மகாத்மா காந்தியும் மாவீரன் பகத் சிங்கும்

ஜோதிர்லதா கிரிஜா

மாவீரன் என்று அழைக்கப்படும் பஞ்சாப் மாநில இளைஞர் பகத் சிங்  1931 ஆம் ஆண்டில், மார்ச் 23 ஆம் நாளில் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த இங்கிலாந்து அரசால் தூக்கிலிடப்பட்டார். மகாத்மா காந்தி மனம் வைத்திருந்தால் பகத் சிங்கின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று இன்றளவும் கம்யூனிஸ்ட் தோழர்கள் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பது உண்மையான வரலாற்றை யறிந்தவர்களின் நிலைப்பாடாகும். இதைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், பகத் சிங் பற்றிய வரலாற்றை அறிய வேண்டியது முக்கியம்.

பகத் சிங்  லயால்பூர் எனும் ஊரில் 1907இல் பிறந்தார். இவருடைய தந்தை சர்தார் கிஷன் சிங், தாய்மாமன்கள் இருவர் ஆகியோர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களாவர். எனவே,  சிறு வயதிலிருந்தே பகத் சிங்கின் உள்ளத்தில் ஆங்கிலேயர்கள்பால் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றிவிட்டது.

தம் பன்னிரண்டாம் வயதில் வெள்ளைக்காரர்கள் புரிந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் நடந்த இடத்தை அவை நடந்த சிறிது நேரத்துக்குப் பின் அங்கு சென்று பார்த்ததில் வெள்ளைக்காரர்கள் மீதான அவரது ஆத்திரம் அதன் உச்சத்தைத் தொட்டது. பின்னாளில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, முக்கியப் புரட்சியாளராகி, நவ்ஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி போன்ற புரட்சி இயக்கங்களோடு பகத் சிங் தொடர்புகொண்டதில் வியப்பு இல்லை.

அவர் சிறு வயதிலேயே ஐரோப்பியப் புரட்சி இயக்கங்கள் பற்றிப் படித்து, அதன் பின் பொது உடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டார். மிக இளம் வயதிலேயே ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பு எனும் புரட்சி இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் ஆனார்.  ஒரு சமயம் இங்கிலாந்து அரசால் சிறையில் அடைக்கப்பட்ட போது, இங்கிலாந்துக் கைதிகளைப் போன்றே இந்தியக் கைதிகளும் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகச் சிறையில் 63 நாள்கள் போல்  உண்ணா நோன்பிருந்து அனைத்திந்திய கவனத்தையும் கவர்ந்தார்.

இவ்வாறு, இந்தியாவில் விடுதலைப் போராட்ட இயக்கம் அதன் உச்சத்தில் இருந்த போது, வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக, இங்கிலாந்து அரசு சைமன் கமிஷன் எனும் குழுவை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. நம் நாட்டின் அப்போதைய அரசியல் நிலைமை பற்றிய அறிக்கையைச்  சமர்ப்பித்தலே அதன் பணியாகும்.  ஆனால் அதில் ஓர் இந்தியர் கூட இடம் பெற்றிருக்கவில்லை. எனவே, இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இக்குழுவை அறவே புறக்கணித்தன.  அந்தக் குழு  1928, அக்டோபரில் லாகூருக்கு வந்த போது,  அதற்கு எதிர்ப்புக் காட்டும் வண்ணமாக, பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லாலா லஜ்பத் ராய்,  மகாத்மா காந்தி வழியில் ஓர் அமைதி ஊர்வலத்தை நடத்தினார். ஆனால், ஜேம்ஸ் ஸ்காட் எனும் வெள்ளை அதிகாரியின் உத்தரவுப்படி, அமைதியான அந்த ஊர்வலக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினார்கள்.  அந்த அதிகாரி தாமே லாலா லஜ்பத் ராயைத் தாக்கினார். இதன் விளைவாய்க் கடுமையாய்க் காயப்படுத்தப்பட்ட அவர், ‘ என் மீது விழுந்த ஒவ்வோர் அடியும் ஆங்கிலேய ஆட்சியின் சவப் பெட்டியின் மீது அடிக்கப்பட்ட ஆணியாகும்’ என்று அறிவித்தார். ஆனால், காயங்களின் விளைவாக அவர் உடல்நலக் குறைவுற்று 1928 நவம்பரில் காலமானார்.

இந்தக் கொடுமைக்குப் பழிவாங்க முடிவெடுத்த பகத் சிங்,  புரட்சியாளர்களான ராஜ்குரு, சுக் தேவ், சந்திரசேகர ஆசாத் ஆகிய நண்பர்களைக் கூட்டாளிகளாய்த் தம்முடன் அந்த வேலைக்காக இணைத்துக்கொண்டார்.  1928 டிசம்பர் 17ஆம் நாளில் பகத் சிங், ராஜ்குருவுடன் ஒரு பெரிய மரத்தின் பின் மறைவாக நின்றுகொண்டார். ஜெயகோபால் எனும் மற்றொரு நண்பர், எதிரே இருந்த ஒரு கல்லூரி வளாகத்துள் சைக்கிளுடன் நின்றுகொண்டார்.  எதிரில் இருந்த காவல் நிலையத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு வெள்ளை அதிகாரி தம் பைக்கைக் கிளப்பவிருந்த கணத்தில் ஜெயகோபால் ஜாடை காட்ட, பகத் சிங் அவரைச் சில முறை சுட்டார். அவர் இறந்து வீழ்ந்தார். பின்னர் பகத் சிங்கும் ராஜ்குருவும் கல்லூரிக்குள் ஓடினார்கள். எனினும் ஒரு காவலரால் இருவரும் துரத்தப்பட்டார்கள்.  ஆனால், சந்திர சேகர ஆசாத் அவரைச் சுட்டுக் கொன்றார். இதற்குள் பகத் சிங்கும் ராஜ் குருவும் தத்தம் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றனர்.

இருப்பினும் சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை அதிகாரி ஜேம்ஸ் ஸ்காட் அல்லர். சாண்டர்ஸ் எனும் வேறோர் அதிகாரி. லாகூர் நகரம் முழுவதும் உடனேயே காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. ஆனால் பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் வெவ்வேறு மாறு வேடங்களில் தப்பிச் சென்றுவிட்டனர்.

பின்னர் பகத் சிங், தம் நண்பன் பதுகேஷ்வர் தத்துடன் இணைந்து, தில்லி மத்திய சட்ட மன்றத்தில் இந்திய நலனுக்கு எதிரான இரண்டு மசோதாக்கள் ஏப்ரலில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது, அங்கே சென்று சில தடவைகள் சுட்டதுடன், இங்கிலாந்துக்கு எதிரான துண்டு அறிக்கைகளையும் அங்கே பறக்கவிட்டார்.  யாரும் சாகாத போதிலும், சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டன. வாயால் பேசினால் வெள்ளைக்காரர்களுக்குப் புரியவில்லை என்பதோடு அவர்கள் காதிலும் விழுவதில்லை என்பதால்,  வெடிகுண்டு மொழியில் பேசியதாகப் பகத் சிங் அறிவித்தார். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.

இதற்கிடையே லாகூரில் இயங்கிவந்த வெடிகுண்டுத் தொழிற்சாலை, வெள்ளைக்கார அரசாங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. பகத்சிங்கின் கூட்டாளிகளில் சிலரே பகத்சிங்கின் நடவடிக்கைகள் பற்றி அரசுக்குத் தெரிவித்துவிட்டதன் விளைவு, இது.

இது மட்டுமல்லாது, காவல்துறை  அதிகாரி சாண்டர்ஸைச் சுட்டுக் கொன்றவர்கள் பகத்சிங்கும் அவருடைய நெருங்கிய தோழர்களுமே என்பதையும் அவர்கள் அரசாங்கத்துக்குத் தெரிவித்தார்கள்.  இதனால், பகத் சிங்குடையவும் அவர்தம் நண்பர்களுடையவும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் தீர்மானமும் வெள்ளை  அரசால் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியினர் மகாத்மா காந்தியை அணுகி, பகத் சிங்கின் சார்பில் வெள்ளை அரசோடு அவரை வாதிடக் கோரினர்.  சாண்டர்ஸை அவர்கள் கொன்றதை அஹிம்சாவாதியான காந்தி ஆதரிக்கவில்லைதான். எனினும், வைசிராய் இர்வினைச் சந்தித்த அவர் வாய்மொழியாக மட்டுமின்றி அவர்கள் பால் கருணை காட்டக் கோரி ஒரு கடிதமும் கொடுத்தார்.   “அந்த இளைஞர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்றும், தூக்குத் தண்டனைக்குப் பதிலாக நாடுகடத்தும் தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்குமாறும் காந்தி தமது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். தமது வேண்டுகோளை ஏற்று வைசிராய் இர்வின் செயல்பட்டார் என்ற செய்தியை, கராச்சியில் அடுத்து நடக்கவிருந்த காங்கிரஸ் மாநாட்டில் தாம்  தெரிவிக்க வாய்த்தால் மக்கள் மகிழ்ச்சியடைவர் என்பதும் அவரது எண்ணம்.

ஆனால், அவரது வேண்டுகோளைப் பரிசீலிப்பதாய்ச் சொன்ன வைசிராய் இர்வின், மரண தண்டனைக்கென்று குறிக்கப்பட்டிருந்த நாளுக்கும் முன்னதாகவே அவர்களைப் பஞ்சாப் அரசு இரகசியமாய்த் தூக்கிலிட்டதைக் கண்டும் காணாதவராய் இருந்துவிட்டார். காந்தி அது பற்றி அவரை வினவியபோது அது பஞ்சாப் அரசாகையால் தம்மால் தலையிட இயலவில்லை என்று சாமர்த்தியமாய்க் கைவிரித்துவிட்டார். அனைத்திந்தியாவுக்கும் வைசிராயாக இருந்தவரின் கட்டளைக்கு மாநில அரசு கட்டுப்படாதா என்ன? எப்பேர்ப்பட்ட ஏமாற்றுவேலை இது?

இப்படித்தான் நடந்ததென்பதற்கான ஆவணங்கள் இருந்த நிலையிலும் கம்யூனிஸ்டுகள், பகத்சிங்கின் தூக்குத் தண்டனையைத் தடுக்க எவ்வித முயற்சியையும் காந்தி எடுக்கவில்லை என்று அவரைப் பழி சொல்லுவது நியாயந்தானா? இன்றளவும் கம்யூனிஸ்டுகள் அப்படியே தான் பரப்புரை செய்துகொண்டும் கட்டுரைகள் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். மகாத்மா காந்தி, எந்தக் குற்றவாளியையும் தூக்கில் போடக் கூடாது எனும் கொள்கையுடையவராவார். கடவுள் கொடுத்த உயிரைப் பறிக்கும் வேலை கடவுளுடையது மட்டுமே எனும் கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தவர்.  அப்படி இருக்கும் போது, பகத் சிங்கையும் அவருடைய நண்பர்களையும் தூக்கில் போடுவதை அவர் ஆதரித்து மவுனமாக இருந்திருப்பாரா?

வேறு சிலர், பகத்சிங்கின் சார்பில் அவர் உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே என்று வாதிடுகிறார்கள். அவர் அஹிம்சாவாதி. கொலை செய்வதைச் சிறிதும் ஆதரிக்காதவர். அப்படிப்பட்ட கொள்கையுடையவர் கொலைகாரர்களுக்குப் பரிந்து உண்ணாவிரதம் இருப்பாரா என்ன? இதைப் பற்றியும் சிந்தித்துப் பாராமல் அவரைக் குற்றம் சொல்லுகிறார்களே!

மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயைத் தூக்கில் போட, அன்றைய அரசு முடிவு செய்த போது, காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவரது கொள்கைக்கு அது மாறானதென்பதால், நாதுராம் கோட்சேக்கு ஆயுள் தண்டனை மட்டுமே அளிக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதிலிருந்தே காந்தியின் நிலைப்பாட்டைக் கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டாமா?

இனியாகிலும், பகத் சிங்கைப் பொறுத்த வரையில், காந்தி அடிகளின் நற்பெயருக்கும் மனிதாபிமானத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வண்ணமாய்ப் பேசுவதையும் எழுதுவதையும் பொதுவுடைமைத் தோழர்கள் நிறுத்திக்கொள்வார்களா?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க