கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 28

0

-மேகலா இராமமூர்த்தி

வாலி பிலத்தினுள் புகுந்து மாயாவி அரக்கனைத் தேடிச்சென்று மாதங்கள் 28 ஆகியும் திரும்பாததால் அனுமன் உள்ளிட்ட வானரர்கள் இளவரசனான சுக்கிரீவனை முடிபுனைந்து அரசாட்சியை மேற்கொள்ளப் பணித்தனர். ஆனால் சுக்கிரீவன் அதற்கு உடன்படவில்லை. வாலி ஆண்ட அரசைத் தான் உரிமைகொண்டு அரசாளுதல் குற்றமென்று எண்ணினான். எனவே வானரர்களின் கோரிக்கையை மறுத்து, ”நான் இந்தப் பிலத்தினுள் புகுந்து என் தமையன் வாலியைத் தேடுவேன்; ஒருவேளை அவன் இறந்துபோயிருந்தால் அவனைக் கொன்ற மாயாவியோடு போரிட்டு அவன் ஆவி முடிப்பேன்; அது கைகூடவில்லையாயின் என் இன்னுயிர் துறப்பேன்!” என்றுரைத்துப் பிலத்தினுள் நுழையவிருந்த வேளையில், அறிவும் சொல்வன்மையும் மிகுந்த கிட்கிந்தையின் அமைச்சர் பெருமக்கள் அவனைத் தக்கன கூறிச் சமாதானப்படுத்தி ஆட்சியை அவன் வசம் ஒப்படைத்தனர்.

ஆதலால் கிட்கிந்தையின் அரசாட்சியைச் சுக்கிரீவன் தானாக வலிந்து பற்றவில்லை என்பதனை இராமனுக்கு அறியத்தந்தான் அனுமன். சுக்கிரீவனை அழைத்துக்கொண்டு கிட்கிந்தைக்குத் திரும்புவதற்குமுன், திறந்திருந்த பிலத்தின் வாயிலைக் குன்றனைய பெருங்கற்களைக் கொண்டு வானரர்கள் அடைத்தனர்; மாயாவி பிலத்தைவிட்டு வெளியேற விரும்பினால் அம்முயற்சி ஈடேறாமல் போகவேண்டும் என்பதே அதன் நோக்கம். இதன்மூலம் மாயாவி வாலியைக் கொன்றிருப்பான்; அதனால்தான் அவன் உள்ளேசென்று மாதங்கள் பலவாகியும் மீளவில்லை என்ற வானரர்களின் எண்ணத்தையும் காகுத்தனுக்குக் குறிப்பாலுணர்த்தினான் காற்றின் மைந்தன்.

ஆனால் உண்மையில் நிகழ்ந்ததோ வேறு! பிலத்தினுள் ஒளிந்துகொண்டிருந்த மாயாவியை நீண்டகாலம் தேடிக் கண்டுபிடித்த வாலி, பிலம் அடைக்கப்பட்ட சமயத்தில் அவனைக் கொன்றான். பின்னர் அங்கிருந்து மீண்டு பிலத்தின் வாயிலை அடைந்தான். பிலம் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவனுக்குச் சீற்றமேற்பட்டது.

தன் வாலினை மேலே தூக்கி, வானத்தில் எழுந்த பெருங்காற்றெனத் தன் காலைவீசிப் பிலத்தை அடைத்திருந்த பெரும் பாறைகளை வாலி தாக்கவும், அவற்றில் உயரப் பறந்தவை விண்ணை எட்டின; தாழச் சென்றவை கடலில் வீழ்ந்தன என்று காலினும்(காற்று) வாலியின் கால் அதிக வலிமை பெற்றிருந்தமையை நமக்குப் புலனாக்குகின்றார் கம்பர்.

வால் விசைத்து வான் வளி நிமிர்ந்தெனக்
கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும்
நீல் நிறத்து விண் நெடு முகட்டவும்
வேலை புக்கவும் பெரிய வெற்பு எலாம்.
(கம்ப: நட்புக் கோட் படலம் – 3947)

அடைக்கப்பட்டிருந்த பிலத்தினின்று தன் பலத்தினால் வெளியேறிக் கிட்கிந்தை வந்தடைந்த வாலியைத் தூய சிந்தையோடு பணிந்து வணங்கிய சுக்கிரீவன், ”அண்ணா! நீ பிலத்துள் சென்று பல காலம் ஆனதால் அமைச்சர்கள் என்னைக் கிட்கிந்தையின் அரசப் பொறுப்பை ஏற்கச் செய்தனர்; நான் மாட்டேன் என்று எவ்வளவு சொல்லியும் அவர்கள் வற்புறுத்தியமையால் அதனைச் சுமந்தேன். இனி எங்களை அரசுபுரிந்து காப்பது நின் கடமையாகும்” என்றான்.

சுக்கிரீவனின் மொழிகளை நம்பாத வாலி, அவன் வஞ்சனை செய்தே கிட்கிந்தையின் அரசைக் கவர்ந்திருக்கின்றான் எனும் எண்ணத்தோடு அமுதம் எடுக்கக் கடலைக் கடைந்ததுபோல் சுக்கிரீவனின் உடலைக் கடையத் தொடங்கவே, வலி பொறாது வருந்தினான் சுக்கிரீவன். குரக்கினங்கள் அனைத்தும் அச்சத்தின் பிடியில் மூச்சடங்கி நின்றிருந்தன.

அத்தோடு விடவில்லை வாலி. சுக்கிரீவனை உயரே தூக்கி மோதுவதற்கான முயற்சியில் ஈடுபட்டான். அப்போது அவன் லேசாக அயர்ந்த நேரம் பார்த்து அவனிடமிருந்து தப்பிய சுக்கிரீவன் உருசியமுக மலையை வந்தடைந்தான்.

உருசியமுக மலையில் சுக்கிரீவன் தங்கக் காரணம் அந்த மலைப்பக்கம் வாலி மறந்தும் வரமாட்டான் என்பதே. அப்பக்கம் வந்தால் அவன் தலை வெடித்துவிடும் எனும் சாபத்தை அவன் மதங்க முனிவரிடம் பெற்றிருந்தான். அச் சாபமே இப்போது அரணாக நின்று சுக்கிரீவனின் ஆருயிரைக் காத்துவருகின்றது எனும் செய்தியை இராகவனிடம் செப்பினான் அஞ்சனை மைந்தன்.

”இறைவா! இன்னொரு செய்தியையும் தங்கள்பால் தெரிவிக்க விரும்புகின்றேன்” என்ற அனுமன், ”சுக்கிரீவனின் மனைவியும் அருமருந்தனையவளுமான உருமையையும் வாலி கவர்ந்து வைத்திருக்கின்றான். ஆதலால் அரச வாழ்வோடு இல்லற வாழ்வையும் சேர்த்தே இழந்து நிற்கின்றான் சுக்கிரீவன்” என்றுரைத்தான்.

உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம்
அரு மருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன்.
(கம்ப: நட்புக் கோட் படலம் – 3954)

சுக்கிரீவனும் ஏனைய வானரரும் தனக்கு உணவு பரிமாறியதைக் கண்டு, ”பொருந்து நன்மனைக்குரிய பூவையை நீயும் பிரிந்துளாய்கொலோ?” என்று அவனிடம் இராமன் வினவியமைக்கு விடை இங்கே அனுமனால் அளிக்கப்படுவதைக் காண்கின்றோம்.

அதைக் கேட்டதும் இராமனின் செவ்விதழ்கள் சினத்தினால் துடித்தன. தாமரை இதழ்களோ செவ்வாம்பல் போல் மேலும் சிவந்தன. தன்னைப் போலவே இன்னொருவனும் தன் நேயத்துக்குரிய தாரத்தையும் தேயத்தையும் இழந்து தவிக்கின்றான் என்ற செய்தி இராமனுக்கு சுக்கிரீவன்மாட்டு அளவற்ற இரக்கத்தை ஏற்படுத்திவிட்டது. எப்படியாவது அவனை அத்துன்பத்தினின்று விடுவிக்க வேண்டுமென முடிவுசெய்த இராமன்,

இரேழு பதினான்கு உலகங்களைச் சார்ந்தவர்களும் வாலிக்கு வேலியாய் வந்துநின்று அவன் உயிரைக் காக்க உதவிபுரிந்து என்னைத் தடுத்தாலும் என் வில்லிடை பூட்டிய வாளியால் அந்த வாலியை அழித்து, வானரங்களுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பையும், உன் தாரத்தையும் உனக்கு இப்போதே நான் மீட்டுத் தருவேன்; அறிவிற் சிறந்தவனே! அந்த வாலியின் இருப்பிடத்தை எனக்குக் காட்டு!” என்றான் இராமன்.

உலகம் ஏழினோடு ஏழும் வந்து
     அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை
     வாளியின் வீட்டி
தலைமையோடு நின் தாரமும்
     உனக்கு இன்று தருவென்
புலமையோய் அவன் உறைவிடம்
     காட்டு என்று புகன்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3957)

அச்சொற்கள் சுக்கிரீவனுக்குப் பெருங்களிப்பைத் தந்தன. வாலியின் வலி தொலைந்தது என்று மனத்துள் மகிழ்ந்தவன், ”நான் இதர வானரர்களோடு ஆலோசிக்க வேண்டிய விசயம் ஒன்றுளது” என்று இராமனிடம் கூறிவிட்டு வானரர்களோடு அப்பால் சென்றான்.

இராமன் ஆற்றலாளன் என்று சுக்கிரீவன் நம்பியபோதிலும் அவ் ஆற்றலை அவன் நேரடியாகக் கண்டதில்லை; ஆனால் வாலியின் வலியை நேரடியாகக் கண்டவன் அவன்; எனவே, வாலியை நான் தொலைத்துவிடுகின்றேன் என்று இராமன் சொன்னது அவனுக்கு ஒருபுறம் மகிழ்வைத் தந்தாலும் மறுபுறம் அது சாத்தியந்தானா என்ற ஐயத்தையும் விளைவித்தது. எனவே, அறிவிற்சிறந்த தன் மந்திரிகளோடு அது குறித்த ஆலோசனையில் ஈடுபடலானான்.

சுக்கிரீவனின் உட்கிடையை உணர்ந்துகொண்ட வாயு மைந்தன், ”பெரியோனே! இராமனுடைய வலிமையை நீ அறிய விரும்பினால் அதற்கோர் உபாயம் உளது. நாம் போகும் வழியில் நிற்கின்ற ஏழு மராமரங்களில் ஏதேனும் ஒன்றை அம்பால் துளைக்கும்படி நெடியோனாகிய இராமனிடம் சொல்லுவோம்; அண்ணலில் அம்பு மரத்தினை ஊடுருவிச் சென்றால் வாலியின் மார்பையும் அவ் அம்பு துளைக்கும் எனத் தெளியலாம்” என்றான்.

அவ் உபாயத்தைக் கேட்ட சுக்கிரீவன் நனிமகிழ்ந்து, ”நன்றுரைத்தனை” என்று நவின்றான் மாருதியின் குன்றனைய தோள்களைத் தழுவி. அதனைத் தொடர்ந்து இராமனைச் சந்தித்த சுக்கிரீவன் ”உன்னிடம் உரைக்கச் செய்தியொன்று உண்டு” என்றான்; ”அதனை உரைப்பாய்” என்றான் இராமன்.

மராமரங்களில் ஒன்றைத் துளைத்துக் காட்டுமாறு இராமனிடம் அப்போது சுக்கிரீவன் வேண்ட, அதனையேற்ற இராமன் முறுவலோடு அம் மரங்களின் அருகே சென்று வில்லிலே அம்பைப் பூட்டி அதனை விடுத்தான்.

அப் பகழியானது ஏழு மராமரங்களையும் துளைத்துக் கீழேசென்று அங்குள்ள ஏழு உலகங்களான அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் ஆகியவற்றையும் துளைத்து அதற்கப்பால் துளைப்பதற்கு ஏழு என்ற எண்ணிக்கையில் ஏதுமின்மையால் திரும்பியது என்கிறார் கம்பநாடர்.

ஏழு மாமரம் உருவி கீழ்
     உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவி
     பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையான் மீண்டது
     அவ் இராகவன் பகழி
ஏழு கண்டபின் உருவுமால்
     ஒழிவது அன்று இன்னும். (கம்ப: மராமரப் படலம் – 3982)

ஏழு எனும் எண்ணிக்கையில் அமைந்த கடல்களும், மேலுள்ள ஏழு உலகங்களும், ஏழு குன்றுகளும், சூரியனின் தேரில் பூட்டப்பட்டிருந்த ஏழு குதிரைகளும், ஏழு இருடிகளும் (சப்தரிஷிகள்), ஏழு மங்கையரும் (சப்தகன்னியர்), எங்கே இராமனின் அம்பால் தமக்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சிநின்றனர் அப்போது.

இராமனின் வில்லாற்றல் கண்டு வியந்த சுக்கிரீவன், அவனைப் பலபடப் புகழ்ந்து துதித்தான். வானரர்களும் ”வாலிக்கு காலனைக் கண்டோம்” என்று மகிழ்ச்சியில் ஆடினர்; பாடினர்; அங்குமிங்கும் ஓடினர்.

அந்நிகழ்வுக்குப் பிறகு அங்கிருந்து அனைவரும் நடக்கத் தொடங்கினர்.  வழியில் பெருமலைபோல் எலும்புக் குவியலொன்று வற்றிய உடலோடு கிடப்பதைக் கண்ட இராமன், ”இஃதென்ன? எமனின் வாகனமான எருமைக் கடாவா? திசை யானைகளுள் ஒன்றுதான் இங்கே மடிந்து கிடக்கின்றதா? அல்லது சுறாவென்னும் பெருமீன்தான் உலர்ந்து கிடக்கின்றதா?” என்று சுக்கிரீவனிடம் வினாக்களை அடுக்கினான்.

அங்கு எலும்புக் குவியல் கிடக்கும் வரலாற்றினை இராமனிடம் உரைக்கத் தொடங்கினான் சுக்கிரீவன்.

”சந்திரனைத் தொடும்படியாக வளர்ந்த கொம்புகளோடு மந்தர மலைபோன்ற பெருத்த உடலை உடையவனான துந்துபி எனும் அரக்கன் வலிமைமிகு ஒருவனோடு போர்புரிய விரும்பிக் கடலினைக் கலக்கிக்கொண்டு அரியினை தேடிச் சென்றான்.

அவனெதிர் வந்த அரியோ (திருமால்), ”உன்னோடு போர்புரிய ஏற்றவன் கங்கையின் கணவனான அந்தக் கறைமிடற்று இறைவனே” என்று சொல்லிவிட, அரனைத் தேடிக்கொண்டு கயிலை சென்ற துந்துபி, அம்மலையைத் தன் கொம்புகளால் முட்ட அவன்முன் தோன்றினார் அரனார். தோன்றியவர், ”என்ன வேண்டும் உனக்கு?” என்று துந்துபியைக் கேட்க, ”உம்மோடு நான் முடிவிலாச் செருச்செய்ய வேண்டும்” என்றான் அவன்.

அரனாரோ, “வீரச்செயலிலேயே மூழ்கிக் கிடக்கும் உன்னோடு போரிட என்னால் இயலுமா? நீ நேரே தேவர்களை நாடிச்செல்!” என்று தேவர்களைக் கைகாட்டிவிட்டுத் தாம் தப்பித்துக்கொண்டார்.

விடவில்லை துந்துபி. நேரே தேவலோகம் சென்று இந்திரனைச் சந்தித்துத் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். ”நீ நெடுங்காலம் போர்செய்ய விரும்புவதானால் அதற்கு ஏற்ற இடம் இதுவன்று! போர்வலானான வாலியை நீ நாடிச் செல்! அவனே உனக்கு ஏற்ற வீரன்” என்று வாலி பால் துந்துபியைப் போக்கினான் இந்திரன். அதனையேற்றுக் கிட்கிந்தைக்கு வந்த துந்துபி, ”குரக்கினத்தரசே! என்னோடு போர்புரிய வா!” என்று அறைகூவி அம்மலையைத் தன் கொம்புகளால் முட்டி நாசப்படுத்திக்கொண்டிருந்த வேளையில் அவ்வொலிகேட்டுச் சினந்த வாலி துந்துபியின் எதிர்வந்து நின்றான்!

துந்துபிக்கும் வாலிக்கும் கடும்போர் தொடங்கிற்று.”

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *