Blog

  • பழகத் தெரிய வேணும் – 60

    பழகத் தெரிய வேணும் – 60

    நிர்மலா ராகவன்

    பிறருடைய கருத்து

    எல்லாரும் இருப்பதுபோல் நாமும் இருந்தால்தான் சரியானது, நம்மை ஏற்பார்கள் என்று எண்ணி நடப்பவர்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. மனக் கிலேசமும் எழக்கூடும்.

    கருத்து வேறுபாடு

    குடும்பம்

    திருமணமானதும், முதல்முறையாக மாமியார் வீட்டில் கூட்டுக்குடித்தனம் செய்ய ஆயத்தமானாள் மலர்விழி.

    அவளுடைய தாய் வாய் ஓயாது உபதேசம் பண்ணி அனுப்பினாள். “எல்லாரிடமும் மரியாதையாகப் பழகு. பெரியவர்கள் சொல்வதைக்கேட்டு நட. உனக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, நீதான் விட்டுக்கொடுக்க வேண்டும்”.

    இந்த ரீதியில் தொடர்ந்து பல நாட்கள், `அறிவுரை’ என்று தனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதை கூறினாள் அந்த தாய். எல்லாம், `மகளை இப்படி வளர்த்திருக்கிறீர்களே!’ என்று ஏசிவிடுவார்களோ என்ற பயம்தான்!

    மலர்விழி பெரிய படிப்பு படித்தவள். சுயமாகச் சிந்திக்கும் திறனைக் கொண்டவள். முதலில் தாய் சொன்னதைக் கடைப்பிடித்தவள், `நான் ஏன் மகிழ்ச்சியாகவே இல்லை?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

    வெவ்வேறு குடும்பங்கள் ஆனதால், அவர்களது கலாசாரம் ஒத்துப்போகவில்லை. அதனால், மலர்விழி செய்வது, சொல்வது எல்லாம் பிறருக்குக் கேலியாக இருந்தது. `தன்மேல்தான் தவறோ?’ என்று இவள் ஓயாது விட்டுக்கொடுத்ததில், பிறரது அதிகாரம் கூடிப்போயிற்று.

    சில வருடங்கள் கஷ்டப்பட்டபின் அவளுக்குப் புரிந்தது. எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி பெறவேண்டும், பிறர் கேலி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது முனையவேண்டும் என்றெல்லாம் நடந்துகொண்டிருந்த தான் பிறரது வார்த்தைகளை அப்படியே ஏற்று நடந்தது தவறு என்று புரிந்துகொண்டாள்.

    ஒரே வழி தனிக்குடித்தனம் போவதுதான் என்று முடிவெடுத்தாள். இழந்த உற்சாகமும் நிம்மதியும் மீண்டன.

    எந்த உறவிலும், ஒருவரை அவர் இருக்கிறபடியே ஏற்றால் இரு தரப்பிலும் மரியாதை இருக்கும். அதைவிட்டு, `நீ சொல்வதெல்லாம் தவறு. என் சொற்படிதான் நடக்கவேண்டும்,’ என்ற வாதம் கசப்பில்தான் முடியும். குடும்பம் இரண்டாகும்.

    திரைப்படங்கள்

    பொதுப்பான்மையான கருத்துகளை வைத்துப் திரைப்படம் எடுத்தால்தான் பலரும் பார்ப்பார்கள், நிறைய லாபம் கிடைக்கும் என்று நினைத்துச் செயல்படுகிறவர்கள் வெகு சிலரே. ஆனால், இவர்கள்தாம் வெற்றி பெறுகிறார்கள். நிஜவாழ்க்கையில் எப்போதாவது நடக்கும் சம்பவங்களைக் கதையாகப் பின்னுகிறார்கள் இவர்கள்.

    `இப்படியெல்லாமா நடக்கிறது!’ என்ற அதிர்ச்சியும் ஆச்சரியமும் எழ, அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    விமர்சகர்கள்

    திரைப்படங்களைப் பார்ப்பதற்குமுன் விமர்சகர்கள் அவற்றைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பது பலருடைய வழக்கம், என்னுடையதும்தான்.

    அது எவ்வளவு தவறு என்று பிறகுதான் புரிந்தது. ஏனெனில், கருத்து என்பது உணர்ச்சிபூர்வமாக ஏற்படுவது. அப்போது அறிவு குறிக்கிடுவதில்லை.

    பிற மதத்தைச் சார்ந்த ஒருவரை இளம்பெண் ஒருத்தி காதலிக்கிறாள் என்று கதை அமைந்திருந்தால், கதை விறுவிறுப்பாக, உணர்ச்சிபூர்வமாக, நம்பத்தக்கதாக இருக்கிறதா என்றெல்லாம் கவனிக்க ஒரு விமர்சகர் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அக்கருத்தை ஒத்துக்கொள்ளாது, அந்த திரைப்படத்தை எடுக்கத் துணிந்தவர்களைக் கண்டனம் செய்வார்.

    குடும்பத்தில்

    வேறு ஏதாவதொரு குடும்பத்தில் மதம், இனம் இவைகளில் வித்தியாசம் இருந்து, பெற்றோரைமீறி கல்யாணம் செய்துகொண்டவர்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள். அதைக் கண்டு பயந்து, தம் குழந்தைகளும் அவ்வாறு துன்பப்படக்கூடாது என்ற ஆதங்கத்துடன் பெற்றோர் மறுப்பார்கள்.

    `பிறர் என்ன சொல்வார்கள்!’ என்ற அச்சத்தினாலும் மறுப்பு எழக்கூடும். இரு தரப்பிலும் இருக்கக்கூடிய உண்மையான அன்பும், நேர்மையும் அவர்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

    அவர்களுக்குத் தோன்றியதை ஆத்திரப்படாமல் எடுத்துச் சொன்னால், விவகாரம் சுமுகமாக முடிய வழி இருக்கிறது.

    முரட்டுத்தனமும் வீரமும் ஒன்றுதான் என்று நினைப்பவர்களே சண்டையில் ஈடுபடுவார்கள்.

    எழுபது, எண்பது வருடங்களுக்குமுன் பன்னிரண்டு வயதுக்குள் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து முடித்து, புக்ககத்திற்கு அனுப்பினார்கள். அப்போது அவளால் வளைந்துகொடுக்க முடிந்தது. அவளுக்குத் தனித்திறமைகள் இருந்தாலும் அவை வெளிப்படவில்லை. ஏனெனில், அவளுக்கே தன்னால் என்ன முடியும் என்ற தெரிந்திருக்காது. பிறர் சொற்படி கேட்டு நடந்து, நல்ல பெயர் வாங்கினாள்.

    அப்படி ஒரு பெண்ணின் கதையைப் பார்ப்போமா?

    கதை

    மீனாட்சி நல்ல புத்திசாலி. எட்டு வயதிலேயே கல்யாணமாகி, கணவர் வீட்டுக்கு வந்தவள். பதின்மூன்று வயதிலிருந்து வருடத்திற்கு ஒரு பிள்ளை.

    `பெண்’ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஏற்று நடந்தாலும், அவள் மனதில் ஏதோ வெறுமை. அவள் வளர்த்த குழந்தைகள் நன்கு படித்து, பெரிய உத்தியோகங்களில் அமர்ந்தபோது, தான் மட்டும் இப்படி வீடு, குடும்பம் என்று அடங்கிப்போய்விட்டோமே என்ற எண்ணமெழ, அது ஆத்திரமாக மருவியது.

    `ஏன் கல்யாணம் செய்துகொண்டோம்?’ என்ற எரிச்சல் எழ, சாதுவான கணவரைப் பார்த்துக் கத்தினாள். கறிகாய் விற்பவன், பேரன் பேத்திகள் எல்லாருக்கும் காரணமில்லாமல் `அர்ச்சனை’ விழும்.

    `பெண்களுக்கு என்ன இருக்கிறது, பாவம்!’ என்று புரிந்து, கணவரும் அடங்கிப்போனாராம்.

    இது அந்தக் காலம். இன்றும் இப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் சண்டை, சச்சரவு என்ற நீண்டுகொண்டே போகாதா!

    கதை

    வித்யாவின் கணவனுக்கு அவளுடைய உறவினர்கள் தங்கள் வீட்டுக்கு வந்தாலே பிடிக்காது. ஆனால், தன் பெயர் கெடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பான். விருந்தினர்களிடம் அன்புடன் பழகுவதுபோல் நடிப்பான்.

    ஓரிரு நாட்கள் கழிந்ததும், `அவர்களைத் திரும்பிப் போகச்சொல்,’ என்று தனிமையில் மனைவியிடம் கத்துவான்.

    வித்யாவுக்குத்தான் தர்மசங்கடமாகிவிடும். என்றாவது, அவர்களையே, `வெளியே போங்கள்!’ என்று ஏடாகூடமாகச் சொல்லிவிட்டால் என்ன செய்வது!

    அவளுக்கு ஒரு வழிதான் புலப்பட்டது. கணவனை அடக்க முயற்சித்து, தன் அதிகாரத்தைக் கூட்டிக்கொண்டாள்.

    அதைப் பார்த்து அதிர்ந்த விருந்தினர் பெண்மணி, தன் வீட்டுக்குத் திரும்பியதும், “வித்யா ரொம்ப மோசமான மனைவி! கணவனிடம் மரியாதையே இல்லாமல் நடந்துகொள்கிறாள்!” என்று பிற உறவினர்களிடம் பரப்பினாள்.

    உண்மையான நிலவரம் புரியாததால், “பாவம், அவர் எவ்வளவு நல்லவராக இருக்கிறார்! இவளிடம் மாட்டிக்கொண்டுவிட்டாரே!” என்று கணவருக்குத்தான் அனுதாபம் கிடைத்தது! எந்தத் தவறு நடந்தாலும், பெண்ணின்மேல்தானே குற்றம் சுமத்துவார்கள் நம் சமூகத்தில்!

    வித்யாவுக்கு என்னவோ மகிழ்ச்சிதான் – கணவர் தன் உறவினர்களை விரட்டி அடிக்காமல் அவர்களைப் பாதுகாத்துவிட்டோமே என்று.

    உன் இலக்கு நோக்கிச் செல்

    சிலர் நல்ல வேலையை விட்டுவிட்டு, புதிதாக எதிலாவது ஈடுபடுவார்கள்.

    உற்றார் உறவினர் அனைவரும் `மடத்தனம்!’ என்று அதிர்வார்கள்.

    ஆனால், அவருக்குத்தான் தனது இலக்கு முக்கியம். பிறர் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கவனிக்காது, அதை நோக்கிப் பயணிக்கத் துணிவார். வெற்றி கிடைக்கலாம், கிட்டாமலும் போகலாம். ஆனாலும், `அப்படிச் செய்திருக்கலாமே!’ என்று என்றாவது ஏங்க நேரிடாதே!

    அனேகமாக எல்லாப் பெண்களுக்குமே எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. கூடவே, தயக்கமும் ஏற்படும்.

    `பெண்கள் திரும்பத் திரும்ப குடும்பக் கதைகள்தாம் எழுதுகிறார்கள். எல்லாம் ஒரேமாதிரிதான் இருக்கின்றன!’ என்று ஆண்கள் என்னிடம் குறை கூறியிருக்கிறார்கள்.

    `படிப்பவர்களுக்கு என்ன பிடிக்கும்? அத்துடன் நம் பெயர் கெடாமல் இருக்குமா?’ என்றெல்லாம் யோசனை செய்து எழுத ஆரம்பித்தால் வேறு எப்படி எழுத முடியும்?

    “நல்ல இலக்கியம் என்பது அதிக விமரிசனத்துக்கு உள்ளாவது” (ஓர் இலக்கியவாதி).

    நான் எழுதியவற்றைப் புகழ்ந்தவர்களைவிட அதில் குற்றம் கண்டுபிடித்தவர்கள் அதிகம்.

    `பெண்களுக்கு உணர்ச்சிகளே கூடாது. அப்படியே இருந்தாலும், அவற்றை அடக்கியே வைத்திருக்கவேண்டும்,’ என்ற கருத்துகொண்ட ஆண் தன்னைப் பலசாலி என்று கருதுகிறான். அவனுடைய எதிர்பார்ப்பு பொய்க்கும்போது அதிர்ச்சி உண்டாகிறது. எழுத்தைவிட அதை எழுதியவள் கண்டனத்துக்கு ஆளாகிறாள்.

    இது புரிந்து, ஆண்கள் பழிக்கும்போதெல்லாம் பெண்கள் அவர்களை எதிர்த்து பதில் கடிதம் எழுதிவிடுவார்கள், எனக்குப் பக்கபலமாக.

    “என் பெயர் காதல்” என்ற தலைப்பில் நான் ஒரு கதை எழுதிவிட்டு, “எப்படிக் காதல் வயப்படுவது என்று அணு அணுவாக விவரித்திருக்கிறேன்,” என்று என் மகளிடம் பெருமையாகக் கூறினேன்.

    “ஐயோ, அம்மா!” என்று அதிர்ந்தாள். “உன் REPUTATION (நல்ல பெயர்) என்ன ஆவது?”

    “எனக்கா? நல்ல பெயர் இருக்கிறதா, என்ன!” என்று சிரித்தேன்.

    தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டபின், சாண் போனாலென்ன, முழம் போனாலென்ன!

    Share
  • பக்தி இயக்கத்தின் முன்னோடியாய் மிளிர்ந்த தமிழ் தந்த செல்வி காரைக்கால் அம்மையார்!

    பக்தி இயக்கத்தின் முன்னோடியாய் மிளிர்ந்த தமிழ் தந்த செல்வி காரைக்கால் அம்மையார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மொழியும் முக்கியமான மொழிகள்தாம். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு மொழிக்குமே இல்லாத சிறப்பினை உலகில் எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. அந்தச் சிறப்புத்தான் “பக்தி இலக்கியம்” என்னும் சிறப்பாகும். பக்தி என்பது – இலக்கியமாக எழுந்தி ருப்பது உலகமொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே என்பதை எல்லா மொழியியல் அறிஞர்களுமே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அந்த அளவுக்கு தனித்துவமாய்வளர்ந்து யாவரும் வியக்கும் வண்ணம் பக்தி இலக்கியம் தமிழில் அமைந்திருக்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமை அல்லவா!

    பக்தி இலக்கிய வரலாற்றை எடுத்து நோக்கினால் தமிழகத்திற்கு தனித்த தொரு இடமுண்டு எனலாம். சைவ நாயன்மார்களும்வைணவ ஆழ்வார்க ளும்  உவந்தளித்த பக்தி இலக்கியத்தால் எங்கள் தமிழ் மொழி “பக்தியின் மொழி” என்னும் சிறப்பினைப் பெற்றது என்பது மறுக்கமுடியாத உண்மை எனலாம். இவர்களின் அருட்பாடல்களால் “பக்தி இலக்கியம்” தமிழின் தமிழ்ச்சமூகத்தின் பெருஞ் சொத்தாக ஆகிவிட்டது எனலாம்.

    சைவ பக்தி இலக்கியத்தின் எழுகின்ற ஞாயிறாக விளங்குவர் காரைக் கால் தந்த தவப்புதல்விதமிழ்ச்செல்வி, புனிதவதியாகிய காரைக்கால் அம்மையார் ஆவர். சிவஞானச் செந்திருவான இவ்வம்மையார் சைவத் திருமுறைகளின் தோற்றுதல்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பதை பலரும் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். ஆன்ம ஞானத்தைஆன்ம சுதந்திரத்தைஆன்ம முக்தியை பெற்று பெண் குலத்துக்கே பெருமையினைத் தேடித்தந்தவராக இவ்வம்மையார் திகழுகிறார் எனலாம்.

    சைவசமயம் போற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூவர்மட்டுமே பெண்களாக இருக்கிறார்கள். அவர்களுள் மூத்தவராய் தலையானவராய் இருப்பவர் காரைக்கார் அம்மையார் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். மற்றைய பெண்களைவிட காராக்கால் தந்த தமிழ்ச்செல்வி யாவற்றிலும் முன்னிற்பவர் ஆகிறார் எனலாம். இவ்வம்மையாரைப் பன்முக நோக்கிலே தான் பார்க்கவேண்டி இருக்கிறது.

    தத்துவச் செறிவு மிக்கார். மெஞ்ஞான உணர்வு மிக்கார். சமயசாதனை மிக்கார். இலக்கியச் சாதனை மிக்கார். என்று இவரின் நோக்கு பரந்து விரிந்து சைவ பக்தி இலக்கியத்துக்கு வெளிச்சமாய் நிற்கிறது எனலாம்.

    அதிசயங்கள் இல்லாமல் பிறந்த அம்மையார் அனைவரும் மெச்சும் ஆன்மீக அதிசயமாகிறார். சித்துக்கள் அறியாத அம்மையார் சிந்தனைகளை விதைத்த பெரும் சித்தராகவே ஆகிறார் சைவபக்தி உலகில்.சாதாரண பெண்ணாக வளர்ந்து சாதாரணமாகவே இல்லறவாழ்வில் இணைக்க ப்படுகின்றார். இல்லறத்தில் நல்லறம் விளையும் வண்ணம் வாழ்ந்தவரின் வாழ்வில் ஆண்டவன் அருள் பாய்ந்து அவரின் கோலம் மாறுகிறது. குடும்பம் மாறுகிறது. சைவ பக்தி உலகுக்கு தத்துவஞான முத்துக் கிடை க்கிறது எனலாம். இது காரைக்காலில் வந்து பிறந்த ஏனைய பெண்களுக்கு வாய்க்கவில்லை. இவருக்கு மட்டுமே வாய்த்திருக்கிற தென்றால் திருவருள் என்பது கருவிலேயே வந்து அமர்ந்து விட்டது என்றுதான் கருத்தத் தோன்றுகிறதல்லவா! மாங்கனியின் வருகை ஒரு மங்கையின் வாழ்வையே பக்திக்குள் புகுந்துவிட வைக்கிறது! மாங்கனியால் மானிலத்துக்கே ஆன்மீக அம்மையாய் ஆகிவிடுகிறார் காரக்கால் ஈந்த புனிதவதியான தமிழ்ச்செல்வி!

    காரைக்கால் தந்த ஆன்மீக முத்து சைவ பக்தி இலக்கியத்தின் முன்னோ டியாக விளங்கினார் என்பதற்கு அவரின் பரந்துபட்ட செயற்பாடுகளே அர ணாகி நிற்கின்றன. கோவில்களில் இருக்கின்ற நாயன்மார்களின் சிலைகள் நின்றபடியே இருக்க காரைக்கால் அம்மையார் சிலைமட்டும் இருந்தபடி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மற்றவர்கள் எல்லாம் நிற்க இவர் மட்டும் இருக்கும் வண்ணம் சிறப்புற்றதற்குக் காரணந்தான் என்ன?

    மாங்கனியை இறைவனிடம் பெற்றதாலாபேயுடலுடன் கயிலை மலையில் தலையால் நடந்து அதியம் புரிந்ததாலாபுலமையில் சிறந்து விளங்கியதாலாதியாகங்களைச் செய்தலாலாஅப்படியெல்லா மெண்ணிப் பார்க்கையில் அம்மையாரைவிட பல செய்தவர்கள் இருந்திரு க்கிறார்கள் எனலாம். அப்படி இருக்க இவருக்கேன் இப்படிச் சிறப்பென்றால் “இவர் தோன்றி இருக்காவிட்டால் சைவமும் இல்லை மற்ற சிவன் அடியார்களும் இல்லை” என்பதனாலாகும் என்பது பல பெரியோர்களின் கருத்து எனலாம்.

    “இவள் நம்மைப் பேணும் அம்மை” என்று முழுமுதற் கடவுளான சிவனே செப்பியதாகக் கூறப்படுகிறது. உண்மையில் சைவத்தைப் பேணிய தாய்! சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப்பெருஞ் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார் அவர்களேயாவர். சமணமும் சாக்கியமும் சைவத்தை நிலைகுலையச் செய்யாமல் சைவத்தை தலைநிமிரச் செய்தவர் சைவம் நிலைபெறச் செய்தவர் காராக்கால் அம்மையார் என்பதனாலேயே அவர் முக்கியத்து வப் படுத்தப்படுகிறார். முன்னிலையில் அமர்ந்திருக்கிறார் எனலாம். எந்த ஒன்றும் தாயின் வயிற்றில்த்தான் பிறக்க வேண்டும் என்பதை நாமனைவரும் அறிவோம்.  முழுத்தன்னை பெற்ற சைவம் என்ற ஒன்றுசிவ வழிபாடு என்ற ஒன்று , காரைக்கால் அம்மையாராகிய தாய் வயிற்றில் பிறந்ததாகும் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.தமிழ் நாட்டில் சைவத்தைக் காத்திட்ட பெருமை காரைக்கால் அம்மையாரையே சாரும் எனலாம். அவர் போட்டுக் கொடுத்த பாதையில்த்தான் பின் வந்த அடியார்கள் செப்பமாய் செல்ல முடிந்தது எனலாம். “தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாய்”  ஆவதற்கு முதலடி எடுத்து வைத்தவர் என்னும் நிலையில் காரைக்கால் தந்த தமிழ்ச்செல்வி புனித வதி அம்மையார் திகழுகிறார் எனலாம்.

    சைவசமயத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாய் இருந்த காரைக்கால் அம்மையார் தமிழ் இலக்கியத்திலும் புத்திலக்கிய முன்னோடியாக மிளிர்கிறார் எனலாம். சங்க இலக்கியம் காதலை யும் , போரையும் கருவாய் கொண்டு மகிழ்ந்தது.காப்பியங்கள் சாதனை புரிந்த தலைவர்கள் புகழ்பாடி போற்றும் வகையில் எழுந்தன. ஆனால் பக்தி எனும் பாதையில் மலர்ந்த  பக்தி இலக்கியங்களோ மானுடக் காதலைமனிதனைப் புகழ்ந்து பாடுவதை விடுத்து இறைகாதலையும்பரமான்வாவைப் பாடுதலையும்இறை தொடர்பினைத் தேடுவனவாகவுமே மலர்ந்தன எனலாம். இவ்வாறு மலர்ந்த பக்தி இலக்கியத்தில் சிறப்பாக சைவபக்தி இலக்கியத்தின் முன்னோடியாக காரைக்கால் அம்மையார் திகழ்கிறார் எனலாம். நாயன்மார் களுக்குக் காலத்தால் முற்பட்ட இவ்வம்மையார் தமிழ் இலக்கியத்தில் பல இலட்சியப் புதுமைகளைச் செய்து புத்திலக்கிய முன்னோடியாக விளங்குகிறார் என்பதை தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் அனை வருமே ஏற்று நின்கின்றார்கள் என்பது மனம் இருத்தவேண்டிய கருத் தெனலாம்.

    அற்புதத் திருவந்தாதிதிருவிரட்டை மணிமாலைதிருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்பன அம்மையார் தமிழ் இலக்கியத்துக்கு அளித்த மிகப் பெருங்கொடைகள் எனலாம். முதல் ஆழ்வார்களின் பங்களிப்பும் அம்மை யாரின் பங்களிப்பும் பல்லவர் காலத்தில் பக்திப் பாடல்கள் தோன்றுவதற்கு விடிவெள்ளியாய் அமைந்தாலும் – பல்லவர்கால இலக்கியக்கியப் போக்கினுக்கு வழிகாட்டிய பெருமையினை அம்மையாரே பெற்றுக் கொள்ளுகிறார் எனலாம். அந்த வகையில் அம்மையாரின் பிரபந்தங்கள் விளங்குகின்றன என தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் வியந்து போற்றுகின்றனர். இந்த ரீதியில் காரைக்கால் தந்த தமிழ்ச்செல்வி காரைக்கால் அம்மையார் தமிழகத்துப் பெரும்புலவர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க சிறப்பு வாய்ந்த தமிழிலக்கியப் படைப்பாளியாக விளங்கு கிறார் என்பது மிகவும் பொருத்த முடையதேயாகும்.

    நூற்று நாற்பது செய்யுட்களே காரைக்கால் அம்மையாரின் இலக்கிய வெளிப்பாடாய் கிடைத்திருக்கிறது.நான்கு சிறைய பிரபந்தங்கள் வாயிலாக இப்பாடல்கள் வந்திருக்கின்றன. குறைந்த அளவில் இலக்கியத்தில் இணைந்து நிற்கும் இவரை பெரும்புலவர் என்று எப்படிக் கருத முடியும்அப்படி எண்ணுமளவுக்கு அம்மையாரின் இலக்கிய ஆளுமைதான் என்னஎன்று சிந்திக்கத் தோன்றுகிறதல்லவா! இலக்கியத்தரம் என்பது எண்ணிக் கையால் வருவதுதல்ல! இலக்கியத்தைப் படைத்த சிறப்பினைக் கொண்டே தீர்மானிக்கப் படுவதெனலாம். அந்த வகையில் அம்மையாரின் ஆற்றல் அவரை உன்னத நிலையில் காணவே வைத்திருக்கிறது எனலாம்.

    பின்னால் வந்த நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் பொருள் மரபிலும்,யாப்பு முறையிலும் அம்மையாரே வழிகாட்டியாய் அமைந்திருக்கிறார். அவரின் பிரபந்தங்கள் அவர்களுக்கு பாடமாக நல்லாசிரியனாக முன்னின்றது எனலாம். வெண்பாவைக் கையாண்டு சங்கமருவிய கால நிலையினைப் பேணினார். ஆனால் தனது உள்ளத்தில் எழும் தெய்வானுபங்களை , உணர்ச்சிகளை வெளிப்படுத்த வெண்பா யாப்பு சிறந்ததாக எனக்கருதி விருத்தம் என்னும் யாப்பினைக் கையெடுக்கின்றார். அம்மையாரின் இந்தச் சிந்தனையானது தமிழ் இலக்கியப் பாதையில் புதிய இலக்கிய மரபு ஆரம்பித்து வைத்தது எனலாம்.

    இசையால் இறைவனைப் பாடும் பதிகப் பாதையினை அம்மையாரே தொடக்கி வைக்கிறார். பதிகத்தின் நிறைவில் இடம் பெறும் திருக்கடைக் காப்புப் பாடலில் – பாடுபவர் பெயர்பாடுவோர் பெறும் நலன்கள்ஆகிய வற்றை ஆரம்பித்து வைத்தவரும் அம்மையாரே ஆவர். இதுவே சம்பந்தப் பெருமானுக்குக் கைகொடுத்தது எனலாம். அந்தாதி என்னும் யாப்பினை அம்மையார் காட்டுகிறார். பின்னர் தொடரும் இலக்கியப் பெருவழிக்கு இவையாவுமே பெருவெளிச்சமாய் அமைகிறது என்பதை மனமிருத்தினால் அம்மையாரின் ஆளுமை தெள்ளிதிற் புலனாகும்!

    நிலையாமையை வலியுறுத்தி இலக்கியம் பேசப்பட்ட நிலையில் – இல்லறத்தில் இன்பங்காணா இறைவன்பால் இன்பங்கண்ட காரைக்கால் அம்மையாரின் சிந்தனையும் அதன் நிமித்தம் வெளிவந்த அவரின் இலக்கிய வெளிச்சமும்மக்கள் மனதில் நல்லதோர் நம்பிக்கையினை வாழ்க்கையில் உருவாக்குவதாக அமைந்தது எனலாம். பெண்ணாக இருந்தும் ஈமப்புறங் காட்டினைக் கண்டு அஞ்சாமல் அங்கு ஆண்டவன் ஓயாமல் நடனமிடுகிறான் என்று கண்டு  கொள்ளுகிறார். இச்செயலானது அம்மையாரினால் அஞ்சிய பெண்களுக்குக் காட்டிய புதிய பாதையாக எடுத்துக் கொள்ளவும் – அம்மையாரின் புதியதான ஒரு சமயப்பாதையினைக் காட்டி நிற்பதையும் விளக்கி நிற்கிறது அல்லவா! இப்படிச் செய்தமையால் காரைக்கால் அம்மையார் தனித்துவம் மிக்க பெண்ணரசியாய் மிளிர்கிறார் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. சுடு காட்டில் இறைவனின் நடனத்தைக் காண ஒரு சாதரண பெண்மணி விரும்பியமையும்சுடலையினை நடனமிடும் இடமாகக் கண்டு ஆனந்தம் அடைந்தமையும் , அம்மையாரின் மனதில் தோன் றிய வித்தியாசமான போக்கினையே காட்டுகிறது எனலாம். அந்த நடனத்தை ரசிப்பவர்கள் பேய்களாக இருப்பதால் தனக்கும் பேய் உருவினை ஆண்டவனிடம் வேண்டிப் பெற்றார் என்பதும் அம்மையாரின் நிலையினை அடியார்கள் நிலையில் பார்க்கும்பொழுது மிகவும் வேறுபட்டமாறுபட்டபுதிய தொரு கோணத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

    சிவனைப் பற்றி ஏனைய இலக்கியங்களில் காட்டியதை விட காரைக்கால் அம்மையார் தனது பாடல்கள் வாயிலாக காட்டிய பாங்கு மிகவும் வளர்ச்சி உடையதாகவே இருக்கிறது என்று பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் குறிப்படுவது நோக்கத்தக்கதாகும். “இறைவனுடன்  அன்பு பூண்டுஅவனுக்கு அடியவனாகவும்அடிமையாகவும், வாழ முற்படவேண்டும்.இறை வனை ஏத்தினால் பிறவி நீங்கும். இறைவனை நினைப்பவர் நெஞ்சுளே உறை கின்றான். அவனை அன்பு செய்யத் தொடங்கினால் அவலம் இல்லை. அவனிடம் அன்பு  செய்தால் இருவினை கழலும் என்ற கருத்துக்கள் சிவ வழி பாட்டு வரலாற்றில் முதன் முதலாகக் காட்டி தனது பக்திப் பனுவல்களை வழங்கியவர் காரைக்கால் அம்மையார் என்பது மனங்கொள்ளத் தக்கதெனலாம்.

    கரைக்கால் தந்த தவச்செல்வி , தமிழ்ச்செல்வி , புனிதவதி என்று பெருமையுடன் காட்டும் சேக்கிழார் அவர்கள் – அம்மையாரை சைவ பக்தி இலக்கிய வரலாற்றில் மிகவும் உன்ன்னத நிலையிலே வைத்து ஏற்றிப் போற்றுகிறார் எனலாம் பின்னே வரப்போகின்ற சம்பந்தர்அப்பர்சுந்தரர் ஆகிய அருளாளார்கள் பாடவிருக்கும் பதிகங்களுக்கெல்லாம் முன்னோடி யாகப் பாடிய பெருமை மிக்கவர் அம்மையார் என்பதால் அவரின் பதிகளுக்கு மூத்த நல்பதிகம்” என்னும் பெயரைக் கொடுத்து பெருமைப் படுத்துகிறார்.

    அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு‘ என்னும் நிலையினை வெறுத்து நிற்கும் – சேக்கிழார் காரைக்கால் அம்மையாரின் பெருமையைக் காட்டி அவரைத்தொடர்ந்து திலவதியார்,  மங்கையற்கரசியார் போன்றவர்களைக் காட்டி பெண்கள் எல்லோருக்கும் – ஏன் பெண்களை ஒதுக்கிய சமூகத்துக்கேநல்லதோர் பாடத்தைப் புகட்டுகிறார் என்பது புலனாகிறதல்லவா?

    தமிழ் நாட்டிலே முதன்முதலாக சைவநாயன்மார் வரிசை யில்,வணங்கப் பெற்றவர் என்னும் பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார் அவர்களே ஆவர். சிலை அமைத்து வழிபாடும் அம்மையாருக்கு நடத்தப்படுகிறது. வணிகத்துக்குச் சென்றவர்கள் அம்மையாரின் சிலையினை எடுத்துச் சென்றுள்ளனர் என்று அறிய முடிகிறது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலே இவ்வாறு நடைபெற்றிருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத் தென லாம். அம்மையாரின் வழிபாடானது தாய்லாந்து,  கம்பூச்சியா,  இந்தோனேசியாபாலிபோன்ற இடங்களில் பரவியிருக்கிறது என்பதையும் வரலாற்றால் கண்டு கொள்ளுகிறோம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அம்மையாரின் வழிபாடு பரவி இருந்திருக்கிறது என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்திருக் கின்றன என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    காரைக்கால் அம்மையாரின் வழிபாடு மட்டுமல்ல அவரின் வரலாறும் வடமொழிதெலுங்குகன்னடம் , போன்ற பிறமொழிகளிலும் பரவி இருக்கிறது  என்பது  தமிழ் மொழிக்கும் சைவத்துக்கும் கிடைத்த மிகப்பெரியசிறப்பு என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. அப்படிப் பெருமைக்குரியகாரைக்கால் ஈன்ற தவச்செல்விதமிழ்ச்செல்விபுனிதவதியான காரைக்கால் அம்மையினை நினைப்போம். அவரின் ஆற்றலைபக்தியை அனைவருடனும் பகிந்து அவரைப் போற்றி நிற்போம் .

    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை யென்றும்
    மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்துபாடி
    அறவாநீ நீயாடும்போது அடியின் கீழுருக்க என்றார்”

    Share
  • தமிழ் பிராமி கல்வெட்டு விளக்கம்

    தமிழ் பிராமி கல்வெட்டு விளக்கம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 38 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களிலும் திறந்தவெளியிலும் கண்டறியப்பட்டு உள்ளன. இம் 38 இடங்களில் சற்றொப்ப 100 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் குறைந்தது 1 முதல் அதிகமாக 12 கல்வெட்டுகள் வரை என இம் 38 இடங்களில் காணப்படுகின்றன. தமிழ் பிராமி கல்வெட்டுகள் தமிழ் மொழியின் தொன்மைக்கும் தமிழ் எழுத்து வட்டெழுத்தாகி அடுத்து சோழர் கால எழுத்தாகி பின் இந்நாள் எழுத்தாக  உருத்திரிந்ததற்கு சான்றாக உள்ளன. திரு. ஐராவதம் மகாதேவன் பெருமுயற்சி எடுத்து இவற்றை எல்லாம் அடர்வு செய்து தென்னகத்திற்கு சமணர் வச்சிர நந்தி தலைமையில்  வடக்கே இருந்து வந்ததை ஒட்டி தமிழகத்தில் மதுரையைச்  சுற்றியுள்ள இடங்களில் அமைந்த தமிழி கல்வெட்டுகள் கி.மு. 2 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ம் நூற்றாண்டு வரையான காலத்தன என்று காலவரையறை செய்தார். எனினும் புதுக்கோட்டை த் தமிழ் பிராமி நடுகல் கல்வெட்டு கங்கரை குறிப்பது 5 -ம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமியின் பயன்பட்டை உறுதி செய்கின்றது.  இக்கல்வெட்டுகள் உள்ள தளங்களை சமண துறவிகளின் படுக்கை என்று ஐராவதம் மகாதேவன்  கூறினாலும் மேட்டுப்பட்டி தமிழி கல்வெட்டு  “அமணன்  மதிரை அத்திரன் உறை உதயனஸ” என்பதிலும், புகளூர்  தமிழி கல்வெட்டு  “மூதா   அமண்ணன்” என்பதிலும் தான் சமணர் பற்றிய தெளிந்த குறிப்பு உள்ளது மற்றவற்றில் அவ்வாறு தெளிவாக இல்லை. இதனால் இவற்றை  ஆசீவகர் படுக்கைகள் என்று பேரா. க. நெடுஞ்செழியன் கூறுகிறார். ஆனால் அதற்கும் தெளிவான கல்வெட்டுக் குறிப்பு ஏதும் இல்லை. இக்குன்றுகளின் இருப்பிடத்தில்  பிற்காலத்தே சமண புடைப்பு சிற்பங்கள் அமைந்ததாலும் ஐயனார் கோவில்கள் அமைந்ததாலும் இக் கல்வெட்டுகள் சமணர்க்குரியன ஆசீவகர்க்குரியன என்பது தவறு. இக்கல்வெட்டு விளக்கம் அந்த தவற்றை வெளிப்படுத்தவே அமைந்ததாகும். இக்குகைகளில் அமைந்த கற்படுக்கைகள் மருத்துவம் மேற்கொள்ளப்பட்ட நோயாளிகளுக்கான படுக்கைகள் என்றே எண்ணத் தோன்றுகின்றன.  ஏனென்றால் முற்றும் துறந்த சமண, ஆசீவக முனிவர் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கப்போவதில்லை. இடைவிடாமல் இடம்பெயர்வது தான் முற்றத் துறந்தவரின் பண்பு.

    அண்மையில் கிடைத்த கொங்கப்பட்டி கல்வெட்டுத் தொடரைக் கருத்தில் கொண்டு பிற பிராமிக் கல்வெட்டுகளை மீள்பார்வை செய்த போது இக் கல்வெட்டுகளில் இடம்பெறும் அந்தை, உபசன் ஆகிய பெயர்ச் சொற்கள், அவற்றின் பொருள் பிராமணர் தொடர்புடையவை என்று தெரிவிக்கின்றன.  இவ்வாறு  சற்றொப்ப 20 கல்வெட்டுகள் உள்ளன. இவை தமிழகத்தில் தமிழ் பிராமணர் இருப்பை 2,000 ஆண்டுகளுக்கும்  மேலாக  எடுத்துச் செல்கின்றன.  இதனால் தமிழ்ப் பிராமணரை ஆரியர், யூத பிராமணர், நாடற்றவர், மொழியற்றவர் என்று சிலர் சொல்வது வல்லடிவழக்கு (unreasonable insistence) என்று தெரிகிறது. பிராமணரை இவ்வாறு கூறுவது அறிவின்மை ஆகும். தமிழ் பிராமணரைத் தமிழ் மண்ணின் மைந்தராக  ஆதிக்குடியாக அடையாளப்படுத்தும், முகவரி தரும் இப்படியான கல்வெட்டுச் சான்று வேறு எவருக்கும் இல்லை என்பதே உண்மை.

    வியாசரின் புராண மதம் கி.பி. 6 ம் நூற்றாண்டில் அறிமுகமாவதற்கு முன்பு பிராமணர் வேள்வி மதத்தையும் தந்திர யோக  மதத்தையும் பின்பற்றி வாழ்ந்தனர். எனவே அவர்களில் இரந்து வாழும் தவசிகள் மருத்துவத் தொண்டு புரிய கற்படுக்கைகளை ஏற்படுத்தச் செய்தனர். இதற்கு மாங்குளம், மேட்டுப்பட்டி, நெகனூர்பட்டி கல்வெட்டுகள்  சான்றாகும். மக்கள் இத்தகு இரந்து வாழும் சமண, ஆசீவக, பிராமண  முனிவர்களை தமது உடல் நலம், மனநலம் கருதி நாடிச் சென்று பார்த்தனர், எதிர்காலம் பற்றி அறிய குறிகேட்கவும் சென்றனர். இம்மக்களில் அரசர், வணிகர், பிராமணர், ஊரார், எளியோர் அடங்குவர். இவர்கள் தாம் இந்த குகைத்தள படுக்கைகளும் கல்வெட்டுகளும் உருவாகக் காரணமானவர். இக்கல்வெட்டுகள் மூலம் அக்காலத் தவசிகள் மீது மக்கள் கொண்டிருந்த நன்மதிப்பை விளங்கிக்கொள்ள முடிகின்றது. மாங்குளம், மாமண்டூர், புகளூர், நெகனூர்பட்டி ஆகிய இடத்து கல்வெட்டுகளில் துறவு பிராமணத் தாய், தந்தையருடைய பிள்ளைகளும் குறிக்கப்படுவது பிராமணர் வாழ்வின் முற்பகுதியில் இல்லறத்தையும் முதுமையில் அந்தணர் எனப்படும் இரந்து வாழும் துறவறத்தையும் கடைபிடித்து வாழ்ந்தது பிரம்மச்சரியம், இல்லறம், காடுறை அறம், துறவறம் என்னும்  நால்வர்க்க வாழ்க்கையைக் கடைபிடித்து வாழ்ந்தனர் என்று உணர்த்துகின்றது. ஆனால் புத்த, சமண, ஆசீவகம் மதத்திற் உள்ளது போல் இந்த துறவு பிராமணர் முற்றும் துறந்தவர் (complete renunciate) அல்லர். துறவு வாழ்விலும் இவர்தம் உறவினர் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருந்தனர் என்று தெரிகின்றது. “துவிஜ” எனப்படும் இருபிறப்பாளர் என்ற சொற்பொருள் தியானத்தவ வாழ்க்கையை ஏற்ற பின் இரண்டாவது பிறப்பெடுத்தவர் என்ற பொருளில் பிராமணரைக் குறிக்க வழங்குவது ஈண்டு நோக்கத்தக்கது. இந்த தவவாழ்வினால் முக்கால அறிவு, சித்துக்கள் கிடைக்கப்பெற்றவராக இந்த துறவு பிராமணர் இருந்ததால் மக்களால் அதிகமாக மதிக்கப்பட்டனர். பின்பு பிராமணர் கி.பி. 6 ம் நூற்றாண்டு அளவில் வியாசர் தோற்றுவித்த புராண மதத்தை தழுவிய இந்த தந்திர யோகத்தை அடியோடு கைவிட்டதனால் முக்கால அறிவு, சித்துக்கள் அற்றவராக ஆகிப்போனதால் மக்களிடம் தமக்கு இருந்த தொழத்தக்க  மதிப்பை இழந்தனர் என்று தெரிகின்றது.

    இத்தமிழி கல்வெட்டுகளில் புழங்கும் சொல்லாட்சி அக்காலப் பேச்சு வழக்குத் தமிழ் என்பது புலனாகின்றது. இவற்றில் புழங்கும் தமிழ் அல்லாத சொற்களும் பெயர்ச் சொற்களும் பிராகிருத மொழிக்கானவை, காட்டாக தம்மம், தன்மன், உதயனஸ ஆகியன. கல்வெட்டு எழுத்துகளில் நெடில் குறிலாகவும், ஒற்றெழுத்து இன்றியும் எழுதப்பட்டுள்ளன. சில கல்வெட்டுகளில் ஆண்பால் ஈறு “அன்” தனித்தே எழுதப்பட்டுள்ளது. இகர ஈற்றை அடுத்து யகர மெய் இடப்பட்டுள்ளதானது அக்கால எழுத்து நடையை காட்டுகின்றது. இகரம் எகரமாக குறிக்கப்பட்டுள்ளது. இக்காலத்திற்கும் பயன்படும் பல அரிய தனித்தமிழ்ச் சொற்கள் இக்கல்வெட்டுகளில் உள்ளன. மாங்குளம் முதல் நெற்றம்பாக்கம் வரை பொதுமக்கள் கல்வெட்டுகளுக்கும் கிண்ணிமங்கலம் முதல் புதுக்கோட்டை வரை நடுகல் வகை கல்வெட்டுகளும் ஊர்வாரியாக விளக்கப்பட்டுள்ளன.

    மாங்குளம்: மதுரைக்கு வடக்கில் மேலூர் போகும் தேசிய நெடுஞ்சாலையில் கத்தப்பட்டி என்ற கிராமத்தில் பிரிந்து வடமேற்கில்  சென்றால் மாங்குளத்தை அடையலாம். இவ் ஊரினை அண்டிய மீனாட்சிபுரம் என்ற ஊரை ஒட்டி தெற்கு வடக்காக  ‘ஓவாமலை’  என்றும் ‘கழுகுமலை’ என்றும் மக்களால் அழைக்கப்படும் இரு குன்றுகள் உள்ளன. இதன் உச்சியில் கிழக்குப் பகுதியில் கிழக்கு முகமாய் ஐந்து குகைகள் இயற்கையாய் அமைந்துள்ளன. இவற்றில் கற்படுகைகளும், நீர்வடி விளிம்புகளும் வெட்டப்பட்டு வதிவிடங்களாக மாற்றி அமைத்துள்ளனர். இதில் நான்கில் பட்டிப்புரோலு எழுத்து முறையில் ஆறு கலவெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

    கல்வெட்டு 1:1  > மாங்குளம் மலை ஏறியதும் உள்ள முதல் குகைத் தளத்தில் இரு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை பாறை முகப்பில் அமைந்த நீர்வடி விளிம்பின் கீழே உள்ளன. முதற்கல்வெட்டு ஒரு வரியில் உள்ளது.

    கணிய் நந்த அஸிரிய்இ  குவ்அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்

    கணி – தியானத்தில் உயர்நிலை எய்திய பிச்சை எடுத்து வாழும் முனிவர்க்கு உரிய பட்டம், title for attainment of higher state in meditation by an  ascetic ; குவ்வன்  – பாடம் சொல்பவன், தீர்ப்பு சொல்பவன்; ஈத்தான் — கொடுத்தான்; பணவன் – மணிக்கல் சுரங்க பொறுப்பாளர், precious stone mine in-charge; கொட்டுபித்த –  கொடுத்த, பள்ளி  – கற்படுக்கை.

    விளக்கம்: கணி நந்த ஆசிரியர் நடத்திய கல்விச் சாலையில் வேத பாடம் சொல்வானுக்கு தருமமாய் நெடுஞ் செழியனின் மணிக்கல் சுரங்கப் பொறுப்பாளன் கடலன் வழுதி என்பான் இக் கற்படுக்கையை உருவாக்கித் தந்தான் என்பது இதன் பொருள். இக்கல்வெட்டில் “அன்” ஆண்பால் ஒருமை ஈறு பணவன், கடலன் என தனியே பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.

    கல்வெட்டு 1:2 > முதற் கல்வெட்டு உள்ள இடத்திலேயே இக்கல்வெட்டும்  உள்ளது.

    கணிய் நத்திய் கொடிய்அவன்

    விளக்கம்:  இக்கற்படுக்கையை கணி நத்தி என்பவன் ஏற்படுத்தி கொடுத்தான். டகர மெய் சேர்த்து கொட்டியவன் என படிக்க வேண்டும். நத்தி இன்னொரு தியானத் துறவி ஆவார். இவரும் கணி என்ற பட்டத்தை அடைந்தவர்.

    கலவெட்டு 1:3 > முன் இரு கல்வெட்டுகளின் குகைக்கு வடக்கே கீழ்ப்புறம் உள்ள குகையின் வெளிப்புற பாறைச் சுவரில் ஒரே வரியில் நீளமாக பொறிக்கப்பட்டுள்ளது.

    கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்

    சாலகன் – வேட்டன்,  மனைவிவழி உறவினன்

    விளக்கம்: கணி நந்த ஆசிரியரின் கல்விச் சாலையில் வேத பாடம் சொல்லிக் கொடுப்பவனுக்கு நெடுஞ்சழியனின் மனைவிவழி  உறவினான இளஞ்சடிகனின் தந்தை சடிகன் தர்மமாக கற்படுக்கை அமைத்துக் கொடுத்தான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 1:4 > மேற்கண்ட குகைத்தளத்தின் மேல் மற்றொரு குகைத்தளத்தில் காணப்படும் ஒரு வரி நீண்ட கல்வெட்டு இது.

    கணிஇ நதஸிரிய் குவ[ன்] — — வெள்அறைய் நிகமது காவதிஇய் காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன்

    நிகமத்து – ஊரின்; காவிதி – பெண் துறவி, meditator; காழி – உடலுழைப்பு துன்பம், திக்கர்  – தவிர்த்தவர்  காழிதிக்கர் – உடலுழைப்பு தவிர்த்து பிச்சையெடுத்து வாழ்பவர்; அந்தை – பிச்சையெடுக்கும் அந்தணத் துறவி, பிராமணர்; பிணவு – தங்கிடம்

    விளக்கம்: வெள்ளறை என்னும் ஊரில் உள்ள பெண் துறவாட்டியான பிச்சைக்கார அந்தணப் பெண்ணின் மூத்த மகன் கணி நந்த ஆசிரியரின் த கல்விச் சாலையில் வேத பாடம் சொல்லும் பணியாளுக்கு தங்கிடம் செய்து கொடுத்தான் என்பதே இதன் பொருள். ககர மெய் சேர்த்தால் திக்க என்றாகும். இதில் குவ்வன், காவிதி அந்தை, அவள் மூத்த மகன் ஆகிய மூவருமே பிராமணர். நந்தாசிரியர் வேத பாடம் சொல்பவனுக்கு ஆதரவளிப்பதை வைத்து அவரும் பிராம்மணக் குடியில் பிறந்திருக்க வேண்டும் என்று கருதலாம். கணி என்ற பட்டம் ஆசீவகர், பிராமணர் என எவரும் கொள்ளும் பட்டம் தான். இனம் இனத்தோடு சேரும் என்ற முதுமொழிப்படி பிராமணர் வேதக் கல்விக்கு ஆதரவு தருவது இயல்பு. பெண் துறவாட்டியின் மூத்த மகன் குறிக்கப்படுவதைப் பார்த்தால் அவள்  நால்வர்க்கு வாழ்க்கை முறைப்படி இளமையில் இல்லறமும் முதுமையில் துறவும் மேற்கொண்டவள் எனத் தெரிகிறது.

    கல்வெட்டு 1:5 > நான்காவது கல்வெட்டு உள்ள குகைத்தளத்திற்கு தெற்கே இரு சிறிய கல்வெட்டுகள் உள்ளன. அதில் இது முதலது.

    சந்தரிதன் கொடுபிதோன்

    சந்தை – அதிக அளவு; அர் – பொருள்; ஈத்தன் – கொடுப்பவன்.  அரிதன் என்றால் நாட்டுப் பிரிவின் எல்லையை கடந்து ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு பொருளைக் கொண்டு போய் கொடுப்பவன் (delivery man).

    விளக்கம்:  அதிக அளவு பொருளை கொண்டு கொடுக்கும் சந்தரிதன்  இந்த கற்படுக்கையை ஏற்படுத்தி கொடுத்தான் எனப் பொருள். டகர மெய் சேர்த்து கொட்டுபித்தோன் என படிக்க வேண்டும். செதுக்கி அமைத்தவன் எனவும் பொருள் கொள்ளலாம்.

    கல்வெட்டு 1:6 > 1:5 கல்வெட்டு அமைந்த குகைத் தளத்திலேயே இக்கல்வெட்டும் அமைந்துள்ளது.

    வெள்அறை நிகமதோர் கொடிஓர்

    விளக்கம்: வெள்ளறை ஊரார்  இக்குகையின் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தனர் என்பது இதன் பொருள்.  தகர மெய் சேர்த்து நிகமத்தோர் என்றும் டகர மெய் சேர்த்து கொட்டியோர் என்றும் படிக்க வேணடும். நிகமத்தோர் இங்கு வணிகரைக் குறிக்காது

    ________________________

    அரிட்டாபட்டி: மதுரைக்கு வடக்கில் 20 கி. மீ. தொலைவில் மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு சற்று விலகி அரிட்டாபட்டி உள்ளது. அவ் ஊரில் உள்ள கழிஞ்ச மலையின் அடிவாரத்தில் இயற்கையான குகை ஒன்றில் கற்படுகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் உட்புகாமல் இருக்க நீர்வடி விளிம்பு குகையின் நெற்றிப்புறத்தில் வெட்டப்பட்டு உள்ளது. அதன் கீழ் ஒன்றும் மேல் ஒன்றும் என இரு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.

    கல்வெட்டு 2:1 > நீர்வடி விளிம்பின் கீழ் முதல் கல்வெட்டு உள்ளது. 1971 ல் இது கண்டு அறியப்பட்டது.

    நெல்வெளிஈய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதோன்

    சிழிவன் – துணிவணிகன்; முழாகை – கற்படுக்கை, flat stone.

    விளக்கம்: நெல்வெளியைச் சேர்ந்த துணி வணிகன் அதினன் வெளியன் என்பான் இக் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தான் எனப் பொருள். ஒற்று எழுத்து சேர்த்து கொட்டுப்பித்தோன் எனப் படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 2:2 > நீர்வடி விளிம்பின் மேல் ஒரே வரியில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இது 2003 ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. மிக மங்கலாகவும் தேய்ந்தும் உள்ளது.

    இலஞ்சிய் எளம் பேராஅதன் மகன் எமயவன் இவ் முழ உகைய் கொடுபிதவன்

    விளக்கம்: இலஞ்சி என்னும் ஊரைச் சேர்ந்த  இளம் பேர்அதன் மகன் இமயவன் என்பவன் இக் கற்படுகையை உருவாக்கிக் கொடுத்தான் என்பது பொருள். ஒற்று சேர்த்து கொட்டுபித்தவன் எனப் படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 2:3 > செப். 15, 2003 ல் இந்து நாளேடு வெளியிட்ட புதிதாக கண்டறியப்பட்ட மூன்றாவது அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டு இது.  மெல்லிய கோடுகளால் தெளிவின்றி காணப்படும் இக்கல்வெட்டு 33 எழுத்துகளுடன் 3.10 மீட்டர் நீளத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    இலஞ்சிய் வேள் மாப்பரவன் மகன் எமயவன் நல்முழாஉகை கொடுபிதவன்  

    விளக்கம்: இலஞ்சி எனும் ஊரின் வேள் ஆன (அரையன்) மாப்பரவன் மகன் இமயவன் நல்ல கற்படுகையை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள். மாப்பரவன் என்றால் மீனவர் தலைவன். முன்னைய கல்வெட்டில் இவன் பெயர் இளம் பேராதன் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒரே செய்தி இரு இடங்களில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. ஒற்று சேர்த்து கொட்டுப்பித்தவன் எனப் படிக்க வேண்டும்.

    _____________________________

    திருவாதவூர்: மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட இவ் ஊர் மதுரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ் ஊரின் புறத்தில் உவா மலை என்றொரு குன்றில் உள்ள குகைத் தளப் புருவப் பகுதியில் இரு கல்வெட்டுகள் காணப்படு கின்றன.

    கல்வெட்டு 3:1 கீழ் உள்ள குகையின் புருவத்தில் நீர்வடி விளிம்பின் மேல் பகுதியில் ஒரே வரியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.

    பாங்காட அர்இதன் கொட்டுபிதோன் 

    பாங்கு + ஆடை – ஒருவகை சல்லடை ஆடை, a type of perforated cloth;  அரிதன் –  அர் + ஈதன் > அர் என்றால் பொருள், ஈதன் என்றால் கொடுப்பவன், delivery  man like courier, Amazon, zomato, Dunzo

    விளக்கம்: பாங்கு என்னும் ஒரு வகை துளையிட்ட ஆடையை வேற்றிடத்திற்கு கடத்த உதவுபவன் இக்குகைத் தளத்தைச் செய்து கொடுத்தான் என்பது இதன் பொருள். காட்டாக, பாங்கு ஆடை சிந்துவெளி பூசசக அரசன் பொம்மைத் தோளில் போர்த்திய துண்டில் உள்ள பூவேலைத் துளையைப் போன்றது. விலையுயர்ந்த இவ்வாடையை அரசர் துறவிகளுக்கு சிறப்பு செய்யும் முகமாக கொடுத்தனர்.

    கல்வெட்டு 3:2   நீர்வடி விளிம்பின் கீழ்  பகுதியில் ஒரே வரியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.

    உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்

    உபசன் – உபாசனை செய்யும், குறி சொல்லும் பிராமணப் பூசகன்; பரசு – மூங்கில் ; உறை – வதிவிடம்.

    விளக்கம்: பூசகரைக் குறிக்கும் உவச்சர் என்ற சொல்லின் திரிபு தான் உபசன் என்பது.  ஒற்றை தெய்வத்தை உபாசனை செய்யும் பூசகன் எனவும் கொள்ளலாம். உவா + அச்சன் = உவச்சன்.  உவா என்றால் நிலவு. தலைவாவு அமாவாசையிலும் முழு நிலவிலும் குறிசொல்பவன் என்பதை வைத்தே உவச்சன் என்ற சொல் உருவாக்கப்பட்டது. கல்வெட்டில் பிராமண பூசகன் மூங்கில் சூழ்ந்த அல்லது மூங்கிலில் அமைத்த வதிவிடம் கொடுப்பித்தான் என்று கூறுகிறது.
    _____________________________

    கீழவளுவு:  மதுரையில் இருந்து 38 கி.மீ தொலைவில் மேலூர் வட்டத்தில் மேலூர் – திருப்பத்தூர் சாலையில் கீழவளவு அமைந்திருக்கிறது. இவ் ஊரின் சற்று முன்பாக இயற்கையாக உள்ள குன்றின் அடிவாரத்திலும் நடுவிலும் குகைத்தளத்தில் பல கற்படுக்கைகள் உள்ளன. பஞ்ச பாண்டவர் மலை என அழைக்கப்படும் குன்றின் நடுவில் உள்ள குகைத்தளம் ஒன்றன் முகப்பு பகுதியில் நீர்வடி விளிம்பின் கீழாக வலம் இடமாக பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு உள்ளது.

    கல்வெட்டு 4:1>   உப[ச]அன் தொண்டி[ல]வோன் கொடு பளிஇ 

    விளக்கம்: பிராமணப் பூசகன் தொண்டிலவோன் கொடுத்த கற்படுக்கை இது எனப் பொருள்.
    _____________________________

    கொங்கர்புளியங்குளம்:  மதுரை திருமங்கலம்  வட்டத்தில் மதுரை- தேனி நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கும் செக்கானூரணிக்கும் இடையில் கொங்கர்புளியங்குளம் உள்ளது. இந்த ஊர் அருகில் பெருமாள் கோவில்  மலையில் இயற்கையான குகைத்தளத்தில் 50 க்கும் மேற்பட்ட கற்படுகைகளும் மூன்று தமிழி கல்வெட்டுகளும் உள்ளன.

    கல்வெட்டு 5:1> குகையின்முகப்பு நெற்றிப் பாறைக்கு சற்று தள்ளி வெட்டப்பட்டு உள்ள கல்வெட்டுகளில் இது முதலாவதாக உள்ளது.

    குற கொடுபிதவன்  உபசஅன் உபறுவ(ன்)

    விளக்கம்: உபறுவன் என்னும் பெயருடைய பிராமணப் பூசகனால் இக் குகைத்தளம் அமைக்கப்பட்டது என்பதே இதன் பொருள்.

    கல்வெட்டு 5:2>  இக்கல்வெட்டு மூன்று கல்வெட்டுகளுள் நடுவே உள்ளது.

    குறு கொடல்கு ஈத்தவன் செற்அதன் ஓன்

    குறு – குகை; கொடல்கு – ஆழ் குளம்

    குகைத்தள கற்படுகையும், ஆழ்குளமும் குடைவிப்பதற்கு வெள்ளிக்காசு ஈந்தவன் செற்அதன் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 5:3>  இது இறுதியில் பொறிக்கப்பட்டுள்ள மூன்றாம் கல்வெட்டு.

    பாகன் ஊர் பே(ர)தன் பிடன் இத்த வெபொன்

    பேராதன் – பெருஞ்செல்வன்; ஈத்த – கொடுத்த; வெ – வெள்ளி; பொன் – காசு.

    விளக்கம்: பாகனூரைச் சேர்ந்த பெருஞ்செல்வன் பிட்டன் என்பவனால் குகைத் தளம் அமைக்க வெள்ளிக்காசு வழங்கப்பட்ட சேதியைக் குறிக்கிறது.
    _____________________________

    மறுகால்தலை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கில் 9 கி.மீ தொலைவில் சீவலப்பேரி என்ற ஊருக்கு அருகில் மறுகால்தலை உள்ளது. இவ் ஊரின் பூவிலுடையார் மலையின் மேற்குப் பகுதியில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் இயற்கையான குகைத்தளத்தில் சில கற்படுக்கைகள் அமைந்துள்ளன.

    கல்வெட்டு 6:1> குகைத்தள நெற்றிப் பகுதியில் ஒரே வரியில் பெரிய எழுத்துகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

    வெண்காஸிபன் கொடுபித கல் கஞ்சனம்

    விளக்கம்: வெண்காசிபன் என்பவன் கற்படுக்கை அல்லது கற்கட்டடம் அமைத்துக் கொடுத்தான் என்பதே இதன் பொருள். மெய் சேர்த்து கொட்டுப்பித்த எனப்  படிக்க வேண்டும்.
    _____________________________

    வரிச்சியூர்: மதுரை வடக்கு வட்டத்தில் சிவகங்கை செல்லும் சாலையில் வரிச்சியூர்  உள்ளது. இங்குள்ள உதயகிரி எனப்படும் சுப்பிரமணிய மலையில் மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன. வடக்கு நோக்கிய சிறிய குகைத்தளத்தின் புருவப் பகுதியிலும், கிழக்கு நோக்கி உள்ள குகைத்தளத்தின் புருவப் பகுதியில் வெட்டப்பட்ட நீர்வடி விளிம்பின் மேலும் கீழும் ஆக மூன்று கல்வெட்டுகள் உள்ளன.

    கல்வெட்டு 7:1 >  இது வடக்கு நோக்கிய சிறுகுகையின் நெற்றிப் பாறை முகப்பில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    ப(ளி)ய் கொடுபி – – – —

    விளக்கம்: இக் கற்படுக்கையை ஈந்தவர் பெயர் குறிக்கப்பட்டாலும் அது சிதைந்து போனதால் கொடையாளியின் பெயர் தெரிந்திலது.

    கல்வெட்டு 7:2 > இது கிழக்கு நோக்கிய பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பாறையின் நீர்வடி விளிம்பின் மேல் பொறிக்கப்பட்டுள்ளது.

    அடா- – – றை ஈதா வைக – – – ஒன்  நூறு கலநெல் — – –

    விளக்கம்: இக் குகைத்தளம் அமைக்க ஒரு நூறு கலம் நெல் வழங்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது. கொடை வழங்கினவர் பெயர் சிதைந்து உள்ளது.

    கல்வெட்டு 7:3 > இக் கல்வெட்டு கிழக்கு நோக்கிய பெரிய குகையின் நெற்றிப் பாறை நீர்வடி விளிம்பின் கீழ்ப் பகுதியில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    இளநதன் கருஇய நல் முழஉகை

    கருவிய – செய்த.  செயலை குறிக்கும் கருமம் என்ற சொல்லை நோக்குக.

    விளக்கம்: இக் கற்படுகையை செய்து கொடுத்தவன் இள நத்தன் என்பான் என்பது இதன் பொருள். தகர மெய் சேர்த்து இள நத்தன் எனப் படிக்க வேண்டும்.
    _____________________________

    விக்கிரமங்கலம்:  மதுரை உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு  மேற்கே  விக்கிரமங்கலம் அமைந்து உள்ளது. இங்கு உண்டாங்கல் என்ற சிறு குன்று அமைந்து உள்ளது. இங்கு ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.

    கல்வெட்டு 8:1> ஒரு சிறு தனிப்பாறையின் கீழ் அமைந்த சின்னஞ்சிறு குகைத் தளத்தின் விதானத்தில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    எஇய்ல் அர்இய்தன் சேவித்ஓன்

    விளக்கம்: பொருளை அரண்மனைக் கோட்டைக்கு வெளியேயும் உள்ளேயும் கொண்டு செல்பவன் செய்வித்த கற்படுக்கை இது என்பதே இதன் பொருள்.

    கல்வெட்டு 8:2> இரண்டாம் கல்வெட்டு இங்குள்ள பெரிய குகைத்தளத்தின் நெற்றியில் வெட்டப்பட்டு உள்ளது.

    எம்ஊர் சிழிவன் அதன்தியன்

    சிழிவன் – துணி வணிகன்

    விளக்கம்: எம்மூரினது துணி வணிகன் அதன் திய்யனால் இக்கொடை நல்கப்பட்டது என்பதே இதன் பொருள். தியன்- யகர ஒற்று சேர்த்து திய்யன் எனப்  படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 8:3>  இக்கல்வெட்டு பெரிய குகைத் தளத்தில் உள்ள கற்படுக்கை ஒன்றன் தலைப்பகுதியில் வெட்டப்பட்டு உள்ளது.

    அந்தைய் பிகன் மகன் வெந்அதன்

    விளக்கம்: பிச்சை கொண்டு வாழும் பிராமணத் துறவி பிக்கனின் மகன் வெண்அதன் என்பானால் கொடையாக நல்கப் பட்டது என்பதைக் குறிக்கிறது. பிகன் – க் என்ற ஒற்றெழுத்து சேர்க்க வேண்டும்.

    கல்வெட்டு 8:4> இன்னொரு  கற்படுக்கையின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டு உள்ளது.

    பேதலை குவிரன்

    விளக்கம்: பேதலை எனும் ஊரைச் சேர்ந்த குவிரன் இப்படுக்கையை அமைத்தான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 8:5> இன்னொரு கற்படுக்கையில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    செங்குவிரன்

    விளக்கம்: செங்குவிரன் என்பான் இப்படுக்கையை அமைத்தான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 8:6> மற்றொரு கற்படுக்கையில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    கு (வி)ரதன்

    விளக்கம்: குவிரதன் இப்படுக்கையை அமைத்தான் என்பது இதன் பொருள்.
    _____________________________

    மேட்டுப்பட்டி: மதுரைக்கு மேற்கில் 40 கி.மீ. தொலைவில் பேரணைப் பகுதியில் மேட்டுப் பட்டி அமைந்திருக்கின்றது. இவ்வூரின் வைகையாற்றுத் தென் கரையில் சித்தர் மலை, மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படும் மலை உள்ளது. மலை உச்சயில் மகாலிங்க சுவாமி கோவிலுக்குப் போகும்  வழியில் பஞ்சபாண்டவர் குகை எனப்படும் இயற்கையான நீண்ட பெருங் குகைத் தளம் ஒன்று உள்ளது. இதன் நெற்றிப் பாறை  விளிம்பின் அடியிலும் கற்படுக்கையின் தலைப் பகுதியிலும் பத்து தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

    கல்வெட்டு 9:1> குகைத்தள முகப்புப்  பாறையின் தென்புறம் இக்கல்வெட்டு உள்ளது. ஒரு மீட்டர் நீளத்தில் ஐந்து சொற்களைக் கொண்டுள்ளது.

    அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ

    விளக்கம்: மதுரையைச் சேர்ந்த சமண முனிவன் (அமணன்) அத்திரன் என்பானுக்குரிய உறைவிடம், இது உதயனுடைய கொடை எனப் பொருள்.  மதுரை இக்கல்வெட்டில் மதிரை என சரியாகக் குறிக்கப்பட்டு உள்ளது.

    கல்வெட்டு 9:2> குகைத்தள கற்படுக்கைகளில் இடப்புறம் அமைந்த முதற் கற்படுக்கையில் வெட்டப்பட்டு உள்ள கல்வெட்டு இது.

    அந்தை அரிய்தி

    விளக்கம்: இரந்து வாழும் பிராமணன் அரிதிக்கு உரிய கற்படுக்கை எனப் பொருள்.

    கல்வெட்டு 9:3> மேல் வரிசையில் அமைந்த மற்றொரு  கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ள கல்வெட்டு இது.

    அந்தை இராவதன்

    விளக்கம்: இரந்து வாழும் பிராமணன்  இராவதன் என்பானுக்கு உரிய கற்படுக்கை எனப் பொருள்.

    கல்வெட்டு 9:4> மேல் வரிசைக் கற்படுக்கை ஒன்றில் உள்ள கல்வெட்டு இது.

    (ம)திர அந்தை (வி)ஸுவன்

    விளக்கம்: மதுரைச் சேர்ந்த இரந்து வாழும்  பிராமணன் விசுவனுக்கு அமைத்த கற்படுக்கை எனப் பொருள்.

    கல்வெட்டு 9:5> மேல் வரிசையில் நான்காம்  கற்படுக்கையில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது.

    அந்தை சேந்தன் அதன்

    விளக்கம்: இரந்து வாழும் பிராமணன் சேந்தன் அதனுக்கு  அமைத்துக் கொடுத்த கற்படுக்கை எனப் பொருள்.

    கல்வெட்டு 9:6> மேல் வரிசையில் உள்ள ஐந்தாம் படுக்கையில் வெட்டப்பட்ட  கல்வெட்டு இது.

    சந்தந்தை சந்தன்

    விளக்கம்: இரந்து வாழும் முனிவனுக்கு சந்தன் இப்படுக்கையை செய்தான் எனப்பொருள்.

    கல்வெட்டு 9:7> கீழ்வரிசை கற்படுக்கை ஒன்றை ஒட்டி வெட்டப்பட்ட கல்வெட்டு இது.

    பதின் ( ஊர்) அதை

    அதை – கல்

    விளக்கம்: பதின் ஊரார் செய்த கற்படுக்கை எனப் பொருள்.

    கல்வெட்டு 9:8> கீழ்வரிசைப் கற் படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    குவிர அ(ந்தை) சேய் அதன்

    விளக்கம்: குவிரந்தை என்னும் துறவிக்கு சேய் அதன் என்பவன் கற்படுக்கை செய்தளித்தான் என்று பொருள்.

    கல்வெட்டு 9:9> கீழ்வரிசைக் கற்படுக்கை ஒன்றன் தலைப் பகுதியில் வெட்டப்பட்ட  கல்வெட்டு இது.

    குவிரந்தை வேள் அதன்

    விளக்கம்: குவிரந்தை என்னும் துறவிக்கு வேள் அதன் செய்த படுக்கை எனப் பொருள்.

    கல்வெட்டு 9:10> கீழ்வரிசைப் படுக்கையில் உள்ளது.

    திடிஇல் அதன்

    விளக்கம்: திடியில் அதன் என்பானால் அமைக்கப்பட்ட கற் படுக்கை என்பது இதன் பொருள். இப்போது திடியன் என்ற பெயரில் இவ் ஊர் மேட்டுப்பட்டிக்கு தென்கிழக்கில் உசிலம்பட்டி வட்டத்தில் உள்ளது என்பர்.
    _____________________________

    கருங்காலக்குடி: மதுரை மேலூர் வட்டத்தில் மேலூர் – திருச்சி செல்லும் வழியில் உள்ள ஊர் இது. இந்த கிராமத்தில் பஞ்சபாண்டவர் குட்டு எனும் சிறு குன்று உள்ளது. இக்குன்றின் இயற்கையான குகைத் தளத்தில் பல படுக்கைகள் உள்ளன.

    கல்வெட்டு 10:1 > குகையின் முகப்புப் நெற்றிப்பாறை நீர்வடி  விளிம்பில் ஒரு கல்வெட்டு உளளது.

    எழைய் ஊர் அரிதின்  பளி

    விளக்கம்: எழையூரைச் சேர்ந்த நாட்டு எல்லையை கடந்து பொருளை மாற்றிடத்திற்கு கடத்த  உதவுபவன் அளித்த கற்படுக்கை எனப் பொருள். ளகர மெய் சேர்த்து பள்ளி எனப் படிக்க வேண்டும்.
    ____________________________

    முதலைக்குளம்: மதுரை உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு மேற்காக விக்கிரமங்கலம் அருகில் முதலைக்குளம் உள்ளது. விக்கிரமங்கலம் உண்டாங்கல்லு மலை இதன் அருகே உள்ளது.

    கல்வெட்டு 11:1> சின்ன உண்டாங்கல்லு மலையில் இராக்கிப்புடவு  என்ற குகையின் புருவத்தில் 164 செ.மீ. நீளத்தில் இக் கல்வெட்டு உள்ளது.

    வேம்பிற்ஊர் பேர் அய்அம் சேதவர்

    விளக்கம்: அயம் > சுனை, குளம் ஆகியவற்றை குறிக்கும் சொல். இந்தப் பெருங்குளம் வேம்பிற்றூராரால் வெட்டப்பட்டது என்பது இதன் பொருள். அவ்வூரில் 2 கி. மீ. சுற்றளவில் ஒரு பெருங்குளம் உள்ளது. சேதவர் என்பதை செய்தவர் எனக் கொள்ளலாம்.
    _____________________________

    அழகர்மலை: வைணவர் திருத்தலமான அழகர்கோவில் மதுரைக்கு வடக்கே 24 கி.மீ. தொலைவில் உள்ளது. அழகர் கோவிலை சுற்றி உள்ள கோட்டையின் முகப்பு வாயிலுக்கு வெளியே கிழக்கு நோக்கி மேலூர் போகும் சாலையில் மலைத் தொடரின் அடிவாரத்தில் சுந்தரராசன்பட்டி, கிடாரிப்பட்டி என்ற ஊர்கள் உள்ளன. அவற்றின் அருகில் மலைத்தொடர் குன்றின் சற்று உயரமான பகுதியில் இயற்கையான குகைத்தளமும் ஒரு சுனையும் உள்ளன. இக்குகைத் தளத்தில் செதுக்கிய கற்படுகை ஒன்றிலும் நெற்றிப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் மேலும் கீழுமாக தமிழ் பிராமி கலவெட்டுகள் உள்ளன. இங்கு வணிகர்கள் கொடைகொடுத்த செய்தியே அதிகம் உள்ளது. சமண பொதுமக்களில் அதிகமானோர் வணிகரே என்பது கருதத்தக்கது. ஒரு இனம் தன் இனத்திற்கு ஆதரவாக இருப்பது தொன்றுதொட்ட உலக வழக்கு.

    கல்வெட்டு 12:1> குகைத்தள முகப்புப் பாறையின் நெற்றிப் பகுதியில் நீர்வடி விளிம்பின் கீழே இக் கல்வெட்டு உள்ளது.

    மதிரை பொன் கொல்வன் அதன் அதன்

    விளக்கம்: மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் அதன் அதன் இக்கொடை ஈந்தான் என்பது பொருள்.

    கலவெட்டு 12:2> முதற் கல்வெட்டின் அருகிலேயே உள்ளது. முன்னும் பின்னும் எழுத்துகள் சிதைவுற்றுள்ளன.

    – – – அ னாகன் த – – –

    விளக்கம்: நாகன் என்ற பெயர் மட்டும் தெளிவாக உள்ளது.

    கல்வெட்டு 12:3> இரண்டாம் கல்வெட்டை அடுத்து நெற்றிப் பாறையில் இக்கல்வெட்டு நீண்ட வரியாக வெட்டப்பட்டு உள்ளது.

    மத்திரைகே உபு வாணிகன் வியக்கன் கணதிகன்

    விளக்கம்: உபு என்பதில் ப் என்ற ஒற்றெழுத்தை சேர்க்கவேண்டும். மத்திரை என்பது மதுரையைக் குறித்தது, இதாவது மதுரையைச் சேர்ந்த வியக்கன் கணதிக்கன் என்ற உப்பு வணிகன் கற்படுக்கையை ஏற்படுத்தினான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 12:4> மேல் உள்ள கல்வெட்டினைத் தொடர்ந்து அதே போல் நீண்ட வரியில் இக்கல்வெட்டு உள்ளது.

    கணக அதன் மகன் அதன் அதன்

    விளக்கம்: கணக அதன் மகன் அதன் அதன் இக் கற்படுக்கையை செய்தளித்தான் என்பது பொருள். இறுதியில் இவர் தந்த காசின் மதிப்பு பொறிக்கப்பட்டுள்ளது.

    கல்வெட்டு 12:5> முன் கல்வெட்டு உள்ள  நீண்ட வரியில் நான்காம் பகுதியாக இக் கல்வெட்டு உள்ளது.

    சபமிதா  இன பமித்தி

    விளக்கம்: தகர மெய் சேர்த்து சபமித்தா எனப் படிக்க வேண்டும். சபமித்தா இனத்தவள் பமித்தி, இதாவது ஒரே ஊர் அல்லது ஒரே நாட்டினள் எனக் கொள்ளலாம். இந்த இரு பெண் துறவாட்டிகளும் கற்படுக்கை அமைத்தனர் என்பது பொருள். பெயரை வைத்து இருவரும் சமணர் என்கின்றனர்.

    கல்வெட்டு 12:6> முன் உள்ள கல்வெட்டுகளின் நெடுவரிசையில் இக்கல்வெட்டு 5 ஆம் வரிசையில் உள்ளது.

    பாணித வாணிகன் நெடுமலன்

    பாணித – கை வைத்த சட்டை வணிகன்

    விளக்கம்: கைவைத்த சட்டை வணிகன் நெடுமல்லன் கற்படுக்கை செய்தளித்தான். மகர மெய் சேர்த்து நெடுமல்லன் என படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 12:7> இக்கல்வெட்டு 6 ஆவதாக  உள்ளது.

    கொழு வணிகன் எள சந்தன்

    விளக்கம்: ஏர்கலப்பையின் கூர் பகுதியான கொழுவை விற்கும் இள சந்தன் கற்படுக்கை செய்தளித்தான் என பொருள்படும். எள என்பது இள என்பதன் கொச்சைத் திரிபு.

    கல்வெட்டு 12:8> முகப்புப் புருவ நீர்வடி விளிம்பின் கீழ் ஏழாவதாக உள்ளது. கல்வட்டின் தொடக்கப் பகுதி சிதைந்துள்ளது.

    (ஞ்)சி கழு மாற நதன் தாரஅணிஇ கொடுபிதஅவன்

    கழு – கல்லினால் ஆன கூர் கருவி (spike). மரக்கட்டையில் நார் அல்லது கயிறால் பிணைத்து கோடாரியாக பயன்படுத்தப்படுவது தான் கழு. மாறன் – பொருளுக்கு பொருள் மாற்றும் வினையை செய்பவன் என்ற பொருளில் வணிகனைக் குறிக்கும்.

    விளக்கம்:  கழு வணிகன் நத்தன் மழைநீர் தடுப்பு வசதியை செய்துகொடுத்தான் என்பதே கல்வெட்டின் பொருள்.

    கலவெட்டு 12:9> இக்கல்வெட்டுகளின் நெடுவரிசையில் இறுதியது.

    தன்ம(ன்), கஸபன் அவ்(விரு) அ அர்உம் குடுபிதோ

    விளக்கம்: தர்மன், கஸபன் என அவ் இருவரும் கொடை அளித்தோர் எனப் பொருள்படும். இருவரும் என்பது தப்பும் தவறுமாகப்  பொறிக்கப்பட்டு உள்ளது.

    கல்வெட்டு 12:10> 12:3 கல்வெட்டின் கீழ் இக் கல்வெட்டு ப் பொறிப்பு உள்ளது.

    வெண்ப(ளி)இ அறுவை வணிகன் எளஅ அடன்

    அறுவை – ஆக்கப் பொருள், finished product

    விளக்கம்: வெண்பள்ளி என்ற ஊரின் ஆக்கப்பொருளை விற்கும் வணிகனான இளைய அட்டன் இக்கொடை அளித்தான் என்பது இதன் பொருள். இளய > இளைய என்பது எளஅ என பேச்சு வழக்கில் பொறிக்கப்பட்டுள்ளது. அடன் டகர மெய் சேர்த்து அட்டன் என்று படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 12:11>12:10 கல்வெட்டிற்கு அடுத்ததாக உள்ளது

    தியன் சந்தன்

    விளக்கம்: யகர மெய் இட்டு திய்யன் என படிக்கவேண்டும். திய்யன் என்பான் சந்தன் என்னும் துறவிக்கு இக்கொடையை நல்கினான் என்பதே  இதன் பொருள்.

    கல்வெட்டு 12:12 > குகைத் தளத்தின் உள்ளே ஒரு கற்படுகையின் தலைமாட்டில் இக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

    கணிநாகன் கணிநதன் இருவர் அமகல்

    விளக்கம்: கணி நாகன், கணி நத்தன் என இருவர் சேர்ந்து ஏற்படுத்திய (அமைத்த) படுக்கைக் கல். நதன் நத்தன் என ஒற்றெழுத்து சேர்த்து படிக்கவேண்டும். கணி என்பது தியானத்தால் அடைந்த தகுநிலையை குறிக்கும் சிறப்பு பட்டம்.
    _____________________________

    சித்தன்னவாசல்: புதுக்கோட்டை  இலுப்பூர்  வட்டத்தில் புகழ்மிக்க பாண்டியர் கால ஓவியங்களைக் கொண்ட சித்தன்னவாசல் உள்ளது. இவ்வூர் மலையின் கிழக்குப்புறத்தில் மக்களால் ஏழடிபாட்டம் எனப்படும் குகைத்தளம் உள்ளது.

    கல்வெட்டு 13:1> அகலமான கற்படுக்கையின் பக்கவாட்டிலும், தலைப் பகுதியிலும் வெட்டப்பட்ட தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.

    எருமிநாடு குமுழ்ஊர் பிறந்த காவடிஈ தென்கு சிறுபோசில் இளயர் செய்த அதிட்அனம்

    விளக்கம்: எருமிநாட்டுக் குமிழுரில் பிறந்த பெண்துறவிக்கு தெற்கு சிறுபோசில் நாட்டைச்  சேர்ந்த  போர்ப்பயிற்சி பெறும் கன்னி வீரர் செய்து கொடுத்த இருப்பிடம் என்பது இதன் பொருள்.

    _____________________________

    ஐயர் மலை: கரூர் குளித்தலை வட்டத்தில் சத்திய மங்கலத்தில் ஐயர் மலை என்னும் ஊர் உள்ளது. இங்கத்து இரத்தினகிரீசுவரர் மலையில்  இயற்கையான குகைத்தளத்தில் கற்படுக்கையுடன் தமிழி கல்வெட்டு உள்ளது.

    கல்வெட்டு 14:1> பனைதுறை வெஸன் அதட் அனம்

    விளக்கம்: பனைத்துறை என்னும் ஊரினைச் சேர்ந்தவர் வெசனுக்கு  ஏற்படுத்தித் தந்த இருப்பிடம் என்பது இதன் பொருள். இதில் றை என்ற எழுத்து முதலில் வெட்டாது விடுபட்டு பின்பு இடைச் செருகலாக சிறிய அளவில் எழுதப்பட்டு  உள்ளது.

    _________________________

    திருமலை: சிவகங்கை வட்டம் திருமலையில் அமைந்து உள்ள குடைவரைக் கோயிலுக்கு மேல் பகுதியில் மலை மீது பழங்கால ஓவியங்களுடன் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.

    கல்வெட்டு 15:1> மலை மீது வடபுறத்தில் மேலே அமைந்துள்ள குகைத்தளத்தின் முகப்புப் பாறையில் பொறிக்கப்பட்டு உள்ளது. முன் பகுதி எழுத்துகள் சிதைந்து உள்ளன.

    – – – – வ கரண்டை

    விளக்கம்: முனிவர் வாழிடம், குகைத்தளம் என்பது மட்டுமே உள்ளது. முன்னே இருந்த எழுத்துகள் சிதைந்து போயின.

    கல்வெட்டு 15:2> மலையின் மீது வடதிசை நோக்கிய பகுதியில் கீழப்புறம் அமைந்த சிறு குகைததளத்தின் நெற்றிப் பகுதியில் மிக மெல்லிதாக பொறிக்கப்பட்டு உள்ளது.

    எருகாடு ஊரு காவிதி கோன் கொறிய பளிய்

    விளக்கம்: எருகாட்டூரைச் சேர்ந்த பெண் துறவிக்கு அவ்வூர் ஆட்சியாளன் (கோன்) செய்து கொடுத்த கற்படுக்கை என்பது இதன் பொருள். கொறிய  என்பதில் ஒற்றெழுத்து சேர்த்து கொற்றிய எனப் படிக்கவேண்டும். பழங்காலத்தே ஒற்றோடு வரும் றகரம் டகரமாகவே பலுக்கப்பட்டது. அந்த வகையில் கொற்றிய என்பதை கொட்டிய என்று தான் பலுக்கவேண்டும். இதன் பொருள் கொடுத்த என்பது. இன்றும் தெலுங்கில் பற்று – பட்டு என்றும், நாற்று > நாட்டு என்றும் டகராமாகவே பலுக்கப்படுகிறது.
    _____________________________

    திருப்பரங்குன்றம்: மதுரை மாநகருக்குத் ஐந்து கிலோ மீட்டர் தெற்கில் உள்ளது இத் திருத்தலம். இக்குன்றின் மேற்கில் உயரமான இடத்தில் இயற்கையான குகைத்தளம் உள்ளது. இதில் உள்ள கற்படுக்கைகளில் தலைப் பகுதியிலும, பக்கவாட்டிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.

    கல்வெட்டு 16:1> வலம் இருந்து இடமாகவும் எழுத்துகள் தலைகீழாகவும் கற்படுக்கை ஒன்றன் தலைப்பகுதியில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    அந்துவன் கொடுபிதவன்

    விளக்கம்: இக் கற்படுக்கையை ஏற்படுத்திக் கொடுத்தவன் அந்துவன் என்பான் என்பது இதன் பொருள். மெய் சேர்த்து கொட்டுபித்தவன் எனப் படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 16:2> இரு கற்படுக்கைகளின்  பக்கவாட்டுப் பகுதியில் இரு பிரிவுகளாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    மாராயது கய(ம்)

    விளக்கம்: அரசர் ஏற்படுத்திக் கொடுத்த குளம் என்று பொருள்.

    கல்வெட்டு 16:3> வரிசையாய் அமைந்த கற்படுக்கைகளின் தலைப் பகுதிகளுக்குப் பின் புறம் உள்ள பாறையில் நீளமாக வெட்டப்பட்டு உள்ளது.

    எருகாடுர் இழகுடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன் நெடுசாதன்

    இழ குடும்பிகன் – வறிய குழுத்தலைவன் , ஆய்சயன்  – கற்படுக்கை வடிக்கும் வினைஞன்

    விளக்கம்: கற்படுக்கை வடிக்கும் (ஆய்சயன்) நெடுசாத்தனைக் கொண்டு எருகாட்டூரைச் சேர்ந்த வறிய குழுத் தலைவன் போலாலயன் கற்படுக்கை செய்தான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 16:4 > 2013ல் பிப்ரவரியில் புதிதாக உயர்த்தே உள்ள காசி விசுவநாதர் கோவில் அருகே உள்ள குளத்திற்கு செல்லும் படிகள் உள்ள தரையில் இருவரியில் தமிழி கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது .

    மூ நகர  / மூ சக்தி 

    விளக்கம்: பழைய நகரான மதுரையின் மூன்று ஆற்றலர்.
    _____________________________

    முத்துப்பட்டி: மதுரை தெற்கு வட்டத்தில் வடபழஞ்சி என்னும் ஊருக்கு அருகில் முத்துப்பட்டி உள்ளது. முத்துப்பட்டியில் பெருமாள் மலை எனவும் கரடிப்பட்டி மலை எனவும் அழைக்கப்படும் 220 மீட்டர் உயரமுள்ள மலையின் தென்பகுதியில் இயற்கையான குகைத்தளத்தில் மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன. குகைத்தள மழைநீர்வடி முகப்பிலும், படுக்கையின் அருகிலும், சிறுகுகைத்தளத்தின் தனிக் கல்லிலுமாக இவை உள்ளன.

    கல்வெட்டு 17:1 > சிறுகுகைத்தளத்தின் சிறு பாறை ஒன்று வழவழப்பாக செதுக்கப்பட்டு உள்ளது. இச்சிறுபாறையின் உட்புறம் செதுக்கப்படாமல் மேடும்  பள்ளமுமாக  உள்ள பகுதியில் வலம் இடமாக தலைகீழாக இக்  கல்வெட்டு வெட்டப்பட்டு உள்ளது.

    நாகபேரூதைய் முசிறி கோடன் எளமகன்

    விளக்கம்: நாகபேரூதை ஊரைச் சேர்ந்த முசிறி கோடன் என்னும் போர்ப்பயிற்சி பெறும் கன்னிவீரன் கற்படுகை ஏற்படுத்தித் தந்தான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 17:2> இடையன் தருமம் எனப்படும் பெரிய குகைத்தளத்தின் முகப்பு நெற்றியில் மூன்று பகுதிகளாக பொறிக்கப்பட்டு உள்ளது.

    சைய்அளன் விந்தைஊர் கவிய்

    கவி – கற்படுக்கை, flat stone.

    விளக்கம்: சைய்அள்ளன் என்பான்  விந்தையூரில் கற்படுக்கை அமைத்தான் என்பது இதன் பொருள். விந்தையூர் முத்துப்பட்டியின் பழம்பெயர் எனத் தெரிகின்றது.

    கல்வெட்டு 17:3> பெரிய குகைத்தளக் கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது. கல்வெட்டின் நடுவே சிதைந்து உள்ளது.

    திடிக் காத்தான் (ம)  _ _  னம் எய்_ _ 

    விளக்கம்: டகர மெய்  சேர்த்து திட்டி என படிக்க வேண்டும். திட்டி எனும் ஊரைச் சேர்ந்த  காத்தான் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை என்பது இதன் பொருள்.
    _____________________________

    ஜம்பை: விழுப்பரம் மாவட்ட திருக்கோவிலூருக்கு  அருகில் தென் பெண்ணை ஆற்றின் வடகரையில் இவ்வூர் அமைந்து உள்ளது. இங்கு உள்ள ஆளுருட்டி மலையில் மக்களால் தாசிமடம் எனப்பெறும் இரு இயற்கைக் குகைத் தளங்களில் ஒன்றன் உட்புறத்தில் பின்புறமாக நிற்கும் பாறையில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    கல்வெட்டு 18:1> ஸதியபுதோ அதியந் நெடுமாந்  அஞ்சி ஈத்த பளி

    விளக்கம்: அதியன் நெடுமான் அஞ்சி செய்து அளித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். அசோகன் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சதியபுதோ என்பதன் பொருட்  புதிரை இக் கல்வெட்டு தீர்த்து வைத்து உள்ளது. சதிய புத்திரன் என்பதன் பிராகிருத சிதைவு வடிவச் சொல் தான் சதியபுதோ என்பது. அசோகன் கல்வெட்டில் சதியபுதோ என்ற சொல் அதியமான்களைக் குறிக்கின்றது. அதிய என்பது சகர முன்னொட்டு பெற்று சதிய என்றாகி உள்ளது. மகன் > மான் என்பது புத்தோ என பிராகிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. பளி யில் ளகர மெய் சேர்த்து பள்ளி எனப் படிக்க வேண்டும்.
    _____________________________

    ஆனைமலை: மதுரை வடக்கு வட்டத்தில் மதுரை மேலூர் சாலையில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தைக் கடை என்னும் ஊரில் இருந்து கிழக்காகச் சென்றால் நரசிங்கம் என்னும் ஊரை அடையலாம். அங்கு யானை போல் தோற்றமுடைய மலை ஒன்று உள்ளது. அதனால் அது ஆனைமலை எனப்படுகிறது. யானைத் தலையை ஒத்த மலைப் பகுதியின் மேற்பரப்பில் ஓர் இயற்கையான குகைத்தளம் உள்ளது.

    கல்வெட்டு 19:1> குகையின் நெற்றப்புறத்தில் மழைநீர் விளிம்பின் கீழ் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. இரு வரிகளில் அமைந்த கல்வெட்டு இது.

    இவகுன்றது உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் / அத்துவாயி அரட்டகாயிபன்

    பா – கற்படுக்கை, flat stone;   ஏரி ஆரிதன் – ஏரியை அண்டி வாழ்பவன்.

    விளக்கம்: தகர மெய் சேர்த்து குன்றத்து என படிக்க வேண்டும். இக்குன்றில் அமைந்த தங்கிடத்தில் உள்ள கற்படுக்கையை ஏரியை அண்டி வாழ்பவன் அத்துவாயி, அரட்டகாயிபன் ஆகிய இரு துறவியர்க்குச் செய்தளித்தான் என்பது பொருள்.
    _____________________________

    புகளூர்: சேலத்தில் இருந்து கரூர் போகும் வழியில் 15 ஆவது கிலோ மீட்டரில் காவிரிக்கரையில் இவ்வூர் அமைந்து உள்ளது. வேலாயுதபாளையம் என இக்கால் அறியப்படுகின்ற பகுதியே இவ்வூர். இங்கு புகழியூர் முருகன் கோவில் அமைந்த ஆறுநாட்டார் மலை உச்சிக்கு சற்றே இறக்கமாக  வடக்கிலும் தெற்கிலும் இயற்கையான குகைத் தளங்கள் உள்ளன. வடதிசை குகைத் தளத்தில் உள்ள கற்படுக்கையிலும், தென்திசை குகைத்தள நெற்றி முகப்பிலும், சுவர்களிலும், அதன் கற்படுக்கைகளிலும் என 12 தமிழி கல்வெட்டுகள் காணப்பட்டு உள்ளன. பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்துகளில் சிறப்பிக்கப்படும் சேர அரசர்கள் குறித்த பொறிப்புகள் இங்கு இடம் பெற்று உள்ளன.

    கல்வெட்டு 20:1> தென்திசையில் அமைந்த குகைத்தள நெற்றி முகப்பில் வெட்டப்பட்ட இரு கல்வெட்டுகளில் இரண்டாவதாக உள்ளது.  கீழிலிருந்து மேலாக முதல் கல்வெட்டு எழுத்துகள் தேய்ந்து காணப்படுகின்றன. ஒரே வரிசையாய் அல்லாமல் இடச் சுருக்கம் கருதி நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய் / கோ ஆதன்  செல்லிரும் பொறை மகன் / பெருங்கடுங்கோன் மகன்   ளங் கடுங்கோ  / ளங்கோ ஆக அறுத்த கல்

    விளக்கம்: சேர வேந்தன் ஆதன் செல்லிரும் பொறையின் மகன் பெருங்கடுக்கோனின் மகன், இதாவது, வேந்தனின் பேரன் இளங் கடுங்கோ இளவரசனாகப் பட்டம் ஏற்றபோது அதற்காக யாற்றுரைச் சேர்ந்த  மூத்த சமணத் துறவி செங்காயபனுக்கு அமைத்த உறைவிடத்தில் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை எனப் பொருள்படும். இக்கல்வெட்டில் இள என்பதில் இகரம் எழுதாமல் விடப்பட்டுள்ளது.

    கல்வெட்டு 20:2 > முதற் கல்வெட்டிற்கு மேலாக பொறிக்கப்பட்டு உள்ளது. எழுத்துகள் தேய்ந்தும் இரண்டாம் வரியில் பாறை சிதைத்ததால் எழுத்துகள் பெயர்ந்து போயும் உள்ளன. நான்கு வரியில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    மூதாமண்ணன் யாற்று செங்காயபன் உறைய் /   கோ ஆ- – – ல்லிரும்புறை மகன் பெருங் / கடுங்கோன் மகன்  கடுங்கோன் ளங்கடுங் / கோ ளங்கோ ஆக அறுபித கல் 

    விளக்கம்: முதற் கல்வெட்டுச் செய்தியே இதிலும் எழுதப்பட்டு உள்ளது. முதற் கல்வெட்டில் முதா என்பது இக்கல்வெட்டில் மூதா என உள்ளதால் மூத்த என பொருள் கொள்ள வேண்டும். யாற்றூரில் ஊர் என்ற சொல் இக் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. முதற் கல்வெட்டில் போல் இகரம் எழுதப்படவில்லை எனினும் இக்கல்வெட்டில் கடுங்கோன் இளங்கடுங்கோ என “கடுங்கோன்” என்ற சொல் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இது முதற் கல்வெட்டில் இல்லை. அறுபித என்பதில் தகர மெய்யை சேர்த்து அறுப்பித்த என்று படிக்க வேண்டும். பொறை இக்கல்வெட்டில் புறை எனப் பொறிக்கப்பட்டு உள்ளது.

    கல்வெட்டு 20:3> குகைத்தள கற்படுக்கை ஒன்றில் பொறிக்கப்பட்டு உள்ளது.  மூன்று வரிகளில் மிகத் தேய்ந்த நிலையில் உள்ளது.

    யாற்றூர் செங்காயபன் / தாவன் ஊர்ப் பின்அன் குற்றன் / ன் அறுபித்த அதிட்டானம்.

    விளக்கம்: சமணத்துறவி யாற்றூர் செங்காயபனுக்கு தாவனூரைச் சேர்ந்த பின்னன் கூற்றன் செதுக்கி அளித்த இருக்கை என்பது கல்வெட்டின் பொருள்.

    கல்வெட்டு 20:4 >  குகைத்தளத்தில் வலப்புறம் அமைந்து உள்ள கற்படுக்கையில் சிதைந்த நிலையில் இறுதிச் சொல் மட்டும் காண்பதற்குத் தெளிவாக உள்ளது.

    – – – – – அதி ட்டான்னம்

    விளக்கம்: இருக்கையைக் குறிக்கும் அதிட்டானம் என்ற சொல் கூடுதலாக ஒரு னகர மெய்யை ஒற்றாகப் பெற்று உள்ளது. முன்னே இருந்த எழுத்துகள் சிதைந்து விட்டன.

    கல்வெட்டு 20:5 > தென்திசையை நோக்கி உள்ள குகைத்தளத்தின் கிழக்கே சிறு குகை ஒன்று அமைந்து உள்ளது. அதன் செதுக்கிச் சீர்படுத்தாத  தரையில் இரு வரிகளில் இக் கல்வெட்டு  வெட்டப்பட்டு உள்ளது.

    நலி (ய்) ஊர் ஆ பிடன் குறும்மகள் / கீரன் கொறி செயிபித பளி

    ஆ – அவ்விடத்து என்னும் இடச்சுட்டு, சேர்ந்த; பள்ளி – படுக்கை; பிட்டன் – கருத்தவன்.

    விளக்கம்: நல்லியூரைச் சேர்ந்த பிட்டன் உடைய இளைய மகள் கீரன் கொற்றி என்பாள் செய்வித்து அளித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். நலி யில் லகர மெய்யும், பிடனில் டகர மெய்யும், கொறியில் றகர மெய்யும், செய்பித என்பதில் தகர மெய்யும், பளி இல் ளகர மெய்யும் சேர்க்க வேண்டும்.

    கல்வெட்டு 20:6 > மேற்சொன்ன குகையில் உள்ள கற்படுக்கையின் மேல் இக்கல்வெட்டு ஒரு வரியில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    நல்லி(ய்) ஊர் ஆ பிடந்தை மகள் கீரன் கொற்றி அதிடானம் 

    பிட்டந்தை – கருத்த அந்தணத் துறவி; அதிஷ்டானம் – location, நிலைத்தளம்.

    விளக்கம்: முன்னைக் கல்வெட்டுச் செய்தியே சில  மாற்றுச் சொல் கொண்டு இதில் பொறிக்கப்பட்டு உள்ளது. நல்லியூரைச் சேர்ந்த கருத்த பிராமணத் துறவியின் மகள் கீரன் கொற்றி என்பாள் செய்வித்த இருப்பிடம் எனப் பொருள்படும். வாழ்வின் முற்பகுதியில் இல்லறத்தை கடைபிடித்த பிட்டன் பிற்பகுதியில் துறவு மேற்கொண்டதனால் அவருக்கு அவரது மகள் இருப்பிடம் அமைத்துக் கொடுத்தாள் என்பது நால்வர்க்க வாழ்க்கை முறைக்கு ஒரு சான்றாகிறது.

    கல்வெட்டு 20:7 > தென்திசையை நோக்கியபடி உள்ள பகுதயின் மேற்புறம் உள்ள குகையின் முதல் படுக்கையில் இரு வரியில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    கொற்றந்தை ளஎன்  / முன்று

    கொற்றம் – அச்சமற்ற,  அந்தை – பிச்சையெடுத்து வாழும் அந்தணன்; இளையன் – போர்ப்பயிற்சி பெறும் கன்னி வீரன்; முன்று – குகை.

    விளக்கம்: அச்சமற்ற பிராமணத் துறவிக்கு கன்னி வீரன் ஏற்படுத்திய குகை என்பது இதன் பொருள். இளையன் ளஎன்  என பேச்சு வழக்கில் பொறிக்கப்பட்டு உள்ளது. கொற்ற என்ற முன்னொட்டு இங்கு துறவிகளின் பெயரில் பின்னொட்டாக ஆனந்தா, சரசுவதி, பாதர் வருவது போல உள்ளதால் கொற்ற என்பது தனிப்பிரிவு துறவு கூட்டத்தாரை குறிப்பதாகலாம்.

    கல்வெட்டு 20:8 > மேற்சொன்ன குகையின் மற்றொரு கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது. இறுதிச் சொல் தவிர ஏனைய சிதைந்து  உள்ளன.

      _  _  _ அதிட்டானம்

    விளக்கம்: இருப்பிடம் என்பது மட்டுமே தெளிவாக உள்ளது. முன்னே இருந்த சொற்கள் சிதைந்து விட்டன.

    கல்வெட்டு 20:9 > மேற்சொன்ன குகையின்  மூன்றாம் படுக்கையில் இரு வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது.

    கருஊர் பொன் வாணிகன் /   நத்தி அதிட்டானம்

    விளக்கம்: கரூர் வாழ் பொன் வணிகன் நத்தி என்பான் ஏற்படுத்திய இருப்பிடம் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 20:10 > மேற்சொன்ன குகையின் நான்காம் படுக்கையில் இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது.

    எண்ணை வாண்ணிக  /  ன் வெநி ஆதன் அதிட்டானம்

    விளக்கம்: எண்ணெய் வணிகன் வெந்நி/வென்னி ஆதன் என்பான் ஏற்படுத்திய இருப்பிடம் என்பது இதன் பொருள். வாணிகனில் ணகர மெய் தேவை இன்றி பொறிக்கப்பட்டு உள்ளது. வெநியில் னகர மெய் சேர்த்து வென்னி என படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 20:11 > மேற்சொன்ன குகையின் ஐந்தாம் படுக்கையில் ஐந்து வரிகளில் பொறிக்கப்பட்டு வலப்பக்க எழுத்துகள் சிதைந்து போய் உள்ள கல்வெட்டு இது.

     – — – -வ / பெ – – –   / கன் – — – /  மக – – – –  /  ளவா –  –  –

    பொருள் அறியமுடியாத படி கல்வெட்டு சிதைந்து உள்ளது.

    கல்வெட்டு 20:12 > ஆறுநாட்டார் மலையின் வடதிசையில் சூளாமணி எனப்படும் குகையில் இக்கல்வெட்டு உள்ளது.

    ணாகன் மகன் பெருங்கீரன்

    விளக்கம்: நாகன் என்பான் மகன் பெருங்கீரன் ஏற்படுத்தியது என்பது இதன் பொருள்.
    _____________________________

    மாமண்டூர்: இவ்வூர் காஞ்சிபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் வந்தவாசி செல்லும் சாலையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு வட்டத்தில் தூசி என்ற ஊர் அருகே உள்ளதால் தூசி மாமண்டூர் எனப் பொதுவாக அழைக்கின்றனர்.

    கல்வெட்டு 21:1> இங்குள்ள மலையில் அமைந்துள்ள பல்லவர் குடவரைக் கோயில்களுக்கு வடதிசையில் உள்ள சிறிய குன்றின் இயற்கையான குகைத்தளத்தின் முகப்பில் பந்தல் அமைக்க கொம்புகளைச் செருகுவதற்காக அகழப்பட்ட இரு துளைகளுக்குக் கீழே இக்கல்வெட்டு நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    கணி மான்  / தேனூர் தந்த கோன் குன்று ஆசி / செயிதான். தசன் சிறு /  – – – – வன்.

    முன் – first born child, தலைச்சன் பிள்ளை; ஆசி – ஆசீர்வதி, வரமளி.

    விளக்கம்: கணிமான் என படித்தது தவறு. அதில் ‘மா’ என்ற பிராமி எழுத்தே இல்லை மாறாக பேரா இரா. மதிவாணன் வாசிப்புப்படி ‘மு’ என்ற சிந்து எழுத்து தான் உள்ளது. எனவே அதை முன் என்றே படிக்க வேண்டும். பெயர் குறிப்பிடப்படாத  தியானத்தினால் கணி என்ற பட்டம் பெற்ற பிராமணத் தவ முனிவரின் முதல் மகன் தேனூரைக் கொடையாகத்  தந்த ஆட்சியாளனுக்கு இக்குன்றில் ஆசியை (வரத்தை) தந்தான். தச்சன் சிறு – – – – வன் என்பவன் இதைக் கல்லில் வடித்தான். சகர மெய் சேர்த்து தச்சன் என படிக்க வேண்டும். கணி என்னும் பட்டத்தை எய்திய பிராமணத் துறவி தம் வாழ்வின் முற்பகுதியில் இல்லறத்தவராக இருந்து வாழ்வின் பிற்பகுதியில் பிச்சை எடுக்கும் துறவி ஆனார் என்று தெரிகின்றது. இது நால்வர்க்க வாழ்க்கை முறைக்கு ஒரு சான்று.
    _____________________________

    குன்னக்குடி: புகழ்மிக்க முருகன் கோவில் அமைந்துள்ள இவ் ஊர் காரைக்குடி திருப்பத்தூர் சாலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இக்குன்றின் மேல் அமைந்துள்ள ஞானியார் மடம் என்ற குகையின் நீர்வடி விளிம்பில் இரு தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.

    கல்வெட்டு 22:1 > தலைமாறாகவும் கீழ் மேலாகவும் மாற்றி எழுதப்பட்டு உள்ளன.

    காபிஊர் ஆதன் சாத்தன்

    விளக்கம்: காப்பியூர் வாழ் ஆதன் சாத்தன் என்பான் கற்படுக்கை ஏற்படுத்தித் தந்தான் என்பது கல்வெட்டின் பொருள்.  பகர மெய் சேர்த்து காப்பி எனப் படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 22:2 > இக்கல்வெட்டும் தலைமாறாகவும், கீழ் மேலாகவும் நீர்வடி விளிம்பின் மறுபுறம் பொறிக்கப்பட்டு உள்ளது. முதல் மூன்று எழுத்துகள் தெரிகின்றன ஏனைய கட்டடக் கட்டுமானத்தில் மறைந்து உள்ளன. முன் கல்வெட்டுச் செய்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது.

    ஊறு து

    விளக்கம்: றகர மெய் சேர்த்து ஊற்று என்று படிக்கவேண்டும்.  நீர் ஊற்றை காப்பி ஊர் ஆதன் சாத்தன்  ஏற்படுத்திய செய்தியைக் குறிப்பதாகலாம் என அறிஞர் கருதுகின்றனர். ஏனெனில் குகைக்குப் போகும் வழியில் சதுரவடிவில் ஒரு சுனை வெட்டப்பட்டு அதில் இன்றளவும் நீர்த் தேங்கி பயன்பட்டுக் கொண்டு உள்ளது.
    _____________________________

    தொண்டூர்: விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு 22 கிலோ மீட்டர் வடகிழக்கே இவ்வூர் அமைந்துள்ளது. இந்த ஊருக்குத் தெற்கே உள்ள குன்றில் பஞ்சனார்படி என்ற இயற்கையான குகைத்தளத்தில் தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.

    கல்வெட்டு 23:1> குகையின் வெளியே உள்ள தரையில் இரு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது இக்கல்வெட்டு.

    (இ)ளங் காயிபன் ஏவ அகழ்ஊரறம் / மோசி செயித அதிடானம்

    அறம் – தீர்ப்பாளர், judge

    விளக்கம்: இளங்காயிபன் என்ற துறவியின் சொற்படி அகழுரைச் சேர்ந்த  தீர்ப்பாளர் மோசி என்பவர் இந்த இருப்பிடம் செய்தார் என்பது இக்  கல்வெட்டின் செய்தி.
    _____________________________

    குடுமியான்மலை: புகழ்மிக்க இசைக் கல்வெட்டும், குடைவரைக் கோவிலும் கொண்ட இவ்வூர் புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மலையின் தென்மேற்குப் பகுதியில் பாறைச் சரிவில் உள்ள குகைத்தளத்தில் இக் கல்வெட்டு காணப்படுகின்றது.
    கல்வெட்டு 24:1 > குகையில் அமைந்த கற்படுக்கையில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு எழுத்துகள் தெளிவின்றி உள்ளன.

    நாழள் கொற்றந்தய் ப(ளி)ய்

    விளக்கம்: நாழள் எனும் ஊரின் அச்சமற்ற அந்தணனுக்கு  (கொற்றந்தை) ஏற்படுத்திய கற்படுக்கை என்பது இதன் பொருள்.  துறவிகளின் பெயரில் பின்னொட்டாக ஆனந்தா, சரசுவதி, பாதர் வருவது போல கொற்ற என்ற முன்னொட்டு இங்கு தனிப்பிரிவு துறவு கூட்டத்தாரை குறிப்பதாகலாம்
    _____________________________

    திருச்சிராப்பள்ளி: திருச்சி மலைக்கோட்டை மலையின் மேற்கு திசையில் உள்ள இயற்கையான குகைத்தளத்தில் ஒரு  தமிழி கல்வெட்டு அறியப்பட்டது.

     –  – –  பன் கே 

    விளக்கம்: இம் மூன்று எழுத்துகள் மட்டும் படிக்கக் கிடைக்கின்றன.
    _____________________________

    எடக்கல்: கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கணபதி வட்டம் என்ற ஊருக்கு தென்மேற்கில் 6 கிலோ மீட்டர் தொலைவில் எடக்கல் மலை உள்ளது. இம்மலையின் உச்சியில் மேற்கு திசைச்சரிவில் இயற்கையான குகைத்தளம் உள்ளது. அங்கு ஐந்து தமிழி கல்வெட்டுகள் உள்ளன.

    கல்வெட்டு 26:1> குகையில் வடக்கு சுவர் மேல் பொறிக்கப்பட்டு உள்ளது.

    ஒபனப விரஅ

    விளக்கம்: ஒப்பனப்ப வீரன் என்ற ஆள் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. பகர மெய் சேர்த்து ஒப்பனப்ப என்றும் விர என்பதை நெடிலாக்கி வீர என்றும் படிக்கவேண்டும்.

    கல்வெட்டு 26:2> அதே வடதிசைச் சுவரில்  பொறிக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டு.

    கடும்மி புத சேர கோ

    விளக்கம்: கடு உம்மி  பூத  சேர கோ என்பது ஒரு சேர மன்னனது பெயர். புத என்பதை மகன் என்னும் பிராகிருத சொல்லொடு பொருத்துவர் அறிஞர். எனினும் அதை நெடிலாக்கி பூத எனப்படிப்பதே சரி. கோ என்ற சொல் பிந்து  கால சிந்து  எழுத்தில் எழுதப்பட்டு உள்ளது. அதை பேரா. இரா. மதிவாணன் கோ  என படித்து உள்ளார்.

    கல்வெட்டு 26:3> அதே வடதிசைச் சுவரில் மூன்றாவதாகப் பொறிக்கப்பட்டு உள்ளது. பழைய மைப்படி கொண்டு படிக்கப்பட்டு உள்ளது.

    கோ பூதி விர

    விளக்கம்: அரசனான பூதி வீரன் என்று பொருள். பூதன் என்ற பெயர் இகர ஈறு பெற்று பூதி ஆகி உள்ளது. எனினும் இதை பிராகிருதச் சொல்லாகக் கொள்கின்றனர்.

    கல்வெட்டு 26:4> கோ(வா)தான்

    விளக்கம்: ஆதன் எனும் பெயர் கொண்ட அரசன் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 26:5> 2012 ல் அம்புக்குத்தி மலையில் உள்ள எடக்கல் குகையில் ஐந்தாவதாக புதியதாக இப் பிராமி கல்வெட்டு கண்டறியப்பட்டது.

    சிவஸ்வாமி 

    விளக்கம்: சிவஸ்வாமி என்ற பெயர் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை  கண்டறிந்த இராகவ வாரியார் “ஸ்ரீ வழுமி” என்று படித்தார்.  ஐராவதம் மகாதேவன் இதை “ஈ பழம” இதாவது இந்தப் பழமையான என்று பொருள்படப் படித்தார். அதன் பயனாய் மலையாளம் செம்மொழி என அறிவிக்கப்பட்டது. இதை தொல்லியல் அறிஞர் இரா. நாகசாமி தான் “சிவஸ்வாமி” என்று சரியாகப் படித்தார்.
    _____________________________

    நெகனூர்ப்பட்டி:  வடதமிழ்நாட்டில் செஞ்சி  வட்டத்தில் நெகனூர்பட்டி உள்ளது.  இங்கு அடுக்கன் கல் என்ற இயற்கைக் குகைத்தளம் உண்டு. இதன் வெளிப்புறத்தில் தென்திசை நோக்கிய பாறையில்  தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.

    கல்வெட்டு 27:1> சுற்றிலும் சதுரக்கட்டம் வெட்டப்பட்டு நான்கு வரிகளில் அமைந்து உள்ளது. எல்லா மெய் எழுத்துகளும் புள்ளி பெற்று உள்ளன.

    பெரும் பொகழ்  / சேக்கந்தி தாயியரு  / சேக்கந்தண்ணி செ  / யி வித்த பள்ளி 

    சேக்கு – கன்னக் குடுமி, காதுக்கு மேற் பக்கமாக முடிக்கும் குடுமியை ‘கன்னக் குடுமி‘ என்பார் ஈழத்தார்; அந்தணி – பிச்சையெடுத்து வாழும் கிழத் துறவாட்டி, அந்தணன் என்பதன் பெண் பால்; சேக்கு + அந்தி – இளையவள், அக்காள்.

    விளக்கம்: பெரும் புகழ் எய்திய கன்னக் குடுமி அக்காளின் தாயார் கன்னக் குடுமி பிராமணத் துறவிக்கு செய்வித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். இவர்கள் குறி சொல்லி இப்படி பெரும் புகழ் பெற்றிருக்கலாம்.
    _____________________________

    அம்மன்கோவில்பட்டி:  சேலம் ஓமலூர் வட்டத்தில் தாரமங்கலம் ஓமலூர் வழியல் அமைந்த பெரியேரிப்பட்டி எனும் ஊரின் ஒரு பகுதியாக அம்மன் கோவில்பட்டி திகழ்கிறது. இந்த ஊரில் ஓடும் உப்பாற்றின் வட கரையில் அமைந்த பெருமாள் கோயில் பாறையின்  “தேப்பாலி” என்ற சுனையின் அருகில் ஒரு தமிழி கல்வெட்டு உள்ளது.

    கல்வெட்டு 28:1> நீரோட்டத்தால் தேய்ந்து உள்ள இக்கல்வெட்டு இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது.

    பரம்பன்  கோகூர் கிழார் மகன் வியக்கன் /  கோபன் கணதேவன் தொட சுனை 

    பரம்பன் – பரம்பு நாட்டவன்; தொட்ட – தோண்டிய, சுனை – ஆழமான குளம்.

    விளக்கம்: பரம்பு நாட்டின் கோகூர் கிழவருடைய மகன்கள் வியக்கன், கோபன், கண்ணதேவன் ஆகியோர் தோண்டிய சுனை இது என்பது இதன் பொருள். ணகர மெய் சேர்த்து கண்ணதேவன் என்றும், டகர மெய் சேர்த்து தொட்ட எனவும் படிக்க வேண்டும்.
    _____________________________

    அரச்சலூர்:  காங்கேயம் ஈரோடு   வழித்தடத்தில்  அரச்சலுர் உள்ளது. இந்த ஊருக்கு அண்மையில் உள்ள நாகமலையில் ஆண்டிப் பாறை எனப்படும் இடத்தில் இயற்கையான குகையும் அதில் கற்படுக்கைகளும் உள்ளன.

    கல்வெட்டு 29:1> கற்படுக்கைகளுக்கு இடையே இருவரிகளில் சில எழுத்துகள் உடைந்த நிலையில் இக் கல்வெட்டு உள்ளது.

    எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் / தேவன் சாத்தன்   

    வண்ணக்கன் – கல்லை உருவமாக வடிப்பவன், சிற்பி; புணருத்தான் – எழுதினான்.

    விளக்கம்: மலையில் வாழும் கல்வடிக்கும் சிற்பி தேவன் சாத்தன் என்பவன் கற்படுக்கைகளை வடித்ததோடு அல்லாமல் இக்கல்வெட்டுச்  செய்தியையும் எழுதினான்  என்பது இதன் பொருள். பண்டு திரிகை, அம்மி, குழவி, உரல், ஆட்டுக்கல் வடிப்பவரே கற்படுக்கைகளையும்  கல்வெட்டுகளையும் வடித்தது ஒன்றும் வியப்பில்லை. கல்லில் உருவம் வடிக்கும் முன் அதை ஓவியமாய் வரைவதை வைத்து இச்சொல் சிற்பிக்கு உண்டாகியிருக்கலாம்.

    கல்வெடடு 29:2> முன்  உள்ள  கல்வெட்டிற்கு இடப்புறமாக ஐந்து  வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது.

    த தை தா தை த / தை தா தே தா  தை  /  தா தே தை தே தா  / தை  தா தே தா  தை  / த தை தா தை த

    விளக்கம்: மேலிருந்து கீழாக அல்லது இடமிருந்து வலமாகப் படிக்க ஒருவகை இசை ஒலிகளை உணர்த்துகின்றது.

    கல்வெட்டு 29:3 > முதல் கல்வெட்டின் வலப்புறம் வெட்டப்பட்டு உள்ளது. பல எழுத்துகள் சிதைந்து போனதால் இரண்டாம் கல்வெட்டின் அடிப்படையில் ஊகமாக படித்து உள்ளனர்.
    கை த தை த கை  / த (கை)  (த) (கை) (த) / தை த கை த (தை)  / த  கை (த) (கை) (த)  / (கை) (த) (கை) த (கை)
    விளக்கம்: இரண்டாம் கல்வெட்டு போலவே அமைக்கப்பட்டு உள்ளது.
    _____________________________

    மன்னார் கோவில்:  திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் வடமேற்காக ஐய்யனார்குளம் அமைந்து  உள்ளது. இவ்வூர் பொதிகை மலையின் பின்புலத்தில் உள்ள பல குன்றுகளில் இராசாப் பாறை, நிலப்பாறை ஆகிய குன்றுகளில் இரு தமிழி  கல்வெட்டுகள் உள்ளன.

    கல்வெட்டு 30:1> இராசப் பாறைக் குகையில் நீர்வடி விளிம்பும் இரு கற்படுகைகளும் உள்ளன. இங்கு இக்கல்வெட்டு உட்கூரையில் மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    பள்ளி செய்வித்தான்  / கடிகை (கோ) வின் மகன்  / பெருங்கூற்றன்

    விளக்கம்: கோ ஊகித்துக் கொள்ளப்பட்ட எழுத்து. கடிகைக் கோவிற்கு மகனான பெருங்கூற்றன் என்பான் இந்த கற்படுக்கையை செய்வித்தான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு.30:2> நிலாப் பாறையின் திறந்த வெளிப் பகுதியில்  வெட்டப்பட்ட கற்படுக்கையின் தலைப்பாகத்தில் இரு வரிகளில்  இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    குணாவின் ளங்கோ  / செய்பித பளிஇ

    விளக்கம்: குணா என்னும் ஊரின் இளங்கோ (இளவரசன்) செய்வித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். பெயரில் முதல் எழுத்தான உயிர் எழுத்து இகரம் எழுதப்படவில்லை ஆதலின் இகரம் இட்டு இளங்கோ எனப் படிக்க வேண்டும். தகர மெய் சேர்த்து செய்பித்த எனப்  படிக்க வேணடும்.
    _____________________________

    சமணர்மலை: மதுரை அருகே முத்துப்பட்டி, கொங்கர்புளியன்குளம் மலைகளை ஒட்டி அமைந்த கீழ்க்குயில்குடி சமணர்மலையில் ஒரு கல்வெட்டு 2012 ல் கண்டறியப்பட்டது

    கல்வெட்டு: பாறையின் நீர்வடி விளிம்பின் கீழ் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது

    பெருதேரூர் குழித்தை அய்அம் 

    விளக்கம்: பெருந்தேரூரில் வாழும் குழுவினர் குளம் ஏற்படுத்தினர் என்பது இதன் பொருள். குழித்தை என்றால் குழு, team.
    _____________________________

    கரதுக்கம்: கேரளம் காசர்கோடு மாவட்டம் கரதுக்கத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் கால்வாய் அருகே உள்ள செம்புரை மண் (laterite) தரையில் 14 எழுத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. இது மார்ச்சு 2014 ல் கண்டறியப்பட்டது.

    கல்வெட்டு: கழ கோற பட்டன் மகன் சரும

    கழல் – கால்; கோறர்  – கள்ளர்குடி பட்டப் பெயர்; கழ கோற – கள்ளர் காலாட்படை; பட்டன் – படைத் தலைவன், commander; மகன் – கீழ்ப்படிந்த படைவீரன், low rank subordinate warrior

    விளக்கம்: கள்ளர் காலாட்படைத் தலைவனின் படையாள் “சரும” என்பவன் குறிக்கப்படுகிறான். மலையாளம் செம்மொழி தகுதி பெறவேண்டும் என்பதற்காக பொய்யாக இக்கல்வெட்டை திராவிட பிராமி, தென் பிராமி ஆகிய பெயர்களால் சுட்டினாலும் இக்கல்வெட்டில் வட்டெழுத்தின் தொடக்க கால எழுத்துகள் இடம்பெறுவதால் இதை கி.பி. 6 ஆம் நூற்றாண்டினது எனக் கொள்ளலாம்.  இது கள்ளர் சார்த்த கல்வெட்டு.
    _____________________________

    நெற்றம்பாக்கம்: மதுராந்தகம் நெற்றம்பாக்கத்தில் உள்ள  நந்தீசுவரர் கோவிலில் மறுசீரமைப்பின் போது லிங்கத்தின் சதுரவடிவ ஆவுடையில் பிராமி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

    கல்வெட்டு: சே நருமான் 

    விளக்கம்: ஆட்சியாளன் “நருமான்” என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. சே என்றால் தலைவன்.
    _____________________________

    கிண்ணிமங்கலம்: மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில்  மதுரை – தேனி சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எதிரில் கிண்ணிமங்கலம் என்னும் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏகநாதன் மடத்தில் புதையுண்ட சிதைந்த ஏகமுக லிங்கத்தில் இருவரியில் பிராமி கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது.

    கல்வெட்டு: ஏகன் ஆதன் / கோட்டம் .   

    விளக்கம்: ஏகன் என்ற தலைவனுடைய மதில் கொண்ட கோவில் என்பது பொருள். இது பள்ளிப்படை கோவில் என்று பிற்கால வட்டெழுத்துக்  கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.
    _____________________________

    கொங்கப்பட்டி: உசிலம்பட்டியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள கொங்கப்பட்டியில் சீலைக்காரி அம்மன் கோவிலின் முன்பாக ஊர் மந்தையில் பழமையான தொம்பரைக் கல்லில் தமிழி எழுத்து பொறிப்பில் இக்கல்வெட்டு திசம்பர் 2021 இல் கண்டறியப்பட்டது

    “_ _ததேள் இரங இட்டார் பேரார் அ /  _ _ ப பத்தான் பார்ப்பான் தவதந்தை /  _  இளங்கண்ணஅன்” 

    இரங இட்டார் – இரங்கல் இதாவது, நினைவுக் கல் வைத்தார்; பேரார் (பெயர் +ஆர்)  – புகழ்மிக்க பெரிய மனிதர்; அ  – இன்பம் துனபம் என எல்லாக் காலத்தும் முதன்மை பெறும்; பார்ப்பான்- வேதம், தியானம், பூசனை கற்றுக்கொடுப்பவர்; தவ தந்தை – தவத்தில் உயர்ந்தவர். பத்தான் – கூட்டம் இதாவது, பின்பற்றிகள் (followers) என கொள்ளலாம்.

    விளக்கம்: உயிர் நீத்த படைத்தலைவனுக்கு எல்லாக் காலத்திலும்முதன்மை பெறும் புகழ்மிக்க பெரிய மனிதரும், வேதம், தியான யோகம் முதலியன கற்றுக்கொடுப்பவரும், தவத்தில் உயர்ந்தவரும் ஆன இளங்கண்ணன் நினைவுக்கல் வைத்தார் என்பது பொருள். கல்வெட்டு இளங்கண்ணனின் பெருமைகளையே அதிகம் பேசுகிறது. முதல் வரியிலும் இரண்டாவது வரியிலும் முன்னே சில எழுத்துகள் சிதைந்து உள்ளதால் இந்த அளவே பொருள் கொள்ள முடிந்தது. மீண்டும் சீராக படியெடுத்தால் கல்வெட்டின் பொருளை இன்னும் தெளிவாக அறியமுடியும். அதுவரை இது தற்காலிகமானது தான்.
    _____________________________

    தாதப்பட்டி: தஞ்சைத் தமிழிப் பல்கலைக்கழக தொல்எழுத்தியல்  மற்றும் தொல்லியல் துறையால் 2006 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் வத்தலகுண்டிற்கு 16 கீலோ மீட்டர் தெற்கே வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்த  தாதப்பட்டி  என்னும் ஊரில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட கற்பதுகை ஒன்று அறியப்பட்டது. ஈமப்புதைப்பு நடுகல்லில் தமிழி எழுத்து அறியப்பட்டது அதுவே முதல் முறை. இவ்வூர் இதே போல் மூன்று நடுகற்கள் அறியப்பட்ட புலிமான் கோம்பைக்கு அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கல்வெட்டு: இதன் உயரம்  200 செ.மீ. இருந்திருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது. இதில் சில முன் எழுத்துகள் சிதைந்தது போக ஒரே வரியில் எஞ்சிய 13 எழுத்துகள் தெளிவாகக் காணப்படுகின்றன.

    ன் அடிஓன் பாகல் பாளிய் கல்

    அடியோன் – ஏவலன், servant; பாகல் – வளைவாக வெட்டி உடைத்த, பகு > பகல் > பாகல்; பாழி – நினைவு கல்.

    விளக்கம்: சிலர் ‘த’ என்ற எழுந்து முதலில் உள்ளதாக கூறுகின்றனர். எனவே அது “தன்” என்று முடியும் ஒரு ஆடவன் பெயர் என குறித்துள்ளனர். அது அவ்வாறு ஆயின் என்னுடைய கருத்து அடியோன் என்பது அவருடைய ஏவலன் என்பதைக் குறிக்கின்றது. பாகல் பாளி என்பது வளைவாக வெட்டி உடைத்த நினைவுக் கல் என்பது இதன் பொருள்.
    _____________________________

    புலிமான்கோம்பை நடுகற்கள்: புலிமான்கோம்பையில்  தமிழி கல்வெட்டுள்ள நடுகற்கள்  மூன்று கிட்டியது. இவ்வூர் தேனி மாவட்டம் வத்தலகுண்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்து உள்ளது

    வேள் ஊர் / அவ்வன்  பதவன்

    பதவன் – கல்லை வடிப்போன், சிற்பி, one who shapes a stone. பதக்கம் என்ற சொல்லின் வேரை பதவனோடு பொருத்திப் நோக்குக.

    விளக்கம்: இருவரி கொண்ட கல்வெட்டு இது. வேளூரைச் சேர்ந்த அவ்வன் எனும் இயற்பெயர் கொண்ட கல்வடிக்கும் சிற்பி என்பது இதன் பொருள்.

     – – அன் ஊர் அதன் / – – — ன் அன் கல் 

    விளக்கம்: இரு வரிகளில் எழுதப்பட்ட கல்வெட்டு. நடுகல்லின் இடைப் பகுதி உடைந்து உள்ளது. அதன் என்பவன் ஊர் குறிக்கப்படுகிறது. பின்பு எழுத்து சிதைந்த ஒருவன் பெயரை குறிப்பிட்டு அவனது கல் என்கிறது.

    கல் / பேடு தீயன். அந்தவன் / கூடல் ஊர் ஆகோள்.

    அந்தவன் – அந்த + அவன் எனப் பிரிக்க வேண்டும், that person; ஆ கோள் – மதிப்புள்ள ஆடு, மாடு இவற்றை களவாடுதல்.

    விளக்கம்: மூன்று வரிக்கல்வெட்டு இது. இக்கல் பேடுதீய்யனுக்கு உரியது. அந்த அவன் கூடலூரின் மதிப்புள்ள பொருளை களவாடியவன் (ஆ கோள்) என்பது இதன் பொருள்.
    _____________________________

    புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள முற்றிலும் சிதிலமடைந்த செங்கல் கோட்டையாகும்.  2012 – ம் ஆண்டு இக் கோட்டையில் உள்ள குளக்கரையில் முக்கோண வடிவிலான 5 வரித் தமிழி நடுகல் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

    கல்வெட்டு: கோவென் கட்டிற் நெதிர / ணறு பொன் கொங்கர் விண்ணகோன் / ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு / அங்கபடைத் தாணையன் கணங், / குமரன் கல். 

    நறு பொன் – பொற்காசு; ஆ எறித்து – செல்வத்தை கவர; ஏவ – ஏவிவிட; அங்கப்படை – வெட்டும் படை; தாணையன் – முன்னணி மறவன்

    விளக்கம்: கோவன் கட்டி என்ற கங்க அரசனுக்கு எதிராகப் போரிட  தன் பெயரில் பொற்காசு வெளியிட்ட கொங்கர் இன அரசன் விண்ணகோன் மதிப்புள்ள பொருளைக் கவர்ந்துவர கட்டளையிட படைத்தலைவன் அதவன் உடைய வெட்டும்படையின் முன்னணிப் போர்வீரன் கணன் குமரன் அதன்போது  வீரசாவடைந்தான். அவனது நினைவுக் கல் இது என்பது பொருள். மதிப்புள்ள பொருளை  குறிக்கும் “ஆ” என்பது  ஆ கோள் எனும் புளிமான் கோம்பை நடுகல்லிலும் ஆட்சி பெற்றுள்ளது. ஆ கோள் என்பதும் ஆ எறித்து என்பதும் ஒன்றே.

    மேற்சொன்ன தமிழி  கல்வெட்டுகள் தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனும் நூலை மேற்கோளாகக் கொண்டது.

    Share
  • நித்திலமே நித்திலம்!

    நித்திலமே நித்திலம்!

    நான் இயற்றிய ‘நித்திலமே நித்திலம்’ பாடலை எனது வேண்டுகோளை ஏற்று, கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன் அழகாகப் பாடித் தந்துள்ளார். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி 300இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 300இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நண்பர்களே! படக்கவிதைப் போட்டி இவ்வாரத்தோடு நிறைவுபெறுகின்றது. இப்போட்டி 300 வாரங்கள் வெற்றிகரமாய்த் தொய்வின்றி நடக்கத் துணைநின்ற நிழற்படக் கலைஞர்கள், தேர்வாளர்கள், ஆர்வத்தோடு கவிதைகள் எழுதிவந்த கவிஞர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வல்லமை மின்னிதழின் நன்றிகள்!

    *****

    புகைப்படக் கலைஞர் திருமிகு. அமுதா ஹரிஹரன் எடுத்திருக்கும் இந்த ’ஒளி’ப்படத்தை அவருடைய படத்தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்து நமக்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

    தகத்தகாய ஒளியை வானில் பரப்பிக்கொண்டிருக்கின்ற சூரியப் பிஞ்சை ஏந்தியிருப்பதுபோல் காட்சியளிக்கும் இந்தக் கரம் காண்போரின் விழிகளை வியப்பில் விரிய வைக்கின்றது.

    ”நல்லொளியால் மன்பதையைப்
    புரக்கின்றாய் வான்திகழ்
    பல்கதிர்ச் செல்வனேநீ
    உயிரேது உணவேது

    மல்லல்மா ஞாலத்தில்
    உன்னருள் தானின்றியே!”

    இக்கவினார் காட்சியை வருணித்திட கவிகள் எழுக! நற்கவிதைகள் பொழிக!

    *****

    ”காசினி மீதினில் பேதங்கள் அழித்துப் பசிப்பிணி போக்கி, மாசிலா அன்பு மலர்ந்திட, அஞ்ஞானமெனும் காரிருள் நீக்கிச் சூரியஜோதிக் கவிதைகள் செய்வோம்!” என்று நமை வாஞ்சையோடு அழைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    கவிதைகள் செய்வோம்!

    வாய்மை நேர்மை வல்லமை வாழ்ந்திடத்
    தூய்மை வளர்க்கும் ஞானங்கள் சேரத்
    தாய்தமிழ் ஆர்வலர் உய்த்திடும் வகையில்
    மெய்க்கலை இன்பங்கள் துய்த்திடச் செய்வோம்

    ஆழிசூழ் உலகினில் வாழ்பவரனைவரும்
    தாழ்மை ஏழ்மைப் பேதங்களில்லாச்
    சூழ்நிலை வளர்க்கும் சமத்துவம் தோன்றச்
    சீர்மைத் திறன்கள் வளர்த்திடச் செய்வோம்

    காசினி மீதினில் பேதங்கள் அழித்துப்
    பசிப்பிணி போக்கி நேசமாய் வாழ
    மாசிலா அன்பு மனதினில் மலர்ந்திடப்
    பூசல்களில்லா உலகினைச் செய்வோம்

    பாரினில் பாரத தேசம் சிறந்திட
    நேரிய நிறைவு நித்தமும் பெற்றிங்குக்
    காரிருள் அஞ்ஞானம் போக்கிடும் வகையில்
    சூரிய ஜோதிக் கவிதைகள் செய்வோம்!

    *****

    ”பாவலர் நண்பா! நீ தாங்கிப்பிடிக்கும் வெள்ளிப் பந்து பகலவனா? சந்திரனா? நிலை மறந்தும் ஒளி மறைக்காதே! நிலவை இரவியை என்றும் போற்றுவோம் நாம்!” என்று ஒளிப்பந்தைக் களிப்போடு போற்றுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    தங்கத் தகடுகள் உனைச் சூழ
    நீ தாங்கிப் பிடிக்கும் வெள்ளிப் பந்து
    தரையினிலே விழுந்தாலும்
    தாங்கிடுவாள் பூமித்தாய்!

    வானத்தைத் தொட்டனவோ உன் கைகள்
    தொட்டவுடன் பறித்திட்டாய் வெள்ளிப் பந்தை
    பறித்திட்ட வெள்ளிப் பந்து பகலவனவா இல்லை சந்திரனா
    பார்க்காமல் பரிந்துரைப்பாய்
    பாவலர் நண்பா!

    யாரிடம் இருந்தாலென்ன
    உலகை ஒளிமயமாக்கும் பந்துகள்தான்?
    நீயே வைத்துக் கொள்
    நிலை மறந்தும் ஒளியை மறைக்காதே
    நிலவை இரவியை
    என்றுமே போற்றுவோம் நாம்!

    *****

    ”கதிரவன் தேய்வதில்லை; தேய்வதற்குப் போதும் ஓர் விண்மதி!” என்றுரைக்கும் திரு. அருணன், ”முடிவின்றிச் சிதறிய உடுக்களாய், வாழ வழிகளும் வாய்ப்புகளும் மனிதர்க்கு ஏராளம்; காலம் கனியும்!” எனும் இனிய மொழிகளைத் தம் கவிதையில் நிறைத்துள்ளார்.

    காரிருள் சூழவில்லை,
    கதிரவன் தேய்வதில்லை
    தேய்வதென்றால்,
    போதுமே ஓர் விண்மதி,
    பிழைக்கட்டும் உன் மதி.
    முடிவிலி சிதறிய உடுக்களாய்,
    வாய்ப்புகள் ஏராளம், வாழ வழிகள் ஆயிரம்
    காத்திருப்பின்,
    காலம் கனியும்! காலை புலரும்!

    *****

    சூரியப் பந்து கண்டு, கவியெழுத ஆர்வங் கொண்டு, சிந்தனைச் சரங்களைச் சுந்தரக் கவிதைகளாய்த் தந்திருக்கும் வல்லமைக் கவிஞர்களை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன். தொடர்ந்து கவிதைகள் எழுதிவாருங்கள்! பார்போற்றும் கவிஞர்களாய் நீங்கள் பேர்பெற என் வாழ்த்துக்கள்!

    அடுத்து வருவது இவ் இறுதி வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது…

    உன் கையிலும்…

    அன்றாடப் பணியை
    ஆக்கபூர்வமாய் முடித்து
    அழகாக்கி வானத்தை
    விடைபெறுகிறான்
    அந்திச் சூரியன்!

    அழகை ரசிக்கும்
    மனிதனே
    அதைப் பாடமாய்க்கொள்!

    சோம்பலில் சுகம் காணாமல்
    ஓய்வெடுக்காமல் உழைத்து
    உன்பணி செய்தால்
    ஒரு நாள்
    உன் கைகளில் கிடைக்கும்
    உயரத்துச்
    சூரியனாம் வெற்றியே…!

    ”மனிதனே! தன் அன்றாடப் பணியை ஆக்கபூர்வமாய் முடித்து விடைபெறுகின்றான் அந்திச் சூரியன். அவன்போல் நீயும் சோம்பலின்றி உழைத்தால் உயரத்துச் சூரியனாய் உனக்கும் வெற்றி கிட்டும்!” என்று உழைப்பின் உயர்வைத் தம் கவிதையில் அழகாய் வடித்துத் தந்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    படக்கவிதைப் போட்டி தொடங்கிய காலந்தொட்டுத் தவறாமல் அதில் பங்கேற்றுவருகின்ற அவரின் கவியார்வத்துக்கு என் சிறப்பான பாராட்டுக்கள்! 

     

    Share
  • ஒரு பொம்மை நாலே ரூபாய்!

    ஒரு பொம்மை நாலே ரூபாய்!

    பொம்மை வாங்கச் சென்றால், யானை விலை, குதிரை விலை சொல்கிற காலத்தில், நாலே ரூபாய்க்கும் பொம்மை கிடைக்கிறது. இதில் என்னென்ன பொம்மைகள் இருக்கின்றன என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 28

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 28

    -மேகலா இராமமூர்த்தி

    வாலி பிலத்தினுள் புகுந்து மாயாவி அரக்கனைத் தேடிச்சென்று மாதங்கள் 28 ஆகியும் திரும்பாததால் அனுமன் உள்ளிட்ட வானரர்கள் இளவரசனான சுக்கிரீவனை முடிபுனைந்து அரசாட்சியை மேற்கொள்ளப் பணித்தனர். ஆனால் சுக்கிரீவன் அதற்கு உடன்படவில்லை. வாலி ஆண்ட அரசைத் தான் உரிமைகொண்டு அரசாளுதல் குற்றமென்று எண்ணினான். எனவே வானரர்களின் கோரிக்கையை மறுத்து, ”நான் இந்தப் பிலத்தினுள் புகுந்து என் தமையன் வாலியைத் தேடுவேன்; ஒருவேளை அவன் இறந்துபோயிருந்தால் அவனைக் கொன்ற மாயாவியோடு போரிட்டு அவன் ஆவி முடிப்பேன்; அது கைகூடவில்லையாயின் என் இன்னுயிர் துறப்பேன்!” என்றுரைத்துப் பிலத்தினுள் நுழையவிருந்த வேளையில், அறிவும் சொல்வன்மையும் மிகுந்த கிட்கிந்தையின் அமைச்சர் பெருமக்கள் அவனைத் தக்கன கூறிச் சமாதானப்படுத்தி ஆட்சியை அவன் வசம் ஒப்படைத்தனர்.

    ஆதலால் கிட்கிந்தையின் அரசாட்சியைச் சுக்கிரீவன் தானாக வலிந்து பற்றவில்லை என்பதனை இராமனுக்கு அறியத்தந்தான் அனுமன். சுக்கிரீவனை அழைத்துக்கொண்டு கிட்கிந்தைக்குத் திரும்புவதற்குமுன், திறந்திருந்த பிலத்தின் வாயிலைக் குன்றனைய பெருங்கற்களைக் கொண்டு வானரர்கள் அடைத்தனர்; மாயாவி பிலத்தைவிட்டு வெளியேற விரும்பினால் அம்முயற்சி ஈடேறாமல் போகவேண்டும் என்பதே அதன் நோக்கம். இதன்மூலம் மாயாவி வாலியைக் கொன்றிருப்பான்; அதனால்தான் அவன் உள்ளேசென்று மாதங்கள் பலவாகியும் மீளவில்லை என்ற வானரர்களின் எண்ணத்தையும் காகுத்தனுக்குக் குறிப்பாலுணர்த்தினான் காற்றின் மைந்தன்.

    ஆனால் உண்மையில் நிகழ்ந்ததோ வேறு! பிலத்தினுள் ஒளிந்துகொண்டிருந்த மாயாவியை நீண்டகாலம் தேடிக் கண்டுபிடித்த வாலி, பிலம் அடைக்கப்பட்ட சமயத்தில் அவனைக் கொன்றான். பின்னர் அங்கிருந்து மீண்டு பிலத்தின் வாயிலை அடைந்தான். பிலம் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவனுக்குச் சீற்றமேற்பட்டது.

    தன் வாலினை மேலே தூக்கி, வானத்தில் எழுந்த பெருங்காற்றெனத் தன் காலைவீசிப் பிலத்தை அடைத்திருந்த பெரும் பாறைகளை வாலி தாக்கவும், அவற்றில் உயரப் பறந்தவை விண்ணை எட்டின; தாழச் சென்றவை கடலில் வீழ்ந்தன என்று காலினும்(காற்று) வாலியின் கால் அதிக வலிமை பெற்றிருந்தமையை நமக்குப் புலனாக்குகின்றார் கம்பர்.

    வால் விசைத்து வான் வளி நிமிர்ந்தெனக்
    கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும்
    நீல் நிறத்து விண் நெடு முகட்டவும்
    வேலை புக்கவும் பெரிய வெற்பு எலாம்.
    (கம்ப: நட்புக் கோட் படலம் – 3947)

    அடைக்கப்பட்டிருந்த பிலத்தினின்று தன் பலத்தினால் வெளியேறிக் கிட்கிந்தை வந்தடைந்த வாலியைத் தூய சிந்தையோடு பணிந்து வணங்கிய சுக்கிரீவன், ”அண்ணா! நீ பிலத்துள் சென்று பல காலம் ஆனதால் அமைச்சர்கள் என்னைக் கிட்கிந்தையின் அரசப் பொறுப்பை ஏற்கச் செய்தனர்; நான் மாட்டேன் என்று எவ்வளவு சொல்லியும் அவர்கள் வற்புறுத்தியமையால் அதனைச் சுமந்தேன். இனி எங்களை அரசுபுரிந்து காப்பது நின் கடமையாகும்” என்றான்.

    சுக்கிரீவனின் மொழிகளை நம்பாத வாலி, அவன் வஞ்சனை செய்தே கிட்கிந்தையின் அரசைக் கவர்ந்திருக்கின்றான் எனும் எண்ணத்தோடு அமுதம் எடுக்கக் கடலைக் கடைந்ததுபோல் சுக்கிரீவனின் உடலைக் கடையத் தொடங்கவே, வலி பொறாது வருந்தினான் சுக்கிரீவன். குரக்கினங்கள் அனைத்தும் அச்சத்தின் பிடியில் மூச்சடங்கி நின்றிருந்தன.

    அத்தோடு விடவில்லை வாலி. சுக்கிரீவனை உயரே தூக்கி மோதுவதற்கான முயற்சியில் ஈடுபட்டான். அப்போது அவன் லேசாக அயர்ந்த நேரம் பார்த்து அவனிடமிருந்து தப்பிய சுக்கிரீவன் உருசியமுக மலையை வந்தடைந்தான்.

    உருசியமுக மலையில் சுக்கிரீவன் தங்கக் காரணம் அந்த மலைப்பக்கம் வாலி மறந்தும் வரமாட்டான் என்பதே. அப்பக்கம் வந்தால் அவன் தலை வெடித்துவிடும் எனும் சாபத்தை அவன் மதங்க முனிவரிடம் பெற்றிருந்தான். அச் சாபமே இப்போது அரணாக நின்று சுக்கிரீவனின் ஆருயிரைக் காத்துவருகின்றது எனும் செய்தியை இராகவனிடம் செப்பினான் அஞ்சனை மைந்தன்.

    ”இறைவா! இன்னொரு செய்தியையும் தங்கள்பால் தெரிவிக்க விரும்புகின்றேன்” என்ற அனுமன், ”சுக்கிரீவனின் மனைவியும் அருமருந்தனையவளுமான உருமையையும் வாலி கவர்ந்து வைத்திருக்கின்றான். ஆதலால் அரச வாழ்வோடு இல்லற வாழ்வையும் சேர்த்தே இழந்து நிற்கின்றான் சுக்கிரீவன்” என்றுரைத்தான்.

    உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம்
    அரு மருந்தையும் அவன் விரும்பினான்
    இருமையும் துறந்து இவன் இருந்தனன்
    கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன்.
    (கம்ப: நட்புக் கோட் படலம் – 3954)

    சுக்கிரீவனும் ஏனைய வானரரும் தனக்கு உணவு பரிமாறியதைக் கண்டு, ”பொருந்து நன்மனைக்குரிய பூவையை நீயும் பிரிந்துளாய்கொலோ?” என்று அவனிடம் இராமன் வினவியமைக்கு விடை இங்கே அனுமனால் அளிக்கப்படுவதைக் காண்கின்றோம்.

    அதைக் கேட்டதும் இராமனின் செவ்விதழ்கள் சினத்தினால் துடித்தன. தாமரை இதழ்களோ செவ்வாம்பல் போல் மேலும் சிவந்தன. தன்னைப் போலவே இன்னொருவனும் தன் நேயத்துக்குரிய தாரத்தையும் தேயத்தையும் இழந்து தவிக்கின்றான் என்ற செய்தி இராமனுக்கு சுக்கிரீவன்மாட்டு அளவற்ற இரக்கத்தை ஏற்படுத்திவிட்டது. எப்படியாவது அவனை அத்துன்பத்தினின்று விடுவிக்க வேண்டுமென முடிவுசெய்த இராமன்,

    இரேழு பதினான்கு உலகங்களைச் சார்ந்தவர்களும் வாலிக்கு வேலியாய் வந்துநின்று அவன் உயிரைக் காக்க உதவிபுரிந்து என்னைத் தடுத்தாலும் என் வில்லிடை பூட்டிய வாளியால் அந்த வாலியை அழித்து, வானரங்களுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பையும், உன் தாரத்தையும் உனக்கு இப்போதே நான் மீட்டுத் தருவேன்; அறிவிற் சிறந்தவனே! அந்த வாலியின் இருப்பிடத்தை எனக்குக் காட்டு!” என்றான் இராமன்.

    உலகம் ஏழினோடு ஏழும் வந்து
         அவன் உயிர்க்கு உதவி
    விலகும் என்னினும் வில்லிடை
         வாளியின் வீட்டி
    தலைமையோடு நின் தாரமும்
         உனக்கு இன்று தருவென்
    புலமையோய் அவன் உறைவிடம்
         காட்டு என்று புகன்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3957)

    அச்சொற்கள் சுக்கிரீவனுக்குப் பெருங்களிப்பைத் தந்தன. வாலியின் வலி தொலைந்தது என்று மனத்துள் மகிழ்ந்தவன், ”நான் இதர வானரர்களோடு ஆலோசிக்க வேண்டிய விசயம் ஒன்றுளது” என்று இராமனிடம் கூறிவிட்டு வானரர்களோடு அப்பால் சென்றான்.

    இராமன் ஆற்றலாளன் என்று சுக்கிரீவன் நம்பியபோதிலும் அவ் ஆற்றலை அவன் நேரடியாகக் கண்டதில்லை; ஆனால் வாலியின் வலியை நேரடியாகக் கண்டவன் அவன்; எனவே, வாலியை நான் தொலைத்துவிடுகின்றேன் என்று இராமன் சொன்னது அவனுக்கு ஒருபுறம் மகிழ்வைத் தந்தாலும் மறுபுறம் அது சாத்தியந்தானா என்ற ஐயத்தையும் விளைவித்தது. எனவே, அறிவிற்சிறந்த தன் மந்திரிகளோடு அது குறித்த ஆலோசனையில் ஈடுபடலானான்.

    சுக்கிரீவனின் உட்கிடையை உணர்ந்துகொண்ட வாயு மைந்தன், ”பெரியோனே! இராமனுடைய வலிமையை நீ அறிய விரும்பினால் அதற்கோர் உபாயம் உளது. நாம் போகும் வழியில் நிற்கின்ற ஏழு மராமரங்களில் ஏதேனும் ஒன்றை அம்பால் துளைக்கும்படி நெடியோனாகிய இராமனிடம் சொல்லுவோம்; அண்ணலில் அம்பு மரத்தினை ஊடுருவிச் சென்றால் வாலியின் மார்பையும் அவ் அம்பு துளைக்கும் எனத் தெளியலாம்” என்றான்.

    அவ் உபாயத்தைக் கேட்ட சுக்கிரீவன் நனிமகிழ்ந்து, ”நன்றுரைத்தனை” என்று நவின்றான் மாருதியின் குன்றனைய தோள்களைத் தழுவி. அதனைத் தொடர்ந்து இராமனைச் சந்தித்த சுக்கிரீவன் ”உன்னிடம் உரைக்கச் செய்தியொன்று உண்டு” என்றான்; ”அதனை உரைப்பாய்” என்றான் இராமன்.

    மராமரங்களில் ஒன்றைத் துளைத்துக் காட்டுமாறு இராமனிடம் அப்போது சுக்கிரீவன் வேண்ட, அதனையேற்ற இராமன் முறுவலோடு அம் மரங்களின் அருகே சென்று வில்லிலே அம்பைப் பூட்டி அதனை விடுத்தான்.

    அப் பகழியானது ஏழு மராமரங்களையும் துளைத்துக் கீழேசென்று அங்குள்ள ஏழு உலகங்களான அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் ஆகியவற்றையும் துளைத்து அதற்கப்பால் துளைப்பதற்கு ஏழு என்ற எண்ணிக்கையில் ஏதுமின்மையால் திரும்பியது என்கிறார் கம்பநாடர்.

    ஏழு மாமரம் உருவி கீழ்
         உலகம் என்று இசைக்கும்
    ஏழும் ஊடு புக்கு உருவி
         பின் உடன் அடுத்து இயன்ற
    ஏழ் இலாமையான் மீண்டது
         அவ் இராகவன் பகழி
    ஏழு கண்டபின் உருவுமால்
         ஒழிவது அன்று இன்னும். (கம்ப: மராமரப் படலம் – 3982)

    ஏழு எனும் எண்ணிக்கையில் அமைந்த கடல்களும், மேலுள்ள ஏழு உலகங்களும், ஏழு குன்றுகளும், சூரியனின் தேரில் பூட்டப்பட்டிருந்த ஏழு குதிரைகளும், ஏழு இருடிகளும் (சப்தரிஷிகள்), ஏழு மங்கையரும் (சப்தகன்னியர்), எங்கே இராமனின் அம்பால் தமக்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சிநின்றனர் அப்போது.

    இராமனின் வில்லாற்றல் கண்டு வியந்த சுக்கிரீவன், அவனைப் பலபடப் புகழ்ந்து துதித்தான். வானரர்களும் ”வாலிக்கு காலனைக் கண்டோம்” என்று மகிழ்ச்சியில் ஆடினர்; பாடினர்; அங்குமிங்கும் ஓடினர்.

    அந்நிகழ்வுக்குப் பிறகு அங்கிருந்து அனைவரும் நடக்கத் தொடங்கினர்.  வழியில் பெருமலைபோல் எலும்புக் குவியலொன்று வற்றிய உடலோடு கிடப்பதைக் கண்ட இராமன், ”இஃதென்ன? எமனின் வாகனமான எருமைக் கடாவா? திசை யானைகளுள் ஒன்றுதான் இங்கே மடிந்து கிடக்கின்றதா? அல்லது சுறாவென்னும் பெருமீன்தான் உலர்ந்து கிடக்கின்றதா?” என்று சுக்கிரீவனிடம் வினாக்களை அடுக்கினான்.

    அங்கு எலும்புக் குவியல் கிடக்கும் வரலாற்றினை இராமனிடம் உரைக்கத் தொடங்கினான் சுக்கிரீவன்.

    ”சந்திரனைத் தொடும்படியாக வளர்ந்த கொம்புகளோடு மந்தர மலைபோன்ற பெருத்த உடலை உடையவனான துந்துபி எனும் அரக்கன் வலிமைமிகு ஒருவனோடு போர்புரிய விரும்பிக் கடலினைக் கலக்கிக்கொண்டு அரியினை தேடிச் சென்றான்.

    அவனெதிர் வந்த அரியோ (திருமால்), ”உன்னோடு போர்புரிய ஏற்றவன் கங்கையின் கணவனான அந்தக் கறைமிடற்று இறைவனே” என்று சொல்லிவிட, அரனைத் தேடிக்கொண்டு கயிலை சென்ற துந்துபி, அம்மலையைத் தன் கொம்புகளால் முட்ட அவன்முன் தோன்றினார் அரனார். தோன்றியவர், ”என்ன வேண்டும் உனக்கு?” என்று துந்துபியைக் கேட்க, ”உம்மோடு நான் முடிவிலாச் செருச்செய்ய வேண்டும்” என்றான் அவன்.

    அரனாரோ, “வீரச்செயலிலேயே மூழ்கிக் கிடக்கும் உன்னோடு போரிட என்னால் இயலுமா? நீ நேரே தேவர்களை நாடிச்செல்!” என்று தேவர்களைக் கைகாட்டிவிட்டுத் தாம் தப்பித்துக்கொண்டார்.

    விடவில்லை துந்துபி. நேரே தேவலோகம் சென்று இந்திரனைச் சந்தித்துத் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். ”நீ நெடுங்காலம் போர்செய்ய விரும்புவதானால் அதற்கு ஏற்ற இடம் இதுவன்று! போர்வலானான வாலியை நீ நாடிச் செல்! அவனே உனக்கு ஏற்ற வீரன்” என்று வாலி பால் துந்துபியைப் போக்கினான் இந்திரன். அதனையேற்றுக் கிட்கிந்தைக்கு வந்த துந்துபி, ”குரக்கினத்தரசே! என்னோடு போர்புரிய வா!” என்று அறைகூவி அம்மலையைத் தன் கொம்புகளால் முட்டி நாசப்படுத்திக்கொண்டிருந்த வேளையில் அவ்வொலிகேட்டுச் சினந்த வாலி துந்துபியின் எதிர்வந்து நின்றான்!

    துந்துபிக்கும் வாலிக்கும் கடும்போர் தொடங்கிற்று.”

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • இதயம் திறந்த அனுபவம் – 3

    இதயம் திறந்த அனுபவம் – 3

    வெ. சுப்ரமணியன்

    அடுத்தது அறுவைச் சிகிச்சை அறைக்கு (Operation theatre)  வந்த பிறகு என்ன நடக்கும் என்று காணலாம். சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சையைப் பொறுத்தளவில் நடைமுறைகள் (procedures) பெரும்பாலான  மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் சிற்சில வேறுபாடுகளும் இருக்கலாம்.

    (1) மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பல அறுவைச் சிகிச்சை நிபுணர்களுடனும் (Surgeons) இணைந்து செயல்பட மருத்துவர்கள் (Doctors), செவிலியர்கள் (Nurses) மற்றும் மருத்துவக் கருவிகளைக் கையாளும் தொழில் நுட்பப் பணியாளர்கள் (Technical staff) அடங்கிய அனுபவம் வாய்ந்த பணியாளர் குழுக்கள் (Operation theatre crews) அறுவைச் சிகிச்சைக்கூடப் பணிகளுக்காகத் தனியே  இருக்கும்.

    (2) நோயாளியை அவரது அறைப்பிரிவில் பணியில் இருக்கும் செவிலியர் (ward duty nurse) அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்கு இட்டுச் செல்லும் போது கூடவே நோயாளி குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய மருத்துவக் கோப்புடன் (file) வருவார். அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் (operation theatre) பணியில் உள்ள செவிலியரிடம் நோயாளியை அவரது மருத்துவக் கோப்புடன் முறையாக ஒப்படைத்து விட்டு மீண்டும் தனது பணி அறைப்பிரிவுக்குத் (duty ward) திரும்பி விடுவார்.

    (3) குறிப்பிட்ட அறுவைச் சிகிச்சை நிபுணருடன் அன்றைய தினம் பணிபுரியப் போகும் பணிக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் நோயாளியிடம் தனித்தனியாக வந்து நோயாளியின் பெயர் (Name of the patient), வயது(age), இதயமருத்துவரின் பெயர் (Name of the cardiologist) , அறுவைச் சிகிச்சை அளிக்கப் போகும் நிபுணரின் பெயர் (Name of the surgeon) மற்றும் என்ன அறுவைச் சிகிச்சைக்காக (Name of the Surgery) அனுமதிக்கப்பட்டுள்ளார் போன்ற விவரங்களைக் கேட்டறிந்து அதனை அவரது இடது கையில் கட்டப்பட்டுள்ள மணிக்கட்டுப் பட்டையுடன் (wristband) அவற்றை ஒப்பிட்டும் உறுதி செய்து கொள்வார்கள். இதனால் நோயாளி மாறிப் போவது மாதிரியான குழப்பங்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்.

    (4) இவ்வாறு குழுவினர்கள் அனைவருமே உறுதி செய்து கொண்ட பின்னரே நோயாளிக்கு அறுவைச் சிகிச்சைக்கு செய்யப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப்பணிகளுக்கான எந்த ஒரு நடவடிக்கையையும் துவங்குவார்கள்.

    அடுத்தது தூக்குப் படுக்கையிலிருந்து (stretcher) மெதுவாக அறுவைச் சிகிச்சை மேசைக்கு (operation table) மாற்றம் செய்யப்பட்டு  நோயாளி மல்லாந்து (lying on back) இருக்குமாறு கிடத்தப்படுவார்.

    உடலின் புறப் பகுதியில் (peripheral) உள்ள சிரை இரத்தக் குழாய் (vein) வழியாகச் சிறியதொரு பிளாஸ்டிக் குழாயைச் (cannula) செருகுவது ஆங்கிலத்தில் ஐவி லைன் (IV line) அல்லது இன்ட்ரெவனஸ் கேனூலேஷன் (Intravenous cannulation)  என்றழைக்கப்படுகிறது.

    Image source: pixabay https://www.nursesclass.com/2020/06/20-iv-therapy-tips-and-tricks-improve-cannulation-skills.html

    அடுத்தடுத்து சிரை வழியாகத் திரவங்கள், மருந்து மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை உடலுக்குள் செலுத்த இம்முறை பயன்படுத்தப்படும். சில சமயங்களில் இந்தக் குழாய் (cannula) வழியே இரத்த மாதிரிகளும் எடுக்கப்படும். இதனைத் தவிர இரத்த அழுத்தம் மற்றும் இதயச் செயல்பாடுகளைக் கண்காணிக்க மணிக்கட்டிலும் கழுத்திலும் சிலாகைகள் (Catheters)  இணைக்கப்படும்.

    என்னுடைய சொந்த அனுபவத்தில் இருகைகளிலும் ஐவி குழாய்களை  (IV line) இணைக்கும் வரை சிறு வலியை உணர்ந்தேன். அதன் பின்பு என்ன நடந்தது என்பதை உணரவில்லை. ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்று விட்டேன். ஆகவே இதன் பின்னர் என்னென்ன செயல்பாடுகள் நிகழ்ந்தன என்பதை என் உறவினரான மருத்துவரிடம் துருவித்துருவிக் கேட்டு அறிந்து கொண்டேன்.

    அறுவைச்சிகிச்சை முழுவதும் மயக்க மருந்து நிபுணர்( anesthetist) இதயத்துடிப்பு (heart beat), இரத்த அழுத்தம் (Blood pressure), சுவாசம் (Breathing) மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பார். நோயாளி ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றதும் தொண்டை வழியே ஒரு சுவாசக் குழாய் செலுத்தப்படும். இக்குழாய் செயற்கைச் சுவாசக் கருவியுடன் (Ventilator) இணைக்கப்படும்‌. அறுவைச்சிகிச்சை நடைபெறும் போது நுரையீரலின் சுவாசிக்கும் செயலைபாட்டை இக் கருவி மேற் கொள்ளும். அடுத்து ஒரு சிலாகை (Catheter) சிறுநீர்ப்புறவழி வழியாகச் சிறுநீர்ப்பையில் செலுத்தப்பட்டு சிறுநீரை வெளியேற்ற வழி செய்யப்படும். அனைத்துக் குழாய்களும் கண்காணிப்புக் கருவிகளும் (monitors) உடலுடன் சரியாக இணைக்கப்பட்டு அவற்றின் பழுதற்ற செயல்பாடு உறுதி செய்யப்பட்ட பின்னரே அறுவைச் சிகிச்சை தொடங்கப்படும்.

    அறுவைச் சிகிச்சை செய்யவிருக்கும் மார்பகப்பகுதியின் மேல் தோலின் மீது கிருமி நாசினித் திரவம் தேய்க்கப்பட்டுச் சுத்தம் செய்யப்படுகிறது. அடுத்ததாக அறுவைச் சிகிச்சை நிபுணர் கால் அல்லது கையில் இருந்து நீண்ட கீறல் அல்லது கீறல்களை (incisions) ஏற்படுத்துவதன் மூலம் புறவழி ஒட்டுப் (bypass grafting)  போடப் பயன்படுத்தப் போகும் சிரை இரத்தக் குழாயை அடைவார். அந்த இரத்தக் குழாய்களை வெட்டி நீக்கிய பின் கீறல்களைத் தையல் போட்டு மூடி விடுவார்.

    இதற்குப் பின்பு அறுவைச்சிகிச்சை நிபுணர் மார்பின் நடுப்பகுதியில் தொண்டையில் ஆதாமின் ஆப்பிளுக்குச் (Adam’s apple) சற்றே கீழிருந்து தொப்புள் (navel) சிறிது மேல் வரையில் அடுத்து நீளவாக்கில் கீறலிடுவார் (Incision).  மார்பெலும்பு (Sternum)  இரண்டு பாதியாக வெட்டப்பட்டு மார்பகத்தின் பகுதிகள் பரப்பி விரிக்கப்படுவதன் மூலம் இதயம் வெளிப்படுத்தப்படும்.

    இதயத் தமனி புறவழி ஒட்டு அறுவை சிகிச்சை (Coronary Artery Bypass Graft Surgery) –  அழுத்த விசைக்குக் கருவி இயக்க நிலை முறை (on – pump procedure)

    கரோனரி தமனிகள் மிகச் சிறிய அளவிலானவை. இவற்றின் மீது ஒட்டு இரத்தக் குழாய்களைத் தைக்க வேண்டுமானால் மருத்துவர் இதயத்தின் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தி விட வேண்டும். இதற்காக இதய-நுரையீரல் புறவழி இயந்திரம் (Heart- Lung bypass machine) மூலம் இரத்தத்தை உடலில் செலுத்தும் வகையில் வெளியிலிருந்து குழாய்கள் இதயத்திற்குள் வைக்கப்படும்.

    உடலின் இரத்த ஓட்டம் திசை திருப்பப்பட்டு இதய – நுரையீரல் புறவழி இயந்திரம் வழியாக  நடைபெறத் துவங்கியதும் மருத்துவர் இதயத்தில் ஒரு குளிர்ந்த திரவத்தை ஊசி மூலம் செலுத்தி இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி விடுவார்.

    இதயம் 2 வழிகளில் குளிர்விக்கப்படலாம்:

    இதயம் – நுரையீரல் இயந்திரம் வழியாக செல்லும்போது இரத்தம் குளிர்ச்சியடைகிறது.  இந்தக் குளிரூட்டப்பட்ட இரத்தம் உடல் உறுப்புகள் அனைத்தையும் அடையும் போது உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது.

    குளிர்ந்த உப்பு நீர் (saline) இதயத்தின் மீது ஊற்றப்படுகிறது. குளிர்ந்த பிறகு, இதயம் மெதுவாக நின்று நிற்கிறது. ஒரு சிறப்பு பொட்டாசியம் கரைசலை (special potassium solution) இதயத்தில் செலுத்துவதன் மூலம், இதயத்தின் இயக்கத்தை நிறுத்திவிடும் செயலை விரைவுபடுத்தி இதயத்தை முழுவதுமாக நிறுத்தி விட முடியும். இப்போது இதயம் சுமார் 2 முதல் 4 மணி நேரம் வரையில் இதயத்திசுக்கள் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கும். புறவழி அறுவை சிகிச்சையின் போது, ​​மார்பெலும்பு (sternum) பிரிக்கப்பட்டு, இதயம் நிறுத்தப்பட்டு, இதய-நுரையீரல் இயந்திரம் மூலம் இரத்தம் அனுப்பப்படுகிறது. மற்ற வகையான இதய அறுவை சிகிச்சைகளைப் போல் இல்லாமல், பைபாஸ் அறுவை சிகிச்சையின் போது இதயத்தின் அறைகள் திறக்கப்படுவதில்லை.

    ஒற்றைப் புறவழி (single bypass), இரட்டைப் புறவழி (double bypass) , மூன்று புறவழி (triple bypass) அல்லது நான்கு புறவழி (quadruple bypass) ஆகிய சொற்கள் அடைத்துக் கொண்ட எத்தனை தமனிகளின் (blocked arteries) இரத்தக் குழாய்கள் புறவழி ஒட்டிட்டு இணைக்கப்பட்டன என்பதைக் குறிக்கின்றன. என்னுடைய நேர்வில் மூன்று தமனிகளின் இரத்தக் குழாய்கள் புறவழி ஒட்டுப் போட்டு இணைக்கப்பட்டன (triple bypass) என்று அறிந்து கொண்டேன். 

    கீழே தரப்பட்டுள்ளது என்னுடைய புறவழி ஒட்டு அறுவைச் சிகிச்சையின் மாதிரிப் படம்.

    இதயத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டதும், பெருநாடி அல்லது பெருந்தமனியில் சிறிய திறப்பொன்று ஏற்படுத்தப்படும். காலிருந்தோ அல்லது கையிலிருந்தோ வெட்டி எடுக்கப்பட்ட சிரை இரத்தக் குழாயின் ஒரு பகுதியின் ஒரு முனையை திறப்புக்கு மேலாகவும் மற்றொரு முனையை அடைப்புக்கு கீழாகவும் தைத்து விடுவதன் மூலம் புறவழி ஒட்டு நடைமுறையை (bypass graft Procedure) மருத்துவர் செய்வார். மருத்துவர் மார்புக்குள் உள்ள உள் நெஞ்சகத் தமனியை (internal mammary artery) புறவழி ஒட்டுக்குக்காகப் ( bypass grafting) பயன்படுத்தினால், தமனியின் கீழ் முனை மார்பின் உள்ளே இருந்து வெட்டப்பட்டு அடைப்புக்கு கீழே உள்ள இதயத் தமனி (Coronary Artery) யில் செய்யப்பட்ட ஒரு திறப்பு மீது வைத்துத் தைக்கப்படும். பெண்களுக்கு இந்த உள் நெஞ்சகத் (IMA) தமனியை புறவழி ஒட்டாகப்  பயன்படுத்துவது குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன.

    நோயாளிக்கு இதய இரத்தக் குழாயில் எத்தனை அடைப்புகள் உள்ளன, அவை எங்கு அமைந்துள்ளன என்பதைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட புறவழி இரத்தக் குழாய் ஒட்டுதல்கள் செய்யப்படலாம். அனைத்து ஒட்டுக்களையும் தைத்து முடிந்தபின், அவை வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த மருத்துவர் தைக்கப்பட்ட பறவழி ஒட்டு இரத்தக் குழாய்கள் வழியாக இரத்த ஓட்டம் செல்கிறதா என்பதைக் கூர்ந்து பரிசோதிப்பார்.

    புறவழி இரத்தக் குழாய் ஒட்டுகள் பரிசோதிக்கப்பட்டு அவற்றின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பின், மருத்துவர் இதய – நுரையீரல் புறவழி இயந்திரம் வழியாகச் செல்லும் இரத்தத்தை மீண்டும்  இதயத்தின் வழியாகச் செல்ல அனுமதித்து இயந்திரத்திற்குச் செல்லும் குழாய்களை அகற்றி விடுவார். நோயாளியின் இதயம் தானாகவே மீண்டும் இயங்கத் தொடங்கலாம் அல்லது அவ்வாறு நிகழாத நேர்வில் மறுபடியும் இயங்கச் செய்ய லேசான மின்சார அதிர்ச்சி (Electric shock) தரப்படலாம்.

    அவசியம் ஏற்பட்டால் மருத்துவர்கள் இதயத்தின் தொடக்க மீள் இயக்கத்திற்காக இதயத்தில் மின் கடத்திக் கம்பிகளைச் செலுத்தி அவற்றை இதய மின்முடுக்கியுடன் (Pace maker) தற்காலிகமாக இணைத்து இதயத்தை இயங்கச் செய்வார்கள்.

    இதயத் தமனிப் புறவழி ஒட்டு அறுவை சிகிச்சை (Coronary Artery Bypass Graft Surgery) – அழுத்த விசைக்குக் கருவி இயங்கா நிலை முறை (off – pump procedure)

    இந்த முறையில் இதயத்தின் துடிப்பு நிறுத்தப்படுவதில்லை. மருத்துவர் மார்பைத் திறந்து இதயத்தை வெளிப்படுத்தியதும் ஒரு சிறப்புக் கருவியால் இதயத்தின் எந்தத் தமனிக்குழாய்க்குப் புறவழி இரத்தக் குழாயைத் தைத்து ஒட்டுப்  போட்டு இணைக்க வேண்டுமோ அதைச் சுற்றியுள்ள பரப்பை நிலைப்படுத்தி விடுவார்கள்.

    நிலைப்படுத்தல் அமைப்பு (Stabilization system) ஒரு இதய இடப் பொருத்தியையும் (Heart positioner)  மற்றும் திசு நிலைப்படுத்தியையும் (Tissue stablizer) கொண்டுள்ளது. இதய இடப் பொருத்தி இரத்த ஓட்டத்தைச் சீர் குலைக்காமல் இதயத்தை உயர்த்தித் தாங்கிப் பிடித்து கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இதயத்தை திருப்பி அடைபட்ட தமனிகளை (blocked arteries) அடைவதற்கான சிறந்த அணுகலைப் பெற (best access) வழிவகுக்கிறது. திசு நிலைப்படுத்தி இதயத்தின் ஒரு சிறிய பகுதியில்  அறுவை சிகிச்சை நிபுணர் வேலை செய்யும் போது அப்பகுதியை அசையாமல் நிலையாக வைத்திருக்கிறது.

    என்னுடைய இதய அறுவைச் சிகிச்சை அழுத்த விசைக் கருவி (off pump coronary artery bypass – OPCAB)  இயங்கா நிலையில் ஆக்டோபஸ் 4.3 (Octobus 4.3) என்ற நிலைப்படுத்தும் அமைப்பைப் பயன்படுத்திச் செய்யப்பட்டது என்பதை என்னுடைய அறுவைச் சிகிச்சை ஆவணங்களிலிருந்து  தெரிந்து கொண்டேன்.

     

    Picture courtesy: https://www.ahajournals.org/doi/full/10.1161/01.cir.0000120292.65143.f5

    திசு நிலைப்படுத்தியால் (tissue stabilizer)  நிலைப்படுத்தப்பட்ட இதயத்தின்  குறிப்பிட்ட சிறு பரப்பைத் தவிர பிற பகுதிகள் இயக்கத்திலேயே இருக்கும். மேலும் இரத்தத்தை உடலில் அழுத்திச் செலுத்தும் (Pumping) பணியைத் தொடர்ந்து செய்யும். இதயத்தின் மீதமுள்ள பகுதிகள் தொடர்ந்து செயல்பட்டு உடல் வழியாக இரத்தத்தை செலுத்தும்.

    ஒருவேளை இதயத்துடிப்பில் ஏதாவது எதிர்பாராத சிக்கல் அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்டால் புறவழி இயந்திரம் புறவழி இரத்தக்குழாய் ஒட்டுதலை முடிக்கத் தேவைப்படக் கூடும். ஆகவே அத்தகைய நிலையில் இயந்திரமும் அதனை இயக்குவதற்குத் தொழில்நுட்பப் பணியாளரும் தயார் நிலையில் இருப்பார்கள். மற்றபடி இதய-நுரையீரல் புறவழி இயந்திரம் (Heart -Lung machine)  ஒரு மாற்று ஏற்பாடாக மட்டுமே இருக்கும்.

    பெருநாடி அல்லது பெருந்தமனியில் சிறிய திறப்பொன்று ஏற்படுத்தப்பட்டு இரத்தக் குழாயின் ஒரு பகுதியின் ஒரு முனையை திறப்புக்கு மேலாகவும் மற்றொரு முனையை அடைப்புக்கு கீழாகவும் தைத்து விடுவதன் மூலம் புறவழி ஒட்டு நடைமுறையை (bypass graft Procedure) மருத்துவர் செய்வார்.

    நோயாளிக்கு இதய இரத்தக் குழாயில் எத்தனை அடைப்புகள் உள்ளன, அவை எங்கு அமைந்துள்ளன என்பதைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட புறவழி இரத்தக் குழாய் ஒட்டுதல்கள் செய்யப்படலாம். அனைத்து ஒட்டுக்களையும் தைத்து முடிந்தபின், அவை சரியாக வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த மார்பை மூடுவதற்கு முன் மருத்துவர் தைக்கப்பட்ட பறவழி ஒட்டு இரத்தக் குழாய்கள் வழியாக இரத்த ஓட்டம் செல்கிறதா என்பதைக் கூர்ந்து பரிசோதிப்பார்.

    இப்போது சிஏபிஜியின் (CABG) அழுத்த விசைக்குக் கருவியின் இயக்க நிலை முறை (on pump) மற்றும் அழுத்த விசைக்குக் கருவி இயங்கா நிலை முறை (off pump) ஆகிய இருவகையான செயல்படும் முறைகளிலும் (Procedures) அறுவைச் சிகிச்சை கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையை நெருங்கி விட்டது.

    அடுத்த கட்டமாகச் சில நேரங்களில் உடைந்த எலும்பை சரிசெய்யக் கம்பிகளைப் பயன்படுவது போல் சிறிய கம்பிகளால் மார்பெலும்பு(sternum) மருத்துவரால் தைக்கப்படும். இதயத்தைச் சுற்றிலும் சேர்ந்துள்ள இரத்தம் மற்றும் திரவங்களை வெளியேற்ற மார்பில் குழாய் செருகப்படும். அடுத்து மார்பெலும்பின் மீதுள்ள தோல் மீண்டும் ஒன்றாக இணைத்துத் தைக்கப்படும்.

    வயிற்றுப் பகுதியில் சேர்ந்துள்ள திரவங்களை வெளியேற்றுவதற்காக மருத்துவர் மூக்கு அல்லது வாய் வழியாக வயிற்றுக்குள் ஒரு குழாயைச் செலுத்துவார்.

    இதன் பின்னர் அறுவைச் சிகிச்சைக் (surgical wounds) காயங்களுக்கு கிருமித் தொற்று நீக்கப்பட்ட (sterilised bandage) புண் கட்டுத் துணியால் மருத்துவர் கட்டுகள்(dressing) இடுவார்

    தொடரும்..

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 122 (புரிந்தவர்)

    சேக்கிழார் பாடல் நயம் – 122 (புரிந்தவர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்:

    புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி
    அரிந்திடல் உற்ற போதில் அரசனும் ‘பெரியோர் செய்கை
    இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்று எதிர் கடிதின் சென்று
    பெரும் தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும்

    வரலாறு:

    இவ்வளவு  பெரிய  யானைமுன்னே இந்த உண்மைத்   தவமுடைய அடியார் சென்றபோது  நடந்ததை அறியாத மன்னன் யானையும்   பாகரும்  மாளும்   வண்ணம்  வெட்டியதே போதுமோ? எனக்கேட்டார். அது  கேட்ட  எறிபத்தர், ‘’அரசே, இறைவனுக்குச்  சாத்த சிவகாமி ஆண்டார் எடுத்து வந்த மாலையைச் சிந்தி  வீழ்த்தியது! நானும் அதனையும்   பாகரையும்  வெட்டி  வீழ்த்தினேன்!’’ என்றார். அதுகேட்டு மன்னன் அடியார் திருவடியில்   வீழ்ந்து இறைவனடியாருக்குச்  சிவாபராதம் செய்த யானையையும் பாகரையும் கொன்றது போதாது! என்னையும்  கொல்வதே  சரி, அதுவும் மங்கல மழுவால் கொல்லாமல், என்   வாளால் கொல்க ‘’ என்று  தம்  உடைவாளை எடுத்து நீட்டினார்.

    மனம்   வருந்தித்  தம்     உடைவாளை  எடுத்து  நீட்டிய  மன்னரை நோக்கிய  எறிபத்தர், இறைவன்பால் இத்தகைய  அன்பு  கொண்டவர்  பெருமையை எண்ணி   அரசர்   தந்த உடைவாளை உடனே  வாங்கிக்    கொண்டார், அப்படி வாங்கா  விட்டால் தாமே வெட்டிக்கொள்வார்  என்ற காரணத்தால் விரைந்து வாங்கினார்.  புகழ்ச்சோழரும் வணங்கி, என்னைக் கொன்று என்பிழை தீர்க்க இவரே முயல, அருளிய இறைவன் கருணையை எண்ணிமகிழ்ந்தார்! ‘’யானையும் பாகரும் செய்த பிழையைத்   தன் பிழையாகக்  கருதி, வாளைத்  தந்த அன்பனாருக்கு  நான்   தீங்கு  நினைத்தேன்;  ஆதலால் இப்போது நானே என்   உயிரை  மாய்த்துக்  கொள்வேன்’’ என்று அவ்வாளைத்  தம் கழுத்தில்  வைத்து அரிந்து கொள்ள முயன்றார்!

    பாடல்:

    புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி
    அரிந்திடல் உற்ற போதில் அரசனும் ‘பெரியோர் செய்கை
    இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்று எதிர் கடிதின் சென்று
    பெரும் தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும்

    பாடலின் பொருள்: நினைந்து அவர் கொடுத்த வாளை அன்பர்தம் கழுத்திற் பூட்டி அரியத் தொடங்கிய போதிலே, “பெரியோர் செய்கை யிருந்த படி இது என்ன? ஓ! கெட்டேன்!” என்று எதிர் விரைந்து போய் மிகப் பெரிய தமது தோள்களாற் கூடி அரசரும் அந்த வாளினையும் அதைப் பிடித்த அன்பரது கையினையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டனர்.

    விளக்கம்:

    புரிதல் – தீர எண்ணுதல் – முற்றும் நினைத்தல் – தம் முன்பு உவகை கொண்டதைப் புரிந்தும், வெட்டுக  என்று  தொழுதலைப்புரிந்தும்,  விரும்பிக் கொடுத்த வாள்.

    இப்பாடலில் அன்பர்  எறிபத்தரையும்  அரசர் புகழ்ச்சோழரையும் குறித்தன. அடியாரைப்  பெரியோர்  என்றது,  சிவாபராதம் தம்பால் ‘நிகழ்வதனால் தாம்

    எரிவாய் நரகத்துக் காளாகாதபடி தடுத்து உதவும் பெற்றியாற் பெரியோர் என்றார். செய்தற்கரும் செயல் செய்தலாற் பெரியோர் என்றார் என்றலுமாம்

    இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்ற தொடர்,  நாம் எதிர்பாராத வண்ணம் இவ்வாறு இருந்தபடி இது என்ன! ஆச்சரியம்! கெட்டேன்! எதிர்பாராதபடி அதிவிரைவில் தீங்கு நிகழக்கண்டபோது வரும் அவலச்சொல்  ‘கெட்டேன்’ என்பதாம் . இவ்வாறு தமக்கிறுதியைத்  தாமே தேடிக்கொள்ளும் செய்கை ஒரு பெரியார்பால் நிகழ்வது தம்மாற் கூடிற்றே என்று எண்ணியபோது பேரவலம் மனத்து நிகழ்ந்தது.  அதனைக் குறிக்கக் கெட்டேன் என்ற அவலச்சொல்  வந்தது. வலிய மழுவை  வீசி,  வன்பெருங் களிற்றினையும் எறிந்து வீரஞ்செய்து வென்ற பெரு வீரர் செயலையும் விலக்குதற்குரிய பெருவன்மை நோக்கி இவ்வாறு சிறப்பித்தார்.

    கூடி – கிட்டி – சேர்ந்து, கழுத்தை அரியவொட்டாமல் வாளுங் கையும் சேர்த்துப் பிடித்தனர் என்க. ஊறு செய்யும் கருவி வாளாதலின் முதலில் இவரது கையின் பிடியினுள்ளே கொண்டு தடுக்கப்பட்டது வாளென்பார்,  வாளும் என்று அதனை முன்வைத்துக் கூறினார். தோளால் – கையால், பெருந்தோளுடைமை உயர்ந்த உடலிலக்கணமாம்.

    இப்பாடலில் அரசராகிய புகழ்ச்சோழர்,அடியாராகியஎறிபத்தர், ஆகியோரின்    சமயத்துக்கு ஏற்ற விரைந்த மதிநுட்பம், செயல் ஆகியவை  புலனாகின்றன!

    ‘’மதிநுட்பம்  நூலோடு  உடையார்க்கு  அதிநுட்பம்
    யாவுள  முன்நிற்   பவை! ‘’

    என்ற  குறளை நினைவூட்டும் பாடல் இது!

    Share
  • கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா?

    கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா?

    கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகியவை குறித்துப் பல வகையான வதந்திகள் பரவி வருகின்றன. அதைப் போட்டுக்கொண்டவர்களுக்கு பல விதமான பாதிப்புகள் ஏற்பட்டன, பக்க விளைவுகள் ஏற்பட்டன எனச் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மை என்ன? கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடமே நேரடியாகக் கேட்டோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 8

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 8

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் (1)

    முன்னுரை

    தொல்காப்பியத்தில் உவமம், சங்க இலக்கியங்களில் உவமம், பிற்கால இலக்கியங்களில் உவமம் என்பன தனித்தனி ஆய்வுக்கு உட்பட்ட பொருண்மை என்பது இக்கட்டுரையாளர் கருத்து. ‘கவிதையில் உவமம்’ என்பது செய்யுளியலில் குறிப்பிடப்படாத காரணத்தால் தொல்காப்பிய உவமவியலின் உள்ளடக்கம் சாதாரண உவம ஆய்வினின்றும் வேறுபடுகிறது. தலைமக்களின் கூற்றுப் பகுதியாக இருந்த உவமக் கோட்பாடு கவிதையில் கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. அவ்விரண்டு காலக்கட்டத்திற்குப் பிறகுதான் ‘உவமம்’ என்பது கவிதையின் அழகுக் கூறுகளுள் ஒன்றாகக் கருதப்படத் தொடங்கியிருக்கிறது. காட்சிகளையும் பொருட்களையும் உவமத்தின் வாயிலாகச் சித்திரிக்கும் போக்கு பல்கிப் பெருகியதும் இக்காலத்தில்தான் எனக் கருதலாம். இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் தலைமக்களின் கூற்றுப் பகுதிகளில் இடம்பெறும் உவமங்களைப் பற்றிய சுருக்க ஆய்வு இக்கட்டுரையில் முன்னெடுக்கப்படுகிறது.

    பச்சைப் பானையில் கசிந்த காதல்

    அகப்பொருள் இலக்கணத்தில் தலைவன் தான் கொண்டுள்ள அன்பைத் தலைவியினிடத்து ஆண்மை தோன்ற வெளிப்படுத்துவான்.  தலைமகள் அவ்வாறு பெண்மை தோன்ற வெளிப்படுத்துவது மரபன்று. அதாவது ஆண்மை முற்றும் வெளிப்பட்டும் பெண்மை குறிப்பாக வெளிப்பட்டும் நிற்பதுமே தமிழ் மரபு. அவ்வாறாயின் தலைமகள் தலைவன் மீது தான்கொண்ட உள்ளத்துக் காதலை வெளிப்படுத்தும் பாங்கு எத்தகையது என்னும் ஐயத்திற்குத் தொல்காப்பியம் ஓர் உவமத்தால் விளக்கம் தருகிறது.

    “தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
    எண்ணுங் காலை கிழத்திக் கில்லைப்
    பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
    பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப”

    மேற்கண்ட நூற்பாவில் ‘தலைவன் அறிந்து கொள்ளுமாறு புதுக்கலத்துப் பெய்த நீர் புறத்தே பொசிந்து காட்டுதல் போலப் புலப்படும்’ என உவமையால் புலப்படுத்துவதைக் காணலாம். ‘பிறநீர்  மாக்கள்’ என்பது கைக்கிளை, பெருந்திணை மாந்தர்களை அவர்கள்  அகத்திணைத் தலைமை மாந்தர்களைப் போலன்றித் தம் உள்ளத்துக் காதலை ஒருவர் அறிய மற்றொருவர் வெளிப்படக் கூறிக்கொள்வர் என்பதனால் ‘பிற நீர் மாக்கள்’ எனக் குறிக்கப்பட்டனர்.

    ‘பெய்ந்நீர் போலும்’ என்றே உவமம் பயின்றிருக்க உரையாசிரியர் பலரும் உவமப்பகுதியின் பொருளுணர்ந்து ‘புதுக்கலம்’ என உவமத்தின் உண்மை கண்டு அடைபுணர்த்து உரைத்திருப்பதும், இந்தப் புதுக்கலத்து உண்மையைத் திருவள்ளுவர் ‘பசுமட்கலத்துள் நீர் பெய்திரீஇயற்று’ எனப் பொருள் தழுவி வழிமொழிந்திருப்பதும் அறிந்து சுவைத்தற்குரியன.

    நீரில் எழுதிய எழுத்தா? அந்தரத்தில் எழுதிய எழுத்தா?

    ‘செய்கின்ற நன்மையைப் பண்பறிந்து ஆற்றாதபோது அந்நன்றாற்றலுள்ளும் தவறு ஏற்பட வாய்ப்புண்டு’ என்பது வள்ளுவம். இந்த வள்ளுவம் ஔவை எழுதிய மூதுரையில்,

    “நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
    கல்மேல் எழுத்துப் போல் காணுமே அல்லாத
    ஈரமிலா நெஞ்சினார்க்கு ஈந்த உபகாரம்
    நீர் மேல் எழுத்துக்கு நேர்”

    என்றவாறு வெளிப்படுகிறது. இந்தப்பாட்டில் யாருக்கு உதவ வேண்டும் என்பதும் யாருக்கு உதவக்கூடாது என்பதோடு அவற்றின் பின்விளைவுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. உதவி, செயப்பட்டார் சால்பின் வரைத்ததாதலின் நல்லார்க்குச் செய்த உதவி காலத்துக்கும் நிலைத்து நிற்கும் என்பதும் சால்பாகிய இரக்கமிலா அரக்கர்களுக்குச் செய்த உதவி நீரில் எழுதிய எழுத்தாக எழுதுங்காலே மறைந்துவரும் என்பதும் ஔவயார் வாக்கு. நிலையாமைக்கு ஔவை கூறிய இந்த உவமத்தின் மூலம் தொல்காப்பியத்தில் இருப்பதை அறிய முடிகிறது. ஔவை எழுதுவதற்கு நீரைத் தளமாக்குகிறார். தொல்காப்பியரோ அந்தரத்தைத் தளமாக்கி ‘அந்தரத்தில் எழுதிய எழுத்து’ என்கிறார்.

    பெற்றோரைவிட்டும் சுற்றத்தைவிட்டும் தலைவன் மனை அடைந்த தலைவி, பழக்கம் காரணமாகச் சில நேர்வுகளில் பிழைசெய்தல் கூடும். தன்னுடைய பெற்றோரிடத்தும் தன்னிடத்தும் தலைவி ஒழுகும் முறையில் காணும் பிழைகள் தலைவனுடைய கருத்தில் வைக்கத்தக்கன அல்ல., அவை உடன் மறக்கத்தக்கன என அறிவுறுத்தும் நிலையில் தலைவனின் கூற்றுப் பகுதியை விளக்க வரும் தொல்காப்பியம், தலைவி செய்த தவறுகளைத் தலைவன் மறக்க வேண்டிய பாங்கினை ஓர் உவமத்தின் வழி உணர்த்துவதைக் காணமுடிகிறது.

    “அந்தரத்து எழுதிய எழுத்தின் மான
    வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்”

    ‘களவுக்காலத்து ஒழுகிய ஒழுக்கக் குறைபாட்டால் நிகழ்ந்த குற்றம் ஆகாயத்தில் எழுதிய எழுத்துப்போல் மறைந்து போகும்’ என்பது மேற்கண்ட தொல்காப்பியத்தில் கண்ட உவமத்திற்கான பொருளாம். உலக வழக்கில் ஒரு சொலவடை உண்டு. அரிசி களைகிறபோது உண்டாகின்ற சினம் சோறு கொதிக்கிற போது மாறிவிடும்’ என்பார்கள். இல்லறம் என்பது மாறிபுக்க இதயங்களின் ஒன்றிணைந்த வினையாதலின் செய்கின்ற தவறுகள் மனத்துட் பதியவே கூடாது என்பது தொல்காப்பியம். ஒருவர் செய்த தவறினை மற்றொருவர் தன் உள்ளத்து  வைத்திருந்து மறப்பதற்கும் உள்ளத்துட் புகாமல் விடுவதற்குமான இடைவெளியே இல்லறத்தின் வெற்றிக்களமாகும். இந்த நுட்பம் அறிந்தே தொல்காப்பியர் ‘அந்தரத்து எழுதிய எழுத்து’ என்கிறார்.

    கஞ்சி அமுதமான கதை

    ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது தெரிந்த வழக்கு.  உண்டியால் புரக்கப்பட்ட உயிர் இறவாது நிற்பதற்குக் காரணம் அது அமிழ்தாவதே. ‘அமிழ்து’ என்பது சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. ‘உறுதொறும் உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்’ என்பது வள்ளுவம். அமிழ்தைக் கருவியாக்கிய அது, மழலை அளாவிய கூழை அமிழ்தினும் உயர்த்திச் சொல்கிறது. ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’ என்பது திருவள்ளுவரின் ஒப்பீட்டுப் பார்வை. இதனையொத்த அமிழ்து பற்றிய கருத்துக்கள் ஆயிரம். விரித்துரைக்க இயலாது. இந்த அமிழ்தத்தைத் தன் மனைவி கையால் சமைத்த உணவோடு ஒப்பிடுகிறான் தொல்காப்பியத் தலைவன்.

    “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
    வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென
    அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும்”’

    என்பது அவன் கூற்று. சுவைக்க ஒன்னாதவற்றைச் சுவைக்கச் செய்தது அவள் கையறி மடமையாதலின் அவள் கைபட்டதால் அமிழ்தமானது என்பது கருத்து. இது காதல் உணர்வின் வெளிப்பாடே என்பது,

    “வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
    தேம்பூங்கட்டி என்றனிர்’

    என்னும் குறுந்தொகை தோழி கூற்றானும் அறிந்து கொள்ளலாம். வேம்பு இனிப்பதற்கும் கூழ் அமிழ்தாவதற்கும் தலைவிமேல் தலைவன் வைத்த மாறா அன்பும் தீராக் காதலுமே காரணம். உணவுக்கு அமிழ்தத்தை உவமமாக்குவது என்பது தமிழின் மரபியல் சார்ந்த உவமக் கோட்பாடு என்பது தெளிவாகலாம்.

    நிறைவுரை

    அகத்திணை மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் இடம்பெற்ற உவமம் முதலியன கவிதைக்கு அணியாக வளர்நிலை பெற்றது ஒரு மொழியில்  படைப்பிலக்கிய வரலாற்றில் பரிணாம வளர்ச்சியாகவே கருதப்படலாம். அகத்திணை மாந்தர்களும் அவ்வுவமத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்குத் தொல்காப்பியம் பல வரையறைகளை வகுத்துக் காட்டுகிறது. அந்த வகையில் தலைமகன் கூற்றுப்பகுதியில் தலைமகளின் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் இல்லற மாண்புகளைப் பாராட்டுகிற சூழலில் பயன்படுத்திய சில உவமங்களை இக்கட்டுரை விளக்கியிருக்கிறது.  பொருளதிகாரத்தில் காணப்படும் வேறு சில உவமங்களைத் தொடர்ந்து காணலாம்.

    (தொடரும்…)

    Share
  • இதயம் திறந்த அனுபவங்கள் – 2

    இதயம் திறந்த அனுபவங்கள் – 2

    வெ. சுப்ரமணியன்

    அறுவைச் சிகிச்சைக்குத் தயாராதல்

    நோயாளிக்கு சி.ஏ.பி.ஜி (CABG) அறுவைச்சிகிச்சை ஏன் செய்யப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை மருத்துவர் முதலில் கூறுவார். அதன் பின்னர் செயல்முறை (procedure) குறித்து விளக்கி அதில் சாத்தியமான  அபாயங்களைப் பற்றியும் எடுத்துரைப்பார். அப்போது நோயாளி தன் மனதில் தோன்றும் அனைத்து ஐயங்களையும் அச்சங்களையும் மருத்துவரிடம் தெரிவித்து அவற்றுக்கான தக்க விளக்கங்களைப் பெற்றுத் தெளிவு பெறலாம்.

    நோயாளி அறுவைச்சிகிச்சைக்கு வாய்மொழி ஒப்புதல் கொடுத்த பின்னர் அறுவைச் சிகிச்சைக்கு முன்னாதாக மேற் கொள்ள வேண்டிய சோதனைகளுக்கான எழுத்துப் பூர்வமான அனுமதி அளிக்கும் படிவங்களில்  நோயாளியின் கையொப்பம் பெறப்படும். கையொப்பம் இடுமுன் படிவத்தைக் கவனமாகப் படித்தும் தெளிவு பெற இயலாத பட்சத்தில் மருத்துவரிடம் வினாக்களை எழுப்பித் தெளிவு பெறலாம்.

    நோயாளியின் மருத்துவ  வரலாற்றை (medical history) மருத்துவர் குழு முழுமையாக மதிப்பாய்வு செய்தும் முழு உடற்பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளும் உடற்தகுதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வார். இது தவிர வேறு சில இரத்தப் பரிசோதனைகளும் பிற கண்டறியும் சோதனைகளும் கூடுதலாகத் தேவைப்படலாம்.

    எடுத்துக்காட்டாகத்  தற்போது முதலில் கோவிட் -19  தொற்றுச்  சோதனை நோயாளிக்குச் செய்யப்பட்டு எதிர்மறை (negative) என்று உறுதியான பின்னரே அடுத்த கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    (1) உள் நோயாளியாக (inpatient) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் நோயாளியின் இடது கையில் நோயாளியின் விவரங்கள் குறிக்கப்பட்ட மணிக்கட்டுப்பட்டை (wristband) கட்டப்படும்.

    படம் : மணிக்கட்டுப் பட்டை (wrist band)

    (2) அடுத்து வழக்கமாக அணியும் உடைகளுக்குப் பதிலாக மருத்துவமனையில் வழங்கப்படும் அங்கியையே அணிந்து கொள்ள வேண்டும். இதனால் மருத்துவமனையில் நோயாளியைப் பிரித்தறிய எளிதாக இருக்கும். மேலும் மருத்துவமனையில் செய்யப்படும் பல்வேறு சோதனைகளுக்கு வசதியாகவும் இருக்கும்.

    (3) அடுத்து அறுவைச் சிகிச்சைக்கு இடையூறாக இருக்கக் கூடிய நகைகள், தாயத்துகள் மற்றும் அரைஞாண் கயிறு போன்ற பிற பொருட்களும் அகற்றப்படும்.

    1) அறுவைச் சிகிச்சைக்கு முன் தினம் அதிகாலையில் இரத்தப் பரிசோதனைக்கு மாதிரி (sample) எடுக்கப்படும்.

    2) நோயாளிக்கு முழு உடற்சவரம் (Full body shave) செய்யப்படும். அதன் பின்னர் சோப்புத் தேய்த்து சிறப்புக் கிருமி நாசினி கலந்த வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

    அடுத்து காலைச் சிற்றுண்டி உண்ட  இரண்டு மணி நேரத்திற்குப் மீண்டும் பரிசோதனைக்காக இரத்த மாதிரி எடுக்கப்படும்.

    3) அடுத்து நோயாளிக்கு மார்பு எக்ஸ் கதிர் (Chest X – ray) படம் எடுக்கப்படும்.

    4) அடுத்து இருபரிமாண வண்ண டாப்ளர் (2D Colour Doppler) சோதனை செய்யப்படும்.

    இருபரிமாண எதிரொலி (2D Echo) என்பது இதயத்திற்கான ஒரு சோதனை, இதில் மீயொலி (ultrasound) நுட்பம் இதயத்தைப் படங்கள் எடுக்கப் பயன்படுகிறது. இது துடிக்கும் இதயம், இதயத்தின் அறைகள், வால்வுகள் மற்றும் இதயத்தின் முக்கிய இரத்த நாளங்களை குறுக்கு வெட்டு முதலியவற்றை ‘ஸ்லைஸ்’ (Slice)  காட்டுகிறது.  இதயத்தின் இரத்த ஓட்டத்தை மதிப்பிடும் ‘டாப்ளர்’ (Doppler) இந்த மீயொலிப் பரிசோதனையின் சிறப்பு உறுப்பாகும்.

    படம்: இருபரிமாண வண்ண டாப்ளர் (2D colour Doppler) கருவி

    4) காலை மற்றும் இரவில் துகள் தெளிப்பான் (nebulizer) கருவி உதவியுடன் நுரையீரலுக்கும் மற்றும் சுவாசப் பாதைக்கும் மருந்து செலுத்தப்படும். இதனால் சுவாசப் பாதையில் தடைகளும் நுரையீரலில் உள்ள பிரச்சினைகளும் நீக்கப்படக் கூடும்.

    5) நோயாளி தற்போது புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராக இருக்கலாம் அல்லது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்திருக்கலாம். இவர்களுக்கு நுரையீரல் இறுக்கத்தைக் குறைக்க அறுவைச் சிகிச்சைக்கு முன்பாகவே மூன்று பந்து  ஊக்க ஸ்பைரோமீட்டர் (Tri ball incentive spirometer) கருவியை ஒரு மணி நேரத்திற்கு 10 முறை பயன்படுத்த மருத்துவர் பரிந்துரைப்பார்.

     

    படம் : மூன்று பந்து  ஊக்க ஸ்பைரோமீட்டர் (Tri ball incentive spirometer)

    6) பல வகையான இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதயம் குறித்த விவரங்கள் ( Cardiac profile) சேகரிக்கப்படுகின்றன.

    அடுத்துவரும் பகுதியில் அறுவைச் சிகிச்சைக்கு முன் செய்யப்படும் பல்வேறு பரிசோதனைகளைக் குறித்து மிகச் சிறிய அளவில் எடுத்துக் கூறியுள்ளேன். உங்களுக்கு அப்பகுதி சலிப்பூட்டுவதாக உணர்ந்தால் நேராக  பகுதி (3) க்குச் செல்லலாம். இருந்தாலும் வாழ்க்கையில் எப்போதாவது இச் சோதனைகள் நமக்குச் செய்யப்பட்டால் அவை ஏன் எதற்காகச் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.

    (அ) இரத்தச் சர்க்கரை விவரங்கள்  (Sugar Profile)

    உணவு உட் கொள்ளாத நிலையில் இரத்தச் சர்க்கரை அளவு (Fasting Blood Glucose – FBG),

    உணவு உட்கொண்ட 2 மணி நேரத்திற்கு பின் இரத்தச் சர்க்கரை அளவு (Post Prandial Blood Glucose – PPBG) ,

    HbA1c சோதனை மூன்று மாத காலப்பகுதியில் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்பட்ட ஏராளமான ஏற்ற இறக்கங்களின் சராசரியை அளவிடுகிறது. மூன்று மாதங்களில் எந்த அளவிற்கு இரத்தச் சர்க்கரை கட்டுப்படுத்தப்பள்ளது என்பதையும் HbA1c தெரிந்து கொள்ள உதவுகிறது.

    ஆ) கொலஸ்டிரால் கொழுப்பு விவரங்கள் (Lipid profile)

    கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு (Fat). கல்லீரல் (Lever) உடலுக்குத் தேவையான கொழுப்பை உருவாக்குகிறது. உண்ணும் உணவுகளிலிருந்தும் கொலஸ்ட்ரால் கொழுப்பைப் பெறலாம். இறைச்சி, மீன், முட்டை, வெண்ணெய், சீஸ் மற்றும் பால் அனைத்தும் கொலஸ்ட்ரால் கொழுப்பைக் கொண்டுள்ளன. பழங்கள், காய்கறிகள் மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்களில் எந்த கொலஸ்டிரால் கொழுப்பும் இல்லை.

    இந்த இரத்தப் பரிசோதனையில் மொத்தக் கொலஸ்டிரால் (Total cholesterol)

    டிரைகிளிசரைடு (Triglyceride),

    குறை அடர்த்திக் கொலஸ்டிரால் (LDL) அல்லது கெட்ட கொலஸ்டிரால் (Bad cholesterol),

    மிகு அடர்த்திக் கொலஸ்டிரால் (HDL) அல்லது நல்ல கொலஸ்டிரால் (Good cholesterol),

    மொத்தக் கொலஸ்டிரால் அளவுக்கும் மிகு அடர்த்திக் கொலஸ்டிரால் அளவுக்குமான (HDL) விகிதம் ஆகியவற்றின் மதிப்புகள் கண்டறியப்படுகின்றன.

    இ) சிறுநீரகச் செயல்பாடுச் சோதனைகள்

    இரத்த யூரியா நைட்ரஜன் (Blood Urea Nitrogen – BUN),

    கிரியாட்டினின் (Creatinine ),

    இரத்த யூரியா நைட்ரஜனுக்கும் கிரியாட்டினின் அளவுக்குமான விகிதம்.

    (ஈ) மின்பகு பொருட்கள் குழுச் சோதனை (electrolyte panel test)  

    மின்பகு பொருட்கள் குழுச் சோதனை (electrolyte panel test)  அல்லது குருதி ஊனீர்ச் சோதனை (serum electrolytes test)  என்பது உடலின் முக்கிய மின்பகு பொருட்களை அளவிடும் இரத்தப் பரிசோதனை ஆகும்.

    மின்பகு பொருட்கள் (electrolytes) உடல் திசுக்களிலும், இரத்தத்தில் கரைந்த உப்புக்களின் வடிவத்தில் காணப்படும் தாதுக்கள். மின்பகு பொருட்கள் மின்னூட்டம் பெற்ற துகள்கள். இவை உடலின் உயிரணுக்களுக்கு (body cells)  ஊட்டச்சத்துக்களை உள்ளேயும், கழிவுகளை வெளியேயும் நகர்த்த உதவுகின்றன. ஆரோக்கியமான அளவில் உடலில் உள்ள  திரவங்களின் அளவை பராமரிப்பதிலும்,  உடலின்  அமில  காரச் சமநிலையைப் (acid – base balance) பேணுவதிலும், உடலின் அமில – காரத்தன்மை (pH) அளவை நிலைநிறுத்தவும் உதவுகின்றன.

    இவை தசை மற்றும் நரம்புச் செயல்பாடு (muscular and neural activity), இதயத்தின் தாளலயம் (heart rhythm) மற்றும் வேறு பிற முக்கிய செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவதில் உதவுகின்றன.

    (1) சோடியம் (Sodium)  உடலில் உள்ள திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் நரம்புகள் மற்றும் தசைகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது

    (2) குளோரைடு (Chloride) உடலில் உள்ள திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது ஆரோக்கியமான இரத்த அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது

    (3) பொட்டாசியம் (Potassium)  உங்கள் இதயம் மற்றும் தசைகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது.

    (4) மொத்த கார்பன் டை ஆக்சைடு (Total Carbon di oxide – CO2) சோதனை என்பது  இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவை அளவிடும் எளிய இரத்த பரிசோதனையாகும் . கார்பன் ஆக்சைடு (Carbon di oxide – CO2) சோதனை சிறுநீரக மற்றும் சுவாசப் பிரச்சினைகளைக் கண்டறியவும்  உதவும்.

    உ) கல்லீரல் சோதனைகள் (Lever tests)

    பிலிரூபின்(Bilirubin) என்பது மஞ்சள் நிற நிறமி (Yellowish pigment) ஆகும், இது சிவப்பு இரத்த அணுக்கள் (Red cells) இயல்பாக முறியும் (normal breakdown) போது உற்பத்தியாகிறது. பிலிரூபின் கல்லீரல் (lever) வழியாகச் சென்று இறுதியில் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இரத்தத்தில் காணப்படும் பிலிரூபின் அளவை பிலிரூபின் சோதனை அளவிடுகிறது. சோதனையில்

    மொத்த பிலிருபின் அளவு (Total Bilirubin),

    இணைந்த பிலிருபின் (Conjugate Bilirubin) ஆகியவை அளவிடப்படுகின்றன.

    இயல்பான அளவை விட பிலிரூபினின் அளவு அதிகமாகக் காணப்படுவது பல்வேறு வகையான கல்லீரல் அல்லது பித்த நாளப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். ஹீமோலிசிஸ் (Hemolysis) என்ற சிவப்பு இரத்த அணுக்கள் அழிவடையும் வீதம் எப்போதாவது அதிகரித்தால் இரத்தத்தில் பிலிரூபின் அளவும் உயரலாம்.

    அல்கலைன் பாஸ்பேடேஸ் (Alkaline phosphatease -ALP) எனப்படும் கார பாஸ்பேடேஸ் சோதனை கல்லீரல் நோய் அல்லது எலும்பு கோளாறுகளைக் கண்டறிய உதவுகிறது. இது பெரும்பாலும் கல்லீரல் குழுச் சோதனைகளின் (Liver panel tests) ஒன்றாகச் செய்யப்படுகிறது.  கல்லீரலைப் பாதிக்கும் நிலைமைகளில், சேதமடைந்த கல்லீரல் செல்கள் இரத்தத்தில் அதிகரித்த ALP ஐ வெளியிடுகின்றன.

    மொத்தப் புரத சோதனை:

    இந்த இரத்தப் பரிசோதனை இரண்டு வகையான புரதங்களை அளவிடுகிறது.   (1) அல்புமின்  மற்றும் (2) குளோபுலின். புரத அளவு குறைவாக இருந்தால், நோயாளிக்கு கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் இருப்பதாகக் கருதலாம்.

    அல்புமின் (Albumin): 

    உடலின் திரவச் சமநிலையைப் பராமரிக்க உதவும் புரதங்கள் இரத்தத்தில் முழுவதுமாகப் பரவுகின்றன. அல்புமின் என்பது கல்லீரல் உருவாக்கும் ஒரு வகை புரதமாகும். இது உங்கள் இரத்தத்தில் மிகுதியாக உள்ள புரதங்களில் ஒன்றாகும். இரத்த ஊனீர் அல்புமின் சோதனை (Blood serum Albumin test)  என்பது  இரத்தத்தில் உள்ள அல்புமினின் அளவை அளவிடும் எளிய இரத்தப் பரிசோதனை ஆகும். அறுவை சிகிச்சை, தீக்காயம் அல்லது திறந்த காயம் காரணமாக குறைந்த ஆல்புமின் அளவை இரத்தத்தில் கொண்டிருப்பதற்கான வாய்ப்புள்ளது.. ஆனால்  மேற் குறிப்பட்ட எதுவும் இல்லாத நிலையில் இரத்த ஊனீர் அல்புமின் அளவு அசாதாரணமான நிலையில் காணப்பட்டால் கல்லீரல் (Liver) அல்லது சிறுநீரகங்கள் (Kidneys) சரியாகச் செயல்படாத  நிலையின்  அறிகுறியாகவோ  அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதையோ  குறிக்கலாம்.

    குளோபுலின்கள் (Globulins)

    குளோபுலின்கள்  இரத்தத்தில் காணப்படும் புரதங்களின் குழுவாகும். அவை  நோயெதிர்ப்பு மண்டலத்தால் கல்லீரலில் தயாரிக்கப்படுகின்றன. கல்லீரல் செயல்பாடு, இரத்த உறைதல் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் குளோபுலின்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குளோபுலின்களில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஆல்பா 1, ஆல்பா 2, பீட்டா மற்றும் காமா என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு வகையான குளோபுலின்கள் இருப்பதைப் போலவே, பல்வேறு வகையான குளோபுலின் சோதனைகளும் உள்ளன.

    1. G) ஏமக்குறைவு நோய்கான சோதனை (AIDS – HIV)

    எச்.ஐ.வி அல்லது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் (HIV – Human immunodeficiency virus) எனப்படுவது ஏமக் குறைவு நோயை உருவாக்கும் தீ நுண்மம் ஆகும். எச்.ஐ.வி சோதனையில்  நேர் மறையான முடிவு கிடைத்தால், நோயாளி  எய்ட்ஸ் நோயை உருவாக்கும் தீ நுண்மக்கிருமியால் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளார் என்று பொருள்.

    1. H) ஈரலழற்சி பி தீ நுண்மம் (HBsAg)

    HBsAg சோதனையில் நேர் மறையான முடிவு கிடைக்கப் பெற்றால், நோயாளி ஹெபடைடிஸ் பி தீ நுண்மக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே ஹெபடைடிஸ் பி  நுண்மத்தை அவர் இரத்தத்தின் மூலம் மற்றவர்களுக்கும் பரப்பக் கூடும்.

    1. H) இரத்த உறைதல் காலம் (Blood clotting time), புரோத்திராம்பின் காலம் (Prothrombin time) , இரத்தப் போக்கு நேரம் (Bleeding time)

    புரோத்ராம்பின் நேரம் (Prothrombin time – PT) என்பது உங்கள் இரத்தத்தின் திரவ பகுதியான பிளாஸ்மா (Plasma) உறைவதற்கு எடுக்கும் நேரத்தை அளவிடும் இரத்தப் பரிசோதனை ஆகும்.

    1. I) முழு இரத்தப் பரிசோதனை(Complete Blood Count)

    ஒரு முழுமையான இரத்த எண்ணிக்கைச் சோதனை (சிபிசி) என்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும் இரத்த சோகை, தொற்று மற்றும் ரத்த புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான கோளாறுகளைக் கண்டறியவும் பயன்படுத்தப்படும் இரத்த பரிசோதனையாகும். ஒரு முழுமையான இரத்த எண்ணிக்கை சோதனை  இரத்தத்தின் பல கூறுகளையும் அம்சங்களையும் அளவிடுகிறது, அவற்றுள்:

    சிவப்பு இரத்த அணுக்கள் இவை ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கின்றன

    வெள்ளை இரத்த அணுக்கள் இவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன

    ஹீமோகுளோபின், சிவப்பு இரத்த அணுக்களில் ஆக்ஸிஜனைச் சுமக்கும் புரதம்

    ஹீமாடோக்ரிட்,  இரத்தத்தில் உள்ள இரத்தக் கூறுகளின் விகிதம் அல்லது பிளாஸ்மாவுக்கும் சிவப்பு இரத்த அணுக்களும் உள்ள விகிதம்

    பிளேட்லெட்டுகள், இவை இரத்த உறைவுக்கு உதவுகிறது.

    அறுவைச் சிகிச்சைக்கு முன் ஒருமுறை மேற் கொள்ளப்படும் இந்த முழு இரத்த எண்ணிக்கைக் சோதனை அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறியும் பொருட்டு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல முறை செய்யப்படும்.

    J) தைராய்ட் சுரப்பியைத் தூண்டும் இயக்குநீர் சோதனைகள் (Thyroid stimulating Harmon tests – TSH)

    தைராய்டைத் தூண்டும் இயக்குநீர்ச் (டி.எஸ்.எச்) சோதனை இரத்தத்தில் உள்ள டி.எஸ்.எச் அளவை அளவிடுகிறது. உங்கள் மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பியால் இந்த இயக்குநீர் தயாரிக்கப்படுகிறது. தைராய்டுச் சுரப்பி வெளியிடும்  இயக்குநீர்களின் அளவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு இந்த இயக்குநீருக்கு உண்டு.

    தைராய்டுச் சுரப்பி கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சிறிய, பட்டாம்பூச்சி வடிவச் சுரப்பி ஆகும். இச் சுரப்பி மூன்று முக்கியமான இயக்குநீர்களை சுரக்கிறது. அவை

    (1) ட்ரியோடோதைரோனைன் – டி3 (triiodothyronine  – T3)

    (2) தைராக்ஸின் – டி4 (thyroxine – T4)

    (3) கால்சிட்டோனின் (calcitonin)

    இந்த மூன்று இயக்குநீர்களையும் வெளியிடுவதன் வாயிலாக வளர்சிதை மாற்றம் (metabolism) மற்றும் வளர்ச்சி (growth)  உள்ளிட்ட பல்வேறு உடற் செயல்பாடுகளை தைராய்டுச் சுரப்பி கட்டுப்படுத்துகிறது.

    H) நுரையீரல் செயல்பாட்டுச் சோதனை (Pulmonary function test – PFT)

    படம் : நுரையீரல் செயல்பாட்டுச் சோதனைக் கருவி

    நுரையீரல் செயல்பாட்டுச் சோதனைகள் PFT (பி.எஃப்.டி) நுரையீரல் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் காட்டும் உடலின் தோலை ஊடுருவித் துளையிடவோ (pierce), கீறலிடவோ (incision) அவசிமற்ற சோதனைகள் (non invasive test). சோதனைகள் நுரையீரல் அளவு, திறன், ஓட்ட விகிதங்கள் மற்றும் வாயு பரிமாற்றம் ஆகியவற்றை அளவிடுகின்றன. அறுவைசிகிச்சைக்கு முன்னர் நுரையீரலின் செயல்பாட்டை சரிபார்க்க பி.எஃப்.டி (PFT) பயன்படுத்தப்படலாம்.  நுரையீரல், இதய பிரச்சினைகள் உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள் அல்லது பிற சுகாதாரப் பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகளுக்கான செய்முறைகளுக்களுக்காக (Procedures)  பி.எஃப்.டி (PFT) பயன்படுத்தப்படலாம். PFT களின் மற்றொரு பயன்பாடு ஆஸ்துமா(asthma), எம்பிஸிமா (emphysema) மற்றும் பிற நாள்பட்ட நுரையீரல் பிரச்சினைகளுக்காகத் தரப்படும் சிகிச்சையை  மதிப்பிடுவதற்கும் (assessment of treatment) பி.எஃப்.டி(PFT) சோதனை பயன்படுத்தப்படுகிறது.

    கடைசியாக மருத்துவர் நோயாளியின் கால்களைப் பரிசோதிப்பார். கீழ் இடது காலில் இருந்து மேலோட்டமான சிரை இரத்தக் குழாயை (superficial vein) எடுத்து அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதால் அந்த இரத்தக் குழாய் வீங்கிச் சுருண்ட சிரைப் புடைப்பு (varicose vein) இன்றி நல்ல நிலையில் உள்ளதா என்று  தெரிந்துகொள்வார்.

    எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறும் நாள் காலையில் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு,

    சோடியம்(சீரம்), யூரியா (சீரம்/ பிளாஸ்மா), கிரியாட்டினின் (சீரம்/பிளாஸ்மா), பொட்டாசியம் (சீரம்/பிளாஸ்மா)

    மொத்த  லூக்கோசைட்ஸ் எண்ணிக்கைக் சோதனையில்

    வெள்ளைளை அணுக்களின் எண்ணிக்கை (WBC count)

    வகைவாரி லூக்கோசையிட்ஸ் எண்ணிக்கையில்

    நியூட்ரோஃபில்ஸ் எண்ணிக்கை

    ஈஸினோஃபில்ஸ் எண்ணிக்கை

    லிம்ஃபோசைட்ஸ்கள் எண்ணிக்கை

    மோனோசைட்ஸ்கள் எண்ணிக்கை ஆகியன காணப்பட்டன.

    தொடரும்…

    Share
  • தொடக்கமும் முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெரு வெடிப்பின்றி விரிந்து செல்கிறது – 2

    தொடக்கமும் முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெரு வெடிப்பின்றி விரிந்து செல்கிறது – 2

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear), கனடா

    பெரு வெடிப்பில் பிரபஞ்சம்
    பிறக்க வில்லை!
    ஆதி அந்த மில்லா அகிலம் என்று
    ஓதி வருகிறார் இன்று!
    கர்ப்ப மில்லை
    கரு ஒன்றில்லாமல்
    உருவாகுமா பிரபஞ்சம்
    வெறுஞ் சூனியத்தி லிருந்து?
    புள்ளித் திணிவு
    திடீரென வெடித்தது புனைவு நியதி!
    கருவை உருவாக்க
    உந்து சக்தி எப்படித் தோன்றியது?
    உள் வெடிப்பு தூண்டியதா
    புற வெடிப்பை?
    தூண்டு விசையின்றி துவங்குமா
    பெரு வெடிப்பு?
    பேரளவுத் திணிவு நிறை
    பிளந்த தெப்படி?
    கால வெளிக்கு வித்தாய்
    மூலச் சேமிப்பு
    குவாண்டம் ஈர்ப்பில்
    எங்கோ ஓர்
    சூனியத்தில் நேர்ந்ததா?
    பெரு வெடிப்பின்றி ஆதியில்
    பிரம்மா படைத்தாரா
    பிரபஞ்சத்தை?

    Image result for steady state universe

    Steady State Universe

    ஓர் அப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஓர் பிரபஞ்சம் உண்டாக்கப்படவேண்டும்.

    அகிலவியல் விஞ்ஞானி கார்ல் சேகன்.

    பிரபஞ்சத்தை மாபெரும் மகத்தான ஒரு நூலகமாக உருவகித்துப் பார்த்துக் கருத்துரை கூறியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  அந்த நூலகத்தின் கோடானு கோடி நூல்களை எழுதியது யார் ?  எப்படி அது எழுதி வைத்துள்ளது? ஏன் எழுதி இருக்கிறது ?  எப்போது எழுதியவை அந்த நூல்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கிறார் ஐன்ஸ்டைன் !  இருபதாம் நூற்றாண்டின் சவால் அப்பிரபஞ்ச மர்மத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் என்ற மன உறுதியே.

    Image result for steady state universe

    Steady State theory

    In cosmology, the Steady State theory is an alternative to the Big Bang model of the evolution of our universe. In the steady-state theory, the density of matter in the expanding universe remains unchanged due to a continuous creation of matter, thus adhering to the perfect cosmological principle, a principle that asserts that the observable universe is basically the same at any time as well as at any place.

    முன்னுரை: 

    பிரம்மாண்டமான, மகத்தான, மர்மமான, பெரும் புதிரான நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? எப்படித் துவங்கியது ? அது  எத்தனை பெரியது?  பிரபஞ்சத் தோற்றத்துக்கு முன்பு எதுவும் இருந்ததா? எப்போது தோன்றியது பிரபஞ்சம்? எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது? காலம் எப்போது ஆரம்பித்தது? காலக் கடிகாரத்தின் வயதென்ன? சூரியனின் வயதென்ன? பூமியின் வயதென்ன? நிலவு எப்போது, எப்படித் தோன்றியது? கோடான கோடி விண்மீன்கள் கொண்ட காலக்ஸி என்னும் ஒளிமந்தைகள் எப்படி உருவாயின? நமது சூரிய மண்டலத்தின் கோள்கள் ஒன்பதா அல்லது பத்தா?

    சூரிய குடும்பத்திலே மிகவும் புதிரான அமைப்பு கொண்ட பூமியில் மட்டும் ஏன் பயிரினங்கள், உயிரினங்கள் தோன்றின; எப்படித் தோன்றின; எப்போது தோன்றின; உலகிலே உன்னத படைப்பான, உயர்ந்த மூளையுடைய மானிடர் பூமியில் மட்டும் தான் தோன்றினாரா? வேறு அண்டவெளிக் கோள்களிலும் உயிரினங்கள் வசிக்கின்றனவா? பூமியில் மூன்றில் இருமடங்கு பரப்பை நிரப்பிய பேரளவுக் கடல் வெள்ளம் எப்படிச் சேர்ந்தது ? உப்புக்கடலாய் எப்படி மாறியது? மர்மமான பூகாந்தம், பரிதிக் கதிர்களைக் குடைபோல் தடுத்து உயிரினம், பயிரினம் பாதுகாக்கும் வாயுச் சூழ்வெளி எவ்விதம் தோன்றி இன்னும் நீடிக்கிறது ?

    பிரபஞ்சம் எதிலிருந்து, எப்படி உருவானது என்னும் கேள்விக்கு விஞ்ஞானிகள் இன்னும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடையைக் கூற முடியவில்லை என்பது என் கருத்து. படைப்பா அல்லது பரிணாமமா?  திட்டமிட்ட படைப்பா?  அல்லது தாறுமாறாய் உண்டான சுயத் தோற்றமா?  டார்வின் எழுதிய பரிணாமக் கோட்பாடு உயிரினத் தோற்றத்தையோ அதன் விருத்தியையோ, மாற்றத்தையோ ஆரம்பம் முதல் முழுமையாக விளக்கவில்லை.  டார்வின் விஞ்ஞானம் உயிர் என்பது என்ன வென்று எங்கும் கூற வில்லை. உயிரற்ற வெற்றுக் கூடுகளைப் பற்றியும் அவற்றின் வளர்ச்சி, விருத்தியைப் பற்றியும்  அவரது பரிணாமம்  சிறப்பாக விளக்குகிறது.

    பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் திட்டமிட்டுப் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞான மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியிருப்பதும் ஓர் ஊகிப்பே! முதலில் அக்கூற்று ஒரு விஞ்ஞான ஆய்வு விளக்கம் இல்லை; முடிவு மில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது.

    Image result for steady state universe

    500 பேரைச் சுமந்து கொண்டு வானில் பறக்கும் நவீன 707 ஜம்போ ஜெட் விமானம் தானாய் உருவானது என்று கூறினால் யார் இப்போது நம்புவார் ?  வெவ்வேறான  தோற்றம், பண்புடைய ஆறு பில்லியன் மக்களும், கோடான கோடிப் புள்ளினம், பூவினம், பயிரினம், ஊர்வன, நீர்வள மீனினம் வாழும், சிக்கலான இந்த பூமி, 4.5 பில்லியன் ஆண்டுகளாய்த் தவறாது, மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில், ஒரே சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருவது தானாகத் தோன்றியது என்று ஒருவர் கூறினால் இப்போது யார் நம்புவார் ?  பிரபஞ்சம் ஏன் தோன்றியது, ஆறறிவு படைத்த மனிதர் ஏன் பிறந்தார் என்னும் வினாக்களுக்கு விஞ்ஞானம் பதில் கூறு முடிய வில்லை.

    Image result for steady state universe

    காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக  விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது, தானாக அழிவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

    Before the Big Bang -3

    புதிய கோட்பாடு சொல்வது என்ன வென்றால்,  பிரபஞ்சத்தின் வயது வரையறை இல்லாதது. குவாண்டம் யந்திரவியல் நியதி, ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி ஆகிய இரண்டும் கருமைப் பிண்டத்தைப் [Dark Matter] பற்றி விளக்க முடியவில்லை.

    சௌரியா தாஸ் [விஞ்ஞானி, அல்பெர்டா லெத்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், கனடா]

    நமது பிரபஞ்சம் பெரு வெடிப்பில் புள்ளித் திணிவிலிருந்து தோன்றத் துவங்கியது என்று நாம் குறிப்பிட நமக்கு எந்த உரிமையும் இல்லை.

    ராபர்ட் பிரான்டன்பெர்கர் [அகிலவியல்வாதி மெக்கில் பல்கலைக் கழகம், மான்றியால், கனடா] 

    No big bang -1

    பிரபஞ்சத் தோற்றக் கோட்பாட்டில் மாறுபட்ட கருத்துகள்.

    விஞ்ஞானிகள் பிரபஞ்சம் எப்படித் துவங்கியது, எப்போது தோன்றியது, எத்துனைக் காலம் பழமையானது, எம்முறை மூலம் உருவானது என்னும் வினாக்களுக்கு யாவரும் உடன்படும் கருத்தை இதுவரை முடிவாகக் கூற முடியவில்லை !   ஓரடர்த்தியான புள்ளியிலிருந்து உட்புறம் உப்பி, பெரு வெடிப்பில் பிரபஞ்சம் விரிந்து வருகிறது என்னும் கோட்பாடு இப்போது பலரால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.  ஆதி, அந்தமில்லா பிரபஞ்சம் என்னும் வேதாந்தக் கருத்தே விஞ்ஞானிகளிடம் இப்போது பரவி வருகிறது.  துவக்க மில்லாப் பிரபஞ்சம், பெரு வெடிப்பில் விரியா பிரபஞ்சம் என்னும் புதிய கோட்பாடுகளைக் கூறி வருபவர் இருவர்.  ஒருவர் பெயர் : சௌரியா தாஸ் [Saurya Das].  இரண்டாம் விஞ்ஞானியின் பெயர் : ராபர்ட் பிரான்டன்பெர்கர் [Robert Brandenberger]  முதல்வர் அல்பெர்ட்டா லெத்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் [University of Lethbridge in Alberta, Canada] சேர்ந்தவர். இரண்டாமவர் : மான்றியால் மெக்கில் பல்கலைக் கழகத்தைச்  [McGill University Montreal, Canada] சேர்ந்தவர்.  முதல் விஞ்ஞானி : கோட்பாட்டு பௌதிகவாதி  [Theoretical Physicist], இரண்டாம் விஞ்ஞானி கோட்பாட்டு அகிலவியல்வாதி.   [Theoretical Cosmetologist].  இருவரும் பிரபஞ்சம் ஒருகாலத்தில் மிகச் சிறிதாய், வெகுச் சூடாக இருந்திருக்கும் என்றும், வரையறையின்றி பழங் காலத்துத் தோற்றமாய் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

    2015 பிப்ரவரியில் புரிந்த புதிய ஆராய்ச்சிகள் மூலம் அவ்விரு விஞ்ஞானிகள் வெளியிடுவது இதுதான் : பெரு வெடிப்பு நியதியில் கூறப்படும் மிகச்சிறு திணிவு மிக்க பிண்டமே முதலில் வெடித்து துவக்கம் ஆரம்பமானது என்னும் கருத்து இப்போது மறுக்கப் படுகிறது !  குறைபாடு உள்ள ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதி மூலம் வரும் பெரு வெடிப்பு நியதி இப்போது ஏற்றுக் கொள்ளப் படவில்லை !

    fig-1-before-the-big-bang
    “நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்றவில்லை !  அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவு களால் உள் வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.”

    மார்டின் போஜோவால்டு,  (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007)

    “எனது வெளியீட்டுத் தாள் ஓர் புதிய கணித மாடலை அறிமுகப் படுத்துகிறது.  துகளியல் நிலையில் (Quantum State) “பெரும் பாய்ச்சல்” மூலம் (Big Bounce) பயணம் செய்யும் பண்பாடுகளின் புதிய விளக்கங்களை அதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம், அந்தக் கோட்பாடு ஆரம்ப காலத்துப் பெரு வெடிப்பில் உண்டானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நமது பிரபஞ்சத்தின் மரபுக் கருத்தை நீக்கி அமர்ந்து கொள்ளும்.  ஆயினும் அந்தப் பண்பாடுகள் சிலவற்றில் உறுதி யில்லாமை எப்போதும் இருக்கும்.  காரணம் எனது கணிப்புகளில் பெரும் பாய்ச்சல் பயணம் நிகழும் போது எல்லை மீறிய துகளியல் விசைகள் (Extreme Quantum Forces) விளைவிக்கும் ஒருவித “அகிலவியல் மறதி” (Cosmic Forgetfulness) எழுகிறது !

    மார்டின் போஜோவால்டு

    No big bang -3

    “ஸ்டீஃபன் ஹாக்கிங், நீல் டுராக் (Stephen Hawking & Neil Turok) இருவரும் வானியல் விஞ்ஞான நோக்குகளில் கிடைத்த எண்ணிக்கையை விட 20 மடங்கு சிறிய பிண்டத் திணிவைக் (Matter Density) கொண்ட ஒரு பிரபஞ்சத்தை ஊகித்து முன்னறிவிக்கிறார்கள்.  ஹாக்கிங் தன் போக்கில் அடிப்படைக் கணித மூலமாக அணுகி அதில் மிகையாக நம்பிக்கை வைக்கிறார்.  முதலில் அது சரியாகத் தோன்றவில்லை எனக்கு. . . . ஆனால் ஹாக்கிங் கூர்மையான சிந்தனை உள்ளவர்.  பன்முறை அவர் செய்த ஆய்வுகளில் விந்தையான முடிவுகளைக் கண்டிருக்கிறார்.  முதலில் அவை தவறாகத் தோன்றின எனக்கு !  பல தடவைகள் அவரது முடிவுகளே செம்மையானதாய்ப் பின்னால் நான் அறிந்து கொண்டேன்.

    ஆன்ரி லின்டே (Andrei Linde Pysics Professor, Stanford University)

    “பிரபஞ்சத்தில் நாம் ஆழ்ந்து புரிந்து கொள்ள இயலாதது என்பது நாம் அதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பதே.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    No Beginning No Ed

    fig-1b-hubble-telescopes-ultra-deep-view

    “பெரு வெடிப்பு நியதியில் உள்ள இடைவெளித் துளைகளை அகிலத்தின் உப்புதல் கொள்கை (Cosmic Inflation Concept) அடைத்து நமது பிரபஞ்சத்தைப் பலவற்றுள் ஒன்றாக மாற்றி விட்டது.  மேலும் விஞ்ஞானிகளுக்கு உப்புதல் கொள்கை பல்வேறு பிரபஞ்சங்களைப் (Multiverse) பற்றி உரையாட மன உறுதி தந்துள்ளது.  அதாவது பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்கள் (A Universe of the Universes) இருப்பது”

    ஆடம் ஃபிராங்க் (Astronomy Magazine Editor, Physicist)

    “அனைத்து அகிலவியல் உப்புதல் நியதிகளும் (Cosmic Inflation Theories) விண்வெளியின் ஒரு புள்ளியை இழுத்துக் கொண்டு அதைச் சுமார் 10^50 மடங்குப் பேரளவில் ஊதி விடுகிறது (Blows up By a Factor of p {margin:0;line-height: 1.5;unicode-bidi: embed;} body { line-height: 1.5;unicode-bidi: embed;}1050).”

    மாரியோ லிவியோ (Mario Livio)

    “பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகள் உஷ்ணத்தில் செம்மையாகச் சீர்மை நிலையடைந்து (Well Synchronized in Temperature), ஒப்புக் கொள்ளப்பட்ட பெரு வெடிப்பு மாடலை விளக்குகிறது.”

    ஷான் கார்ரல் (Sean Carroll)

    fig-1c-timeline-of-the-universe

    “இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்க எந்த விதமான விருப்பத் தேர்வு (Choice) கடவுளுக்கு இருந்தது என்று அறிய விரும்புகிறேன்.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

    விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை!

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

    Big Bang Cosmology

    ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி

    பிரபஞ்சம் யுக யுகங்களாக நீடித்து வந்திருப்பதை நாமெல்லாம் அறிவோம்.  ஆனால் அந்த மட்டமான அறிவோடு நமது ஆர்வ வேட்கை நின்று விடுவதில்லை.  அதன் தோற்றத்தைப் பற்றியும், தோற்ற மாற்றத்தைப் பற்றியும் மாற்றத்தின் பண்பாடுகள் பற்றியும் நமக்குப் பல்வேறு வினாக்கள் தொடர்ந்து எழுகின்றன.  நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?  நமது முதிர்ந்த பிரபஞ்சத்துக்கு எத்தனை வயதாகிறது?  எப்படி அதில் பிண்டமும் சக்தியும் (Matter & Energy) உண்டாயின?  அவையெல்லாம் எளிய வினாக்களாகத் தோன்றினாலும் அவற்றின் விடைகள் மிகவும் சிக்கலானவை !  உலகப் பெரும் விஞ்ஞானிகள் பலரின் எதிர்ப்புக்கும் தர்க்கத்துக்கும் உட்பட்டவை!  நிகழ்காலம் கடந்த காலத்தின் நிழலாக இருப்பதால் நம் கண்முன் காண்பதிலிருந்து நாம் காணாத முந்தையக் காட்சிகளை ஓரளவு அறிய ஏதுவாகிறது !  ஆனால் அவற்றில் பல விஞ்ஞானிகளின் கருத்துக்கள், கோட்பாடுகள் உறுதியற்ற ஊகிப்புகள்தான் (Speculations).

    fig-1a-cosmic-history

    பிரபஞ்சம் எப்படிப் படைக்கப் பட்டது ?  பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது (Infinite) என்ற கருத்துக்கள் ஒரு காலத்தில் நிலவி வந்தன !  மேதைகளும், மதமும் வலியுறுத்திய பூமி மையக் கொள்கையி லிருந்து பரிதி மையக் கொள்கைக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன !  ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் ஊகித்த “பெரு வெடிப்புக் கோட்பாடு” (Big Bang Theory) அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.  பெரு வெடிப்புக் கோட்பாடை ஏற்றுக் கொண்ட பிறகு பிரபஞ்சத்துக்குத் தோற்ற ஆரம்பம் தொடங்கி காலக் கடிகார முள் நகரத் துவங்கியது.  பிரபஞ்சம் வரையறையற்றது என்னும் கருத்து மறைந்து போனது.  பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் முடிவும் ஊகிக்கப்பட்டு அதன் தோற்ற வளர்ச்சி வரலாறுகளும் எழுதப்பட்டன !

    fig-1f-content-of-the-universe

    சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (துல்லியமாக 13.7 பில்லியன் ஆண்டுகள்) ஓர் அசுரப் பெரு வெடிப்பில் பிரபஞ்சம் தோன்றி விரிய ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிலையில் விண்வெளியில் இருந்த அனைத்துப் பிண்டமும் சக்தியும் ஒற்றைப் பிண்டமாய் அடங்கிக் கிடந்தன.  ஆனால் அந்த பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு என்ன இருந்தது என்பது சுத்த யூகிப்பாய் அமைந்து முற்றிலும் அறியப்படாமலே தொங்கிக் கொண்டிருந்தது !  அந்தப் பெரு வெடிப்பு மரபு வெடிகுண்டு போல் வெடிக்காது உட்பிண்டங்கள் உருமாறி ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டும் ஒளிவீசி நகர்ந்து கொண்டும் பலூனைப் போல் விரிந்து பெருகி வருகிறது பிரபஞ்சம்! அதாவது பெரு வெடிப்பு பிரபஞ்சத் தோற்றத்துக்கு வித்திட்டது என்பது நிகழ்கால முடிவு !

    வேறோர் பிரபஞ்சத்துக்கு ஏற்பட்ட சீர்குலைவுப் பயணத்தின் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) தற்போது நாம் வாழும் பிரபஞ்சமாய்ப் பிறந்திருப்பதாகத் தெரிகிறது என்னும் புதிய நோக்குக் கோட்பாட்டைப் பென்சிவேனியா மாநிலப் பல்கலைக் கழகத்தின் துணைப் பேராசிரியர் மார்டின் போஜோவால்டு கணினி மாடல் ஒன்றைப் படைத்துக் கண்டுபிடித்திருக்கிறார்.

    fig-5-cobe-cosmic-background-explorer

    பிரபஞ்சத்தின் அரங்குகளை ஆராயும் கோப் விண்ணுளவி

    நாசா சமீபத்தில் அனுப்பிய “கோப் விண்ணளவி” (COBE Cosmic Background Explorer) பிரபஞ்சத்தின் வெளிப்புற நீட்சிகளில் உள்ள “அகிலவியல் நுண்ணலைகளை” (Cosmic Microwaves) உணர்ந்தறியச் சென்றது.  அந்த நுண்ணலைகள் பிரபஞ்சத் தோற்றத்தின் ஆரம்பக் கட்டங்களில் இருந்த ஒருமைப்பாடுடன் (Homogenity) மகத்தான முறையில் சமநிலையில் பரவி இருந்ததைக் கண்டுள்ளது.  மேலும் பிரபஞ்சம் வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்து தணிவு நிலை பெற்றுத் தொடர்ந்து விரிவாகி வருவதைக் கண்டுபிடித்திருக்கிறது. விரிவடையும் போது உண்டாகும் உஷ்ண மாறுபாடுகளையும் கண்டுள்ளது.  அந்த உஷ்ணத் திரிபுகள் ஏற்ற இறக்கங்கள் பிரபஞ்சப் பெரு வெடிப்பு ஆரம்பக்கால நிலைகளை அறிய உதவுகின்றன !

    நாசா கோடார்டு விண்வெளிப் பயண மையம் (NASA Goddard Space Fight Center) தயாரித்த துணைக்கோள்தான் கோப் விண்ணுளவி.  பூர்வக் காலத் தோற்றப் பிரபஞ்சத்தின் பரவிய உட்சிவப்பு & நுண்ணலைக் கதிர்வீச்சை (Diffuse Infrared & Microwave Radiation) அளந்து உளவிடவே அது பூமியைச் சுற்றி விண்வெளிக்குப் பயணம் செய்ய 1989 நவம்பர் 18 ஆம் தேதி அனுப்பப்பட்டது.  அதில் முக்கியமாக மூன்று கருவிகள் இருந்தன.

    1.  DIRBE – Diffuse Infrared Background Experiment : அகிலவியல் உட்சிவப்பு பின்புலக்
    கதிர்வீச்சை அளக்கும் கருவி.

    2.  DMR – Differential Microwave Radiometer : அகிலவியல் நுண்ணலைக் கதிர்வீச்சு மாறுபாடுகளை அளக்கும் கருவி.

    3.  FIRAS – Far Infrared Absolute Spectro-Photometer : நெடுந்தூர உட்சிவப்புத் தனித்துவ ஒளிப்பட்டை ஒளி அளப்புமானி

    fig-1g-cobe-space-probe1

    பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் நேர்ந்தது என்ன?

    பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக் கழகத்தின் பௌதிகத் துணைப் பேராசியர் மார்டின் போஜோவால்டு ஒரு புதிய கணித மாடலைப் படைத்து “முடிச்சுத் துகளியல் ஈர்ப்புக் கோட்பாடு” (Loop Quantum Gravity Theory) ஒன்றில் ஆழ்ந்து சிந்தனை செய்தார். அது ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியையும் துகளியல் யந்திரவியலையும் (Relativity Theory & Quantum Mechanics) இணைத்தது.  அந்தக் கணிதச் சமன்பாட்டில் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் (Time T=0) என்று நிரப்பினால் பிரபஞ்சத்தின் தோற்றக் கொள்ளளவு பூஜியமில்லை என்பது தெரிய வந்தது. மேலும் பிரபஞ்ச அடர்த்தி முடிவில்லாமை அல்ல (Density of the Universe is NOT Infinite) என்றும் தெளிவானது.  அதாவது அவரது புதிய கணித மாடல் பிரபஞ்சத்தின் தோற்ற கால நிலையை ஆராய உதவியது.

    fig-4-dark-matter-the-elementary-particle

    முன்பே இருந்த முடிச்சுத் துகளியல் கோட்பாட்டைப் புதிய கணித மொழியில் போஜோவால்டு எளிதாக்கினார். ஆனால் அவர் பயன்படுத்திய கணிதச் சமன்பாட்டு விதத்தில் ஒரு மகத்தான நிகழ்ச்சி பிரமிப்பை உண்டாக்கியது.  அதாவது தற்போதுள்ள நமது பிரபஞ்சத்துக்கும் முன்பாக வேறொரு பிரபஞ்சம் இருந்திருக்கிறது என்பதைக் காட்டி யுள்ளது. இது சற்று சிக்கலான சிந்தனைதான்.  ஏனெனில் பிரபஞ்சப் பெரு வெடிப்பில் காலவெளி அந்தக் கணத்தில் தோன்றின என்பது அறியப் படுகிறது.  போஜோவால்டு கணிப்பு மெய்யானால் அது இதற்கு முந்தி இருந்த ஒரு பிரபஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறது.  அது எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டுள்ளது.  ஆனால் அது சிறுத்துக் குறுகிப் போய் பேரசுரத் திணிவில், பேரளவு உஷ்ணத்தில் மிகக் மிகக் குள்ளி காலவெளிக் கடுகாய்க் (Ultra-dense, Ultra-Hot & Ultra-Small Ball of Space Time) கிடக்கிறது!  ஏதோ ஓர் கட்டத்தில் எப்படியோ அந்த உஷ்ணத் திணிவுக் கடுகைத் “துகளியல் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) இழுத்துச் சுருக்கி வைத்துக் கொண்டது.

    fig-3-in-search-of-gods-particle

    இதை வேறு விதக் கண்ணோட்டத்தில் பிரபஞ்ச விளைவுகளைப் படிப்படியாகப் பின்னோக்கிப் பார்த்துக் கால மணி பூஜியத்துக்கு (Time T=0) நெருங்கினால் போஜோவால்டு கணித்த முந்தைய பிரபஞ்சத்தின் காணாத தோற்றம் தெரிகிறது.  போஜோவால்டு அந்த பூஜிய காலமணி நிகழ்ச்சியை “பெரும் பாய்ச்சல்” (Big Bounce) என்று குறிப்பிடுகிறார்.  அதாவது முந்தைய பிரபஞ்சம் அந்தப் பூஜிய கால மணியில் சீர்குலைந்து மறுபடியும் ஒரு புது முகப் பிரபஞ்சமாக, நமது பிரபஞ்சமாகக் குதித்தது என்று போஜோவால்டு கூறுகிறார்.  அவரது கணிசச் சமன்பாடுகளில் பூர்வீகப் பிரபஞ்சத்தின் வடிவம் எத்தனை பெரியது என்பதைக் கணக்கிட முடியவில்லை.  ஆகவே போஜோவால்டு கோட்பாட்டில் அத்தகைய “உறுதியில்லா ஊகிப்புகள்” (Uncertain Speculations) இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    fig-6-evolution-by-science-bible

    குவாண்டம் ஈர்ப்பு நியதி (துகளியல் ஈர்ப்பு நியதி) என்ன கூறுகிறது?

    கால-வெளிப் பிணைப்பு ஒற்றைப் பரிமாணக் குவாண்ட நூலிழைகளால் பின்னிய (One Dimensional Quantum Threads) ஓர் “அணு வடிவமைப்பைக்” (Atomic Geometry) கொண்டுள்ளதாகக் “குவாண்டம் ஈர்ப்பு நியதி” கூறுகிறது.  கால மணி பூஜியத்தில் பூர்வீகப் பிரபஞ்சம் முடிவில்லாமையில் புகுந்திடாது நமது விரியும் பிரபஞ்சமாகத் தாவிப் பிறந்தது.  குவாண்டம் ஈர்ப்பு நியதி அந்தப் “பெரும் பாய்ச்சலுக்கு” (Big Bounce) முன்பு சிறுத்துப் போன கால-வெளி வடிவமைப்புப் (Space-Time Geometry) பிரபஞ்சத்தைக் காட்டுகிறது.

    போஜோவால்டு மேலும் ஒரு புதிய முடிவைக் கண்டறிந்தார்.  பூர்வீகக் குவாண்ட ஈர்ப்புப் பிரபஞ்சம் தாவிச் செல்லும் பயணத்தின் போது அமைப்பு அங்கங்களில் குறைந்தளவு ஒன்று (One of the Parameters) தப்பிப் பிழைக்காமல் போகும் !  அதாவது அடுத்தடுத்துத் தாவிப் பிறக்கும் சந்ததிப் பிரபஞ்சங்கள் முன்னதைப் போல் பின்னது முழுமை அடைந்திருக்காது என்பதே அவர் மேலும் அறிந்து கொண்டது.  எப்போதும் ஒரே மாதிரி வாரிசுப் பிறப்புப் பிரபஞ்சம் தோன்றாமல் தடுக்கப்படுவதற்குக் காரணம் “அகிலவியல் நினைவின்மையே” (Cosmic Forgetfulness) என்று போஜோவால்டு கூறுகிறார்.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Big Bang Happen ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40711151&format=html[பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ?]
    20 (a) COBE Space Probe to Glimpse infancy of the Universe – News from Princeton University (June 18, 2001)
    21. Dark Matter Mystery May Call for Revision of Laws of Physics (August 7, 2007)
    22. PhysOrg.com : Probing Question : What Happened Before the Big Bang ?
    23 Sceince Daily : What Happened Before the Big Bang ? (July 3, 2007)
    24 The Big Bang By : Chris LaRocco & Blair Rothstein
    25 PhysOrg.com – What Happened Before the Big Bang ? (July 1, 2007)
    26. Astronomy Magazine – What Happened Before the Big Bang ? By : Philips Plait (July 1, 2007)
    27 What Happened Before the Big Bang ? By : Paul Davis
    28 (1) How Did the Universe Begin ? (2) It Started with a Bang ? (3) Creating a Universe Creation Theory (4) Hartle-Hawking Universe Model – No End of Universe Creation Thories (5) Turok’s Inflationary Theory Work – Reforming the Inflationary Theory.  Website University of Victoria, B.C. Canada.
    29. Scientific American – Follow the Bouncing Universe By : Martin Bojowald [Oct 2008]
    30. Astronomy Magazine – Cosmos Before There Was Light – Seeing the Dawn of Time By : Adam Frank (January 2007)

    30(a) http://www.scientificamerican.com/article/rainbow-gravity-universe-beginning/ [December  9, 2013]
    31.  http://phys.org/news/2015-02-big-quantum-equation-universe.html  [February 9, 2015]
    32.  http://gadgets.ndtv.com/science/news/big-bang-may-never-happened-universe-has-no-beginning-or-end-study-659845  [February 12, 2015]
    33.  http://www.techtimes.com/articles/32659/20150214/big-bang-didnt-happen-new-theory-suggests-universe-has-no-beginning-no-end.htm  [February 14, 2015
    34.   http://www.hawking.org.uk/the-beginning-of-time.html
    35. http://www.liveleak.com/view?i=7e2_1423613281  [February 10, 2015]
    36. http://www.spacedaily.com/reports/What_Big_Bang_Universe_May_Have_Had_No_Beginning_at_All_999.html  [March 2, 2015]
    37. http://www.universe-galaxies-stars.com/steady_state.html
    38. https://www.thoughtco.com/steady-state-theory-2699310  [July 10, 2017]
    39.  https://en.wikipedia.org/wiki/Steady_State_theory  [November 24, 2017]
    40. http://www.bbc.co.uk/science/space/universe/questions_and_ideas/steady_state_theory

    Share
  • குறளின் கதிர்களாய்…(343)

    குறளின் கதிர்களாய்…(343)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(343)

    ஓல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
    செல்வார்க்குச் செல்லாத தில்.

    – திருக்குறள் – 472 (வலியறிதல்)

    புதுக் கவிதையில்...

    தம்மால்
    செய்ய இயலும்
    செயலறிந்து,
    அதற்கு
    அறியவேண்டிய வலிமைகளறிந்து,
    மனம் மொழி மெய்களை
    அதில் எப்போதும் வைத்துப்
    பகைமேல் செல்லும்
    மன்னர்க்கு
    முடியாதது எதுவுமில்லை…!

    குறும்பாவில்...

    இயலும் செயலும் அதற்கான வலிமைகளுமறிந்து
    மனமொழிமெய் அதிலே வைத்துப் பகைமேல்
    செல்வோர்க்கு முடியாத தில்லையே…!

    மரபுக் கவிதையில்...

    செய்ய இயன்ற செயலறிந்து
    செயலதன் வலிமைகள் தானறிந்து
    மெய்யுடன் மனமொழி யெப்போதும்
    மிகையா யதிலே வைத்தேதான்
    உய்யும் வகையில் ஒன்றாக
    உணர்ந்தே யயல்பகை முடித்திடக்கோன்
    செய்யும் பணிகள் அனைத்திலுமே
    செயல்பட முடியா தெதுமிலையே…!

    லிமரைக்கூ..

    அறிந்தே செயலின் நிலையே,
    அதன் வலிமைகளறிந்து கவனமுடன் பகைமேற்செலும்
    மன்னனால் முடியாத திலையே…!

    கிராமிய பாணியில்...

    செயல்படு செயல்படு
    செயலறிஞ்சி செயல்படு
    வலுவறிஞ்சி செயல்படு..

    தம்மால முடியுமுங்கிற
    செயல அறிஞ்சி,
    அதுக்கான வலிமகள அறிஞ்சி
    அதுமேல முழு ஈடுபாட்டோட
    பகமுடிக்கப்
    போற ராசாவால
    முடியாதது எதுவுமில்லியே..

    அதால
    செயல்படு செயல்படு
    செயலறிஞ்சி செயல்படு
    வலுவறிஞ்சி செயல்படு…!

    Share
  • நினைத்தபோது நீ வரவேண்டும் – கிருஷ்ணகுமார் குரலில்

    நினைத்தபோது நீ வரவேண்டும் – கிருஷ்ணகுமார் குரலில்

    பங்குனி உத்திரச் சிறப்பு வெளியீடு.

    நினைத்தபோது நீ வரவேண்டும்
    நீல எழில்மயில் மேலமர் வேலா

    என்ற பாடல், கிருஷ்ணகுமார் குரலில் இதோ. கேட்டு மகிழுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

    என்ன கவி பாடினாலும் – கிருஷ்ணகுமார் குரலில்

    கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

    குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share