அண்ணாமலை சுகுமாரன்

ans-1
வரலாற்றின் வேர்கள் பகுதி ஒன்றில் வரலாற்று சான்றுகளையும் ,ஆய்வுகளையும் தொகுக்க சர் வில்லியம் ஜோன்ஸ் , 1784 இல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்கியதைக் காட்டியிருந்தேன் . இதுவே வரலாற்று சான்றுகளை சர்வதேச நோக்கில் ஆவணப்படுத்தும் முதல் முயற்சியாக இந்தியாவில் அமைந்தது .

இந்திய தொல்லியல் வரலாறு அறிவியல்பூர்வமாக , உலகம் ஒப்புக்கொள்ளும் வகையில் ஆவணப்படுத்தும் போக்கு அப்போது முதலே துவங்கியது .

அதற்குமுன்வரை நம்மிடையே பலவிதமான கதைகள் இருந்தன ,காப்பியங்கள் இருந்தன ,இலக்கியங்களிலும் வரலாற்று செய்திகள் இருந்தன .

ஆயினும் அவைகளின் உண்மைத்தன்மைக்கு உத்திரவாதம் இல்லாமல் இருந்தது .அவைகளைப்பற்றிய பல செய்திகளை போகப்போக இந்தத் தொடரில் பார்க்கப்போகிறோம் .
அப்போதைய நிலையில் கி. பி 1750 களில்

முகலாயர் ஆக்கிரமிப்பு மட்டுமே வரலாற்று ரீதியில் அறியப்பட்டிருந்தது .

ஏனெனில் ஆங்கிலேயர் வருகைக்கு முன் முகலாயர் ஆட்சியில் இருந்தனர் .ஏனைய வரலாற்று சான்றுகள் கூடிய, ஆய்வுகள் தொகுப்பு வில்லியம் ஜோன்ஸ் போன்ற மனச்சாட்சியுள்ள , நேர்மையான , உண்மையை நாடிய பல கிழக்கிந்திய ஆங்கில அதிகாரிகள் தனிப்பட்ட ஆர்வம் எடுத்துக்கொண்டு, கிடைத்த அத்தகைய செய்திகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றனர்.

வரலாற்றின் வேர்கள் பகுதி இரண்டில் ராபர்ட் புரூஸ்புட் பற்றிய செய்திகளும் அவரின் ஆய்வுகளும் விவரிக்கப்பட்டிருந்தன .

உண்மையில் காலவரிசைப்படிக்கொண்டால் இவருக்கு முன்பே வேறு சில ஆங்கில ஆய்வாளர்கள் குறிப்பிடக்கூடியவர்கள் இருக்கின்றனர். எனினும் ஏன் இவரைப்பற்றி எழுத எடுத்துக்கொண்டேன் என்றால் அவரின் ஆய்வு இந்திய வரலாற்றில் அதுவும் தமிழக வரலாற்றில் மிக முக்கிய சான்றுகளை அளித்தன .

பல்லாவரத்தில் கிடைத்த ஒரு சிறிய கல் துண்டை, அது பல இலட்சம் ஆண்டுகளுக்கும் முந்தய தொல் மனிதனின் கல் ஆயுதம் என்று இந்திய ஆய்வாளர்கள் யாராவது நிறுவ முடிந்திருக்குமா என்பது ஒரு கேள்விக்குறிதான் .

இந்திய வரலாற்றைப் புரட்டிப்போடும் ஆய்வுகளைத் தொடங்கிவைத்தது. இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை ஆய்வு உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய பெருமை ராபர்ட் புரூஸ்புட்யே சாரும்.

ஆங்கிலேய நாட்டின் வரலாற்று அறிஞர் மைக்கேல் வுட் தனது “இந்தியாவின் கதை” (“ The Story Of India ”) (http://www.pbs.org/thestoryofindia) எனும் வலைத்தளத்தில் 70,000 – 50,000 ஆண்டுகட்கு முன்னர் இந்தியாவில் முதல் மனிதன் குடியேறினான் என்று பதிவு செய்தார் !

இத்தகைய பொய், புரட்டல் செய்திகளை மறுக்க நம்மிடையேயுள்ள உலகம் ஒப்புக்கொண்ட ஆதாரப்பூர்வமான தகவல்கள் ராபர்ட் புரூஸ்புட் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட பல்லாவரம் கற்கோடாரியும், அத்திரம், பாக்கம் மற்றும் குடியம் மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்கால கல், ஆயுதக்குவியல்கள் , சுமார் 150000-2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என அவர் ஆவணப்படுத்தியதுமே ஆகும் .

சமீபத்தில் இந்த இடங்களை மீண்டும் ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் ‘Early Pleistocene presence of Acheulian hominins in South India’ என்ற ஆய்வு அறிக்கையில் இவைகள் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என ரேடியோ கார்பன் முறையில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார் .
இத்தகைய உண்மைகள் வெளிவர உதவியவர் .. ராபர்ட் புரூஸ்புட் எனும் பெருமகனார் தான் இன்னமும் அவரைப்பற்றிக் கூற பல தகவல்கள் உள்ளன . அவைகளை பிறகு காணலாம்.

இப்போது வேறு பல வரலாற்றுத்தரவுகளை நிறுவ உதவிய வேறு சில கிழக்கிந்திய அலுவலர்களைப் பற்றி பார்க்கலாம் .

ஜேம்ஸ் பிரின்சப்

1799 ஆகஸ்ட் 20 இல் அவரது குடுபத்தின் ஏழாவது குழந்தையாக , அவரது தந்தை ஜான் பிரின்சப் ஏழையாக இருந்த போது பிறந்தார் . ஜான் பிரின்சப் பிழைப்பிற்காக இந்தியா சென்றார் ,செல்வந்தனானார் . அவரைத்தொடர்ந்து ஜேம்ஸ் பிரின்சப் 15 செப் 1819இல் இந்தியாவில் கல்கத்தாவில் இருந்த நாணய ஆலையில் நாணய உதவி அதிகாரியாகப் பதவி ஏற்றார் (deputy assay master Calcutta mint, ) பின் ஓர் ஆண்டுக்குப்பின் வாரணாசியில் இருந்த நாணய ஆலையில் நாணய உதவி அதிகாரியாக பதவி ஏற்றார் . வாரணாசியில் எங்கு காணினும் குவிந்து கிடந்த ஆலயங்களும் , தூபிகளும் , இடிபாடுகளும் முன்னமே சிறந்த கலை உணர்வு கொண்ட பிரின்சப் அவர்களின் கவனத்தை சுண்டி இழுத்தன .

அந்த காலத்து காசியின் காட்சிகளை அழகிய ஓவியங்களாகத் தீட்டினார் அவர். காசியின் துல்லியமான அந்த காலத்து வரைபடத்தைத் தயாரித்தார் .இன்னமும் அவைகள் இலண்டனில் உள்ளன .

பல வரலாற்று செய்திகளையும் ,சான்றுகளையும் தொகுக்கத் துவங்கினார். காசியில் இருந்த அவுரங்கசீபு கட்டிய அழியும் நிலைமையில் இருந்த தூபிகளை புணரமைத்தார் .

மீண்டும் கல்கத்தாவிற்கு மாறுதல் பெற்ற பிரின்சப் அங்கு வில்லியம் ஜோன்ஸ் ஆரம்பித்த ஏசியாட்டிக் சொசைட்டிக்கு துணைச் செயலராகவும் , அதன் வெளியீடுகளுக்கு ஆசிரியராகவும் பணியாற்றும் வாய்ப்பைப்பெற்றார் .

முதலில் அவரின் கவனத்தை ஈர்த்தது இந்தியா முழுவதிலுமிருந்து கிடைத்த மிகப் பழமையான நாணயங்கள் தான் .300 வருடங்களுக்கு முன் அத்தகைய தொல் நாணயங்கள் அதிகம் பொது மக்களிடையே கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருந்தது .

அப்போது பிரிட்டிசின் ஆளுகையில் இலங்கை ,பர்மா ஆகியவையும் இருந்தமையால் ஏராளமாக அப்பகுதிகளில் மக்களால் கண்டெடுக்கப்பட்ட இந்திய தொடர்புடைய பண்டைய தங்க, வெள்ளி, ஈய நாணயங்களை நாணய அதிகாரியாகப் பணிபுரிந்த பிரின்சப் ஆய்வு செய்யும் வாய்ப்பைப்பெற்றார் .
அக்காலத்தில் கிடைத்த தொன்மையான நாணயங்களில் வரிவரியாக பொறிக்கப்பட்டிருந்தவைகள் ஒரு வித எழுத்துக்கள். அவைகள் ஒரு மொழியை சார்ந்தவை என்பதைக்கூட அறியப்படாத காலத்தில், அவைகளை அறிவியல் உலகம் ஒப்புக்கொள்ளும் வகையில் புரிந்துகொள்ளச் செய்தவர் பிரின்சப் ஆகும் . இவரின் இந்த நாணயத்தில் இருந்த நாணயங்களின் லிபியை புரிதல் குஷானர்கள் என்று ஒரு வம்சம் இந்தியாவை ஆண்டது என்பதை இந்திய வரலாற்றில் நிறுவியது .

மேலும் அவரின் இந்த கண்டுபிடிப்பு இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஒருவரை கண்டுபிடிக்க உதவியது .

நம்மிடையே மட்டும் ஹெச் ஜி வேல்ஸ் (H.G Wells) எழுதிய கால இயந்திரம் மாதிரி ஒரு இயந்திரம் மட்டும் இருந்திருந்தால், நாமும் 300 வருடங்கள் முன்னே சென்று இந்தியா அப்போது எப்படி இருந்தது என்பதை எளிதாக அறிந்திருக்கலாம் . 5000 வருடங்கள் முன்னே சென்று சித்து வெளி நாகரீகம், பூம்புகார் நகரம் எப்படி அழிந்தது என்பதை எளிதில் அறியலாம் . ஆனால் உண்மையில் கிடைக்கும் சான்றுகளை வைத்து வரலாற்றை நிர்ணயிப்பதில், சான்றுகளைத் தொகுத்து சான்றுகளைப் பாதுகாப்பதில் பங்களித்த பலரைப் பற்றி நன்றியுடன் நினைத்துப் பார்ப்பது அவசியமே .

அடுத்த வாரம் ஜேம்ஸ் பிரின்சப் பற்றிய சுவையான பல செய்திகளைக் காணலாம்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.