தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 8

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் (1)
முன்னுரை
தொல்காப்பியத்தில் உவமம், சங்க இலக்கியங்களில் உவமம், பிற்கால இலக்கியங்களில் உவமம் என்பன தனித்தனி ஆய்வுக்கு உட்பட்ட பொருண்மை என்பது இக்கட்டுரையாளர் கருத்து. ‘கவிதையில் உவமம்’ என்பது செய்யுளியலில் குறிப்பிடப்படாத காரணத்தால் தொல்காப்பிய உவமவியலின் உள்ளடக்கம் சாதாரண உவம ஆய்வினின்றும் வேறுபடுகிறது. தலைமக்களின் கூற்றுப் பகுதியாக இருந்த உவமக் கோட்பாடு கவிதையில் கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. அவ்விரண்டு காலக்கட்டத்திற்குப் பிறகுதான் ‘உவமம்’ என்பது கவிதையின் அழகுக் கூறுகளுள் ஒன்றாகக் கருதப்படத் தொடங்கியிருக்கிறது. காட்சிகளையும் பொருட்களையும் உவமத்தின் வாயிலாகச் சித்திரிக்கும் போக்கு பல்கிப் பெருகியதும் இக்காலத்தில்தான் எனக் கருதலாம். இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் தலைமக்களின் கூற்றுப் பகுதிகளில் இடம்பெறும் உவமங்களைப் பற்றிய சுருக்க ஆய்வு இக்கட்டுரையில் முன்னெடுக்கப்படுகிறது.
பச்சைப் பானையில் கசிந்த காதல்
அகப்பொருள் இலக்கணத்தில் தலைவன் தான் கொண்டுள்ள அன்பைத் தலைவியினிடத்து ஆண்மை தோன்ற வெளிப்படுத்துவான். தலைமகள் அவ்வாறு பெண்மை தோன்ற வெளிப்படுத்துவது மரபன்று. அதாவது ஆண்மை முற்றும் வெளிப்பட்டும் பெண்மை குறிப்பாக வெளிப்பட்டும் நிற்பதுமே தமிழ் மரபு. அவ்வாறாயின் தலைமகள் தலைவன் மீது தான்கொண்ட உள்ளத்துக் காதலை வெளிப்படுத்தும் பாங்கு எத்தகையது என்னும் ஐயத்திற்குத் தொல்காப்பியம் ஓர் உவமத்தால் விளக்கம் தருகிறது.
“தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
எண்ணுங் காலை கிழத்திக் கில்லைப்
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப”
மேற்கண்ட நூற்பாவில் ‘தலைவன் அறிந்து கொள்ளுமாறு புதுக்கலத்துப் பெய்த நீர் புறத்தே பொசிந்து காட்டுதல் போலப் புலப்படும்’ என உவமையால் புலப்படுத்துவதைக் காணலாம். ‘பிறநீர் மாக்கள்’ என்பது கைக்கிளை, பெருந்திணை மாந்தர்களை அவர்கள் அகத்திணைத் தலைமை மாந்தர்களைப் போலன்றித் தம் உள்ளத்துக் காதலை ஒருவர் அறிய மற்றொருவர் வெளிப்படக் கூறிக்கொள்வர் என்பதனால் ‘பிற நீர் மாக்கள்’ எனக் குறிக்கப்பட்டனர்.
‘பெய்ந்நீர் போலும்’ என்றே உவமம் பயின்றிருக்க உரையாசிரியர் பலரும் உவமப்பகுதியின் பொருளுணர்ந்து ‘புதுக்கலம்’ என உவமத்தின் உண்மை கண்டு அடைபுணர்த்து உரைத்திருப்பதும், இந்தப் புதுக்கலத்து உண்மையைத் திருவள்ளுவர் ‘பசுமட்கலத்துள் நீர் பெய்திரீஇயற்று’ எனப் பொருள் தழுவி வழிமொழிந்திருப்பதும் அறிந்து சுவைத்தற்குரியன.
நீரில் எழுதிய எழுத்தா? அந்தரத்தில் எழுதிய எழுத்தா?
‘செய்கின்ற நன்மையைப் பண்பறிந்து ஆற்றாதபோது அந்நன்றாற்றலுள்ளும் தவறு ஏற்பட வாய்ப்புண்டு’ என்பது வள்ளுவம். இந்த வள்ளுவம் ஔவை எழுதிய மூதுரையில்,
“நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே அல்லாத
ஈரமிலா நெஞ்சினார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்”
என்றவாறு வெளிப்படுகிறது. இந்தப்பாட்டில் யாருக்கு உதவ வேண்டும் என்பதும் யாருக்கு உதவக்கூடாது என்பதோடு அவற்றின் பின்விளைவுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. உதவி, செயப்பட்டார் சால்பின் வரைத்ததாதலின் நல்லார்க்குச் செய்த உதவி காலத்துக்கும் நிலைத்து நிற்கும் என்பதும் சால்பாகிய இரக்கமிலா அரக்கர்களுக்குச் செய்த உதவி நீரில் எழுதிய எழுத்தாக எழுதுங்காலே மறைந்துவரும் என்பதும் ஔவயார் வாக்கு. நிலையாமைக்கு ஔவை கூறிய இந்த உவமத்தின் மூலம் தொல்காப்பியத்தில் இருப்பதை அறிய முடிகிறது. ஔவை எழுதுவதற்கு நீரைத் தளமாக்குகிறார். தொல்காப்பியரோ அந்தரத்தைத் தளமாக்கி ‘அந்தரத்தில் எழுதிய எழுத்து’ என்கிறார்.
பெற்றோரைவிட்டும் சுற்றத்தைவிட்டும் தலைவன் மனை அடைந்த தலைவி, பழக்கம் காரணமாகச் சில நேர்வுகளில் பிழைசெய்தல் கூடும். தன்னுடைய பெற்றோரிடத்தும் தன்னிடத்தும் தலைவி ஒழுகும் முறையில் காணும் பிழைகள் தலைவனுடைய கருத்தில் வைக்கத்தக்கன அல்ல., அவை உடன் மறக்கத்தக்கன என அறிவுறுத்தும் நிலையில் தலைவனின் கூற்றுப் பகுதியை விளக்க வரும் தொல்காப்பியம், தலைவி செய்த தவறுகளைத் தலைவன் மறக்க வேண்டிய பாங்கினை ஓர் உவமத்தின் வழி உணர்த்துவதைக் காணமுடிகிறது.
“அந்தரத்து எழுதிய எழுத்தின் மான
வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்”
‘களவுக்காலத்து ஒழுகிய ஒழுக்கக் குறைபாட்டால் நிகழ்ந்த குற்றம் ஆகாயத்தில் எழுதிய எழுத்துப்போல் மறைந்து போகும்’ என்பது மேற்கண்ட தொல்காப்பியத்தில் கண்ட உவமத்திற்கான பொருளாம். உலக வழக்கில் ஒரு சொலவடை உண்டு. அரிசி களைகிறபோது உண்டாகின்ற சினம் சோறு கொதிக்கிற போது மாறிவிடும்’ என்பார்கள். இல்லறம் என்பது மாறிபுக்க இதயங்களின் ஒன்றிணைந்த வினையாதலின் செய்கின்ற தவறுகள் மனத்துட் பதியவே கூடாது என்பது தொல்காப்பியம். ஒருவர் செய்த தவறினை மற்றொருவர் தன் உள்ளத்து வைத்திருந்து மறப்பதற்கும் உள்ளத்துட் புகாமல் விடுவதற்குமான இடைவெளியே இல்லறத்தின் வெற்றிக்களமாகும். இந்த நுட்பம் அறிந்தே தொல்காப்பியர் ‘அந்தரத்து எழுதிய எழுத்து’ என்கிறார்.
கஞ்சி அமுதமான கதை
‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது தெரிந்த வழக்கு. உண்டியால் புரக்கப்பட்ட உயிர் இறவாது நிற்பதற்குக் காரணம் அது அமிழ்தாவதே. ‘அமிழ்து’ என்பது சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. ‘உறுதொறும் உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்’ என்பது வள்ளுவம். அமிழ்தைக் கருவியாக்கிய அது, மழலை அளாவிய கூழை அமிழ்தினும் உயர்த்திச் சொல்கிறது. ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’ என்பது திருவள்ளுவரின் ஒப்பீட்டுப் பார்வை. இதனையொத்த அமிழ்து பற்றிய கருத்துக்கள் ஆயிரம். விரித்துரைக்க இயலாது. இந்த அமிழ்தத்தைத் தன் மனைவி கையால் சமைத்த உணவோடு ஒப்பிடுகிறான் தொல்காப்பியத் தலைவன்.
“ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென
அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும்”’
என்பது அவன் கூற்று. சுவைக்க ஒன்னாதவற்றைச் சுவைக்கச் செய்தது அவள் கையறி மடமையாதலின் அவள் கைபட்டதால் அமிழ்தமானது என்பது கருத்து. இது காதல் உணர்வின் வெளிப்பாடே என்பது,
“வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங்கட்டி என்றனிர்’
என்னும் குறுந்தொகை தோழி கூற்றானும் அறிந்து கொள்ளலாம். வேம்பு இனிப்பதற்கும் கூழ் அமிழ்தாவதற்கும் தலைவிமேல் தலைவன் வைத்த மாறா அன்பும் தீராக் காதலுமே காரணம். உணவுக்கு அமிழ்தத்தை உவமமாக்குவது என்பது தமிழின் மரபியல் சார்ந்த உவமக் கோட்பாடு என்பது தெளிவாகலாம்.
நிறைவுரை
அகத்திணை மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் இடம்பெற்ற உவமம் முதலியன கவிதைக்கு அணியாக வளர்நிலை பெற்றது ஒரு மொழியில் படைப்பிலக்கிய வரலாற்றில் பரிணாம வளர்ச்சியாகவே கருதப்படலாம். அகத்திணை மாந்தர்களும் அவ்வுவமத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்குத் தொல்காப்பியம் பல வரையறைகளை வகுத்துக் காட்டுகிறது. அந்த வகையில் தலைமகன் கூற்றுப்பகுதியில் தலைமகளின் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் இல்லற மாண்புகளைப் பாராட்டுகிற சூழலில் பயன்படுத்திய சில உவமங்களை இக்கட்டுரை விளக்கியிருக்கிறது. பொருளதிகாரத்தில் காணப்படும் வேறு சில உவமங்களைத் தொடர்ந்து காணலாம்.
(தொடரும்…)