மிசிசிப்பி ஆற்றைக் கடந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். அதுகுறித்த மகிழ்ச்சி எப்போதும் உண்டு எனக்கு. நாளொரு வண்ணம் பொழுதொரு மேனி. நேற்று செங்காவி நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இன்று இளநீலங் கொண்டு சலசலச் சிரிப்போடு போய்க் கொண்டிருக்கிறது.

மிசிசிப்பியை நான் ஒரு கனவு தேவதையாகவும் எட்ட நின்று பார்த்துப் பரவசங்கொள்ளும் தீண்டமுடியாப் பேரழகியாகவும்தான் ஆராதித்து வருகிறேன். சிலிர்த்துக் குலுங்கி நாணம் சிந்த ஒயிலாடும் பெருநதியைப் பார்த்து இரசிக்காதவன் இருந்தென்ன? வாழ்ந்தென்ன??

தேநீர் குடித்த கையோடு எதையாவது வாயில் போட்டு நாச்சுவையைக் கொல்வானேன்? டீ குடித்த மறுநொடியே கம்பர்கட் தின்பான் முண்டாபனியன் முருகேசன். எழவு, அதற்கு அதைக் குடிக்காமலே இருந்திருக்கலாமே?? டீ குடித்தால், நாவில் எஞ்சியிருக்கும் சுவை தீருமுட்டும் அனுபவிக்க வேண்டும். அடிக்கரும்பின் இனிப்பு, நெல்லியின் பின்சுவை, டீயின் நாச்சுவை, புணர்தலின் ஈற்றின்பம் என எதிலும் அந்த இறுதிக்கணங்கள் அலாதியானவை.

கடந்த வந்த பின்னரும் ஒரு அரை மணி நேரத்துக்காவது நெஞ்சில் படர்ந்து கொண்டிருக்கும் மிசிசிப்பி ஆற்றின் எழில் வனப்பு. இன்றைக்கு அந்த அசைபோடலைக் கொன்றழித்து விட்டான் பீட்டர்சன்.

எதையாவது முனைப்பாகச் செய்து கொண்டிருக்கையில், “ரொய்ங்க்” என்று காதில் புகுந்து இம்சித்துவிட்டுப் போகும் கொசு. எனக்கு மிகவும் எரிச்சலூட்டக் கூடியது உண்டென்றால் அது இதுதான்.

மிசிசிப்பியின் வனப்பின் மிதப்பில் வந்து கொண்டிருந்தவனை அலைபேசியில் அழைத்து, ஆப்பிரிக்க அமெரிக்க ஆங்கிலத்தில் “ரொய்ங்க்” அடித்து விட்டிருக்கிறான் பீட்டர்சன். அலைபேசியைக் கண்டுபிடித்தவன் இரசனை இல்லாத வெற்றுமானிடனாய்த்தான் இருந்திருக்க முடியும். அண்டிய அந்தப் பீடைக்கு மாதாமாதம் சுளையாக நூற்றுப்பத்து டாலர்கள் அழுது தொலைக்க வேண்டி இருக்கிறது. மிசிசிப்பி ஆற்றிலேயே அதையும் விட்டெறிந்து விடலாம். ஆனால் மணிக்கொருதரம் அழைத்துத் திட்டாமல் அவளால் இருக்க முடியாது. தார்க்குச்சியால் விட்டு விட்டுக் குத்து வாங்குவதற்கென்றே சபிக்கப்பட்டவர்கள் கணவன்கள். அதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. எனவேதான் இந்த அலைபேசியையும் கூடவே வைத்துச் சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒன்றும் புரியவில்லை. எனது அறையில் ஆறாயிரம் டாலர்கள் பணம் வைத்திருக்கிறானாம். அதிலிருந்து, மாதம் ஒன்றுக்கு முந்நூறு வீதம் மால்டோவாவுக்கு நான் அனுப்பி வைக்க வேண்டுமாம். இதென்ன பெரிய வில்லங்கமாக இருக்கிறது? நான் எதற்காக இதைச் செய்ய வேண்டும்??

முதலில் எதிர்ப்பட்டவள் டீனா. தரக்கட்டுப்பாட்டு மேலாளர். முகம் கோணி, மூக்கு உறிஞ்சி, கழுத்துச் சிவந்து நான் பார்த்ததில்லை. முறுவலிப்பை வாழ்நாள் குத்தகைக்கு எடுத்திருக்கிறவள் இவள். அவள் பேசுகிறாளோ இல்லையோ, அவளுடைய குதிரைவால் சடை ஆடியாடிப் பேசும். இடைக்கிடை சிரிக்கத் தவறுவதும் இல்லை. அவ்வப்போது அலுங்கும் ஒத்த வயதுடைய அவ்விரு முலாம்பழக் கொங்கைகளைப் பார்க்க உள்மனச்சிறுவன் வேட்கையுறுவதும் உண்டு.

”டியர் ஹனீ! உனக்கு விசயந் தெரியுமா?”, எதோ மணமுறிவு பெற்றுக் கொண்டு போனவன் மீண்டும் தன்னிடமே வந்து விட்டதைப் போன்ற தொனியில் மிகவும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கிறாள்.

“என்ன? நான் இப்பத்தான உள்ள வர்றேன்?! என்ன விசயம்??”

“பீட்டர்சன் வேலையிலிருந்து நின்னுட்டானாம்! இப்பத்தான் சொல்லிட்டுக் கிளம்பினான்!”

”அடப்பாவி! அவன் என்கிட்ட இந்த விபரத்தைச் சொல்லவே இல்லை. இப்பத்தானே அலுவலக எண்ணிலிருந்து என்னை அழைச்சிப் பேசினான். நான் கார் ஓட்டிட்டு இருந்ததால, சரியாக் கவனிச்சுக் கேட்க முடியலை! இரு டீனா, நான் என்னோட அறைக்குப் போயிட்டு வர்றேன்!”

மால்டோவா நாட்டில் இருக்கும் முகவரி ஒன்றை ஒட்டுநறுக்கில் எழுதி, அதை என் கணினித் திரையின் மீது ஒட்டி வைத்திருக்கிறான். சொன்னபடியே பணத்தையும் வைத்துவிட்டுப் போயிருக்கிறான். என்ன இவன்? தொடர்பு எண் கூடக் கொடுக்காமல் போயிருக்கிறான்.

பீட்டர்சன். அவனின்றி எங்கள் அலுவலகத்திலிருக்கும் வீணாய்ப்போன அட்மின் ஆண்ட்டி கெல்லியின் பிரிண்ட்டர் கூட வேலை செய்யாதே? எது ஒன்றுக்கும் அவனை நாடித்தான் வெகுபேருடைய வேலை நகர்ந்து கொண்டிருக்கிறது இவ்வளவு காலமும். ஓடியோடி உழைப்பானவன். அலுவலகப் பணிகள் என்றில்லை. தனிப்பட்ட வேலைகள் சொன்னாலும் அதையொரு பேறாக எண்ணிச் செய்வான். ஒட்டு மொத்த அலுவலகத்துக்கும் அவனைப் பிடிக்கும். அவனை வீழ்த்த எண்ணிய முதிர் கன்னிகளும் உண்டு இங்கு. ஆண்மையும் சொக்குத்தன்மையும் சரிக்கு சரியாகக் கலந்த புதிர் மைந்தன் அவன்.

மெம்ஃபிசு நகரத்தில் வசிக்கிறான். அப்பாவும் அம்மாவும் அமெரிக்காவில் இன்னமும் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆனால் இன்னார்தான் தன்னுடைய அம்மா அப்பாவென அவனுக்குத் தெரியாது.

என்னைப் பெற்ற அம்மாவுக்கே என்னுடைய அப்பன் யாரென்று தெரிந்திருக்கவில்லை என்று தன் பாட்டி சொல்லியிருக்கிறாளென வெகுசாதாரணமாகச் சொல்வான். எதையும் நினைத்துக் கொஞ்சம் கூட அகங்கலாய்த்ததே இல்லை. எப்போதும் எழுச்சியாகவும் குதூகலமாகவுமே இருக்கப் பழக்கப்பட்டவன்.

இரண்டு வயதுச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்த இலையுதிர்காலப் பொழுதொன்றில், ”நீ என் அம்மாவுக்குப் பிள்ளையாயிரு. ஏனென்றால் நம்மிருவருடைய அப்பாவும் ஒருவராகவே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது!” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள் அம்மா. போனவள் தன்போக்கில் நினைத்தவர்களோடு வாழத்துவங்கி விட்டாள் என்பதும் பாட்டி சொல்லித்தான் தெரியும் பீட்டர்சனுக்கு.

பள்ளிக்கூடம் செல்வதெல்லாம் வேண்டாத வேலையென நினைக்கும் வளவு ஒன்றில் வளர்ந்தவனுக்கு ஆறுதலாக இருப்பது அவனுடைய சோசியல் செக்யூரிட்டி எண்ணும் பிறந்தநாள் சான்றிதழும்தான். அவைதான் என்னுடைய மாபெரும் சொத்து என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான்.

பாட்டி கல்லறை கண்ட பின், அவளது இறுதிக் காரியங்களைச் செய்தவர்களுக்கே அந்த சோளக்கொல்லை வீட்டையும் விட்டுக் கொடுத்தான். விட்டுக் கொடுத்த சில நாட்களில், குடிபெயர்பவர்களுக்கான இடமாற்றுச் சேவை நிறுவனத்தில் பாரந்தூக்கும் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தான் பீட்டர்சன்.

எந்த வனத்திற்குச் சென்றாலும் குயிலோடு குயிலும் காகத்தோடு காகமும்தான் சேருகிறது. ஏரோ வேன்லைன் நிறுவனத்தின் வேலையிடத்தில் இவனைப் போலவே இன்னொருவனும். அவனது நிலையின் காரணமாய் எழுந்த கழிவிரக்கமே பீட்டர்சனையும் அவனையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சேர்ந்திருக்கக் கூடும். அவன் பெயர் லேபான். அவனுடைய மரபணுக்கள் க்யூபா நாட்டு மாந்தப் பண்புகளைக் கொண்டதாய் இருக்கக் கூடும்.

சிறுவர் சிறைக்கு லேபான் எப்படி வந்து சேர்ந்தான் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. நினைவு தெரிந்த நாளிலிருந்தே சிகாகோ சிறைதான் அவனுக்குத் தாய்வீடு. இன்ன தேதியில் பிறந்தோம், இன்னாருக்குப் பிறந்தோம் என்ற எதுவும் தனக்கு இல்லாததே தன்னுடைய சுதந்திரத்திற்கான முகாந்திரம் என நினைப்பவன் லேபான்.

எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடியவன். ஏரோ வேன்லைன் நிறுவனத்திற்குக் கூட அன்றைய கைச்செலவுக்காகத்தான் பாரந்தூக்க வந்திருந்தான். வந்த இடத்தில் பீட்டர்சனிடம் அகப்பட்டு விட்டான்.

இருவருமாகச் சேர்ந்தே இருந்தார்கள். வேன்லைன் நிறுவன வண்டிகளில் ஊர் ஊராகப் போவதும் வருவதுமாய் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். சிகாகோவின் புறநகர்ப்பகுதியான ஷாம்பர்க்கில் உள்ள ஒரு வீட்டில் சாமான்களை இறக்கிவிட்டு அட்லாண்டா புறப்பட்டுப் போனார்கள். போகும் வழியில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்து விட்டது.

நடப்பதெல்லாம் சொல்லிவிட்டா நடக்கிறது? அது அது  அதனதன்பாட்டில் நடந்து கொண்டுதானிருக்கிறது. தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வண்டிக்குள்ளேயே தூங்கலாமென்றான் பீட்டர்சன். சரி வராது; சிறுவிடுதிக்குத்தான் போயாக வேண்டுமென்றான் லேபான். விட்டுக் கொடுத்துப் போவதெனக்கருதி ஒத்துக்கொண்டான் பீட்டர்சன்.

நீ வண்டியிலேயே இரு; நான் அறையிருக்கிறதாவெனக் கேட்டு வருகிறேன் எனச் சொல்லி விடுதிக்குப் போனான் பீட்டர்சன். அங்குதான் அவள் அழுது கொண்டிருந்தாள். காற்றுநகரம் என அழைக்கப்படும் சிகாகோ நகரின் வளிமண்டலத்தில் குளிர்காற்று  வளைத்தடித்துக் கொண்டிருக்கிறது. சரியானதொரு உடுப்பில்லாமல் அங்கே அழுது கொண்டிருந்தாள் அவள். இவனைக் கண்டதும் ஓட முடியாமல் ஓடி வருகிறாள்.

ரோட்டோரப்பட்சியும் அல்ல. கண் கிரங்கப் பார்த்து, முலை காட்டி, தொடை வெட்டியபடி அவர்கள் அணுகும் விதமே தனியாக இருக்கும். ஆனால் இவள் அப்படிக் காட்சியளிக்கவில்லை. இவளை லேபான் பார்த்தால் அனுபவிக்கத் துடிப்பான். திரும்பிப் போய் விடுவது என்ற எண்ணத்தில் திரும்பிச் செல்லத் துவங்கினான்.

ஓக் மரத்திலிருந்து பறந்து வந்த பனித்தூவல் இவனது முகத்தில் ’பளிச்’ என்று இறங்கியது. விதி யாரை விட்டது? அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டு தலைநிமிர்கையில், வந்து நின்றிருந்தாள் அவள்.

கண்கள் சிவந்திருந்தன. பனிக்காற்றில் முகமும் கழுத்தும் கைகளும் உலர்ந்து வற்றிய செவ்வாழைத் தண்டு போல இருந்தது. அந்த அலங்கோலத்திலும் தேவதை போல இருந்தாள். சித்திரம் போல அசையாது அப்படியே நிற்கிறாள். பேசுவதற்கு அவளால் முடியவில்லை. அப்படியே நிலைகுலைந்து கீழே இருந்த பனிக்களிம்புச் சகதியில் ’தொத்’தென விழுந்தாள்.

அலாக்காகத் தூக்கியபடி தான் ஓட்டிக் கொண்டு வந்த வண்டிக்கே வந்தான் பீட்டர்சன். லேபானுக்கு வியப்பாய் இருந்தது. பீட்டர்சன் அவ்வளவு சுலுவாக இந்த வேலையில் இறங்கமாட்டான் என்பது அவனுக்குத் தெரியும்.

உள்ளே அவளைக் கிடத்தியதும்தான் லேபானுக்கு நிலைமை புரிந்தது. தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொண்டு அவள் முகத்தில் தெளித்தான் லேபான். இரு கைகளைப் பற்றித் தோய்த்து வெப்பமூட்டினான் பீட்டர்சன்.

கொஞ்சம் கொஞ்சமாக சீர்நிலைக்கு வந்தாள் வெண்முத்துச் சிங்காரி. சாப்பிடுவதற்கு உருளைக்கிழங்கு நொறுவலைக் கொடுத்தான் லேபான். கீழிறங்கிப் போய் சூடாக மோக்கா வாங்கி வந்தான் பீட்டர்சன்.

வாய்ப்பே இல்லாத முகம். முகட்டு மேட்டில் பொதிந்திருக்கும் பனி போன்ற உடல். வாளிப்பாய் இருக்கிறது இருக்க வேண்டிய எல்லாமும். அதரங்கள் கோவைப்பழத்தை தோற்கடித்து அவமானப்படுத்தின. மைபூசாமல் வதங்கிய இந்த நிலையிலும் வசீகரிக்கிறது கண்கள். என்ன பேசினாலும் எதோ ஒரு சொல்தான் ஆங்கிலத்தில் வருகிறது. இனியும் இங்கிருக்க வேண்டாமென நினைத்து வண்டியைக் கிளப்பினார்கள் இருவருமாகச் சேர்ந்து.

பத்து மைல்கள் தள்ளிப் போய் சிற்றுண்டிச் சாலையொன்றுக்கு அவளையும் அழைத்துப் போனார்கள். சிறுகச் சிறுக உண்டு பசியாற்றினாள் அவள். அவள் உண்பதை இவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்தார்கள். அவளைக் கண்களால் தின்றே பசியாற்றிக் கொண்டார்கள் இருவரும்.

பல மணித்தியால விருந்தோம்பலுக்குப் பின்னால் அவளுக்கான பின்புலமும் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெரியலாயிற்று. அவளொரு மோல்டோவாப் பைங்கிளி. பெயர் ஷெல்ஃபியா. மோல்டோவா நாட்டில் இருக்கிற கோசேனி எனும் சிற்றூரைச் சார்ந்தவள். வீட்டில் இவள்தான் மூத்தவள். இவளுக்கு ஐந்து தங்கைகளும் ஒரு தம்பியும்.

நான்கு மாத டூரிஸ்ட் விசாவில் கனடாவிற்கு முகவர் ஒருவனது ஏற்பாட்டின் பேரில் முலையாட வந்திருக்கிறாள். முலையாடுவது என்பது ஒரு பேருக்குத்தான். மற்றபடி உரிந்த கோழியாய் நாடக நாட்டியம், கொக்கோகக் கலைகள் எல்லாமும் மேற்கொண்டு களிப்பூட்ட வேண்டும்.

சரக்கு வண்டியொன்றிலேற்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டு இவளைக் கைகழுவி விட்டான் அழைத்து வந்தவன். நான்கு மாத வருமானம், கடவுச்சீட்டு முதலான எல்லா உடைமைகளையும் இழந்தபடி இப்போது இவர்களிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறாள் ஷெல்ஃபியா.

அவளை ஓரிடத்தில் எங்காவது தங்க வைக்க வேண்டும். அவர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் மெம்ஃபிசுக்கே வந்தான் பீட்டர்சன். தேவாலயப் பெரியவர் ஒருவரின் உதவியின் பேரில் வாடகைக்கு வீடு பிடித்துத் தங்கினர் மூவரும். இதில் பீட்டர்சனுக்கு மட்டுமே வேலை தேடத் தேவையான சோசியல் செக்யூரிட்டி எண், பிறந்தநாள் சான்றிதழ் இருக்கிறது. மற்ற இருவருமே, சட்டத்துக்குப் புறம்பாகத்தான் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

உள்ளூர் வேலை தேடித் திரியும் போதுதான், துப்புரவுப் பணியாளர் வேலைக்காக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தான் பீட்டர்சன்.

பெண் என்பவள் வாழ்க்கையில் வந்து விட்டால் எல்லாமும் நிகழ்கிறது.

கடந்த நான்காண்டுகளாக எங்களில் ஒருவனாகத்தான் இருந்து வருகிறான் பீட்டர்சன். மிகவும் நேர்மையானவன். மதிய உணவு இடைவேளைகளில் எங்களுக்கு உணவுப் பண்டங்கள் வாங்கி வருவான். எங்கள் கார்களுக்கு ஏதேனும் பராமரிப்பு வேலையிருப்பின், அவனிடமே கொடுத்தனுப்பிச் செய்து கொள்வோம். விடுமுறை நாட்களில் தத்தம் வீட்டு வேலைகளுக்கும் கூட வேண்டிய உதவியை அவனிடமிருந்து வெகு இயல்பாகக் கேட்டுப் பெறுவோம் நாங்கள்.

பீட்டர்சன் எங்கள் அலுவலகத்தில் வேலைபார்க்க, லேபான் அவனது பாணியில் சிறுதொண்டு வேலைகளைச் செய்து கைக்காசு பார்த்து வந்தான். பெரிய பெரிய கிடங்குகளுக்கு பாரந்தூக்கும் வேலைக்குப் போவான்.  பாரந்தூக்கி வேலை பார்த்து வரும் வருமானத்தைக் காட்டிலும் களவாடிக் கொண்டு வரும் பொருட்களை விற்றுப் பெரும் பணம் பார்த்து விடுவான். அவ்வப்போது சிறையிலும் அடைபட்டுக் கொள்வான். இப்படியாக வெளியே வருவதும், உள்ளே செல்வதுமாய் இருப்பான் லேபான்.

லேபான் கொண்டு வரும் பொருட்களை ஈபே இணையதளத்தினூடாக விற்றுக் காசாக்குவது ஷெல்ஃபியாவின் வேலை. எல்லாவற்றுக்கும் ஆதாரம் பீட்டர்சனின் சோசியல் செக்யூரிட்டி எண்தான். அது இல்லாவிட்டால், வங்கிக் கணக்கு, கடனட்டை என எதுவும் வைத்திருக்க முடியாது இவர்களால்.

பீட்டர்சன் வெளிப்படையாகவே சொல்வான். ”இனி எங்களால் ஷெல்ஃபியை விட்டு இருக்க முடியாது. நானும் லேபானும் அவளைப் பகிர்ந்து கொள்கிறோம். அவளும் எங்கள் இருவரையும் முழுமையாக நேசிக்கிறாள். எங்களது எதிர்காலமே அவள்தான் இனி!” என வெள்ளை மனத்தோடும் புளகாங்கிதத்தோடும் சொல்வான். நான்கு, ஐந்து முறையாவது என்னிடம் சொல்லியிருப்பான். இணங்கிய ஒன்றிப்பு ஈடேறுகிற இடத்தில் வக்கிரத்துக்கும் விரசத்துக்கும் வன்முறைக்கும் இடமில்லை.

மெம்ஃபிசு நகரில் மிசிசிப்பி பேராறு ஓடுகிறது. அவ்வப்போது பனி பெய்கிறது. பூமி எல்லாரையும் போல இவர்களையும் அரவணைக்கிறது. வானம் வாழ்த்துகிறது. சரியான கல்வி கிடையாது. ஆனாலும் அவர்களுக்குள்ளான புரிதல் உண்டு. ஷெல்ஃபியின் குடும்பத்தாருக்கு அவள் மாதாமாதம் பணம் அனுப்பி வைக்கிறாள். இந்த ஆடவர் இருவரே அவளுக்கான தேவதூதன்கள்.

மோல்டோவாவை விட்டுக் கிளம்பு முன்னர் குலதேவதையிடம் வேண்டச் சென்றாளாம் ஷெல்ஃபி. அப்போது அவர்களது குலவழக்கப்படி முட்டைக்கோசு ஒன்றை எடுத்து கோவில் தளத்தில் உருட்டியிருக்கிறாள். வலது புறமாகச் சென்றால் வாழ்வில் ஏற்றம் என்பது மரபாம். எனக்கும் வலதுபுறமாகத்தான் உருண்டோடியது. அது போலவே எனக்கு நல்லதே நடந்திருக்கிறது எனச் சொல்லி மகிழ்வாளாம் அவள்.

கொஞ்சநாட்களாகவே அவ்வப்போது உடம்புக்கு சரியில்லாமல் வருகிறதாம் அவளுக்கு. கடை மருந்துகளைக் கொடுத்தே சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களிடம் அவ்வப்போது சொல்வான். ஆனால் இப்படியொரு ஏற்பாட்டினைச் செய்திருப்பதாகக் கடைசிவரை சொல்லவே இல்லை.

பீட்டர்சனுக்கு சிறையிலிருந்த அனுபவம் உண்டு. அப்போது நண்பனானவன்தான் கார்லோசு. இவனொரு மெக்சிகன். கருந்துவக்கு, தூள், மெர்சுவானாத்தழை போன்றவற்றின் ஏகபோக முகவர் இவன். இவனுக்கான கட்டமைப்பு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா என எல்லை தாண்டியதாகும்.

அமெரிக்காவில் துப்பாக்கி(துவக்கு) வாங்குவதென்பது கடைவீதிக்குப் போய் செருப்பு வாங்குவதற்கு ஒப்பானதாகும். கடைச்செருப்பு வாங்க வேண்டுமென்றால் கூடுதலாகச் செலவு ஆகும். கார்லோசு போன்ற ஆட்களைப் பிடித்தால் மலிவான விலையில் தெருச்செருப்பு வாங்கலாம். ஐந்து டாலரிலிருந்து ஐயாயிரம் டாலர்கள் வரையிலுமான இந்த கள்ளச்செருப்புகளை வகைவகையாக வாங்கிக் கொள்ளலாம். வாங்கி வைத்துக் கொண்டு, இவனை அவன் தீர்த்துக் கட்டலாம். அவனை இவன் தீர்த்துக் கட்டலாம். தூள் பாவிப்பதில் பாடசாலைகளுக்குத்தான் முதலிடமாம். மாணவர்கள் படிப்பதற்குப் போகிறார்களா, தூளுறிஞ்சி சொக்குசொகம் காணப் போகிறார்களா தெரியவில்லை. தூள் விற்பவர்கள் பிஎம்டபுள்யூ, லெக்சசு, பென்சு  போன்ற உயர்தரக் கார்களில்தான் வந்து போகிறார்கள். மர்சுவானாத் தழைக்கு சில மாகாணங்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டன. மற்ற மாகாணங்களுக்கு, மெக்சிகோ இருக்க கவலையேன்? கார்லோசுகளும், மார்ட்டினெசுகளும் வேண்டிய அளவு கொண்டு வந்து கொடுப்பார்கள். பீடி போல ஊதித்தள்ளலாம். பிஸ்கெட், பாண் போன்ற பண்டங்களிலும் போட்டு உண்ணலாம். உலகத்தை மறந்து உல்லாசமாய் இருக்கலாம். அதே உல்லாசத்தோடு பரலோகத்துக்கும் கதியாய்ச் சென்று சேரலாம்.

கார்லோசின் உதவியோடு மெக்சிகோவுக்குச் சென்றுவிட்டால், ஷெல்ஃபிக்கான மருத்துவம் பெறுவதில் எவ்விதச் சிக்கலும் இல்லையாம். அதுதான் ஹூசுடன் அருகிலிருக்கும் நுவலார்டோ காட்டுவழிச் சிறுபாதையினூடாக மெக்சிகோவுக்குச் சென்று விட்டார்கள். குழந்தைப் பிறப்புக்கான பேறு கால மருத்துவத்திற்காகக் கூட ஷெல்ஃபியை அவர்கள் அழைத்துச் சென்றிருக்கக் கூடுமென்கிறான் நெட்டைக்கொக்கு ஜான் லொஷன்ஸ்கி.

பீட்டர்சன் எங்கள் அலுவலகத்தை விட்டுச் சென்ற பின்னர், இங்கு எல்லாமே தலைகீழாக மாறிப்போய் விட்டது. எனினும், அவன் சொன்னபடியே  மால்டோவா முகவரிக்கு வெஸ்டர்ன்யூனியன் மூலமாக பணவிடை(money order) அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த மாதம் இன்னும் அனுப்பவில்லை.

நாங்கள் வேலைபார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தைப் பிறிதொரு நிறுவனம் விலைக்கு வாங்கிக் கொண்டபடியால், நிறுவனத்தின் மெம்ஃபிசு நகர அலுவலகம் மூடப்பட்டு விட்டது. பெரும்பாலானோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். நாங்கள் மிகச் சொற்பமானோர் மட்டுமே வேறு வேறு அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டு பணியில் இருக்கிறோம்.

இனி நான் பீட்டர்சனைச் சந்திப்பேனா தெரியாது. அவன் குறித்த எந்தத் தகவலும் என்னிடத்தில் இல்லை. என்னைப்பற்றிய தகவலும் அவனிடத்தில் இருக்குமா என்பது ஐயத்திற்குரியதே. உயிர்த்த நொடியிலேயே சாவுக்கான பயணமும் துவங்கி விடுகிறது. அத்தகைய பயணத்தில் பலரைச் சந்திக்கிறோம். அதற்கான நேரம் வரும் போது பயணத்தின் இடையிலேயே அவரவரிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள நேரிடுகிறது.

ஊரே அடங்கி விட்டது. உறைபனியின் கனம் தாங்காமல் ஒடிந்து சாளர ஆடியின் மீது விழும் மரக்கிளையின் உராய்வொலி  அதிர்ந்து கேட்கிறது. கோலியர்வில் குளத்தில் கனடியக்கீச்சுகளின் சத்தம் அவ்வப்போது. இவ்வளவு பெரிய பேராறு, மிசிசிப்பி பக்கதிலேயே ஓடுகிறது. ஆனாலும் அதற்கான அறிகுறி ஏதுமில்லை.

சத்தமின்றி கள்ளப்பூனை போல அடுத்திருக்கும் அறைக்குப் போனேன். குழந்தைகள் நன்றாய்த் தூங்குகிறார்கள். மீண்டும் வந்து படுக்கையில் மிகக் கவனத்துடன் படுத்தேன். அவள் கண் விழித்தால் அவ்வளவுதான். ஏன் இன்னமும் தூங்காமல் உயிரை வாங்குகிறீர்கள் எனச் சாமியாடுவாள்.

எழவு தூக்கமும் வரவே மாட்டேன் என்கிறது. மீண்டும் மீண்டும் அமேசான் நினைவே வந்து படுத்துகிறது. அதனால்தான் எனக்கு இப்படி நடக்கிறது. தீர்மானமாய் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். மால்டோவாவுக்கு இனியும் பணம் அனுப்பித்தான் வைக்க வேண்டுமா என நினைத்து அனுப்பாமல் இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. அருவருப்பாய் இருக்கிறது.  குற்றம்தான். அதுதான் அமேசானில் போட்ட காசு கரையத் துவங்கிவிட்டது. விடிந்ததும் அமேசான் பங்குகளை விற்றுவிட வேண்டும். மறுபக்கம் புரண்டு படுத்தால், கை உளைகிறது.

வெஸ்டர்ன் யூனியன் கடை இருப்பது கேஷ் ஸ்டேசனில்தான். அது இரவிலும் திறந்திருக்கும். இந்த மாதம், அடுத்த மாதம், இரண்டு தவணைகளையும் கட்டிவிட்டு வந்தாலென்ன? கேள்விகள் மனத்தையும் மண்டையையும் குடைந்தெடுக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோர்டோவா கேஷ் ஸ்டேசனில் நடந்த துப்பாக்கி விளையாட்டுக்கு நான்கு காவு விழுந்ததாம். ஆடு காவு கொடுத்தலையும், கோழி காவு கொடுத்தலையும் மனிதன் இரசிக்கிறான். மனித காவுகளை யார் இரசிக்கிறார்கள்? மிகவும் முக்கியம். கண்ட கண்ட கேள்விகள் சுயம்புகளாக வந்து துளைத்துப் படுத்துகின்றன. கைச்செலவுக்குக் காசு இல்லாத நேரத்தில் வந்து, பரிகாரம் பனிரெண்டு செய்யணும் என்பானாம் சாமக்கோடாங்கி.

விருட்டென்று எழுந்து வெளியே வந்தாள்.

”என்ன இது? இந்த நேரத்துல எங்க போறீங்க??”

“வயிறு ரொம்ப வலிக்குது. வயிறு கட்டிகிச்சு போலத் தெரியுது.  வால்கீரீன்சுல மலமிளக்கி, அதான் அந்த கிளிசரின் ஸ்டிக்ஸ் வாங்கிட்டு வரலாம்னு”

“இந்த நேரத்துலயா? அதெல்லாம் வேண்டாம். டீ போட்டுக் குடுக்குறேன்.  சித்த நேரத்துல வந்திடும்!”

“இல்ல; போய் வாங்கிட்டே வந்துடுறேன். ப்ளீஸ்டா கண்ணம்மா!!”

பனித்தூவல் அறவே நின்றிருந்தது. வானம் யாருக்கும் வஞ்சனை செய்வதில்லை. தன் எல்லைகளை முழுக்கத் திறந்தே விட்டிருக்கிறது. யாரிடமும் கட்டணமேதும் வாங்காமல் அதன் போக்கில் வீசிக்கொண்டிருந்தது காற்று. தன்னுள் இருக்கும் மினுமினுப்புகளை மின்னித் தீர்ப்பதில் யார் முதல் என்பதில் போட்டி போட்டிக் கொண்டிருந்தன சகல விண்மீன்களும். இப்போது கேட்கிறது ஓய்வில்லா மிசிசிப்பியின் மெல்லொலி. நெஞ்சு நிமிர்த்தி சட்டைப்பைக்குள் கையை விட்டுத் துழாவியெடுத்துப் பார்க்கிறேன். இளக்காரக் குறும்புடன் செல்லமாய்ச் சிரிக்கிறது மால்டோவா நாட்டின் கோசேனி.

 

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “பணவிடை

 1. வழக்கம் போலவே பழமை பேசியின் அருமையான எழுத்து நடையில் மற்றொரு நல்ல படைப்பு.
  மனப் போராட்டத்தையும், சமுதாயத்தின் வெளிச்சத்திற்கு வராத மற்றொரு பிரிவு மக்களின் வாழ்க்கை முறையை, அது சரியா தவறா என்ற கண்ணோட்டதைத் தவிர்த்துவிட்டு விவரித்த முறையும் மனதைக் கவர்ந்தது. நல்லதொரு பதிவு. நன்றி.
  ….. தேமொழி

 2. இது கதையா ? இல்லை உங்கள் ஆபிஸில் நடந்த ஒரு நிஜ நிகழ்வா ?

  கதையோட்டத்துடன் ஒன்ற வைத்த நடை ! வாழ்த்துகள் ப.பேசி.

 3. @@தேமொழி 

  நன்றிங்க!!

  @@ரிஷி

  எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் குறித்து எழுத்தாளர் எஸ்.ரா குறிப்பிட்டதில் சொல்வார். அந்தக் காலத்திலெல்லாம் சமையல் குறிப்புகளில் உப்பு என்பதற்கு நேராகத் தேவையான அளவு என்று குறிப்பிட்டு இருக்கும். அதைப் போல, தேவையான அளவு கற்பனையையும் புனைவையும் சேர்த்துக் கொண்டேன். நன்றி!!

 4. கதையின் நிகழ்வுகள் மனதைத் தொடும் விதத்தில் உண்மைச் சம்பவங்கள் தாமோ என்று எண்ணும் வகையில் எழுதப்பட்டுள்ளன. அழகிய நடை. இயல்பான வர்ணனைகள். ஆசிரியர் பழமைபேசிக்குப் பாராட்டுக்கள்.

  -மேகலா

 5. “……..ஓக் மரத்திலிருந்து பறந்து வந்த பனித்தூவல் இவனது முகத்தில் ’பளிச்’ என்று இறங்கியது……..”

  கதையின் நடையில் வந்த இந்த வரிகளைப்போலவே இந்தக் கதையும் மனதில் பளிச்சென ஒட்டிக்கொண்டது. நல்ல நடையில் வந்த கதை.

 6. @பழமைபேசி, 

  அருமையான நடை! 

  வரிக்கு வரி ரசித்தேன். ருசித்தேன். Believe me when I say this, I read it twice (or even thrice to copy+paste a few lines to write this verbose comment!!).  

  ரசனையான மனிதரைய்யா நீர்!

  டீயின் நாச்சுவையிலிருந்து, சிலிர்த்துக் குலுங்கி நாணம் சிந்த ஒயிலாடும் பெருநதி வரை அப்படி ரசித்திருக்கிறீர்கள். Not just here, but your poetic-aesthetic is sprinkled all over the story.

  //ஆப்பிரிக்க அமெரிக்க ஆங்கிலத்தில் “ரொய்ங்க்” அடித்து விட்டிருக்கிறான் பீட்டர்சன். அலைபேசியைக் கண்டுபிடித்தவன் இரசனை இல்லாத வெற்றுமானிடனாய்த்தான் இருந்திருக்க முடியும். அண்டிய அந்தப் பீடைக்கு மாதாமாதம் சுளையாக நூற்றுப்பத்து டாலர்கள் அழுது தொலைக்க வேண்டி இருக்கிறது.//

  சிரிக்க வைத்த வரிகள். 

  //தார்க்குச்சியால் விட்டு விட்டுக் குத்து வாங்குவதற்கென்றே சபிக்கப்பட்டவர்கள் கணவன்கள்.//

  இது உப்பா? சாதமா? 😉   
   
  அமெரிக்காவின் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறீர்கள். அதிர்ச்சியூட்டும் விஷயங்களைக் கூட அமைதியாக சொல்லிய பாங்கு அருமை. 

  இன்னொரு விஷயம் தோன்றியது (தொடர்பு இல்லாத ஒன்றும் கூட) –

  நடுத்தர வர்க்கம் பணக்காரனாகவும் ஆகமுடியாமல், ஏழையாகவும் மாறமுடியாமல் இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கும். நம்மைப் போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களின்  நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான் போலும்.   

  மிசிசிப்பி ஆற்றருகே ‘கமர்கட்டோடு முண்டாபனியன் முருகேசன் தோன்றுகிறார்’,  கோர்டோவா கேஷ் ஸ்டேசன் நினைவுகளோடு சேர்ந்து சாமக்கோடாங்கியும் வருகிறார். 

  உங்களுடைய கதைக்களம், எழுத்து நடை இவற்றோடு சேர்த்து, வெளிநாடு வாழ்பவர்களின்  மனநிலையை சொல்லாமல் சொல்லிய இந்த இடங்களையும் ரசித்தேன். ஐபில் டவர் மீது நிற்கும்போது கூட, ஏதேனும் கோயில் கோபுரம் தெரிகிறதா என்று ஒரு எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடிவதில்லை. 

  முண்டாபனியன் முருகேசனும், சாமக்கோடங்கியும் இந்தக் கதைக்குள் வராமலிருந்திருந்தால்… இந்தக் கதை ஒருவேளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால்… ஆங்கில வாசகர்கள்  கதைசொல்லி ஒரு அமெரிக்கன் என்று நினைத்திருப்பார்கள். 

  A carefully, neatly crafted story! I loved it!

  வாழ்த்துகள் பழமைபேசி!

 7. அட்டகாசமான மொழிநடை.. பெண்களை மிக அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்.. உங்களை அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு  சவுதி அரேபியாவுக்கு அனுப்ப வேண்டுமென்று வேண்டுகிறேன் ! 

  சராசரி மனிதனின் உள்மனப் போராட்டங்களைக் கதை அருமையாக விவாதிக்கிறது !
  வாழ்த்துக்கள் பழமையாரே !

 8. @@சீமாச்சு 

  பின்னூட்டம் இடுவதில் கூட மயிலாடுதுறை கைவண்ணம் மிளிர்கிறதே? ஆனா, சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தணும்னு சொல்லுறது?? அவ்வ்வ்வ்…. :-))

 9. எழுத்தின் வெற்றியே அதை காட்சிப்படுத்துவதில் தடங்கல் இல்லாமைதான்.. இந்த உண்மை கலந்த புனைவு அப்படியே கண்முன்னே காட்சியாக விரிகிறது. எழுத்து நடை உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதுதான் பங்காளி..

 10. அருமையான கதை.  அதை ஒரு சராசரி மனிதனின் எண்ணப் பகிர்வாக நடந்ததை அப்படியே கண் எதிரே கொண்டு வந்துவிட்டீர்கள்.  முறை தப்பிய உறவுகள் என்றாலும் அதையும் விரசம் தொனிக்காமல், படிக்கிறவர்களுக்கும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும்படியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.  எந்த இடத்திலும் இப்படியான உறவு குறித்த ஆற்றாமையோ, கோபமோ வராமல் வெகு இயல்பாகச் செல்கிறது.  கடைசியில் மனம் மாறியது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதுவும் இயல்பாகவே நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *