குறளின் கதிர்களாய்…(343)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(343)
ஓல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.
– திருக்குறள் – 472 (வலியறிதல்)
புதுக் கவிதையில்...
தம்மால்
செய்ய இயலும்
செயலறிந்து,
அதற்கு
அறியவேண்டிய வலிமைகளறிந்து,
மனம் மொழி மெய்களை
அதில் எப்போதும் வைத்துப்
பகைமேல் செல்லும்
மன்னர்க்கு
முடியாதது எதுவுமில்லை…!
குறும்பாவில்...
இயலும் செயலும் அதற்கான வலிமைகளுமறிந்து
மனமொழிமெய் அதிலே வைத்துப் பகைமேல்
செல்வோர்க்கு முடியாத தில்லையே…!
மரபுக் கவிதையில்...
செய்ய இயன்ற செயலறிந்து
செயலதன் வலிமைகள் தானறிந்து
மெய்யுடன் மனமொழி யெப்போதும்
மிகையா யதிலே வைத்தேதான்
உய்யும் வகையில் ஒன்றாக
உணர்ந்தே யயல்பகை முடித்திடக்கோன்
செய்யும் பணிகள் அனைத்திலுமே
செயல்பட முடியா தெதுமிலையே…!
லிமரைக்கூ..
அறிந்தே செயலின் நிலையே,
அதன் வலிமைகளறிந்து கவனமுடன் பகைமேற்செலும்
மன்னனால் முடியாத திலையே…!
கிராமிய பாணியில்...
செயல்படு செயல்படு
செயலறிஞ்சி செயல்படு
வலுவறிஞ்சி செயல்படு..
தம்மால முடியுமுங்கிற
செயல அறிஞ்சி,
அதுக்கான வலிமகள அறிஞ்சி
அதுமேல முழு ஈடுபாட்டோட
பகமுடிக்கப்
போற ராசாவால
முடியாதது எதுவுமில்லியே..
அதால
செயல்படு செயல்படு
செயலறிஞ்சி செயல்படு
வலுவறிஞ்சி செயல்படு…!