தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 6

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உவமம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்

முன்னுரை

ஒரு கவிதையை உணர்ச்சி வழிச் சுவைக்கலாம். கருத்து வழி உணரலாம். வடிவத்தின்வழி மனத்திருத்தலாம். கற்பனை வழி இரசிக்கலாம். இவை  அனைத்திலும் வெளிப்பட்டு நிற்கும் உத்திதான் ஒரு கவிதையை வெற்றிபெறச் செய்கிறது. அதாவது கற்பார் மனத்து நிலைத்து நிற்கக் காரணமாகிறது. உவமம் பொருள்விளக்கப் பகுதியாக இருந்தாலும் கவிதையின் அழகுக் கூறாக இருந்தாலும் அதன்வழி ஒரு கவிதை சுவைக்கப்படுவதையே இக்கட்டுரைகள் முன்னெடுகின்றன. கவிதைச் சுவை என்பது அலங்காரச் சொற்கள் அல்ல. முரண்பட்ட ஒலிகள் அல்ல. புரிந்து கொளள்ள முடியாத கருத்துக்கள் அல்ல. பொருந்தாத வடிவம் அல்ல. உவமத்தின் வழியும் ஒரு கவிதை சுவைக்கப்பட வேண்டும். இதுதான் தமிழ்க்கவிதைகளின் உவமப் பயன்பாட்டின் தலையாய குறிக்கோள் ஆகும். எனவே அது பற்றிய அறிஞர்களின் கருத்துக்களை இந்தப்பகுதி முன்னெடுப்பதாக அமைகிறது.

அணியிலக்கணத்தினால் அடைந்த பயன்

அணிகள் செய்யுளில் அமையும் கற்பனைகளின் பல்வேறு அழகுகளாகும். அந்த அழகுகளைப் பொதுவாகப் பாகுபாடு செய்தால் போதும். தொல்காப்பியர் அந்த அளவிற்குத்தான் விளக்கம் தந்தார். உவமை, உள்ளுறை உவமை, இறைச்சி என்பவற்றை அவர் விளக்கியிருத்தல் பயனுள்ளதாகும். ஆனால் பிற்கால அணியிலக்கண ஆசிரியர்கள் அணிகளை முப்பத்தைந்தாகவும் அறுபதாகவும் நூறாகவும் அவற்றின் பல்வேறு உட்பிரிவுகளாகவும் பகுத்துப் பெருக்கியுள்ளனர். தண்டியலங்கார ஆசிரியர் முப்பத்தைந்து அணிகளைக் கூறியுள்ளார். இந்த முப்பத்தைந்துள் ஒன்றான உவமையணியை நாற்பதாக்கிக் காட்டியுள்ளார். உவமத்தின் செறிவாகிய உருவகத்தை இருபத்தொன்றாக வகுத்துள்ளார். ஓர்  அணி மற்றோர் அணியுடன் கலந்து வரும் கலப்பு வகைகளை விரிவாகக் கூறியுள்ளார். முன்னவிலக்கணி பதினேழு வகை, வேற்றுப்பொருள் வைப்பணி எட்டு வகை, வேற்றுமையணி பத்துவகை என இவ்வாறே பல அணிகளின் உட்பிரிவுகளையெல்லாம் ஓதியுள்ளார். இவ்வாறு ஓதப்பட்ட முப்பத்தைந்து அணிகள் அல்லாமல் மடக்கு என்னும் சொல்லலங்கார வகைகளையும் பல்வகைச் சித்திரக் கவிகளையும் விளக்கிக் காட்டியுள்ளார். இவ்வாறே மற்ற அணியிலக்கண ஆசிரியரும் விரித்துரைத்துள்ளனர். இவ்வளவு விரிவாக இவர்கள் ஓதியுள்ள அணியிலக்கணத்தைக் கற்பதால் பெறும் பயனோ மிகச் சிறிதாக உள்ளது.

வடமொழியில் அமைந்த அலங்கார நூல்களைக் கண்மூடி மொழிபெயர்த்துப் போற்ற தொடங்கியதன் விளைவு இது. வடமொழி கற்ற இடைக்காலப் புலவர் சிலர் தமிழ் இலக்கிய மரபை மறந்தும் தொல்காப்பியர் தம் பண்பட்ட நெறியைப் புறக்கணித்தும் வடமொழி நூல்களை ஆய்ந்துணராமல் அப்படியே தமிழில் தர முயன்றனர். அம்முயற்சி வேகத்தால் எழுந்த அணியிலக்கண நூல்களால் பெரும்பயன் விளையவில்லை.”

என்னும் பாலசுந்தரனார் கருத்து மிகச்சிறந்த ஆய்வுண்மையை உரைப்பதாக அமையும் பாங்கு உணரத்தக்கது.

வேண்டாத அணிநூலர் காட்டிய விரும்பாத பாதை

தொல்காப்பிய ‘இறைச்சி’ என்பது வடமொழியில் ‘தொனி’ என்பதனோடு ஓரளவு ஒத்துப் போகும் இயல்புடையது. வடமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்திய புலவர்கள் இத்தொனியை இறைச்சியோடு ஒப்பிட்டுச் சிந்தித்து எழுதியிருப்பின் கொஞ்சம் பயன் விளைந்திருக்கும். மேலும் வடமொழியில் ‘ரசம்’ என்பதும் தொல்காப்பியர் சுட்டும் மெய்ப்பாடுகளும் ஓரளவு ஒப்புமை உடையன. தொல்காப்பியர் மெய்ப்பாடுகளின் பல்வகைகளையும் தெளிவாக விளக்கியிருக்கிறார். இடைக்காலத்தில் தமிழில் அணியிலக்கணம் செய்த புலவர் பெருமக்கள் மேலே சுட்டியவைகளையெல்லாம் விளக்கிக் காட்ட முயலாமல், அவற்றையெல்லாம் ‘சுவையணி’ எனப் புதிதாக ஓரணியை அமைத்து அவற்றை அதற்குள் அடைத்துக் காட்ட எத்தனித்தனர். இதனால் வடமொழியில் ‘ரசமும் தொனியும்’ அறிந்து மகிழ்வதைப் போலத் தமிழில் ‘மெய்ப்பாடும் இறைச்சியும்’ அறிந்து மகிழ்வதற்குரிய வாய்ப்பில்லாமல் போயிற்று.

இன்று தமிழிலுள்ள அணிகளாலும் அணிபற்றிக் கூறும் பகுதிகளாலும் கருதிய பயன் விளையவில்லை எனலாம். தமிழில் அணியியல் சிறப்புற வளராமை மட்டுமன்றி வேண்டாத வகையில் வளர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதன்று”.

என்னும் அறிஞர் ஜெயராமனின் கருத்து வலுவான ஒன்றாகவே தெரிகிறது.

உவமம் பற்றிய  டாக்டர் மு.வ. அவர்களின் கருத்து

தனித்தன்மை மிக்க தமிழியல் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்க இடம்பெற்ற மூதறிஞர் மு.வ. அவர்கள் பிற்கால அணியிலக்கணம் பற்றிய தமக்கே உரிய அடக்கத்துடனும் ஆனால் தெளிவு, உறுதி ஆகியவற்றுடன் கலந்து உரைக்கும் கீழ்க்கண்ட நடுநிலையான கருத்தைப் புறந்தள்ளுதல்  ஒல்லாது.

தண்டியலங்காரம் முப்பத்தாறு அணிகளைக் கூறுகிறது. மாறனலங்காரம் அறுபத்து நான்கு அணிகளை எடுத்துரைக்கின்றது. குவலயாநந்தம் என்ற நூல் நூறு அணிகளைக் கூறுகிறது. ஆயினும் அவற்றுட் பல வேண்டாத விரிவுகளாக உள்ளன”.

சங்க இலக்கியத்திலிருந்து தமிழின் மறுமலர்ச்சிக்கால இலக்கியம்வரைத் தடம் பதித்துச் சென்றவர் மூதறிஞர் மு.வ. ‘வேண்டாத விரிவுகள்’ என அணியிலக்கணத்தை அவர் சுட்டுவது பிற்கால அணிகளால் தமிழ்க்கவிதைகளின் அழகு பெரிதும் சீர்குலைவிற்கு ஆளாகியிருப்பதைக் குறிப்பாகச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

கலைஞரும் உவமமும்

உவமத்தைப் பற்றிய இதுகாறும் ஆராயப்பட்ட மரபுசார்ந்த அறிஞர்களின் கருத்துக்களோடு இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கியப் படைப்புலகத்தின் பரிமாணத்தைத் தமது எழுதுகோலால் பெருக்கிக் காட்டியவரும், தமிழறிந்தவரையெல்லாம் தமக்கு எல்லையாக்கித், தமிழிலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் தமது ஆளுகைக்குள் உட்படுத்தியவருமான கலைஞர் அவர்களின் கருத்தையும் ஈண்டுச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகலாம். கலைஞர் தாம் எழுதிய ‘தொல்காப்பியப் பூங்கா’ என்னும் வரையறைக்குட்பட்ட இலக்கண உரைநூலுள் உவமத்தைப் பற்றிய தமது கருத்தைத் தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் பதிவு செய்திருப்பதை அறியமுடிகிறது.

“வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம்”

என்னும் நூற்பாவிற்கு விளக்கவுரை தரும் கலைஞர்,

“நூற்பாவில் ‘வகைபெற வந்த உவமத் தோற்றம்’ என்பதற்குப் பாகுபட வந்த உவமைக்கண்’ என்று பொருள். இவற்றில் பார்வைக்குப் புலனாகும் பொருள்களும் என்று ஒரு வகையும், அவ்வாறு அல்லாமல் அந்த உவமைகள் செவியினாலும் நாவினாலும் மூக்கினாலும் மெய்யினாலும் மனத்தினாலும் அறியக் கூடியவை என்று ஒரு வகையும் உண்டு.  மொத்தத்தில் பாகுபட வருதல் என்பதாவது ‘கண் முதலிய பொறிகளுக்குப் புலப்படுபவையும்’ ‘பொறிகளுக்குப் புலனாகாது ‘மனத்திற்குப் புலனாவனவும்’ என இருவகையாகும்.”

எனக் குறிப்பிடுகிறார். ‘உவமம் உருவத்தாலும் அமையலாம்., உணரத்தக்கதாகவும் அமையலாம்’ என்பது மேற்படி நூற்பாவிற்குக் கலைஞர் தரும் விளக்கமாகும்.  இலக்கியப் படைப்பாளர் என்ற வகையில் மட்டுமல்லாமல் ஏறத்தாழ எழுபது ஆண்டுக் காலமாக அரசியலையே தமது தலைப்பணியாகக் கொண்டியங்கும் ஒருவர் சிந்தனையில் கூட, உவமம் பெற்றிருக்கும் உயர்ந்த இடத்தைச் சுட்டிக் காட்டுதற்காகவே இங்கே அவர்தம் கருத்து சுட்டப்பட்டது. இலக்கியத்தின் வடிவங்கள் எத்தகைய மாறுபாட்டுடன் அமைந்தாலும் ‘உவமம்’ எங்கும் எதிலும் தன் முத்திரையைப் பதித்துக் காட்டும் வல்லமையுடையது என்பதும் இதனால் புலனாகும் உண்மையாகும்.

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் தரும் அரிய விளக்கம்

இவ்வாறு உவமம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள் பல்வேறாக அமைந்திருக்கும் நிலையில் முதுபெரும் தமிழ்ச்சான்றோரும் பெரும்புலவருமான நாவலர் ந.மு.வே. நாட்டார் அவர்கள் தந்திருக்கும் விளக்கம் ஈண்டுச் சுட்டத்தகுந்தது. பிறருடைய கருத்துக்களெல்லாம் உவமத்தைப் பொருட்பகுதி, அணிப்பகுதி என்ற இரண்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க, நாட்டார் அவர்கள் அவற்றுடன் அளவையியலையும் (LOGIC) இணைத்துக் கொண்டு தந்திருக்கும் அரியதொரு விளக்கம் இவ்வாறு அமைகிறது.

“உவமம்’ என்பது ஒன்று. அது பொருளிலக்கணத்தில் நிலைபெறும் இடமும் அணியிலக்கணத்துள் பெறுகிற இடமும் அளவை நூல்களில் பெறுமிடமும் வெவ்வேறானவை.’ இதனால் தமிழ்நூலார் பொருளிலக்கணத்தின் ஒருபகுதியாகக் கொள்ளும் உவமத்தை அணிநூலார் உவம அணியென்று கொண்டாங்கு, அளவைநூலார் உவம அளவை என்று கொண்டனர் என அறிக.”

நாட்டார் அவர்களின் கருத்தடிப்படையில் பொருளிலக்கணம், அணியிலக்கணம், அளவைநூல் என முப்பெரும் களங்களில் உவமம் தனித்தனி இயல்பு கொண்டு செயல்படுவதாகக் கொள்ளலாம். இதனால் தொல்காப்பியத்தின் உவமவியலுக்கும் பிற்கால அணியிலக்கணத்தார் கூறும் உவமையணிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதும், தொல்காப்பியம் பொருட்பகுதியாகவே உவமத்தைக் கருதியது என்பதும், அணியிலக்கணம் கண்டார் உவமையைச் செய்யுளுக்கு அணியாகக் கொண்டார் என்பதும் இவையிரண்டினின்றும் முற்றிலும் மாறுபட்டு அளவையியலில் அதன் பங்களிப்பு “காட்சி, அனுமானம், ஆகமம், உவமை, அருத்தாபத்தி, இன்மை”  என்னும் ஆறனுள் ஒன்றாகும் என்பதும் தெளிவாகலாம்.

நிறைவுரை

சென்ற சில பத்திகளில் தரவுகளின் அடிப்படையிலும் சான்றோர்  கருத்துக்களின் அடிப்படையிலும் உவமம் என்பது தனித்தமிழ் நெறி என்பதும் அதன் உள்ளீடுகளான ‘இறைச்சி உள்ளுறை’ முதலியன போதிய கவனம் பெறாது போனது என்பதும் விளக்கப்பட்டன. பொருட்பகுதி, செய்யுளணி, அளவை என்னும் முப்பரிமாணங்கள் உவமத்தின் இயங்குதளங்களாகச் செயல்பட்டிருக்கின்றன என்பதும் விளக்கப்பட்டது. கவிதைப் பொருளைச் சிறக்கச் செய்வதிலும் அதன் நிலைப்பேற்றிலும் உவமத்தின் பங்களிப்பைப் பற்றிய சிந்தனைகள் தொடரும்!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *