திருக்குறள் கூறும் வேளாண்மைச் செய்திகள்
-க.பிரகாஷ் எம்.ஏ, எம். பிஃல், (பிஎச்.டி)
வேளாண்மை பற்றிய சில கருத்துகள்
வேளாண்மை என்னும் சொல்லின் பகுதியாகிய வேளாண் என்னும் பெயர்ச் சொல்லை நுணுகி ஆராயின் அதன் வேர்ச்சொல் யாது என்பது நன்கு விளங்கும். வேளாண் என்னும் சொல்லை “வேள் – ஆள்” பிரிப்பர் இலக்கண நூலார். வேளாண் என்னும் சொல்லில் வேள் என்பது பகுதி ஆள் என்பது விகுதி வேள் என்னும் பகுதி வேர்ச்சொல்லாகும். அச்சொல்லுக்கு மண் என்பது பொருள்; ஆள்தல் என்னும் தொழில் பெயரில் விகுதி குறைந்து ஆள் என முதல்நிலைத் தொழில் பெயராய் நின்று வேள் – ஆள் – வேளாண் என ஒரு சொல் தன்மை பெற்றிருத்தல் வேண்டும். இச்சொல் மண்ணை ஆளுதல் என்ற பொருளைத் தருகிறது.
வேளாண் என்ற சொல் பிறப்புக்கு ஆராய்ச்சியில் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. சொற்கள் ஓரசையிலிருந்து தான் பல அசைகளாக வளர்ந்து இருக்கவேண்டும் என்பது மற்றொரு சாரார் கருத்து. இவ்விருவேறு கருத்துக்களில் முன்னதே பெரும்பான்மையான அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். ஒரு சொல்லின் வேர்ச்சொல்லைக் காணவேண்டின், முழுமையான சொல்லில் இருந்துதான் பகுதி, விகுதிகளைப் பிரித்தாய்ந்து காணவேண்டும். அவ்வகையில் வேளாண்மை என்னும் சொல்லும் பகுதி விகுதிகளாகப் பிரித்து அறியப்பட்டது. அன்றியும், தமிழ்ச் சொற்கள் எல்லாம் ஓரசை உடையனவே, என்றும் மொழியியல் அறிஞர் கால்டுவெல் அவர்களின் கருத்தும் இவ்வாராய்ச்சிக்குத் துணைபுரிவதாக அமைகின்றது.
வேளாண்மை என்னும் சொல்லின் வேர்ச்சொல் வேள் என்பதாகும் அச்சொல் வேள் – வேளாண் – வேளாண்மை என வளர்ந்துள்ளது என்பதே இன்றையக் கருத்தாகும்.
இலக்கியம் – இலக்கணங்களில் வேளாண்மை
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. (தொல் – பொருள் – மரபு – 81)
என்ற நூற்பாவில், தொல்காப்பிய முதல் உரையாசிரியராகிய இளம்பூரணர் வேளாண் என்ற சொல்லுக்கு வேளாண் மாந்தர் என்று உரை கூறுகின்றார். வேளாண் மாந்தர் பலவகைப்பட்ட தொழிலரேனும் உழும் தொழிலே பெரும்பான்மை ஆகலான் அதனையே சிறப்பித்துக் கூறுதல் மரபு எனக் குறித்துள்ளார். வேளாண் என்ற சொல்லுக்கு உழவர் என்றோ வேளாளர் என்றோ பொருள் குறிப்பிடாமல் இருவரும் வேளாண் மாந்தர் என்றே குறிப்பிடுகின்றனர். வேளாண்மை செய்யும் மனமுடையோர் பிறர்க்காகவும் தமக்காகவும் உழுது விளைப்பர் என்பதே அந்நூற்பாவின் பொருளாகும்.
எருது தொழில் செய்யாது ஓடவிடும்கடன்
வேளளர்க்கு இன்று. (பரி – 20 – 63)
தமது எருதைக் கொண்டு தாமே தொழில் செய்யாது பிறர்பால் விடுத்துத் தொழிலைச் செய்வது வேளாளர் கடமை அன்று என்று பொருளை அப்பாடலின் வரிகள் உணர்த்துகின்றன. இங்கே வேளாளர் என்போர் எருதைக் கொண்டு தொழில் செய்வோர் என்ற பொருள் தெளிவாக்கப்படுகின்றது. இது போன்ற மேற்கோள் அனைத்தும் தொல்காப்பியக் காலம் தொடங்கிச் சங்க காலம் ஈறாக வேளாண்மை என்னும் சொல் உதவி என்ற பொருளையும் உழவுத் தொழில் என்ற பொருளையும் உணர்த்தக் காண்கிறோம்.
திருக்குறள் கூறும் வேளாண்மை
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தேம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள் – 81)
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் மனைவியோடும் வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம் விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள் செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தன் பொருட்டு. (குறள் – 212)
பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டன் பொருட்டும் வைத்து இழத்தற் பொருட்டும் அன்று என்பதாயிற்று.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு. (குறள் – 613)
பொருள் கைகூடுதலால் உபகரித்ததற்கு உரியார் முயற்சி உடையோர் என்பார்; அவ்வக் குணங்கள் மேல் வைத்தும் அது பிறர்மாட்டு இல்லை என்பர் தங்கிற்றே என்னும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.
உழவு
சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (குறள் – 1031)
ஏர் என்பது ஆகுபெயர். பிறதொழில்களால் பொருளெய்திய வழியும் உணவின் பொருட்டு உழவர்கண் செல்ல வேண்டுதலின் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று வருத்தமில வேனும் பிறதொழில்கள் கடை என்பது போதர உழந்தும் உழவே தலை என்றும் கூறினார்.
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து. (குறள் – 1032)
காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு என்றாற் போல உழுவார் என்றது உழுவிப் பார்மேலுஞ் செல்லும். உலகத்தார் என்றது ஈண்டு இவரையொழிந்தாரை. கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின் ஆணி என்றார்.
பொறுத்தலான் என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவகம் அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொருத்து என்று பாடம் ஓதி அது மாட்டாதார் மரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொருத்து அவரைத் தொழுவாரே யாவர் என்று உரைப்பாரும் உளர்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (குறள் – 1033)
மற்று என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட் பிறப்பிறராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பு பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.
இராவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய் தூண் மாலை யவர். (குறள் – 1035)
செய்து என்பதற்கு உழுதலை என வருவிக்கக் கைசெய்தூண் மாலையவர் என்பது ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை. (குறள் – 1036)
உம்மை இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மை தாம் உண்டலும் இல்லறம் செய்தும் யாவர்க்கும் இல்லையாயின அவர் அறுப்பு மாத்திரமாய கை வாளாவிருப்பின் உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தேம் என்பார்க்கு என உரைப்பாரும் உளர். இவை பாட்டானும் அதனைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. (குறள் – 1038)
காத்தல் பட்டி முதலியவற்றால் அழிவெய்தாமல் காத்தல் உழுதல் எருப்பெய்தல் களைகட்டல் நீர்கால் யாத்தல் காத்தல் என்று இம் முறையவாது இல் வேண்டும்.
***
பார்வை:
திருக்குறள் வேளாண்மை – இல. செ. கந்தசாமி
திருக்குறள் பரிமேலழகர் உரை – எஸ். கௌமாரீஸ்வரி