நான் அறிந்த சிலம்பு – 230

 -மலர் சபா

மதுரைக் காண்டம்அழற்படு காதை

நித்திய கருமம் நடைபெறாது ஒழிதல்

மாலைதோறும் நடைபெறும் விழாக்களும்,
வேத முழக்கங்களும்,
தீயின்முன் செய்யும் வேள்வியும்,
கோவில்களுக்குச் சென்று மக்கள்
தெய்வங்களைக் கும்பிடுவதும்,
மனையில் பெண்கள் விளக்கேற்றுதலும்,madutharapathi
மாலையில் விளையாடுதலும்
முரசின் முழக்கமும்…
இவை எல்லாம் மதுரை மாநகரில்
இல்லாது ஒழிந்தன.

கண்ணகியின் முன் மதுராபதித் தெய்வம் தோன்றுதல்

தன் கணவனைக்
காணமுடியாத துன்பத்தால்
உள்ளம் கொதித்து,
கொல்லன் உலைக்களத்தில்
ஊதும் துருத்தி போல்
அனல் மூச்சு விட்டாள் கண்ணகி.
அங்ஙனம் துயருற்று
வீதிகளில் சுற்றிச் சுற்றி வந்தாள்.
குறுகிய வீதிகளில்
கவலையுடன் நின்றாள்.
பின்னர் அங்கும் இங்கும் சென்றாள்.
என்ன செய்வது என்று புரியாமல்
மயங்கி நின்றாள்.

இவ்வாறு அடைவதற்கு அரிய
துன்பம் பெற்ற
அந்த வீரபத்தினி முன்,
திரண்டு எரிகின்ற
மிக்க வெப்பமுடைய
நெருப்பினைக் கண்டு பொறுக்காது,
மதுராபதி காவல் தெய்வம் தோன்றியது.

வெண்பா

திருமகளும், கலைமகளும்
மாபெரும் மகிடன் என்னும்
அசுரனைக் கொன்ற
வீரம் மிக்க கொற்றவையும்…
இம்முத்தேவியர் பெற்ற
பெருமை அனைத்தையும்
மொத்தமாய்ப் பெற்றுள்ள
மதுராபதித் தெய்வம்,
தன் முலை ஒன்றைத்திருகி எறிந்த
வீரபத்தினி கண்ணகி முன் தோன்றியது.

அழற் படு காதை முற்றியது. அடுத்து வருவது கட்டுரை காதை.

***

படத்துக்கு நன்றி: கூகுள்

 

 

About மலர் சபா

மதுரையைச் சேர்ந்த மலர் சபா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். பாசமலர் என்ற பெயரில் பெட்டகம், சமையலும் கைப்பழக்கம் என்ற தமிழ் வலைப்பூக்களிலும். Malar’s Kitchen:, Rainbow Wings: என்ற ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார் இந்த பன்முக நாயகி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க