Blog

  • வாழ்ந்து பார்க்கலாமே – 37

    க. பாலசுப்பிரமணி

     

    தோல்விகளுக்கு பொதுவான காரணங்கள் என்ன?

    வெற்றியும் தோல்வியும் ஒரு நிகழ்வின் இரண்டு எதிர்மறையான பரிமாணங்கள். வெற்றிவாகை சூடி மதம் பிடித்த உள்ளங்களோடு உலவுவதும் தோல்வியைக் கண்டு துவண்டு ஒதுங்குவதும் நலமான முதிர்ச்சியும் வளர்ச்சியும் அடைந்த உள்ளங்களின் வெளிப்பாடுகள் அல்ல. நிகழ்வுகள் பயணங்கள் ஆவதில்லை. பல நேரங்களில் தோல்விகள் எழுப்பும் வினாக்களிலே வெற்றிக்கான வித்துக்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அவைகளை நாம் ஏன் கண்டுகொள்வதில்லை என்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்து கொண்டிருக்கும். எனவே தோல்விகளின் இடைப்பாடுகளில் நடுவே அமர்ந்து அலசி ஆராய்ந்து நம் தவறுகளைத் திருத்திக் கொள்வதே உண்மையான கற்றலாகும். இந்த அலசலைச்  செய்யவோ அல்லது அவைகளின் உண்மைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ  நாம் தயங்கக்கூடாது அல்லது வெட்கப்படக்கூடாது. வெற்றி தோல்விகளின் காலப் பரிமாணங்கள் மிகவும் குறைவானவை. அவற்றைக் கடந்து வாழ்வின் இலக்கையும் வளத்தையும் மேன்மையையும் உணர்ந்து முன்னே செல்லக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    தோல்விக்குத் துணை போகும்பொழுது நம்பிக்கையின் ஆணிவேர்கள் அசைக்கப் படுகின்றன. அதற்கு இடம் கொடுக்கும் பொழுது அது நம்மைப் பார்த்து சிரிப்பது மட்டுமின்றி நம்மை நாமே தரக்குறைவாக எடைபோடக் காரணமாகின்றது.” நம்முடைய வீழ்ச்சிக்கு வேறு யாரும் பொறுப்பேற்க முடியாது. அதன் முழுப்பொறுப்பும் நமதே.” என்றும் “நம்முடைய சம்மதமின்றி யாரும் நம்மை வீழ்த்த முடியாது ” என்றும் மனநல வல்லுநர்கள் உறுதியாகக்  கூறுகின்றனர்.

    iதோல்வியை நாம் ஏன் ஏற்றுக்கொள்கின்றோம்? நமது தோல்விகளுக்கான பொதுவான காரணங்கள்தான் என்ன? சிலவற்றைக் காண்போமே !

    1. நமது இலக்குகளில் தெளிவு இல்லாமல் இருக்கலாம்.
    2. இலக்கை நோக்கிச் செல்லும் பாதைகள் தவறாக இருக்கலாம்.
    3. நமக்கே அந்த இலக்குகள் மீது போதுமான நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.
    4. நம்து முயற்சிகள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்
    5. நமது முயற்சியின் வேகமும் தாக்கமும் வலுவானதாக இல்லாமல் இருக்கலாம்.
    6. நமது திறன்கள் வெற்றியை அளிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.

    7, நாம் பல நேரங்களில் நமது பார்வைகளை மற்றவரிடம் செலுத்தி அவர்களோடு ஒப்பிட்டு நமது திறன்களுக்கும்  முயற்சிகளுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கலாம்.

    1. நமது கற்றல், திறன்கள், ஆக்க சக்திகள் ஆகியவற்றை விலக்கி நாம் மற்றவர்களுடைய திறன்கள் ஆக்க சக்திகள் ஆகியவற்றை நமது பாதைகளில் இறக்குமதி செய்து முன்னேற்றத்திற்கு நாமே தடைக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.
    2. நமது செயல் கருவிகள் துருப்பிடித்தாக இருக்கலாம்.

    10.முயற்சிப் பாதைகளில் நாம் புதிய கற்றல்களைத் தவிர்த்து பின்னடைந்து கொண்டிருக்கலாம்.

    மேடைகளில் ஏறி பலமுறை முயன்றும் சரியாகப் பேச முடியாமல் திணறிய வின்ஸ்டன் சர்ச்சில் உலகின் ஒரு மிகச் சிறந்த பேச்சாளராக மாறியது சரித்திரம் கண்ட உண்மை. தன்னுடைய படைப்புக்கள் பல முறை திரும்பி வந்ததால் மனம் நொந்து போன ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகின் மிகப் பெரிய படைப்பாளியாக உருவானது உலகம் அறிந்ததே! தான் கண்டுபிடித்த கார்கள் விற்க முடியாமல் கடனில் அவதிப்பட்ட போர்ட் உலகின் ஒரு சிறந்த தொழிலதிபராக முன்னேறியது யாவரும் அறிந்ததே!

    படிக்கும் காலத்தில் நேரத்தை வீணடித்து நம்முடைய திறன்களை சீரழித்து மற்றவர்களுடைய மகிழ்ச்சியை நமது மகிழ்ச்சியாக நினைத்து தோல்விகளை முடிவுகளாகக் கருது எத்தனை இளைஞர்கள் மனநோய்களுக்கு இரையாகி இருக்கின்றார்கள்! இது வேதனையான விசயம். அது மட்டுமல்ல நாம் மற்றவர்கள் போல் வாழ முடியவில்லையே என நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்” அவர்கள் தோல்விகளின் காரணங்ளைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    சில நேரங்களில் நாம் எத்தனை முயற்சிகள்  செய்தாலும் பலன் கிடைப்பதில்லை..  காற்று எதிர்நோக்கி வீசுகின்றது. நம்மால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. “எதிர்நோக்காகக் காற்று வீசும் பொழுது திறமையான மாலுமிகள் தங்கள் பாய்மரங்களின் திசைகளை மாற்றி சரி செய்து கொள்ளுகின்றார்கள்” என்பது ஒரு வழக்கு மொழி. இதன் உட்கருத்தைப் புரிந்து செயல்படுபவர்கள் பாதிப்புக்களுக்கு ஆளாவதில்லை.

      பல நேரங்களில் நம்முடைய தோல்விகளுக்கு முன்னேற்றத் தடைகளுக்கும் காரணமாக இருப்பது நம்முடைய “இயலாமை மனப்போக்கு’  என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் இந்த மனப்போக்கு ஒரு உள்ளடங்கிய கற்றலாக மாறி எந்தப் புதிய முயற்சியிலும் திறனாக்கத்திலும் தடைக்கல்லாக அமைகின்றது. இதன் காரணமாக நாம் அடிக்கடி ” இது எனக்கு வராது. இதை என்னால் கற்றுக்கொள்ள முடியாது. இதற்கும் எனக்கும் ரொம்ப தூரம். இந்தக் கற்றலின பாக்கியத்தை இறைவன் எனக்கு அளிக்கவில்லை. ஒரு வயதுக்கு மேல் நாம் இந்தப் புதிய கற்றலலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இந்த வயதில் மூளை வேலை செய்யாது ” என்ற பலப்பல காரணங்களைக் கண்டுபிடுத்து  நம்மைச் சிறைப் படுத்திக்கொள்கின்றோம். இவை அத்தனையும் இயலாமை மனப்பான்மையின் அறிகுறிகள்.

     தற்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் நமது மூளையின் திறன்களையும் ஆக்க சக்தியையும்  வெளிச்சம் போட்டுக்காட்டி நமது தொடர் கற்றலின் ஆற்றல்களை விளக்குகின்றன.

    தோல்விகளைக் கண்டு துவழாமலும் வெற்றிகளின் போதையில் மயங்காமலும் சீராக வாழ்ந்துபார்க்க முயற்சிக்கலாமே !

    தொடரும்..

    Share
  • குறளின் கதிர்களாய்…(228)

     

    நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்தின்

    பகையு முளவோ பிற.                                                

           -திருக்குறள் -304(வெகுளாமை)

    புதுக் கவிதையில்…

     

    தவத்தின் பலனாய்

    ஒருவன் பெற்ற

    முக மலர்ச்சியையும்

    அக மகிழ்ச்சியையும்

    அழித்துவிடும்

    அவன்கொண்ட சினம்..

    அச் சினத்தை மிஞ்சிய

    பகையேதும்

    அவனுக்கில்லை…!

    குறும்பாவில்…

     

    கொள்ளும் கோபம் அழித்துவிடும்                

    மனிதனின் முக அக மகிழ்ச்சிகளை,  

    அதைமிஞ்சிய பகையும் வேறில்லை…!

    மரபுக் கவிதையில்…

    தவத்தால் வந்திடும் அகமகிழ்வும்

         தொடர்ந்து சேரும் முகமகிழ்வும்,

    அவற்றால் வந்திடும் முழுமகிழ்வு

         அனைத்துமே யழிந்திடும் கோபத்தாலே,

    அவப்பெயர் தந்தே யழித்துவிடும்

         ஆற்றல் மிக்க சினமதுபோல்

    அவனை யழிக்கும் பகையதுதான்

         அவனி மீதில் வேறிலையே…!

    லிமரைக்கூ..

     

    அறவோர் கொண்டிடும் கோபம்,      

    மகிழ்ச்சியை யழிப்பதுடன் அவரையழிக்கும்                    

    ஆற்றல்மிகு பகையாகும் சாபம்…!

    கிராமிய பாணியில்…

     

    கோவப்படாத கோவப்படாத

    கொடுமதரும் கோவப்படாத..

    தவமிருந்து சேத்துவச்ச

    மொகப்பொலிவயும் மனநெறவையும்

    தானே அழிச்சிப்புடும்

    தடயில்லாம வருங்கோவம்..

    அவன அழிச்சிட

    அதமிஞ்சின கொடிய

    பகயேது மில்ல..

    அதால

    கோவப்படாத கோவப்படாத

    கொடுமதரும் கோவப்படாத…!

    செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்

    Posted on October 6, 2018

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    ++++++++++++++++++

    1. https://youtu.be/rl1gtC6kuPg
    2. https://youtu.be/L4hf8HyP0LI
    3. https://youtu.be/prYDgWDXmlQ
    4. https://youtu.be/AbZ-6CcKw5M
    5. https://youtu.be/seXbrauRTY4
    6. https://youtu.be/rl1gtC6kuPg

    https://voyager.jpl.nasa.gov/

    https://www.nasa.gov/mission_pages/voyager/index.html

    See the source image

    ++++++++++++

    நாற்பதாண்டுகள் பயணம் செய்து
    நாசாவின் விண்வெளிக்
    கப்பல்கள் இரண்டு
    சூரிய மண்ட லத்தின் காந்த
    விளிம்புக் குமிழைக்
    கடக்கும் !
    அண்டைப் பரிதி மண்டலத்தை
    நெருங்கும்  !
    நேர்கோட் டமைப்பில் வந்த
    சூரியனின்
    வெளிப்புறக் கோள்களை
    விண்கப்பல் இரண்டும்,
    உளவுகள் செய்யும் !
    நெப்டியூனின் நிலவை,
    கருந் தேமலை,
    பெரும் புயலைக் காணும் !
    நாலாண்டுத் திட்டப் பயணம்
    நீள்கிறது
    நாற்பது ஆண்டுகட்கும் மேலாய் !
    அண்டைப் பரிதி மண்டலத்தின்
    அன்னிய கோள்களுக்கு
    சின்னமாய் எடுத்துச் செல்லும் நமது
    ஞாலக் கதை சொல்லும்
    காலச் சிமிழை !

    +++++++++++++++++

    See the source image

    நாற்பது ஆண்டுகள் கடந்து தொடர்ந்து பயணம் செய்யும் நாசாவின் அகிலத் தாரகை விண்ணுளவிகள் [Interstellar Probes]  

    [2018 அக்டோபர் 5 ]

    நாசாவின் விண்வெளி உளவி வாயேஜர் -2  நாற்பத்தி ஒன்று ஆண்டுகளாய் நெடுந்தூரம் ப்யணம் செய்து, நமது சூரிய மண்டலக் காந்த விளிம்பில் ஊர்ந்து, சூரிய ஏற்பாடுக்கு அப்பால் எழும்  தீவிர அகிலக்கதிர்கள் [Intersellar Cosmic Rays] தாக்குவதை அறிவித்துள்ளது. 1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் -2 விண்ணுளவி பூமியிலிருந்து சுமார் 11 பில்லியன் மைல் [17.7 பில்லியன் கி.மீ.] தூரத்தில் [2018 செப்டம்பர் 5 ] போய்க் கொண்டுள்ளது.  2007 ஆண்டு முதல் வாயேஜர் -2 சூரிய மண்டலக் காந்தக் குமிழியின் விளிம்பு வெளிப்புறக் கோள அடுக்கில் [Heliosphere] பயணம் செய்கிறது. அதற்குப் பிறகு எல்லையில் உள்ள சூரிய விளிம்பு நிறுத்த வரம்பை [Heliopause]  விண்ணுளவி வந்தடையும்.  அந்த வரம்பைக் கடந்ததும் வாயேஜர் -2 விண்ணுளவி, முதல் வாயேஜர் -1 போல் அகிலத் தாரகை அரங்கில் [Interstellar Space] நுழைந்த இரண்டாவது விண்கப்பல் சாதனையாக இருக்கும். 2012 இல் முதல் வாயேஜர் -1   சூரிய மண்டலக் காந்த விளிம்பை கடந்து அகிலத் தாரகை அரங்கில் நுழைந்து விட்டது.

    See the source image

    சென்ற 2017 ஆகஸ்டு முதல், வாயேஜர் -2 விண்ணுளவி  உயர்சக்தி அகிலக் கதிர்கள் [High Energy Cosmic Rays] தாக்குதல் 5% மிகையாகி உள்ளது. வெகு வேகமாய்ச் செல்லும்  அகிலக் கதிர்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பாலிருந்து வருபவை.  இதேபோல் 2012 இல் வாயேஜர் -1 விண்ணுளவியும்  5% மிகையான  தீவிர அகிலக் கதிர்கள் தாக்குதல் பெற்றுள்ளது.

    +++++++++++++++++++

    “இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012].  விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”

    ராபர்ட் டெக்கர் [John Hopkins University in Maryland]

    சூரிய மண்டலத்தின் காந்த விளிம்பு பற்றிய மகத்தான முக்கிய தகவலை  வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.

    ரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]

    “வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”

    எட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)

    “பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் !  அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”

    ஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)



    “வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே !  175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது.  தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.

    ஹாரிஸ் சூர்மையர் (Harris Schurmeier, Voyager Project Manager) (1970 -1976)

    “வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் !  நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன்.  ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”

    டாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)

    நாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள்.  அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு.  அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.

    நாசா வெளியிட்ட அறிக்கை

    புதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்

    35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது.   இது நாசா விஞ்ஞானிகளின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது.   10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன.   சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது.  இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன.   அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.

    2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ]  தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது.   இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது.  இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம்  [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது.   அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.

    இரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries].  அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.

    நாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்

    2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார்.  அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும்.  மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.

    ஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார்.  திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார்.  ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது.  பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.

    வாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது.  அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.

    இப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன !

    “வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.

     

     

    வாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது,  175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன.  அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.

    புறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்

    1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது.  அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது.  வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது !

    மேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது !  2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன !

    வாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின.  வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர்.  அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது !

    பரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் !

    வாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன.  பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம்.  வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம்.  இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன !  அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன.  அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும்.  எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம்.  வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் !

    வாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது !  ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG).  முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ்.  1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது.  2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ்,  மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன.  இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் !

    கார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை

    இன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும்.  2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன.  உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார்.  படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன.  நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடை யாக இருக்கும்.

    ———————–

    *************************

    படங்கள்:  BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html(Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html(Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html (Uranus & Neptune)

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 205)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)

    7.  Space Travel :   Mankind’s Messenger [Voyager 1 & 2]  at the Solar System  Frontier  [September 5, 2012]

    8.  http://en.wikipedia.org/wiki/Voyager_1   [September 8, 2012]

    9.  http://www.history.com/news/6-fascinating-facts-about-space-probe-voyager-1  [September 5, 2012]

    10.  http://voyager.jpl.nasa.gov/mission/interstellar.html  [Interstellar Mission]

    11. https://www.theguardian.com/science/2015/mar/15/voyager-1-and-2-space-journey-nasa  [March 15, 2015]

    12.https://www.nasa.gov/mission_pages/voyager/index.html [September 2017]

    13.  https://www.nasa.gov/press-release/nasa-s-voyager-spacecraft-still-reaching-for-the-stars-after-40-years  [July 31, 2017]

    14. https://www.space.com/37775-nasa-voyager-mission-40-years-launch.html  [August 12, 2017]

    15. https://www.jpl.nasa.gov/news/news.php?feature=7252&utm_source=iContact&utm_medium=email&utm_campaign=nasajpl&utm_content=daily20181005-1  [October 5, 2018]

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) October 6, 2018 [R-1]

    Posted in அண்டவெளிப் பயணங்கள்பிரபஞ்சம்பொறியியல்விஞ்ஞானம் Leave a reply

    Attachments area
    Preview YouTube video See Two Spacecraft Journey to Outer Reaches of Solar System | National Geographic

    Preview YouTube video Voyager Reaches Interstellar Space

    Preview YouTube video Voyager in Interstellar Space! On This Week @NASA

    Preview YouTube video Where Are the Voyagers Now? Remembering the Amazing Voyager Missions

    Preview YouTube video Voyager Journey to the Stars

    Share
  • மலையாளத்தில் ஒன்பதாம் திருமுறை முதன்முறையாக

    புரட்டாதி 10, 2049 (26.09.2018)

    இந்தியா கேரளம் திருவனந்தபுரம் ஊடக நடுவம்.
    என் செயலால் ஆவதொன்றில்லை எனினும் இறைவன் அருளால் என் கனவுகளில் ஒன்று நனவாய நாளும் இடமும்.

    ஒன்பதாம் திருமுறை மலையாள மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா. 301 பாடல்களையும் மொழிபெயர்த்தவர், இசையுடன் பாடுமாறு நான் கேட்டு மொழிபெயர்த்தவர் என் மதிப்புக்குரிய அன்பர் திரு. சந்சிரசேகரன் நாயர் அவர்கள்.

    முன்பு நான் கேட்டுத் திருவாசகம் மொழிபெயர்த்துத் தந்தவர். நூலாக வெளிவந்து, என் வேண்டுகோளை ஏற்ற திருவனந்தபுரம் மன்னர் தம் அரண்மனை வளாகத்தில் அரங்கில் அந்நூலை வெளியிட்டவர். அம்மொழிபெயர்ப்புக்காக, திரு. சந்சிரசேகரன் நாயர் அவர்கள்.நல்லி திசை எட்டும் விருது பெற்றவர்.

    அதற்கு முன் திருமந்திரத்தில் உள்ள ஆர்வத்தால், ஈடுபாட்டால் பத்தாம் திருமுறை முழுவதையும் மொழிபெயர்த்தவர்.

    திருக்கோவையாரை மொழிபெயரத்துத் தாருங்கள் எனக் கேட்டுள்ளேன். என் செயலால் ஆவதொன்றில்லை எனினும் அவன் அருளால் மொழிபெயர்த்துத் தருவார்.

    Share
  • வருக வருகவென வாழ்த்தி வரவேற்கிறோம்!

    கவிஞர் அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர். தமது இன்னிசைப் பாடல்களால் தமிழ்த் திரைப்பட இரசிகர்களைக் கவர்ந்தவர். கவிஞர் அறிவுமதியின் இயற்பெயர் ‘மதியழகன்’. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவரின் தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த விருப்பத்தைக் கண்டு கவிஞர் மீரா கவிஞர் அப்துல் ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். மறைந்த திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் ஏழு படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
    2016 ஆம் ஆண்டில், தமிழ் பிறந்தநாள் பாடல் எழுதி, அரோள் கரோலி இசையமைத்து, உத்ரா உன்னிகிருஷ்ணன் இனிமையாகப் பாடி, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2016 மாநாட்டில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது . சிறுவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பரவலாகப் பாடப்படும், ‘Happy birth day to you’ என்ற ஆங்கிலப் பாடலுக்கு இணையாக எழுதி பரவலாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிறந்த நாள் பாடல்

    லாலா லாலா லாலா
    லா லா லாலா லாலா லாலா

    லாலா லாலா லாலா
    லா லா லாலா லாலா லாலா

    நீண்ட நீண்ட காலம்
    நீ நீடு வாழ வேண்டும்

    வானம் தீண்டும் தூரம்
    நீ வளர்ந்து வாழ வேண்டும்

    நீண்ட நீண்ட காலம்
    நீ நீடு வாழ வேண்டும்

    வானம் தீண்டும் தூரம்
    நீ வளர்ந்து வாழ வேண்டும்

    அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
    பண்பு வேண்டும் பரிவு வேண்டும்

    அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
    பண்பு வேண்டும் பரிவு வேண்டும்

    எட்டு திக்கும் புகழ வேண்டும்
    எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

    எட்டு திக்கும் புகழ வேண்டும்
    எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

    உலகம் பார்க்க உனது பெயரை
    நிலவுத் தாளில் எழுத வேண்டும்

    உலகம் பார்க்க உனது பெயரை
    நிலவுத் தாளில் எழுத வேண்டும்

    சர்க்கரைத் தமிழள்ளி,
    தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்

    பிறந்த நாள் வாழ்த்துகள்
    பிறந்த நாள் வாழ்த்துகள்

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

     

    கவிஞர் அறிவுமதி அவர்கள் நம் வல்லமை இணையத் தளத்தில் மனமுவந்து தமது படைப்புகளை அளிக்க முன்வந்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.  உளமார்ந்த வாழ்த்துகள் கவிஞர் அவர்களே!

    பாலைவனத்திற்குக் கவிஞர் அறிவுமதியின் புதிய விளக்கம் இங்கே:

    இது.. புதுக்கோட்டை..அறந்தாங்கிச் சாலையில் இன்று பார்த்த ஓர் ஊரின் பெயர்.


    பாலைவனம்..என்பதற்கு DESERT என்றே ஆங்கிலத்தில் பெயர்க்கும் பொதுப் பழக்கம் நம்மிடையே உள்ளது. அது தவறு.

    ‘பாலை’..என்ற வெப்பாலை என்றும் சொல்லப்படுகிற ஆங்கிலத்தில் WRIGHTIA TINCTORIA… என்கிற மரங்கள் மிகுதியாய் வளர்கிற நிலப்பகுதி… என்பதே இந்தப் ‘பாலைவனம்’..என்பதற்கான சரியான பொருளாகும்.

    தமிழ்நாட்டில் பாலைவனம்… என்பது கேரளாவில்.. பாலக்காடு.. பாலைக்காடு என்று தூய தமிழில் இன்றும்!

    தமிழ்நாட்டில் சூர சம்ஹாரம்..என்பது கேரளாவில் சூரன் போர்.. என்று இன்றும்
    புழங்குதல் போல்தான் இதுவும்!

    பாலைவனம் பெயர்ப் பலகையின் கீழ், பூக்களோடு உள்ளதுதான் பாலை மரம்.

    அறிவுமதி
    ஆவுடையார்கோவில்
    29.9.18

    Share
  • அன்பின் தற்கொலை

    #.இல.நடராசன்

    தற்கொலை செய்து கொள்ள
    வைத்துவிட்டீர்கள்
    என் அன்பை…
    மீண்டும் மீண்டும் உங்களைச்
    சேர அது முற்பட்ட போதும்
    உங்களின்
    சொற்கள்,
    துரோகம்,
    சைகை,
    மௌனம்
    முதலியவற்றுள் ஏதோ ஒரு ஆயுதத்தால்
    அதை (தற்)கொலை செய்து விட்டீர்கள்,
    திரும்ப அது பிறக்க முடியாதபடி.

    Share
  • புதுக்கவிதை

    கவிஞா் பூராம் (முனைவா் ம இராமச்சந்திரன்)

    1.

    பூமி பந்து பரவிக்கிடக்கும்
    இயற்கை
    ஆனந்தத்தின் பெருங்கடல்
    ஒவ்வொரு உயிாிலும்
    உணவைத் தேடி
    உன்னதத்தைத் தொலைக்காமல்
    கோடி காலங்கள்
    ஓடின சென்று

    அன்பெனும் உணா்வு
    அமிா்தத்தின் உயிா்ப்பு
    நீக்கமற நிறைந்திருக்கும்

    மனிதன் மட்டும்
    மகத்துவம் அறியாமல்
    மக்கும் பணத்தோடு ஆடும்
    ஆட்டம்
    நாகரிகத்தின் வளா்ச்சியில்
    அன்பாய் அரவணைப்பாய் 
    இதோ
    எதிா்ப்பாா்ப்புகள் அற்று
    உயிா் கலக்கும்
    பேரின்ப வெளி.

    2.

    அவன் சிாித்த
    கன்னங்குழியில் விழுந்து
    காணாமல் போனவள்

    அவன் நடந்து ஆடிய வயிற்றில்
    அசையாமல் மயங்கி
    கிடந்தவள்

    அவன் பாடும் ஊளையில்
    ஊரே விழித்தாலும் மனம் மயங்கி
    கண்  துயிலும் நான்

    காதல்!

    Share
  • மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் – கவிதைநூல் விமர்சனம்

    -முனைவர் ஜே. ஜெகத் ரட்சகன்

    கவிதைகள் எழுதுவோரின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அதனை மலிவாக எண்ணுகின்ற மனப்போக்கும் உருவாகியுள்ளது. உண்மையில் அதுபோன்ற மனப்போக்கு சரியானதுதானா? என்ற வினாவுக்கு, ஆம். சரிதான் என்று உடனடி பதிலை எவராலும் கூறமுடியாது. ஏனெனில் கவிதைகள் தம்முடைய பயணத்தின் உள்ளும் புறமும் அதன் வீரியத்தை இன்னமும் இழந்துவிடாமல் புதுப்பித்துக்கொண்டே வருகின்றன. புதுக்கவிதைகள் எதனைக் குறித்தும் பாடுபொருளாகக் கொள்ளலாம் என்கிற அதற்குரிய சுதந்திரம் அதன் பயணத்தில் தொய்வு ஏற்படாமல் தக்கவைத்துள்ளது. அந்தச் சுதந்திரத்தின் பயனாக இடுக்குகளில் மனிதப் பார்வைக்கு எட்டாமல் போயிருந்த மெல்லிய உணர்வுகளையும், சொல்லொணாத வலிகளையும், அழகியலையும் எதிர்ப்புகளையும் மிகச் சரியாக உள்வாங்கி வெளிப்படுத்தும் ஆற்றலைக் கூடுதலாக தாமாகவே தன் தலைமேல் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறது. எனவே, புதுக்கவிதைகள் முற்றாக வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவையல்ல என்கிற புரிதல்கள் அவ்வப்போது உரிய சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பா. ஜெய்கணேஷ் அவர்கள் எழுதிய மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் என்ற கவிதைத் தொகுப்பைக் கூறலாம். 73 கவிதைகள் அடங்கிய சிறிய தொகுப்பு. 73 கவிதைகளின் தலைப்புகளும் கவித்துவம் நிரம்பியவை. ஈர்ப்புக்குக் குறைவில்லாதவை. நூலமைப்பும் ஓவியங்களும் அழகிய கவிதைகளாகவே தென்படுகின்றன.

    ‘இல்லாதவைகளின் உலகம்’ என்னும் கவிதையில் வளர்ச்சி என்ற போலியான போர்வையில் போர்த்தப்பட்டு, வாழ்வின் அற்புத கணங்களையும் கவித்துவம் நிரம்பிய அழகிய வாழ்வையும் இழந்துவிட்டதைக் குத்தலோடு பதிவு செய்துள்ளார். ‘இருளின் கண்கள்’ என்னும் கவிதையில் இழந்துபோன இளம்பருவ கிராமத்து வாழ்வின் பதிவு அப்பட்டமாகக் காணப்படுகிறது.  சிறுகதையானாலும் கவிதையானாலும் காட்சிப்படுத்துதல் மிக முக்கியம். அந்த வகையில், சில சிறு சொற்களைக் கொண்டே கூறவந்ததைக் காட்சிகளாக நிலைநிறுத்துவதில் வெற்றி பெறுகிறார் கவிஞர். கவிதைக்கான சொற்களை வலிந்து தேடாமல் எளிதான சொற்களாலேயே மிக அழகான கவிப்பின்னலை உருவாக்கியுள்ளார். ‘வன்பூனைகளும் மென்பூனைகளும்’, ‘பலி ஆடு’ இத்தொகுப்பினுள் மிகவும் குறிக்கத்தக்கக் கவிதைகள். இக் கவிதைகளில் கவிஞர் துள்ளிக் குதித்தோடுமாறு படைத்துள்ள ஆட்டையும் பூனையையும் படிப்போர் எதனோடும் ஒட்ட வைத்து, அக்கவிதையைத் தனக்கேற்றவாறு வளைத்துக்கொள்ள இடமளிப்பவை. யானையும் எறும்பும் எனும் கவிதையும் அத்தகையதே.

    இறந்தவற்றை உண்டு புசிக்கும்/ இறக்கை விரித்த கழுகுகள்/ இருப்பவற்றையும் உயிர்க்குருதி குடித்து/ வாசம்தேடி வானின்/அகண்ட வெளியெங்கும்/ எக்காளமிட்டுத் திரிகின்றன/ இது பிணம் தின்னிக் /  கழுகுகளின் உலகம்   (43) என்ற கவிதையில் மனிதர்களுக்கெதிரான தம் போரைத் தொடுக்கிறார்.

    எல்லாம் அதனளவில் / இருப்பதில் எனக்கென்ன பிரச்சனை / யாவும் கலைத்து / பிரபஞ்சம் அழித்து / நான் மட்டும் வாழவா என்ற எளிய வரிகள் மனிதச் சமுதாயத்தை எதிர்நிலையில் வைத்து இயற்கையின் சார்பில் வாதிடுகிறார். ஆடு, யானை, எறும்பு, மான், சிட்டுக்குருவி, நரி, ஓநாய், விட்டில் பூச்சி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் இவருடைய கவிதைகளில் தென்படுகின்றன. மனிதர்களின் மீதான கோபங்களை நேரடியாகக் கூறாமல் விலங்குகளுக்குத் தம்முடைய எதிர்ப்பு மொழியைக் கற்பித்து மனிதர்களின் மீதான தாக்குதலைத் தொடுக்கிறார். மேலே சொல்லப்பட்ட விலங்குகள் ஓரிடத்தும் அந்த விலங்குகளாக இத்தொகுப்பினுள் பயன்படுத்தப்படவில்லை.

    பல கவிதைகள் குறுங்கதைகள் கூறுவதைப் போன்று அமைந்துள்ளன. சில கவிதைகள் எளிதாகப் பேச வேண்டியதைச் சுற்றி வளைத்துப் பேசுவதையும் காணமுடிகிறது. பல கவிதைகளில் ஒன்றின் சாயல் ஒன்றின்மீது பட்டுத்தெறிப்பதை எளிதில் உணர முடிகிறது. ஒன்றாக எழுதப்பட்டு வெட்டப்பட்டிருக்குமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கவிதைக்கான களங்களையும் ஒரு கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம் எனத் தோன்றுகிறது.  எனினும் சில கவிதைகளின் வழியாகவும் கவித்துவ நடையாலும் கவிஞரின் முதல் தொகுப்பு இது என்று கூறுவதை ஏற்க மனம் தயங்குகிறது. மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் இயல்புகளின் எல்லை யாவும் உடைத்து மெதுமெதுவாய் எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது.

    *****

    விமர்சகர் – உதவிப் பேராசிரியர், தமிழ்ப் பேராயம்,
    எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

     

    Share
  • வரலாறு படைக்கும் உச்சம்!

    பவள சங்கரி

    தலையங்கம்

     

    உரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. தினம் தினம் உச்சத்தைத் தொடும் உரூபாயின் மதிப்பிழப்பால் உயர்மட்ட வருவாய் பெறக்கூடியவர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏதுமிருக்காது. காரணம் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை பெரும்பாலும் டாலரிலேயே செய்துகொண்டு போய்விடுவார்கள். கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு இதைப்பற்றி அதிகம் தெரியாது அல்லது பாதிப்பு அதிகம் இருக்காது. அரசுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பஞ்சப்படியாக வாரி வழங்கப்படுவதால் அவர்கள் சமாளிக்கலாம். ஆனால் நமது மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கக்கூடிய மத்தியதர வகுப்பினரையே இது பெரிதும் பாதிக்கும். சமீப நாட்கள் வரை 100 உரூபாய்க்கு 1.35 லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கொண்டிருந்த நம்மால் இன்று அதே விலைக்கு 1.1 லிட்டர்தான் வாங்க முடிகிறது. இன்னும் சில நாட்களில் அது 1 லிட்டராகக் குறைந்துவிடக்கூடும். ஆனால் இப்பொழுதுதான் நமது வர்த்தகத் துறை அமைச்சருக்கு இது பற்றிய தெளிவு ஏற்பட்டு இதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகத் துறைகளுக்கான அழைப்பை விடுத்திருக்கிறார். ஆனால் மேலும் வீழ்ச்சியின் உச்சம் அதிகரித்தவாறே உள்ளன.

    இந்திய உரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் நேற்று மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் 1550 கோடிகளைத் திரும்பப் பெற்றதால் நமது மும்பை வர்த்தகம் 550 புள்ளிகள் சரிவைக்கண்டது. இதனால் நமது இந்திய முதலீட்டாளர்கள் 1.17 இலட்சம் கோடி உரூபாய்கள் இழப்பைச் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இழப்பு தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் வேதனை. டாலருக்கு நிகரான மதிப்பை நமது உரூபாய் மென்மேலும் இழந்து வருவதும் மற்ற நாடுகளில் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததும் நம்மை சிந்திக்க வைக்கிறது. முக்கியமான பத்து நாடுகளின், எட்டு நாடுகளுக்கான டாலரின் நிகரான அந்த நாட்டின் உரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. இரண்டு நாடுகளில் மட்டும் மிகக்குறைவாக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதில் சில நாடுகளின் வளர்ச்சிகளும் கூட உயர்ந்து கொண்டிருப்பதும் கண்கூடு. சீனா ஏற்றுமதியாளர்களுக்காக தமது நாணயத்தின் மதிப்பைக் குறைப்பதாக இருந்தவர்கள் கூட தற்போது அதைக் குறைக்கமாட்டோம் என்று அறிவித்துவிட்டனர். ஆனால் நமது உரூபாயின் மதிப்பானது எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வீழ்ச்சியடைந்த வண்ணமே உள்ளது பெரும் வேதனையளிக்கிறது. நமது மத்திய அரசும் இதைச் சீர் செய்யாமல் அமைதி காத்து வருகின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியிலும், அதன் பயன்பாட்டிலும் ஏன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அரசின் வருமானத்தை மட்டும் கணக்கில்கொண்டு திட்டங்கள் தீட்டப்படுவது மக்களுக்கு மென்மேலும் சுமையைக் கூட்டுகிறது. நமது நாட்டில் கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை கட்டாயப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதையாவது நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

    இதில் நமது நாடு பொருளாதார வல்லரசாகும் என்ற கனவு என்று நினைவாகப் போகிறதோ?

    Share
  • மானிடவியலின் அணுகுமுறையில் சங்க இலக்கியக் குடும்ப நிலை

    வீ.செல்வராணி

    முனைவர் பட்ட ஆய்வாளர்

    அண்ணமலைப் பல்கலைக்கழகம்

    அண்ணாமலை நகர்- 608 002

     

    முன்னுரை:

    மனித இனத்தின் பல்வேறு கூறுகளை விளக்குவது மானிடவியலாகும். அதில் மானிடப் பண்பாட்டை விளக்குவது மானிடவியலின் ஒரு பிரிவாகும். பண்பாட்டு மானிடவியல் என்ற பிரிவில் மக்களின் குடும்பம் பற்றி அறிந்துகொள்ளும் போது அம்மக்களினுடைய சமுதாயம், கலச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை, வழிபாட்டுமுறை, போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடிகிறது. இதனால் மனிதப் பரிணாமத்தின் வளர்ச்சியினையும் அறிந்து கொள்ளமுடிகிறது ஆகவே மானிடவியல் குறித்த குடும்ப இயல்புகளை உணர்த்தும் களமாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகிறது.

    மானிடவியல் விளக்கம்: மானிடவியல் என்பது ஒரு முறையான அறிவியல் பார்வையாகும். மனிதனைப் பற்றி ஆராயும் துறையாகச் செயல்படுகிறது. சர் எட்வர்ட் பர்னட் டைலர் கி.பி 1884-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறைக்கு வந்த போதுதான் மானிடவியல் துறையானது முறையான தோற்றத்தைப்பெற்றது. ”மானிடவியல்” என்ற சொல்லாக்கம் ஆங்கிலத்தில் வழங்கப்பெறும் “ANTHROPOLOG” என்னும் சொல்லுக்கு நேரானது என்பர். இச்சொல் “ANTHROPOS” “LOGOS” ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. கிரேக்கத்தில் இச்சொற்கள் முறையே “மனிதன் அறிவியல்” என்னும் பொருளுடைய “ANTHROPOLOGIST” என்ற சொல்லை முதன்முதலில் அரிஸ்டாட்டில் பயன்படுத்தினார். மனித சமுதாயத்தின் கடந்தகால மற்றும் நிகழ்கால வாழ்க்கை முறையையும், பழக்கவழக்கம், பண்பாடு, உயிரியல், போன்றவற்றை சமூக அறிவியலின் துணைக்கொண்டு படித்துணர்ந்து ஆய்வினை மேற்கொள்ளும் துறையே மானிடவியல் (“Anthropology”) எனக் குறிப்பிடுகின்றனர். (பண்பாட்டு மானிடவியல்- ப.17) ஆகவே தனி மனிதனோ அல்லது ஒரு சமுதாயமோ எத்தகையத் தன்மைக் கொண்டு திகழ்கிறது என்பதைக் கண்டறிய மானிடவியல் இன்றியமையாததாகாக் கருதப்படுகிறது.

    இனத்தோற்றம்: மானிட சமுதாயம் தோன்றியதற்கான ஆராய்ச்சிகள் பல நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இருப்பினும் முதல் மானிட இனம் இலெமூரியா கண்டத்தில் தோன்றியது என்பது அறிவியிலாளர்கள் கருத்தாகும். இக் கண்டத்தை மனித நாகரீகத்தின் தொட்டில் என்றழைப்பர். தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழ்கரை வரைக்கும் பரவியிருந்த ஒரு கண்டமாயிருந்த்து. களேற்றர் இப்பழங்கால பெருங்கண்டத்திற்கும் அதில் வந்த குரங்கொத்த உயிரிப் பற்றி இலெமூரியா என்று பெயரிட்டிருக்கின்றார். இக்கண்டம் மாந்தனின் பிறந்தகமாயிருந்திருக்க கூடுமாதலின், இதுவே மிக முதன்மையானதாகும் என்று கூறுகின்றார். பாவணர். (தழிழர் வரலாறு ப.6) அக்கண்டம் தமிழ் இலக்கியங்களில் குமரிக்கண்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இளங்கோவடிகள் “பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள” என்று தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் எடுத்துரைக்கிறார். இதனை ஜான் இங்கிலாந்து என்னும் மேலைநாட்டு அறிஞர் லெமூரியா எனும் குமரிக்கண்டம் ஆப்பரிக்கண்டத்துடன் இணைந்திருந்தது என்பார். ஆகவே முதல் மானிட இனம் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்றும் முதல் மானிட இனம் தமிழ் இனம் என்றும் புலனாகிறது.

    குடும்பம்: மனித சமுதாயத்தின் மிகத்தொன்மையான அமைப்பாகத் திகழ்வது குடும்பமேயாகும். இது எல்லாச் சமுதாயங்களிலும் எல்லாக் காலங்களிலும் பொதுவாக நிலவி வருகிறது. இன்று நூற்றுக்கணக்கான சமுதாயங்கள் காலங்காலமாகப் பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்திக் கொண்டு அதன் அமைப்பாலும் செயலாலும் வேறுபடுகின்றன. ஆனால் அனைத்திலும் குடும்பம் என்னும் நிறுவனமே மிகவும் இன்றியமையாத, அடிப்படை அலகாகச் செயற்படுகின்றது. அவ்வாறே மக்கள் வாழ்நாள் முழவதும் எண்ணற்ற குழுக்களில் பங்கு பெற்று அவர்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டாலும் குடும்பம் என்னும் அமைப்பே முதலிடம் பெறுகிறது. (பன்பாட்டு மானிடவியல் ப.350) கூடிவாழ்தல் குடும்பமாகும். இவை மானிட இனத்திற்கு மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்கும் பொதுவாகத் திகழ்கிறது. குடும்பங்களின் வாழிடங்கள் குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமேயாகும். குடும்பம், திருமணம், இரண்டும் ஒன்றெயொன்று சார்ந்தே செயல்படுகின்றன. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல இன்று நாம் வழங்கும் ”திருமணம்” குடும்பம், ஆகிய இரண்டு சொற்களும் புதிய சொல்லாட்சியாகும். பழந்தமிழ் நூல்ளான தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் இச் சொல்லாட்சி இடம் பெற்றதாக தெரியவில்லை மாறாக குடிமை, குடி, கூடி போன்ற சொல்லாட்சிகள் இடம்பெறுகின்றன. ஆகவே குடும்பம் என்னும் சொல் பிற்காலத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும். குடும்பம் என்னும் சொல் முதன்முதலில் திருக்குறளில் தான் நேரடியாகப் பயின்று வருகிறது. “இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு” (குறள்-1026) என்ற குறளுக்கு உரைசெய்த டாக்டர் மு.வ அவர்கள் தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ என்று உரை எழுதுகிறார். வள்ளுவர் பயன்படுத்திய குடும்பம் என்னும் புதிய சொல்லாட்சியைக் குடி என்றே குறிக்கிறார். சங்க இலக்கியத்தில் குடும்பம் என்னும் சொல்லுக்கு, “குடம்பை, குடும்பு, கடும்பு” ஆகிய சொற்கள் இடம்பெறுகின்றன. ”குடும்பை” என்ற சொல் இருபது இடங்களில் பயின்று வருகிறது என்பார் பேராசிரியர் மாதையன். மேலும் ”குடும்பு” என்னும் சொல் கூடிவாழதல் என்றும் பொருள்படுகின்றது என்கிறார். நற்றினையில். ”கருங்கலை கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்” (நற்-119) என்னும் பாடல் மலைஆட்டு இனத்தின் கூட்டு வாழ்வைச் சுட்டுகிறது. குடும்பு என்னும் சொல்லுடன் “அம்” விகுதி சேர்ந்து பொருண்மை விரிவாக்கமாக (SEMANTIC EXTENSION) குடும்பம் எனும் சொல் அமைந்தது. (இலக்கிய மானிடவியல் பக். 348,349)

    தொல்காப்பிய நூற்பாக்களில் இல், மனை, குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வனப்பு, முற்றம், நகர் மாடம் முதலிய சொற்கள் குடும்பங்களின் வாழ்விடத்தில் உள்ள வேறுபாடுகளையும், வகைகளையும் சுட்டுகின்றன. குடும்பம் என்னும் அமைப்பானது ஒர் ஆணும் பெண்ணும் அவர்களுடைய சமுதாய மரபுப்படி மண வாழ்வில் ஈடுபடும் நிலையால் மட்டுமே தோன்ற முடியும். அவ்வாறு இணைந்தால் தான் அச்சமுதாயத்தில் அவர்கள் ஒரு குடும்பமாக ஏற்றுக்கொள்ளப்படுவர். அவ்வாறின்றி ஒரே வீட்டில் ஒர் ஆணும், பெண்ணும் உண்டு மகிழ்ந்து வாழ்ந்தாலும் அவர்களிடையை சமுதாயம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கணவன்-மனைவி உறவு அமையாதவரை அவர்கள் குடும்பம் என்னும் அமைப்பை ஏற்படுத்தவியலாது. இங்குக் குடும்பம் என்னும் அங்கீகாரம் அந்தந்தச் சமுதாயத்தின் அகவயக்கருத்தாக்கத்தின்(EMIC CONCEPT) மூலமே அளிக்கப்படும் சில பழங்குடிகளில் காதலர்கள் திருமணத்திற்கு முன்னரே தனிக்குடிசையில் ஒன்று சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவர். சிலகாலம் கழித்துத்தான் திருமணம் நடைபெறும், ஆயினும் இப்பழங்குடிகள் திருமணத்திற்கு முன்னர் வாழும் நிலையிலிருந்தே குடும்பம் ஏற்பட்டு விடுகிறதென்று எண்ணுகின்றனர். (பன்பாட்டு மானிடவியல்- ப.352)

    குடியிருப்பைக் குறிக்கும் நகர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. தொல்காப்பியத்தைக்காட்டிலும் சங்க இலக்கியங்களே அக்கால சமுதாயத்தின் எல்லா வகையான உயர்வு, தாழ்வுகளையும் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் மனைவியகம், கணவனகம், புதிய அகம் பரத்தியர் அகம் போன்ற வகையினங்கள் சங்ககாலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் “தாயக முறை”(matrilocal) இருந்துள்ளது. ஆண் திருமணத்திற்குப்பின் மனைவியகத்திற்குச் சென்று பெண்ணின் இல்லத்தில் வாழ்ந்திருக்கிறான். இத்தகைய பெண்ணின் இல், ”எம்இல்” என வழங்கப்பட்டிருப்பதைப் பல சங்கப்பாடல்கள் பதிவு செய்துள்ளன. நற்றினையில் ……………..மாதோ எம்இல் பொம்மல் ஒதியைத் தன்மொழிக்கொளீஇக் கொண்டு உடன் போக வலித்த வன்கண் காளையை ஈன்றதாயே ( நற்- பா-293) என்றும், குறுந்தொகையில் எம் இல் அயல தோழி உம்பர் மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி (குறு- பா-138) என்றும், கலித்தொகையில் ……………யாம் வாட ஏதிலார் தொடியுள்ள வடுக்காட்டி ஈங்கு எம் இல்வருவதை (கலி- பா-78) விடா அது நீ எம்இல் வந்தாய் அவ்யானை கடாஅம் படுமிடத்து ஓம்பு (கலி- பா-97) என்ற பாடல் வரிகள் மண வாழ்க்கைக்குப் பின் தங்கும் பெண் இல்லத்தைச் சுட்டுகிறது. ஆனால் தற்போது பெண் இல்லத்தில் தங்குவது என்பது ஆண்மகனுக்கு இழிவாகக்கூடும் என்னும் தவறான பாதைக்குச் சமுதாயம் தள்ளப்பட்டுவிட்டது. பெரியாழ்வார் தாம் இயற்றிய திருவாய்மொழியில் பெண் திருமணத்திற்குப் பின்னரும் தன்னுடைய தாயகத்திலேயே தொடர்ந்து வாழ்ந்த முறையைப் பதிவு செய்துள்ளார். பெருப்பெருத்தகண்ணாலங்கள் செய்து பேணிநம் மில்லத்துள்ளே இருத்துவான் எண்ணி நாமிருக்க (திருவாய்மொழி 3; 7-10 )

    திருமணத்திற்கு முந்தைய ஆணின் இல் ‘தம்இல்’ என வழங்கப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. …………அன்னை தம்இல் தமது உண்டன்ன சினைதொறும் தீம்பழம் தூங்கும் பலவின் ஒங்குமலை நாடனை வரும் என்றோளே. ( குறு. பா-83)

    மேற்கூறிய பாடலில் திருமணம் செய்யவரும் ஆணின் இல்லம் ‘தம் இல்’ எனும் தனி வழக்கில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் பொதியில் எனும் சொல்லையும் காணமுடிகிறது. வெளியூரிலிருந்து வரும் பாணர்கள் பொதியில் தங்கினர். என்ற குறிப்பு புறநானூற்றின் வழி அறிய முடிகிறது. முடிவுரை மானிடவியல் நோக்கினை சங்க இலக்கியங்களோடு பொருத்திப் பார்ப்பதன் மூலம் ஆய்வு செய்வதற்கான களங்கள் பலவற்றை கொண்டுள்ளதாகத் திகழ்கிறது. மக்களின் பண்பாடு, சமுதாயம், குடும்பம், திருமணம், உறவு முறை போன்றவற்றை ஆராயும்போது அவை முறையாகவும், நெறியாகவும் அமைந்துள்ளன என்பது நமக்கு அறிய முடிகிறது. தற்போது திசைமாறிப்போகும் நம் பண்பாட்டைச் சீர் பெறச் செய்ய மானிடவியல் ஆய்வுகள் மிக இன்றியமையாததாகத் திகழ்கிறது என்பதினைப் புலப்படுத்தும் நோக்கமே இக்கட்டுரையாகும்.

    ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்:

    1. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

    2. பக்தவத்சல பாரதி, இலக்கிய மானிடவியல் அடையாளம் பதிப்பு. திருச்சி பதிப்பு 2014

    3. தொல்காப்பியம், கழக வெளியீடு. திருநெல்வேலி.

    4. சங்க இலக்கியம் முழுவதும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்

    Share
  • ஜீவா பாடல்களில் சொல்நிலை உத்திகள்

    ஒ. அஜிதாகுமாரி,   உதவிப் பேராசிரியர், தமிழ்துறை,  என்.எஸ். எஸ். கல்லூரி,  திவனந்தபு

    கர்மவீரனாகவும், கலைஞனாகவும் இருகோணங்களில் தமது நாற்பதாண்டுகளில் திறம்படத் தமிழ் மக்கள் சேவையை ஆற்றிய குமரிப்புதல்வன்     ப. ஜீவானந்தம் அவர்களின் பாடல்களில் இழையோடும் சொல்நிலை உத்திக்களைச் சுட்டிக்காட்ட இக்கட்டுகை முனைகிறது.

    சொல்நிலை

                படைப்பின் சிறப்புக்குப் படைப்பாளிதாம் பயன்படுத்துகின்ற சொற்களின் தேர்வு, அவற்றைக் கையாளும் விதம், புதியவற்றை உருவாக்கும் திறமை, புதிய பொருட்களை ஏற்கும் திறமை முதலிய நடையில் உத்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் தேவையாகும். ஜீவா பாடல்களில் சொல்நிலை உத்திகளாகப் பழைய சொல்லாட்சி, வட்டார வழக்கு, அடுக்குத்தொடர், பிறமொழிக் கலப்புச் சொற்கள், இரட்டைக்கிளவி, ஒருபொருட் பன்மொழி, ஒலிக்குறிப்புச் சொற்கள், ஆகுபெயர், இருவடிவச் சொற்கள், அடைச் சொற்கள், பழமொழி அணிநயம் போன்றன காணப்படுகின்றன.

     சொல்லாட்சி

    முன்பு வழக்கிலிருந்த ஆனால் தற்போது வழக்குப் பயிற்சியில் பயன்பாடு அருகிய நிலையிலான சொற்களாக குக்கிராமம், நத்துவோர், சுணங்கன், சுமடர் எனும் பழைய சொற்கள் காணப்படுகின்றன.

    வட்டார மொழிக்கூறுகளின் பயன்பாடு மிகுதியான இடங்களில் காணப்படுகின்றன. ஜீவா பயன்படுத்திய வட்டாரச் சொற்களில் அக்கிராமம், அட்டூழியம், உண்ணலை காரியம், கங்கணம், கண்டபடி, கன்னாபின்னா கூத்தாடி, பூழ்தி எனும் சொற்கள் இன்றளவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பயின்று வருவதனைக் காணமுடிகிறது.

    பிறமொழிக் கலப்புச் சொற்கள்

    கடன் வாங்குதலும் கலப்படைதலும் மொழியின் இயல்பு என்னும் கருத்துக்கிணங்க கடன் வாங்கப்பட்ட சொற்கள் (Borrowed Words) பாடல் பகுதிகளில் பயன்பாடாகியுள்ளன. இத்தன்மையில் வடமொழி, அராபியம், ஆங்கிலம், இந்தி, இந்துஸ்தானி, உருது, கன்னடம், சிங்களம், தெலுங்கு, பாரசீகம், மலையாளம் போன்ற பிறமொழிச் சொற்கள் காணப்படுகின்றன.

     வடமொழி

    தொல்காப்பியர் காலம் முதல் த்மிழோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள மொழி வடமொழி. வடமொழிச்சொற்கள் தமிழில் வழங்கும்போது அவ்வொலி மரபோடு இயையவே மிகுதிகள் அமைந்துள்ளன என்னும் கருத்து குறிப்பிடத்தக்கதாகும். இவரது பாடல்களில் வடமொழி எழுத்துக்கள் பயின்றும் அல்லாத நிலையிலும் உள்ளன.

    வடமொழி எழுத்துக்கள் பயின்று வரும் சொற்களாக அஹித, அஷ்ட, ஆஹா, ஆஹீஹீ, ஆஷாட பூதி, கஷ்டம், கிருஷ்ணன், கொஷ்டி, சந்தோஷம், சமாஜம், நஷ்டம், நாஸ்திகம், நாஜி, நிமிஷம், பிரஸ்தாபம், பூர்ஷிவா, ரோஷம், விசேஷம், விஷம், விஷயஞானம், வேஷம், ஜவலிக்குது, ஜது, ஜண்டா, ஜந்து, ஜடம், ஜம்பம், ஜயம், ஜன்மம், சுயராஜ்ஜியம் என்பன போன்றனவும், வடமொழி எழுத்து பயின்று வராத சொற்களாக உபதேசம், சவுகரியம், உத்தேசம், சிசு, பிரசவவுகரியம், குரூரம், சர்க்கார், சத்ரு உபயோகம், சர்வாதிகாரம், பட்டவர்த்தனம் என்பன போன்ற சொற்களும் பயன்பாடாகின்றன.

    ஆங்கிலேயர்களின் வருகையாலேற்பட்ட மொழிக்கலப்பு காரணமாக ஆங்கிலச் சொற்களின் கலப்பு காணப்படுகிறது. ஜீவா பாடல்களில் இண்டர் நேஷனல், மீயூசியம், கவர்மெண்டு, மெஷின், கமிஷன் என்றிவ்வாறான பல ஆங்கில வார்த்தைகளைக் காணமுடிகிறது.

    மேலும், ‘ஜல்தி எனும் இந்திச் சொல்லும் அபினி, கஞ்சா, சராசரி, சாமான் எனும் உருது சொற்களும், சொத்து எனும் கன்னடச் சொல்லும், ‘அந்தோ’ எனும் சிங்களச் சொல்லும் பவிசு எனும் தெலுங்கு மொழிச் சொல்லும் ‘இங்குலாப் சிந்தாபாதி’,ஜமீன், சிபாரிசு’  எனும் பாரசீகச் சொற்களும் ‘வெள்ளம்’ எனும் மலையாளச் சொல்லும், ஜாமீன் எனும் அராபிய மழிச் சொல்லும், பிற மொழிச் சொற்களென தற்போது இனங்காணவியலாத தன்மையிலான தயார், சுமார் எனும் சொற்களும் பயனாகியுள்ளன.

    பல்வகைச் சொற்கள்

    ஒரு சொல் இரட்டித்து நின்று பொருள்தரின் இரட்டைக்கிளவி எனப்படும். குடுகுடு, சடசட எனும் இரட்டைக்கிளவிகள் உணர்ச்சி வேகத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    ஒரே பொருள் தரும் பல சொற்களும் இவர் பாடல்களில் பயின்று வருகின்றன. இவ்வகையில் உலகம், பெண்கள், ஆண்கள் எனும் சொற்களுக்கு பல பொருள் தருகின்ற சொற்கள் உள்ளன.

    பெண்களை அடிமைப்படுத்தும் கயவர்களைப் சாடுதல் பொருச்சும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பாதுகாக்கும் நோக்கிலும் பெண்களைக் குறிப்பிடும் அரிவை, கிளி, தையலர், தோகை, தோகஒ மயிலினத்தார், தோகையர், பாவை, பாவையர், பெட்டை, பெண், பெண்டிர், பெண்டு, பேடி, பொட்டை, மெல்லியலார் எனும் சொல்லாட்சிகளை மிகுதியாகவும் ஆண்களைக் குறிக்கும் சொற்களான ஆடவர், ஆண், ஆண்மை, தந்தை எனும் சொற்களைக் சிறுபான்மையும் பயன்படுத்துவதோடு அவனி, உலகு, செகம், ஞாலம், தரணி, தராதலம், தரை, புவி, பூதலம், பூமி, பூலோகம், மண், ஜக, ஜகம் எனும் சொற்களை உலகத்திற்கிணையான சொல்லாட்சிகளாகவும் பயன்படுத்துகிறார்.

    நிகழ்ச்சி, வருணனை, உணர்ச்சி, வெளிப்பாடு இவைகளை உணர்த்தும் சொற்களான அந்தோ, திண்ணென, ஜே, அபக், திமித்தம், ஜேஜேஜே, அய்யோ, ஐயகோ, அஹீஹீ, தூ, புஸ், படீர், சீச்சீ எனும் ஒலிக்குறிப்புச் சொற்களையும், ஒரே பொருளினைத் தரும் இரு வேறுபட்ட அமைப்புடைய சொற்களான கதை- காதை, கிளி-கிள்ளை, குருதி- ரத்தம், குரீரம், கொடூரம், தரணி- தாரணி, தாய்-அன்னை எனும் சொற்களைத் தன் ஆழமிக்க கருத்தினைப் புலப்படுத்தும் கருவியாகவும் அமைத்துள்ளார். மக்கள் நலனைத் தன்னலனாகக் கொண்டு வாழ்ந்தவராதலின் ‘கோடியர்’ எனும் ஆகுபெயரினை மக்களைச் சுட்டும் தன்னையில் அமைத்துள்ளார்.

    அடைச்சொற்கள்

    அடைச்சொற்களின் வருகை மிகுதியாகப் பயன்பாடாகியுள்ளன. அடைச்சொற்களையும் அடைபெற்று வரும் தலைமைச் சொற்களையும் ஓரடை பெற்று வருதல் முதலாக பல அடைகள் பெற்று வருதல் நிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    இதனை,

    1. ஒரு தலைமைப்பெயர் ஓரடை பெற்றுவரல்
    2. ஒரு தலைமைப் பெயர் ஈரடை பெற்றுவருதல்
    3. ஒரு தலைமைப் பெயர் மூன்றடை பெற்றுவருதல்

    எனும் நிலையில் பயன்பாடாகியுள்ளன.

    மேலும் ஓரடை இரு பெயர்களைச் சிறப்பிக்கவரல் முதல் பதினான்கு பெயர்களைச் சிறப்பிக்க வரும் நிலைகளில் இடம்பெறுகின்றன.

    பழமொழி

    மக்களால் காலங்காலமாகப் பின்பற்றபட்டு மக்களின் வாழ்வியல் சித்திரமாகத் திகழும் பழமொழிகள் பாடல்களில் இழையோடுவதனைக் காணமுடிகிறது.

    நாட்டு மக்களின் நிலையை எண்ணி வருந்திப்பாடுகின்ற ‘இந்தியாக் கண்ணிகள்’ என்ற பாடலில் ‘வெளுத்ததெல்லாம் பாலுமல்ல’ என்ற பழமொழி வாயிலாகவும் ‘தொழிலாளர் அவலநிலை மாற’ என்ற பாடல் தலைப்பில் தொழிலாளர்கள் வீணர்களால் படும்துயர் காலங்காலமாக நடைபெற்று வருவதை ‘வாழையடி வாழையாக’ என்னும் பழமொழி வழிச்சுட்டி வருந்திப் பாடியுள்ளமையைக் காணலாம்.

     அணிநயம்

    தொழிலாளியின் தன்மையை இயல்பான நோக்கில் சொல்லும் தன்மையில் தன்மையணியினையும்,  பணத்திமிர் கொண்டு  வாழ்கின்ற முதலாளிகளின் உடலை நையாண்டி செய்யும் நோக்கில் உருவக அணியினையும், எதையும் சந்திக்கத்தயார் எனும் எதிர்க்கும் குரலமைப்பில் பின்வருநிலையணியும், தொழிலாளியின் அவலநிலையால் தான் வெகுண்டெழும் நிலையிலும் தொழிலாளர் நலன்கருதி அவர்தம் மனத்தினை ஆற்றுப்படுத்தும் கோணத்தில் உயர்வு நவிற்சியணியும், காக்காத கடவுளை எடுத்துக்காட்டுவமையணியாகவும், சுவையணியாகவும் பயன்படுத்தியுள்ளமை அவரது சொற்றிறமைக்குச் சான்றாகும்.

    முடிவுரை

    இவரது பாடல்களில் பயின்றுவரும் சொல்நிலை உத்திகள் சொல்லாடல்களாக மட்டுமின்றி கருத்தின் ஆழத்தினையும் கேடுகெட்ட சமுதாயத்தினை நல்வழிப்படுத்தும் முகமாகவும் முதலாளிகளை அடக்கும் நோக்கத்துடனும் அவரது உள்மன ஆதங்கமாக வெளிப்படுகிறது எனலாம்.

    துணைநூற்பட்டியல்

    1. ப. ஜீவானந்தம் – (1990) ஜீவாவின் பாடல்கள், என். சி. பி, ஹச் பதிப்பு, சென்னை.
    2. பொன்னீலன் – ஜீவா என்றொரு மானுடன் என். சி. பி, ஹச் பதிப்பு, சென்னை.
    3. வெங்கடாசலபதி – (1992) ஜீவாவும் தமிழும், செண்பக பதிப்பகம், சென்னை.
    Share
  • திருமுருகாற்றுப்படையில் முருகனின் சிறப்பும் ஆறுபடை வீடுகளும்

    அ.சரண்யா, முனைவர்பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,தமிழ்ப் பல்கலைக்கழகம்,

    முனைவர் ச.கவிதா, பேராசிரியர்  & நெறியாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,தமிழ்ப் பல்கலைக்கழகம்,

    முன்னுரை

    பத்துப்பாட்டில் முதலாவதாகச் சிறப்பிக்கப்படுவது திருமுருகாற்றுப்படை. திருமுருகு என்ற சொல் முருகப்பெருமானை உணர்த்தும். முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம் எனப் பொருள் பல உண்டு. ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துவது அல்லது வழிகாட்டல் என்பர். முருகப்பெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று அப்பெருமானின் அருள்பெற்ற பக்தன் முருகப் பெருமானின் அருள் வேண்டி நின்ற ஒருவனுக்கு வேலன் வீற்றிருக்கும் இடங்களைக் கூறி முருகனின் பேரருளினையும் அழகு திருமேனிப் பொலிவினைச் சிறப்பாக எடுத்துக் கூறி ஆற்றுப்படுத்தி வழிகாட்டுவதாக அமைந்த நூலே திருமுருகாற்றுப்டையாகும்.

    அறம், பொருள், இன்பம், வீடுபேறு இந்நான்கும் செம்மையுற அமைந்தால்தான் ஒரு மனிதன் நிம்மதியான வளமான வாழ்வை வாழ முடியும். அவ்வாழ்வை நல்வழிப்படுத்துபவர் இறைவன் ஒருவரே. தன் அன்பர்கள் நன்மைகள் பல பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவே இறைவன் ஞாயிறும் திங்களும் மாறி மாறித் தோன்றுவது போல எப்போதும் காட்சி தந்து காத்தரு வருகிறார்.

    இவ்வுலகில் புகழ் ஒன்றைத் தவிர நிலைத்த பொருள் எதுவுமில்லை. ஒருவன் வீடுபேற்றை அடைந்து நிலைத்து நிற்க வேண்டும் என்றால் இறைவனின் தாள்களைச் சரணடைதல் வேண்டும். அந்த வகையில் முருகப் பெருமானின் சிறப்பையும் அவ்விறைவனின் அருட்கொடையினையும் திருமுருகாற்றுப்படையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.

    தமிழர்களின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் திருமுருகாற்றுப்படைக்குத் தனியே இலக்கணம் காணப்படுகின்றது. பத்துப்பாட்டில் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படை நூல்களாகும். அவை பழங்காலத்தில் அரசர்கள், புலவர்கள், வள்ளல்கள் முதலானவர்களைப் பாராட்டுவதற்காக அமைந்தவை. ஆற்றுப்படை என்றால் ஆற்றுவித்தல் என்று பொருள்.

    இதனைத் தொல்காப்பியர்

    கூத்தரும் பாணரும் பொருநாறும் விறலியும்

                            ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

                            பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

                            சென்று பயன்எதிர் சொன்ன பக்கமும்.”                              (தொல்காப்பியம்?)

    என்று கூறுகிறார்.

    கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகியோர் தாம் பெற்ற பெரும் செல்வத்தினைப் பெறாதவர்களுக்கு எடுத்துக்கூறி ஆற்றுவிப்பது ஆற்றுப்படையாகும். தன்னை யார் வழிப்படுத்துகிறார்களோ அவர்களின் பெயரால் வழங்கப்படுவது ஆற்றுப்படை ஆனால் திருமுருகாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தியவர்களின் பெயர் இடம்பெறாமல் பாட்டுடைத் தலைவனாகிய முருகனின் பெயரால் வழங்கப்படுகின்றன.

    தன்னுடைய அனுகிரகங்களும் இறைவனின் செயல்களினால் தான் நடைபெறுகின்றன என்பதால் முதற் பாட்டு இறைவனின் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முருகப் பெருமானின் சிறப்புகள் மற்றும் அவர்தம் அருட்சிறப்புகளை வெளிக்கொணர்வதாக இக்கட்டுரை அமையப்பெறுகின்றது.

    உலகம் என்ற சொல்

    திருமுருகாற்றுப்படிடயின் முதற்பாவில் ‘உலகம்’ என்ற சொல் காணப்படுகிறது. பலர் எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போடுவதைப் போன்று முற்காலத்தில் இவ்வழக்கம் இடம்பெற்றுள்ளது.

    உலகம் என்பது இறைவனால் படைக்கப்பட்டது. நாம் எந்தச் செயலைத் தொடங்கினாலும் இறைவனை மனத்தில் எண்ணித் தொடங்கினால் தொய்வின்றி வெற்றியடையும் என்பதால் சங்க காலத்திலும் உலகம் என்ற சொல்லைக் கையாண்டுள்ளனர்.

                            “உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு”                      (திருமுருகாற்றுப்படை, 1)

                            “உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்”                     (கம்பராமாணயம், 1)

                            ‘உலகெலாம் உணர்ந்து”                                                      (பெரியபுராணம், 1)

    சங்க இலக்கியம், கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற நூல்கள் உலகம் என்ற சொல்லிலேயே தொடங்கப்பட்டுள்ளன. இவ்வுலகம் எல்லா வளமும் நலமும்பெற்று வாழ வழிவகுப்பவர் இறைவன் ஒருவரே. அவரை எண்ணித் தொடங்கினால் நாம் எண்ணியவாறே வெற்றியடையும் என்பதை இங்கு அறியலாகிறது.

    தோற்றப் பொலிவு

    அழகு என்ற சொல்லிற்கு முருகன் என்று பொருள். பவளம் போன்ற மேனியையும் செம்மையான ஆடையையும் அணிந்து காண்போரின் உள்ளங்களைக் கவரக்கூடிய பேரழகு வாய்ந்த தோற்றப் பொலிவுடன் முருகன் இருக்கிறார். கையில் வேலும் சேவற் கொடியும் மயிலை வாகனமாகவும்கொண்டு பேரழகுடன் பக்தர்களுக்கு அருள்புரிகின்றார். மேலும்

                            “பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு

                            ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி”      (திருமுருகாற்றுப்படை, 2-3)

    குன்றுகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டு திகழ்பவர் முருகப்பெருமான். விடியற்காலையில் சூரியன் அடிவானத்தில் கடற்பரப்பின் மேல் ஒளிப்பிழம்பாய் உலகிற்குக் காட்சியளிப்பது போல நெடுந்தொலைவில் உள்ள மலையில் வளமாக எழுந்து பற்பல சமயத்தவரும் புகழ்ந்து போற்றும் முருகப்பெருமான் அக இருளையும் புற இருளையும் நீக்கி மெய்ப்பொருளைத் தெரிந்துணர்த்தும் பேரொளியாகத் திகழ்கின்றார்.

    மேலும் தன் அடியவர்களுக்கு அருள் புரிவதற்காக அவர்கள் இருக்கும் இடம் தேடி நெருங்கிவருவார். அப்படி வருவதால் மக்களின் துன்பங்களையும் அறியாமையையும் நீக்கி இன்பமாக வாழ வழிவிடுபவர் முருகப்பெருமான் ஒருவரே என்பது இங்குப் புலனாகிறது.

    வடிவங்கள்

    இறைவன் ஒவ்வொருவருக்கும் பல வடிவமாகத் திகழ்கின்றான். விநாயகரின் திருவடிகள் 32 என்றும் மகேஸ்வரனின் வடிவங்கள் 25 என்றும் முருகப்பெருமாரினன் திருவடிகள் 16 என்றும் பேராசிரியர் க.பெருமாள் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

    முருகப்பெருமான் பாலனாகவும் வெற்றி வீரனைப் போன்ற தோற்றத்தனாகவும் திருமணக்கோலத்தில் இருதேவியருடன் நின்ற வடிவிலும் பல ஆயுதங்களைக் கொண்டு பகைவர்களை அச்சுறுத்துகின்ற கோலத்திலும் பன்னிரு திருக்கைகளால் அள்ளி அள்ளிப் பக்தர்களுக்கு அளித்த அருள் வள்ளல் கோவணத்துடன் தண்டூன்றி ஆண்டியாய் நிற்கின்ற வடிவிலும் பல வடிவங்கள் கொண்டு தன் அன்பர்களுக்கு அருள் புரிவதை

    “எல்லாம் தந்தாண்டி – ஆனால்

    ஆண்டியும் ஆனாண்டி.”                                                        (இன்பவௌ;ளம்)

    என்பதன்வழி அறிய முடிகின்றது.

    தாளின் சிறப்பு

    இறைவன் எல்லாச் சக்திகளையும் பெற்று இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு இயக்கி வருகின்றான். அவரைப் பற்றுவது என்பது மிகக் கடினமானதாகும். அடியவர்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பது அவனுடைய தாள்களே என்பதை

    “கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

    தாளை வணங்காத் தலை”                                                    (திருக்குறள், 758)

    என்பதன்வழி அறிய முடிகிறது.

    வள்ளுவர் பெருந்தகை, பெரும் புலவர் அவரே இறைவனின் திருமேனியில் அவரின் தாள்களைப் பற்றுவதே சிறந்தது என்று தன் குறளில் தெளிவுபட விளக்கியுள்ளார். மேலும் திருமுருகாற்றுப்படையிலும் பரிபாடலிலும் தாள்களைப் பற்றுவதே மேலானது என்பதை

    “நின்னிற் சிறந்த நின்தாளினையே” (பரிபாடல்)

    “உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்”         (திருமுருகாற்றுப்படை, 4)

    என்பவற்றின்வழி அறிய முடிகின்றது.

    கடம்பமாலை புரளும் மார்பினன்

    முருகப்பெருமானின் அருளினால் நல்ல மழை பொழிந்து பார்க்கும் இடமெங்கும் பசுமையான தோற்றத்துடன் காணப்படுகின்றன. பசுமையான சோலைகளில் தழைத்துப் பூத்து அழகுற வளர்ந்துள்ள கடம்ப மரத்தின் மலர்கள் வட்ட வடிவில் மாலை மாலையாகப் பூத்து நிற்கும். அம்மலர்களை மாலையாகச் சேர்த்து அணிந்திருப்பார். அக் கடம்ப மாலையை அணிந்திருக்கும்போது இன்னும் பேரழகுடன் காட்சியளிப்பார். அம்மாலை அவரின் மார்பில் புரளும்போது மாலையும் பேரழகுடன் இருக்கும். இதனைத் திருமுருகாற்றுப்படையின்

    “தலைப்பெயல் தலைஇய தண்ற்றுங்கானத்து

    இருள்படப் பொதுளிய பராசுரை மராஅத்து

    உருள்பூந்தாண்டார் புரளும் மார்பினை”       (திருமுருகாற்றுப்படை, 9-10)

    என்கிற அடிகள் விளக்குகின்றன.

    இவ்வாறு முருகன் கடம்பமாலை புரளும் மார்பினை உடையவன் என்றும் மேலும் மரமேறும் தொழில் வல்லமையுடைய மந்தியும் ஏற முடியாத உயரத்தினையுடைய மரங்கள் நெருங்கி நிறைந்த பக்க மலையில் வண்டுகள் மொய்த்தலில்லாத தெய்வத் தன்மை வாய்ந்த நெருப்பு போல் செங்காந்தள் மலரின் பெரிய குளிர்ந்த கண்ணியை விரும்பிச் சூடிய திருமுடியை உடையவன் திருமுருகன் என்றும் முருகன் விரும்பி அணியும் அடையாளப் பூமாலை காந்தாளம் பூ என்பதையும் திருமேனிச் சிறப்பையும் மேற்கண்ட பாடலின்வழி அறியமுடிகின்றது.

    வேலவனும் வேலும்

    முருகனின் திருக்கைகளில் காணப்பெறும் கருவிகளாக வேல், அங்குசம், கிடுகு எனத் திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இவற்றில் முக்கியமான ஆய்தம் வேல். முருகன் தனது ஆயுதத்தால் சூரபதுமன் சிங்கமுகன், தாரகன் ஆகிய மூன்று அரக்கர்களையும் அழித்தார். அரக்கர் முவரையும் கொன்று மும்மலத்தையும் நீக்கினான் எனப் பொருள் கொள்வர் பெரியோர்.

    “குன்றம் எறிந்ததும் குன்றப்போர் செய்ததுவும்

    அன்றங் கமரிடர் தீர்த்ததுவும் – அன்றென்னைக்

    கைவிட நின்றதுவும் காற்போதும் பின்காத்ததுவும்

    மெய்விடா வீரன்கை வேல்”                    (திருமுருகாற்றுப்படை, 2 வெண்பா)

    சூரபதுமன் என்னும் ஆணவமலத்தையும் சிங்கமுகன்  என்னும் கன்மமலத்தையும் தாரகன் என்னும் மாயை மலத்தையும் கொன்று இறைவன் நீக்கியதால் ‘சூரசம்ஹாரம்’ விழா கொண்டாடப்படுகிறது என்பர்.

                            “வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும்

    (திருமுருகாற்றுப்படை, 6 வெண்பா)

    அன்பர்களை ஆபத்தில் இருந்து காக்கவும் அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களை முற்றிலும் அழிக்கவும் ஆறுமுகன் வேலைத் தாங்கியுள்ளான் என்பதை நக்கீரர் ஆழம்படி எடுத்தியம்பியுள்ளார்.

    முருகனின் வாகனம்

                            “அல்லல் இல் அனலன்தன் மெய்யில் பிரித்துச்

                            செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து

                            வளம்கெழு செல்வன் தன் மெய்யில் பிரித்துத்

                            திகழ்பொதிப் பீலி அணிமயில் கொடுத்தோன்

                            திருந்துகோல் ஞமன்மெய்யில் பிரித்து     

                            இருங்கள் வெள்யாட்டு எழில்மறி கொடுத்தோன்”                         (பரிபாடல்)

    முருகனின் வாகனமாக ஆடு இமயவனால் கொடுக்கப்பட்டது. அக்கினி பகவான் ஆறுமாமுருகனுக்குசு ஆனை ஈந்ததும் இந்திரன் இனிமையாக இன்பமயில் வழங்கியுள்ளார்கள் என்பதைப் பரிபாடலின்வழி அறிய முடிகின்றது.

    சரஸ்வதியின் வாகனம் அன்னம். விஷ்ணுவின் வாகனம் கருடன், சனீஸ்வரனின் வாகனம் காக்கை, மன்மதனின் வாகனம் கிளி, முருகனின் வாகனம் மயில் என்பர்.  பறவை வாகனங்களில் பார்க்க அழகுடையது மயிலே. அதன் தோற்றம் ஓரழகு, நடை ஓரழகு, அதன் சாயல் எனப் பல வகையான வண்ணப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. அழகு மயில் பறப்பது ஓரழகு, தோகை விரித்தாடும்போது காண்போர் எல்லாம் மெய்மறந்து மகிழும் அளவுக்குப் பேரழகு கொண்டு விளங்குவது முருகனின் மயில் வாகனமாகும்.

    மயிலின் வேறு பெயர்கள்

    அழகு மயிலுக்கு மயில், மஞ்ஞை, மயூரம், தோகை, கேயகம், கேதாரம், சிகண்டி, சிகி, பிணிமுகம் போன்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.

    மயிலை வாகனமாகக் கொண்டுள்ள முருகப்பெருமானுக்கு மஞ்ஞையன், மயிலோன், மயில்வாகனன், மயில்சாமி, மயூரேசன், சிகிவாகனன் என்றும் பெயர்கள் உள. முருகனுடன் சார்ந்து மயிலுக்கும் உயர்வு தருகின்ற பெயராகும் எனத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறியுள்ளார்.

                            “தரகன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம்….”    (திருமுருகாற்றுப்படை, 210)

    முருகன் மயிலை வாகனமாகக் கொண்டதற்குக் காரணம் சூரபதுமன் முருகனுடன் முரண்பட்டுப் பல மாய முறைகளில் முனைப்புடன் முயன்று போரிட்டு அவனை வெல்ல முடியாமல் திகைத்து நின்று முடிவில் ஒரு மாமரமாக நின்றான். அப்போது முருகன் தன் வேலால் அம் மரத்தை இருகூறுகளாகப் பிளந்தான். அதன் ஒரு கூறுதான் மயிலாயிற்று. இவனே மயில் வாகனன். மற்றொரு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தி நிற்கின்றான். சேவற்கொடியோன் என்றும் முருகன் அழைக்கப்பட்டான்.

    அறுபடை வீடும் முருகப்பெருமானும்

    முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்களில் முக்கியமானவை ஆறுதலங்களாகும். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினங்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய இடங்களில் தங்கித் தன்பால் வருபவர்களுக்கு அருள் செய்து பக்தர்களுக்கு இறையின்பம் தருபவர் முருகப்பெருமான். ஆறு தலங்கள் ஆறுபடை வீடுகளாகும். முதல் படைவீடு திருப்பரங்குன்றம்.

    திருப்பரங்குன்றம்

    மதுரையில் இருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. இக்கோயில் மலை அடிவாரத்தில் உள்ளது. மலையைக் குடைந்து செதுக்கப்பட்ட சிற்பங்கள் அழகுறத் திகழ்கின்றன. இங்கு முருகன் வடக்கு நோக்கி அமைந்த வண்ணம் காட்சியளிக்கின்றான். இங்ஙனம் வழிபடுபவர்க்கு அருள்வதற்காகத் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கிறார். இத்திருப்பரங்குன்றம் நீர்வளமும் நில வளமும் நிறைந்தது. இங்குள்ள மக்கள் முருகப் பெருமானின் அருளால் எல்லா வளமும் பெற்றுச் செழிப்புற இன்பமுற வாழ்கின்றனர் என்பதை நக்கீரர் வண்டுகளை உவமையாகத் தாமரைப் பூவில் துயில்கின்ற வைகறையில் நெய்தல் பூவிலுள்ள தேனையருந்திப் பகலவன் தோன்றியபின் சுனைமலரின்கண் ஆரவாரிக்கும் என நிலவளத்தின் பெருமையை இங்குத் திறம்பட விளக்கியுள்ளார்.

    திருச்சீரலைவாய்

    திருநெல்வேலியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் அமையப்பெற்றுள்ளது. இதன் பழமையான பெயர் செந்தில் ஆலைவாய் என்பர்.

                            “சீரலைவாய் உறைசெந்தில் நாதன்”                           (திருமுருகாற்றுப்படை)

    ஓங்கி உயர்ந்த மலையின்மேல் ஆறுமுகங்களோடும் பன்னிரு கரங்களோடும் முருகன் வீற்றிருக்கின்றார். ஆறு முகனின் தோற்றத்தைத் திருமுருகாற்றுப்படையில் அழகுற விளக்குகிறார். இவ்வுலகம் அறியாமை என்னும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அதனை ஒளியுடையதாக ஆக்க வேண்டும் என்ற அருளால் குமரனின் ஒருமுகம் அறிவாகிய ஒளிக்கதிர்களைப் பரப்பி அந்த ஒளியின் எல்லைக்குள் வந்தவர்கள் அறியாமை என்னும் பேரிருளிலிருந்து விலகி ஞான ஒளியை அடைவார்கள் என்பதை நக்கீரர்

                            “மாயிருள் ஞானம் மறுவின்றி விளங்கப்

                            பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்”                     (திருமுருகாற்றுப்படை, 91-92)

    என்றும்

    மேலும்

                            “ஆர்வலர் ஏத்த அமர்த்தினிது ஒழுகிக்

                            காதலின் உவந்து வரம்கொடுத்தன்று”         (திருமுருகாற்றுப்படை, 94-95)

    முருகப்பெருமானிடம் அன்பர்கள் எவ்வளவு அன்புடன் ஈடுபாட்டுடன் திகழ்கின்றார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு எல்லா வளங்களையும் அருளுகின்றான் என்பதை நக்கீரரின்வழி திருமுருகாற்றுப்படையில் காணமுடிகின்றது.

    திருவாவினன்குடி

    திருவாவினன்குடியும் பழனியும் வெவ்வேறான அடுத்தடுத்த இரண்டு தலங்களாகும். பழனி மலையின் அடிவாரத்தில் இருப்பது திருவாவினன்குடி. மிகப் பழமை வாய்ந்த தலம். இக்கோயிலை வேள்குலத்தில் தோன்றிய ஆவி என்பவன் அரசாண்டான். அவனது ஆட்சிக்கு உட்பட்ட எல்லா ஊரும் திருஆவினன்குடி. இப்பெயர் ஆவினன்குடி என்று மாறியது. பழனியைச் சுற்றி இருக்கின்ற பகுதியைத் திருஆவினன்குடி என்று அழைப்பர்.

    திரு-ஆ-இனன்-கு-டி என்று பிரித்துத் திருமகள்-காமதேனும்-ஞாயிறும்-நிலம்-தீக்கடவுள் என அனைவரும் வழிபட்ட தலம் என்று புராணங்களும் சான்றோர்களும் குறிப்பிடுகின்றனர். ஆவினன்குடியில் முருகனைக் காண அடியவர்கள் மட்டும் வரவில்லை. முனிவர், தேவர்கள், திருமால், சிவபெருமான், இந்திரன் போன்றோர்களும் காண வந்தார்கள் என்றும் குறையிருந்தவர்களுக்கு அருளுவதற்காகத் தெய்வானையுடன் திருவாவினன்குடியில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ளார்.

    திருவேரகம்

    முருகனின் நான்காம் படைவீடு மிக அழகுடைய ஊர் ஏரகம். ஏரகம் என்பது எந்தத் திருத்தலம் என்பதில் கருத்து வேறுபாடு அனைவருக்கும் உண்டு. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்று, ஏரகம் நீங்கா இறைவன் என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

                            “சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்று

                            ஏரகமும் நீங்கா இறைவன்”                                                                     (சிலம்பு)

    “ஏரக வெற்பனும் அற்புத மிக்க சுவாமிமலைப்பகுதி”

    என்பது அருணகிரிநாதரின் அருள்வாக்கு. அந்த அருள்வாக்கினால் சுவாமிமலை என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. சிவபெருமான் பிரணவ மந்திரப் பொருளைக் கேட்க முருகன் தந்தைக்கு உபதேசம் செய்து குருவாகவும் தகப்பன் சாமியாகவும் சுவாமிநாதனாகக் காட்சியளிப்பது சுவாமிமைலை எனும் திருவேரகமாகும் என்று அருணகிரியார்

                            “அருணதள பாத பத்மம் அனுநிதமுமே துதிக்க

                            அரியதமிழ் தானளித்த மயில்வீரா

                            அதிசமய் அநேகமுற்ற பழநிமலை மீதுதித்த

                            அழகு திருவேரகத்தின் முருகோனே”                                       (அருணகிரியார்)

    முருகப் பெருமானின் பெருமைகளைப் பாடுகிறார். மேலும் இறைவனை எவ்வாறெல்லாம் வழிபட வேண்டும் என்பதை நக்கீரர்

                            “ஆறெழுத்தடங்கிய அருமறைக் கேள்வி

                            நாஇயல் மருங்கில் நவிலப்பாடி”                  (திருமுருகாற்றுப்படை, 186-187)

    சரவணபவநம, குமாராய என்ற ஆறெழுத்து மந்திரங்களை அந்தணர்கள் ஓதுகின்றனர். நாஇயல் மருங்கில் நாவில்பாடும் ஓதும்போது பிறரின் காதில்விழாதபடி மெதுவாக ஓத வேண்டும். இறைவனை நாம் வணங்கும்போது இறைவனிடம் மனம் உருகி வழிபடுவோம். அவை மற்றவர்கள் காதில் விழும்போது அவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதற்காக நக்கீரர் தன்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

    குன்றுதோறாடல்

    குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன். குன்றுகள் அனைத்தும் அவன் வீற்றிருக்கும் தலங்களாகும். அவ்விடங்களில் குறவர்கள் அதிகமாக வாழ்ந்தனர். குறவர்கள் முருகனை வேலன் என்று அழைத்தனர். ஒவ்வொரு குன்றிலும் வாழ்பவர்கள் குரவைக்கூத்தாடி மகிழ்வார்கள். அங்கு வேலை வைத்து ஆடுகின்ற பூசாரியும் இருப்பான். அப்பூசாரி வேலன் என அழைக்கப்படுவான். அவ்வேலன் தலையில் கண்ணி அணிந்துள்ளான். அக்கண்ணி பச்சிலைமாலைக்குள் சாதிக்காயையும் தாக்கோல காயையும் காட்டு மல்லிகை மலர்களையும் வெண்மையான கூதாள மலர்களையும் சேர்த்துக் கட்டிய தலை மாலையை அணிந்து மக்களுக்குக் காட்சியளிக்கின்றான்.

    பழமுதிர் சோலை

    பழமுதிர் சோலை முருகனின் ஆறாம்படை வீடாகும். இங்கு உயரமான மலைகளிலும் பசுமையான செறிந்த சோலைகள், காடுகள் போன்றவற்றில் முருகன் விரும்பி வீற்றிருக்கின்றான். வழிபாட்டிற்கு என்று இடங்கள் ஒன்றும் இல்லை. மனம் உருகி நாம் எங்கு இறைவனை நினைக்கின்றோமோ அங்கெல்லாம் காட்சியளிப்பான் என்று நக்கீரர் குறிப்பிடுகிறார்.

    வழிபாட்டிடங்களால் ஏற்றத்தாழ்வு ஒன்றுமில்லை. அன்பொன்றே வேண்டப்படுகிறது. அடியவர் இருக்கும் இடம் தேடிவந்து முன்னின்று அருள்புரிவான் என்று அவனுடைய எளிமையை விளக்குவதாகப் பழமுதிர்சோலை அமைந்துள்ளது. குறிஞ்சி நிலப்பகுதியில் அமைந்த முருகன் குன்று தோறாடல் ஐந்தாம் படைவீடாகும். குறிஞ்சி, முல்லை நிலப் பகுதியில் மரம், செடி, கொடிகள் செறிந்த சோலைகளில் அமைந்த முருகன் கோயில் பழமுதிர்சோலை என்ற ஆறாம் படைவீடாகக் காட்சியளிக்கிறது.

    முடிவுரை

    திருமுருகாற்றுப்படையில் முருகனின் தோற்றம், திருவடிப்பெருமை, திருமேனியின் பெருமை, வேலனும் வேலும் வாகனம், மயிலின் வேறு பெயர்கள், அதன் சிறப்புகள் மற்றும் முருகனின் ஆறுபடை வீடுகளும் அவை அமைந்துள்ள இடங்களையும் விவரித்துரைப்பதாய் இவ்வாய்வுக் கட்டுரை அமையப்பெற்றது.

    துணைநூற்பட்டியல்

    சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன்

    1. இலக்கியங்களில் முருகன் – டாக்டர் டி. செல்வராஜ்
    2. கந்தபுராணம் – கி.வா.ஜ அவர்களால் கந்தவேள் கதையமுதம் எனும் தலைப்பில் எழுதப்பெற்ற இந்நூலின் முதற் பதிப்பு
    3. சங்க இலக்கியம் எட்டுத்தொகையின் மூலம் உரையும் – ச.வே.சுப்பிரமணியன்
    4. திருக்குறள் – நாமக்கல் கவிஞர் உரை.

     

    Share
  • நாஞ்சில் நாடனின் தமிழ்த் திரையுலகம் குறித்தான அங்கதப் பதிவுகள்

    எஸ். சாகுல் ஹமீது, முனைவர் பட்ட ஆய்வாளர் (ப. நே), தமிழாய்வுத் துறை, மா.மன்னர்கல்லூரி, புதுக்கோட்டை

    நாஞ்சில்சாடன் தாடகைமலைச் சாரலில் பிறந்தவர். நாஞ்சில் நாட்டுப் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், சொலவடைகள், மனித மனங்கள் போன்றவற்றைத் தம் படைப்புகளுள் நெருக்கமாக அமைத்து, நாஞ்சில் மணம் கமழ எழுதும் எழுத்தாளர் ஆவார். இவரின் சிறுகதைகள், நாவல்கள்,கட்டுரைகள் ஆகியவற்றில் மெல்லிய அங்கதச் சுவை காணப்படுகிறது.

    அங்கதம் என்பது ஒரு இலக்கிய உத்தி. பழைய இலக்கியங்களில் பயன்படுத்தப் பெற்ற இந்த உத்தி நாஞ்சில் நாடனால் பெரிதும் எடுத்தாளப்பெறுகிறது. பழிகரப்பு அங்கதம், செம்பொருள் அங்கதம் என்ற  இரு நிலைகளில் இவ்வுத்தி பயன்படுத்தப்பெற்றுள்ளது. ஒரு சொல் பிரித்தால் ஒரு பொருளையும், பிரிக்காமல் இருக்கும் நிலையில் ஒரு பொருளையும் தந்தால் அது பழிகரப்பு அங்கதம் ஆகும். எவ்விதப் பிரிப்பும் இன்றி ஒரே சொல் இரு பொருள் நிலைகளைத் தந்தால் அது செம்பொருள் அங்கதம் ஆகும்.

    இந்த அங்கதச் சுவை கேலி செய்வது என்ற நிலையிலிருந்துச் சற்று மேம்பட்டது. கேலி பேசுவது என்பது உறவு முறைக்காரர்கள்,  உறவு முறையாக அமையத்தக்கவர், ஒத்த நிலையில் பழகியவர்கள் ஆகியோருக்கு இடையில் நிகழ்த்தப்படம் நகைப்பிற்குரிய உரையாடல் ஆகும். இந்நிலையில் இருந்துச் சற்று மேம்பட்டு,  சமுதாயத்தை விமர்சிக்கும் பாங்கு அங்கதமாகின்றது. இந்த விமர்சனப் பாங்கு சற்று கடுமையான தொனிப் பொருளை உள்ளடக்கி இருக்கும். இதன் ஆழம் மெல்ல மெல்ல உணரத்தக்கதாக இருக்கும்.  சமுதாயத்தை நேர்படுத்துகிற கண்டனக் குரல் அங்கதமாகின்றது.

    மனித குறைபாடுகளை எள்ளி நகைப்பதே அங்கதம். அங்கதத்தில் தாக்குதலும் நகையும் இணைந்தே இருக்கும். (http://encyclopediatamilcriticism.com/ankatham.php)  என்பது அங்கதத்திற்குத் தரப்படும் விளக்கம் ஆகும். இலக்கிய வகைகளுள் ஒன்றாக விளங்கும் புதுக்கவிதைகளில் அங்கதச் சுவை குறிக்கத்தக்க இடம் வகிக்கின்றது.

     தொல்காப்பியம் காட்டும் அங்கத இலக்கணம்

    ‘‘அங்கதந்தானே அரில் தப தெரியிற்

    செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே” (தொல்காப்பியம். செய்யுளியல், 120)

    என்ற நூற்பாவில் அங்கதத்தின் இருவகைகள் சுட்டப்பெறுகின்றன. அவை செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் ஆகியனவாகும்.

    செம்பொருள் அங்கதம் என்பதை   ‘‘செம்பொருளாயின் வசை எனப்படுமே” (தொல்காப்பியம், செய்யுளியல், 121) என்று வரையறை செய்கிறார் தொல்காப்பியர். பழி கரப்பு என்பதை ‘‘ மொழி கரந்து மொழியின்  அது பழிகரப்பாகும்” (தொல்காப்பியம், செய்யுளியல் 122) என்று காட்டுகிறார் தொல்காப்பியர்.

    தான் சொல்லவந்த வசை தொடர்பான கருத்தை நேரடியாகச் சொல்வது செம்பொருள் அங்கதமாகின்றது. சற்று மறைவாகச் சொல்வது பழிகரப்பு அங்கதமாகின்றது.

    ஜெயமோகன்  நாஞ்சில் நாடனின் அங்கதப் பயன்பாடு பற்றிப் பின்வருமாறு கருத்து தெரிவிக்கிறார். ‘‘ பகடி , அங்கதம் இரண்டும் ஆசிரியன் வந்தேயாகவேன்டிய கதைவடிவுகள்.அல்லது ஆசிரியன் அதற்குள் ஒரு கதாபாத்திரமாக வேடம் புனைந்து வரலாம். நாஞ்சில்நாடனின் அங்கதக்கதைகளில் நேரடியாகவே ஆசிரியன் பேசுகிறான். கும்பமுனி வரும் கதைகளில் கும்பமுனியே நாஞ்சில்நாடனாகப்பேசத்தொடங்குகிறார்” என்கிறார். (https://www.jeyamohan.in/48709#.WzVdLNUzbIU)

    பழிகரப்பு அங்கதம் என்ற தலைப்பிலேயே ஒரு சிறுகதையைச் சூடிய பூ சூடற்க என்ற தொகுப்பில் நாஞ்சில் நாடன் எழுதியுள்ளார். இதன் காரணமாக அவர் அங்கதச் சுவையின் இலக்கணப் பராம்பரியம் அறிந்தே அதனைத் தன் படைப்புகளில் பயன்படுத்தி வருகிறார் என்பதை உணரமுடிகின்றது. ‘‘திட்டமிட்டதற்கு மாறாக இந்த இடத்தில் கதையை நிப்பாட்டிக் கொள்ளவே தோன்றுகிறது. இக்கணத்தில் சில சமயங்களில் உண்மை, புனைவு போல் எதிர்ப்பட்டு பரிகசித்துச் சிரிக்கிறது. இனிமேல் எழுத நேரும் வரிகளில் பழி கரந்து உறைகிறதென்பதும் யானறிவேன். ஆனால் உண்மையை எருமைச் சாணத்தில் பொதிந்து வைக்க இயலுமா?” என்று (சூடிய பூ சூடற்க,ப.142) பழிகரப்பு அங்கதம் எழுதுகிறார் நாஞ்சில் நாடன். பரிகசித்துச் சிரித்தல், பழிகரந்து உறைதல் போன்றனவே நாஞ்சில் நாடன் அங்கதம் பற்றிக் கொண்டிருந்தப் புரிதல்கள் ஆகும்.

    மேற்கருத்தின் வாயிலாக அங்கதச் சுவை கலந்து எழுதுவதில் தனித்த இடம் பெற்றவர் நாஞ்சில் நாடன் என்பது கருத்தளவாலும் பயன்பாட்டளவாலும் தெரியவருகிறது. இவரின் கான்சாகிபு கதைகள்  என்ற சிறுகதைத் தொகுப்பு பதினேழு கதைகளை உள்ளடக்கியது. இதனுள் பல்வேறு அங்கதக் கருத்துகள் எடுத்தாளப்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள அஷ்டவக்ரம் என்ற சிறுகதை அளவுக்கு அதிகமான எள்ளல் சுவையுடன் விளங்குகிறது. குறிப்பாகத் திரைப்படத்துறை,  திரைத்துறை சார்ந்த அரசியல், திரைத் துறை சார்ந்த ரசிகர்கள், நடிகர்கள் ஆகிய பகுதிகளை இக்கதை அங்கத்துடன் நோக்குகின்றது. அவற்றை மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

    திரைப்படத்துறை குறித்தான அங்கதம்

    கான்சாகிபு கதைகள் தொகுப்பில் அமைந்துள்ள ஒரு கதை அஷ்டாவக்ரம் என்பதாகும். இது தற்காலத்தின் திரைப்பட நிலையை விமர்சிக்கும் போக்கில் வரையப் பெற்ற கதையாகும்.

    ‘‘ஆனால் அஷ்டாவக்ரம் எனும் தலைப்பில் கும்பமுனி எனும் மூத்த தமிழ் எழுத்தாளனாகிய யான் இங்கு எழுத வரும் இந்த வியாசம் ‘அஷ்டவக்ரம் ’ எனும் பெயரில் வெளியாகியுள்ள அதிநவீனத் தமிழ்ச் சினிமா பற்றியது” (கான்சாகிபு கதைகள்,ப.58) என்று இந்தச் சிறுகதை விமர்சனப் போக்கில் தொடங்குகிறது. தமிழ்த் திரையுலகின் ரசிகனின் மனப்பாங்கினை எள்ளல் சுவையுடன் இக்கதை வழங்குகிறது.

     திரைத் துறை நடிக நடிகையர்கள் குறித்தான அங்கதம்

    திரைப்படத்துறையினருக்கு இருக்கும் அரசியல்  ஈடுபாடு குறித்து இக்கதை விமர்சிக்கிறது.

    ‘‘ஏற்கனவே சினிமாக்களில் நாயகர்களாக நடித்து இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இருபத்தைந்து முதல் எழுபத்தைந்து வரை வயதானவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் நாற்காலி எதிர்காலத்திட்டமாக இருந்தது. தலைக்கு ஐந்தாண்டுகள் என முன்பதிவு செய்து வைத்தாலும் 37 X 5 = 185 ஆண்டுகள் வரை பொற்றமிழ் நாட்டுக்கு முதலமைச்சருக்கு ஆள் தட்டுப்பாடு கிடையாது” (கான்சாகிபு கதைகள்,ப.62) என்ற பகுதியில் திரைத்துறைக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு எள்ளல் சுவைபடக் காட்டப்பெற்றுள்ளது.

    மேற்சொன்ன கருத்து இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் சிறுகதைக்குள் காட்டப்பெற்றுள்ளது. இந்தக் கதையின் நடப்பினை இன்றைய தமிழகம் அனுபவித்து வருகிறது என்பது குறிக்கத்தக்கது.

    ‘மேலும் நாயகர் தம் வாரிசுகள் குறுக்குச்சால் ஓட்டுவார்கள். அல்டிமேட் ஸ்டார், சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், உலக நாயகர், யுனிவர்சல் ஸ்டார், புரட்சித் தளபதி, மக்கள் நாயகன், புரட்சித் தமிழன், பிரபஞ்ச நாயகன், ஐ. நா. நாயகன் என ரேஷன் கடை வரிசைபோல் நீண்டு கிடப்பதனால் பிரபஞ்ச நாயகன் பாரதப் பிரதமர் கனவில் இருந்தார். விரைவில் தகர, மகர, நகர எழுத்துக்களில் கட்சி ஒன்று துவங்கப்பெறும் என்றும் கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களைக் கொண்ட கொடி ஒன்று வரைவாகிக் கொண்டிருக்கிறது என்றும் சொன்னார்கள்.” (கான்சாகிப் கதைகள், ப.63) என்ற விவரிப்பு தற்காலத்தில் கட்சிக்கான பேரையும், கொடியையும், இலட்சினையையும், இலக்குகளையும் தேடித் தேடித் தர முயலும் முன்னணி நடிகர்களின் இயல்பினைக் கேலி செய்வதாக உள்ளது. நடிகர்களின் வயது 25 முதல் 75 வரை என்பது நடப்பில் எழுபத்தைந்தையும், திரையில் இருபத்தைந்தையும்  குறிப்பதாகக் கொள்ளத்தக்கது.

    நடிகைகளின் திறம் பற்றியும் இக்கதை விமர்சிக்கிறது. ‘‘எட்டுக் கோணல் வேடங்களுக்கும் இணையாக வந்து புட்டம் ஆட்டி, தனங்கள் குலக்கி, தொடைகள் தட்டி, அல்குல் தைவரல் செய்து நடிப்பில் சிகரங்களைத் தொட்ட இஷ்டகாமி அஷ்ட நாயகிகளின் அட்டைப் படம் போடாத பருவ இதழ்கள் இல்லை எனவாயிற்று. பார்த்துப் பரவசம் கொண்டு திவ்ய தேசத்து மொழியில் ஜொள் எனப்படும் திரவம் ஒழுகி மக்கள் வாய் வறண்டு போனார்கள்” (கான் சாகிபு கதைகள், ப.61) என்ற இந்த படைப்புப் பகுதியில் நடிகைகளின் நடிப்புத்திறன் அங்கதமாக்கப்பெற்றுள்ளது.

    இவ்வாறு திரைப்படத்துறையின் நடிக நடிகைகளின் செயல்பாடுகள் இச்சிறுகதைக்குள் எள்ளல் தொனியில் விளக்கப்பெற்றுள்ளன.

    ரசிகன் குறித்தான அங்கதங்கள்

    அஷ்ட வக்ரம் என்ற கதையில் அ்திக அளவில் ரசிகனின் செயல்பாடுகள் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பெற்றுள்ளன. இதன் வழியாகத் தமிழத்தின் திரையுலக ஆசை, பைத்தியம் குறையாத என்ற ஏக்கத்துடன் நாஞ்சில் நாடன் இந்தக் கதையைப் படைத்துள்ளார்.

    ‘‘பிரபஞ்ச நாயகன் நற்பணி மன்றம் ஒன்று நற்பணி ஆவத புதுப்படம் வெளியாகும்போது மொத்தமாகச் சீட்டுகள் வாங்கி மூன்று மடங்கு விலைக்கு விற்பது – அறிவித்தது.அஷ்டவக்கிரம் நடக்கும் கொட்டகையில் எந்தத் தாயாவது பிரசவித்தால் குழந்தைக்கு ஆண் என்றால் அஷ்டவக்கிரன் என்றும் பெண் என்றால் அஷ்டவக்கிரி என்றும் பெயர் சூட்டப்படும் என்றும் பிரபஞ்ச நாயகன் முத்திரை போட்ட பத்துப்பவுன் சங்கிலி ஒன்று பரிசாக வழங்கப்படும் என்றும் அவர்கள் பருவ வயது எய்தும்போது பிரபஞ்ச நாயகன் படத்தில் ஆண் எனில் வில்லனாகவும், பெண் எனில் நாயகியாகவும் நடிப்பர்” (கான் சாகிபு கதைகள், ப.62)என்ற ரசிகர்மன்றங்களின் மனப்பாங்கினை விவரிக்கும் பகுதி இன்றைய தமிழகத்தின்  திரைப்பட ரசிப்புத் தன்மையை இனம் காட்டுவதாக உள்ளது.

    குழந்தை பிறந்து வளர்ந்து ஆளாகும் நிலை வரை நடிகர் வயது ஏறாமல் நடித்துக் கொண்டிருப்பார், ரசிகர்களும் அலுக்காமல் பார்த்துக்கொண்டிருப்பர் என்ற நம்பிக்கை நடிகரின் நிலைப்புத்தன்மையின் மீது வைக்கப்படும் விமர்சனமாகின்றது.

    திரைப்படம் காண்பதற்கும் சமுக அடிப்படையில் சதவீத நிலையில் பாகுபாடுகள் வகுக்கப்படுவதாகவும் கற்பனை செய்கிறார் நாஞ்சில் நாடன். இது தற்கால நிலையில் வேலை வாய்ப்பிற்கு வைக்கப்படும் சமுதாயச் சுழற்சி முறையை எள்ளல் செய்கின்றது.

    ‘‘மேலும் கொட்டகைகளில் இருக்கைகள் பிற்படுத்தப்பட்டவருக்கு அறுபத்தொன்பது சதவீதமும், பிற்படுத்தப்பட்டவருக்கு முப்பத்தி ஒன்று சதவீதமும், அவர்களுக்குள் பெண்களுக்கு முப்பத்துமூன்று சதவீதமும் இஸ்லாமியருக்கு ஐந்து சதவீதமும் கிறித்தவருக்கு மூன்ற சதவீதமும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை கூறியது. கிரீமி லேயர என்றழைக்கப்பட்ட பத்துப் பேருக்கு உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி, பிரதம மந்திரி, ஜனாதிபதி, ஆளுநர், முதலமைச்சர், மத்திய காபினட் அமைச்சர், ஆண்டுக்கு இருபத்தைந்து கோடிக்கு மேல் வருமான் உடையவர் ஆகியோருக்கு முன்பதிவுக் கட்டணம் தரப்படமாட்டாது என சமுகநீதி வழங்கினர். ஐம்பது கோடிக்குக் கீழே உள்ளவரைப் பிற்படுத்தப்பட்டவர் என அறிவிக்க வேண்டும் என்று ரிட் மனு ஒன்றும் தாக்கலாகிறது”( கான்சாகிபு கதைகள், பக் 63-64) என்ற பகுதி தற்போதைய நிலையில்  வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையை விமர்சிப்பதாக உள்ளது.

    புதுமணத் தம்பதியர்கள் அஷ்டவக்கிரம் பார்த்துக்கொண்டே  முதலிரவினையும் கொண்டாடும் வசதி தமிழகத்துப் பெருநகர் ஒன்றில் செய்துதரப்பட்டுள்ளதாக இக்கதை விவரிக்கின்றது.  ‘‘கொட்டகைகள் பெருந்த சேலம் மாநகரில் புதுமணத் தம்பதியர் அஷ்ட வக்கிரம் பார்த்துக்கொண்டே முதலிரவும் கொண்டாடும் விதத்தில் இரண்டும் எங்ஙனம் ஒரே நேரத்தில சாத்தியம் என்று தெரியவில்லை.  புத்தம் புதுத் திரையரங்கு ஒன்றில் குளிர்சாதன கேபின் ஒன்று நிர்மானிக்கப்பெற்றுள்ளது என்றும் முன்பதிவு உண்டென்றும் கட்டணம் மூவாயிரம் ரூபாய் ஒரு காட்சிக்கு என்றும், பாத்ரூம் வசதி உண்டென்றும், மெத்தை விரிப்பு, தலையணை உறை, போர்வை தனிக்கட்டணம் என்றும் இனிப்புகள், பால், பழங்கள், மலர்ச்சரங்கள், ஆணுறை, கிரீம் அவரவர் செலவென்றும் சொன்னார்கள். ஆனால் கண்டிப்பாக மதுபானங்கள் தவிர்க்கப்பட வேண்டும்” (கான்சாகிபு கதைகள், ப.65) என்று விளம்பரப்படுத்தபட்டிருந்த நிலையைக் கதை காட்டுகிறது. படைப்பாளரின் படைப்புத் திறம் இவ்வாறு புதிய புதிய காட்சி அரங்கேற்றங்களைச் சமுதாயத்திற்கு முன்மாதிரியாகச் செய்து வைக்கிறது என்பது இவற்றின்வழி அறியவருகிறது.

    இன்னமும் இந்த ரசிகர்களை விமர்சிக்கும் போக்கு நீள்கிறது. ‘‘படம் வெளியான பத்துநாட்களில் கொட்டகையினுள் நுழைபவருக்கு, ஆண் எனில் வலது மார் காம்பிலும், வெண் எனில் இடது முலைக்காம்பிலும் காது குத்துவதுபோல் வலிக்காமல் வளையம் அணிவித்து விடுகிறார்களாம். எனவே முதல் பத்து நாட்களுக்குள் படம் பார்த்தவர்கள் இரண்டாம் முறை பார்த்தார்கள். இல்லாவிட்டாலும் பார்க்கப்போகிறார்கள்” (கான்சாகிபு கதைகள், ப.64) என்ற பகுதி ரசிகர்களில் உடல்களிலும் அடையாளங்கள் செய்யப்படும் அல்லது ஏற்கப்படும் அவலத்தைக் காட்டுவதாக உள்ளது.

    மொத்தத்தில் திரைப்பட மோகத்தின் காரணமாக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழக்கும் கேவல நிலைக்குத் தமிழக ரசிகர்கள் ஆளாகிவிட்டனர் என்பதை இக்கதை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

    படைப்பாளன் குறித்தான அங்கதம்

    திரைப்படத்தின் மையம் கதையாகும். இந்தக் கதைக்கு உரிய படைப்பு நிலைப்பட்டவரை கதையாசிரியர் என்று திரைத் துறை அழைத்துக் கொள்கிறது.  அஷ்டவக்கிரம் கதை தன் கதையைத் தழுவி எழுதப்பெற்றது என்று ஒரு எழுத்தாளர் நீதி மன்றம் செல்கிறார்.

    ‘‘மேல்போக்கு எழுத்தாளர், சிறுகதைச் செம்மல், தான் அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சிறுகதை ஒன்றைத் தழுவியே அஷ்டவக்கிரம் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும்  எனவே தமக்கு நூற்று நாற்பத்து எட்டு கோடி ரூபாய் நட்ட ஈடு தரவேண்டும் என்றும் உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு உடனடியாகத் தள்ளுபடி ஆனது. படத்தின் மூலக்கதை, திரைக்கதை, உரையாடல், பாடல்கள்,இசை, ஒளி ஓவியம், படத்தொகுப்பு, ஒப்பனை, நடன இயக்கம், சண்டைப்பயிற்சி, இயக்கம், தயாரிப்பு, இத்தனையம் செய்த பிரபஞ்ச நாயகன் தரப்பு வழக்கறிஞர் வைத்த ஒரே ஒரு வாதம், ‘திருடுவது தமிழ் சினிமாக்காரர்களின் குலத்தொழில், தொழில் தர்மம், அதில் தலையிட உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், மாநிலங்கள் அவை, மக்களவை, ஐநா சபை உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் அதிகாரம் இல்லை என் பதை அரசியல் நிர்ணயச் சட்டம்தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது” (கான்சாகிபு கதைகள்,பக் 65-66) என்ற பகுதி படைப்பாளர்களைத் திரையுலகம் காணும் முறையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

    இவற்றை விமர்சனம் செய்யும் கும்பமுனி ஒரு நாள் தன் கனவில் பிரபஞ்ச நாயகனின் சொகுசுக் கார் தன் வீட்டிற்கு அருகில் நிற்பதாக உணர்கிறார். அடுத்தப் படத்திற்கான கதை விவாதத்திற்காக பிரபஞ்ச நாயகன் வந்திருப்பதாகக் கருதுகிறார் கும்பமுனி.

    எது வேண்டாம் என்று விமர்சிக்கிறமோ அதன் அருகில் நாமே சென்று விழுந்துவிடுகிறோம் என்ற மனப்பாங்கில் இக்கதை செய்ப்பட்டுள்ளது.

    இருப்பினும் உண்மையான படைப்பாளனுக்கு உரிய இடம் திரைத்துறையில் இல்லை என்பதை இக்கதை சொல்லாமல் சொல்கிறது.

    இவ்வாறு அஷ்ட வக்ரம் என்ற கதை, எட்டுக்கோணல் நிலையில் திரைத்துறையையும், அதன் தொடர்புடைய அரசியலையும், ரசிக மனப்பாங்கினையும், நடிக நடிகையரின் செயல்பாடுகளையும், படைப்பாளனின் விதியற்ற நிலையையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது.

    Share
  • பிற்காலச் சோழர்காலத் தமிழகச் சைவத்தில் இராசராசன் புகுத்திய புதுநெறி

    க. கதிரவன், துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், அரசுக்கல்லூரி, சித்தூர்,பாலக்காடு .

    இக்கட்டுரையின் கருதுகோள் :

    முதலாம் இராசராச்சோழன் தமிழகச் சைவசமயத்தில் புதுநெறியினைப் புகுத்தி தமிழ்ச்சைவத்தின் மறுமலர்ச்சிக்கு காரணமாய் அமைந்துள்ளான்.

    முன்னுரை

    முற்காலச்சோழர்கள், பிற்காலச் சோழர்கள் என சோழ அரசர்களை இருபிரிவாகப் பிரிப்பர்.

    முற்காலச் சோழர்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் ஆட்சிசெய்தவர்கள். ஆயினும் அக்காலத்தில் தமிழகம் முழுதும் தனதாக்கிப் பேரரசாய் ஆண்ட சோழப்பேரரசர்கள் யாரும் இல்லை எனலாம்.

    காந்தமன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன், உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி, கரிகாலன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான், போரவைக் கோப்பெருநற்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, நெடுங்கிள்ளி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், செங்கணான், நல்லடி என சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் சோழமன்னர்களும் முற்காலச் சோழர்களாக அறியப்படுகிறார்கள்.

    இச்சோழமன்னர்களுக்குச் சான்றாக சங்க இலக்கியங்களும், சங்கத்திற்குப் பிறகான இலக்கியங்களும் மட்டுமே அமைகின்றன. இச்சோழமன்னர்கள் காலத்தில் வாழ்ந்தவனும் இன்றைய தர்மபுரிப்பகுதியை அதாவது அன்றைய தகடூரை ஆண்ட குறுநிலமன்னனுமான அதியமானுக்குக் கிடைத்ததைப்போல கல்வெட்டுச் சான்று ஏதும் கிடைக்கவில்லை. கிமு மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட மகதப் பேரரசன் அசோகனின் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் தென்னக வேந்தர்களுள் சோழர்களும் உண்டு. அசோகன் காலத்துக்கும் முந்தியதாக கருதப்படும் வால்மீகி இராமாயணத்திலும் வியாச பாரதத்திலும் சோழர்கள் பற்றிய குறிப்பு காணப்படுவதாக தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.[1]

    சோழர்களின் சமயம்

    முற்காலச் சோழர்களின் சமயம்சைவம்

    இந்திய மன்னர்கள் தங்கள் குலத்தை சூரிய குலம், சந்திரகுலம், அக்னி குலம் எனக் குறித்துக் கொள்வதனைக் காணமுடிகிறது. இராமாயணத்தில் குறிப்பிடப்படும் தசரதன், இராமன் ஆகியோர் சூரிய குலத்தவர் என்பர். தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்கள் முறையே அக்னி சூரிய சந்திர குலத்தவர்களாகத் தங்களைக் குறித்துக்கொள்வர்.

    எனில் விஷ்ணுவின் அவதாரமாகிய இராமனது சூரிய குலத்தோடு தங்கள் மரபினைப் பிணைத்துக்கொள்ளும் சோழர்கள் வைணவர்களாக இருக்கவேண்டும் என ஊகிக்கலாம். பிற்காலச் சோழர்களில் ஆதித்தச் சோழனின் வேறுபெயராக கோதண்டராமன் என்னும் பெயர் வழங்கியமையை இதற்குச் சான்றாகவும் கூறலாம்.

    இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்னும் சோழமன்னன் பெயரடை கொண்டு நோக்கும்போது வைதிகர்கள் எனவும் முற்காலச் சோழர்களை வகைப்படுத்தலாம்.

    ஆனால் முற்காலச் சோழர்கள் சைவர்கள் என விளக்கவும் இடமுண்டு.

    பாண்டியர்கள் சோமசுந்தரப் பாண்டியனைத் தங்கள் குலமுதல்வனாகக் காட்டுவது போல சோழர்களும் சிவபெருமானைத் தங்கள் குல முதல்வர்களில் ஒருவராகக் காட்டுகின்றனர். முப்புரம் எரித்த கதை சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. முப்புரங்கள் என்பன வானத்தில் பறந்து திரிந்த மூன்று கோட்டைகள் என அக்கதை கூறும். வானத்தில் பறந்து திரியும் கோட்டையை தூங்கெயில் என்றும் அழைக்கலாம். முப்புரம் எரித்த சிவபெருமானை தூங்கெயில் எறிந்தான் என அழைக்கலாம். முற்காலச் சோழர்களுள் ஒருவனான தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்னும் சோழமன்னனாகக் குறிக்கப்படுபவர் சிவபெருமான் எனக் கொள்ள வகையுண்டு.

    மேலும் முற்காலச் சோழர்களுள் ஒருவனாக குறிப்பிடப்படும் செங்கணான் என்னும் சோழமன்னன் சிவபக்தியோடு விளங்கிய சிலந்தி ஒன்றின் மறுபிறப்பு என்று கூறப்படும் கதையும் (காளத்தி – காளஹஸ்தி கோயில் தல வரலாறு) இம்மன்னன் காவிரி ஆற்றங்கரையில் சிவனுக்கு 96 கோவில்கள் கட்டினான் என்ற கதையும் முற்காலச் சோழர்கள் சைவர்கள் என்று சொல்வோர்க்குச் சான்றாய் அமையும் தகுதியன.

    பிற்காலச் சோழர்கள் சமயம் சைவம்

    பிற்காலச்சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி பதின்மூன்றாம்  நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆட்சி செய்தவர்கள். (கிபி850-1250).

    விசயாலயன், ஆதித்தன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன்(இரண்டாம் பராந்தகன்), உத்தமன், இராசராசன், இராசேந்திரன், இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன், அதிராசேந்திரன், குலோத்துங்கன், விக்கிரமன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் என 21 மன்னர்கள் பிற்காலச் சோழர்களாய் அறியப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோனார் சைவசமயத்தவராகவே அறியப்படுகின்றனர். எனினும் இம்மன்னர்கள் பின்பற்றிய சைவநெறியில் மாற்றம் உண்டு. சைவசமயம் ஆறு பிரிவுகளைக் கொண்டது என்பர். இதனை அகச்சமயம் ஆறு எனவும் அறுசமயம் எனவும் குறிப்பது சைவர்களின் வழக்கம். இந்த அறுசைவ நெறிகளில் ஒன்றான பாசுபத நெறியினை சில சோழர்களும் சைவசித்தாந்த நெறியினை சில சோழர்களும் பின்பற்றியதாகத் தெரிகிறது.

     

    பாசுபதச் சைவமும் சித்தாந்த சைவமும்

    பாசுபத சைவம் ஆத்மார்த்த பூஜையினை வலியுறுத்துகிறது. ஆத்மார்த்த பூஜை என்பதனை ஒருவன் தனக்காக இறைவனை வழிபடுவது என்று பொருள் கொள்ளலாம். சைவசித்தாந்த நெறி பரார்த்த பூஜையினை வலியுறுத்துகிறது. பரார்த்த பூஜை என்பதனை ஒருவன் பிறரது நன்மைக்காக வழிபடுவது என்று பொருள் கொள்ளலாம். எனவே சைவசித்தாந்த நெறி பொதுமக்களின் பாமரரின் கடைத்தேற்றத்துக்காக தன் கொள்கைகளையும் வழிபடுமுறைகளையும் நிறுவ ஏதுவாக பக்தி வழிபாட்டை முறைப்படுத்த முனைந்தது.[2]

    இதன் வெளிப்பாடே பாமரர்கள் மொழியான தமிழில் அமைந்த தேவாரம் முதலான திருமுறை நூல்களைத் தொகுத்ததும், அதனை இசையமைத்துப் பாட ஓதுவார்களை நியமித்ததும் அப்பாடல்களுக்கு ஆட தேவரடியார்களையும் நட்டுவனார்களை நியமித்ததும் நடைபெற்றன எனலாம்.

    பிற்காலச் சோழர்களும் பன்னிரு திருமுறையும்

    தமிழகச் சைவத்தின் புனிதநூல்களாகக் கருதப்படும் பன்னிருதிருமுறைகள் பிற்காலச் சோழர்காலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. பன்னிருதிருமுறையின் முதல் பதினொரு திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி பிற்காலச் சோழர் காலத்தவர் என்பதில் ஐயம் இல்லை. ஆயின் பிற்காலச் சோழர்களுள் எச்சோழர் காலத்தவர் என்பதில் பல முரண்கருத்துக்கள் உண்டு.

    சதாசிவப்பண்டாரத்தார் நம்பியாண்டார் நம்பிகள் ஆதித்தசோழன் காலத்தவர் என்று குறிப்பிடுகின்றார். ஆதித்தசோழனின் பேரனான கண்டராதித்தர் தில்லைச் சிவன்மீது  பாடிய பதிகம் ஒன்பதாம் திருமுறையில் அமைந்திருப்பதும் ஆதித்தசோழனின் ஏள்ளுப்பேரனான இராசராசன் எழுப்பிய கோயிலான இராசராசேச்சுரம் மீது கருவூர்த்தேவர் பாடிய பதிகம் ஒன்பதாம் திருமுறையில் அமைந்திருப்பதும் திருமுறை தொகுத்தவரான நம்பியாண்டார் நம்பியின் நூல்கள் பதினொன்றாம் திருமுறையில் அமைந்திருப்பதும் சதாசிவப்பண்டாரத்தாரின் கருத்துக்கு முரணாக அமைகின்றன.

    இராசராசசோழன் நாடகம் எழுதிய அரு.ராமனாதன் நம்பியாண்டார் நம்பியை இராசராச சோழன் காலத்தவர் என்கிறார். அரு.ராமனாதனின் கருத்துக்குச் சான்றாக அமைவது நீலகண்டசாஸ்திரியின் கூற்று.

    “சைவத்திருமுறைகளைத் தொகுத்து  வரிசைப்படுத்தியவர் நம்பியாண்டார் நம்பி. இவர் காலம் பத்தாம் நூற்றாண்டின் இறுதி அல்லது பதினோராம் நூற்றாண்டின் தொடக்கம்.”[3]

    நம்பியாண்டார் திருமந்திரம் வரையிலான பத்து திருமுறைகளைத்  தொகுத்ததாக உமாபதி சிவாச்சாரியார் திருமுறைகண்ட புராணம் என்னும் நூலில் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடும் நீலகண்டசாஸ்திரி  அரசன் கேட்டுக்கொண்டதால் பதினொன்றாம் திருமுறை நூல்களையும் சேர்த்ததாகக் குறிப்பிடுகிறார்.[4] சேந்தனார், திருமாளிகைத் தேவர் குறித்த கல்வெட்டுக்களும் முதலாம் இராசராசன் காலத்தவை என்கிறார் நீலகண்ட சாஸ்திரி.

    நீலகண்ட சாஸ்திரியின் கருத்தே ஏற்கத் தக்கது. எனில் நம்பியாண்டார் நம்பி முதலாம் இராசராசன் காலத்தவர் என்றே கொள்ளலாம். கொண்டால் திருமுறைகளைத் தொகுத்தவன் என்னும் பெருமைக்குரியவனாக இராசராசனே அமைகின்றான் என்றும் ஆகும்.

    திருமுறைகளைத் தொகுத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்லவேண்டும் என்னும் சைவசித்தாந்த நெறியின் கொள்கைக்கு மாறானது பாசுபத நெறி. திருமுறைப்பாடல்கள் தம் பயன்பாட்டுக்கே உரியன மக்கள் பயன்பாட்டுக்கு உரியன அல்ல என்பது பாசுபத நெறியாகலாம். ஏனெனில் அது ஆத்மார்த்த பூஜையைத்தான் வலியுறுத்துகிறது. இம்முரண்பாட்டின் வெளிப்பாடுதான் சிதம்பரம் கோயிலில் தேவாரப் பாடல்கள் யார்க்கும் பயன்படாத வகையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தன. தேவாரம் பாடிய மூவர் வந்தால்தான் அந்த அறை திறக்கமுடியும் என்று கூறப்பட இராஜராஜசோழன் தேவார மூவரின் சிலைகளைக் கொண்டுவந்து பூட்டப்பட்டிருந்த அறையைத் திறக்கச் செய்து வெளிப்படுத்தினான் என்னும் கதை எனலாம்.

    சிதம்பரம் கோயிலில் பிற்காலச்சோழர்கள் ஆற்றிய பணிகள்

    தமிழகச் சைவர்களின் தலைமையிடமாகப் போற்றப்படும் சிதம்பரம் கோயிலில் பிற்காலச் சோழமன்னர்கள் தொடக்கம் முதல் பல திருப்பணிகள் செய்துள்ளனர்.

    சிதம்பரம் கோயிலில் நடராசர் கருவறை விமானத்திற்கு முதற் பராந்தக சோழன் பொன்வேய்ந்துள்ளான்[5] என்பர். இம்மன்னனின் இச்செயலைப் போற்றி இம்மன்னனது மகனும் இம்மன்னனை அடுத்து அரசாண்டவனுமான கண்டராதித்த சோழன் பாடியுள்ளார்.[6]

    வெங்கோல்வேந்தன் றென்னாடு மீழமுங் கொண்டதிறற்

    செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்த

    அங்கோல்வளையார் பாடியாடு மணிதில்லை யம்பலத்துள்

    எங்கோனீச னெம்மிறையை யென்றுகோ லெய்துவதே – (கண்டராதித்தன், பா.8)

    பராந்தக சோழனுக்கு மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி என்னும் பட்டம் உண்டு. இப்பாடலில் தென்னாடும் ஈழமும் கொண்ட திறல் செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் என தன் தந்தை பராந்தகனைக் குறித்துள்ளார் கண்டராதித்த சோழன்.

    நம்பியாண்டார் நம்பி பாடிய பாடல் ஒன்றினைச் சான்றாகக் கொண்டு சிதம்பரம் கோயில் விமான முகட்டிற்கு, பராந்தக சோழனின் தந்தையான ஆதித்த சோழன் பொன்வேய்ந்தான் எனக் குறிப்பிடுகிறார்[7] சதாசிவப் பண்டாரத்தார்.

    சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றலம்பல முகடு

    கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் (திருத்தொண்டர் திருவந்தாதி, பா.65)

    ஆதித்தன் விமான முகட்டில் தொடங்கிய பொன்வேயும் பணியை பராந்தகன் அம்பலம் முழுதையும் பொன்னம்பலமாக்கி முடித்துவைத்தான் எனக் கொள்ளலாம்.

    பின்னாளில் இக்கோயிலின் மற்றொரு பகுதியான பொன்னம்பலத்தை விக்கிரமசோழனின் படைத்தலைவனான மணவிற்கூத்தன் காலிங்கராயன் என்பவனும் மூன்றாம் குலோத்துங்க சோழனும் பொன்வேய்ந்துள்ளனர்.[8]

    சிதம்பரம் கோயிலின் கிழக்குத் திசை ராஜகோபுரத்தை குலோத்துங்க சோழனும்  அதன் எதிர்த்திசைக் கோபுரமான மேற்குத் திசை ராஜகோபுரத்தை விக்கிரமசோழனும் கட்டித்தந்துள்ளனர்.[9]

    ஆதித்தசோழனும் பராந்தக சோழனும் திருப்பணிபுரிந்த, கண்டராதித்தசோழன் பாடிப்போற்றிய சிதம்பரம் கோவிலுக்கு  இராசராச சோழன் திருப்பணி ஏதும் செய்தமை குறிப்பிடப்படவில்லை.

    இராசராசனுக்குப் பிந்திய சோழமன்னர்களான விக்கிரமசோழனும் குலோத்துங்கசோழனும் சிதம்பரம் கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளமையும் இங்கு குறிக்கத்தக்கது.

    பாசுபத நெறியினைக் கைக்கொண்டவர்கள் சிதம்பரம் கோயிலை முதன்மைப்படுத்தி திருப்பணிகள் செய்தனர் எனவும் சைவசித்தாந்த நெறியினைக் கைக்கொண்டவர்கள் சிதம்பரம் கோயிற் திருப்பணிகளில் ஈடுபடவில்லை எனவும் கொள்ள வாய்ப்புள்ளதா என்பது ஆய்ந்தறியப்பட வேண்டிய ஒன்றாகும்.

    பாசுபத நெறியினைப் பின்பற்றுவதால்தான் சிதம்பரம் கோயிலில் இன்றைக்கும் தேவாரப் பாடல்களைக் கருவறையில் பாடுவதற்குத் தடை நிலவுகிறது எனலாம்.

    பாசுபத நெறிஇறந்தோர்க்கு கோயில் எழுப்பி வழிபடல்பள்ளிப்படைக்கோவில்கள்

    இறந்த வீரர் நினைவாக கல் நட்டு வழிபடுவது தமிழர் மரபு. பகைவர்களே என் தலைவனை எதிர்க்கத் துணியாதீர். எதிர்க்கத் துணிந்த பலரும் இன்று கற்களாக நிற்கின்றனர் என்னும் ஔவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் நடுகல் வழிபாட்டின் பழமை காட்டும்.

    இந்நடுகல் வழிபாட்டின் வளர்ச்சியாய் அமைவன பள்ளிப்படை கோயில்கள். சைவ சமயத்தின் ஒரு பிரிவான பாசுபத சைவத்தில் இறையடியவர்கள் இறந்தபின் அவர்களைப் புதைத்த இடத்தில் அல்லது அவர்களை எரித்தபின் மிஞ்சும் எலும்பையும் சாம்பலையும் புதைத்த இடத்தில் லிங்கம் ஒன்றை நட்டு வழிபடுவது மரபாக இருந்தது. அந்த இலிங்கம் நட்ட இடத்தில் சிறுகோயில் அமைத்து வழிபடுவது அதன் அடுத்த வளர்நிலையாய் அமைந்தது.

    பாசபத சைவ குருமார்கள் சோழமன்னர்களின் அரசவைக்குருமார்களாக இருந்த காலத்தில் பாசுபத சைவத்தை ஏற்றுக்கொண்ட சோழமன்னர்கள் இறந்தபின் அவர்களைப் புதைத்த இடத்திலும் இலிங்கம் நட்டு வழிபடுதலும் இலிங்கம் நட்ட இடத்தில் பெருங்கோவில் கட்டுதலும் வழக்கமாய் மாறியமைக்கு சோழர்காலப் பள்ளிப்படைக் கோவில்கள் சான்று பகர்கின்றன.

    இன்றைய ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருக்காளத்தி என அழைக்கப்படும் காளஹஸ்திக்கு அருகிலுள்ள தொண்டைமான் பேராற்றூர் என்னுமிடத்தில் ஆதித்தசோழன் மறைந்தான். ஆதித்த சோழன் மறைந்த இந்த இடத்தில் அவன் மகன் பராந்தக சோழன் ஆதித்தேச்சுரம் என்றும் கோதண்டராமேச்சுரம் என்றும் அழைக்கப்படும் பெருங்கோயில் ஒன்றைக் கட்டி வழிபடச்செய்துள்ளான்.[10] கோதண்டராமன் என்பது ஆதித்தசோழனின் பட்டப்பெயர்களில் ஒன்றாகும் என்னும் செய்தி முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பராந்தகனுக்கும் அவன் மகன்களான இராசாதித்தனுக்கும் கண்டராதித்தனுக்கும் பள்ளிப்படைக்கோவில்கள் இருந்தனவா எனத் தெரியவில்லை. பராந்தகன் வாழ்நாளிலேயே அவனுடைய மூத்தமகன் இராசாதித்தன் மறைந்துவிட்டான். தன் மூத்த மகனின் மறைவினைத் தாங்கமுடியாத துயரத்தில்தான் பராந்தக சோழன் நோயில் வீழ்ந்தான் என்னும் கருத்தினையும் நோக்கும்போது பராந்தகன் ஏன் தன் மகனுக்குப் பள்ளிப்படைக் கோவில் எழுப்பவில்லை என்னும் கேள்வி எழுவது இயற்கை. பராந்தகன் மறைவிற்குப் பின் அரியணையேறிய கண்டராதித்தர் சிதம்பரம் கோயிலைப் போற்றியவர்,

    கண்டராதித்தர் சிவதலங்களுக்கு மேற்குத்திசையில் யாத்திரை சென்றபோது மறைந்துவிட்டதால் அதனால் மேற்கெழுந்தருளிய தேவர் என்றழைக்கப்பட்டதாகவும் விளக்கம் சொல்லப்படுகிறது.[11]  கண்டராதித்தரின் மனைவி திருநல்லம் என்னும் ஊரில் தன் கணவன் பெயரால் கண்டராதித்தம் என்னும் கற்றளி அமைத்துள்ளாள். இக்கோவிலில் கண்டராதித்தர் சிவனை வழிபடுவதுபோல் ஒரு படிவம் அமைத்துள்ளாள்.[12] இக்கோயில் பள்ளிப்படைக் கோயிலாகக் குறிப்பிடப்படவில்லை.

    பராந்தகனின் மூன்றாம் மகனும் கண்டராதித்தருக்குப் பின் அரியணையேறியவனுமான அரிஞ்சய சோழனுக்கு அவன் பேரன் இராசராசன் அரிஞ்சயேச்சுரம் என்னும் கோயிலை பள்ளிப்படையாக எழுப்பியுள்ளான். தன் தாத்தனுக்குப் பள்ளிப்படை கட்டிய இராசராசன் தன் தந்தை சுந்தரசோழனுக்குப் பள்ளிப்படை கட்டவில்லை. ஆனால் தன்பெயரில் தான் வாழும் காலத்திலேயே ஒரு பெருங்கோயில் கட்டினான்.

    இராஜேந்திர சோழன் தன் தந்தைக்குப் பள்ளிப்படை கட்டவில்லை எனினும் தன் தந்தையின் மனைவிகளுள் ஒருவரும் தன் சிற்றன்னையுமான பஞ்சவன்மாதேவிக்கு பஞ்சவன்மாதேச்சுரம் என்னும் பெயரில் பள்ளிப்படைக்கோவில் கட்டியுள்ளமை அறியப்படுகிறது. இராஜேந்திரசோழனும் தன் தந்தையினைப் பின்பற்றி, தன் பெயரில் இராசேந்திரேச்சுரம் (கங்கைகொண்டசோழீச்சரம்) என்னும் பெருங்கோயில் ஒன்றைக் கட்டியுள்ளான்.

     

    சைவசித்தாந்த நெறிஇருக்கும்போதே கோயில் கட்டி வழிபடச் செய்தல்தன்பெயர்க் கோவில்கள்

    இராஜராஜனும் இராசேந்திரனும் தங்கள் பெயர்களில் கோயில்கள் கட்டியமைக்குக் காரணம் அவர்கள் இருவரும் தங்கள் முன்னோர் பின்பற்றிய பாசுபதச் சைவநெறியிலிருந்து மாறி சைவசித்தாந்தநெறியைப் பின்பற்றியமையே ஆகும்.

    இராசராசனின் தலைமைக் குருவாக இருந்தவர் ஈசான சிவன் என்னும் சைவசித்தாந்த நெறி ஆச்சாரியார். இராசேந்திரனின் தலைமைக்குருவாக இருந்தவர் சர்வசிவன் என்னும் சைவசித்தாந்த நெறி ஆச்சாரியார். இவ்விரு சமய குருமார்களின் வழிகாட்டுதலின் பெயரால்தான் இராசராசனும் இராசேந்திரனும் முறையே இராசராசேச்சுரத்தையும் இராசேந்திரேச்சுரத்தையும் கட்டியுள்ளனர். இக்கோயில்களின் கருவறையில் அமைந்துள்ள இலிங்கங்களும் இம்மன்னர்களின் பெயரால் இராசராசேச்சுரர் எனவும் இராசேந்திரேச்சுரர் எனவும் அழைக்கப்பட்டனர். அதாவது மன்னர்களே இறைவனாய் வணங்கப்பட்டனர்.

    ஆயின் இவ்விரு கோயில்களும் பிற்காலத்தில் தம் பெயர்களை இழந்து பிரகதீச்சுரம் என்னும் பெயராலேயே அழைக்கப்பட்டதனை அறிய முடிகிறது. இவ்விரு கோயில் இறைவர்களும் பிரகதீச்சுரர் என்றே அறியப்படுகின்றனர்.

    இரண்டாம் இராசராசன் என்னும் மன்னனும் தன் பெயரால் தாராசுரம்(இராசராசேச்சுரம்) என்னும் இடத்தில் இராசராசேச்சுரம் என்னும் கோயிலைக் கட்டி வழிபடச் செய்தமை இவண் நோக்கத்தக்கது. இக்கோயிலும் பிற்காலத்தில் தன் பெயரினை இழந்து ஐராவதீச்சுரம் என்னும் பெயரினைப் பெற்றமை குறிக்கத்தக்கது. இக்கோயில் இறைவனும் ஐராவதீச்சுரர் என்றே அறியப்படுகிறார்.

    இராசராசனின் மனைவியும் பட்டத்தரசியுமான தந்திசக்திவிடங்கி என்னும் உலோகமாதேவி திருவையாற்றில் தன்பெயரால் உலோகமாதேவீச்சுரம் என்னும் கோயில் ஒன்றை எடுப்பித்துள்ளார். இக்கோயில் இப்பொழுது உத்தரகைலாயம் என்றழைக்கப்படுகிறது.[13]

    பிற்காலச் சோழர்களில் முதல்வனான விசயாலயன் நார்த்தாமலையில் விசயாலயேச்சுரம் என்னும் பெயரில் கோயில் கட்டினான் என்பதும் இக்கோயில் இன்று வழிபடும் நிலையில் இல்லை என்பதும் இங்கு குறிக்கத்தக்கது. விசயாலயன் மகனான ஆதித்தனும் தன்பெயரில் ஆதித்தேச்சுரம் என்னும் கோயிலை திருப்புறம்புயம் என்னும் இடத்தில் கட்டியுள்ளான். அங்கு ஏற்கனவே வழிபாட்டிலிருந்த கோயிலைத்தான் கற்கோயிலாக மாற்றினான் ஆதித்தன் என்பர்.[14]

    ஆதித்தசோழன், பராந்தகசோழன், கண்டராதித்தன் மனைவியான செம்பியன் மாதேவி ஆகியோர் பல கோயில்களைக் கற்றளிகளாக மாற்றியுள்ளனர். தஞ்சைப் பெரியகோயிலும் தளிக்குளத்தார் கோயிலின் கற்றளிவடிவமே என்பார் சதாசிவப்பண்டாரத்தார். இக்கருத்து ஆய்வுக்குரியது.

    விசயாலயனும், ஆதித்தனும் சைவசித்தாந்த நெறியினைப் பின்பற்றிய வேந்தர்களா என்பதும் இல்லையெனில் இக்கோயில்கள் விசயாலயன், ஆதித்தன் காலத்துக்குப் பின்வந்த மன்னர்களால் எழுப்பப்பட்ட கோயில்களா என்பதும் ஆய்வுக்குரியன.

    சைவசித்தாந்த நெறியினைப் பின்பற்றியமையால்தான் தன்பெயர்க்கோவிலை நிறுவினர் இராஜராஜனும் இராசேந்திரனும் எனில் அவர்களிரும் பள்ளிப்படைக்கோவில்களும் ஏன் கட்டினர் என்னும் கேள்வி எழுகிறது. தன் வாழ்நாளின் தொடக்கத்தில் பாசுபத நெறியினைப் பின்பற்றிப் பின்னர் சைவசித்தாந்த நெறிக்கு மாறினர் என்றோ தாம் மாறிய பின்னும் தன் முன்னோர் பின்பற்றிய நெறியை மதித்து அவர்களுக்குக் கோயில் எழுப்பித்தந்தனர் என்றோ சமாதானம் கூறலாம்.

    பாசுபத நெறிஇறந்தோர்க்கு சிவன் கோயிலில் படிமங்கள் வைத்து வழிபடல்

    உயர்நிலையுற்று இறந்தோர்க்கு கோயிலில் படிமம் செய்துவைத்து வழிபடுதல் நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சி எனலாம். இராசராச்சோழனுக்கு முற்பட்ட பிற்காலச் சோழர்கள் காலத்தில் அம்மன்னர்களும் அவர்கீழ் பணியாற்றிய உயர்நிலைப் பணியாளர்களும் நாயன்மார்களுக்குச் படிமம் செய்து கோயிலில் நிறுவியுள்ளனர்.

    இறந்தோர்க்குச் சிவன் கோயில் எழுப்புதல் இல்லையென்றானபின்னும் இறந்தோர்க்குப் படிமம் செய்து கோயில்களில் வைத்து வழிபடும் வழக்கம் தொடர்ந்தமையை அறியமுடிகிறது.

    தன் கணவன் கண்டராதித்தனுக்கு, செம்பியன்மாதேவி ஒரு படிமம் செய்து கண்டராதித்தம் என்னும் கோவில் வைத்து வழிபட்ட செய்தி முற்கூறப்பட்டது. இராசராசனின் தமக்கையான குந்தவை தன் தந்தை சுந்தரசோழனின் படிமத்தினையும் தாய் வானவன்மாதேவியின் படிமத்தையும் இராஜராஜன் கட்டிய இராசராசேச்சுரம் கோயிலிலேயே நிறுவி வழிபடச்செய்துள்ளாள்.[15]

    இராசராசனின் உயர்நிலைப் பணியாளர்களுள் ஒருவராகிய பொய்கைநாடு கிழவன் ஆதித்த சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளான் என்பவர் இராசராசேச்சுரம் கோயிலிலேயே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், பரவை நாச்சியார், மெய்ப்பொருள் நாயனார், சிறுத்தொண்ட நாயனார் ஆகியோருக்குச் செப்புப் படிமங்கள் எழுந்தருளுவித்து அவற்றிற்கு அணிகலன்கள் தந்துள்ளான்.[16]

    பாசுபத நெறிநின்று வாழ்ந்து மறைந்த பெரியோர்க்குச் செப்புப்படிமங்கள் செய்துவைத்ததோடு அமையாமல் சைவசித்தாந்த நெறிநின்று வாழ்வோர்க்கும் இவன் செப்புப்படிமங்கள் செய்துவைத்துள்ளான்.  இராசராச சோழனுக்கும் அவன் மனைவி உலோகமாதேவிக்கும் இவன் செய்து வைத்த செப்புப் படிமங்கள் அத்தகையன.[17]

    கண்டராதித்தன் மனைவியும் தன் பாட்டியுமான செம்பியன் மாதேவியின் படிமத்தினைச் செய்து அப்பாட்டியின் பெயரிலமைந்த செம்பியன்மாதேவி என்னும் ஊரிலுள்ள திருக்கைலாயமுடையார் கோவிலில் நிறுவி வழிபடச் செய்துள்ளான் இராசேந்திரசோழன்.[18]

    முடிவுரை

    இராசராச சோழன் தன் முன்னோர் அடியொற்றித் தானும் சைவசமயத்தைப் பின்பற்றினான். தன் முன்னோர் பின்பற்றிய பாசுபதச் சைவநெறியைக் கைவிட்டு வடக்கிலிருந்து பரவிவந்துகொண்டிருந்த சைவசித்தாந்தநெறியினைப் பின்பற்றத் தொடங்கியுள்ளான். இதன் விளைவாகவே நம்பியாண்டார் நம்பி என்னும் சைவநெறியாளரைக் கொண்டு சைவத்திருமுறை நூல்களைத் தொகுக்கச் செய்தான்.  அதன் தொடர்ச்சியாகவே திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் என்னும் பெருநூல் எழுந்தது.

    தன் பெயரில் கோயில் கட்டும் முறையைத் தொடங்கிவைத்தான். இவனைப் பின்பற்றி இவன் பின்வந்த இராசேந்திரனும் இரண்டாம் இராசராசனும் தன் பெயரில் கோயில்கட்டி வழிபடச் செய்தனர்.

    இராசராசனால் வடக்கிலிருந்து கொணரப்பட்ட சைவசித்தாந்தநெறியின் தாக்கத்தாலும் அதனை எதிர்கொள்ளவேண்டியும் தமிழகத்தில் தனித்த தமிழ்ச்சைவசித்தாந்த நெறி தோன்றி வளர்ந்தது. சைவசித்தாந்த சாத்திரங்கள் என்றழைக்கப்படும் 14 சித்தாந்த நூல்கள் சோழர்காலத்தின் பின் தோன்றின.

    எனவே முதலாம் இராசராச்சோழன் தமிழகச் சைவசமயத்தில் புதுநெறியினைப் புகுத்தி தமிழ்ச்சைவத்தின் மறுமலர்ச்சிக்கு காரணமாய் அமைந்துள்ளான் என்னும் கருதுகோள் மெய்ப்பிக்கப்படுகிறது.

    [1]  சதாசிவப் பண்டாரத்தார், தி.வை., பிற்காலச் சோழர் வரலாறு, ப.1

    [2]  Karashima Noboru, Religion and Society, The Tenth to twelfth centuries, A Concise History of South India, P.149

    [3]  நீலகண்ட சாஸ்திரி, கே.ஏ., சோழர்கள்புத்தகம் 2, ப.892

    [4]  மேலது, ப.893

    [5]  சந்திரமூர்த்தி மா, தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் தொகுதி 2, ப..28

    [6] சதாசிவப் பண்டாரத்தார், தி.வை., பிற்காலச்சோழர் வரலாறு, பக்.40,41 & ப. 506

    [7] மேலது, ப.504

    [8] சந்திரமூர்த்தி மா, தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் தொகுதி 2, ப. 28

    [9]  மேலது, ப. 26

    [10]  சதாசிவப் பண்டாரத்தார், தி.வை., பிற்காலச்சோழர் வரலாறு, ப.26

    [11] மேலது, ப.49

    [12]  மேலது, ப.51

    [13] மேலது, ப.98

    [14] மேலது, ப. 24

    [15] மேலது, ப.63

    [16] மேலது, ப.103

    [17] மேலது, ப.103

    [18]  மேலது, ப.71

    Share