புதிய பிள்ளைப்பருவங்கள் – 4
மீனாட்சி பாலகணேஷ்
மருதோன்றி அணிதல்
(பெண்பால் பிள்ளைத்தமிழ்)
அழகுக்கலை என்பது பெண்ணோடு கூடிப்பிறந்து வளர்வது. அதற்கு வயது வரையறையே இல்லை! உலகம் முழுமையுமே, கூந்தல் அலங்காரங்களாகட்டும், விதவிதமான அணிமணிகள், ஆடைகள், அனைத்துமே பெண்களின் பார்வையில் ஒப்பற்றதொரு பரிமாணத்தை அடைந்து ஒளிர்வனவாகும்.
இவற்றுள் ஒன்று மருதோன்றி, மருதாணி, மெஹந்தி – இவையெல்லாம் பெண்கள் தங்கள் கரங்களையும் கால்களையும் அழகுபடுத்திக்கொள்ள அணிந்து கொள்ளும் இயற்கை சாதனங்கள் ஆகும். பருவமடைந்த இளம் பெண்கள் தொய்யில் எனப்படும் வண்ணக்குழம்பாலான சித்திரங்களைத் தங்கள் தோள்களிலும் மார்பிலும் வரைந்து கொள்வர் எனக் கலித்தொகை இலக்கியத்திலிருந்து அறிகிறோம்.
மருதாணி அல்லது மருதோன்றி பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் தனியாகக் காணக்கிடைக்காவிடினும், இது ஒரு தொன்மையான அழகுக்கலை என அறியலாம். சூடான் போன்ற அரபிய நாடுகளிலும் மருதோன்றிக் குழம்பால் கை கால்களுக்கு சிவப்பு நிறமூட்டிக் கொள்வதனை அறிகிறோம்.
மருதாணி அல்லது மருதோன்றி என்பது புதர்போல வளரும் ஒரு தாவரமாகும். மிகவும் மருத்துவ குணங்கள் வாய்ந்த இதன் இலைகளே பறித்து நன்கு அரைத்தெடுக்கப்பட்டு கைகளையும் கால்களையும் அழகுபடுத்தப் பயன்படுத்தப் படுகின்றன. மருதாணியின் தாவரவியல் பெயர் ‘லாசோனியா இனெர்மிஸ்’ (Lawsonia inermis). மருதாணி கொடுக்கும் நிறத்துக்கு அதிலிருக்கும் லாசோன் (Lawsone) எனும் பொருள் காரணமாகிறது.
இது அழவணம், மருதாணி, மருதோன்றி எனவெல்லாம் வழங்கப்படும். அழகைச் சேர்ப்பதனால் அல்லது உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதனால் ஐ-வணம் எனும் பெயரும் இதற்குண்டு. பாதங்களில் அணியப்படுவதனால் சரணம் எனும் பெயரும் உண்டு. வெள்ளை நிறமுடைய இதன் மலர்கள் மணமிகுந்தவை. நகச்சுற்று எனும் விரல்களிலான நோய் மருதாணியை அணிய குணமாகும். கண்கள் குளிர்ச்சி பெறவும், நன்கு உறக்கம் வரவும் இவ்விலையை அரைத்துத் தலையில் தேய்த்துக்கொண்டு நீராடுவர். தலைக்குத் தேய்த்துக்கொள்ளும் எண்ணெயிலும் இதனை இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளுவர். பெண்கள் இதன் கூழைக்கொண்டு கைகளிலும் கால்களிலும் பல வடிவங்களை வரைந்து அழகு செய்து கொள்வர்.
திருவிழா நாட்கள், குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளான, திருமணம், வளைகாப்பு, இன்னபிற அனைத்திலுமே மருதோன்றியும் ஒரு மங்கலப்பொருளாகச் சேர்த்துக்கொள்ளப்படும். மருதோன்றிக் குழம்பைக் கைகளிலும் கால்களிலும் வேண்டிய வகையில் வரைந்து இட்டுக்கொண்டு, அது செம்மண் நிறம் வருவதற்காக, அணிந்தபடியே சிறுமியரும், இளமங்கையரும், பெண்டிரும் உறங்கவும் செய்வர். நல்ல நிறம் வருவதற்காக இலைகளைப் பறித்து அரைக்கும்போதே உடன், மஞ்சள்கிழங்கு, செப்புக்காசு, சுண்ணாம்பு முதலியவற்றையும் சேர்த்து வைத்தரைப்பர். அந்தப்பூச்சு சிலமணி நேரங்களில் தானே உலர்ந்து உதிர ஆரம்பிக்கும். நன்கு நீரால் கழுவிவிட்டு எண்ணையைப் பூசுவர் சிலர். ஆக மொத்தம், கைக்கு அழகு, கண்ணுக்குக் குளிர்ச்சி, மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்கு, விளையாட்டு; வேறென்ன வேண்டும்?
தற்காலத்தில் இந்த மருதாணிக்கூழ் கூம்புவடிவப் பொட்டலங்களாகக் கிடைக்கிறது. வட இந்திய மாநிலங்களில் திருமணத்தின் முன்பு மணப்பெண் மருதாணி (மெஹந்தி) அணிவது என்பது ஒரு சடங்காகவே ஆடல், பாடல், விருந்துடன் நிகழ்கிறது. தென்னகத்திற்கும் இவ்வழக்கு வந்து சேர்ந்துள்ளது. இதற்காகவே சித்திரக்குறிப்புகளும், அவற்றை வரையும் முறைகளைப் பயிற்றுவிக்கவும் குழுக்கள் கூட உள்ளன.
வாழ்க்கையை ரசனையுடன் வாழும் வழிமுறைகள்!!
*****
இந்த முன்னுரையுடன் நாம் இப்போது ஏழெட்டு வயதுச் சிறுமி கற்பகவல்லியன்னை மருதோன்றி அணிந்து மகிழும் சில காட்சிகளைக் கண்டு களிப்போமா?
மலைமகளான கற்பகவல்லிக்கு ஒருநாள் மருதாணி இட்டுக்கொள்ள ஆசை பிறந்தது. உடனே தோழியர் விரைந்து சென்று நந்தவனத்தினின்றும் மருதாணி இலைகளைக் கொய்து மடியில் பாவாடையில் கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தனர். செவிலித்தாய் முத்தம்மாள் அவற்றை வாங்கிக்கொண்டு உரலில் அரைத்தெடுக்கச் சென்றாள்.
“முத்தம்மா, மையா அரைச்சுக்கோ,” என வேணி அறிவுறுத்த, “ரெண்டு செப்புக்காசு இருந்தாக் குடு,” எனக் கேட்டு வாங்கி, அவள் சுருக்குப்பையிலிருந்து எடுத்துத்தர, அதனையும் உரலிலிட்டு மருதாணியோடு சேர்த்து நசுக்கினாள் முத்தம்மாள்!
‘கம கம’வென மருதாணிக்கே உரிய அருமையான நறுமணம் அந்தப்பகுதி பூராவும் நிறைந்தது. வெள்ளிக்கிண்ணத்தில் வழித்தெடுத்த மருதாணி உருண்டைகளையும் கூழையும் வைத்துக்கொண்டு கற்பகத்தைச் சுற்றி அமர்ந்தவண்ணம் அவள் கரங்களையும் கால், பாதங்களையும் அலங்கரிக்க முற்படுகின்றனர் தோழியர். பாடலும் பிறக்கின்றது.
“கற்பகம் எனும் பொன்மயிலாக மயிலாப்பூர் எனும் பதியினில் வந்து, தனது பொற்கரங்களால் பூக்களை எடுத்து, பொன்மேருவை வில்லாக வளைத்தும், முப்புரங்களையும் எரித்த சிவபெருமானின் பொன்னடிகளில் இட்டுப் பூசை செய்பவளும், அடியவர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் கற்பகத்தருவாக நின்று தருபவளும், தன்னையே நம்பிப் பணியும் அடியார்களுக்குத் தவறாமல் உதவுபவளும், அபயகரம் காட்டுபவளும் ஆகியவளின் கைகளுக்கு மருதாணி இடுவோம். தாமரை மலர்போலும் அவள் கைகளுக்கு மருதாணி இடுவோம்,” எனப் பாடுகின்றனர்.
பொன்மயிலாக மயிலையம் பதியினில் வந்து
பொற்கரத்தாலே பூவகைகள் கொண்டு
பொன்மேருவை வளைத்துப் புரமெரித் தவன்றன்
பொன்னடிக்கிட் டுப்போற்றித் துதித்து
நன்மையெலாம் அடியார்க்கு நாடோறு மருளி
நம்பிப்பணிந் தவர்களுக் குமுதவி
தன்மையுடன் தண்ணளிசெய் கைக்கு மருதாணி
தாமரைமலர்க் கைக்கு மருதாணி. (1)
*****
அடுத்து விரிகின்றதொரு அற்புதக் காட்சி! அன்னை மேனாவதியும் மற்ற செவிலியர், தோழியரும் கற்பகவல்லிக்கு மருதோன்றி இடும் காட்சி. ஒரு சிறு வெள்ளிக்குச்சியினைக் கொண்டு மருதாணிக்குழம்பால் பெண்மயிலாம் கற்பகத்தின் சிவந்த கைகளில் மயிலொன்றின் வடிவை வரைகிறாள் ஒரு பெண். மேனையின் ஆலோசனைப்படி அதைச்சுற்றி, திரிசூல இலச்சினையை வரைகிறாள் இன்னொருத்தி. அடுத்து கால்களில் மருதாணி இட வாகாக, கற்பகவல்லியை, தேன்குரல் கொண்ட தோழிமார்கள், தென்றல்வீசும் முற்றத்தில் உயர்ந்த ஒரு பீடத்தில் அமர்த்திவைத்து, கைகளைப்பற்றி- (அவை எப்படிப்பட்ட கைகள்? – மான், மழு, சடையில் பிறைமதி தரித்த பிரானின் அருளைவேண்டி நித்தமும் பூசையைத் தவமாகவே செய்திடும் கைகள்) மருதோன்றி இட்டு, வான்முகிலைக் கண்டு களிநடம் புரியும் கற்பக வடிவானவளின் (அம்மை மயிலாக உருவெடுத்த வரலாறு) வண்ணத்திருவடிகளைப்பற்றி அவற்றிற்கும் மருதாணி இடுகின்றனராம்.
மேனையுமங்கே மருதோன்றிக் கூழ்கொண்டு
மேதினியை யாளுமுனது திருக்கையில்
மேகாரவடி விலுந்திரி சூலவடிவிலும்
மேவியழகாக மென்மை யாய்வரைய
தேனையும் பழித்திடுந்தீங் குரற்றோழியர்
தென்றலுல வுமுற்றந் தன்னிலே
தேடியேவழைத் துனையொ ளிர்மணித்
தவிசிருத்தி தளிர்க்கை தனைப்பற்றி
மானையுமழு வையுமதியை யுஞ்சடையணி
மகாதேவ னின்னரு ளைவேண்டி
மாதவப் பூசையினை நிகழ்த்திடும்
மாதேவி கற்பகவல்லி யுன்னை
வானைக்கண் டுகளிநட மாடிடும்
வனமயிலின் வண்ணத்திரு வடிபற்றி
பாங்காகவே மருதோன்றி யினாலான
பற்பல சித்திரம் வரைகிறார். (2)
*****
ஒருபோது இமயாசலத்தில் சிவபிரான் உமையன்னைக்கு திருநீற்றின் பெருமையை விளக்கிக் கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு ஒரு வண்ணமயில் ஆடி வந்தது. உமையின் கவனம் சிதறியது. இதனைக் கண்ட சிவபிரான் சினம் கொண்டார். “நீயும் ஒரு மயிலாகப் பிறப்பாயாக,’ எனக் கூறினார். பின் அன்னை தன் தவறுணர்ந்து மனமுருகி வேண்டிட, தவம் செய்து தன்னை வழிபட்டுத் தன்னிடம் வந்து சேர அருளினார். அவ்வாறு அன்னை மயிலாக (கற்பகமாக) இருந்து தவம் செய்த இடமே திருமயிலை எனும் மயிலாப்பூர். அவ்வண்ணலைப் பூசிக்கும் அன்னையின் அழகான கைகளுக்கு அணிவிக்கும் அழகு மருதாணி எனத் தலபுராணத்தையும் இணைத்துக் கூறுகிறது இப்பாடல்.
நீற்றதன் பெருமையினை நேசமுடன் எம்மையன்
நிமலையு னக்குரைக்கநீ
நின்றதனைச் செவிமடுக்க வந்ததொரு தடையாம்
நீலமாமயி லொன்றுமே
மாற்றதனைக் கண்ணுற்று மனங்கருத் துத்தவற
மாதேவியுன் மீதவன்
முனிவுற்று மயிலாகப் பிறத்தியென வுரைக்க
மனங்கலங்கி நீயுவேண்ட
மாற்றியே மயிலையம் பதிதனில் சென்றெம்மை
பெருந்தவந் தானியற்றில்
மகிழ்ந்துமே மணங்கொள் வம்மாதுநீ செல்கென
மகாதேவனு ரைக்கக்கேட்டே
ஆற்றியே அருந்தவம் அண்ணலை யடைந்திட்டாய்
அம்பிகைகற் பகக்கொடியே!
அவனைநீ பூசிக்கு மழகான வுன்கைக்கு
ஐவணம ணிவிப்பமே. (3)
*****
இதிலிருந்து மருதோன்றி அணியும் நிகழ்ச்சியும் ஏழெட்டு வயதான சிறுமியருக்கே உரிய அரிய பருவமொன்றாகும் என அறியலாம். பிள்ளைத்தமிழின் அதிகப்படியான பருவங்களுடன் இதனையும் இணைத்துக் கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான எண்ண ஓட்டம்!
இதுபோன்றும் இன்னும் சில அழகிய நிகழ்வுகள் கொண்ட பிள்ளைப்பருவங்களைத் தொடர்ந்து காணலாம்.
(புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)
1, 2, 3- பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்- கற்பகவல்லி பிள்ளைத்தமிழ்- மருதோன்றிப்பருவம்
தமிழில் அதீத புலமைபெற்ற திருமதி மீனாட்சி பாலகணேஷின் அனைத்து படைப்புகளுமே படித்து இன்புறத்தக்க விதத்தில் அமைந்துள்ளது.. அவரது பணி தொடர மனதார வாழ்த்துகிறேன்…