Blog

  • குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன்

    குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன்

    குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன் என்ற புகழ்பெற்ற பாடலை 85 வயதில் திருமதி ஜெயலட்சுமி செல்லப்பா பாடுகிறார். நினைவாற்றலும் நல்ல குரல் வளமும் வெளிப்படும் இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். வடிவேலன் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோந்து ஸார் (சிறுகதை)

    கோந்து ஸார் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து,  கோய்ந்து, கோந்து என்று மருவிவிட்டது.

    பெயர்தான் கோந்தே தவிர, இந்தக் கோந்து எவருடனும் ஒட்டமாட்டார். அதனால் அவரைக் காக்காய்பிடிப்பது கடினம். இந்தத் தகுதிதான் அவருடைய தொழிலுக்குச் சௌகரியமாக இருந்தது.

    பாடகிகளோ, நாட்டியமணிகளோ கலை விமர்சகரான அவரைத் தம் இல்லங்களுக்கு விருந்துக்கு அழைத்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஜரிகை வேஷ்டி, மனைவிக்கு பட்டுப்புடவை என்று தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பது என்றெல்லாம் பலவாறாக முயன்றும், அவர்களால் எந்தப் பட்டமும் பெற முடியவில்லை.

    அதற்கு இயற்கையிலேயே அமைந்த ஞானமும், கடினமான உழைப்பும் வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தார்கள். அதனால் கோந்துமேல் ஆத்திரம்தான் எழுந்தது.

    “போன வாரம் பொண்டாட்டி சமேதரா நம்ப வீட்டுக்கு வந்து, மனுஷன் பாயசத்தையே உறிஞ்சு, உறிஞ்சுக் குடிச்சாரே! அந்த நன்றிகூட இல்லாம, எப்படி என் பாட்டைக் கிழி கிழின்னு கிழிச்சிருக்கார்!” என்று வீட்டாரிடம் சொல்லி மாய்ந்துபோவார்கள்.

    “என்னமோ, நக்கீரன் பரம்பரையில் வந்தமாதிரிதான்! கண்ணிலே விளக்கெண்ணையும், காதிலே நல்லெண்ணையும் போட்டுக்கொண்டு, `எங்கேடா தப்பு கண்டுபிடிக்கலாம்?’ என்று உட்கார்ந்திருப்பார்,” என்று பிற கலைஞர்களுடன் எவ்வளவுதான் பேசினாலும், அவர்களுடைய மனம் ஆறாது.

    அடுத்த முறை, முன்வரிசையில் பேப்பர், பேனாவுடன் அவரைப் பார்த்தால் நடுக்கம் வந்துவிடும்.

    அவரோ, எங்கோ வேடிக்கை பார்ப்பதுபோல் அலட்சியமாக உட்கார்ந்திருப்பார்.

    இதனாலேயே, அவரது கலை விமரிசனங்களை தொடர்ந்து வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் சாமண்ணா, `கோந்து ஸார் எழுதினால் நம்பலாம்,’ என்று எல்லாரிடமும் பெருமையாகச் சொல்வார். அந்த காட்டமான படைப்புகளைப் படிப்பதற்கென்றே பலரும் அப்பத்திரிகையை வாங்கினார்களே!

    ஆனால் மனைவி பொன்னம்மாவுக்கு அவரது போக்கு கவலையைத்தான் அளித்தது.

    ஒரு முறை, “நீங்க இப்படி எல்லாரையும் கண்டபடி தாக்கி எழுதறது நன்னாவே இல்லே. மத்தவா சாபம் நம்பளை சும்மா விடாது,” என்று மெல்ல ஆரம்பித்தாள்.

    “போடி, அசடு. நான் செய்யறது சாமி காரியம். சரஸ்வதி தேவியும், ராக, ஸ்வர தேவதைகளும் இந்த ஞானசூனியங்களால் கஷ்டப்பட விடலாமோ?” என்று அவள் வாயை அடைத்தார்.

    கோந்து ஸார் அபூர்வமாக எந்தக் கலைஞரையாவது புகழ்ந்து எழுதினால், அந்தப் பாடகரின் மதிப்பும், அத்துடன் ரேட்டும், உயர்ந்துவிடும்.

    விவரம் தெரியாத ஒரு சிலர், “நாளைக்கு என் கச்சேரி நடக்கிறது, மாமா. நீங்க அவசியம் வந்து அதைப்பத்தி நாலு வார்த்தை நல்லதா எழுதணும்,” என்று வேண்டுகோள் விடுப்பார்கள்.

    “நல்லதுன்னு இப்பவே எப்படி தீர்மானிக்க முடியும்? நான் எப்படி எழுதுவேன்னு ஒங்களுக்குத் தெரியும்தானே?”

    கேட்டவர் மிரண்டுபோவார். இவரைப்போய் அழைக்க நம் புத்தி போனதே என்று நொந்துகொள்வார். பிறகு, கெஞ்சுவதுபோல், “பரவாயில்ல. சும்மா வாங்கோ!” என்பார்.

    “அப்படின்னா என்ன? எழுத வேண்டாமா?” கோந்து சிரிப்பார்.

    ஒரு முறை, `கவர்ச்சி’ என்ற பெயரில் அரைகுறையாக உடுத்துக்கொண்டு ஒரு சினிமா நடிகை `பரதநாட்டியம்’ ஆடுவதாக இருந்தது.

    பத்திரிகைகள் அந்த நிகழ்ச்சியைப்பற்றி முதலிலேயே நிறைய எழுதிக் குவிக்க, சாமண்ணா சும்மா இருப்பாரா? கோந்து ஸாரை அங்கு அனுப்பினார்.

    விமரிசனம் ஒரே வாக்கியத்துடன் ஆரம்பித்து முடிந்தது: `நாட்டில் துணிப் பஞ்சமா?’

    இன்னொரு நாட்டிய நிகழ்ச்சியைப்பற்றிய அவருடைய கருத்து: `மேடை அலங்காரத்துக்குச் செலுத்திய கவனத்தில் ஒரு சிறு பகுதியையாவது நாட்டியத்தில் காட்டியிருக்கலாம்’.

    அடுத்த முறை, அவரைப் பார்த்துவிட்டு, அந்த நாட்டியக்கலைஞர் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனார்.

    இப்படிப்பட்டவரிடம் எப்போது பேசினால் காரியம் ஆகும் என்று புரிந்து வைத்திருந்த பொன்னம்மா, இரவில் படுத்துப் பல நிமிடங்கள் கழிந்தபின், மெள்ள ஆரம்பித்தாள், “என் சிநேகிதி தர்மாம்பா இல்லே? அவ மாட்டுப்பொண் இந்த சனிக்கிழமை ஆடறாளாம். ஏதோ சின்ன எடத்திலேதான்னு சொன்னா. நீங்கதான் எழுதணும்னு ரொம்ப ஆசைப்படறா!” என்று.

    “அதுக்கென்ன! போய் பாத்தாப்போச்சு!” என்று `குஷி மூடில்’ ஒத்துக்கொண்டார் கணவரும்.

    “அவளே நாலு பேருக்குச் சொல்லித்தராளாம்!” என்று இழுத்தாள் பொன்னம்மா.

    “அதான் சரின்னு சொன்னேனே! காது விழலியா ஒனக்கு? மனுஷன் ஒடம்பு ஓய்ஞ்சுபோய் தூங்கறச்சே, என்ன தொணதொணன்னு!” என்று எரிந்து விழுந்தார்.

    அவள் பயந்து வாயை மூடிக்கொண்டாள்.

    நாட்டியமணி கண்ணுக்குக்கீழ் நிறைய மை தீட்டியிருந்ததில் அழகாகவே இருந்தாள்.

    “பரவாயில்லே. ஒடம்பு ஒத்தாப்போல இருக்கு. ரெண்டு குழந்தை பெத்திருக்காளாமே” என்று மனைவி காதில் மட்டும் விழும்படி முணுமுணுத்தார் கோந்து.

    பிறகு, ஏதோ சந்தேகம் எழ, “நல்ல கலரா இருக்கா இல்லே?” என்று கேட்டார்.

    “பாத்தா தெரியலியா? தர்மாம்பா ஆனமட்டும் தடுத்துப்பாத்தா. அவ பிள்ளை கேக்கலே. இந்த ஹோ ஹெங்கைக் கல்யாணம் பண்ணிண்டான்,” என்று கூடிய தகவல் தந்தாள்.

    ஹோ ஹெங் ஆட ஆரம்பித்ததும், கோந்துவின் கண்கள் அவள் கால்களில் பதிந்தன.

    `தாளகதிக்குச் சரியா ஆடமாட்டாளோ ஒருத்தி? இந்த லட்சணத்திலே, ஒண்ணும் தெரியாத மத்த குழந்தைகளுக்குச் சொல்லி வேற கொடுக்கறாளாமா?’ என்று அவர் மனம் கொதித்தது.

    தர்மாம்பாவின் புதல்வன் ஓட்டமும் நடையுமாக அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டான். “நேத்திக்கு ராத்திரி அவளுக்கு நல்ல ஜூரம்,” என்றான், மன்னிப்புக் கேட்கும் தொனியில்.

    தலையை ஒருமுறை மேலும் கீழும் ஆட்டினார் கோந்து ஸார், அதை அங்கீகரிக்கும் வகையில்.

    `இவர் என்ன எழுதிவிடப்போகிறாரோ!’ என்ற பயம் அவன் குரலில் கேட்டது அவருக்குப் புரியாதா!

    “என்ன இப்படி எழுதியிருக்கேள்!” அதிசயப்பட்டுக் கேட்ட மனைவியைப் பார்த்து லேசாகச் சிரித்தார் கோந்து.

    “இது நம்ப கலை. அவ, பாவம், பாஷை தெரியாத சீனப்பொண்ணு. சின்னச் சின்ன குழந்தைகளையும் வெச்சுண்டு, இவ்வளவு தூரம் கத்துக்க எத்தனை மெனக்கெட்டிருப்பா! ஏதோ, தனக்குத் தெரிஞ்சதை நாலுபேருக்கு உண்மையா சொல்லியும் குடுக்கறா! அதைப் பாராட்ட வேண்டாமா?”

    Share
  • பெருவெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் தொடங்கவில்லை; எப்போதும் அது இருந்துள்ளது

    பெருவெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் தொடங்கவில்லை; எப்போதும் அது இருந்துள்ளது

    சி. ஜெயபாரதன். B.E. (Hons) P.Eng (Nuclear), கனடா

    காலக் குயவன்
    ஆழியில் பானைகள்  செய்ய
    களிமண் எடுத்தான் 
    கருந்துளைச் சுரங்கத்தில் !
    பெருவெடிப்பில் பிரபஞ்சம்
    பிறக்கவில்லை.
    பெரு வெடிப்புக்கு மூல ஒற்றைத்துவ                                                               

    நுட்பத் திரட்சி எப்போது,
    எப்படி  வடிவானது ?
    கருவின்றி, தூண்டலின்றி
    உந்துவிசையின்றி உண்டாகுமா                                                             

    இந்த பிரபஞ்சம்  ? 
    அருவமாய்க் கரும்பிண்டம்
    கடுகு  அளவில்
    அடர்த்தியாய் இருந்ததா ?
    பெரு வெடிப்புக்கு முன்பே
    இருந்துள்ளது  இந்த
    பிரபஞ்சம்.
    மீள் சுழற்சி  இயக்கத்தில்
    என்றும் இருந்துள்ளது
    இந்த பிரபஞ்சம்.
    ஒன்றிலிருந்து  அடுத்தொன்று                                                    

    உண்டாகும்
    சுழற்சி  வம்சம் இது. 
    கருந்துளைக் கருவில் ஈன்ற 
    பிரபஞ்சம் !

    ++++++++

    • நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெருவெடிப்பில் (Big Bang) தோன்றவில்லை!  அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள் வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.

    மார்டின் போஜோவால்டு,  (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Author of Big Bounce Theory) (July 2007)

    • மூல முடத்துவ நிலையை [Singularity] நீக்கியோ,  அதாவது மூலப் பெரு வெடிப்புக் கோட்பாடை நிராகரித்தோ, பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்க வந்தால், தாவிப் பாய்ந்த கோட்பாட்டு அகிலம்  ஒன்று  [Bouncing Universe] உருவானது பற்றி அறிய வருகிறது.  பிரபஞ்சக் காலவெளி ஆரம்பத்தில்,  முடத்துவ நிலையின்மை [Absence of Singularity], மாற்று நிலை தாங்கிய, பூர்வீகச் சுருக்க நிலை இருப்பைக் [Previous Contraction Phase] காட்டுகிறது.   அந்த சுருக்க நிலை இப்போதும் இருந்து கொண்டு பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகலாம் .

    ஜூலியானோ சீஸர் சில்வா நிவேஸ்  [பிரஸேலியன் பௌதிக விஞ்ஞானி]

    “எனது வெளியீட்டுத் தாள் ஓர் புதிய கணித மாடலை அறிமுகப் படுத்துகிறது.  துகளியல் நிலையில் (Quantum State) “பெரும் பாய்ச்சல்” மூலம் (Big Bounce) பயணம் செய்யும் பண்பாடுகளின் புதிய விளக்கங்களை அதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம், அந்தக் கோட்பாடு ஆரம்ப காலத்துப் பெரு வெடிப்பில் உண்டானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நமது பிரபஞ்சத்தின் மரபுக் கருத்தை நீக்கி அமர்ந்து கொள்ளும்.  ஆயினும் அந்தப் பண்பாடுகள் சிலவற்றில் உறுதி யில்லாமை எப்போதும் இருக்கும்.  காரணம் எனது கணிப்புகளில் பெரும் பாய்ச்சல் பயணம் நிகழும் போது எல்லை மீறிய துகளியல் விசைகள் (Extreme Quantum Forces) விளைவிக்கும் ஒருவித “அகிலவியல் மறதி” (Cosmic Forgetfulness) எழுகிறது!

    மார்டின் போஜோவால்டு.

    Fig 1B Big Bang Theory Events

    பெரு வெடிப்பு நியதியில் கருத்து வேறுபாடு.

    ஒற்றைத்துவ நுட்பத் திணிவு [Singularity Point Source of Super Density], பிரபஞ்ச ஆரம்ப காலத்தில் திடீரென வெடித்துப் பிறந்து விரிந்தது என்னும் பழைய கோட்பாட்டில் பல கேள்விகள், விஞ்ஞானிகள் இடையே சமீபத்தில்  எழுந்துள்ளன.  ஒன்றுமில்லா சூனியத்தில் எப்படி ஒற்றைத்துவ நுட்பத் திரட்சி தோன்றியது ?  எந்த விதத் தூண்டுதல் இல்லாமல், எந்த வித உந்துவிசையின்றி, நுட்பத் திணிவு எப்படி வெடித்தது ?  பிறந்த பிள்ளைப் பிரபஞ்சத்தில் எப்படி அணுக்கள் சேர்ந்து, கோடான கோடி ஒளிமந்தைகள் [] உருவாகிச் சூரிய மண்டலங்கள் பற்பலக் கோள்களுடன் தோன்றின என்று கேள்விகள் எழுந்துள்ளன..  பிரபஞ்சத்துக்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. கருந்துளையிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது, பல  இணைப் பிரபஞ்சங்கள் அவ்விதம் தோன்றின,  அவை மீள்சுழற்சி முறையில் உற்பத்தி ஆகும் என்று புதிய நியதி பரவி வருகிறது.

    கடந்த 50 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பலர் பெரு வெடிப்புக் கோட்பாட்டைப் பிரபஞ்சத் தோற்றத் துவக்கமாய் ஏற்றுக் கொண்டிருந்தாலும், அது விஞ்ஞானிகள் இடையே முழு இசைவு உடன்பாடாய்க் கருதப்பட வில்லை.  இப்போது விஞ்ஞானிகள் பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத் தோற்ற உபக்காரணிகள் [Vestiges] இருந்துள்ளன என்று யூகிக்கிறார்.  இப்புதிய கருத்தைப் பிரேசில் ஆராய்ச்சிக் குழுவினர், தற்போது  [General Relativity & Gravitation Publication] [நவம்பர் 27, 2017]  வெளியிட்டுள்ளார்.  அவர்கள் ஆரம்ப காலப் பிரபஞ்சக் காலவெளி முடத்துவத்தை  [Cosmological Spacetime Singularity]  நீக்கிவிடும்படி அறிவிக்கிறார்.  அதாவது தற்போதைய பிரபஞ்ச விரிவுக் கட்டத்துக்கு முன்பு ஓர் சுருக்க நிலை [Contraction Phase] இருந்துள்ளது என்று தர்க்கம் செய்கிறார். அதாவது தற்போதைய பிரபஞ்சம் உருவாகும் முன்பே, அதற்கு வேண்டிய மூலாதார உபக்காரணிகள் [Ingredients] யாவும் அண்டவெளியில் இருந்துள்ளன.

    பிரேசில் விஞ்ஞானி ஜூலியானோ நிவேஸ் பெரு வெடிப்பு ஆரம்ப காலத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்.  காலத்துக்கு ஆரம்பம் இல்லை.  தற்காலப் பிரபஞ்ச விரிவுக்கு முன்பே பிரபஞ்சச் சுருக்கம் [Expansion was preceded by Contraction]  என்பது  இருந்துள்ளது.  பிரபஞ்சப் பெரு வெடிப்பே நிகழ வில்லை என்று அழுத்தமாகக் கூறுகிறார். அத்துடன் தற்போதைய பிரபஞ்சத்தின் அதிவிரைவு விரிவு முந்தைய சுருக்க நிலை இருந்துள்ளதை நிராகரிக்க வில்லை.  பிரபஞ்ச விரிவு நிலை முந்தைய சுருக்க நிலைக் கட்டத்தை அழிக்கவும் இல்லை என்று கூறுகிறார்.

    1920 ஆண்டுகளில் பெரு வெடிப்பு நியதியின் மூலாதார ஆய்வுகள் அமெரிக்க வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் காலத்தில் ஆரம்பமாயின.  அவர்தான் முதன்முதலில் ஒளி மந்தைகள் [Galaxies] யாவும் ஒன்றை விட்டு ஒன்று அதிவேகத்தில் விலகிச் செல்கின்றன என்று தொலைநோக்கி மூலம் கண்டறிந்தவர்.  1940 ஆண்டுகளில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  பெரு வெடிப்புக்குப் பிறகுப் பிரபஞ்சம் எப்படி விரிந்து செல்கிறது என்று  பிரபஞ்சப் பரிணாமக் கோட்பாடை  [Evolution of the Universe]  இயற்றினார்.   அந்த அகில மாடல் மூன்று வித விளைவுகளை உண்டாக்க வாய்ப்பளிக்கும்.

     

    1. விளிம்பற்ற அதிவேகப் பிரபஞ்ச விரிவை உண்டாக்கும்.

    2. நிரந்தரமாய்ப் பிரபஞ்சத்தை விரிவு நிலையிலே போய்  முடக்கும். 

    3. அல்லது பிரபஞ்சத்தை நிறை ஈர்ப்பியல் கவர்ச்சியால் தலைகீழ் இயக்கத்தில் பெரும்பிடிப்பால் [Big Crunch] நெருக்கிச் சுருக்கி விடும்.

    பிரேசில் விஞ்ஞானி ஜூலியானோ நிவேஸ் கூறும் புதிய கோட்பாடு இதுதான் :

    1.  தாவிப் பாயும் பிரபஞ்சவியல் கோட்பாடு [Bouncing Universe]  இறுதியில் விளையும் பெருங்கவர்ச்சி [Big Crunch] பிறகு நிரந்தரமாய்த் தொடர்ந்து தோன்றும்  பிரபஞ்சங்களைத் தோற்றுவிக்கும் தீவிர வெப்பத் திணிவை [Heat and Density] உண்டாக்கி வரும்.
    2. ஒரு புதிய தலைகீழ் இயக்கத்தில் பெருங்கவர்ச்சிக்குப்  [Big Crunch] பிறகு துவங்கிப் பிரபஞ்சம் விரிந்து  அடுத்த பாய்ச்சலுக்குத் தயார் ஆகிறது.
    3. பாயும் பிரபஞ்சத்துக்குக் கருந்துளைகள் ஆரம்ப கால விரிவுக்குத் தொடர்க் களஞ்சியம். கருந்துளைகள் ஒருவித அகில அண்டங்களே  [Cosmic Objects].
    4. பூத விண்மீன் ஒன்று வெடித்து எச்சமான உள்வெடிப்புக் கரு சுருங்கிப் பெருந்திணிவுக்  கருந்துளை ஆவது ஒருவித முடத்துவ [Singularity] விளைவே.

    fig-1a-cosmic-history

    “ஸ்டீஃபன் ஹாக்கிங், நீல் டுராக் (Stephen Hawking & Neil Turok) இருவரும் வானியல் விஞ்ஞான நோக்குகளில் கிடைத்த எண்ணிக்கையை விட 20 மடங்கு சிறிய பிண்டத் திணிவைக் (Matter Density) கொண்ட ஒரு பிரபஞ்சத்தை ஊகித்து முன்னறிவிக்கிறார்கள்.  ஹாக்கிங் தன் போக்கில் அடிப்படைக் கணித மூலமாக அணுகி அதில் மிகையாக நம்பிக்கை வைக்கிறார்.  முதலில் அது சரியாகத் தோன்றவில்லை எனக்கு. . . . ஆனால் ஹாக்கிங் கூர்மையான சிந்தனை உள்ளவர்.  பன்முறை அவர் செய்த ஆய்வுகளில் விந்தையான முடிவுகளைக் கண்டிருக்கிறார்.  முதலில் அவை தவறாகத் தோன்றின எனக்கு !  பல தடவைகள் அவரது முடிவுகளே செம்மையானதாய்ப் பின்னால் நான் அறிந்து கொண்டேன்.

    ஆன்ரி லின்டே (Andrei Linde Pysics Professor, Stanford University)

    “பிரபஞ்சத்தில் நாம் ஆழ்ந்து புரிந்து கொள்ள இயலாதது என்பது நாம் அதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பதே.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    “பெரு வெடிப்பு நியதியில் உள்ள இடைவெளித் துளைகளை அகிலத்தின் உப்புதல் கொள்கை (Cosmic Inflation Concept) அடைத்து நமது பிரபஞ்சத்தைப் பலவற்றுள் ஒன்றாக மாற்றி விட்டது.  மேலும் விஞ்ஞானிகளுக்கு உப்புதல் கொள்கை பல்வேறு பிரபஞ்சங்களைப் (Multiverse) பற்றி உரையாட மன உறுதி தந்துள்ளது.  அதாவது பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்கள் (A Universe of the Universes) இருப்பது”

    ஆடம் ஃபிராங்க் (Astronomy Magazine Editor, Physicist)

    “அனைத்து அகிலவியல் உப்புதல் நியதிகளும் (Cosmic Inflation Theories) விண்வெளியின் ஒரு புள்ளியை இழுத்துக் கொண்டு அதைச் சுமார் 10^50 மடங்குப் பேரளவில் ஊதி விடுகிறது.”

    மாரியோ லிவியோ (Mario Livio)

    “பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகள் உஷ்ணத்தில் செம்மையாகச் சீர்மை நிலையடைந்து (Well Synchronized in Temperature), ஒப்புக் கொள்ளப்பட்ட பெரு வெடிப்பு மாடலை விளக்குகிறது.”

    ஷான் கார்ரல் (Sean Carroll)

    fig-1c-timeline-of-the-universe“இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்க எந்த விதமான விருப்பத் தேர்வு (Choice) கடவுளுக்கு இருந்தது ?”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

    விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை!

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

    பெருவெடிப்புக்கு முன்பே சில கருந்துளைகள் இருந்தன

    2012 ஜூலை 13 ஆம் தேதி வெளியான ஒரு விஞ்ஞான அறிவிப்பில் “பெருவெடிப்புக்கு முன்பே சில கருந்துளைகள்  இருந்தன என்னும் ஒரு புதிய  கருத்து வெளியாகி உள்ளது.  அகிலவெளி நிபுணர் (Cosmologists) பெருவெடிப்புக்கு முன்னர் என்ன இயக்கங்கள் இருந்தன வென்று ஆழ்ந்து ஆராய்ந்த போது அத்தகைய ஒரு மர்மமான, புதிரான  முடிவு கூறப் பட்டுள்ளது.   கனடா ஹாலிபாக்ஸ்ஸில் உள்ள டல்ஹௌஸி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அலன் கோலி  (Alan Coley), லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக் கழகத்தின் பெர்னார்டு கார் (Bernard Carr) ஆகிய இருவரும், பெருவெடிப்புக்கு முன் நிகழ்ந்த பெரு முறிவில் (Big Crunch) சில முன்னோடிக் கருந்துளைகள் (Primordial Black Holes) உருவாகி இருக்கலாம் என்றொரு புதிய கோட்பாடை அறிவித்துள்ளார்.    அதாவது பெருவெடிப்பு என்பது ஒரு தனித்துவ நிகழ்ச்சி இல்லை;   பிரபஞ்ச முறிவில் ஒற்றைப் புள்ளியாய்ச் சுருங்கிப் பிறகு வெடித்து விரியும்.  அப்படி அது மீண்டும், மீண்டும் ஏற்படும் ஒரு சுழல்  நிகழ்ச்சி என்று அறிவிக்கிறது..

    சில தருணங்களில் ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள ஒருசில கருந்துளைகள் தான் இம்மாதிரி விதிகட்குக் கட்டுப்படாதவை.  மேலும் அவை பிரபஞ்ச சுருக்க முறிவில் எப்படியோ தப்பி விடுகின்றன.   நமது சூரியன் நிறை முதல்  ஒருசில 100 மில்லியன் கிலோ கிராம் நிறைவரை உள்ள சிறு கருந்துளைகள் இந்த விதத்தைச் சேர்ந்தவை.

    இந்தப் புதிய கோட்பாடுக்கு ஆதரங்கள் என்ன ?   நமது பூமியும், மற்ற பிரபஞ்ச அண்டங்களும் சில சமயங்களில் காரணம் அறியப்படாத மூலச் சேமிப்பிலிருந்து காமாக் கதிர்த் தாக்குதலால் (Bursts of Gamma Rays) பாதிக்கப் படுகின்றன.   அலன் கோலி, பெர்னார்டு கார் ஆகியோர் கருத்துப்படி முன்னோடிக் கருந்துளைகள் நொடித்துப் போய் சக்தி இழந்து தேயும் வேளைகளில் இவ்விதக் காமாக் கதிர்கள் வெளியாகும் என்பது அவரது கோட்பாடு.   இந்தச் சின்னஞ் சிறு கருந்துளைகள் மிகக் குன்றிய காலத்திலே ஆவியாகிப் போய்ச் சிதைவாகி காமாக் கதிர்களாய்த் தீவிர வெடிப்பில் மறைந்து விடுகின்றன.  நாம் அடிக்கடி விண்வெளியில் நோக்கும் இந்த காமாக் கதிர் வெடிப்புகளே இவையாக இருக்கும் என்று சில விஞ்ஞானிகள் விளக்குகிறார்.

    முன்னோடிக் கருந்துளைகள் என்பவை எந்த வகைக் கருந்துளைகள் ?

    நாம் சாதாரணமாக அறிந்திருக்கும் கருந்துளைகள் ஒரு சூப்பர்நோவா (Supernova) உண்டாகும் போது உருவாகின்றன.   ஆனால் முன்னோடிக் கருந்துளைகள் என்பவை பிரபஞ்சப் பெருவெடிப்பு நேர்ந்த சமயத்தின் ஆரம்ப நிலைச் சக்தியில்  தோன்றிப் பிறகு விரிந்து பரவிச் செல்பவை.    அலன் கோலி, பெர்னார்டு கார் கோட்பாட்டின்படி இந்த முன்னோடிக் கருந்துளைகள் பிரபஞ்சச் சுருக்க முறிவின் (Collapsing Universe) போது, பெரு நசுக்கலில் (Big Crunch) உண்டாகி பிறகு வெளியேறி  ஒற்றைப் புள்ளி முனை முடக்குவ (Pinpoint Singularity) நிலைக்கு இழுக்கப் பட்டவை என்று அறியப் படுகின்றன.

    பெருவெடிப்புக்குப் பிறகு முன்னோடிக் கருந்துளைகள் உருவாகும் புதிய பிரபஞ்சத்தோடு இரண்டறக் கலந்து கொள்ளும்.   இதில் உள்ள சிரமம் என்ன வென்றால் பெருவெடிப்புக்கு முன் தோன்றிய முன்னோடிக் கருந்துளை களுக்கும், பின் தோன்றிய முன்னோடிக் கருந்துளைகளுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிவது.

    ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி

    பிரபஞ்சம் யுக யுகங்களாக நீடித்து வந்திருப்பதை நாமெல்லாம் அறிவோம்.  ஆனால் அந்த மட்டமான அறிவோடு நமது ஆர்வ வேட்கை நின்று விடுவதில்லை.  அதன் தோற்றத்தைப் பற்றியும், தோற்ற மாற்றத்தைப் பற்றியும் மாற்றத்தின் பண்பாடுகள் பற்றியும் நமக்குப் பல்வேறு வினாக்கள் தொடர்ந்து எழுகின்றன.  நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?  நமது முதிர்ந்த பிரபஞ்சத்துக்கு எத்தனை வயதாகிறது ?  எப்படி அதில் பிண்டமும் சக்தியும் (Matter & Energy) உண்டாயின ?  அவையெல்லாம் எளிய வினாக்களாகத் தோன்றினாலும் அவற்றின் விடைகள் மிகவும் சிக்கலானவை !  உலகப் பெரும் விஞ்ஞானிகள் பலரின் எதிர்ப்புக்கும் தர்க்கத்துக்கும் உட்பட்டவை !  நிகழ்காலம் கடந்த காலத்தின் நிழலாக இருப்பதால் நம் கண்முன் காண்பாதிலிருந்து நாம் காணாத முந்தையக் காட்சிகளை ஓரளவு அறிய ஏதுவாகிறது !  ஆனால் அவற்றில் பல விஞ்ஞானிகளின் கருத்துக்கள், கோட்பாடுகள் உறுதியற்ற ஊகிப்புகள்தான் (Speculations).

    பிரபஞ்சம் எப்படிப் படைக்கப் பட்டது ?  பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது (Infinite) என்ற கருத்துக்கள் ஒரு காலத்தில் நிலவி வந்தன !  மேதைகளும், மதமும் வலியுறுத்திய பூமி மையக் கொள்கையி லிருந்து பரிதி மையக் கொள்கைக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன !  ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் ஊகித்த “பெரு வெடிப்புக் கோட்பாடு” (Big Bang Theory) அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.  பெரு வெடிப்புக் கோட்பாடை ஏற்றுக் கொண்ட பிறகு பிரபஞ்சத்துக்குத் தோற்ற ஆரம்பம் தொடங்கி காலக் கடிகார முள் நகரத் துவங்கியது.  பிரபஞ்சம் வரையறையற்றது என்னும் கருத்து மறைந்து போனது.  பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் முடிவும் ஊகிக்கப்பட்டு அதன் தோற்ற வளர்ச்சி வரலாறுகளும் எழுதப்பட்டன !

    fig-1f-content-of-the-universe

    சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (துல்லியமாக 13.7 பில்லியன் ஆண்டுகள்) ஓர் அசுரப் பெரு வெடிப்பில் பிரபஞ்சம் தோன்றி விரிய ஆரம்பித்தது.  அந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிலையில் விண்வெளியில் இருந்த அனைத்துப் பிண்டமும் சக்தியும் ஒற்றைப் பிண்டமாய் அடங்கிக் கிடந்தன.  ஆனால் அந்த பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு என்ன இருந்தது என்பது சுத்த யூகிப்பாய் அமைந்து முற்றிலும் அறியப்படாமலே தொங்கிக் கொண்டிருந்தது!  அந்தப் பெரு வெடிப்பு மரபு வெடிகுண்டு போல் வெடிக்காது உட்பிண்டங்கள் உருமாறி ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டும் ஒளிவீசி நகர்ந்து கொண்டும் பலூனைப் போல் விரிந்து பெருகி வருகிறது பிரபஞ்சம்!  அதாவது பெரு வெடிப்பு பிரபஞ்சத் தோற்றத்துக்கு வித்திட்டது என்பது நிகழ்கால முடிவு!

    வேறோர் பிரபஞ்சத்துக்கு ஏற்பட்ட சீர்குலைவுப் பயணத்தின் பெரும் பாய்ச்சலில் (Bib Bounce) தற்போது நாம் வாழும் பிரபஞ்சமாய்ப் பிறந்திருப்பதாகத் தெரிகிறது என்னும் புதிய நோக்குக் கோட்பாட்டைப் பென்சிவேனியா மாநிலப் பலகலைக் கழகத்தின் துணைப் பேராசிரியர் மார்டின் போஜோவால்டு கணினி மாடல் ஒன்றைப் படைத்துக் கண்டுபிடித்திருக்கிறார்.

    fig-5-cobe-cosmic-background-explorer

    பிரபஞ்சத்தின் அரங்குகளை ஆராயும் கோப் விண்ணுளவி

    நாசா சமீபத்தில் அனுப்பிய “கோப் விண்ணளவி” (COBE Cosmic Background Explorer) பிரபஞ்சத்தின் வெளிப்புற நீட்சிகளில் உள்ள “அகிலவியல் நுண்ணலைகளை” (Cosmic Microwaves) உணர்ந்தறியச் சென்றது.  அந்த நுண்ணலைகள் பிரபஞ்சத் தோற்றத்தின் ஆரம்பக் கட்டங்களில் இருந்த ஒருமைப்பாடுடன் (Homogenity) மகத்தான முறையில் சமநிலையில் பரவி இருந்ததைக் கண்டுள்ளது.  மேலும் பிரபஞ்சம் வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்து தணிவு நிலை பெற்றுத் தொடர்ந்து விரிவாகி வருவதைக் கண்டுபிடித்திருக்கிறது. விரிவடையும் போது உண்டாகும் உஷ்ண மாறுபாடுகளையும் கண்டுள்ளது.  அந்த உஷ்ணத் திரிபுகள் ஏற்ற இறக்கங்கள் பிரபஞ்சப் பெரு வெடிப்பு ஆரம்பக்கால நிலைகளை அறிய உதவுகின்றன!

    நாசா கோடார்டு விண்வெளிப் பயண மையம் (NASA Goddard Space Fight Center) தயாரித்த துணைக்கோள்தான் கோப் விண்ணுளவி.  பூர்வக் காலத் தோற்றப் பிரபஞ்சத்தின் பரவிய உட்சிவப்பு & நுண்ணலைக் கதிர்வீச்சை (Diffuse Infrared & Microwave Radiation) அளந்து உளவிடவே அது பூமியைச் சுற்றி விண்வெளிக்குப் பயணம் செய்ய 1989 நவம்பர் 18 ஆம் தேதி அனுப்பப்பட்டது.  அதில் முக்கியமாக மூன்று கருவிகள் இருந்தன.

    1.  DIRBE – Diffuse Infrared Background Experiment : அகிலவியல் உட்சிவப்பு பின்புலக்
    கதிர்வீச்சை அளக்கும் கருவி.

    2.  DMR – Differential Microwave Radiometer : அகிலவியல் நுண்ணலைக் கதிர்வீச்சு மாறுபாடுகளை அளக்கும் கருவி.

    3.  FIRAS – Far Infrared Absolute Spectro-Photometer : நெடுந்தூர உட்சிவப்புத் தனித்துவ ஒளிப்பட்டை ஒளி அளப்புமானி

    பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் நேர்ந்தது என்ன ?

    பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக் கழகத்தின் பௌதிகத் துணைப் பேராசியர் மார்டின் போஜோவால்டு ஒரு புதிய கணித மாடலைப் படைத்து “முடிச்சுத் துகளியல் ஈர்ப்புக் கோட்பாடு” (Loop Quantum Gravity Theory) ஒன்றில் ஆழ்ந்து சிந்தனை செய்தார்.  அது ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியையும் துகளியல் யந்திரவியலையும் (Relativity Theory & Quantum Mechanics) இணைத்தது.  அந்தக் கணிதச் சமன்பாட்டில் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் (Time T=0) என்று நிரப்பினால் பிரபஞ்சத்தின் தோற்றக் கொள்ளளவு பூஜியமில்லை என்பது தெரிய வந்தது.  மேலும் அடர்த்தி முடிவில்லாமை அல்ல (Density of the Universe is NOT Infinite) என்றும் தெளிவானது.  அதாவது அவரது புதிய கணித மாடல் பிரபஞ்சத்தின் தோற்ற கால நிலையை ஆராய உதவியது.

    fig-4-dark-matter-the-elementary-particle
    முன்பே இருந்த முடிச்சுத் துகளியல் கோட்பாட்டைப் புதிய கணித மொழியில் போஜோவால்டு எளிதாக்கினார்.  ஆனால் அவர் பயன்படுத்திய கணிதச் சமன்பாட்டு விதத்தில் ஒரு மகத்தான நிகழ்ச்சி பிரமிப்பை உண்டாக்கியது.  அதாவது தற்போதுள்ள நமது பிரபஞ்சத்துக்கும் முன்பாக வேறொரு பிரபஞ்சம் இருந்திருக்கிறது என்பதைக் காட்டி யுள்ளது.  இது சற்று சிக்கலான சிந்தனைதான்.  ஏனெனில் பிரபஞ்சப் பெரு வெடிப்பில் கால வெளி அந்தக் கணத்தில் தோன்றின என்பது அறியப் படுகிறது.  போஜோவால்டு கணிப்பு மெய்யானால் அது இதற்கு முந்தி இருந்த ஒரு பிரபஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறது.  அது எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டுள்ளது.  ஆனால் அது சிறுத்துக் குறுகிப் போய் பேரசுரத் திணிவில், பேரளவு உஷ்ணத்தில் மிகக் மிகக் குள்ளி காலவெளிக் கடுகாய்க் (Ultra-dense, Ultra-Hot & Ultra-Small Ball of Space Time) கிடக்கிறது !  ஏதோ ஓர் கட்டத்தில் எப்படியோ அந்த உஷ்ணத் திணிவுக் கடுகைத் “துகளியல் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) இழுத்துச் சுருக்கி வைத்துக் கொண்டது.

    fig-3-in-search-of-gods-particle

    இதை வேறு விதக் கண்ணோட்டத்தில் பிரபஞ்ச விளைவுகளைப் படிப்படியாகப் பின்னோக்கிப் பார்த்துக் கால மணி பூஜியத்துக்கு (Time T=0) நெருங்கினால் போஜோவால்டு கணித்த முந்தைய பிரபஞ்சத்தின் காணாத தோற்றம் தெரிகிறது.  போஜோவால்டு அந்த பூஜிய காலமணி நிகழ்ச்சியை “பெரும் பாய்ச்சல்” (Big Bounce) என்று குறிப்பிடுகிறார்.  அதாவது முந்தைய பிரபஞ்சம் அந்தப் பூஜிய கால மணியில் சீர்குலைந்து மறுபடியும் ஒரு புது முகப் பிரபஞ்சமாக, நமது பிரபஞ்சமாகக் குதித்தது என்று போஜோவால்டு கூறுகிறார்.  அவரது கணிசச் சமன்பாடுகளில் பூர்வீகப் பிரபஞ்சத்தின் வடிவம் எத்தனை பெரியது என்பதைக் கணக்கிட முடியவில்லை.  ஆகவே போஜோவால்டு கோட்பாட்டில் அத்தகைய “உறுதியில்லா ஊகிப்புகள்” (Uncertain Speculations) இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    big-bang-cosmology

    குவாண்டம் ஈர்ப்பு நியதி (துகளியல் ஈர்ப்பு நியதி) என்ன கூறுகிறது?

    கால-வெளிப் பிணைப்பு ஒற்றைப் பரிமாணக் குவாண்ட நூலிழைகளால் பின்னிய (One Dimensional Quantum Threads) ஓர் “அணு வடிவமைப்பைக்” (Atomic Geometry) கொண்டுள்ளதாகக் “குவாண்டம் ஈர்ப்பு நியதி” கூறுகிறது.  கால மணி பூஜியத்தில் பூர்வீகப் பிரபஞ்சம் முடிவில்லாமையில் புகுந்திடாது நமது விரியும் பிரபஞ்சமாகத் தாவிப் பிறந்தது.  குவாண்டம் ஈர்ப்பு நியதி அந்தப் “பெரும் பாய்ச்சலுக்கு” (Big Bounce) முன்பு சிறுத்துப் போன கால-வெளி வடிவமைப்புப் (Space-Time Geometry) பிரபஞ்சத்தைக் காட்டுகிறது.

    போஜோவால்டு மேலும் ஒரு புதிய முடிவைக் கண்டறிந்தார். பூர்வீகக் குவாண்ட ஈர்ப்புப் பிரபஞ்சம் தாவிச் செல்லும் பயணத்தின் போது அமைப்பு அங்கங்களில் குறைந்தளவு ஒன்று (One of the Parameters) தப்பிப் பிழைக்காமல் போகும்! அதாவது அடுத்தடுத்துத் தாவிப் பிறக்கும் சந்ததிப் பிரபஞ்சங்கள் முன்னதைப் போல் பின்னது முழுமை அடைந்திருக் காது என்பதே அவர் மேலும் அறிந்து கொண்டது.  எப்போதும் ஒரே மாதிரி வாரிசுப் பிறப்புப் பிரபஞ்சம் தோன்றாமல் தடுக்கப்படுவதற்குக் காரணம் “அகிலவியல் மறதியே” (Cosmic Forgetfulness) என்று போஜோவால்டு கூறுகிறார்.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Big Bang Happen ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40711151&format=html[பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ?]
    20 (a) COBE Space Probe to Glimpse infancy of the Universe – News from Princeton University (June 18, 2001)
    21. Dark Matter Mystery May Call for Revision of Laws of Physics (August 7, 2007)
    22. PhysOrg.com : Probing Question : What Happened Before the Big Bang ?
    23 Sceince Daily : What Happened Before the Big Bang ? (July 3, 2007)
    24 The Big Bang By : Chris LaRocco & Blair Rothstein
    25 PhysOrg.com – What Happened Before the Big Bang ? (July 1, 2007)
    26. Astronomy Magazine – What Happened Before the Big Bang ? By : Philips Plait (July 1, 2007)
    27 What Happened Before the Big Bang ? By : Paul Davis
    28 (1) How Did the Universe Begin ? (2) It Started with a Bang ? (3) Creating a Universe Creation Theory (4) Hartle-Hawking Universe Model – No End of Universe Creation Thories (5) Turok’s Inflationary Theory Work – Reforming the Inflationary Theory.  Website University of Victoria, B.C. Canada.
    29.  Discover :    http://discovermagazine.com/2004/feb/cover/article_print   (Luly 13, 2o12)
    30.  Scientific American – Follow the Bouncing Universe By : Martin Bojowald [Oct 2008]
    31. Astronomy Magazine – Cosmos Before There Was Light – Seeing the Dawn of Time By : Adam Frank (January 2007)
    32   Was there a Black Hole before the Bib Bang ?   May 1, 2011
    33.http://www.theatlantic.com/technology/archive/2012/01/what-happened-before-the-big-bang-the-new-philosophy-of-cosmology/251608/  (Jan 19, 2012)
    34. Daily Galaxy : Some Black Holes Existed Prior to the Big Bang  (Jan 13, 2012)
    35. https://cosmosmagazine.com/space/recreating-beginning-time  [June 29, 2015]
    36.https://thesciencepage.com/vestiges-exist-of-a-universe-prior-to-the-big-bang-physicists-see-a-starkly-different-beginning-to-the-cosmos/
    37.http://www.dailygalaxy.com/my_weblog/2017/11/vestiges-of-a-universe-previous-to-the-big-bang-exist-physicists-see-a-starkly-different-beginning-t.html  [November 27, 2019]
    38. https://www.techtimes.com/articles/32659/20150214/big-bang-didnt-happen-new-theory-suggests-universe-has-no-beginning-no-end.htm

    Share
  • குறளின் கதிர்களாய்…(342)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(342)

    சிறைநலனுஞ் சீரு மிலரெனினும் மாந்த
    ருறைநிலத்தோ டொட்ட லரிது.

    – திருக்குறள் – 499 (இடனறிதல்)

    புதுக் கவிதையில்...

    மக்கள் பாதுகாப்புக்கு
    அரணாகிய நலனும் வலிமையும்
    பிற சீரும் இலராயினும்,
    அவர்கள்
    இருக்கும் இடத்திற்கே
    சென்று தாக்குதல்
    மிகவும்
    சிரமமான செயலாகும்…!

    குறும்பாவில்...

    அரணாம் நலனும் பிற சீர்களும்
    இல்லாதவர்களானாலும் அவர்தம் இருப்பிடம் சென்று
    தாக்குதல் மிகவும் அரிது…!

    மரபுக் கவிதையில்...

    மக்களுக் கரணாம் நலனுடனே
    மற்றைச் சிறப்பெலாம் இலராயுள
    அக்கம் பக்கம் நாட்டினரை
    ஆற்றாப் பகைமை கொண்டேதான்
    தக்க வகையில் தாக்காதவர்
    தமதாம் இருப்பிடம் சென்றவரை
    அக்கரை யோடே தாக்கிடுதல்
    அரிது மிகவும் அரிதாமே…!

    லிமரைக்கூ..

    இல்லை அரணாம் நலனே,
    சீர்பிற இலாரெனினும் அவரிருப்பிடத்தில் தாக்கினால்,
    சிரமம்தான், இல்லை பலனே…!

    கிராமிய பாணியில்...

    எடமறியணும் எடமறியணும்
    தகுந்த எடமறியணும்,
    எதிரியத் தாக்க
    ஏத்த மாதிரி
    எடமறிஞ்சி செயல்படணும்..

    நாட்டு மக்களோட பாதுகாப்பு
    வலிமயோட வேற
    சீரெதுவும் இல்லாமயிருந்தாலும்,
    அவனோட எடத்தில போயி
    அவனத் தாக்கிறது செரமந்தான்,
    ரெம்ப செரமந்தான்..

    அதால
    எடமறியணும் எடமறியணும்
    தகுந்த எடமறியணும்,
    எதிரியத் தாக்க
    ஏத்த மாதிரி
    எடமறிஞ்சி செயல்படணும்…!

    Share
  • 74 வயதில் உடற்பயிற்சி செய்யும் செளந்திரவல்லி

    74 வயதில் உடற்பயிற்சி செய்யும் செளந்திரவல்லி

    என் தாயார் செளந்திரவல்லி, 74 வயதில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். பூங்காவுடன் இணைந்த திறந்தவெளி உடற்பயிற்சிக் களத்தில் அவரது உடற்பயிற்சி முயற்சிகளைப் பாருங்கள்.

    Grandma at Open Gym – 1

    Grandma at Open Gym – 2

    Grandma at Open Gym – 3

    Grandma at Gym

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொம்மைகளின் அணிவரிசை

    பொம்மைகளின் அணிவரிசை

    சென்னையிலிருந்து நித்திலா, தனது புதிய பொம்மைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

    பெங்களூருவில் படிக்கும் சகஸ்ராவின் பொம்மைகளைப் பாருங்க. அவர் நமக்குச் சொல்லும் செய்தியையும் கேளுங்க.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 58

    பழகத் தெரிய வேணும் – 58

    நிர்மலா ராகவன்

    பரோபகாரம் போதுமா?

    தலைவர்கள் தாம் சாதித்ததாக எண்ணுவதைத் தேர்தல் சமயத்தில் பட்டியலிடுவார்கள்.

    அரசியலில் மட்டுமல்ல, எந்த ஒரு சிறு குழுவின் தலைவர்களாக இருப்பவர்களும்கூட.

    வெற்றி என்பது ஒருவரது சாதனைகளின் மட்டுமல்ல. மற்றவர்களுக்காக எதுவும் செய்யாது, தமக்குத்தாமே நன்மை செய்துகொண்டிருப்பவர்களால் பிறருக்கு என்ன லாபம்?

    ஒரு சிலர், `குறுகிய காலத்தில் நான் இத்தனை பட்டங்கள் பெற்றேன், சொத்து சேர்த்தேன்,’ என்று பெருமை பேசிக்கொள்வார்கள்.

    அறிவும் பணமும் மட்டும் நிறைவைக் கொடுத்துவிடாது. (ஆனால், அது காலம்கடந்துதான் புரியும்).

    தகுந்த தருணத்தில், அல்லல்படும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டுவதால் கிடைக்கும் திருப்தி அதைவிடப் பெரிது. பிறர் பிரமித்து, பாராட்டாவிட்டால் என்ன!

    தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களை எப்படியாவது தாம் இருக்கும் தாழ்ந்தநிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்றெண்ணி, அதன்படி செயல்படுபவர்கள் கீழேயேதானே இருக்க நேரிடும். இது எத்தனை பேருக்குப் புரிகிறது?

    மாறாக, பிறரை உயர்த்த நம்மால் ஆன உதவியைச் செய்தால், நமக்கும் ஏதாவது நல்லது நடக்கும். ஆனால், விளைவைக் கருத்தில்கொண்டு செயல்படுவது நலனைத் தருவதில்லை.

    கதை

    தான் மற்ற உறவினர்களைவிடச் செல்வச்செழிப்புடன் இருக்கிறோமே, அதைக் கண்டு அவர்கள் பொறாமை கொண்டால், அந்த ஆற்றாமை ஏதாவது தீய விளைவில் கொண்டுவிடப்போகிறதே என்று பயந்தாள் மைதிலி.

    உறவினர்களைப் பார்க்கும்போதெல்லாம், கைநிறைய பரிசுப்பொருட்கள் வாங்கி வருவாள். அடிக்கடி எல்லாருக்கும் கடிதம் எழுதி, அவர்கள் நலனை விசாரிப்பாள். தான் மிகவும் நல்ல இருதயம் படைத்தவள் என்று நம்பி, அவர்கள் வாழ்த்த வேண்டுமாம்!

    மைதிலியின் குழந்தைகள் பெரியவர்களானதும், ஒவ்வொருவருக்குமே ஏதோ ஒரு இடர். விபத்தில் ஒரே மகளுக்குக் கால் ஊனமாகியது.

    `நாங்கள் பிறருக்கு அவ்வளவு செய்தோமே! எங்களுக்கு ஏன் இப்படி ஒரு துயரம்?’ என்று கதறினாள் மைதிலி.

    பிறர் நமக்கு என்ன பிரதியுபகாரம் செய்யப்போகிறார்கள் என்று எதிர்பார்த்துச் செய்வது பலன் தராது.

    திருமணங்களின்போது, தங்களுக்கு யார் எத்தனை மொய் எழுதியிருக்கிறார்கள் என்று கணக்கு எழுதி வைத்துக்கொண்டு, அதே தொகையை அவர்கள் வீட்டு வைபவங்களுக்குத் திருப்பி அளிப்பதும், குறைவாகக் கிடைத்தால் சண்டைபோடுவதும் எதில் சேர்த்தி?

    குழுச் சண்டைகள்

    பிறருடன் ஒரு காரியத்தில் ஈடுபடுகையில், பொறாமை அல்லது கோபத்தால் விளையும் சிறிய சச்சரவுகள் எழும். அப்போதுதான் புரிந்துணர்வு அவசியமாகிவிடுகிறது. பிறரது மனநிலையில் நம்மை வைத்துக்கொண்டு பார்த்தால், பிறர் செய்வது நம்மை அதிகமாகப் பாதிக்காது.

    இதனால்தான் ஒத்த மனதினருடன் ஒரு குழுவில் இணையவேண்டும் என்பது. `நமக்கு ஆதரவு அளிக்க பலர் இருக்கிறார்களே!’ என்று புரிந்துபோக, ஒவ்வொருவரும் தனிப்பலம் அடைகிறார்கள்.

    அந்நிலையில் ஒருவருக்கொருவர் உதவியும், ஊக்கமும் அளித்துக்கொள்வதால் அதில் இருப்பவர்கள் அனைவருமே வெற்றி அடைகிறார்கள்.

    மொத்த முழுவிற்கும் அவர்களால் நன்மை. ஏனெனில், `அடுத்து என்ன செய்யலாம்?’ என்று கலந்தாலோசிக்கிறார்கள்.

    “விரைந்து செல்லத் தனியாகப் போகவேண்டும். ஆனால், நீ தொலைதூரம் செல்ல வேண்டுமானால், பிறருடன் சேர்ந்து போ!’ என்று அறிவுரை கூறுகிறார் திரு.அனுபவசாலி.

    கஷ்டங்கள் விலக

    நம்மைப்பற்றியே வேண்டாத யோசனை செய்துகொண்டிருந்தாற்போல் நிலைமை மாறிவிடப்போவதில்லை

    சிலர் தாம் படும் சிறு, சிறு கஷ்டங்களைப்பற்றி உபகாரியானவரிடம் ஓயாது பேசி, அவற்றின் பாதிப்பைக் குறைக்க நினைக்கிறார்கள். இவர்களுக்குப் பிறரைப்பற்றிய சிந்தனையே கிடையாது.

    `உதவி செய்கிறோம்!’ என்ற நல்லெண்ணத்துடன் அந்த அவலங்களைச் செவிகொடுத்து கேட்க நேரிடுபவர்கள் நிலை பரிதாபம். அவர்களே அல்லல்படுவதுபோல் வருத்தம் எழும்.

    இவ்வாறு ஓயாமல் மூக்கால் அழுபவர்களை விலக்குவதே புத்திசாலித்தனம். ஏனெனில், நம் பரிதாப உணர்ச்சியால் ஆக்ககரமாக எதுவும் நடக்கப்போவதில்லை.

    அப்படி நேரத்தை வீணாக்குவதைவிட தகுதியுள்ள பிறருக்கு உதவி செய்தால் நம் கஷ்டங்கள் விலகுகிறதோ, இல்லையோ, நம் நிம்மதியாவது குலையாமல் இருக்கும்.

    `இவள் தேவலை! தன் காரியத்தைத் தானே பாத்துக்கொண்டுவிடறா!’ இப்படி ஏளனமாக எழும் ஒரு குரலைக் கேட்கும்போது குற்ற உணர்ச்சி எழுந்தால் அது தவறு.

    பிறருக்கு உதவிபுரியுமுன் முக்கியமாகச் செய்ய வேண்டுவது: நம் நலனைக் கவனித்துக்கொள்வது.

    கதை

    பிறருக்கு உதவி செய்வதே ஒரு நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்பதுபோல் வளர்க்கப்பட்டிருந்தாள் சுமித்திரா.

    தன்னைவிட வயதில் மூத்தவர்களின் கைவேலையைப் பிடுங்கிச் செய்வதில் பெருமகிழ்ச்சி கொண்டாள் அப்பேதை.

    ஆனால், அதற்குமுன் அவள் தன்னையும் பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூற எவருக்கும் தோன்றவில்லை.

    படிப்பில் சோடைபோனாள். பிறருக்குக் கேலியாக ஆயிற்று. யாரும் தன்னை மதிக்காதது வருத்தத்தை உண்டாக்கியது. சுதந்திரமாக நடக்கவும் அவளுக்குத் தெரியவில்லை.

    எங்கு, யாரால் தவறு நிகழ்ந்தது என்று காலம் கடந்து புரியும்போது இப்படிப்பட்டவர்களுக்கு அளவிலா வருத்தம் ஏற்படும். அல்லது, பிறர்மீது பழிசுமத்தத் தோன்றும்.

    பொருளாதாரச் சுதந்திரம்

    முதுமை அடைந்தபின்னரோ, உடல்நிலை கெட்டபின்னரோ பலரும், `கடமை’ என்றெண்ணி, தம் சொத்து அனைத்தையும் பெற்ற பிள்ளைகளுக்கு அளித்துவிடுவார்கள்.

    உயிர் இருக்கும்வரை நம்மைக் காத்துக்கொள்ள பொருளாதாரச் சுதந்திரம் வேண்டாமா?

    முன்யோசனை இல்லாது எல்லாவற்றையும் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஒவ்வொன்றுக்கும் அவர்கள் கையை எதிர்பார்ப்பது அடிமைத்தனம்.

    தமக்கே உதவி செய்துகொள்வது கேவலம், அல்லது சுயநலம் என்று எண்ணாது, முன்யோசனையுடன் நடந்தால் தன்னம்பிக்கை என்றும் குன்றாது.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 299

    படக்கவிதைப் போட்டி – 299

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் எஸ்.இராமலிங்கம் எடுத்த இப்படத்தை அவர்களது தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (21.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 298இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 298இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    புகைப்படக் கலைஞர் திருமிகு. ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப்போட்டி 298க்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

    கையிலே கோல்வைத்துக் குறிசொல்லும் பெண்மணியை இப்படத்தில் காணுகின்றோம். இவ்வாறு குறிசொல்லும் பெண்டிரை ’அகவன் மகளிர்’ என்றழைத்தனர் அன்று. வெள்ளியால் செய்த பூணிட்ட சிறுகோலைத் தாங்கியிருக்கும் இம்மகளிரை, ’வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்’  (குறுந்: 298) என்கிறது குறுந்தொகை.

    தலைவியின் காதலை வீட்டுக்குத் தெரிவிக்க விரும்பும் தோழி, குறிசொல்ல வந்த அகவன் மகளைப் பார்த்து, ”சங்குமணி போன்ற நரைத்த நெடுங்கூந்தலையுடைய அகவன் மகளே! அவர் நன்னெடுங் குன்றத்தை மீண்டும் மீண்டும் பாடுக!” எனச் சொல்லி அந்த ’அவர்’தாம் தலைவியின் காதலர் என்பதைத் தலைவியின் தாய்க்கும் செவிலித்தாய்க்கும் குறிப்பால் உணர்த்துகின்றாள்.

    அகவன் மகளே அகவன் மகளே
    மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
    அகவன் மகளே பாடுக பாட்டே
    இன்னும் பாடுக பாட்டேஅவர்
    நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே. (குறுந்: 23)

    சங்க கால அகவன் மகளைப் புலவர்கள் பாடினர்; இதோ இந்நாளைய அகவன் மகளைப் பாட நம் கவிஞர்களை அழைக்கின்றேன்!

    *****

    ”எறும்பாய் என்றும் உழைத்திருக்க எதிர்காலக் கவலை ஏதுமில்லை;
    குறிக்கோளில் குறியாய் இருந்திருக்கக் குறிச்சொல் கேட்கத் தேவையில்லை”என்று பொருளுரை புகலுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    குறி கேளீர்!

    அறமும் திறமும் கொண்டோரை
    அறச்சொல் ஏதும் செய்வதில்லை
    அறிவும் உழைப்பும் இழந்துவிட்டால்
    அதிர்ஷ்டம் உதவத் தேவையில்லை

    நற்சிந்தை கொண்டு வாழ்வோரை
    நாளும் கோளும் கெடுப்பதில்லை
    இன்சொல் இயல்பாய் அமைந்துவிட்டால்
    இன்பம் வாழ்வில் தொலைவதில்லை

    நேர்மறை எண்ணம் நிறைந்திருக்க
    நித்தமும் நிறைவு தேய்வதில்லை
    சோர்வைத் தவிர்த்துச் செயல்பட்டால்
    சுகத்துக்கு எப்போதும் கேடில்லை

    கடமையைத் தொடர்ந்து செய்திருக்கக்
    காலம் கனியாமல் போவதில்லை
    கட்டுப்பாடும் கலந்திருந்தால்
    கண்ணியம் வாழ்வில் குறைவதில்லை

    எறும்பாய் என்றும் உழைத்திருக்க
    எதிர்காலக் கவலை ஏதுமில்லை
    குறிக்கோளில் குறியாய் இருந்திருக்கக்
    குறிச்சொல் கேட்கத் தேவையில்லை

    *****

    ”மற்றவரின் கைபிடித்து மாறிவரும் காலநேரம்
    மணிக்கணக்கில் நீ உரைத்திட்டாலும் மாறிடுமோ உன் சொல் நயம்தான்” என்று குறிசொல்லும் பெண்ணை நயம்படப் பாராட்டுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    கருப்பு வெள்ளை நிறமதனில்
    கண்டுகளித்த உன் முகமதனைக்
    கற்பனையில் வடித்திட்டுக்
    கவிதையொன்றைச் சொல்லவா?

    கையினிலே கோலேந்திக்
    குறி சொல்லும் குலத்தவளா?
    குறுநகையோடு இருப்பவளா? இல்லை
    குடும்பச் சுமை சுமந்திட்டுக்
    குத்துவிளக்காய் வலம் வருபவளா?

    கடைத்தெருவில் காலாற
    நடந்துவரும் உன்னடையழகில்
    கறுப்புவெள்ளை என்பதெல்லாம்
    கண்டுகொள்ள மாட்டாரன்றோ!

    மொத்தத்தில் நீ நடந்து வந்தால்
    திருவாரூர்த் தேரழகி!
    காணக் கோடிக் கண்களெனக்
    காத்துநிற்பர் கடைத்தெருவினிலே
    பொருள் வாங்க மறப்பர் தன்னிலைதனிலே!

    மற்றவரின் கைபிடித்து
    மாறிவரும் காலநேரம்
    மணிக்கணக்கில் நீ உரைத்திட்டாலும்
    மாறிடுமோ உன் சொல் நயம்தான்!
    ஆம்
    நீ கையினிலே கோலேந்திக்
    குறிசொல்லும் குலத்தவளே!!

    *****

    குறிசொல்லும் அகவன் மகளைப் பற்றிய சிந்தனைகளைச் சிறப்பாகத் தம் கவிதைகளில் பதிவுசெய்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது…

    உழைப்பிலே…

    உலக வாழ்வில் உயர்வுபெற
    உன்னை நம்பி உழைத்திடுவாய்,
    பலனது சொல்வார் பிழைத்திடவே
    பார்த்தே உனது கையினையே,
    நலமென நம்பிப் படுத்திடாதே
    நாளை வாழ்வு உழைத்தால்தான்,
    நலம்பெற உதவிடு அவருக்கும்
    நம்பிச் செயல்படு கடமையிலே…!

    ”மனிதா! பலன்சொல்வார் சொல்லை நம்பாமல் உன்னை நம்பி உழைத்திடு! அவர் நலம்பெற அவருக்கும் உதவிடு!” என்று மனிதநேயத்தையும் உழைப்பின் உயர்வையும் இணைத்து வலியுறுத்தும் இக்கவிதையைப் படைத்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி

    அகஸ்தியர் இயற்றிய ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி என்ற புகழ்பெற்ற பாடலுக்குத் திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைத்தார். இந்த நிகழ்வுக்குத் தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி முன்னிலை வகித்தார். தம் தாயார் திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைத்த பாடலைப் புதல்வர் கிருஷ்ணகுமார் இங்கே பாடுகிறார். இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். அம்பிகையின் அருள் பெறுங்கள்.

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி
    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி

    ஆகம வேத கலாமய ரூபிணி
    ஆகம வேத கலாமய ரூபிணி

    அகில சராசர ஜனனி நாராயணி
    அகில சராசர ஜனனி நாராயணி

    நாக கங்கண நடராஜ மனோகரி
    நாக கங்கண நடராஜ மனோகரி

    ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி
    ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே

    பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும்
    பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும்

    பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும்
    பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும்

    உலக முழுதும்எனத் தகமுறக் காணவும்
    ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி
    ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே

    உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
    உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டிவைத்தாய்

    நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய்
    நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய்

    நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி
    நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே

    துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்
    துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்

    தொடர்ந்தமுன் மாயம்நீக்கிப் பிறந்த பயனைத்தந்தாய்
    தொடர்ந்தமுன் மாயம்நீக்கிப் பிறந்த பயனைத்தந்தாய்

    அன்பைப் புகட்டியுந்தன் ஆடலைக் காணச்செய்தாய்
    அன்பைப் புகட்டியுந்தன் ஆடலைக் காணச்செய்தாய்

    அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி
    அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி

    ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
    ஸ்ரீ லலிதாம்பிகையே

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிவகாமசுந்தரி ஜகதம்பா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    சிவகாமசுந்தரி ஜகதம்பா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘சிவகாமசுந்தரி ஜகதம்பா வந்தருள் தந்தருள்’ என்ற பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். அன்னையின் அருள் பெறுங்கள்.

    பல்லவி

    சிவகாம சுந்தரி ஜகதம்பா வந்தருள் தந்தருள் (சிவகாம)

    அனுபல்லவி

    பவ ரோகம் அற வேறு மருந்தேது பழ வினைகள் தொடராமல் உனை பஜிக்க (சிவகாம)

    சரணம்

    கேளாயோ என் முறைகள் உயர் சாம கீத வினோதினி போதுமுன் சோதனை
    தாளேனே அகதி நானே ராமதாசன் பணியும் அபிராமி வாமி (சிவகாம)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 120 (அப்பொழுது)

    சேக்கிழார் பாடல் நயம் – 120 (அப்பொழுது)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    கருவூர்ப் பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் எங்கும் இறைவழிபாட்டுக்கு உரிய நிகழ்வுகள் நடந்தன! அவ்வூர்ச் சிவனடியார் விறன்மிண்டர் என்பவராவார். அவர் தம் பெயருக்கேற்ற விறலும்  மிண்டும் கொண்டவர். இறைவன்பால் அன்பு கொண்ட அவர் இறைவழிபாடு செய்யும்  அடியார்களுக்கு ஆவன செய்வதற்கு உரிய பரசும் மனமும், இறைவழிபாட்டுக்கு இடையூறு செய்வாரைத்  தண்டிப்பதற்கு உரிய ஆயுதமாகிய பரசு என்ற மழுவா யுதத்தையும் ஏந்தினார்! சிவகாமியாண்டார் என்னும் அடியவர் ஒருவர், இறைவன்பால் பேரன்பு கொண்டு, அதிகாலையில்எழுந்து இறைவனுக்குச் சாத்துவதற்குரிய மலர்களையும், மாலைகளையும் நிறைத்த  பூக்குடலையையம்  ஏந்திக்கொண்டு எச்சில் தெறிக்காதவாறு வாயை மூடிக்கொண்டு, முதுமை  காரணமாக  ஊன்றுகோல் ஒன்றையும் கொண்டு திருக்கோயிலை  நோக்கி  நடந்து வந்தார். அப்போது அநபாயச் சோழனின்மரபில் வளர்ந்த  பட்டத்து யானையாகிய ஆண்களிறு  திருவிழா வுக்குரிய நவமிக்கு முதல்நாளில்  அமராவதி ஆற்றில் நீராடி, மிகுந்த பெருமிதத்தால் மதநீர் ஒழுக ஓடத்  தொடங்கியது!  அனைவரும் விலகிஓட, யானைப்பாகர்கள் அங்குசம்  முதலிய கோலேந்தி அதனை அடக்க முற்பட்டனர்; பெரிய மலை அசைந்து  வருவது போல விரைந்து வந்த யானை ஓர்ஓரமாக ஒதுங்கி நின்ற சிவகாமியாண்டார் ஏந்தி வந்தபூக்குடலையைப் பறித்துக்கொண்டு ஓடியது!

    யானைமேல் அமர்ந்த பாகர்கள் அந்தயானையை ஊழிக்காற்றைப் போல் விரைந்து செலுத்தினார்கள்; மார்பில்   பூணூல்  அணிந்த சிவனடியார் பதறி வெகுண்டார். மதங்கொண்ட யானையைப் பின் தொடர்ந்துதம் கையில் ஏந்திய தடியால் அடிக்க வந்தார்.

    பாடல்

    அப்பொழுது  அணையவொட்டாது   அடல்களிறு  அகன்று போக
    மெய்ப்பெரும்  தொண்டர் மூப்பால் விரைந்துபின் செல்ல மாட்டார்
    தப்பினர்  விழுந்து  கையால் தரையடித்து  எழுந்து  நின்று
    செப்பரும்   துயரம் நீடிச்  செயிர்த்துமுன்  ‘’சிவதா’’ என்றார்!

    பொருள்

    அப்பொழுது வலிய அவ்வியானை அவர் தன்னை அணுகவொட்டாதபடி நீங்கிப்போயினதாக, உண்மைத் தன்மையுடைய பெருந்தொண்டர் மூப்பினாலே விரைவாய்த் தொடர்ந்து அதன்பின்னே செல்ல மாட்டாதவராகி, அதனை விட்டார்; கீழே விழுந்து, கையினால் தரையில் அடித்து, மோதிப், பின் எழுந்து நின்று, சொல்லற்கரிய துன்பத்தால் நீடிக்கோபித்து முன்னே “சிவதா” என்பாரானார்.

    விளக்கம்

    தப்பினார் என்றசொல்,அந்தநேரத்தில் யானையை நெருங்காது குறி தவறி விழுந்தார் என்றும்,  அடித்திருப்பாராயின், யானையால்  தீங்குறுவார்; ஆதலின் அதனினின்றும் தப்பினர் என்றும்பொருள்படும்.

    விழுந்து  என்றசொல் , துயரத்தால் தாமே நிலத்தில் வீழ்ந்து . வேகத்திற் குறிவைத்து வந்த அது தப்பியதாதலின் அவ்வேகந் தப்பியதாற் கீழேவிழுந்து என்றும். தப்பி  என்றதனை  கால்தவறி வீழ்ந்து  என்றும்  உரைப்பார்.

    கையால் தரையடித்தல் – மிக்க துயரத்தால் நிகழ்வதோர் செயல். துயரமிகுதிப் பாட்டினாலே விழுந்து தரையடித்தலாகிய முதற் செயல் நிகழ்ந்த பின்னர் நிகழும் ஓலமாகிய  மெய்ப்பாடு. எழுந்து நிற்றலும் முறைகூறி ஓலிடுதலும் பின் நிகழ்வன.

    செப்பருந்துயரம் நீடி – என்றதொடர்  சொல்ல முடியாத துயரத்தான் மிக்கவராய். தாம் நித்தமும் நியதியாகச் செய்து வந்த இறைவன் திருப்பணி இன்று இவ்வாறு முட்டுப்பட்டமையால் பெருந்துயரமடைந்து.

    செயிர்த்து  என்றசொல் , திருப்பணி முட்டுமாறு செய்தலின் அதுசெய்த யானைமேல்  சினம் மிக்கது. பெருந்துயரத்தின் பின்னிகழும் உள்ளநிலை.

    சிவதா என்பார் –  என்றதொடர்,  இறைவனை நினைத்து ஓலமிடும் ஓலச்சொல். இது போல,  அவிதா என்பனவும், அப்பிராமண்ணியம் என்பதும் ஆபத்துக் காலங்களில் முறையிடும் ஓலச் சொற்கள். இவ்வாறன்றி இதற்கு எப்போதும் இவர் தம்மிச்சை இன்றிச் ‘’சிவதா , சிவதா!’’  என்றுரைப்பது  வழக்கம் போலும்

    இப்பாடலில் அடியார் துயரமும், சிவபக்திச் செயலும்,  வாய்விட்டுக் கதறி ஏங்குவதும் மனமுருகும் வண்ணம் அமைந்துள்ளன!

    Share
  • மகாத்மா காந்தியும் மாவீரன் பகத் சிங்கும்

    மகாத்மா காந்தியும் மாவீரன் பகத் சிங்கும்

    ஜோதிர்லதா கிரிஜா

    மாவீரன் என்று அழைக்கப்படும் பஞ்சாப் மாநில இளைஞர் பகத் சிங்  1931 ஆம் ஆண்டில், மார்ச் 23 ஆம் நாளில் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த இங்கிலாந்து அரசால் தூக்கிலிடப்பட்டார். மகாத்மா காந்தி மனம் வைத்திருந்தால் பகத் சிங்கின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று இன்றளவும் கம்யூனிஸ்ட் தோழர்கள் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பது உண்மையான வரலாற்றை யறிந்தவர்களின் நிலைப்பாடாகும். இதைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், பகத் சிங் பற்றிய வரலாற்றை அறிய வேண்டியது முக்கியம்.

    பகத் சிங்  லயால்பூர் எனும் ஊரில் 1907இல் பிறந்தார். இவருடைய தந்தை சர்தார் கிஷன் சிங், தாய்மாமன்கள் இருவர் ஆகியோர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களாவர். எனவே,  சிறு வயதிலிருந்தே பகத் சிங்கின் உள்ளத்தில் ஆங்கிலேயர்கள்பால் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றிவிட்டது.

    தம் பன்னிரண்டாம் வயதில் வெள்ளைக்காரர்கள் புரிந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் நடந்த இடத்தை அவை நடந்த சிறிது நேரத்துக்குப் பின் அங்கு சென்று பார்த்ததில் வெள்ளைக்காரர்கள் மீதான அவரது ஆத்திரம் அதன் உச்சத்தைத் தொட்டது. பின்னாளில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, முக்கியப் புரட்சியாளராகி, நவ்ஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி போன்ற புரட்சி இயக்கங்களோடு பகத் சிங் தொடர்புகொண்டதில் வியப்பு இல்லை.

    அவர் சிறு வயதிலேயே ஐரோப்பியப் புரட்சி இயக்கங்கள் பற்றிப் படித்து, அதன் பின் பொது உடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டார். மிக இளம் வயதிலேயே ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பு எனும் புரட்சி இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் ஆனார்.  ஒரு சமயம் இங்கிலாந்து அரசால் சிறையில் அடைக்கப்பட்ட போது, இங்கிலாந்துக் கைதிகளைப் போன்றே இந்தியக் கைதிகளும் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகச் சிறையில் 63 நாள்கள் போல்  உண்ணா நோன்பிருந்து அனைத்திந்திய கவனத்தையும் கவர்ந்தார்.

    இவ்வாறு, இந்தியாவில் விடுதலைப் போராட்ட இயக்கம் அதன் உச்சத்தில் இருந்த போது, வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக, இங்கிலாந்து அரசு சைமன் கமிஷன் எனும் குழுவை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. நம் நாட்டின் அப்போதைய அரசியல் நிலைமை பற்றிய அறிக்கையைச்  சமர்ப்பித்தலே அதன் பணியாகும்.  ஆனால் அதில் ஓர் இந்தியர் கூட இடம் பெற்றிருக்கவில்லை. எனவே, இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இக்குழுவை அறவே புறக்கணித்தன.  அந்தக் குழு  1928, அக்டோபரில் லாகூருக்கு வந்த போது,  அதற்கு எதிர்ப்புக் காட்டும் வண்ணமாக, பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லாலா லஜ்பத் ராய்,  மகாத்மா காந்தி வழியில் ஓர் அமைதி ஊர்வலத்தை நடத்தினார். ஆனால், ஜேம்ஸ் ஸ்காட் எனும் வெள்ளை அதிகாரியின் உத்தரவுப்படி, அமைதியான அந்த ஊர்வலக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினார்கள்.  அந்த அதிகாரி தாமே லாலா லஜ்பத் ராயைத் தாக்கினார். இதன் விளைவாய்க் கடுமையாய்க் காயப்படுத்தப்பட்ட அவர், ‘ என் மீது விழுந்த ஒவ்வோர் அடியும் ஆங்கிலேய ஆட்சியின் சவப் பெட்டியின் மீது அடிக்கப்பட்ட ஆணியாகும்’ என்று அறிவித்தார். ஆனால், காயங்களின் விளைவாக அவர் உடல்நலக் குறைவுற்று 1928 நவம்பரில் காலமானார்.

    இந்தக் கொடுமைக்குப் பழிவாங்க முடிவெடுத்த பகத் சிங்,  புரட்சியாளர்களான ராஜ்குரு, சுக் தேவ், சந்திரசேகர ஆசாத் ஆகிய நண்பர்களைக் கூட்டாளிகளாய்த் தம்முடன் அந்த வேலைக்காக இணைத்துக்கொண்டார்.  1928 டிசம்பர் 17ஆம் நாளில் பகத் சிங், ராஜ்குருவுடன் ஒரு பெரிய மரத்தின் பின் மறைவாக நின்றுகொண்டார். ஜெயகோபால் எனும் மற்றொரு நண்பர், எதிரே இருந்த ஒரு கல்லூரி வளாகத்துள் சைக்கிளுடன் நின்றுகொண்டார்.  எதிரில் இருந்த காவல் நிலையத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு வெள்ளை அதிகாரி தம் பைக்கைக் கிளப்பவிருந்த கணத்தில் ஜெயகோபால் ஜாடை காட்ட, பகத் சிங் அவரைச் சில முறை சுட்டார். அவர் இறந்து வீழ்ந்தார். பின்னர் பகத் சிங்கும் ராஜ்குருவும் கல்லூரிக்குள் ஓடினார்கள். எனினும் ஒரு காவலரால் இருவரும் துரத்தப்பட்டார்கள்.  ஆனால், சந்திர சேகர ஆசாத் அவரைச் சுட்டுக் கொன்றார். இதற்குள் பகத் சிங்கும் ராஜ் குருவும் தத்தம் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றனர்.

    இருப்பினும் சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை அதிகாரி ஜேம்ஸ் ஸ்காட் அல்லர். சாண்டர்ஸ் எனும் வேறோர் அதிகாரி. லாகூர் நகரம் முழுவதும் உடனேயே காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. ஆனால் பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் வெவ்வேறு மாறு வேடங்களில் தப்பிச் சென்றுவிட்டனர்.

    பின்னர் பகத் சிங், தம் நண்பன் பதுகேஷ்வர் தத்துடன் இணைந்து, தில்லி மத்திய சட்ட மன்றத்தில் இந்திய நலனுக்கு எதிரான இரண்டு மசோதாக்கள் ஏப்ரலில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது, அங்கே சென்று சில தடவைகள் சுட்டதுடன், இங்கிலாந்துக்கு எதிரான துண்டு அறிக்கைகளையும் அங்கே பறக்கவிட்டார்.  யாரும் சாகாத போதிலும், சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டன. வாயால் பேசினால் வெள்ளைக்காரர்களுக்குப் புரியவில்லை என்பதோடு அவர்கள் காதிலும் விழுவதில்லை என்பதால்,  வெடிகுண்டு மொழியில் பேசியதாகப் பகத் சிங் அறிவித்தார். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.

    இதற்கிடையே லாகூரில் இயங்கிவந்த வெடிகுண்டுத் தொழிற்சாலை, வெள்ளைக்கார அரசாங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. பகத்சிங்கின் கூட்டாளிகளில் சிலரே பகத்சிங்கின் நடவடிக்கைகள் பற்றி அரசுக்குத் தெரிவித்துவிட்டதன் விளைவு, இது.

    இது மட்டுமல்லாது, காவல்துறை  அதிகாரி சாண்டர்ஸைச் சுட்டுக் கொன்றவர்கள் பகத்சிங்கும் அவருடைய நெருங்கிய தோழர்களுமே என்பதையும் அவர்கள் அரசாங்கத்துக்குத் தெரிவித்தார்கள்.  இதனால், பகத் சிங்குடையவும் அவர்தம் நண்பர்களுடையவும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் தீர்மானமும் வெள்ளை  அரசால் நிறைவேற்றப்பட்டது.

    அதன் பின் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியினர் மகாத்மா காந்தியை அணுகி, பகத் சிங்கின் சார்பில் வெள்ளை அரசோடு அவரை வாதிடக் கோரினர்.  சாண்டர்ஸை அவர்கள் கொன்றதை அஹிம்சாவாதியான காந்தி ஆதரிக்கவில்லைதான். எனினும், வைசிராய் இர்வினைச் சந்தித்த அவர் வாய்மொழியாக மட்டுமின்றி அவர்கள் பால் கருணை காட்டக் கோரி ஒரு கடிதமும் கொடுத்தார்.   “அந்த இளைஞர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்றும், தூக்குத் தண்டனைக்குப் பதிலாக நாடுகடத்தும் தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்குமாறும் காந்தி தமது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். தமது வேண்டுகோளை ஏற்று வைசிராய் இர்வின் செயல்பட்டார் என்ற செய்தியை, கராச்சியில் அடுத்து நடக்கவிருந்த காங்கிரஸ் மாநாட்டில் தாம்  தெரிவிக்க வாய்த்தால் மக்கள் மகிழ்ச்சியடைவர் என்பதும் அவரது எண்ணம்.

    ஆனால், அவரது வேண்டுகோளைப் பரிசீலிப்பதாய்ச் சொன்ன வைசிராய் இர்வின், மரண தண்டனைக்கென்று குறிக்கப்பட்டிருந்த நாளுக்கும் முன்னதாகவே அவர்களைப் பஞ்சாப் அரசு இரகசியமாய்த் தூக்கிலிட்டதைக் கண்டும் காணாதவராய் இருந்துவிட்டார். காந்தி அது பற்றி அவரை வினவியபோது அது பஞ்சாப் அரசாகையால் தம்மால் தலையிட இயலவில்லை என்று சாமர்த்தியமாய்க் கைவிரித்துவிட்டார். அனைத்திந்தியாவுக்கும் வைசிராயாக இருந்தவரின் கட்டளைக்கு மாநில அரசு கட்டுப்படாதா என்ன? எப்பேர்ப்பட்ட ஏமாற்றுவேலை இது?

    இப்படித்தான் நடந்ததென்பதற்கான ஆவணங்கள் இருந்த நிலையிலும் கம்யூனிஸ்டுகள், பகத்சிங்கின் தூக்குத் தண்டனையைத் தடுக்க எவ்வித முயற்சியையும் காந்தி எடுக்கவில்லை என்று அவரைப் பழி சொல்லுவது நியாயந்தானா? இன்றளவும் கம்யூனிஸ்டுகள் அப்படியே தான் பரப்புரை செய்துகொண்டும் கட்டுரைகள் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். மகாத்மா காந்தி, எந்தக் குற்றவாளியையும் தூக்கில் போடக் கூடாது எனும் கொள்கையுடையவராவார். கடவுள் கொடுத்த உயிரைப் பறிக்கும் வேலை கடவுளுடையது மட்டுமே எனும் கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தவர்.  அப்படி இருக்கும் போது, பகத் சிங்கையும் அவருடைய நண்பர்களையும் தூக்கில் போடுவதை அவர் ஆதரித்து மவுனமாக இருந்திருப்பாரா?

    வேறு சிலர், பகத்சிங்கின் சார்பில் அவர் உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே என்று வாதிடுகிறார்கள். அவர் அஹிம்சாவாதி. கொலை செய்வதைச் சிறிதும் ஆதரிக்காதவர். அப்படிப்பட்ட கொள்கையுடையவர் கொலைகாரர்களுக்குப் பரிந்து உண்ணாவிரதம் இருப்பாரா என்ன? இதைப் பற்றியும் சிந்தித்துப் பாராமல் அவரைக் குற்றம் சொல்லுகிறார்களே!

    மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயைத் தூக்கில் போட, அன்றைய அரசு முடிவு செய்த போது, காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவரது கொள்கைக்கு அது மாறானதென்பதால், நாதுராம் கோட்சேக்கு ஆயுள் தண்டனை மட்டுமே அளிக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதிலிருந்தே காந்தியின் நிலைப்பாட்டைக் கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டாமா?

    இனியாகிலும், பகத் சிங்கைப் பொறுத்த வரையில், காந்தி அடிகளின் நற்பெயருக்கும் மனிதாபிமானத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வண்ணமாய்ப் பேசுவதையும் எழுதுவதையும் பொதுவுடைமைத் தோழர்கள் நிறுத்திக்கொள்வார்களா?

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 4

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 4

    மீனாட்சி பாலகணேஷ்

    மருதோன்றி அணிதல்

         (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    அழகுக்கலை என்பது பெண்ணோடு கூடிப்பிறந்து வளர்வது. அதற்கு வயது வரையறையே இல்லை! உலகம் முழுமையுமே, கூந்தல் அலங்காரங்களாகட்டும், விதவிதமான அணிமணிகள், ஆடைகள், அனைத்துமே பெண்களின் பார்வையில் ஒப்பற்றதொரு பரிமாணத்தை அடைந்து ஒளிர்வனவாகும்.

    இவற்றுள் ஒன்று மருதோன்றி, மருதாணி, மெஹந்தி – இவையெல்லாம் பெண்கள்  தங்கள் கரங்களையும் கால்களையும் அழகுபடுத்திக்கொள்ள அணிந்து கொள்ளும் இயற்கை சாதனங்கள் ஆகும். பருவமடைந்த இளம் பெண்கள் தொய்யில் எனப்படும் வண்ணக்குழம்பாலான சித்திரங்களைத் தங்கள் தோள்களிலும் மார்பிலும் வரைந்து கொள்வர் எனக் கலித்தொகை இலக்கியத்திலிருந்து அறிகிறோம்.

    மருதாணி அல்லது மருதோன்றி பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் தனியாகக் காணக்கிடைக்காவிடினும், இது ஒரு தொன்மையான அழகுக்கலை என அறியலாம். சூடான் போன்ற அரபிய நாடுகளிலும் மருதோன்றிக் குழம்பால் கை கால்களுக்கு சிவப்பு நிறமூட்டிக் கொள்வதனை அறிகிறோம்.

    மருதாணி அல்லது மருதோன்றி என்பது புதர்போல வளரும் ஒரு தாவரமாகும். மிகவும் மருத்துவ குணங்கள் வாய்ந்த இதன் இலைகளே பறித்து நன்கு அரைத்தெடுக்கப்பட்டு கைகளையும் கால்களையும் அழகுபடுத்தப் பயன்படுத்தப் படுகின்றன. மருதாணியின் தாவரவியல் பெயர் ‘லாசோனியா இனெர்மிஸ்’ (Lawsonia inermis). மருதாணி கொடுக்கும் நிறத்துக்கு அதிலிருக்கும் லாசோன் (Lawsone) எனும் பொருள் காரணமாகிறது.

    இது அழவணம், மருதாணி, மருதோன்றி எனவெல்லாம் வழங்கப்படும். அழகைச் சேர்ப்பதனால் அல்லது உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதனால் ஐ-வணம் எனும் பெயரும் இதற்குண்டு. பாதங்களில் அணியப்படுவதனால் சரணம் எனும் பெயரும் உண்டு. வெள்ளை நிறமுடைய இதன் மலர்கள் மணமிகுந்தவை. நகச்சுற்று எனும் விரல்களிலான நோய் மருதாணியை அணிய குணமாகும். கண்கள் குளிர்ச்சி பெறவும், நன்கு உறக்கம் வரவும் இவ்விலையை அரைத்துத் தலையில் தேய்த்துக்கொண்டு நீராடுவர். தலைக்குத் தேய்த்துக்கொள்ளும் எண்ணெயிலும் இதனை இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளுவர். பெண்கள் இதன் கூழைக்கொண்டு கைகளிலும் கால்களிலும் பல வடிவங்களை வரைந்து அழகு செய்து கொள்வர்.

    திருவிழா நாட்கள், குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளான, திருமணம், வளைகாப்பு, இன்னபிற அனைத்திலுமே மருதோன்றியும் ஒரு மங்கலப்பொருளாகச் சேர்த்துக்கொள்ளப்படும். மருதோன்றிக் குழம்பைக் கைகளிலும் கால்களிலும் வேண்டிய வகையில் வரைந்து இட்டுக்கொண்டு, அது செம்மண் நிறம் வருவதற்காக, அணிந்தபடியே சிறுமியரும், இளமங்கையரும், பெண்டிரும் உறங்கவும் செய்வர். நல்ல நிறம் வருவதற்காக இலைகளைப் பறித்து அரைக்கும்போதே உடன், மஞ்சள்கிழங்கு, செப்புக்காசு, சுண்ணாம்பு முதலியவற்றையும் சேர்த்து வைத்தரைப்பர். அந்தப்பூச்சு சிலமணி நேரங்களில் தானே உலர்ந்து உதிர ஆரம்பிக்கும். நன்கு நீரால் கழுவிவிட்டு எண்ணையைப் பூசுவர் சிலர். ஆக மொத்தம், கைக்கு அழகு, கண்ணுக்குக் குளிர்ச்சி, மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்கு, விளையாட்டு; வேறென்ன வேண்டும்?

    தற்காலத்தில் இந்த மருதாணிக்கூழ் கூம்புவடிவப் பொட்டலங்களாகக் கிடைக்கிறது. வட இந்திய மாநிலங்களில் திருமணத்தின் முன்பு மணப்பெண் மருதாணி (மெஹந்தி) அணிவது என்பது ஒரு சடங்காகவே ஆடல், பாடல், விருந்துடன் நிகழ்கிறது. தென்னகத்திற்கும் இவ்வழக்கு வந்து சேர்ந்துள்ளது. இதற்காகவே சித்திரக்குறிப்புகளும், அவற்றை வரையும் முறைகளைப் பயிற்றுவிக்கவும் குழுக்கள் கூட உள்ளன.

    வாழ்க்கையை ரசனையுடன் வாழும் வழிமுறைகள்!!

                                                   *****

    இந்த முன்னுரையுடன் நாம் இப்போது ஏழெட்டு வயதுச் சிறுமி கற்பகவல்லியன்னை மருதோன்றி அணிந்து மகிழும் சில காட்சிகளைக் கண்டு களிப்போமா?

    மலைமகளான கற்பகவல்லிக்கு ஒருநாள் மருதாணி இட்டுக்கொள்ள ஆசை பிறந்தது. உடனே தோழியர் விரைந்து சென்று நந்தவனத்தினின்றும் மருதாணி இலைகளைக் கொய்து மடியில் பாவாடையில் கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தனர். செவிலித்தாய் முத்தம்மாள் அவற்றை வாங்கிக்கொண்டு உரலில் அரைத்தெடுக்கச் சென்றாள்.

    “முத்தம்மா, மையா அரைச்சுக்கோ,” என வேணி அறிவுறுத்த, “ரெண்டு செப்புக்காசு இருந்தாக் குடு,” எனக் கேட்டு வாங்கி, அவள் சுருக்குப்பையிலிருந்து எடுத்துத்தர, அதனையும் உரலிலிட்டு மருதாணியோடு சேர்த்து நசுக்கினாள் முத்தம்மாள்!

    ‘கம கம’வென மருதாணிக்கே உரிய அருமையான நறுமணம் அந்தப்பகுதி பூராவும் நிறைந்தது. வெள்ளிக்கிண்ணத்தில் வழித்தெடுத்த மருதாணி உருண்டைகளையும் கூழையும் வைத்துக்கொண்டு கற்பகத்தைச் சுற்றி அமர்ந்தவண்ணம் அவள் கரங்களையும் கால், பாதங்களையும் அலங்கரிக்க முற்படுகின்றனர் தோழியர். பாடலும் பிறக்கின்றது.

    “கற்பகம் எனும் பொன்மயிலாக மயிலாப்பூர் எனும் பதியினில் வந்து, தனது பொற்கரங்களால் பூக்களை எடுத்து, பொன்மேருவை வில்லாக வளைத்தும், முப்புரங்களையும் எரித்த சிவபெருமானின் பொன்னடிகளில் இட்டுப் பூசை செய்பவளும், அடியவர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் கற்பகத்தருவாக நின்று தருபவளும், தன்னையே நம்பிப் பணியும் அடியார்களுக்குத் தவறாமல் உதவுபவளும், அபயகரம் காட்டுபவளும் ஆகியவளின்  கைகளுக்கு மருதாணி இடுவோம். தாமரை மலர்போலும் அவள் கைகளுக்கு மருதாணி இடுவோம்,” எனப் பாடுகின்றனர்.

                       பொன்மயிலாக மயிலையம் பதியினில் வந்து
                                பொற்கரத்தாலே பூவகைகள் கொண்டு
                       பொன்மேருவை வளைத்துப் புரமெரித் தவன்றன்
                                பொன்னடிக்கிட் டுப்போற்றித் துதித்து
                       நன்மையெலாம் அடியார்க்கு நாடோறு மருளி
                                நம்பிப்பணிந் தவர்களுக் குமுதவி
                       தன்மையுடன் தண்ணளிசெய் கைக்கு மருதாணி
                                தாமரைமலர்க் கைக்கு மருதாணி.     (1)

                                                               *****

    அடுத்து விரிகின்றதொரு அற்புதக் காட்சி! அன்னை மேனாவதியும் மற்ற செவிலியர், தோழியரும் கற்பகவல்லிக்கு மருதோன்றி இடும் காட்சி. ஒரு சிறு வெள்ளிக்குச்சியினைக் கொண்டு மருதாணிக்குழம்பால் பெண்மயிலாம் கற்பகத்தின் சிவந்த கைகளில் மயிலொன்றின் வடிவை வரைகிறாள் ஒரு பெண். மேனையின் ஆலோசனைப்படி அதைச்சுற்றி, திரிசூல இலச்சினையை வரைகிறாள் இன்னொருத்தி.  அடுத்து கால்களில் மருதாணி இட வாகாக, கற்பகவல்லியை, தேன்குரல் கொண்ட தோழிமார்கள், தென்றல்வீசும் முற்றத்தில் உயர்ந்த ஒரு பீடத்தில் அமர்த்திவைத்து, கைகளைப்பற்றி- (அவை எப்படிப்பட்ட கைகள்? – மான், மழு, சடையில் பிறைமதி தரித்த பிரானின் அருளைவேண்டி நித்தமும் பூசையைத் தவமாகவே செய்திடும் கைகள்) மருதோன்றி இட்டு, வான்முகிலைக் கண்டு களிநடம் புரியும் கற்பக வடிவானவளின் (அம்மை மயிலாக உருவெடுத்த வரலாறு) வண்ணத்திருவடிகளைப்பற்றி அவற்றிற்கும் மருதாணி இடுகின்றனராம்.

                       மேனையுமங்கே மருதோன்றிக் கூழ்கொண்டு
                                மேதினியை யாளுமுனது திருக்கையில்
                       மேகாரவடி விலுந்திரி சூலவடிவிலும்
                                மேவியழகாக மென்மை யாய்வரைய
                       தேனையும் பழித்திடுந்தீங் குரற்றோழியர்
                                தென்றலுல வுமுற்றந் தன்னிலே
                       தேடியேவழைத் துனையொ ளிர்மணித்
                                தவிசிருத்தி தளிர்க்கை தனைப்பற்றி
                       மானையுமழு வையுமதியை யுஞ்சடையணி
                                மகாதேவ னின்னரு ளைவேண்டி
                       மாதவப் பூசையினை நிகழ்த்திடும்
                                மாதேவி கற்பகவல்லி யுன்னை
                       வானைக்கண் டுகளிநட மாடிடும்
                                வனமயிலின் வண்ணத்திரு வடிபற்றி
                       பாங்காகவே மருதோன்றி யினாலான
                                பற்பல சித்திரம் வரைகிறார்.   (2)

                                                               *****

    ஒருபோது இமயாசலத்தில் சிவபிரான் உமையன்னைக்கு திருநீற்றின் பெருமையை விளக்கிக் கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு ஒரு வண்ணமயில் ஆடி வந்தது. உமையின் கவனம் சிதறியது. இதனைக் கண்ட சிவபிரான் சினம் கொண்டார். “நீயும் ஒரு மயிலாகப் பிறப்பாயாக,’ எனக் கூறினார். பின் அன்னை தன் தவறுணர்ந்து மனமுருகி வேண்டிட, தவம் செய்து தன்னை வழிபட்டுத் தன்னிடம் வந்து சேர அருளினார். அவ்வாறு அன்னை மயிலாக (கற்பகமாக) இருந்து தவம் செய்த இடமே திருமயிலை எனும் மயிலாப்பூர். அவ்வண்ணலைப் பூசிக்கும் அன்னையின் அழகான கைகளுக்கு அணிவிக்கும் அழகு மருதாணி எனத் தலபுராணத்தையும் இணைத்துக் கூறுகிறது இப்பாடல்.

                            நீற்றதன் பெருமையினை நேசமுடன் எம்மையன்
                                நிமலையு னக்குரைக்கநீ
                       நின்றதனைச் செவிமடுக்க வந்ததொரு தடையாம்
                                நீலமாமயி லொன்றுமே
                       மாற்றதனைக் கண்ணுற்று மனங்கருத் துத்தவற
                                மாதேவியுன் மீதவன்
                        முனிவுற்று மயிலாகப் பிறத்தியென வுரைக்க
                                மனங்கலங்கி நீயுவேண்ட
                       மாற்றியே மயிலையம் பதிதனில் சென்றெம்மை
                                பெருந்தவந் தானியற்றில்
                       மகிழ்ந்துமே மணங்கொள் வம்மாதுநீ செல்கென
                                மகாதேவனு ரைக்கக்கேட்டே
                       ஆற்றியே அருந்தவம் அண்ணலை யடைந்திட்டாய்
                                அம்பிகைகற் பகக்கொடியே!
                       அவனைநீ பூசிக்கு மழகான வுன்கைக்கு
                                ஐவணம ணிவிப்பமே.                       (3)

                                                   *****

    இதிலிருந்து மருதோன்றி அணியும் நிகழ்ச்சியும் ஏழெட்டு வயதான சிறுமியருக்கே உரிய அரிய பருவமொன்றாகும் என அறியலாம். பிள்ளைத்தமிழின் அதிகப்படியான பருவங்களுடன் இதனையும் இணைத்துக் கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான எண்ண ஓட்டம்!

    இதுபோன்றும் இன்னும் சில அழகிய நிகழ்வுகள் கொண்ட பிள்ளைப்பருவங்களைத் தொடர்ந்து காணலாம்.

                                                   (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)


     1, 2, 3- பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்- கற்பகவல்லி பிள்ளைத்தமிழ்- மருதோன்றிப்பருவம்

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 6

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 6

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்

    முன்னுரை

    ஒரு கவிதையை உணர்ச்சி வழிச் சுவைக்கலாம். கருத்து வழி உணரலாம். வடிவத்தின்வழி மனத்திருத்தலாம். கற்பனை வழி இரசிக்கலாம். இவை  அனைத்திலும் வெளிப்பட்டு நிற்கும் உத்திதான் ஒரு கவிதையை வெற்றிபெறச் செய்கிறது. அதாவது கற்பார் மனத்து நிலைத்து நிற்கக் காரணமாகிறது. உவமம் பொருள்விளக்கப் பகுதியாக இருந்தாலும் கவிதையின் அழகுக் கூறாக இருந்தாலும் அதன்வழி ஒரு கவிதை சுவைக்கப்படுவதையே இக்கட்டுரைகள் முன்னெடுகின்றன. கவிதைச் சுவை என்பது அலங்காரச் சொற்கள் அல்ல. முரண்பட்ட ஒலிகள் அல்ல. புரிந்து கொளள்ள முடியாத கருத்துக்கள் அல்ல. பொருந்தாத வடிவம் அல்ல. உவமத்தின் வழியும் ஒரு கவிதை சுவைக்கப்பட வேண்டும். இதுதான் தமிழ்க்கவிதைகளின் உவமப் பயன்பாட்டின் தலையாய குறிக்கோள் ஆகும். எனவே அது பற்றிய அறிஞர்களின் கருத்துக்களை இந்தப்பகுதி முன்னெடுப்பதாக அமைகிறது.

    அணியிலக்கணத்தினால் அடைந்த பயன்

    அணிகள் செய்யுளில் அமையும் கற்பனைகளின் பல்வேறு அழகுகளாகும். அந்த அழகுகளைப் பொதுவாகப் பாகுபாடு செய்தால் போதும். தொல்காப்பியர் அந்த அளவிற்குத்தான் விளக்கம் தந்தார். உவமை, உள்ளுறை உவமை, இறைச்சி என்பவற்றை அவர் விளக்கியிருத்தல் பயனுள்ளதாகும். ஆனால் பிற்கால அணியிலக்கண ஆசிரியர்கள் அணிகளை முப்பத்தைந்தாகவும் அறுபதாகவும் நூறாகவும் அவற்றின் பல்வேறு உட்பிரிவுகளாகவும் பகுத்துப் பெருக்கியுள்ளனர். தண்டியலங்கார ஆசிரியர் முப்பத்தைந்து அணிகளைக் கூறியுள்ளார். இந்த முப்பத்தைந்துள் ஒன்றான உவமையணியை நாற்பதாக்கிக் காட்டியுள்ளார். உவமத்தின் செறிவாகிய உருவகத்தை இருபத்தொன்றாக வகுத்துள்ளார். ஓர்  அணி மற்றோர் அணியுடன் கலந்து வரும் கலப்பு வகைகளை விரிவாகக் கூறியுள்ளார். முன்னவிலக்கணி பதினேழு வகை, வேற்றுப்பொருள் வைப்பணி எட்டு வகை, வேற்றுமையணி பத்துவகை என இவ்வாறே பல அணிகளின் உட்பிரிவுகளையெல்லாம் ஓதியுள்ளார். இவ்வாறு ஓதப்பட்ட முப்பத்தைந்து அணிகள் அல்லாமல் மடக்கு என்னும் சொல்லலங்கார வகைகளையும் பல்வகைச் சித்திரக் கவிகளையும் விளக்கிக் காட்டியுள்ளார். இவ்வாறே மற்ற அணியிலக்கண ஆசிரியரும் விரித்துரைத்துள்ளனர். இவ்வளவு விரிவாக இவர்கள் ஓதியுள்ள அணியிலக்கணத்தைக் கற்பதால் பெறும் பயனோ மிகச் சிறிதாக உள்ளது.

    வடமொழியில் அமைந்த அலங்கார நூல்களைக் கண்மூடி மொழிபெயர்த்துப் போற்ற தொடங்கியதன் விளைவு இது. வடமொழி கற்ற இடைக்காலப் புலவர் சிலர் தமிழ் இலக்கிய மரபை மறந்தும் தொல்காப்பியர் தம் பண்பட்ட நெறியைப் புறக்கணித்தும் வடமொழி நூல்களை ஆய்ந்துணராமல் அப்படியே தமிழில் தர முயன்றனர். அம்முயற்சி வேகத்தால் எழுந்த அணியிலக்கண நூல்களால் பெரும்பயன் விளையவில்லை.”

    என்னும் பாலசுந்தரனார் கருத்து மிகச்சிறந்த ஆய்வுண்மையை உரைப்பதாக அமையும் பாங்கு உணரத்தக்கது.

    வேண்டாத அணிநூலர் காட்டிய விரும்பாத பாதை

    தொல்காப்பிய ‘இறைச்சி’ என்பது வடமொழியில் ‘தொனி’ என்பதனோடு ஓரளவு ஒத்துப் போகும் இயல்புடையது. வடமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்திய புலவர்கள் இத்தொனியை இறைச்சியோடு ஒப்பிட்டுச் சிந்தித்து எழுதியிருப்பின் கொஞ்சம் பயன் விளைந்திருக்கும். மேலும் வடமொழியில் ‘ரசம்’ என்பதும் தொல்காப்பியர் சுட்டும் மெய்ப்பாடுகளும் ஓரளவு ஒப்புமை உடையன. தொல்காப்பியர் மெய்ப்பாடுகளின் பல்வகைகளையும் தெளிவாக விளக்கியிருக்கிறார். இடைக்காலத்தில் தமிழில் அணியிலக்கணம் செய்த புலவர் பெருமக்கள் மேலே சுட்டியவைகளையெல்லாம் விளக்கிக் காட்ட முயலாமல், அவற்றையெல்லாம் ‘சுவையணி’ எனப் புதிதாக ஓரணியை அமைத்து அவற்றை அதற்குள் அடைத்துக் காட்ட எத்தனித்தனர். இதனால் வடமொழியில் ‘ரசமும் தொனியும்’ அறிந்து மகிழ்வதைப் போலத் தமிழில் ‘மெய்ப்பாடும் இறைச்சியும்’ அறிந்து மகிழ்வதற்குரிய வாய்ப்பில்லாமல் போயிற்று.

    இன்று தமிழிலுள்ள அணிகளாலும் அணிபற்றிக் கூறும் பகுதிகளாலும் கருதிய பயன் விளையவில்லை எனலாம். தமிழில் அணியியல் சிறப்புற வளராமை மட்டுமன்றி வேண்டாத வகையில் வளர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதன்று”.

    என்னும் அறிஞர் ஜெயராமனின் கருத்து வலுவான ஒன்றாகவே தெரிகிறது.

    உவமம் பற்றிய  டாக்டர் மு.வ. அவர்களின் கருத்து

    தனித்தன்மை மிக்க தமிழியல் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்க இடம்பெற்ற மூதறிஞர் மு.வ. அவர்கள் பிற்கால அணியிலக்கணம் பற்றிய தமக்கே உரிய அடக்கத்துடனும் ஆனால் தெளிவு, உறுதி ஆகியவற்றுடன் கலந்து உரைக்கும் கீழ்க்கண்ட நடுநிலையான கருத்தைப் புறந்தள்ளுதல்  ஒல்லாது.

    தண்டியலங்காரம் முப்பத்தாறு அணிகளைக் கூறுகிறது. மாறனலங்காரம் அறுபத்து நான்கு அணிகளை எடுத்துரைக்கின்றது. குவலயாநந்தம் என்ற நூல் நூறு அணிகளைக் கூறுகிறது. ஆயினும் அவற்றுட் பல வேண்டாத விரிவுகளாக உள்ளன”.

    சங்க இலக்கியத்திலிருந்து தமிழின் மறுமலர்ச்சிக்கால இலக்கியம்வரைத் தடம் பதித்துச் சென்றவர் மூதறிஞர் மு.வ. ‘வேண்டாத விரிவுகள்’ என அணியிலக்கணத்தை அவர் சுட்டுவது பிற்கால அணிகளால் தமிழ்க்கவிதைகளின் அழகு பெரிதும் சீர்குலைவிற்கு ஆளாகியிருப்பதைக் குறிப்பாகச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

    கலைஞரும் உவமமும்

    உவமத்தைப் பற்றிய இதுகாறும் ஆராயப்பட்ட மரபுசார்ந்த அறிஞர்களின் கருத்துக்களோடு இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கியப் படைப்புலகத்தின் பரிமாணத்தைத் தமது எழுதுகோலால் பெருக்கிக் காட்டியவரும், தமிழறிந்தவரையெல்லாம் தமக்கு எல்லையாக்கித், தமிழிலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் தமது ஆளுகைக்குள் உட்படுத்தியவருமான கலைஞர் அவர்களின் கருத்தையும் ஈண்டுச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகலாம். கலைஞர் தாம் எழுதிய ‘தொல்காப்பியப் பூங்கா’ என்னும் வரையறைக்குட்பட்ட இலக்கண உரைநூலுள் உவமத்தைப் பற்றிய தமது கருத்தைத் தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் பதிவு செய்திருப்பதை அறியமுடிகிறது.

    “வினை பயன் மெய் உரு என்ற நான்கே
    வகைபெற வந்த உவமத் தோற்றம்”

    என்னும் நூற்பாவிற்கு விளக்கவுரை தரும் கலைஞர்,

    “நூற்பாவில் ‘வகைபெற வந்த உவமத் தோற்றம்’ என்பதற்குப் பாகுபட வந்த உவமைக்கண்’ என்று பொருள். இவற்றில் பார்வைக்குப் புலனாகும் பொருள்களும் என்று ஒரு வகையும், அவ்வாறு அல்லாமல் அந்த உவமைகள் செவியினாலும் நாவினாலும் மூக்கினாலும் மெய்யினாலும் மனத்தினாலும் அறியக் கூடியவை என்று ஒரு வகையும் உண்டு.  மொத்தத்தில் பாகுபட வருதல் என்பதாவது ‘கண் முதலிய பொறிகளுக்குப் புலப்படுபவையும்’ ‘பொறிகளுக்குப் புலனாகாது ‘மனத்திற்குப் புலனாவனவும்’ என இருவகையாகும்.”

    எனக் குறிப்பிடுகிறார். ‘உவமம் உருவத்தாலும் அமையலாம்., உணரத்தக்கதாகவும் அமையலாம்’ என்பது மேற்படி நூற்பாவிற்குக் கலைஞர் தரும் விளக்கமாகும்.  இலக்கியப் படைப்பாளர் என்ற வகையில் மட்டுமல்லாமல் ஏறத்தாழ எழுபது ஆண்டுக் காலமாக அரசியலையே தமது தலைப்பணியாகக் கொண்டியங்கும் ஒருவர் சிந்தனையில் கூட, உவமம் பெற்றிருக்கும் உயர்ந்த இடத்தைச் சுட்டிக் காட்டுதற்காகவே இங்கே அவர்தம் கருத்து சுட்டப்பட்டது. இலக்கியத்தின் வடிவங்கள் எத்தகைய மாறுபாட்டுடன் அமைந்தாலும் ‘உவமம்’ எங்கும் எதிலும் தன் முத்திரையைப் பதித்துக் காட்டும் வல்லமையுடையது என்பதும் இதனால் புலனாகும் உண்மையாகும்.

    நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் தரும் அரிய விளக்கம்

    இவ்வாறு உவமம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள் பல்வேறாக அமைந்திருக்கும் நிலையில் முதுபெரும் தமிழ்ச்சான்றோரும் பெரும்புலவருமான நாவலர் ந.மு.வே. நாட்டார் அவர்கள் தந்திருக்கும் விளக்கம் ஈண்டுச் சுட்டத்தகுந்தது. பிறருடைய கருத்துக்களெல்லாம் உவமத்தைப் பொருட்பகுதி, அணிப்பகுதி என்ற இரண்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க, நாட்டார் அவர்கள் அவற்றுடன் அளவையியலையும் (LOGIC) இணைத்துக் கொண்டு தந்திருக்கும் அரியதொரு விளக்கம் இவ்வாறு அமைகிறது.

    “உவமம்’ என்பது ஒன்று. அது பொருளிலக்கணத்தில் நிலைபெறும் இடமும் அணியிலக்கணத்துள் பெறுகிற இடமும் அளவை நூல்களில் பெறுமிடமும் வெவ்வேறானவை.’ இதனால் தமிழ்நூலார் பொருளிலக்கணத்தின் ஒருபகுதியாகக் கொள்ளும் உவமத்தை அணிநூலார் உவம அணியென்று கொண்டாங்கு, அளவைநூலார் உவம அளவை என்று கொண்டனர் என அறிக.”

    நாட்டார் அவர்களின் கருத்தடிப்படையில் பொருளிலக்கணம், அணியிலக்கணம், அளவைநூல் என முப்பெரும் களங்களில் உவமம் தனித்தனி இயல்பு கொண்டு செயல்படுவதாகக் கொள்ளலாம். இதனால் தொல்காப்பியத்தின் உவமவியலுக்கும் பிற்கால அணியிலக்கணத்தார் கூறும் உவமையணிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதும், தொல்காப்பியம் பொருட்பகுதியாகவே உவமத்தைக் கருதியது என்பதும், அணியிலக்கணம் கண்டார் உவமையைச் செய்யுளுக்கு அணியாகக் கொண்டார் என்பதும் இவையிரண்டினின்றும் முற்றிலும் மாறுபட்டு அளவையியலில் அதன் பங்களிப்பு “காட்சி, அனுமானம், ஆகமம், உவமை, அருத்தாபத்தி, இன்மை”  என்னும் ஆறனுள் ஒன்றாகும் என்பதும் தெளிவாகலாம்.

    நிறைவுரை

    சென்ற சில பத்திகளில் தரவுகளின் அடிப்படையிலும் சான்றோர்  கருத்துக்களின் அடிப்படையிலும் உவமம் என்பது தனித்தமிழ் நெறி என்பதும் அதன் உள்ளீடுகளான ‘இறைச்சி உள்ளுறை’ முதலியன போதிய கவனம் பெறாது போனது என்பதும் விளக்கப்பட்டன. பொருட்பகுதி, செய்யுளணி, அளவை என்னும் முப்பரிமாணங்கள் உவமத்தின் இயங்குதளங்களாகச் செயல்பட்டிருக்கின்றன என்பதும் விளக்கப்பட்டது. கவிதைப் பொருளைச் சிறக்கச் செய்வதிலும் அதன் நிலைப்பேற்றிலும் உவமத்தின் பங்களிப்பைப் பற்றிய சிந்தனைகள் தொடரும்!

    (தொடரும்…)

    Share