பிற்காலச் சோழர்காலத் தமிழகச் சைவத்தில் இராசராசன் புகுத்திய புதுநெறி

1
க. கதிரவன், துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், அரசுக்கல்லூரி, சித்தூர்,பாலக்காடு .

இக்கட்டுரையின் கருதுகோள் :

முதலாம் இராசராச்சோழன் தமிழகச் சைவசமயத்தில் புதுநெறியினைப் புகுத்தி தமிழ்ச்சைவத்தின் மறுமலர்ச்சிக்கு காரணமாய் அமைந்துள்ளான்.

முன்னுரை

முற்காலச்சோழர்கள், பிற்காலச் சோழர்கள் என சோழ அரசர்களை இருபிரிவாகப் பிரிப்பர்.

முற்காலச் சோழர்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் ஆட்சிசெய்தவர்கள். ஆயினும் அக்காலத்தில் தமிழகம் முழுதும் தனதாக்கிப் பேரரசாய் ஆண்ட சோழப்பேரரசர்கள் யாரும் இல்லை எனலாம்.

காந்தமன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன், உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி, கரிகாலன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான், போரவைக் கோப்பெருநற்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, நெடுங்கிள்ளி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், செங்கணான், நல்லடி என சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் சோழமன்னர்களும் முற்காலச் சோழர்களாக அறியப்படுகிறார்கள்.

இச்சோழமன்னர்களுக்குச் சான்றாக சங்க இலக்கியங்களும், சங்கத்திற்குப் பிறகான இலக்கியங்களும் மட்டுமே அமைகின்றன. இச்சோழமன்னர்கள் காலத்தில் வாழ்ந்தவனும் இன்றைய தர்மபுரிப்பகுதியை அதாவது அன்றைய தகடூரை ஆண்ட குறுநிலமன்னனுமான அதியமானுக்குக் கிடைத்ததைப்போல கல்வெட்டுச் சான்று ஏதும் கிடைக்கவில்லை. கிமு மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட மகதப் பேரரசன் அசோகனின் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் தென்னக வேந்தர்களுள் சோழர்களும் உண்டு. அசோகன் காலத்துக்கும் முந்தியதாக கருதப்படும் வால்மீகி இராமாயணத்திலும் வியாச பாரதத்திலும் சோழர்கள் பற்றிய குறிப்பு காணப்படுவதாக தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.[1]

சோழர்களின் சமயம்

முற்காலச் சோழர்களின் சமயம்சைவம்

இந்திய மன்னர்கள் தங்கள் குலத்தை சூரிய குலம், சந்திரகுலம், அக்னி குலம் எனக் குறித்துக் கொள்வதனைக் காணமுடிகிறது. இராமாயணத்தில் குறிப்பிடப்படும் தசரதன், இராமன் ஆகியோர் சூரிய குலத்தவர் என்பர். தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்கள் முறையே அக்னி சூரிய சந்திர குலத்தவர்களாகத் தங்களைக் குறித்துக்கொள்வர்.

எனில் விஷ்ணுவின் அவதாரமாகிய இராமனது சூரிய குலத்தோடு தங்கள் மரபினைப் பிணைத்துக்கொள்ளும் சோழர்கள் வைணவர்களாக இருக்கவேண்டும் என ஊகிக்கலாம். பிற்காலச் சோழர்களில் ஆதித்தச் சோழனின் வேறுபெயராக கோதண்டராமன் என்னும் பெயர் வழங்கியமையை இதற்குச் சான்றாகவும் கூறலாம்.

இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்னும் சோழமன்னன் பெயரடை கொண்டு நோக்கும்போது வைதிகர்கள் எனவும் முற்காலச் சோழர்களை வகைப்படுத்தலாம்.

ஆனால் முற்காலச் சோழர்கள் சைவர்கள் என விளக்கவும் இடமுண்டு.

பாண்டியர்கள் சோமசுந்தரப் பாண்டியனைத் தங்கள் குலமுதல்வனாகக் காட்டுவது போல சோழர்களும் சிவபெருமானைத் தங்கள் குல முதல்வர்களில் ஒருவராகக் காட்டுகின்றனர். முப்புரம் எரித்த கதை சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. முப்புரங்கள் என்பன வானத்தில் பறந்து திரிந்த மூன்று கோட்டைகள் என அக்கதை கூறும். வானத்தில் பறந்து திரியும் கோட்டையை தூங்கெயில் என்றும் அழைக்கலாம். முப்புரம் எரித்த சிவபெருமானை தூங்கெயில் எறிந்தான் என அழைக்கலாம். முற்காலச் சோழர்களுள் ஒருவனான தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்னும் சோழமன்னனாகக் குறிக்கப்படுபவர் சிவபெருமான் எனக் கொள்ள வகையுண்டு.

மேலும் முற்காலச் சோழர்களுள் ஒருவனாக குறிப்பிடப்படும் செங்கணான் என்னும் சோழமன்னன் சிவபக்தியோடு விளங்கிய சிலந்தி ஒன்றின் மறுபிறப்பு என்று கூறப்படும் கதையும் (காளத்தி – காளஹஸ்தி கோயில் தல வரலாறு) இம்மன்னன் காவிரி ஆற்றங்கரையில் சிவனுக்கு 96 கோவில்கள் கட்டினான் என்ற கதையும் முற்காலச் சோழர்கள் சைவர்கள் என்று சொல்வோர்க்குச் சான்றாய் அமையும் தகுதியன.

பிற்காலச் சோழர்கள் சமயம் சைவம்

பிற்காலச்சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி பதின்மூன்றாம்  நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆட்சி செய்தவர்கள். (கிபி850-1250).

விசயாலயன், ஆதித்தன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன்(இரண்டாம் பராந்தகன்), உத்தமன், இராசராசன், இராசேந்திரன், இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன், அதிராசேந்திரன், குலோத்துங்கன், விக்கிரமன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் என 21 மன்னர்கள் பிற்காலச் சோழர்களாய் அறியப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோனார் சைவசமயத்தவராகவே அறியப்படுகின்றனர். எனினும் இம்மன்னர்கள் பின்பற்றிய சைவநெறியில் மாற்றம் உண்டு. சைவசமயம் ஆறு பிரிவுகளைக் கொண்டது என்பர். இதனை அகச்சமயம் ஆறு எனவும் அறுசமயம் எனவும் குறிப்பது சைவர்களின் வழக்கம். இந்த அறுசைவ நெறிகளில் ஒன்றான பாசுபத நெறியினை சில சோழர்களும் சைவசித்தாந்த நெறியினை சில சோழர்களும் பின்பற்றியதாகத் தெரிகிறது.

 

பாசுபதச் சைவமும் சித்தாந்த சைவமும்

பாசுபத சைவம் ஆத்மார்த்த பூஜையினை வலியுறுத்துகிறது. ஆத்மார்த்த பூஜை என்பதனை ஒருவன் தனக்காக இறைவனை வழிபடுவது என்று பொருள் கொள்ளலாம். சைவசித்தாந்த நெறி பரார்த்த பூஜையினை வலியுறுத்துகிறது. பரார்த்த பூஜை என்பதனை ஒருவன் பிறரது நன்மைக்காக வழிபடுவது என்று பொருள் கொள்ளலாம். எனவே சைவசித்தாந்த நெறி பொதுமக்களின் பாமரரின் கடைத்தேற்றத்துக்காக தன் கொள்கைகளையும் வழிபடுமுறைகளையும் நிறுவ ஏதுவாக பக்தி வழிபாட்டை முறைப்படுத்த முனைந்தது.[2]

இதன் வெளிப்பாடே பாமரர்கள் மொழியான தமிழில் அமைந்த தேவாரம் முதலான திருமுறை நூல்களைத் தொகுத்ததும், அதனை இசையமைத்துப் பாட ஓதுவார்களை நியமித்ததும் அப்பாடல்களுக்கு ஆட தேவரடியார்களையும் நட்டுவனார்களை நியமித்ததும் நடைபெற்றன எனலாம்.

பிற்காலச் சோழர்களும் பன்னிரு திருமுறையும்

தமிழகச் சைவத்தின் புனிதநூல்களாகக் கருதப்படும் பன்னிருதிருமுறைகள் பிற்காலச் சோழர்காலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. பன்னிருதிருமுறையின் முதல் பதினொரு திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி பிற்காலச் சோழர் காலத்தவர் என்பதில் ஐயம் இல்லை. ஆயின் பிற்காலச் சோழர்களுள் எச்சோழர் காலத்தவர் என்பதில் பல முரண்கருத்துக்கள் உண்டு.

சதாசிவப்பண்டாரத்தார் நம்பியாண்டார் நம்பிகள் ஆதித்தசோழன் காலத்தவர் என்று குறிப்பிடுகின்றார். ஆதித்தசோழனின் பேரனான கண்டராதித்தர் தில்லைச் சிவன்மீது  பாடிய பதிகம் ஒன்பதாம் திருமுறையில் அமைந்திருப்பதும் ஆதித்தசோழனின் ஏள்ளுப்பேரனான இராசராசன் எழுப்பிய கோயிலான இராசராசேச்சுரம் மீது கருவூர்த்தேவர் பாடிய பதிகம் ஒன்பதாம் திருமுறையில் அமைந்திருப்பதும் திருமுறை தொகுத்தவரான நம்பியாண்டார் நம்பியின் நூல்கள் பதினொன்றாம் திருமுறையில் அமைந்திருப்பதும் சதாசிவப்பண்டாரத்தாரின் கருத்துக்கு முரணாக அமைகின்றன.

இராசராசசோழன் நாடகம் எழுதிய அரு.ராமனாதன் நம்பியாண்டார் நம்பியை இராசராச சோழன் காலத்தவர் என்கிறார். அரு.ராமனாதனின் கருத்துக்குச் சான்றாக அமைவது நீலகண்டசாஸ்திரியின் கூற்று.

“சைவத்திருமுறைகளைத் தொகுத்து  வரிசைப்படுத்தியவர் நம்பியாண்டார் நம்பி. இவர் காலம் பத்தாம் நூற்றாண்டின் இறுதி அல்லது பதினோராம் நூற்றாண்டின் தொடக்கம்.”[3]

நம்பியாண்டார் திருமந்திரம் வரையிலான பத்து திருமுறைகளைத்  தொகுத்ததாக உமாபதி சிவாச்சாரியார் திருமுறைகண்ட புராணம் என்னும் நூலில் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடும் நீலகண்டசாஸ்திரி  அரசன் கேட்டுக்கொண்டதால் பதினொன்றாம் திருமுறை நூல்களையும் சேர்த்ததாகக் குறிப்பிடுகிறார்.[4] சேந்தனார், திருமாளிகைத் தேவர் குறித்த கல்வெட்டுக்களும் முதலாம் இராசராசன் காலத்தவை என்கிறார் நீலகண்ட சாஸ்திரி.

நீலகண்ட சாஸ்திரியின் கருத்தே ஏற்கத் தக்கது. எனில் நம்பியாண்டார் நம்பி முதலாம் இராசராசன் காலத்தவர் என்றே கொள்ளலாம். கொண்டால் திருமுறைகளைத் தொகுத்தவன் என்னும் பெருமைக்குரியவனாக இராசராசனே அமைகின்றான் என்றும் ஆகும்.

திருமுறைகளைத் தொகுத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்லவேண்டும் என்னும் சைவசித்தாந்த நெறியின் கொள்கைக்கு மாறானது பாசுபத நெறி. திருமுறைப்பாடல்கள் தம் பயன்பாட்டுக்கே உரியன மக்கள் பயன்பாட்டுக்கு உரியன அல்ல என்பது பாசுபத நெறியாகலாம். ஏனெனில் அது ஆத்மார்த்த பூஜையைத்தான் வலியுறுத்துகிறது. இம்முரண்பாட்டின் வெளிப்பாடுதான் சிதம்பரம் கோயிலில் தேவாரப் பாடல்கள் யார்க்கும் பயன்படாத வகையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தன. தேவாரம் பாடிய மூவர் வந்தால்தான் அந்த அறை திறக்கமுடியும் என்று கூறப்பட இராஜராஜசோழன் தேவார மூவரின் சிலைகளைக் கொண்டுவந்து பூட்டப்பட்டிருந்த அறையைத் திறக்கச் செய்து வெளிப்படுத்தினான் என்னும் கதை எனலாம்.

சிதம்பரம் கோயிலில் பிற்காலச்சோழர்கள் ஆற்றிய பணிகள்

தமிழகச் சைவர்களின் தலைமையிடமாகப் போற்றப்படும் சிதம்பரம் கோயிலில் பிற்காலச் சோழமன்னர்கள் தொடக்கம் முதல் பல திருப்பணிகள் செய்துள்ளனர்.

சிதம்பரம் கோயிலில் நடராசர் கருவறை விமானத்திற்கு முதற் பராந்தக சோழன் பொன்வேய்ந்துள்ளான்[5] என்பர். இம்மன்னனின் இச்செயலைப் போற்றி இம்மன்னனது மகனும் இம்மன்னனை அடுத்து அரசாண்டவனுமான கண்டராதித்த சோழன் பாடியுள்ளார்.[6]

வெங்கோல்வேந்தன் றென்னாடு மீழமுங் கொண்டதிறற்

செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்த

அங்கோல்வளையார் பாடியாடு மணிதில்லை யம்பலத்துள்

எங்கோனீச னெம்மிறையை யென்றுகோ லெய்துவதே – (கண்டராதித்தன், பா.8)

பராந்தக சோழனுக்கு மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி என்னும் பட்டம் உண்டு. இப்பாடலில் தென்னாடும் ஈழமும் கொண்ட திறல் செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் என தன் தந்தை பராந்தகனைக் குறித்துள்ளார் கண்டராதித்த சோழன்.

நம்பியாண்டார் நம்பி பாடிய பாடல் ஒன்றினைச் சான்றாகக் கொண்டு சிதம்பரம் கோயில் விமான முகட்டிற்கு, பராந்தக சோழனின் தந்தையான ஆதித்த சோழன் பொன்வேய்ந்தான் எனக் குறிப்பிடுகிறார்[7] சதாசிவப் பண்டாரத்தார்.

சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றலம்பல முகடு

கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் (திருத்தொண்டர் திருவந்தாதி, பா.65)

ஆதித்தன் விமான முகட்டில் தொடங்கிய பொன்வேயும் பணியை பராந்தகன் அம்பலம் முழுதையும் பொன்னம்பலமாக்கி முடித்துவைத்தான் எனக் கொள்ளலாம்.

பின்னாளில் இக்கோயிலின் மற்றொரு பகுதியான பொன்னம்பலத்தை விக்கிரமசோழனின் படைத்தலைவனான மணவிற்கூத்தன் காலிங்கராயன் என்பவனும் மூன்றாம் குலோத்துங்க சோழனும் பொன்வேய்ந்துள்ளனர்.[8]

சிதம்பரம் கோயிலின் கிழக்குத் திசை ராஜகோபுரத்தை குலோத்துங்க சோழனும்  அதன் எதிர்த்திசைக் கோபுரமான மேற்குத் திசை ராஜகோபுரத்தை விக்கிரமசோழனும் கட்டித்தந்துள்ளனர்.[9]

ஆதித்தசோழனும் பராந்தக சோழனும் திருப்பணிபுரிந்த, கண்டராதித்தசோழன் பாடிப்போற்றிய சிதம்பரம் கோவிலுக்கு  இராசராச சோழன் திருப்பணி ஏதும் செய்தமை குறிப்பிடப்படவில்லை.

இராசராசனுக்குப் பிந்திய சோழமன்னர்களான விக்கிரமசோழனும் குலோத்துங்கசோழனும் சிதம்பரம் கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளமையும் இங்கு குறிக்கத்தக்கது.

பாசுபத நெறியினைக் கைக்கொண்டவர்கள் சிதம்பரம் கோயிலை முதன்மைப்படுத்தி திருப்பணிகள் செய்தனர் எனவும் சைவசித்தாந்த நெறியினைக் கைக்கொண்டவர்கள் சிதம்பரம் கோயிற் திருப்பணிகளில் ஈடுபடவில்லை எனவும் கொள்ள வாய்ப்புள்ளதா என்பது ஆய்ந்தறியப்பட வேண்டிய ஒன்றாகும்.

பாசுபத நெறியினைப் பின்பற்றுவதால்தான் சிதம்பரம் கோயிலில் இன்றைக்கும் தேவாரப் பாடல்களைக் கருவறையில் பாடுவதற்குத் தடை நிலவுகிறது எனலாம்.

பாசுபத நெறிஇறந்தோர்க்கு கோயில் எழுப்பி வழிபடல்பள்ளிப்படைக்கோவில்கள்

இறந்த வீரர் நினைவாக கல் நட்டு வழிபடுவது தமிழர் மரபு. பகைவர்களே என் தலைவனை எதிர்க்கத் துணியாதீர். எதிர்க்கத் துணிந்த பலரும் இன்று கற்களாக நிற்கின்றனர் என்னும் ஔவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் நடுகல் வழிபாட்டின் பழமை காட்டும்.

இந்நடுகல் வழிபாட்டின் வளர்ச்சியாய் அமைவன பள்ளிப்படை கோயில்கள். சைவ சமயத்தின் ஒரு பிரிவான பாசுபத சைவத்தில் இறையடியவர்கள் இறந்தபின் அவர்களைப் புதைத்த இடத்தில் அல்லது அவர்களை எரித்தபின் மிஞ்சும் எலும்பையும் சாம்பலையும் புதைத்த இடத்தில் லிங்கம் ஒன்றை நட்டு வழிபடுவது மரபாக இருந்தது. அந்த இலிங்கம் நட்ட இடத்தில் சிறுகோயில் அமைத்து வழிபடுவது அதன் அடுத்த வளர்நிலையாய் அமைந்தது.

பாசபத சைவ குருமார்கள் சோழமன்னர்களின் அரசவைக்குருமார்களாக இருந்த காலத்தில் பாசுபத சைவத்தை ஏற்றுக்கொண்ட சோழமன்னர்கள் இறந்தபின் அவர்களைப் புதைத்த இடத்திலும் இலிங்கம் நட்டு வழிபடுதலும் இலிங்கம் நட்ட இடத்தில் பெருங்கோவில் கட்டுதலும் வழக்கமாய் மாறியமைக்கு சோழர்காலப் பள்ளிப்படைக் கோவில்கள் சான்று பகர்கின்றன.

இன்றைய ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருக்காளத்தி என அழைக்கப்படும் காளஹஸ்திக்கு அருகிலுள்ள தொண்டைமான் பேராற்றூர் என்னுமிடத்தில் ஆதித்தசோழன் மறைந்தான். ஆதித்த சோழன் மறைந்த இந்த இடத்தில் அவன் மகன் பராந்தக சோழன் ஆதித்தேச்சுரம் என்றும் கோதண்டராமேச்சுரம் என்றும் அழைக்கப்படும் பெருங்கோயில் ஒன்றைக் கட்டி வழிபடச்செய்துள்ளான்.[10] கோதண்டராமன் என்பது ஆதித்தசோழனின் பட்டப்பெயர்களில் ஒன்றாகும் என்னும் செய்தி முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பராந்தகனுக்கும் அவன் மகன்களான இராசாதித்தனுக்கும் கண்டராதித்தனுக்கும் பள்ளிப்படைக்கோவில்கள் இருந்தனவா எனத் தெரியவில்லை. பராந்தகன் வாழ்நாளிலேயே அவனுடைய மூத்தமகன் இராசாதித்தன் மறைந்துவிட்டான். தன் மூத்த மகனின் மறைவினைத் தாங்கமுடியாத துயரத்தில்தான் பராந்தக சோழன் நோயில் வீழ்ந்தான் என்னும் கருத்தினையும் நோக்கும்போது பராந்தகன் ஏன் தன் மகனுக்குப் பள்ளிப்படைக் கோவில் எழுப்பவில்லை என்னும் கேள்வி எழுவது இயற்கை. பராந்தகன் மறைவிற்குப் பின் அரியணையேறிய கண்டராதித்தர் சிதம்பரம் கோயிலைப் போற்றியவர்,

கண்டராதித்தர் சிவதலங்களுக்கு மேற்குத்திசையில் யாத்திரை சென்றபோது மறைந்துவிட்டதால் அதனால் மேற்கெழுந்தருளிய தேவர் என்றழைக்கப்பட்டதாகவும் விளக்கம் சொல்லப்படுகிறது.[11]  கண்டராதித்தரின் மனைவி திருநல்லம் என்னும் ஊரில் தன் கணவன் பெயரால் கண்டராதித்தம் என்னும் கற்றளி அமைத்துள்ளாள். இக்கோவிலில் கண்டராதித்தர் சிவனை வழிபடுவதுபோல் ஒரு படிவம் அமைத்துள்ளாள்.[12] இக்கோயில் பள்ளிப்படைக் கோயிலாகக் குறிப்பிடப்படவில்லை.

பராந்தகனின் மூன்றாம் மகனும் கண்டராதித்தருக்குப் பின் அரியணையேறியவனுமான அரிஞ்சய சோழனுக்கு அவன் பேரன் இராசராசன் அரிஞ்சயேச்சுரம் என்னும் கோயிலை பள்ளிப்படையாக எழுப்பியுள்ளான். தன் தாத்தனுக்குப் பள்ளிப்படை கட்டிய இராசராசன் தன் தந்தை சுந்தரசோழனுக்குப் பள்ளிப்படை கட்டவில்லை. ஆனால் தன்பெயரில் தான் வாழும் காலத்திலேயே ஒரு பெருங்கோயில் கட்டினான்.

இராஜேந்திர சோழன் தன் தந்தைக்குப் பள்ளிப்படை கட்டவில்லை எனினும் தன் தந்தையின் மனைவிகளுள் ஒருவரும் தன் சிற்றன்னையுமான பஞ்சவன்மாதேவிக்கு பஞ்சவன்மாதேச்சுரம் என்னும் பெயரில் பள்ளிப்படைக்கோவில் கட்டியுள்ளமை அறியப்படுகிறது. இராஜேந்திரசோழனும் தன் தந்தையினைப் பின்பற்றி, தன் பெயரில் இராசேந்திரேச்சுரம் (கங்கைகொண்டசோழீச்சரம்) என்னும் பெருங்கோயில் ஒன்றைக் கட்டியுள்ளான்.

 

சைவசித்தாந்த நெறிஇருக்கும்போதே கோயில் கட்டி வழிபடச் செய்தல்தன்பெயர்க் கோவில்கள்

இராஜராஜனும் இராசேந்திரனும் தங்கள் பெயர்களில் கோயில்கள் கட்டியமைக்குக் காரணம் அவர்கள் இருவரும் தங்கள் முன்னோர் பின்பற்றிய பாசுபதச் சைவநெறியிலிருந்து மாறி சைவசித்தாந்தநெறியைப் பின்பற்றியமையே ஆகும்.

இராசராசனின் தலைமைக் குருவாக இருந்தவர் ஈசான சிவன் என்னும் சைவசித்தாந்த நெறி ஆச்சாரியார். இராசேந்திரனின் தலைமைக்குருவாக இருந்தவர் சர்வசிவன் என்னும் சைவசித்தாந்த நெறி ஆச்சாரியார். இவ்விரு சமய குருமார்களின் வழிகாட்டுதலின் பெயரால்தான் இராசராசனும் இராசேந்திரனும் முறையே இராசராசேச்சுரத்தையும் இராசேந்திரேச்சுரத்தையும் கட்டியுள்ளனர். இக்கோயில்களின் கருவறையில் அமைந்துள்ள இலிங்கங்களும் இம்மன்னர்களின் பெயரால் இராசராசேச்சுரர் எனவும் இராசேந்திரேச்சுரர் எனவும் அழைக்கப்பட்டனர். அதாவது மன்னர்களே இறைவனாய் வணங்கப்பட்டனர்.

ஆயின் இவ்விரு கோயில்களும் பிற்காலத்தில் தம் பெயர்களை இழந்து பிரகதீச்சுரம் என்னும் பெயராலேயே அழைக்கப்பட்டதனை அறிய முடிகிறது. இவ்விரு கோயில் இறைவர்களும் பிரகதீச்சுரர் என்றே அறியப்படுகின்றனர்.

இரண்டாம் இராசராசன் என்னும் மன்னனும் தன் பெயரால் தாராசுரம்(இராசராசேச்சுரம்) என்னும் இடத்தில் இராசராசேச்சுரம் என்னும் கோயிலைக் கட்டி வழிபடச் செய்தமை இவண் நோக்கத்தக்கது. இக்கோயிலும் பிற்காலத்தில் தன் பெயரினை இழந்து ஐராவதீச்சுரம் என்னும் பெயரினைப் பெற்றமை குறிக்கத்தக்கது. இக்கோயில் இறைவனும் ஐராவதீச்சுரர் என்றே அறியப்படுகிறார்.

இராசராசனின் மனைவியும் பட்டத்தரசியுமான தந்திசக்திவிடங்கி என்னும் உலோகமாதேவி திருவையாற்றில் தன்பெயரால் உலோகமாதேவீச்சுரம் என்னும் கோயில் ஒன்றை எடுப்பித்துள்ளார். இக்கோயில் இப்பொழுது உத்தரகைலாயம் என்றழைக்கப்படுகிறது.[13]

பிற்காலச் சோழர்களில் முதல்வனான விசயாலயன் நார்த்தாமலையில் விசயாலயேச்சுரம் என்னும் பெயரில் கோயில் கட்டினான் என்பதும் இக்கோயில் இன்று வழிபடும் நிலையில் இல்லை என்பதும் இங்கு குறிக்கத்தக்கது. விசயாலயன் மகனான ஆதித்தனும் தன்பெயரில் ஆதித்தேச்சுரம் என்னும் கோயிலை திருப்புறம்புயம் என்னும் இடத்தில் கட்டியுள்ளான். அங்கு ஏற்கனவே வழிபாட்டிலிருந்த கோயிலைத்தான் கற்கோயிலாக மாற்றினான் ஆதித்தன் என்பர்.[14]

ஆதித்தசோழன், பராந்தகசோழன், கண்டராதித்தன் மனைவியான செம்பியன் மாதேவி ஆகியோர் பல கோயில்களைக் கற்றளிகளாக மாற்றியுள்ளனர். தஞ்சைப் பெரியகோயிலும் தளிக்குளத்தார் கோயிலின் கற்றளிவடிவமே என்பார் சதாசிவப்பண்டாரத்தார். இக்கருத்து ஆய்வுக்குரியது.

விசயாலயனும், ஆதித்தனும் சைவசித்தாந்த நெறியினைப் பின்பற்றிய வேந்தர்களா என்பதும் இல்லையெனில் இக்கோயில்கள் விசயாலயன், ஆதித்தன் காலத்துக்குப் பின்வந்த மன்னர்களால் எழுப்பப்பட்ட கோயில்களா என்பதும் ஆய்வுக்குரியன.

சைவசித்தாந்த நெறியினைப் பின்பற்றியமையால்தான் தன்பெயர்க்கோவிலை நிறுவினர் இராஜராஜனும் இராசேந்திரனும் எனில் அவர்களிரும் பள்ளிப்படைக்கோவில்களும் ஏன் கட்டினர் என்னும் கேள்வி எழுகிறது. தன் வாழ்நாளின் தொடக்கத்தில் பாசுபத நெறியினைப் பின்பற்றிப் பின்னர் சைவசித்தாந்த நெறிக்கு மாறினர் என்றோ தாம் மாறிய பின்னும் தன் முன்னோர் பின்பற்றிய நெறியை மதித்து அவர்களுக்குக் கோயில் எழுப்பித்தந்தனர் என்றோ சமாதானம் கூறலாம்.

பாசுபத நெறிஇறந்தோர்க்கு சிவன் கோயிலில் படிமங்கள் வைத்து வழிபடல்

உயர்நிலையுற்று இறந்தோர்க்கு கோயிலில் படிமம் செய்துவைத்து வழிபடுதல் நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சி எனலாம். இராசராச்சோழனுக்கு முற்பட்ட பிற்காலச் சோழர்கள் காலத்தில் அம்மன்னர்களும் அவர்கீழ் பணியாற்றிய உயர்நிலைப் பணியாளர்களும் நாயன்மார்களுக்குச் படிமம் செய்து கோயிலில் நிறுவியுள்ளனர்.

இறந்தோர்க்குச் சிவன் கோயில் எழுப்புதல் இல்லையென்றானபின்னும் இறந்தோர்க்குப் படிமம் செய்து கோயில்களில் வைத்து வழிபடும் வழக்கம் தொடர்ந்தமையை அறியமுடிகிறது.

தன் கணவன் கண்டராதித்தனுக்கு, செம்பியன்மாதேவி ஒரு படிமம் செய்து கண்டராதித்தம் என்னும் கோவில் வைத்து வழிபட்ட செய்தி முற்கூறப்பட்டது. இராசராசனின் தமக்கையான குந்தவை தன் தந்தை சுந்தரசோழனின் படிமத்தினையும் தாய் வானவன்மாதேவியின் படிமத்தையும் இராஜராஜன் கட்டிய இராசராசேச்சுரம் கோயிலிலேயே நிறுவி வழிபடச்செய்துள்ளாள்.[15]

இராசராசனின் உயர்நிலைப் பணியாளர்களுள் ஒருவராகிய பொய்கைநாடு கிழவன் ஆதித்த சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளான் என்பவர் இராசராசேச்சுரம் கோயிலிலேயே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், பரவை நாச்சியார், மெய்ப்பொருள் நாயனார், சிறுத்தொண்ட நாயனார் ஆகியோருக்குச் செப்புப் படிமங்கள் எழுந்தருளுவித்து அவற்றிற்கு அணிகலன்கள் தந்துள்ளான்.[16]

பாசுபத நெறிநின்று வாழ்ந்து மறைந்த பெரியோர்க்குச் செப்புப்படிமங்கள் செய்துவைத்ததோடு அமையாமல் சைவசித்தாந்த நெறிநின்று வாழ்வோர்க்கும் இவன் செப்புப்படிமங்கள் செய்துவைத்துள்ளான்.  இராசராச சோழனுக்கும் அவன் மனைவி உலோகமாதேவிக்கும் இவன் செய்து வைத்த செப்புப் படிமங்கள் அத்தகையன.[17]

கண்டராதித்தன் மனைவியும் தன் பாட்டியுமான செம்பியன் மாதேவியின் படிமத்தினைச் செய்து அப்பாட்டியின் பெயரிலமைந்த செம்பியன்மாதேவி என்னும் ஊரிலுள்ள திருக்கைலாயமுடையார் கோவிலில் நிறுவி வழிபடச் செய்துள்ளான் இராசேந்திரசோழன்.[18]

முடிவுரை

இராசராச சோழன் தன் முன்னோர் அடியொற்றித் தானும் சைவசமயத்தைப் பின்பற்றினான். தன் முன்னோர் பின்பற்றிய பாசுபதச் சைவநெறியைக் கைவிட்டு வடக்கிலிருந்து பரவிவந்துகொண்டிருந்த சைவசித்தாந்தநெறியினைப் பின்பற்றத் தொடங்கியுள்ளான். இதன் விளைவாகவே நம்பியாண்டார் நம்பி என்னும் சைவநெறியாளரைக் கொண்டு சைவத்திருமுறை நூல்களைத் தொகுக்கச் செய்தான்.  அதன் தொடர்ச்சியாகவே திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் என்னும் பெருநூல் எழுந்தது.

தன் பெயரில் கோயில் கட்டும் முறையைத் தொடங்கிவைத்தான். இவனைப் பின்பற்றி இவன் பின்வந்த இராசேந்திரனும் இரண்டாம் இராசராசனும் தன் பெயரில் கோயில்கட்டி வழிபடச் செய்தனர்.

இராசராசனால் வடக்கிலிருந்து கொணரப்பட்ட சைவசித்தாந்தநெறியின் தாக்கத்தாலும் அதனை எதிர்கொள்ளவேண்டியும் தமிழகத்தில் தனித்த தமிழ்ச்சைவசித்தாந்த நெறி தோன்றி வளர்ந்தது. சைவசித்தாந்த சாத்திரங்கள் என்றழைக்கப்படும் 14 சித்தாந்த நூல்கள் சோழர்காலத்தின் பின் தோன்றின.

எனவே முதலாம் இராசராச்சோழன் தமிழகச் சைவசமயத்தில் புதுநெறியினைப் புகுத்தி தமிழ்ச்சைவத்தின் மறுமலர்ச்சிக்கு காரணமாய் அமைந்துள்ளான் என்னும் கருதுகோள் மெய்ப்பிக்கப்படுகிறது.

[1]  சதாசிவப் பண்டாரத்தார், தி.வை., பிற்காலச் சோழர் வரலாறு, ப.1

[2]  Karashima Noboru, Religion and Society, The Tenth to twelfth centuries, A Concise History of South India, P.149

[3]  நீலகண்ட சாஸ்திரி, கே.ஏ., சோழர்கள்புத்தகம் 2, ப.892

[4]  மேலது, ப.893

[5]  சந்திரமூர்த்தி மா, தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் தொகுதி 2, ப..28

[6] சதாசிவப் பண்டாரத்தார், தி.வை., பிற்காலச்சோழர் வரலாறு, பக்.40,41 & ப. 506

[7] மேலது, ப.504

[8] சந்திரமூர்த்தி மா, தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் தொகுதி 2, ப. 28

[9]  மேலது, ப. 26

[10]  சதாசிவப் பண்டாரத்தார், தி.வை., பிற்காலச்சோழர் வரலாறு, ப.26

[11] மேலது, ப.49

[12]  மேலது, ப.51

[13] மேலது, ப.98

[14] மேலது, ப. 24

[15] மேலது, ப.63

[16] மேலது, ப.103

[17] மேலது, ப.103

[18]  மேலது, ப.71

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பிற்காலச் சோழர்காலத் தமிழகச் சைவத்தில் இராசராசன் புகுத்திய புதுநெறி

  1. பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெறி என்று சமயங்களின் பின்புலத்தில் வரலாற்றை ஆராயந்த விதம் அருமை. சமுக வளா்ச்சியில் மக்களை நெறிப்படுத்தும் பணியினைச் சமயங்கள் ௭டுத்துக்கொண்டன. அச்சூழலைச்சோழா்கள் சிறப்பாகக் கையாண்டு வெற்றியும் பெற்றனா். கட்டுரை சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *