Featuredஆய்வுக் கட்டுரைகள்

நாஞ்சில் நாடனின் தமிழ்த் திரையுலகம் குறித்தான அங்கதப் பதிவுகள்

எஸ். சாகுல் ஹமீது, முனைவர் பட்ட ஆய்வாளர் (ப. நே), தமிழாய்வுத் துறை, மா.மன்னர்கல்லூரி, புதுக்கோட்டை

நாஞ்சில்சாடன் தாடகைமலைச் சாரலில் பிறந்தவர். நாஞ்சில் நாட்டுப் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், சொலவடைகள், மனித மனங்கள் போன்றவற்றைத் தம் படைப்புகளுள் நெருக்கமாக அமைத்து, நாஞ்சில் மணம் கமழ எழுதும் எழுத்தாளர் ஆவார். இவரின் சிறுகதைகள், நாவல்கள்,கட்டுரைகள் ஆகியவற்றில் மெல்லிய அங்கதச் சுவை காணப்படுகிறது.

அங்கதம் என்பது ஒரு இலக்கிய உத்தி. பழைய இலக்கியங்களில் பயன்படுத்தப் பெற்ற இந்த உத்தி நாஞ்சில் நாடனால் பெரிதும் எடுத்தாளப்பெறுகிறது. பழிகரப்பு அங்கதம், செம்பொருள் அங்கதம் என்ற  இரு நிலைகளில் இவ்வுத்தி பயன்படுத்தப்பெற்றுள்ளது. ஒரு சொல் பிரித்தால் ஒரு பொருளையும், பிரிக்காமல் இருக்கும் நிலையில் ஒரு பொருளையும் தந்தால் அது பழிகரப்பு அங்கதம் ஆகும். எவ்விதப் பிரிப்பும் இன்றி ஒரே சொல் இரு பொருள் நிலைகளைத் தந்தால் அது செம்பொருள் அங்கதம் ஆகும்.

இந்த அங்கதச் சுவை கேலி செய்வது என்ற நிலையிலிருந்துச் சற்று மேம்பட்டது. கேலி பேசுவது என்பது உறவு முறைக்காரர்கள்,  உறவு முறையாக அமையத்தக்கவர், ஒத்த நிலையில் பழகியவர்கள் ஆகியோருக்கு இடையில் நிகழ்த்தப்படம் நகைப்பிற்குரிய உரையாடல் ஆகும். இந்நிலையில் இருந்துச் சற்று மேம்பட்டு,  சமுதாயத்தை விமர்சிக்கும் பாங்கு அங்கதமாகின்றது. இந்த விமர்சனப் பாங்கு சற்று கடுமையான தொனிப் பொருளை உள்ளடக்கி இருக்கும். இதன் ஆழம் மெல்ல மெல்ல உணரத்தக்கதாக இருக்கும்.  சமுதாயத்தை நேர்படுத்துகிற கண்டனக் குரல் அங்கதமாகின்றது.

மனித குறைபாடுகளை எள்ளி நகைப்பதே அங்கதம். அங்கதத்தில் தாக்குதலும் நகையும் இணைந்தே இருக்கும். (http://encyclopediatamilcriticism.com/ankatham.php)  என்பது அங்கதத்திற்குத் தரப்படும் விளக்கம் ஆகும். இலக்கிய வகைகளுள் ஒன்றாக விளங்கும் புதுக்கவிதைகளில் அங்கதச் சுவை குறிக்கத்தக்க இடம் வகிக்கின்றது.

 தொல்காப்பியம் காட்டும் அங்கத இலக்கணம்

‘‘அங்கதந்தானே அரில் தப தெரியிற்

செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே” (தொல்காப்பியம். செய்யுளியல், 120)

என்ற நூற்பாவில் அங்கதத்தின் இருவகைகள் சுட்டப்பெறுகின்றன. அவை செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் ஆகியனவாகும்.

செம்பொருள் அங்கதம் என்பதை   ‘‘செம்பொருளாயின் வசை எனப்படுமே” (தொல்காப்பியம், செய்யுளியல், 121) என்று வரையறை செய்கிறார் தொல்காப்பியர். பழி கரப்பு என்பதை ‘‘ மொழி கரந்து மொழியின்  அது பழிகரப்பாகும்” (தொல்காப்பியம், செய்யுளியல் 122) என்று காட்டுகிறார் தொல்காப்பியர்.

தான் சொல்லவந்த வசை தொடர்பான கருத்தை நேரடியாகச் சொல்வது செம்பொருள் அங்கதமாகின்றது. சற்று மறைவாகச் சொல்வது பழிகரப்பு அங்கதமாகின்றது.

ஜெயமோகன்  நாஞ்சில் நாடனின் அங்கதப் பயன்பாடு பற்றிப் பின்வருமாறு கருத்து தெரிவிக்கிறார். ‘‘ பகடி , அங்கதம் இரண்டும் ஆசிரியன் வந்தேயாகவேன்டிய கதைவடிவுகள்.அல்லது ஆசிரியன் அதற்குள் ஒரு கதாபாத்திரமாக வேடம் புனைந்து வரலாம். நாஞ்சில்நாடனின் அங்கதக்கதைகளில் நேரடியாகவே ஆசிரியன் பேசுகிறான். கும்பமுனி வரும் கதைகளில் கும்பமுனியே நாஞ்சில்நாடனாகப்பேசத்தொடங்குகிறார்” என்கிறார். (https://www.jeyamohan.in/48709#.WzVdLNUzbIU)

பழிகரப்பு அங்கதம் என்ற தலைப்பிலேயே ஒரு சிறுகதையைச் சூடிய பூ சூடற்க என்ற தொகுப்பில் நாஞ்சில் நாடன் எழுதியுள்ளார். இதன் காரணமாக அவர் அங்கதச் சுவையின் இலக்கணப் பராம்பரியம் அறிந்தே அதனைத் தன் படைப்புகளில் பயன்படுத்தி வருகிறார் என்பதை உணரமுடிகின்றது. ‘‘திட்டமிட்டதற்கு மாறாக இந்த இடத்தில் கதையை நிப்பாட்டிக் கொள்ளவே தோன்றுகிறது. இக்கணத்தில் சில சமயங்களில் உண்மை, புனைவு போல் எதிர்ப்பட்டு பரிகசித்துச் சிரிக்கிறது. இனிமேல் எழுத நேரும் வரிகளில் பழி கரந்து உறைகிறதென்பதும் யானறிவேன். ஆனால் உண்மையை எருமைச் சாணத்தில் பொதிந்து வைக்க இயலுமா?” என்று (சூடிய பூ சூடற்க,ப.142) பழிகரப்பு அங்கதம் எழுதுகிறார் நாஞ்சில் நாடன். பரிகசித்துச் சிரித்தல், பழிகரந்து உறைதல் போன்றனவே நாஞ்சில் நாடன் அங்கதம் பற்றிக் கொண்டிருந்தப் புரிதல்கள் ஆகும்.

மேற்கருத்தின் வாயிலாக அங்கதச் சுவை கலந்து எழுதுவதில் தனித்த இடம் பெற்றவர் நாஞ்சில் நாடன் என்பது கருத்தளவாலும் பயன்பாட்டளவாலும் தெரியவருகிறது. இவரின் கான்சாகிபு கதைகள்  என்ற சிறுகதைத் தொகுப்பு பதினேழு கதைகளை உள்ளடக்கியது. இதனுள் பல்வேறு அங்கதக் கருத்துகள் எடுத்தாளப்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள அஷ்டவக்ரம் என்ற சிறுகதை அளவுக்கு அதிகமான எள்ளல் சுவையுடன் விளங்குகிறது. குறிப்பாகத் திரைப்படத்துறை,  திரைத்துறை சார்ந்த அரசியல், திரைத் துறை சார்ந்த ரசிகர்கள், நடிகர்கள் ஆகிய பகுதிகளை இக்கதை அங்கத்துடன் நோக்குகின்றது. அவற்றை மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

திரைப்படத்துறை குறித்தான அங்கதம்

கான்சாகிபு கதைகள் தொகுப்பில் அமைந்துள்ள ஒரு கதை அஷ்டாவக்ரம் என்பதாகும். இது தற்காலத்தின் திரைப்பட நிலையை விமர்சிக்கும் போக்கில் வரையப் பெற்ற கதையாகும்.

‘‘ஆனால் அஷ்டாவக்ரம் எனும் தலைப்பில் கும்பமுனி எனும் மூத்த தமிழ் எழுத்தாளனாகிய யான் இங்கு எழுத வரும் இந்த வியாசம் ‘அஷ்டவக்ரம் ’ எனும் பெயரில் வெளியாகியுள்ள அதிநவீனத் தமிழ்ச் சினிமா பற்றியது” (கான்சாகிபு கதைகள்,ப.58) என்று இந்தச் சிறுகதை விமர்சனப் போக்கில் தொடங்குகிறது. தமிழ்த் திரையுலகின் ரசிகனின் மனப்பாங்கினை எள்ளல் சுவையுடன் இக்கதை வழங்குகிறது.

 திரைத் துறை நடிக நடிகையர்கள் குறித்தான அங்கதம்

திரைப்படத்துறையினருக்கு இருக்கும் அரசியல்  ஈடுபாடு குறித்து இக்கதை விமர்சிக்கிறது.

‘‘ஏற்கனவே சினிமாக்களில் நாயகர்களாக நடித்து இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இருபத்தைந்து முதல் எழுபத்தைந்து வரை வயதானவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் நாற்காலி எதிர்காலத்திட்டமாக இருந்தது. தலைக்கு ஐந்தாண்டுகள் என முன்பதிவு செய்து வைத்தாலும் 37 X 5 = 185 ஆண்டுகள் வரை பொற்றமிழ் நாட்டுக்கு முதலமைச்சருக்கு ஆள் தட்டுப்பாடு கிடையாது” (கான்சாகிபு கதைகள்,ப.62) என்ற பகுதியில் திரைத்துறைக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு எள்ளல் சுவைபடக் காட்டப்பெற்றுள்ளது.

மேற்சொன்ன கருத்து இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் சிறுகதைக்குள் காட்டப்பெற்றுள்ளது. இந்தக் கதையின் நடப்பினை இன்றைய தமிழகம் அனுபவித்து வருகிறது என்பது குறிக்கத்தக்கது.

‘மேலும் நாயகர் தம் வாரிசுகள் குறுக்குச்சால் ஓட்டுவார்கள். அல்டிமேட் ஸ்டார், சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், உலக நாயகர், யுனிவர்சல் ஸ்டார், புரட்சித் தளபதி, மக்கள் நாயகன், புரட்சித் தமிழன், பிரபஞ்ச நாயகன், ஐ. நா. நாயகன் என ரேஷன் கடை வரிசைபோல் நீண்டு கிடப்பதனால் பிரபஞ்ச நாயகன் பாரதப் பிரதமர் கனவில் இருந்தார். விரைவில் தகர, மகர, நகர எழுத்துக்களில் கட்சி ஒன்று துவங்கப்பெறும் என்றும் கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களைக் கொண்ட கொடி ஒன்று வரைவாகிக் கொண்டிருக்கிறது என்றும் சொன்னார்கள்.” (கான்சாகிப் கதைகள், ப.63) என்ற விவரிப்பு தற்காலத்தில் கட்சிக்கான பேரையும், கொடியையும், இலட்சினையையும், இலக்குகளையும் தேடித் தேடித் தர முயலும் முன்னணி நடிகர்களின் இயல்பினைக் கேலி செய்வதாக உள்ளது. நடிகர்களின் வயது 25 முதல் 75 வரை என்பது நடப்பில் எழுபத்தைந்தையும், திரையில் இருபத்தைந்தையும்  குறிப்பதாகக் கொள்ளத்தக்கது.

நடிகைகளின் திறம் பற்றியும் இக்கதை விமர்சிக்கிறது. ‘‘எட்டுக் கோணல் வேடங்களுக்கும் இணையாக வந்து புட்டம் ஆட்டி, தனங்கள் குலக்கி, தொடைகள் தட்டி, அல்குல் தைவரல் செய்து நடிப்பில் சிகரங்களைத் தொட்ட இஷ்டகாமி அஷ்ட நாயகிகளின் அட்டைப் படம் போடாத பருவ இதழ்கள் இல்லை எனவாயிற்று. பார்த்துப் பரவசம் கொண்டு திவ்ய தேசத்து மொழியில் ஜொள் எனப்படும் திரவம் ஒழுகி மக்கள் வாய் வறண்டு போனார்கள்” (கான் சாகிபு கதைகள், ப.61) என்ற இந்த படைப்புப் பகுதியில் நடிகைகளின் நடிப்புத்திறன் அங்கதமாக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறு திரைப்படத்துறையின் நடிக நடிகைகளின் செயல்பாடுகள் இச்சிறுகதைக்குள் எள்ளல் தொனியில் விளக்கப்பெற்றுள்ளன.

ரசிகன் குறித்தான அங்கதங்கள்

அஷ்ட வக்ரம் என்ற கதையில் அ்திக அளவில் ரசிகனின் செயல்பாடுகள் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பெற்றுள்ளன. இதன் வழியாகத் தமிழத்தின் திரையுலக ஆசை, பைத்தியம் குறையாத என்ற ஏக்கத்துடன் நாஞ்சில் நாடன் இந்தக் கதையைப் படைத்துள்ளார்.

‘‘பிரபஞ்ச நாயகன் நற்பணி மன்றம் ஒன்று நற்பணி ஆவத புதுப்படம் வெளியாகும்போது மொத்தமாகச் சீட்டுகள் வாங்கி மூன்று மடங்கு விலைக்கு விற்பது – அறிவித்தது.அஷ்டவக்கிரம் நடக்கும் கொட்டகையில் எந்தத் தாயாவது பிரசவித்தால் குழந்தைக்கு ஆண் என்றால் அஷ்டவக்கிரன் என்றும் பெண் என்றால் அஷ்டவக்கிரி என்றும் பெயர் சூட்டப்படும் என்றும் பிரபஞ்ச நாயகன் முத்திரை போட்ட பத்துப்பவுன் சங்கிலி ஒன்று பரிசாக வழங்கப்படும் என்றும் அவர்கள் பருவ வயது எய்தும்போது பிரபஞ்ச நாயகன் படத்தில் ஆண் எனில் வில்லனாகவும், பெண் எனில் நாயகியாகவும் நடிப்பர்” (கான் சாகிபு கதைகள், ப.62)என்ற ரசிகர்மன்றங்களின் மனப்பாங்கினை விவரிக்கும் பகுதி இன்றைய தமிழகத்தின்  திரைப்பட ரசிப்புத் தன்மையை இனம் காட்டுவதாக உள்ளது.

குழந்தை பிறந்து வளர்ந்து ஆளாகும் நிலை வரை நடிகர் வயது ஏறாமல் நடித்துக் கொண்டிருப்பார், ரசிகர்களும் அலுக்காமல் பார்த்துக்கொண்டிருப்பர் என்ற நம்பிக்கை நடிகரின் நிலைப்புத்தன்மையின் மீது வைக்கப்படும் விமர்சனமாகின்றது.

திரைப்படம் காண்பதற்கும் சமுக அடிப்படையில் சதவீத நிலையில் பாகுபாடுகள் வகுக்கப்படுவதாகவும் கற்பனை செய்கிறார் நாஞ்சில் நாடன். இது தற்கால நிலையில் வேலை வாய்ப்பிற்கு வைக்கப்படும் சமுதாயச் சுழற்சி முறையை எள்ளல் செய்கின்றது.

‘‘மேலும் கொட்டகைகளில் இருக்கைகள் பிற்படுத்தப்பட்டவருக்கு அறுபத்தொன்பது சதவீதமும், பிற்படுத்தப்பட்டவருக்கு முப்பத்தி ஒன்று சதவீதமும், அவர்களுக்குள் பெண்களுக்கு முப்பத்துமூன்று சதவீதமும் இஸ்லாமியருக்கு ஐந்து சதவீதமும் கிறித்தவருக்கு மூன்ற சதவீதமும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை கூறியது. கிரீமி லேயர என்றழைக்கப்பட்ட பத்துப் பேருக்கு உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி, பிரதம மந்திரி, ஜனாதிபதி, ஆளுநர், முதலமைச்சர், மத்திய காபினட் அமைச்சர், ஆண்டுக்கு இருபத்தைந்து கோடிக்கு மேல் வருமான் உடையவர் ஆகியோருக்கு முன்பதிவுக் கட்டணம் தரப்படமாட்டாது என சமுகநீதி வழங்கினர். ஐம்பது கோடிக்குக் கீழே உள்ளவரைப் பிற்படுத்தப்பட்டவர் என அறிவிக்க வேண்டும் என்று ரிட் மனு ஒன்றும் தாக்கலாகிறது”( கான்சாகிபு கதைகள், பக் 63-64) என்ற பகுதி தற்போதைய நிலையில்  வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையை விமர்சிப்பதாக உள்ளது.

புதுமணத் தம்பதியர்கள் அஷ்டவக்கிரம் பார்த்துக்கொண்டே  முதலிரவினையும் கொண்டாடும் வசதி தமிழகத்துப் பெருநகர் ஒன்றில் செய்துதரப்பட்டுள்ளதாக இக்கதை விவரிக்கின்றது.  ‘‘கொட்டகைகள் பெருந்த சேலம் மாநகரில் புதுமணத் தம்பதியர் அஷ்ட வக்கிரம் பார்த்துக்கொண்டே முதலிரவும் கொண்டாடும் விதத்தில் இரண்டும் எங்ஙனம் ஒரே நேரத்தில சாத்தியம் என்று தெரியவில்லை.  புத்தம் புதுத் திரையரங்கு ஒன்றில் குளிர்சாதன கேபின் ஒன்று நிர்மானிக்கப்பெற்றுள்ளது என்றும் முன்பதிவு உண்டென்றும் கட்டணம் மூவாயிரம் ரூபாய் ஒரு காட்சிக்கு என்றும், பாத்ரூம் வசதி உண்டென்றும், மெத்தை விரிப்பு, தலையணை உறை, போர்வை தனிக்கட்டணம் என்றும் இனிப்புகள், பால், பழங்கள், மலர்ச்சரங்கள், ஆணுறை, கிரீம் அவரவர் செலவென்றும் சொன்னார்கள். ஆனால் கண்டிப்பாக மதுபானங்கள் தவிர்க்கப்பட வேண்டும்” (கான்சாகிபு கதைகள், ப.65) என்று விளம்பரப்படுத்தபட்டிருந்த நிலையைக் கதை காட்டுகிறது. படைப்பாளரின் படைப்புத் திறம் இவ்வாறு புதிய புதிய காட்சி அரங்கேற்றங்களைச் சமுதாயத்திற்கு முன்மாதிரியாகச் செய்து வைக்கிறது என்பது இவற்றின்வழி அறியவருகிறது.

இன்னமும் இந்த ரசிகர்களை விமர்சிக்கும் போக்கு நீள்கிறது. ‘‘படம் வெளியான பத்துநாட்களில் கொட்டகையினுள் நுழைபவருக்கு, ஆண் எனில் வலது மார் காம்பிலும், வெண் எனில் இடது முலைக்காம்பிலும் காது குத்துவதுபோல் வலிக்காமல் வளையம் அணிவித்து விடுகிறார்களாம். எனவே முதல் பத்து நாட்களுக்குள் படம் பார்த்தவர்கள் இரண்டாம் முறை பார்த்தார்கள். இல்லாவிட்டாலும் பார்க்கப்போகிறார்கள்” (கான்சாகிபு கதைகள், ப.64) என்ற பகுதி ரசிகர்களில் உடல்களிலும் அடையாளங்கள் செய்யப்படும் அல்லது ஏற்கப்படும் அவலத்தைக் காட்டுவதாக உள்ளது.

மொத்தத்தில் திரைப்பட மோகத்தின் காரணமாக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழக்கும் கேவல நிலைக்குத் தமிழக ரசிகர்கள் ஆளாகிவிட்டனர் என்பதை இக்கதை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

படைப்பாளன் குறித்தான அங்கதம்

திரைப்படத்தின் மையம் கதையாகும். இந்தக் கதைக்கு உரிய படைப்பு நிலைப்பட்டவரை கதையாசிரியர் என்று திரைத் துறை அழைத்துக் கொள்கிறது.  அஷ்டவக்கிரம் கதை தன் கதையைத் தழுவி எழுதப்பெற்றது என்று ஒரு எழுத்தாளர் நீதி மன்றம் செல்கிறார்.

‘‘மேல்போக்கு எழுத்தாளர், சிறுகதைச் செம்மல், தான் அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சிறுகதை ஒன்றைத் தழுவியே அஷ்டவக்கிரம் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும்  எனவே தமக்கு நூற்று நாற்பத்து எட்டு கோடி ரூபாய் நட்ட ஈடு தரவேண்டும் என்றும் உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு உடனடியாகத் தள்ளுபடி ஆனது. படத்தின் மூலக்கதை, திரைக்கதை, உரையாடல், பாடல்கள்,இசை, ஒளி ஓவியம், படத்தொகுப்பு, ஒப்பனை, நடன இயக்கம், சண்டைப்பயிற்சி, இயக்கம், தயாரிப்பு, இத்தனையம் செய்த பிரபஞ்ச நாயகன் தரப்பு வழக்கறிஞர் வைத்த ஒரே ஒரு வாதம், ‘திருடுவது தமிழ் சினிமாக்காரர்களின் குலத்தொழில், தொழில் தர்மம், அதில் தலையிட உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், மாநிலங்கள் அவை, மக்களவை, ஐநா சபை உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் அதிகாரம் இல்லை என் பதை அரசியல் நிர்ணயச் சட்டம்தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது” (கான்சாகிபு கதைகள்,பக் 65-66) என்ற பகுதி படைப்பாளர்களைத் திரையுலகம் காணும் முறையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

இவற்றை விமர்சனம் செய்யும் கும்பமுனி ஒரு நாள் தன் கனவில் பிரபஞ்ச நாயகனின் சொகுசுக் கார் தன் வீட்டிற்கு அருகில் நிற்பதாக உணர்கிறார். அடுத்தப் படத்திற்கான கதை விவாதத்திற்காக பிரபஞ்ச நாயகன் வந்திருப்பதாகக் கருதுகிறார் கும்பமுனி.

எது வேண்டாம் என்று விமர்சிக்கிறமோ அதன் அருகில் நாமே சென்று விழுந்துவிடுகிறோம் என்ற மனப்பாங்கில் இக்கதை செய்ப்பட்டுள்ளது.

இருப்பினும் உண்மையான படைப்பாளனுக்கு உரிய இடம் திரைத்துறையில் இல்லை என்பதை இக்கதை சொல்லாமல் சொல்கிறது.

இவ்வாறு அஷ்ட வக்ரம் என்ற கதை, எட்டுக்கோணல் நிலையில் திரைத்துறையையும், அதன் தொடர்புடைய அரசியலையும், ரசிக மனப்பாங்கினையும், நடிக நடிகையரின் செயல்பாடுகளையும், படைப்பாளனின் விதியற்ற நிலையையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க