
”புழக்கடை தோட்டத்துப் பூக்களைகேட் டுப்பார்
வழக்கிடும் தூங்காய் வனிதா, -கிழக்கிடை
ஆதித்யன் தோன்றிவிட்டான் அம்பலம் சென்றோது
சோதிவட்டச் சங்கன் சிறப்பு’’….கிரேசி மோகன்….!
’’சோதிவட்டம் -சுழலும் சுதர்ஸனத் திகிரி’’….!
இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் உலகிலே முதன்மையாக ஒரே ராக்கெட்டில் 83 துணைக் கோள்களை ஏவப் போகிறது.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
++++++++++++++
வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! ……
ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்!
மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

புவிச்சுற்று இணையியக்க ஏவு வாகனப் பூத ராக்கெட் [GSLV Mk III Rocket] பயன்பாடுகள், பெருத்த பளுவுள்ள துணைக் கோள் அன்னிய டாலர் நாணய மாற்று நிதிச் [Foreign Exchange] சேர்ப்பைப் பேரளவு தரும். இப்போது விண்வெளி ஆணையகம் 4 டன் எடை தூக்கும் கனமான ராக்கெட்டு 2017 ஜனவரியில் முதன்முதல் GSLV Mk III இயங்கப் போகிறது.
ஏ. எஸ். கிரண் குமார் [Indian Space Research Organization Chairman]
அபாய நிற்பு உந்து எஞ்சின் [Scramjet Engine] சூழ்வெளி ஆக்சிஜனை உறிஞ்சிக் கொண்டு எரித்திரவத்தை எரித்து ஏவு ஆற்றல் உண்டாக்கும். அதனால் ராக்கெட்டின் சுயப்பளு குறைகிறது. அதே சமயம் ராக்கெட் தூக்கிச் செல்லும் பளு மிகையாகக் கூடுகிறது. அதனால் ராக்கெட் தயாரிப்புச் செலவும் பேரளவு குறைகிறது. அன்னிய நாடுகளின் துணைக் கோள்களைக் குறைந்த செலவில் ஏவிச் செல்ல இந்தியா விண்வெளி ஆணையகத்துக்கு ஏதுவாகிறது.
கே. சிவன் [ஆளுநர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்]

“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”
டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).
இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகத்தின் துணிகர முயற்சி
2016 ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகத்துக்கு [ISRO – Indian Space Research Organization] பேரதிர்ஷ்டப் பொறிநுணுக்கச் சாதனை வெற்றி பெற்ற வருடமாகக் கருதப்படும். ஒரே சமயத்தில் ஒரே இந்திய ஏவுகணையில் 20 துணைக்கோள்கள் ஒரே பாதையில் சுற்ற ஏவப்பட்டன ! அத்துடன் முதன்முதல் “மீள்பயன்பாடு ஏவுகணை வாகனம்” [Reusable Launch Vehicle (RLV)] & “அபாய நிற்பு உந்து எஞ்சின்” [Scramjet Engine] பயன்படுத்தப் பட்டன. ஆக மொத்தம் 33 துணைக்கோள்கள் இந்திய ஏவுகணைகளில் ஏவப்பட்டன. அவற்றில் 22 துணைக்கோள்கள் அயல் நாடுகளைச் சேர்ந்தவை. 11 துணைக்கோள்கள் இந்தியாவுக்குச் சொந்தமானவை. அவற்றால் இந்தியாவுக்கு வருமானம் : 500 கோடி ரூபாய் [73 மில்லியன் டாலர்]. அயல் நாடுகளின் அடுத்து ஓர் ஆணை [Order] மேலும் 500 கோடி ரூபாய் வரவுக்கு வந்திருக்கிறது. அகில நாட்டுத் துணைக்கோள்கள் எதிர்கால ஏவு நிதி மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர் ! அதில் பன்முறை எரிப்பு நுணுக்கம் [Multi-burn Technology] பயன்படுத்தும் இந்தியாவுக்குப் பங்கெடுத்துக் கொள்ள பெரு வாய்ப்பு உள்ளது.

2017 முதல் காலாண்டு இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம், முதன்முறையாக ஒரே ராக்கெட் ஏவுதலில் 83 துணைக்கோள்களைத் தூக்கிக் கொண்டு ஓரிரு சுற்றுப் பாதைகளில் ஒரே சமயத்தில் இறக்கி விடப் போகிறது ! இதுவரை எந்த மேனாடும் இத்துணிகர முயற்சியைச் செய்து காட்டியதில்லை. இந்திய விண்வெளி வல்லுநருக்கு இவ்வாறு பற்பலத் துணைக்கோள்களை ஒரே ராக்கெட் ஏவுதலில் நல்ல அனுபவம் உள்ளது. கடந்த ஓராண்டாகப் பன்முறைச் செய்து காட்டிய பயிற்சிதான் இந்தச் சாதனை முயற்சிக்கு அடிகோலியது. 2017 ஆண்டு ஜனவரியில் முதன்முறையாக கனமான புவிச்சுற்று இணையியக்கத் துணைக்கோள் [Geosynchronous Satellite] அனுப்ப பூத ராக்கெட் [Geosatellite Launch Vehicle (GSLV Mk III)] சோதிக்கப்படப் போகிறது. அது 4 டன் பளு தூக்கும் ஆற்றல் உள்ளது. அந்த ராக்கெட்தான் 2017 ஆண்டில் முதன்முறை 83 துணைக் கோள்களைச் சுமந்து செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பாரத விண்வெளி ஏவுகணைகளின் ஒப்புமைத் திறன்பாடு
உலகத்தில் விண்வெளித் திட்டங்களை மும்முரமாகச் செய்துவரும் நிர்வாகத் துறைகளான அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவில் ஈசா, ஜப்பானில் ஜாக்ஸா [NASA, ESA, JAXA (Japan Aerospace Expolation Agency)] மற்றும் ரஷ்யா, பிரான்ஸ், சைனா, பிரேஸில் ஆகிய நாடுகளின் வரிசையில் இப்போது பாரதமும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. 2006 நாணய மதிப்பில் அமெரிக்கா: 16 பில்லியன் டாலர், ஐரோப்பா: 3.5 பில்லியன் டாலர், ஜப்பான்: 1.8 பில்லியன் டாலர், சைனா: 1.2 பில்லியன் டாலர், ரஷ்யா: 900 மில்லியன் டாலர், பாரதம்: 700 மில்லியன் டாலர், கனடா: 300 மில்லியன் டாலர், பிரேஸில்: 35 மில்லியன் டாலர் பணத்தை விண்வெளித் தேடலுக்கு நிதி ஒதுக்கு செய்துள்ளன. உலகத்தில் முன்னேறிவரும் நாடுகளில் பாரத தேசம் தற்போது முதன்மையாக விண்வெளிப் பயணத் திட்டங்களில் நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணி புரிந்து பெரும் சாதனைகளை வெற்றிகரமாக முடித்துத் தன் தலை நிமிர்த்தி வந்திருக்கிறது.

ஆசியாவிலே விண்வெளித் திட்டங்களைத் தீவிரமாகச் செய்துவரும் சைனா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு ஒப்பிட்டால், பாரத நாடு தயாரித்த அசுர விண்வெளி ஏவுகணை GSLV-III [Geostatioanry Satellite Launching Vehicle-III] அவற்றுக்கு ஏறக்குறைய சமமான உந்தாற்றல் உடையதாகக் கருதப் படுகிறது. அத்துடன் பாரதம் ஒருமித்த ஆற்றலில் தயாரித்த ஏவுகணைகள் மற்றவற்றை விட மலிவான நிதியில் ஆக்கப்பட்டவை. நாசா, ஈசா, ஜாக்ஸா ஆகிய உலகப் பெரும் விண்வெளித் துறையகங்கள் துணைக்கோள் ஒன்றை அண்டவெளியில் ஏவிடத் தேவைப்படும் நிதித் தொகையில் பாதி அளவே பாரதம் தனது துணைக்கோள் ஒன்றை அனுப்பச் செலவு செய்கிறது.

விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ஏவுகணை
அண்டை நாடான சைனாவின் பண்டை கால ஏவுகணைத் தொழில் நுணுக்கத்தைப் பின்பற்றிப் பாரதத்தின் ஏவுகணைப் படைப்புத் திட்டங்கள் உதயமாகின. இந்தியச் சைனா கூட்டுறவின் போது பண்டத் தொழில் நுணுக்கத் துறை மாற்றல் உடன்படிக்கையில் விருத்தியான பட்டுப்பாதைத் [Silkroute] திறமை அது. 1804 ஆம் ஆண்டில் பிரிட்டனை எதிர்த்துப் போரிட்ட மைசூர் மன்னர் திப்பு சுல்தான் முதன்முதல் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தினார். அதுவே வில்லியம் கங்கிரிவை [William Congreve], காங்கிரிவ் ராக்கெட் கண்டுபிடிக்கத் தூண்டியதாக வரலாற்றில் அறியப் படுகிறது. பாரதம் விடுதலை அடைந்த பிறகு, இந்திய விஞ்ஞானிகளும், பண்டித நேரு முதலாக மற்றும் பிற அரசியல் வாதிகளும் ராக்கெட் பொறித்துறை வளர்ச்சியின் எதிர்கால ராணுவ ஆயுத மேம்பாடுகளை உணர்ந்து அவற்றைத் தொடர்ந்து பேரளவில் விருத்தி செய்தனர். மேலும் ஏவுகணைகள் மூலம் துணைக் கோள்களை விண்வெளியில் அனுப்பி வானிலைத் தொலைத்தொடர்பு, தூர உளவு ஏற்பாடு, அண்டவெளி ஆய்வு போன்ற துறைகளும் முன்னேற்றம் அடைந்தன.

பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு 1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research (INCOSPAR)] நிறுவனம் செய்து, அதன் அதிபராக டாக்டர் விக்ரம் சாராபாயை நியமித்தார். அதன் திட்டப்படி முதலில் தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தை [Thumba Equatorial Rocket Launching Station (TELRS)], விக்ரம் சாராபாய் திருவனந்த புரத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் மத்திய காந்த ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது! இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட்டை டிசைன் செய்து, பல்வேறு அங்கங்களை இணைத்து, அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார். அடுத்து செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டங்களை வகுத்தார். அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் தற்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். துணைக்கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார், விக்ரம் சாராபாய். 1963 நவம்பர் 21 ஆம் தேதி சுதந்திர பாரத்ததின் முதல் ராக்கெட் சோடியம் ஆவிப் பளுவுடன் [Sodium Vapour Payload] அண்டவெளியைத் துளைத்துகொண்டு உயரத்தில் ஊடுறுவிச் சென்றது.


ஆரம்ப காலத்தில் ஏவிய முதல் ஏவுகணைகள், துணைக்கோள்கள்
அகமதாபாத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌதிக ஆராய்ச்சிக் கூடம், விண்வெளிப் பயன்பாடு மையம் [Physical Reseach Laboratory & Space Application Centre], திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பௌதிக ஆய்வகம் [Space Physics Laboratory], பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பகம் [Indian Space Research Organization] ஆகிய மையங்களில் செயற்கைத் துணைக் கோள்கள் [Satellites], ஏவுகணை வாகனங்கள் [Launch Vehicles], உளவு ராக்கெட்டுகள் [Sounding Rockets] ஆகிய விண்வெளிச் சாதனங்களின் ஆராய்ச்சி, விருத்திப் பணிகள் நிகழ்ந்து வருகின்றன. முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ரஷ்ய ராக்கெட்டில் ஏறிக் கொண்டு போய்ச் சுழல் வீதியில் சுற்றிவர விடப்பட்டது. அடுத்து மூன்று துணைக் கோள்களும் [பாஸ்கரா-I, பாஸ்கரா-II, ஆப்பிள்] ரஷ்ய ராக்கெட் மூலமே [1979-1981] ஆண்டுகளில் எடுத்துச் செல்லப் பட்டன. ஐந்தாவது துணைக் கோள் ரோகினி முதன் முதல் இந்திய ராக்கெட் SLV-3 முன்பகுதியில் வைக்கப்பட்டு விண்வெளியில் விடப்பட்டது.

இதுவரை 40(?) துணைக் கோள்களை இந்தியா அண்டவெளியில் ஏவி இருக்கிறது. அவற்றில் 23 துணைக்கோள்களை இந்தியாவில் அமைக்கப் பட்ட நான்கு வித ராக்கெட்டுகள் SLV-3 [Satellite Launch Vehicle-3], ASLV [Augmented Satellite Launch Vehicle], PSLV [Polar Satellite Launch Vehicle], GSLV [Geo-Synchronous Satellite Launch Vehicle] வெற்றிகரமாக விண்வெளியில் தூக்கிச் சென்றுள்ளன. மற்ற 17(?) துணைக் கோள்களை, ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச், ஈரோப்பியன் ராக்கெட்டுகள் சுமந்து சுழல்வீதிகளில் எறிந்துள்ளன. 1993 இல் ஏவப்பட்ட ஒரே ஒரு துணைக்கோள் [Indian Remote Sensing Satellite (IRS-1E)] மட்டும் சுழல்வீதியைத் தொட முடியாது தவறிப்போய் இழக்கப் பட்டது!

செயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்
1983 ஆகஸ்டு 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] இன்சாட் [INSAT-1B] இந்தியத் துணைக்கோளைத் தூக்கிச் சென்று சுழல்வீதியில் விட்டது. ஏவப்பட்ட பல இன்சாட் வலைப்பணித் துணைக்கோள்களில் [INSAT Network Satellites] அதுவும் ஒன்று. இந்திய தேசியத் துணைக்கோள் தொடர்பு ஏற்பாடு [Indian National Satellite System] உள்நாட்டுத் தொடர்பு, சூழகக் காலநிலைக் கண்காணிப்பு [Meteorology], நேரடித் துணைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பி [Direct Satellite Television Broadcasting] ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது. இன்சாட் வலைப்பணியில் [INSAT Network] 167 தொலைத் தொடர்பு முனைகள் [Telecommunication Terminals], ஏறக்குறைய 4172 இருவழிப் பேச்சு இணைப்புகளை [Two-Way Speech Circuits] ஏற்படுத்த முடியும். இன்சாட் இணைப்பு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கிராமியத் தொலைப்பதிவு ஏற்பாடை [Rural Telegraphy] ஏற்கனவே நிலை நாட்டியுள்ளது. இன்சாட் துணைக்கோள் இணைப்பு, சமிக்கைகளை 650 தொலைக்காட்சி அலை அனுப்பிகளுக்குப் [TV Transmitters] பரிமாறி, 80 சதவீத இந்திய மக்களுக்குக் கலைக் காட்சிகளையும், செய்திகளையும் அனுதினமும் அனுப்பி வருகிறது.

குறிப்பாக துணைக்கோள் மூலம் தொடர்பு கொள்ளவும் [Communication through Satellite], காலநிலை முன்னறிவிப்பு செய்யவும் பூகோளச் சூழக ஆய்வு [Meteorology] புரியவும் செயற்கைத் துணைக்கோள்கள் உதவு கின்றன. சூறாவளி, கடற்புயல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை கரைப்புற ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக்கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடுக்கும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மையான மக்களையும், ஆடு மாடு போன்ற விலங்குகளையும் காப்பாற்றி யுள்ளன.
அத்துடன் விண்வெளித் தூர உளவு [Remote Space Sensing] வேளாண்மை, நீர்வளம், நிலவளம், தாதுக்கள் [Minerals], வனவியல் [Forestry], சூழக வெளி, [Environment], கடல்துறை வளர்ச்சி [Ocean Development], வெள்ளத்தால் சேதங்கள், மழையற்ற பஞ்சப் பகுதிகளின் விளைவுகள் போன்ற வற்றையும் கண்காணிக்க உதவுகிறது. 2002 செப்டம்பர் 12 இல் ஏவப்பட்ட மெட்சாட் [METSAT] துணைக்கோள் முதன் முதல் பூகோளச் சுற்றிஇணைவு மாற்றுச் சுழல்வீதியில் [Geo-synchronous Transfer Orbit] வெற்றிகரமாக எறியப்பட்டது. அது 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் போது பூமியின் ஒரே முகத்தை நோக்கிக் கொண்டு தேவையான வானலைச் சமிக்கைகளை அனுப்பி வரும்! மெட்சாட் மிகுந்த உயரத்தில் பறந்து செல்லும் போது, பூகோளம் முழுவதையும் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பியுள்ளது!

+++++++++++++++++++
(தொடரும்)
தகவல்:
1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4 Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?
9. Indian Space Program : Wikipedia WebSite
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_
11 New Scientist – India Special: Space Program Presses Ahead By: Anil Ananthaswamy [FEb 19, 2005]
12 An Overview of the Indian Space Program By: N. Clarkson [Jan 14, 2007]
13. http://www.spacedaily.com/
14. http://www.spacedaily.com/
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] December 29, 2016 [R-1]
க. பாலசுப்பிரமணியன்
திருக்கண்ணன்குடி- அருள்மிகு தாமோதர நாராயணப் பெருமாள் திருக்கோவில்
பாற்கடலில் படுத்திருக்கும் பரந்தாமன் போற்றியே
பார்வையிலே பாலகனாய் மறைமுனியும் வடித்தெடுத்து
பால்கடைந்த வெண்ணையால் உருவத்தில் வண்ணமிட
ஆலிலையில் படுத்தவனும் ஆனந்தமாய் ரசித்தானே !
உறிகொண்ட மண்பானை ஒருகல்லால் உடைத்தவனே
மறைகண்ட மாமுனிவன் மனம்காண நினைத்தவனே
கலைகொண்ட சிலையிருக்கும் வெண்ணையை விருந்தாக்க
நிலைகுலைந்த தவத்தோனும் வேதவனைத் தொடர்ந்தானே!
அலையாளும் கடலிலே அசைவின்றி உறங்கியவனே
விளையாட வந்தவனே விரும்பியே கட்டுண்டான்
மகிழத்தில் கட்டுண்டோன் மாயத்தில் விலகிவிட
மாமுனியும் மாதவனின் மனம்கண்டே வியந்திட்டான் !
தீராவழக்கும் ஊராக்கிணறும் உறங்காப்புளியும் படைத்தே
மாறாமனதுடன் மகிழத்தடியில் உறங்கிடும் கலியனே
தீராப்பசிக்குத் தானேவந்து அமுதம் படைத்தாய்
காயாமகிழைக் கண்டவர் அருளிடும் கலியுகத்தேவா !
கண்ணிருந்து பார்த்தோர்க்குக் கண்ணன்குடி கலையழகே !
விண்ணிருந்து பார்போர்க்கு விடிவெள்ளி உன்னழகே !
முன்னிருந்து பார்ப்போர்க்கும் பின்னிருந்து பார்ப்போர்க்கும்
முடிவின்றி நிறைந்திருக்கும் மூவுலகிலன் பேரழகே !
ஒன்றாய் இரண்டாய் பலவாய் உருவானவனே
கன்றாய் தாயாய் கருவாய் நிறைந்தவனே
நின்றாய் கிடந்தாய் நிறைந்தாய் நினைவுள்ளே
மறைந்தே இருந்தும் அருள்வாய் மனத்துள்ளே !
”கிருஷ்ண லீலையைக் கூறும் பாகவதம் எழுதிய சுகமுனி கிளிரூபம் கொண்டவர்….ஆண்டாள் கரத்தில் ஏந்தியதும் கிளி (சுகர் என்றும் கூறலாம்)….திருப்பாவை பாகவதம் PART -2….!
’’பாக வதப்பழமது ஏகருசி ஆனது
தேகம் ஒழித்தசுக தேவனவர் -நாகவண்ண
மேனியன் லீலையை முன்னமே உண்டவராம்:
தோணியவர் ஆண்டாள் துடுப்பு’’….கிரேசி மோகன்….!
(OR)
”சீனியவர்(தித்திக்கும் பழம்) ஆண்டாள் சிரப்பு’’(SYRUP-ஜூஸ்)
அண்ணாமலை சுகுமாரன்

வரலாற்றின் வேர்கள் பகுதி ஒன்றில் வரலாற்று சான்றுகளையும் ,ஆய்வுகளையும் தொகுக்க சர் வில்லியம் ஜோன்ஸ் , 1784 இல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்கியதைக் காட்டியிருந்தேன் . இதுவே வரலாற்று சான்றுகளை சர்வதேச நோக்கில் ஆவணப்படுத்தும் முதல் முயற்சியாக இந்தியாவில் அமைந்தது .
இந்திய தொல்லியல் வரலாறு அறிவியல்பூர்வமாக , உலகம் ஒப்புக்கொள்ளும் வகையில் ஆவணப்படுத்தும் போக்கு அப்போது முதலே துவங்கியது .
அதற்குமுன்வரை நம்மிடையே பலவிதமான கதைகள் இருந்தன ,காப்பியங்கள் இருந்தன ,இலக்கியங்களிலும் வரலாற்று செய்திகள் இருந்தன .
ஆயினும் அவைகளின் உண்மைத்தன்மைக்கு உத்திரவாதம் இல்லாமல் இருந்தது .அவைகளைப்பற்றிய பல செய்திகளை போகப்போக இந்தத் தொடரில் பார்க்கப்போகிறோம் .
அப்போதைய நிலையில் கி. பி 1750 களில்
முகலாயர் ஆக்கிரமிப்பு மட்டுமே வரலாற்று ரீதியில் அறியப்பட்டிருந்தது .
ஏனெனில் ஆங்கிலேயர் வருகைக்கு முன் முகலாயர் ஆட்சியில் இருந்தனர் .ஏனைய வரலாற்று சான்றுகள் கூடிய, ஆய்வுகள் தொகுப்பு வில்லியம் ஜோன்ஸ் போன்ற மனச்சாட்சியுள்ள , நேர்மையான , உண்மையை நாடிய பல கிழக்கிந்திய ஆங்கில அதிகாரிகள் தனிப்பட்ட ஆர்வம் எடுத்துக்கொண்டு, கிடைத்த அத்தகைய செய்திகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றனர்.
வரலாற்றின் வேர்கள் பகுதி இரண்டில் ராபர்ட் புரூஸ்புட் பற்றிய செய்திகளும் அவரின் ஆய்வுகளும் விவரிக்கப்பட்டிருந்தன .
உண்மையில் காலவரிசைப்படிக்கொண்டால் இவருக்கு முன்பே வேறு சில ஆங்கில ஆய்வாளர்கள் குறிப்பிடக்கூடியவர்கள் இருக்கின்றனர். எனினும் ஏன் இவரைப்பற்றி எழுத எடுத்துக்கொண்டேன் என்றால் அவரின் ஆய்வு இந்திய வரலாற்றில் அதுவும் தமிழக வரலாற்றில் மிக முக்கிய சான்றுகளை அளித்தன .
பல்லாவரத்தில் கிடைத்த ஒரு சிறிய கல் துண்டை, அது பல இலட்சம் ஆண்டுகளுக்கும் முந்தய தொல் மனிதனின் கல் ஆயுதம் என்று இந்திய ஆய்வாளர்கள் யாராவது நிறுவ முடிந்திருக்குமா என்பது ஒரு கேள்விக்குறிதான் .
இந்திய வரலாற்றைப் புரட்டிப்போடும் ஆய்வுகளைத் தொடங்கிவைத்தது. இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை ஆய்வு உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய பெருமை ராபர்ட் புரூஸ்புட்யே சாரும்.
ஆங்கிலேய நாட்டின் வரலாற்று அறிஞர் மைக்கேல் வுட் தனது “இந்தியாவின் கதை” (“ The Story Of India ”) (http://www.pbs.org/thestoryofindia) எனும் வலைத்தளத்தில் 70,000 – 50,000 ஆண்டுகட்கு முன்னர் இந்தியாவில் முதல் மனிதன் குடியேறினான் என்று பதிவு செய்தார் !
இத்தகைய பொய், புரட்டல் செய்திகளை மறுக்க நம்மிடையேயுள்ள உலகம் ஒப்புக்கொண்ட ஆதாரப்பூர்வமான தகவல்கள் ராபர்ட் புரூஸ்புட் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட பல்லாவரம் கற்கோடாரியும், அத்திரம், பாக்கம் மற்றும் குடியம் மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்கால கல், ஆயுதக்குவியல்கள் , சுமார் 150000-2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என அவர் ஆவணப்படுத்தியதுமே ஆகும் .
சமீபத்தில் இந்த இடங்களை மீண்டும் ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் ‘Early Pleistocene presence of Acheulian hominins in South India’ என்ற ஆய்வு அறிக்கையில் இவைகள் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என ரேடியோ கார்பன் முறையில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார் .
இத்தகைய உண்மைகள் வெளிவர உதவியவர் .. ராபர்ட் புரூஸ்புட் எனும் பெருமகனார் தான் இன்னமும் அவரைப்பற்றிக் கூற பல தகவல்கள் உள்ளன . அவைகளை பிறகு காணலாம்.
இப்போது வேறு பல வரலாற்றுத்தரவுகளை நிறுவ உதவிய வேறு சில கிழக்கிந்திய அலுவலர்களைப் பற்றி பார்க்கலாம் .
ஜேம்ஸ் பிரின்சப்
1799 ஆகஸ்ட் 20 இல் அவரது குடுபத்தின் ஏழாவது குழந்தையாக , அவரது தந்தை ஜான் பிரின்சப் ஏழையாக இருந்த போது பிறந்தார் . ஜான் பிரின்சப் பிழைப்பிற்காக இந்தியா சென்றார் ,செல்வந்தனானார் . அவரைத்தொடர்ந்து ஜேம்ஸ் பிரின்சப் 15 செப் 1819இல் இந்தியாவில் கல்கத்தாவில் இருந்த நாணய ஆலையில் நாணய உதவி அதிகாரியாகப் பதவி ஏற்றார் (deputy assay master Calcutta mint, ) பின் ஓர் ஆண்டுக்குப்பின் வாரணாசியில் இருந்த நாணய ஆலையில் நாணய உதவி அதிகாரியாக பதவி ஏற்றார் . வாரணாசியில் எங்கு காணினும் குவிந்து கிடந்த ஆலயங்களும் , தூபிகளும் , இடிபாடுகளும் முன்னமே சிறந்த கலை உணர்வு கொண்ட பிரின்சப் அவர்களின் கவனத்தை சுண்டி இழுத்தன .
அந்த காலத்து காசியின் காட்சிகளை அழகிய ஓவியங்களாகத் தீட்டினார் அவர். காசியின் துல்லியமான அந்த காலத்து வரைபடத்தைத் தயாரித்தார் .இன்னமும் அவைகள் இலண்டனில் உள்ளன .
பல வரலாற்று செய்திகளையும் ,சான்றுகளையும் தொகுக்கத் துவங்கினார். காசியில் இருந்த அவுரங்கசீபு கட்டிய அழியும் நிலைமையில் இருந்த தூபிகளை புணரமைத்தார் .
மீண்டும் கல்கத்தாவிற்கு மாறுதல் பெற்ற பிரின்சப் அங்கு வில்லியம் ஜோன்ஸ் ஆரம்பித்த ஏசியாட்டிக் சொசைட்டிக்கு துணைச் செயலராகவும் , அதன் வெளியீடுகளுக்கு ஆசிரியராகவும் பணியாற்றும் வாய்ப்பைப்பெற்றார் .
முதலில் அவரின் கவனத்தை ஈர்த்தது இந்தியா முழுவதிலுமிருந்து கிடைத்த மிகப் பழமையான நாணயங்கள் தான் .300 வருடங்களுக்கு முன் அத்தகைய தொல் நாணயங்கள் அதிகம் பொது மக்களிடையே கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருந்தது .
அப்போது பிரிட்டிசின் ஆளுகையில் இலங்கை ,பர்மா ஆகியவையும் இருந்தமையால் ஏராளமாக அப்பகுதிகளில் மக்களால் கண்டெடுக்கப்பட்ட இந்திய தொடர்புடைய பண்டைய தங்க, வெள்ளி, ஈய நாணயங்களை நாணய அதிகாரியாகப் பணிபுரிந்த பிரின்சப் ஆய்வு செய்யும் வாய்ப்பைப்பெற்றார் .
அக்காலத்தில் கிடைத்த தொன்மையான நாணயங்களில் வரிவரியாக பொறிக்கப்பட்டிருந்தவைகள் ஒரு வித எழுத்துக்கள். அவைகள் ஒரு மொழியை சார்ந்தவை என்பதைக்கூட அறியப்படாத காலத்தில், அவைகளை அறிவியல் உலகம் ஒப்புக்கொள்ளும் வகையில் புரிந்துகொள்ளச் செய்தவர் பிரின்சப் ஆகும் . இவரின் இந்த நாணயத்தில் இருந்த நாணயங்களின் லிபியை புரிதல் குஷானர்கள் என்று ஒரு வம்சம் இந்தியாவை ஆண்டது என்பதை இந்திய வரலாற்றில் நிறுவியது .
மேலும் அவரின் இந்த கண்டுபிடிப்பு இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஒருவரை கண்டுபிடிக்க உதவியது .
நம்மிடையே மட்டும் ஹெச் ஜி வேல்ஸ் (H.G Wells) எழுதிய கால இயந்திரம் மாதிரி ஒரு இயந்திரம் மட்டும் இருந்திருந்தால், நாமும் 300 வருடங்கள் முன்னே சென்று இந்தியா அப்போது எப்படி இருந்தது என்பதை எளிதாக அறிந்திருக்கலாம் . 5000 வருடங்கள் முன்னே சென்று சித்து வெளி நாகரீகம், பூம்புகார் நகரம் எப்படி அழிந்தது என்பதை எளிதில் அறியலாம் . ஆனால் உண்மையில் கிடைக்கும் சான்றுகளை வைத்து வரலாற்றை நிர்ணயிப்பதில், சான்றுகளைத் தொகுத்து சான்றுகளைப் பாதுகாப்பதில் பங்களித்த பலரைப் பற்றி நன்றியுடன் நினைத்துப் பார்ப்பது அவசியமே .
அடுத்த வாரம் ஜேம்ஸ் பிரின்சப் பற்றிய சுவையான பல செய்திகளைக் காணலாம்.
தொடருவோம்
-க.பிரகாஷ் எம்.ஏ, எம். பிஃல், (பிஎச்.டி)
வேளாண்மை பற்றிய சில கருத்துகள்
வேளாண்மை என்னும் சொல்லின் பகுதியாகிய வேளாண் என்னும் பெயர்ச் சொல்லை நுணுகி ஆராயின் அதன் வேர்ச்சொல் யாது என்பது நன்கு விளங்கும். வேளாண் என்னும் சொல்லை “வேள் – ஆள்” பிரிப்பர் இலக்கண நூலார். வேளாண் என்னும் சொல்லில் வேள் என்பது பகுதி ஆள் என்பது விகுதி வேள் என்னும் பகுதி வேர்ச்சொல்லாகும். அச்சொல்லுக்கு மண் என்பது பொருள்; ஆள்தல் என்னும் தொழில் பெயரில் விகுதி குறைந்து ஆள் என முதல்நிலைத் தொழில் பெயராய் நின்று வேள் – ஆள் – வேளாண் என ஒரு சொல் தன்மை பெற்றிருத்தல் வேண்டும். இச்சொல் மண்ணை ஆளுதல் என்ற பொருளைத் தருகிறது.
வேளாண் என்ற சொல் பிறப்புக்கு ஆராய்ச்சியில் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. சொற்கள் ஓரசையிலிருந்து தான் பல அசைகளாக வளர்ந்து இருக்கவேண்டும் என்பது மற்றொரு சாரார் கருத்து. இவ்விருவேறு கருத்துக்களில் முன்னதே பெரும்பான்மையான அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். ஒரு சொல்லின் வேர்ச்சொல்லைக் காணவேண்டின், முழுமையான சொல்லில் இருந்துதான் பகுதி, விகுதிகளைப் பிரித்தாய்ந்து காணவேண்டும். அவ்வகையில் வேளாண்மை என்னும் சொல்லும் பகுதி விகுதிகளாகப் பிரித்து அறியப்பட்டது. அன்றியும், தமிழ்ச் சொற்கள் எல்லாம் ஓரசை உடையனவே, என்றும் மொழியியல் அறிஞர் கால்டுவெல் அவர்களின் கருத்தும் இவ்வாராய்ச்சிக்குத் துணைபுரிவதாக அமைகின்றது.
வேளாண்மை என்னும் சொல்லின் வேர்ச்சொல் வேள் என்பதாகும் அச்சொல் வேள் – வேளாண் – வேளாண்மை என வளர்ந்துள்ளது என்பதே இன்றையக் கருத்தாகும்.
இலக்கியம் – இலக்கணங்களில் வேளாண்மை
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. (தொல் – பொருள் – மரபு – 81)
என்ற நூற்பாவில், தொல்காப்பிய முதல் உரையாசிரியராகிய இளம்பூரணர் வேளாண் என்ற சொல்லுக்கு வேளாண் மாந்தர் என்று உரை கூறுகின்றார். வேளாண் மாந்தர் பலவகைப்பட்ட தொழிலரேனும் உழும் தொழிலே பெரும்பான்மை ஆகலான் அதனையே சிறப்பித்துக் கூறுதல் மரபு எனக் குறித்துள்ளார். வேளாண் என்ற சொல்லுக்கு உழவர் என்றோ வேளாளர் என்றோ பொருள் குறிப்பிடாமல் இருவரும் வேளாண் மாந்தர் என்றே குறிப்பிடுகின்றனர். வேளாண்மை செய்யும் மனமுடையோர் பிறர்க்காகவும் தமக்காகவும் உழுது விளைப்பர் என்பதே அந்நூற்பாவின் பொருளாகும்.
எருது தொழில் செய்யாது ஓடவிடும்கடன்
வேளளர்க்கு இன்று. (பரி – 20 – 63)
தமது எருதைக் கொண்டு தாமே தொழில் செய்யாது பிறர்பால் விடுத்துத் தொழிலைச் செய்வது வேளாளர் கடமை அன்று என்று பொருளை அப்பாடலின் வரிகள் உணர்த்துகின்றன. இங்கே வேளாளர் என்போர் எருதைக் கொண்டு தொழில் செய்வோர் என்ற பொருள் தெளிவாக்கப்படுகின்றது. இது போன்ற மேற்கோள் அனைத்தும் தொல்காப்பியக் காலம் தொடங்கிச் சங்க காலம் ஈறாக வேளாண்மை என்னும் சொல் உதவி என்ற பொருளையும் உழவுத் தொழில் என்ற பொருளையும் உணர்த்தக் காண்கிறோம்.
திருக்குறள் கூறும் வேளாண்மை
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தேம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள் – 81)
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் மனைவியோடும் வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம் விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள் செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தன் பொருட்டு. (குறள் – 212)
பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டன் பொருட்டும் வைத்து இழத்தற் பொருட்டும் அன்று என்பதாயிற்று.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு. (குறள் – 613)
பொருள் கைகூடுதலால் உபகரித்ததற்கு உரியார் முயற்சி உடையோர் என்பார்; அவ்வக் குணங்கள் மேல் வைத்தும் அது பிறர்மாட்டு இல்லை என்பர் தங்கிற்றே என்னும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.
உழவு
சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (குறள் – 1031)
ஏர் என்பது ஆகுபெயர். பிறதொழில்களால் பொருளெய்திய வழியும் உணவின் பொருட்டு உழவர்கண் செல்ல வேண்டுதலின் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று வருத்தமில வேனும் பிறதொழில்கள் கடை என்பது போதர உழந்தும் உழவே தலை என்றும் கூறினார்.
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து. (குறள் – 1032)
காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு என்றாற் போல உழுவார் என்றது உழுவிப் பார்மேலுஞ் செல்லும். உலகத்தார் என்றது ஈண்டு இவரையொழிந்தாரை. கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின் ஆணி என்றார்.
பொறுத்தலான் என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவகம் அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொருத்து என்று பாடம் ஓதி அது மாட்டாதார் மரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொருத்து அவரைத் தொழுவாரே யாவர் என்று உரைப்பாரும் உளர்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (குறள் – 1033)
மற்று என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட் பிறப்பிறராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பு பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.
இராவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய் தூண் மாலை யவர். (குறள் – 1035)
செய்து என்பதற்கு உழுதலை என வருவிக்கக் கைசெய்தூண் மாலையவர் என்பது ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை. (குறள் – 1036)
உம்மை இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மை தாம் உண்டலும் இல்லறம் செய்தும் யாவர்க்கும் இல்லையாயின அவர் அறுப்பு மாத்திரமாய கை வாளாவிருப்பின் உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தேம் என்பார்க்கு என உரைப்பாரும் உளர். இவை பாட்டானும் அதனைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. (குறள் – 1038)
காத்தல் பட்டி முதலியவற்றால் அழிவெய்தாமல் காத்தல் உழுதல் எருப்பெய்தல் களைகட்டல் நீர்கால் யாத்தல் காத்தல் என்று இம் முறையவாது இல் வேண்டும்.
***
பார்வை:
திருக்குறள் வேளாண்மை – இல. செ. கந்தசாமி
திருக்குறள் பரிமேலழகர் உரை – எஸ். கௌமாரீஸ்வரி
-முனைவர் மு.இளங்கோவன்
இலக்கிய வடிவமும் பாடுபொருளும் படைப்போரும் ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்டு வந்துள்ளமையை இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியைக் கவனிக்கும்பொழுது அறியமுடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் இலக்கியப்போக்குகளில் புதுப்புது மாற்றங்களைக் காணமுடிகின்றது. அதில் ஒன்று சுயபுனைவு (Auto Fiction) என்னும் வெளியீட்டு முறை. தன் இளமைக்கால வாழ்க்கையைப் புனைவுகளை இணைத்து வெளிப்படுத்தும்பொழுது அரிய படைப்பாக இலக்கியம் உருவாகிறது.
தம் இளமைக்கால வாழ்க்கையைப் படைப்பாக்குவதில் மேற்குலகப் படைப்பாளிகள் முன்னின்றதைத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். 1977இல் சுயபுனைவு என்னும் சொல்லை வழங்கியவர் செர்ஜ் தூப்ரோவ்ஸ்கி (Serge Doubrovsky). குறிப்பாகப் பிரெஞ்சுத் தேசத்தில் வாழ்ந்த படைப்பாளிகள் மிகச்சிறந்த புனைவு இலக்கியங்களைத் தந்துள்ளனர். ஹினெர் சலீமின் ‘அப்பாவின் துப்பாக்கி’ என்னும் புனைவு இலக்கியம் குர்தீஸ்தான் விடுதலைப் போரை மிக அழகிய வடிவில் தந்துள்ளது. சலீம் சுயபுனைவாகத் தம் படைப்பை உருவாக்கினாலும் குர்தீஸ்தானின் பழைய வரலாறு, பண்பாட்டுச்சிறப்பு, வாழ்க்கை முறை என அனைத்தையும் நுட்பமாகப் பதிவுசெய்திருப்பார்.
சுயபுனைவு வடிவில் தமிழில் நிறைய படைப்புகள் சிறுகதையாகவும், புதினமாகவும், திரைப்படமாகவும், கவிதைகளாகவும் வந்துள்ளன. கி.ரா.வின் ’பிஞ்சுகள்’ என்ற குறுநாவல் சுயபுனைவுக்கு நல்ல சான்று. பேராசிரியர் த. பழமலய் அவர்களின் ’சனங்களின் கதை’ குறிப்பிடத்தக்க படைப்பு. சேஷாசலத்தின் ’ஆகாசம்பட்டு’, சிற்பியின் ’கிராமத்து நதி’ குறிப்பிடத்தக்க கவிதை இலக்கியங்களாகும். கிராமப்புறத்து நிகழ்வுகள், கதைமாந்தர்கள், சொல்லாட்சிகள் கொண்டு புதிய இலக்கியப் போக்காக இத்தகு நூல்கள் வெளிவந்த பிறகு பல்வேறு படைப்புகள் தமிழில் வெளிவந்தன. குறிப்பாக நடுநாட்டு இளைஞர்கள் தங்கள் படைப்புகளில் தங்கள் வாழ்க்கை, பழக்க வழக்கம், குடும்ப அமைப்பு, ஊர், உறவு, தெய்வம் என அனைத்தையும் உள்ளடக்கிய படைப்புகளை வழங்கினர். தங்கர்பச்சானின் ’ஒன்பதுரூபாய் நோட்டு’, ’வெள்ளைமாடு’, ’கொடிமுந்திரி’ உள்ளிட்ட படைப்புகளைச் சொல்லலாம். கி. தனவேல் இ.ஆ.ப. அவர்களின் ’செம்புலச் சுவடுகள்’ நூலில் புதுக்கூரைப்பேட்டை (இன்றைய நெய்வேலியின் பகுதி) மக்களின் வாழ்க்கைச் சுவடுகள் பதிவாகியுள்ளன.
’வெட்டிக்காடு’ என்னும் தம் ஊர்ப்பெயரில் பொறியாளர் இரவிச்சந்திரன் எழுதியுள்ள நூல் சுயபுனைவு வடிவில் வந்துள்ள சிறந்த நூலாக புலப்படுகின்றது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் நல்ல மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதன்மை பெற்றுப் பாராட்டுப் பெறுவதை ஆண்டுதோறும் காண்கிறோம். இப்படித் திறன் படைத்த மாணவ மாணவியர் பிற்பாடு என்ன ஆனார்கள் என்பதை அவர்களே சொன்னால்தான் உண்டு. இந்நூல் பள்ளியில் பத்தாம் வகுப்பில் மாநில முதன்மைபெற்ற கிராமத்து மாணவரான இரவிச்சந்திரன் கல்வி தனக்கு ஏற்றம் தந்ததை விளக்கும் நூல்.
இரவிச்சந்திரன் இப்போது உலகளாவிய அளவில் முன்னோடித் தொலைத்தொடர்பு கட்டமைப்புத் திட்டங்களில் (Telecommunications Network) மின்னணுப் பொறியாளராக பணியாற்றுகிறார். மிகச் சிறந்த எழுத்தாளராகவும் மலர்ந்துள்ள இவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, பணியின் காரணமாகச் சிங்கப்பூரில் வசித்துவருகிறார். ஒவ்வொரு நாளும் அலுவல் காரணமாகக் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கிறார். வானுலக வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் தாம் பிறந்த வெட்டிக்காடு என்னும் சிற்றூரின் நினைவு இவரைப் பேயைப் போல் பிடித்தாட்டியதால் தம் அனுபவங்களை 2003 முதல் எழுதத் தொடங்கினார்.
இரவி 17 வயது வரை தஞ்சை மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு ஊரில் வாழ்ந்து, சராசரி உழவர் குடும்பத்தின் அனைத்து வகையான மேடுபள்ளங்களையும் கடந்து, கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணுப் பொறியியல் படித்து, தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் பட்டம் (எம்.பி.ஏ) பெற்றவர். பத்தாம் வகுப்பில் மாநில அளவில் தர முதன்மை பெற்று, இந்திய அரசின் உதவித் தொகைபெற்றுப் பொறியியல் கல்வி பெற்றவர். இவரின் உள்ளம் கிராமத்து இளைஞனின் உள்ளம். பதினேழு வயதுவரை வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஆழ்மனத்துள் புதைந்து கிடந்து, நேரமும் சூழலும் உந்தித் தள்ள அவை சிறுகதை, கவிதை, எழுத்துரை எனப் படைப்புகளாக வெளிவந்துள்ளன.
தம் கிராமத்து இளமைக்கால நினைவுகளையும் சில உண்மை நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது கட்டுரையாக்கிய இவர், இவற்றைத் தொகுத்து வெட்டிக்காடு என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். வெட்டிக்காடு, காடுவெட்டி என்னும் ஊர்ப்பெயர்கள் பண்டைக்காலத்தில் மக்கள் காடு கரம்புகளை அழித்து ஊராக்கிய வரலாற்றைச் சொல்கின்றன. அந்த வகையில் வயலும் வயல்சார்ந்த பகுதியுமாக விளங்கும் வெட்டிக்காடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த சோமு ஆலம்பிரியர் என்னும் நெல்வணிகரின் மகனாகப் பிறந்து, படிப்புடன் ஊடுதொழிலாக ஆடுமாடுகளை மேய்ப்பது, ஏரோட்டுவது, பனங்காய் வெட்டுவது, நாவல்பழம் பறிப்பது என்று கிராமத்துக்குரிய அனைத்துப் பொழுதுபோக்குகளையும் பயின்ற ஒரு பட்டிக்காட்டுச் சிறுவனின் இளமைக்கால நிகழ்வுகள்தான் இந்த வெட்டிக்காடு நூலின் உள்ளடக்கமாக விரிந்து நிற்கின்றது.
வெட்டிக்காடு நூலில் கரைந்த எழுத்தாளர் வேல. இராமமூர்த்தி, முனைவர் ம.இராசேந்திரன், நீதியரசர் நாகமுத்து ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் சிறப்புகளை இனங்காட்டியுள்ளன. இரவிச்சந்திரனின் இன்றைய வளர்ச்சி நிலையையும், கடந்துவந்த பாதைகளையும் வியப்புடன் பார்த்து மகிழும் அணிந்துரை அறிஞர்கள் தங்கள் இளமைக்கால நிகழ்வுகளையும் கிராமப்புறங்கள் நாகரிக வளர்ச்சியால் அடையாளங்களை இழந்து வருவதையும் மறவாமல் பதிவுசெய்துள்ளனர்.
சமூக, பொருளாதார மேல்சாதிக்காரர்களால் வரலாறு எழுதப்படும் சூழலில் அடித்தட்டு மக்களின் வரலாறு (Subaltern History) எழுதப்பட்டு வருவதை வரவேற்கும் சுந்தர்ராஜ் மாணிக்கம் போன்றவர்களை நினைக்கும்பொழுது வெட்டிக்காடு நூலின் முக்கியத்துவம் விளங்கும்.
பன்னிரண்டு தலைப்புகளில் அமையும் வெட்டிக்காடு நூல் உழைக்கும் மக்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.
வெட்டிக்காடு என்னும் முதல் தலைப்பில் ஊர் அமைவிடம், உழவுத்தொழில் செய்யும் மக்களின் நிலை, ஊரின் காலைக்காட்சி உள்ளிட்ட, தாம் பதினேழு ஆண்டுகள் வாழ்ந்த ஊரின் சிறப்புகளை இரவி பதிவுசெய்துள்ளார். உழுதல், விதைத்தல், பறித்தல், நடுதல், அறுத்தல் என்று ஆறுமாதம் ஊர் அமர்க்களப்படும். இங்கு நடவுப்பாடல் வழியாகவும், தெருக்கூத்துகள் வழியாகவும் இசைத்தமிழ் வளர்ந்ததை இரவிச்சந்திரன் குறிப்பிடுகின்றார். மாடுமேய்த்தலும், ஆடுமேய்த்தலும் கிராமங்களின் தேசியத்தொழிலாகும். கபடி விளையாடுதல், ஓரியடித்தல், கிளிகோடு பாய்தல், பந்தடித்தல், பட்டம் விடுதல் போன்ற கிராமத்து விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
வெட்டிக்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி பெருந்தலைவர் காமராசரின் கல்விக்கொடையால் கிடைத்தது. இரண்டு ஆசிரியர்களுடன் எழுபத்தைந்து மாணவர்களைக் கொண்டு பீடுநடைபோட்ட பள்ளி அது. இரவிச்சந்திரன் நான்காம் வயதில் அடம்பிடித்துப் பள்ளிக்குச் சென்றது முதல் சுப்பிரமணியன் ஆசிரியரிடம் அகரம் பயின்றது வரையிலான செய்திகளைப் படிக்கும்பொழுது கிராமத்து மனிதர்கள் அனைவரும் தங்களின் இளமை வாழ்க்கைக்குக் கட்டாயம் திரும்புவார்கள். ஒன்றாம் வகுப்பில் (1973) சேர்ந்தது தொடங்கி தம் வாழ்க்கைக் குறிப்புகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார் இரவி. வேப்பங்குச்சியில் பல்துலக்கியது, கிராமத்து ஏரிகளில் குளித்தமை பற்றி விளக்கும் இரவிச்சந்திரன் பேஸ்ட், பிரஷ், சோப் நாங்கள் பார்க்காதது என்கின்றார். பழைய சோறும் தயிரும் உணவாக அமைந்த கிராமத்து வாழ்க்கையில் இட்டிலி, தோசை போன்ற உணவுகள் பொங்கல் தீபாவளியில்தான் கிடைக்கும் என்கின்றார். நம் உணவு, பழக்க வழக்கம், பண்பாட்டு மாற்றங்கள் எவ்வாறு மாற்றங்களைச் சந்தித்துள்ளன என்பதை எதிர்காலத் தலைமுறைகள் அறிந்துகொள்வதற்கு இந்த நூல் ஒரு சமூக ஆவணம்.
அக்கா திருமணத்தன்றும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்ததைப் பாராட்டிய சுப்பிரமணியன் சாரின் பேருள்ளம் இந்த நூலில் பதிவாகியுள்ளது. பள்ளிக்கு நாள்தோறும் செல்லும் பழக்கத்தை நினைவூட்டும் இரவி, பின்னாளில் இரண்டு முறை விடுப்பெடுக்க நேர்ந்தமைக்கான காரணத்தையும் கூறத் தயங்கவில்லை, பன்னிரண்டு ஆண்டு பள்ளி வாழ்க்கையில் மஞ்சள் காமாலை நோயும், கடுங்காய்ச்சலும் விடுப்பெடுக்க வைத்ததைக் குறிப்பிடுகின்றார் (பக்கம் 42). எட்டுக் கிலோ மீட்டர் தொலைவிலிருந்த மன்னார்குடிப் பள்ளிக்குப் பேருந்தில் செல்லக் காசு இல்லாதபொழுது, நடந்தே சென்றுள்ளதையும் காலில் செருப்பில்லாமல் நடந்துபோனதால் தார் காலில் படிந்து சுட்ட நிலையையும் படிக்கும்பொழுது இரவியின் வறுமை வாழ்க்கை கண்ணீர்வரச் செய்கின்றது.
அரசுப்பள்ளிகள் ஆதரிப்பார் இன்றிக் கிடக்கும்பொழுது, இன்றைய கான்வென்டு கல்விக்கூடங்கள் வேன்களிலும் ஆட்டோக்களிலும் கிராமத்துப் பிள்ளைகளைச் சீருடைகளில் அள்ளிக்கொண்டு போவதைக் காணும்பொழுது தமிழகக் கல்வி வரலாறு இருவேறு துருவங்களில் பயணம் செய்வதை உணரலாம். ‘எருமை மாடு மேய்க்கிறவனுக்கும் மாட்டுக்கறி திங்கிறவனுக்கும் படிப்பு வராது” என்று சுப்பிரமணியன் ஆசிரியர் சொன்னதை நினைத்த இரவி மாடுமேய்க்க மறுத்த நிகழ்வும் பதிவாகியுள்ளது. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இளமை வாழ்க்கையைத் திறந்து காட்டியுள்ள இரவியின் எழுத்துகள் தமிழ்க் கல்வி வரலாற்றை அறிய விரும்புவர்களுக்குப் பேருதவி புரிவன.
கிண்டி பொறியியல் கல்லூரியில் சேரும் தம் பதினேழாம் வயதுவரை மாடுமேய்த்த வரலாற்றை நினைவுகூர்ந்துள்ளார். படிப்பறிவு இல்லாத அம்மாவுக்கு மாடுமேய்ப்பதைச் செய்யாத மகன்மேல் எப்பொழுதும் கோபம்தான். எழுதிய நோட்டுகளைக் கிழித்தமை, நான்காம் வகுப்பில்தான் ஏபிசிடி படிக்கத் தொடங்கியது, ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெயர் எழுதியது என்று பூர்வாசிரம வரலாறு பதிவாகியுள்ளது. ஆங்கிலத்தில் 36 மதிப்பெண் வாங்கியதற்குத் திட்டித் தீர்த்த இந்திரா டீச்சர், “பர்ஸ்ட் ரேங் மாணவன் சீனிவாசன் ஆங்கிலத்தில் 98… நீயெல்லாம் கிராமத்துல மாடு மேய்க்கதான் லாயக்கு” (பக்கம் 52) என்று கூறிய கண்டிப்புச் சொற்களும் அவமானச் சொற்களும்தான் இரவியை உயர்ந்த இடத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளன. அதே இந்திரா டீச்சர் இரவியின் மாநில முதன்மை மதிப்பெண் பார்த்து, வாழ்த்தியிருப்பது நெகிழ்ச்சி! தம் இளமைக்கல்விக்கு வித்திட்ட சுப்பிரமணியன் சார், முத்துக்கிருஷ்ணன் சார் இருவரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
பள்ளியைத் திறப்பது, கூட்டுவது, மணி அடிப்பது, உணவுக்குரிய பொருள்களை எடுத்துத் தருவது, உணவு சமைப்பது, பரிமாறுவது, ஆசிரியர்களுக்குத் தேநீர் வாங்கிவருவது, ஆசிரியர்களின் வயல்வேலைகளின்பொழுது அதற்குரிய குற்றேவல் செய்வது, ஆசிரியர்கள் வராதபொழுது வகுப்புகளை அமைதியாகப் பார்த்துகொள்வது, பள்ளியைப் பூட்டிச் செல்வது வரையிலான கிராமப்புறப் பள்ளிப் பணிகளை மனந்திறந்து எழுதியுள்ளார். இந்த வாழ்க்கையை இன்றைய மாணவர்கள் கேட்பதற்குக்கூட வாய்ப்பில்லை.
தேர்வில் பார்த்து எழுதுவது தவறு என்பதை அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்த இரவி தம் கிண்டி பொறியியல் கல்லூரிச் சம்பவங்களை நினைவுப்படுத்தி, அங்கும் தான் பார்த்து எழுதாமல் நேர்மையாக எழுதியதைப் பதிவு செய்கின்றார். தவறு செய்வதற்குரிய வாய்ப்பு வந்தாலும் அங்கும் நேர்மையுடன் நடந்துகொள்ளும் உயர்பண்பே இவருக்கு வாழ்க்கையில் முன்னேற்றங்களைத் தந்தது என்கின்றார். வெட்டிக்காடு தொடக்கப்பள்ளியில் பெற்ற படிப்பு, நேரம் தவறாமை, ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைத் முழுமனத்துடன் திறம்படச் செய்தல், நேர்மை போன்ற பண்புகளே முன்னேற்றத்திற்குக் காரணம் என்கின்றார்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள உன்னால்முடியும் தம்பி என்ற சிறுகதையில் சண்முகம் என்ற பாத்திரத்தின் வழியாக இரவி தம் இளமைக்கால வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். வெட்டிக்காட்டுக்கு அருகில் உள்ள மூவாநல்லூர் கிராமத்தில் ஏழாம் வகுப்புப் படித்தபொழுது கடலைச்செடிக்குத் தண்ணீர் இறைத்திருக்கிறார். பெற்றோரோ கல்விக்கு ஆதரவு தரவில்லை. இந்நிலையில் ஆசிரியர் இராஜகோபால் என்பவர் கொடுத்த ஊக்கமும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்து மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள தடைகளையும் உதவிய ஆசிரியர்களின் செயல்பாடுகளையும் இரவி நினைவுகூர்ந்துள்ளார். வறுமையில் படித்து முன்னேறி, அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியாளராக உயர்வு பெற்றுத் தாம்படித்த பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த நிலையை அழகிய கதையாக்கிக் காட்டியுள்ளார். கவிதை, கதை, உரைநடை என்று பல்வேறு வடிவங்களில் இந்தப் படைப்பை அமைத்துள்ளார்.
அய்யனார்சாமி என்ற சிறுகதையில் புலவர் சவுந்தரராசன் பகுத்தறிவுக் கொள்கையுடையவர் எனவும், அச்சம் என்பதை அறியாதவர் எனவும் தவறு செய்யும் மாணவர்களைத் தண்டிப்பதில் தயக்கம் காட்டாதவர் எனவும் அறிமுகம் செய்கின்றார். அதே நேரத்தில் ஏழை மாணவர்களுக்குப் புத்தகம், குறிப்புச்சுவடி வாங்கித் தருவதுடன் தம் மன்னார்குடி வீட்டுக்கு விடுமுறை நாளில் வரச்செய்து உணவுகொடுத்துப் படிப்புச்சொல்லித் தருவார் என்றும் அவரின் பொறுப்பார்ந்த ஆசிரியப்பண்புச் சிறப்பையும் நமக்கு அறிமுகம் செய்துள்ளார். புலவர் ஐயா தம் இடுப்பில் கத்தியை எப்பொழுதும் செருகியிருப்பார் எனவும் ஒருமுறை விடுப்புத் தராத தலைமையாசிரியரின் மேசைமீது கத்தியை எடுத்துக் குத்தி, மிரட்டியதையும் இக்கதையில் இரவி குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் செய்யும் குறும்புகளைக் கவனித்துப் புலவர் கடும் தண்டனை கொடுத்ததால் பல மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போனதையும் குறிப்பிடுகின்றார். கடைசி பெஞ்சு இராமமூர்த்தி அய்யனார்சாமி போல் அருள் சொன்னதை விளக்கியுள்ள காட்சி இரவியிடம் மிகச்சிறந்த எடுத்துரைப்பு ஆற்றல் உள்ளதை நமக்கு நினைவூட்டுகின்றது.
’கொட்டாப்புலிக் காளைகள்’ என்ற தலைப்பில் இரவி எழுதியுள்ள செய்திகள் படிப்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்வுகளாக விரிந்துள்ளன. அப்பா பட்டுக்கோட்டைச் சந்தையிலிருந்து வாங்கிவந்த கன்றுக்குட்டிகள் வளர்ந்து ஏரோட்டவும், வண்டியில் பூட்டவும் பழக்கிய நிகழ்ச்சிகளைக் கண்முன்கொண்டுவந்து இரவி நிறுத்துகின்றார். அப்பா, அம்மா, வீட்டு வேலையாள் நாகநாதன் மூவர்தான் அந்தக் கொட்டாப்புலிக் காளைகளைப் பிடிக்கமுடியும் என்ற நிலையில் ஊரில் சண்டியராக வலம்வந்த வேணு ஆலம்பிரியரை அந்த மாடுகள் முட்டி வேலியில் தள்ளியதையும் அம்மாவின் குரலுக்குப் பணிந்து அந்த மாடுகள் அம்மாவை நெருங்கி வந்ததையும் அறியும்பொழுது நமக்கு ஆச்சரியத்தை இந்தக் கதை ஏற்படுத்துகின்றது.
வீட்டில் வளர்க்கப்படும் மாடுகள் அறிவுள்ளவையாகவும், மானமுள்ளவையாகவும், வீரமுள்ளவையாகவும் இருப்பதைக் கொட்டாபுலிக் காளைகள் கதை உணர்த்துகின்றன. ஒவ்வொரு நாளும் தம்மைக் கவனிக்கும் அம்மா, அப்பா, நாகநாதனைத் தவிர மற்றவர்களைத் தம்மை நெருங்கவிடாமல் செய்யும் கொட்டாபுலிக் காளைகளைப் போல் வரலாறு படைத்த பல காளை மாடுகள் தமிழகத்தின் கிராமங்களை ஆட்சிசெய்துள்ளதை ஒவ்வொரு உழவனும் தங்கள் வாழ்க்கையை எழுதும் பொழுது இதுவரை தமிழுக்குக் கிடைக்காத கதைக்கருக்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். தம் குடும்பத்தினருடன் வண்டிமாடுகளை இணைத்துப் புகைப்படம் எடுப்பதையும், மாடுகளின் அருகில் நின்று புகைப்படும் எடுப்பது, வண்டியோட்டுவதுபோல் புகைப்படம் எடுப்பது தமிழகத்து உழவர்களின் விருப்பமாகும்.
’கொள்ளிவாய்ப் பிசாசுகள்’ என்ற கதையில் கிராமங்களில் காலம் காலமாக நம்பப்படும் கொள்ளிவாய்ப் பிசாசுக் கதையைச் சொல்லி தம் அண்ணன் இந்திரஜித் மூலமாகப் பயம் தெளிந்த தம் அனுபவத்தை எழுதியுள்ளார்.
’நாவற்பழம்’ சிறுகதையில் பள்ளி நிகழ்வுகள் பேசப்படுகின்றன. மாரியப்ப கண்டியர் வீட்டின் நாவல்பழம் திருடித் தின்னும் நிகழ்வு தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. இரவி, உப்பிலி, இராதா மூவரும் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறிப்பதும் இந்தக் கூட்டுக்கொள்ளையில் பங்கேற்காத இளஞ்செழியன் இரவியின் அப்பாவிடம் பற்றவைப்பதும், அப்பாவின் தண்டனையும் இந்தச் சிறுகதையைச் சுவையுடையதாக்குகின்றது. அன்று அப்பாவிடம் வாங்கிய அடிதான் முதலும் முடிவும் என்று கதையை இரவி முடித்துள்ளார்.
’பொங்கல்’ என்ற தலைப்பில் இரவிச்சந்திரன் எழுதியுள்ள எழுத்துரையில் கிராமங்கள் எவ்வாறு தம் பாரம்பரிய இயல்புகளை இழந்து, தனித்தன்மை கெட்டு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன என்பதைப் பதிவு செய்துள்ளார். பொங்கல் திருவிழா உறவினர்கள் ஒன்றுகூடி நடத்தும் பெருவிழாவாக நடைபெற்று மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்த நிலைமாறிக் கிராமங்களில் பிரிவுகள் உண்டாகி, மனக் கசப்புகளால் பிரிந்து கிடக்கும் நிலையை எடுத்துரைத்துள்ளார். வழிபாட்டு முறைகள், உறவினரின் ஒன்றுகூடல், சிற்றூர்ப்புறப் பழக்க வழக்கங்கள், கிராமப்புற விளையாட்டுகள், சிற்றூர் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், சடங்குகள், வேளாண்மை, பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டும் எழுத்துரைகளாக இரவியின் எழுத்துரைகள் உள்ளன. ஒற்றுமையுடன் வாழ்ந்த கிராமத்து மக்கள் சண்டை சச்சரவுகளால் போலிஸ், கோர்ட்டுக்குச் செல்லும் நிலையில் உள்ளதைக் கவலையுடன் பதிவுசெய்துள்ள இரவியின் ஆதங்கம் ஒவ்வொரு எழுத்திலும் பதிவாகியுள்ளது.
களவாணி திரைப்படம், குற்றப்பரம்பரை புதினம் குறித்த மதிப்பீடுகளையும் எழுதியுள்ளார்.
அப்பா என்னும் தலைப்பில் எழுபது வயதுவரை வாழ்ந்து, இயற்கை எய்திய தம் தந்தையின் குணநலன்களை இரவி வரலாறாக்கியுள்ளார். ஒவ்வொரு மகனும் தந்தையின் வரலாற்றை எழுதும்பொழுது தமிழகப் பண்பாட்டு வரலாறு முழுமையடையும். அன்பின் வடிவமாகவும், பாசத்தின் உருவமாகவும் விளங்கிய தம் தந்தை சோமு ஆலம்பிரியர் குழந்தைகள் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் என்பதைப் பல சான்றுகள் காட்டி விளக்குகின்றார். உழைப்பால் உயர்ந்த தன் தந்தை வெட்டிக்காட்டு மக்களும் சுற்றுவட்டார மக்களும் போற்றும்படியாக வாழ்ந்தவர் என்பதை ஒவ்வொரு கருத்துகளாக அடுக்கிக்காட்டி ஒரு சித்திரமாக நமக்கு வரைந்து காட்டுகின்றார். அப்பா பிள்ளைகளைப் படிக்க வைத்த பாங்கு, கூத்துக்கலையில் அவருக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டி, சிலநாளில் குடிப்பது உண்டு என்று பதிவு செய்து நடுநிலையாளராக இரவி நமக்குக் காட்சி தருகின்றார்.
சோமு ஆலம்பிரியர் நேர்மையாளர்; வணிகத்தை உயர்வாகப் போற்றியவர்; தொழில் தர்மம் கடைப்பிடித்தவர்; நம்பிக்கைக்குப் பெயர் பெற்றவர்; தம் பிள்ளைகளின் படிப்பு, பணிக்காக வீட்டிலிருந்த நகைகளை விற்றாலும் உழைத்து வாங்கிய நிலங்களை விற்க மறுத்தவர். தந்தை 69 ஆம் வயதில் இயற்கை எய்திய நேரத்தில் இரவியின் செமஸ்டர் தேர்வு தொடங்கியதால் அப்பாவின் இறப்புச் செய்தியைப் பத்துநாள் கழித்துதான் தெரிந்துகொண்டார்.” அமெரிக்கக் குடியுரிமை பெற்று இன்று நல்ல வேலையில் ஓரளவு வசதியான வாழ்க்கை. ஆனால் பார்க்கத்தான் அப்பா இல்லை!”(பக்கம் 124) என்று முடித்துள்ளமை நம் கண்ணில் கண்ணீர் வரச்செய்கின்றது.
’தேடுகிறேன்’ என்ற தலைப்பில் பிறந்து வாழ்ந்த வெட்டிக்காடு கிராமத்தில் இருந்த மக்களின் வாழ்க்கைமுறை, பண்பாடு, தொழில் யாவும் மாற்றமடைந்து புதிய தலைமுறை உருவாகிவிட்டதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். உழவுமாடுகள், நடவு, அறுவடை, கதிரடிக்கும் காட்சிகள், ஏற்றம், முச்சந்தி உரையாடல், கோயில் திருவிழாக்கள், கூத்துகள், சிற்றூர் விளையாட்டுகள், உடையலங்காரம் யாவும் மறைந்து வெட்டிக்காடு புதிய வடிவம் பெற்ற்றுள்ளதைக் கண்டு, தாம் ஓடி விளையாண்ட கிராமம் எங்கே என்று கேட்கும் ஒரு கேள்வியில் நூறாண்டு மாற்றம் அடங்கியுள்ளதை உணரலாம்.
நூலில் உள்ள எழுத்துப் பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும்.
சுய புனைவாகத் தெரியும் வெட்டிக்காடு நூல், தன் வரலாறாகவும், குடும்ப வரலாறாகவும், ஊர் வரலாறாகவும் தமிழர் பண்பாட்டு வரலாறாகவும் உயர்ந்து நிற்கின்றது.
குறிப்பு: வெட்டிக்காடு நூல் 18.12.2016 மாலை தஞ்சையில் வெளியிடப்பட்ட து.
***
நூல்: வெட்டிக்காடு
ஆசிரியர்: இரவிச்சந்திரன்
பக்கம்: 128
விலை: ரூ. 150 – 00
கிடைக்குமிடம்: சோ. இரவிச்சந்திரன், 14 ஏ, புளோரா சாலை,
# 08-02அளாளியா பார்க், சிங்கப்பூர் 509 731
மின்னஞ்சல்: vssravi@gmail.com
( எம். ஜெயராமசர்மா …… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )
நடந்துநீ திரிந்தால் நலனுன்னைச் சேரும்
கிடந்துநீ இருந்தால் கிழடுன்னை நாடும்
பழங்களை உண்டால் பலனுன்னை சேரும்
இழப்புகழ் தவிர்க்க இயற்கையை நாடு !
பயிர்ச்சிகள் செய்தால் உயர்ச்சியைத் தொடுவாய்
அயர்ச்சிநீ அடைந்தால் முயர்ச்சிகள் விடுவாய்
தளர்ச்சியை தவிர்த்தால் தலை உயர்ந்திடுவாய்
வளர்ச்சியை நினைத்து வாழ்வினை அமைப்பாய் !
போதனை கேட்டிடல் சாதனை ஆகுமே
வேதனை போக்கிட விரும்பிடு நீயுமே
மாதினை மயக்கத்தை வரையறை செய்திட்டால்
காசினி மீதிலே மாசின்றி வாழுவாய் !
இறைவனை எண்ணினால்
இன்புடன் வாழலாம்
குறையெலாம் அகன்றுநீ
நிறைவுடன் வாழலாம்
கறையுடை மனத்தினை
காணாமல் செய்திடில்
உலகினில் உன்னதம்
உன்னுளே உதித்திடும் !
அன்னை மரி மைந்தன் வரவை நோக்கி
ஆகாய நட்சத்திரங்களும் தவம் தான் கிடக்க
இயேசு எனும் நாமகரணத்துடனே தான் தோன்றி
ஈடற்ற மகிழ்ச்சியினை உலக மக்களுக்கே வழங்கி
உள்ளமெல்லாம் அன்பும் அமைதியும் நிலவ
ஊக்கத்துடன் அல்லேலூயா என்னும் ஒலி முழங்க
எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டுமென்று
ஏக மனதாய் அனைவர் மனதிலும் எண்ணத்தை விதைத்த
ஐயனே! பரிசுத்த தூயனே! எங்கள் ஆண்டவரே!
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட உரைத்த குணவானே
ஓதி மகிழ்வோம் எந்நாளுமே உந்தன் அழகிய திருநாமமே!
அனைவரையும் காத்து இரட்சிப்பீராக ஆண்டவரே!
பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்!
சக்தி சக்திதாசன்
அன்னை மேரி மாதாவின்
அன்பு மைந்தனாய் உதித்த
தேவ மைந்தனின் நேசமிகு
தேனமுதத் துளிகள் இனித்திடும்
அகிலத்தின் அடக்குமுறைகள்
அனைத்தையும் உடைத்தெறிய
அன்பெனும் ஆயுதத்தை எமக்கு
அளித்திட்ட தேவகுமாரன்
நேற்றைகளின் சுமைகளிலிருந்து
இன்றெமை காத்திட தன்னை
சிலுவைக்கு இரையாக்கிய
சித்தர்களுக்கெல்லாம் சித்தன்
அன்றாடம் நாம்புரியும் பாவங்களை
அன்போடு முட்கிரீடமாய் சுமந்து
அன்பு ஒன்றே உலகின் மொழியென்று
ஆணித்தரமாய் உணர்த்திட்ட தேவன்
சுரந்திடும் உணர்வுகளில் மிதந்திடும்
சுகந்தமான நினைவுகளை எமக்கு
சுவைத்திடும் வகையில் புகட்டிட்ட
சுந்தர புருஷன் இயேசுபிரான்
புலர்ந்திடும் நாளைகள் புதிதாய்ப்
பல புதுமைகளை ஈந்திட என்றும்
நிறைந்திடும் மனதில் பொழிந்திடும்
அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
க. பாலசுப்பிரமணியன்
திருவெள்ளியங்குடி – அருள்மிகு கோலவல்வில் இராமர் திருக்கோவில்
மாபலியின் மமதையை மூவடியில் அடக்கிவிட
மாதவனின் மனமறிந்து மருண்டான் சுக்கிரன
மாயவனின் உளமறிந்தும் மனமுவந்த மன்னனின்
மங்கல நீர்வழியில் மலர்வண்டாய் மாறிநின்றான் !
ஒளியிழந்த துளைதன்னில் வருநீரை வழிமறித்து
ஒளிந்திருந்த சுக்கிரனின் விழியொளியைப் பறித்து
பழிதீர்த்த பரந்தாமா ! கருணைமழை கார்மேகா!
விழிகொடுத்த விக்ரமா! உலகாளும் உத்தமனே !
மூவடியால் உலகளக்க முன்னவனே முடிவணங்க
திருவடியால் அளந்தவனும் திருவோணம் தந்துவிட
பொன்னடியே அரங்கா! விண்ணுறையும் என்னுயிரே!
சீரடியைக் கொண்டேன் சிந்தையிலே வந்தருள்வாய்!
அமரர்கள் இருப்பிடமே அழகெனச் சொல்லி
மாயவன் திறமையில் மனக்குறை கொள்ள
மாதவன் மனம்கவர் ஆலயம் அமைத்தே
மண்ணில் நிகரில்லா மாயத்தைத் தந்தவனே !
குழலேந்திக் கவர்ந்தாய் கோபியர் மனமெல்லாம்
வில்லேந்தி வந்தாய் மனையாளைக் காத்திடவே
புள்ளேரிப் பறந்தாய் கஜேந்திரனின் குரல்கேட்டு
விதியேந்தி வந்தேன் மதிக்காக்க வருவாய் !
அரவணையில் உறங்கியது போதுமய்யா பரந்தாமா
மார்கழியும் பிறந்ததுவே மனம்குளிர்ந்து எழுந்திடுவாய்
பாரனைத்தும் வேண்டிநிற்கும் நின்பதம் கொடுப்பாயோ
பாற்கடலின் தேனமுதில் பங்கெனக்கும் தருவாயோ ?
இன்று ஸ்ரீராமரை புகழ்ந்து பாடுகிறாள் கண்ணனைக் காதலித்த கோதை….காரணம் ஸ்ரீராமரைப் புகழ்ந்தால் கண்ணன் நிச்சயம் வருவார்….!கண்ணனை அழைக்க ஸ்ரீராமரை கொண்டுகூட்டுகிறாள்(அன்னுவயக்) கோதை, கெட்டிக்காரி….!
”அண்ணலைப்(இராமரை) பாடினால் கண்ணன் பொறாமையில்
மின்னலாய் முன்வருவான் மேகவண்ணன் -சின்னவர்(இலக்குவணர்)
பின்வர லங்கை, பிராட்டிக்காய்ப் போனவரை(ஜானகி -காரணம், லங்கேஸ்வரரை வென்றது -காரியம்)
அன்னுவயக் கோதை அழைப்பு’’….!கிரேசி மோகன்….!
திருக்கண்டியூர்-அருள்மிகு ஹரசாப விமோசனப் பெருமாள்
அஞ்சுதலை பிரம்மனின் அடிபணிந்த உமையுமே
வஞ்சகமோ இதுவென்று நெஞ்சமதில் துவண்டு
அஞ்சுதலும் நீங்கிட அஞ்சிலொன்றைக் கேட்டிட
நஞ்சுண்ட நாயகனும் நான்முகனைப் படைத்தான் !
கொன்ற பாவம் கொண்டசாபம் கூடிநிற்க
கொய்த தலை கையேந்திக் கூத்தனுமே
செய்தவினை சீரடையக் கையேந்தி நின்றான்
சிதம்பரத்துச் சீமான் பிச்சைக்கேட்ட பெரியோன் !
கைநின்ற கபாலத்தை விலக்கிடவே கயிலனும்
வேண்டி நின்றான் வேங்கடனை வினைதீர்க்க
அஞ்சுதலை நாகத்தை அணிகொண்ட அரங்கனும்
நஞ்சுண்ட நாதனைக் காத்திடவே நலமுற்றான் .
மண்ணுக்குச் சாபம் மலரில்லா நிலமன்றோ
மலருக்குச் சாபம் மணமில்லா வாழ்வன்றோ
மலராத வாழ்வே மாந்தருக்குச் சாபமன்றோ
மந்திரம் ஏதுமின்றி மாற்றுவதே நீயென்றோ ?
சாபங்களை விலக்கிடும் சாந்தனே சடகோபா
பாவங்கள் அளவின்றிப் பயிராகும் காலத்தில்
காலங்கள் கலியினில் கடைபோடும் நேரத்தில்
காத்திட வருவாயோ ! கண்ணனே! கருணாமூர்த்தி !
வேதனைகள் வென்றிடவே வேங்கடவா என்றிடுவேன்
சிந்தனைகள் ஒன்றாக்கி சீதரனே என்றழைப்பேன்
சோதனைகள் வரும்போது சொந்தமென இருப்பவனே
நர்த்தனமே நித்தியமும் நினைவுனதே நாரணனே !
-மலர் சபா
மதுரைக் காண்டம் – அழற்படு காதை
நித்திய கருமம் நடைபெறாது ஒழிதல்
மாலைதோறும் நடைபெறும் விழாக்களும்,
வேத முழக்கங்களும்,
தீயின்முன் செய்யும் வேள்வியும்,
கோவில்களுக்குச் சென்று மக்கள்
தெய்வங்களைக் கும்பிடுவதும்,
மனையில் பெண்கள் விளக்கேற்றுதலும்,
மாலையில் விளையாடுதலும்
முரசின் முழக்கமும்…
இவை எல்லாம் மதுரை மாநகரில்
இல்லாது ஒழிந்தன.
கண்ணகியின் முன் மதுராபதித் தெய்வம் தோன்றுதல்
தன் கணவனைக்
காணமுடியாத துன்பத்தால்
உள்ளம் கொதித்து,
கொல்லன் உலைக்களத்தில்
ஊதும் துருத்தி போல்
அனல் மூச்சு விட்டாள் கண்ணகி.
அங்ஙனம் துயருற்று
வீதிகளில் சுற்றிச் சுற்றி வந்தாள்.
குறுகிய வீதிகளில்
கவலையுடன் நின்றாள்.
பின்னர் அங்கும் இங்கும் சென்றாள்.
என்ன செய்வது என்று புரியாமல்
மயங்கி நின்றாள்.
இவ்வாறு அடைவதற்கு அரிய
துன்பம் பெற்ற
அந்த வீரபத்தினி முன்,
திரண்டு எரிகின்ற
மிக்க வெப்பமுடைய
நெருப்பினைக் கண்டு பொறுக்காது,
மதுராபதி காவல் தெய்வம் தோன்றியது.
வெண்பா
திருமகளும், கலைமகளும்
மாபெரும் மகிடன் என்னும்
அசுரனைக் கொன்ற
வீரம் மிக்க கொற்றவையும்…
இம்முத்தேவியர் பெற்ற
பெருமை அனைத்தையும்
மொத்தமாய்ப் பெற்றுள்ள
மதுராபதித் தெய்வம்,
தன் முலை ஒன்றைத்திருகி எறிந்த
வீரபத்தினி கண்ணகி முன் தோன்றியது.
அழற் படு காதை முற்றியது. அடுத்து வருவது கட்டுரை காதை.
***
படத்துக்கு நன்றி: கூகுள்