்வாழ் விலங்குகளுக்கு நீரில் மிதக்க உதவுகிறது. ஆர்கிமிடீஸ் கொள்கை விளக்கும் நீரின் இப்பண்பினால் பெறப்படும் உதவியால் சக்தி விரயமாவது குறைகிறது. இதுபோல வாழும்  நீர்நிலையின் சூழல் வழங்கும் உதவி, அதிக உணவு வளம், அதை உண்ணும் உடலின் தகவமைப்பு ஆகியவை நீலத்திமிங்கிலங்கள் உருவில் பெரியவையாக வளர உதவியிருக்கிறது. அடுத்து நமக்கு நியாயமாக எழ வேண்டிய கேள்வி, அவ்வாறானால் நீலத்திமிங்கிலங்கள் இதற்கும் மேலும் ஏன் பெரிதாக வளரக்கூடாது என்பது.

உயிரினத்தின் உருவம் பெரிதாகப் பெரிதாக,  அதன் வளர்ச்சிக்கேற்ப வளர்சிதை மாற்றத் தேவைகள் அதிகரிக்கும். அதனால் உடலினைப் பராமரிப்பதற்கும் அதிக சக்தி தேவைப்படும்.  அதற்கு வேண்டிய சக்தியைப் பெற அதிகம் உண்ண வேண்டியிருக்கும். இவ்வாறு உணவைத் தேடி உண்டு, செரிமானம் செய்து சக்தி பெறுவதற்கும் அந்த உயிரினம் சக்தியை விரயம் செய்ய வேண்டி இருக்கிறது. நீலத்திமிங்கிலம் நிலையாக ஒரிடத்தில் நிலைத்து இருந்து உணவு உண்ணுவதற்கு 15 மடங்கு அதிக சக்தி செலவழிக்கப் படுகிறது.  இது நீந்துவதற்குத் தேவையான சக்தியை விடவும் 5 மடங்கு அதிகம்.

வணிகத்தில் முதல் போட்டு வியாபாரம் செய்து லாபம் பார்ப்பது போன்ற செயலை இந்த உணவு தேடும் முயற்சிக்கு ஒப்பிடலாம். இவ்வாறு உணவின் மூலம் பெறப்படும் சக்தி (வரவு), அந்த சக்தியைப் பெற செலவழித்த சக்தியையும் அத்துடன் உடலைப் பராமரிக்க செலவிடப்படும் வளர்சிதை மாற்றதிற்கு தேவையான சக்தியையும் (செலவு) விட அதிகமாக இருந்தாலே இந்த உணவு வேட்டை லாபம் தரும் செயலாக இருக்கும். உபரியாக கிடைக்கும் சக்தி உடலை மேலும் வளர்க்க உதவும். இதற்கு உதவும் வகையில் உயிரினம் உண்ணும் உணவும் தகுந்த அளவு கிடைக்க வேண்டும்.

‘ஜான் டைலெர் போனெர்’ என்னும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர் ஒரு உயிரினத்தின் வளர்ச்சியை நிர்ணயிப்பதன் முக்கிய உயிரியல் காரணிகள் எனக் குறிப்பிடுபவை (1) உயிரினத்தின் திறன், (2) உடலின் புறப் பரப்பளவு, (3) உடலின் கட்டமைப்பு, (4) வளர்சிதை மாற்றத்தின் அளவு, மற்றும் (5) உயிரினத்தின் எண்ணிக்கையின் தொகை (five important biological features: strength, surface area, complexity, rate of metabolism, and organism abundance). அறிவியல் அறிஞர்கள் இந்தக் காரணிகளை ஒரு கணித சமன்பாடு/வாய்ப்பாடாக உருவாக்கிய  பின்பு, ஒரு உயிரினத்தின் தகவல்களை அதில் பொருத்தி கணக்கிடுவார்கள். கணித மதிப்பீடுபடி அந்த உயிரினத்தின் வளர்ச்சி அதன் சூழ்நிலைக்கேற்ற வாழ்க்கைத் தகவமைப்பு படி, அதற்கு சாதகமான முறையில் எந்த அளவு வளர்ச்சி அடைய முடியும் என்பது இதனால் தெரிய வரும்.

இவ்வாறு நீலத்திமிங்கிலத்தினைப் பற்றிய தகவல்களைக் கொண்டு மதிப்பிட்ட பொழுது, அது தேவைகளை சமாளித்து வெற்றிகரமான வாழ்க்கை வாழ 33 மீட்டர் வரை வளர முடியும் எனத் தெரிந்தது.  இதுவரை காணப்பட்ட நீலத்திமிங்கிலங்களின் சராசரி நீளமும் ஏறத்தாழ இதே அளவுதான்.  இதிலிருந்து நீலத்திமிங்கிலத்தின் உணவு வகை, அதன் சூழ்நிலை காரணிகள் நிர்ணயித்தபடி நீலத்திமிங்கிலங்கள் இதற்கும் மேல் வளர வாய்ப்பில்லை என்பதை இயற்கை நிர்ணயித்துள்ளது தெரிய வருகிறது.

 

சிந்தனைக்கு: ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எதற்காக? போன்ற கேள்விகளைக் கேட்கும் ஆர்வமுள்ள குழந்தைகளின் மனநிலையை வளர்ந்த பின்பு பலர் கைவிட்டு விடுகிறோம்.  ஆனால் இது போன்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குக் காரணம்.   இவ்வாறு ஆர்வத்தில் ஆராய்ந்து தாங்கள் கண்டறிந்து சொல்லப்படும் உண்மைகள், சமுதாயத்தில் காலம் காலமாக நம்பப்பட்ட கொள்கைகளுக்கு மாறாக இருந்தால், அவற்றைச் சொல்லுபவர்கள் அனுபவிக்கும் இன்னல்களும் ஏராளம். எடுத்துக் காட்டாக, நவீன அறிவியலின் தந்தை என ஐன்ஸ்டினால் புகழப்பட்டவர் வானியல் மேதை கலிலியோ, இவர் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதை வலியுறுத்தியதற்காகக் கிறிஸ்துவ மதக் குருமார்களால் கண்டிக்கப் பட்டார். முதுமையிலும் வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைக்கப் பட்டுத் தண்டிக்கப்பட்டார். அறிவியல் முன்னேற்றம் அடைந்த இக்காலத்திலும், முதன் முதல் நிலவில் காலடி எடுத்து வைத்த  நாடான அமெரிக்காவின் சில பள்ளிகளில் டார்வினின் ‘இயற்கைத் தேர்வு நியதி’யைக் (Theory of Natural Selection) கற்பிக்கத் தடைகள் போடப்படுகின்றன.  இது போன்ற ‘மதத் துரோகம்!’ என்று கூறி தடைகள் போடும் குறுகிய மனப்பான்மை மனித அறிவு வளர்ச்சிக்கு உதவாது என்பதை மக்கள் உணர்வது மனித குல மேம்பாட்டிற்கு வழி வகுக்கும்.

 

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
[குறள் 396]

Content References:
Blue whale
http://en.wikipedia.org/wiki/Blue_whale
http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/

National Geographic Explorer : Kingdom of the Blue Whale
http://channel.nationalgeographic.com/channel/videos/kingdom-of-the-blue-whale/
http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/

Why are blue whales so enormous?
http://ed.ted.com/lessons/why-are-blue-whales-so-enormous-asha-de-vos

John Tyler Bonner, Why Size Matters: From Bacteria to Blue Whales, 2011, Princeton University Press; Reprint edition
http://books.google.com/books/about/Why_Size_Matters.html?id=pNIkFBA0kdAC

Ted J. Case, 1979, Optimal body size and an animal’s diet, Acta Biotheoretica, Volume 28, Issue 1, pp 54-69
http://link.springer.com/article/10.1007%2FBF00054680?LI=true

Pictures Source:
http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/004/cache/blue-whale_477_600x450.jpg
http://animals.nationalgeographic.com/animals/blue-whale-interactive/
http://channel.nationalgeographic.com/channel/content/kingdom-of-the-blue-whale-3302/blue-whale-facts/#/compare/length
http://channel.nationalgeographic.com/channel/content/kingdom-of-the-blue-whale-3302/blue-whale-facts/#/compare/weight
http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/006/cache/krill_601_600x450.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Buoyancy.svg/301px-Buoyancy.svg.png

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன?

  1. அம்மாடியோவ்….. திமிலங்கத்தை பார்த்தால் இதைத்தான் சொல்லத்தோனும், அந்த அம்மாடியோவ் இந்த கட்டுரையை படிக்கும் போதும் வந்துவிடுகிறது. சிரத்தையோடு தேமொழி தந்த அத்தனை விவரங்களும் முக்கியமானவை. கடலிலேயே இருக்கும் எனக்கும் தேரியாத பல செய்திகள் அவரின் கட்டுரையில் கண்டேன்.நன்றிகள்.
    .

  2. திமிங்கலத்தின் நீட்சி, வரையறை வளர்ச்சி பற்றி அழகிய, எளிய விஞ்ஞானத் தமிழில் விளக்கமாக எழுதிய தேமொழிக்கு எனதினிய பாராட்டுகள். சி. ஜெயபாரதன்

  3. படித்து ரசித்து பாராட்டியமைக்கு நன்றி தனுசு. 

    ….. தேமொழி 

  4. நன்றி அன்பு ஜெயபாரதன் ஐயா, என் அறிவியல் கட்டுரைக்கு விஞ்ஞானியான உங்களிடமிருந்து  பாராட்டுரை பெறுவது peer reviewed journal article பிரசுரமானால் கிடைக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி. 

    ….. தேமொழி  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *