Blog

  • பண்பாட்டு நோக்கில் சங்ககாலப் புலவர்களின் வாழ்வியல்

    முனைவர் சி.இராமச்சந்திரன்,

    ஆராய்ச்சி உதவியாளர்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

    சங்ககாலத்தில் நிலவிய சமூக, பொருளாதார, பண்பாட்டைத் தெரிந்துகொள்ளும் வரலாற்று ஆவணங்களாக சங்க இலக்கியங்கள் விளங்குவதுடன், சங்ககால மக்கள் பல்வேறுபட்ட வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டுள்ளனர் என்பதையும் சங்கப் பனுவல்கள் வழி உணர்ந்துகொள்ள முடிகிறது. எதையும் மிகைபடக் கூறாமலும் எதையும் குறைவுபடக் கூறாமலும் உள்ளதை உள்ளபடி பதிவுசெய்திருக்கும் புலவர் பெருமக்கள் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் தனித்துவமான வாழ்வியலை நமக்குக் கொடையாக வழங்கியிருக்கின்றனர். பரிசில் வேண்டிப் பாடிய புலவர்கள் அவர்களின் கவிதையாக்கங்களை நமக்கு இன்று பரிசாகக் கொடுத்துள்ளனர் என்று கூறுவதும் இங்குப் பொருத்தமாக இருக்கும். சங்ககாலத்தில் இருந்த செல்வச் செழிப்பைப் பாடிய புலவர் பெருமக்கள் அதன் மறுபக்கமான வறுமைக் கோலத்தையும், அதனை எதிர்க்கொண்டு வாழும் விளிம்புநிலை மக்களையும் குறிப்பிடத் தவறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தங்களது வறுமை நீங்க மிக அதிகப் பொருட்களைப் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் சங்ககாலப் புலவர் பெருமக்கள் பெருமையில்லாதவர்களைப் பாடி பரிசில் வேண்டி நிற்கவில்லை என்பதற்கு “வாழ்தல் வேண்டி பொய்கூறேன்; மெய்கூறுவல்” என்னும் மருதனிளநாகனாரின் கருத்தும், “நற்பொருள்களை விளங்க எடுத்துரைத்தாலும் ஒரு சிறிதும் விளங்கிக் கொள்ளமாட்டாத பெருமையில்லாத மன்னர்களை எம் இனத்தவராகிய புலவர்கள் பாடமாட்டார்கள்” என்று புலவர்களின் தன்மான உணர்வுக்குச் சான்றுதரும் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் கருத்தும் அவர்களின் புலமைச் செருக்கினைக் காட்டுவதாக உள்ளது. நல்லறிவுடைய புலவர்களின் பொய்யாத புகழ்ந்துரைகளையே மன்னர் பெருமக்களும் விரும்பினர், அதையே தாம் பெறுதற்குரிய நற்பேறாகக் கருதினர் என்பது அவர்களின் தகுதியைக் காட்டுகிறது.

    தம் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுவாழும் வசதியற்ற புலவர்கள் பலர் சங்ககாலத்தில் புகழும் கொடையுள்ளமும் கொண்ட மன்னர்களைப் பாடிச் சென்று பரிசில் பெற்றுத் தம் குடும்பச் சிக்கல்களையும் பிறர் வறுமையையும் போக்கியுள்ளனர். குமண வள்ளலின் கொடையுள்ளத்தை அறிந்த பெருஞ்சித்திரனார் அவனிடம் சென்று, “எனது மனைக் கண் உண்ணுதற்குரிய உணவில்லாமையால், என் இளம் புதல்வன் தாய்ப்பாலும் பெறாது கூழையும் சோற்றையும் விரும்பி, அடுக்களையிலுள்ள கலங்களைத் திறந்து பார்த்து, ஒன்றுங்காணாது, அழுகின்றான். அவனுடைய அழுகையைத் தணிக்கக் கருதிய என் மனைவி, ‘அதோ புலி வருகின்றது!’ என அச்சுறுத்தியும், வானத்தில் அம்புலியைப் பார்!’ என விளையாட்டுக் காட்டியும் அவன் அழுகை தணியாமைக்கு வருந்தி, ‘நின்னுடைய பசி வருத்தத்தை நின் தந்தைக்குக் காட்டுவாயாக,’ எனச் சொல்லி நின்று மனங்கலங்குகின்றாள்,” என்று அவனிடம் பரிசில் வேண்டி நிற்கிறார். கொடுப்பதற்கும் தன் புலமையைப் போற்றுவதற்கும் தகுதியுள்ள ஒரு மன்னனிடம்தான் தன் வறுமையை பெருஞ்சித்திரனார் எடுத்துரைக்கிறார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

    மன்னர்களைப் பாடிப் பரிசில் பெற்றுச் செல்வதை மட்டும் தம் கடமையாகக் கொண்டிராமல் அவர்களின் சுகதுக்கங்களிலும் குடும்ப விவகாரங்களிலும் பங்குபெற்றுள்ளனர் புலவர் பெருமக்கள். பரத்தை ஒழுக்கம் மேற்கொண்டிருக்கும் பேகனை நோக்கி, “மெல்லிய தகைமை பொருந்திய கரிய மயில் குளிரால் நடுங்குமென்று அருள் செய்து போர்வை கொடுத்த, அழியாத நற்புகழினையும், மதமுடைய யானையையும், மனம் செருக்கிய குதிரையையும் உடைய பேக! யாங்கள் பசித்தும் வந்தோம் இல்லை; எம்மால் புரக்கப்படும் சுற்றமும் எம்பால் உடையேம் இல்லை; கலாப்பழம் போன்ற கரிய கோடுடைய சிறிய யாழை, இசை இன்பத்தை விரும்பி உறைவார் அவ்விசையின்பத்தால் தலையசைத்துக் கொண்டாடும்படி வாசிப்பேம்; அருள் வெய்யோய்! அறத்தைச் செய்வாயாக; இன்று இரவே இனமாகிய மணியையுடைய உயர்ந்த தேரேறிச் சென்று, காண்பதற்கு இன்னாதாக உறைகின்றவள், பொறுத்தற்கரிய நின் நினைவால் உண்டாகிய மனைவியின் நோயைத் தீர்ப்பாயாக; இதுவே யாம் நின்னிடத்து இரந்துவேண்டும் பரிசிலாகும்” (புறம்.145) என்று அறிவுறுத்துகிறார் பரணர். இப்பண்பைத் தமக்குப் பரிசில் வழங்கும் மன்னனின் உள்ளமும் இல்லமும் நலமோடு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு என்று கூறலாம். பேகன் மனைவி கண்ணகியின் சிக்கலைத்தீர்க்க கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் போன்ற புலவர்களும் முயற்சியெடுத்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

    பாரியின் பறம்புமலையைப் பாடிப் பரிசில்பெற்ற புலவர் கபிலர், அவன்மீது கொண்ட நட்பின் காரணமாக அவன் இறந்தபிறகு பாரியின் பெண்பிள்ளைகளுக்கு ஒரு தந்தையாக இருந்து மணம் முடித்து வைக்க நினைத்து விச்சிக்கோ என்ற மன்னனிடம் சென்று, பாரிமகளிரை மணக்குமாறு வேண்டி நிற்கின்றார். இப்புலவரின் கடமையுணர்வை இங்குக் காணமுடிகிறது (புறம்.200). மேலும் சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு நடைபெற்ற போரில், அவன் மார்பில் குத்திய வாள் புறமுதுகில் வெளிப்பட்டது. அதன்பொருட்டு அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர்துறந்தான் (புறம்.65). அவன் இழப்பைத் தாங்கிக்கொள்ளமுடியாத கழாத்தலையார், “தனித்துத்திரியும் ஞாயிறு அமைந்த பகற்பொழுது, அவனில்லாத இவ்விடத்தில் எமக்கு முன்பு கழிந்து சென்ற நாட்களைப் போல அமையாது” என்று வருந்திப் பாடுகிறார். வெற்றிபெற்ற கரிகாற் பெருவளத்தானின் வெற்றியைப் பாடும் புலவர் வெள்ளிக்குயத்தியார், மதம் பொருந்திய ஆண் யானையை உடைய கரிகால் வளவனே! போர் மேற்சென்று கொன்று நின்னாற்றல் தோன்றுமாறு வென்றாய்; குறைவுபடாது பெருகும் புதுவருவாயை உடைய வெண்ணியில் ஊர்ப்புறத்தின் போர்க்களத்தில் மிகப் புகழமைந்த உலகை விரும்பிப் பொருந்தியவனும், புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்தோனுமான பெருஞ்சேரலாதன் நின்னைவிட நல்லன் அல்லனோ? என்கிறார். எதிரிநாட்டு மன்னரின் வீரத்தையும் புலவர்கள் அஞ்சாது எடுத்துரைத்துள்ளனர் என்பதை இச்செய்தி வாயிலாக அறியமுடிகிறது.

    சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையுடன் கொண்ட பகையால் கிள்ளி கருவூரிடத்திற்கு யானை மீது ஏறி, தன் படையுடன் போரிட வருகிறான்; இவன் வருகையை அரசனிருக்கும் மாடத்தில் நின்று இரும்பொறையுடன் காண்கிறார் புலவர் ஏணிச்சேரி முடமோசியார், இவன் தான், புலியின் தோலால் செய்த கவசத்தில் விளங்கும் புள்ளிகள் சிதையுமாறு ஏவிய அம்புகள் பிளந்ததும் பரந்து அழகுடையதுமான மார்பினையுடையனவாய், எமனைப் போல விளங்கி ஆண் யானையின் மீது அமர்ந்தவன்; இவன் அமர்ந்த யானை கடல் நடுவே செல்லும் மரக்கலம் போலவும் விண்மீன்களிடையே செல்லும் நிலவினைப் போலவும் விளங்கும்; அது சுறாக்கூட்டம் போன்ற வாளுடைய வீரர் சூழத் தான் வரும்போது தன்னுடைய பாகரும் அறியாதபடி மதங்கொண்டது; இவன் தீதின்றிப் பெயர்வானாக; (புறம்.13) என்கிறார். தன் மன்னன் உடனிருந்தும் பகை மன்னனை வாழ்த்திய செம்மையையும் துணிவையும் ஏணிச்சேரி முடமோசியாரின் பாடலால் அறியமுடிகிறது.

    மலையமானின் மக்களை யானைக் காலால் இடறி வீழ்த்தக் கருதிய கிள்ளிவளவனைத் தடுத்து, அச்சிறுபிள்ளைகளைக் கோவூர்கிழார் காப்பாற்றினார் (புறம்.46). மேலும் கொடை வண்மையுடையவரை நாடிவருதல் புலவரியல்பு; அவ்வாறே இளந்தத்தன் எனும் புலவர் நெடுங்கிள்ளியை நாடினார். ஆனால், அப்புலவரை ‘ஒற்றன்’ எனக் கருதினான் நெடுங்கிள்ளி; அவரைக் கொல்லாது கோவூர்கிழார் காத்தார் (புறம்.47). மன்னர்கள் செய்ய முற்படும் தவற்றை எடுத்துரைத்து அவர்களைப் பழிபாவங்களிலிருந்து காத்தற்பொருட்டு தம் கருத்துக்களையும் வழங்கியுள்ளனர் புலவர் பெருமக்கள் என்பதை இதனால் அறியமுடிகிறது.

    பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை நோக்கி, “தம்மால் கொடுக்க இயலும் பொருளை இயலுமென்று சொல்லிக் கொடுத்தலும், யாவர்க்கும் தம்மால் கொடுக்க இயலாத பொருளை இல்லையென்று சொல்லி மறுத்தலும் ஆகிய இரண்டும் தாளாண்மை உடையார்பால் உள்ளன; தனக்கு இயலாததனை இயலும் என்றலும், இயலும் பொருளை இல்லையென்று மறுத்தலும் ஆகிய இரண்டும் விரைவில் இரப்போரை வாட்டமுறச் செய்வதோடு, ஈவோரின் புகழைக் குறைவுபடச் செய்யும்; இப்பொழுது நீ என்பாற் செய்ததும் அவ்வாறே ஆயிற்று; இஃது எத்துணையும் எம் குடியில் உள்ளார் முன்பு காணாதது; இப்பொழுது யாம் கண்டேம்; யானும் வெயில் என்று நினைந்து செல்லுதலை வெறுக்காமலும், பனியென்று கருதிச் சோம்பியிராமலும் செல்கின்றேன். என்னை விட்டு நீங்காது, கல்லால் செய்தாற்போன்ற வறுமையின் மிகுதியால் வளிமறையாகிய மனையிடத்து உறைபவள் என் மனைவி; அவள் நாணைத் தவிர வேறில்லாத கற்பினையும், ஒளியுடைய நுதலினையும், மெல்லிய சாயலினையும் உடையவள்; அவளை நினைந்து போகின்றேன்; நீ எமக்குச் செய்த அத்தீங்கினால் (பரிசில் கொடாததால்) நின் பிள்ளைகள் நோயின்றி இருப்பாராக; நின் வாழ்நாள் சிறந்து மிகுவதாகுக” (புறம்.196) என்கிறார் ஆவூர் மூலங்கிழார். இப்பாடல் பரிசில் கொடுக்காமல் நீட்டித்த மன்னனைச் சாடியுரைப்பதாகவுள்ளது. பரிசில் கொடுக்காமல் காலம் தாழ்த்திய மன்னர்களைப் புலமைச் சமூகத்தினர் அஞ்சாமல் பாடிச் சென்றுள்ளனர். அதனைப் பிரதிபலிக்கும்  ஒரு பாடல் இவை எனலாம்.

    பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு காடுகளையும் மலைகளையும் கடந்துச் சென்று மன்னர்களைப் பாடிப் பரிசுபெற்ற புலவர்கள், செறிவான கவிதைகளாகச் சங்க இலக்கியங்களை நமக்குப் படைத்தளித்துள்ளனர்.  ஆற்றுப்படைப் பாடல்களைப் பார்த்தால் அது ஒரு பயண இலக்கியத்தைப் படித்ததைப் போன்ற ஒரு உணர்வினை நமக்குத் தரும். புறப்பாடல்கள் நம் முன்னோரின் வீரத்தையும், கொடையையும் எடுத்துரைக்கும். தமிழரின் காதலையும் கற்பையும் அகப்பாடல்கள் பிரதிபலிக்கும். இவ்வாறு அரிய கொடையாகிய சங்கப் பாடல்களைக் கொடுத்த புலவர்களின் வாழ்வில் வறுமையும் வளமையும் என இரண்டும் சேர்ந்து இருந்ததை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 5

    ======================

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ————————————————-

     

    தென்னாட்டின்  தனிச் சிறப்பு இங்கே காவிரி பாய்ந்து வளந்தருவதே! இக்காவிரி பாயும் நாட்டில் தான் சுந்தரரின் அவதாரமும், சைவப் பணிகளும்  வளர்ந்தன! கங்கைக்கு நிகரான காவிரி பாயும் சோழநாடே  சுந்தரரின் வாழ்விடமாகும். ‘’சோழநாடு சோறுடைத்து‘’ என்ற அனுபவ மொழி, சித்தாந்த நெறியில்  ஆன்மலாபத்தையும்  குறிக்கும். குடகு நாட்டில் தோன்றி தமிழ்நாட்டில் பாய்ந்து சோழநாட்டை வளங்கொ ழிக்கும்  பூமியாய் மாற்றும் காவிரி,  பெரியபுராணத்தில் திருநாட்டுச்  சிறப்பில்  பாடப் பெறுகிறது.

    இந்நதி தான் பாய்ந்துவரும் சோழத்  திருநாட்டில் இருகரைகளிலும் உள்ள திருக்கோயில் களில்  எழுந்தருளும் இறைவனை வழிபட்டுக்  கொண்டே செல்கிறதாம். இறைவழிபாட்டுக்கு மிக்க கரைந்த தேவை, நீரும்,பூவும்  ஆகும்! வடமொழி வேதம் ‘’பத்ரம், புஷ்பம், பலம், தோயம் எனப்படும் இலை , பூ, கனி, நீர் ஆகியவை  இறை வழிபாட்டுக்கு உகந்தன என்று கூறுகிறது. அவ்வாறு வழிபாடு செய்வோரை  அடியார்கள் என்று தமிழ்த் திருமுறை பாடுகிறது. காவிரியாறு  இருமருங்கிலும் உள்ள திருக்கோ யில்களை வலம் வந்து வழிபாடு செய்கிறதாம்

    புத்தம் புதிதாய்ப் பூக்கும் மலர்களே இறைவழிபாட்டுக்குரியன! காவிரியின் இருமருங்கிலும் உள்ள சோலைகளில் அன்றாடம் புதுப்புது  மலர்கள் அரும்பி மலர்கின்றன. அவை காற்றில் உதிர்ந்து காவிரியில் விழுந்து மிதக்கின்றன. ‘’புனலாறன்று இது பூம்புனலாறு ‘’ என்று இலக்கியம் கூறுகிறது.

    ‘’மருங்குவண்டு  சிறந்தார்ப்ப  மணிப்பூவாடை அதுபோர்த்திக் 

     கருங்கயல்கண்  விழித்தொல்கி  நடந்தாய் வாழி காவேரி!’’

    என்று காவிரி பாயும் அழகைச்  சிலப்பதிகாரம்  பாடுகிறது. இவ்வாறு பூக்களையும் கனிகளையும் சுமந்து வந்த காவிரி,  கரையில் உள்ள திருக்கோயில்களில் எழுந்தருளும் இறைவன் மேல் புனிதப் புது நீரால்  அபிடேகம் செய்கின்றதாம். அப்போதே அது வாரிக்கொண்டு வந்த மலர்களையும்  தூவி அருச்சிக்கின்றதாம். மலர்களில் மொய்க்கும் வண்டின் ரீங்காரம் இறைவனைத் துதித்துப் பாடுவது போல் ஒலிக்கின்றதாம்!இதனைத் திருஞானசம்பந்தர்,

    ’நுகர் ஆரமொடு  ஏலம் மணி  செம்பொன்  நுரை உந்தி

      பகராவரு  புனல்காவிரி  பரவி பணிஒந்து ஏத்தும் ‘’

    என்றும், சுந்தரர் ,

    ’கிளர்புனற்  காவிரி ,

     வட்ட  வாசிகை  கொண்ட  டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி’’

    என்றும்  பாடுகின்றனர். இவற்றைக்  கருத்தில் கொண்டு, இறை வழிபாட்டுக்கு  உரிய நீரையும் இலை களையும்  பூவையும் கனிகளையும் சிதறிக் காவிரியாறு வழிபடுவது , காவிரிக் கரை நெடுகிலும் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் சிவனடியார்களின் வழிபாடு போல் உள்ளதாம். இதனைச்  சேக்கிழார் ,

    ‘’வம்பு     லாமலர்      நீரால்        வழிபட்டுச்

     செம்பொன்   வார்கரை  யெண்ணில்   சிவாலயத்

     தெம்பி     ரானை     யிறைஞ்சலி    னீர்ம்பொன்னி

     உம்பர்   நாயகற்   கன்பரு   மொக்குமால்.’’

    என்று பாடுகிறார்!  திருஞானசம்பந்தர் தம் முதற்பாடலில்,

    ’ஏடுடைய மலரால்  முனை நாள் பணிந்து ஏத்த அருள்செய்த ‘’

    என்று பாடுகிறார்.  அப்பரடிகளோ,

    ‘’சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்! 

      தமிழோடிசை பாடல் மறந்தறியேன்!’’

     என்கிறார். சுந்தரர்,

    ’முட்டாமே  நாள்தோறும்   நீர்மூழ்கிப்  பூப்பறித்து  

                     மூன்று போதும்

    கட்டார்ந்த  இண்டை கொண்டு அடிசேர்த்தும் ‘’

    என்று பாடுகிறார். இவற்றால் சிவனடியார்கள் நீர், மலர் கொண்டு இறைவனை வழிபட்டார்கள் என்பது புலனாகிறது. அவர்கள் காவிரியாற்றின் இரு கரைகளிலும்  உள்ள எண்ணற்ற சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டார்கள். இவ்வாறே காவிரியும் பூ, நீர் கனி கொண்டு , இருகரைகளிலும் உள்ள எண்ணற்ற சிவாலயங்களில் வழிபாடு செய்தது என்பதைச் சேக்கிழார்,

    ’வம்பு     லாமலர்      நீரால்        வழிபட்டுச்

     செம்பொன்   வார்கரை  யெண்ணில்   சிவாலயத்

     தெம்பி     ரானை     யிறைஞ்சலி    னீர்ம்பொன்னி ‘’

    என்று பாடுகிறார். அச்செயல் சிவனடியார்களின் செயலுக்கு இணையாக விளங்குகிறது. இதனைச்  சேக்கிழார்,

     

     ‘’உம்பர்   நாயகற்   கன்பரு   மொக்குமால்.’’

     

    எனப்பாடுகிறார். ‘’உம்பர் நாயகற்கு  அன்பர்’’ என்ற தொடர் பொதுவாகச்  சிவனடியார்களைக்  குறித்தாலும் , சிறப்பாகக்  கயிலைமலையில்  சிவ பெருமானுக்கு அன்பராய் விளங்கிய  சுந்தரமூர்த்தி நாயனாரையே குறிக்கிறது!  இப்புராணத்தின் கதைத்தலைவராகிய சுந்தரர்கைலை கைலை மலையில் சிவபெருமான் வழிபாட்டுக்கு உரிய மலர்களை பறித்து நல்கும் தொண்டினைச் செய்தவர். மேலும் அவர்  முப்போதும் திருமேனி தீண்டிப்  பூசிக்கும்  சிவவேதியர் மரபில் தோன்றியவர் என்பதையும் சேக்கிழார் இங்கே  நினைவுகூர்ந்து  குறிப்பிடுவது நினைந்து மகிழ்தற்குரியது.

    ========================================================================

    Share
  • ஒதுக்கப்பட்டவர்களின் கலையும் கலாச்சாரமும்

    . சிவா, ஆராய்ச்சியாளர், அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகவியல் துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்.


     இந்தக் கட்டுரையானது தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றியோ சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றியோ எழுதப்பட்ட ஆய்வு அல்ல. இது தாழ்த்தப்பட்டவர்களாலும், ஒடுக்கப்பட்டவர்களாலும் மற்றும் இந்தச் சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டவர்களைப் பற்றியது. ஆம், நம் சமூகத்தால் அறவாணிகள் என்றும், அரசால் திருநங்கைகள் என்றும், மத குருக்களால் அர்த்த நாரீஸ்வரர்கள் என்றும் அழைக்கப்படும் மக்களைப் பற்றியது. தங்கள் குடும்பத்தால் ஒதுக்கப்பட்டும், தங்கள் சமூகத்தால் ஒடுக்கப்பட்டும் வாழ்ந்துவரும் இவர்கள் அனைவரும் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து ஒரு இடத்தில் ஒன்று கூடித் தங்களுக்கு என்று ஒரு சமூகத்தை உருவாக்கி தங்களுக்குள் சாதி, மதம் என எவ்வித வேறுபாடுமின்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் அரவணைத்தும் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தனது குடும்பத்தினராலும், சமூகத்தாலும், சமுதாயத்தாலும் புறம் தள்ளப்பட்டவர்கள் ஆவர்.

    திருநங்கைகள் என்றாலே ஒரு மாதிரியாகவும், புது விதமாகவும் பார்க்கும் இந்த சமுதாயத்தில், திருநங்கைகள் என்றாலே கை தட்டி கடைகளில் பணம் வாங்குபவர்களாகவும் பார்க்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் இல்லாமல் கலைஞர்களாகவும் சிலர் வலம் வருகின்றனர். இவர்களில் பலர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளும் பெற்றுள்ளனர். உதாரணமாக மார்ச் 2014- ல் தன்னார்வ சுகாதார சேவைகள் மையம் (Voluntary Health Service) நடத்திய கலை நிகழ்ச்சிகளில் 400- க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று 60 மணி நேரம் இடைவிடாது ஆடி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளனர்.

    சமீபத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள வள்ளி நகரில், திருநங்கைகளின் விழா ஒன்றினை காணச் சென்றிருந்தேன். அவ்விழாவில் ஆச்சரியப்படும் அளவுக்கு நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.  அனைவரும்   சிறப்பாக தங்களுக்குள் உள்ள உறவு முறைகளையும், அவர்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தினர். அவ்விழாவானது புதிதாக வரும் தங்கள் உறவை வரவேற்கும் விழாவாகும். அந்த விழாவில் மூத்த திருநங்கை புதிதாக வரும் ஒருவரை தத்தெடுத்து, அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்பவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குள் ஒரு உறவுமுறை வைத்து புதிதாக வருபவர்களுக்கு சீர் செய்யும் முறை  வழக்கமாக இருந்து வருகிறது.

    அவர்கள் சீர் செய்யும் முறை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால், அவர்கள் சீர் செய்ய வரும் போது டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க வெடிச் சத்தங்கள் காதைக் கிழிக்க அவர்களின் நடனங்கள் பார்ப்பவர் கண்களைப் பறிக்க  சிறப்பாக நடைபெறுகிறது. இது ஒரு புறம் இருக்க, அடுத்து அவர்கள் தத்தெடுக்கும் முன் நடக்கும் சம்பிரதயங்களைப் பார்க்கும் போது மேலும் வியப்பாக இருந்த்து. புதிதாக தத்தெடுப்பவர்களை தலையில் துணியால் முக்காடிட்டு அவர்களுக்கான இடத்தில் உட்கார வைத்து அவர்களின் மேல் மஞ்சள் நீர் ஊற்றுதல், சந்தனம் தேய்த்தல் போன்ற பாரம்பரிய நிகழ்வுகளை நிகழ்த்தினர். புதிதாக வரும் திருநங்கையை தத்தெடுப்பவர் தாய் என்று அழைக்கப்படுகிறார். அந்த தாயானவள் தன்னுடைய தத்தெடுப்பு மகளின் மேல் சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நோட்டுகளாக சேகரித்து பண அபிஷேகம் செய்தனர். உறவுக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் பங்கிற்கு சீர்களை செலுத்தி விழாவுக்குப் பெருமை சேர்த்தனர்.

    இந்த நிகழ்வை ரீத் என்று அழைக்கின்றனர். ரீத் என்றால் தத்தெடுப்பு என்றும் இன்று முதல் அவர்கள் திருநங்கைகளாக அங்கீகரிக்கப்ட்டுவிட்டார்கள் என்பதும் பொருளாகும். மேலும் இந்த ரீத் செய்யப்பட்ட திருநங்கையின் அனைத்துத் தேவைகளும் தத்தெடுத்த தாயினையே சாரும், மேலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையாகவும், ஆதரவாகவும் இருந்து கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர். மேலும் அவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னரே ரீத் நிகழ்வானது நிகழ்கின்றது. ஒரு திருநங்கைக்கு ரீத் நிகழ்வானது அவர்கள் தாய் கழகத்திற்கு வந்த உடனே நடைபெறுவதில்லை. அவர்கள் புதிதாக வரும் திருநங்கையின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த நிகழ்வினை நிகழ்த்துகின்றனர்.

    தங்கள் குடும்பத்தாலும் சமூகத்தாலும் சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்டவர்கள் தங்களுக்கென்றே ஒரு குடும்பம், சமூகம் மற்றும் சமுதாயம் அமைத்து வாழ்கின்றனர். அவர்களின் ஒற்றுமையான வாழ்க்கை முறையினைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இப்படி ஒரு வாழ்க்கை வாழும் மக்களை நம் சமுதாயம் ஏன் இப்படி வேடிக்கைப் பொருளாக்கி இரசிக்கின்றனர் என்பது வருத்தத்திற்குரிய செயலாகும்.

     

     

     

     

    Share
  • தொல்தமிழர் கொடையும் மடமும்

    முனைவர் ம. தமிழ்வாணன்,முதுநிலை ஆய்வு வல்லுநர்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,தரமணி, சென்னை – 113

    செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும்.

    கொடை விளக்கம்

    கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், புறத்துறை, திருவிழா, வசவு, அடி என்றும் ஈகைக்கு – கொடை, பொன், கற்பகம் என்றும் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி. (பக்.236 ) பொருள் தருகின்றது.

    தமிழ்-தமிழ் அகரமுதலி கொடை என்ற சொல்லிற்கு ஈகம், தியாகம், கொடை, கைக்கொண்ட ஆநிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் (புறத்துறை), ஊர்த்தேவதைக்கு மூன்று நாள் செய்யும் திருவிழா, வசவு, அடி(ப.- 387) என்று பொருள் சுட்டுவதைக் காணலாம்.

    செவ்வியல் காலத்தில் அரசர்கள் நற்கொடை வள்ளல்களாக இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வருகின்ற புலவர்களுக்கும் மற்றவருக்கும் பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமையைச் செவ்விலக்கியங்களால் உணர முடிகிறது. பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டனர். பாரி முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப் போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர். ஆற்றுப்படை இலக்கியங்கள் மன்னர்களின் கொடைத் தன்மையைக் கூறுவனவாக இருத்தலைக் காண்கிறோம். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலமும் மன்னர்களின் கொடைத்தன்மைகளைக் காணலாம். கொடை குறித்து வள்ளுவர்,

    தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

    வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 222)

    என்று குறிப்பிடுவது நாம் ஈட்டும் செல்வம் மற்றவருக்கும் கொடுப்பதற்கே என்கிறார். கொடை குறித்து புறநானூற்றுப் பாடல் கூற்று.

    கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று. (புறம். 204:4)

    இதோ வாங்கிக்கொள் என்று நாமே மனமுவந்து கொடுப்பது மிகச் சிறந்தது என்கிறது.

    தமிழ்க் கொடை வள்ளல்கள்

    முதலேழு வள்ளல்கள் : சகரன், காரி, நளன், தந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்

    இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன், சந்தன்

    கடையேழு வள்ளல்கள்: பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன்.

    கடையேழு வள்ளல்கள்

    பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள சிறுபாணாற்றுப்படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று பொருள் கொள்ளலாம். இத்தகைய செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்துள்ளன. இவ் வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் சுட்டுகின்றன.

    கடையேழு வள்ளல்களும் புறநானூற்றுப் பாடல் எண்களும்

    1. அதியமான் நெடுமான் அஞ்சி – 100, 101, 103, 104, 206, 208, 231, 232, 236, 315, 390, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104,
    2. ஆய்வேள் ஆய் அண்டிரன் – 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374, 375,
    3. ஓரிவல்வில் ஓரி – 152, 153, 204,
    4. காரிமலையமான் திருமுடிக்காரி – 121, 122, 123, 124, 125, 126,
    5. நள்ளிகண்டீரக் கோப்பெருநள்ளி – 148, 149, 150,
    6. பாரி – 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 115, 116, 117, 118, 119, 120, 236, 105, 106, 107, 108, 109, 110, 111, 112,
    7. பேகன் – வையாவிக் கோப்பெரும்பேகன் – 141, 142, 143, 144, 145, 146, 147,

    சிறுபாணாற்றுப்படையில் (84 – 114) ஓய்மானாட்டு நல்லியக்கோடனும் வள்ளல் குமணனும் (புறம்.158) மேற்குறிப்பிட்ட கடையேழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்களாக அறியப்படுகின்றனர்.

    பிற வள்ளல்களும் புறப்பாடலும்

    புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர் பெருமக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரசாண்ட பிற வள்ளல்களையும் பாட்டில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு, அம்பர் கிழான் அருவந்தை – 385, அவியன் – 383, ஆதனுங்கன் – 175, 389, எவ்வி – வேள் எவ்வி – 233, 234, எழினி – அதியமான் எழினி – 230 \ எழினி – அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி – 96 \ எழினி – அதியமான் மகன் பொகுட்டெழினி – 392 \ எழினி – அதியான் மகன் பொகுட்டெழினி – 102, எழினியாதன் – வாட்டாற்று எழினியாதன் – 396,  ஓய்மானாட்டு நல்லியக்கோடன் – புறம் 176, & சிறுபாணாற்றுப்படை, ஓய்மான் நல்லியாதன் – 376, ஓய்மான் வில்லியாதன் – 379, கரும்பனூர் கிழான் – 381, 384, காரியாதி – மல்லி கிழான் காரியாதி – 177, குமணன் – 158, 159, 160, 161, 162, 163, 164, 165, கொண்கானங்கிழான் – 154, 155, 156, சாத்தன் – ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் – 242, 243, சாத்தன் – சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் – 395, தருமபுத்திரன் – 366, திருக்கண்ணன் – மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் – 174, திருக்கிள்ளி – ஏனாதி திருக்கிள்ளி – 167, தொண்டைமான் இளந்திரையன் – பெரும்பாணாற்றுப்படை, தோன்றிக்கோன் – தாமான் தோன்றிக்கோன் – 399, நன்னன் – செங்கண்மாத்து வேள் நன்னன்சேய்நன்னன் – மலைபடுகடாம், நாகன் – நாலை கிழவன் நாகன் – 179, பண்ணன் – சிறுகுடி கிழான் பண்ணன் – 173, 388,  பண்ணன் – வல்லார் கிழான் பண்ணன் – 181, பாரிமகளிர் – 113, 114, பிட்டங்கொற்றன் – 168, 169, 170, 171, 172, பொறையாற்று கிழான் – 391, மாறன் – ஈந்தூர் கிழான் தோயன் மாறன் – 180, மாறன் – தந்துமாறன் – 360, வள்ளுவன் – நாஞ்சில் வள்ளுவன் – 137, 138, 139, 140, 380, விண்ணத்தாயன் – சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன் – 166, வெளிமான் – 238.

    புறநானூற்றிலேயே போலி வள்ளல்களாகத் திகழ்ந்த மன்னர்கள் பற்றியக் குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. அவர்களின் பெயர்களும் வருமாறு, இளவெளிமான் – பரிசில் சிறிது – 207, 237, கடியநெடுவேட்டுவன் – பரிசில் நீட்டித்தவன் – 205, குமணன் தம்பி இளங்குமணன் – 165, மூவன் – பரிசில் நீட்டித்தவன் – 209

    இனி தொல்தமிழ் நிலத்துக் கடையேழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி எனும் அந்த ஏழு வள்ளல்களின் சிறப்பினைக் காண்போம்.

    1. வள்ளல் பேகன்

    தொன்மைக்காலத்தில் பழனிமலையைப் பொதினி என்று அழைத்தனர். ஊருக்கு ஆவிநன்குடி என்று பெயர் வழங்கியது. பொதினி என்பதே பிற்காலத்தில் பழனி என்று மாறிவிட்டது. ஆவியர் குலம் என்பது ஒரு குறுநில மன்னர் குடிக்குப் பெயர். அவர்கள் அரசாண்ட இடம் ஆதலால் ஆவிநன்குடி என்று ஊருக்குப் பெயர் வந்தது. ஆவி, வையாவி என்று இரு வகையிலும் ஆவியர் குல மன்னர்களை வழங்குவதுண்டு. ஆதலால் வையாவிபுரி என்றும் அழைத்தனர். அதுவே நாளடைவில் வையாபுரி என்று மாறியது. அந்த ஆவியர் குலத்தில் வந்தவன் பேகன் என்னும் குறுநில மன்னன். பாரியைப்போல அவனும் ஒரு வேள். அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று குறிப்பிடுவர். வையாவி ஊரில் உள்ள அரசனாகிய பெரிய பேகன் என்பது இதன் பொருளாகும்.

    வள்ளல் பேகன் ஓர் சிறந்த கொடையாளியாவார். புலவர்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல். யாழை வாசித்துப் பாடும் பாணர்கள் வருவார்கள். அவன் அரண்மனையில் பல நாள் தங்குவார்கள். அவர்களுடைய இசையின்பத்தை நுகர்ந்து களிப்பான் பேகன். பிறகு பலவகைப் பரிசில்களை அளிப்பான். பொன்னாலாகிய தாமரைப் பூவை அவர்கள் அணியும்படியாகத் தருவான். அந்தக் காலத்தில் பாணர்களுக்குப் பொற்றாமரை அளிப்பது வழக்கம். பாணர்களுடைய மனைவிமார்கள் ஆடுவார்கள்; பாடுவார்கள். அவர்களுடைய ஆடல் பாடல்களையும் கண்டு மகிழ்வான். அவர்களுக்குப் பல்வகையான அணிகலன்களைப் பரிசளிப்பான். சில சமயங்களில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் தேரையும் அளித்து மகிழ்வான். பொதினி எனப்படும் பழனி மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தான். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயலைச் செய்தார். இவ்வாறு செய்தமையே ‘கொடைமடம்’ என்று போற்றுகின்றார்கள்.

    வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்

    கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

    அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

    பெருங்கல் நாடன் பேகனும்   (சிறுபாண்.84-87)

    புறநானூற்ற்றின் 142ஆம் பாடலைப் பாடிய பரணர், “கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழை போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்” என்ற கருத்தை அமைத்து பாடியிருக்கிறார். பேகனின் கொடைச்சிறப்பைக் கபிலர், பரணர், அடிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் போன்றோர் பதிவிட்டுள்ளனர்.

    எத்துணை ஆயினும் ஈதல் நன்று என

    மறுமை நோக்கின்றோ அன்றே

    பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே (புறம்.141:13-15)

    என்று புலவர் பரணர் நயம்படச் சுட்டுகிறார்.

    கொடைமடம் படுதல் அல்லது

    படைமடம் படாண் பிறர் படைமயக் குறினே (புறம்.142:5-6)

    இப்பரணரின் பாடல் இரந்து நிற்பவர் எத்தகுதியைப் பெற்றிருந்தாலும் வரையறை இன்றி கொடுக்கும் வண்மனம் படைத்தவன் பேகன் என்பதை அறிவிக்கிறது. கபிலர் பாட்டில்  கைவள் ஈகைக் கடுமான் பேக! (புறம்.143:6) என்றும் சுட்டுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. பேகனின் கொடைத் தன்மையால் அவனின் மனைவி நலிந்தவளாகி கூந்தலிலே நறும்புகையூட்டி தண்மலர் சூடிட வழி இல்லாமல் இருப்பதாக, கொடைக்குப் பிந்தைய நிலையை எடுத்துரைக்கிறார் புலவர் அரிசில்கிழார்.

    ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்

    தண்கமழ் கோதை புனைய (புறம்.146:9-10)

    1. வள்ளல் பாரி

    பறம்பு மலையைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் வேள்பாரி ஆவார். இவர் கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைத்தனர். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது ‘பிரான்மலை’ என்று அழைக்கப்படுகிறது. அப்போதைய பாண்டிய அரசின் எல்லையின் அருகில் வரும். இதற்கு இன்னொரு பெயர் ‘கொடுங்குன்றம்’ என்பதாகும். இம்மலை மேருமலையின் ஒரு பகுதி என்னும் புராணக்கதையும் உண்டு. பிரான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி திருப்பத்தூர் வட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகில் உள்ளது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே எனலாம். கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பது அவனது தனிச்சிறப்பாக இருந்தது.

    புலவர் கபிலர் பாரியின் நண்பராக அறியப்படுகிறார். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் கொட்டாம்பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; ‘பொய்யாநாவிற்கபிலர்’ என்று புகழப்படுபவர். இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர். மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு அரசர் வேள்பாரியின் புகழ் தென்னகம் முழுவதும் பரவி இருந்தது. பாரி மூவேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்டார். வேள்பாரிக்கு இருமகளிர் உண்டு. அங்கவை, சங்கவை ஆகியோர் இவரது மகள்கள் ஆவர். ஆதரவின்றி இருந்த பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணி ஔவையார் முயன்றபோது அதனைத் தடுக்க மூவேந்தர்கள் முயன்றனர். ஆனால் ஔவையார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கரபுரநாதர் கோவிலில் மணம் செய்து வைத்தார். அந்தக் கோவில் தற்போது சேலத்தில் உத்தமசோழபுரம் (சோழன் இருந்த இடம்) என்ற பகுதியில் உள்ளது. மேலும் அருகில் வீரபாண்டி (பாண்டியன் இருந்த இடம்), சேலம் (சேரநிலம்-சேரன் இருந்த இடம்) உள்ளது. பாரியை ஒளவையும் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.

    வள்ளல் வேள்பாரியின் கொடைப்பண்பைப் பற்றிக் கபிலர் மழையைப் போல கைமாறு ஏதும் கருதாது கொடையை வழங்குபவன் என்று கூறிப் புகழின் உச்சிக்கே கொண்டு செல்வதைக் காணலாம்.

    ……………சுரும்பு உண

    நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்

    சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

    பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்

    பறம்பின் கோமான் பாரியும்;   (சிறுபாண்.87 – 91)

    பாரி பாரி என்று பல ஏத்தி

    ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்

    பாரி ஒருவனும் அல்லன்

    மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே (புறம்-107)

    பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு

    பாரியும் பரிசிலர் இரப்பின் (புறம்.108:4-5)

    1. வள்ளல் காரி

    அதியமான் காலத்து வரலாற்றிலே வந்த காரியும் ஏழு வள்ளல்களில் ஒருவன். அவன் முழுப்பெயர் மலையமான் திருமுடிக் காரி ஆகும். மலையமான் என்பது அவன் குடிப்பெயர். திருக்கோவலூரே அவனுடைய தலைநகர். அதை நடுவிலே பெற்ற நாட்டைப் பல காலமாக ஆண்டு வந்தவர்கள் மலையமான்கள் என்னும் வீரக் குடியினர். அவர்கள் ஆண்ட நாடாதலின் அதற்கு மலையமான் நாடு என்ற பெயர் விளங்கிற்று. அது நாளடைவில் மாறி மலாடு என்று அழைக்கப்பட்டது.

    வள்ளல் காரி ஈகையிற் சிறந்தவனாகவும் வீரத்தில் இணையற்றவனாகவும் விளங்கியிருக்கிறான். அவனது பெரும்படையில் தெரிந்தெடுத்த அடலேறு போன்ற வீரர்கள் இருந்தனர். அந்தப் படைப் பலத்தினால் அவனைக் கண்டால் யாரும் அஞ்சி நடுங்குவார்கள். இரு பெரு மன்னர்களுக்குள் போர் மூண்டால் அவரில் ஒரு மன்னன் மலையமான் திருமுடிக் காரியை அணுகுவான். தனக்குத் துணையாக வரவேண்டுமென்று சொல்வான். காரி தன் படையுடன் சென்று போரிலே ஈடுபடுவான். பிறகு வெற்றி யாருக்கு என்பதைப் பற்றி ஐயமே இல்லை. அவனிடம் கரிய நிறம் பொருந்திய குதிரை ஒன்று இருந்தது; காரியென்பதே அதற்கும் பெயர். அது மலையமானுடைய உள்ளம் போலப் பாயும் இயல்புடையது. சோழனுக்கோ, பாண்டியனுக்கோ, சேரனுக்கோ துணையாகச் சென்று போரிடுவான் காரி. போர் முடிவில் வென்ற மன்னன் அவனுக்குப் பற்பல பரிசில்களைத் தருவான். பொன்னும் மணியும் அளிப்பான், ஊர் அளிப்பான்; நாடு அளிப்பான். வண்டி வண்டியாகத் தான் பெற்ற பண்டங்களை ஏற்றிக்கொண்டு வருவான் காரி. யானைகளும் குதிரைகளும் தேர்களும் அவனுக்குப் பரிசிலாக கிடைக்கும்.

    ஒருசில நாட்களில் அப்பொருட்கள் அனைத்தையும் காரி வாரி வீசுவான். தமிழ்ப் புலவர்களைக் கண்டால் அவன் பேரன்பு கொள்வான். அவர்களுக்குக் காதிற் கடுக்கன் போட்டுப் பார்ப்பான். தேரைக் கொடுத்து ஏறச் செய்து கண் குளிரக்கண்டு பெருமகிழ்ச்சி அடைவான். இதனால் அவனுக்குத் தேர் வழங்கும் பெரு வள்ளல் என்ற பெயர் வந்துவிட்டது. ‘’தேர்வண் மலையன்” என்று புலவர்கள் பாடிப்புகழ்ந்தனர்.

    ………………………  கறங்குமணி

    வால்உளைப் புரவியொடு வையகம் மருள

    ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த

    அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்

    கழல்தொடித் தடக்கை காரியும்    (சிறுபாண்.91-95)

    இப்பாட்டில் மன்னன் மலையமான் திருமுடிக்காரியின் கொடைகொடுக்கும் அளவு பற்றிச் சுட்டக்காணலாம். (புறம்.121) எனும் பாட்டில், தன்னை தேடி வருகின்ற புலவர்க்கு பரிசில் வழங்கும் முன், அவர் தம் தகுதியை நன்கறிந்து அதற்கு ஏற்ப பரிசு வழங்குக என்று கபிலர் அறிவுரை கூறும் விதமாக அமைந்திருப்பதன் மூலம் பரிசில் பெறவேண்டி வந்த இரவலர்க்குப் பரிசு வழங்கியதை வெளிக்காட்டுகிறது. (புறம்.123) என்ற பாடலில், தன்னை நாடி வருகின்ற இரவலர்க்குப் பரிசாக தேரையும் கொடுத்தான் என்பதால் திருமுடிக்காரியின் கொடைச்சிறப்பு தெள்ளென விளங்கும்.

    புலவர்கள் பாடி பரிசில் வாங்கச் செல்லும் முன் நாள் கிழமையும் சரியல்ல என்றும், தீமை தரும் என உணர்த்தும் சகுணங்களைப் பார்த்தும், அன்றைக்கு மலையமான் காரியின் அவைக்குச் சென்றாலும் திறன் சொல்லால் பாடினாலும் அவன் பரிசில் தருவான் என்று கூறுவதன் மூலம் புலவர்கள் பரிசில் பெறுவதற்கு நாள் கிழமையைப் பார்த்தனர் என்பதும் வெளிக்கொணரும் செய்தியாகிறது.

    நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்

    புதன்று புக்குத் திறனன்று மொழியினும்

    வறிது பெயர்குநர் இரங்கும் அருவிப்

    பீடுகெழு மலையற் பாடி யோரே (புறம்-124)

    4. வள்ளல் ஆய் அண்டிரன்

    நறுமணம் கொண்ட பொதிகைமலை தமிழ்நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் சிறப்பைத் தருகிறது. இம்மலையைச் சார்ந்து திருக்குற்றாலம், பாவநாசம் என்னும் அழகிய இடங்கள் இருக்கின்றன. அங்கே ஆய் குடி என்பது ஓரூர். அதை ஆய்க்குடி என்று இப்போது சொல்கிறார்கள். ஆய் என்ற வள்ளல் வாழ்ந்திருந்த இடம் அது. ஆய் அண்டிரன் என்றும் அவனைப் புலவர்கள் புகழ்ந்துரைக்கின்றனர். இவனுடைய ஆட்சிக்குட்பட்டது பொதிய மலை. அக்காலத்தில் அம்மலையில் யானைகள் மிகுதியாக இருந்தன. ஆதலின் ஆய் பல யானைகளைப் பிடித்து வந்து பழக்கினான். ஆண் யானைகளைப் போருக்கு ஏற்றபடியும், பெண் யானைகளை வாகனமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் பழக்கச் செய்தான். அவனுடைய ஆனைப் பந்தியில் நூறு யானைகளுக்குக் குறைவாக என்றும் இருந்ததில்லை என்பர். இவனிடம் அடிக்கடி பாணர்களும் புலவர்களும் வருவார்கள். அவர்களுக்கு மற்றவர்கள் கொடுப்பது போலப் பொன்னும் மணியும் கொடுப்பான்; அவற்றோடு யானையையும் பரிசிலாக வழங்குவான். யானைப் பரிசில் தருபவன் என்று போற்றப்படுகிறான்.

    ஆய் மன்னன் மோசியாரை ஒருநாள் தன் தேரில் அழைத்துச் சென்றான். அந்தத் தேர் காட்டு வழியே சென்றது. அங்கே பழக்கப்பட்ட பல யானைகள் இருந்தன. அவற்றைப் பார்த்த புலவர் ஒரு பாட்டைப் பாடினார். “இந்தக் காட்டில் இத்தனை களிறுகள் இருக்கின்றனவே! இந்தக் காடு, மேகக் கூட்டங்கள் தங்கும் மலையையும் சுரபுன்னை மலரால் தொடுத்த கண்ணியையும் உடைய ஆய் அண்டிரனுடைய குன்றத்தைப் பாடிற்றே?” என்று பாடினார். அவனுடைய யானைக் கொடையையே அப்பாடலில் சிறப்பித்தார்.

    …………… நிழல்திகழ்

    நீலநாகம் நல்கிய கலிங்கம்

    ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த

    சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்

    ஆர்வ நன்மொழி ஆயும்    (சிறுபாண்.95-99)

    வள்ளல் ஆய்அண்டிரனின் கொடைச்சிறப்பினைப் பற்றி உரையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடுகிறார்.

    ஈகை அரிய இழையணி மகளிரொடு

    சாயின்று என்ப ஆஅய் கோயில் (புறம்.127:5-6)

    இப்பாடலால் கொடைக்குக் கொடுத்தற்கு அரிய என “இழையணி” என்று குறிக்கப்படுவது தாலி தான் என்று ம.பொ.சி. தம் நூலான “மங்கல அணி” என்னும் நூலில் சுட்டுகின்றார். இதனை தாலி அல்ல என்றும் திரு.அ.தட்சிணாமூர்த்தி தம் நூலான தமிழர் நாகரீகமும் பண்பாடும்(1999) என்ற நூலில் “இழை” என்பதற்கு “அணி” என்ற பொதுப்பொருள் உண்டு என்றும் குறிப்பிடுகின்றார். திரு.கே.கே. பிள்ளை அவர்களும் ம.பொ.சியின் கருத்தை ஆதரிப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இருப்பினும் தனது மனைவி அணிந்துள்ள மங்கல அணியைத் தவிர எல்லாவற்றையும் வழங்கினார் என்று புலவர் சுட்டுவதைக் காணமுடிகிறது.

    ஆய்அண்டிரன் இரவலராக வந்தவருக்கு யானைகளையும் பரிசாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

    ஆஅய் அண்டிரன், அடுபோர் அண்ணல்;     

    இரவலர்க்கு ஈத்த யானையின், (புறம்.129:5-6)

    விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு

    இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ? (புறம்.130:1-2)

    மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்,

    வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்

    குன்றம் பாடின கொல்லோ;

    களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே? (புறம்.131)

    என்ற பாடலில் புலவர் முடமோசியார் ஆய்அண்டிரனின் நாட்டில் கொடையாகக் கொடுக்க அளவில்லாத யானையைப் பெற்றுள்ளான் என்பதை வெளிக்காட்டுகிறார். பரிசில் பெறவேண்டி யான் வரவில்லை ஆயினும் அதை ஏற்காது பரிசில் வழங்கியதையும் பாடல் எடுத்துரைக்கிறது.

    இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

    அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் (புறம்-134)

    என்பதன் மூலம் சுயநலம் கருதாது கொடையறம் செய்பவன் அண்டிரன் என புகழப்படுகிறார். வள்ளல் ஆய் அண்டிரனின் கொடைச்சிறப்புப் பற்றி ஒளவையார் சிறப்பாகப் பாடியதைக் காணமுடிகிறது.

    இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன ஓர்

    பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்

    தேற்றா ஈகையும் உளதுகொல்? (புறம்-140:7-9)

    1. வள்ளல் அதியமான்

    அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்கக் காலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஒளவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலிமை பொருந்தியவன் என்றும் சேரன், சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன், இவனது அரண்மனையில் இல்லையென்று வருவோருக்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும் அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையுடையது. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையாருக்குக் கொடுத்தான். இச்செயலே அதியமானின் கொடையின் திறனை வெளிக்காட்டுகிறது.

    அந்தக் காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக்காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாக சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும் பாண்டிய மன்னனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர். எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான்.  இப்போரினை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பதாகும். இப்போது இந்நூல் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை.

    இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகின்றது. “சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி” என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது.

    ……………………….. மால்வரைக்

    கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி

    அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த

    உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்

    அரவக்கடல் தானை அதிகனும்   (சிறுபாண்.99-103)

    புறப்பாடல், (புறம்.94)  ’பெரும! நீ, நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். உன் பகைவர்க்கு அந்த யானையின் மதநீர் போலக் கொடுமையானவன்’ என்கிறது. கீழ்க்காணும் பாடல் அதியமான் நெடுமானஞ்சயின் கொடைச் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றது.

    ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;

    பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும்

    தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ; (புறம்-101:1-3)

    இப்பாடலால் அதியமான் அரசவைக்கு பரிசில் பெறவேண்டிவரும் புலவர்க்கு ஒருநாளும் முந்தைய நாள் கொடையை விட அதிகமாகவே தரப்பட்டுள்ளதைச் சிறப்பித்துக் கூறும் அரிய பாடலாக காணப்படுகிறது.

    6. வள்ளல் நள்ளி

    குறிஞ்சி(மலை) வளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும் கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும் பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தன்னை நாடி வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும் வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினை உடையவர்.

    ………………………….கரவாது,        

    நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம்  

    முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை,      105

    துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு

    நளி மலை நாடன், நள்ளியும்;    (சிறுபாண்.103-107)

    கண்டீரக் கோப்பெருநள்ளியின் கொடை பற்றி வன்பரணர் என்ற புலவர் சிறப்பித்துப்  பாடியிருக்கிறார்.

    நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென்

    மாலை மருதம் பண்ணிக் காலைக்

    கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,

    வரவுஎமர் மறந்தனர்; அது நீ

    புரவுக்கடன் பூண்ட வண்மை யானே  (புறம்.149)

    என்ற பாட்டினால், பாணர்களுக்குப் பரிசில் வேண்டி மன்னரிடத்தில் மீண்டும் செல்ல தேவையில்லை என்று எண்ணி மாலைநேரமும் காலைநேரத்திலும் பண்பாடுவதை மறந்தனர் என்று புலவர் கூறிமை சுட்டத்தக்கது.

    1. வள்ளல் வல்வில் ஓரி

    ஒரு நாள் வல்வில் ஓரி தற்போது இராசிபுரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராஜபுரம் என்னும் பகுதியில் வேட்டையாட சென்ற போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்வில் ஓரி சென்று பார்க்கும் போது அங்குப் பன்றிக்குப் பதிலாக ஒரு சிவலிங்கமும் அச்சிவலிங்கத்தின் மீது வல்வில் ஓரி எய்த அம்பும் அந்த அம்புப்பட்டதால் அந்த சிவலிங்கத்தில் ரத்தமும் கசிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட ஓரி சிவன்தான் தன்னை பன்றி வடிவில் வந்து சோதித்ததாக எண்ணி அவ்விடத்திலேயே சிவபெருமானுக்கு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் என்ற பெயரில் ஆலயம் எழுப்பினான். இதனைக் குறிக்கும் வகையில் அந்த அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலின் கொடிமரத்தில் சிவபெருமானைக் குறிக்கும் வகையில் முட்புதரின் முன் பன்றி வடிவமும் வல்வில் ஓரியை குறிக்கும் வகையில் வாளும் கேடயமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இவ்வாலய கோபுரத்தின் பின்புறத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

    இவ்வோரி கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரி எனபவனோடு போரிட்டு மாண்டான் என நற்றிணை 320 இல் கபிலர் குறிப்பிடுகிறார். நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான் என்று பரணர் பாடினார். அகநாணுற்றுப் பாடலும் இதனை உறுதி செய்கிறது.

    முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி

    செல்லா நல் இசை நிறுத்த வல் வில்

    ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த

    செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, (அகம்.209:12-15)

    மேலும் வல்வில் ஓரி நற்றிணையின் 6, 265 ஆம் பாடல்களில் சிறப்பாகப் பேசப்படுகிறான். புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடியதைப் புறம்: 152, 153, 204 ஆம் பாடல்கள் குறிப்பிடக்காணலாம்.

    ஓம்பா ஈகை விறல்வெய் யோனே (புறம்.152:32)

    மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்

    இழையணி யானை இரப்போர்க்கு ஈயும் (புறம்.153:1-2)

    புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை        

    உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்

    புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்

    கருவி வானம் போல

    வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. (புறம்.204:10-14

    …………………….. நளிசினை

    நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து

    குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த

    காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

    ஓரிக்குதிரை ஓரியும்    (சிறுபாண்.107-111)

    மேற்கண்ட செய்திகளின் வழி, தொல்தமிழ் மக்களின் பண்பட்ட வாழ்வில் கொடைத்தன்மைகள், கொடைச்சிறப்புகள், மன்னர்களின் ஆளுமைச் சிறப்புகள், கடையேழு வள்ளல்களின் கொடைமடச் செய்திகள் போன்றவை வெளிப்பட்டு நிற்கின்றன. கொடை வள்ளல் என்ற பட்டம் வெறும் செயலுக்கான பட்டம் மட்டும் அல்ல அந்த செயல், உயர்ந்த மனநிலையில் எந்த ஒரு சிறு ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல் உள்ளத்தால் செய்யப்பட்டதாகும். இது அவன் தன்மைக்குக்  கொடுக்கப்பட்ட பட்டமாகும். பண்டைய தமிழர்கள் அறத்தைக் கூட அது செய்யப்பட்ட மனநிலையைக்  கொண்டு அறத்தில் சிறந்த அறம் போற்றி வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்பதற்கு இவை நற்சான்றாக விளங்குகிறது. மிகத் தொன்மைக் காலத்திலேயே கொடையைப் போற்றி வளர்த்தப் பெருமை தமிழருக்கே உரியது என மார்தட்டிக்கொள்வோம்.

    கருவிநூற்பட்டியல்

    1. திருக்குறள், வ.உ.சிதம்பரனார் உரை, இரா.குமரவேலன் பதிப்பு, பாரிநிலையம் சென்னை 2008
    2. தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008
    3. உ. வே. சாமிநாதையர், பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும் 1889
    4. தொல்காப்பியம், பொருளதிகாரம், சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்பு 1885
    5. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு 1940,
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181003 – goverdhanadhari watercolour 24×32 cms lr

    அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
    உழைக்கவரு வானவர் ஓடி -மழைக்குக்
    குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
    இடையன் இணைப்பில் இரு….!

    ஆவுக்காய் குன்றேந்தி பாவ்லாவைக் காட்டினாலும்
    காவுக்கோ இந்திர கர்வபங்கம் -தேவு
    அவதாரமாய் வந்த அரிமாலர் என்று
    சிவதாரம் காளியின் சொல்’’…!

    ”குன்றுகோ வர்த்தனமும் கண்ணன்!, மழைகாக்கும்
    சுண்டு விரல்கண்ணன் கண்ணனே!, -இந்திர
    கர்வமும் கண்ணனே! கர்வபங்கம் கண்ணனே!
    மர்மமே கண்ணனாய் மால்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    031231 Krishna philharmonic wcol-lr

    “நேற்றைய கண்ணர்க்கும், நாளைய கண்ணர்க்கும்
    வேற்றுமை கேசவ் வரைவதிலே -தோற்றம்
    மறைவிலா மாலனோ மானஸசஞ் சாரன்
    நிரைநேர் தளைசீர் நமக்கு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180919 Gajendra -wcol A4 300 dpi lr

    ஆரத் தழுவுகின்றார் ஆவைப்போல் ஆனைக்கும்
    சீராயர் வாத்ஸல்யம், பாரபட்ஷம் -பாரா
    புஜேந்திரர் மல்லில், நிஜேந்திரர் சொல்லில்,
    கஜேந்திரரைக் காத்த கரி(கண்ணனும் கருப்பு,யானைக்கு வேறு பெயர் ‘கரி’)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181001-Raghuveera gadyam 79 wcol A4 600dpi-wm

    பரசுராமர் கர்வத்தைப் போக்க அயோத்தி
    அரசுராமர் விஷ்ணு அவ்தார்(மோனைக்காக அவதாரம் அவ்தார் ஆச்சு) -வரவுதான்
    விஷ்ணுவே வந்து விளக்கினாலும் ,கர்வமோ(EGO)
    புஸ்ஸெனப் பாம்பின் பொந்து….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180930-Vanvihari wcol graphite A4 100dpi lr

    மத்தினால் மாதாவால் மொத்துண்ட மைந்தனை
    பத்திலோர் பாகவதப் பிள்ளையை -ஒத்தனாய்
    மண்ணினைக் காக்க மகாபா ரதம்செய்த
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • அகல்யா

     

    கல்லகலிகைக்கு காலடி மோக்‌ஷம்
    புள்ளகன்(ஜடாயு) ஏகிட புல்லிட்டு(தர்ப்பை) மோக்‌ஷம்
    அல்லகல் வித்திடும் ஆதித்ய ரூபம்
    வில்லகல் மார்பில் வேய்ந்திடும் ராமம்….!(எழுதித் தந்தேன் ‘’கிரிதரிடம்’’….அதற்கு இசையமைத்து எனது எழுத்துக்கு ஊட்டம் கொடுத்தவர் பாடினார் ‘’கிரிதர்’’…..!)

    ”கல்ராம் அகலிகைக்கு, இல்ராம்வை தேஹிக்கு,
    கொள்ராம் விபீஷணன் காப்புக்கு, -தொல்ராம்
    அவதார விஷ்ணு, அனுமான் தனக்கு
    சிவராம க்ருஷ்ணா சரண்’’….கிரேசி மோகன்…!

    . விசாரிக்காமல் சபித்து விட்டீரே என்ற அகலிகையின் வார்த்தை கவுதம முனியை சாபமாக வாட்ட….அதற்கு விமோசனமாக தில்லை சென்று ”சிவதாண்டவ தரிசனம்” செய்தாராம்….!பசவான் ஸ்ரீ ரமண வசனாம்ருதம்…..!

    ”ஆண்டவன் ஈசன் அழகுமை யாளோடு,
    தாண்டவக் கோலம் தரிசிக்க, -வேண்டிவந்தார்,
    கல்ல கலிகைக் கணவர் கவுதமர்,
    தில்லைக்குப் போய்சாபத் தீர்வு”….கிரேசி மோகன்.

    Share
  • Crazy Quotes From Crazy கிழிஞ்ச Coat….!

     

    தூக்கக் கலக்கத்தில் தோன்றியது….CrazY Quotes From Crazy Coat….

    ”ஆறாவது அறிவுடன் நிறுத்திக் கொள்வ்பவன் அடிமுட்டாள்
    ஏழாவது, எட்டாவது என்று தொடர்ந்து படித்து டிகிரி வாங்குபவனே புத்திசாலி’’….(1)

    ‘’இளமையில் கல்….முதுமையில் சிலை….நடுவயதில் வாழ்வின் நாராசமான உளியின் ஓசை’’….(2)

    ‘’பாவம் செய்தவன் நரகம் செல்கிறான்
    புண்ணியம் செய்தவன் சொர்கம் செல்கிறான்
    எதுவும் செய்யாதவன் பூமியில் பிறக்கிறான்’’….(3)

    ’’கெட்ட பழக்கத்தை நாம விடலாம்….பாழாய்ப்போன
    நல்ல பழக்கமோ நம்மை விட்டால்தான் உண்டு’’….(4)

    ‘’அளவுக்கு மீறிய பசியில் நஞ்சும் அமிர்தமாகும்’’….(5)

    ‘’சொறிவதற்கு தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’’….(6)

    ‘’ஐந்தில் வளையாத முதுகு ஐம்பதில் வளையும்’’….(7)

    ‘’நான் ஆடாவிட்டாலும் KNEE ஆடும்’’….(8)

    ‘’கற்றோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு
    கல்லாதவனுக்கோ செல்ல வேண்டிய அவசியம்
    இல்லாததால் இருக்கும் இடத்திலேயே சிறப்பாக இருப்பான்’’….(9)

    ’’தானாய் வருவது வெற்றி
    முயன்று பெறுவது தோல்வி’’….(10)

    ‘’முக்கால்வாசி வெற்றி
    மயிரிழையில் தோல்வியிடமிருந்து
    தப்புவதுதான்’’….(11)

    ’’பசி தாளாமல் பொய் சொன்ன வாய்க்கு போஜனம் உண்டு’’….(12)

    ’’5 பெண்ணைப் பெத்தவன் ஆண்டியாகலாம்
    5 பிள்ளை பெத்தவன் அந்த ஆண்டிக்கு சம்பந்தி ஆனால்
    ஆண்டியாகலாம்’’….(13)

    ‘’தைரிய சாலிக்கு வீர மரணம்
    கோழைக்கோ இருமி இருமி சளி மாரடைத்து
    ஈர மரணம்’’….(14)

    ‘’சுலபமான யோகம் வினியோகம்’’….(15)

    ‘’மெளனம் சங்கடத்துக்கும் அடையாளம்’’….(16)

    ‘’அனாவசியமாக அடிக்கடி கசக்கி கட்ட முடியாத அளவுக்குக்
    கந்தையாக்காதே’’….(17)

    ‘’பாம்பு, பூரான்,பூச்சிக்கு பயப்படாதவர்கள்
    தாராளமாக இயற்கையோடு ஒன்றி வாழலாம்’’….(18)

    ‘’சுறுசுறுப்பாக இருக்க உடலில் உறுதி வேண்டும்
    சோம்பேறியாக சுகமாக வாழ மனதில் உறுதி இருந்தால் போதும்’’….(19)

    ‘’இடுக்கண் வருங்கால் நகருக’’….(20)

    ‘’அளவுக்கு அதிகமாக ஆப்பிளை சாப்பிட்டதால்
    ஆதாம் ஏவாளுக்கு வந்த அஜீர்ணமே காதல்’’….(21)

    ’’ஞானப் பசி வந்தால் பற்றும் பறந்து போம்’’….(22)

    ‘’பகைச்சுவை இல்லாத எதுவுமே நகைச்சுவைதான்’’….(23)

    ‘’பயம்தான் சாவு….செத்தால் கொள்ளி….
    பயந்தால் கொள்ளிதான் பயந்தாங்கொள்ளியாச்சோ!’’….(24)
    ————————————————————————————————————————-

    Share
  • என்றும் நிலையாய் இரு

    ஆசை உருவாகும் அச்சம் நமைச்சாய்க்கும்
    பாசம் தொடந்து பரிகசிக்கும் – வாசமெனுங்
    குன்றுவந்து முன்னே குழைந்தாலும் என்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    பொன்னாடை மாறும் புகழ்மாலை தாம்மாறும்
    சொன்மாலை மாறும் சுகம்மாறும் – என்றைக்கும்
    ஒன்று நிலையாம் ஒழுக்கமாம் நன்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    கூட்டம் தொடர்ந்திருக்கும் கூப்பிட்டால் தான்தெரியும்
    ஈட்டம் எவரால் எனும்செய்தி – வாட்டத்தில்
    குன்றும் மனமிகவும் குற்றமடா நன்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    காலைச் சிவப்பொளிபோல் காட்சி அழகெல்லாம்
    காலம் கனிந்தால் கரைந்துவிடும் – காலமே
    நன்றும் நலிவும் நமக்கியற்றும் நன்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    வேதாந்த தத்துவம் வேகப் புரட்சிகள்
    சேதார மில்லாச் செழுங்காதல் – தோதாக
    நின்றாலும் சென்றாலும் நீமட்டும் நன்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    -விவேக்பாரதி
    29.09.2018

    Share
  • என் கவிதை

    #.இல.நடராசன்

    “பரபரப்பற்ற சாந்தமான
    ஞாயிறின் அதிகாலையில்
    எழுந்து,
    திங்களோடு வெள்ளி
    இருக்கும் நீல வானின்
    மையை எடுத்து
    அந்நாளுக்கான என்
    கவிதையை எழுத
    கவிதையைத் தேடினேன்.

    எங்கெங்கோ தேடியும் என்
    கவிதை அகப்படவில்லை.

    என் கவிதை குட்டைப் பாவாடை
    அணிந்திருந்ததால்
    ஆடையின் கவர்ச்சியால்
    இழுக்கப்பட்டு,
    மாறி மாறி பதினெட்டு
    பேரால் வன்புணர்ச்சி
    செய்யப்பட்டு,
    உயிரோடு எரிக்கப்பட்டதாக
    நாளிதழில் பின்பு படித்தேன்.
    என்ன! என் கவிதைக்கு
    அப்போது ஐந்து வயது இருக்கும்.

    மீண்டும் மறுபிறவியிலும்
    என் கவிதை பெண்ணாக
    பிறந்து,
    பேதை, பெதும்பை, மங்கை
    கடந்து,
    மடந்தையில் மடம் செல்லும்போது
    குருக்கள் மற்றும் சீடர்களால்
    Sexual harassment
    செய்யப்பட்டது.

    பின்னர் அதிலிருந்து மீண்டு
    ஆண்டுகள் கழித்து
    என் கவிதை பூப்பெய்ததும்,
    காதலன் படுக்கைக்கு அழைக்க
    அதை என் கவிதை
    மறுக்க,
    அவன் ஆசிட் வீசிவிட்டான்.
    நல்லவேளை அது நீர்த்துப் போன
    அமிலமாக இருக்கப் பெருத்த சேதமின்றி
    என் கவிதையின் முகம்
    தப்பித்தது பிடிக்காமல், கோபத்தில்
    என் கவிதையின் முகத்தை
    நீலப்படங்களாக்கி அவன்
    Morphing செய்து இணையத்தில்

    உலவவிட்டு விட்டான்.

    திருமணமான பின் என் கவிதை
    கணவனது இச்சைகளின் இம்சை
    தாங்காது,
    தொடைகளில் அவன் கொடுத்த
    Cigarette bud தழும்புகளோடு,
    அவனை வாழா வெட்டியாக்கி
    தனிமை அடைந்தது.

    தனிமையிலே வாழ்ந்து
    எப்படியோ மத்திமவயதைக்
    கடந்து,
    என் கவிதை கிழவியான
    பின், மீண்டும்
    புணர்ச்சி பசியெடுத்த
    49வது மிருகத்தால்,
    50வது முறையாகக்
    கற்பழிக்கப்பட்டு,
    தன் அடுத்தப் பிறவியிலாவது
    பாதுகாப்பான நாட்டில் பெண்ணாக
    பிறக்க வேண்டுமென்ற
    எண்ணத்துடன் உயிர்விட்டது.”

    18-09-2018
    15.15 மணி
    …………………………………………………………………

    இதோ இந்த ‘என் கவிதையை’
    நான் எழுதிய வேளையில் கூட,
    என் இன்னொரு கவிதையை
    யாரேனும் எங்கேனும்
    வன்புணர்ச்சி
    செய்துக்கொண்டு இருக்கலாம்.

     

    Share
  • ஹைக்கூக் கவிதைகள்

    கவிஞா் பூராம்
    (முனைவா் ம.இராமச்சந்திரன்)

    1.பிழை.

    மழழை பேசும்
    வாா்த்தைகள் அனைத்தும்
    கவிதை

    2. பணமுதலை.

    உழைத்து உழைத்து
    அனாதையானது நடுத்தரவா்க்கம்
    உழைத்து உழைத்து
    வறுமையானது ஏழைவா்க்கம்

    3. குறட்டை.

    நோக்கிக் கொண்டே
    இருக்கத் தூண்டும் முகம்
    பேசிக் கொண்டே
    இருக்கத் தூண்டும் குரல்
    இரவெல்லாம் கண்விழித்த
    அசதியில் அவன்

    Share
  • குமரேசன் என்னும் கூத்தாடி

    முனைவர் பா. ஜெய்கணேஷ

    துறைத்தலைவர்,

    தமிழ் அறிவியல் மற்றும் கலையியல் புலம்

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்

    காட்டாங்குளத்தூர் – 603203

     

    “பொம்பள வேஷம் போட்டுடலாம். ஆனா ஒரு பொம்பளையா நடிக்கிறதுதான் கஷ்டம். ஏன்னா பொம்பளைக்கு இருக்குற நெளிவு சுளிவு வரலனா கல்லுவிட்டு எறிவானுங்க. கேவலமா திட்டுவானுங்க. ஆனா எனக்கு அந்தப் பிரச்சன இருந்தது இல்ல. என்னைக்கு நான் பொம்பள வேஷம் போட்டு நடிக்கணும்னு ஆரம்பிச்சனோ அன்னையில இருந்தே ஒரு பொம்பளைக்கு இருக்கக்கூடிய எல்லா உடல்அசைவும் எனக்கு வந்திருச்சு” அப்பிடின்னு தான் பையன் கிட்ட கூத்தாடி குமரேசன் சொல்லிக்கிட்டு இருந்தான்.

    ”அப்பா எனக்கு உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்”

    ”கேளுடா மகனே… ஊருல அவன் அவன் கேக்காததையா நீ கேட்டுறப் போற”

    ”இல்லப்பா கூத்துல ராமன், பீமன், அருச்சுனன், இராவணன்னு இப்படி எத்தனையோ கதாப்பாத்திரம் இருக்க நீ மட்டும் ஏன்ம்பா பாஞ்சாலி, சீதைன்னு பொம்பளைங்களா நடிக்கணும்னு விருப்பப்பட்ட”.

                “சின்ன வயசுல கூத்துப் பாக்க எங்க அம்மா கூட போவண்டா. அம்மாவே தூங்கிரும். ஆனா நான் மட்டும் தூங்கவே மாட்டன். எவ்வளவு பெரிய ஆம்பள நடிகருங்க வந்தாலும் அங்க பெருசா கைத்தட்டல் இருக்காது. இப்ப நீ சொன்னியே பொம்பளைங்க அவங்க மாதிரி வேஷம் போட்டு ஆம்பளைங்க வந்து நிக்கறப்ப அந்த இடமே அதிரும்டா.

    காசு கொண்டு போய் குடுப்பாங்க நிறைய அவங்களுக்குதான். எல்லாரும் பாராட்டுவாங்க அவங்கள. இத பல ஊருக்காரங்க கூத்துலயும் பாத்துக்கிட்டே இருந்த நான் மெது மெதுவா என்னையும் மாத்திக்க ஆரம்பிச்சன். நான் பேசறது சாதாரணமாவே பொம்பள மாதிரிதான் இருக்கும். அதுவும் சேர்ந்து ஊருல போறவன் வரவன்லாம் உசுப்பேத்த எனக்கும் கூத்துல பொம்பளையா நடிக்கணும்னு ஆச வந்துருச்சுடா”.

    ”அதுக்கு என்ன பண்ண? எப்படி நடிக்க வந்த”?

    “எனக்கு பதினைஞ்சு வயசு இருக்கறப்ப அம்மா கிட்ட சொன்னன். அம்மா முதல்ல சொன்ன வார்த்தையே அடி செருப்பாலன்னுதான். ஆம்பள பையன சிங்கம் மாதிரி பெத்து வச்சிருக்கன்னு ஊருலலாம் சொல்லிட்டு திரியுறன் நானு. நீ என்னடான்னா பொம்பளையா வேஷம் போட்டு நடிக்கப்போறன்னு வந்து நிக்கிற அப்படின்னு” திட்டோட அடியும் சேர்ந்துதான் விழுந்துச்சு.

    ரெண்டுநாள் நான் கொலப்பட்டினி. அன்னைக்கு இரவு தூங்கறப்ப அம்மா தலமாட்டாண்ட வந்து உக்காந்து “டேய் பொம்பளயா நடிக்கிறதுல இருக்கற சிக்கல்லாம் உனக்கு தெரியாதுடா. சொன்னா புரிஞ்சிக்கோடான்னு” எவ்வளவோ சொல்லிப் பாத்துச்சு. நான் அப்பயும் அழுது அடம்பிடிச்சேன். அப்புறம் சமாதானமா “என்னமோ பண்ணுடான்னு” சொல்லிட்டுப் போயிருச்சு.

    அம்மா சொன்னதுல இருந்து முதல்ல நீளமா முடி வளக்க ஆரம்பிச்சன். மீசை, தாடி கொஞ்சம் வளந்தாக்கூட வழிச்சு விட்டுருவன். நான் கொஞ்சம் மாநிறம் வேறயா. அதனால எப்பவும் பாக்க அழகா இருக்கணும்னு மேக்கப் போட்டுக்கிட்டே இருப்பன்.

    ”ஏன்ம்பா பொம்பளைங்க யாரும் நடிக்காம ஆம்பளைங்க அவங்க வேஷம் போட்டு நடிச்சாங்க”…

    “அடேய் இந்தக் காலத்துலயே பல வீட்டுங்கள்ல பொம்பளைங்க நடிக்கறதுன்னா அவ்ளோதான். அந்தக் காலம்னா சொல்லவா வேணும். பொம்பளைங்க வீதியில இறங்கி நடிச்சாங்கன்னா வீட்டோட மானமே காத்துல பறந்த மாதிரி. அதனால நடிக்கவே விடமாட்டாங்க. அதுக்காகத்தான் என்ன மாதிரி பொம்பள வேஷம் போடத் தயாரா இருக்க ஆம்பளைங்கள நடிக்க வச்சாங்க”.

    ”சரி சரி நீ உன் கதைய சொல்லு”…

    “டேய் கதைகேட்டது போதும் உங்க அப்பா ராஜா தேசிங்கு கதைய… எந்திரிச்சி வந்து கஞ்சி குடிக்கற வழி பாருடா. அடுத்த வேள கஞ்சிக்கே வழி இல்லையாம். கதயப் பாரு கதய”…

    ”அம்மா இரும்மா… வரன். நானும் ரொம்பநாளா கேக்கனும்னு நினைச்ச கதை. கேட்டுட்டு வந்து கஞ்சி குடிக்கறன் இரு”.

    ”உங்க ஆத்தா அப்படித்தாண்டா. அவளுக்கு எப்பவுமே என்ன கண்டா எலக்காரம் தான்”

    ”அதவிடுப்பா நீ வா கதைக்கு…”

    ”பக்கத்து ஊருல இருக்கற ராவணன் கூத்துக் குழுவுக்கு நடிச்சு வந்த பொம்பள ஆளு கல்யாணத்துக்குப் பொண்ணு கிடைக்காம தற்கொலை பண்ணி செத்துருச்சாம். அந்த சமயத்துல ஆள் தேடிக்கிட்டு இருந்தாங்க. அப்பதான் நான் போய் பாத்தன். முன்னடி இருந்தவ நல்லா சிவப்பா இருப்பாளாம். நான் மாநிறம்ல. ரொம்ப யோசிச்சாங்க. ஒருவாரம் கழிச்சு வரச் சொன்னாங்க. ஒரு வாரம் வரைக்கும் வேற ஆள் கிடைக்கல. என்னையே சேத்துக்கிட்டாங்க.

    மூனுமாசம் பயிற்சி. எனக்கு இயல்பாவே உடல்மொழியும் குரலும் இருந்ததால என் குருவுக்கு சிக்கல் இல்லாம போயிருச்சு. நல்லாவே கத்துக்கிட்டன் எல்லாத்தையும்”…

    ”அப்புறம் முதல்நாள் முதல் கூத்து எங்க நடந்துச்சு. உனக்கு அந்தநாள் நினைவு இருக்காப்பா”

    ”அது மறக்கக்கூடிய நாள் இல்லடா? என் வாழ்க்கையவே புரட்டிப்போட்ட நாள் அது.  என்னோட வாழ்நாள் கனவு ஈடேறப்போற நாள்னு மேக்கப்லாம் போட்டுகிட்டு மேடையில போய் நின்னன். மேக்கப் போடறப்பவே விடல பசங்க என்ன டிரஸ் மாத்தவிடாம தொல்ல பண்ணிக்கிட்டே இருந்தாங்க. நான் மேடைக்கு வரதுக்குள்ளயே அங்கங்க சீண்டிக்கிட்டே இருந்தாங்க. இது என்னடா இம்சன்னு மேடைக்கு போய் நின்னப்ப ஊரே ஒரே கைத்தட்டல். பெருமையா இருந்துச்சு.”

    ”அப்புறம் என்ன? உனக்கு”…

    ”டேய் நடிக்கறப்ப காசுகுடுக்கறன்ற பேர்ல நான் ஆம்பள வேஷம் போட்ட பொம்பளன்னு தெரிஞ்சி கூட கண்ட இடத்துலயும் வந்து தொட்டானுங்க. வாய்க்கு வந்ததலாம் பேசினானுங்க. நான் நடிச்சு முடிக்கிறதுக்குள்ளயே ஒருவழி ஆயிட்டன்”.

    ”ஆனா அதல்லாம் பொறுத்துக்கிட்டுதாண்டா நடிச்சன் அதுக்கப்பறமும்”.

    ”சரி ஊருல உன்ன எல்லாரும் எப்படி பாத்தாங்க”…

    ”எல்லாரும் என்ன ஒன்பது, அலி, உஸ்ன்னே கூப்பிட ஆரம்பிச்சாட்டானுங்க. நான் எவ்ளோ சொல்லிப்பாத்தன். ஆம்பளையா இருந்து பொம்பளையா நடிக்க வந்த என்னையே இப்படி விரட்டறாங்கன்னா, உண்மையாவே பொம்பளையா மாறவங்க கதி என்னன்னு யோசிச்சன். அதுல இருந்து இன்னைக்கி வரைக்கும் அவங்கள கையெடுத்து கும்பிட ஆரம்பிச்சிட்டண்டா”…

    ”எனக்கு எங்க ஊருல ஒரு பொண்ண ரொம்ப பிடிக்கும். அழகா இருப்பா அவ. அவ பின்னடியே திரிஞ்சன்… அவளும் சிரிப்பா, ஆனா பேச மாட்டா. ஒருநாள் அவ பின்னடியே போய் நின்னனா”…

    ”என்ன நின்னனா, சொல்லு சீக்கிரம்”

    அவ திரும்பன சமயம் பாத்து உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன கல்யாணம் கட்டிக்கிறிங்களான்னு கேட்டன். அவ்ளோதான். அவ விழுந்தடிச்சு சிரிச்சா என்ன பாத்து. ”என்னது காதலிக்கிறிங்களா, கல்யாணம் பண்ணிக்கணுமான்னு கேட்டா”

    ”ஆமாம்னு சொன்னன். அடுத்து அவ கேட்டா பாரு”.

    “உங்களால புள்ள பெத்து தரமுடியுமான்னு. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்ககூட நடந்து வந்தா நீங்க நடக்கற நடய பாத்து இந்த ஊரு என்ன சொல்லும். ஐயா சாமி நான் உங்கள பாத்து சிரிச்சது எல்லாம் உங்க நடையையும் குரலையும் கேலி பண்ணிதான். மூதேவிக்கு பாரு ஆசய கல்யாணம் கட்டிக்கணுமா நானு. போய் வேலயபாருன்னு” சொல்லி அனுப்பிட்டா…

    ”அப்பறம் எப்படி அம்மா மட்டும் உன்ன கல்யாணம் பண்ணிக்கிச்சு. அத நீ சொல்லவே இல்ல”…

    “காதல் ஆச காணாம போனதுல இருந்து கல்யாண ஆச வந்துச்சு. உங்க ஆயா எந்தெந்த ஊருலயோ போய் பொண்ணு பாத்துச்சு. அப்பன் ஆத்தாங்க ஒத்துக்கிட்டாலும் பொண்ணுங்க ஒத்துக்கல. வயசும் ஆயிருச்சு. ஒருத்தி கூட என்னக் கட்டிக்கில. வரவ எல்லாமும் என்னயும் சேத்து கிண்டல் பண்ணிட்டுதான் போனாளுங்க.

    ”அப்பறம் அம்மா மட்டும் எப்படிப்பா”

    “உங்க அம்மாவோட அப்பா ஒரு பெண் வேஷம் போடற கூத்தாடி. அந்த ஆளும் இறந்துபோயிட்டான். அநாதையா இருந்த உங்க அம்மா கிட்ட எங்க அம்மா பேச உங்க அம்மாவும் ஒத்துகிட்டா. அதனால இன்னைக்கு என்கூட அவ. எங்களுக்கு நீ.

    ”சரி அம்மா கூட உன்கூட எங்க போனாலும் கூடவே நடக்க மாட்டுது. உன்ன முன்ன போவவிட்டுட்டுப் பின்னதான் நடந்து வருது. அவங்க அப்பாவும் அப்படித்தான. அப்பறம் என்ன?”

    “நானும் அததாண்டா நினைச்சன். ஆனா இவ சொன்னா பாரு… ”பொம்பள வேஷம் போடற கூத்தாடிக்கு மட்டும் வாக்கப்பட்டுற கூடாதுன்னு என் வாழ்நாள்ல நினைச்சன். ஆனா என் விதி எங்க அப்பன் செத்து இவன கொண்டு வந்து விட்டுருச்சுன்னு இன்னைக்கும் திட்டிக்கிட்டு இருப்பாடா”. உனக்கு இதல்லாம் சொன்னா புரியாதுடா. சரி பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகலயா. நீ கிளம்பு முன்னடி போ. நான் பின்னடியே வந்து உங்க வாத்தியாரப் பாக்கணும்.

    ”அப்பா ஒன்னு சொல்லவா”?

    ”என்னடா”?

    ”நீ பள்ளிக்கூடம் பக்கம் மட்டும் வந்துராத. அம்மாவ நான் வரச்சொல்லிட்டன். பசங்கலாம் என்ன வெறுப்பேத்துறாங்க.. ஒன்பது பையன் ஒன்பது பையன்னு…

    Share